சகுனம் Vs மணி...

|

காலேஜ் முடிச்சிட்டு அங்க இங்கன்னு வேலை பாத்துட்டு இன்னும் செட்டில் ஆகாம இருந்தேன். ரெண்டு இன்டெர்வியூ முடிச்சிட்டு ஒரு வாரம் பிரேக் எடுத்துட்டு ஊருக்கு போயிருந்தேன்.

மணி என்ன பாக்க வந்திருந்தான். என்னோட க்ளோஸ் பிரண்டு, படிச்சி முடிச்சிட்டு விவசாயம் பாத்துகிட்டிருக்கான்.

'பிரபு புவனாவுக்கு எக்ஸாம் பீஸ் கட்ட போகனும், நாளைக்குத்தான் கடைசி தேதி, பன்னண்டு மணிக்குள்ள கட்டனுமாம். திடீர்னு போன் பண்ணி சொல்லுது. நாளைக்கு பணம் கொடுக்க கரூர் போறேன், நீயும் வர்ரியா' ன்னு கேட்டான்.

வீடு, இல்லன்னா அவன்கூடத்தான் சுத்திகிட்டு இருப்பேன். ஏற்கனவே ரிலீஸ் ஆகியிருந்த புது படத்தை நாளைக்கு பாக்கனும்னு சொல்லியிருந்தான்.

நான் யோசிக்கும் போதே புரிஞ்சிட்டு, 'படத்த பத்தி யோசிக்கிறியா?, ஆத்தூர்ல எவன்யா படம் பாப்பான், சேலத்துல ஏ.ஸி.ல பாப்போம்' னான்.

அம்மாகிட்ட கேட்டுட்டு சரின்னு சொன்னவுடன், 'காலையில லோகநாதன்ல போறோம், நாலே முக்காலுக்கெல்லாம் ரெடியாயிடனும், உன்னை நாலு மணிக்கு எழுப்பறேன்' னுட்டு போயிட்டான். நம்ம ஊர்ல இருந்து ஆத்தூர், சேலம் போயிதான் கரூர் போகனும்..

ரொம்ப நேரம் அப்பா, அம்மா தம்பியோட பேசிட்டிருந்துட்டு ஒரு மணி வாக்கிலதான் படுத்தேன். மூனு மணிக்கே வந்து எழுப்பி விட்டுட்டான்.

பாத்ரூமுக்குள்ள உக்காந்துகிட்டே தூங்கி, நாலு தடவ அவன் கதவை தட்டி... ஒரு வழியா ரெண்டு பேரும் கிளம்பிட்டோம்.

மணி சகுனம், ஜாதகம்னு ரொம்ப நம்பிக்கையா இருப்பான், நான் அவ்வளவா கண்டுக்க மாட்டேன்.

வீட்ட விட்டு கிளம்பி ஒரு பத்தடி தூரம் போயிருப்போம், ஒரு பூனை குறுக்க போக, சட்டுனு டென்ஷன் ஆகி, திரும்பவும் வீட்டுக்கு வந்து அம்மாகிட்ட தண்ணி வாங்கி குடிச்சிட்டு, என்னையும் கொஞ்சம் குடின்னான், வேணாமுன்னுட்டேன்.

தெருவில விளக்கில்லாம இருட்டா இருந்துச்சி. நடந்து போயிட்டிருக்கும்போது, எனக்கு முன்னால வேகமா நடந்து போன மணி, கவனிக்காம படுத்திருந்த பன்னி மேல மெதிச்சுட்டான்.

குரூப்பா கத்திகிட்டு சட சடன்னு ஓட மிரண்டு போய், பேலன்ஸ் பண்ண முடியாம பக்கத்துல இருந்த டிட்ச்ல காலை விட்டுட்டான். லேசா காலை சிராய்ச்சதோட இல்லாம, பேன்ட்டெல்லாம் சகதியாயிடுச்சி.

பஸ்ஸுக்கு வேற டைம் ஆச்சு. நொண்டிகிட்டே வேகமா திட்டிகிட்டே வீட்டுக்கு ஓடி வேற பேன்ட் போட்டுட்டு வந்தான்.

அதுக்குள்ள பஸ் வர்ற சத்தம் கேட்டு தலை தெறிக்க, அவனோட செருப்பு பிஞ்சி போக ஒடியும், பஸ்ஸ விட்டுட்டோம். டென்ஷனாகி கத்த ஆரம்பிச்சுட்டான். எனக்கு சிரிப்பா வந்துச்சி.

சிரிக்கறத பாத்துட்டு இன்னும் சூடாயிட்டான், 'எம்.சி.ஏ. படிச்சிட்டேங்கற திமிர்ல இருக்கிற' ன்னு ஆரம்பிச்சுட்டான். ஏதாவதுன்னா என் படிப்பப்பத்தி பேச ஆரம்பிச்சிடுவான்.

அடுத்த பஸ் அஞ்சரைக்குத்தான். 'வீட்டுல போயி என் செருப்ப வேணா போட்டுட்டு வந்துரலாமா மணி' ன்னு கேட்டேன்.

'ஆமா விளங்கிடும், பாத்துக்கலாம். இன்னிய பொழுது எப்படி ஆகப்போகுதோ' ன்னு புலம்ப ஆரம்பிச்சுட்டான். வர்ற லாரி பைக்குக்கெல்லாம் கை காட்டி லிப்ட் கேக்க ஆரம்பிச்சுட்டான்.

'மணி வேண்டாம், இன்னும் பதினஞ்சி நிமிஷம்தான் இருக்கு, அடுத்த பஸ்ஸிலேயே போயிடலாம்' னேன்.

லாரி ஒன்னு நின்னுச்சி. 'அண்ணா அர்ஜென்ட், ஆத்தூர் வரக்கும் வரலாமா' ன்னு கேட்க, 'சரி' ன்னு ஏத்திகிட்டாங்க.

ஆத்தூர் போறதுக்கு ரெண்டு வழி, லாரில்லாம் ஷார்ட் கட்டுல நடுவலூர் வழியா போகும், நாலஞ்சி பஸ்ஸ தவிர எல்லாம் கெங்கவல்லி வழியா போகும்.

மனசுக்குள்ள லாரி ஏதாச்சும் ஆச்சுன்னா ஆத்தூர் போன மாதிரிதான்னு நினைச்சேன், ஆனா வெளியே சொல்லல.

அதே மாதிரி ரெண்டு ரோடும் சந்திக்கிறதுக்கு ஒரு கிலோ மீட்டர் முன்னால படீர்னு ஒரு சத்தம். பின்னால டயர் வெடிச்சிடுச்சி. டென்ஷனாகி, அவசரம்னு அவங்ககிட்ட சொல்லிட்டு வேக வேகமா ஓடினோம்.

மணி செருப்பில்லாத கால்ல வேக வேகமா ஓடி வர்றத பாக்க பாவமா இருந்துச்சி. கூட்ரோடு வரைக்கும் ஓடியும் நடந்தும் போயி பஸ்ஸ புடிச்சி ஆத்தூர் போறதுக்கே ஏழரை ஆயிடுச்சி.

சேலம் பஸ்ஸில உட்காரும்போது மூனுபேர் உட்கார்ற சீட்ல வழக்கம்போல் ஜன்னல் ஓரமா உட்காந்துட்டேன். மணி நடுவில உட்காந்துட்டான்.

எப்பவும் நாங்க பஸ்ஸில உட்காரும் போது மூனாவது சீட்ல பையை வெச்சிட்டு, யாராவது பொடிசா, வத்தலா வந்தா உட்கார வெச்சுக்குவோம்.

ஆனா அன்னிக்குன்னு பாத்து அவன் நேரமோ என்னானு தெரியல, அந்த மாதிரி பண்ணாததால நாமம் போட்டுட்டு ஒருத்தர் ரொம்ப தடியா வந்து உட்காரப் போக,

'பின்னால நிறைய இருக்கு சார்' னு சொன்னாலும், 'பரவாயில்ல தம்பி இங்கயே உட்காந்துக்கறேன், அவ்வளோ தூரம் போக முடியாது' ன்னு உட்காந்துட்டாரு.

நரக அவஸ்தை. அவனும் ஜாடையாவும் கடைசியா நேரடியாவும் சொன்னாலும் அவரு கண்டுக்கவே இல்ல, சிரிச்சுகிட்டே வந்தாரு.

நான் அசதியில காத்து நல்லா அடிக்க தூங்கிட்டேன். மணி என்ன அவசரமா எழுப்பினான்.

'யோவ் இங்க பாருய்யா கிரகத்த' ன்னான்.

பஸ் மெயின் ரோட்ட விட்டுட்டு ஒரு சிங்கிள் பாதையில போயிட்டு இருந்துச்சி. ஆக்ஸிடென்ட், ரோடு பிளாக்காம்.

'என்னய்யா விதி இப்படி விளையாடுது' ன்னான், கலவரமாய்.

'எல்லாம் அவன் செயல்' நாமம் சொல்ல,

'உன் செயல்' னான் கடுப்பாய்.

எப்படியோ சுத்தி ஒருவழியா சேலம் போயி, பிளாட்பாரத்துல செருப்பு ஒன்னு வாங்கிட்டு, கரூர் போறதுக்குள்ள ஒரு மணியாயிடுச்சி.

புவனா கேட்டுக்கிட்டயே நின்னுகிட்டிருந்துச்சி. பாத்தவுடனே பொசுக்குன்னு அழுதுடுச்சி. 'ஏன்னா, இப்படி பண்றே' ன்னுட்டு, என்ன பாத்து எப்பவும் வராதவன் வந்திருக்கேனேன்னு, டக்குனு மலர்ச்சியா, 'எப்பண்ணா வந்தீங்க' ன்னு கேட்டுச்சி.

பிரண்டுகிட்ட அண்ணன் வந்தவுடன் தர்றேன்னு சொல்லி வாங்கி கட்டிடுச்சாம். சுருக்கமா நடந்தத சொல்லிட்டு, பணத்த தர்றதுக்கு மணி பேன்ட் பாக்கெட்ட்ல கையை விட்டவன் ஆடி போயிட்டான்.

பேன்ட்ட மாத்தும் போது எல்லாம் எடுத்து வெச்சவன், டிக்கெட் பாக்கெட்ல இருந்த தர வேண்டிய பணத்த எடுத்து வெக்க மறந்துட்டான். வழக்கம் போல ஓவர் டென்சன் ஆக, சமாதானப்படுத்தி, வாழ்க்கையில முதன் முறையா அடகு கடையில என் செயின வெச்சு சமாளிச்சோம்.

மணி ஒன்னுமே பேசாம நொந்து போய் வந்தான். படமெல்லாம் பாத்தாலும் சமாதானமாகல.

ஊருக்கு போனதும் நேரா அவன் வீட்டுக்குத்தான் முதல்ல போனோம், பேன்ட்ல பணத்த பாக்கறதுக்காக.

மாட்டியிருந்த பேன்ட்ட காணும். பதறிக்கிட்டு பணம் வெச்சிருந்தத சொல்லி அவங்கம்மாகிட்ட  கேட்டதுக்கு, 'அய்யய்யோ துவைக்க போட்டுட்டேனே' ன்னு அலற

'உன்ன யாரு துவைக்க போட சொன்னாங்க' ன்னு கோவமா கத்த 'ரொம்ப அழுக்கா சேரப்பி இருந்துச்சி' ன்னு சொல்லவும், வேகவேகமா துணி எடுத்துட்டு போனவங்க வீட்டுக்கு ஓடினான்.

நான் வீட்டுக்கு போக, அப்பா வாசல்லயே உட்காந்திருந்தாரு.
'துரை, ஒருநாள் வீடு தங்க மாட்டாரா?, ஒரு போன் கூடவா பண்ண கூடாது' ன்னுட்டு, 'தந்தி வந்திருக்கு நல்ல விஷயம்தான், டேபிள்ல இருக்கு பாரு'ன்னாரு.

ஆர்வமா எடுத்து பாக்க வேலையில பத்து நாள்ல சேரச் சொல்லி டெல்லியிலிருந்து தகவல் வந்திருந்துச்சி.

என்னை கவர்ந்த தாத்தாக்கள்.

|

சின்ன வயசுல நம்மள கவர்ந்த தாத்தாங்க சில பேரை பார்ப்போம், அம்மா வழி, அப்பா வழி தாத்தாக்கள தவிர்த்து.

பூசாரி தாத்தா...

ஊர்ல இருக்கிற முருகன் கோவில், மாரியம்மன் கோவில், விநாயகர் கோயில்னு எல்லாத்துக்கும் அவருதான் பூசாரி (எல்லா கோயிலுக்கும்னு ஒரு வார்த்தையில சொல்லிட வேண்டியதுதானேன்னு மொறைக்காதீங்க). விவரம் தெரியாதவரைக்கும் தான் அவரு நமக்கு பூசாரி தாத்தாவா இருந்துட்டு, அப்புறம் புருடா தாத்தாவா மாறிட்டாரு.

அது அம்மாவோட தாத்தா இறந்த சமயம். அவருதான் ஊருக்கு பெரிய கவுண்டர். ரொம்ப சிறப்பா சமாதி எல்லாம் கட்டி அடக்கம் பண்ணினாங்க. நம்ம பூசாரி தாத்தா தினமும் மாலை கொண்டுவந்து வீட்டுல அவரோட படத்துக்கு போட்டுட்டு சாயந்திரம் சுடுகாட்டுல அவரோட சமாதியில படைச்சிட்டு வருவாரு.

தினமும் ராத்திரியில தாத்தாவ சுடுகாட்டுல சந்திச்சி பேசறதா சொல்லுவாரு. அப்படியே சிரிச்ச முகத்தோட தும்பைப்பூ மாதிரி வேஷ்டி சட்டை போட்டுக்கிட்டு இருந்தாருன்னு சொல்வாரு. எங்களையெல்லாம் கவலைப்படாம இருக்க சொல்லிட்டு அவரு சொர்க்கத்துல சந்தோஷமா இருக்கிறார்னு சொன்னதோட இல்லாம அங்க அவரு எப்படி இருக்கிறார்னு வேற சொல்லுவாரு.

'பிரபு உன்னை நல்லா படிக்க சொன்னாரு, மலரு நீ ஃபர்ஸ்ட் மார்க் எடுப்பே' ன்னு எங்கிட்டயும் சித்திகிட்டையும் சொன்னாரு. இன்னன்ன தேதில மழைவரும், புயல் வரும்னு கேக்கறதுக்கெல்லாம் கேட்டுட்டு வந்து பதில் சொல்லி புல்லரிக்க வெச்சாரு.

காணாம போன என்னோட பேனாவ யார் எடுத்தாங்கன்ன கேட்டதுக்கு, அடுத்த நாள் கேட்டுட்டு வந்து உங் கிளாசில இருக்கிற ஒருத்தந்தான்னு சொன்னாரு. ரொம்ப நம்பினோம் அவர, பரீட்சை ரிசல்ட் வர வரைக்கும். சொல்றது எதுவும் நடக்காம போக அவர நம்பறத விட்டுட்டோம். ஏதாவது சொல்ல வந்தாலும் ஓட ஆரம்பிச்சிடுவோம்.

ஆலயமணி தாத்தா.

இவரு ஆலயமணி சின்னத்துல வார்டு எலக்சன்ல நின்னு ஜெயிச்சதால இந்த பேரு. சிரிச்ச முகத்தோட இருப்பாரு. ஒரு வேலையும் இல்லன்னாலும் ரொம்ப பிசியா இருப்பாரு, வார்டு மெம்பராச்சே? இவரு எலெக்சன்ல நிக்கும்போது இவரு அடித்த நோட்டீஸ்தான் ரொம்ப பிரபலம்.

விவரம் தெரியாத அந்த வயசிலேயே அவரு அள்ளிவிட்ட வாக்குறுதி இன்னும் நினைவில. வீட்டுக்கு வீடு ஒரு மணி தருவேன்னு ஆரம்பிச்சி, பள்ளி சுத்தியும் சுவர் எழுப்பறேன், வீட்டுக்கு வீடு கழிப்பிட வசதி, பசுமாட்டு லோன் அது இதுன்னு அள்ளிவிட்டிருந்தாரு. குறிப்பா இன்னும் மறக்க முடியாதது அந்த நோட்டிஸ்ல கொட்டை எழுத்துல உங்களின் பொன்னான வாக்கு ஆலயமணியின் சின்னத்தில் போட்டியிடும் 'நடுத்தெரு நாராயணனுக்கே' என்பதே.

விவரம் தெரியாம அவருகிட்ட இது யாருன்னு கேக்க, சிரிச்சிகிட்டே, 'நான்தான் பேராண்டி, என் பேரு நாராயணன்தான்னு உனக்கு தெரியாதா' ன்னு கேட்டுட்டு, 'நம்ம வீடு இருக்கிறது நடுத்தெருவிலதானே' ன்னு சொன்னாரு.

சுகர் (தாத்தா)

தாத்தா மாதிரி வயசானவருதான். இவர யாரும் தாத்தான்னு கூப்பிட மாட்டோம். சுகர்னு தான் கூப்பிடுவோம், அவரு பேரு சக்கரைங்கறதால. அம்மி கொத்தறது, சிற்ப வேலை, கல்லு உடைக்கிறதுன்னு எல்லாம் செய்வாரு. அம்மி உரல்னும் செய்வாரு. ரொம்ப நல்லா பாடுவாரு. தினமும் சித்திங்க என்ன அவர அழைச்சிகிட்டு வர சொல்லி பாட்டுப் பாட சொல்லுவாங்க. ’பூமியில் மானிட ஜென்மமடைந்துமோர் புண்ணியமின்றே விலங்குகள் போல்' னு கணீர்னு பாடுவாரு.

பாடும்போது வாயை அசைக்கிறது தான் ரொம்ப காமெடியா இருக்கும். நாலு சிவாஜிங்க சேர்ந்த மாதிரி இருக்கும். அத பாத்து விழுந்து விழுந்து சிரிப்போம். கண்டுக்காம பாடிகிட்டிருப்பாரு. தினமும் கேட்போம், சலிக்காம பாடுவாரு.

பொட்டையன் தாத்தா

இவரு பேரு என்னான்னு தெரியாது. இப்படித்தான் எல்லாரும் கூப்பிடுவாங்க. கண்ணு கண்ணுன்னு வார்த்தைக்கு வார்த்தை கூப்பிடுவாரு. இவரு சத்தம் போட்டு மிரட்டினாக்கூட எந்த ஒரு புள்ளங்களும் பயப்படாது, குரல் அப்படி. ரொம்ப சாதுவானவரு...

பசங்ககெல்லாம் இவரு வரத பாத்தா, ஹேய் ’பொட்டயன் தாத்தா வர்றாரு’ன்னு சத்தம் போட்டுகிட்டு ஓடுவோம், குச்செடுத்துகிட்டு தொறத்துவாரு. வீட்டுல வந்து ஆயாகிட்ட ‘அண்ணியா, பிரபு கூட என்ன கிண்டல் பண்ணுது’ ன்னு கம்ப்ளைய்ண்ட் பண்ணுவாரு. ஆயா என்ன மிரட்டற மாதிரி நடிப்பாங்க.

இந்த மாதிரி நிறைய நம்ம மனசில நிறைஞ்சிருக்கிறவங்க இருக்காங்க. அதையெல்லாம் நினைச்சிப்பாக்குறதுல ஒரு சுகம்தானே?

சுப்பிரமணியும் ஸ்டவ்வும்...

|

மாமாவும் நானும் காலேஜ்ல நடந்த ஒரு காதல் கலாட்டாவ பத்தி மாடியில அவரோட வீட்டு வாசல்ல கட்டில்ல உக்காந்து பேசிட்டிருந்தோம்.

கீழ கொசுவலை தறி வெச்சுட்டு, நாப்பது பேருக்கு வேலை கொடுத்துட்டு வியாபார காந்தமா இருக்காரு. ரெண்டு பேரும் சேர்ந்துட்டா ஒரே அதகளம்தான்.

காலேஜ்ல அப்போ நான் செகண்ட் இயர். பேச்சு வாக்குல கேட்டார்.

'பிரபு, ஜுஜூபி, ஜுஜூபின்னு சொல்றங்களே? அப்படின்னா என்னா?'

'ஏன் மாமா இந்த திடீர் சந்தேகம்' னேன்.

'இல்ல, நேத்து சாயங்காலம் பஸ்ஸில வரும்போது காலேஜ் பசங்க எதுக்கெடுத்தாலும் இதையே சொல்லிட்டு வந்தாங்க' ன்னாரு.

அப்போ சுப்பிரமணி கீழ தறியில இருந்து வந்தான்.

'அண்ணா பதினாலுக்கு பதினைஞ்சி ஸ்பேனர் வேணும்' னான்.

'உள்ள பொட்டியில இருக்கு எடுத்துட்டு போ', 'ஆமா, நீ பதில் சொல்லு'.

டக்குனு பதில் சொல்ல தடுமாறி, 'அது வந்து, சாதாரணமா சொல்றது, ம்.... உதாரணமா அர்ஜன்ட்டா ஆயிரம் ரூபா உங்ககிட்ட கேக்கறேன்... உங்ககிட்ட இருந்துச்சின்னா,

'ஜுஜூபி, ஆயிரம்தானே, இப்பவே தர்ரேன்' நீங்க சொல்லலாம், அப்புறம்'னு இழுத்தேன்.

'இந்த ஜுஜூபி மேட்டரத்தான் நான் தெரிஞ்சுக்காம இருந்தேனா' ங்கும்போது சுப்பு திரும்பவும் வந்தான்.

'அண்ணா, பதினேழுக்கு பதினெட்டு ஸ்பேனர் வேணும்'.

'சும்மா சும்மா என்னா, எடுத்துகிட்டு போ' சொல்லிட்டு பேச்சை தொடர்ந்தோம். திரும்பவும் வந்தான்.

'அண்ணா ஸ்டவ் பின் வேணும்' னான். கை, முகமெல்லாம் கரி.

இருக்கிற இடத்தை சொல்லி ஒரு பாக்கெட் எடுத்துட்டு போக சொன்னாரு.

கொஞ்ச நேரம் போனதும், மாமா திடீர்னு,  'ஆமா பிரபு எதுக்கு அவன் சும்மா சும்மா வந்து எடுத்திட்டு போனான், வா கீழ போய் பாக்கலாம்' னாரு.

தறியில ஊசி உடைஞ்சு போச்சுன்னா ஊசியை மாத்திட்டு டை செட்ல ஃபிட் பண்ணி ஈயத்த உருக்கி ஊத்துவாங்க.

ஈயத்த உருக்க பம்பிங் ஸ்டவ்வதான் யூஸ் பண்ணுவாங்க, நல்லா பிரஷர்ல ஈயம் உருகுங்கறதால.

நம்மாளு ஈயம் காய்ச்சற அந்த ஸ்டவ்லதான் இவ்வளோ நேரம் வேலை பாத்திருக்கான்னு போயி பார்த்தப்போதான் தெரிஞ்சது.

தரையெல்லாம் கரி. ஸ்டவ்வ அக்குவேறா பிரிச்சி மாட்டியிருந்தான். ஸ்டவ் பின் பத்துக்கு மேல உடைஞ்சி கிடந்தது.

'அண்ணா, நான் இனிமே வேலைக்கே வரப்போறதுல்ல... இந்த ஸ்டவ்வ மாத்து, இல்லன்னா ஆள உடு'  ன்னான்.

'பம்ப் பண்ணா காத்தெல்லாம் ஏறுதா' ன்னாரு.

'அந்த எழவுக்குத்தான், பத்து தடவைக்கு மேல வந்து ஸ்பேனர், நெருப்பெட்டி,  பின்னுன்னு எதுத்துட்டு வந்தேன்' னான்.

அப்போதான் மாமாவுக்கு லேசா சந்தேகம் வந்தது. டக்குனு ஸ்டவ்வ தூக்கி ஆட்டி பாத்தாரு, சுத்தமா எண்ணையே இல்ல...

இதுவன்றோ நட்பு...

|

உலகிலுள்ள யாவரும்
உன்னை வெறுக்கையில்
நிலை மாறா நட்போடு
நேசித்தல் நட்பாகும்.


பல்வேறு கதைகள் உண்டு
புராண காலம் முதல்
சில துளிகள் சொல்லுதற்கே
செலவாகும் வாழ்நாட்கள்.


கோப்பெருஞ் சோழனவன்
கண்டதில்லை கேட்டலினால்
பாப்புணைந்த பெரும் புலவர்
பிசிராந்தை நட்பு கொண்டான்.


தப்பாய் பிறந்திட்ட
தமையன்கள் செயல்களினால்
மூப்படையும் முன்னரே
உயிர்துறக்க முடிதுறந்து


வடக்கிருக்க தேவையான
வசதிகளை செய்கையில்
இடம் ஒன்றை வைத்திடவே
உடனிருந்தோர் கேட்டிட்டான்.


மடல் வழியே பேசியும்
மற்றோர் சொல்வதிலும்
நட்பது என்பதனை
நன்றுணர்ந்த உடனிருந்த


அனைவருக்கும் ஆச்சர்யம்
அரசனது ஆஞ்சையினால்
ஆனாலும் வினா புதைத்து
வினவியதை செய்திட்டர்.


கணம் சிறிது ஆனவுடன்
கவலை சூழ் முகத்துடனே
மனம் கலங்கி புலவரவர்
மன்னனிடம் வந்து சேர


என்ன இது விந்தையென
எல்லோரும் வியப்பு கொள்ள
கண்டிட்ட மகிழ்ச்சியினில்
கவலைகளை மறந்து பேசி


இன்னுயிரை நீத்தார்கள்
இனிய இரு நண்பர்கள்
உண்மையான நட்பென்றால்
உயிர் முடிவு தொடர்ந்துவரும்.

வெளிசம் - பாகம் மூன்று...

|

வெளிசம் - பாகம் ஒன்று - பலா பட்டறை ஷங்கர்
வெளிசம் - பாகம்  இரண்டு - முகிலன்

இப்படித்தானே நேற்று இரவு பல்லவியின் கை பிடித்து புதுப்பிக்கப்பட்ட மெரினாவில் நடந்தேன்? ஆமாம், இப்போது எதற்கு பல்லவியின் நினைவு வருகிறது எனக்கு? வரத்தானே செய்யும்.

ஏனென்றால் இப்போதைக்கு அவள் என்னுடைய ஒரே காதலி.

ரிசப்ஷனை கடக்கும்போது மறக்க நினைத்தும் பல்லவி நினைவுகளை மொய்க்க ஆரம்பித்திருந்தாள்.

'காஃபீ ஷாப்?' ஸ்வாவின் கேள்வியில் ஹோட்டலுக்கு வந்தது நினைவுகள். ஓ காட் என்ன ஆயிற்று எனக்கு?

'வேண்டாம் ஸ்வா எதாவது சாப்பிடலாம்' எனக்கு ஏனோ பசித்தது, சாப்பாடென்றால் நிறைய நேரத்தை கழிக்கலாமென்றும் தோன்றியது.

நாங்கள் நுழைந்த ரெஸ்டாரென்ட்டின் ’போ’கட்டிய பவ்ய வரவேற்புகளுடன், மரியாதையாய் எங்களுக்கான இரண்டு தனிமையான மெத் இருக்கைகளில் அமிழ்ந்தோம்.

‘ஷான், ஜஸ்ட் எ செக், ரெஸ்ட் ரூம் ’ அழகான ஆங்கிலத்தில் சொல்லி ஸ்வா செல்ல, கிடைத்த அந்த சொற்ப நிமிடங்களில் முழுமையாய் திரும்பவும் பல்லவி நினைவு சரணம் பாட ஆரம்பித்தது.

இப்போது இருக்கும் வேலையில் சேர்ந்து ஒரு வருடம் ஆகிறது. முதல் மாதம் எல்லாரிடமும் பழக ஆரம்பித்திருந்த நேரம், என் டெஸ்கின் போன் அடித்தது.

’யெஸ்’

'ஷான் யு ஹவ் அ விசிட்டர், ப்ளீஸ் கம் டு ரிசப்ஷன்'

வழக்கமான ரிஷப்ஷன் கிளி குரல் இது இல்லையே? யாரிந்த குயில்?. விசிட்டராய் வந்த நண்பனுக்கு ஹாய் சொல்லி பேசியவாரே பார்த்தேன், புதியாய் ஒருத்தி எப்போது சேர்ந்தாள்? காலையில் கவனிக்கவில்லையே? அவளை மெதுவாய் நோட்டமிட்டேன்.

முகம் சிரிக்க, மிக பரபரப்பாய் வரும் அனைத்து அழைப்புக்களையும் லாவகமாய் எண்ணழுத்தி இணைப்புக்கொடுத்து, வருபவர்களை முக மலர்ச்சியோடு வரவேற்று சம்மந்தப் பட்டவர்களுக்கு தகவல்தெரிவித்து, என அவ்வளவு சுறுசுறுப்பாய் இருந்தது அவளும் அவள் விரல்களும். என் ஐம்புலன்களும் இப்போது அவளோடு ஒன்றி இருந்தது.

மாநிறம், வட்டமான முகம், அதில் அழகிய பெரிய துறுதுறுக்கும் அலைபாயும் விழிகள். திருத்திய புருவங்கள், சின்னதாய் ஒரு பொட்டு, சாயமிட்டதாய் தெரியாத சிவந்த உதடுகள், சிரிக்கும் போது கன்னத்தில் குழி, லோசாக பின்னாமல் விட்டிருந்தால் புரளும் கேசம், போட்டிருந்த சுடிதாருக்கு ஏற்ற காதணி, தொலைபேசியை கைகளால் கையாளும்போது எழுந்த மெல்லிய சப்தத்தில் கவனித்த போதுதான் அதேகலரில் வளையல்கள், முன்வந்த வளையல்களை மறு கையால் விலக்கும் போது படர்ந்த பிஞ்சு விரல்கள்,மெலிதான சாயப்பூச்சோடு அழகிய நகங்கள், அவ்வபோது மின்னலாய் தெரிந்து மறையும் பற்கள், அடிக்கடி உதடுகளை ஈரப்படுத்திக்கொள்ளுவதால் கொடுத்து வைத்த நாக்கு...

அவளை அதிகமாய் கவனிக்கிறேனோ என எனக்கே வெட்கம் வந்தது. அவனுடன் சிறிது நேரம்பேசிவிட்டு வழி அனுப்பி அவள் கவனிக்காத சமயத்தில் அவளை கவனித்து மனதுள் பதித்து மனதை அங்கேயே விட்டுவிட்டு ஒரு வழியாய் எனது சீட்டிற்கு வந்தேன். காதலிக்கலாமா? உள்ளம் கேட்டது, உளராதே மனசு சொல்லியது.

கண்டவுடன் காதலா என்றெல்லாம் நிறைய பேரிடம் வாதிட்டிருந்த நான் அன்று உண்மை என்பதை உணர்ந்து, அவளை என்னுள் அப்படியே உள்வாங்கிக் கொண்டிருந்தேன். அப்புறம் அவள் நினைவாயே இருந்து, அவளோடு யார் பேசினாலும் எரிச்சலாய் பொறாமை அடைந்து, அடிக்கடி அவளை சென்று பார்த்து, நிறைய தூண்டில் போட்டு (உங்க கண்கள் மீன் மாதிரியே இருக்குங்க) அவளும் என்னிடம் நன்றாக பேச ஆரம்பித்து, முதலில் நல்ல நண்பர்களாய் இருந்து ஒரு வழியாய் அவளை தயங்கி தயங்கி ப்ரொபோஸ் செய்தேன்.

ஆரம்பத்தில் மறுத்த அவள், ரொம்ப நாட்கள் எடுத்துக் கொண்டாள், எனது காதலை அங்கீகரிக்க! அதன் பின் அவள் என்னிடம் காதலை சொன்ன விதம், சொன்ன நாள் என்னால் இன்னும் மறக்க இயலாது எத்தனை பெண்களைப் பார்த்தாலும், பழகினாலும். அது முதன் முதலில் நான் கொக்கான நாள் எனக்கான மீன் ஒற்றைக்காலில் கிடைத்த நாள்.

அன்று காதலர் தினம். ஆபிஸ் கலகலப்பாய் இருந்தது வழக்கம்போல். ரிஷப்ஷனில் இருந்த பல்லவி என்னைப்பார்த்து மெலிதாய் சிரித்தாள், கொஞ்சம் வித்தியாசமாய் இருப்பதாய் பட்டது! என்ன ஆயிற்று வேறு எவனாவது சிவப்பு ரோஸ் கொடுத்துவிட்டானா?

இன்று ஒரு முடிவினை தெரிந்துகொள்ள வேண்டும் என ஒரு எண்ணத்தோடு இருக்கும்போது, எல்லோருக்கும் எம்.டி ஒரு பார்ட்டி ஏற்பாடு செய்திருந்தார், ஒரு பெரிய ப்ராஜக்ட்டை சைன் ஆஃப் செய்ததற்காக.

பார்ட்டி கலகலப்பாய் இருந்தபோது, எம்.டி ‘இன்னிக்கு வேலண்டைன்ஸ் டே, யாராவது ப்ரொபோஸ் பண்ணியிருந்து காதலிக்க ஆரம்பிச்சிருந்து சொல்லாம இருந்தா இந்த மேடையை பயன்படுத்திக்கலாம்’ என சொல்லியபின் கொஞ்சம் அமைதி.

மெதுவாய் பல்லவி எழுந்தாள், விடுவிடென நடந்து மேடையை அடைந்தாள். எல்லோருக்கும் ஆச்சர்யம். மைக்கை பிடித்தவள், ‘ஐ லவ் யூ ஷான்’ என சொன்னபோது ஓவென்று எல்லோரும் என்னை பார்த்து கத்த நான் மீனை முழுவதும் முழுங்கினேன். வயிற்றில் பட்டாம்பூச்சிகள் பறந்துகொண்டிருந்தது.

அதன் பின் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் (அப்படின்னா என்னாங்க அர்த்தம்?) லவ் டெவெலப் ஆனது. முத்தங்கள் கொஞ்சல்கள், கெஞ்சல்கள் என ப்ரிண்ட் போட்டது. அமெரிக்கா ஆன் சைட்டுக்கு ஷ்ருதி என்னை தள்ளிக்கொண்டு போய் கொக்கிலிருந்து வல்லூராக்கி, மற்றொரு வாழ்க்கை முறையை காண்பித்தாலும், தினமும் பல்லவி் நான் முதலில் விழுங்கிய மீன் உள்ளே நீந்திக்கொண்டே இருந்தாள். ஆயிரம்தான் செய்தாலும் எத்தனை பெண்களைப் பார்த்தாலும் பல்லவி, பல்லவி நிரடலாய்.

‘வாட்பா, ரொம்ப யோசிக்கிற போலிருக்கு’

ஸ்வா அருகில் வந்து அவளது இருக்கையில் புதைத்துக்கொண்டு தேன் குரலால் என்னை கேட்க, நினைவுகளில் பல்லவிக்கு தடா செய்து பொய்யாய்,

‘உன்னைத் தான் நினைச்சிகிட்டிருக்கேன், எவ்ளோ அழகா இருக்கே, சொல்ல வார்த்தையே இல்ல’ இவள் சுறாவா? திமிங்கலமா?

‘ஹேய், கவுத்தாத, பாத்த ஃபர்ஸ்ட் டேலேயே ஆரம்பிச்சிட்டியா? என்ன சாப்பிடலாம்?’ என கேட்க நான் அவள் சாய்சுக்கே விட்டுவிட அழகாய் ஒன்றன் பின் ஒன்றாய் எவ்வளவு நேர இடைவெளியில் தேவை என குறிப்பிட்டு ஆர்டர் செய்தாள். வெயிட்டரிடம் பேசும் அழகையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

ஆர்டரை சொல்லி அவர் நகர்ந்தபின் அவளை நான் விழுங்குவதைப்போல் பார்ப்பதை கவனித்து மெலிதாய் புன்னகைத்து கேட்டாள்,

‘ஷான், யாரையாவது லவ் பண்றியா?’

இதனை அடுத்து எழுதி முடிப்பது அல்லது தொடரச் சொல்லப்போவது தொடரை ஆரம்பித்த பலா பட்டறை ஷங்கர்...

எண்ணச்சிதறல்கள்... - பிப்ரவரி மூன்றாம் வார ஞாயிறு.

|

ஒவ்வொரு மாதத்திலும் ஒன்று மற்றும் பதினைந்து தேதிகளில் இரு வாரங்களில் நிகழ்ந்த மனதை இடறிய, வருடிய, நெருடிய விஷயங்களை பகிர்ந்து கொள்ள எண்ணி இந்த தலைப்பில் ஒரு இடுகையாய் பகிர எண்ணம். முதலாய் இன்று ஆரம்பித்து அடுத்த மாதம் முதல் சரியான தேதிகளில் தொடரலாமா என்பதை முடிவு செய்யப்போவது இதை படிக்கும் என் அன்பான நீங்கள்தான்.

கிரிக்கெட்:

வெறித்தனமாய் பார்த்ததெல்லாம் அந்த காலம். டிவியில் பார்க்க வீடு வீடாய் அலைந்து, கண்கள் வலிக்க பார்த்து, ஜெயித்தாலும் தோற்றாலும் கண்களுக்கு வலி மட்டும் நிச்சயம். மனதிற்கு தோற்றால் மட்டும்.

இந்தியா தென்னாப்பிரிக்கா 13 ஒவரில் ஒரு விக்கெட் எடுத்தால் வெற்றி என இருக்கும்போது கவனித்து டி.வியை ஆன் செய்தேன். வெற்றிபெற வேண்டும் எனும் தவிப்பாய் நெடு நாட்களுக்குப் பின் பார்க்க ஆரம்பிக்க வழக்கமாய் செய்யும் எல்லா வேலைகளையும் செய்ய ஆரம்பித்தேன். கன்னத்தில் கைவைத்து பார்ப்பது, ஒவ்வொரு ஓவருக்கும் இடத்தை மாற்றுவது என. சச்சினை ஏன் இன்னும் போட விடவில்லை என தோனியை திட்ட அடுத்த ஓவரிலேயே வாய்ப்பு தர, ஊராயிருந்தால் பார்க்கும் மற்றவர்களிடம் சொன்னேன்லன்னு பந்தாவா சொல்லியிருப்பேன்.

இதில் வெற்றி பெற்றால்தான் முதலிடத்தை தக்கவைத்துக்கொள்ள முடியும் என்பதால் இன்னமும் பதட்டம். அம்லாவும் மோர்க்கலும் ரொம்ப கூலாக விளையாட டென்ஷன், கடுப்பு, எரிச்சல் என ஒரு சேர இருக்கும் அந்த சமயத்துல அருமையாய் ஒரு பந்தைப் போட்டு பஜ்ஜி கலக்க, LBW! சந்தோஷத்தில் கத்தினேன்.

என்ன நடந்தாலும் கேக்காத பக்கத்து வீட்டு சீன தாத்தா என்னவோ ஏதோ என்று வந்து கேட்டுவிட்டு போகிற மாதிரி ஆகிவிட்டது. என்ன ஒரு அருமையான வெற்றி... சச்சின் கடைசி பந்து வரை வெற்றிக்கு வாய்ப்பிருந்தது என சொன்னது (சச்சினை ரொம்ப பிடிக்கும், எனது நண்பர்கள் கூட உன் தம்பி இன்னிக்கு சென்சுரி என போன் செய்வார்கள்) ரொம்ப பிடித்திருந்தது!

பயம்:

3 இடியட்ஸ் படத்தை யார் யாரோ நடிக்கிறார்கள் என படிக்கையில் நிஜமாய் பீதி கிளம்பியது. தியேட்டரில் பார்த்ததோடல்லாமல் DVD வாங்கியும் ரசித்து பார்த்த படங்களில் இதுவும் ஒன்று. முன்னா பாய் பார்த்துவிட்டு கமல் நடித்தும் வசூல்ராஜா பிடிக்கவில்லை. ஹீரோயிசத்துக்காக கதையை பலிகொடுக்க நம்மாட்களுக்கு சொல்லியாத் தரவேண்டும்?

பிடித்த இடுகையாளர்:

ஆரம்ப அசத்தல் பதிவர்களில் என்னை மிகவும் கவர்ந்தவர் தம்பி சேட்டைக்காரன்தான். வலைச்சரத்திலேயே சொல்லியிருந்தாலும் இன்னொருமுறை சொல்லுவதற்கு காரணம் அவர் வெரைட்டியாய் எழுதுதுவது ரொம்ப பிடித்திருக்கிறது. மிகவும் அருமையான எதிர்காலம் இருக்கிறது, இவருக்கு. நகைச்சுவையை மிக நாகரிகமாய் ஆபாசம் கலக்காமல் அசத்தலாய் சொல்லுகிறார். மூன்று நாட்கள் இவரை பார்க்கவில்லை என்றால் ஐந்து இடுகைகளை தவற விட்டுவிடுவீர்கள், அவ்வளவு விரைவாய் இடுகையிட்டு அசத்துகிறார். பிப்ரவரிக்கு இருபத்தெட்டு தேதிதான், ஆனால் இருபது தேதியிலேயே முப்பத்து நான்கு இடுகையிட்டிருக்கிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.

இந்த மூன்று இடுகைகளையும் படித்துப் பாருங்கள். கண்டிப்பாய் அதன் முந்தைய பாகங்களைத் தேடிப்படிக்கத் துண்டும்...

ஆந்தைக்குளம் ஐயாக்கண்ணு.03
ஜிம்மாயணம்-02
அப்பா என்றால்....?

அடுத்த எண்ணச்சிதறல்களில் மார்ச் ஒன்றில் சந்திக்கலாமா?

ஆண்டி தியோவின் பயணக் குறிப்புகள்...

|

இன்றுதான் அறைத்தோழராய் அறிமுகமான நண்பர் முத்து அவரது ஊருக்கு அவரது சீன முதலாளியை அழைத்துச் சென்று ஒரு கலக்கு கலக்கிய விஷயத்தை ரொம்பவும் சுவராஸ்யமாய் சொல்ல, யாவும் எனக்கு பிரமிப்பாக இருந்தது. அவர் மற்றும் சீன முதலாளியின் அனுமதியோடு அவர்களிடம் இருந்து கிடைத்த புகைப்படங்களுடன் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

சமீபத்தில் கிடைத்த ஒரு ஒப்பந்த வேலையினை மிகச் சிறப்பாய் முடித்துத் தர எல்லோருக்கும் போனஸ் கொடுத்ததோடு மட்டுமல்லாமல் வேலை செய்து வரும் ஒருவரின் திருமணத்தை முன்னிட்டு முத்து மற்றும் மூர்த்தியை தனது சொந்த செலவில் அழைத்துக்கொண்டு இந்தியா கிளம்பியிருக்கிறார். திருச்சிக்கு பக்கத்தில் ஊர் என்பதால் முத்து வழக்கமாய் செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரசில் சென்றிடுக்கிறார்.

செல்லும்போதே மூன்று பேரின் அப்பாக்களுக்கும் தலா முன்னூற்று பத்து டாலர் செலவில் (இந்திய மதிப்பில் பத்தாயிரம் ரூபாய்) சரக்கு வாங்கிக்கொண்டும், ஐநூறு டாலருக்கு சாக்லேட் வாங்கிக்கொண்டும் சென்றிருக்கிறார்.

திருச்சி ஏர்போர்ட்டில் இரு சீனர்கள், நம்மவர் மற்றும் சிங்கப்பூர் அரசு அதிகாரி(கலெக்டர் என முத்து சொன்னார்). அவரை அரசு மரியாதையுடன் அழைத்து சென்றிருக்கிறார்கள். (நம்மூர் ஆட்கள் இவ்வாறு எளிமையாய் செல்வார்களா?) வரிசையில் இருந்த தியோவின் முறை வந்த போது தங்கும் இடங்களைப்பற்றிய விவரங்களைப் பற்றி அவர் அளித்த விளக்கங்கள் புரியாததால் முத்து தனது முதலாளி, சுற்றுலாவுக்கு வந்திருக்கிறார் என விளக்கி, விவரங்களை சொல்லியிருக்கிறார்.

திருச்சியில் ஒரு நல்ல ஓட்டலின் தங்கி மேற்கொண்ட அவரின் ஒரு வார பயணவிவரங்கள் இதோ கீழே.

தியோவிற்கு பிள்ளையார் ரொம்ப பிடிக்குமாம், பிள்ளையார் பக்தர். எனவே முதலில் அவர் சென்றது பிள்ளையார்ப் பட்டி. அங்கு சாமி கழுத்தில் இருந்த மாலையை இவர் கழுத்தில் போட, அவரோ எல்லோருக்கும் பிள்ளையாரின் அருள் கிடைக்க வேண்டும் என ஒவ்வொருவருக்கம் போட்டு விட்டிருக்கிறார், அழைத்து வந்த டிரைவர் உட்பட. சிறு பிள்ளை போல் குச்சி ஐஸ், இளநீர் என பார்க்கும் ஒவ்வொன்றையும் சாப்பிட்டு மகிழ்ந்திருக்கிறார்.

அவருக்காக மாலை மரியாதை, தாரை தப்பட்டை என ஆரவாரமான வரவேற்பெல்லாம் கொடுத்ததோடிலாமல் வரவேற்பு போர்டுகள் பத்துக்கும் மேல் ஊரெல்லாம் வைத்து முதலாளிக்கு மரியாதை செலுத்தியிருக்கிறார்கள்.

வரவேற்பு

திருமணத்திற்கு முதல் நாள் அழைப்பிலிருந்து கடைசிவரை உடன் இருந்து அசத்தியதோடு மட்டுமல்லாமல், மணவறையில் மாலையோடு உட்கார்ந்து கலக்கியும் இருக்கிறார்.

எல்லோரோடும் உட்கார்ந்து பந்தியில் ரசிக்கும்படி சாப்பிட்டு, மாப்பிள்ளைக்கு அன்பளிப்பாக ஒரு லட்சம் (சிங்கப்பூர் டாலர் 3000) கொடுத்திருக்கிறார்.

மாப்பிள்ளை ஊர்வலத்தில்

மூவரின் அம்மாக்களுக்கு வளையல் வாங்க எண்ணி கை அளவு குழப்பத்தால் பணமாய் ஒரு கவரில் கொடுத்திருக்கிறார்.

முத்துவின் குடும்பத்தாரோடு

ஒவ்வொருவரின் வீட்டிற்கும் சென்று ஒருவேளை சாப்பிட்டுவிட்டு மொழி தெரியவில்லை என்றாலும் சைகையிலும், மொழிபெயர்ப்பு உதவியோடும் பேசிவிட்டு வந்திருக்கிறார்.

மூர்த்தியின் வீட்டில்

முத்து வீடு சாதாரண ஒரு கூரை வீடு. இங்கெல்லாம் சாப்பிடுவாரா என ஏதும் செய்யாமல் இருக்க, சமைக்கச் சொல்லி காத்திருந்து ஐந்து மணி நேரம் வீட்டிலேயே படுத்திருந்து ஓய்வெடுத்து சாப்பிட்டுத்தான் வந்திருக்கிறார். ஓய்வெடுக்கும் போது மூன்று ஃபேன் வைத்திருந்தும் கரெண்ட் இல்லாத போது விசிறியால் விசிறி அவரது தூக்கம் கலையாமல் பார்த்துக்கொள்ள முத்து முயற்சிக்க, ‘டோண்ட் டூ லா’ என மறுத்திறுக்கிறார்.

அந்த ஊரில் இருந்த கோவிலுக்கு சென்று கால் ஊனமான அங்கிருந்த பூசாரிக்கு பணம் கொடுத்து உதவி அசத்தியிருக்கிறார். கோவிலுக்கும் நன்கொடை கொடுத்தும், பள்ளிக்கு ஒரு கட்டிடம் கட்ட நிதியும் அளித்திருக்கிறார்.

குதிரைகளோடு எடுக்க சொன்னாராம்

எல்லோரையும் அழைத்துக்கொண்டு கொடைக்கானல் சுற்றுலா வேறு. ’முத்து நெக்ஸ்ட் இயர் நியூ ஹவுஸ்’ என சொல்லி அதற்கான எல்லா உதவியும் செய்வதாய் சொல்லியிருக்கிறார். செல்போனில் அவரின் அனுமதியை பெற்றுத்தான் வெளியிடுகிறேன், ஞாயிறு வீட்டிற்கு சந்திக்க வருகிறார். சந்தித்த பின் இன்னும் விவரங்களோடு, புகைப்படங்களோடு எழுதுகிறேன்.

எந்த ஒரு பந்தாவும் இல்லாமல் எல்லோரிடமும் அன்பாய் பழகி, எல்லோர் மனத்திலும் இடம் பிடித்த தியோ, என் மனத்திலும் ஆழமாய்...

முகங்கள் - தாத்தாக்கள்...

|

கிராமங்கள்ல நாம சின்ன பசங்களா இருக்கிறப்போ பெருசுங்க உடற ரவுச புரியலன்னாலும் பாத்துகிட்டிருப்போம், கேட்டுகிட்டிருப்போம். அதுல நாம பாத்த சிலத பகிர்ந்துக்கலாம்னு.

அந்த தாத்தா எல்லாத்துக்கும் முன்னால ரொம்ப நல்ல பேசுவாரு. அந்தாண்ட போனதுக்கு அப்புறமா அப்படியே மாத்தி பேசுவாரு..... ஒரு சின்ன சம்பவத்த பாருங்களேன்...

'வாடா முருகேசா, எப்படி இருக்க, என்னா காட்டுக்கு மாடு ஓட்டிட்டு போறியா?'

'ஆமாம் தாத்தா'

'நல்லது, அப்புறம் ஒன் மவன் அருமையா படிக்கிறான் போலிருக்கு, பேசிக்கிட்டாங்க'

'அப்படியா? ரொம்ப சந்தோஷம் தாத்தா'

அந்தாண்ட போனதும் பக்கத்துல இருக்கிறவருகிட்ட, 'அவன் மவன் உருப்படுவாங்கறே, சந்துல பீடி குடிச்சிகிட்டிருக்கா' ம்பாரு.

தெருவில வர ஒரு பொம்பளயப்பாத்து, 'மூக்காயி, சும்மா ஜம்முனு கிளம்பி லட்சுமி கலாட்சரமா கிளம்பிட்ட?'

'அம்பாயிக்கு கட்டி சோரு கட்டறாங்கல்ல, அதுக்குத்தான்'

அந்தாண்ட போனதுக்கப்புறம், 'யார கவுக்க இப்படி அலையுதோ, ஒடம்பெல்லாம் திமிறு' ம்பாரு.

இன்னும் சில பெருசுங்க இருக்காங்க. தினமும் ஒரே கதையை சலிக்காம பேசிகிட்டிருப்பாங்க.

'பஞ்சபாண்டவங்க காட்டுக்கு போயிருந்தப்போ அங்க ஒரு மரத்துல ஒரு மாங்கனி இருந்துச்சி. அத அர்ச்சுனன் வில்லால ஒரே அடி. அப்புறம் தான் தெரிஞ்சது அது ஒரு அதிசய மாங்கனி, ஒரு முனிவரு விசேஷமா வளர்த்துகிட்டிருக்காருன்னு.

அய்யோ சாபம் விட்டுருவாருன்னு பயந்துகிட்டிருந்தப்போ, கிருஷ்ணர் 'உத்தது சொன்னா அத்தது பொருந்தும்'னு சொன்னாரு. ஒவ்வொருத்தரா...' அப்படின்னு ஒரு நாளைக்கு கேக்கலாம், ரெண்டு நாளைக்கு கேக்கலாம். ஆனா ஒரு மாசத்துக்கு கேட்டோம்னா பாத்துக்கோங்களேன். அதனாலத்தான் இன்னும் ஞாபகம் இருக்கோ என்னமோ...

சில பெருசுங்க சீட்டாடிகிட்டிருக்கும்போது பக்கத்துல போனா விடவே மாட்டாங்க. படிக்கிற பையன் இங்க வரப்படாதுன்னு விரட்டி விட்டிடுவாங்க. பேரன் பக்கத்துல இருந்தாத்தான் ராசின்னு வெச்சிகிட்டு விளையாடறவங்களும் இருந்தாங்க. பேரன் கையால ஒரு சீட்டு எடுத்துக் கொடுன்னு சொல்லி விளையாடறவங்களும் இருந்தாங்க.

ஊர்ல இருக்கிற சாமிங்களப்பத்தி கதை கதையா சொல்லுவாங்க. தப்பு செஞ்சா கண்ணை குத்திடும், நல்லா படிக்கணும்னுலாம் அறிவுரை சொல்லுவாங்க. அவங்க காலத்துல செஞ்ச சாகசங்களை எல்லாம் ரொம்ப சுவைபட சொல்லுவாங்க. மாதா பிதா குரு தெய்வம்னு சொல்லுவாங்க.

நாமல்லாம் கேட்டுகிட்டிருந்தது அப்போ! இன்னிக்கு பசங்க வேறமாதிரி இருக்காங்க. நம்ம வாண்டு 'அப்பா தாத்தாவுக்கு ஒண்ணுமே தெரியலப்பா! எதாச்சும் டவுட்டுன்ன உங்களுக்குத்தான் போன் பண்ணி கேக்க வேண்டியிருக்கு, அவரு சொல்ற கதையெல்லாம் ரொம்ப போரடிக்குதப்பா, கம்ப்யூட்டர் சுத்தமா தெரியல, நான் அவருக்கு சொல்லித் தரேன்'னு சொல்றாப்ல.

கேமிராவுக்கு என் நன்றி...

|


வேலை நம்மள டரியலாக்க இடுகைக்கு ஒரு பதினைஞ்சி நாலு லீவ் விட்டுட்டு, தம்பி புலிகேசி டரியல்ல நம்மள பத்தி எழுதியிருக்கிறத கூட படிக்காம பொறுப்பா வேலை பாத்துகிட்டருந்த சிங்கத்த கதிர் சொரண்டி எழுப்பிட்டதால இதோ களத்துல குதிச்சிட்டோம்ல!

கொடுத்துவிட்ட கேமராவ வாங்கினதுக்கோ இவ்வளோ பில்டப்புன்ன, கஷ்டப்பட்டு வாங்கி அனுப்பிச்ச நாம நடந்தத சொல்லாம இருப்பமா?

கதிர் கேமரான்னு சொன்னதுமே நண்பருக்கு நல்லதா வாங்கனும்னு முடிவு பண்ணிட்டு அவரோட பட்ஜெட்டுக்குள்ள எது சூட்டாகும்னு ஒரு பெரிய ஆராய்ச்சியில இறங்கி ஒவ்வொரு நாளும் பேப்பர்ல எதாச்சும் ஆபர் வருமான்னு பாத்துகிட்டிருந்தேன்.

திடீர்னு நம்ம ஃபிரண்டு கேசவன் ஊருக்கு போறதா சொல்ல, எப்பா ஒரு கேமரா வாங்கித்தரேன், சென்னையில என் ஆசான்கிட்ட கொடுத்துடிறியான்னு கேட்டேன். சரிப்பா, நாலு நாள் லீவ்ல டைட் செட்யூல்ல போறேன், முயற்சி பண்றேன்னு சொன்னான்.

சொன்னதோட இல்லாம அவன் நாலு நாள் ப்ரோக்ராம் என்னான்னு ஒரு பத்து நிமிஷம் சொல்லி சோடா ஊத்தி எழுப்புற அளவுக்கு நம்மள மயக்கமாக வெச்சி (இன்டர்நேஷனல் டிரைவிங் லைசன்ஸ், ஒரு வீடு வாங்கறது, பேங்க்குல ஒரு நாலஞ்சி வேலை, ஆபிஸ் விஷயமா ரெண்டு பேர பாக்கறது, இடையில பெங்களுர்ல இருக்கிற அவனோட வைஃப் குழந்தைங்கள பாக்கறது... இது அவன் சொன்னதுல கால்வாசி மேட்டர்தான்) கடைசியா ’உனக்காக செய்ய மாட்டேனா? கொடுத்துடறேன்’ னு சொன்னான்.

சரி புதன் கிழம எனக்கு ஃபிளைட், செவ்வாய் சாயங்காலம் முஸ்தபா வந்துடு, நானும் பர்சேஸ் பண்ணனும்னு சொன்னான். திங்கள் நைட் ஷிப்ட் பாத்துட்டு வந்து கண்ணசந்தா ஆபிஸ்ல இருந்து ஃபோன்.

அப்போதான் புதுசா மாறிப்போன ஆபிஸ்ல பவர் ஷட் டவுனாம், ராத்திரிக்கு கரண்ட் இருக்காதாம்னு நம்ம சீன நண்பர் சொல்லிட்டு 'பிரபா லேப்டாப்ப எடுத்துகிட்டு போன்னு சொன்ன கேக்காம இங்க வெச்சி லாக் பண்ணிட்டு போயிடற, இப்ப பாரு வந்து எடுத்துகிட்டு போயி வீட்டுல இருந்து வேலை பாக்கனும்’ னு வயித்துல புளிய கரைச்சாரு. கெஞ்சி கூத்தாடி அவரோட வீட்டுக்கு எடுத்துகிட்டு வர சொல்லி அட்ரஸ கேட்டு வாங்கிகிட்டேன்.

சாப்புட்டுட்டு ரெண்டுல இருந்து ஏழரை வரைக்கும் தூங்கற நாம, நாலு மணிக்கே எழுந்திரிச்சிட்டேன். குளிச்சி கிளம்பி பஸ்ஸ புடிச்சி அவரு பிளாக் 445 பாத்துகிட்டே போக, 441 அ பாத்ததும் டிரைவர கேக்க, இங்கதான் இருக்கணும், இதுக்கு அப்பால வேற நம்பர் வரும்னு சொல்லிட்டாப்ல.

இறங்கி நண்பருக்கு போன் பண்ணி, எப்படி வரனும்னு கேக்க அவரு என்ன பயங்கரமா குழப்ப எதுத்தாப்ல வந்த ஒருத்தர கேட்டேன். காதில இருந்தத கழட்டிட்டு திரும்பவும் கேக்க விவரத்த சொன்னேன். வெச்சிருந்த ஐ போன்ல ரூட்ட பாத்துட்டு மாறி இறங்கிட்டீங்க, இதோ இங்க இருக்கு பாருங்கன்னு காமிச்சாப்ல.

ஒரு வழியா அவர புடிச்சிட்டேன்! வீட்டுக்கு வந்துடுவேன்னு பயந்துட்டோ என்னமோ தெரியல லேப்டாப்ப கையிலேயே வெச்சிகிட்டு பிளாக் வெளியவே காத்திருந்தாப்ல.

வாங்கிட்டு நன்றிய சொல்லிட்டு பதினொரு மணிக்குள்ள ஷிஃப்ட டேக் ஓவர் பண்றதா வாக்கு கொடுத்துட்டு முஸ்தபா போனேன்.

கேசவன சந்திச்சி அவன் பர்சேஸ ஆரம்பிக்க சொலிட்டு நாம நம்ம வேலைய பாக்க கேமிரா செக்‌ஷனுக்கு போய் இருக்கிற எல்லா மாடலையும் பாக்க ஆரம்பிச்சேன். என்னோட நிக்கான் SLR வாங்கும்போது கூட இந்த மாதிரி கேள்வி கேட்டதில்ல!

பேட்டரி லைப் எப்படி? இந்த மாடல்ல என்ன விசேஷம்? வாரண்டி எப்படி? ஊர்ல எங்க சர்வீஸ் சென்டர் இருக்கு, ரிப்பேர்னு கொடுத்த சரிசெய்ய எவ்வளவு நாள் ஆகும்? பேட்டரி எவ்வளோ நேரம் வரும்? 8 GB கார்ட் தர்றீங்களே கூட ஒரு 4 GB தர முடியுமா? அப்படின்னு கேட்டதோட இல்லாம கடைசியா வாங்கனும்னு முடிவு பண்ணின கேரமராவில பேட்டரிய போட்டுத்தர சொல்ல அவரு எதோ சொல்ல வந்தாரு. ’இல்ல நானே பாத்துக்கறேன்’ னு சொல்லி ஆராய்ச்சிய ஆரம்பிக்க, ’இல்லங்க உங்களுக்கு எப்படின்னு தெரியாது நான் சொல்றேன்’ னு தெரியாம ஒரு வார்த்தைய சொல்லிட்டாரு.

’இதுல பனாரமிக் இருக்கா, ஷட்டர் ஸ்பீட் மாத்த முடியுமா? ஆப்டிகல் ஜூம் எவ்வளவு? வீடியோ ஷுட் பண்ணும்போது ஜூம் பண்ண முடியுமா?’ ன்னு சரளமா கேக்க, ’சாரி நீங்களே பாத்துக்குங்க’ ன்னு சொல்லிட்டாரு.

கடைசியா வாங்கிட்டு மெமரி கார்ட் ரெண்டையும் பில்ல காமிச்சி பக்கத்து பில்டிங்ல வாங்கிட்டு கேசவன ஃபோன்ல கூப்பிட்டா பாதியத்தான் முடிச்சதா சொன்னான். அவன் கூடவே இருந்து எல்லாத்தயும் வாங்க, 10 மணியாயிடுச்சி. பத்தரைக்கு ஷிஃப்ட் ஆரம்பிக்குது, 11 மணிக்கு நண்பர ரிலீவ் பண்ணனும்.

கேசவன அனுப்பிட்டு போலாம்னு பாத்தா டாக்ஸியே கிடைக்கல. அவங்கிட்ட சாரி கேட்டுட்டு பஸ்டாப்புக்கு போனா பஸ் வந்துச்சி, சரியான கூட்டம். முன்னாடி கதவ தொறக்கவே இல்ல. வேக வேகமா ஓடி ட்ரெயின புடிச்சி வீட்டுக்கு போயி ஒருவழியா லேப்டாப்ப ஆன் பண்ணினும்போது ஒரு கால் வந்துச்சி. நம்மள பத்தி எல்லா விவரமும் கேட்டுட்டு என்னோட கிரெடிட் கார்ட ட்ரெயின்ல விட்டுட்டேனாம், யாரோ எடுத்து போன் பண்ணி சொல்லவும் என்கிட்ட அந்த தகவல சொல்லி வேற அனுப்பறதா சொன்னாங்க!

ஒரு வழியா ஆபீஸ் வேலையெல்லாம் பாத்துட்டு அடுத்த நாள் சீக்கிரமா கிளம்பி ஏர்போட்டுக்கு போய் கேசவன வழியனுப்பிச்சிட்டு (மறக்காம அய்யாகிட்ட தரனும்ல) பக்கத்துல இருந்த ஆபீஸ் போயிட்டேன்.

அடுத்த நாள் போன் பண்ணி பத்திரமா போய் சேந்தியான்னு கேட்டுட்டு, அப்படியே ’கேமிரா’ன்னு இழுக்க, சரிப்பா கொடுத்துடறேன்னு சொல்லிட்டு அய்யா நம்பர SMS அனுப்ப சொன்னான்.

டூட்டி முடிச்சிட்டு வந்து காலையில அய்யா நம்பர SMS அனுப்பிட்டு, அசந்து தூங்கி எழுந்தரிச்சி பாத்தா கேமிரா வந்து சேந்துட்டதா அய்யாகிட்ட இருந்து மெயில். அவருகிட்ட பேசிட்டு, கேசவனுக்கு பலமா தேங்க்ஸ் சொல்லி கதிருக்கு அக்கவுண்ட் நம்பர அனுப்பி... மிச்சத்த கதிரோட ஒரு கேமராவும், ஓவர் பில்டப்பும் ல பாருங்களேன்...

டிஸ்கி :

இதெல்லாமே நுறு சதம் உண்மைதான். இதில் பாருங்கள், எத்தனை நட்புகளின் உறவாடல் இந்த கேமிராவால்? அவ்வளவு பிசியான வேலைகள் இருந்தாலும் சிரமம் பார்க்காமல் அய்யாவிடம் சேர்ப்பித்த கேசவன்! பொறுப்பாய் வாங்கி எனக்கு, கதிருக்கு தகவல் சொல்லி பத்திரமாய் வெண்ணை வெட்டுவது போல் மிக எளிதாய் சேர்க்கும் காரியத்தை செய்த என் அன்பு ஆசான், கிடைத்தவுடன் ஒரு அருமையான இடுகை போட்டு பதினைந்து நாட்களாக எழுதாமல் இருந்த என்னை எழுத வைத்த என் அன்பு கதிர், இதை படிக்கும் அன்பான நீங்கள்.... அந்த கேமிராவுக்கு என் நன்றி.

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB