முரண்...

|

கவிதை தருகிறேன், காதல் தருவாயா என்றேன்,
காதலைத் தா... பிரிவினை தருகிறேன் என்றாள்...

உயிரைத் தருவேன், உன்னைத் தருவாயா என்றேன்,
உயிரைத் தா... என் கண்ணீரைத் தருகிறேன் என்றாள்.

கண்ணாய் இருப்பேன், கருத்தாய் காப்பேன் என்றேன்,
கருத்தே இல்லை உன் காதலில் என்றாள்.

பார்க்கும் யாவிலும் பாவை நீ என்றேன்,
பார் ஒரு கண் மருத்துவரை என்றாள்...

சொல்வதெல்லாம் தேனாய் என் காதில் என்றேன்,
கவனம் கடித்துவிடும் எறும்புகள் என்றாள்...

என்ன தான் சொல்ல வருகிறாய் என்றேன்,
என்ன சொல்ல?, சொல்வதற்கில்லை என்றாள்...

விருந்து...

|

விருந்து...

இனமழித்து மகி(ழ்)ந்தனை
இன்முகத்தில் வரவேற்று
சிறப்புறுத்தும் தாய்நாட்டின்
சிறுமையால் நாணி
சிந்தை யெல்லாம் கொதிக்க
தமிழ் காக்கா தமிழிருக்க
தலை குனிந்து வெட்கி
என் செய்வேன் தமிழே...
என்னினிய உறவே...

நிலை மாறும்...

பக்கத்தில் நெருப்பென
பராமல் இருப்பாரும்
விக்கித்தி நிற்குமொரு
வேளையது வந்து சேரும்
சக்கரம்தான் வாழ்வுமது
சத்தியமாய் உணர்ந்திட
எக்கணம் ஏங்குகிறேன்
இறையவனை வேண்டுகிறேன்...

பார்த்துப் பேசு...

|

'பகலில் பக்கம் பார்த்துப் பேசு இரவில் அதுதானும் பேசாதே' எனும் பழமொழியைக் கேள்வியுற்றிருக்கிறோம். அதன் உண்மைப் பொருள் தவிர்த்து உணர்ந்த ஒன்றினைப் பற்றியே இந்த இடுகை.

கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த சமயம். ஹாஸ்டலில் ஒவ்வொரு சனிக்கிழமையும் 'ஃப்ரீ' நைட். சாப்பிடுவதற்கு பிரட் ஜாம் மட்டும்தான் இருக்கும். வெளியே செல்லலாம், சினிமா பார்க்கலாம், தாமதமாய் திரும்ப வரலாம்.

அன்று ஃப்ரீ நைட். வெளியில் சாப்பிட்டுவிட்டு சினிமா செல்வதாய் உத்தேசித்து நண்பர்களுடன் கிளம்பினோம். பாதிபேர் எங்களுக்கு முன்னதாய் சென்று பீர் சாப்பிட்டுவிட்டு நேராக ஓட்டல் கிருஷ்ணபவனுக்கு வந்துவிட சப்தமாய் களைகட்டி, களேபரமாயிருந்தது. ஒரு வழியாய் சாப்பிட்டுவிட்டு பாதிபேர் வெளியே வந்து தம் போட்டபடி பேசிக்கொண்டிருக்க அப்போதுதான் வில்லங்கம் ஆரம்பமானது.

அங்கிருந்தவர்களில் ஒருவன் ஆஸ்டல் வார்டனைப் பற்றி ஏதோ சொல்ல ஆரம்பிக்க விவாதம் சூடுபிடிக்க ஆரம்பித்தது. 'அவன் கிடக்கிறான்' என ஆரம்பித்து எழுத இயலாத வார்த்தைகளால் அர்ச்சித்து அவரின் குடும்பத்தையே நடுத் தெருவிற்கு கொண்டு வந்தார்கள். அவர்களை சமாதானப்படுத்திய அந்த தருணத்தில் எதேச்சையாய் அருகில் இருந்த இருட்டுச் சந்தினைப் பார்த்தேன். யாரோ டி.வி.எஸ் 50 யை நிறுத்தி அதில் சாய்ந்து நின்றவாறு எங்களையேப் பார்த்துக் கொண்டிருக்க துணுக்குற்றேன். கும்மிருட்டிலும் எங்கள் ஹாஸ்டல் வார்டன் போல் இருந்தது.

'மாப்ளே, அவர் பாவம்டா, இவ்வளவு கேவலமா பேச வேண்டாம்டா' என சொல்ல, 'டேய் இந்த லூச மொதல்ல உதைக்கனும்டா' என என் மீது பாய்ந்தார்கள். சமாதானப்படுத்தி ஒரு வழியாய் படத்துக்குப் போய்விட்டு ஹாஸ்டலுக்கு திரும்பினோம்.

அடுத்த நாள் காலையில் வார்டன் எங்களையெல்லாம் பார்த்து சென்ற பார்வையிலிருந்தே அந்த இடத்தில் இருந்தது அவர்தான் என்பது தெளிவாய்ப் புரிந்தது. நண்பர்கள் எல்லாம் சொன்ன என்னை மறுபடியும் ஏளனமாய்ப் பார்த்து நக்கலடித்தார்கள். அன்று முழுக்க அவரைத் திரும்பவும் பார்க்காததால், எங்களை அழைத்து விசாரிக்காததால் அவராய் இருக்காதோ என்றல்லாம் கூட எண்ணினேன்.

திங்கள் காலை வகுப்புகளுக்கு சென்றதும் தான் எங்களுக்கு வேட்டு ஆரம்பமாகியது. பிரின்சிபால் வயதானவர், ஆஸ்டலுக்கு அருகேயிருந்த தங்கும் விடுதியில் இருந்தார். சனி ஞாயிறு வார விடுமுறையில் சென்றிருந்ததால் விஷயத்தை அவர் வந்தவுடன் சொல்லியிருப்பார் போலிருக்கிறது.

பிரின்சிபால் ரூமுக்கு எல்லோரையும் வரவழைத்து ஒருவழியாய் விசாரித்து அன்று சினிமா சென்றவர்களில் ஓட்டலில் சாப்பிட சென்றவர்களை மட்டும் இருக்கச் சொல்லி மற்றவர்களை வகுப்புக்கு அனுப்பி விட்டார்கள். வழக்கமாய் கண்டித்து விட்டுவிடும் பிரின்சிபால் அன்று கண்டிப்பாய் தண்டிக்கும் மன நிலையில் இருந்தார். பியூனை அனுப்பி வார்டனை அழைத்து வரச் சொன்னார்.

வார்டன், பிரின்சிபால்-க்கு வணக்கம் சொல்ல, 'சொல்லுங்க சார், இவங்கள்ல யார் உங்களைத் திட்டியது' எனக் கேட்டார். சரியாய் வெளியில் நின்று திட்டியவர்களை கைக்காட்ட அவர்களைத் தவிர மற்றவர்களை போகச் சொன்னார். என்னை சொல்லாததால் மற்றவர்களுடன் கிளம்ப நண்பர்களில் ஒருவன், 'சார் பிரபாகரும் இருந்தான்...' எனச் சொல்லி மாட்டிவிட்டான்.

'ஏன் சார் அவசரமா போறீங்க, வாங்க, வந்து ஜோதியில ஐக்கியமாகுங்க' என பிரின்சிபால் சொல்லவும் அடி வயிறு கலக்க ஆரம்பித்தது. இடைமறுத்த வார்டன் 'சார் அவங்கெல்லாம் என் குடும்பத்தை இழுத்து கண்டமேனிக்கு திட்டும்போது பிரபாகர் தான் சார், ஏன்டா இப்படியெல்லாம் சாரை திட்டுறீங்கன்னு கேட்டாரு. ஒரு வார்த்தையும் தப்பா பேசல, வேணும்னே மாட்ட விடறாங்க' என சொன்னார்.

'வார்டனைப் பத்தி பேச ஆரம்பிச்சது இவன் தான் என நண்பர்களில் ஒருவன் ஆணித்தரமாக சொல்லவும் 'பேசியது நீங்கதான், அனாவசியமா ஏம்பா அந்த பையனை மாட்டவிடுறீங்க' எனச் சொல்லி என்னை அனுப்பிவிட்டார்.

அப்புறம் பேசிய அந்த நாலுபேரையும் வார்டனுக்கு மன்னிப்பு கடிதம் எழுதித் தந்துவிட்டு உடனடியாக ஆஸ்டலை விட்டு காலி செய்ய சொல்லி விட்டார்கள். 'காலி செய்கிறோம், அப்புறம் எதற்கு மன்னிப்பு கேட்கவேண்டும், கேட்கவே மாட்டோம்' என பிடிவாதமாய் சாதிக்க, சரி காலி செய்தால் போதும் என இறங்கி வந்தார்கள்.

பக்கத்து தெருவில் வீடு எடுத்து, நடந்து செல்லும் தூரம்தான் என்றாலும் டாக்ஸியை வாடகைக்கு எடுத்து வந்து பந்தாவாக காலி செய்து கிளம்பி சென்றார்கள்.

அதன் பின் ஒரே மாதத்தில் ஆஸ்டலை காலி செய்து அவர்களோடு போய் சேர்ந்து கொண்டது தனி கதை. அதையெல்லாம் விட முக்கியமான விஷயம், அன்று என் நண்பன் சொன்னது முற்றிலும் உண்மை. 'வார்டன் ஏன்டா இப்படி இருக்கான்' என பேச்செடுத்தது நான் தான்.

வாழ்க்கைச் சக்கரம்...

|

வீழ்ந்திருக்கும்போது
வேண்டுவதெல்லாம்
ஆழ்மனத்தின் காயம்
ஆற்றிடும் மருந்து...

அப்போதே சொன்னேன்
அப்போதே நினைத்தேன்
இப்போது வேண்டாம்
என்னினிய உறவே...

எண்ணிலா எண்ணி
ஏதுவாய் எடுத்து
முன்னிறுத்தி செய்தும்
முடிவது துயரம்

எண்ணிய யாவும்
ஏதுவாய் நடந்தால்
மண்ணினில் எவரும்
மகிழ்வுடன் இருப்பர்.

வாழ்க்கையது உருண்டு
ஓடிடும் சக்கரம்
தாழ்வாயும் கீழே
தலையெடுத்தும் மேலே

எந்திரன் - என் பார்வையில்...

|

எந்திரன் பற்றி எல்லோரும் பிரித்து அலசிவிட்டதால் நம் பங்குக்கும் பார்த்ததை பகிர்ந்துகொள்ளலாமென இந்த இடுகை.

பிடித்த விஷயங்கள்:

ரஜினி - இந்த வயதிலும் தலைவர் துள்ளலாய் அசத்தியிருப்பது.

ஐஸ்வர்யா - என் வயதிலும் இன்னும் அழகாயிருப்பது.

ஏ.ஆர்.ரஹ்மான் - இசையால் படம் முழுதும் ஆள்வது.

கிளிமாஞ்சாரோ பாடல் - எடுத்த விதம், ஐஸ்வர்யாவின் நடனம் அத்தோடு தலைவரின் பெர்ஃபார்மன்ஸ்.

சங்கர் - இதுபோல் பிரம்மாண்டமாய் ஒரு தமிழ்ப்படம் எடுக்கமுடியுமென நிரூபித்துக் காட்டியது.

ரத்தினவேலு - கண்களுக்கு இதமான, அழகான காட்சிகளை கேமிராவில் சிறைபிடித்தது.

வசனம் - தலைவர் சுஜாதாவல் எழுதப்பட்டது என தனித்து தெரியும் வசனங்கள் மட்டும்.

கிளைமாக்ஸ் - அடிக்க வராதீங்க... காமெடி இல்லை என்ற குறையை தீர்த்ததனால்.

பிடிக்காத விஷயங்கள்:

விளம்பரம் - எரிச்சலூட்டும் வண்ணம் திரும்பத் திரும்ப போரடிக்கும் வண்ணம் இருப்பது.

சந்தானம் & கருணாஸ் : வரும் ஒரு சில காட்சிகளிலும் சூப்பராய் சொதப்புவது.

சன் பிக்சர்ஸ் - ரொம்பவும் ஓவாராய் பீத்திக்கொள்வது.

டிக்கெட் விலை - பத்து டாலருக்கு இருந்த டிக்கெட் விலை பதினைந்தாக ஆனது.

கொசு பிடித்தல் - ரஜினி கொசுபிடிக்கும் காட்சி... ரொம்பவும் நெளிய வைத்தது. இந்த சீனுக்கு ஐடியா கொடுத்தவருக்கு நோபல் பரிசுக்காக சிபாரிசு செய்யவேண்டும்.

புறக்கணிப்பு - சுஜாதாவின் பங்களிப்பினை மிக லேசாய் சொல்லி, மறந்தது.

சனி இரவு என்பதால் அரங்கு தொன்னூறு சதம் நிறைந்திருந்தது, நிறைய தமிழர்களும் பார்த்தார்கள். எந்தவொரு சப்தமும் இல்லாமல் பார்த்த முதல் ரஜினி படம். மொத்தத்தில் குழந்தைகளையும் ரஜினி ரசிகர்களையும் நிறைய கவரும்.

அப்பாவுக்கு பிறந்தநாள்...

|

அக்டோபர் ஏழு ஆயிரத்து தொள்ளாயிரத்து நாற்பத்தைந்தில் பிறந்த என் அப்பா வை.ராமசாமி அவர்களுக்கு இன்று அறுபத்தைந்து முடிந்து அறுபத்தாறாவது பிறந்த நாள். சென்ற வருடமும் இதே நாளில் ஒரு இடுகை எழுதினேன். வழக்கம்போல் நேரில் சந்திக்க இயலாத காரணத்தால் இன்றும் இடுகையின் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்து அவரின் ஆசியினை வேண்டிக்கொள்கிறேன்.

இங்கிருந்து அதிகமாய் அம்மாவின் செல்போனுக்கு அழைத்துத்தான் பேசுவது வழக்கம். 'என்னப்பா எப்போ பார்த்தாலும் ஆயாகிட்டத்தான் பேசுறீங்க, தாத்தாகிட்ட பேசுங்க' என ஓடிச் சென்று தாத்தாவிடம் கொடுத்துவிடுவார். 'என்னடா பையா அப்பாவை மறந்துட்டியா' என செல்லமாக கேட்பார். என்னை டா போட்டு அழைப்பது இந்த ஒரே தருணத்தில் தான், மிகவும் செல்லமாய். பதில் சொல்லுவதற்குள் ’இல்ல கண்ணு, சும்மா கேட்டேன்' எனச் சொல்லி குழந்தைகளைப்பற்றிய விஷயங்களைப் பேச ஆரம்பித்துவிடுவார்.

தம்பியின் மரணத்தின்போது சர்க்கரை நோயின் தாக்கம் காரணமாய் ஒரு காலில் அதிக வலியாகி நடக்க இயலாமல் அதிக பாதிப்புக்கு உள்ளாகியிருந்தார். எல்லாம் முடித்து கிளம்பி வரும்போது சுருக்கமாய் ‘அப்பா, நீங்கள் நன்றாக இருந்தால் தான் நான், நாங்கள் நன்றாக இருக்க முடியும்’ என சொல்லிவிட்டு வந்தேன். உடற்பயிற்சி, மருத்துவமுறைகளை முறையாய் பின்பற்றுதல் என இன்று முழு ஆரோக்யத்தோடு தினமும் பேரப்பிள்ளைகளோடு வாக்கிங் சென்று வருகிறார், அவர்களை கண்போல் பார்த்துக்கொள்கிறார்.

கவிதை எழுதுவார் என முன்பே சொல்லியிருக்கிறேன். அவரின் கவிதைகள் எல்லாவற்றையும் தொகுத்து வைத்திருக்கிறேன். திருமுருகன் பாமாலை என ஒரு புத்தகத்தை வெளியிட்டிருக்கிறார். அவரின் சில கவிதைகளை நினைவு கூர்ந்து பார்க்கையில்,

பூவேந்தும் சொல்லேந்தி
புனைந்திட்ட கவிதையினை
நாவேந்த வாய்மணக்கும்
கொம்புத்தேன் சுவையிழக்கும்

காவேந்தும் தன் தென்றல்
தணலாகி உடல் நோகும்
பாவேந்தன் என் ஆசான்
கண்ணதாசன் புகழ் வாழி...
...............

என கண்ணதாசனுக்காக எழுதிய பாடலின் சில வரிகளும்,

வண்ணமலர் சோலையிலே
வாசமலர் பூத்திருக்க
எண்ணம்கொண்ட வண்டினங்கள்
மலர்நாடி தேன் குடிக்கும்

வண்ணமலர் வாடியங்கே
வாசமது அற்றுப்போனால்
பண்ணிசைத்த வண்டினங்கள்
ஏறெடுத்தும் பார்ப்பதுண்டோ...

பணம் படைத்த மாந்தரெல்லாம்.... என தொடர்ந்து பொருள் இருக்கும் வரைதான் சுற்றம் என பொருள்படும்படி எழுதிய இந்த பாடலும் நினவிற்கு வருகின்றன. யோசித்து நினைவிற்கு வந்ததை எழுதியிருக்கிறேன். சொற்குற்றம் பொருட்குற்றம் எல்லாம் எனக்கே...

எந்த ஒரு கஷ்டத்தையும் மிகவும் எளிதாய் எடுத்துக்கொள்ளும் பக்குவம் வாய்ந்தவர். பிரச்சினைகளுக்கு அவர் தருகின்ற தீர்வுகள் மனதிற்கு இதமாயும், மெல்லிய மயிலிறகால் வருடுவது போல நாசூக்காக இருக்கும்.

தினமும் அதிகாலையில் குளித்து நெற்றியினை பட்டையாய் நீறு, சந்தனம் குங்குமம் என எல்லாம் அலங்கரித்து பாடல்களைப் பாடி பூஜித்து காதில் எம்.பி.த்ரீ ப்ளேயரில் பக்திப்பாடல்களை கேட்டவண்ணம் சோஃபாவில் அமர்ந்திருப்பார். எழுந்து வந்து ’குட்மார்னிங்பா’ என சொல்லும்போது நமக்கு வெட்கமாய் இருக்கும், உடனே நாமும் குளித்து தயாராகவேண்டுமென இருக்கும்.

அவரைப்பற்றி சொல்லிக்கொண்டே போகலாம், சொல்லலாம் இனி வரும் நாட்களில்...

எனக்கு வழிகாட்டியாய், நண்பனாய், ஆசானாய் இருக்கும் என் அப்பா, நல்ல ஆரோக்கியத்துடன் இன்னும் பல்லாண்டுகாலம் வாழ அவர் வணங்கும் முருகனை நானும் மனமுருகி வேண்டுகிறேன்.

அப்பா, ஐ லவ் யூ...

கல்மாடியோடு ஒரு (கற்பனை) சந்திப்பு

|

ஆசானின்  கதிரோட கலக்கல் கற்பனை(?)ப் பேட்டியைப் படித்துவிட்டு நம் பங்குக்கு ஒரு போட்டிக்காய் ஒரு பேட்டி இடுகை..

காமென்வெல்த் போட்டியில் தொடர்ந்து சொதப்பி வரும் கல்மாடியுடன் ஒரு சிறப்புப் பேட்டி(கற்பனை).

(நேயர்களுக்கு டெல்லியிலிருந்து இந்த பிராடு பீதாம்பரத்தின் அன்பு கலந்த வணக்கங்கள்!... இந்த நேரடி ஒளிபரப்பில், நமது 'நம்பினா நம்புங்க' டிவியின் பிரபலங்களோடு பேசலாம் நிகழ்ச்சியில், காமன்வெல்த் போட்டி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரான சுரேஷ் கல்மாடி அவர்களை சந்தித்து பேச இருக்கிறோம்)

பி.பீ : வணக்கம் கல்மாடி ஜீ, பிரபலங்களோடு பேசலாம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டமைக்கு எங்களது மனமார்ந்த நன்றி. பேட்டியை ஆரம்பிக்கலாமா?

கல்மாடி : தாராளமாய். ஒலிம்பிக் போட்டிகளை வேறு நடத்திக்கொண்டிருக்கிறோம், பரபரப்புக்கு இடையில் இங்கு வந்திருக்கிறேன்.

பி.பீ : என்னது ஒலிம்பிக்கா?

கல்மாடி : மன்னிக்கனும், குழப்பத்தில் சொல்லிவிட்டேன். தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள்.

பி.பீ : (நமக்கு இன்னிக்கு நேரமே சரியில்லை) சரி, காங்கிரஸை நடத்திச் செல்லும் அன்னை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

கல்மாடி : தற்பொழுதைய காங்கிரஸ் தலைவி இந்திரா காந்தி மிகவும் திறமையானவர்.அவரின் அரவணைப்பால்தான் கட்சி இன்று சிறப்பாய் இருக்கிறது.

பி.பீ : அருமை. உங்களின் கட்சியினைப் பற்றிய மேலும் சில விஷயங்களை எங்களின் நேயர்களுக்காக சொல்லுங்களேன்.

கல்மாடி : நான் சார்ந்திருக்கும் திராவிட இயக்கமான பா.ஜா.கா. மத சார்பற்றது. நாட்டு மக்களுக்காக, உழைப்பதற்காகவே உருவாக்கப்பட்டது. உலக சுதந்திரத்துக்காகப் பாடுபட்டது...

பி.பீ : சரி, காமன்வெல்த் சம்மந்தமாய் ஒரு கேள்வி. நீங்கள் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்து கட்டுமானம் சரியில்லாத்தால் கூரை இடிந்து பிழைத்துக்கொண்டாதாய் சரத்பவார் நக்கல் செய்திருக்கிறாரே, அது பற்றி உங்கள் கருத்து?

கல்மாடி : இது ஜனநாயக நாடு. எவர் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் பேசலாம். குறிப்பாய் எதிர் கட்சியினர் பேசுவதை நாம் பொருட்படுத்தக்கூடாது.

பி.பீ : எப்படி சார் இப்படியெல்லாம் தகவல்களை அள்ளி விடுகிறீர்கள்? சரி உங்களின் எதிர்காலத்திட்டங்கள் என்ன?

கல்மாடி : ராஜீவ் காந்தியை பிரதமராக்கனும். வர இருக்கிற எல்லா விளையாட்டுப் போட்டிகளுக்கும் நான் ஒருங்கிணைப்பாளராய் இருந்து, கலக்க வேண்டும்.

பி.பீ : கண்டிப்பாய், நாங்களெல்லாம் கலங்கித்தான் போயிருக்கிறோம் கல்மாடி ஜி... உங்களுக்கு எங்களின் நம்பினா நம்புங்க டிவியின் மனமார்ந்த நன்றி.

கல்மாடி : நானும் இதைப் பார்த்துக்கொண்டிருக்கும் ஸ்டார் ப்ளஸ் நேயர்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்..

(பீதாம்பரம் இதற்கு மேல் தாக்குப்பிடிக்க முடியாமல் ஸ்டுடியோவை விட்டு தலைதெறிக்க ஓடுகிறார்)

ரங்கு

|

அவரை எல்லோரும் ரங்கு என்றுதான் கூப்பிடுவார்கள், உண்மையான பெயர் ரங்கநாதன். எப்போதும் சிரித்த முகத்தோடுதான் இருப்பார், கோபப்பட்டு எவரும் பார்த்ததே கிடையாது. அந்த ஊரில் எல்லோருக்கும் அவரை கண்டிப்பாகத் தெரியும், குறிப்பாய் குழந்தைகளுக்கு. ஆம் குழந்தைகள் என்றால் அவருக்கு கொள்ளைப் பிரியம். பார்க்கும்போதெல்லாம் கண்டிப்பாய் மிட்டாய் தருவது அவரது வழக்கம்.

குழந்தைகளுக்கு தங்களது அப்பாக்களை விடவும் ரங்கு மாமாவை அதிகம் பிடிக்கக் காரணம் அவரும் ஒரு குழந்தையாய் மாறிப் பழகுவதும், கண்டிப்பை கண்டதில்லை என்பதாலும், அதைவிட அவர் தரும் மிட்டாய்க்காகவும் இருக்கலாம்.

மாநிறம், மீசையில்லாத மழிக்கப்பட்ட முகம், மொச்சை மொச்சையாய் வெண்ணிற பற்கள். சராசரியான உயரத்தில் ஒடிசலான தேகம். எப்போதும் மங்கலான வெள்ளை வேட்டி, கதரில் ஒரு சட்டை... இதுதான் இவரின் அடையாளம்.

அப்பா ஊரில் பெரிய மிராசுதார், நிறைய சம்பாத்து வைத்திருந்தார். ரங்குவின் செலவுக்கென அவரால் முழுமையால் பார்த்துக்கொள்ளப்படும் ஒரு மாவுமில். மூன்று பேஸ் கரண்ட் என்றால் மட்டும் மாவரைத்துக் கொடுத்துவிட்டு மற்ற நேரங்களில் ஊர் வேலை செய்ய கிளம்பிவிடுவார். வசதி குறைவானவர்களுக்கு கொடுக்கும் காசினை வாங்கிகொண்டு மாவினை அரைத்துக்கொடுப்பார். கரண்ட் பில் கட்டியது போக மீதம் அவரின் செலவுக்கு சரியாய் இருக்கும்.

பேசும் பேச்சில், செயல்களில் அவரிடம் பெண்மைத்தனம் மிகுந்து இருக்கும். விழாக்களில் பெண்கள் செய்யும் சடங்குகளை அவர்களைவிட சிறப்பாய் செய்வார்.தண்ணீர் குடத்தினை பெண்கள் போல் அழகாய் சுமந்து வருவார். எவரேனும் கிண்டல் செய்தால் கண்டுகொள்ளவே மாட்டார். அவரை 'போடா பொட்டையா' எனத் திட்டினாலும், 'ஆமாம் இவரு மட்டும் ஆம்பள சிங்கம், தர்மன் கிட்டே உதை வாங்கினது தெரியாது?' என அவர் எப்போதோ நடந்த சம்பவத்தைச் சொல்லி சொன்னவரின் வாயை அடைப்பார்.

ஜாதி பேதமெல்லாம் பார்க்கவே மாட்டார். எல்லோரரையும் மாமா, மச்சான், அண்ணா, அண்ணி, மதனி, அத்தை என உறவுமுறையோடுதான் அழைப்பார். ஊரில் யாருக்கேனும் உடம்புக்கு சுகமில்லை என்றால் சரியாகும் வரை தினமும் சம்மந்தப்பட்டவரின் வீட்டுக்கு சென்று பார்த்து வருவார். அங்கிருப்பவர்களுக்கு ஆறுதல் சொல்லுவது, வியாதிக்கான விளக்கமான தகவல்களைப் பரிமாறி அவர்களை சீக்கிரம் குணமடைய ஆறுதல் சொல்லுவார். முடிந்த அளவுக்கு அவராலான உதவிகளை தயக்கமின்றி செய்வார்.

அதே போல்தான் ஏதேனும் விஷேசமென்றால். வலியச் சென்று, கடைசிவரை பம்பரமாய் சுழன்று எல்லா வேலைகளையும் செய்து தருவார். வயது ஐம்பதுக்கு மேல் என்றாலும் அவர் திருமணமே செய்துகொள்ளவில்லை.கேட்டால் சிரித்துக்கொண்டே 'நமக்கெல்லாம் எதுக்கு? எல்லோரும் நல்லாருந்தா சரி' என சொல்லுவார்.

அவரின் உடன் பிறந்தோரெல்லாம் சொத்தில் பாகத்தினைப் பிரித்துக்கொண்டு அவருக்கு சொற்பமாய் நிலத்தினையும், ஓட்டினால் வேயப்பட்ட ஒரு வீட்டினையும், பார்த்துக்கொண்டிருந்த மாவு மில்லையும் ஒதுக்கிவிட, எந்த ஒரு கேள்வியும் கேட்காமல் ஏற்றுக்கொண்டார். அவருக்கு ஆதரவாய் அவரின் அம்மா இருந்ததார்கள்.

தனது இளைய மகன் திருமணம் செய்துகொள்ளவில்லையே என எல்லோரிடமும் சொல்லிச் சொல்லி அங்கலாய்த்துக்கொண்டிருந்தார், அந்த கவலையோடு கண்மூடியும் விட்டார். அன்றுதான் ரங்குவை சோர்ந்த முகத்தோடு அந்த ஊரில் உள்ள எல்லோரும் பார்த்தார்கள்.

அதன் பின்னும் அவர் அவரின் வழக்கமான வேலைகளை செய்தவண்ணம்தான் இருந்தார், ஆனாலும் அவரின் முகத்தில் முன்பிருந்த மலர்ச்சி இப்போது இல்லை. ஊரில் மற்றொரு நவீன மாவு மில் வந்துவிட அவருக்கான வருமானம் குறைய ஆரம்பித்தது. அவருக்கென ஒதுக்கிய கரம்பு நிலத்தில் ஏதும் விளைவிக்காததால், விளையாததால் அவரின் அன்றாட செலவுக்கே தடுமாற வேண்டியிருந்தது.

ஊரில் எல்லோருக்கும் வந்த ஒரு வித காய்ச்சல் அவரை மட்டும் விட்டு பிரியாமல் ஒட்டிக்கொள்ள, படுக்கையில் வீழ்த்தியது. எல்லோரும் அவரை சென்று பார்த்துவந்தார்கள், முடிந்த அளவுக்கு பார்த்துக்கொண்டார்கள்.

விருந்தும் மருந்தும் மூன்று வேளைக்கு என்பது போல் ஒரு வாரத்திற்கு பிறகு அவரை எவரும் கண்டுகொள்ளவில்லை. அவர் இனிமேல் தேறமாட்டார் என எல்லோரும் கைவிட்டுவிட அவரின் உடல் நிலை இன்னும் மோசமானது. அந்த நிலையில் அவரின் சின்னம்மா(சித்தி) ஒரு வண்டியில் ஏற்றி அழைத்துக்கொண்டு சென்றுவிட்டார், எல்லோரும் பெங்களூர் சென்றுவிட்டதாய் பேசிக்கொண்டார்கள்.

அவரைப் பற்றிய எந்த ஒரு தகவலும் சில மாதங்களுக்கு இல்லை. ஒரு வருடத்திற்குப்பின் ரங்கு திருமணக்கோலத்தில் வந்து இறங்கினார். புதிதாய் பெரிதாய் மீசையெல்லாம் வைத்திருந்தார். இந்த வயதிலா என எல்லோரும் ஆச்சர்யப்பட தனது மனைவியின் தோளில் கைபோட்டபடி பாரதியின் கூற்றுப்படி நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை என கம்பீரமாக இருந்தார்.

காந்தி பிறந்த நாள்...காமராஜர் இறந்த நாள்.

|

இன்று அக்டோபர் இரண்டு. பெயரளவில் மது விற்பனையாகாத, விடுமுறை நாட்களில் ஒன்று. ஆனால் எனது பால்ய நாட்களில் மிகவும் விஷேசமான நாள்.

அப்பா தீவிர காங்கிரஸ்காரர். வீட்டில் காந்தி, காமராஜ், நேரு, இந்திரா என எல்லா காங்கிரசைச் சார்ந்த தலைவர்களின் புகைப்படங்களும் வரவேற்பரையில் மாட்டப் பட்டிருக்கும். பெரும்பாலும் எல்லாம் திருமணத்தின்போது அன்பளிப்பாய் வந்தவைகளே.

விடுமுறை என்பதால் அதிகாலையிலேயே குளித்து என்னையும் குளிப்பாட்டி காங்கிரஸ் கொடி இருக்கும் பேருந்து நிறுத்தம் அருகே அழைத்து சென்று விடுவார். அங்கு எங்களின் வீட்டிலிருந்து எடுத்து செல்லப்பட்ட காமராஜின் புகைப்படம் மாலையிடப்பட்டு பொட்டு வைத்து தட்டில் நிறைய மிட்டாய்களுடன் இருக்கும். நைந்து போயிருந்த காங்கிரஸ் கொடி புதிதாய் மாற்றப்பட்டு, ரோஜாப் பூவிதழ்களை உள்ளடக்கி ஏற்றுவதற்கு தயாராய் இருக்கும்.

கோவிந்தன் மாமாவும் காங்கிரஸ் காரர் என்பதால் அவரின் சவுண்ட் சிஸ்டத்திலிருந்து கம்பத்தில் கட்டப்பட்ட ஒலி பெருக்கிகள் சப்தமாய் காங்கிரஸ் பாடல்களைப் பாடிக்கொண்டிருக்கும். ’மாமா, சினிமா பாடல்களைப் போடுங்கள்’ எனக் கெஞ்சுவோம், கொடியேற்றியவுடன் எனச் சொல்லி எங்களை சமாதானப்படுத்துவார்.

எல்லோரும் வந்தவுடன், கொடியேற்றி வணக்கம் செலுத்தி சந்தனப்பொட்டினை எல்லோரும் வைத்துக்கொள்ள, மிட்டாய்களை வினியோகிப்பார்கள். அடுத்த அரைமணிநேரம் காத்திருந்து சினிமா ரெக்கார்ட் மாற்றிவிட்டு சந்தோசமாய் வீடு திரும்புவோம்.

இன்று பட்டி தொட்டியெல்லாம் சத்துணவு வழங்கப்படுகிறது என்றாலும் அதற்கு காமராஜ் அவர்களால் கொண்டு வரப்பட்ட மதிய உணவுத்திட்டம் தான் முன்னோடி. நான்காவது படித்த போது கண்டிப்பாய் ஏழைக் குழைந்தைகளுக்குதான் சத்துணவு கிடைக்கும். கோதுமையில் செய்யப்பட்ட சாதம், வெல்லத்தூள் என கொடுப்பார்கள்.

அப்பா அரசாங்க வேலையில் இருந்ததால் எனக்கெல்லாம் கிடைக்காது. ஆனாலும் உணவு இடும் ஆயா எனது சொந்தக்காரர் என்பதால் நான் சாப்பாடு எடுத்துச்செல்லும் தூக்கு போனியில் சாப்பாட்டினை வைத்து பொட்டலமாய் வெல்லம் மடித்து தருவார்கள். வீட்டில் வந்து சாப்பிடுவேன்.

அப்பாவிடம் காமராஜ் ஏன் அக்டோபர் இரண்டில் இறந்தார் என ஒருமுறை நிறையவே வருத்தப்பட்டேன்.  காரணம் கேட்டதற்கு வேறொரு நாளில் இறந்திருந்தால் இன்னொரு நாள் விடுமுறை கூடுதலாய் கிடைத்திருக்குமே எனச் சொன்னேன்.

இந்த இடுகை எழுதும் இந்த காலைப்பொழுதில் அப்பாவை அழைத்தேன். கோவிந்தன் மாமா இந்த வருடம் இல்லை, வழக்கம்போல் கொடியேற்ற கிளம்பிக் கொண்டிருப்பதாய் சொன்னார். இன்னும் சில வருடங்களுக்காவது இது தொடரும் என எண்ணுகிறேன்.

கல்விக்கண் திறந்த கர்மவீரரை நினைவு கூர்வோம், காந்தியின் சத்தியம், அகிம்சை ஆகியவற்றை பின்பற்ற முயற்சிப்போம்.

இருநூறாவது இடுகை...

|

இதுவரை எத்தனை இடுகைகள் எழுதியிருக்கிறோம் என எதேச்சையாய் பார்க்க இருநூற்றைத் தாண்டியிருப்பது தெரியவந்தது. கொஞ்சம் வியப்பாயும் ஆச்சர்யமாயும் இருந்தது, இவ்வளவு எழுதியிருக்கிறோமா என. மீள் இடுகைகளை தவிர்த்தால் இது இருநூறாவது இடுகை. ஆம், இத் தருணத்தில் இந்த வலையுலகிற்கு கண்டிப்பாய் எனது மனமார்ந்த நன்றியினை சொல்லியே ஆகவேண்டும், எனது எண்ணங்களை எழுத்துக்களாய் மாற்றியதிற்காக, அதை பகிர்ந்து கொள்ள நல்ல நட்புக்களையும், சொந்தங்களையும் ஏற்படுத்தித் தந்தமைக்காக...!

எழுத வந்தபோதிருந்த சூழல் கண்டிப்பாய் இப்போது இல்லை. நிறைய பேர் எழுதுகிறார்கள், பல புதிய விஷயங்களைத் தெளிவாய்த் தருகிறார்கள். இப்போதெல்லம் தினம் வருகின்ற இடுகைகளின் எண்ணிக்கைகள் அதிகமாய் படிக்க நேரம் ஒதுக்க இயலாத அளவிற்கு இருக்கின்றன. அதே சமயம் சர்ச்சையான விஷயங்களும் இல்லாமல் இல்லை. தடியெடுத்தவன் தண்டல்காரன் எனும் போக்கும், தரக்குறைவான விமர்சனங்கள், தகாத வார்த்தைகள் என சில விஷயங்கள் அயர்ச்சியை ஏற்படுத்துகின்றன.

வலையுலகில் நுழைந்ததிலிருந்து இன்றுவரை நிறைய நட்புக்கள், சொந்தங்கள். இவ்வாறு சொல்லுவதற்குக் காரணம் பார்க்கும், பழகும் எல்லோரிடமும் நட்பு துளிர்த்தாலும் இறுதிவரை தொடரப்போவது வெகு சிலரோடு தானே? அந்த வகையில் இன்று ஏராளமான நிரந்தர நண்பர்கள், என் வாழ்வோடு இயைந்துவிட்ட சொந்தங்கள் என பூரிப்பாக இருக்கிறேன்.

என்னைத் தொடரும் நூற்றுக்கும் மேற்பட்ட அன்பு உள்ளங்களுக்கு என் மனப்பூர்வமான அன்புகலந்த நன்றியினை இதன் வாயிலாய் தெரிவித்துக்கொள்கிறேன்.  சூழல், வேலைப்பளு ஆகியவற்றால் முன்புபோல் அதிக இடங்களில் பின்னூட்டமிட இயலவில்லை. ஆனாலும் கிடைக்கும் ஓய்வு நேரத்தில் படித்துக்கொண்டுதான் இருக்கிறேன்.

இதில் குறிப்பிட்டு எவரையேனும் சொல்லவேண்டுமென்றால் நிச்சயம் பழைய பல்லவியை திரும்ப பாடுவதாய் இருக்கும். பல இடுகைகளின் வாயிலாய் திரும்ப திரும்ப அவர்களைக் குறிப்பிட்டிருக்கிறேன். தொடர்ந்து படிக்கும் எல்லோருக்கும் அவர்களைத் தெரியும் என்பதால் அவர்களுக்கெல்லாம் எனது ஸ்பெஷல் நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த இடத்தில் ஒரு சம்பவத்தைப் பற்றி சொல்லியே ஆகவேண்டும். ராகவன் அண்ணா சிங்கை வந்திருந்த போது சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த உன்னதமான நபரை, அன்பு அண்ணனை சந்தித்த அந்த தருணத்தில், ‘வாடா பெரிய மனுஷா, சௌக்யமா’ என வரவேற்றபோது சில்லென உணர்ந்தேன். முதல் முறை பார்க்கும்போதே பல வருடங்கள் பழகிய உணர்வு அந்த ஒரு நொடியில் தொற்றிக்கொள்ள, அதன் பின் அவரோடு பேசிய தருணங்கள் என் வாழ்வின் மறக்க இயலாதவைகளில் ஒன்றாய் இயைந்துவிட்டது. கனிவின் உருவமாய் அண்ணி, இன்றும் என் கண்ணில் நிற்கும் அன்பு அர்விந்த்... ஆகா, இறைவா உனக்கு நன்றி.

சிங்கை பதிவர்களிடம் ராகவன் அண்ணா விளையாட்டாய், ‘எப்பா, இவருதான் பிரபாகர், வானம்பாடிகளோட ரைட் ஹேண்ட், அவரோட சிஷ்யன்’ என சொல்லியபோது கொஞ்சம் பெருமையாயும் பயமாயும் இருந்தது. என் ஆதர்ஷ நாயகன் என் ஆசானோடு சேர்த்து சொல்லும்போது எனக்கு தகுதி இருக்கிறதா என ஒரு கேள்வியும், அதை வளர்த்துக் கொள்ளவேண்டுமே என ஒரு எண்ணமும் எழுந்தது.

கேபிள் அண்ணா மூலம் அறிமுகமாகி இன்று எனக்கு சொந்தமான என் ஆருயிர் நண்பர் புண்ணாக்கு மூட்டை என சொல்லிக்கொள்ளும் சரக்கு மூட்டை(தலைவரே சரிதானே?) பாலா அவர்கள் எங்கிருந்தாலும் என்னை அழைத்து வாரம் ஒரு முறை பேசிவிடுவார். நைஜீரியாவோ, சென்னையோ... அவரின் அழைப்பு தவறாமல் இருக்கும். அவரின் இந்த உறவும் இந்த வலை தந்ததே. அவர் தந்திருக்கும் தகவல்கள் இன்னும் பல வருடங்களுக்கு வலையேற்ற உதவியாய் இருக்கும். அவரோடு பேசுவதே ஒரு இனிமையான அனுபவம், அதனால்தான் சரக்கு மூட்டை என்றேன்.

எனக்காகவே வாழ்ந்து,  எனது ஒவ்வொரு இடுகையினையும் முதலில் செவிவழிக்கேட்டு, படித்து, ஊக்குத்து,  இடுகைக்கு விஷயங்க்ளைப் பகிர்ந்து, இளமையில் இறைவனைச் சேர்ந்த, இன்றும் என்னுடனே இருக்கும் என் தம்பி திவாகர்.... என்ன சொல்ல சொல்ல வார்த்தைகள் இல்லை.

இறுதியாய் எனக்கு பின்னூட்டமிடும், என்னைப் படிக்கும் அனைத்து உள்ளங்களுக்கும் எனது நன்றியினை மீண்டும் தெரிவித்து, இன்னும் சிறப்பாய் இடுகைகளைத் தர முயற்சிக்கிறேன் எனச் சொல்லி, என்றும் நன்றியுடன்...

பிரபாகர்...

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB