சாமியாட்டம் நின்னு போச்சு...

|

பக்கத்து வீட்டு அத்தைக்கு சாமி வரும்னு என்னோட 'சாமியாட்டம்' பதிவில சொல்லியிருக்கிறேன்.



நானு, அம்மா, என் தம்பி, சாமியாட்டம் அத்தை எல்லாம் வாசல்ல திண்ணையில உக்காந்து பேசிட்டு இருக்கும்போது (அப்போ இருந்த வீட்டுல திண்ணை இருந்துச்சி... இப்போல்லம் யாரு வெச்சு கட்டுறா?)


அப்போ, உடுக்கை சத்தம் பலமா கேக்க ஆரம்பிச்சுது. அம்மாகிட்ட 'என்னம்மா உடுக்க சத்தம், எதாச்சும் பேயோட்டறாங்களா?'ன்னு கேட்டேன்.


'ஆமா பிரபு, மூக்காயிக்கு பேய் புடிச்சிருக்காம், அதான்'னு சொன்னாங்க.


என் தம்பி கிண்டல 'உடுக்கை சத்தம் கேட்டாவே அத்தைக்கு சாமி வரனுமே' ன்னு விளையாட்டுக்கு சொல்ல,


'ஆமாண்டா, இப்போ ஆத்தா வர்றப்போறா!' ன்னு சொல்லிட்டு வேகமா அந்த வீட்டுக்குள்ள ஓடுச்சி.


உள்ள விட முடியாதுன்னு மூக்காயி அண்ணன் சொல்ல, 'என்னயேவாடா' ன்னு பொளிச்சுன்னு ஒரு அறை வெச்சி, தள்ளிட்டு உள்ள போச்சி.


பின்னாலயே நாங்களும் ஓடினோம். 'டேய் பூசாலி, ஊரை ஏமாத்துறியாடா?' ன்னு கேட்டுகிட்டே முன்னால போயிட்டு சாமியாட ஆரம்பிச்சுது.


இத பாத்துட்டு ஏற்கனவே பயங்கரமா பேயாட்டம் ஆடிகிட்டிருந்த மூக்காயி நிறுத்திட்டு வேடிக்க பாக்க ஆரம்பிச்சுடுச்சி.


பேயோட்டறவர அப்போதான் கவனிச்சேன், நம்ம சித்ராவுக்கு ஓட்டின அதே ஆளு, கூட கிளி, முடி கொஞ்சம் அதிகமா இருந்துச்சி.


வாழ்க்கையிலயே மொத மொதலா சாமியையும் பேயையும் ஒரே இடத்துல சமாளிச்சவரு அவராத்தான் இருக்கும்னு நினைக்கிறேன்.


'வா ஆத்தா, வந்து உட்காரு'ன்னு சொல்ல மூக்காயி ஆட அரம்பிச்சது. சவுக்கால விசிறி, 'சும்மரு, ஆத்தாவ கவனிச்சிட்டு அப்புறமா வர்றேன்' ன்னு சொல்லவும், நல்ல புள்ளயா அமைதியாயிடுச்சி.


'சொல்லு ஆத்தா, நீ யாரு?' பூசாரி


'டேய் என்னையே தெரியலயா' சாமி


'தெரியாமத்தானே ஆத்த கெக்கறேன், சொல்லு சாமி' ன்னு பணிவா கேட்டாரு.


'நாந்தான் அங்காள பரமேஸ்வரி' சாமி


'சரி ஆத்த, ஒத்துக்கறோம், நீ சாமின்னு நம்பனும்னா ரெண்டு கேள்விக்கு பதில் சொல்லியாகனும்' பூசாரி.


'எனக்கே பரிச்சயாடா, உலகத்துக்கே பரிச்ச வெக்கிறவ நானு' சாமி


'அது தெரியும், பொது இடத்துல நிரூபிக்கனும்ல' பூசாரி.


'ஆமா நிரூபிக்கனும்ல' கிளி.


கடைசியா 'கேளுடா அற்ப பதரே' ன்னு சொல்லவும்


'வீரங்கி அய்யனாருக்கு சோத்துக்கை பக்கம் யாரு இருக்கா, பீச்சாங்கை பக்கம் யாரு இருக்கா? இத மட்டும் சொல்லு நான் சாமின்னு நம்பறேன்' பூசாரி.


'ம், அதெல்லாம் உங்கிட்ட சொல்லனும்னு அவசியம் இல்ல' ன்னு சொல்ல சவுக்க எடுத்து விளாச ஆரம்பிக்க,


'அய்யோ இந்த பாவி என்னை அடிச்சே கொல்றானே' ன்னு கத்த அதுக்குள்ள தகவல் போய் அவங்களோட அம்ம வந்து பூசாலிய கன்ன பின்னான்னு திட்டிட்டு கூட்டிட்டு போயிடுச்சி.


அன்னியிலிருந்து இன்னிய வரைக்கும் அத்தைக்கு சாமி வர்றதில்ல.


அப்புறம் மூக்காயிக்கு என்ன ஆச்சுங்கறீங்கள? பேயோட்டறவர்கிட்ட புடிச்சிருக்கிறது ஐம்பது பேயின்னு சொல்லி அவங்கம்மாவுக்கு ஆப்பு வெச்சிடுச்சி.


முன்னோட்டம்:


அடுத்த பதிவு... 'எனது முதல் ரயில் பயணம்'


'பங்காளி ட்ரெயின புடிச்ச மாதிரிதான்' நான்


'ஃபர்ஸ்ட் கிளாஸ் எப்படின்னா இருக்கும்'


'கொஞ்சம் கூட அறிவே இல்ல? படிச்சவங்க மாதிரி இருக்கீங்க'ன்னாரு டி.டி.ஆர். படிச்சவங்களுக்கு நிறையா அறிவிருக்கும்னு தப்பா புரிஞ்சிருப்பாரு போலிருக்கு.


முப்பத்திரெண்டு பேய் பிடிச்சிருக்கு...

|

என் அத்தை மக சித்ரா என்ன விட ரெண்டு வயசுக்கு பெருசு. பேர சொல்லித்தான் கூப்பிடுவேன்.


காலேஜ் முடிச்சி வீட்டுக்கு வந்தப்போதான் சொன்னாங்க, சித்ராவுக்கு பேய் பிடிச்சிருக்குன்னு.


என்னால நம்ப முடியல. ஏன்னா சித்ரா பயங்கரமா மன தைரியம் உள்ள பொண்ணு.


காட்டுக்கு ஒரு தடவ போயிருந்தப்போ, செங்கமுள் புதர கொளுத்தும்போது, வெளியே வந்த நிறைய பாம்பு குட்டிங்கள, ஒரு பெரிய பாம்ப அடிச்சி அப்படியே நெருப்பில போட்டத கிலியா பாத்துகிட்டிருந்திருக்கிறேன்.


'தானா சிரிக்குதாம், புருஷன், மாமனார், மாமியார்னு எல்லாத்தையும் பேர சொல்லி கூப்பிடுதாம், குவார்டர், சுருட்டு எல்லாம் கேக்குதாம்' அப்படின்னு பல கதைங்கள ஆயா அழுதுகிட்டே சொல்லுச்சி.


சித்ராவ கொண்டுவந்து அவங்க அம்மா வீட்டுல அதாங்க என் அத்த வீட்டுல விட்டுட்டு போயிட்டாங்க.


இங்க வந்ததுக்கு அப்புறம் பரவாயில்ல, அடிக்கடி கத்துது, ஆவேசமா அழுவுதுன்னு புது தகவல சொன்னாங்க.


பிராக்டிகல் சமயம், கொஞ்சம் பிஸியா இருந்ததால நேர்ல போய் பாக்க முடியல.


எங்கெங்கேயோ விசாரிச்சி கடைசியா ஒரு பேயோட்டறவர பாக்க அவரு பேயோட்டறதுக்கு வெள்ளிக்கிழம ராத்திரி வர்றேன்னு சொல்லியிருக்கிறதா சொன்னாங்க.


என்னதான் நடக்குதுன்னு பாக்கனும்னு சீக்கிரமா பிராக்டிகல முடிச்சிட்டு வீட்டுக்கு வந்துட்டேன்.


அத்த வீடே அமர்க்களமா இருந்துச்சி. எட்டு மணிக்குத்தான் பூசாரி வருவாராம்.


சித்ராவ ரொம்ப நாளைக்கு அப்புறம்தான் பாத்தேன். ஆளு மெலிஞ்சி போயிருந்துச்சி. முகம் பூராவும் கவலை. என்ன பாத்தா எப்பவும் நல்லா பேசும், அன்னிக்கு தீர்க்கமா மொறைச்சி பாத்துச்சி.


நானும் அத மொறைச்சி பாக்க, தலைய குனிஞ்சிகிச்சி. கொஞ்ச நேரத்துல தலை முடிய அவுத்து போட்டுட்டு அப்படியே ஆட ஆரம்பிச்சிடுச்சி.


'ஆத்தா கொஞ்சம் நேரம் பொறுமையா இரு, உன் மாமன் வர்றான் உன்ன கவனிக்க' ன்னு சொல்லிச்சி.


'மாமனா?' ன்னு குழம்ப அப்புறம்தான் பூசாரின்னு தெரிஞ்சது.


பத்து நிமிஷத்துக்கு முன்னாலயே வந்தாப்ல. 'எல்லா தயாரா' ன்னு கேட்க,


'வாட என் தே.... மவனே' ன்னு ஒரு கெட்ட வார்த்தையை சொல்லி சித்ரா, சாரி பேய் வரவேற்பு கொடுக்க,


'எங்கிட்டயே உன் வேலையை காட்டறியா, இரு நான் யாருன்னு காமிக்கிறேன்' னு சொல்லிட்டு, ஒரு சாமி படம், வெச்சி கையை கிழிச்சி ரத்ததால பொட்டு வெச்சி, எலுமிச்சம்பழம், குங்குமம், சரக்கு, சுருட்டு, தாயத்து இன்னும் பல விஷயங்களையும் எடுத்து வெச்சி, வேலைய ஆரம்பிச்சாரு.


அத்தை, ஆயா, அவரோட கிளி (உதவி செய்யற சின்ன பூசாரி?) மட்டும் தான் இருந்தாங்க. நானும் கூட இருக்கிறேன்னு சொன்னதுக்கு, படிச்ச புள்ளங்க பாக்கக்கூடாதுன்னுட்டாரு.


அத்த என்ன ஜன்னல் வழியா பாக்க சொல்லிடுச்சி. பூசாரிக்கு பின்னால இருந்து பாக்க ஆரம்பிச்சேன்.


உடுக்கைய எடுத்து அடிக்க ஆரம்பிச்சாரு. சத்தத்த கேட்டதும், எழுந்து நின்னு கத்திகிட்டு ஆட ஆரம்பிச்சிச்சு.


அவரு 'ஜக்கம்மா' ன்னு சொல்லிட்டு தமிழான்னு கேக்கிற ஒரு பாஷையில பாட ஆரம்பிச்சிட்டாரு.


'நீ, யாரு ஏன் இந்த பொண்ண பிடிச்சிருக்க?' ன்னு அதட்டி கேக்க,


'போடா மயிராண்டி உங்கிட்ட சொல்லனும்னு அவசியமில்ல' ன்னு சொல்லிச்சி.


'ஓ, எங்கிட்டயே வேலைய காட்டறியா? எட்றா அத, பாத்துடலாம்' னு சொல்லிட்டு, கிளி கொடுத்த சவுக்கால விளாச ஆரம்பிச்சிட்டாரு.


சித்ரா இன்னும் ஆவேசமா கத்த(வலி தாங்காம?) 'அடிக்காத சொல்றேன், நாந்தான் சாந்தியோட ஆவி வந்திருக்கேன். புள்ளத் தாச்சியா இருந்த என்ன என் புருஷன் கொடுமை பத்தி சாவடிச்சான், அதான் இவ புள்ள பெக்கக்கூடாதுன்னு புடிச்சிகிட்டிருக்கேன்' னு சொல்லுச்சி.


'சரி மொத்தம் எத்தன பேய் பிடிச்சிருக்குன்னு சொல்லு' ன்னு அடுத்த கேள்விய கேட்டாரு.


'ரெண்டு பேய்டா' ன்னு சொல்லிச்சி.


'மரியாதையா சொல்லு' ன்னு சவுக்கால விளாச,


'ரெண்டு பேயிங்க சார்' னு சொல்லிச்சி.


'கிண்டலா பண்றே? உண்மையான கணக்கை சொல்லு' ன்னு கேக்க


'பதிநாலு பேயி' ன்னு சொல்லிச்சி.


'அடிக்க அடிக்கத்தான் உண்மை வருது. ம்... உண்மையை சொல்லு' ன்னு திரும்ப திரும்ப விளாச, பதினெட்டுன்னு சொல்லிச்சி. கடைசியா முப்பத்ரெண்டு பேய்' னு சொல்லவும் அடிக்கிறத நிப்பாட்டிட்டு 'சரி இந்த குவாட்டர குடி' ன்னு சொன்னாரு.


வாயிலேயே மூடிய கடிச்சி துப்பிட்டு, ஒரே மூச்சில குடிச்சிட்டு 'இன்னும் வேணும்' னு கேக்க,


'வேணுமா?' ன்னு விளாச 'அய்யய்யோ போதும்' னு சொல்லிடுச்சி.


'சரி, இந்த சுருட்ட குடி' ன்னு சொல்லவும், ஸ்டைலா பத்தவெச்சி,


'ரசினி ஸ்டைல புடிக்கிறேன்' னு சொல்லி அது ஸ்டைல்ல ஏதோ பண்ணுச்சி.


அப்புறம் நடந்ததெல்லாம் சுருக்கமா சொன்னா, பேய ஓட்டிட்டு மயிர கொஞ்சம் வெட்டி தயத்த சேத்து போன பதிவில பாத்த அரச மரத்துல போயி அடிச்சிட்டு வந்து, கோழி கறி, சரக்கு எல்லாம் சாப்பிட்டுட்டு ஒரு தாயத்து செஞ்சி கட்டிட்டு, வேஷ்டி சட்டைன்னு வாங்கிகிட்டு,


'எல்லாம் சரியாயிடுச்சி, நான் வர்றேன்' னு கிளம்பிட்டாரு.


அப்புறம் சித்ரா பழயபடி ஆயிடுச்சி, புருஷன் வீட்டுக்கும் போயிடுச்சி.


அடுத்த ஏழு மாசத்துல உண்டாகி பிரசவத்துக்கு அம்மா வீட்டுக்கு வந்தப்போதான் பார்த்தேன். இப்போ நல்லா குண்டா, குழந்தைய சுமக்கிற பூரிப்புல இருந்துச்சி.


'என்னா சித்ரா, நல்லாருக்கியா? பேயெல்லாம் போயிடுச்சா?' ன்னு கேட்டேன்.


நக்கலா சிரிச்சிட்டு, 'யாருகிட்டயும் சொல்லாத, நீயும் நம்பிட்டியா?' ன்னு கேக்க,


'நம்பல அதான் கேட்டேன்' னு சொன்னேன்.


'கொழந்தையே இல்லன்னு எல்லாரும் குத்தி காட்டிகிட்டு இருந்தாங்க. அவருக்கு வேற கல்யாணம் பண்றதா பேசிட்டிருந்தாங்க. அதான் எல்லாத்தையும் ஒரு கலக்கு கலக்கிபுட்டேன்' ன்னு சொல்லுச்சி.


'சரி அதென்ன முப்பத்திரெண்டு பேய்' னு கேக்க,


'பேய்க்கு நூறு ரூபாயாம், ஒட்டறதுக்கு. கம்மியா சொல்ல சொல்ல அடி பின்னிகிட்டிருந்தான், சரி அதிகமா சொன்னாத்தான் விடுவான்னு சொன்னேன்' னுச்சி.


'ஆமா, அதென்ன 2, 14, 18, கடைசியா 32ன்னு பேய் கணக்கு' ன்னு ஞாபகப்படுத்தி கேட்டேன்.


'உனக்கு புரியலையா? நம்ம ரூட்டுல ஓடற டவுன் பஸ்ஸு நம்பருங்க' ன்னு சிரிச்சிச்சு.


'அதென்ன குறுக்க ஒரு 14, நம்ம ரூட்டுல வரலியே?'


'அது எங்க கடம்பூருக்கு வர்ற டவுன் பஸ்ஸு' ன்னு சொல்லிச்சி.


முன்னோட்டம்.


அடுத்த பதிவு, 'சாமியாட்டம் நின்னு போச்சு'


'டேய் எங்கிட்டயே கேள்வி கேக்குறியா? நான் ஆத்தாடா'ன்னு பூசாரிய பாத்து ஆவேசமா கேட்டுச்சி.


பேயை பார்த்த அனுபவம்...

|


அப்போ பத்தாவது படிச்சிகிட்டிருந்தேன். களத்துல தாத்தா நெல்லுக்கு காவலிருக்க, ராத்திரி சாப்பாடு கொண்டுபோற மாதிரி ஆயிடுச்சி.

ஆயா வழக்கமா கொடுத்தனுப்பற ஆளுங்க யாரும் இல்லாததால மகள் வழி பேரன் பாலுவ கேக்க, 'அதெல்லாம் முடியாது, ஏன் பிரபுவை போகச்சொல்லேன்'னு சொல்லவும்,

'சங்கமாரி, அது படிக்கிற புள்ள, அவன ஏன் இழுக்கிற, உனக்கு சினிமாவுக்கு காசு தரலாம்னு இருந்தேன்'னு ஆயா சொன்னுச்சி,

உடனே, 'எடுத்துட்டு போவலன்னா சொன்னேன், அரசமரத்துகிட்ட மோகினி பிசாசு இருக்கு, தொணைக்கு பிரபுவையும் வரச் சொல்லு, தனியா போனா அடிச்சிடும்' னு கேக்கவும்,

'அதெல்லாம் இல்ல, நீ போனா போ இல்ல வேற ஆளை பாத்துக்கறேன்' னு கராறா சொல்லிடுச்சி.

அதுக்குள்ள நான், 'ஆயா கொடுத்துட்டு உடனே வர்ற வேலைதானே நானும் போறேன்' னு சொல்ல, மொதல்ல மறுத்த ஆயா கடைசியா ஒத்துகிச்சி.

நெத்தியில நீறு வெச்சி, 'பாலு நீதான் தூக்கனும், பிரபுகிட்ட கொடுக்கக் கூடாது, சீக்கிரம் வந்துடனும், கண்ட கண்ட கதையெல்லாம் சொல்லக்கூடாது' னு நிறையா கண்டிஷன் போட்டு அனுப்பிச்சுச்சு.

நான் ஒம்பதாவது வரைக்கும் அம்மாவழி தத்தாகிட்ட வளர்ந்ததால சாமி, பேய் நம்பிக்கை இல்லாம இருந்தேன்.

'கல்லெல்லாம் சாமியா மண்ணெல்லாம் பூமியா... ஆடு வெட்ட சொல்லுதா கோழி வெட்ட சொல்லுதா, நட்டு வெச்ச கல்லு சாமி' ன்னு நிறைய பாட்டுங்களையும், கதைங்களையும் சொல்லியிருந்தாரு.

ஊரைத் தாண்டி மாட்டுவண்டி பாதையில போனா அரசமரம், ஒட்டினாப்ல பெரிய ஆறு, ஆத்துலேயே நடந்து தூரமா போனா கழுங்கு மேடு, அதை தாண்டி போன காடு.

வண்டித்தடத்துல போகும்போது மெதுவா ஆரம்பிச்சேன். 'மாமா, எதோ மோகினி பிசாசுன்னு சொன்னியே'.

'அதெல்லாம் பேசக்கூடாதுன்னு ஆயா சொல்லியிருக்கு, எனக்கும் இப்போ பயமா இருக்கு, காலையில சொல்றேன்' னு சொல்லிச்சி.

அரசமரத்துகிட்ட போனோம். அதுல மாடு கன்னு போட்டதும், செத்தையை வைக்கோல்ல கட்டி தொங்க விட்டிருப்பாங்க. பால் வர்ற மரத்துலதான் கட்டனுமாம்.

ராத்திரியில பாக்க விக்கிரமாதித்தன் கதையில படிச்ச வேதாளங்க தலை கீழா தொங்கற மாதிரி இருந்துச்சி. அதுவுமில்லாம பேய ஓட்டிட்டு மயிரு தாயத்தெல்லாம் சேத்து ஆணியில அடிச்சி வெச்சிருந்தது அனாவசியமா ஞாபகத்துக்கு வந்துச்சி.

அரசமரத்த தாண்டி ஆத்துல இறங்கினோம். நல்லா கும்மிடுட்டு. கதைக்குன்னு வேணும்னா அமாவாசைன்னு சொல்லலாம். அந்த அளவுக்கு கும்மிருட்டுல்ல, ஆன எதுத்தாப்ல எதுவும் தெரியல. ஆத்துல சல சலன்னு தண்ணி ஓடிகிட்டு இருந்துச்சி. நல்லா வெத வெதப்பா, ஆனா கருப்பு கலர்ல இருந்துச்சி.

தவளைங்க, சில்வண்டுங்க சத்தம் எல்லாம் கலந்து கொஞ்சம் அடி வயத்துல எதோ அவஸ்தையை ஏற்படுத்த முருகா, முருகான்னு சொல்லிகிட்டு விடு விடுன்னு நடக்கும்போதுதான் தூரத்துல அத பாத்தோம்.

சுமாரா ஒரு ஒன்னரை அடி உயரத்துக்கு வெள்ளையா எதோ ஒரு உருவம் கொஞ்ச தூரத்துல தெரிஞ்சது. அப்படியும் இப்படியும் லேசா ஆடிகிட்டிருந்துச்சி. டக்குனு இடத்த மாத்திகிச்சி.

'மாமா அங்க பாரு'ன்னு பயந்து போய் காமிக்க, 'பிரபு அது செத்து போன தூங்கான் கிழவாடியோட ஆவி'ன்னு சொல்லி பீதிய கிளப்புச்சி.

'தல இருக்குதா பாரு'ன்னு கேக்க, 'தெரியல' ன்னு சொன்னேன்.

'உனக்கு சரியா தெரியல, தலை இல்லாத முண்டமா இருக்குது' ன்னு சொல்லுச்சி.

அந்த உருவம் இப்போ சட்டுனு அஞ்சடி உயரத்துக்கு பெரிசா வளந்துச்சி. தல மட்டுமில்ல, காலு கையு மில்ல. புகை வேற கிளம்ப ஆரம்பிச்சுது. அதுவுமில்லாம எங்கள நோக்கி வர ஆரம்பிச்சது.

அவ்ளோதான், பிடறியில கால் பட தூக்கு போனியை தூக்கிகிட்டு ஓட ஆரம்பிச்சோம்.

'பயத்துல நாங்க பயந்து ஓட, பின்னாலேயே எங்களை துரத்த....., 'எப்பா நில்லுங்கப்பா, நான் தான் கோயிந்தன்' ன்னு கத்தறது கேட்டுச்சி.

'யேய், அது தூங்கான் ஆவிதான், வேற பேர்ல சொல்லி நம்மல அடிக்க பாக்குது. திரும்பி பாக்காம ஓடு' ன்னு சொல்லவும், கண்ண மூடிட்டு கழுங்குமேடு வரைக்கும் ஓடி, களைச்சி போயி திரும்பி பாத்தோம், சுவடே தெரியல.

பக்கத்துல இருந்த மோட்டார் கொட்டாயில வெளிச்சம் தெரிய கொஞ்சம் நிம்மதியாச்சு. அப்பாடா தப்பிச்சோம்னு நினைச்சிட்டே, சாமி பேர சொல்லிட்டே காட்டுக்கு பக்கமா போயிட்டோம்.

தாத்தா என்ன பாத்துட்டு அதிர்ச்சியாயிட்டு, 'நீ ஏப்பா வந்தே, உங்க ஆயா அனுப்பிச்சாளா? வந்து வெச்சிக்கிறேன்' ன்னு வாஞ்சையா மயிர கோதி விட்டாரு.

விவரத்த சொல்லவும், 'வேற எதாச்சும் பாத்து பயந்திருப்பீங்க, ஒன்னும் ஆகாது'ன்னு சமாதானப்படுத்தினாரு.

தாத்தாகிட்ட வயித்த கலக்குதுன்னு சொல்ல, 'பாலு, பிரபுவ பெராச்சி மோட்டுக்கு பக்கத்துல வெளிச்சமா இருக்கும், முன்னாலயே கூட்டிகிட்டு போ' ன்னு சொன்னாரு.

போயிட்டு வந்தப்போ, தாத்தாவோட கட்டில்ல இன்னொருத்தர் இருந்தாப்ல. வெள்ளை வேஷ்டி, பனியன், ஆளு நல்லா கருப்பு. அவரு பேசறத மெதுவா கவனிச்சோம்.

'அப்புறம் மாமா, ரெண்டு பேரு, என்னையே பாத்துகிட்டு இருந்தாங்க. எனக்கு பயமா போயிடுச்சி. எழுந்து ஒரு பீடிய பத்த வெச்சிட்டு அவங்க கிட்ட போனேன், ஓட ஆரம்பிச்சிட்டானுங்க, நான் கோயிந்துன்னு சொல்லிகிட்டு பின்னாலேயே ஓடறேன், ஒரே நிமிஷத்துல மாயமா மறைஞ்சிட்டானுங்க. கை காலெல்லாம் ஒதற, சாமி பேர சொல்லிகிட்டு இப்போதான் வந்து சேர்ந்தேன்'

தாத்தா எங்கள பாத்துட்டு, 'பிரபு, பாலு பாத்துக்கோங்க தூங்கான் ஆவிகிட்டத்தான் பேசிட்டிருக்கேன்' னாரு.

முன்னோட்டம் : அடுத்த பதிவு 'முப்பத்திரெண்டு பேய் பிடிச்சிருக்கு'

'ஏய் சித்ரா, நிஜமா சொல்லு உனக்கு பேய் பிடிச்சது உண்மைதானா' ன்னு கேட்டேன்.


ஒரு தகவலும் எங்கேயோ கேட்டதும்...

|

ஒரு தகவல்



என்னை வாசிக்கும் உள்ளங்களுக்கு வணக்கம். கடந்த இருபது நாட்களாக ஏதும் எழுதவில்லை எனது வாழ்வில் மற்றுமொரு முக்கியமான நிகழ்வினால்.


ஆம், மனைவியை இழந்து இரு குழந்தைகளுடன் தனியனாய் திக்கற்று இருந்த நான், கடந்த இருபத்து மூன்றில் மணமுடித்து , இரு புதிய உறவுகளுடன் புது வாழ்வை துவக்கியிருக்கிறேன்.


வாழ்த்திய உள்ளங்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை உரித்தாக்கி எனது பதிவுலக வாழ்க்கையை புதுப்பொலிவோடு தொடர்கிறேன், வழக்கம்போல் உங்களின் அன்பான ஆதரவை எதிர்நோக்கி....


எங்கேயோ கேட்டது - போட்டி சாமியார்கள்...


ரெண்டு சாமியாருங்க இருந்தாங்க. எத பண்ணினாலும் காப்பியடிச்சு பண்றதுதான் ரெண்டு பேருகிட்டயும் உள்ள வழக்கம், விஜய் டி.விய கொஞ்சம் கூட கூச்சமே இல்லாம காப்பியடிக்கிற, சகா அவரோட பதிவுல சொன்ன மாதிரி கொஞ்ச காலம் கேப்டன் புகழ் பாடிய, சன் டிவி மாதிரி.


உதாரணம் தலைய சுத்தினானும், ரெண்டு பேருகிட்டேயும் உள்ள போட்டி எல்லா சாமியாருங்ககிடேயும் பிரசித்தம்.


மொத சாமியாரு கடவுளை நோக்கி வரம் கேட்டு அகோர தவம் செய்ய ஆரம்பிக்க, கேள்விப்பட்ட ரெண்டாவது சாமியாரும் அதே மாதிரி ஆரம்பிச்சாரு.


கடவுள் மனமிறங்கி மொத ஆளுகிட்ட 'பக்தா உங்களின் தவத்தை கண்டு மெச்சினோம். ரெண்டு பேரும் என்னை நோக்கி தவமிருந்தாலும் முதலில் ஆரம்பித்தது நீங்கள்தான் என்பதால் முதலில் உமக்கு காட்சி தந்தேன், என்ன வேண்டும் உமக்கு' ன்னு நைசா கோத்து விட்டாரு.


சொன்னத வெச்சி, ஆகா அடுத்து நம்மோட வைரிகிட்ட போகப்போறாரான்னு நினைச்சிட்டு,


'கடவுளே அவரு கேக்கறத விட எனக்கு இரு மடங்கு கொடுத்தா போதும்' னு சொல்லிட்டாரு.


சிரிச்சிகிட்டே, 'தந்தேன் பக்தா' ன்னு சொல்லிட்டு அடுத்த ஆளுக்கு காட்சியளிச்சாரு.


'பக்தா உங்களின் தவத்தை கண்டு மெச்சினோம். இப்போதுதான் மற்றவருக்கு வரமளித்து வந்தேன், உமக்கு என்ன வரம் வேண்டும் கேளுங்கள்' னு கேட்க,


'கடவுளே மொதல்ல அவரு என்ன கேட்டாருன்னு சொல்லுங்க' ன்னு கேட்க,


கடவுள் சொன்னதும் பட்டுனு, 'சாமி எனக்கு ஒரு காதும், ஒரு கையும் விளங்காம போயிடனும்' னு கேட்டாரு.


ஒரு முன்னோட்டம்...


அடுத்த பதிவு 'பேயை பார்த்த கதை'. புதுசா கல்யாணம் பண்ணின அனுபவம்னு நினைக்காதீங்க... சின்ன வயசுல நடந்த ஓர் உண்மை சம்பவம்.


'பயத்துல நாங்க பயந்து ஓட, பின்னாலேயே எங்களை துரத்த.....'

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB