மகனுக்காக...

|

என்னுடன் வேலை பார்க்கும் நண்பரின் மனைவி நிறைமாதக் கர்ப்பிணியாய் இருக்கிறார். பிரசவ சமயத்தில் மனைவியின் அருகில் கண்டிப்பாய் இருக்கச்சொல்லி அறிவுறுத்தி முன்னதாகவே அவரை ஊருக்கு செல்லுமாறு வற்புறுத்தினேன். காரணம் எனது மகன் மற்றும் மகள் பிறக்கும்போது அருகில் இருக்க இயலாத சூழலில் இருந்தேன் என்பதால்தான்.

அதிலும் குறிப்பாய் எனது மகன் பிறந்த தருணத்தில் கையில் காசின்றி, நம்பி சென்ற வேலையும் இல்லாமல் வெறுமையாய் சிங்கையில் இருந்த அந்த சூழலில் என் மகன் பிறந்த செய்தி, எப்படி இருக்கிறான் என எல்லாவற்றையும் செவிவழிக் கேட்டுத்தான் தெரிந்துகொண்டேன்.

அந்த தருணத்தில் 'மகனுக்காக' எனும் தலைப்பில் எழுதிய ஒன்றை இங்கு பகிர உத்தேசம்.

இது சிங்கையில் வெளிவரும் தமிழ் முரசில் 07/11/2004 அன்று வெளிவந்தது.

கண்ணே என் கண்மணியே
     காணாத பொக்கிசமே
என்னோடு இயைந்திருக்கும்
     இன்பம் தரும் பூஞ்சுகமே

நினைவெல்லம் உனைப்பற்றி
     நிறைந்திருந்து தவிக்கின்றேன்
கனவிலுனைக் கண்டிட்டு
     காண்பதற்கு துடிக்கின்றேன்.

கையிலுன்னை தொட்டெடுத்து
     கனிவான மொழி பேசி
மெய்சிலிர்த்து வியந்து உன்
     மேனியெழில் தரிசித்து

ஆயிரம் பாடல்களை
     ஆராரோ சேர்த்துப்பாடி
மாயக்கண்ணன் நீயுறங்க
     மகிழ்வினில் நான் கிறங்க

எண்ணும்போது சிலிர்க்கிறது
     எங்கோ மனம் பறக்கிறது
கண்ணில் துளி பார்க்கிறது
     கவலை மேகம் சூழ்கிறது

பணம் எனும் வாழ்வின்
     பிரதான விஷயம்தான்
என்னையுன்னை பிரிக்கிறது
     ஏக்கமதை சேர்க்கிறது.

உயிர் கொடுத்த என் நாசி
     உப்பலான என் கன்னம்
கயல் பொன்ற கண்களினில்
     கிறங்கடிக்கும் துறுதுறுப்பு

தாயவளின் தங்கநிறம்
     தேன் சிந்தும் அதரங்கள்
சேயுனக்கு இருப்பதாய்
     செவிமடுத்து கேட்டிட்டேன்

உனைக் கண்ட யாவருமே
     வியந்து பல கூறக்கேட்டு
தினமும் நான் திளைக்கின்றேன்
     திகட்டாத மகிழ்ச்சியினில்

கனவு காணத் தூங்கின்றேன்
     கலைந்த பின்பு ஏங்குகின்றேன்
மனம் முழுதும் மகனுக்காக
     மனக்கோட்டை கட்டுகின்றேன்

அடிப்படை தொல்லையெல்லாம்
     அகன்றிடும் முதல் நாளில்
துடிப்புடன் கிளம்பிவந்து
     தங்கமகன் உனைப் பார்த்து

வாடும் முகம் மலர்ந்திடுவேன்
     வருத்தமெலாம் தொலைத்திடுவேன்
தேடுகின்றேன் அந்தநாளை
     தொலைவிலில்லை பக்கம்தான்...

செல்லரித்த மடல்கள்...

|

செல்பேசி வந்து மடல்களை செல்லரிக்க வைத்து மனப் பரிமாற்றங்களுக்கு முற்றுப் புள்ளியினையே வைத்துவிட்டது, உறவுகளிடையே இருந்த எதிர்ப்பார்ப்பு, ஏக்கம் என எல்லாம் தொலைந்தும் விட்டது எனலாம்.

ஆம்... கடிதங்கள் வாழ்வின் பிரதான ஒன்றாய் இருந்து இன்று ஆடிக்கொன்று, அமாவாசைக்கொன்றாய் வங்கி மற்றும் சில முக்கிய இடங்களிலிருந்து பணப்பரிமாற்றங்களுக்காக மட்டுமே என்றாகி மனப்பரிமாற்றங்களுக்கில்லை என்றாகிவிட்டது.

இதைப் படிக்கும் எத்தனைப் பேருக்கு அஞ்சல் அட்டை மற்றும் உள்நாட்டுத் தபாலின் விலை தெரியும் எனத் தெரியவில்லை. உள்நாட்டுத் தபாலின் விலை ஒன்று ஐம்பதாக இருக்கலாம், அஞ்சல் அட்டை ஐம்பது பைசாவோ? என என்னும் அளவிற்குத்தான் என் அறிவு.

கடிதம் எழுதுவது எப்படி என எனக்கு பள்ளியில் கற்றுத்தருவதற்குமுன் எல்லாமுமான என் மாமா ஐந்தாம் வகுப்பிலேயே கற்றுத்தந்தார். அப்போது அஞ்சல் அட்டையில் விலை ஐந்து பைசாவாக இருந்தது என நினைக்கிறேன்.

படித்து முடித்து சில மாதங்கள் வேலை கிடைக்கும்வரை அவர் வீட்டில் இருந்தபடி வேலைக்காக முயற்சித்த வண்ணம் இருந்தார். அந்த தருணங்களில்தாம் என்னை வங்கிக்கு அழைத்துச் சென்று எப்படி பணம் எடுப்பது, கடிதம் எழுதுவது, நூலகத்தை அறிமுகப்படுத்தியது என எல்லாம்.

மதுக்கரையில் வேலை கிடைத்து சென்றுவிட எங்களுக்கிடையில் உறவுப்பலமாய் இருந்தவை மடல்கள் தாம். அன்புள்ள மாமாவுக்கு என ஆரம்பித்து பெரும்பாலும் எல்லாக் கடிதங்களும் நல விசாரிப்புக்கள், படிப்பு சம்மந்தமான வழக்கமான தகவல் பரிமாற்றங்கள் என ஒரே மாதிரியாய்த் தானிருக்கும்.

சொல்லித்தந்தவாறு முகவரியை எழுதி, திட்டலுக்கு பயந்து பிழை இல்லாமல் எழுத முயற்சித்து உயரம் கூட எட்டாத அந்த சிவப்புப் பெட்டியில் போட்டு, அது எங்கு சென்றுகொண்டிருக்கும் என்றெல்லாம் கற்பனை செய்து தபால்காரன் மணி அண்ணன் கொண்டு வரும் பதில் கடிதத்திற்காக வழிமேல் விழி வைத்து காத்திருந்து, அவரை தினமும் அயராது கேட்க 'இல்லை கண்ணு' என்று சொல்வதையே பெரும்பாலும் கேட்டு... கடைசியாய் கிடைக்கும் பதில் கடிதம் பார்க்க வந்த மகிழ்ச்சி இருக்கிறதே...! அதை சொல்லிட வார்த்தைகள் கிடையாது.

மாமாவின் அறிவுரைகள், சென்ற மடலில் இருந்த தவறுகளை சுட்டிக்காட்டி சரிசெய்துகொள்ள அறிவுறுத்தல்கள் என எல்லாம் தாங்கி வரும் அந்த மடலைப் படித்ததும் எல்லாம் சாதிக்கலாம் என உற்சாகம் வரும்.

நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுகளையும் கடிதங்களின் முலமாய்த்தான் பகிர்ந்து கொண்டாகவேண்டிய கட்டாயம் அன்று. நல்ல கேட்ட விஷயங்கள் எல்லாம் மடல்கள் தாம் நமக்கு தெரிவிக்கும். 'மழை பெய்திருக்கிறது, மாடு கேடேரி கன்று போட்டிருக்கிறது, மோட்டார் காயில் போய்விட்டது, குட்பால் (ஃபுட் வால்வ்) கிணற்றில் விழுந்துவிட்டது என்றெல்லாம் காதில் விழுந்ததை எழுத்தால் தகவல் சொல்லி, அதற்காக வரும் பதிலில் சரிப்படுத்தலோடு அர்ச்சனைகள் தாங்கி... ஆஹா... நினைக்கும் போதே இனிமையாய் இருக்கிறது.

தேர்வில் எடுக்கும் மதிப்பெண்களைச் சுமந்து சென்று பதிலாய் பாராட்டு மற்றும் திட்டுக்களை சுமந்து வந்து சேர்க்கும். உக்கமூட்டும் வார்த்தைகளுடனும், ஆக்கபூர்வமான அறிவுரைக்களுமாய் முனைப்படுத்திக்கொள்ள எதுவாய் நிறைய இருக்கும்.

அந்த தருணத்தில் மணிமேகலை பிரசுரத்தின் 'பேனா நண்பர்கள் சங்கம், நோக்கங்களும் முகவரிகளும்' எனும் ஒரு புத்தத்தினை விபிபியில் வாங்க, அதன் முலம் நிறைய புதிய நட்புக்கள். இராசிபுரத்திலிருந்து கோபி, கோவையிலிருந்து துரையன் அய்யா என பல்வேறு நண்பர்கள், வயது வித்தியாசம் பாராமல். இதில் கோபி எனது வீட்டிற்கு வந்திருக்கிறார்.

படிக்கும், படித்த விஷயங்களைப் பரிமாறிக்கொள்ளுதல், ஊரில் நடக்கும் திருவிழாக்களைப் பற்றி விமர்சையாக எழுதி சந்தோஷங்களைப் பகிர்ந்து கொள்ளுதல், ஏதேனும் தகவல்கள் தேவையெனில் கேட்டுத் தெரிந்து கொள்ளுதல் என எல்லா வழிகளுக்கும் உற்ற துணையாயிருந்தவை மடல்கள் தான்.

எனக்கும் என் நண்பன் மணிக்கும் பிரச்சினை வந்தபோது தவறு என்மேல் என உணர்ந்து மன்னிப்புக்கேட்க உதவியதும் மடல்தான். என் தவற்றால் கடும் கோபம் கொண்ட என் அப்பாவிடம் சமாதானத் தூதுவனாய் இருந்ததும் மடல் தான்.

திருமணம் நிச்சயம் ஆகி திருமணத்திற்கான ஆறுமாதங்கள் வரை எங்களின் அன்பினைப் பரிமாறிக்கொள்ள தூதுவனாய் இருந்தது மடல்தான். ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு மாதிரியாய் சலிப்புறாமல் இருக்க வேண்டும் என பல விதமாய் எழுதவேண்டும் என்ற கட்டாயத்தை ஏற்படுத்தி எழுதும் ஆற்றலை வளர்த்ததும் மடல்கள் தாம்.

நாகரிக வளர்ச்சியில் மடல் எழுதும் காலம் போய் இன்று எல்லாம் செல்பேசி என்றாகிவிட்டது. இரண்டு வரிகள் சாட்டில் பேசினால் உடனே அழைத்துப் பேசி தொடர ஆரம்பித்துவிடுகிறோம்.

மொத்தத்தில் உறவுகளுக்கிடையே இருக்கும் நெருக்கப் பிணைப்பை, அன்பின் வெளிப்படுத்தலை நிறைய இழக்கிறோம்.

இனிமேலாவது நமது வாரிசுகளை கடிதம் இல்லாவிடினும் மெயில் மூலமாய் கடிதம் எழுதச் சொல்லி அவர்களின் எழுத்தாற்றலை வளர்த்து நமது அன்பினைப் பரிமாரிக்கொள்வோமே...!

போராளி... எனது பார்வையில்...

|

தியேட்டரில் சென்று படம் பார்த்து நாளாகிவிட்டபடியால் ஓஎம்ஆர் ஏஜிஎஸ்-ல் போராளி படம் பார்க்க நண்பரோடு சென்றேன். இரவு பத்தரை மணிக்காட்சி.

பாதிக்கும் மேல் அரங்கம் நிறைந்திருந்தது. சிங்கையின் கோல்டன் வில்லேஜில் படம் பார்க்கும் உணர்வினை ஏற்படுத்தியது.

கதை ஏறக்குறைய பலரின் விமர்சனங்களைப் படித்ததால் ஏற்கனவே தெரிந்த ஒன்றாகவே இருக்க, அதிக எதிர்ப்பார்ப்பு இல்லாமல் பார்க்கும்படியாய் இருந்தது.

பார்க்கும் போது பலரின் விமர்சனங்களோடு ஒத்துப்போவதாய் தான் எனது புரிதலும் இருந்தது.

ஒவ்வொருவருமே ஒரு விதத்தில் போராளிதான், ஏதாவது ஒரு தருணத்தில் மனப் பிசகு ஏற்படுகிறது, உடலுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை மனதுக்கு கொடுக்க மறுக்கிறோம், சொந்தக்காரங்களை மட்டும் நம்பவே முடியாது (இந்த இடத்தில் நிறைய கைத்தட்டல்கள்) என ஏகமாய் தத்துவ மழைகள்.

நகைச்சுவைக் காட்சிகள் பெரிதாய் கவரவில்லையென்றாலும் மென்முறுவலை வரவழைக்கிறது, ஆரோக்கியமாய் இருக்கிறது என்பதில் சந்தோஷமே.

சிலோனே பிடிக்காது, இதில் சிலோன் பரோட்டாவா என தமிழுணர்வை வெளிப்படுத்தும் வசனங்கள். சசிக்குமார் ஏகமாய் வசனம் பேசி சில சமயங்களில் நிறையவே படுத்துகிறார். நடிப்பும் சில இடங்களில் செயற்கையாக இருக்கிறது.

இசை ரொம்பவும் சுமார். இளையராஜா இசையமைத்திருந்தால் இந்த இடத்தில் எவ்வளவு அருமையாய் செய்திருப்பார் என பல இடங்களில் எண்ணி பார்க்கும்படியாய் பிண்ணனி இசை. காட்சிகள் நன்றாக படமாக்கப்பட்டிருக்கின்றன.

சிலபல படங்களின் மொத்தக் கலைவையாய் தெரிந்ததே தவிர எந்த  ஒரு தனித் தன்மையுடனும் இல்லை என்பதே பெரிய குறை.  அடி, வெட்டு, குத்து என வன்முறைகளுக்கு பஞ்சமில்லாமல் இருந்தாலும் ஆபாசம் அறவே இல்லை என்பதில் பெரிய ஆறுதல்...

பயணம் 1.1.3

|

நாம் மேற்கொள்ளும் பயணங்கள் புதுப்புது அனுபவங்களையும் பாடங்களையும் கற்றுத்தருகின்றன. கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் நமக்கு பல விஷயங்கள் புலப்படும்.

பயணத்தின்போது புதிதாய் ஒரு நட்பினைப் பெறுவதிலோ, சுற்றுப்புற நிகழ்வுகளை அசைபோடுவதிலோதான் அதிக ஆர்வம் இருக்கும். வெறுமையாய் உணரும்போது இருக்கவே இருக்கிறது இசை, நமது எண்ணவோட்டத்துக்கு ஏற்றவாறு...

சமீபத்தில் நிகழ்ந்த சில விஷயங்களைப் பற்றிய ஒரு பகிர்வை இந்த இடுகை. சில விஷயங்களைப் பற்றி பலமுறை கேள்விப்பட்டிருப்போம், படித்தும் இருப்போம். ஆனால் நேரில் நாமே அதில் சம்மந்தப்ப்படும்போது?

அதிகாலை தெடாவூர் செல்லும் பஸ்ஸில் அமர்ந்திருந்தேன். பெரம்பலூர் செல்லும் எல்லா பேருந்துகளும் எங்களின் ஊர் வழியாய்த்தான் செல்லும். மற்றபடி அரும்பாவூர், புளியங்குறிச்சி என இன்னும் பல ஊர்களுக்கு செல்லும் பேருந்துகளும் வழியாகச் செல்லும்.

முன்னால் அமைந்திருந்த பாட்டி மெதுவாய் திரும்பி என்னிடம் 'தம்பி இந்த பஸ் எங்கு போகும்?' எனக் கேட்டார்கள்.

'அரும்பாவூர் போகிறது' எனச் சொன்னேன்.

'அய்யய்யோ பெரம்பலூர் போகாதா? இந்த வண்டி அங்கதானே போகணும்' என்றார்கள்.

'அடுத்த வண்டி வரும் அதில் வாருங்கள்' எனச் சொன்னேன். எந்த ஒரு பதிலும் சொல்லாமல் அமர்ந்திருக்க மறுபடியும் சொன்னேன்.

'நான் வீரகனூர் தான் போகிறேன், இந்த பஸ் வீரகனூருக்கு போகும்னு எனக்குத் தெரியும்' எனச் சொல்ல சரியான பல்ப்.

எனக்குத் தெரிந்தவரை இந்த பஸ், இந்த ஊருக்கு போகுமா என பெருசுகள் எவருமே கேட்பதில்லை.

******

பக்கத்தில் ஷார்ட்ஸ், அழுக்கேறிய பனியன், எண்ணையைப் பார்த்திராத பரட்டைத்தலை, மழிக்காத தாடி, மஞ்சளாய் மொச்சைப் பற்களுடன் முழுச் சிரிப்போடு ஒருவர் அமர்ந்திருந்தார்.

பார்வையிலேயே கொஞ்சம் மன நிலை குன்றியவர் போலிருந்தார். தலையை அடிக்கடி ஆட்டுவதும் ஏதோ முணுமுணுப்பதாயும் இருந்தார்.

பேருந்து கிளம்ப இன்னும் கொஞ்சம் நேரம் இருக்கும் சமயத்தில் உதவி கண்டக்டர் பையன் வந்து அவரை எந்த ஊருக்கு போகவேண்டும் எனக்கேட்க, 'ஆங், அக்...' என என சைகையோடு சொல்ல ஆரம்பித்தார்.

பேச வராது போலிருக்கிறது, ஒலியெழுப்ப மட்டும் தெரிந்திருக்கிறது. 'இந்த பஸ் போகாது' என சொல்லி அவரை எழுப்பிவிடுவதிலே குறியாய் இருக்க அவரும் இறங்குவேனா பார் என அடம் பிடித்தார்.

 கடைசியாய் கோபத்துடன் அவரை தள்ளி இறக்க முயல அவரின் பாஷையில் திரும்பவும் சொல்லி பக்கத்தில் இருந்த என்னைப் பார்த்து பேச ஆரம்பித்தார்.

நான் ஒவ்வொரு ஊராக சொல்லி, கடைசியில் 'அரும்பாவூர் போகனுமா' எனகேட்க, அவரின் முகத்தில் உற்சாக பல்ப். 'ங்.... அஃ...' என சிரித்தபடி சொல்லி தலையாட்டினார்.

உதவி சென்றுவிட அதன் பின் ஏறிய பாட்டி தான் எனக்கு அழகாய் பல்ப் கொடுத்தது. கண்டக்டர் வந்து டிக்கெட் கேட்க, அவர் பதினைந்து ரூபாயை நீட்டி டிக்கெட் கேட்க, எந்த ஊர் என்றதற்கு 'அங்...கா...கா' எனச் சொல்ல 'போகாது இறங்கு' எனச் சொன்னார்.

 'அண்ணே அரும்பாவூர் போகனுமாம்' என சொன்னவுடன் அவர் சிரித்து 'ங்...' என மலர்ச்சியாய் சிரித்தார்.

தெடாவூரில் இறங்கும்போது எடுத்து வந்திருந்த இரு பைகளையும் இறக்குவதற்கு உதவி செய்த அவரைப் பார்த்து 'தேங்க்ஸ்' என சொல்ல தலையாட்டி ஒரு சிரிப்பு சிரித்தார். சிலீரென்றிருந்தது...

பொய்மையும்...(தொடர்ச்சி)

|

இதன் முதல் பகுதியினை படிக்காதவர்கள் இங்கு சென்று படித்துப்பின் தொடருங்களேன்...

மாலை வீட்டுக்கு சென்று பையினை வைத்துவிட்டு உடனடியாக திவாவை சந்தித்தேன். இருவரும் பேசியவண்ணம் ஆற்றினை நோக்கி நடக்க ஆரம்பித்தோம்.

'என்ன திவா, இப்படி பிள்ளையார் பிடிக்க குரங்காப்போயிடுச்சி' எனக்கேட்டேன். 'ஆமாண்டா. நான் யோசிச்சி ஒரு முடிவெடுத்திருக்கிறேன், கண்டிப்பாக அதற்கு நீ ஒத்துக் கொண்டுதான் ஆகனும்' என கட்டளையை வேண்டுகோளாய் வைத்தான்.

 'சரி சொல்லு திவா' என்றேன். 'இந்த நிலைமையில் உனக்கு ஒன்றுமில்லை எனச் சொல்வதால் எல்லோருக்கும் ஏமாற்றப்பட்டோமே என்னும் கோபம் மட்டும் தான் இருக்கும், பதிலாய் பெரிய அளவில் நிம்மதியாவார்கள். ஆனால், சீனியை நினைத்துப்பார். வித்தியாசமான ஆள்'.

'உன்னிடம் அவன் தனியே கூப்பிட்டு பேசியது கூட அவனும் உன்னைப்போல என எண்ணியதால் தான். அவன் இயல்பாக ஆகும் வரை நீ நோயாளிதான், இதே நாடகத்தை தொடர்ந்துதான் ஆகவேண்டும்' என்றான்.

 'என்ன திவா ஒரு நாள் நடிப்பதற்கே தவிடு திங்கும்படி ஆகிவிட்டது. தொடர்வதா' என பயந்தேன்.

 'உன்னால் முடியும் அன்பு, சீனிக்காக இந்த பொய்யினை தொடர்ந்துதான் ஆகவேண்டும், எல்லா விதத்திலும் நான் உறுதுணையாயிருக்கிறேன்' என்றான்.

நிறைய பேசிய பிறகு இறுதியில் சீனி இயல்பு நிலைக்கு வரும்வரை இந்த நாகத்தை கொஞ்ச நாளைக்கு தொடர்வதாய் முடிவு ஆனது.

அடுத்த நாள் வகுப்புக்கு உற்சாகமாய் சென்றேன். எப்போதும் மூன்றாவது பெஞ்சில் அமர்ந்திருக்கும் சீனி என் பக்கத்தில் வந்து அமர்ந்துகொண்டான். ரொம்பப் பிரமாதமாக எல்லாம் படிக்க மாட்டான். தேர்வுக்கு, அவசியம் என்றால் மட்டும்தான் புத்தகத்தை தொடுவான்.

நான் தங்கியிருந்த கல்லூரி விடுதிக்கே வந்து விட்டான். அதிக நேரம் என்னோடு செலவிட ஆரம்பிக்க, எங்களுக்கிடையேயான நட்பு இன்னமும் பலப்பட்டது. அதே சமயம் வகுப்புத் தோழர்களெல்லாம் என்னை கரிசனமாய் கவனித்துக்கொள்ளும் படலமும் தொடர்ந்தது.

தோழிகள் அவர்கள் வீட்டில் எது செய்தாலும் எனக்குக் கொண்டுவந்து தருவதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தார்கள். தீபா கட்டாயப்படுத்தி அவளின் வீட்டுக்கு அழைத்துச் சென்றாள்.

எனக்கு பிடித்த எல்லாம் செய்து வைத்திருந்தார்கள். அவளின் அம்மா, 'கவலைப் படாதே அன்பு, உனக்கு ஒன்றும் ஆகாது, நீண்ட நாளைக்கு சௌக்யமா இருப்பே' என்றெல்லாம் பேச ஆரம்பிக்க, தீபா அம்மா என அதட்ட அப்படியே பேச்சை மாற்றினார்கள்.

நண்பர்களுக்குள் கடிந்து பேசாமல், சண்டை போடாமல் இருப்பது என்பது மிகக் கடினமான ஒரு விஷயம். ஆனால் எனக்காக எல்லோரும் அவ்வளவு பொறுமையாய் இருந்தார்கள். என்ன செய்தாலும் சகித்துக்கொள்ள, எனக்கே சில சமயம் போராக இருந்தது.

இன்னொரு விஷயத்தையும் சொல்லியே ஆகவேண்டும். தொடர்ச்சியாக அவர்கள் நம்புவதற்காக, 'பிரைன் டியூமருக்கு ஏதாச்சும் வைத்தியம் இருக்கா?' என்பேன். என் மாமா சாப்பிடும் நரம்பு சம்மந்தமான மாத்திரைகளை  எடுத்துச் சென்று விடுவேன் (இரண்டாயிரத்திலேயே அந்த மாத்திரையின் விலை பதினான்கு ரூபாய்... பெயர் தெரியவில்லை). அவர்களின் கண் முன்னால் படும்படி வைப்பேன். பையிலிருந்து வெளியே வைப்பது, திரும்ப உள்ளே வைப்பது என அவர்களின் கவனத்தில் படும்படி பார்த்துக்கொண்டேன்.

'சீனி உன் பெயரில் மட்டுமல்லடா, உன் உடம்பிலும் சக்கரைடா' என சொன்னாலும் கோபித்துக்கொள்ளாத அளவிற்கு தேறி விட்டான். அவனை சக்கரை சீனி எனக் கூபிட ஆரம்பித்தேன். வெகு இயல்பாக எடுத்துக்கொள்ள ஆரம்பித்தான்.

உணவுப் பழக்கவழக்கத்தை சரியாய் மேற்கொண்டு உடம்பினை கட்டுக்குள் வைத்துக்கொள்ள ஆரம்பித்தான். அவனுக்காக நானும் சக்கரை இல்லாமல் சாப்பிடுகிறேன் என சொல்லி, தொடர்ந்ததிலிருந்து சக்கரை இல்லாத காப்பி, டீ குடிக்க பழகிக்கொண்டான்.

கடைசியில், 'அண்ணே என் பேரே சீனி. சக்கரை இல்லாத காப்பி போடுங்க' என்பான்.

அண்ணா நீங்கள் கூட கவனித்திருப்பீர்கள், அந்த வருடத்தின் எல்லா பண்டிகைகளுக்கும் என் நண்பர்கள் எட்டு பேரும் தெடாவூர் வந்திருந்ததை. அதெல்லாம் என்னை சந்தோஷப்படுத்தவே.

ஒருநாள் சீனியிடம் திவாகர் பேசும்போது 'சக்கரை வியாதி ஒன்றும் பெரிய விஷயமில்லை திவா, உணவுக்கட்டுப்பாடு இடுந்தால் அழகாக சமாளிக்கலாம்' எனச் சொல்லவும் எங்களுக்கு பெரும் நிம்மதி.

அதற்குள் எங்கள் கல்லூரி வாழ்க்கையே முடிவுக்கு வந்திருந்தது. நண்பர்கள் நாங்களாகவே கல்லூரியின் கடைசி நாளை கொண்டாட முடிவு செய்தோம். சரி இதுதான் உண்மையைச் சொல்லுவதற்கு சமயம் என திவாவிடம் நானும் முடிவேடுத்தோம்.

ஓட்டலில் சென்று ஒன்றாய் விருப்பமானதை எல்லாம் சாப்பிட்டோம். கடைசி நாள், எப்படி எங்கள் மனநிலை இருந்தது என சொல்லத் தேவையில்லை. ஏற்காடு செல்லும் வழியில் இருந்த வழுக்குப்பாறை எனும் இடத்துக்கு சென்றோம். ஒரு பாறையில் அமர்ந்து சந்தோஷமாய் பழைய நினைவுகளை எல்லாம் கிளறி, பேசிக்கொண்டிருந்தபோது 'அமைதி, அமைதி' எனச் சொல்லி சட்டென எழுந்தேன்.

எல்லோரும் என்னை ஆர்வமாய் பார்க்க. 'ப்ளீஸ் முதலில் என்னை எல்லோரும் மன்னித்துக் கொள்ளுங்கள்' என ஆரம்பித்து, 'ஒரே நாளில் முடித்துவிடுவதாய் ஆரம்பித்த இந்த விளையாட்டை சீனிக்காக, ஒரு வருடத்திற்கு தொடர்ந்தது என் தப்ப்புதான். ஆனான் அன்றே சொல்லியிருந்தால் அவன் இந்த அளவிற்கு சகஜமாய் மாறியிருப்பான என்பது சந்தேகம்தான்' என எல்லாம் சொல்லி முடித்தேன்.

சந்தோஷம், கோபம், ஏமாற்றப்பட்டுவிட்டோமே என கோபம் எல்லாம் என் நண்பர்கள் முகத்தில் அன்று ஒரு சேர பார்த்தேன். கும்பலாய் என் மேல் பாய்ந்து என்னை அடித்து அவர்களின் அன்பு, கோபம் என எவ்வாவற்றையும் அடியாய் இந்த அன்பின் மேல் பொழிந்தார்கள்.

எல்லாம் பார்த்துக்கொண்டு அமைதியாய் இருந்த சீனி உணர்ச்சிகளை அடக்க முடியாமல் என்னை கட்டிப்பிடித்து அழ ஆரம்பித்துவிட்டான்.

சீனிக்கு திருமணமாகி ஒரு பையன் இருக்கிறான். திருமணத்திற்கு முன்பாக எல்லாம் சொல்லித்தான் செய்துகொண்டான். எங்கள் வகுப்பில் இருந்த எல்லோருக்கும் திருமணம் ஆகிவிட்டது, குழந்தைகள் இருக்கிறார்கள். சீனிக்கும் இன்னொரு இசுலாமியத் தோழிக்கு மட்டும்தான் ஆண்  குழந்தை. எங்கள் எல்லோருக்கும் பெண்...

இன்றும் அவன் என்னை அழைக்காத நாட்கள் எனச் சொன்னால், எனது செல்பேசியை மறந்து பள்ளிக்கு சென்றுவிட்டாலோ, அல்லது பிரச்சினையாகி வேலை செய்யாமலிருந்தாலோ தான்...

பொய்மையும்...

|


என் தம்பி என்னை விட்டு சென்று ஒரு வருடத்துக்கும் மேல் ஆகிறது. அவனது இடத்தினை நிரப்புவதற்கு எவராலும் இயலாத காரியம் என்றாலும் ஓரளவிற்கு அந்த குறையினைப் போக்குபவன் அன்பு, என் தம்பியின் உயிர் நண்பன், சகலை. இன்று எனக்கு இன்னுமோர் தம்பி.

இழப்பு என்னை எந்த அளவிற்கு வருத்துகிறதோ, நண்பனை இழந்த அவனுக்கும் அதே அளவில். என் தம்பிக்குப் பின் அன்பு மனம் விட்டு பேசும் ஒரே நபர் நான்தான். அவர்கள் இருவரும் சேர்ந்து செய்த ஒரு விஷயத்தை சென்றவாரம் பேசுகையில் கேட்டு ஆச்சர்யம், அதிர்ச்சி, சோகம் என எல்லாம் கலந்து கிடைக்க அன்பு சொன்னது அப்படியே அவன் சொல்வதாய் இந்த இடுகையில்.

'அண்ணா நான் எம்.எஸ்.சி முதாலாம் ஆண்டு படிக்கும்போது இது நடந்தது. என் வகுப்பில் படிக்கும் எல்லோருக்கும் திவாகரை நன்கு தெரியும், சேலம் வரும்போதெல்லாம் சந்தித்துவிட்டுதான் செல்லுவான். நானும் திவாவும் சேர்ந்து எல்லோரையும் ஏப்ரல் ஃபூல் பண்ணவேண்டும் என முடிவு செய்தோம். ஏப்ரல் ஒன்று அன்று செய்தால் எல்லோரும் புரிந்து கொள்வார்கள் என்பதால் முதல் நாளிலேயே எங்கள் வேலையினை ஆரம்பித்தோம்.

பதினோரு மணியளவில் வேண்டுமென்றே கார்த்தியிடம் சண்டை இழுக்க ஆரம்பித்தேன். என்ன செய்தாலும் சண்டை பெரிதாகாமல் போகவே வலிய கோபித்துக்கொள்வதாய் காட்டிக்கொண்டு வகுப்பினை விட்டு வெளியே வந்து நேராய் வீட்டிற்கு கிளம்பி வந்துவிட்டேன்.

கல்லூரியிலிருந்து வந்தவுடன் நேரே வீட்டுக்கு செல்லாமல் உங்கள் வீட்டிற்கு வந்து திவாவோடு பேசிக்கொண்டிருந்தேன். அப்போதெல்லாம் செல்போன் கிடையாது, உங்கள் வீட்டில் இருக்கும் போன் தான் எனக்கு பி.பி.

விளையாட்டாய் வெளியே சென்றிருக்கிறேன், வந்துவிடுவேன் என நம்பிக்கொண்டிருந்தவர்கள் ரொம்ப நேரம் வராமல் போகவே, சந்தேகப்பட்டு திவாகருக்கு போன் செய்து என்னைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தார்கள்.

திவாகர் மெதுவாய் நடந்ததை விசாரித்து அவனது பங்கிற்கு ஆரம்பித்தான். போன் செய்த கார்த்தியிடம், 'கார்த்தி உங்ககிட்டஒரு விஷயம் சொல்லுவேன், கண்டிப்பாய் நீங்கள் யாரிடமும் சொல்லக்கூடாது, ப்ராமிஸ்' என ஆரம்பித்து, 'அன்புவிற்கு ப்ரைன் ட்யூமர், இந்த விஷயம் எனக்கும் அவனுக்கு மட்டும்தான் தெரியும். இருக்கும் வரை அவர்களாவது சந்தோஷமாய் இருக்கட்டுமே என அவனது குடும்பத்தாருக்குக்கூட சொல்லவில்லை. இன்னும் ஓரிரு வருடங்கள் தான் உயிருடன் இருப்பான். தயவு செய்து அவனை எந்த விதத்திலும் கஷ்டப்படுத்தாதீர்கள், அவன் இருக்கும் வரை சந்தோஷமாய் பார்த்துக்கொள்ளவேண்டியது உங்களது, நண்பர்களாகிய நமது பொறுப்பு' என சொல்லியவுடன் கார்த்தி நிறையவே அதிர்ந்து போனான்.

பதட்டத்துடன் 'இல்லையே அப்படியெல்லாம் இருக்க வாய்ப்பில்லையே, அன்பு எதுவும் எங்ககிட்ட சொன்னதில்லையே?' எனக் கேட்க , 'அதான் முதலிலேயே சொன்னேனே, அவன் யாரையும் கஷ்டப்படுத்த விரும்ப மாட்டான். தயவு செய்து நான் உங்களிடம் சொன்னதாய் அவனிடம் சொல்லிவிடாதீர்கள். அவன் மனம் விட்டு பேசும், ஆறுதலாய் நினைக்கும் ஒரே ஆள் நான்தான்' என சோகமாய் சொல்லி போனை வைத்தான்.

சிரிப்பினை அடக்கி பக்கத்து ரூமிற்குள் ஒடி சிரித்து சொல்வதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்தேன். அடக்க முடியாத சிரிப்பினை வெளிக்கொணர்ந்து 'என்ன அன்பு என்னை மாட்டி விட்டுவிடுவாய் போலிருக்கிறது' என செல்லமாய் கடிந்து, 'சரி இனிமேல் இதை மெயின்டைன் பண்ணுவது உன் பொறுப்பு' என சொன்னான்.

அடுத்த நாள் கிளம்பி கல்லூரிக்கு சென்றேன். வழக்கமாய் இறங்கும் பேருந்து நிறுத்தத்தில் எனது வகுப்பினை சேர்ந்த பதினேழு பேரில் பத்துக்கும் மேற்பட்டோர் கும்பலாக எனக்காக காத்திருந்தார்கள்.

இறங்கியதும் விஷயம் தெரியாதவனாய் அப்பாவித்தனமாய் முகத்தை வைத்துக் கொண்டு, 'ஆமாம், ஏன் எல்லோரும் இங்கு வந்து நிற்கிறீர்கள்?' எனக்கேட்டேன்.

'ஒன்னுமில்லை அன்பு, ஐ ஏம் வெரி சாரி, தெரியாம உங்கிட்ட சண்டை போட்டுட்டேன், என்னை மன்னித்துக்கொள்' என கார்த்தி தழுதழுக்கும் குரலில் சொன்னான்.

'நான் ஒன்றும் தப்பாக நினைக்கவில்லையே! இப்பொழுதெல்லாம் தலைவலி அடிக்கடி வருகிறது. நேற்று கொஞ்சம் அதிகம், அதனால்தான் கிளம்பிவிட்டேன். சரி, டீ சாப்பிட வந்தீங்களா?' எனக் கேட்டேன். பதிலையும் நானே சொல்லிவிட்டதால் ஆமென்று தலையாட்டினார்கள்.

என்னை எல்லோரும் பார்த்த பார்வையில் இருந்து அவர்களால் கட்டுப்படுத்தியும் முடியாமல் வெளிப்பட்ட பரிதாப உணர்ச்சி எனக்குத் தெளிவாய் தெரிந்தது. ஒருவன் எனது தோளில் கைபோட்டபடி... ஆறுதாலாய் வருகிறானாம். இன்னொருவன் எனது பையினை வாங்கிகொண்டு... பாரம் சுமக்க அனுமதிக்க மாட்டானாம். சீனி மட்டும் அந்த கும்பலில் இல்லை. எங்கே எனக் கேட்டதற்கு இன்றும் வரவில்லை எனச் சொன்னார்கள்.

எனது நண்பர்களிலேயே சீனி ரொம்பவும் வித்தியாசமானவன். நினைத்த நேரம் வருவான், பேசுவான். அவனைப் பற்றி எங்களுக்கெல்லாம் சரிவர புரியாத தருணம். பல சமயங்களில் அவன் பேசுவது மொக்கையாய் இருக்கும் என்பதால் அவனைப் பொருட்படுத்த மாட்டோம்.

தீபா அவளின் அம்மா எனக்கு பிடித்த பால்கோவா செய்து கொடுத்தார்கள் எனக் கொடுத்தாள். ரவி பிடித்த இன்னொமொரு அயிட்டமான ஃபைவ் ஸ்டார் சாக்லேட் வாங்கி வைத்திருந்தான். ஒரு பை நிறைய பழங்களோடு இன்னும் ஒருவன். சரி சாயந்திரம் இந்த விஷயத்தைப் போட்டு உடைக்கும் வரை நான் தான் ராஜா என எண்ணிக்கொண்டு நடிப்பினை தொடர்ந்தேன்.

பதினொரு மணிக்கு வெளியில் அழைத்துச் சென்று ஐஸ்கிரீம் வாங்கித் தந்தார்கள். நான் பேசுவதை அக்கறையாய் கவனித்தார்கள். கொஞ்சம் இருமினாலும் பதறி என்ன என்ன எனக் கேட்டார்கள். ததுபித்தாய் எதைப் பேசினாலும் பதில் சொல்லாமல் கேட்டார்கள்.

எல்லாம் நன்றாகப் போய்க்கொண்டிருக்க மதியம் இரண்டு மணிக்கு சீனி வேர்த்து விறுவிறுத்து வந்தான். நான் ஹோ எனக் கத்தி வரவேற்க, எல்லோரும் சப்தம் எழுப்பினார்கள். எவரையும் கவனியாமல், தவிர்த்து, இறுக்கமான முகத்துடன் வழக்கத்திற்கு மாறாய் கடையில் சென்று அமர்ந்தான். என்னடா ஆச்சு என கார்த்திக் கேட்க, அவனை போடா என விரட்டியவன் என்னை அருகே அழைத்தான்.

'கடவுள் எந்த தப்பும் பண்ணாத நம்ம ரெண்டு பேரையும் தண்டிச்சிட்டாருடா. இன்னிக்கு காலையில மயக்கம் வந்து விழுந்துட்டேன்... ஹாஸ்பிடல் போய் செக்பண்ணி பார்த்த போது சுகர் இருக்குன்னு சொல்லிட்டாங்கடா... இருவத்தொரு வயசிலேயே சுகர் டா' என அழ ஆரம்பித்தான்.

’உன் பிரச்சனைப் பத்திக்கூட கார்த்திக்,நேத்து போன்ல சொன்னான்... மனசு கஷ்டமா இருந்துச்சுடா... உன் நிலமை எனக்கு தெரியுது... ஒரு நோயாளிக்குத்தான் இன்னொரு நோயாளியோட கஷ்டம் என்னன்னு புரிஞ்சுக்க முடியும்... இனி நான் எப்பவும் உன்கூட இருப்பேன்.. நீயும் எனக்கு ஆறுதலா இருடா... இவங்க யாரும் வேணாம்.. நீ மட்டும் கூட இருந்தா போதும்' என சொல்லவும் திருடனுக்கு தேள் கொட்டினார்போல் ஆனேன்.

ஏற்கனவே சீனி மன தைரியம் குறைவானவன். அதிகமாய் எவருடனும் வைத்துக்கொள்ளமாட்டான். இப்போது கூட என்னை நோயாளியாய் நினைத்துத்தான் ஒருவருக்கொருவர் ஆறுதலாய் இருக்கலாம் என சொல்லுகிறான். சீனியை சமாதானப்படுத்தி, 'நான் இருக்கிறேன், கவலைப்படாதே என பலவிதமாய் ஆறுதல் சொன்னேன்.

இதை எப்படி சமாளிப்பது என யோசித்து யோசித்து உண்மையில் ப்ரைன் ட்யூமர் வந்துவிடும் போலிருந்தது. சரி ஆபத்பாந்தவன் திவா இருக்கிறான் அவனிடம் கேட்போம் என முடிவு செய்து கிடைத்த இடைவெளியில் வெளியே வந்து எஸ்.டி.டி பூத்திலிருந்து அழைத்தேன்.

எல்லாம் கேட்டு 'உன் மேட்டரை இன்னிக்கு ஒப்பன் பண்ணாதே, நேரில் வா பேசி முடிவு செய்துகொள்ளலாம் என சொன்னான்.

(நீண்டுகொண்டே செல்கிறது. மற்றவை அடுத்த இடுகையில்)

ஜெராக்ஸ்...

|

கல்லூரியில் சேர்ந்து மூன்று மாதங்கள் முடிந்திருந்தது. ரேகிங் எல்லாம் முடிந்து, படிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்து, ஒவ்வொருவரைப் பற்றியும் ஓரளவிற்கு அறிந்து பருவத் தேர்வுக்காக படித்துக் கொண்டிருந்த தருணம்.

எங்கள் வகுப்பைச் சேர்ந்த குமார் ஓரளவுக்கு வசதியானவன், சுமாராகப் படிப்பான். எங்களுக்கெல்லாம் அவன் தான் பைனான்சியர், அவசர தேவைக்கு கொடுத்து உதவுவான்.

அவனது அன்றாட முக்கிய அலுவல் ஒன்றே இந்த இடுகையின் சாரம்சம். அறையில் படுத்திருக்கும் நேரம் தவிர தோளில் மாட்டிய பையோடு இருப்பான் அவன் செய்யும் அந்த வேலைக்கு உதவியாய்.

அப்படியென்ன அவன் செய்தான் என ஆவல் எழுகிறதல்லவா? அது அவன் எடுக்கும் ஜெராக்ஸ் பற்றி. ஆம், அவனிடம் இருந்த கடைசிவரை விடவே இயலாத பழக்கம். எந்த ஒரு புதிய விஷயத்தை பற்றி எதிலாவது பார்த்தாலும், படித்தாலும், எவரேனும் இருப்பதாய் சொன்னாலும் போதும். உடனே அதன் பிரதி அவனிடத்தில் இருக்கும்.

ஹிந்துவில் ஒரு விஷயம் வந்திருக்குடா மச்சி என சொன்னவுடன் லைப்ரரிக்குப் போய் அதன் பிரதியோடு தான் வருவான். ஜெராக்ஸ் எடுக்க ஆகும் செலவினை மட்டும் கண்டுகொள்ளவே மாட்டான்.

மூன்றாம் வருடத்துக்கு தேவையான ஒரு விஷயம் என எவரேனும் சொன்னாலும் போதும் அதையும் சேகரிப்பில் வைத்துக்கொள்வான். பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை ஊருக்கு செல்லும் போது எல்லாவற்றையும் எடுத்துச் சென்று பாதுகாப்பு கருதி அவனது ஊரில் வைத்துவிட்டு வந்துவிடுவான்.

அறையில் கூட எந்த ஒரு பிரதியையும் வெளியில் வைக்கமாட்டான், காசு பணத்தை வெளியில் வைத்தாலும். அஞ்சல் வழிக் கல்வியில் தரப்படும் புத்தகங்களின் பிரதிகளையும் சேர்த்து,  தமிழ்நாட்டில் உள்ள அத்தனை கல்லூரிகளில் கொடுக்கப்பட்டிருக்கும் நோட்ஸ்களும் அவனிடத்தில் இருக்கும்.

ஜமால், பிஷப், யு.டி.சி என திருச்சியில் உள்ள கல்லூரிகளில் நடத்தப்படும் மேத்ஸ் நோட்டுக்களின் பிரதிகளையும் எடுத்து வைத்திருந்தான். கசங்கிய, குப்பைபோல் உடுத்துகின்ற துணிகளை குவித்து வைத்திருக்கும் அவன்,
ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு பைல் என கோர்வையாய் அழகாய் வைத்திருப்பான்.

நாங்களெல்லாம் எவ்வளவோ முறை கிண்டல், கேலி செய்தபோதும். இளங்கலை படிப்பினை முடிக்கும் வரை இந்த பழக்கத்தினை விடுவதாயில்லை.

இறுதியாண்டில் சிலபஸ் மாறியதால் நெட்வொர்க் -பேப்பருக்கு  இரண்டு யூனிட்டுகளுக்கான டெக்ஸ்ட் புத்த்கம் மிகப் பழமையான பதிப்பு என்பதால்  புத்தகமே கிடைக்கவே இல்லை. பாடம் நடத்துவதற்கு ஆசிரியரும், படிப்பதற்கு நாங்களும் நிறையவே திணறிப் போனோம்.

குமாரிடம் இதற்கு ஏதேனும் வைத்திருக்கிறாயா என நக்கலாய் கேட்க அவனும் முனைந்து தேடி சரியாய் எடுத்துவந்து எங்களின் முகத்திலெல்லாம் ஈயாட வைத்து, நெஞ்சில் பால்வார்த்தான். இனிமேல் ஜெராக்ஸ் எடுப்பதை கேலி பண்ணமாட்டேன் என சத்தியம் வாங்கிக் கொண்ட பிறகுதான் எங்களிடம் பிரதியெடுக்கக் கொடுத்தான். இது பல கல்லூரிகளுக்கும் பயணித்தது தனி கதை.

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இதனை எப்போது பிரதி எடுத்துவைத்தான் என்பது அவனுக்கே தெரியாது எனச் சொன்னதுதான்.
இவன் சேகரித்தது பாடம் சம்மந்தப்பட்டது மட்டுமல்ல, அவன் மனதுக்கு முக்கியம் எனப்படுவது, மற்றவர்களால்  முக்கியம் எனச் சொல்லப்படுவது எல்லாம்.

படித்து முடித்ததும் கடனாய் கொடுத்திருந்த பணத்தினை வாங்கினானோ இல்லையோ, அவன் கொடுத்து வைத்த பிரதிகளை மறவாமல் வாங்கி சென்றான்.

வெகு நாட்களுக்குப் பிறகு கடந்த வருடம் அவனை ஏர்போர்ட்டில் சந்தித்தேன். அப்போது ஒல்லியாய் இருந்ததற்கு நேர்மாறாய் இன்று இருந்தான். குடும்பத்தோடு லண்டன் செல்லுவதாக சொன்னான். டிபிஏ-வாக இருப்பதாக சொல்லி என்னைப் பற்றியும் விசாரித்தான். மனைவியும் குழந்தைகளும் ஏதோ வாங்கப் போயிருப்பதாக சொன்னான்.

'மச்சான் இன்னமும் ஜெராக்ஸ் எடுத்துகிட்டுதான் இருக்கியா எனக் கேட்டேன்'.

வெடிச் சிரிப்பாய் அதிரச் சிரித்தவவன், 'டேய், இன்னும் அதை நீ மறக்கலையா?, எனக்கே மறந்துடுச்சி... எம்.எஸ்.சி முடிச்சிட்டு வீட்டுல வேலை இல்லாம இருந்தேன். ஒருநாள்  சும்மாவே உக்காந்திருக்கேன்னு அப்பா சொல்ல, பெரிய தகராறு. படிச்சி என்னத்த கிழிச்சே என அவர் கேட்க, என்னோட ரூமில் பாதி இடத்தை அடைச்சிகிட்டிருந்த என்னோட கலக்சன காமிச்சென். கம்முனு போயிட்டாரு. ஆன அதுக்கு நான் பண்ணின செலவ நினைச்சிப் பார்த்தேன், மயக்கமே வந்துடுச்சி. அப்புறம் எல்லாத்தையும் எடைக்குப் போட்டுட்டேன்' எனச் சொல்லி,பக்கத்தில் வந்த அவனது மனைவி, குழந்தைகளை அறிமுகப் படுத்தி வைத்துவிட்டு, 

'அதான் ஜெராக்ஸா ரெண்டு பசங்களைப் பெத்திருக்கேனே' எனச் சொன்னான்.

ஆம், அப்படியே அவனை உரித்து வைத்தார்போல் இருந்தார்கள் அவனது மூத்த மகனும், இளைய மகனும்... கொஞ்சமும் அம்மாவின் சாயல் இல்லாமல்.

வசந்தப்புயல்...அத்தியாயம் மூன்று...

|

இரண்டாவது அத்தியாயத்தை படிக்கவில்லையெனில் இங்கு படித்து தொடருங்களேன்..

வானதி

சென்னை, கோவை என நல்ல கல்லூரிகளில் இடம் கிடைத்தபோதும் அருகில் இருக்கிறது, வாரம் ஒருமுறையாவது என்னை பார்க்கவேண்டும் என்பற்காகவும் இந்த பொட்டல் காட்டில் இருக்கும் கல்லூரியில் சேர்த்துவிட்டார்கள்.

படித்ததெல்லாம் ஆங்கில வழியாய் என்பதால் சரளமாய் பேசுவேன். இங்கு கொஞ்சம் ஆங்கிலத்தில் பேசினாலே போதும், பீட்டர் விடுகிறாள் என எல்லோரும் கிண்டல். ஆசிரியர்களிடம் சந்தேகம் கேட்டாலே இறைஞ்சுகின்ற பார்வையில் தவிர்க்க முற்படுகிறார்கள், அல்லது அதிகமாய் மதிப்பெண்கள், தனிச் சலுகைகள் எனும் விதத்தில் கேள்வியே கேட்காவண்ணம் கட்டிப் போட்டுவிடுகிறார்கள்.

இவ்வாறெல்லாம் மனதளவில் காயப்பட்டிருந்த எனக்கு, செழியன் சாரின் வருகை பெரிய மாற்றத்தின் அறிகுறியாகவே தெரிந்தது. ஒருநாள் பாடம் எடுத்ததை வைத்து என்னடா இப்படிச் சொல்லுகிறேன் எனப் பார்க்கிறீர்களா? ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமல்லவா?

அப்புறம் ஆசிரியர்களிடம் எனக்கு பிடிக்காத இன்னுமொரு விஷயம், பாடம் நடத்துபோது எல்லோரையும் பார்த்து பேசுவது கிடையாது. ஒரு இயந்திரத்தன்மை இருக்கும். சுருங்கச் சொன்னால் கடமைக்கு பாடம் நடத்துவதாய் இருக்கும். புத்தகத்தைப் படித்து அப்படியே ஒப்பிப்பார்கள், அல்லது அப்படியே பார்த்து படிக்கவும் செய்வார்கள். புத்தகத்திலிருந்து வரி பிசகாமல் அப்படியே சொல்லி கட்டாயப்படுத்தி குறிப்பெடுக்கவும் செய்வார்கள்.

ஆனால் செழியன் சார் முதல் வகுப்பிற்கு எந்த ஒரு குறிப்பையும் பார்த்து நடத்தவில்லை, பதிலாய் ஒரு காகிதத்தில் அழகாய் குறித்தெடுத்து வந்திருந்தார், அதனையும் கடைசியில் குறிப்பெடுத்துக்கொள்ளக் கொடுத்துவிட்டார். கண்ணனிடம் வாங்கி உடனே எழுதிக்கொண்டு விட்டேன்.

அதிலுல்ல குறிப்புகள் முற்றிலும் புதிதாய், புரியும்படி எளிதாய், எந்த ஒரு புத்தகத்திலும் இல்லாமல் அவரின் கைவண்ணமாய் இருந்தது. கண்டிப்பாய் பல புத்தகங்களைப் படித்து குறிப்பெடுத்துக்கொண்டு வந்திருக்கிறார்.

எனது சந்தோஷங்களை அறைத்தோழிகளிடம் பகிர்ந்துகொண்டபோது என்னை ஒரு மாதிரியாய்ப் பார்த்தார்கள். அதற்கான காரணம் என்ன என்பது எனக்குத் தெளிவாகத் தெரியும். முதலாவது, நான் எந்த ஒரு ஆசிரியரையும் அவர்களிடத்தில் உயர்த்திப்பேசியது கிடையாது. அடுத்து இவ்வளவு உற்சாகமாய் பாட சம்மந்தமாய் பேசியது கிடையாது. மொத்தத்தில் இன்றுதான் படிக்க வந்ததன் அர்த்தம் விளங்குவதாய் இருந்ததது.

தனித்தனியான விடுதி என்றாலும் சாப்பிடுவதற்கு ஒரே இடத்தில்தான். ஒரு பெரிய ஹாலில் மாணவிகள், மாணவர்கள் என எல்லோரும் தனித்தனியே அமர்ந்து சாப்பிடுவோம். கண்டிப்பாய் இருப்பார்கள் என்பதால் அதிகம் பேசிக்கொள்ள மாட்டோம்.

ஆசிரியர்களுக்கு தனியான வட்ட வடிவில் மேஜையிட்டிருக்கும். விடுதியில் தங்கியிருந்த ஆசிரியர்கள், ஆசிரியைகள் அங்கு அமர்ந்து சாப்பிடுவார்கள். செழியன் சார் வெள்ளை வேட்டியும், டி ஷர்ட்டும் அணிந்து அமர்ந்திருந்தார். மற்ற ஆசிரியர்களிடம் மெதுவான தயக்கத்துடன் அளவாய் சிரித்துப்பேசி சாப்பிட்டுக்கொண்டிருந்தார்.

வழக்கமாய் அன்றைய தினத்தில் தரும் தோசையும் குருமாவும்தான், ஆனாலும் ரொம்பவும் சுவையாக இருப்பதாய்ப் பட்டது. ஆம், மனம் மகிழ்வாயிருந்தால் நாம் சந்திக்கும், செயல்படுத்தும் எல்லாம் இனிதாகவே இருக்கும் போலிருக்கிறது.

இரவு படுக்கச் செல்லும் போது எல்லா நாட்களும் இன்று போலவே இனிமையாய் அமையவேண்டும் என வேண்டிக்கொண்டேன். கனவில் கூட செழியன் சார் வகுப்பெடுப்பது போலும், கேள்விகள் கேட்பது போலவும் தான் வந்தது. என் எண்ணம் எல்லாம் வெறும் கனவாகப்போகிறது என அப்போது எனக்கு தெரிந்திருக்கவில்லை

பஸ்சும் பதிலும்...

|

என் ஆசான் எனக்கு விட்ட பஸ்...

அன்பு நண்பா,
அரசியல் வாதிகளின் வெத்து வாக்குறுதியை இடுகையிலும் கவிதையிலும் நீ கிழித்தபோது படித்து ரசித்த கோடானு கோடி கேடியில் ஒருவன் நான். நாக்கு மாறினாலும் வாக்கு மாறாதவர் நீர் என நம்பினேன். உங்கள் ஊருக்கு வர இரண்டு வாரத்துக்கு முன்பு ‘ஆத்து நிறைய தண்ணி, அது நிறைய மீனு! புடிக்கப்போறேன்னு’ சொன்னப்ப கூட வெள்ளந்தியா மீன்புடிக்க தெரியுமான்னு கேட்டு ஃபோட்டோ புடிக்கப் போறேன்னு சொன்னப்ப பல்பு வாங்கின பக்கிப்பயதான். ஆத்தப்பாத்து நாளாச்சேன்னு ஆசையா வந்தப்ப ஊத்தைக்கூட காட்டாட்டியும் பரவால்ல. குருவிய பார்த்த சந்தோஷத்தோட ஊரு திரும்பலாம்னு இருந்தப்ப அருவியக் காட்டுறேன்னு அள்ளி விட்டீங்க. நம்ம்ம்ம்ம்ம்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பினோம். பாதி வழியில ஆம்னி பஸ் இல்லையாம்யா! அருவிபாட்டுக்கு அங்க இருக்கட்டும் நாம உருவிக்கிட்டு ஓடுறதப் பாக்காலாம்னீங்க. ‘ஏஏஏன்’னு ஒரு வார்த்தை கேட்டிருப்பேன்?
அட இதெல்லாம் உங்கள மீறின விஷயம் ஒத்துக்கிர்ரேன். வந்ததுல இருந்து வாராவாரம் ஃபோன் பண்ணி, இண்ணைக்கு வாரேன், அண்ணைக்கு வாரேன்னு வாக்குறுதி குடுக்குறீங்களே. எப்பங் சார் வரப்போறீங்க. வரப்ப அந்த 1 டி.பி. ஹார்ட் டிஸ்குண்ணாச்சும் வாக்கு தவறாம கொண்டு வருவீங்களா சார்

எனது பதில்...

ஆருயிர் ஆசான்,

உங்களின் ரசனைக்கு என் கேடி வணக்கம். நம்பிக்கையே வாழ்க்கை, வாழ்க்கை வாழ்வதற்கே எனும் கொள்கையில் ஊறித் திளைத்துள்ள எனக்கு உங்களின் பஸ் சிறு வியப்பளித்தது. உங்களின் அதீத சந்தேகங்களுக்கு விளக்கம் தரவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறேன்.

மீன் பிடிக்கப் போகிறேன் எனச் சொன்னது ஏரியில், ஆற்றிலல்ல. ஆறு வற்றியபின் தான் ஏரி வற்றும் என்பது உலக நியதி. எல்லாம் அறிந்த தங்களுக்கு இது விளங்காததன் மர்மம் எனக்கு மர்மமாயிருக்கிறது.

உங்களுக்கு மட்டுமல்ல, குருவிக்கும் ரொம்பவும் சந்தோஷம் போலிருக்கிறது, இன்னமும் கண்ணாடி வழியே எட்டிப்பார்த்து ஆசான் உங்களைத் தேடுகிறது, தலையை ஆட்டி ஏதோ சொல்லுகிறது. ஒருவேளை உங்களைப்பற்றிய விசாரிப்பாயும் இருக்கலாம்.

அருவிக்கு வருவோம், அதான் போகவே இல்லை என்கிறீரா? அருவி விஷயத்துக்கு என சொல்ல வந்தேன். அருவிக்கு கிளம்ப எத்தனிக்கும் தருணத்தில்தன் இந்த சிறிய இதயம் தாங்காத அளவிற்கு ஒரு பெரிய விஷயமாய் வந்தது, இரவு செல்லும் அல்ட்ரா டீலக்ஸ் பஸ் பராமரிப்புக்கு செல்கிறது, டிக்கெட் இல்லையென.

ட்ரெயினே உங்களுக்காகா இருந்தபோதும், பேருந்தில், அதுவும் அல்ட்ராவில் அழைத்துப்போகிறேன் என அல்டாப்பாய் சொல்லிவிட்டேன் அல்லவா? அருவியை விட ஆசான், கொடுத்த வாக்குறுதி (அருவியும் வாக்குறுதிதானே என இடை மறுத்துக் கேட்ப்பீர்கள் எனத் தெரியும். ஆனாலும் ஆசானின் உடல் நலத்தோது சம்மந்தப்பட்ட அல்ட்ராவே பிரதானம்) ஆகியபவற்றைக் கருதி முன்னதாய் கிளம்பினோம்.

உளுந்தூர்  பேட்டை வரை சாதாரணப் பேருந்தில் கடைசி சீட்டில் முதுகெலும்பை சுளுக்கெடுக்க வைக்கும் அளவிற்கு சிரமத்தோடு கூட்டிச் சென்றாலும் அதன் பின் குளிரில் நடுங்கி, தும்மலோடு காய்ச்சல் வருமளவிற்கு ஏசி பஸ்ஸில் கூட்டிச் சென்றதை மறந்துவிட்டேரே?

உங்களைப் பார்க்க வரவேண்டும் என்று ஒவ்வொரு நொடியும் தவிப்பில் இருக்கின்ற காரணத்தால் தோன்றும் தருணங்களிளெல்லாம் ஆர்வக் கோளாரில் வருகிறேன் எனச் சொல்லிவிடுகிறேன். இதில் புதைந்துள்ள என் அன்பை ஆராயாமல் இப்படி அப்பட்டமாய் அரசியல் வாதியாக்கிவிட்டீரே என எண்ணும்போது மனம் பதைக்கிறது, சிந்தை நடுங்குகிறது. இப்போது சொல்கிறேன் ஆசான் கண்டிப்பாய் நாளை வருகிறேன். இதைப் படித்து பார்க்கும்போதெல்லாம் எந்த அளவிற்கு வாக்குத் தவறாத உத்தமன் நான் என உங்களுக்கு விளங்கும். வரும்போது 1  டி.பி யோடு 350 ஜி.பி  யும் கொண்டுவருகிறேன் கூடுதலாய்.

அப்புறம் அடுத்தமுறை எலி பிடிப்பது, ஓனான் அடிப்பது, மணல் வீடு கட்டுவது எவ்வாறு என சொல்லியும் செய்தும் காட்ட ஏற்பாடு செய்கிறேன். இன்னும் பற்பல விஷயங்களை சொல்லாமல் செய்தும்  அசத்திக்காட்டுகிறேன்.

இப்படிக்கு,

என்றும் அன்புடன் உங்களால் சிஷ்யன்,
பிரவு என உங்களால் அன்போடும் அழைக்கப்படும்,

பிரபாகர்.

வசந்தப்புயல்...அத்தியாயம் இரண்டு

|


முதல் அத்தியாயத்தை படிக்கவில்லையெனில் இங்கு படித்து தொடருங்களேன்..

கண்ணன்

'எப்படி சார்' என எல்லோரிடமும் சேர்ந்து பிரமித்துக் கேட்டேன்.

'உங்களின் எல்லோரின் பெயரையும் கேட்டு மனனம் செய்துகொண்டேன், வருகைப் பதிவேட்டில் பார்த்து இல்லாத பெயர்களின் வரிசை எண்களை குறித்துக்கொண்டேன் கண்ணன், திருப்பெரும்புதூர்' என என் பெயர் மற்றும் ஊர்ப்பெயரை சொன்னார்.

உண்மையில் எங்களுக்கெல்லாம் இது ஓர் புது அனுபவம். இவ்வளவு ஞாபக சக்தியா என வியந்தோம்.

’என் பெயர் சொல்லுங்கள், என் ஊர் சொல்லுங்கள்’ என ஒவ்வொருவராய் கேட்கக் கேட்க தெளிவாய் பதில் சொல்லி அசத்தினார்.

அடுத்த நாற்பது நிமிடங்களுக்கு அவர் பாடத்தினை எடுத்தவிதம்... சொல்லவே வார்த்தைகள் இல்லை, மெய் மறந்து அமர்ந்திருந்தோம். நெட்வொர்க் பேப்பரை மிகவும் கடினமென்று நினைத்துக்கொண்டிருந்த நாங்கள் 'ஆஹா இனிமேல் கவலையில்லை' என ஒரு மனதாய் நினைக்கும் வண்ணம் இருந்தது.

நடத்த நடத்த ஆர்வமாய் குறிப்பெடுத்துக்கொண்டோம். கடைசியாய் அவராய் தயாரித்து வைத்திருந்த அன்றைய பாடத்துக்கான குறிப்புக்களை என்னிடம் கொடுத்து எழுதிக்கொண்டு எல்லோருக்கும் கொடுக்கச் சொன்னார்.

ஏதேனும் சந்தேகங்கள் இருக்கிறதா எனக் கேட்டார். வானதி கையை உயர்த்தி சந்தேகம் கேட்க, நல்ல கேள்வி எனப் பாராட்டி அழகாய் பொறுமையாய் எங்களுக்கும் புரியும்படி தெளிவாய் விளக்கினார். எனக்கும் நிறைய கேட்கவேண்டும், பேசவேண்டும் என எழுந்த ஆர்வத்தை அடுத்த வகுப்புக்கு தள்ளிப்போட்டேன்.

கடைசி ஐந்து நிமிடம் எல்லோரும் சிரிக்கும் வண்ணம் ஒரு நகைச்சுவை கலந்த ஒரு சிறுகதையை சொல்லி வகுப்பை நிறைவு செய்தார். பாடத்தில் எந்த சந்தேகம் என்றாலும் உடன் கேட்கச் சொன்னார். ஆங்கிலத்தில் நன்றாகப் பேசத் தெரியவில்லையே என மனம் வருந்தாமல் நிறைய பேசிப் பழகச் சொன்னார்.

உண்மையில் எங்களுக்கெல்லாம் தலைகால் புரியவில்லை. எங்களின் கண்களுக்கு அவர் வாழும் தெய்வமாக தெரிந்தார். படிக்க வந்ததின் அர்த்தமே அன்றுதான் புரிந்தார்போல் இருந்தது.

எப்போது வகுப்பு முடியும் என மற்றவர்கள் நடத்தும் போது வேண்டி காத்திருக்கும் எங்களுக்கெல்லாம், இவ்வளவு விரைவாய் முடிந்துவிட்டதே என வருந்தும் வண்ணம் இருந்தது.

போர்டினை முன்பிருந்ததைவிட சுத்தமாய் இலாவகமாய் அழித்து சன்னல் புறம் சென்று அழிப்பானைத் தட்டி அதற்கான இடத்தில் வைத்துவிட்டு மணி ஒலித்ததும் மின்னலாய் சிரித்து விடைபெற்று செல்ல மனம் முழுதும் நிறைவாய் உணர்ந்தோம்.

(தொடரும்)

அன்பிற்கும் உண்டோ...

|

என் ஆசானிடம் திட்டு வாங்கவேண்டுமென்றால் இந்த இடுகைக்கு 'ட்ரெயினில் பல்பு வாங்கிய கதை' என்று வைக்கலாம். நல்ல மாடு என்பதால்... சரி விஷயத்திற்கு வரலாம்.

ஏழு வருடங்களுக்கு முன் டெல்லியிலிருந்து விடுமுறையில் சென்னை நோக்கி நானும் எனது மனைவியும் தமிழ்நாடு எக்ஸ்பிரஸில் வந்து கொண்டிருந்தோம்.

அம்மணியோடு பேசிக்கொண்டு கடலையை கொறித்தபடி, போட்டுக்கொண்டு... ஆம், பக்கத்தில் இருந்த ஒரு அழகான பெண்ணைப் பற்றி கிண்டலடித்தவாறு இனிமையாய் நேரத்தைக் கழித்துக் கொண்டிருந்தோம்.

அந்த பெண் சிறு வயது கிரண் போலவும், ரொம்பவும் துறுதுறுவென இருந்தாள். கோலி குண்டுகளை வைத்து எல்லோருமாய் சேர்ந்து விளையாடிக்கொண்டிருந்தார்கள்.

வட்ட வடிவிலான ஒரு ப்ளாஸ்டிக் தகட்டில் கோலி குண்டுகளை வைப்பதற்கான குழிகள். நடுவில் தவிர எல்லாம் நிரப்பி ஒவ்வொன்றாய் தாண்டி எடுத்துக் கொள்ள, கடைசியாய் ஒன்று மட்டும் இருந்தால் வெற்றி பெற்றதாய் அர்த்தம். எவ்வளவு மோசமாய் விளையாடினாலும் நான்குதான் மீதம் இருக்கும்.

'ரொம்பவும் வழியாதீங்க, உங்களை அந்த பொண்ணு கண்டிப்பா பையான்னு சீக்கிரத்தில் கூப்பிடும் பாருங்க' என அம்மணி சாபம் விட்டார்கள்.

இதை பல முறை விளையாடியிருக்கிறேன், சாதாரணமாய் ஜெயித்திருக்கிறேன், அதற்கென ஒரு முறையை கண்டுபிடித்து வைத்திருப்பதால்.

அந்த பெண் மற்றும் அவர்கள் குடும்பத்தில் எவராலும் சரியாய் ஒன்று வரும்படியாய் விளையாடத் தெரியவில்லை. ஒவ்வொரு முறை தோற்கும்போது பெருத்த கூச்சல், ஆரவாரம் என எங்களின் பெட்டியே குதூகலமாய் இருந்தது.

அவர்கள் விளையாடுவதையே பார்த்துக்கொண்டிருக்க, அந்த பெண் என்னைப் பார்த்து 'பையா நீங்கள் விளையாடுகிறீர்களா?' எனக் கேட்க, என் மனைவி முகத்தில் ஆயிரம் வாட் பல்ப். 'தங்கச்சி கூப்பிடுதில்ல போங்க' என நக்கலாய் சொல்ல, களத்தில் புகுந்தேன்.

நான் விளையாட்டினை முதன் முதலாய் விளையாடும்போது கூட நான்கு மிச்சம் இருந்ததில்லை, என் நேரம் அன்று நான்கு மிச்சம் இருந்தது. கேலிச் சிரிப்புக்களூம், ஆரவாரங்களும் நான் பல்ப் வாங்கியதைப் பறைச்சாற்ற வெட்கப்பட்டு வழிந்த வண்ணம் அங்கிருந்து நகர்ந்தேன்.

என் மனைவியின் முகத்தைப் பார்க்க கூச்சமாய் இருந்தது. 'நான் முயற்சி செய்து பார்க்கட்டுமா?' என அழகான இந்தியில் கேட்டது அம்மணிதான். இதற்கு முன் விளையாண்டே பார்த்ததில்லை, நான் விளையாடும்போது மட்டும் அம்மணி பார்த்துக்கொண்டுதான் இருப்பார்கள்.

'யெஸ் பாபி, ஆப் ட்ரை கரோ' என கையைப் பிடித்து அந்த பெண் அழைத்துச் சென்றாள்.

சட் சட்டென ஒவ்வொன்றாய் தாண்டி வெகு சுளுவாய் எடுக்க, மிச்சம் ஒன்றே ஒன்று. எல்லோரும் கைத்தட்ட என் முகத்தில் ஏகமாய் பெருமிதம்.

'பாபி இதற்குமுன் நிறைய ப்ராக்டீஸ் செய்திருக்கிறீர்கள் தானே என அந்தப் பெண் கேட்க,

'இல்லை இல்லை. எனது வீட்டுக்காரர் விளையாடும்போது பார்த்துக் கொண்டிருப்பேன், அவர் சூப்பராய் விளையாடுவார், இன்று என்னவோ தெரியவில்லை முதல் முறையாய் தோற்றிருக்கிறார் எனச் சொல்லி என்னைப் பார்த்து அம்மணி சிரித்தார்கள்.

கொஞ்சம் கழித்து 'எப்படி அபி சாத்தியம்' என ஆச்சர்யமாய் கேட்டேன். நீங்கள் தோற்றபோது எல்லோரும் சிரித்தது ஒரு மாதிரியாய் இருந்தது. ஜெயித்தே ஆகவேண்டும் என விளையாண்டேன், அவ்வளவுதான் என என் அம்மணி கூலாக சொன்னார்கள்.

அன்று நான் தோற்றாலும் என் அம்மணியிம் அன்பையும் திறமையையும் புரிந்துகொள்ள ஒரு வாய்ப்பாக அமைந்தது...

வேலுவும் சினிமாவும்...

|

சில நேரங்களில் பழயனவற்றை நினைவு கூறும்பொழுது 'அடடா இந்த விஷயத்தைப் பற்றி இன்னுமா எழுதாமல் இருக்கிறோம் எனத் தோன்றும்'. அது மாதிரியான ஒரு சம்பவம்தான் இந்த இடுகையில்.

ஏற்கனவே ஒருமுறை இடுகையில் குறிப்பிட்டிருக்கிறேன், ஆசிரியர் எதிர்காலத்தில் என்னவாய் ஆகப் போகிறீர்கள் எனக் கேட்டதற்கு எனது நண்பன் வேலு 'டைரக்டராகி சினிமா எடுக்கனும்' எனச் சொல்லி வான்கிக் கட்டிக்கொண்டான் என. அவனைப் பற்றியும், அவனது சினிமா தாகத்தையும் பற்றிய பகிர்வுதான் இது.

பத்து முடித்து பதினொன்று கெங்கவல்லியில் படித்துக்கொண்டிருந்த சமயம். என் வீட்டில் எனது பெற்றோர் எதற்காகவும் என்னைக் கட்டாயப் படுத்துவதில்லை, ஆனால் வேலுவின் கதை வேறு. அவனது அப்பா ரொம்பவும் கண்டிப்பானவர். சரியான நேரத்தில் எழுந்திருப்பதிலிருந்து இரவு தூங்குவது வரை அவனது எல்லாம் அவரின் கட்டுப்பாட்டில்தான் இருந்தது. கதைப்புத்தகம் படிப்பது, விளையாடுவது, சினிமா பார்ப்பது என எல்லாவற்றுக்குமே தடா.

ஒருமுறை சேலத்தில் ஹாஸ்டலில் படித்துக்கொண்டிருக்கும் தம்பியிடம் பணம் கொடுத்துவிட்டு வரச் சொல்லி அவனது அப்பா அனுப்பி வைத்தார். வெள்ளியன்று மாலை சென்றவன் ஞாயிறன்று காலை வீட்டுக்குப் போகும்போது இருந்தான். வழக்கமாய் பேசிக்கொண்ருந்தோம். பக்கத்தில் அவனது மாமா வீடு இருக்கிறது, ஒருவேளை அங்கு சென்று வந்திருப்பானோ என எண்ணியவாறு, சேலத்தில் ஒரு நாள் முழுக்க என்ன செய்தாய் எனக் கேட்டேன்.

பளிச்சென சினிமா பார்த்தேன் எனச் சொன்னான். எத்தனை என்றதற்கு இரண்டு எனச் சொன்னான். என்ன படம் எனக் கேட்டுவிட்டு சரி, அதன் பிறகு என்ன செய்தான் எனக்கேட்டேன். சரி என் அப்பாவிடம் சொல்லிவிடாதே, மூன்று படங்கள் பார்த்தேன் என்றான். கிர்ரென்று வந்தது.

அடுத்த நாள் பள்ளி உணவு இடைவேளியில் நண்பர்களிடம் கொளுத்திப்போட, வேலு என்னை உஷ்ணமாய் பார்த்தான்.

'எப்படிடா வேலு, உங்க அப்பா செலவுக்கு அதிகமா காசு கொடுத்திருக்க மாட்டாரே, எப்படி மூனு படத்தைப் பார்த்தே' என ரவி கேட்டதற்கு, எல்லாம் கடைசி வகுப்பில் (2.80 டிக்கெட் என ஞாபகம்) பார்த்ததாய் சொன்னான். தனியே இருக்கும்போது என்னை கடிந்தவன், 'ஓட்ட வாயா, ஒரு விஷயத்தையும் மனசுல வெச்சிக்கத் தெரியாதா?, உண்மையில் நாலு படத்தைப் பார்த்தேன், இதையும் போய் சொல்லு' என்றான்.

அதையும் எல்லோரிடமும் சொல்லிவிட பலமாய் கலாய்த்தோம். இதெல்லாம் நடந்து நாட்களாகி, நான் இளங்கலை முடித்திருக்க, நன்கு படித்த அவன் பி.எஸ்.ஜி-யில் மெக்கானிக்கல் படித்துக்கொண்டிருந்தான், அவனைப் பார்க்க அவனது அறைக்குச் சென்றிருந்தேன்.

மெஸ்ஸில் நல்ல சாப்பாடு. தெம்பாய் சாப்பிட்டுவிட்டு வந்து பழங்கதைகளைப் பேசிக்கொண்டிருந்த சமயம் அன்று நடந்த சினிமா சம்பவத்தைப் பற்றி பேச ஆரம்பித்தோம். எப்படிடா நாலு படத்தை தொடர்ச்சியாய் பார்த்தாய் எனக் கேட்டதற்கு, 'அன்று பொய் சொன்னேன். உண்மையில் பார்த்தது ஐந்து சினிமா' என்றான். நிஜமாய் மயக்கம் வந்தது.

ஆம், வெள்ளி இரவு சேலத்தை அடைந்தவன் நள்ளிரவுக்காட்சியைப் பார்த்து, பின் அடுத்த நாள் காலைக் காட்சி, மேட்னி, முதல் காட்ச்சி, இரண்டாம் காட்சி என எனப் பார்த்துவிட்டு கடைசிப் பேருந்தில் வீட்டுக்கு வந்திருக்கிறான்.

படித்து முடித்து நிறைய வேலை வாய்ப்புகள் தேடி வந்தும் விடாப் பிடியாய் மறுத்து சினிமாதான் வாழ்க்கை என்று வாழ்ந்து வருகிறான். பல படங்களில் உதவி இயக்குனராகவும், சில தொலைக்காட்சி தொடர்களை இயக்கியும் இருக்கிறான்.

தற்சமயம் ஒரு படத்தினை இயக்கும் வாய்ப்பு கைகூடும்போல் இருக்கிறது. அதில் வெற்றி பெற்று எனது ஆருயிர் நண்பன் வேலுவின் கனவு நிறைவேற இந்த இடுகையின் மூலம் எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

டிக்கெட்...

|

இரு ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம் இது. ஆத்தூரில் இருந்து தெடாவூருக்கு செல்ல பேருந்தினுள் ஏறினேன். என்னுடன் கல்லூரியில் படித்த நண்பர் அழகுவேல் பேருந்தின் கடைசி இருக்கையில் அமர்ந்திருக்க, பக்கத்தில் அமர்ந்து மெதுவாய் பேச ஆரம்பித்தேன். உதவி கண்டக்டர் சிறுவன் 'கெங்கவல்லி, தெடாவூர், வீரகனூர் எல்லாம் வண்டி கிளம்பும்போது ஏறுங்க' எனச் சொல்ல, எழுந்து கீழே போக எத்தனித்தேன்.

'இருங்க பிரபாகர், ஒன்னும் பிரச்சினை இல்லை' எனச் சொன்னார். என்ன ஒன்றாய் படித்தவரை இவ்வளவு மரியாதையாய் சொல்லுகிறேன் எனப் பார்க்கிறீர்களா? என்னை விட மூத்தவர், அவரின் தம்பிதான் எனது பள்ளித்தோழன். கல்லூரியில் தாமதமாய் சேர்ந்தார்.

எங்கள் ஊருக்கு ஆறு ரூபாய் டிக்கெட். காசினை எடுத்து கையில் வைத்துக் கொண்டு வீரகனூரை அடுத்த உடும்பியம் டிக்கெட் இரண்டாய் எடுத்து விடலாம் என அவரிடம் சொன்னதற்கு, 'தெடாவூருக்கே வாங்குவோம், ஏன் கவலைப்படுகிறீர்கள்' எனச் சொன்னார். 'இல்லை... ஏற வேண்டாம்னு' மெதுவாய் இழுத்தேன்.

'அதெல்லாம் நான் பார்த்துகொள்கிறேன்' எனச் சொன்னார். 'எதற்கு பிரச்சினை' என நான் இழுக்க, 'ஒன்னும் கவலைப் படாதீங்க' எனச் மறுத்துச் சொல்லவும் காசினை அவரிடமே கொடுத்து டிக்கெட் எடுக்கச் சொன்னேன்.

வெயில், வெளியில் நிற்கவோ உள்ளே உட்காரவோ இயலாத அளவிற்கு கடுமையாய் இருந்தது. வண்டி கிளம்பும் நேரம் ஆனதும், இன்னும் பலர் ஏறிக்கொள்ள ஒரு வழியாய் வண்டி கிளம்பியது.

கண்டக்டர் முன்னால் இருந்தார், இளம் வயது. கொஞ்சம் செவிமடுத்துக் கேட்டதில் அவர் பேசுவது கொஞ்சம் மிகையாவும், மரியாதைக்குறைவாயும் இருந்தது. 'வாய்யா, போய்யா என வசைவுகளாலும் ஒரு சில தடித்த வார்த்தைகளாலும் பேசி, உள்ளே எல்லோரையும் அடைத்துக் கொண்டிருந்தார்.

எனது கோபம் எல்லையை மீற ஆரம்பித்த அந்த நேரத்தில் ஒரு பெரியவரைப் பார்த்து, 'என்னய்யா மயிரு, உனக்கு தனியா சொல்லனுமா, உள்ள போய்த் தொலை' எனச் சொல்லவும் வெகுண்டு எழுந்தேன்.

'யூ ப்ளடி ராஸ்கல்' என ஆரம்பித்து 'என்னய்யா பேச்சு பேசுற, கொஞ்சமாச்சும் மரியாதை தெரியுதா உனக்கு? இப்படியா பேசுவே?' என இறைந்து கேட்க ஆரம்பித்தேன்.

'நீ என்ன பெரிய புடுங்கியா? அறிவுரை சொல்ல வந்துட்ட, மூடிக்கிட்டு உக்காரு' என என்னை சொன்னதும், அந்த பெரியவருக்கு வந்ததே கோபம்!... பொளிச்சென கண்டக்டரின் கன்னத்தில் ஒரு அறை விட்டார். அவரை திரும்ப அடிக்க எத்தனிக்க பக்கத்தில் இருந்தவர்களும் கண்டக்டரை சட் சட்டென அடிக்க ஆரம்பிக்க ஒரே களேபரமானது.

சமாதானமாவதற்கும் ,வண்டி கிளம்புவதற்கும் நிறைய நேரம் ஆனது. அதற்குள் பஸ்ஸின் ஓனர் வந்து சமாதானப் படுத்தி வண்டியை எடுக்கச் சொல்லிவிட்டு சென்றார்.  கண்டக்டர் பின்னால் வரவே இல்லை. உ.க. சிறுவன் டிக்கெட் கேட்டபோது 'தெடாவூர் இரண்டு' என சப்தமாய் சொல்லி டிக்கெட் கேட்டேன்.

இது நடந்து ஆறு மாதம் கழித்து எனது நண்பன் மணியுடன் கூகையூர் கோவிலுக்கு செல்லும்போது ஒரு கடையில் நிற்பாட்டி பூஜைக்கான பொருள்களை வாங்கும் போதுதான் கவனித்தேன், அருகிலிருந்த பெஞ்சில் அமர்ந்திருந்தது அந்த கண்டக்டர், சிகரெட் குடித்தபடி லுங்கியுடன். அந்த ஊரைச் சேர்ந்தவர் போலிருக்கிறது.

என்னை முறைத்துப்பார்க்கவும் கொஞ்சம் உதறலாயிருந்தது. ஆனாலும் மணி இருக்கிறான் எண்ணும் தைரியம். கோவிலில் நிஜமாய் அடிவாங்காமல் ஊருக்குப் போகவேண்டும் என்றுதான் வேண்டிக்கொண்டேன், முதலைக்கு தண்ணீரில் தானே பலம்?... வேண்டுதலாலோ அல்லது எனது நல்ல நேரத்தாலோ எதுவும் நிகழவில்லை.

ஜாக்கி அண்ணனுக்கு ஒரு மடல்...

|

எவ்வளவு நாள் பழகியிருக்கிறோம் என்பதில் நட்பல்ல, எப்படி பழகியிருக்கிறோம் என்பதில்தான்... இதற்கு ஒரு நல்ல உதாரணம் என் அன்பு அண்ணன், பங்காளி நீங்கள்தான்...

சிலரிடம் மரியாதையை எதிர்பார்க்க முடியாது, அண்ணா உங்களிடம் எதிர்ப்பார்க்கவே முடியாது, பதிலாய் ஏகமாய் பாசத்தினை, உண்மையான் நட்பினை. ஆம், உங்களுக்கு குழந்தை மனசு அண்ணா, அதனால்தான் மனதில் உள்ளதைப் பட்டென பேசுகிறீர்கள்.

முதல் நாள் சந்தித்த நாம் இருவரும் மனம் விட்டு நிறைய பேசினோம், உணவகத்தில் மதிய உணவு உண்டவாறு. எவ்வளவு எதார்த்தமாய் பேசினீர்கள், அதில் நான் உங்கள்பால் ஈர்க்கப்பட்டு 'அண்ணன் ஒருத்தன் நமக்கு இருக்காண்டா' (பார்த்தீர்களா, உங்களைப்பற்றி எழுதும்போதே எனக்கும் வார்த்தைகள் தடுமாறுகின்றன)எனத் தோன்றியது.

அண்ணா, கதிர் என்னிடம் சிரித்தபடி விளையாட்டாய் கேட்டார் 'பிரபா, என்ன அண்ணன் அண்ணன்னு பாசத்தைப் பொழியுறீங்க, உங்களைவிட ரொம்ப சின்னவர் தெரியுமா?' என.

'வயதில் தம்பியாயிருக்கலாம், அனுபவத்தில் எனக்கு அவர் அண்ணன்'என பதில் சொன்னதும், 'அப்பா சாமி இந்த விளையாட்டுக்கு நான் வரலை' எனச் சிரித்தார்.

உலகப்படவிழாவில் சந்தித்த நாம் ஒன்றாய் படங்கள் சில பார்த்தோம். மன்மதன் அம்பு படத்தினை பரங்கிமலை ஜோதியில் பார்த்தபோது படம் பார்த்து ரசித்ததைவிட உங்களின் அளப்பரைகளைதான் அதிகம் ரசித்தேன். ஜெய் ஜாக்கி.

ஈரோடு பதிவர் சந்திப்பு நமது மறு சந்திப்புக்கு அடிகோல, இன்னும் உங்களைப்பற்றி தெரிந்து, அறிந்துகொள்ள வாய்ப்பாய் அமைந்தது.

என்று அழைத்தாலும் 'ம்... சொல்லுடா' என அன்பாய் விளிப்பீரே அதற்காகவே போன் செய்துகொண்டே இருக்கலாமா எனத் தோன்றும்.

சமீபத்தில் ஈக்காடுத்தாங்கலில் இருக்கிறேன் என உங்களிடம் சொன்ன அடுத்த பத்தாவது நிமிடம் வந்து சந்தித்து, செல்லவேண்டிய இடத்துக்கு அழைத்துச்சென்று கோயம்பேடு வரை வந்து வழியனுப்பிவைத்தீரே, இதை நான் மறக்கவா முடியும்?

அண்ணா எல்லோருக்கும் கடிதம் எழுதிகிறீர்கள், உங்களுக்கு நான் எழுதப்போகிறேன் என விளையாட்டுக்காய் உங்களிடம் சொன்னது இன்று உண்மையாகிவிட்டது.

அண்ணா உங்களின் அன்புத் தம்பி என்பதில் இறுமாப்பு கொள்கிறேன், பெருமையடைகிறேன். ஜெய் ஜாக்கி...

உங்கள் அன்புத் தம்பி,

பிரபாகர்...

வசந்தப்புயல்... அத்தியாயம் ஒன்று.

|

செழியன்

என்னுடைய முழுப்பெயரைச் சொன்னால் நான் யார் எனக் கண்டுபிடித்துவிடுவீர்கள், அதனால் செழியன் மட்டும் போதும். படித்து முடித்து என் கனவான விரிவுரையாளர் வேலைக்கு சேர்ந்த முதல் நாள். கல்லூரி ஆரம்ப நேரத்துக்கு வெகு முன்னதாகவே வந்துவிட்டேன். என்ன, கனவு வேலை விரிவுரையாளரா என ஆச்சர்யமாய் பார்க்கிறீர்களா?

ஆமாம், தாத்தா, அப்பா வழியில் ஏகமாய் சொத்துக்கள், அரண்மனைபோன்ற வீடு. எதற்கெடுத்தாலும் வேலையாட்கள், கேட்டது அடுத்த நிமிடத்தில் என பழக்கப்பட்டு இருந்த எனக்கு ஆரம்பம் முதலே பணம் சம்மந்தமான எதிலும் நாட்டமில்லை.

சிறு வயதில் எங்கள் ஊர் பள்ளியிலேயே படித்தேன். வகுப்பறையிலும் தனி மரியாதை. மாலையில் ஆசிரியர் வீட்டிற்கே வந்து தனியாகவும் சொல்லித் தந்தார். எட்டாம் வகுப்பு முடித்ததும் ஏற்காட்டில் விடுதியில் சேர்த்துவிட்டார்கள். அதன்பின் கோவையில் கம்ப்யூட்டர் இஞ்சினீயரிங், சென்னையில் எம்பிஏ என படித்து முடித்தபோதுதான் கிராமம் சார்ந்த ஒரு கல்லூரியில் சேரவேண்டும் என முடிவு செய்தேன்.

அப்பா நான் பன்னிரண்டு படிக்கும் போதே திடீரென வந்த மாரடைப்பில் மேலே சென்றுவிட்டார். எனது தம்பிதான் எல்லவற்றையும் பார்த்துக்கொள்கிறான். எனக்கு அப்படியே எதிர்மறையாய் இருப்பான். ரொம்பவும் நல்லவன்தான், ஆனாலும் எங்களது எண்ணங்களில் ஏக முரண்.

உதாரணமாய் பாருங்களேன், கல்லூரியில் விரிவுரையாளராய் போகிறேன் என சொன்னவுடன் 'நம் தகுதிக்கு கைநீட்டி சம்பளம் வாங்கவேண்டுமா' என்றெல்லாம் விவாதிக்க ஆரம்பித்தவன், 'வேண்டாம், ஒரு கல்லூரியையே ஆரம்பித்துவிடுவோம், உன் பொறுப்பில் பார்த்துக்கொள்' என்றான்.

எதைச் சொல்லியும் என் மனதை மாற்ற முடியாது என்பது அவனுக்கும் தெரியும், அதனால் கடைசியாய், 'சரி, உனக்கு எந்த கல்லூரியில் வேலை வேண்டும் என்று சொல், வாங்கித்தருகிறேன்' எனக் கேட்டதற்கும் மறுத்துவிட்டேன்.

விளம்பரம் பார்த்து, ஏற்கனவே எண்ணியதுபோல் ஒரு சுமாரான கல்லூரிக்கு விண்ணப்பித்தேன். எனது மதிப்பெண்களைப் பார்த்து, நேர்முகத்தேர்வுக்கு அழைத்தார்கள். உண்மையில் இங்கு சேர ஆர்வமாய்த்தான் இருக்கிறீர்களா எனக்கேட்டு, சம்பளம் வேண்டுமானால் இன்னும் சேர்த்துத் தருகிறோம் என்றும் சொல்ல, வேண்டாம், எல்லோருக்கும் தருவதுதான் வேண்டும் எனச் சொல்லிவிட்டேன்.

ஆம், பல்கலைக் கழகத்திலேயே முதல் மாணவனாக தேறியிருந்தேன், மதிப்பெண்களைச் சொன்னால் கொஞ்சம் வியப்பீர்கள். என்னைப் பற்றிய விவரங்களைப் பார்த்த கல்லூரி முதல்வர் மிகவும் பவ்யமாய், தயக்கமாய் 'நீங்கள் இங்கு சேரத்தான் போகிறீர்களா?' எனக்கேட்க ஆமென்று சொல்லி, தயவு செய்து என்னைப்பற்றி எவரிடமும் சொல்லவேண்டாமென வேண்டுகோளினை வைத்தேன். அவரும் பிரம்மிப்பில் தலையாட்டினார்.

தங்குவதற்கு ஒரு வீட்டினை வாங்கிவிடலாம், கார் எடுத்துச் செல் என்றெல்லாம் மீண்டும் தம்பி, அம்மாவின் வற்புறுத்தல்கள். எல்லாம் மறுத்து கல்லூரிக்கு அருகிலேயே வாடகைக்கு வீடு பார்த்து, முன்பணம் கொடுத்து ஒரு வழியாய் இரு நாட்களுக்கு முன்பே ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தேன்.

என்ன நிறைய பேசுகிறேனா? நீங்கள் எதிரில் இல்லையே என்கிற துணிவில்தான். ரொம்பவும் ஜாலியாய் பேசுவேன், ஆனால் அந்த அளவிற்கு நாமெல்லாம் நெருக்கமாயில்லையே? சரி யாரிடம் அப்படியெல்லாம் பேசுவாய் என்று கேட்கிறீர்களா? அப்படி யாருமே இதுவரை இல்லை. என்ன, குழப்பமாயிருக்கிறதா? போகப்போக நீங்களே இன்னும் தெரிந்து கொள்வீர்கள்.

நண்பர்கள்? மிகவும் குறைவு. கல்லூரியில் முதுகலை படிக்கும்போது இருந்த இரு நண்பர்களின் விடாப்பிடியான வற்புறுத்தலுக்குப்பின் எனது ஊருக்கு அழைத்துவந்தேன். வந்து சென்றதும் என்னை அவர்கள் மரியாதையாய் பார்க்க ஆரம்பிக்க, எவ்வளவோ வற்புறுத்தியும் பழைய நண்பர்களாய் அவர்கள் இல்லை. அதன் பிறகு எவரையும் என் வீட்டுக்கு அழைத்துச்செல்வதில்லை என முடிவு செய்தேன். என்று தனித்து இருக்கிறோமோ அன்று கிடைக்கும் நட்புக்களே போதும் எனவும் முடிவு செய்தேன்.

கல்லூரி பரபரப்பாக ஆரம்பித்தது. ஒவ்வொருவராய் வர ஆரம்பித்தார்கள். அலுவலக ஊழியர் என்னிடம் விசாரித்து துறைத் தலைவரின் அறைக்கு அழைத்துச்சென்று அமரச் செய்து, தேனீர் வேண்டுமா என விளம்பி வேண்டாமென தலையாட்ட, என்னை காத்திருக்க சொல்லிவிட்டு சென்றார்.

ஒன்பது மணியளவில் உள்ளே வேகமாக நுழைந்த அவரைப்பார்த்து வணக்கம் சொன்னேன். 'வாங்க மிஸ்டர் செழியன், ரொம்ப நேரமா காத்திருக்கிறீங்களா?' என விசாரிக்க,

'இல்லை சார், இப்போதுதான் வந்தேன்' எனச் சொன்னேன்.

ஆசிரியர்கள் ஓய்வறைக்கு அழைத்துச் சென்று எனக்கான இருக்கையைக் காண்பித்தவர், எங்கள் துறையைச் சேர்ந்தவர்களையும் மற்ற ஆசிரியர்களையும் பரஸ்பர அறிமுகம் செய்துவைத்தார்.

என்னை முதல் பாடவேலைக்கு இரண்டாம் வருட வகுப்புக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி சென்றுவிட, எங்கள் துறையைச் சேர்ந்தவர்கள் மெதுவாய் கேள்விகளாய் பேச்சுக்கொடுக்க, தயக்கத்துடன் பதிலளித்தேன்.

துறைத் தலைவர் வகுப்புக்கு அழைத்துச் சென்று அறிமுகப்படுத்துவிட்டு சென்றுவிட ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தேன்.

எல்லோரும் தமிழில் பேசுங்கள், தமிழில் பேசுங்கள் என சப்திக்க, மறுத்து 'உங்களின் பாடங்கள் எல்லாம் ஆங்கிலத்தில் இருக்கின்றன, தவறெனினும் தயங்காமல் ஆங்கிலத்தில் தான் பேசவேண்டும் எனச் சொன்னேன்.

'சார் பாடம் நடத்தும்போது ஆங்கிலத்தில் நடத்துங்கள், நாம் பேசுவதை நம் தமிழிலேயே பேசுவோமே' என மிக அழகான ஆங்கிலத்தில் சொல்ல அந்த இனிமையான குரலுக்கு சொந்தமான அந்த மாணவியைப் பார்த்தேன்.

மிகவும் பாந்தமாய் கரிய பெரிய விழிகளோடு அறிவுக்களையாய் துறுதுறுவென இருந்தாள். பெயரை உடனே கேட்பது முறையாகாது என நினைத்து சரியென ஒத்துக் கொண்டு என்ன படித்தேன் என்பதை மட்டும் சொல்லி குடும்ப விவரங்களைத் தவிர்த்தேன்.

பெயர் மற்றும் ஊர் விவரங்களை ஒவ்வொருவராய் சொல்லும்படி பணித்தேன். முதலில் மாணவர்களிடம் ஆரம்பித்து வரிசையாய் சொல்லிவர மெதுவாய் கேட்டுவந்தேன். வானதி தஞ்சாவூர் என இமைகள் படபடக்க சொல்லி சட்டென உட்கார்ந்த அந்த மாணவி என்னை தமிழில் பேசும்படி அழகான ஆங்கிலத்தில் பணித்தவள்.

ஏனோ தெரியவில்லை, ஓர் அபிரிதமான ஆர்வம் வந்தது. எல்லோரும் சொல்லி முடித்தவுடன் வருகைப் பதிவேட்டினை விரித்து பெயர்களையும் மணவர்களையும் பார்த்து இருந்த சிறு தாளில் வராத எண்களைக் குறித்து வைத்துவிட்டு ’சரி பாடத்துக்கு செல்லலாமா?’ எனக் கேட்டேன்.

'சார் அட்டன்டன்ஸ்?' எனக் கேட்க, 'ஆப்சன்டீஸ் 21, 25 அன்ட் 32' எனச் சொல்ல எல்லோருக்கும் இனிய அதிர்ச்சி...

(தொடரும்...)

தேர்தல் முடிவுகள்...

|

பெரும்பாலோனோர் எதிர்ப்பார்க்காத ஒரு தேர்தல் முடிவினை தமிழகம் சந்தித்திருக்கிறது, தினமணியின் தலையங்கம் சொல்வதுபோல் தன்மானத்தமிழன் என தலை நிமிர்த்திச் சொல்வதுபோல். எந்த ஒரு கட்சியினையும் சார்ந்திராத நான் இந்த முறை மனப்பூர்வமாய் அதிமுகவுக்குத்தான் ஆதரவு தெரிவித்தேன், அதற்கு முக்கியக் காரணம் ஸ்பெக்ட்ரம், சினிமா கபளீகரம் மற்றும் அராஜகம்.

அதிமுக ஒழுக்கமான கட்சி என்று ஆதரிக்கவில்லை, மாறுதல் ஒரு ஒழுங்கினைக் கொண்டுவருமா எனத்தான். எவ்வளவு இறுமாப்பான பேச்சுக்கள், எகத்தாளமான நம்பிக்கைகள்... இவ்வாறான ஒரு முடிவை அதிமுகவே எதிர்ப்பார்த்திருக்காது என்பதுதான் எதார்த்தமான உண்மை.

அதிமுகவை ஆதரித்தாலே அவர்களோடு அன்னம் தண்ணீர் புழங்கக் கூடாது என்பதுபோல் தான் வலையுலகில் நிலவியது. சார்ந்திருக்கும் ஒரு இயக்கத்தை ஆதரிக்கத்தான் வேண்டும், கண்மூடித்தனமாய் அல்ல என எல்லோருக்கும் சொல்லியிருக்கிறது இந்த தேர்தல் முடிவுகள்.

மாறி மாறிதான் ஓட்டுக்களை இட்டுவந்திருக்கிறேன் இதுவரை. ஆனாலும் இலங்கைப் பிரச்சினை முழுமையாய் மாற்றிவிட முழுமையான திமுக எதிர்ப்பு நிலை. தேர்தல் முடிவுகளைப் பற்றி வலையுலக நண்பர்கள் பலரிடமும் முன்னதாகவே பேசியிருக்கிறேன், அதே போல்தான் இப்போது எதிர்ப்பார்த்த வெற்றி. கேட்கலாம், இனி தனி ஈழம் கிடைத்துவிடுமா? என. சில பல உரிமைகளாவது நிலை நாட்டப்படும் எனும் நம்பிக்கை கிடைத்திருக்கிறது.

நேற்றைய முழுநாளும் எல்லா சேனல்களும், வலையுமே என்னை வியாபித்திருக்க நிறைய தெரிந்துகொள்ள வாய்ப்புக்கள் கிட்டின...

கவர்ந்த விஷயங்கள் :

  • அம்மாவின் அகந்தையில்லா, ஆர்ப்பாட்டமில்லா பேச்சு
  • ஓரளவிற்கு நடுநிலைமையாய் சன் டிவியின் ஒளிபரப்பு
  • வலையுலக விவாதங்கள்
  • முக்கியத் தலைவர்களின் தோல்வி, குறிப்பாய் சேலத்துப் பெரியார்.
  • அதிகமான தங்கபாலு கொடும்பாவி


வருத்திய விஷயங்கள்

  • சில நல்ல வேட்பாளர்களின் தோல்விகள்
  • குளத்தூரில் தேர்தல் முடிவு சம்மந்தமான இடர்பாடுகள்
  • எஸ்.வி.சேகர் வீடு தாக்கப்பட்ட விஷயம்


பெரும் சவாலான ஒரு பொறுப்பு அதிமுகவிடம் விடப்பட்டிருக்கிறது, பார்க்கலாம் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்று. நல்லதே நடக்கும் என்று நம்புவோம் வழக்கம்போல்...

பயணம் 1.1.2

|

ஞாயிறு இரவு தம்பியோடு பெங்களூரு செல்வதற்கு ஆத்தூர் பேருந்து நிலையம் வந்தேன். சேலம் செல்லுவதற்கு கணக்கிலடங்கா கூட்டம் காத்திருக்க கொஞ்சம் மிரட்சியாயிருந்தது, எப்படி போகப்போகிறோம் என.

கவலைப்படாதீர்கள் அண்ணா என சொல்லிய தம்பி, பெங்களூரு செல்ல நேரடி பேருந்து ஒன்று இருப்பதாய் என்னை காத்திருக்கச் சொல்லிவிட்டு பேருந்து நுழையுமிடத்திற்கு சென்றான்.

சிறிது நேரத்தில் உள்ளே நுழைந்த பேருந்தில் கடைசி வரிசையில் அவனது கைங்கர்யத்தால் இரு சீட்டுக்கள் கிடைக்க ஏறி அமர்ந்தோம். எல்லோரும் தொற்றி ஏறியதில் வண்டி அதற்கான இடத்தில் நிற்கும் முன்னரே நிறைந்துவிட்டது.

இருபத்தைந்து வயதொத்த ஒருவர் பக்கத்தில் காலியாய் இருந்த இருக்கையில் உட்காரலாமா எனக்கேட்க, 'இல்லை கீழே இறங்கி சென்றிருக்கிறார்' எனச் சொன்னேன். சரியென சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு இறங்கி சென்றுவிட்டார்.

பார்ப்பதற்கு மிகவும் சிறு வயதாய் இருந்த ஒரு பெண்மணிக்கு மூன்று குழந்தைகள் போலும். இடமில்லாததைப் பற்றி கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல் படியில் அந்த பெண்ணின் கணவர், தம்பி என இருவரும்  அமர்ந்து கொண்டார்கள். தனது தங்கையை பக்கத்தில் உட்கார வைத்த அந்த பெண் ஒரு குழந்தையை கணவரிடம் கொடுத்துவிட்டு மற்ற இரு குழந்தைகளையும் துண்டு விரித்து நடைபாதையில் படுக்க வைத்து விட்டு முதலாவதாய் இருக்கும் சீட்டில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டார்.

பின் பக்கம் எவரும் ஏறா வண்ணம் கதவினை உள்புறத்தாழிட, வண்டி கிளம்பியது. சேலம் சென்றவுடன் பின்னால் கடைசி சீட்டில் இருவர் இறங்கிக்கொள்ள அந்த பெண்ணின் தம்பியும் தங்கையும் அமர்ந்து கொண்டார்கள். நிறைய பேர் வண்டி நுழையும்போதே ஏற முயற்சிக்க பின்பக்கம் இடமில்லாததால் எல்லோரும் முன்பக்கம் சென்றார்கள்.

அப்போதுதான் முன்னால் ஏதோ சப்தம் வர கவனித்தேன். நடத்துனர் சப்தமாய்  ஒருவரை திட்டிக் கொண்டிருந்தார். என்னிடம் சீட்டு கேட்டவர் தான் பதிலுக்கு மெதுவாய் கண்டக்டரிடம் வாதாடிக்கொண்டிருந்தார்.

இடமில்லை என்றதும் முன்பக்கத்தில் ஏறிக்கொண்டிருப்பார் போலிருக்கிறது. ஏற வந்தவர்களை வண்டியில் இடமில்லை என சொல்ல, அதைச் சொல்ல நீ யார் என்பதில் ஆரம்பித்து சூடு பிடிக்க ஆரபித்தது.

நடத்துனர் கொஞ்சமும் நிறுத்தாமல் சகட்டு மேனிக்கு கத்திக் கொண்டிருந்தார். பதிலுக்கு அவரும் ஏதோ சொல்ல சப்தம் மெதுவாய் அதிகமாகியது. டிரைவர் வண்டியை  மெதுவாய் ஒரமாய் நிறுத்த எங்களின் எல்லோரின் கவனமும் அவர்களின் மேல் விழுந்தது.

பார்ப்பதற்கு மிகவும் சாதுவாய் இருந்த அந்த நபர் அவ்வளவாய் உரத்துக்கூட பேசவில்லை. 'என்னது வண்டிக்கு பாம் வைத்துவிடுவாய? எங்கே வை பார்க்கலாம்? ஒழுங்கா ஊர் போய் சேர மாட்டாய், போலீஸ் ஸ்டேசனுக்கு வண்டியை விட்டுவிடுவேன்' என நடத்துனர் சொல்லும்போது, அவர் அப்படியெல்லாம் சொல்லியிருப்பாரா என்று எங்களுக்கெல்லாம்  தோன்றியது.

அப்புறம் சப்தமில்லை. அயர்ச்சியில் கண்ணயர அதிகாலை நான்கு மணியளவில் ஒசூரில் இறங்கி கொண்டேன், தம்பி பெங்களூரு சென்றுவிட்டான்.

அலுவலகம் சென்றபின் தம்பி என்னிடம் செல்பேச அவன் சொன்ன விவரங்களைக்கேட்டு அதிர்ந்தேன்.

அதிகாலை ஐந்து மணிக்கு மடிவாலா தாண்டியதும் வண்டியிலிருந்து அந்த நபர் இறங்கினாராம். அதன் பின் வண்டி சிறிது தூரம் சென்றவுடன் இன்னுமொரு நிறுத்தத்தில் நிற்க, இறங்கிய அந்த நபரின் தலைமையில் ஒரு இருபது பேர் கொண்ட கும்பல் பேருந்துக்குள் நுழைந்து கண்டக்டரையும், டிரைவரையும் அடி அடி என அடித்து பின்னியிருக்கிறார்கள்.

வண்டியின் பின்புறத்தில் கல்லெறிந்து கண்ணாடி உடையாததால் முன்புறத்தில் கண்ணாடியை உடைத்துவிட்டு சிட்டென பறந்து சென்றுவிட்டார்களாம்.

வரும்போதே செல்பேசி அந்த அதிகாலையிலும் ஆட்களை சேகரித்து அடித்திருக்கிறார். அதன்பின் காவல் நிலையம் சென்று  புகார்கொடுத்து என  ஒரு வழியாய் அறைக்கு சென்று சேர்வதற்கே எட்டு மணி ஆனதாம்.

இதன் மூலம் இரண்டு விஷயங்கள் தெளிவானது. ஒன்று அந்த சிறு பெண் தனது குடும்பத்தாரோடு பயணித்த விதம், எந்த நிலையிலும் சிறப்பாய் இருக்க முடியும் என்பதை உணர்த்துவதாய். மற்றொன்று ஆளைப்பார்த்து எடைபோடவேண்டாம், நாவடக்கம் என்றும் நலம் பயக்கும் என்பதை உணர்த்துவதாய்...

விகடம் 1.1.4

|

தேர்தல் முடிந்த இந்த வார இறுதியை தெடாவூரில் கழித்தேன். நண்பர்கள், உறவினர்கள் என எல்லோரிடமும் பேச, தேர்தலைப் பற்றிய பல சுவராஸ்யமான  விஷயங்கள் கிடைத்தது.

*****

ஆத்தூர் தொகுதியினைச் சேர்ந்த ஒரு பாட்டியிடம் கேட்டேன்.

'பாட்டி எதுக்கு ஓட்டு போட்ட?'

'கையில்தான்' எனச் சொல்லி என்னை நக்கலாய் பார்த்து கொஞ்சம் தாமதித்து 'ரெட்டெலைக்கு' எனச் சொல்லி சிரித்தது.

*****

வீட்டுக்கு உறவினராய் வந்த என் அத்தையிடம் கேட்டேன். (சங்கராபுரம் தொகுதி)

'எதுக்கத்த ஓட்டு போட்ட?'

'திமுக-வில முன்னூறு, அதிமுகவில இரநூறு கொடுத்தாங்க. யாருக்கும் துரோகம் பண்ணக்கூடாதுன்னு மோதிரத்துக்கு போட்டுட்டேன்'.

கேட்டுவிட்டு எனக்கு 'கிர்' ரென ஆனது.

*****
பக்கத்து வீட்டு பாட்டியிடம் கேட்டேன். 'நீ நினைக்கிறதுக்குத்தான் ராசா போட்டேன்'  பூடகமா சொன்னார்கள்.

நான் பதிலுக்கு 'சுயேச்சைக்கா பாட்டி ஓட்டு போட்டே?' எனக்கேட்டேன்.

'அப்படின்னா?'

'அதைத்தானே நான் நினைச்சேன்'.

'ஆமாமா அதுக்குத்தான் போட்டேன்' என்றார்கள்...

*****

எப்போதாவது உண்மையை பேசும் என் அத்தை மகன், 'மாமா நீ நம்பினா நம்பு நம்பாட்டி போ, நான் யாருக்குப் போட்டேன்னே தெரியல' என்றான்.

'அடப்பாவி என்ன சொல்றே?' எனக் கேட்க

'ஆமாம் மாமா எந்த கட்சியும் புடிக்கல. மெசினுக்கு பக்கத்துல போய் கண்ண மூடிகிட்டு ஏதோ ஒரு பட்டனை அழுத்திட்டு வந்துட்டேன், சத்தியமா எந்த பட்டன அழுத்தினேன்னு ஆண்டவனுக்குத்தான் தெரியும்' என்றான்.

காங்கிரஸில் பொறுப்பில் இருக்கும் அவன் எதற்கு போட்டிருப்பான் என எனக்கும் தெரியும்.

'விவசாயிகளுக்கு உருப்படியா எதுவும் செய்யல, ஆட்சி மாற்றம் வேணும்... மனச கல்லாக்கிகிட்டு ரெட்டலைக்கு போட்டேன்' என் தாத்தா...

காங்கிரஸ்காரரான என் அப்பா 'திமுகாவுக்குத்தான் போட்டேன் என உனக்குத் தெரியாதா?, உறுதியா காங்கிரஸ் உதவியோட திமுக ஆட்சி' என்றார்.

'இந்த முறை ஜெயலலிதாவுக்குத்தான் என் ஓட்டு' அம்மா.

'நல்ல வேலை நீ ஓட்டு போட வரல. வந்திருந்தா திமுகாவுக்கு எதிரா ஒரு ஓட்டு கிடைச்சிருக்கும்...' என் நண்பன் மணி.

பிச்சன் மாமவிடம் கேட்டதற்கு புதிதாய் ஒரு குண்டை போட்டார் 'செல்லாத ஓட்டு போட்டேன்' என.

'இல்லை மாமா, அப்படியெல்லாம் போட முடியாது என மறுத்துச் சொன்னேன்.

'யாரு சொன்னா? முரசு, சூரியன், மோதிரம்னு மூனையும் அழுத்திட்டு வந்தேன்' என சொன்னார்.

'முதலில் எதை அழுத்தினீர்கள்' எனக்கேட்டதற்கு முரசில் என சொன்னார்.

இன்னும் பலர் நேரடியான பதிலைத் தந்தார்கள். மே பதிமூன்று மிகவும் சுவராஸ்யமான நாளாய் இருக்கும் என்பது தெள்ளினப் புரிந்தது. வேலையைப் பார்த்துக்கொண்டு பொறுமையாய் காத்திருப்போம்...

என்னடா வேறு வேலையே இல்லையா? இத்தனைப் பேரை கேட்டிருக்கிறேன் என நினைக்காதீர்கள். எல்லாம் ஓட்டுப்போடத்தான் போக இயலவில்லையே, சரி எப்படித்தான் நடந்தது, என்னதான் செய்தார்கள் என அறிந்துகொள்ளும் ஆர்வக்கோளாறில்தான்...

குற்றம்...நடந்தது என்ன?

|

'எலேய், நம்ம அப்புவ யாரோ கொன்னு கெணத்துல போட்டுட்டாங்களாம்... பாக்க போறேன்னு' பரபரப்பா வெளியிலிருந்து ரமேசு கத்தினான்.
பழயத எடுத்து வாயில வெக்கப்போன மணி அப்படியே கெடாசிட்டு வெளிய ஓடினான்.

வண்டிய பரத்த, 'எப்படிடா? ராத்திரி 2 மணி வரைக்கும் நம்ம கூடத்தானே பேசிக்கிட்டிருந்தான்?, அதுக்கப்புறம் அவன் கூட யாரு இருந்தா?'

'கங்கா இருந்தான். அப்படியே அவனுக்கு ஒரு ஃபோன் போடு'

வழியெல்லாம் பரபரப்பா அந்த இடத்தக்கு எல்லோரும் போயிட்டிருந்தாங்க. ஆரன அடிச்சிகிட்டே வேகமா ரமேசு போயிட்டிருந்தான்.

'சுச்சாஃனு வருதுடா, அங்கதான் இருப்பான்னு நினக்குறேன்'

'சரிடா, போலீசு கேட்டா அவந்தான் இருந்தாங்கறத தெளிவா சொல்லிப்புடுவோம், நமக்கெதுக்கு வம்பு...?'

*******

'சொல்லித்தொலைடி, என்னடி ஆச்சு?.., ராத்திரி மூனு மணிக்கு வெளியில் இருந்து பேய் மாதிரி வந்த... அவன் வேற கெணத்துல மெதக்குறான், போலீசு உன்னையுமில்ல விசாரிப்பானுங்க, அய்யோ அந்த எழவெடுத்தவன் வேணாம்னு தலையில அடிச்சிகிட்டனே'

பேயடிச்ச மாதிரி செல்வி உட்காந்திருக்க 'சரி, சரி... ரொம்ப சத்தம் போடாத... போலீசு கீலீசு கேட்ட ஏதாச்சும் சொல்லி சமாளிச்சித் தொலைப்போம்...

பக்கத்து வீட்டில் இருந்த அந்த அம்மா தான் புருஷங்கிட்ட, 'இதோ பாருங்க... நான் யாருக்கும் பயப்பட மாட்டேன்... ராத்திரி அவ தலவிரி கோலமா வெறி புடிச்சமாதிரி வந்தத என் கண்ணால பார்த்தேன்... போலிசுக்கிட்ட கண்டிப்பா சொல்லப்போறேன்...

*******
சென்னை போகிற லாரியில் குழப்பமாய் யோசனையா கங்கா இருந்தான்.

'அவனுக்கு என்ன ஆச்சு? கடைசியா எங்கிட்டதானே பேசிகிட்டிருந்தான்?... மச்சான் என் ஆளைப் பாக்கப்போறேன், ஒரு முடிவோட இருக்கேன், இதுக்கு மேல கண்டிப்பா அவ அப்பனே என் காலில விழுந்தாவனும்னு புதிரா சொல்லிட்டு போனானே... எதுக்கும் ரெண்டு நாளைக்கு யாரு கண்ணுலயும் படாததுதான் நமக்கு நல்லது...'

*******

கொஞ்சமா தண்ணி இருந்த கிணத்துல இருந்து நேத்து ராத்திரி வரைக்கும் அப்புவா  இருந்த அத எடுத்து வெளியேப் போட்டிருந்தாங்க. தகவல் தெரிஞ்சி வந்த ரெண்டு போலீசு பக்கத்துல யாரையும் விடாம பாத்துகிட்டிருந்தாங்க.

அவனோட சின்னம்மா ரொம்ப ஓவராவே ஆக்டிங் கொடுத்து அழுதுகிட்டிருந்துச்சி, மனசுக்குள்ள வேற மாதிரியா நினைச்சிகிட்டு... 'ரங்கன தீர்த்துகட்ட சொன்னோம், ஆனா அவன் ரெண்டு நாளா ஊர்லயே இல்லை... யாரு செஞ்சிருப்பா? எப்படியோ சொத்து நமக்குத்தான்... சந்தேகம் வராதபடி நடந்துக்கனும்...'

******

எல்லாம் தள்ளி மச மசன்னு ஒரு உருவம் எல்லத்தையும் வேடிக்கை பார்த்துகிட்டிருக்கில்ல?... என்னது தெரியலையா? சாரிங்க...  எனக்கு நல்லா தெரியுது, அது அப்புவோட ஆவி... என்னமோ சொல்லுது, இருங்க கேட்டு சொல்றேன்...

'ராத்திரி கங்காகிட்ட சொல்லிட்டு கிணத்தடிக்கு செல்வியப் பாக்க வந்தப்போ ரொம்ப ஆர்வமா அவள கட்டிப் புடிக்க போனேன். பொசுக்குன்னு அவ தள்ளிவிட கீழ சடார்னு விழுந்துட்டேன். தல கல்லுல பொட்டுனு பட்டு கிணத்துக்குள்ள விழுந்து செத்துட்டேன்... அது அதுவும் குழம்பிக்கிட்டு இருக்குது... பாக்கலாம் என்னதான் ஆகுதுன்னு'...

அதுக்கப்புறமா என்ன ஆச்சுன்னு கேக்குறீங்களா? யாருக்குத் தெரியும்? நான் அங்க இருந்து வந்துட்டேன், விசாரிச்சி சொல்றேன், இல்லாட்டி நீங்க பேப்பர வாங்கி பாருங்க...

தேர்தலில் தெடாவூர்...

|

தேர்தல் சமயத்தில் அன்றாட நிகழ்வுகளை பத்திரிக்கைகளில், பஸ்-களில் படித்துத் தெரிந்து கொள்வதுபோல் உள்ளூர் நிகழ்வுகள் எல்லாம் செல்பேசித் தெரிந்து கொள்கிறேன்.

எங்களின் தெருவில் ரோடு போடுகிறோமெனெ கொத்தி வைத்ததால் எந்த ஒரு வாகனமும் உள்ளே வர இயலாத சூழல் நேற்றைக்கு முந்தைய நாள் வரை. இன்று ஜல்லி, மண் எனக்கொட்டி ரோடு ரோலரால் அமுக்கி தார் போடுவதற்குத் தயாராயிருக்கிறது. இனிமேல் பிரச்சார வாகனங்கள் நிறைய வரும்.

தனிப்பட்ட முறையில் அ.தி.மு.க தான் அதிக வோட்டுக்களை இதுவரை வாங்கி வந்திருக்கிறது. வன்னியர்கள் மிக அதிகமாயிருந்தும் பா.ம.க விற்கு ஓட்டுப் போடுபவர்கள் மிகக் குறைவே.

விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டாலும், வாங்கு திறனும் அதிகமாயிருக்கிறது. மக்கள் காசு வாங்கினாலும் மனதில் நினைத்தவர்களுக்குத்தான் ஓட்டுப் போடுவார்கள்.

கைசின்னத்துக்குதான் சாகிற வரைக்கும் போடுவேன் எனச் சொல்லும் பாட்டிகளும், ரெட்டெலக்குத்தான் என் ஓட்டு  எனச் சொல்லும் பாட்டிகளும், பார்ட்டிகளும் நிறையவே இருக்கிறார்கள்.

உடையார் சமூகத்தினர் நாற்பது சதம் பேர் இருக்கிறார்கள், பெரும்பாலோனோர் ஐ.ஜே.கெ-வுக்கு ஓட்டு போடுவார்கள் என்பதால் அ.தி.மு.க. வுக்கு சாதகமாக இருக்கும்.

டாஸ்மாக் மூன்று நாட்கள் விடுமுறை என்பதால் ஒரு வாரமாக விவரமாய் பதுக்கல் வேலைகளை செய்து, தயாராய் இருக்கிறார்களாம்.

சம்மந்தப்பட்டவர்களிடம் பணம் வந்து சேர்ந்துவிட்டாலும், இன்னும் பணப் பட்டுவாடா ஆரம்பிக்கவில்லை.

விடுமுறை எடுத்துக்கொண்டு ஊருக்கு சென்று ஓட்டு போடமுடியுமா எனத் தெரியவில்லை. கடமையாற்ற கடைசிவரை முயற்சிப்போம்.

நேற்று என் மகன் 'கலைஞர் தாத்தா ஜெயிப்பாங்களா இல்லை ஜெயலலிதா அம்மா ஜெயிப்பாஙகளா?' எனக் கேட்டார்.

நாயகன் ஸ்டைலில் 'எனக்குத்தெரியாதுப்பா' என சொல்லி, 'சரி நீங்க சொல்லுங்க' எனக் கேட்டதற்கு, 'சென்னை சூப்பர் கிங் ஜெயிக்கும்' எனச் சொல்லிவிட்டு சென்றார்.

வாய்ச்சொல்லில் வீரரடி...

|

பொய் சொல்லி புரளி பேசி
புனைவுகளை வினவச் செய்து
மெய் வந்து பொய் போக
பொய்யேதான் மெய்யெனவே
பிசுபிசித்து பேசிடுவோம்...

செய்வதை விட்டுவிட்டு
சினையாடு சிரைத்தலாய்
பொய்யது புடம்போட்டு
போவோரை வருவோரை
புறம்பேசி மகிழ்ந்து

குற்றம் குறையதனை
குட்டிடவே மற்றவரை
குறைகூறி குற்றமதை
குழிதோண்டி புதைத்திட்டு
கூப்பாடும் போட்டிடுவோம்...

வெற்றியது எங்களுக்கு
வெறும்பேச்சு பேசிட்டு
பெருமையாய் கண்ணாடி
பிரதிக்கும் பிம்பம் பார்த்து
மறை கழன்ற மதியுடனே
மன்னித்தோம் சொல்லிடுவோம்...

தேர்தல் பணியில்... - II

|

(முதல் பகுதியை படிக்காவிட்டால் இங்கு படித்துப் படியுங்களேன்...)

ஐந்து மணிக்கே எல்லோரும் பரபரப்பாய் எழுந்தோம். உடும்பியம், கல்லேறிப்பட்டி என இரு ஊர்களுக்கும் ஒரே தலைவர் என்பதால் இரண்டு ஊர்களைச் சேர்ந்தவர்களுக்கும் பலத்தப் போட்டி.உடும்பியம் கல்லேறிப்பட்டியைவிட பெரியது, எனவே எல்லாத் தேவைகளுக்கும்
அவர்கள்தான் இங்கே வரவேண்டும். இந்த முறை எப்படியாவது நமது ஊரைச் சேர்ந்தவர் தலைவராக வந்தே ஆகவேண்டும் எனௌம் முனைப்போடு க.பட்டிக் காரார்கள் இருந்தார்கள்.

வேட்பாளர்களாய் இருப்பவர்கள் இருவரும் அதிகாலையிலேயே வந்து எங்களுக்கு எல்லாம் வணக்கம் போட்டுவிட்டு என்ன உங்களுக்குத் தேவையோ சொல்லுங்கள், உடனே செய்கிறோம் எனத் துடிப்பாய் நின்றார்கள். பார்க்கும்போதெல்லாம் ஒரு பெரிய புன்னகை மரியாதை கலந்து. என் வாழ்நாளில் இதுவரை என்னை இவ்வளவு மரியாதையாய் பார்த்தவர்கள் கிடையாது.

சூடாய் கிடைத்த இட்லி, தோசை பூரி என எனாவற்றிலும் கொஞ்சம் கொஞ்சமாய் வயிறு நிரம்ப சாப்பிட்டோம். ஓட்டு எண்ணிக்கை ஆரம்பிக்கும் முன்னரே கூட்டம் கூட ஆரம்பித்துவிட்டது, எல்லோரும் வரிசையில் நின்றார்கள்.

மை வைத்தல், இருக்கும் பட்டியலில் சரிபார்த்தல், வாக்குச் சீட்டினை தருதல் என ஒவ்வொருவரும் ஒவ்வொரு வேலை. எங்களுக்கு எதிரில் ஒவ்வொரு வேட்பாளருக்கும் ஒரு ஏஜன்ட். வருபவர் சரியான நபர்தானா என. அப்போதெல்லாம் அடையாள அட்டையோ, புகைப்படத்துடன் கூடிய குடும்ப அட்டையோ கிடையாது. எதிரில் அமர்ந்திருப்பவர்கள் ஏதேனும் மறுப்புத் தெரிவித்தால் நாங்கள் ஓட்டுப்போட அனுமதிக்கக் கூடாது.

முதல் ஒரு மணிநேரம் எல்லாம் ஒழுங்காய் போய்க்கொண்டிருந்தது. திடீரென சலசலப்பு. க.பட்டியைச் சேர்ந்த ஒருவர் கள்ள ஓட்டு போட வந்திருப்பதாய் புகார் சொல்ல, பதிலுக்கு அவர்களும் ஏதோ சொல்ல அந்த இடமே களேபரமாகியது.

பேச்சு பேச்சுவாக்கில் இருக்க, திடீரென ஒருவர் க.பட்டி வேட்பாளரை ஓங்கி கன்னத்தில் அறைந்தார். இது போதாதா, விஷயம் பெரிதாக! எல்லோரும் சகட்டு மேனிக்கு அடித்துக்கொண்டு புரள ஆரம்பித்துவிட்டார்கள். இருந்த சொற்ப காவலர்களைக் கொண்டு எல்லோரையும் அப்புறப்படுத்தி கதவினை தாழிட்டுக்கொண்டோம். வெளியே இன்னும் அதிகமாய் கூச்சல் குழப்பங்கள்.

கதவுகளில் பெரிய பெரிய கற்களால் அடிக்கும் சப்தம் எங்களின் கிலியை அதிகப்படுத்த, கதவில்லா சன்னல்களின் வழியாக சர் சர்-ரென கற்கள் சாரை சாரையாய் உள்ளே விழ ஆரம்பித்தன. வேகமாய் வந்த ஒரு செங்கல் சுவற்றில் பட்டுத் தெறித்து பணியாற்ற வந்திருந்த ஒரு பெண்மணியின் மூக்கில் பட்டு ரத்தம் கொட்டத் தொடங்கியது.

நாங்களெல்லம் கற்கள் வந்து விழாத இடத்தில் தரையோடு தரையாக பல்லிபோல் ஒட்டிக்கொண்டு கிடந்தோம், விழுந்தாலும் தலைக்கு ஏதும் ஆகக் கூடாது என தலையில் மேல் ஒரு மொத்தமான அட்டையை வைத்துக்கொண்டு. இரண்டு மணி நேரம் நரக வேதனை... பெரம்பலூரில் இருந்து போலீசார் நிறைய வந்து, எல்லாவற்றையும் கட்டுப்படுத்தி கதவினைத் திறந்தார்கள்.

அதன் பின் தேர்தல் வழக்கம்போல் நடந்தது. நாங்களெல்லாம் வழக்கத்துக்கு மாறாய் நடுங்கியவாறே கடமைக்கு வேலை செய்தோம். குண்டூசி விழுந்தாலும் சம்தம் கேட்குமளவிற்கு இருந்தது. ஒரு வழியாய் தேர்தல் முடிந்தது.

பெரும் நிம்மதியாய் மெதுவாய் வெளியே வந்தோம். சண்டையிட்டுக் கொண்டிருந்த இரு ஊரின் வேட்பாளர்களும் சிரித்தவண்ணம் பேசிக்கொண்டிருந்தார்கள். எங்களைப் பார்த்ததும் இருவரும் சேர்ந்தார்போல் மிகவும் மரியாதையாய் வணக்கம் சொல்லி புன்னகைத்தார்கள்.

(வாக்கு எண்ணும்போது நடந்த ஒரு விஷயம் அடுத்த இடுகையில்)

தேர்தல் பணியில்... - I

|

தேர்தல்... மக்களையெல்லாம் மேலும் ஏமாளிகளாகவும், இலவச கவர்ச்சி நச்சுக்களால் சமூகத்தை பாழ்படுத்தவும், பெரிதாய் மாற்றங்கள் வரப்போகின்றன என (அவ)நம்பிக்கையை ஏற்படுத்தவும், அழகாய் அரசியல்(வியா)வாதிகள் அல்வாக் கொடுக்கவும் ஏற்படுத்தப்பட்ட ஒரு களம். இந்த களத்திலே எல்லோருக்கும் ஒரு விதத்தில் பங்களிக்க வாய்ப்பு இருப்பினும், தேர்தல் நாளன்று வாக்குச் செலுத்தும் இடத்தில் அதிகாரிகளாய், பணிபுரிபவர்களாய் இருப்பதற்கு அரசு அல்லது அதனைச் சார்ந்த பணியில் இருந்தாக வேண்டிய கட்டாயச் சூழல் இருப்பதால் நமக்கும் அந்த ஒரு வாய்ப்புக் கிட்டியது.

பெரம்பலூர் கல்லூரியில் படித்து முடித்தபின் அங்கேயே விரிவுரையாளராய் வேலை பார்த்துக்கொண்டிருந்த சமயம் உள்ளாட்சித் தேர்தலுக்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தன. அதற்காக எங்களது கல்லூரியில் இருந்து நாங்களெல்லாம் வாக்குப் பதிவு நடைபெறும், எண்ணுகின்ற நாளன்றும் பணியில் அமர்த்தப்பட்டோம்.

முதல் நாளே எல்லோருக்க்கும் எங்கெங்கு செல்லவேண்டும் என விவரம் வந்துவிட, எங்களில் நால்வருக்கு மட்டும் வரவில்லை. நாங்கள் 'ரிசர்வ்'-வில் இருக்கிறோமாம்; யாராவது வரவில்லை என்றால் பதிலுக்கு அனுப்புவார்களாம்; ஒன்றிய அலுவலகத்தில் தங்கியிருக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறதாம்; அங்கு சென்று காத்திருக்க வேண்டுமாம்.

பணி இல்லையென்றாலும் ஊதியம் கிடைத்துவிடும் என்று சொன்னாலும், அதீத ஆர்வத்துடன் இருந்த நமக்கு பலூனில் ஊசி குத்தியது போல் ஆகியது. எல்லோருமாய் கிளம்பினோம்.

போகும்போது திருச்சி மாவட்ட எல்லையில் இருக்கும் உடும்பியம் கிராமத்தில் 'ப்ரொசீடிங் ஆபிசராக அனுப்பப் பட்டவர் குடித்து கலாட்டா செய்ய அவருக்கு மாற்று வேண்டுமெனக் கேட்டிருப்பதாக தகவல் வந்தது. மாற்றாய் யார் செல்லுகிறீர்கள் எனக் கேட்ட மறு நொடியே ஒத்துக்கொண்டேன், எங்கள் ஊரான தெடாவூரிலிருந்து எட்டு கி.மீ. என்பதால், வரப்போகும் விளைவுகளை சிந்திக்காமல்.

இரவு எட்டரை மணியளவில் வாக்குச் சாவடியாய் இருந்த அந்த பள்ளிக்கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டேன். அவர்கள் என்னைப் பற்றி விசாரிக்க, ஓ… ராமசாமி மகனா நீ, உங்க அப்பாவுடன் வேலை பார்த்திருக்கிறேன்’ என அவரின் பெயரைச் சொல்லி அப்பாவிடம் கேட்கச் சொன்னார். பள்ளியின் முன்புறம் இருந்த மைதானக் கொடிக்கம்பத்தின் திட்டில் யாகவா முனிவரை மாதிரி ஆனால் சட்டையினைப் போட்டுக்கொண்டு ஒருவர் கைகளை ஆட்டி ஏதோ பேசிக்கொண்டிருந்தார். ஜீப் வந்து நிற்பதைப் பார்த்து எல்லோரும் பரபரப்பாய் வந்தார்கள்.

மெதுவாய் ஜீப்பிலிருந்து இறங்கி இருவரோடு எல்லோருமாய் பக்கத்தில் சென்றோம். வாகனச் சத்தம் கேட்டு ஏற்கனவே வந்திருப்பவர்களும் வந்து சேர அவரை நெருங்கினோம்.

'சார், கிளம்புங்க, உங்களுக்கு வேறு ஊரில் ட்யூட்டி' என சொல்ல,

'டேய் என்னை என்னவென நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள், நான் யார் தெரியுமா?, என்னைப் பார்த்தால் கலக்டரே பயப்படனும்' என்று சொல்லி மரியாதையில்லாமல் கெட்ட வார்த்தைகளால் வைய ஆரம்பித்தார்.

’ஆமாங்க சார், பயந்து போய்தான் உங்களை வேறு ஊருக்கு மாற்றியிருக்கிறார்கள் என வ.வ.அதிகாரி நைச்சியமாய் சொல்லி ஜீப்பில் ஏறச் சொன்னார்.

‘எனக்கு மாற்றாய் வந்த அற்பப் பதர் யார்?’ என வண்டியில் ஏறும்முன் ஒரு கேள்வியைக் கேட்க, என்னை எல்லோரும் பார்க்க, அவர் ஏற இறங்க என்னைப் பார்த்து ’உனக்கு இருக்கிறது’ என சொல்ல, ’சார் உங்களுக்கும் இருக்கிறது’ என கொஞ்சம் கடுமையாய் சொல்லி, தயாராய் வைத்திருந்த அவர் கொண்டு வந்த பையோடு அனுப்பி வைத்தார்கள்.

வயதில் என்னைவிட மூத்த ஆசிரியர் ஒருவர் உறுதுணையாய் இருக்க ஏற்பாடுகளையெல்லாம் கவனித்துவிட்டு, தயாராய் இருந்த இரவு உணவினை முடித்து கண்ணயர்ந்தோம், நாளைக்கு நடக்கப்போகும் விபரீதங்கள் எதுவும் அறியாமல்…

(தொடரும்)

சச்சின்... என் தம்பி!...

|

சச்சின் விளையாட ஆரம்பித்த நாளிலிருந்து இன்று வரை அனைத்து ஆட்டங்களையும் பார்த்து வந்திருக்கிறேன். சச்சின் விளையாடும் போட்டிகளை அதீத ஆர்வத்துடன் பார்ப்பேன், மற்றைய ஆட்டங்களையும் பார்ப்பேன். சச்சின் விளையாடும் முதல் பந்தினைத் தவிர்த்துத்தான் பார்ப்பேன்.

ஒரு சமயத்தில் சச்சின் அவுட் ஆனால் அதன் பின் பார்ப்பதை விட்டுமிடுமளவிற்கு இருந்த நான், நாளடைவில் மற்றவர்கள் விளையாடுவதையும் பார்க்க ஆரம்பித்தேன்.

சச்சினை தம்பி எனத்தான் அழைப்பேன். என் தம்பிக்கும் சச்சின் என்றால் உயிர். வானம்பாடிகள் அய்யா சச்சின் கையிழுத்திட்ட பேட்டை வாங்கித்தருகிறேன் எனச் சொன்னபோது எவ்வளவு மகிழ்ந்தேன் தெரியுமா?

முதல் நபராக இருநூறு ரன்கள் எடுத்த அன்று நண்பர்களுக்கு ட்ரீட் கொடுத்தேன். இன்றும் சச்சின் 100 அடித்தால் 'என்ன உன் பிரதர் செஞ்சுரி போலிருக்கு' என் என் நண்பர்கள் போனில் அழைத்து பேசுவார்கள். சச்சினுடன் எனது குடும்பத்தாரோடு டின்னர் சப்பிடவேண்டும் என்பது எனது நெடுநாளைய கனவுகளில் ஒன்று.

ஒரு விளையாட்டு வீரன் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு சச்சினை கண்டிப்பாய் உதாரணமாய் காட்டலாம். எத்தனை விதமான விமர்சனங்கள்?... விமர்சனங்களுக்கெல்லாம் பேட்-டில் பதில் சொல்லி எத்தனையோ சறுக்கல்கள் வந்தாலும் அதையெல்லாம் தாண்டி சாதனைகள் படைத்துவரும் என் தம்பி சச்சின்... நீ இன்னும் சில ஆண்டுகள் விளையாட வேண்டும், இன்னும் பல சாதனைகளை நிகழ்த்தவேண்டும். உலகக் கோப்பை-யை வாங்கித் தந்தாலும் தொடர்ந்து விளையாட வேண்டும்.

வீரண்ணன்...

|

சிறு வயதில், விவரம் புரியாத வயதில் யாரையாவது பார்க்கும்போதெல்லாம் பயந்திருக்கிறீர்களா?... ஆமென்றால் என் இனம(டா)ய்யா நீ(ர்) என நான் சொல்லிக்கொள்ளலாம்.

தளர்ந்த உடல், லேசாய் கூன் விழுந்த முதுகு, மழிக்கப்படாத முகத்தில் காடென மீசை, தாடி, அழுக்கான ஆனால் கிழிந்திருக்காத சட்டை, முழுக்கால் சட்டை, கையில் ஒரு தூக்குவாளி இதுதான் வீரண்ணனின் அடையாளம்.

வீரண்ணனனிடம் பிடித்துக்கொடுத்துவிடுவேன் எனச் சொன்னால் அழும் பிள்ளைகள் கூட வாயை மூடிக்கொள்ளும்; பார்த்தால் சிரிக்கும் குழந்தை கூட அழ ஆரம்பித்துவிடும். அவரைப் பார்த்தால் ஓ....வென எல்லோருமாய் கத்திக்கொண்டு போய் அவரது சட்டையினை பிடித்து இழுப்போம், சிறுசிறு கற்களால் அவரை அடிப்போம். அவரும் பதிலுக்கு  கையில் கிடைத்தவற்றைக் கொண்டு எங்களை நோக்கி வீசுவார்.

சில நாட்களில் விவரமாய் கையில் ஒரு குச்சியுடனே வருவார், முன்னெச்சரிக்கையாய். ஊரில் உள்ள எல்லா வீடுகளிலும் சாப்பாடு கேட்கமாட்டார். ஒரு சில வீடுகளில் மட்டும்தான், அதுவும் வாயைத் திறந்து கேட்கமாட்டார். வாசலிலேயே கவனிக்கும் வரை நின்று கொண்டிருப்பார். போடுவதை வாங்கிக்கொண்டு, எடுத்து சாப்பிட்டவாறே சென்றுவிடுவார்.

காசு கொடுத்தால் வாங்கிக்கொள்ள மாட்டார். அதன் மதிப்பு தெரியாதோ அல்லது அவருக்கு தேவையில்லையோ என்னவோ... அவருக்கென ஒரு கணக்குபோல் வைத்துக்கொண்டார்போல் ஊரில் எல்லாப் புறங்களிலும் திரிந்துகொண்டிருப்பார்.

மூன்று மாதத்திற்கு ஒரு முறை அவரின் கோலம் மாறும். மழித்த முகத்தோடு புதிதாய் சட்டை பேண்ட் எல்லாம் போட்டிருப்பார். வைத்திருக்கும் தூக்குவாளியும் கூட புதிதாய் இருக்கும். அதற்கெல்லாம் அப்போது காரணம் தெரியாது.

ஆரம்பத்தில் அவரைப் பார்த்து மிகப் பயந்த நான் ஒரு சமயம் எங்கள் வீட்டுக்கு சாப்பாடு கெட்க வந்த சமயத்தில் அம்மா சப்பாட்டினைக் கொடுத்து அவரது தட்டில் போட்டுவிட்டு வரச் சொல்ல, மறுத்து... பின் பயந்தவண்ணம்  நடுங்கியவாறு அவரது தட்டில் இட்டேன். சனி ஞாயிறுகளில் எங்கள் வீட்டில் கேட்கும் வழக்கம் வைத்திருந்தார். எங்கள் வீட்டில் எல்லோரும் அன்றுதான் வீட்டில் இருப்போம் என்பதைப் புரிந்து வைத்திருந்திருக்கிறார் என எண்ணுகிறேன்.

அதன்பிறகு சில நாட்களில் பயம் சுத்தமாய் விலகிவிட அவருக்கு சாப்பாட்டினை நான்தான் போடுவேன் என எனது வேலையாக்கிகொண்டேன். நாட்பட நாட்பட இருவருக்குமிடையே சினேகப்பூர்வமான ஒரு மெல்லிய புரிதல் ஏற்பட்டது. மெலிதாய் சிரிப்பார், சைகையில் ஏதோ சொல்ல முயல்வார். கண்களில் ஒரு சந்தோஷம், நன்றி தெரிவதாய் இருக்கும்.

அதுவரை அவரின் சட்டையைப் பிடித்திழுக்க்க ஓடினால் முதல் ஆளாய் ஓடும் நான் 'டேய் வேண்டாம்டா, பாவம்' எனச் சொல்லி எனது நண்பர்களை தடுக்க முயற்சிப்பேன். என்னை அவர்கள் கேலி செய்தாலும் பொருட்படுத்த மாட்டேன். என்னை எங்கு பார்த்தாலும் புன்னகைப்பார். சந்தோஷமாகி 'விலுக் விலுக்' என ஒரு புது மாதியான நடை போட்டு செல்லுவார்.

ஒருமுறை நான் வேகமாய் ஓடும்போது கீழே விழுந்து கால் பிசகி கொண்டது. அழுதபடியே வீட்டுக்கு நொண்டு நொண்டி வர பின்னாலேயே அவர் பதைப்பாய் வர, அதைப் பார்த்து அவரால் தான் அழுகிறேன் என அவரை எல்லோரும் திட்ட ஆரம்பித்தார்கள். திரும்பி அழுதவண்ணம் சைகையால் அவரை போ எனச் சொல்ல ஏதோ புரிந்து தொடர்வதை விட்டு விட்டார். அடுத்த நாள் நான் நன்றாக நடந்து செல்வதைப் பார்த்து சந்தோஷமாய் புன்னகைத்தார்.

இப்படியே தொடர சில நாட்கள் கழித்து என்னைப் பார்க்கும்போதெல்லாம் வாயினைக் குவித்து குழறிய வண்ணம் சப்தம் செய்வார். அப்புறம் பள்ளிப் படிப்பினை முடித்து, கல்லூரி சென்று விட்டேன். அவரை சில நாட்கள் மட்டும் தான் அதன் பிறகு பார்த்தேன்.

சில வருடங்கள் கழித்து அவரைக் காணாது நண்பர்களிடத்தே விசாரிக்க, அவர் எங்கோ கண்காணாத இடத்தில் இறந்துவிட்டதாய் சொன்னார்கள். மனம் பாரமாக, வீட்டிற்கு வந்து அப்போதுதான் அம்மாவிடம் அந்த கேள்வியைக் கேட்டேன், 'அம்மா, அவர் யார் என!'

அவர் எனது ஊரைச் சேர்ந்தவர்தானாம். வீடு, காடு எல்லாம் இருக்கிறதாம். ஒரு முறை பொங்கலன்று நடக்கும் மாடு விரட்டிதலில் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த அவரை ஒரு மாடு இடித்துதள்ள மடாரென கீழே விழுந்தவரின் புத்தி பேதலித்து விட்டதாம். நல்ல வேளை திருமணம் ஏதும் ஆகவில்லை எனச் சொன்னார்கள்.

'உனக்கு இன்னொரு விஷயம் தெரியுமா, ஒவ்வொரு மூனு மாசத்துக்கும் அவரின் துணிமணிகள் மாறும், ஆளு குளிச்சி சுத்தமா வருவாரு?' எனக் கேட்க நினைவுக்கு வந்து 'அட, ஆமாம் கவனிச்சிருக்கேன், ஏன்?' எனக் கேட்க, அம்மா சொன்ன பதிலால் என் மனம் கனத்துப்போனது...

ஒவ்வொரு மூன்றாவது மாதமும் அவரை குளிக்க வைத்து நாவிதரை அழைத்து முடியெல்லாம் மழிக்கச் செய்து புதிதாய் துணிகளை மாற்றிவிட்டு சென்றது அவரின் அத்தை மகளாம். அவரையே கல்யாணம் செய்துகொள்வதாய் உறுதியாய் இருந்து அவர் இந்த நிலைக்கு வந்ததும் வேறு ஒருவரை மணந்து கொண்டாலும், வந்து தனது மாமாவைப் பார்த்து விட்டு செல்வாராம், இறந்ததும் கூட அவரின் வீட்டில்தானம்.

துணைக்கு வாரியளா?...

|

தலையில் கட்டுடன் பேருந்துக்காக காத்திருக்கும் வேடியப்பனைப் பார்த்து எவருக்கும் அனுதாபமோ, பரிதாபமோ வரவில்லை. ஏனெனில் வேடியப்பன் கொஞ்சமல்ல..., நிறையவே  வித்தியாசமான பேர்வழி.

அவரைப் பற்றி நினைத்தாலோ, கேட்டாலோ அல்லது பார்த்தாலோ உங்களின் உள்ளத்தினுள்ளே ஏதோ ஒன்று பாய்ந்து சுறுசுறுப்பாக்கிவிடும். நம்பவில்லையா? இரு நாட்களுக்கு முன்  நடந்ததக் கேளுங்கள், அப்புறம் கண்டிப்பாய் நம்புவீர்கள். அதற்கு முன் அவரைப்பற்றிய சிறு அறிமுகம்.

ஒடிசலான சிவந்த தேகம், மெலிதாய் இருந்தாலும் வலுவான உடம்பு. சரக்கடித்தே பார்த்து பழக்கப்பட்டுவிட்டதால் சும்மாயிருக்கும்போதும் போதையிருக்கிறார்போல் தோன்றும் தெய்வீகக் களை பொருந்திய முகம். அதில் கொஞ்சமும் பொருந்தாத முரட்டு மீசை. புகைப்பதால் கருத்த காவியேறிய உதடுகள், பற்கள். மனைவி, பதினைந்து, பதினேழில் இரு மகன்கள். ஒருவன் பத்தாவது, மற்றவன் படிப்பு ஏறாததால் காட்டு வேலைக்கு அப்பாவுடன் துணையாய். இருக்கும் நிலத்தில் விவசாயம், மற்றும் கூலி வேலைக்கு செல்லுதல் என அவரது சம்பாத்தியம்.

அன்று காலை காட்டுக்கு சென்று வந்தவர் எந்த மரத்தின் வழியாய் வந்தாரோ தெரியவில்லை, ஞானம் வந்தார்போல் நம்பவே முடியாத ஒரு விஷயத்தை அவரது குடும்பத்தாருக்கு சொன்னார். ஆம், இனிமேல் அவர் குடிக்கவேப் போவதில்லையாம். சொன்ன ஜோரில் வெளியிலிருந்த தொட்டியில் தண்ணீரில் தலைக்கு குளித்தவர், குடும்பத்தையே குளிக்கவைத்து கோவிலுக்கு கூட்டிச் சென்றார்.

இனிமேல் குடிப்பதில்லை என சத்தியம் செய்ததோடு மட்டுமல்லாமல் ஒரு புதிய வேண்டுதலையும் சேர்த்துக்கொண்டார். அது, அவரது கிரமத்தைச் சுற்றியிருக்கும் மற்ற கோவில்களுக்கும் ஐம்பது ரூபாய் வீதம் உண்டியலில் போட்டு வேண்டிக்கொள்வது என்பதுதான்.

'கோவில் செல்லும் வாரம்' என சொல்லலாம்போல் ஒரு வாரம் அவரது குடும்பத்தார் எல்லோரும் பக்தி மயமாய் செல்ல, பார்த்த எல்லோரும் ஆச்சர்யப்பட்டு, சந்தோஷித்து கொஞ்சம் பயப்படும் செய்தார்கள். ஏன் என கடைசியில் பார்க்கத்தானே போகிறோம்.

கடைசியாய் குலதெய்வம் கோவிலுக்கு ஒரு வாளிப்பான சேவலுடன் எல்லோரும் சென்று பலிகொடுத்து, சாமி கும்பிட்டு விட்டு சந்தோஷமாய் வீட்டுக்கு வந்தார்கள். மறுபடியும் இரவு கறி சாப்பிட்டும்போது எப்போதும் சாப்பிடும் சரக்கு நினைவுக்கு வர, ஊர் மக்களுக்கே வழிகாட்டியாயிருக்கும் அந்த டாஸ்மாக்குக்கு சென்று வழக்கம்போல்.

சரக்கடித்துவிட்டு தலையில் லுங்கியைக் கட்டிக் கொண்டு கையில் மீதச் சரக்கொடு, டிராயரோடு வர, 'ஆரம்பிச்சிட்டான்யா, ஆரம்பிச்சிட்டான்' என எல்லோரும் நினைக்கும் வண்ணம் சப்தமாய் பாடி, அர்ச்சித்துக்கொண்டு வீட்டுக்கு வந்தார்.

அவரது மனைவி, 'சீ நீயெல்லாம் ஒரு மனுசன், உனக்கெல்லாம் மீசை' என சொல்லவும் கையிலிருந்த பாட்டிலின் மீதியைக் வாயிற்குள் கவிழ்க்க சுர்ரென சரக்கோடு கோபமும் தலைக்கு விர்ரென ஏறியது.

மனைவியை வழக்கம்போல் அடிக்க ஓடிவர, கருமமே கண்ணாய் குனிந்து முகத்தில் படாமல் அடிவாங்கும் மனைவி அன்று முதன் முறையாய் அவனது கையை தடுத்து செவிளில் பளீரென ஒரு அறை விட்டாள். அந்த அதிர்ச்சி போதாதென,பள்ளி செல்லும் மகன் கையை ஓங்கிக்கொண்டு அடிக்க வந்தான்.

'ஆஹா, குடும்பமே எனக்கு எதிரா ஆயிடுச்சா!.... நான் சிங்கம்ல... என்ன யாரும் ஒண்ணும் பண்ண முடியாது' என சொல்லி மகனைப் பார்த்து உன் கையால் அடிவாங்கினா எனக்கு மரியாதையில்லை எனச் சொல்லி இன்னும் அதிக கோபத்துடன் அருகில் இருந்த குழவிக்கல்லை எடுத்து அவரே தன் தலையில் போட்டுக்கொள்ள, தலையிலிருந்து பீறிட்டுக் கொண்டு ரத்தம்.

அதன் பிறகு யாரையும் பக்கத்தில் வருவதற்கோ அல்லது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கோ அனுமதிக்கவில்லை. கதவைப் பூட்டிக்கொண்டு உள்ளிருப்பு போராட்டம் என்கின்ற பெயரில் இரண்டு நாட்களுக்கு வெளியிலும் வரவில்லை, உள்ளேயும் விடவில்லை.

இப்போது தலையில் கட்டுப் போட்டுக்கொண்டு கோபித்துக்கொண்டு சென்ற மனைவி மகன்களை அழைத்துக் கொண்டு வர கிளம்பிக் கொண்டிருக்கிறார். துணைக்கு ஆள் வேண்டுமாம், அவரை நம்பிப் போகிறீர்களா?

அறிவுரை...

|

பேருந்துப் பயணம் ஏதாவது ஒரு விதத்தில் சுவராஸ்யமாகிவிடுகிறது, சுற்றுப்புறங்களை கூர்ந்து கவனித்து வரும்பொழுது. அன்றும் அப்படித்தான் ஒரு நண்பரைப் பார்ப்பதற்காக சின்னசேலம் செல்லுவதற்கு கிளம்பத் தயாராய் இருந்த ஒரு தனியார் பேருந்தில் ஏறி, நின்றேன். கிளம்பும் தருணத்தில் ஒருவர் அவசரமாய் 'செல்லி'யபடி இறங்கிப்போக காலியாயிருந்த அந்த கடைசி சீட்டில் அமர்ந்தேன்.

வழியில் ஒருவர் ஏறி, படியிலேயே நின்றுகொண்டு உள்ளே செல்லுவதற்கு எண்ணமே இல்லாதவர் போல் இருந்தார். கொஞ்சம் கழித்துத்தான் தெரிந்தது அவர் நல்ல போதையில் இருக்கிறார் என்று.

சாலையின் இருமருங்கிலும் வேலைகள் நடந்து கொண்டிருப்பதால் பேருந்து மாறி மாறி இரு பக்க சாலைகளிலும் வளைந்து வளைந்து அதி விரைவாய் சென்று கொண்டிருந்தது. ஒரு இடத்தில் இடது புறம் சட்டென வளைத்து வேகமாய் செல்ல, நமது நாயகர் நிலை தடுமாறி வெளியே சரிய கடைசி சீட்டில் இருந்த நாங்கள் இருவர் அவரது சட்டையை தாவிப் பிடித்துக் காப்பாற்றினோம்.

'ஒரு செகண்ட் தாமச்சிருந்தாலும் சங்குதாண்ணா' என்னோடு அந்த நபரை சேர்ந்திழுத்த உடனிருந்த ஒரு இருபது வயது இளைஞன்.

கேட்ட நமது நாயகர் 'பிறக்குறதே சாவறதுக்குத்தான். நான் எதுக்கும் தயார். போனால் போகட்டும் போடா' என பாட ஆரம்பித்துவிட்டார்.

டிக்கெட் வழங்க முன்புறத்திலிருந்து வந்த கண்டக்டரிடம் விவரம் சொல்ல, அவர் நம்மவரை மேலே வந்து நிற்கச் சொல்ல 'நான் செடியா இருக்கேன், இப்படித்தான் வருவேன்' எனச் சொல்லி வண்டியின் ஆட்டத்துக்கு ஏற்றபடி ஆடியவண்ணம் வர,

'ஏன் சார் புடிச்சி காப்பாத்தினீங்க, விட்டிருக்க வேண்டியது தானே... நேத்துதான் இதே மாதிரி ஒரு கேசுக்காக கோர்ட்டுக்கு போயிட்டு வந்தேன். விழுந்துட்டா கண்டுக்காம போயிட்டுருப்போம், யாரால ஆவும் இந்த எழவெல்லாம்' என அவருக்கு நேர்ந்த கடுப்பில் சொன்னார்.

கொஞ்சம் கழித்து வழியில் கல்லூரி அருகே பேருந்து நிற்க, என்ன நினைத்தாரோ தெரியவில்லை, மெதுவாய் உள்ளே வந்து கம்பியைப் பிடித்துக் கொண்டு தள்ளாடியபடி நின்றுகொண்டார்.

அப்போதுதான் ஏறிய ஒரு கல்லூரி மாணவர் ஸ்டைலாக படியில் நின்றவாறு பயணம் செய்ய ஆரம்பிக்க நம்மவருக்கு வந்தது பாருங்கள் கோபம்... 'அறிவில்ல? படியில நின்னுகிட்டு வர்றீயே,  விழுந்து சாவறதுக்கா உன்ன பெத்தாங்க' என சகட்டு மேனிக்கு திட்ட ஆரம்பித்தார்.


அந்த மாணவர் பேயடித்தார்போல் ஆகி, முகம் சிறுத்து வண்டியின் நடுவில் போய் நின்று கொண்டார். இருப்பினும் நம்மவர் தனது வசைகளை நிறுத்தவில்லை, மாணவரைப் பார்த்து திட்டிக்கொண்டே வந்தார்.

ஒரு வழியாய் நம்மவர் இறங்கி சென்றதும் அந்த மாணவர், 'என்னை எப்படி அப்படி சொல்லலாம், பார்த்து விடுகிறேன், தீர்த்துவிடுகிறேன்' என ஆரம்பிக்க, இதையெல்லாம் கவனித்து வந்த ஒரு முதியவர்,

'தம்பி, கொஞ்சம் மூடு. அந்த ஆளு இருக்கிற வரைக்கும் கம்முனு இருந்துட்டு இறங்கி போனதுக்கப்புறம் ஓவரா சவுண்டு விடுற?' எனக் கேட்க, அந்த கல்லூரி மாணவர் வண்டியின் முன்பக்கத்துக்கு விருட்டென சென்று விட்டார்.

பக்கத்தில் இருந்தவர் 'அது எப்படின்னா அந்த ஆளு அட்வைஸ் பண்ணலாம், அந்த தம்பிக்கு' என அங்கலாய்ப்பாய் கேட்க,

'விடுங்க தம்பி, எமனோட கைகுலுக்கிட்டுல்ல வந்திருக்காரு, சொன்னதும் நல்லதுக்குத்தானே' என்றேன்.

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB