எங்கள் வீட்டுப் பூனைக்குட்டி...

|

விலங்குகளுக்கும் நமக்குமான நட்பு ரீதியான பரிட்சயம் ரொம்பவும் குறைவு. அதனால்தானோ என்னவோ, கல்லால் ஓணான் அடிப்பது, தும்பியினைப் பிடித்து வாலில் நூல் கட்டிவிடுவது, உண்டிவில்லால் அணில் அடிப்பது, வயல்களில் கடலை பிடுங்கியபின் இருக்கும் எலி வளைகளை வெட்டி, உள்ளே இருக்கும் எலிகளை அடிப்பது(சேமித்து வைத்திருக்கும் கடலைக்காக வளைகளை தோண்டுவது வழக்கம்) , தெரு நாய்களை கல்லால் அடிப்பது என எல்லாப் பாதகச் செயல்களையும் வஞ்சனையில்லாமல் நண்பர்ளோடு சேர்ந்து செய்தோம்.

தெரியாத வயதில் அறியாமல் செய்ததை இப்போது நினைத்தாலும் வலிக்கிறது. தாத்தா, ஆயா, அம்மா, அப்பா என எல்லோரும் வாயில்லாத ஜீவன் பாவம் எனச் சொன்னாலும் அவர்களை விரோதிபோல் பாவித்து செய்யும் செயல்களிலிருந்து திருந்தியதில்லை.

ஆனாலும் விதிவிலக்காய் வீட்டில் வளர்க்கும் பூனைகளின் மேல் மட்டும் அலாதிப் பிரியம். கொஞ்சமும் மாசில்லாத வெள்ளை நிறப் பூனைகளை மட்டும்தான் ஆயா வளர்ப்பார்கள் நன்றாக கவனிப்பார்கள், கவனிக்கச் சொல்லி எனக்கும் அறிவுறுத்துவார்கள். மாசில்லா வெள்ளை நிறமோ, அல்லது நமக்கு முக்கியத்துவம் கொடுத்து அதை கவனிக்கும் பொறுப்பை விட்டதுவோ பிரியமாய் இருந்ததற்கு காரணமாய் இருக்கலாம்.

காலை மாலை இருவேளைகளும் அதற்கு சாதத்தில் பாலினை ஊற்றி வைக்கும் வேளை நம்முடையது. அதிகாலையிலேலேயே குழந்தைபோல் பசியில் கத்த ஆரம்பித்துவிடும். காலை சுற்றிச் சுற்றி கத்தியபடி வருவதைப் பார்க்க பரிதாபமாக இருக்கும். வெறும் சாதத்தை என்ன பசியென்றாலும் சாப்பிடாது.

சாதத்தில் பால் ஊற்றினால் மட்டும் தான் சாப்பிடும். பாலினை கறந்து கொண்டிருக்கும்போதே குவளையில் வாங்கிவந்து சாதத்தை அதன் தட்டினில் இட்டு பாலை ஊற்ற, ஆர்வமாய் பசியாற சாப்பிடும். பசியாறியபின் நன்றி சொல்வதுபோல் வேறொரு குரலில் கத்தி, பாசமாய் பார்த்துவிட்டுப் போகும். மாலையிலும் இதேபோல் என தினமும் இது தொடரும்.

சிலவேளைகளில் எலியினை வேட்டையாடி பசியாறி இருந்தால் அது யாரையும் நம்மை சட்டை செய்யாமல் அங்குமிங்கும் அலைந்தபடி இருக்கும். அசைவ உணவுகளை சாப்பிடும்போது அருகிலேயே அமர்ந்து நாம் தரும்வரை ஆர்வமாய் பார்த்தவண்ணம் இருக்கும். கருவாடு என்றால் அதற்கு ரொம்பப் பிடிக்கும்.

புதிதாய் யாராவது வந்தால் அவர்களிடம் சிநேகமாகும் வரை அருகே செல்லாது. அழைத்தால் தயங்கியபடி வந்து நம்மோடு ஒட்டிக்கொண்டு ஒரு விதமாய் குரல் எழுப்பி அதன் பாசத்தை வெளிப்படுத்தும்.

பசியில்லாத தருணங்களில் கிடைக்கின்ற எலியினை உடனே சாப்பிடாமல் மயங்கிப் போகும்படி அடித்து வீட்டின் அறையின் மூலையில் போட்டுவிட்டு அதையே பார்த்துக்கொண்டிருக்கும். மக்கம் தெளிந்து அது தப்பிக்க ஓடும் தருணங்களில் ஓங்கி தலையில் ஒரு அடி போட எலி மயங்கி விழும். இவ்வாறு தெளியத் தெளிய அடித்துபோட்டு நன்றாக பசிக்கும்போது ஒரே கவ்வாக கவ்விக்கொண்டு மூட்டைகள் அடுக்கி இருக்கும் இடத்துக்கு எடுத்து சென்றுவிடும்.

தப்பித்து ஓடும் எலிகள் அருகில் இருக்கும் பொந்துகளில் ஒளிந்துகொண்டால் வெளியே வரும்வரை ரொம்பவும் பொறுமையாய் காத்திருக்கும். ஒன்றுமே கிடைக்காத தருணங்களில் தவளை ஓணான் ஆகியவைகளையும் பிடித்துத் தின்னும்.

இரவு வேளைகளில் படுத்திருக்கும் நம் அருகில் வந்து போர்வைக்குள் புகுந்துகொண்டு குறுகுறுவென படுத்துக்கொள்ளும். எங்கே அதன் மேல் நாம் உருண்டுவிடுவோமோ என பயந்தவண்ணமே தூங்கவேண்டியிருக்கும்.

நன்றாக சாப்பிட்டு கொழுத்து ஏழெட்டு குட்டிகளை ஈன்று அவற்றை பத்திரமாய் பாதுகாக்கும். வாயால் கவ்விக்கொண்டு இடத்தினை அடிக்கடி மாற்றும். அச் சமயங்களில் கத்துவது குழந்தை கத்துவது போல இருக்கும். வெள்ளைக் கலரில் இருக்கும் குட்டிகளுக்கு நிறைய கிராக்கி இருக்கும், யாராவது சொல்லி வைத்து வாங்கி சென்று விடுவார்கள். செல்லுபடியாகாத குட்டிகளை ஒரு சாக்கில் போட்டு வீட்டு வேலையாட்களிடம் கொடுத்து ஆற்றுப் பக்கம் விட்டுவிட சொல்லிவிடுவார்கள்.

எந்த பூனையும் நீண்ட நாட்களுக்கு இருக்காது, திடீரென ஒருநாள் காணாமல் போய்விட ஆயா ரொம்ப புலம்புவார்கள். அதை சாப்பிட யாரோ பிடித்து சென்றுவிட்டதாக சொல்லுவார்கள். அடுத்து ஒரிரு நாட்களில் வெள்ளைக் கலரில் இன்னுமொரு பூனை வரும், வழக்கமான கவனிப்புகள் தொடரும்.

கேரக்டர் : வானம்பாடிகள் அய்யா...

|

வானம்பாடிகள் அய்யா... வாழ்வியல் பாடம்...

அய்யாவைப் பற்றி ஏதாவது ஒரு இடுகை இடவேண்டும் என்பது எனது நீண்ட நாள் எண்ணம்.தமிழ்மணம் ஸ்டாராக இருக்கும் இந்த வாரத்தில் எழுதுவது மிகப் பொருத்தமாக இருக்கும் என்பதால் எண்ணத்தை எழுத்தாக்கி உங்களிடம் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

இந்த வாரம் மட்டுமன்றி எல்லா வாரமும் எங்கள் மனத்தில் ஸ்டாராக இருக்குமென் ஆசான் வானம்பாடிகள் அய்யாவை நினைத்து வியக்காத நாளே கிடையாது. ஆசானின் ஒவ்வொரு செய்கையும் சிஷ்யனுக்குப் பிடிக்கும் என்பது நியதி. ஆனால் இவர் விஷயத்தில் இவரைத் தொடர்ந்து படிப்பவர்கள் அனைவருக்குமே மிக மிகப் பிடிக்கிறது என்பதில்தான் இருக்கிறது இவரின் எழுத்தின் வெற்றி.

நட்பு பாராட்டுவதற்கு இவரினும் சிறந்தவர் எவரேனும் உண்டோ? அழைக்கும்போது பதிலுக்கு அவர் சொல்லும் வார்த்தையிலிருந்தே(‘சொல்லுங்க பிரபா’...’சொல்லுங்க அய்யா’, ‘ம்... சொல்லுங்க’...)அவர் எந்த மாதிரி பேசப்போகிறார், என்ன மனநிலையில் இருக்கிறார் என்பது தெளிவாகத் தெரியும். குழம்பிய மனத்துடன் பேச ஆரம்பித்தாலும் பேசி முடிக்கும்போது தெளிவாக இருக்கும்.

இடுகை ஒன்றுக்கு அவர் இடும் பின்னூட்டத்தை வைத்தே அவர் எவ்வாறு அதை ரசித்திருக்கிறார் என்பது தெள்ளெனத் தெரியும். பல இடுகைகளை அவரின் பின்னூட்டங்களைப் படித்தபின் தான் படிப்பதை வழக்கமாய் கொண்டிருக்கிறேன்.

இலங்கை விஷயம் என்னை மிகவும் பாதிக்க ஆரம்பித்தது இவரைப் படிக்க ஆரம்பித்த பிறகுதான். பல புதிய நட்புக்கள் கிடைக்கப்பெற்றதும் இவரால் தான். தொடர்ந்த சோகங்கள் என்னை சோர்வில் ஆழ்த்தினாலும் சரி செய்து இயல்பாகியது இவரால்தான்.

நேர்மையான அரசாங்க ஊழியரைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன், படித்திருக்கிறேன்... ஆனால் பழகிகொண்டிருப்பது இவரோடு மட்டும்தான். சந்தித்தது மூன்று முறைதான், ஆனால் மூன்று ஜென்மம் பழகியது போல் உணர்வு பேசும்போது, பார்க்கும்போது.

இவரின் ஒவ்வொரு இடுகையும் ஒவ்வொரு தினுசாய், தரத்தில் ஒன்றையொன்றி விஞ்சி இருக்கும். நறுக், கேரக்டர், வடிவேலுவை வைத்து எழுதப்படும் காமெடிகள், சமுதாய அக்கறையோடு எழுதும் கட்டுரைகள், காதல் ததும்பும் கவிதைகள், அதி சூர மொக்கை, மரண மொக்கை... என எல்லாம் இவரின் எழுத்தாற்றலை பறைச்சாற்றும். இவரின் கவிதைகளின் முதல் ரசிகன் நான். இப்படியெல்லாம் கூட யோசிக்க முடியுமா என வியக்க வைப்பவை இவரின் கவிதை வரிகள்...

வாரத்திற்கு ஒரு முறையாவது கேட்காமல் இருக்க மாட்டார். ‘அய்யா அய்யா சொல்வீங்களே, அந்த தாத்தா கிட்ட இன்னும் பேசறீங்களா? எப்படி இருக்கார்?’...’அப்பா... சிங்கப்பூர் எப்பப்பா கூட்டிட்டு போறீங்க?... அட்லீஸ்ட் சென்னைக்காவது தாத்தாவீட்டுக்கு கூட்டிட்டுப் போங்கப்பா!’ ‘அப்பா கம்பெடிஷனுக்கு சென்னை போறேன், அப்படியே தாத்தாவைப் பார்த்துட்டு வரட்டுமா?’

இவரின் நட்பு மட்டும் இன்னும் சற்று முன்னதாய் கிடைத்திருக்கக் கூடாதா என ஏங்காத நாளில்லை. இந்த சொந்தம் இன்னும் மெருகேறி தொடர்ந்திடவும், அய்யா அவர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இன்னும் பல எழுதி எங்களை வழிநடத்தி சென்றிடவும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டி அறிமுகம் செய்து வைத்த கதிருக்கும் ஒரு நன்றி சொல்லி முடிக்கிறேன்.

நறுக்கிய பக்கம்....

|

90% தமிழர்களை மறுகுடியமர்த்தி விட்டோம்-பசில் சொல்கிறார்
***************************************************************************
அடுத்து ஜிம்பாப்வே கரன்சி மதிப்பு யு.எஸ். டாலரவிட அதிகம்னும் சொல்லுவாரு...
==================================================================

கருணாநிதி எதிர்பார்ப்புக்கு என்னால் ஒத்துழைக்க முடியாது-ஜெ
*****************************************************************************
நீங்க ஒத்துழைக்கக் கூடாதுங்கறதுதானே அவரோட எதிர்ப்பார்ப்பே...
=================================================================

என் முகத்தை காண துடிக்கும் மக்கள்-விஜயகாந்த் சொல்கிறார்
******************************************************************
கீழ அவரு சொல்றதனாலையா?
=================================================================

விஜயகாந்த் ஒரு அரை வேக்காட்டு அரசியல்வாதி-வீராசாமி
*************************************************************************
முழுமையான கரன்ட்ட தர்றவரு சொல்றாருங்க.... எல்லாரும் ஜோரா கையைத்தட்டுங்க!
=================================================================

திமுகவில் இணைந்த திருப்பூர் சிபிஎம் எம்எல்ஏ கோவிந்தசாமி
****************************************************************************
வெல்லம் இருக்கிற இடத்துக்கு ஈ போகுது....
===============================================================

தஞ்சம் கோரிய தமிழர்களை கைது செய்யும் கனடா!
**************************************************************
இலங்கைக்கு அந்த நாட்டுக்காரங்க போயிட்டு வந்தாங்களா?
=============================================================

புதிய பொறியியல் கல்லூரிகள்: அனுமதி கூடாது-பொன்முடி
***********************************************************************
இருக்குற காலேஜே காத்து வாங்குதுன்னா?
==============================================================

100 தொகுதிகளுக்கு குறி- ராமதாசின் 'மைக்ரோ பிளான்'!
*****************************************************************
234 க்கும் வைக்க வேண்டியதுதானே, காசா பணமா?
===============================================================

லெனினை கைது செய்ய கோரும் நித்யானந்தா ஆதரவாளர்கள்!
****************************************************************************
ஆரம்பிச்சிட்டாங்கய்யா ஆராம்பிச்சிட்டாங்க!.... யப்பா லெனின் இன்னொரு சி.டிய அவுத்து விடு...
==============================================================

கேபி சொல்வது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்-வைகோ
*************************************************************************
எல்லாரும் அப்படியே நம்பிட்டோங்க!
========================================================

அது ஏன்?...

|

நல்லாக் கேக்குறான்யா டீட்ட்ட்ட்டேய்லு... ன்னு ஆசான் ஒரு இடுகை போடுறப்போ சிஷ்யன் நாம சும்மாயிருந்தா எப்பூடி?... நம்ம பங்குக்கு அது ஏன்னு கேள்வி கேட்டு ஒரு இடுகை போட்டுடுவோம்ல....

1. கூட்டமா படியில தொங்கிகிட்டு போற பஸ்ஸில/ட்ரெயின்ல கெஞ்சி கூத்தாடி நிக்க இடம் கிடைச்சதும் அடுத்து ஏற வர்றவங்களுக்கு இருந்தும், இடம் கொடுக்காம மறுக்கிறோமே... அது ஏன்?

2. சினிமா தியேட்டர்ல பாக்குற ஃபிரண்ட, 'சினிமாவுக்கு வந்தியா'ன்னு
கேக்குறது கேணத்தனம்னு தெரிஞ்சும் கேக்குறோமே... அது ஏன்?

3. அடுத்தவன் தங்கச்சிய லுக்கு விடுற நமக்கு, நம்ம தங்கச்சிய பாக்குறப்போ மட்டும் பத்திகிட்டு எரியுதே... அது ஏன்?

4. இந்த மாதிரி கேள்வி கேட்டு ஒருத்தர் இடுகை போட்டா, பதிலுக்கு நாமும் இடுகையிடனும்னு தோணுதே... அது ஏன்?

5. இங்கிலிஷ் படம் பார்க்குறப்போ எல்லோரும் சிரிச்சா, புரியன்னாலும் நாமும் விழுந்து விழுந்து சிரிக்கிறோமே... அது ஏன்?

6. யாராவது சின்னப்பசங்க நாட்டி பண்ணுனா, அவங்களவிட நாம அதிகம் பண்ணினோம்ங்கறத மறந்துட்டு அவங்க மேல சுள்ளுனு கோவம் வருதே... அது ஏன்?

7. பரிட்சை ஒழுங்க எழுதாம சத்தியமா பாஸ் பண்ணமாட்டோம்னு
தெரிஞ்சும் ரிசல்ட் பாஸான்னு ஆர்வமா பாக்குறோமே... அது ஏன்?

8. மகன் புத்திசாலிதனமாக கேட்கும்போது, என்னமாய் கேள்விக்கேட்குறான் என வியக்குறோமே, நாமும் நம்ம அப்பாவாவை இதே மாதிரி கேட்டதை மறந்துட்டு... அது ஏன்?

9. ஃபிரண்ட்ஸ் கிட்ட பேசும்போது, பணம் கடன் கேக்குற விஷயமா பேசும்போது மட்டும் அங்கும்/இங்கும் சரிவர கேட்பதில்லையே... அது ஏன்?

10. ஏன் லேட் என்ற கேள்விக்கு பதிலாக பெரும்பாலும் லேட்டாயிடுச்சின்னே பதில் சொல்லப்படுதே அது ஏன்?

11. ஊருக்கு போறப்போ 'ஆளு இப்போ கலராயிட்டியே'ன்னு கூசாமல் பொய் சொல்லி அடுத்து காசுக்குத்தான் மேட்டர் போடுறாங்கன்னு தெரிஞ்சும் சந்தோஷிக்கிறோமே...அது ஏன்?

புரட்சித் தலைவர்...

|

சிங்கை வந்த புதிதில் டாக்ஸியில் பயணித்துக்கொண்டிருந்தேன். டிரைவர் சிங்கப்பூர் தமிழர் என்பதுவும் வயது அறுபது வாக்கில் இருக்கும் எனவும் யூகிக்க முடிந்தது. மெதுவாய் பேச்சுக்கொடுத்தேன். அவரின் பெயர் ரமேஷ் எனச் சொன்னார். வழக்கமான விசாரிப்புக்களுக்கு பிறகு ‘தமிழ்நாட்டிற்கு வந்திருக்கிறீர்களா’ எனக்கேட்டேன்.

அதற்குப் பதில் சொல்லாமல் ‘நீங்கள் புரட்சித்தலைவரைப் பார்த்திருக்கிறீரா?’ எனக்கேட்டார். ‘ம்... பார்த்திருக்கிறேன், எனக்கு அவரை ரொம்பவும் பிடிக்கும்’எனச் சொன்னேன். அவர் மிகவும் சந்தோஷமடைந்து ஆர்வமாய் பேச ஆரம்பித்தார்.

தலைவர் உலகம் சுற்றும் வாலிபன் படப்பிடிப்புக்காக வந்திருந்தபோது அவரை அருகில் பார்த்து கை குலுக்கியதாக சொன்னார். தலைவரைத்தொட்ட கைகளை ஒரு வாரம் கழுவாமல் வைத்திருந்ததாய் சொன்னார். அவர் வந்திருந்தபோது இங்கு கூடிய கூட்டம்போல் இன்னமும் கூடியதில்லை எனச் சொல்லி, அவர் மலேசியா சென்ற பிறகும் அவர் அங்கிருக்கும்வரை அவரைப் பார்ப்பதற்காக அங்கு சென்று தங்கியிருந்ததாக சொன்னார்.

தலைவர் மலேசியா சென்றபோது அங்கு வரவேற்க பெரும் திரளாக கூட்டம் கூடியிருந்ததாம். வேகமாக வெளியே வந்த தலைவர் வெயிலில் நின்றுகொண்டிருந்த ஒரு வயதான மூதட்டியில் அருகே சென்று ஆரத்தழுவி 'அம்மா உங்களை அழைத்து வந்தது யார் எனக்கேட்டாரம். 'என் மகன்தான்' எனச் சொல்ல அருகிலிருந்த அவர் மகனை செல்லமாய் அடித்து 'இப்படியா வெயிலில் அம்மாவை நிற்க வைப்பாய்' என வைது உடன் வந்தவர்களிடமிருந்து ஒரு குடையினைப் பறித்து கையில் கொடுத்து வெயில் படாமல் பிடிக்கச் சொன்னாராம்.

இன்னும் நிறைய சொல்லியிருப்பார், அதற்குள் தங்கியிருந்த இடம் வந்துவிட்டது. அவரின் கார்டினை வாங்கிக் கொண்டு பிரியா விடை பெற்றேன்.

ஒரு விஷயத்தை மறந்துவிட்டேன், அவர் தமிழ் நாட்டுக்கு வந்ததே இல்லையாம், தலைவர் சமாதியைப் பார்ப்பதற்காக வாழ்வில் ஒருமுறையாவது வரவேண்டுமாம். அவரது சமாதியில் காதை வைத்துக்கேட்டால் கடிகாரத்தின் துடிப்பு கேட்கிறதாமே நீங்கள் கேட்டிருக்கிறீர்களா எனவும் கேட்டார்.

டிஸ்கி : எல்லோரும் புரட்சி, புரட்சி என சொல்லும்போது விலாவாரியாக விளக்கும்போது நமக்கு தெரிந்த, புரிந்த, பிடித்த புரட்சி....புரட்சித் தலைவர்தான்!

காதலால்...

|

காதலால்...


சொல்லாது சொல்லி
கேளாமல் கேட்டு
பார்க்காமல் பார்த்து
சிரிக்காமல் சிரித்து
சிந்தையை தொலைத்தேன்...
சேர்ந்தந்த காதலால்..

புரியாத வார்த்தைகளும்
பொருள் பொதிந்து கவியாகும்
புன்னகைக்கும் என்னவளின்
பூஞ்சிரிப்பை பார்க்கையினில்...

தெரியாத விஷயங்களும்
தெள்ளெனத் தெளிவாகும்
குறுகுறுக்கும் விழிபார்த்து
கிறுகிறுக்கும் தருணமதில்...

அனல் நோகும் தேகமும்
ஐஸ்தொட்ட உணர்வாகும்
அருகாமை அவளிருந்து
அன்போடு தழுவுகையில்...

கோபத்திற்கு என்மேல்
கோபமடி கண்ணே
காலமெல்லாம் இருந்ததை
கழட்டிவிட்ட காரணத்தால்...

பிரபலப்பதிவர் பீதாம்பரம் - கலந்துரையாடல் - தொடர்ச்சி...

|

நேற்றையப் பேட்டி இங்கே...

விளம்பர இடைவெளிக்குப்பின் க்ளோஸ்-அப்பில் பீலா பெருமாள்சாமியினைக் காண்பிக்க, 'வெல்கம் பேக்... இன்று ஒரு வித்தியாசமான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பிரபலப்பதிவர் பீதாம்பரத்துடன் உரையாடிக்கொண்டிருக்கிறோம், இதோ அவரிடம் நமது அடுக்கடுக்கான கேள்விகளும் அதற்கான அழகான பதில்களும்...'
பீ.பெ : பால்ய நினைவுகள்னு ஒரு இடுகை எழுதினீர்களே, அதைப்பற்றி சொல்ல முடியுமா?

பி.பீ : ஆஹா, அது ஒரு புதுமையான அனுபவம் ஆச்சே. சிறுவயதில் பிறந்த முதல் நாளிலிருந்து ஒருவருடம் வரைக்கும் ஓடியாடி நான் செய்த எல்லாக் குறும்புகளையும் நினைவுப்படுத்தி அருமையா எழுதியிருந்தேன். உகாண்டாவுல இருந்து ஒருத்தர் படிச்சிட்டு ஒரு மணி நேரம் பேசினாரு.

பீ.பெ : ஒரே முறைதானே உங்களிடம் பேசியிருப்பார்?  சிலபேர் வாழ்க்கையோட கடைசி நாளுக்கு முன்னால இது மாதிரி பேசறதுண்டு. சரி, அரசியல் பற்றியும் அருமையா அதிரடியா எழுதறேங்களே அது எப்படி?

பி.பீ : அதிலதான் நம்ம ட்ரிக் இருக்கு. வெள்ளை மாளிகையில் ஊழல்,புஷ்-சின் வாரிசுப் போராட்டம், கிளின்ண்டனின் கால் சுளுக்குன்னு எழுதறதெல்லாமே பத்திரிக்கையில படிச்ச அமெரிக்க அரசியல் தானே. இதிலே முக்கியமான விஷயம் என்னான்ன, நம்மளோட பார்வை எப்போவுமே உலக அளவில இருக்கும்.

பீ.பெ : அப்புறம் லைவ்  ஆக்சன் என பதினைந்து நாளுக்கு ஒரு முறை இடுகை போட்டு பரபப்பை ஏற்படுத்துக்கிறீர்களே, அதைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்.

பி.பீ : அருமையான கேள்வி. கலக்கிட்டீங்க...  ச்சை.. பின்னூட்டம் ஸ்டைல்-ல பதில் வருது. உதாரணமா ரோட்டுல ஒரு குழி இருக்குதுன்னு வெச்சுக்குங்க, அதுல நிறைய பேரு விழப்போவாங்க, வண்டிய குழிக்குள்ள விட்டுட்டு தடுமாறிப் போவாங்க. கேமிராவோட அங்க போய் உக்காந்திருந்து, வலுவா ஒருத்தர் விழுந்து அடிபடறத போட்டோ எடுத்து இடுகையாப் போடுவேன். இதுக்கு சரியான வரவேற்பு. சில பேர் போன் பண்ணி எங்க ஏரியாவுல லைவ் ஆக்சனுக்கு மேட்டர் இருக்குன்னு சொல்லுவாங்கன்னா பாத்துக்கோங்களேன்...

பீ.பெ : ஆஹா, என்ன இளகிய மனசு. சரி ஒரு இடுகை பிரபலமாக என்ன செய்ய வேண்டும்?
 
பி.பீ : இடுகை பேரை பிரபலம்னு வைக்கலாம்... ஹா, ஹா... ஜோக்குக்காக சொன்னேன். எழுதற விஷயம் மனசுல அப்படியே ஓட்டனும்.... பாருங்க இப்ப ஓட்டனும்னு சொன்னதுல இருந்தே ஒரு இடுகைக்கான தலைப்பு 'பசை'ன்னு கிடைச்சிடுச்சி. என்னோட அடுத்த இடுகை 'பசை' எப்படி ஓட்டுதுன்னு மட்டும் பாருங்க...
 
பீ.பெ : சரி, உங்களோட எதிர்கால லட்சியம் என்னவென்று உங்க வாசகர்களுக்கு சொல்ல முடியுமா?
 
பி.பீ : இந்தியாவில இடுக்கிற எல்லா மொழியிலயும் பிளாக் ஆரம்பிக்கணும். எல்லா மொழியும் சரளமா தெரிஞ்ச ஒரு மொழிபெயர்ப்பாளர தேடிக்கிட்டிருக்கேன். எனது தமிழ்ல வர இடுகைகள் எல்லாத்தையும் ஒரே நாள்ல எல்லா மொழியிலும் ரிலீஸ் பண்ணப்போறேன்.
 
பீ:பெ : கடைசியா மொக்கை, மரண மொக்கை இது பற்றியெல்லாம் விளக்கம் சொல்லமுடியுமா?
 
பி.பீ : இந்த இடுகையோட முன்னாடி இடுகை மொக்கைன்னா இது மரண மொக்கை...
 
பீ:பெ : நன்றி பிரபலப்பதிவர் பீதாம்பரம் அவர்களே! எங்கள் நேயர்களின் பொன்னான நேரத்தை பாழடித்து உங்கள் பிதற்றலான கருத்துக்களை தெரிவித்ததுக்கு மிக்க நன்றி. இன்றோடு இந்த ப்ரோக்ராமே காலி. விதியிருந்தால்  உங்களை மீண்டும் சந்திக்கிறேன் எனச் சொல்லி உங்களிடமிருந்து பிரியா விடை பெறுவது உங்கள் பீலா... பெருமாள்சாமி..

பிரபலப்பதிவர் பீதாம்பரம் - கலந்துரையாடல்

|

தொகுப்பாளினி : வணக்கம், இது உண்மையும் சொல்வோம் (எப்பாவாச்சும்) டிவியோட கலந்துரையாடல் நிகழ்ச்சி. இதில் பிரபலபதிவர் பீதாம்பரத்தோடு பேச வருகிறார் நமது உண்மையும் சொல்வோம் (எப்பாவாச்சும்) டிவியில் எல்லோருக்கும் மிகவும் பரிட்சயமான பீலா பெருமாள்சாமி.

தொகுப்பாளினி மறைய, இருட்டாய் ஒரு அரங்கம்.மெதுவாய் வெளிச்சம் பரவுகிறது. காமிராவின் பார்வையில் இருவர். பளீரென எல்லா விளக்குகளும் ஒளிர நிகழ்ச்சி ஆ...ரம்பமாகிறது.

பீலா பெருமாள்சாமி : வணக்கம் திரு பிரபலப்பதிவர் பீதாம்பரம். எங்கள் உண்மையும் சொல்லுவோம் (எப்பவாச்சும்) டிவி சார்பாக கலந்துரையாடல் நிகழ்ச்சியில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி..

பிரபலப்பதிவர் பீதாம்பரம் : ரொம்ப சந்தோஷம். ஒரு நிமிஷம்...(தயாராய் வைத்திருக்கும் அருகிலிருக்கும் ஒரு பாத்திரத்தை எடுத்து டீப்பாயின் மேல் வைக்கிறார். பொரி, கடலை, மிக்சர் எல்லாவற்றையும் பிரித்து கொட்டி, 'வாங்க ரெண்டு பேரும் சேர்ந்து கலந்துட்டு அப்புறம் உரையாடலாம்'

பீ.பெ : ஆஹா என்ன நகைச்சுவை உணர்வு உங்களுக்கு, இந்த மாதிரி ஓர் கலந்து உரையாடலை உலகத்துக்கே அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள்.

பி.பீ : அதான் இந்த பதிவுலகத்தின் புதுமை. புதுசு புதுசா ஏதாச்சும் செஞ்சிகிட்டே இருப்போம்.

பீ.பெ : சரிங்க அது பற்றி பிறகு பேசலாம். முதல் கேள்வி உங்க சொந்த ஊர் என்ன?

பி.பீ : அதான் என் பேர்லயே இருக்கே, தாம்பரம்ங்க!

பீ.பெ : ஆஹா, பேர்லயே ஊரு... இது பற்றி ஒரு இடுகை கூட எழுதியிருக்கிறீர்கள் இல்லையா?

பி.பீ : சரியான ஞாபகசக்தி உங்களுக்கு. சிதம்பரம், பழனி, மருதன்னு சும்மா பூந்து விளையாடியிருப்பேன். பதினைஞ்சி பின்னூட்டம், தமிலிஷ்-ல பத்து, தமிழ்மணத்துல நாலுன்னு சூப்பர் டூப்பர் ஹிட்டுங்க அந்த இடுகை.

பீ.பெ : கேட்கவே சந்தோஷமா இருக்கு. அதில் பத்து பின்னூட்டத்துக்கு உங்க பதில்... சரி, பிரபலப்பதிவர்னு பட்டம் உங்களுக்கு யார் கொடுத்தது?

பி.பீ : சரக்கில்லாதவங்கதான் அடுத்தவங்க தர்றத வாங்கணும், இதெல்லாம் நமக்கு நாமே திட்டத்துல வந்ததுதான், உங்க பீலா பெருமாள் மாதிரி...

பீ.பெ : சரி, அதெல்லாம் இருக்கட்டும், வலையுலகத்தில் என்னென்ன புதுமை செய்திருக்கிறீர்கள்?

பி.பீ : அது பற்றி விடிய விடிய பேசிக்கொண்டே இருக்கலாம்...

பீ.பெ : வேண்டாங்க, கொஞ்சம் சுருக்கமா நிகழ்ச்சிக்கான அரை மணி நேரத்துல சொல்லுங்களேன், அதிர்ச்சியான தகவல்களை அதிகம் கேக்கக்கூடாது என நம் டிவியில வர டாக்டர் டக்ளஸ் பாண்டி சொல்லியிருக்காரு.

பி:பீ : ஒரு சினிமா வந்துச்சின்னா மத்தவங்கல்லாம் விமர்சனம் போடறவரைக்கும் காத்திருந்து படத்தைப் பார்க்காமலேயே எல்லாத்தையும் படிச்சிட்டு கலந்து கட்டி அழகா விமர்சனம் எழுதிடுவேன்.

பீ.பெ : ஆமாமாம், படம் எடுக்கப்போவதாய் வந்த தகவலை வைத்தே படம் பார்த்து விமர்சனம் எழுதியதாய் சொல்லி பல்பு வாங்கினீர்களே, நன்றாக நினைவில் இருக்கிறது.

பி:பீ : அப்புறம் பிடிச்ச பத்துன்னு சூப்பரா ஒரு விஷயம். எல்லாரும் என்னென்னவோ எழுதினாங்க! நான் என்ன எழுதினேன் தெரியுமா? தலைப்பிரட்டை, ஓணான், பட்டாம் பூச்சி, பொன்வண்டு.... படிச்சிட்டு எல்லாம் அரண்டுட்டாங்க.

பீ.பெ : ஆகா அருமை, அருமை. அப்புறம் நீங்க எழுதிய கேரக்டர் இடுகையைப் பற்றி சொல்லுங்களேன்!

பி.பீ : பத்தே நிமிஷத்துல எழுதி போட்டேன் அந்த இடுகையை. தமிழ், இந்தி, இங்கிலீஷ் -ல இருக்கிற கேரக்டர் எல்லாத்தையும்போட்டு அதுக்கு அழகா விளக்கமும் கொடுத்தேன் பாருங்க, ஒட்டுப்பட்டையே பிச்சிக்கிச்சி.

பீ.பெ : ரொம்ப அருமையா இருக்குங்க, நேயர்களே, ஒரு சின்ன விளம்பர இடைவெளிக்கு அப்புறம் நமது பேட்டியை தொடரலாம்.

(விளம்பரத்திலிருந்து நாளை பார்க்கலாம், பிடித்திருந்தால்)

பாடம்...

|

கிருஷ்ணாவுக்கு ஆத்திரமாக வந்தது. எவ்வளவுதான் வேலை செய்தாலும் நல்ல பெயர் இல்லை, எப்போதும் உடன் வேலை செய்பவள் தட்டிப் பறித்துவிடுகிறாள்.

அவன் வேலை பார்ப்பதொரு எம்.என்.சி யில். பாருங்களேன், ஒரு விஷய்த்தை அவன் தான் புதிதாய் முனைப்படுத்திச் செய்வான், ஆனால் கடைசியில் அவள் வலிய நுழைந்து சின்னதாய் ஏதாவது செய்து, படம் காட்டி அவனை ஒன்றுமில்லாமல் செய்து எல்லாம் செய்தவள் போல் பெயர் வாங்கிவிடுவாள்.

கிருஷ்ணனுக்கு கடும் எரிச்சல், ஒன்றும் செய்ய இயலவில்லையே என. எப்படி காய் நகர்த்தினாலும் அவள் சரியாய் அதை பிளாக் செய்து (பிரகாஷ்ராஜ் வ.ரா வில் சொல்வதுபோல்தான்) அவன் திட்டங்களை தவிடுபொடியாகச் செய்வதை கொஞ்சமும் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

இதே யோசனையில், அவனால் இருக்கிற வேலையையும் சரியாக செய்ய இயலாமல் போக குழப்பம்தான் அதிகரித்தது. இரவு போனில் மகனுடன் பேசிக்கொண்டிருந்த பொழுது, 'அப்பா, தினேஷ் எங்கிட்ட சண்டை போட்டுகிட்டே இருந்தால்லப்பா, இனிமே சண்டைக்கே வரமாட்டான்' என சொல்லவும் ஆர்வமாய், 'தம்பி என்ன செஞ்சிங்கப்பா?' எனக்கேட்டான்.

'அப்பா, டீச்சர் வர நேரமாப் பாத்து அவங்கிட்ட வம்புக்கு இழுக்கிற மாதிரி ஓங்கி அடிச்சேன். அவன் என்னை திரும்ப அடிக்க ஆரம்பிக்கும்போது டீச்சர் வந்தாங்களா, பாத்துட்டு அவனை பின்னி எடுத்துட்டு எங்கிட்ட சாரி கேட்க சொன்னாங்க. இனிமே எப்போ அடிச்சாலும் அவங்ககிட்ட சொல்ல சொல்லியிருக்காங்க. அவன் இப்போ ஃபிரண்ட் ஆயிட்டான், எங்கிட்ட பயந்துகிட்டிருக்கான்'.

'வீணா சண்டைக்கு போகக்கூடாது தம்பி' என அறிவுறுத்திய கிருஷ்ணனுக்கு அவன் ஸ்மார்ட்டாக வேலை பார்க்கவில்லை என்பதும் அவனது பிரச்சினையை எப்படி அணுகுவது என்பதும் இப்போது தெளிவாய்ப் புரிந்தது.

நண்பர்கள் தின வாழ்த்துக்கள்...

|நண்பர்கள் தின வாழ்த்துக்கள்..

துயரினில் தோள்கொடுத்து
தவிப்பினில் துயர்துடைத்து
மாயையில் மயங்குதலில்
மீண்டிட வழிகள் சொல்லி

ஊராரும் உறவோரும்
வஞ்சனையாய் வெறுத்தொதுக்க
பாராட்டும் நட்பு நீயும்
பாசமாய் உடனிருக்க

நல்லதாய் நட்பிருக்க
நானிலத்தில் அஞ்சாமல்
எல்லாம் செய்திட்டு
ஏற்றமதை பெற்றிடலாம்

உள்ள என் நட்புக்கெல்லாம்
உற்சாக வாழ்த்துச்சொல்லி
எல்லாம் கிடைத்திட்டு
என்னோடு இயைந்திருந்து

பொறுத்து பிழைகளெல்லாம்
பாசப் பிணைப்புடனே
இறுதிவரை மாறாத
இனிய உறவுடன்

புரிதலில் தொடர்ந்திட்டு
புவியினை ஆள்வதற்கு
உறைந்திருந்து காத்திடும்
இறையவனை வேண்டுகிறேன்...


பிரபாகர்...

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB