ஏப்ரல் ஃபூல் ஆயிட்டேன்...

|

காதலிக்கிறதுதான் வாழ்க்கைக்கே ஆதாரமான ஒன்னுன்னு எல்லாரும் திரும்பத் திரும்ப சொல்லவும் எனக்குள்ள கொஞ்சம் வேகம் கிளம்பிடுச்சி.

நானா?, பேரு எதுக்குங்க, நடந்த கூத்த மட்டும் பாருங்க. என்ன பண்றது! இது வரைக்கும் அந்த மாதிரி எண்ணமே இல்லாம இருந்துட்டேன். ரெண்டு மூனு தடவ நமக்கு சந்தர்ப்பம் வந்தும் வீணாக்கிட்டேன். கூடவே இருக்கிற முரட்டு சுபாவம் வேற...

மொதல்ல என் மாமாப் பொண்ணு. பல விதமா எங்கிட்ட பூடகமா பேசி, வெளிப்படுத்துச்சி. சொந்தத்துல பண்றது பாவம்னு படிச்சதால (பிடிக்கலங்கற உண்மைய சொல்ல முடியுமா?) 'என்னோட கசின் நீ, தங்கச்சி மாதிரி அதால ஒத்து வராது' ன்னு சொல்லிட்டேன். அது ஒரு மாக்கான்னு நினைச்சிருக்கும்,  நான் அப்போ கவலைப்படல.

அடுத்ததா பண்ணன்டாவது படிக்கிறப்போ ஒரு பொண்ணு என்னையே பாத்துகிட்டிருக்கும். பசங்க சொல்லித்தான் எனக்கே தெரியும். இன்டர்வல் சமயத்துல பசங்க புள்ளைங்க எல்லாம் வெளிய போனப்போ 'உங்ககிட்ட தனியா பேசனும்' னு சொல்லி, ஸ்கூல் விட்டதுக்கு அப்புறம் கிளாஸ்லயே இருக்க சொல்லுச்சி. கடைசி பெல் அடிச்சதும் வெளிய போயிட்டு திரும்பவும் கிளாசுக்கு வந்தேன். என்ன மாதிரியே அந்த பொண்ணும் வந்துச்சி.

’என்னன்னு சொல்லுங்க எனக்கு ஒரே பயமா இருக்கு’ ன்னேன்.

’எனக்கும்தான். என்ன தப்பா நினைக்கக்கூடாது’ன்னு சொல்லுச்சி.

’தப்பா சொல்லலைன்னா தப்பா நினைக்கமாட்டேன்’ னு தத்துவார்த்தமா சொன்னேன்.

கேக்கும்போதே கொஞ்சம் மிரண்டுடுச்சி போல. ’சரி ஒண்ணுமில்ல சும்மாத்தான்’ னு சொல்லவும், ’என்னை என்ன கேணைன்னு நினைக்கிறியா?, ஒழுங்கா சொல்லு’ ன்னு மிரட்டுறாப்ல கேக்கவும்,

’உங்கள எனக்கு ரொம்ப புடிக்கும் ஆனா இப்ப இருந்து இல்ல, உங்க பிரண்டு ரவிகிட்ட இந்த லெட்டர கொடுத்துடுங்க’ ன்னு சொல்லிட்டு ஒரு கடுதாசிய கொடுத்துட்டு போயிடுச்சி.

பிரிச்சி பார்த்தேன் அன்புள்ள உங்களுக்குன்னு யாருக்கு வேணும்னாலும் பிட் ஆகற மாதிரி இருந்துச்சி. ரவி கேக்காம காதல் கிடைச்ச சந்தோஷத்துல தினம் பரோட்டா, சினிமான்னு எல்லா செலவையும் பாத்துகிட்டான் அவங்களுக்குள்ள பிரச்சினை வர்ற வரைக்கும்.

இப்போ படிச்சி முடிச்சி ஒரு நல்ல வேலையில இதுக்கேன். எல்லா பிரன்ட்சும் லவ் பண்ணாத என்னை இன்னும் ஒரு மாசத்துல யாரையச்சும் லவ் பண்ணலன்னா கூட்டத்துலேயே சேத்துக்க மாட்டோம்னு கண்டிப்பா சொல்லவும், அதான் இந்த கதையோட மொத வரி.

தினமும் ஒரு பொண்ண வேலைக்கு போறப்போ வழியில இருக்கிற ஒரு பஸ் ஸ்டாப்ல பார்ப்பேன், குனிஞ்ச தலை நிமிராம இருக்கும். பஸ்சுல அது ஏறும்போது மட்டும் தலைய நிமித்தி படியப் பார்த்து ஏறும். சரி இன்னிக்கு ஒரு முக்கியமான நாள், முயற்சி பண்ணலாம்னு நம்மோட விருப்பம், விவரங்களை எழுதி பாக்கெட்டுல வெச்சிகிட்டு பஸ்சில அந்த பொண்ணுகிட்ட கொடுத்துட்டேன். எப்படின்னுல்லாம் கேக்காதீங்க, கம்பனி சீக்ரட்.

அடுத்த நாள் அந்த பொண்ணு என்ன பார்த்து சிரிச்சிச்சு. தைரியமா பக்கத்துல வந்து, 'நேத்து என்னை சூப்பரா ஏப்ரல் ஃபூல் பண்ணுனீங்கன்னா' ன்னு சொல்லி பல்பு கொடுத்துடுச்சி.

பதிவர்கள் பட்டிமன்றம்...நிறைவு...

|

(படிக்காதவங்க முதல், இரண்டு மற்றும் மூன்றாம் நாளை படிச்சிட்டு வந்துடுங்களேன்)

எல்லாத்துக்கும் மறுபடியும் இந்த பொன்னாத்தாளோட வணக்கம். எல்லாரையும் தலைப்பு கொடுத்து பேச சொன்னா அவங்க மனசில இருக்கிற உண்மைங்களை அப்படியே கொட்டித் தீத்திருக்கீங்க.

(ரொம்ப சொல்லிட்டோமோ - கதிர்)

மொதல்ல பேசின மணிஜி தன்னை ஒரு ரீமா ரசிகன்னு ரொம்ப அருமையா நிலைநாட்டினாரு. தண்டோராங்கற பேர ஏன் மணிஜீன்னு மாத்துனாரு? ஜீ-க்கு பதிலா ரீமாவப்போட்டு மணிரீமான்னு வெச்சிருக்கலாம்ங்கறது நம்மளோட அபிப்ராயம். இவர மாதிரி இன்னும் நிறைய பேரு இருந்தாத்தான் செல்வராகவன் மாதிரி ஆளுங்க ஓடி ஒளிஞ்சிகிட்டு இருப்பாங்க, நம்மள மாதிரி பொம்பளங்க ரொம்ப பாதுகாப்பா இருக்கலாம்.

(தாய்க்குலத்த அப்படியே நீ கவர்ந்திட்டப்பா - கேபிள்)

அப்புறம் நம்ம தைரியத்த அம்மாவோட ஒப்பிட்டாரு. அதெல்லாம் சும்மா அதுக்கும் மேலங்கறத தெளிவா அவருக்கு சொல்லிக்கறேன்.

அடுத்து அத வாதிட்டு பேசுன எங்கண்ணன், ப்ளாஷ்பேக் சொல்றேன்னு காதலப்பத்தி சும்மா கழட்டியெடுத்தாரு, அப்போ கூட்டத்துல இருந்து ஒரு பெரிய ரம்பத்த காமிச்சத நாங்க எல்லாம் பாத்தோம், அவரு மட்டும் கவனிச்சும் கவனிக்காத மாதிரி காரியத்துல கண்ணாயிருந்தாரு. அவரு வாழ்க்கையில பார்த்த காதலோட சினிமா காதலை எதுக்கு சின்க் பண்ணினாருன்னு அவருக்கும் புரியல, கேட்ட எங்களுக்கும் புரியல.

இருந்தாலும் அவரோட உண்மையான, பாசமான, உருக்கமான.... ச்சை, அவரப்பத்தி பேசும்போதே நானும் அவரமாதிரியே ஆயிட்டேன்.... வாதத்துல நியாயம் இல்லாம இல்ல.

(தோ பார்றா, நல்லா கவுத்து விட்டுட்டு... பாசத்த - வானம்பாடிகள்)

அடுத்து பேசுன யூத் கேபிளு சும்மா சில்லுனு ஆரம்பிச்சி சினிமாவ அவரோட கொத்துபரோட்டாவோட கம்பேர் பண்ணி சொல்லி சும்மா பூந்து விளையாடுனாரு. பசியோட இருந்திடலாம், படம் பார்க்காம இருக்க முடியுமான்னு ஒரு மாபெரும் தத்துவத்த எடுத்து வெச்சி எல்லாரையும் மூர்ச்சையாக வெச்சாரு.

(நல்லாத்தான் கவனிச்சிருக்கு தங்கச்சி - பிரபா)

சினிமாவில இன்னும் சொல்லப்படாத காதல் இருக்குங்ற ஒரு பயங்கரமான ஒரு மிரட்டல் விட்டு நிறைய பேர தூக்கமில்லாம செஞ்சிருக்காரு. அடிக்கிற பெல் ஓசையிலிருந்து எல்லாத்தையும் சினிமா பார்வையில பார்த்து புல்லரிக்க வெச்சி, எதிரணியினருக்கு சவாலா பேசினாரு.

(நம்ம படத்துல சொல்லிடனும் கேபிள் - மணிஜீ)

அடுத்து பேச வந்த சேட்ட நடுவரையே நல்லா கலாய்ச்சி ஆரம்பிச்சி, மொத மேடைன்னும் பாக்காம சும்ம தூள் கிளப்பி, ஸ்ரேயா நடிச்சது மொத்தம் பதிமூனு படம், அத பதிமூனு தபா பார்த்ததா சொன்னாரு. பதினாலாவது படம் வந்தா மொத்தம் இருவத்தேழு தடவ பார்ப்பாருங்கற தகவல பூடகமா சொன்னாரு.

(பிரபாவுக்கு இது கண்டிப்பா புரியாது - வானம்பாடி)

(அய்யா எனக்கு புரிஞ்சது தெரியாம எங்க தெரியப்போவுதுன்னு நினைப்பாரு - பிரபா)

சினிமா பாக்க ஆகுற செலவு, டாஸ்மார்க்ல பீர் விலை, அரசாங்கத்துக்கு எவ்வளவு கட்டிங் போகுதுங்கற தகவல் எல்லாத்தையும் சொல்லி, சினிமாவால அரசுக்கு கொஞ்சமும் லாபமில்ல,சீரழிக்குதுன்னு செலவு பண்ற ஆவேசத்துல ஆணித்தரமா அடிச்சி சொன்னாரு. பீர் குடிச்சா உடம்பு போடும்னுதான் கேள்விப்பட்டிருக்கேன், இவரு ஏன் இப்புடி காத்தா இருக்காரு...

(பீர் மட்டும் தானே சாப்புடறேன், சாப்பாடு சாப்டாதானே உடம்பு ஏறும் - சேட்டை)

அடுத்து பாலா சார், அண்ணா ஸ்னேக் பிரபா பேசுனதுக்கு மண்புழுவ பாம்புன்னு சொன்னத சொல்லி பல்பு கொடுத்ததா சொல்லிட்டு, டாஸ்மார்க் பீர்லருந்து துல்லியமா அரசாங்கத்துக்கு எவ்ளோ போகுது, சினிமாவினால ஒரு நயாப் பைசாக்கூட போறதில்லன்னு சொன்னதுக்கு அரசியலே சினிமான்னு ஒரு மாபெரும் உண்மையை போட்டு உடைச்சி எல்லாரு வாயயும் அடைச்சாரு.

(ஆட்டோ வராம இருந்த சரி - மணிஜீ)

கடைசியா பேசுன நம்ம கதிரு, பத்து வினாடிகளுக்கு அப்புறம் மவுனத்த கடியவிட்டு சும்மா பரோட்டா எபஃக்ட் பத்தி சொல்லி, கண்தானத்த பத்தி
சினிமாவுலயும் சொல்லததால சினிமா சமுதாயத்தோட சீர்கேடுன்னு ஆணித்தரமா சொன்னாரு. நல்ல வேளை இங்க குடிக்க வெச்சிருக்கிற மினரல் வாட்டர்ல ஐ.எஸ்.ஐ முத்திரை இல்லங்கறத கவனிக்காம விட்டுட்டாரு.

(அடுத்த இடுகையில போட்டுடுவோம் - கதிர்)

ஆக கடைசியா ரெண்டு தரப்பு வாதத்தையும் வெச்சி பார்க்கும்போது நம்மோட தீர்ப்பு என்னான்னு சொல்ற நேரம் வந்துடுச்சி. சினிமா சீரழிக்குதுன்னு கேவலமா சொன்னவங்க, என்ன வேலை இருந்தாலும் அப்படியே போட்டுட்டு ஒரு வருஷத்துக்கு சினிமாவா பாத்துகிட்டிருக்கனும். சினிமா சீர்படுத்துதுன்னு பெருமையா சொன்னவங்க பொத்திகிட்டு சினிமா பக்கமே போவாம அவங்க அவங்க வேலய ஒழுங்கா பாக்கனும். ஒரு வருஷம் கழிச்சி ஏண்டா இப்படி பேசனும்னு நீங்க எல்லாரும் வருந்தி இதே தலைப்புல திரும்பவும் இந்த நாட்டாமை முன்னால பேசனும்.

(கேபிள், நம்ம தொழிலே இதுதானே - மணிஜீ)

இத ஒழுங்கா பாலோ பண்ணாதவங்களோட பதிவுங்கள்ல பின்முன் நவீனத்துவ கமெண்ட்டுகளா தொடர்ந்து போடப்படும். அவங்கள பாராட்டி பின்னூட்டம் போடறவங்களுக்கு சைடு, பக்கவாட்டு நவீனத்துவ பின்னூட்டங்கள்னும் நிறையவே போடப்படும். இதுதான் இந்த 'நெட்’டாமயோட தீர்ப்புங்கோ!

ஒரு வழியா முற்றும்....

(எல்லாத்தயும் படிச்ச உங்களுக்கு என் நன்றி. எழுத ஊக்குவித்த என் ஆசானுக்கு நன்றி...)

பதிவர்கள் பட்டிமன்றம்...மூன்றாம் நாள்...

|

(படிக்காதவங்க முதல் மற்றும் இரண்டாம் நாளை படிச்சிட்டு வந்துடுங்களேன்)

(பொன்னாத்தாள் ஒரு மிடறு மினரல் வாட்டரை ஸ்டைலாக குடித்துவிட்டு)

ஆளப்பாத்து எடைபோடக்கூடாதுங்கறதுக்கு உதாரணமா நம்ம சேட்டை சும்மா கலக்கியிருக்காரு. எங்கண்ணன் பேசினதையும், சேட்டை பேசினதையும் கவுன்ட்டர் அட்டாக் செஞ்சி பேசப்போறது சினிமா சீர்படுத்துகிறதுங்கற அணியோட தலைவர், நம்ம வானம்பாடிகள் பாலா சார். வாங்க சார், வந்து உங்க சிஷ்யருங்கள டரியலாக்குங்க..

(பாலாண்ணே, பிரபா பாவம்..., கொஞ்சம் கம்மியா - கதிர்)

எல்லோருக்கும் வணக்கம்... உண்மைய சொல்லப்போனா நான் எதிர் அணியில் இருந்திருக்க வேண்டியவன் ரோர்க், டொமினிக் பாத்திரத்தை கேரி கூப்பரும் பேட்ரிஷியா நீலும் நடிச்சி பார்த்திருக்காம இருந்தா! அவர்களின் முதல் சந்திப்பில் டோமினிக்கின் கண்களைப் பார்த்து மயங்கி உங்களுக்கும் இடுகையில் காண்பித்து மயங்க வைத்திருக்கிறேன். அந்த படத்தை இன்று வரை எத்தனை தடவை பார்த்திருப்பேன் தெரியுமா? எண்ணுவதற்கு இங்கிருப்போரின் கை கால் விரல்கள் கூட பத்தாது.

(அண்ணே நம்மாளுங்களுக்கு புரியற மாதிரி லோக்கல் படங்களையும் சொல்லலாம்லே - மணிஜீ)

காதலைப்பத்தி பிரபா நிறைய எழுதியிருக்காப்ல, அதுக்கு என்னோட இடுகையிலயே அவர் மண்புழுவ பம்புன்னு காமிச்சி பல்பு வாங்குனத பதிலா சொல்லியிருக்கேன். இருந்தும் அவரு திருந்தின மாதிரி தெரியல. எங்கள் அணியில் இருக்கும் கேபிள் இன்னிக்கும் யூத்துன்னு சொல்லி எல்லாத்தயும் நம்பவெச்சிகிட்டிட்ருக்காரு, அதுக்கு காரணம் அவரு சீர்படுத்துத்துங்கற அணியில இருக்கிறதாலதான். அதே சமயம் பிரபா தன்ன மார்க்கண்டேயன்னு சொன்னாலும் நம்பத்தயாரா இல்ல, காரணம் சீரழிக்கிறதுன்னு சொல்லிக்கிட்டு மேக்கப் பண்ண தெரியாததால!

(இப்படியெல்லாம் ஒர் ரகசியம் இருக்கா - பிரபா)

எங்க அணிய சேர்ந்த தண்டோரவின் அதீத ரசிப்புத்தன்மையைப் பாராட்டி அகில உலக ரீமா ரசிகர் மன்றத்துல இருந்து பாராட்டு விழா நடத்த இருக்கிறார்கள்.. இது ஒன்றே போதாதா சினிமா சீர்ப்படுத்துகிறது என்பதற்கு? மணிஜீக்கு கிடைத்த புகழ் எதிர் அணியினருக்கு ஏன் கிடைக்கவில்லை? காரணம் இளமையை ரசித்து என்றும் இளமையாய் இருக்க அவர்களுக்கு தெரியவில்லை.

(அண்ணே நானும்தான் ஸ்ரேயா வெறியன் - சேட்டை)

அதோ அங்கிருக்கும் சேட்டை அருகிலிருக்கும் பிரபாவிடம் நானும் ஸ்ரேயா ரசிகன் என சொல்வது என் காதில் கேட்கிறது. அவ்வாறு சொல்பவர் சினிமாவால் அரசாங்கத்துக்கு வருமானமில்லாததால் சீரழிவு என்கிறார், அரசாங்கமே ஒரு சினிமா என்பது புரியாமல்.

(பலத்த கைத்தட்டல்... அடிச்சாரு பாருய்யா! நெத்தியடி.. - மணிஜீ)

பீர் சாப்பிடுவதைப் பற்றி விலாவாரியாக சொல்கிறார் சேட்டை. புரட்சித்தலைவரின் படங்களைப் பார்த்திருப்பாரானால் மதுவைப்பற்றி பேசியிருப்பாரா?

(அப்புறம் ஏய்யா நீ சரக்கடிக்கிற? - கேபிள் மணீஜீயிடம்)

சினிமாவில நாற்பது வயசுக்கு மேலத்தான் ஹீரோக்கள், ஸ்கூல், காலேஜுக்கு போறாங்க. இத பார்த்துட்டு பக்கத்து வீட்டிலிருக்கு ராமாமிர்தம், தனக்கு ஐம்பது வயதுங்கறதையும் மறந்து ஜீன்ஸ் டி-ஷர்ட்டோட ஒரு கல்லூரிக்கு விண்ணப்பம் வாங்க சென்று வந்தார். நடுவர் பிரியா கூட சினிமாவினை பற்றி சிலாகித்து எழுதியிருக்கிறார் என்பதை கூடுதலாக சொல்லி, என்றும் இளமையாய் இருக்க வைக்கும் சினிமா சமுதாயத்தை சீர்படுத்துகிறது என்பதை எனது அணியின் சார்பார் அறுதியிட்டு கூறி விடைபெறுகிறேன், வணக்கம்...

(சினிமா போயிட்டு தலைவலின்னு தானே எழுதியிருந்தேன்? - ப்ரியா)

அருமையா பாலா சார் சொல்லியிருக்கிறார். இதுக்கெல்லாம் எப்படி நம்ம கதிரு கசியவிட்டு கதிகலங்க வெக்கிறாருன்னு பார்ப்போம், வாங்க கதிர்...

(கண்ணாடியை மெதுவாய் சரி செய்து, அரங்கத்தை, எல்லோரையும் ஐந்தாறு வினாடிகள் மவுனமாய் ஒரு முறை பார்த்து வர, போதும் கதிர் மௌனத்தை கசியவிடுங்க - ப்ரியா)

எல்லோருக்கும் வணக்கமுங்கோ. வானம்பாடிகள் அண்ணே சினிமா இளமையா இருக்க உதவுதுன்னு ஆணித்தரமா சொல்லிட்டதா நினைச்சிட்டு போயிருக்காருங்க. எத்தனை சினிமாக்கள் மோசம்னு அவரு என்கிட்ட போன்ல சொல்லியிருக்காரு தெரியுங்களா? அவரு பார்த்த ஒரு படம் சூப்பரா இருந்துங்களாம், நானும் நேத்து ஒரு படத்த பார்த்துட்டு சிலாகிச்சி எழுதுன மாதிரி.

(இப்போதான் படம் பாத்து எழுத ஆரம்பிச்சிருக்காரு... விளம்பரம் - கேபிள்)

அதுக்காக ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம்னு சொல்ற மாதிரி, ஒரு படத்த வைத்து சினிமாவை பதம் பார்க்க முடியுங்களா? கேபிள் சொன்னது போல் சினிமா சோறு இல்லங்க, கொத்து பரோட்டா. இத ஞாபகத்துல வெச்சுக்குங்கண்ணா!

நான் போன வாரம் பெங்களூர் போயிருந்தேனுங்க. வழியில கார் ரிப்பேர் ஆகி படாத பாடுபட்டுகிட்டிருப்ப ரொம்ப பசிச்சதுங்க. பக்கத்துல இருந்த ஒரு ரோட்டோரக் கடையில் கொத்து பரோட்டா சாப்பிட்டுட்டு அதில் பட்ட அவஸ்தை எனக்குத்தானுங்க தெரியும். எல்லா கடை கொத்து பரோட்டாவும் சுகாதாரமான முறையில் செய்யப்படறதில்லைங்க, அதுமாதிரிதான் சினிமாவும்.

(அரங்கம் அதிர கைத்தட்டல்... அப்படி போடு அருவாள - ப்ரியா)

(அதான் இடுகையே ஒரு வாரத்துக்கு இல்லையா? - வானம்பாடிகள்)

காதலுக்கு கண்ணில்லைன்னு எல்லா சினிமாவிலும் சொல்றாங்களே, கண் தானம் செய்யனும்னு ஏனுங்க சொல்றதில்ல? இதிலிருந்தே தெரியல சினிமா சமுதாயத்தை சீரழிக்கிறதுன்னு?

(அட இங்கயுமா? - மணிஜீ)

ஒரு பாட்ல பெரிய ஆளா மார்றத சினிமாவில் காட்றத உண்மைன்னு நம்பி, எத்தனை பேர் பாட்ட கேட்டுகிட்டே இருக்காங்க, அதால எவ்வளவு வாய்ப்புங்களை இழக்கிறாங்க தெரியுங்களா? புள்ளிவிவரமெல்லாம் வேணும்னா நாளைக்கு சொன்றேனுங்க.

(எப்பா தப்பிச்சோம் - கேபிள்)

(பாட்டு கேக்கறதோட ரகசியம் இதுதானா - சேட்டை)

தனி மனிஷங்கள துதிபாடறத என்னிக்குமே கண்டிக்காம இருந்ததில்லைங்க. மணிஜீ ரீமாதான் அழகுன்னு சொல்றது மற்றவங்களையெல்லாம் அழகில்லன்னு சொல்ற மாதிரி தானுங்கோ அர்த்தம்?

எனவே பிரபா, சேட்டை சொன்ன மாதிரி காதலை கொச்சைப்படுத்தற, அரசாங்கத்துக்கு இம்மியளவும் பிரயோஜனமில்லாத சினிமா சமுதாயத்தை சீரழிக்கிறது, சீரழிக்கிறதுன்னு சொல்லி, நல்ல தீர்ப்ப கொடுங்கன்னு கேட்டுகிட்டு மணியடிக்கறதுக்கு முன்னாலயே முடிச்சிக்கிறேனுங்க..., நன்றி... வணக்கம்.

(பலத்த கைத்தட்டல், மணியடிக்க மறந்ததை சொன்னவுடன், சட்டெனெ மணியினை எடுத்து அடித்த நடுவர் பொன்னாத்தாள் தனது இறுதி முடிவினை அறிவிக்கத் தொடங்குகிறார்)

முடிவ உடனே சொல்லிட முடியுமா? பொன்னாத்தாளின் பொன்னேட்டில் பதிக்கும் முடிவோட கண்டிப்பா நாளைக்கு முடிச்சிடலாம்...

பதிவர்கள் பட்டிமன்றம்...இரண்டாம் நாள்...

|

இதன் முதல் நாள் நிகழ்ச்சியை பார்க்காதவங்க இங்க படிச்சிட்டு தொடருங்களேன்...

(கண்ணாடியை சரி செய்து, தனது புத்தகத்தின் பின் பக்கத்தில் இருக்கும் அதே போஸிற்கு தன்னை ஃபிட் செய்துகொண்டு பேச ஆரம்பிக்கிறார் கேபிள்)

கலக்கலா, தீர்ப்பு சொல்லப்போகும் பிரியாங்கற நடுவர் பொன்னாத்தா அவர்களே, முன் வரிசையில் கண்ணாடி போட்டுகிட்டு அழகா இருக்கிற ஜீன்ஸ், டாப் போட்டு கும்முனு இருக்கிற அந்த கல்லூரி மாணவி அவர்களே, சினிமா சீரழிக்கிறது என சொல்லிவிட்டு சைலண்ட் பண்ணி சினிமா பாட்டு டேன்ஸ் பார்த்து இடுகையெழுதி, லேட்டஸ்ட்டா உலகப்படத்துக்கு விமர்சனம் எழுதும் எதிரணி தலைவர் கதிர் அவர்களே, சினிமாவப் பத்தி அவ்வளவு ஆர்வமா எப்பவும் பேசும், இன்னிக்கு வழிதெரியாம மாற்று அணியில மாட்டி முழிக்கும் பிரபா அண்ணன் அவர்களே...

(அண்ணே, மேட்டருக்கு வாங்கண்ணே.. வானம்பாடிகள்)

சினிமா சீரழிக்கிதுங்கறாங்களே, அவங்களுக்கெல்லாம் சினிமான்னா என்னான்னு தெரியுமா? உலகத்திலயே யாராலையும் புதுசா கதைய வெச்சி படம் எடுக்க முடியாது தெரியுமா?

(அதான் சினிமாவப்பத்தி பேசும்போதெல்லாம் சொல்லிகிட்டிருக்கீங்களே - பிரபாகர்)

அதுல எத்தனை பேர் உழைப்பு இருக்கு தெரியுமா? எத்தனை குடும்பம் பொழைக்குது தெரியுமா? அதனாலதான் முப்பதாயிரத்துல படம் எடுக்கமுடியும்னு ஒரு புது லாஜிக்க அறிமுகப்படுத்தினேன். பசியோட கூட இருந்திடலாம், படம் பாக்காம இருக்க முடியுமா?

(பயங்கரமான கைத்தட்டல்... ங்கொய்யால எதுக்குத்தான் கைதட்டறதுன்னு வெவஸ்த இல்ல? - வானம்பாடிகள்)

(அதான் தெரியுதே, ஒரு படத்தையும் விமர்சிக்காம விடறதில்லையே - ப்ரியா)

சினிமாவில பலவிதமான காதல்னு பிரபாண்ணே சொன்னாரு. அவரு இடுகையில தனி மனுசனா எத்தன விதமான காதல பத்தி சொல்லியிருக்காரு, இது ஒரு பெரிய உலகம், இன்னும் பல காதல்கள் சொல்லப்படவேயில்லை என்பது உங்களுக்கெல்லாம் தெரியுமா?

(சொன்னதே தாங்கல, இன்னும் சொல்லாதது வேறயா - கதிர்)

அதையெல்லாம் சொல்லத்தான் போகிறேன். சினிமா வியாபாரத்தப் பத்தி யாருக்காச்சும் தெரியுமா? வார வாரம் எழுதறேன், படிச்சிட்டு சொல்லுங்க, சினிமா சீரழிக்குதான்னு... சினிமாங்கறது கொத்து பரொட்டா மாதிரி... எல்லாம் இருக்கனும். இத புரியாம இட்லி, பொங்கல், நூடுல்ஸ் மாதிரி எடுக்கறதாலதான் பல தயாரிப்பாளருங்கள சினிமா சீரழிச்சிகிட்டிருக்கு, சமுதாயத்த இல்லைன்னு சொல்லி முடிக்கலாமுன்னு நினைக்கும்போது ஒரு சின்ன விஷயம் ஞாபகத்துக்கு வருது...

(பொன்னாத்தாள் மணியினை ஒலித்து நேரமாகிவிட்டதை நினைவுப்படுத்த)

இந்த மணியோசையை எங்கெல்லாம் சினிமாவில உபயோகிக்கிறாங்க தெரியுமா? அதப்பத்தியெல்லாம் பேச நேரமில்ல. கடைசியா எதிரணியில இருக்கிற அன்பர்கள் எல்லாம் முதல் போட்டு சினிமா எடுக்க முதலாளியா மாறுங்கன்னு கேட்டுகிட்டு வாய்ப்புக்கு நன்றி கூறி முடிச்சிக்கிறேன், வணக்கம்.

(இங்கயே ப்ரொடியூசர புடிச்சிடுவாரு போல இருக்கு - மணிஜீ..)

அருமையா பேசினீங்க கேபிள்... எல்லாரும் பணத்த மட்டும் கொண்டு வந்திருந்தா முப்பதாயிரம் கட்டி மெம்பரா சேர்ந்திருப்பாங்க. கேபிளோட வாதத்த தவிடு பொடி பண்ணறதுக்கு சவுண்டா யாராவது வருவாங்கன்னு பார்த்தா, இதோ காத்து வேகமா அடிச்சா பறந்து போற மாதிரி இருக்கிற நம்ம சேட்டை...,கூட ரெண்டு பேரோட தாங்கலா... வாங்க வாங்க, வந்து கலக்குங்க...

(லேசாய் இருமியபடி முழிக்க..., மலைத்த மாடு மலையேறுமா என எல்லோரும் லேசாய் பார்க்க தனது சேட்டையை ஆரம்பிக்கிறார்)

இந்தப்பட்டி மண்டபத்தில் தீர்ப்பு சொல்ல வீற்றிருக்கும் (பிரபாகரண்ணே, இவங்க பேர் என்ன?ஓ... சரி), ப்ரியாவைப் பற்றி அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது... ப்ரியா என்கிற பொன்னாத்தாள் அவர்களே.. எங்கள் அணித்தலைவர்,  மஞ்சள்நகர மன்னர் கதிர் அவர்களே, நான் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, நான் பேச ஆரம்பிக்கும் முன்னர், எல்லாக் கதவுகளையும் இழுத்துச் சாத்த உத்தரவிட்டு உதவிய பிரபாகர் அவர்களே, சபையோர்களே, பெரியோர்களே, தாய்மார்களே... உங்கள் அனைவருக்கும் எனது வணக்கங்கள்!

(ஆஹா, பிரியாவுக்கே லொல்லா? கலக்கல் - கதிர்)

சினிமா மக்களைச் சீரழிக்கிறது... எப்படி? இன்றைக்கு குடும்பத்தோடு சென்று சினிமா பார்க்க முடிகிறதா? ஒரு டிக்கெட் நூற்றிப்பத்து ரூபாய், ஒரு சோளப்பொறி முப்பது ரூபாய், ஒரு பெப்ஸி இருபத்தைந்து ரூபாய், போகவர பஸ் கட்டணம் குறைந்தபட்சம் பத்து ரூபாய் ஐம்பது பைசாக்கள். ஒண்டிக்கட்டையான நானே வட்டிக்குக் கடன் வாங்கித் தான் ’குட்டி" பார்த்தேன் என்றால் குடும்பஸ்தர்களின் நிலையென்ன?

(குட்டி படத்தையா, இல்ல ஸ்ரேயாவையா - கேபிள்...)

பணவீக்கம் வரலாறு காணாத அளவுக்குக் காணப்படுவதால், அரசாங்கத்துக்கு அயோடக்ஸ் வாங்கியே கட்டுப்படியாகாத நிலை. விலைவாசிகள் விண்ணை முட்டி முட்டி நடுமண்டையில் முளைப்பு ஏற்பட்டிருக்கிறது. ஒரு பீரின் விலை எழுபது ரூபாய் என்கிறதிலிருந்தே நமது நாட்டின் பொருளாதாரம் என்னை விடவும் பலவீனமாக இருக்கிறது என்பது புலப்படாதா?

(அரசாங்கம், அயோடக்ஸ்... சரியான பாய்ண்ட்ட புடிச்சான்யா தம்பி! - மணிஜி...  தலையை தடவிப்பார்த்துக்கொள்கிறார் - வானம்பாடிகள்)

அண்மையில் மருத்துவப் பரிசோதனைக்காக நான் ஒரு மருத்துவரிடம் போனபோது, எக்ஸ்-ரே எடுக்க வேண்டியிருந்தது. ஆனால், எனது உடலையும் பொருளாதார சூழ்நிலையும் பார்த்து இரக்கப்பட்டார் அந்த மருத்துவர். ’உனக்கு எக்ஸ்-ரே வேண்டாம். வெயிலில் போய் நில், நான் வெளியே வந்து வெறும் கண்களால் பார்த்து உனக்கு எலும்புகளெல்லாம் இருக்க வேண்டிய இடத்தில் இருக்கிறதா என்று பார்க்கிறேன் என்று சொல்லி விட்டார். சினிமா என்னையே இப்படி சீரழித்திருக்கும்போது, மற்றவர்களையும் சீரழிக்காதா என்று கேட்கிறேன், நடுவர் அவர்களே!

(ஆளப்பாத்தாலே வெடக்கோழி மாதிரி இருக்குபோதே நினைச்சேன்.... வானம்பாடிகள்)

(பொன்னாத்தாள் மணியினை அழுத்த...லாஸ்ட் மேட்டர் என சைகையால் சொல்லி சேட்டை தொடருகிறார்)

டாஸ்மாக்கில் பீர் விலை குறித்து இங்கு நான் குறிப்பிட்டதற்குக் காரணம் இருக்கிறது! இது பற்றி எதிர் தரப்பிலிருக்கும் கேபிள் அண்ணா, மணிஜீ கூட பல பதிவுகளில் பதபதைத்திருக்கிறார்கள்... ஒரு பீர் குடித்தால் கூட அதிலிருந்து பதினோரு ரூபாய் இருபத்தைந்து பைசா அரசின் கஜானாவுக்குப் போகிறது. ஆனால், இதுவரை ஸ்ரேயா நடித்த பதிமூன்று படங்களையும் தலா பதிமூன்று முறை பார்த்தும் கூட, அரசு கஜானாவில் ஐம்பது பைசா கூட போய்ச்சேரவேயில்லை. காரணம், சினிமாவுக்கு வரியில்லை என்பதால், பீர் சமூகத்துக்கு ஆற்றும் சேவையைக் கூட சினிமா ஆற்றவில்லை என்பதே டாஸ்மார்க்காலஜிஸ்டுகளின் ஆதங்கமாய் இருக்கிறது.

(கேபிள், மணிஜி ரொம்ப குஷியாகை தட்ட, அரங்கம் முழுதும் ஆர்ப்பாட்டமான கைத்தட்டல்....)

(பொன்னாத்தாள் மீண்டும் மணியடித்து நேரமானதை சுட்டிக்காட்ட...)

எனவே அரசு கஜானாவுக்கு சல்லிக்காசு கூட அளிக்காத சினிமா சமூகத்தைச் சீரழிக்கிறது என்று சொல்லி, நான் பேசி முடியும் வரை மின்விசிறிக்காற்றில் நான் பறந்துவிடாமலிருக்க, பலமாய் இறுக்கிப் பிடித்துக்கொண்டிருந்த என் அறைத்தோழர்களாம் ஆருயிர் நண்பர்களுக்கும், கூர்ந்து கவனித்தவர்களுக்கும், குறட்டை விடாமல் அமைதியாய் உறங்கியவர்களுக்கும் நன்றி தெரிவித்து அமர்கிறேன்.

(கேபிள் திருதிருவென முழிக்கிறார்....  பக்கத்துலே ஏதாவது கடையிருக்கா? வெயில் ரொம்ப அதிகமாயிருக்கு... சேட்டை - பிரபாகரிடம்)

தீர்ப்பு நாளைக்குங்கோ!...


(தொடரும்...)

பதிவர்கள் பட்டிமன்றம்..முதல் நாள்...

|

(நடுவர் பொன்னாத்தாள் மெலிதாய் சிரித்தபடி தனது உரையை ஆரம்பிக்கிறார்)

’எல்லாத்துக்கும் இந்த பொன்னாத்தாளோட வணக்கம். இன்னிக்கு நாம இங்க பேசப்போறது இந்த சமுதாயத்துக்கு ஒரு எழவுக்கும் ஒதவாத ஒரு முக்கியமான ஒரு விஷயம். சினிமா சமுதாயத்தை சீரழிக்கிறதுன்னு பேசறதுக்கு ஒரு அணியும், சீர்படுத்துகிறதுன்னு பேசறதுக்கு இன்னொரு அணியும் வந்திருக்காங்க.

(ஆரம்பத்துலயே உண்மைய சொல்லப்படாதும்மா - வானம்பாடிகள்)

சீர்படுத்துதுங்கற தலைப்பில பேச என் பீச்சாங்கை பக்கமா தலைவரா தலையில கைய வெச்சிகிட்டு ஃபேனோட போராடிகிட்டிருக்கிற நம்ம நைனா வானம்பாடிகள், எல்லாத்தையும் க்ளோசா மானிட்டர் பண்ணிகிட்டிருக்கிற டமாரம் அதாங்க நம்ம தண்டோராங்கற மணிஜி, கடைசியா சிங்கை சென்று உள்ளங்கள கவர்ந்து மெரட்டி, மெரண்டு போயி வந்திருக்கிற கனெக்சன் பார்ட்டி, அதாங்க கேபிளு.

(சுற்றிலும் பார்த்துக்கொண்டிருந்த மணிஜி டக்கென நடுவரை நோக்குகிறார்)

சீரழிக்கிறதுங்கற அணிக்காரங்க என் சோத்தாங்கை பக்கமா கும்பலா உக்காந்திருக்காங்க. தலைவரா, மௌனமா வார்த்தைங்கள கசியவிட தயாரா நம்ம கதிரு, பக்கத்துல மார்க்கண்டேயன்னு மார்த்தட்டிகிட்டிருக்கிற ஸ்நேக் பிரபான்னு அறியப்படற எங்கண்ணன், மெதுவா பம்மிகிட்டு சேட்ட பண்ணலாம்னு காத்துகிட்டிருக்கிற நம்ம தம்பி சேட்டைக்காரன்.

(மணிஜீயைப் பார்த்து)

சீர்படுத்துதுங்கற தலைப்புல பேசறதுக்கு மொதல்ல நம்ம மணீஜிய... கூப்புடறேன். வாங்க, வந்து டமாரமடிச்சி கலக்குங்க...’

(மைக்கை லாவகமாய் பிடித்து கம்பீரமாய்...)

’புரட்சித்தலைவியை போன்ற தைரியம் கொண்ட பொன்னாத்தா அவர்களே, சினிமா சமுதாயத்தை சீர்ப்படுத்துகிறது என்பது ஆயிரத்தில் ஒருவனுக்கல்ல ஆயிரம்பேருக்கும் தெரியும். சினிமாவை எனிமாவாகப் பார்க்கும் எதிரணியினர் ரீமா சென்னை வைத்து கலக்கலாய் படம் எடுத்து இன்றளவும் என்னை கண்டு இரண்டு பெல்ட் போட்டு பயந்து அலையும் செல்வாவின் ஆயிரத்தில் ஒருவனைப் பார்க்கட்டும், தங்களின் முடிவினை மாற்றிக் கொள்வார்கள்.

(இன்னும் ரீமாவ மறக்கல போலிருக்கு - கேபிள்)

கலைஞரைத்தவிர யாரையும் தலைவராக ஏற்றுக்கொள்ள மாட்டேன் என அழகிரி சொன்னதிலிருந்தே தெரியவில்லை, சினிமா சமுதாயத்தை சீர்ப்படுத்துகிறதென்று? இதோ எதிரணியில் இருக்கும் பிரபா, அண்ணா சினிமா கதை சொல்லுங்கள் என அடிக்கடி கெஞ்சி நச்சரிக்கும்போதே தெரியவில்லை சமுதாயத்தை சீர்ப்படுத்துகிறதென்று? ரீமாவை வைத்து இன்னும் நிறைய படங்களை எடுக்கவேண்டும், சமுதாயம் சீர்படும் என சொல்லி வாய்ப்புக்கு நன்றி கூறி விடை பெறுகிறேன்... வணக்கம்...’

(என்னடா இன்னும் அரசியல் வரலையேன்னு பார்த்தேன் - வானம்பாடிகள்)

’ஆஹா, ரீமாதாசன் ரீங்காரமிட்டு ரவுத்திரம் பழகி, சினிமாதான் சமுதாயத்த சீர்திருத்துதுன்னு கலக்கலா சொல்லிட்டு போயிருக்காரு. கலங்கி போயிருக்கிற, பேஸ்தடிச்சிருக்கிற என் அண்ணன் என்ன சொல்லப்போகுதோ, ம்... பாக்கலாம். வாங்கண்ணா, வந்து எதாச்சும் உங்க அனுபவத்த கலந்து சொல்லுங்க’

(மெதுவாய் வந்து வானம்பாடிகள் பக்கம் பார்த்து தயங்கி பிரபாகர்)

’இந்த மாபெரும் அவையிலே நடுவர் பொறுப்பை ஏற்றிருக்கும் என் அன்பிற்கு அன்பான, பாசத்திற்கு பாசமான’

(அன்பு, பாசம் ரெண்டும் ஒன்னுதாண்டி...வானம்பாடிகள்)

’தங்கத்தின் தங்கம், மாதர் குல விளக்கு...’

(பொன்னாத்தாள் மெல்ல பல்லை கடித்து யாருக்கும் தெரியாதவாறு மெதுவாய் 'அய்யோ ஐஸ், போதும் மேட்டருக்கு வாங்க’ என சொல்ல)

’இருக்கும் இந்த இடத்தில் இருக்கும் ககலகலப்பு சினிமாவில் இருக்கிறதா? இல்லையே? அதனால்தான் சொல்கிறேன், சினிமா சமுதாயத்தை சீரழிக்கிறது என்று. எனக்கு சின்ன வயதில் நடந்த ஒரு விஷயம் ஞாபகத்திற்கு வருகிறது. ஒரு பெண்ணை காதலிக்கும்போது உயிருக்கு போராடும் இன்னுமொரு பெண்ணை தொட்டு தூக்கி காப்பாற்றாத தமிழ் மண்ணைச் சேர்ந்த இங்கு இப்போது வரும் படங்கள் எல்லாம் எப்படி இருக்கிறது?

(இங்கயும் கொசுவர்த்தியா - வானம்பாடிகள், இன்னும் மூனு பேரு பேர சொல்லாம விட்டுடாப்ல - கதிர்)

பாத்தவுடன் காதல், பார்க்காமல் காதல், பஸ்ஸில் காதல், ரயிலில் காதல், ஒரே நேரத்தில் பல காதல் என சமுதாய சீரழிவே நடக்கவில்லையா?. இதைத்தான் நான் ரமேஷ் காதலிக்கும்போதும், மணி காதலிக்கும்போதும் சொன்னேன், கேட்கவில்லையே? இன்னும் பல உதாரணங்களை என் சிறு வயது நினைவுகளிலிருந்து எடுத்து சொல்ல..’

(மணியினை பொன்னாத்தாள் பலமாக அடிக்க)

நினைக்கும்போது என் அன்புக்கும் அன்பான... தங்கத்தின் தங்கமான...

(வெளிய வாடி உன்னை உண்டு இல்லைன்னு பண்றேன்னு கேபிள் சிக்னல் செய்ய, பயந்தவாறு) 

தங்கை மணியடித்து எனது உரையை முடித்துக்கொள்ள சொல்வதால், காதலை கொச்சைப்படுத்தும் இந்த சினிமா சமுதாயத்தை சீரழிக்கிறது என்பதை வலியுறுத்தி சொல்லி விடை பெறுகிறேன், வணக்கம்’.

’ஸ்... அப்பா.... மழை பேஞ்சி ஓஞ்ச மாதிரி எங்கண்ணன் ஒரு தாக்கு தாக்கிட்டதா நினைச்சிட்டு சொல்லிட்டு போயிருக்காப்ல. இவருக்கு என்ன நிதர்சனத்த சொல்லி இந்த இடத்த ஹாட் ஸ்பாட்டாக்குறாரு நம்ம கேபிள்னு பாப்போம்...

வாங்க கேபிள்ஜி...  நிறையா பொம்பளைங்க கேட்டுகிட்டிருக்கிறோம் அப்படிங்கறத மனசுல வெச்சிகிட்டு உங்க கருத்துக்கள  விட்டு விளாசுங்க...’

(அடுத்த பாகத்துல பாக்கலாம்...)

கேபிள் அண்ணாவின் புத்தகம் - பிரபாகர்...

|

லெமன் ட்ரீயும்..இரண்டு ஷாட் டக்கீலாவும்...

சங்கர் நாராயண் - (நம்ம கேபிள் அண்ணா தாங்க!))
(இந்த புத்தகத்தினை ஆன்லைனில் வாங்க இங்கே அழுத்தவும்...)

முத்தம்:

ஒரு எண் மாறி அழைப்பதால் வரும் அபயக்குரலோடு ஒரு பெண்ணின் குரல். அந்த பெண்ணை சந்தித்து அவளின் துயரை எப்படி போக்குகிறான் என்பது தான் இச் சிறுகதை. மாடலாகவேண்டும் எனும் மோகத்தால் எப்படி ஒரு பெண் சீரழிகிறாள், சந்தர்ப்ப சூழ்நிலைகள் தவறுவதற்கு வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்தாலும் கதாநாயகன் என்ன செய்கிறான் என்பதை அழ்காய் சொல்லியிருக்கிறார். படிக்கும் நமக்கு ஒரு பரபரப்பு... முத்தம், படித்தபின் நமது பிரியமானவரிடம் கிடைத்தார்போல் உணர்வு.

லெமன் ட்ரீயும்..இரண்டு ஷாட் டக்கீலாவும்...

தெரியாத நாளையைப் பற்றி எண்ணாமல் தெரிந்த இன்றைய பொழுதை அனுபவி எனும் கருத்தில் இக் கதை. இதை கதையில் வரும் அந்த நபரே சொல்ல்வதாய் வைத்திருக்கிறார். சந்தோஷம் என்றால் என்ன என்பதையும் அதற்கு வயது ஒரு தடையில்ல என்பதையும் தனது குறும்பான வர்ணனைகள், நவீன கலாச்சாரத்தின் நிகழ்வுகளோடு சொல்லியிருக்கிறார்.

கல்யாணம்...

முதிர் கண்ணனை பற்றிய கதை (முதிர் கன்னிக்கு எதிர்ப்பதம் என்னங்க?) கொஞ்சம் விரசமாயிருந்தாலும் சொல்ல வந்ததை தெளிவாய் சொல்லி, திட்டி சாத்துவதன் மூலம் இறுதியில் முடிவை உணர்த்திவிடுகிறார்.

ஆண்டாள்...

சிறுவயதுமுதல் ஆண்டாளின் மேல் அசாத்திய அன்பு, ஆறுவருடம் தொடர்பறுந்து பார்க்கும் ஒரு நாள், பேசி கிடைக்கும் அவமானத்தால், ஆண்டாள் இல்லை என சொல்ல, ஆண்டாள்தான் என தெரிந்தாலும் ஆண்டாளாய் இருக்கக்கூடாது என எண்ணுகிறோம் கதை நாயகனைப்போல நாமும். எதார்த்தமான ஒரு கதை.

ஒரு காதல் கதை, இரண்டு கிளைமாக்ஸ்...

ஒரு அழகான காதல் கதை, இரண்டாவது கிளைமாக்ஸ் தேவையில்லை என்பேன். மெலிதாய் ஆரம்பித்து, காதலை சொல்லுவதாய் வைத்து அழகாய் ஒரு திருப்பம்.

தரிசனம்...

சாமியார்கள் செய்யும் தகிடுதித்தங்கள்... புரிந்தாலும் அமைதியாய். கணவன் மனைவியை வைத்து அழகாய் சொல்லியிருக்கிறார்..

போஸ்டர்...

சினிமா திரைக்கதை போன்று, ஒரு சீரியல் போஸ்டர் படுத்தும் பாட்டை வைத்து பல கோணங்களின் நகரும் கதை...

துரை...நான்...ரமேஷ் சார்...

சினிமா மோகத்தால் சீரழிந்த ஒரு பெண்ணின் கதையை காதலோடு துவக்கி, கட் பண்ணுவதில் முடிக்கிறார். முடிவு கொஞ்சம் அதிர்ச்சியாய்த்தான் இருக்கிறது. நம்பியவர்களின் வஞ்சகம் எதையும் செய்ய வைக்கும் என்பதை வலியுறுத்துகிறார். அந்த பெண்ணின் மேல் பரிதாபமாய் வருகிறது.

என்னை பிடிக்கலையா...?...

அதீத அன்புக்காக ஏங்கும் ஒரு பணக்காரனின் மனைவி. ஆரம்பத்தில் காதலியாய் இருந்தபோது கிடைத்த எல்லாம் திருமணத்திற்குப்பின் கணவன் பிசினஸில் ரொம்ப பிஸியாக கிடைக்காமல் போக, வீட்டில் வாடகைக்கு தங்கியிருக்கும் ரமேஷோடு ஈர்ப்பு ஏற்படுகிறது. இதன் பிண்ணனியிலான கதை, வித்தியாசமான ஒரு கோணத்தில்.

காமம் கொல்...

சாமியார்களையும் விட்டுவைக்கவில்லை இந்த கதையின் மூலம். அமெரிக்காவில் இருக்கும் ஒரு இளைஞன். அவனைத்தேடி வரும் குடும்ப சாமியார் (அவர்தான் அவனுக்கு பெயர் வைத்ததாய் சொல்கிறார்). காமத்தை அடக்குவது பற்றி பேசி, முடிவில்... படித்துப்பாருங்கள்.

ராமி...சம்பத்...துப்பாக்கி...

இதில் தலைப்பில் உள்ள மூன்றும்தான் முக்கிய கதாபாத்திரம் இந்த கதையில்... கடைசியில் அவள் அவனை அணுக, தற்கொலை செய்து கொள்ள தூண்ட காரணம்... என எல்லாத்தையும் நம் யூகத்துக்கு யூத் விட்டு விட்டு விடுகிறார்.

மாம்பழ வாசனை...

ஒருவனின் அதீத காதலும், யதார்த்தமாய் ஒரு பெண்ணைப்பற்றியும் மாம்பழ வாசனையோடு... கடைசியாய் எப்படி காத்திருக்கிறான் என படியுங்கள்...

நண்டு...

எழுதியதில் ரொம்ப..... பிடித்த கதை. கணவருக்கு பிளட் கேன்சர்... அதை அறிந்த மனைவியின் மனநிலை. ரொம்பவும் சென்சிடிவான கணவர் எப்படி எதிர்கொள்வார் என பதபதைப்பு, கடைசி பாராவில் பதில் சொல்லியிருக்கிறார்.

இவை யாவும் நான் படித்து உணர்ந்து எழுதியவை. படித்துப் பாருங்களேன், உங்களுக்கும் ஒத்துப்போகிறதாவென...

தண்ணீர் தண்ணீர்... கவிதை...

|

தண்ணீர் சிக்கனம் சொல்லி
தவறாம எல்லாரும் இப்போ
கண்ணீர் வரவே எழுதி
கதறுராங்களே மச்சான்

உண்மையில இது சரியா
உரைத்திடுங்க என் மச்சான்
என்னத்தயெல்லாம் செஞ்சா
ஏதுவாயிருக்கும் என் மச்சான்....

சிக்கனம் எப்போ தேவை
சிந்திச்சி பாரு நீ புள்ள
இக்கணம் ஏதும் இருந்தா
இறுக்கி சுருக்கு நாம

சிக்கனமாகவே இருந்து
சீர்ப்படுத்தலாம் புள்ள
பொக்குனு ஏதுமின்றி
பேசுவது சரியா புள்ள

முக்கிய விசயமெல்லம்
முழுசாவே மறந்ததால..
பக்குவமா உனக்கு நானும்
பாட்டுல சொல்லுறேன் கேளு

வெளையும் நிலமும் வீடாக போச்சி
வான நிலையும் மாறியுமே போச்சி
கழனி போயி பாடுபட்டாலும்
கைகாசு தானே கைவிட்டு போச்சி

மாசு சேர்ந்து மக்களுக்கெல்லாம்
மாசம் புது நோய் சேர்ந்திடலாச்சு
வீசுற காத்தும் விஷமாக ஆச்சு
விஞ்ஞானம் வளர வளமை போச்சு

மக்கிபோகா பிளாஸ்டிக்கயும்
மக்களெல்லாரும் உபயோப்பதால
விக்கிபோறா பூமித்தாயி
வீணாப்போகும் தண்ணியால...

நாக்கு ருசிக்கவே நல்லா தின்னு
மூக்கு துடைச்சி முகத்தை துடைச்சி
கைதுடைக்கும் மென்காகிதமுமே
மரத்த அழிச்சி செஞ்சது புள்ள

வாகனங்களும் விடுற புகையும்
வாழ்வ அழிச்சி நாள சுருக்குது
வானத்தில ஓசோன் ஓட்டையும்
வெயிலா மாறி ஆளயும் கொல்லுது

பூகம்பம் வருது பூமியும் பொங்குது
பொசுக்குன்னுதான் மக்கள சாய்க்குது
ஆகவேண்டியத செய்யலையின்னா
அவதிப்படுமே சந்ததி புள்ள

என்ன செய்யனும் ஏது செய்யனும்
எடுத்து சொல்லுங்க என்னன்பு மச்சான்
சொன்னத கேட்டு சிந்தையில் போட்டு
சந்ததிங்களுக்கு நல்லது செய்வோம்....

மண்ண சொரண்டுற வேலைய விட்டு
மரத்த வளர்க்கும் வேலையப் பாப்போம்
தண்ணீர தேக்க அணைகள் கட்டி
தரணியெல்லாம் செழிப்பா மாத்தி

உயிர் காக்கும் விவசாயம்
உயர்ந்திடவே வழிகள் செய்வோம்
சாயங்களின் கழிவு எல்லாம்
சுத்தப்படுத்தி நதியைக் காப்போம்

தாயைப்போன்ற இயற்க்கையத
தாங்கிக்காத்தா போதும் புள்ள
மாயமின்றி மந்திரமின்றி
மாற்றமெல்லாம் வந்துடும் புள்ள!

பேருந்தில் காதல் - முறிந்த நட்புக்கள்...

|

அன்பு நண்பர் சங்கவி  பேருந்தில் காதல்.. பற்றி இடுகை எழுத சொல்ல இதோ களத்தில இறங்கிட்டோமில்ல!

டே ஸ்காலரா இருந்த சமயத்தில (ஹாஸ்டல், தனி வீடுன்னு எல்லா விதமாயும் படிச்சமுங்க) ஒரு வருஷம் பஸ்ஸில போயி படிச்சப்போ நடந்ததுதான் இந்த இடுகையில...

தினமும் சரியா எட்டு மணிக்கு வர தீரன் சின்னமலை பஸ்ஸுதான் நம்ம ரெகுலர் பஸ். அதுல கிளம்பினா ஒன்பது பத்துக்கெல்லாம் பெரம்பலூர் பஸ் ஸ்டாண்டுல டான்னு விட்டிடுவாங்க! அந்த பஸ்ஸுல முக்கால் வாசி காலேஜ், பாலிடெக்னிக் பசங்க பொண்ணுங்க தான் இருப்போம்.

அதுல பல கூத்துங்க நடக்கும், நிறைய காதலும் இருக்கும். கண்டக்டர் பேரு நேரு, ரொம்ப ஜாலியான மனுஷன். பசங்களோட பசங்களா ரொம்ப ஜோவியலா இருப்பாரு.


நாங்க மூனு பேர் என் கிளாஸ்ல இருந்து பஸ்ஸில போவோம், சுரேஷ் ஆத்தூர்ல இருந்து, நம்ம ஊர் அடுத்த வீரகனூர்ல இருந்து செந்தில்.

நாம ஏற்கனவே மாமா பொண்ண ஒருதலையா பாத்துட்டிருந்ததால எந்த பொண்ணுங்க மேலயும் ஆர்வமில்ல. அப்போதான் பாலிடெக்னிக் ஃபர்ஸ்ட் இயர்ல சேர்ந்த ஒரு பொண்ணு கிராஸ் ஆச்சு. வழியிலயே அரசலூர் கைகாட்டியில இறங்கிக்கும். ரொம்ப அழகா, குனிஞ்ச தலை நிமிராம இருக்கும்.

நம்மாளுங்க ரெண்டு பேரும் அந்த பொண்ண பாக்க ஆரம்பிச்சானுங்க. அது பஸ்ஸில ஏறும்போது பயங்கர கூட்டமா இருக்கும். நின்னுகிட்டுத்தான் பெரும்பாலும் வரும். உக்காந்துகிட்டு வந்தாலும் எழுந்து அக்கறையா சீட்ட விட்டு கொடுத்துட்டு முன்னாடி போய் அந்த பொண்ண பாக்குற மாதிரி நின்னுக்குவானுங்க.

அந்த பொண்ணு வந்ததும் ரெண்டு பேர் முகத்துலயும் ஆயிரம் வாட்ஸ் பல்பு எரியும். சீப்ப எடுத்தி சீவிகிட்டு கர்சீப்ல இருந்து பவுடர்லாம் அடிச்சிகிட்டு அந்த பொண்ணு பார்வையில படற மாதிரி இருப்பானுங்க.

துணைக்கு நானும் கூட இருப்பேன். ஜாலியா பேசி சிரிச்சிகிட்டு போவோம். அப்பப்போ சிரிச்சி ஓரக்கண்ணால பொத்தாம் பொதுவா எங்க மூனு பேரயுமே பார்க்கும்.

யார பாக்குதுன்னு வந்த சண்டையில அவனுங்களுக்குள்ள ஃபிரண்ட்ஷிப்பே ஸ்பாயில் ஆகற மாதிரி ஆயிடுச்சி. கடைசியில நாட்டாமை ரேஞ்சில நாம தலையிட்டு, ’அந்த பொண்ணையே கேட்டிடுவோம், ஒங்க ரெண்டு பேர்ல யார சொல்லுதோ அவனுக்கு இன்னொருத்தன் விட்டுக்கொடுத்துடனும், தங்கச்சியா ஏத்துகிட்டு’ ன்னு சொல்ல, டீலிங் பிடிச்சதால ஒத்துகிட்டானுங்க.

அதுகூட படிக்கிற ஒருத்தன் ராஜான்னு பேரு, நம்ம கேங்ல பிட்டாயிட்டான். அண்ணே அண்ணேன்னு ரொம்ப பாசமா இருப்பான். அந்த பொண்ணும் அவனும் ஒன்னாத்தான் இறங்கி போவாங்க. எங்ககூட அவன் க்ளோசா இருக்கிறத பாத்துட்டு அந்த பொண்ணும் அவன்கிட்ட ரொம்ப நல்லா பேசுதுன்னு சொல்லுவான்.

வழக்கம்போல ரெண்டு வாரம் போச்சு, அந்த பொண்ண தனியே பாக்குற சந்தர்ப்பம் கிடைச்சது. செவ்வாக்கிழமன்னிக்கு ராஜா மூலமா வெள்ளிக் கிழமை காலையில பிராக்டிகல முடிச்சிட்டு மதியம் பெரம்பலூருக்கு இதயத்தை திருடாதே படத்துக்கு கிளாஸ்மேட்டுங்களோட வர்றதா தகவல் வந்துச்சி.

அடுத்தநாள் நாலு டிக்கெட் வாங்கி வெக்க சொல்லி இருபது ரூபா பணமும் மறுத்தாலும் கண்டிப்பா கொடுத்தே ஆகனும்னு சொன்னதா ராஜா சொல்லி கையில கொடுத்தான். கொடுத்துட்டதா சொல்லிடுன்னு அவன செலவுக்கு வெச்சிக்க சொல்லிட்டோம்.

தியேட்டர்ல கண்டிப்பா ஃபுல் ஆகாதுங்கறது எல்லாருக்கும் தெரியும், ஆனாலும் சரி நம்மள பாக்கறதுக்கு அதுவும் பிரியப்படுதுன்னு முடிவு பண்ணிட்டோம்.

ரெண்டு பேரும் பயங்கர எதிர்பார்ப்போட இருந்தானுங்க. அந்த சமயமும் வந்துச்சி. அதுங்க ஃபிரண்ட்ஸ் நாலு பேர், நாங்க மூனு பேர் சந்திச்சிகிட்டோம். தியேட்டர்ல படம் போயிகிட்டிருந்தது.

இடைவேளை. ’எப்பா,  ஏதோ அண்ணன் கிட்ட பேசனும்னு சொன்னியே நாங்க வெளியே போறோம் பேசிக்குங்க’ன்னு சொல்லிட்டு கிளம்பிடுச்சிங்க. நம்மாளுங்களும் கேட்டு முடிவு சொல்லுன்னு சைகையில சொல்லிட்டு வெளிய போயிட்டானுங்க.

மெதுவா பேச ஆரம்பிச்சேன்.  ’ரொம்ப புழுக்கமா இருக்குல்ல’.

’ஆமாம், எங்க வீட்டுல பிரச்சினை இல்ல, சரி உங்க வீட்டுல ஒத்துக்குவாங்களா?’ ன்னு பட்டுனு கேட்டுச்சி.

பகீர்னு ’என்னது’ ன்னு கேக்க,

‘ஆமாங்க, உங்கள ரொம்ப புடிச்சிருக்கு, பயங்கரமா பேசறீங்க, கலகலப்பா இருக்குறீங்க’ன்னுச்சி.

வெலவெலத்துப்போயி, ‘அய்யோ இல்லங்க, நான் ஏற்கனவே மாமா பொண்ணத்தான் கல்யாணம் பண்ணனும்னு இருக்கேன், என் ஃபிரண்ட்சுங்கதா உங்களை லவ் பண்றாங்க, நானும் அவங்கள்ல ஒருத்தனத்தான் லவ் பண்றீங்கன்னு நினைச்சி கேக்க வந்தேன்’ ன்னு சொல்ல,

கேவி கேவி அழ ஆரம்பிச்சிடுச்சி, ‘என்ன அவ்வளவு சீப்பா நினைச்சிட்டீங்களா’ ன்னு.

அப்புறம் என்ன, ரெண்டு பிரண்ட்ஷிப் அன்னியோட காலி. அந்த பொண்ணும் அந்த பஸ்ஸில வர்றதுல்ல. ஹாஸ்டல் போயிட்டேன்.

இதை தொடர அழைப்பது நால்வரை.

1. இளவல் பாலாசி.
2. மங்குனி அமைச்சர்.
3. வெளியூர்க்காரன்.
4. சகா கார்க்கி

மக்கா, கலக்குங்க உங்க பேருந்தில் காதலை!

பாம்பென்றால் படைதான் நடுங்கும்...

|

காலையில ஒரே சத்தம், 'ஐயோ பாம்பு கடிச்சிடுச்சி'ன்னு. எல்லாரும் ஒடி பார்த்தோம். பக்கத்து வீட்டு ஆயா மாட்டு தொழுவத்த சுத்தம் செய்யறப்போ கால்ல கடிச்சிடுச்சி.

சின்ன பையன்னு என்ன கிட்ட விடல. உடனே என்னோட அர்னாகயித்த(அரைஞான் கயிறு) அவுத்து கொடுத்து கடிச்சதுக்கு மேல இருக்க கட்ட சொன்னேன். சின்னப்பையன் சொல்றான்னு கூட பாக்காம மாமா வாங்கி பட்டுன்னு நல்லா இறுக்கி மொழங்காலுக்கு கீழ கட்டிட்டாரு.

குடிக்கிறது நீசத்தண்ணி(நீராகாரம்) கொடுத்தாங்க. நல்லா பேசிகிட்டு இருந்தாங்க. கடிச்ச இடத்துல கிழிச்சி வாய வெச்சி ரத்தத்த உறிஞ்சி துப்பனும்னு சொன்னேன்.

மாமா என்ன செய்யின்னு சொல்ல, கரும்பு தின்னு வாயில கிழிச்சி புண்ணு இருக்கு, புண்ணு இல்லாதவங்கதான் செய்யனும்னு சொன்னேன். கட்டு போட்டதே தேவையில்ல, ஏதோ சொன்னேன்னு பண்ணினேன், சும்மா கம்முனு இருன்னுட்டாரு.

அந்த பாம்ப கண்டுபிடிச்சி அடிச்சிட்டாங்க, கருப்பா மெலிசா என் கையில ஒரு மார் அளவுக்கு இருந்துச்சி. கொஞ்ச நேரத்துல ஒரு பூசாலி(பூசாரி) வந்தாப்ல. மந்திரம் பாடமெல்லாம் போட்டு கயித்த அவுத்துடுங்க, எல்லாம் சரியாப்போச்சின்னாரு. கொஞ்ச நேரத்துல அந்த ஆயா சவமா போச்சி.

எதுத்தாப்புல இருந்த மரத்துல அந்த பூசாலிய பொணத்த எடுக்கிற வரைக்கும் கட்டிபோட்டு வெச்சிருந்தாங்க. பக்கத்துலையே அந்த கடிச்ச பாம்ப கிளையில கட்டி தொங்க விட்டிருந்தாங்க.

*****

வெள்ளிக்கிழம சாயங்காலம், பள்ளிக்கூடம் விட்டதும் குஷியா ரெண்டுநாள் லீவுங்கறதால ரோட்டாரமா பாட்டுப்பாடி புளியம்பழம் பொறுக்கிக்கிட்டு ஒரு கழியில எங்க பையெல்லாம் கோத்து ஆளுக்கு பக்கமா வீதம் போட்டு தூக்கிகிட்டு வந்தோம். அப்போ ஊருக்கு முன்னால இருக்கிற ஏரிக்கர ஓரமா கொஞ்சம் கும்பல் இருந்துச்சி. எல்லாரும் ஹே...ன்னு கத்திகிட்டு ஒடி பார்த்தோம்.

ஒரு குறவரு பாம்ப வெச்சி வேடிக்க காட்டிக்கிட்டிருந்தாரு. விரல் மெலிசுதான் இருந்துச்சி, வயிறு நடுவில உப்பி போயி, சின்னோண்டு நல்லப்பாம்பு அது, எலியினை முழுங்கிட்டு நகர முடியாம மெதுவா ஊர்ந்துகிட்டு இருந்துச்சி. சுத்திலும் நாங்களும் சேர இன்னும் கூட்டம் அதிகமாச்சு.

சின்ன குச்சியில தலையில தட்டினாரு. சட்டுன்னு கோவம் வந்து படமெடுத்து கொத்தவந்துச்சி. குட்டிப்பாம்புன்னாலும் படம் எடுத்து சீறும் போது பயமா இருந்துச்சி... அது கலைச்சிப்போற வரையிலும், எங்களுக்கு அலுத்துப்போற வரைக்கும் வேடிக்க காமிச்சாரு.

கடைசியா, 'இன்னிக்கு வெள்ளிக்கிழம நான் அடிக்கமாட்டேன், யாரவது ஒருத்தரு அடிச்சிக் கொல்லுங்க' ன்னு சொல்ல ஏற்கனவே 'பாம்புன்னா எனக்கு பயமே இல்லடி' ன்னு கத விட்டதால பசங்க எல்லாரும் என்ன பாக்க குச்சிய வாங்கி வழியில்லாம கண்ண முடிகிட்டு ஒரே அடி, சுருண்டு விழ அதுக்கப்புறம் எல்லாரும் மாத்தி மாத்தி அடிக்க பாம்பு ஒரு வழியாச்சு...

வீட்டுக்கு வந்து பெருமையா சொல்ல, பாட்டி ஒரே திட்டு, 'வெள்ளிக்கிழமையும் அதுவுமா இந்த மாதிரி பண்ணிட்டு வந்திருக்கியே' ன்னுட்டு 'பாம்ப புடிக்கிற கொறவன் வெள்ளிக்கிழம அடிக்கமாட்டானாம், இவரு அடிப்பாராம், அறிவு வேணாம்? கருமம், கருமம்....'ன்னு இன்னும் அதிகமா திட்டி, குளிக்க சொல்லி ஒரு மாசத்துக்கு பாம்பு புத்துக்கு பால் ஊத்த சொல்லி படுத்தி எடுத்துச்சி...

*******

மாமா பொண்ண பயங்கரமா லுக் விட்டுகிட்டிருந்தாலும் நம்மள அது கண்டுக்கறதே இல்ல. வாய தொறந்து ஒரு வார்த்தை பேசாது. ஒருநாள், மாமா வீட்டுல பக்கத்துல ஏதோ பரபரப்பா இருக்க, அதுக்கு காரணம் ஒரு பெரிய நல்லப்பாம்புன்னு தெரிஞ்சது. நான் ஹீரோ கணக்கா வேகமா ஒடி பாக்க, தெரியாம வீட்டுக்குள்ள புகுந்த பாம்பு ஒன்னு நல்லா பிலிம் காட்டிகிட்டு இருந்துச்சி.

உடனே ஒரு பெரிய குச்ச எடுத்துகிட்டு போய் அடிக்கிறேன் பேர்வழின்னு பாம்புக்கு மேல பிலிம் காட்டிகிட்டு இருந்தேன். ஓடு கட்டத்துல பாம்பு சர்ருன்னு வெளியே போக, ஒளிய இடமில்லாம வீட்டு ஓரமா போயிகிட்டிருந்துச்சி. நாம அடிக்கிற அடி பாம்பைத் தவிர எல்லா இடத்துலயும் பட்டுகிட்டு இருந்துச்சி.

தறியில வேலை பாக்குற ராமு ஒடி வந்து என்ன ஒதுங்க சொல்லிட்டு, கிடந்த ஒரு சின்ன குச்ச வெச்சி அது தலையில ஒன்னு போட, குச்சி முறிஞ்சி ஸ்கேல் சைசுக்கு ஆயிடுச்சி. பாம்பு நல்லா படமெடுத்து ஆட ஆரம்பிச்சிடுச்சி.

கடிக்க வர்றதையும் பொருட்படுத்தாம துணிச்சலா அந்த சின்ன குச்சால அடிச்சி கொன்னாப்ல. எல்லாரும் அவர பாராட்ட, நம்ம பேர சொல்லி. 'ரொம்பவும் துணிச்சலா அடிக்க முயற்சி பண்ணினாப்ல' ன்னு அத்த சொல்ல, 'அடிச்சது யாரு' ன்னு நம்மாளு நக்கலா கேட்டு சிரிச்சுது... அடிச்ச ராமு வழக்கம்போல பாம்ப காசு போட்டு எரிச்சி ஒரு வாரம் புத்துக்கு பால ஊத்துனாப்ல.

*****

ரொம்ப வருஷத்துக்கு முன்னால பையன், மனைவியோட கடைத்தெருவுக்கு போயிருந்தேன். ஒரு பாம்பாட்டி பாம்ப வெச்சி பயங்கரமா வித்தை காட்டிகிட்டிருந்தார். படமெடுத்து ஆட, விஷ முறிவுக்கு மருந்து என விற்பனை ஜோரா போயிகிட்டிருன்தது. பாம்பு கடிச்சா அதோட கடிவாய்ல வெச்சா போதும். வேற வைத்தியமே தேவையில்லன்னு சொல்லி கிட்டிருந்தாப்ல. யாராவது துணிச்சல் இருக்கிறவங்க பாம்புகிட்ட கைய நீட்டுங்கன்னு சொல்ல, சட்டுன்னு கைய நீட்டினேன்.

பாம்பு கடிக்கவும் இல்ல, விஷத்த முறிக்கவும் இல்ல. காரணம்? உங்களுக்கு நல்லா தெரியுமே!

எங்கேயோ படிச்சது - கண்பார்வையும் கல்வெட்டும்

|

ஊர்ல அந்த மூனு பேருக்கும் வியாக்கியானம் பேசறதுதான் வேலை. அவங்களுக்கு ஒரு குறை இருந்துச்சி, அது தூரத்துல இருக்கிறத சரியா பாக்க முடியாது.

எப்பவும் ஒருத்தரவிட இன்னொருத்தர் பெரிய ஆளுன்னு வியாபிக்கிறதுல மும்மரமா இருப்பாங்க. உதாரணமா பாத்தீங்கன்னா, ஒரு நாளு ஒருத்தர் 'அதோ மலையில வெள்ளை கலர்ல யானையை தெரியுது' ன்னு சொன்னாரு.

இன்னொருத்தர் உடனே, 'ஆமா அதுக்கு கருப்பா ரெண்டு தந்தம் இருக்குது' ன்னாரு'. மூனாவது ஆளு 'கரெக்ட், நெத்தியில பாருங்க புள்ளியா கருப்பா ஒரு மச்சம் கூட இருக்கு' ன்னாரு.

இப்படியெல்லாம் பேசினாலும் படு விவரமான ஆளுங்க. இவங்களுக்கு தெரியாத ஊர் விஷயமே இருக்காது. நுனி விரல்ல வெச்சுருப்பாங்க.

ஊர்ல இருக்கிறவங்களுக்கு கண்பார்வை பத்தி அரசல் புரசல தெரியும், ஆனா கேக்க பயம். ஏதாச்சும் அதப்பத்தி கேக்கப்போனா அவங்களோட மைனஸ் பாய்ண்ட எடுத்துவிட்டு பேச விடாம செஞ்சிடுவாங்க.

உதாரணமா ஒருத்தர் ஏதோ கேக்கப்போக , 'உன் கொழுந்தியாளுக்கு பக்கத்து தெருவில இருக்கிறவனோட தொடர்பாமே' ன்னு கேக்க அதுக்கப்புறம் கேட்டவரு அங்க இருந்திருப்பாருங்கறீங்க?

ஊருக்காரங்களுக்கு இவங்களுக்கு எப்படி மணி கட்டறதுன்னு தெரியல. ஆனா தானாவே அதுக்கான சமயமும் வந்துச்சி.

முப்பது வருஷத்துக்கு அப்புறமா சிவன் கோவில புதுப்பிச்சி கும்பாபிஷேகம் நடத்த இருந்தாங்க. விழாவ நல்லா சிறப்பா செஞ்சி கோபுர உச்சில ஒரு கல்வெட்டு பதிக்க இருந்தாங்க.

இதுதான் சமயம்னு, எல்லார் முன்னாடியும் கல்வெட்டில இருக்கிறத படிச்சு கண் பார்வை கூர்மைன்னு நிரூபிக்கனும்னு மூனு பேரும் முடிவு பண்ணினாங்க.

மொத ஆளு சிற்பி வீட்டுக்கு போனாரு. நைசா சிற்பிகிட்ட கல்வெட்டில என்ன எழுதியிருக்குன்னு சொல்லு நூறு ரூபா தர்றேன்னு கேட்டாரு. சிற்பி நூற வாங்கிட்டு 'சிவமயம்' னு எழுதியிருக்கேன்' னு சொன்னாரு.

கொஞ்ச நேரம் கழிச்சு ரெண்டாவது ஆளு வந்தாரு. சிற்பி 'வாய்யா கல்வெட்டில என்னா எழுதியிருக்கிறேன்னு தெரியனுமா' ன்னாரு.

திகைச்சி போய் பாக்க, 'இல்ல இப்போதான் ஒருத்தர் கேட்டுட்டு போறாரு' ன்னாரு. இரு நூறா கொடுத்து, 'வேற எதாச்சும் எழுதியிருந்தா சொல்லு' ன்னு கேட்க,

'மேல பொடிசா 'ஓம்' னு எழுதியிருக்கேன்' னு சொன்னாரு.

அதே மாதிரி மூனாவது ஆளும் பணம் கொடுத்து கல்வெட்டில கீழ இருக்கிற 'சிற்பி சோமு' ங்கறத தெரிஞ்சிட்டாரு.

கும்பாபிஷேகம் நல்லபடியா முடிஞ்சது. எல்லாத்தையும் கை தட்டி மொத ஆளு கூப்பிட்டாரு.

'இங்க பாருங்க, என்னோட கண் பார்வை பயங்கற கூர்மைன்னு நிரூபிக்கிறேன்' னு சொல்லிட்டு,

மேல உத்து பாத்துட்டு, 'ஆகா என்ன அழகா சிவமயம்னு எழுதியிருக்கு' ன்னு சொல்லிட்டு கன்னத்துல போட்டுட்டாரு.

ரெண்டாவது ஆள், 'அதென்னா பெருசா, அதுக்கு மேல சின்னதா ஓம்னு எழுதியிருக்கு பாருங்க' ன்னாரு.

மூனாவது ஆள், 'அட போங்கப்பா இதெல்லாம் பெருசா, எல்லத்துக்கும் கீழ பொடிசா சிற்பி சோமுன்னு அழகா எழுதியிருக்கு' ன்னு சொன்னாரு.

ஊர்மக்கள் ஆச்சர்யப்பட்டு பலமா கை தட்டி, 'உங்களோட கண்பார்வை பயங்கர கூர்மைன்னு ஒத்துக்கறோம், ஆனா ஒரு விஷயம், அந்த கல்வெட்ட அங்க இன்னும் பதிக்கவே இல்ல' ன்னாங்க...

கொஞ்சம் மாறுதல்களோட மீள் பதிவு..

போகாதே, போகாதே கேபிள் அங்கிள்....

|

சிங்கையை கலக்கிய அன்பு அண்ணன் கேபிள் சங்கர், எங்கள் மனங்களையெல்லாம் கொள்ளையடித்து இன்றிரவு சிங்கை நேரம் ஒன்பது முப்பது அளவில் சென்னையை நோக்கி கிளம்பியிருக்கிறார்.

ஜோசப், வெற்றிக் கதிரவன், தம்பி ரோஸ்விக், ஜெகதீசன், புதிதாய் எல்லோருக்கும் அறிமுகமான இளம் புயல் கருப்பு, பிரபாகர், அப்புறம் பதிவுலகின் எல்லோர் இதயங்களையும் கொள்ளை கொண்ட அன்பு சிங்கை நாதன் என வழியனுப்ப வந்திருந்து அண்ணாரை வழியனுப்பி வைத்தோம்.

சிங்கை நாதனை முதன்முறையாய் பார்த்தேன், சாந்தமான முகம், சாத்வீகமான பேச்சு, மனதை வருடும் அவரது செயல்கள்... நல்லவர்களைத்தான் ஆண்டவன் சோதிக்கிறான் என்பதற்கு உதாரணமாய் பட்டது.

நன்றாக மனத்துணிவுடன் இருக்கிறார். வரும்போது நாங்களெல்லாம் சாப்பிடுவதற்கு கபாப் வாங்கி வாங்கி வந்திருந்தார். நிறைய அவரோடு பேசினோம். கேபிள் அண்ணா ரொம்ப சந்தோஷப்பட்டார், அவரை சந்தித்ததற்கு. வெற்றிக்கதிரவனை பதிலுக்கு தூக்கி யூத் தான் என நிரூபித்தார்.

அண்ணா திரும்பவும் வாருங்கள், சிங்கை பதிவுலகமே காத்திருக்கிறது... அன்பான வருகைக்கு எங்களின் மனமார்ந்த நன்றி. கீழே வழியனுப்பிய போட்டோக்கள் சில...

புகைப்படங்களில் கிளிக் செய்து பெரியதாகவும் பாருங்கள்...


ஜோசப்புடன் அண்ணா
 
 
சிங்கை நாதனுடன் அண்ணா


சிங்கைநாதனுடன் நான்.
 
 
பிரபாகருடன் அண்ணா
 

'கருப்பு' வுடன் அண்ணா


பதிலுக்கு தூக்குவேன்ல... வெற்றிக்கதிரவனை தூக்கும் அண்ணா...போகாதீங்க அங்கிள்... வெற்றிக்கதிரவன் லொல்...
(கருப்பு, சிங்கைநாதன், வெ.க, ரோஸ் விக், ஜோசப்)ஜெகதீஷ், கேபிள் அண்ணா, ஜோசப், சிங்கைநாதன், கருப்பு, ரோஸ் விக், வெற்றிக்கதிரவன்.

சிங்கை பதிவர் சந்திப்பு விவரங்கள்...

|

கேபிள் அண்ணா சிங்கை வருகிறார் என்றவுடனேயே பரபரப்பு தொற்றிக்கொண்டது, இரு விஷயங்களால். ஒன்று சென்னையில் என்னை தங்கமாய் கவனித்தது இன்னும் மனதில் இனித்துக்கொண்டிருப்பதால் அதைவிட மேலாய் அல்லது அந்த அளவிற்காவது கவனிக்கவேண்டும் என்பது. இரண்டாவது சிங்கையின் எல்லா பதிவர்களையும் சந்திக்கும் ஒரு மாபெரும் வாய்ப்பு கிட்டியிருக்கிறது என்பது.

வரும் நாளன்று எனக்கு வேலை. முடித்து நேரே வரவேற்க வந்துவிடுகிறேன் என சொல்லி வரும் நேரத்த சொல்லச் சொல்ல, வருவது பற்றிய சரியான தகவல்கள் துக்ளக் மகேஷ், தம்பி ரோஸ்விக், விஜய், வெற்றிக்கதிரவன் என எல்லோரின் மூலமாயும் வரிசையாய் வர அன்பை எண்ணி ஆனந்தப்பட்டுக்கொண்டு விமான விலையத்துக்கு விரைந்தேன். வருகை பற்றி அன்பின் அண்ணன் கோவியார் அழகாய் பதித்திருக்கிறார்.

நேரே தேக்கா சென்று சகுந்தலாவில் அவருக்கு கொத்துபரோட்டா(கேபிளுக்கேவா?) தோசை என விருந்தோம்பி விட்டிற்கு சென்றோம். நெடுநேரம் பேசிக்கொண்டிருந்தோம். அண்ணாவின் ஆக்சிடென்ட் குறும்படத்தை பார்த்து பிரமித்து அது பற்றி சிலாகித்து பேசி அதனைப்பற்றி விவாதித்தோம்.

அடுத்த நாள் ஓய்விக்குப்பின் எழுந்து அண்ணாவுடன் கிளம்பி அவரது இரு வாசகர்கள் ஜெய் மற்றும் பாலாவை சந்திக்க தேக்கா கிளம்பினோம். அஞ்சப்பரில் சந்திப்பு. அங்குதான் எனக்கு ஒரு அருமையான தோழர் புண்ணாக்கு மூட்டை எனும் பெயரில் பின்னூட்டமிடும் பாலா கிடைத்தார், இறுதியில் சொந்தமாயும் ஆகிவிட்டார். வேலைக்கு நேரமாக விடைபெற்று கிளம்பினேன்.

அடுத்த நாள், சிங்கையும் பதிவர்கள் சந்திக்கும் ஒரு முக்கியமான தினம். உணவு வேளைக்கு வரச்சொல்லி அழைப்பு வர கிளம்பி சங்கர் அண்ணாவும் நானும் தேக்கா சென்றோம். வழியில் சாலைகளின் நேர்த்தி, போக்குவரத்தின் ஒழுங்கு, விதி முறைகள், தூய்மை என பார்க்கும் ஒவ்வொன்றிலும் வியந்து நம்மூரில் இல்லையே என ஆதங்கப்பட்டுக் கொண்டார்.

சரியான நேரத்திற்கு சென்றடைந்தோம். எல்லோரும் அஞ்சப்பர் சென்று திருப்தியாய் அளவளாவி மதிய உணவு. பாரதி, நட்புடன் ஜமால், ஜோசப் மாமா மகன் என புதியவர்களையும் அறிமுகப்படுத்திக்கொண்டு பின் சுவாமி ஒம்காரும் சேர்ந்துகொள்ள எல்லோரும் பதிவர் சந்திப்பு நடக்கும் எஸ்பிளனேட் அதுக்கே உள்ள பாலம் நோக்கி பேருந்தில் விரைந்தோம். இப்போதான் தாத்தா சென்னையில் இதுபோன்ற பஸ்ஸை விட்டிருக்கிறார் என கமெண்ட் அடித்தார்.

எல்லோரும் ஒருவழியாய் சந்திப்பு நடக்கும் இடத்தை அடைந்தோம். பாலா, சரவணன், அப்பாவி முரு, பித்தனின் வாக்கு சுதாகர், அறிவிலி ராஜேஷ், ஜோ,  மகேந்திரன், ஜெகதீசன்,  முகவை ராம் என எல்லோரும் வந்து சேர்ந்து கொள்ள கலகலப்பாய் கூட்டம் ஆரம்பித்தது. அன்புடன் அறிவிலி ராஜேஷ் கொண்டு வந்த மிளகாய் பஜ்ஜியும் சுண்டலும் காரசாரமாய் விவாதத்தை துவக்க ஏதுவாய் இருந்தது.

முதலில் எங்களிடம் மாட்டியவர் கேபிள் அண்ணா. கேள்விக்கணைகளால் துளைத்தோம். கேட்பதில்தான் நாம் எப்போதும் வல்லவர்களாயிற்றே? அழகான கேள்விகள், அற்புதமான பதில்கள். தான் எடுக்கப்போகும் படத்தின் கதாநாயகி சினேகா என்ற ஒரு தகவலை சொல்லி பிற பேச்சுவார்த்தைகள், தயாரிப்பு திட்டங்கள் தயாராகி வருவதாய் சொன்னார். சுஜாதா ஒரு அருமையான எழுத்தாளர் என சொல்லி அவரைப்பற்றி சில விவரங்களை பகிர்ந்துகொண்டார்.

வெற்றிப்படங்களுக்கான இலக்கணங்கள் பற்றியும், நாங்கள் இருவரும் டி.வி யில் ரசித்துப்பார்த்த விக்ரம் படத்தைப்பற்றியும் அதில் மாடியில் துரத்தும் காட்சியினை அழகாய் படம் பிடித்ததையும், அந்த படம் ரிலீஸ் ஆன புதிதில் தொடர்ச்சியாய் காலைக்காட்சியாய் இருபதுநாள் பார்த்ததையும் நினைவு கூர்ந்தார்.

அடிக்கடி சிங்கையில் வெக்கையும் குறைந்த ஆடையுடுத்தும் யுவதிகளால் வெக்கமும் அதிகமாய் இருப்பதாய் தகவல் தந்தார். மொத்தத்தில் சினிமா பற்றிய எல்லா சந்தேகங்களுக்கும் தெளிவுற விளக்கம் அளித்தார்.

வெளியே தூறிக்கொண்டிருந்த மழை நின்றிருக்க அருகே இருந்த இந்திய தேசிய ராணுவத்தின் நினைவுச்சின்னம் அருகே எல்லோரும் மீண்டும் குழுமினோம். ஓம்கார் சுவாமியிடம் எங்களின் கேள்விகணைகளை வீச ஆரம்பித்தோம். நித்யானந்தரில் இருந்து ஆரம்பித்து, என் காவியுடை உடுத்துகிறீர்கள்(வெள்ளை வீடியோ, போட்டோவில் கிளார் அடிக்கும்) பேய் பிடித்தல், சாமியாடுதல் (கடுமையான மன அழுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்கள்) பற்றிய அழகான விளக்கங்களை அளித்தார்.

இதற்கான ஒலிப்பதிவை எனது ஐ போனில் இருந்து இறக்கி இடுகையினில் அடுத்து தருகிறேன். மொத்தத்தில் நமது சாமி எல்லோர் மனதையும் கவரும், ஜாலியான, எளிதாய் அணுகக்கூடிய, விஷயம் நிறைந்தவர் என்பது தெரிந்தது. நித்யானந்தர்களை போல பலர் இருக்கும் இந்த தருணத்தில் ஓம்கார் போன்ற சிலரும் இருப்பது மனதிற்கு நிறைவாய் இருந்தது.

பாதிக்கு மேல் பிரிந்து செல்ல, மீதமிருந்த நாங்கள் இரவு உணவும் முஸ்தபா எதிரில் இருக்கும் அஞ்சப்பருக்கு சென்றோம். பாலா அப்போதுதான் அவரது சுயரூபத்தை காட்ட ஆரம்பித்தார். என்னமாய் ஒரு ஜாலியான நபர்? விஷய மூட்டைகள் நிறைய வைத்திருக்கிறார், அவ்வப்போது அவிழ்த்து விடும்போதும் வெடிச்சிரிப்பு தான்.

உதாரணமாய் அவரது தாத்தாவின் பெயர் நரி படையாச்சியாம். பெயர்க்காரணம், விளைந்த மல்லாட்டையினை (மணிலா கோட்டை (அ) வேர்க்கடலை) காட்டின் களத்தில் காவல் காத்துக் கொண்டிருந்திருக்கிறார். படுத்திருந்த அவருக்குப் பக்கத்தில் யாரோ பதுங்கி வர கொஞ்சம் தூக்கத்தில் இருந்தாலும் கம்பினால் பட்டென ஒரே போடாய் போட்டு போர்வையில் சுருட்டி தூக்கிகொண்டு ஊருக்குள் போய் எல்லோர் முன்னாலும் திருடனை பிடித்துவிட்டதாய் சொல்லி போர்வையோடு வீச, உள்ளே இருந்து ஓடியது ஒரு பெரிய நரி. அதிலிருந்துதான் அவரின் பெயர் நரிப்படையாச்சியாம். இன்னும் அவர் சொன்ன பல வெடிச்சிரிப்புக்களை பல இடுகைகளாய் எழுதலாம், எழுதுகிறேன்.

கேபிள் அண்ணா முகவை ராம், ஜெகதீஷோடு ராம் வீட்டிற்கு செல்ல, நான் பாலாவோடு கிளம்பினேன். அலுவலகம் அளித்திருக்கும் அவரது ஐந்து நட்சத்திர ஓட்டல் அறையில் தங்கும் பேறு பெற்றேன்.

மொத்தத்தில் மிகவும் இனிமையான மறக்க முடியாத நாளாக அமைந்தது. அதிகப்படியான விஷயங்களை எழுதாதற்குக் காரணம், மற்றவர்களும் பகிர வேண்டும், கேபிள் அண்ணாவும் எழுதவேண்டும் என்பதால்தான்.

சிங்கை பதிவர் சந்திப்பு...கொஞ்சம் தகவல் - புகைப்படம்.

|

பதிவர் சந்திப்பின் மூலம் ஒரு நாளின் பெரும்பகுதியை சந்தோஷமாய் ஆக்கிக் கொள்ள முடியுமா? ஆக்கிக் கொண்டது நேற்று மதியம் இரண்டு முதல் இரவு பண்ணிரெண்டு முப்பது வரை.

சிங்கை பதிவர்கள் ஓரிருவரைதான் சந்தித்திருக்கிறேன், அவசர தருணங்களில். ஆனால் இன்றுதான் நிறைய பேச, புரிந்துகொள்ள மிக அற்புதமான சந்தர்ப்பமாய் அமைந்தது.

அவர்களோடு சந்தித்த அந்த நிகழ்வின் புகைப்படங்கள் மட்டும் இந்த இடுகையில். அடுத்ததாய், முழு விவரங்களோடு...ஜோசப் மாமா பையன், ஜோ, கேபிள் அண்ணா, வெற்றிக்கதிரவன், ஆயிரம் பதிவு கண்ட அண்ணன் கோவியார்.

நாங்கள் எல்லோரும்...


ஜோ, கேபிள்ஜி, நான்


ஜமால், கோவியார், பாரதி, வெ.க.


நாங்க எல்லோரும் ஒரு நல்லவர், ஒரு ரொம்ப நல்லவரோட...ஸ்வாமி சிங்கையில் இருப்பதற்கு அத்தாட்சியாய்...


நிஜமா வெற்றிக்கதிரவனுக்கு மூச்சு பிடிச்சுக்கல.... கேபிள் தொ... கிலோ தூக்கினதுக்கு பாராட்டினார்.


அறிவிலி, ஓம்கார், சரவணன் 


இப்படியும் சாமி சொல்றத கேட்டோம்...


ஜோ மாமா பையன், பித்தனின் வாக்கு ..?, ஜோ, பாலா, கேபிள்ஜி...


சீரியஸா கேட்கிறோம்ல.... இதுக்கப்புறம் வெடிச்சிரிப்பு. அடுத்த இடுகையில விவரமா..


காத்திருக்கிற நேரத்தில் விவாதம்...

செத்தும் கெடுத்தான் சீதக்காதி...

|

செத்தும் கொடுத்தான் சீதக்காதின்னு ஒரு வள்ளல பத்தி சொல்லுவாங்க. ஆனா இங்க நாம பாக்கப்போறது செத்தும் கெடுத்தான்...

அந்த ஊர்ல 'சீதக்காதி'ங்கற அவரு மேல காண்டு இல்லாதவங்க வாய் பேச முடியாத பச்ச மண்ணை தவிர யாருமில்ல.

அந்த அளவுக்கு ஒவ்வொருத்தரும் அவரால பாதிக்கப்பட்டிருந்தாங்க. உதாரணமா, பொது வாழ்வில இருக்கிற ஒவ்வொருத்தர் மேலேயும் ஊழல் புகார்னு சி.எம். லெவெலுக்கு பெட்டிஷன் அனுப்பி கதி கலங்க வெச்சிருக்காரு.

ஸ்கூல் வாத்தியாருங்களுக்கும் அதே கதிதான். வீட்டு தகராறு, வரப்பு வாய்க்கா தகராறு, திருவிழா தகராறு, சின்ன புள்ளங்க தகராறுன்னு அவரு தலையிடாத ஏரியாவே இல்ல.

லோக்கல் போலீஸுங்க, பேங்க் ஸ்டாஃபுங்கன்னு ஒவ்வொருத்தரும் இவரோட லிஸ்ட்ல அடக்கம். (கொஞ்சம் யோசிச்சு பாத்தா நாமலும் பாதிக்கப்பட்டிருப்போமான்னு தோனும்).

கடைசியா யாரும் அவரோட எந்த ஒரு தொடர்பும் வெச்சிக்கக்கூடாதுன்னு முடிவு பண்ணி ஊரை விட்டே ஒதுக்கி வெச்சுட்டாங்க. அதுக்கும் அவர் கலெக்டர் வரைக்கும் பெட்டிஷன் போட்டாருங்கறது தனி கதை.

அப்படிப்பட்ட மகான், எதோ இனம் புரியாத வியாதியால பாதிக்கப்பட்டு சாவற மாதிரி கிடந்தாரு.

கடைசி ஆசையா எல்லோரையும் பாக்கனும்னு சொல்லவும், சரி சாவப்போற ஆள, கடைசியா பாத்துடுவோம்னு போனாங்க.

எல்லாத்துக்கிட்டேயும் கதறி அழுது மன்னிப்பு கேட்டுட்டு கடைசி ஆசையா ஒரு வேண்டுகோள வெச்சாரு.

'உங்களுக்கெல்லாம் செஞ்ச பாவத்துக்கு, செத்தாலும் என் கட்டை வேகாது. என் மேலே எல்லாரும் எவ்வளோ கோபமா இருப்பீங்கன்னு தெரியும். அதனால, உயிர் போனதுக்கு பின்னாடி என்னோட உடம்ப துண்டு துண்டா வெட்டி ஆளுக்கு ஒன்னா சுடுகாட்டுக்கு எதுத்துகிட்டு போயி எரிக்கணும்' னு சொல்லிட்டு செத்துட்டாரு.

யாருக்கும் துளியும் வருத்தமில்ல, இருந்தாலும் திருந்தியாவது செத்தானேன்னு சந்தோஷப்பட்டுட்டாங்க.

தலை, கை, காலுன்னு எல்லாத்தையும் வெட்டி தலைவர் தலை, நாட்டார் தொடை, மெம்பருங்க கை கால்னு ஆளுக்கொன்னா எடுத்துட்டு சுடுகாட்டுக்கு போகும்போது திடீர்னு ஒரு பெரிய போலீஸ் பட்டாளமே வந்து எல்லோரையும் கைது பண்ணிடுச்சி.

சாவறதுக்கு முன்னால, 'ஊர்க்காரங்க என்ன கொலை பண்ணி துண்டு துண்டா வெட்டி புதைக்கப்போறாங்க' ன்னு நம்மாளு விவரமா எழுதி தபால் மூலமா கம்ப்ளைன்ட் கொடுத்திருந்தாரு.

அவரால பாதிக்கப்பட்ட லோக்கல் இன்ஸ்பெக்டர், 'சார், எங்களுக்கு மட்டும் அனுப்பிச்சிருந்தா விட்டுடலாம்னு பாத்தா, சி.எம்., பி.எம் வரைக்கும் நகல் அனுப்பியிருக்காரு' ன்னாரு. ஊரே ஜெயில்ல.

கொஞ்சம் மாற்றங்களோட மீள் பதிவு...

உண்மைய சொல்லப்போறேன்...கவிதை

|

கடவுளில்லை என்பதனை
கருத்தாய் கொண்டிட்ட
திட மனது பெரியாரின்
திவ்ய வழி தொடரும்நீர்

நடந்திட்ட விஷயங்களை
நாநிலத்தில் உள்ளோர்க்கு
புடம் போட்டு காட்டிட்டு
புரட்டிடுவீர் புரட்டுகளை!

பரபரப்பை காசாக்கும்
புத்திநிறை நிருபரவர்
நெறிமுறைகள் மீறாமல்
நல்வாழ்க்கை நடத்திவரும்

சார்பவரை வினவுசெய்ய
சிரிப்போடு வினா புதைத்து
பெருமை பொங்கும் முகத்துடனே
புரட்சி பொங்கும் கருத்துரைத்தார்.

உண்மையில் நடந்ததென்ன
ஊரார்க்கு தெரியாது
உண்மைவழி செல்லும்நான்
உரைத்திவேன் உணர்ந்திடுவீர்.

பணம் வாங்கி படம்போட்டு
பரப்பினேன் அவன் புகழை
மனம் பிறழ்ந்த மாந்தரவர்
மதி கெட்டு உரைப்பதனை

எண்ணும்போது சிரிப்போடு
ஏதேதோ வருகிறது
உண்மை சொல்வேன் விளங்கிட்டு
உறவுக்கும் இதை சொல்லிடுவீர்.

உண்மையில் நானிழந்தேன்
இருபத்து ஐந்ததனை
குணம் கெட்டோர் சொல்வதுபோல்
குண்டுமணி லாபமில்லை.

மொழியாக்கம் செய்ததெல்லாம்
மன நிறைவு பெறுவதற்கும்
வழிநடத்தி தமிழினத்தை
வாழ்க்கைத்தரம் உயர்த்திட்டு

இனமானம் காத்திடத்தான்
ஈனப்பயல் கெடுத்திட்டான்
இனிநானும் பொறுத்திடேன்
ஏற்கனேவே என்னினிய

கண்ணிய நண்பரவர்
கருத்தினை தேடி பெற்று
எண்ணத்தில் உள்ளத்தெல்லாம்
எடுத்து பிழிந்திட்டு

சுத்தமான சரக்குகளை
சுவைத்து பருகியபின்
நித்தமும் ஆனந்தத்தில்
நினைவில் கொணர்ந்து

சத்தமின்றி செய்திட்ட
சதியெல்லாம் வெளிக்கொணர்ந்து
சத்தியமாய் சொல்லிடுவேன்
சங்கடத்தை போக்கிடுவேன்...

நாட்டு நடப்பு பாட்டுல!

|

(நாடோடி மன்னனில் வரும்
சும்மா கிடந்த நிலத்தை கொத்தி
சோம்பல் இல்லாம ஏர் நடத்தி...
எனும் மெட்டில் படிக்கவும் (அ) பாடிப் பார்க்கவும்....)

ஒரிஜினல் பாட்டு இங்கே...

சும்மா கிடந்த மக்களையெல்லாம்
சோம்பலை போக்க சேனலில
சாமிகதைய படமா போட்டு
சலிக்காம திரும்ப திரும்ப
சன் டிவியில பரபரப்பா
காட்டுனாங்களே புள்ள
எல்லாம் தெரிஞ்சிடுச்சி
இப்போ எல்லாம் புரிஞ்சிடுச்சி

அட யாருக்கு என்னான என்ன
அவனுக்கு பணம் கிடைக்கிது மச்சான்
பணம் கிடைக்குது மச்சான்
இப்போ ஆட்சி மாறட்டும் கண்ணே,
சரியா ஆப்பு வெப்பாங்க கண்ணே
ஆப்பு வெப்பாங்க கண்ணே

பாட்டு சேர்த்து படத்த போட்டு
மூஞ்சியையெல்லாம் நல்லா காட்டி
டெம்போவ ஏத்தி, டென்ஷன ஏத்தி
நீலப்படத்த விலைக்கு விற்கும்
நக்கீரன் செய்கின்ற நாறப் பொழைப்பினிலே
பொய்யும் வெளுக்கிற நேரம்
ரொம்ப கிட்ட நெருங்குது நேரம்

அட யாருக்கு என்னான என்ன
அவனுக்கு பணம் கிடைக்கிது மச்சான்
பணம் கிடைக்குது மச்சான்
இப்போ ஆட்சி மாறட்டும் கண்ணே,
சரியா ஆப்பு வெப்பாங்க கண்ணே
ஆப்பு வெப்பாங்க கண்ணே

பத்திரிகை தொழில் செய்யறவனும்
பாதை மாறிடக்காரணம் என்ன மச்சான்
அவன் பணத்துக்காக பாவ புண்ணியம்
பாக்கததால் வரும் தொல்லையடி
நல்ல விஷயங்கள் நம்மை சேர்ந்திட இனி
பண்ண வேண்டியது என்ன மச்சான்
தினம் பேசி பேசி வேலைக்கு ஆகாது
டிவி பாக்காம இருப்போமடி
கேளிக்கையாய் வரும் குமுதம் போன்ற
கேவலங்களை வாங்குதலும் இனி பாவமன்றோ
நல்ல செய்தி விட்டு கெட்டதை தரும்
எல்லாத்தையும் விட்டால் நல்லதடி
பத்திரிக்கை டிவி பாழ்படுத்தினால்
மக்களின் நிலை என்ன மச்சான்
எல்லாத்துக்கும் ஒரு முடிவு உண்டு
எண்ணி வருந்தி மாறுவாரடி..

அட யாருக்கு என்னான என்ன
அவனுக்கு பணம் கிடைக்கிது மச்சான்
பணம் கிடைக்குது மச்சான்
மக்களை ஏமாத்தும் கூட்டம்
மானங்கெட்ட இந்த கூட்டம்
வெக்கங்கெட்ட இந்த கூட்டம்
வீணாக்கும் இந்த கூட்டம்
வீணாப் போகுமிந்த கூட்டம்!

                    (சும்மா கிடந்த...)

மனக் கற்பனையில்...

|

மாறிவரும்
மாற்றிவரும்
முகம் சேர நேரமில்லா
மின்னல் வாழ்வதனில்
ங்கையவள்


ஞ்சள் பூசி
ருதாணி இட்டு
மையெழுதி
லர்ந்த முகம்
னக் கற்பனையில் தான்


****


வ்வாறு மனைவி
ருக்க என்றதற்கு
யல்பாய் சொன்னேன்
லியைப்போலென.
ற இறங்க நோக்க


ணிப்பொறியை
கைசெலுத்த
ட்டுக்குள்ளே
கிடத்திடவே
கையுதவும் சுட்டெலியாய்


டந்து செல்லும்
காலம்தனை
ட்டுக்குள்ளே வைத்திடவே
கைப்பிடித்தாள் துணையோடு
ச்சிதமாய் சுட்டுதற்கு...

எண்ணச்சிதறல்கள்... - மார்ச் முதல் வார வெள்ளி...

|

நெருடியது

நடப்பு நிகழ்வுகளை பார்க்கும்போது எத்தனை பேருடைய சுயரூபங்களை தெரிந்து கொள்ள முடிகிறது? அவதாரம் என்று சொல்லிக்கொண்டிருந்த ஒரு அயோக்கியன், பழைய விஷயத்தை சம்மந்தப்படுத்தி பேசும் தினமலர், காசுக்கு பகிரங்கமாய் நீலப்படம் என்று கூவி விற்கும் நக்கீரன், குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை எனும் உலகப்புகழ்பெற்றதாய் சொல்லிக்கொள்ளும் எழுத்தாளர், காசுக்காக எதையும் செய்வோம் என பல்டியடித்த குமுதம், எல்லாம் முடிந்த பிறகு தாமதமாய் அறிக்கை விட்ட அன்புத்தலைவர், இந்த அசிங்கங்களின் மேல் அலாதி ஆர்வம் கொண்ட நம் இன மக்கள், இந்த விஷயத்தைப் பற்றி எழுதும் இடுகையாளர்கள்...(என்னையும் சேர்த்துத்தான்)... வேண்டாம், நல்லதையே யோசிப்போம். நமது சந்ததிகளுக்கு முடிந்த வரை இந்த விஷயங்களை தவறாக புரிந்துகொள்ளாதிருக்க அறிவுறுத்த முயலுவோம்.

நிரடியது

இதையெல்லாம் கூச்சமில்லாமல் ஒளிபரப்பியவர்கள், படம்போட்டு பத்திரிகைகளில் காசு பார்ப்பவர்கள் வீட்டிலும் குழந்தைகள், அக்காள், தங்கை என இருப்பார்கள் தானே?

வருடியது

நிறைய இருந்தாலும் இந்த இடுகையில் வேண்டாம், அடுத்த இடுகையில் கண்டிப்பாய்.

பிடித்த இடுகையாளர்:


தம்பலகாமம்.க.வேலாயுதம்

எழுதுவதற்கு வயது ஒரு தடையில்லை என்பதற்கு இவரு ஒரு உதாரணம். இவரைப்பற்றிய விவரங்களை படிக்கும் பொது கொஞ்சம் பிரமிப்பாய் இருக்கிறது. மூத்த பத்திரிகையாளர், வயது 93 (1917- ல் பிறந்தவர்)... என இன்னும் பல விவரங்களை அவரின் சுயவிவரத்தில் தெரிந்துகொள்ள முடிகிறது. அதிகம் எழுதுவதில்லை என்றாலும் எழுதியவைகளில் இரண்டு உங்களின் பார்வைக்காக...

நாடு பெற்ற சுதந்திரத்தால் நமக்கு என்ன நன்மை

கவிச்சக்கரவர்த்தி கம்பரின் களிப்பூட்டும் சிரிப்புக் கவிதைகள்

இவரை நிறைய பேர் படித்து, அதன்மூலம் இன்னும் எழுதினால் நமக்கு நிறைய விவரங்கள் கிடைக்கும்.
 
விளையாட்டு
 
வழக்கம்போல் கிரிக்கெட்தான். தூக்கம் வராமல் இருந்தபோது அதிகாலை ஜிம்பாப்வே Vs வெ(வே)ஸ்ட் இண்டிஸ் மேட்ச் பார்த்து (ஆன்லைனில் தான்) செம டென்ஷன் ஆனது. கடைசி இரண்டு ஓவர்கள் சொல்லவே வேண்டாம்... நாற்பத்தெட்டாவது ஓவரில் சந்தர்பால் அவுட் ஆக, இரண்டு ஓவரில் 22 ரன்கள் வேண்டும். ஆறு பந்து பதினைந்து ரன்கள் வேண்டும், மூன்று விக்கெட்டுகள் கையில். முதல் இரண்டு பந்தில் ஆறு, நான்கு என மில்லர் பத்து ரன்கள் எடுத்து அடுத்த பந்தில் ஒரு ரன். அதற்கடுத்த பந்தில் ஸ்மித் அவுட். ஐந்தாவது பந்தில் புதிதாய் வந்த பென் தூக்கி அடிக்க, அருமையான கேட்ச்! அவுட். ஆனால் மட்டையாளர்கள் ஓடாமல் நின்றதால் மூன்று பந்தில் பதினோரு ரன்கள் எடுத்திருந்த மில்லருக்கு பதிலாய் புதிதாய் வந்த ரோச் தடுத்தாடி ஒரு ரன் மட்டும் எடுக்க இரண்டு ரன்னில் ஜிம்பாப்வே வெற்றி. பரபரப்பென்றால் 'கிரிக்கெட்டும்' தான்....

யாரு முட்டாள்?...

|

நிறைய ஜோக்குகளை படிச்சாலும், கேட்டாலும், எப்பவுமே நெனச்சி சிரிக்கிறது ரொம்ப கம்மியாதான் இருக்கும். அந்த வகையில எனக்கு ரொம்ப புடிச்ச ஒன்னு இதோ இப்போ...

ரெண்டு பிசினெஸ்மேன் பேசிட்டிருந்தாங்க.

ஒருத்தர் சொன்னாரு, 'என் வேலைக்காரந்தான் உலகத்திலேயே படு முட்டாள்' னு.

மறுத்த அடுத்தவர், 'சான்ஸே இல்ல, என் ஆளைப் பத்தி தெரியாம சொல்றீங்க' ன்னாரு.

சரி சோதிச்சு பாத்துடுவோம்னு சொல்லி, மொத ஆளு தன்னோட வேலைக்காரனை கூப்பிட்டாரு.

பத்து பைசாவ கொடுத்து 'கடைக்கு போய், நல்லா பாத்து இன்னோவா கார் ஒன்னு வாங்கிட்டு வா' ன்னாரு.

'சரிங்க அய்யா' ன்னு பவ்வியமா வாங்கிட்டு போயிட்டான்.

'பாத்திங்களா, என் ஆளு எப்படி, என்ன வாங்க சொன்னேன்னும் தெரியாது, பத்து பைசா செல்லுமான்னும் தெரியாது, ஆனா சொன்ன உடனே வாங்க கிளம்பிட்டான் பாருங்க' ன்னாரு.

'கொஞ்சம் பொறுங்க' ன்னு சொல்லி அடுத்தவர் அவரோட வேலைக்காரனை கூப்பிட்டாரு.

அவன் இன்னும் மொத ஆளவிட அதிகமான பவ்யமா வந்தான்.
'சொல்லுங்கைய்யா என்ன செய்யனும்' னான்.

'அர்ஜென்ட்டான விஷயம், வீட்டுல போயி நான் இருக்கிறேனான்னு பாத்துட்டு வா' ன்னாரு.

'உடனே பாத்துட்டு வர்றேன்' னு அவனும் கிளம்பிட,

'பாத்திங்களா, என் ஆள' ன்னாரு.  மொத ஆளு 'எப்பா உன் ஆளுதான் சூப்பர்' னு தோல்விய ஒத்துகிட்டாரு.

அதே நேரம், வேலைக்காரங்க ரெண்டு பேரும் வழியில சந்திச்சிட்டாங்க. ஏற்கனவே பாத்துகிட்டதனால, ஒருத்தன் சிரிச்சுகிட்டே இன்னொருத்தன் கிட்ட,

'என் மொதலாளிய மாதிரி முட்டாள் இந்த உலகத்திலேயே இல்ல' ன்னான்.

'எப்படி சொல்றே' ன்னான் அடுத்தவன்.

'பத்து பைசாவ கொடுத்து என்னமோ வாங்கிகிட்டு வர்ற சொல்றானே?, இன்னிக்கு ஞாயித்து கிழமை, கடை இருக்குமா' ன்னான்.

'அட அதாவது பரவால்ல, மறந்து போயி சொல்லியிருக்கலாம், ஆனா எங்க ஆளு போயி அவரு இருக்காரான்னு வீட்டுல போயி பாத்துட்டு வரனுமாம். அவருகிட்டதான் செல் இருக்குல்ல, போன் பண்ணி தெரிஞ்சுக்கலாம்ல' ன்னான்.

டிஸ்கி...

இது ஒரு மீள்ஸ்...

முத்து மாமாவிடம் மன்னிப்பு...

|

காலையில் எழும்போதே மனதிற்குள் ஏதோ வலி, இனம்புரியா கவலை. ஏதோ பாரமாய் அழுத்துவதாய் உண்ர்ந்தேன். ஏதும் சாப்பிடக்கூட தோன்றவில்லை. இன்று முதல் மதிய வேலை என்பதால் கிளம்பி கடமைக்கு சாப்பிட்டுவிட்டு பேருந்து நிறுத்ததிற்கு வந்தேன்.

எப்போதும் மிகச்சரியான நேரத்துக்கு வரும் பேருந்து இன்று தாமதமாய் வர இன்னமும் குழப்பம் அதிகரித்தது.

என்னவென்று புரியாமலேயே ஒரு வழியாய் அலுவலகம் சென்று சேர்ந்தவுடன் அம்மாவிடம் இருந்து அழைப்பு. மீட்டிங்கில் இருந்ததால் முடிந்தபின் அவர்களை அழைத்தேன். அவர்கள் 'பிரபு' என பேச ஆரம்பித்த விதமே ஏதோ சரியில்லாத்துபோல் தோன்ற, 'முத்து மாமா இறந்துவிட்டார்' என சொல்ல, அதிர்ந்து உறைந்தேன்.

'முத்து மாமாவா?' கிறுகிறுவென வந்தது. என் அத்தை வீட்டுக்காரர். என்மேல் அவ்வளவு பாசமாய் இருப்பார்.

ஹார்ட் அட்டாக்காம், காலையில் இட்லி சாப்பிட்டிருக்கிறார். பின் மாத்திரை சாப்பிட்டு தண்ணீர் குடித்து நெஞ்சை அடைப்பதாய் உணர்ந்து கத்தி அத்தையை கூப்பிட்டிருக்கிறார். நெஞ்சை பிடித்துக்கொண்டு சாய்ந்தவர், அடுத்த ஐந்தே நிமிடத்தில் உயிரிழந்திருக்கிறார்.

இரவு விமானத்தை பிடித்தாலும் அடுத்த நாள் பத்து மணி வாக்கில்தான் போய் சேர இயலும். அப்பாவிடம் சொன்னபோது நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் வரவேண்டாம் என சொல்லிவிட்டார். மாலையே எல்லாம் முடிந்துவிடும் எனவும் சொன்னார்.

வேலையில் நாட்டமில்லை. பொங்கி வரும் கண்ணீர், அவரைப்பற்றிய நினைவுகள் என்னை முழுமையாய் ஆட்கொள்ள, அப்படியே அவரால் பீடிக்கப்பட்டு இருந்தேன்.

சிறு வயதில் பள்ளி விடுமுறை நாட்களில் நேரே அத்தை வீட்டுக்குத்தான். எங்கள் ஊரைவிட அது இன்னும் குக்கிராமம்.

காலையில் எழும் வரை எனக்காக காத்திருப்பார். பிரபு எழுந்துட்டியா என உற்சாகமாகி, காட்டுப்பக்கம் கூட்டிக்கொண்டு கிளம்பிவிடுவார்.

காலைக்கடன்களை முடித்து வேப்பங்குச்சியை ஒடித்து கொடுத்து, பின் கிணற்றிலோ அல்லது தண்ணீர் எடுத்துவிட்டு தொட்டியிலோ குளித்துவிட்டு, அங்கிருக்கும் அந்த ஊரின் ஒரே கடைக்கு என்னை அழைத்துச்செல்வார். டீயினை ஸ்பெசல்-ஆக போடச் சொல்லுவார்.

காலையில் சாப்பிட்டு கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு விளையாடிவிட்டு மாலை காட்டுக்கு வரச்சொல்லிவிட்டு சென்றுவிடுவார்.

அவர் வயதொத்த நண்பர்களுக்கெல்லாம் என்னை அறிமுகம் செய்துவைப்பார். நிறைய கிராமத்தில் நடக்கும் நிகழ்வுகளை எனக்கு தெளிவாக சொல்லுவார். கோவில் திருவிழாக்களில் செய்யும் முறைகளைப்பற்றி விளக்கமாக சொல்லுவார்.

அத்தையிடம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாய் சமைக்கச் சொல்லுவார். நுங்கு, இளநீர், கடலை என எல்லாம் கொண்டுவந்து தருவார். அவர் தந்த ஊக்கத்தில் தான் மரமேறவும், நீச்சல் அடிக்கவும் கற்றுக்கொண்டேன். அந்த வயதில் என் வயதொத்த நண்பர்களுடன் கூட அவ்வளவு நெருக்கமாய் இருந்தது கிடையாது.

சில வருடங்களுக்கு முன் அவரின் உடல்நிலை சரியில்லை என கேள்விப்பட்டும் அவரை தொடர்புகொள்ள இயலவில்லை. வீட்டிற்கு வந்தபோது போனில் அழைத்தேன். நிறைய நேரம் பேசியதோடு மட்டுமல்லாமல் இருவருமே அழுதோம். அவருக்கென்று தனியே மொபைல் வைத்திருப்பதாய் அறிந்து அழைத்தேன். நிறைய அறிவுறைகள் சொன்னார்.

'வெளிநாட்டுல இருந்து என்னடா பண்றே, இங்க வந்து தாய் புள்ளங்களோட இருக்காம' என சொல்லிவிட்டு, 'நான் செத்தா வருவேல்ல' என பொசுக்கென கேட்டார்.

'என்ன மாமா இப்படி கேக்குறீங்க'ன்னு கேட்டதற்கு, 'இல்லடா, உன் வேலை போக்குவரத்து எப்படியோ, வர முடியிதோ இல்லையோ' என சொன்னார்.

'அப்படியெல்லாம் பேசாதீங்க மாமா! கண்டிப்பா வருவேன், உங்களுக்கும் ஒன்றும் ஆகாது' என சொன்னேன்.

இன்று அவர் சொன்னது போல்தான் ஆகியிருக்கிறது. என்மேல் மிகப்பிரியமாயும், என் நலனில் மேல் அதீத அக்கறையும் கொண்ட, உண்மையான பாசத்தை செலுத்தியவர்களுல் ஒருவரான என் முத்து மாமா இன்று இல்லை.

இன்று மானசீகமாய் மன்னிப்பு கேட்கும் நான், அவரிடம் கண்டிப்பாய் இன்னுமொருமுறை கேட்பேன் என் பணி முடித்து இப்பூவுலகை விட்டு சென்று அவரை சந்திக்கும்போது. (அவ்வாறெல்லாம் இருந்தால்...)

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB