வாய்ச்சொல்லில் வீரரடி...

|

பொய் சொல்லி புரளி பேசி
புனைவுகளை வினவச் செய்து
மெய் வந்து பொய் போக
பொய்யேதான் மெய்யெனவே
பிசுபிசித்து பேசிடுவோம்...

செய்வதை விட்டுவிட்டு
சினையாடு சிரைத்தலாய்
பொய்யது புடம்போட்டு
போவோரை வருவோரை
புறம்பேசி மகிழ்ந்து

குற்றம் குறையதனை
குட்டிடவே மற்றவரை
குறைகூறி குற்றமதை
குழிதோண்டி புதைத்திட்டு
கூப்பாடும் போட்டிடுவோம்...

வெற்றியது எங்களுக்கு
வெறும்பேச்சு பேசிட்டு
பெருமையாய் கண்ணாடி
பிரதிக்கும் பிம்பம் பார்த்து
மறை கழன்ற மதியுடனே
மன்னித்தோம் சொல்லிடுவோம்...

தேர்தல் பணியில்... - II

|

(முதல் பகுதியை படிக்காவிட்டால் இங்கு படித்துப் படியுங்களேன்...)

ஐந்து மணிக்கே எல்லோரும் பரபரப்பாய் எழுந்தோம். உடும்பியம், கல்லேறிப்பட்டி என இரு ஊர்களுக்கும் ஒரே தலைவர் என்பதால் இரண்டு ஊர்களைச் சேர்ந்தவர்களுக்கும் பலத்தப் போட்டி.உடும்பியம் கல்லேறிப்பட்டியைவிட பெரியது, எனவே எல்லாத் தேவைகளுக்கும்
அவர்கள்தான் இங்கே வரவேண்டும். இந்த முறை எப்படியாவது நமது ஊரைச் சேர்ந்தவர் தலைவராக வந்தே ஆகவேண்டும் எனௌம் முனைப்போடு க.பட்டிக் காரார்கள் இருந்தார்கள்.

வேட்பாளர்களாய் இருப்பவர்கள் இருவரும் அதிகாலையிலேயே வந்து எங்களுக்கு எல்லாம் வணக்கம் போட்டுவிட்டு என்ன உங்களுக்குத் தேவையோ சொல்லுங்கள், உடனே செய்கிறோம் எனத் துடிப்பாய் நின்றார்கள். பார்க்கும்போதெல்லாம் ஒரு பெரிய புன்னகை மரியாதை கலந்து. என் வாழ்நாளில் இதுவரை என்னை இவ்வளவு மரியாதையாய் பார்த்தவர்கள் கிடையாது.

சூடாய் கிடைத்த இட்லி, தோசை பூரி என எனாவற்றிலும் கொஞ்சம் கொஞ்சமாய் வயிறு நிரம்ப சாப்பிட்டோம். ஓட்டு எண்ணிக்கை ஆரம்பிக்கும் முன்னரே கூட்டம் கூட ஆரம்பித்துவிட்டது, எல்லோரும் வரிசையில் நின்றார்கள்.

மை வைத்தல், இருக்கும் பட்டியலில் சரிபார்த்தல், வாக்குச் சீட்டினை தருதல் என ஒவ்வொருவரும் ஒவ்வொரு வேலை. எங்களுக்கு எதிரில் ஒவ்வொரு வேட்பாளருக்கும் ஒரு ஏஜன்ட். வருபவர் சரியான நபர்தானா என. அப்போதெல்லாம் அடையாள அட்டையோ, புகைப்படத்துடன் கூடிய குடும்ப அட்டையோ கிடையாது. எதிரில் அமர்ந்திருப்பவர்கள் ஏதேனும் மறுப்புத் தெரிவித்தால் நாங்கள் ஓட்டுப்போட அனுமதிக்கக் கூடாது.

முதல் ஒரு மணிநேரம் எல்லாம் ஒழுங்காய் போய்க்கொண்டிருந்தது. திடீரென சலசலப்பு. க.பட்டியைச் சேர்ந்த ஒருவர் கள்ள ஓட்டு போட வந்திருப்பதாய் புகார் சொல்ல, பதிலுக்கு அவர்களும் ஏதோ சொல்ல அந்த இடமே களேபரமாகியது.

பேச்சு பேச்சுவாக்கில் இருக்க, திடீரென ஒருவர் க.பட்டி வேட்பாளரை ஓங்கி கன்னத்தில் அறைந்தார். இது போதாதா, விஷயம் பெரிதாக! எல்லோரும் சகட்டு மேனிக்கு அடித்துக்கொண்டு புரள ஆரம்பித்துவிட்டார்கள். இருந்த சொற்ப காவலர்களைக் கொண்டு எல்லோரையும் அப்புறப்படுத்தி கதவினை தாழிட்டுக்கொண்டோம். வெளியே இன்னும் அதிகமாய் கூச்சல் குழப்பங்கள்.

கதவுகளில் பெரிய பெரிய கற்களால் அடிக்கும் சப்தம் எங்களின் கிலியை அதிகப்படுத்த, கதவில்லா சன்னல்களின் வழியாக சர் சர்-ரென கற்கள் சாரை சாரையாய் உள்ளே விழ ஆரம்பித்தன. வேகமாய் வந்த ஒரு செங்கல் சுவற்றில் பட்டுத் தெறித்து பணியாற்ற வந்திருந்த ஒரு பெண்மணியின் மூக்கில் பட்டு ரத்தம் கொட்டத் தொடங்கியது.

நாங்களெல்லம் கற்கள் வந்து விழாத இடத்தில் தரையோடு தரையாக பல்லிபோல் ஒட்டிக்கொண்டு கிடந்தோம், விழுந்தாலும் தலைக்கு ஏதும் ஆகக் கூடாது என தலையில் மேல் ஒரு மொத்தமான அட்டையை வைத்துக்கொண்டு. இரண்டு மணி நேரம் நரக வேதனை... பெரம்பலூரில் இருந்து போலீசார் நிறைய வந்து, எல்லாவற்றையும் கட்டுப்படுத்தி கதவினைத் திறந்தார்கள்.

அதன் பின் தேர்தல் வழக்கம்போல் நடந்தது. நாங்களெல்லாம் வழக்கத்துக்கு மாறாய் நடுங்கியவாறே கடமைக்கு வேலை செய்தோம். குண்டூசி விழுந்தாலும் சம்தம் கேட்குமளவிற்கு இருந்தது. ஒரு வழியாய் தேர்தல் முடிந்தது.

பெரும் நிம்மதியாய் மெதுவாய் வெளியே வந்தோம். சண்டையிட்டுக் கொண்டிருந்த இரு ஊரின் வேட்பாளர்களும் சிரித்தவண்ணம் பேசிக்கொண்டிருந்தார்கள். எங்களைப் பார்த்ததும் இருவரும் சேர்ந்தார்போல் மிகவும் மரியாதையாய் வணக்கம் சொல்லி புன்னகைத்தார்கள்.

(வாக்கு எண்ணும்போது நடந்த ஒரு விஷயம் அடுத்த இடுகையில்)

தேர்தல் பணியில்... - I

|

தேர்தல்... மக்களையெல்லாம் மேலும் ஏமாளிகளாகவும், இலவச கவர்ச்சி நச்சுக்களால் சமூகத்தை பாழ்படுத்தவும், பெரிதாய் மாற்றங்கள் வரப்போகின்றன என (அவ)நம்பிக்கையை ஏற்படுத்தவும், அழகாய் அரசியல்(வியா)வாதிகள் அல்வாக் கொடுக்கவும் ஏற்படுத்தப்பட்ட ஒரு களம். இந்த களத்திலே எல்லோருக்கும் ஒரு விதத்தில் பங்களிக்க வாய்ப்பு இருப்பினும், தேர்தல் நாளன்று வாக்குச் செலுத்தும் இடத்தில் அதிகாரிகளாய், பணிபுரிபவர்களாய் இருப்பதற்கு அரசு அல்லது அதனைச் சார்ந்த பணியில் இருந்தாக வேண்டிய கட்டாயச் சூழல் இருப்பதால் நமக்கும் அந்த ஒரு வாய்ப்புக் கிட்டியது.

பெரம்பலூர் கல்லூரியில் படித்து முடித்தபின் அங்கேயே விரிவுரையாளராய் வேலை பார்த்துக்கொண்டிருந்த சமயம் உள்ளாட்சித் தேர்தலுக்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தன. அதற்காக எங்களது கல்லூரியில் இருந்து நாங்களெல்லாம் வாக்குப் பதிவு நடைபெறும், எண்ணுகின்ற நாளன்றும் பணியில் அமர்த்தப்பட்டோம்.

முதல் நாளே எல்லோருக்க்கும் எங்கெங்கு செல்லவேண்டும் என விவரம் வந்துவிட, எங்களில் நால்வருக்கு மட்டும் வரவில்லை. நாங்கள் 'ரிசர்வ்'-வில் இருக்கிறோமாம்; யாராவது வரவில்லை என்றால் பதிலுக்கு அனுப்புவார்களாம்; ஒன்றிய அலுவலகத்தில் தங்கியிருக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறதாம்; அங்கு சென்று காத்திருக்க வேண்டுமாம்.

பணி இல்லையென்றாலும் ஊதியம் கிடைத்துவிடும் என்று சொன்னாலும், அதீத ஆர்வத்துடன் இருந்த நமக்கு பலூனில் ஊசி குத்தியது போல் ஆகியது. எல்லோருமாய் கிளம்பினோம்.

போகும்போது திருச்சி மாவட்ட எல்லையில் இருக்கும் உடும்பியம் கிராமத்தில் 'ப்ரொசீடிங் ஆபிசராக அனுப்பப் பட்டவர் குடித்து கலாட்டா செய்ய அவருக்கு மாற்று வேண்டுமெனக் கேட்டிருப்பதாக தகவல் வந்தது. மாற்றாய் யார் செல்லுகிறீர்கள் எனக் கேட்ட மறு நொடியே ஒத்துக்கொண்டேன், எங்கள் ஊரான தெடாவூரிலிருந்து எட்டு கி.மீ. என்பதால், வரப்போகும் விளைவுகளை சிந்திக்காமல்.

இரவு எட்டரை மணியளவில் வாக்குச் சாவடியாய் இருந்த அந்த பள்ளிக்கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டேன். அவர்கள் என்னைப் பற்றி விசாரிக்க, ஓ… ராமசாமி மகனா நீ, உங்க அப்பாவுடன் வேலை பார்த்திருக்கிறேன்’ என அவரின் பெயரைச் சொல்லி அப்பாவிடம் கேட்கச் சொன்னார். பள்ளியின் முன்புறம் இருந்த மைதானக் கொடிக்கம்பத்தின் திட்டில் யாகவா முனிவரை மாதிரி ஆனால் சட்டையினைப் போட்டுக்கொண்டு ஒருவர் கைகளை ஆட்டி ஏதோ பேசிக்கொண்டிருந்தார். ஜீப் வந்து நிற்பதைப் பார்த்து எல்லோரும் பரபரப்பாய் வந்தார்கள்.

மெதுவாய் ஜீப்பிலிருந்து இறங்கி இருவரோடு எல்லோருமாய் பக்கத்தில் சென்றோம். வாகனச் சத்தம் கேட்டு ஏற்கனவே வந்திருப்பவர்களும் வந்து சேர அவரை நெருங்கினோம்.

'சார், கிளம்புங்க, உங்களுக்கு வேறு ஊரில் ட்யூட்டி' என சொல்ல,

'டேய் என்னை என்னவென நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள், நான் யார் தெரியுமா?, என்னைப் பார்த்தால் கலக்டரே பயப்படனும்' என்று சொல்லி மரியாதையில்லாமல் கெட்ட வார்த்தைகளால் வைய ஆரம்பித்தார்.

’ஆமாங்க சார், பயந்து போய்தான் உங்களை வேறு ஊருக்கு மாற்றியிருக்கிறார்கள் என வ.வ.அதிகாரி நைச்சியமாய் சொல்லி ஜீப்பில் ஏறச் சொன்னார்.

‘எனக்கு மாற்றாய் வந்த அற்பப் பதர் யார்?’ என வண்டியில் ஏறும்முன் ஒரு கேள்வியைக் கேட்க, என்னை எல்லோரும் பார்க்க, அவர் ஏற இறங்க என்னைப் பார்த்து ’உனக்கு இருக்கிறது’ என சொல்ல, ’சார் உங்களுக்கும் இருக்கிறது’ என கொஞ்சம் கடுமையாய் சொல்லி, தயாராய் வைத்திருந்த அவர் கொண்டு வந்த பையோடு அனுப்பி வைத்தார்கள்.

வயதில் என்னைவிட மூத்த ஆசிரியர் ஒருவர் உறுதுணையாய் இருக்க ஏற்பாடுகளையெல்லாம் கவனித்துவிட்டு, தயாராய் இருந்த இரவு உணவினை முடித்து கண்ணயர்ந்தோம், நாளைக்கு நடக்கப்போகும் விபரீதங்கள் எதுவும் அறியாமல்…

(தொடரும்)

சச்சின்... என் தம்பி!...

|

சச்சின் விளையாட ஆரம்பித்த நாளிலிருந்து இன்று வரை அனைத்து ஆட்டங்களையும் பார்த்து வந்திருக்கிறேன். சச்சின் விளையாடும் போட்டிகளை அதீத ஆர்வத்துடன் பார்ப்பேன், மற்றைய ஆட்டங்களையும் பார்ப்பேன். சச்சின் விளையாடும் முதல் பந்தினைத் தவிர்த்துத்தான் பார்ப்பேன்.

ஒரு சமயத்தில் சச்சின் அவுட் ஆனால் அதன் பின் பார்ப்பதை விட்டுமிடுமளவிற்கு இருந்த நான், நாளடைவில் மற்றவர்கள் விளையாடுவதையும் பார்க்க ஆரம்பித்தேன்.

சச்சினை தம்பி எனத்தான் அழைப்பேன். என் தம்பிக்கும் சச்சின் என்றால் உயிர். வானம்பாடிகள் அய்யா சச்சின் கையிழுத்திட்ட பேட்டை வாங்கித்தருகிறேன் எனச் சொன்னபோது எவ்வளவு மகிழ்ந்தேன் தெரியுமா?

முதல் நபராக இருநூறு ரன்கள் எடுத்த அன்று நண்பர்களுக்கு ட்ரீட் கொடுத்தேன். இன்றும் சச்சின் 100 அடித்தால் 'என்ன உன் பிரதர் செஞ்சுரி போலிருக்கு' என் என் நண்பர்கள் போனில் அழைத்து பேசுவார்கள். சச்சினுடன் எனது குடும்பத்தாரோடு டின்னர் சப்பிடவேண்டும் என்பது எனது நெடுநாளைய கனவுகளில் ஒன்று.

ஒரு விளையாட்டு வீரன் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு சச்சினை கண்டிப்பாய் உதாரணமாய் காட்டலாம். எத்தனை விதமான விமர்சனங்கள்?... விமர்சனங்களுக்கெல்லாம் பேட்-டில் பதில் சொல்லி எத்தனையோ சறுக்கல்கள் வந்தாலும் அதையெல்லாம் தாண்டி சாதனைகள் படைத்துவரும் என் தம்பி சச்சின்... நீ இன்னும் சில ஆண்டுகள் விளையாட வேண்டும், இன்னும் பல சாதனைகளை நிகழ்த்தவேண்டும். உலகக் கோப்பை-யை வாங்கித் தந்தாலும் தொடர்ந்து விளையாட வேண்டும்.

வீரண்ணன்...

|

சிறு வயதில், விவரம் புரியாத வயதில் யாரையாவது பார்க்கும்போதெல்லாம் பயந்திருக்கிறீர்களா?... ஆமென்றால் என் இனம(டா)ய்யா நீ(ர்) என நான் சொல்லிக்கொள்ளலாம்.

தளர்ந்த உடல், லேசாய் கூன் விழுந்த முதுகு, மழிக்கப்படாத முகத்தில் காடென மீசை, தாடி, அழுக்கான ஆனால் கிழிந்திருக்காத சட்டை, முழுக்கால் சட்டை, கையில் ஒரு தூக்குவாளி இதுதான் வீரண்ணனின் அடையாளம்.

வீரண்ணனனிடம் பிடித்துக்கொடுத்துவிடுவேன் எனச் சொன்னால் அழும் பிள்ளைகள் கூட வாயை மூடிக்கொள்ளும்; பார்த்தால் சிரிக்கும் குழந்தை கூட அழ ஆரம்பித்துவிடும். அவரைப் பார்த்தால் ஓ....வென எல்லோருமாய் கத்திக்கொண்டு போய் அவரது சட்டையினை பிடித்து இழுப்போம், சிறுசிறு கற்களால் அவரை அடிப்போம். அவரும் பதிலுக்கு  கையில் கிடைத்தவற்றைக் கொண்டு எங்களை நோக்கி வீசுவார்.

சில நாட்களில் விவரமாய் கையில் ஒரு குச்சியுடனே வருவார், முன்னெச்சரிக்கையாய். ஊரில் உள்ள எல்லா வீடுகளிலும் சாப்பாடு கேட்கமாட்டார். ஒரு சில வீடுகளில் மட்டும்தான், அதுவும் வாயைத் திறந்து கேட்கமாட்டார். வாசலிலேயே கவனிக்கும் வரை நின்று கொண்டிருப்பார். போடுவதை வாங்கிக்கொண்டு, எடுத்து சாப்பிட்டவாறே சென்றுவிடுவார்.

காசு கொடுத்தால் வாங்கிக்கொள்ள மாட்டார். அதன் மதிப்பு தெரியாதோ அல்லது அவருக்கு தேவையில்லையோ என்னவோ... அவருக்கென ஒரு கணக்குபோல் வைத்துக்கொண்டார்போல் ஊரில் எல்லாப் புறங்களிலும் திரிந்துகொண்டிருப்பார்.

மூன்று மாதத்திற்கு ஒரு முறை அவரின் கோலம் மாறும். மழித்த முகத்தோடு புதிதாய் சட்டை பேண்ட் எல்லாம் போட்டிருப்பார். வைத்திருக்கும் தூக்குவாளியும் கூட புதிதாய் இருக்கும். அதற்கெல்லாம் அப்போது காரணம் தெரியாது.

ஆரம்பத்தில் அவரைப் பார்த்து மிகப் பயந்த நான் ஒரு சமயம் எங்கள் வீட்டுக்கு சாப்பாடு கெட்க வந்த சமயத்தில் அம்மா சப்பாட்டினைக் கொடுத்து அவரது தட்டில் போட்டுவிட்டு வரச் சொல்ல, மறுத்து... பின் பயந்தவண்ணம்  நடுங்கியவாறு அவரது தட்டில் இட்டேன். சனி ஞாயிறுகளில் எங்கள் வீட்டில் கேட்கும் வழக்கம் வைத்திருந்தார். எங்கள் வீட்டில் எல்லோரும் அன்றுதான் வீட்டில் இருப்போம் என்பதைப் புரிந்து வைத்திருந்திருக்கிறார் என எண்ணுகிறேன்.

அதன்பிறகு சில நாட்களில் பயம் சுத்தமாய் விலகிவிட அவருக்கு சாப்பாட்டினை நான்தான் போடுவேன் என எனது வேலையாக்கிகொண்டேன். நாட்பட நாட்பட இருவருக்குமிடையே சினேகப்பூர்வமான ஒரு மெல்லிய புரிதல் ஏற்பட்டது. மெலிதாய் சிரிப்பார், சைகையில் ஏதோ சொல்ல முயல்வார். கண்களில் ஒரு சந்தோஷம், நன்றி தெரிவதாய் இருக்கும்.

அதுவரை அவரின் சட்டையைப் பிடித்திழுக்க்க ஓடினால் முதல் ஆளாய் ஓடும் நான் 'டேய் வேண்டாம்டா, பாவம்' எனச் சொல்லி எனது நண்பர்களை தடுக்க முயற்சிப்பேன். என்னை அவர்கள் கேலி செய்தாலும் பொருட்படுத்த மாட்டேன். என்னை எங்கு பார்த்தாலும் புன்னகைப்பார். சந்தோஷமாகி 'விலுக் விலுக்' என ஒரு புது மாதியான நடை போட்டு செல்லுவார்.

ஒருமுறை நான் வேகமாய் ஓடும்போது கீழே விழுந்து கால் பிசகி கொண்டது. அழுதபடியே வீட்டுக்கு நொண்டு நொண்டி வர பின்னாலேயே அவர் பதைப்பாய் வர, அதைப் பார்த்து அவரால் தான் அழுகிறேன் என அவரை எல்லோரும் திட்ட ஆரம்பித்தார்கள். திரும்பி அழுதவண்ணம் சைகையால் அவரை போ எனச் சொல்ல ஏதோ புரிந்து தொடர்வதை விட்டு விட்டார். அடுத்த நாள் நான் நன்றாக நடந்து செல்வதைப் பார்த்து சந்தோஷமாய் புன்னகைத்தார்.

இப்படியே தொடர சில நாட்கள் கழித்து என்னைப் பார்க்கும்போதெல்லாம் வாயினைக் குவித்து குழறிய வண்ணம் சப்தம் செய்வார். அப்புறம் பள்ளிப் படிப்பினை முடித்து, கல்லூரி சென்று விட்டேன். அவரை சில நாட்கள் மட்டும் தான் அதன் பிறகு பார்த்தேன்.

சில வருடங்கள் கழித்து அவரைக் காணாது நண்பர்களிடத்தே விசாரிக்க, அவர் எங்கோ கண்காணாத இடத்தில் இறந்துவிட்டதாய் சொன்னார்கள். மனம் பாரமாக, வீட்டிற்கு வந்து அப்போதுதான் அம்மாவிடம் அந்த கேள்வியைக் கேட்டேன், 'அம்மா, அவர் யார் என!'

அவர் எனது ஊரைச் சேர்ந்தவர்தானாம். வீடு, காடு எல்லாம் இருக்கிறதாம். ஒரு முறை பொங்கலன்று நடக்கும் மாடு விரட்டிதலில் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த அவரை ஒரு மாடு இடித்துதள்ள மடாரென கீழே விழுந்தவரின் புத்தி பேதலித்து விட்டதாம். நல்ல வேளை திருமணம் ஏதும் ஆகவில்லை எனச் சொன்னார்கள்.

'உனக்கு இன்னொரு விஷயம் தெரியுமா, ஒவ்வொரு மூனு மாசத்துக்கும் அவரின் துணிமணிகள் மாறும், ஆளு குளிச்சி சுத்தமா வருவாரு?' எனக் கேட்க நினைவுக்கு வந்து 'அட, ஆமாம் கவனிச்சிருக்கேன், ஏன்?' எனக் கேட்க, அம்மா சொன்ன பதிலால் என் மனம் கனத்துப்போனது...

ஒவ்வொரு மூன்றாவது மாதமும் அவரை குளிக்க வைத்து நாவிதரை அழைத்து முடியெல்லாம் மழிக்கச் செய்து புதிதாய் துணிகளை மாற்றிவிட்டு சென்றது அவரின் அத்தை மகளாம். அவரையே கல்யாணம் செய்துகொள்வதாய் உறுதியாய் இருந்து அவர் இந்த நிலைக்கு வந்ததும் வேறு ஒருவரை மணந்து கொண்டாலும், வந்து தனது மாமாவைப் பார்த்து விட்டு செல்வாராம், இறந்ததும் கூட அவரின் வீட்டில்தானம்.

துணைக்கு வாரியளா?...

|

தலையில் கட்டுடன் பேருந்துக்காக காத்திருக்கும் வேடியப்பனைப் பார்த்து எவருக்கும் அனுதாபமோ, பரிதாபமோ வரவில்லை. ஏனெனில் வேடியப்பன் கொஞ்சமல்ல..., நிறையவே  வித்தியாசமான பேர்வழி.

அவரைப் பற்றி நினைத்தாலோ, கேட்டாலோ அல்லது பார்த்தாலோ உங்களின் உள்ளத்தினுள்ளே ஏதோ ஒன்று பாய்ந்து சுறுசுறுப்பாக்கிவிடும். நம்பவில்லையா? இரு நாட்களுக்கு முன்  நடந்ததக் கேளுங்கள், அப்புறம் கண்டிப்பாய் நம்புவீர்கள். அதற்கு முன் அவரைப்பற்றிய சிறு அறிமுகம்.

ஒடிசலான சிவந்த தேகம், மெலிதாய் இருந்தாலும் வலுவான உடம்பு. சரக்கடித்தே பார்த்து பழக்கப்பட்டுவிட்டதால் சும்மாயிருக்கும்போதும் போதையிருக்கிறார்போல் தோன்றும் தெய்வீகக் களை பொருந்திய முகம். அதில் கொஞ்சமும் பொருந்தாத முரட்டு மீசை. புகைப்பதால் கருத்த காவியேறிய உதடுகள், பற்கள். மனைவி, பதினைந்து, பதினேழில் இரு மகன்கள். ஒருவன் பத்தாவது, மற்றவன் படிப்பு ஏறாததால் காட்டு வேலைக்கு அப்பாவுடன் துணையாய். இருக்கும் நிலத்தில் விவசாயம், மற்றும் கூலி வேலைக்கு செல்லுதல் என அவரது சம்பாத்தியம்.

அன்று காலை காட்டுக்கு சென்று வந்தவர் எந்த மரத்தின் வழியாய் வந்தாரோ தெரியவில்லை, ஞானம் வந்தார்போல் நம்பவே முடியாத ஒரு விஷயத்தை அவரது குடும்பத்தாருக்கு சொன்னார். ஆம், இனிமேல் அவர் குடிக்கவேப் போவதில்லையாம். சொன்ன ஜோரில் வெளியிலிருந்த தொட்டியில் தண்ணீரில் தலைக்கு குளித்தவர், குடும்பத்தையே குளிக்கவைத்து கோவிலுக்கு கூட்டிச் சென்றார்.

இனிமேல் குடிப்பதில்லை என சத்தியம் செய்ததோடு மட்டுமல்லாமல் ஒரு புதிய வேண்டுதலையும் சேர்த்துக்கொண்டார். அது, அவரது கிரமத்தைச் சுற்றியிருக்கும் மற்ற கோவில்களுக்கும் ஐம்பது ரூபாய் வீதம் உண்டியலில் போட்டு வேண்டிக்கொள்வது என்பதுதான்.

'கோவில் செல்லும் வாரம்' என சொல்லலாம்போல் ஒரு வாரம் அவரது குடும்பத்தார் எல்லோரும் பக்தி மயமாய் செல்ல, பார்த்த எல்லோரும் ஆச்சர்யப்பட்டு, சந்தோஷித்து கொஞ்சம் பயப்படும் செய்தார்கள். ஏன் என கடைசியில் பார்க்கத்தானே போகிறோம்.

கடைசியாய் குலதெய்வம் கோவிலுக்கு ஒரு வாளிப்பான சேவலுடன் எல்லோரும் சென்று பலிகொடுத்து, சாமி கும்பிட்டு விட்டு சந்தோஷமாய் வீட்டுக்கு வந்தார்கள். மறுபடியும் இரவு கறி சாப்பிட்டும்போது எப்போதும் சாப்பிடும் சரக்கு நினைவுக்கு வர, ஊர் மக்களுக்கே வழிகாட்டியாயிருக்கும் அந்த டாஸ்மாக்குக்கு சென்று வழக்கம்போல்.

சரக்கடித்துவிட்டு தலையில் லுங்கியைக் கட்டிக் கொண்டு கையில் மீதச் சரக்கொடு, டிராயரோடு வர, 'ஆரம்பிச்சிட்டான்யா, ஆரம்பிச்சிட்டான்' என எல்லோரும் நினைக்கும் வண்ணம் சப்தமாய் பாடி, அர்ச்சித்துக்கொண்டு வீட்டுக்கு வந்தார்.

அவரது மனைவி, 'சீ நீயெல்லாம் ஒரு மனுசன், உனக்கெல்லாம் மீசை' என சொல்லவும் கையிலிருந்த பாட்டிலின் மீதியைக் வாயிற்குள் கவிழ்க்க சுர்ரென சரக்கோடு கோபமும் தலைக்கு விர்ரென ஏறியது.

மனைவியை வழக்கம்போல் அடிக்க ஓடிவர, கருமமே கண்ணாய் குனிந்து முகத்தில் படாமல் அடிவாங்கும் மனைவி அன்று முதன் முறையாய் அவனது கையை தடுத்து செவிளில் பளீரென ஒரு அறை விட்டாள். அந்த அதிர்ச்சி போதாதென,பள்ளி செல்லும் மகன் கையை ஓங்கிக்கொண்டு அடிக்க வந்தான்.

'ஆஹா, குடும்பமே எனக்கு எதிரா ஆயிடுச்சா!.... நான் சிங்கம்ல... என்ன யாரும் ஒண்ணும் பண்ண முடியாது' என சொல்லி மகனைப் பார்த்து உன் கையால் அடிவாங்கினா எனக்கு மரியாதையில்லை எனச் சொல்லி இன்னும் அதிக கோபத்துடன் அருகில் இருந்த குழவிக்கல்லை எடுத்து அவரே தன் தலையில் போட்டுக்கொள்ள, தலையிலிருந்து பீறிட்டுக் கொண்டு ரத்தம்.

அதன் பிறகு யாரையும் பக்கத்தில் வருவதற்கோ அல்லது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கோ அனுமதிக்கவில்லை. கதவைப் பூட்டிக்கொண்டு உள்ளிருப்பு போராட்டம் என்கின்ற பெயரில் இரண்டு நாட்களுக்கு வெளியிலும் வரவில்லை, உள்ளேயும் விடவில்லை.

இப்போது தலையில் கட்டுப் போட்டுக்கொண்டு கோபித்துக்கொண்டு சென்ற மனைவி மகன்களை அழைத்துக் கொண்டு வர கிளம்பிக் கொண்டிருக்கிறார். துணைக்கு ஆள் வேண்டுமாம், அவரை நம்பிப் போகிறீர்களா?

அறிவுரை...

|

பேருந்துப் பயணம் ஏதாவது ஒரு விதத்தில் சுவராஸ்யமாகிவிடுகிறது, சுற்றுப்புறங்களை கூர்ந்து கவனித்து வரும்பொழுது. அன்றும் அப்படித்தான் ஒரு நண்பரைப் பார்ப்பதற்காக சின்னசேலம் செல்லுவதற்கு கிளம்பத் தயாராய் இருந்த ஒரு தனியார் பேருந்தில் ஏறி, நின்றேன். கிளம்பும் தருணத்தில் ஒருவர் அவசரமாய் 'செல்லி'யபடி இறங்கிப்போக காலியாயிருந்த அந்த கடைசி சீட்டில் அமர்ந்தேன்.

வழியில் ஒருவர் ஏறி, படியிலேயே நின்றுகொண்டு உள்ளே செல்லுவதற்கு எண்ணமே இல்லாதவர் போல் இருந்தார். கொஞ்சம் கழித்துத்தான் தெரிந்தது அவர் நல்ல போதையில் இருக்கிறார் என்று.

சாலையின் இருமருங்கிலும் வேலைகள் நடந்து கொண்டிருப்பதால் பேருந்து மாறி மாறி இரு பக்க சாலைகளிலும் வளைந்து வளைந்து அதி விரைவாய் சென்று கொண்டிருந்தது. ஒரு இடத்தில் இடது புறம் சட்டென வளைத்து வேகமாய் செல்ல, நமது நாயகர் நிலை தடுமாறி வெளியே சரிய கடைசி சீட்டில் இருந்த நாங்கள் இருவர் அவரது சட்டையை தாவிப் பிடித்துக் காப்பாற்றினோம்.

'ஒரு செகண்ட் தாமச்சிருந்தாலும் சங்குதாண்ணா' என்னோடு அந்த நபரை சேர்ந்திழுத்த உடனிருந்த ஒரு இருபது வயது இளைஞன்.

கேட்ட நமது நாயகர் 'பிறக்குறதே சாவறதுக்குத்தான். நான் எதுக்கும் தயார். போனால் போகட்டும் போடா' என பாட ஆரம்பித்துவிட்டார்.

டிக்கெட் வழங்க முன்புறத்திலிருந்து வந்த கண்டக்டரிடம் விவரம் சொல்ல, அவர் நம்மவரை மேலே வந்து நிற்கச் சொல்ல 'நான் செடியா இருக்கேன், இப்படித்தான் வருவேன்' எனச் சொல்லி வண்டியின் ஆட்டத்துக்கு ஏற்றபடி ஆடியவண்ணம் வர,

'ஏன் சார் புடிச்சி காப்பாத்தினீங்க, விட்டிருக்க வேண்டியது தானே... நேத்துதான் இதே மாதிரி ஒரு கேசுக்காக கோர்ட்டுக்கு போயிட்டு வந்தேன். விழுந்துட்டா கண்டுக்காம போயிட்டுருப்போம், யாரால ஆவும் இந்த எழவெல்லாம்' என அவருக்கு நேர்ந்த கடுப்பில் சொன்னார்.

கொஞ்சம் கழித்து வழியில் கல்லூரி அருகே பேருந்து நிற்க, என்ன நினைத்தாரோ தெரியவில்லை, மெதுவாய் உள்ளே வந்து கம்பியைப் பிடித்துக் கொண்டு தள்ளாடியபடி நின்றுகொண்டார்.

அப்போதுதான் ஏறிய ஒரு கல்லூரி மாணவர் ஸ்டைலாக படியில் நின்றவாறு பயணம் செய்ய ஆரம்பிக்க நம்மவருக்கு வந்தது பாருங்கள் கோபம்... 'அறிவில்ல? படியில நின்னுகிட்டு வர்றீயே,  விழுந்து சாவறதுக்கா உன்ன பெத்தாங்க' என சகட்டு மேனிக்கு திட்ட ஆரம்பித்தார்.


அந்த மாணவர் பேயடித்தார்போல் ஆகி, முகம் சிறுத்து வண்டியின் நடுவில் போய் நின்று கொண்டார். இருப்பினும் நம்மவர் தனது வசைகளை நிறுத்தவில்லை, மாணவரைப் பார்த்து திட்டிக்கொண்டே வந்தார்.

ஒரு வழியாய் நம்மவர் இறங்கி சென்றதும் அந்த மாணவர், 'என்னை எப்படி அப்படி சொல்லலாம், பார்த்து விடுகிறேன், தீர்த்துவிடுகிறேன்' என ஆரம்பிக்க, இதையெல்லாம் கவனித்து வந்த ஒரு முதியவர்,

'தம்பி, கொஞ்சம் மூடு. அந்த ஆளு இருக்கிற வரைக்கும் கம்முனு இருந்துட்டு இறங்கி போனதுக்கப்புறம் ஓவரா சவுண்டு விடுற?' எனக் கேட்க, அந்த கல்லூரி மாணவர் வண்டியின் முன்பக்கத்துக்கு விருட்டென சென்று விட்டார்.

பக்கத்தில் இருந்தவர் 'அது எப்படின்னா அந்த ஆளு அட்வைஸ் பண்ணலாம், அந்த தம்பிக்கு' என அங்கலாய்ப்பாய் கேட்க,

'விடுங்க தம்பி, எமனோட கைகுலுக்கிட்டுல்ல வந்திருக்காரு, சொன்னதும் நல்லதுக்குத்தானே' என்றேன்.

என் இனிய வேணுஜி...

|


எனது வலைப்பூவின் முகப்பில் குறிப்பிட்டார்போல் இடுகை எழுத வந்ததன் நோக்கம் நல்ல பல உள்ளங்களைப் பெறுவதற்காகத்தான் என்பதற்கு ஏதுவாய் எனக்கு கிடைத்த பலரில், முத்தாய்ப்பாய் கிடைத்திட்ட வெகு சிலரில் வேணுஜியும் ஒருவர். ’வலைப்பூ உலகமப்பா அதில் வந்தாச்சு கலகமப்பா’ என ‘தரைமேல் பிறக்க வைத்தான்…. எங்களைக் கண்ணீரில் மிதக்க வைத்தான்…’ எனும் படகோட்டிப் படப்பாடலின் சாயலில் நடப்பு நிகழ்வுகளை வெளுத்து வாங்கியிருந்த ஒரு பாடலை எதேச்சையாய் நண்பர் ஒருவர் குழுமத்தில் இருந்து எனக்கு சிபாரிசு செய்ய, அதன் மூலம் தான் ‘வேணுஜி’ யின் அறிமுகம் கிடைத்தது.

தினமும் ஜி டாக்கில் பேச்சு, அவரிடம் எனது இடுகைகளைப் பற்றிய அலசல்கள், அவரின் தமிழ்த் தென்றலில் வருகின்ற நல்ல பல விஷயங்களைப் பற்றிய கருத்துப் பரிமாற்றங்கள், மன பாரங்களை இறக்கி இலகுவாக்கும் உள்ளார்ந்த பேச்சுக்கள், ஒத்த கருத்துக்களோடு நடப்பு நிகழ்வுகளைப் பற்றிய அலசல்கள்… என செம்மையாய் வளர்ந்த எங்கள் நட்பு, சிங்கையிலிருந்து சென்னை வந்ததும் சந்திக்க வாய்ப்பு கிடைத்து நெடுநாள் பழகியது போல் சட்டென பிரவாகமானது.

ஒல்லியான தேகம், தீர்க்கமான கண்கள், இதோ பழகுவதற்கு எளிமையாய் நான் எனச் சொல்லும் சிரித்த முகம், விருட்டென நடை, சரளமான தமிழ்ப் பிரவாகப் பேச்சு… இது தான் வேணுஜியின் அறிமுக அடையாளங்கள்.

அவரோடு சந்திப்பு நிகழ்ந்த அன்று அவரின் வீட்டுக்கு அழைத்துச் சென்று குடும்பத்தார் எல்லோருக்கும் அறிமுகம் செய்து வைக்க, நானும் குடும்பத்தில் ஒருவனான அன்றைய நாள் எனது வாழ்வின் மிகவும் சந்தோஷமான தருணங்களுல் ஒன்று. நட்புக்கு வயது வித்தியாசம் தேவையில்லை என்பதற்கு ஐம்பதுக்கும் மேற்பட்ட ஒரு பழுத்த அனுபவசாலி, நாற்பதை நெருங்கும் மனதால் என்றும் இளைஞன் என்று சொல்லிக்கொள்ளும் நான் என எங்களிடையே மலர்ந்து நாளுக்கு நாள் பெருகிக் கொண்டிருக்கும் எங்களின் நட்பைவிட ஒரு நல்ல உதாரணம் வேண்டுமா என்ன?

எனது வற்புறுத்தலின் காரணமாய் வலைப்பூவிலும் கால் பதித்து, பழங்கஞ்சியில் சூடாய் தனது கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டிருக்கிறார். ’ஸ்பெக்ட்ரம் பார்க்கின் சுற்றமில்லை... அன்னையே’ என அவரே பாடி யூ ட்யூபில் ஏற்றியிருக்கும் இந்த பாடலைக் கேட்டுப்பார்த்தால் இவரின் திறமையின் ஒரு துளி நமக்குப் புரியும்.

அரசியல், விளையாட்டு, பழந்தமிழ் பாடல்கள் என எல்லாத் துறைகளிலும் புகுந்து விளையாடி தமிழ்த்தென்றலில் மணம் வீசிக்கொண்டிருக்கிறார். கிரிக்கெட், சினிமா பற்றிய விவரங்களை நா, விரல் நுனிகளில் வைத்திருக்கிறார்.

அவருடன் உலகப்பட விழாவில் ஜாக்கி அண்ணா மற்றும் உண்மைத்தமிழன் அண்ணாவை சந்தித்தது என் வாழ்வின் மற்றுமொரு சந்தோஷ தருணம். சென்னை சென்றால் சந்திக்க இன்னும் இரு அன்பு உள்ளங்கள்… இவர்கள் இருவரையும் பற்றி தனியே இடுகையினில் சொல்லியாக வேண்டும். இந்த இடுகை வேணுஜிக்காக என்பதால் அவர்களைப் பற்றி அதிகம் சொல்லாமல் செல்கிறேன்.

உ.த அண்ணா, நான், வேணுஜி & அல்டிமேட் ஜாக்கி அண்ணா

சென்னை சென்றால் வேணுஜி அவர்களுக்காக ஒரு நாளினை ஒதுக்கிச் செல்லும் அளவிற்கு எங்களின் நட்பு பலப்பட்டிருக்கும் இந்த சூழலில், நட்பின் பெருமையினை புரிந்து கொள்ள ஏதுவாய் இருக்கும் அவருக்கு என் வணக்கத்தையும் நன்றியையும் சொல்லி, அவரை அறிமுகம் செய்து வைத்த கடவுளுக்கும் இணையத்துக்கும் என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறேன்.

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB