விகடம் 1.1.1

|

படித்த, அன்றாட வாழ்வில் நிகழ்ந்த நகைச்சுவை சம்பவங்களை இந்த விகடம் வரிசையில் எழுத ஆசை. படித்து உங்களின் கருத்தினை சொல்லுங்களேன்...

*****
ஒருத்தர் கழுதையில் போய்க்கொண்டிருந்தபோது எதிரில் இன்னொருவர் குதிரையில் வருவதைப்  பார்த்து 'எஸ்குஸ்மி, இந்த கழுதையைத் தரேன், உங்க குதிரையைத் தர்றீங்களா?' எனக் கேட்டாராம். அதற்கு எதிரில் வந்த நபர், 'யாராவது கழுதைக்கு குதிரையை தருவாங்களா?, என்னை அந்த அளவுக்கு கேனைன்னு நினைச்சியா?' என பதிலுக்குக் கேட்க, 'ஒரு வேளை அப்படி இருந்தா'  என பதில் சொன்னாராம். என்ன விவரம் பாருங்க?
*****
என் சித்தப்பாவிடம் அவர் மகன் விவேக் 'அப்பா கட்டுரை நோட்டு வாங்க நூறு நூபாய் வேணும்' எனக்கேட்க சரி என அவர் இருபது நூபாய் கொடுத்தார். அவனும் பதில் ஏதும் சொல்லாமல் வாங்கிச் செல்ல எனக்கு ஒன்றுமே புரியவில்லை. இருவரிடமும் தனித்தனியே கேட்டு கடைசியில் நான் மயக்கமானேன்.

சித்தப்பா 'கட்டுரை நோட்டு பதினாறு ரூபாயிலிருந்து இருபது ரூபாய்க்குள்ளத்தான் இருக்கும். கேட்டதைக் கொடுத்திட முடியுமா?'

விவேக் 'நூறு ரூபா கேட்டாத்தான் இருபது ரூபாயாவது கொடுப்பாரு. சரியான காசு கேட்டா எப்பாவாச்சும் கொடுத்தத சொல்லி, அதுல மீதிய என்ன பண்ணினன்னு ஆயிரத்தெட்டு கேள்வி கேட்பாரு'
*****
நேற்று அம்மாவினை அழைத்தபோது அவர்களுக்கு பதில் எடுத்து பேசியது என் மகன் விஷாக்.

'அப்பா நீங்க புளிச்ச கீரைன்னா ரொம்ப விரும்பி சாப்பிடுவீங்களா?'

'ஆமாம் குட்டி, என்ன விஷயம்?'

'ஆயா இதைதான் இன்னிக்கு செஞ்சிருக்காங்க, எனக்குப் பிடிக்காது, சாப்பிட மாட்டேன்னு சொன்னேன், உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்னு சின்ன வயசிலிருந்து விரும்பி சாப்பிடுவீங்கன்னு சொன்னாங்க, அதான் கேட்டேன்' எனச் சொல்லிவிட்டு 'ஆயாகிட்ட தர்றேன்' என கொடுத்துவிட்டார்.

'பிரபு இந்த கூத்த பாரேன், உனக்கு பிடிக்கும்னு சொன்னதும் அதை கன்ஃபார்ம் பண்ணிட்டு ரசிச்சி சாப்பிடறான்' என ஆச்சரியப்பட்டார். எனக்குள் ஒரு கேள்வி, எனக்கு பிடிக்கும் என்பதற்காக தனக்கும் பிடித்ததாக மாற்றிக்கொள்ளும் இது இன்னும் எத்தனை நாளைக்கு?

வைரம்...காமினி...பரந்தாமன் (சவால் சிறுகதை)

|

ஆஸ்பத்திரி.

'ஐ ஏம் சாரி, ஆப்ரேஷன் நேத்துதான் முடிஞ்சது, கண்டிப்பா உங்களை டிஸ்சார்ஜ் செய்ய முடியாது'

'இதுக்காகத் தான் இத்தனை கஷ்டப்பட்டேன் டாக்டர்,கிளைமாக்ஸ் மட்டும்தான் பாக்கி, நான் இங்க இருக்கிறதே அவங்க யாருக்கும் தெரியாது, கண்டிப்பா நான் ஷூட்டிங் போயாகனும்...'

'நோ காமினி, யூ நீட் ரெஸ்ட் ஃபார் அட்லீஸ்ட் டூ டேஸ்' டாக்டர் ரவி கட்டாயமாய் சொல்லிவிட்டு மாஸ்க்கை அவளின் முகத்தில் பொறுத்திவிட்டு அகன்றார்.

காமினி தமிழ்த் திரையின் வளர்ந்து வரும் கதாநாயகி. திடீரென வயிற்றுவலி வர யாருக்கும் தெரியாமல் அட்மிட் ஆகி ஒரு மைனர் ஆப்ரேஷன், ஒரே நாள் என சொல்லவும் ஒத்துக்கொள்ள, முடிந்தபின் கண்டிப்பாய் இன்னும் இரு நாட்கள் இருந்தாகவேண்டும் என சொல்லவும்தான் மேற்கண்ட உரையாடல்.

டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அகற்றிவிட்டு, வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள்.

*********
விமான நிலையம்.

துபாயிலிருந்து வரும் அந்த விமானத்திற்காக போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவரின் தலைமையில் ஒரு குழுவே காத்திருந்தது. வரும் ஒரு பயணி வைரம் கடத்துவதாய் வந்த ஓர் வலுவான தகவலின் பேரில்.

"என்னய்யா பக்கத்துல ஒரே கும்பலா இருக்கு" என இன்ஸ் கேட்க,

'காமினி நடிக்கிற படத்தின் கிளைமாக்ஸ் சார், பர்மிசன் வாங்கி எடுத்திட்டு இருக்காங்க" என கான்ஸ் சொன்னார்.

விமானம் தரை இறங்கியதும் விமானத்திலிருந்து சிறிய கைப்பையுடன் மாடல் காமினி ஒய்யாரமாய் இறங்கி இமிக்ரேசனை நோக்கி எல்லோருடனும் இயல்பாய் நடந்தாள்.

*********
ஏர்போர்ட் ஷூட்டிங் ஸ்பாட்.

அனுமதி பெற்று ஷூட்டிங் நடந்துகொண்டிருந்தது. கிளைமாக்ஸ் காட்சியினை எடுத்துக்கொண்டிருந்தார்கள். காமினி தோளில் மாட்டிய பையோடு இருக்க, துப்பாக்கியோடு வில்லன் சிவா. காப்பாற்றத் தயாராய் கதாநாயகன் சுஜீத். ரெடி டேக் என சொன்னவுடன்,

"என்னை சுட்டாலும் கவலை இல்லை நான் போய்த்தான் ஆகனும்?" என காமினி கிளம்ப,

"ஸாரி.. எனக்கு வேற வழி தெரியலை" என்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா.

காட்சியின் படி துப்பாக்கியின் ட்ரிக்கரை அழுத்தும்போது ஹீரோ பாய்ந்து தட்டிவிடவேண்டும், துப்பாக்கி வெடித்து மேலே இருக்கும் சரவிளக்கில் பட்டு அறுந்து அப்படியே கீழே விழ வேண்டும், அதன் பின் ஃபைட்.

சிவா ட்ரிக்கரை அழுத்த துப்பாக்கியில் டம்மி புல்லட்டுக்கு பதில் யாரோ ஒரிஜினல் புல்லட் மாற்றி வைத்துவிட அது உண்மையில் வெடித்து அங்கிருந்த ஒரு டெக்னீஷியனின் தோளில் மேல் பாய்ந்தது. அவர் அலறலுடன் பொத்தென்று சாய அந்த இடமே களேபரமானது.

*********
ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்.

"காமினி... வெல்டன்.. எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியே" என்று பாராட்டினார் பரந்தாமன்.

காமினி திரு திருவென விழித்து "டார்லிங், எனக்கு, ஒன்னுமே எனக்கு புரியல. என்ன சொல்றீங்க?" எனக் கேட்டாள்.

பரந்தாமன் உள்ளே புதிதாய் வந்த ஒரு நபரைப் பார்த்து, "வாய்யா தனா, உனக்குத்தான் நன்றி சொல்லனும். ஷூட்டிங்ல துப்பாக்கியில ஒரிஜினல குண்டப் போட்டு கலக்கிட்டய்யா. அந்த களேபரத்தாலத் தான் காமினிய சரி வர செக் பண்ணாம விட்டுட்டாங்க, இந்தா உன் பங்கு" என ஒரு ஆயிரம் ரூபாய் நோட்டுக்கட்டு ஒன்றை அவனது பாக்கெட்டில் திணித்துவிட்டு,

"சாரி காமினி, உங்கிட்ட சொல்லாமயே உன்னை டைமண்ட் கடத்த காரியரா உபயோகப்படுத்திக்கிட்டோம் . உன் பேக்கேஜ்ல இருந்த வைரம் இப்போ சேஃபா என் கைல..." என ஹா ஹா என அட்டகாசமாய் சிரிக்க ஆரம்பித்தார்.

கொஞ்ச நேரம் கழித்தி "டார்லிங், லெட் மி கோ டு ரெஸ்ட் ரூம்" என சொல்லிய காமினி மெதுவாய் அங்கிருந்து விலகி, ஏற்கனவே ஒரு பார்ட்டியில் அறிமுகமான கமிஷ்னரின் எண்ணுக்கு அழைத்தாள்.

சேற்றில் கல்...

|

அது ஒரு அழகிய ஆற்றங்கரை. ஆற்றினில் கரை புரண்டு வெள்ளம் கருமை நிறத்தில் ஓடிக்கொண்டிருந்தது. ஆற்றுக்கு செல்லும் அந்த ஒரு பாதையின் இரு மருங்கிலும் பசுமையாய் கமுகு, மா, வாழை, பலா என பல்வகையான மரங்கள் கனிகளை சொரிந்த வண்ணம் செழுமையாய் இருந்தன. சந்தோஷமாய் துள்ளிக் குதித்தோடும் மான்கள், அங்கிங்கும் ஓடியாடும் வெண்ணிற முயல்கள், மரங்களிடளையே பழங்களை உதிர்த்து ஆடி ஓடி தாவி விளையாடும் வானரங்கள், மலர்ந்திருக்கும் பூக்கள், அவைகளில் தேனுண்ண ரீங்காரமிடும் வண்டுகள்...

கரு மேகங்கள் போன்று திரண்டிருந்த அந்த யானைக் கூட்டம் ஆற்றங்கரையில் அடந்திருந்த சோலையில் கனி வகைகளையெல்லாம் பசியாறிய பின் ஆற்று வெள்ளத்தில் நீராடி, இதோ இப்போதுதான் ஆற்றினை விடுத்து வரிசையாய் தமது இடத்துக்கு கிளம்பத்தொடங்கின.

செல்லும் வழியில் இருந்த ஒரு சகதி நிரம்பிய குட்டையில் புரண்டு விளையாடிய கூர்மங்கள் திடீரென குதூகலித்து யானைகள் வரும் வழியில் ஓடிவர ஆரம்பித்தன. யானைகள் சட்டென விலகி அவைகள்  செல்லும் வரை பொறுமையாய் காத்திருக்க, அவைகளுக்கெல்லாம் அதீத மகிழ்ச்சி அவ்வளவு பெரிய யானைகளுக்கே தங்களைக் கண்டால் பயம் என.

ஆனால் அவைகளைத்தவிர அங்கிருந்த யாவற்றுக்கும் தெரியும் ஏன் ஒதுங்கி நின்றன என.

எந்திரன் பார்க்கனும்... - தொடர் பதிவு...

|

ஆருயிர் நண்பர் சேட்டை அன்போடு இந்த தொடர்பதிவுக்கு அழைத்ததற்காக அன்பு கலந்த வணக்கத்தோடு நன்றி சொல்லி, ராமருக்கு அனில் போல் (இதையும் ஆராய்ச்சி செய்து ராமர் வாழ்ந்ததாக சொல்லப்படும் காலத்தில் அனில் இல்லை என்று கூட யாராவது இடுகையிடலாம், அதற்கெல்லாம் நாம் பொறுப்பு இல்லைங்கோ!) எந்திரன் படத்துக்கு நாமும் ஒரு இடுகை இடலாமென எண்ணி இதோ களத்தில். (இந்த உதாரணம் சரியில்லையே என நினைத்தால்... சாரிங்க, ஒரு ஃப்ளோவில் எழுதிட்டேன்...)

அவர் ரொம்பவும் வித்தியாசமான ஆள், எதற்கெடுத்தாலும் சந்தேகப் படுவார். உதாரணமாய் வீட்டை பூட்டிவிட்டு போகும்போது நன்றாய் கை வலிக்க இழுத்து தொங்கி பார்த்துவிட்டுத்தான் போவார். தெரு முனைக்கு போனவுடன் பூட்டினோமா என சந்தேகம் வர, திரும்பவும் வந்து பார்த்துவிட்டு போவார்.பஸ்ஸில் ஏறியவுடன் சரியான பஸ்ஸில் தான் ஏறியிருக்கிறோமா என சந்தேகம் டிக்கெட் வாங்கும்வரை. அதன்பின் மறக்காமல் டிக்கெட் வாங்கிவிட்டு ஸ்டேஜ் வரும் வரை பாக்கெட்ல பத்திரமா இருக்கிறதா எனத் தொட்டு பார்த்துக்கொண்டே வருவார்.

அடுத்ததாய் ஒரு சின்ன விசயத்தை ரொம்ப பூதாகாரமாய் கற்பனை செய்வார். ஒரு வாழைப்பழத்தோல் கிடந்தால் அதில் ஒருவர் வழுக்கி விழுந்து அவரை மானசீகமாய் போட்டோவில் மாட்டும்வரை யோசித்து, கடைசியாய் அதை எடுத்து போடாமால் போவார்.

மொத்தத்தில் யாரையும் நம்ப மாட்டார், விதிவிலக்காய் குடும்ப டாக்டரை மட்டும். ஒரு முறை அவருக்கு காலையிலேயே தலைவலியாய் இருக்க, வாழ்க்கையில் அவர் நம்பும் ஒரே நபரான டாக்டரைப் பார்க்க போயிருந்தார். நன்றாக பரிசோதித்து ஒன்றுமில்லை ஓய்வு தான் தேவையென வலியுறுத்த, அவர் நம்புவதாய் இல்லை. கண்டிப்பாய் ஏதாவது மருந்து கொடுத்தே ஆகவேண்டும் என வற்புறுத்த, இல்லாத நோய்க்கு மருந்தா என டாக்டர் ஒரு மருந்து சீசாவில் தண்ணீரைப் பிடித்துக் கொடுத்து 'இது சக்தி வாய்ந்த மருந்து இதைக் குடிக்கும்போது குரங்கினை மட்டும் நினைக்கக் கூடாது' எனச் சொல்லிக் கொடுத்தார்.

சரி, இந்த கதைக்கும், இடுகை தலைப்புக்கும் ஏதாச்சும் சம்மந்தம் இருக்கிறதா? சத்தியமாய் இல்லை. அது மாதிரிதான் எந்திரன் படத்தைப்பற்றியும் சம்மந்த சம்மந்தமில்லாமல் பலரும் பலவாறு பார்க்காதே... அது இது என பயமுறுத்த நமக்குள் பார்த்தே ஆகவேண்டும் எனும் எண்ணம் எழுகிறது. அதனால் கண்டிப்பாய் எந்திரனை நான் பார்ப்பேன்.

அதுபோல், படம் எடுக்கிறார்கள், விளம்பரம் செய்கிறார்கள், நன்றாக இருந்தால் ஓடப்போகிறது, இல்லையென்றால் ஓ....டப்போகிறது. அதை விடுத்து அதற்கு இத்தனை வியாக்கியானங்களா? இது போன்ற குதர்க்கங்களுக்காகவும் கண்டிப்பாய் நான் எந்திரனை நான் பார்ப்பேன்!

கடைசியாய் ரஜினியை ரொம்ப பிடிக்கும் என்பதாலும் நான் எந்திரனைக் கண்டிப்பாய் பார்ப்பேன்.

எங்கேயோ படிச்சது - குருவும் சிஷ்யனும்... புனைவு இல்லைங்கோ...

|

உலகத்துலேயே அவருதான் மாவீரன்னு ஒருத்தரு நினைச்சிகிட்டிருந்தாரு. அதுல கொஞ்சம் உண்மையும் இருந்துச்சி, ஏன்னா அவருக்கு சகல வித்தைகளும் தெரியும்.

அதப் பத்தி ஜம்பமா கூட்டாளிங்ககிட்ட சொல்லிருக்கும்போது ஒருத்தர் சொன்னாரு...'நீ பெரிய வீரன் தான் ஒத்துக்கறேன், ஆனா அந்த மலையத் தாண்டிப்போனா அங்க ஒரு குரு இருக்காரு. அவருகிட்ட உன் திறமையக் காமிச்சி அவரு வாயால வீரன்னு சொன்னாத்தான் இந்த உலகத்துலயே நீ பெரிய பலசாலி' ன்னாரு.

சொன்னது நியாயமாப் படவே உடனே கிளம்பி மலையத் தாண்டிப்போய் அந்த குருவப் பார்த்தாரு. அவரு தன்னைப் பத்தி பெருமையா சொன்னத எல்லாம் பொறுமையா காதுல வாங்கிட்டு குரு,  'உங்களோட பலம் என்னன்னு கேட்டாரு.

'சும்மா சாதாரணமா நூறு பேரை அடிச்சிப்போட்டுடுவேன்' னு சொல்லவும், 'ஆஹா, பிரமாதம்' னு சிஷ்யனா சேர்த்துகிட்டு கடுமையான பயிற்சிகளை கொடுத்தாரு.

ஒரு ஆறு மாசம் போனதுக்கப்புறம் கூப்பிட்டு 'உங்களோட பலம் இப்போ எவ்வளவு'ன்னு கேட்டாரு. ஒரு அம்பது பேரை அடிச்சிப் போட்டுடுவேன்'னு சொல்லவும் இன்னும் நிறைய பயிற்சிகளை செய்யச் சொன்னாரு. திரும்ப ஒரு மூனுமாசம் கழிச்சி அதே கேள்வியக் கேட்க, இருபத்தைஞ்சின்னு பதில் வந்துச்சி. இப்படியா பத்து, அஞ்சின்னு நின்னது.

கடைசியா ஒரு நாள் கேட்டப்போ, 'அது எப்படிங்க, எதிராளிய வெச்சித்தானே சொல்ல முடியும்' னாரு.

'ஆஹா, இப்போதான் நீ உண்மையான வீரன்' னு வாழ்த்தி 'உனக்கு பயிற்சி தேவையில்லை' ன்னு அனுப்பி வெச்சாரு.

இதுக்கப்புறமும் நீதின்னு டிஸ்கியில சொல்லி... கதிர் என்னை கும்மனுமா என்ன?

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB