அப்பாவுக்கு பிறந்தநாள்...

|

அக்டோபர் ஏழு ஆயிரத்து தொள்ளாயிரத்து நாற்பத்தைந்தில் பிறந்த என் அப்பா வை.ராமசாமி அவர்களுக்கு இன்று அறுபத்தைந்து முடிந்து அறுபத்தாறாவது பிறந்த நாள். சென்ற வருடமும் இதே நாளில் ஒரு இடுகை எழுதினேன். வழக்கம்போல் நேரில் சந்திக்க இயலாத காரணத்தால் இன்றும் இடுகையின் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்து அவரின் ஆசியினை வேண்டிக்கொள்கிறேன்.

இங்கிருந்து அதிகமாய் அம்மாவின் செல்போனுக்கு அழைத்துத்தான் பேசுவது வழக்கம். 'என்னப்பா எப்போ பார்த்தாலும் ஆயாகிட்டத்தான் பேசுறீங்க, தாத்தாகிட்ட பேசுங்க' என ஓடிச் சென்று தாத்தாவிடம் கொடுத்துவிடுவார். 'என்னடா பையா அப்பாவை மறந்துட்டியா' என செல்லமாக கேட்பார். என்னை டா போட்டு அழைப்பது இந்த ஒரே தருணத்தில் தான், மிகவும் செல்லமாய். பதில் சொல்லுவதற்குள் ’இல்ல கண்ணு, சும்மா கேட்டேன்' எனச் சொல்லி குழந்தைகளைப்பற்றிய விஷயங்களைப் பேச ஆரம்பித்துவிடுவார்.

தம்பியின் மரணத்தின்போது சர்க்கரை நோயின் தாக்கம் காரணமாய் ஒரு காலில் அதிக வலியாகி நடக்க இயலாமல் அதிக பாதிப்புக்கு உள்ளாகியிருந்தார். எல்லாம் முடித்து கிளம்பி வரும்போது சுருக்கமாய் ‘அப்பா, நீங்கள் நன்றாக இருந்தால் தான் நான், நாங்கள் நன்றாக இருக்க முடியும்’ என சொல்லிவிட்டு வந்தேன். உடற்பயிற்சி, மருத்துவமுறைகளை முறையாய் பின்பற்றுதல் என இன்று முழு ஆரோக்யத்தோடு தினமும் பேரப்பிள்ளைகளோடு வாக்கிங் சென்று வருகிறார், அவர்களை கண்போல் பார்த்துக்கொள்கிறார்.

கவிதை எழுதுவார் என முன்பே சொல்லியிருக்கிறேன். அவரின் கவிதைகள் எல்லாவற்றையும் தொகுத்து வைத்திருக்கிறேன். திருமுருகன் பாமாலை என ஒரு புத்தகத்தை வெளியிட்டிருக்கிறார். அவரின் சில கவிதைகளை நினைவு கூர்ந்து பார்க்கையில்,

பூவேந்தும் சொல்லேந்தி
புனைந்திட்ட கவிதையினை
நாவேந்த வாய்மணக்கும்
கொம்புத்தேன் சுவையிழக்கும்

காவேந்தும் தன் தென்றல்
தணலாகி உடல் நோகும்
பாவேந்தன் என் ஆசான்
கண்ணதாசன் புகழ் வாழி...
...............

என கண்ணதாசனுக்காக எழுதிய பாடலின் சில வரிகளும்,

வண்ணமலர் சோலையிலே
வாசமலர் பூத்திருக்க
எண்ணம்கொண்ட வண்டினங்கள்
மலர்நாடி தேன் குடிக்கும்

வண்ணமலர் வாடியங்கே
வாசமது அற்றுப்போனால்
பண்ணிசைத்த வண்டினங்கள்
ஏறெடுத்தும் பார்ப்பதுண்டோ...

பணம் படைத்த மாந்தரெல்லாம்.... என தொடர்ந்து பொருள் இருக்கும் வரைதான் சுற்றம் என பொருள்படும்படி எழுதிய இந்த பாடலும் நினவிற்கு வருகின்றன. யோசித்து நினைவிற்கு வந்ததை எழுதியிருக்கிறேன். சொற்குற்றம் பொருட்குற்றம் எல்லாம் எனக்கே...

எந்த ஒரு கஷ்டத்தையும் மிகவும் எளிதாய் எடுத்துக்கொள்ளும் பக்குவம் வாய்ந்தவர். பிரச்சினைகளுக்கு அவர் தருகின்ற தீர்வுகள் மனதிற்கு இதமாயும், மெல்லிய மயிலிறகால் வருடுவது போல நாசூக்காக இருக்கும்.

தினமும் அதிகாலையில் குளித்து நெற்றியினை பட்டையாய் நீறு, சந்தனம் குங்குமம் என எல்லாம் அலங்கரித்து பாடல்களைப் பாடி பூஜித்து காதில் எம்.பி.த்ரீ ப்ளேயரில் பக்திப்பாடல்களை கேட்டவண்ணம் சோஃபாவில் அமர்ந்திருப்பார். எழுந்து வந்து ’குட்மார்னிங்பா’ என சொல்லும்போது நமக்கு வெட்கமாய் இருக்கும், உடனே நாமும் குளித்து தயாராகவேண்டுமென இருக்கும்.

அவரைப்பற்றி சொல்லிக்கொண்டே போகலாம், சொல்லலாம் இனி வரும் நாட்களில்...

எனக்கு வழிகாட்டியாய், நண்பனாய், ஆசானாய் இருக்கும் என் அப்பா, நல்ல ஆரோக்கியத்துடன் இன்னும் பல்லாண்டுகாலம் வாழ அவர் வணங்கும் முருகனை நானும் மனமுருகி வேண்டுகிறேன்.

அப்பா, ஐ லவ் யூ...

8 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

எல் கே said...

உங்கள் தந்தைக்கு எனது வாழ்த்துக்கள்.

sathishsangkavi.blogspot.com said...

பங்காளி...

அப்பாவிற்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

Muruganandan M.K. said...

அப்பா என்பதுடன், கவிஞனாகவும், நல்ல தாத்தாவாகவும் இருக்கும் அவருக்கு என் நல்வாழ்த்துக்கள்.

சுந்தரா said...

அன்பான தாத்தா, அருமையான அப்பா, திறமையான கவிஞர்...அவருக்கு என் வாழ்த்துக்களும் வணக்கங்களும்.

எஸ்.கே said...

தங்கள் தந்தைக்கு வாழ்த்துக்கள்! மென்மேலும் சிறப்பாக தங்கள் குடும்பம் வாழ வேண்டுகிறேன்!

vasu balaji said...

happy birthday to your appa. என் வணக்கங்களும்.

மரா said...

அப்பாக்கு என் வாழ்த்துக்கள்.

ஆ.ஞானசேகரன் said...

வணங்குகின்றேன்...

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB