யதார்த்த சிரிப்புகள்...

|


கடைக்காரரும் பையனும்
ஒரு கடையில கடைக்காரர் வேலைக்கார பையன கண்ணா அத எடு, கண்ணா இவர கவனி, கண்ணா நல்லதா பாத்து கொடுன்னு சொல்லிட்டிருக்க, அந்த பையனும் துரு துருன்னு, இதோ எடுக்கறேங்கய்யா, கவனிக்கிறேங்கய்யான்னு வார்த்தைக்கு வார்த்தை அய்யா போட்டு பேச மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருந்துச்சி ரெண்டு பேரையும் தனித்தனியா கேக்கறவரைக்கும்.
பையனை ரொம்ப மரியாதையா நடத்துறீங்கன்னு பாராட்டுனதுக்கு கடைக்காரர் சொன்னாரு, 'நீங்க வேற, அவன் எம காதகன், முட்ட கண்ணாங்கறதுல முட்டைய முழுங்கிட்டு கண்ணான்னு கூப்பிடறேன்'னு சொன்னாரு.
'அய்யா அய்யான்னு ரொம்ப பிரியமா இருக்கியே' ன்னதுக்கு பையன் சொன்னான், 'அந்த ஆளு ரொம்ப விவரமுன்னு நெனைச்சிகிட்டிருக்காரு. அய்யான்னு கூப்பிட்டாலும் மனசுக்குள்ள ங்கொய்யான்னு தான் நினைச்சுக்குவேன்' னான்.
என்ன ஆச்சு அவனுக்கு?
திடீர்னு அவனுக்கு என்னமோ ஆயிடுச்சி, வெறிச்சி வெறிச்சு பாக்குறான், யாருகிட்டயும் பேசறதில்ல, எதை கேட்டாலும் சிரிக்கிறான்... ரொம்ப பில்டப் வேணாம் மனநிலை பாதிச்சிடுச்சின்னு சுருக்கமா சொல்லுன்னு சொல்றீங்களா? சரி வெச்சுக்கோங்க.
அவனோட அப்பா பெரிய ஆளு. வெளிநாட்டுல இருந்தெல்லாம் டாக்டர வரவழைச்சி எதேதோ வைத்தியம் பண்ணினாரு. இன்னமும் சரியாகல, எப்படி ஆச்சுன்னு கண்டுபிடிக்க முடியல.
எனக்கு காரணம் தெரியும். மெதுவா உங்க காத கிட்ட கொண்டுவாங்க, உங்களுக்கு மட்டும் சொல்றேன்... அவன் பொக்கிஷம் படத்த முழுசா பாத்தான்.
(கஷ்டப்பட்டு பணம் போட்டு எடுத்த தயாரிப்பாளர் பாவம்தான், இருந்தாலும் பதிவெல்லாம் படிச்சிட்டு போஸ்டர பாக்கவே பயமா இருக்கு)

எங்கேயோ கேட்டது 1 - ஜீ.ரா.வும் கன்னம் வைத்த திருடனும்...

|

(இந்த கதைய என்னோட பத்து வயசுல ரொம்ப அழகா, அருமையா நிறைய நாளைக்கு சிரிக்கிற மாதிரி சொன்ன மாமாவோட ஃபிரண்டு சின்னதுரை மாமாவுக்கு எனது மனமார்ந்த நன்றி)
ஜோ.ரா மாதிரி இல்லாம ஒரு ஜீரோவா இருந்தாரு இன்னோரு ராஜா. அவர நாம ஜீ.ரான்னு வெச்சுக்குவோம்.(வேறென்ன ஜீரோ ராஜா). வழக்கம்போல அவரோட மந்திரி அதி புத்திசாலி, அதனால நம்ம ஜீ.ரா எப்படி சொதப்புனாலும் சமாளிச்சாரு.
ஒருநாள் ஒரு திருடன் ஒரு வீட்டுல கன்னம் (அதாங்க, செவுத்த ஓட்ட போட்டு திருடுறது) வெச்சி திருடறப்போ பழய செவுருங்கறதால இடிஞ்சி விழுந்து அங்கயே மண்டையை போட்டுட்டான்.
இந்த தகவல் நம்ம ஜீ.ராவுக்கு வந்து சேர, ஆளு கொதிச்சு போயிட்டாரு.
'என்ன, கன்னம் வைதது திருடும் ஒரு திருடர் தனது தொழில் செய்யும்போதே இறந்து விட்டாரா, அய்யகோ நாட்டிற்கு எவ்வளவு பெரிய இழப்பு' அப்படின்னு சத்தமா கத்த,
மந்திரி மன்னர சமாதானம் செய்யும் முயற்சில ஏதோ சொல்லப்போக, 'மதியூக மந்திரி, நீங்கள் எனது எண்ணத்தை புரிந்து பேசுபவர். இதற்கு காரணமானவர்களை உடனே தண்டிக்க வேண்டும் எனத்தானே சொல்ல வருகிறீர்கள்' என கேட்க,
சல்லி காசுக்கு உதவாத விஷயம்னு சொல்ல வந்தவரு, 'ஆமாம் மன்னா, நினைத்ததை சொல்லுவதே உங்களின் திறமை' மன்னரை பராட்டினாரு.
'இருக்கட்டும் இருக்கட்டும், அதிகமாக புகழாதீர், அந்த படுபாதக செயலை செய்தவர்களை முதலில் தண்டிக்க வேண்டும்' அப்படின்னு சொல்லி, ஆள அனுப்பி அந்த வீட்டோட சொந்தக்காரர இழுத்து வர சொன்னாரு.
வீடு மாதிரியே வீட்டுக்காரரும் பழசா, அதாங்க வயசாகி இருந்தாரு.
'நீர் தான் அந்த வீட்டுக்காரரோ?'ன்னு கட்டபொம்மன் மாதிரி கேட்டுட்டு,'உமது வீட்டினை சரிவர பராமரிகாமல் விட்டிருக்கிறீர்கள், திருடனின் கன்னத்தை தாங்காத சுவர் இடிந்து விழ, அந்தோ பரிதாபம், அதே இடத்தில் இறந்து விட்டார். நீர்தான் குற்றவாளி. உமக்கு விசாரணை இன்றி மரண தண்டனை விதிக்கிறேன்'
'மன்னா ஒரு விஷயம்'னு வீட்டுக்காரர் சொல்ல 'எதுவும் சொல்ல வேண்டாம், இழுத்துச் செல்லுங்கள் இந்த வயோதிகனை'ன்னு சொன்னாரு.
'மன்னா, அவர் ஏதோ சொல்ல வருகிறார், என்னவென்றுதான் கேட்போமே?'ன்னு மந்திரி சொல்ல, 'சரி சொல்லும்' என சொல்ல,
'மன்னா, வீடு என்னுடையது தான், மறுப்பதற்கில்லை, ஆனால், கட்டியது நானில்லையே?' இதில் நான் எங்கே குற்றவாளியாகிறேன்?' னு கேக்க,
ஜீ.ரா இதுவும் சரிதானேன்னு 'ஆம், நீர் சொல்வது சாலச் சரி. இழுத்து வாருங்கள் அந்த வீடு கட்டிய கொத்தனாரை' ன்னு உத்தரவு போட்டாரு.
வீடு கட்டுனவரு வந்த உடனே திரும்பவும் முன்னால சொன்னதையே மூச்சு வாங்க சொல்லிட்டு, '...இறந்துவிட்டார். எனவே நீர் வீடு கட்டியது சரியில்லை, எனவே உனக்கு மரண தண்டனை விதிக்கிறேன். ஏதாவது சொல்ல விரும்புகிறாயா?' ன்னு இந்த தடவ கொஞ்சம் விவரமா கேட்டாரு.
'ஆம் மன்னா, வீடு கட்டியதில் குற்றமில்லை, மண் குழைந்து கொடுத்தவர் தண்ணிரை அதிகமாய் ஊற்றி குழைந்து கொடுத்ததால்தான் சுவர் வலுவில்லாமல் போய்விட்டது' ன்னு சொல்ல, வழக்கம்போல சே.கூ.அ.வ.சொ, மண்ண குழைஞ்சவரு வந்தாரு.
வழக்கமான வசனத்த பேசிட்டு, '...இறந்துவிட்டார். எனவே நீர் மண் குழைந்தது சரியில்லை, எனவே உனக்கு மரண தண்டனை விதிக்கிறேன். ஏதாவது சொல்ல விரும்புகிறாயா?' ங்கவும்
'ஆம் மன்னா, மண் குழையும்போது சல் சல் என சலங்கையோடு சிரிப்புச் சத்தம், சிலுக்கோ என திரும்பி பார்த்தேன். ஆனால் அங்கு வந்தது நமது நடனப்புயல் கருப்பாயி. அவளை பார்த்து மெய் மறந்து தண்ணிரை நிறைய ஊற்றிவிட்டேன்' னு கருப்பாய கோத்துவிட்டாரு.

ஜீ.ரா திரும்பி சேவகன பாக்க, ஆளு அவரு சொல்லறதுக்கு முன்னாலயே கருப்பாயை கூப்பிட போயிருந்தாரு.
ஜோ.ரா பெருமையா மந்திரிய பாக்க,'இந்த நாட்டில் புல் பூண்டு கூட உங்களின் மனம் புரிந்து நடக்கிறது' ன்னு பதிலுக்கு ஏத்தி விட்டாரு.
கருப்பாயி கலக்கலா நடந்து வர, பார்த்து மன்னர் பேச மறந்து மந்திரியை பாக்க, அவரு எல்லாத்தையும் சொல்லி முடிக்க, மன்னர் தொடர்ந்தாரு.
'எனவே, நீ தெருவில் மற்றோரை இம்சிக்கும் வகையில் சிரித்திருக்கிறாய்.... அதைப்பார்த்து மண் குழைபவர்... எனவே உனக்கு மரண தண்டனை அளிக்கிறேன்' னு சொல்லவும்
கருப்பாயி குலுங்கி சிணுங்கி , 'தெருவில் சிரித்தது உண்மைதான் மன்னா... ஆனால் உடன் வந்த எனது மாமா என்னை கிச்சு கிச்சு மூட்டினார், அதனால் தான்' னு சொன்னாப்ல.
கடைசியா கருப்பாயி மாமன் தான் குற்றவாளி என முடிவு செஞ்சி தூக்கு தண்டனை வழங்கிட்டாரு ஜீ.ரா.
மன்னர எதுத்து யாராலும் பேச முடியல, தலை விதின்னு எல்லாரும் நொந்துகிட்டாங்க.
ஆனா கருப்பாயி மாமாவோட நண்பருங்க ரெண்டு பேரு கொதிச்சு போயி ஏதாச்சும் செஞ்சி காப்பாத்தனும்னு முடிவு பண்ணி ராத்திரி நகர் வலம் வர்றப்போ அவரு கண்ணுல படற மாதிரி ஒரு மரத்தடியில நின்னு சத்தமா பேசிட்டாங்க.
ஜீ.ராவும் மந்திரியும் பாக்குறப்போ ரெண்டு பேரும் நாந்தான் முதல சாவேன்,இல்லையில்ல நாந்தான் சாவேன்' னு சொல்லவும் ரெண்டு பேருக்கும் ஆச்சர்யமாயிடுச்சி.
கேட்டதுக்கு, 'மன்னா இன்னிக்கி சித்திரா பவுர்ணமி, அதுவுமில்லாம இன்னிக்கு இந்த மரத்துல தூக்கில் தொங்கி சாவறவங்க என்ன நினைச்சிகிட்டு செத்தாலும் அடுத்து வர்ற ஏழு ஜன்மத்துக்கும் அப்படியே நடக்கும். நான் இந்த நாட்டுக்கு மன்னனாகனும்னு சாகப்போகிறேன், இவனும் அதற்காகவே அடம் பிடிக்கிறான்' னு சொல்ல
'என்ன மந்திரி, இது உண்மையா'ன்னு கேட்டாரு.
'ஆம் மன்னா நானும் கேள்விப்பட்டிருக்கிறேன், இந்த மரத்துக்கு அப்படி ஒரு விசேஷம், அறுபது ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் இது போல் வரும்' னு அவரு பங்குக்கு தெளிச்சி விட்டாரு.
'நான் இருக்கும்போது இன்னொருவர் மன்னனாவதா? நானே தூக்கிட்டு சாகிறேன், அடுத்து வரும் ஏழு பிறவியிலும் மன்னனாகவே இருப்பேன், அப்போதும் நீர்தான் எனது மந்திரி' ன்னு சொல்லிட்டு தூக்குல தொங்கிட்டாரு, மக்களெல்லாம் நிம்மதியா வாழ்ந்தாங்க.
இதுதான் மாமா சொன்ன கதை. நாம ஜீ.ராவை அவ்வளவு சீக்கிரமா சாகடிச்சிட்டா பின்னால அவர வெச்சு கதை எழுத முடியாதுங்கறதால இதோ புது முடிவு.
மன்னன் கழுத்தில மாட்டுனதுக்கு பின்னாடி, சட்டுனு யோசிச்சி மந்திரியையும் கூப்பிட்டு 'நீரும் என்னோடு வாரும், மந்திரியாக வேண்டும் என நினத்துக்கொள்ளும், அப்போது தான் ஏழு பிறவியிலும் மந்திரியாக இருப்பீர்கள்' னு சொல்ல மந்திரி ஆடிப்போயிட்டாரு.
அப்புறமா மூனு பேரும் சேர்ந்து சக்கரவர்த்தியாக இன்னொரு யோசனை இருக்கிறதுன்னு சொல்லி, இன்னிக்கு யாரவது சாகனும் அல்லது தூக்குக்கு போறவங்க காப்பாத்தப்படனும்னு ஒரு புது கதைய விட்டு கருப்பாயி மாமாவை நைச்சியமா விடுவிச்சாங்க.
புது முடிவு எப்படி இருக்குன்னு உங்களோட பின்னூட்டத்துல சொல்லுங்க.

சுதந்திரதின வாழ்த்துக்கள்...(கவிதை(?))

|


அனைவருக்கும் எனது இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்.
சுதந்திரத்தை பற்றிய எனது இருவேறு கோணங்கள் இந்த பதிவில். கண்டிப்பாய் உங்களின் கருத்துக்கள் என்னை மேம்படுத்த உதவும், குறைகளை சுட்டி என்னை குட்டுங்கள்(கொஞ்சம் மெதுவாய்)...

கற்கும் கல்வி விலையாகி
கடைவிரித்து கிடத்தலினால்
பெற்ற பிள்ளை படிப்பெண்ணி
பரிதவிக்கும் ஒரு சாரர்

கார்பனோடு கழிவு சேர்ந்து
காற்று கூட நஞ்சாக
சுற்றுபுற சீர்கேட்டால்
சுகமிழந்த ஒரு சாரர்

விற்கும் விலை விண்ணைத்தொட
வாங்கும் திறன் குறைந்ததனால்
அற்பமான வாழ்வு சார்ந்து
அவதியுறும் ஒரு சாரர்

அரசியல் சந்தனத்தில்
அமிழ்ந்துள்ள சாக்கடையால்
துர்நாற்ற சகதியினில்
துயர்படும் ஒரு சாரர்

தொலைக்காட்சி பெட்டிமுன்பு
சுதந்திரமாய் சிறைபடுத்தி
விலையில்லா நேரமதை
வீணாக்கும் ஒரு சாரர்

நல்ல பல வழியிருந்தும்
நல்லோரின் நட்பின்றி
அல்லல்பட்டு இன்னலுடன்
அவதிப்படும் ஒரு சாரர்.

பெற்றபிள்ளை விற்குமாறு
பஞ்சத்தில் ஒரு சாரர்
கற்பனைக்கும் எட்டாத
களிப்புடனே ஒரு சாரர்

அரசியலில் அவலம் செய்யும்
அழுக்கான ஒரு சாரர்
பிறர் நலனை நினையாத
பொறுப்பற்ற ஒரு சாரர்

***************************************************

பாடுபட்டு பெற்றிட்ட
பொன்னான சுதந்திரத்தில்
சாடுதலை விட்டுவிட்டு
சிறப்பதனை நோக்குங்கால்

ஈடில்லா நிறைய பல
இன்பம் தரும் விஷயங்கள்
கோடியுண்டு கண்டிட்டு
கவலையதை தள்ளிவைப்போம்

நல்ல பல கருத்துகளை
நவின்று சென்ற பெரியோரை
உள்ளத்தில் நினைந்திட்டு
உற்சாகம் உள்ளிருத்தி

வல்லரசாய் மாறுதற்கு
வழியென்ன யோசித்து
தொல்லைகளை துடைத்தெறிந்து
தெள்ளிய பாரதத்தை

உருவாக்க உறுதுணையாய்
இயன்றவற்றை செய்திட்டு
சார்ந்தோர்க்கு உதவிசெய்து
சீருடனே வாழ்ந்திடுவோம்

ஊர்க்கதையை பேசுதலை
உடனடியாய் விட்டுவிட்டு
பாரதத்தை சீர்திருத்தி
பண்புடனே வாழ்ந்திடுவோம்...

சத்தியத்தின் வழிநடந்து
சளைக்காமல் போராடி
சாதனைகள் புரிந்திட்டு
சரித்திரத்தில் இடம்பெறுவோம்

சிவாவின் பாய் பேரம்

|

இதுவும் தேனாம்பேட்டையில தங்கியிருக்கும்போது நடந்ததுதான். ரூம்ல சிவான்னு ஃபிரண்டோட ஃபிரண்டா வந்து சேந்தான். விசாரிச்சா அவனும் ஆத்துர்தான்.
கருப்பா குண்டா இருப்பான். கொஞ்சம் கூட யோசிக்காம ரொம்ப அழகா இருக்கிறதா எல்லாத்துகிட்டேயும் பீத்திக்குவான். காக்கைக்கும் தன் குஞ்சு?
அழகென்ற சொல்லுக்கு சிவா, ஆத்துர் சிவான்னு அடிக்கடி பாடி வெறுப்பேத்துவான். பாக்கறவங்கள எல்லாம் சரி ஓட்டு ஓட்டுவான்.
உதாரணமா மொத மொதலா வீட்டுக்கு வந்தப்போ என் தம்பியை பாத்துட்டு 'ஏன் இப்படி துரும்பா இளைச்சி போயிட்டிங்க' ன்னு கேக்க, அவன் ஷாக்காயிட்டான்.
ஏன்னா வாழ்க்கையிலயே கொஞ்சம் பூசுன மாதிரி இருந்தது அந்த சமயத்திலேதான். ரெண்டாவது என் தம்பிய முன்ன பின்ன சிவா பாத்ததே கிடையாது.
எற்கனவே அவன பத்தின ரெண்டு விஷயம் பேசிட்டிருந்தாங்க, என்னால நம்ப முடியல.
ஒன்னு, என் ஃபிரண்டோட அண்ணன்கிட்ட போயி அவரோட ட்வின் பிளேடு ரேசர எடுத்து பாத்துகிட்டிருந்துட்டு 'அண்ணா இதுக்குள்ள அடுத்த சேவிங்குக்கு பிளேட எப்படி போடறது' ன்னு கேட்டானாம்.
ரெண்டாவது, முறுக்கு சாப்பிட்டதுக்கு அப்புறம் அவனோட பல்லு ஒன்னு காணும்னு ஃபிரண்டுங்க சொல்லும்போது, முறுக்கோட சேத்து முழுங்கியிருப்பேன்னு சொன்னானாம்.
அவங்கிட்ட இத பத்தி கேட்டப்போ, 'ஆமா அண்ணன் எந்த அளவுக்கு இருக்காரு' ன்னு டெஸ்ட் பண்ணினேன்னு சொன்னான். ரெண்டாவதுக்கு 'ஆமா கடிச்சி முழுங்கிட்டேன்' னான்.
அப்படிபட்ட சிவா, 'கோரை பாயில படுக்கறது உடம்புக்கு ரொம்ப நல்லது, ரத்தத்தை சுத்தப்படுத்தும், நல்ல கனவா வரும், நினைச்சிகிட்டு படுத்தவங்க கனவில வருவாங்க' ன்னு நம்ம லக்கி ரேஞ்சுக்கு விளம்பரம் பண்ண (கோவிச்சுக்காதீங்க குருஜி, விளம்பரம்னாலே உங்க ஞாபகம் தான் வருது) நாங்களும் நம்பிட்டு அவனையும் அழைச்சிகிட்டு ரங்கனாதன் தெருவில பாய் வாங்க போனோம்.
சிவா எம்.பி.ஏ படிச்சிருக்கோம்ங்ற ஓவர் கான்பிடன்ட்ல ரொம்ப நல்லா பேசறதா பேசிட்டிருப்பான்.
கடைக்காரர் ஒன்னு எழுவது ரூபா சொன்னாரு. ரெண்டு வாங்கறதா சொன்னதும், உங்களுக்காக கொறச்சி நூத்தி இருபத்தஞ்சின்னாரு. அதுக்கு பின்னால எவ்வளவோ பேசியும் குறைக்க முடியாதுன்னுட்டாரு.
அப்போதான் சிவா சீன்ல வந்தான். 'என்னங்க பிரதர், அதெல்லாம் தரலாம், உங்களுக்கு கட்டுப்படி ஆகும், என் மாமா திருச்சில பாய் ஃபேக்டரி வெச்சிருக்காரு, எல்லாம் எனக்கு தெரியும் பிரதர்' னான்.
'அப்போ அங்கயே போயி வாங்கிக்க வேண்டியதுதானே?' ன்னு கடுப்பா சொல்ல அவன் அசரல.
'பிரதர், இந்த பாயோட மகிமைய பத்தி சொல்லி வாங்கறதுக்கு நாந்தான் கூட்டிட்டு வந்திருக்கேன். இன்னும் பத்து பதினைஞ்சி பேருக்கு மேல வர சொல்லுவேன், உங்ககிட்ட விசிட்டிங் கார்ட் இருக்கா' ன்னான்.
'விலாசமே இல்ல, மொதல்ல ரெண்ட வாங்குங்க' ன்னாரு.
இப்படியே போயிட்டிருக்கும்போது, சிவா பொது மனுஷனா 'சரிங்க பிரதர், உங்களுக்கும் வேணாம் இவங்களுக்கும் வேணாம் ஒன் ஃபிப்டிக்கு கொடுங்கன்' னு சொல்லவும், பாய்க்காரர் நாங்க எல்லாரும் சேந்து கண்ணுல தண்ணி வர்ற அளவுக்கு சிரிச்சோம். நாங்க கேட்டது நூறு, அவரு சொன்னது நூத்தி இருபத்தஞ்சு.
சிவா புரியாம திரி திருன்னு முழிக்கிறத பாத்துட்டு இன்னும் சிரிப்பு அதிகமாயிருச்சி.
கடைக்காரர் சிரிச்சி களைச்சி போயி, 'வயிறெல்லாம் வலிக்குது, நூறை கொடுத்துட்டு மொதல்ல வாங்கிட்டு போங்க' ன்னாரு.
சிவா அப்புறமும் அடங்கல. 'என்னோட திறமைய பாத்தியா, அவர சிரிக்க வெச்சு நான்கேட்டத விட இன்னும் அம்பதுக்கு கம்மியா வாங்கி கொடுத்துட்டேன்' னான்.

சுதந்திரதின அனுபவம்

|

சுதந்திரம் வாங்கி, நாம இப்போ சுதந்திரமா இருக்கோமான்னு ஆராயாம சுதந்திர தினத்த பத்தி ரெண்டு விஷயமும் என்னோட ஆதங்கமும் தான் இந்த பதிவு(இதே ஆதங்கத்த நிறைய பேர் சொல்லியிருக்காங்க, இருந்தாலும் எல்.கே.ஜி டீச்சர் ஏ, பி. சி, டி ஐ ஒவ்வொரு வருஷமும் சொல்லித்தர்றதில்லையா?)

அமெரிக்கா போற கனவில் இன்டர்வியூ எல்லாம் முடிச்சி ஆஃபர் வாங்கி, விசா ஸ்டாம்பிங் முடிச்சி கனவோட(கொஞ்சம் திமிரோடன்னு சொன்னாலும் சரிதான்) சென்னையில சுத்திகிட்டிருந்தேன். (போன பதிவு பந்தயம் நடந்த சில நாளுக்கு அப்புறம்)

மார்ச் மாசமே விசா ஃபர்மாலிடி எல்லாம் முடிஞ்சாலும், டிசம்பர் வாக்குல தான் வர்ற மாதிரியிருக்கும்னு தகவல் வர டில்லி பக்கத்துல மோதிநகர்(உ.பில இருக்கு) காலேஜ்ல ஆறு மாசம் மட்டும்தான் வேலை செய்வேன்னு தெளிவா சொல்லிட்டு சேர்ந்தேன்.

நிறையா வித்தியாசம் இருந்துச்சி. நாமெல்லாம் இந்தியாவை ஒரே நாடா பாத்தாலும், எத்தனை வெறுபாடு கலாச்சாரம், மொழி, உடைன்னு.

புதுசானா வாழ்க்கை ரொம்ப புடிச்சி போச்சு. பசங்ககிட்ட ரொம்பவும் நல்ல பேரு. ஹாஸ்டல் வார்டன், மெஸ் இன்சார்ஜ்னு நிறையா பொறுப்புங்களை கொடுத்தாங்க.

சுதந்திர தினம் வந்துச்சி. பசங்க பொண்ணுங்கல்லாம் ரொம்ப ஆர்வமா, ராப்பகலா சுதந்திர தினத்த கொண்டாட தயார் படுத்தினாங்க.

அங்க, மிருத்தின் ஜெயின் வர்மான்னு ஒரு பையன். கடைசி வருஷம் படிச்சிகிட்டிருந்தாப்ல. சுருக்கமா சொன்னா ரொம்ப மக்கு. கொஞ்ச பேப்பரத்தான் பாஸ் பண்ணியிருந்தாப்ல. கையெழுத்து சுத்தமா யாருக்கும் புரியாது.

தூய்மையான ஹிந்தியில தான் பேசுவாப்ல. வாத்தியாருங்கள்ல என் மேல அவருக்கு ரொம்ப மரியாதை.

புதுசா கத்துகிட்டிருக்கிற என்னோட ஹிந்தி மாதிரியில்லாம அவரோட இங்கிலீஷ் கொஞ்சம் நல்லா இருக்கும்.

யாருக்கும் சொல்லாத ரகசியத்த உங்களுக்கு சொல்றேன்னு ஒரு நாள் ஒரு ஃபோட்டோவ காட்டி இது தான் நான் கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணுன்னு காமிச்சாப்ல.

கல்யாணம் டிகிரி முடிச்சதுக்கு அப்புறமான்னு கேட்டேன்.
'இல்ல சார், வருஷம் முடிஞ்சதுக்கப்புறம், டிகிரி முடிஞ்சி கல்யாணம்னா கல்யாணமே பண்ணிக்க முடியாது'ன்னு ரொம்ப 'நம்பிக்கையா' சொன்னாரு.

'பொண்ணு வீட்டுல'ன்னு இழுத்தேன்.

'வருஷம் முடிச்சா போதும்'னு சொல்லிட்டாங்கன்னு பெருமையா சொன்னாரு.

ரொம்ப அற்புதமா விழாவ நடத்துனாங்க. இன்சர்ஜ் விஸ்வநானாதன் கொடியேத்தினாரு.

மி.ஜெ.வர்மா ஆக்ரோஷமா அரை மணிநேரம் பேசினாரு. பலத்த கைத்தட்டல். புரியலன்னாலும் நானும் சேந்து தட்டினேன்.

எங்கிட்ட வந்தாப்ல. 'ரொம்ப நல்லா பேசினீங்க'ன்னு சொல்ல, பேசுனது புரிஞ்சுதா சார்'னு கேட்க,

'சில விஷயங்களுக்கு மொழி புரியனும்னு அவசியம் இல்ல'ன்னு சொல்லிட்டு அவரோட நாட்டு பற்றை மெச்சினேன்.

என்ன பேச அழச்சப்போ, இங்கிலீஷ்ல பேசினேன், காந்தி, பகவத் சிங், திலகர்னு சொல்றப்போ நிறைய கைத்தட்டினாங்க. கட்டபொம்மன், பாரதி சுத்தமா தெரியல.

கடைசியா முன்னாலயே தயார் பண்ணின நாலு வரியை முழு ஹிந்தியில பேச, முடிச்சவுடனே மி.ஜெ.வர்மா ஓடி வந்து மேடையிலயே என்ன கட்டி புடிச்சி பாராட்டுனாப்ல.

'ஐ.லவ்.யூ சார், ஆப்கா ஹிந்தி பஹூத் அச்சா'ன்னு சொன்னாரு.

சரி நாம பேசினதுல கடைசி நாலு வரி நல்லா புரிஞ்சிருக்குன்னு முடிவு பண்ணிட்டேன்.

எல்லாம் முடிஞ்சது. மனசுக்கு நிறைவா இருந்துச்சி.

மூனே முக்கால் வாக்குல என் ரூம்ல இருந்த இன்டர்காம் அடிச்சது.

மி.ஜெ.வ தான் பேசினாப்ல. சூரியன் இன்னும் பதினைஞ்சு நிமிஷத்துல மறைய போகுது, கொடிய கீழ இறக்கனும்னு சொன்னாரு.

நான் வரனுமான்னு கேட்டேன், தேவையில்ல சார், விஸ்வனாதன் சார் கிட்ட சொல்லிடுங்கன்னு சொன்னரு.

ஃபோன் பண்ணி அவருகிட்ட விஷயத்த சொல்லிட்டு மெஸ் கணக்கெல்லாம் பாத்துகிட்டு பிஸியா இருந்தேன்.

ஆறு மணியிருக்கும், விஸ்வநாதன் கதறிக்கிட்டு ஃபோன் பண்ணினாப்ல, போலீஸ் வந்திருக்குன்னு.

அடிச்சி புடிச்சி ஓடினா, நாலஞ்சி போலீசோட நம்ம மி.ஜெ.வ. கொடிய நேரத்துக்கு இறக்கலன்னு கம்ப்ளைன்ட் பண்ணி கூட்டிட்டு வந்திருக்காப்ல.

மி.ஜெ.வ. கோவமா விஸ்வனாதன பாத்து, 'அந்த ஆளை ஜெயில போடுங்க, பத்து தடவ ஃபோன் பண்ணி சொன்னேன், அதெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம்னு சொல்றாரு'.

அப்புறமா அவர சமாதானப்படுத்தி எல்லாம் சரி பண்ணினேன்.

அவருகிட்ட கேட்டேன், 'நீங்களே இறக்கியிருக்கலாமே'ன்னு.

'இல்ல சார், அவரு தானே கொடியை ஏத்துனாரு, பொறுப்பா நீங்கள்லாம் இருக்குபோது. அதனால அவருதான் இறக்கனும்னு பல தடவ ஃபோன் பண்ணினேன். அவமானப்படுத்தற மாதிரி பேசினாரு. அதான்'னாரு.

கொஞ்ச வருஷத்துக்கு முன்னால, நம்ம ஊர்ல கொடி தலை கீழா பறக்க விட்டிருந்தத பாத்து பதறி ஹெட் மாஸ்டர்கிட்ட சொன்னேன்.

நான் சொல்றது தப்புன்னு சொல்லி சாதிச்சி, பையன விட்டு ஒரு பாடபுத்தகத்தை எடுத்து வர சொன்னாரு.

பாத்துட்டு, பக்கத்துல இருந்த ஒரு பையனை ஒழுங்கா கட்ட வேண்டியது தானேன்னு பொளிச்சுன்னு வெச்சாரு.

கடைசியா என்னோட ஆதங்கம்... வட இந்தியாவ விட தென்னிந்தியாவில கொஞ்சம் நாட்டுப்பற்று கம்மியா இருக்கோன்னு தோனுது. போர் நடந்தா பாதிக்கப்படறது நம்ம சைட்ல ரொம்பவும் கம்மியான பேருதான் நினைக்கிறேன்.

ரெண்டாவது நாம எல்லையோரமா இல்லாததும் நேரடி விளைவுகளை பாக்காததும் காரணமா இருக்கலாம்னு நினைக்கிறேன்.

படிச்சிட்டு உங்க கருத்த சொல்லுங்க....

வெளிநாட்டுல இருந்தாலும், தாய் மண்ணே வணக்கம், வந்தே மாதரம்.

வெல்க பாரதம்.

பிறந்த மண்ணை பிரிந்து வாடும்,

பிரபாகர்.

******யூத்ஃபுல் விகடனில் 'குட் ப்ளாக்'-ல் வந்திருக்கிறது....******


பந்தயம் - உட்டத புடிக்கனும்...

|

தேனாம்பேட்டை எல்டாம்ஸ் ரோட்டுல வேலை தேடும் போது என்னோட கிளாஸ் மேட் ரமேஷ் கூட தங்கியிருந்தேன்.

அது ஒரு வீடு. ரெண்டு ரூம், ஹால். நாங்க நாலு பேரு. பிரபு (அவன் பேரே பிரபு, என்ன கூப்பிடறது பிரபு) மளிகை கடையும் கோக் டீலர்ஷிப்பும் எடுத்திருந்தான். ரமேஷ், சுந்தர் மூனு பஸ்ச வெச்சிகிட்டு டிரவல்ஸ் நடத்திகிட்டிருந்தாங்க.

ரமேஷ் கம்ப்யூட்டர் படிச்சாலும் லைன மாத்திகிட்டான். ரூமுல நடந்த ரெண்டு சம்பவங்களை பத்திதான் இந்த பதிவு.

ஒருநாள் ஒரு லைட்டர வெச்சிகிட்டு சுந்தர் பத்தவைக்க முயற்சி பண்ணிடிருந்தாரு, தம்மு அடிக்கல்லாம் இல்ல, சும்மா தான்.

ஒரு முக்கியமான விஷயம், சுந்தர் எதுக்கெடுத்தாலும் பந்தயம் கட்டுவாப்ல. என்னவிட நாளு வயசுக்கு பெரிய ஆளு.

'சுந்தர்ஜீ, நான் ட்ரை பண்ணி பாக்கட்டுமா' ன்னு கேக்க, 'ஆமா கிழிச்ச, ரொம்ப நேரமா முயற்சி பன்றேன், சரி ஒரு பந்தயம். மூனு தடவைக்குள்ள பத்த வெச்சுட்டீன்ன பத்து ரூபா தர்றேன். இல்லன்ன நீ அஞ்சு ரூபா தரனும், ஓக்கேவா' ன்னாரு.

'ஒரே தடவையில என்னால முடியும்' னு சொல்லவும், கொஞ்சம் ஷாக்காயி, 'அப்படி ஒரு தடவையில செஞ்சிட்டா நான் இருபது தரேன் நீ அஞ்சு கொடுத்தா போதும்' னு சொன்னாரு.

வாங்கி ரோலர நல்ல கீழ அழுத்தி பட்டன அழுத்த, பட்டுனு பத்திகிச்சி.

'ஒனக்கு இன்னிக்கு இருவத அழுவுனும்னு என்னோட விதி' ன்னு சொல்லிட்டு கொடுத்துட்டு ரமேஷ் கிட்ட,

'பிரபா இன்னிக்கு டின்னருக்கு நம்மகிட்ட ஆட்டய போட்டாச்சு' ன்னு சொல்லிட்டு , எப்படிய்யா செஞ்சன்னு நம்ப முடியாம கேக்க,

'இல்லஜி, ரொம்ப நேரமா முயற்சி பண்றீங்க, கண்டிப்பா சூடாயிருக்கும், ரெண்டாவது இன்னும் கொஞ்சம் பெட்டரா நான் செய்வேன்னு நெனச்சேன்' னு சொன்னேன்.

ஊருக்கு போயிருந்தப்போ என் தம்பி 'பிரட்'ட வெச்சு பெரிய மேஜிக் பண்னிட்டிருந்தான்.

பந்தயம் ரொம்ப சிம்ப்பிள், பிரட்டோட ஒரு ஸ்லைச ஒரு நிமிஷத்துல சாப்பிடனும் அவ்வளோதான்.

சாப்புட்டுட்டா பத்து ரூபா வாங்கிக்கலாம், இல்லன்னா கொடுத்திடனும். நான் அண்ணங்கறதால காசில்லாம ட்ரை பண்ணினேன். ஒரு நிமிஷத்துக்குள்ள பாதி கூட முடியல.

இந்த விஷயம் ஞாயித்து கிழம சாயங்காலம் எல்லாரும் டி.வி. பாத்துகிட்டிரும்போதுதான் ஞாபகம் வந்துச்சி.

'சுந்தர் ஒரு பந்தயம்' னு சொன்னேன்.

'ஏப்பா டின்னருக்கு காசில்லையா' ன்னு கேக்க

சிரிச்சுகிட்டே, 'ரொம்ப சிம்பிள், ஒரு பிரட் ஸ்லைச ஒரு நிமிஷத்துல சாப்பிடனும்னு சொல்ல', 'இது ரொம்ப சாதாரணம், பெட்டு எவ்வளோ' ன்னு ஆர்வமாயிட்டாரு.

'பத்து' ன்னு சொல்லவும், நிறையா உங்கிட்ட விட்டிருக்கேம்பா, இருவது' ன்னு கேக்க சொந்த செலவுல மில்கா பிரட் ஒன்னு வாங்கிகிட்டு வந்தேன்.

சுந்தர் ஒரு ஸ்லைச எடுத்து சாதரணமா வாயில போட்டு சப்பிட முயற்சி பண்ண ஒரு நிமிஷம் முடிஞ்சும் வாயில பாதிக்கு மேல அப்படியே இருக்க இருவத கொடுத்துட்டு தோல்விய ஒத்துகிட்டாப்ல.

'காசு புடுங்கறதுக்கு வித விதமா யோசிக்கிறங்கப்ப'னு சொல்லிட்டிருக்கும் போது வெளியே போன பிரபு வந்தான்.

'என்ன சுந்தரண்ணா புலம்பிகிட்டிருக்க, பிரபாகர்கிட்ட காச உட்டுட்டியா?' ன்னான்.

'ஆமாப்பா' ன்னு சொல்லும்போதே பந்தயத்த பத்தி நான் விளக்க,

'எப்பா கொஞ்சம் சும்மா இரு. நாந்தான் பிரபுகிட்ட கட்டுவேன், விட்டத புடிக்கனும்' னு சுந்தர் சொல்ல,

'இல்லயில்ல நாந்தான் இந்த பந்தயத்த ஆரம்பிச்சேன், காசு போட்டு பிரட்லாம் வாங்கிட்டு வந்திருக்கேன், நான் தான் ஓனர்னு சொல்ல',

'எவ்வளோப்பா பிரடு, இந்த பத்த புடி, ஒரு நாளாவது என்னை ஜெயிக்க விடு'ன்னாரு.

பிரபு 'பந்தயம் எவ்வளோ' ன்னு கேக்க, 'அம்பது' ன்னு சுந்தர் சொன்னாரு.

பணத்த பொது ஆளு கையில கொடுத்துட்டு வாட்சுல நொடி முள்ளு பன்னண்டுகிட்ட வரும்போது பிரபு வாயில போட்டு மெதுவா மெல்ல ஆரம்பிச்சான். சாப்பிடற மாதிரியே தெரியல.

சுந்தர் ரொம்ப குஷியாயிட்டாரு. அம்பது செகண்ட் வரைக்கும் அவன் சும்மா வாயை அசைச்சிகிட்டிருந்தான்

சுந்தர் 'ஆஹா உட்டதையெல்லாம் புடிச்சிட்டேன்' னு சந்தோஷத்துல குதிக்க ஆரம்பிச்சுட்டாரு.

ஒரு நிமிஷம் கழிச்சு பிரபு வாய திறக்க, வாயில பல்லும் நாக்கும் அப்புறமா சிரிப்பும் தான் இருந்துச்சி.




குரு வணக்கம் (தொடர்ச்சி) - நின்னு போச்சு ரயிலு வண்டி..-II

|

(முதல் பகுதிய படிக்கலன்னா, ப்ளீஸ், இதோட முதல் பாகத்த படிச்சிட்டு படிங்களேன்)


'எங்க போனாலும் உங்க மனசுக்கு நல்லா இருப்பீங்க' ன்னு சொல்லிட்டு, 'முடிஞ்சா திரும்பி வரும்போது எனக்கு காதுக்கு ஒரு மெஷின் வாங்கிட்டு வாங்க' ன்னு சொன்ன்னாரு. சொல்லிட்டு உடனே, 'அவசரமில்ல, நீங்க வரும்போது வாங்கிட்டு வாங்க, நான் காசு கொடுத்துடறேன்' னு சொன்னாரு.


இது நடந்தது ஆகஸ்ட் மாசம். சிங்கப்பூர் வந்து மொத மூனு மாசம் வேலையில்லாம, நல்ல வேலையில சேர நவம்பர் ஆயிடுச்சி.

என் மனைவிக்கு தலை பிரசவம், போறதுக்கு வழியுமில்ல, காசுமில்ல. பையன் பொறந்ததா ஃபோன் தகவல், சந்தோஷமான அழுகையோட எனது மனைவியோட பேச்சு. அத பத்தி தனியா பகிர்ந்துக்கறேன்.

டிசம்பர் மாசம் ஒன்னாம் தேதி. முதல் மாச சம்பளத்த வாங்கிட்டு, நேரா முஸ்தபா போனேன். மொதல்ல நான் வாங்கினது சாருக்கு காது மெஷின் தான், அடுத்து தான் என் பையனுக்கு.

ரொம்ப கேள்வி கேட்டு, பாத்து பாத்து வாக்கறத பாத்துட்டு கவுன்ட்டர்ல இருந்த பெரியவர் 'யாருக்கு தம்பி வாங்குறீங்க' ன்னு கேட்டாரு.

'என்னோட வாத்தியாருக்கு' ன்னு சொல்லவும், 'இந்த காலத்துலயும் இப்படி ஒரு புள்ளயா'ன்னு ஆச்சர்யப்பட்டு அவரு ரொம்ப நேரம் எடுத்துகிட்டு நல்லா டெஸ்ட் பண்ணி கொடுத்தாரு.

லீவ் கிடைச்சி சைனீஸ் நியூ இயர் சமயத்துல ஊருக்கு போனேன். என் வாரிச உச்சி மோந்துட்டு, சட்டுனு வெளிய கிளம்பினேன். 'வந்த உடனே என்ன அவசரம்' னு கேக்க, 'வந்து சொல்றேன்' னுட்டு வண்டிய எடுத்து நேரா சார் வீட்டுக்கு போனேன்.

'வாங்க வாங்க நல்லாருக்கீங்களா?' சிரிப்போட உள்ள அழைச்சிட்டு போனாரு. மனைவி மொதல்லயே இறந்துட்டாங்க, தனியா தான் தங்கியிருந்தாரு.

ஒரு நிமிஷம் உக்காருங்கன்னு சொல்லிட்டு என்ன பேச விடாம உள்ள போயி பால காய்ச்சி கொண்டு வந்து கொடுத்தாரு. 'சக்கரை சரியா இருக்கா'ன்னு கேட்க, நல்லா இருக்குன்னு சத்தமா சொன்னேன்.

'வேல போக்குவரத்து எல்லாம் எப்படி'ன்னு கேட்டாரு, பதில் சொன்னேன்.


'பொறந்த உடனே ஆஸ்பத்திரியில போய் உங்க பையனை பாத்தேன், உங்களை மாதிரியே அழகா இருக்காரு, பெரிய ஆளா வருவாரு'ன்னு சொல்ல, பொய்யும் இனிப்பா இருந்துச்சி.

அவரு கையில கொண்டு போன மெஷின கொடுத்தேன். ஆர்வமா, சந்தோஷமா வாங்கிட்டாரு. ஆன் பண்ணி அவருக்கு கதுல வெச்சு காமிச்சேன்.

'சார் எப்படி இருக்குது'ன்னு கேக்க, 'ஏன் இப்படி சத்தமா பேசுறீங்க, மெதுவா பேசுங்க' ன்னு வழக்கம்போல ரொம்ப சத்தமா சொன்னாரு.

'எல்லா சத்தமும் கிளியரா கேக்குது' ன்னு சொல்லிட்டு, 'ஆமா எவ்வளொ'ன்னு அடுத்த கேள்வியை கேட்டாரு. 'அதெல்லாம் ஒன்னும் வேனாம்' னு சொல்லிட்டு 'அப்புறமா பாக்கறேன் சார்' னு சொல்லிட்டு வந்துட்டேன்.

மத்தியானம் வாக்குல வீட்டுக்கு வந்தாரு. ரப்பர் பேண்டுல கட்டி நூறு ரூபா நோட்டு கத்தையை என் கையில கொடுக்க வந்தாரு. கேட்டதுக்கு 'மெஷினுக்கு பணம்'னு சொன்னாரு. 'சார் உங்களால தான் இந்த நிலைமையில இருக்கேன், என் ஞாபகமா வெச்சுக்கோங்க' ன்னு சொல்லி மறுத்திட்டேன். அப்புறமா அம்மாகிட்ட, அப்பாகிட்ட காசு கொடுக்க எல்லாரும் மறுத்துட்டாங்க.

நான் அவரு கால தொட்டு கும்பிடறத பாத்துட்டு பசங்க, என்னடா, 'பிரபண்ணன் இந்த மாதிரில்லாம் பண்ணுது'ன்னு கிண்டலா சொல்லுவானுங்க. அவனுங்களும் ஒரு நாளைக்கு வருத்தப்படுவானுங்கன்னு நினைச்சுக்குவேன்.

ரிட்டயர்டு ஆனதுக்கப்புறம் பசங்க அவர எங்க பாத்தாலும் 'ரயிலு வண்டி வருதுடோய்' னு சொல்லி கிண்டல் பண்ணுறதா கேக்கும் போது கஷ்டமா இருக்கும்.

சாரு எல்லாத்துகிட்டயும், 'என் மாணவன் சிங்கப்பூர்ல இருந்து வாங்கிகிட்டு வந்து கொடுத்தது'ன்னு பெருமையா ரொம்ப நாளைக்கு சொல்லிட்டிருந்திருக்காரு.

அதிர்ச்சியான தகவலோட ஒரு நாள் ஃபோன் வந்துச்சி, சார் எங்களையெல்லாம் விட்டுட்டு போயிட்டார்னு. சந்தோஷமா ஓடிக்கிட்டிருந்த அந்த ரயிலு வண்டி நின்னு போச்சி.

காலையில எழுந்து குளிச்சி பூஜையெல்லாம் முடிச்சிட்டு சாப்பிட போகும்போது வேஷ்டி தடுக்கி கீழ விழுந்து உடனே இறந்துட்டாராம்.

போக முடியல, ஏன்டா வெளிநாட்டுக்கு வந்தோம்னு நினைச்சு மொதல்ல அழுதது அன்னிக்குத்தான்.

அன்னிக்கி முழுசும் அவர் நினைவாவே இருந்தேன். ஆபிஸ்ல என்னோட நிலைமைய பாத்துட்டு வீட்டுக்கு போக சொல்லிட்டாங்க.

எல்லாரும் ரொம்ப நல்ல சாவுன்னு ரொம்ப நாளைக்கு பேசிட்டாங்க. நல்லவங்களுக்கு எப்பவுமே நல்ல சாவுதான்.

ஏணியா இருந்து எல்லோரையும் மேலேத்திவிட்ட அந்த ரயிலு வண்டி ஆழப் புதைஞ்சது இந்த மண்ணில் மட்டுமல்ல, என் மனசுலயும் தான்.

சார், என் உயிர் இருக்கிற வரைக்கும் உஙகளை, உங்களோட கள்ள மில்லா சிரிப்பை, மனப்பூர்வமான வாழ்த்தை நினைச்சிகிட்டே இருப்பேன். உங்களோட ஆசிர்வாதம் கடைசி வரைக்கும் எனக்கு வேணும்...


குரு வணக்கம்...

|

பொறந்தது எழுபத்திரண்டு கடைசின்னாலும் சர்ட்டிபிகேட்ல ஆறாவது மாசம்னு கொடுத்ததால நாலரை வயசிலேயே ஒன்னாவது சேக்க கூட்டிட்டு போனாங்க.

காதுல கையை வெக்க சொல்லி எட்டாததால 'என்ன ராமசாமி பையனுக்கு இன்னும் வயசாகல போலிருக்கு' ன்னாரு கந்தசாமி சார்.

'சார் அ ஆ முழுசும் தெரியும், ஏ,பி,சி,டி எல்லாத்தையும் சொல்லுவேன், இ போடுவேன்' னு சொல்லிட்டு தட்டில இருந்த நெல்லுல விரலால இ போட்டேன்.

ஏன்னா எனக்கு அப்போ சுத்தி சுத்தி இ போடறது அவ்வளோ கஷ்டமா இருந்துச்சி. மூனு நாள் எடுத்துகிட்டேன்.

'அட பையன் பரவால்லயே, சுட்டியா இருக்கான்' னுட்டு சேத்துட்டு,

'குருமூர்த்தி இங்க வாங்க, ராமசாமி பையனை கூட்டிட்டு போங்க' ன்னு சொல்ல, என்ன கைய புடிச்சி மெதுவா கூட்டிட்டு போகும் போதுதான் அவர மொத தடவையா பாத்தேன், குள்ளமா சிரிச்ச முகத்தோட இருந்தாரு.

சட்டுனு கேட்டேன், 'சார் உங்க மேல எதோ வாசம் அடிக்குது'

'அதெல்லாம் ஒன்னுமில்ல வா' ன்னு கூட்டிட்டு போயி, மொத வரிசையில இருந்த ஒரு பையனை பின்னால போகசொல்லிட்டு உக்கார வெச்சாரு.

எல்லாத்தையும் வாடா போடான்னு சொன்னாலும் என்ன வாங்க போங்கன்னுதான் சொல்லுவாரு.

அப்பவோட டிரைனிங்ல முன்னாலயே அ, ஆ ஏ, பி.சி, எனக்கு தெரியும்ங்றதால என்ன சத்தம் போட்டு சொல்லி கொடுக்க சொல்லி பாத்துட்டு இருப்பாரு.

மொத நாளு அவரு மேல அடிச்ச வாசம் சுருட்டு வாசம்னு அப்புறமா தான் தெரிஞ்சது.

சுருட்டு வாசம், அதால ஆன காவி பல்லோட சிரிப்பு அதான் அவரோட அடையாளம்.

தப்பு பண்ணி, சத்தம் போட்டுட்டு இருந்தா குச்சால வெளுப்பாரு.

நான் அந்த குரூப்புல இருந்தாலும் நீ போயி அங்க உக்காரு, நல்ல பையன்னு அடிக்காம விட்டுடுவாரு.

வேலு 'சார் அவனும் தான் கத்துனான்' னு போட்டு கொடுத்தாலும், அவனுக்குத்தான் ரெண்டு அடி சேத்து விழும்.

சாதாரணமா அட்வைஸ் பண்ணுவாரு. 'பெரிய ஆளா வரனும், அப்பாவோட பேர காப்பத்தனும்' னு அடிக்கடி சொல்லுவாரு.

இன்டர்வல் சமயத்துல எல்லாரும் அவரு ஸ்கூலுக்கு வெளியே குப்பு குப்புன்னு சுருட்டு புடிக்கறத ஒளிஞ்சி, ஆசையா பாத்து கிட்டு இருப்போம். பாத்துட்டார்னா குச்செடுத்துகிட்டு துரத்துவாரு.

ஒருநாள் என்ன பாத்துட்டு 'நீயெல்லாம் அவ்னுங்களோட சேராத கெட்ட பசங்க' ன்னு சொன்னாரு.

கடைசி வரைக்கும் மூனு வகுப்புக்கு மேல் பாடம் நடத்துனதில்ல. நாங்க அவருக்கு வெச்ச பேரு ரயிலு வண்டி, பள்ளி கூடத்த தவிர புகையை விட்டுகிட்டே போறதால.

காது அவருக்கு கொஞ்சம் மந்தம், சத்தமாதான் பேசுவாரு, பேசனும்.எங்களுக்கு அப்புறம் வந்த பசங்கள்ளாம் எங்க அளவுக்கு அவருக்கு மர்யாதை தர்றதுல்ல. அவரும் பெருசா எதிர்பாக்க மாட்டாரு.

அவர எங்க பாத்தாலும் வணக்கம் சொல்லி முழங்காலை தொட்டு கும்பிடுவேன் பதறி போயி, தோள புடிச்சி தூக்கி 'என்ன இதெல்லாம்' னு சொல்லுவாரு.

அடிக்கடி ஒன்னே ஒன்னு சொல்லுவாரு. 'யாரும் உங்க செட்டு மாதிரி இல்ல, உங்கள மாதிரி பணிவா இல்ல' ன்னு.

டெல்லியில வேலை பாத்துகிட்டிருக்கும்போதுதான் கல்யாணம். லீவ் இல்லாததால கடைசி நேரத்துல தான் வந்தேன். கல்யாணம் முடிஞ்சு வீட்டுக்கு வந்து ஹால்ல பேசிகிட்டு இருந்தோம்.

ஆயா வந்து என்ன பாக்கறதுக்கு குருமூர்த்தி சார் வந்திருக்கறதா சொன்னுச்சி. வேளியே போனேன்.

தயங்கி தயங்கி நின்னுகிட்டிருந்தாரு. கையை புடிச்சி உள்ளே கூட்டிட்டு வந்தேன்.

'பிரபு, ஒங்களுக்கு கல்யாணம்னு கேள்விப்பட்டேன், பத்திரிகை வெக்க மறந்துட்டாங்க போலிருக்கு, அதான் நேர்ல பாத்து ஆசிர்வதிச்சுட்டு போலாம்னு வந்தேன்'னு சொன்னாரு.

அப்படியே அவரை கட்டி புடிச்சி அழுதுட்டேன்.

'மன்னிச்சுங்க சார், வெச்சிருப்பாங்கன்னு நினைச்சேன்' ன்னேன். அவரோட சுருட்டு வாசம் கூட ரொம்ப மணமா இருந்துச்சி.

'அய்யய்யோ இதுக்கு ஏன் கலங்குறீங்க' ன்னு கண்ண தொடச்சு விட்டாரு.

ரெண்டு பேரும் ஆசிர்வதம் வாங்கும்போது எனக்கு ஐம்பது ரூபாவும், அபிக்கு இருபது ரூபாவும் வெச்சி வாழ்த்தினாரு.

இன்னைக்கும் அவரு கொடுத்தத பொக்கிஷமா பாதுகாத்துட்டு வர்றேன்.

எங்க தெரு வழியா எப்போ வந்தாலும் நான் இருந்தாலும் இல்லாட்டாலும் வீட்டுக்கு வந்து விசாரிச்சுட்டு போவாரு.

ஒவ்வொரு தடவ ஊருக்கு போகும் போதும் அவரை பாத்து ஆசிர்வாதம் வாங்குவேன்.

சிங்கப்பூர்ல வேலை கிடைச்சு கிளம்பறதுக்கு மொத நாள் பஸ்ஸில பாத்தேன்.

ஏற்கனவே அப்பா மூலமா தெரிஞ்சிருப்பாரு போலிருக்கு. கைய புடிச்சி குலுக்கி வாழ்த்தினாரு.

'எங்க போனாலும் உங்க மனசுக்கு நல்லா இருப்பீங்க' ன்னு சொல்லிட்டு, 'முடிஞ்சா திரும்பி வரும்போது எனக்கு காதுக்கு ஒரு மெஷின் வாங்கிட்டு வாங்க' ன்னு சொன்ன்னாரு.

பதிவு நீண்டுகிட்டே போகுது. அடுத்ததுல கண்டிப்பா முடிச்சிடறேன்.

இதோட தொடர்ச்சியை இங்க கிளிக் பண்ணி படிச்சிடுங்க...

ஐம்பதாவது பதிவில் அனைவருக்கும் நன்றி...

|


அப்படியும் இப்படியுமாய் எழுதி இது என்னுடைய ஐம்பதாவது பதிவு.
தினமும் ஒரு பதிவிடுகிறோமே, கடைசி வரையிலும் நம்மால் இவ்வாறு முடியுமா எனும் கேள்வி என்னுள் எழுந்தபோது, நண்பர்கள் கொடுக்கிற உற்சாகம், நினைவுகளை நிரடும்போது எழுது எழுது என தூண்டும் பல நினைவுகள், கண்டிப்பாய் இயலும் என்ற எண்ணத்தை உறுதி செய்ய, தொடர்கிறேன்.
மற்றுமொரு நாள் இது தான் என்னுடைய ஐம்பதாவது பதிவு என மற்றவர்களிடம் பெருமையாக சொல்லிக்காத வகையில் இருக்கவேண்டும் எனும் எண்ணத்துடன் எழுதுவதால் இந்த பதிவில் விஷயங்கள் ஏதுமின்றி, அடுத்து எழுதப்போகும் பதிவிற்கான ஒரு முன்னோட்டமாகவும் எனக்கு தமிழை கற்றுத்தந்த மிக முக்கியமான ஐந்து அன்பு இதயங்களுக்கு நன்றி செலுத்தும் வண்ணமாகவும் இருக்க எண்ணிட, இதோ ஒவ்வொருவராய்.
முதலில் என்னுடைய நினைவு தெரிந்த முதல் ஆசிரியர், இரண்டாவது வரை பயிற்றுவித்த குருமூர்த்தி சார். அவரப்பற்றித்தான் என்னுடைய அடுத்த பதிவு 'நின்னு போச்சு ரயிலு வண்டி', குரு வணக்கமாக.
அடுத்தது என்னுடைய அம்மா வழி பொன்னுசாமி தாத்தா. தமிழ் படிக்க கற்று கொடுத்து மேடையில் பேசும் அளவிற்கு சிறு வயதில் தயார் படுத்தியவர்(அவர் சொல்லி கொடுத்தவாறு மேடையில் கல்லூரி பேச்சுப்போட்டியின் போது பேச ஆரம்பிக்க, மேலே பேச விடாமல் என்னை மேடையை விட்டு இறக்கி ஓட விட்டதை தனி பதிவில் சொல்லுகிறேன்).
தமிழை தப்பில்லாமல் படிக்க கற்று தந்தவர். நிறைய பாடல்களை சொல்லிக்கொடுத்து என்னை எல்லோர் முன்னிலும் பலமுறை பாடச்செய்து மேடை பயத்தை அறவே போக்கியவர். நிறைய கதைகளை சொல்லி ஆரம்ப தாகத்தை ஏற்படுத்தியவர்.
என்னுடைய சிஷ்யன் என்று எல்லோரிடமும் பெருமையா சொல்லிக்கொண்டிருப்பவர். நானும் என்னுடைய குரு என எனது நெருங்கியவர்களிடம் சொல்லிக்கொண்டிருக்கிறேன்.
அப்பா வழி வையாபுரி தாத்தா. அவர் அதிகம் படிக்கவில்லை எனினும் அனுபவக் கதைகள், அறிவுறைகள் என நிறைய அவரிடம் பெற்றிருக்கிறேன்.
என் தந்தை. எனது எழுத்துக்களை முதலில் படித்து விமர்சிப்பவர். அவரிடமிருந்துதான் எழுத கற்றுக்கொண்டேன். நிறைய கவிதை, கதைகள் எழுதுவார். அவரின் கவிதைகளின் தாக்கமே, இன்று எனது வெளிப்பாடுகள்...
இறுதியாய் எனது சம்பத் மாமா. சிறு வயதிலிருந்து இன்று வரை எனது உதாரண நபர். இவரிடமிருந்து கற்றுக் கொண்டது ஏராளம். என்னிடமிருக்கும் குறைகளை நேரிலும் நிறைகளை மற்றோரிடமும் சொல்லுவார்.
என்னை கதை புத்தகங்கள் படிக்க நூலகம் அழைத்து சென்று பழக்கியவர். கதை புத்தகம் நிறைய படிக்கிறான் என மற்றோர் குறை சொன்னாலும், என்னிடம் பாட புத்தகத்தையும் படி என்றுதான் சொல்லியிருக்கிறார். (மதிப்பெண் குறைந்தால் அடி பின்னி எடுத்துவிடுவார் அது தனி கதை)
பதிவுலகில் எனக்கு உறுதுணையாய் இருப்பவர்களை சொல்ல வேண்டுமானால் சொல்லிக்கொண்டே போகலம்.
ஏற்கனவே பிளாக்கின் நன்றியில் குறிப்பிட்டது போல என்னை பதிவெழுத ஊக்குவித்து தூண்டுகோலாய் இருந்த லக்கி. இவரிடமிருந்து வேலைப் பளுவால் அதிக பதிவில்லை. எழுதும் நாளை எதிர் நோக்கியிருக்கிறேன்.
படித்து நன்றாக இருப்பின் முதல் ஆளாய் பாராட்டும் வண்ணத்து பூச்சியார் என்கிற சூர்யா. இவரது நந்தவனத்தில் உலக சினிமாக்களை காண்பதில்தான் எத்தனை சந்தோஷம்?
அரவணைத்து பாராட்டும் கேபிள் அண்ணா. இவரை வாசிக்கும்போது இவரது விவரிப்புகளால் விழி விரிந்து உற்சாகமாய் உணர்வேன்.
அன்பு தோழனாய் ஒரு ஊரில் நாகா. பள்ளி நினைவுகளை எழுத சொல்லி எனது நினைவுகளை கிளர்ந்து நிறைய எழுத வாய்ப்பினை உருவாக்கிக் கொடுத்தவர். விஷயங்களை பகிர்ந்து கொள்ள எனக்கு கிடைத்திட்ட ஒரு இனிய தோழர்.
ஜோ, இவரின் எழுத்துக்களொடு செய்துவரும் நல்ல காரியங்களும் நிறைய பிடிக்கும். நண்பர்களின் மூலம் கேள்வியுற்று சந்திக்க, பேச ஆவலாய் இருக்கிறேன்.
கசியும் மௌனத்தால் கட்டிப்போடுமென் ஈரோடு கதிர். இவரின் எழுத்துக்குத்தான் எத்தனை ஈர்ப்பு. தனி பாணியில் எழுதுகிறர். மறந்த விஷயங்களை நினைவு கூர்ந்து எழுதுவதில் ஆர்வம் உள்ளவர். பழகுவதற்கு இனிய நண்பர்.
தமிழ் வலையுலகம் மணி. இவரை புகைப்படத்தில் பார்க்கும் போது எங்கேயோ பார்த்த மாதிரியாய் தான் தோன்றுகிறது. கேட்டு விசாரிக்க வேண்டும். மறந்து போய்விடும் போலிருக்கு மணி, மவுனத்தை கலைத்து வலையுலகில் வலம் வாருங்கள்.
சங்கர் அண்ணா, எழுதவேண்டும் எனும் எண்ணம் ஏற்பட இவர்தான் மூல காரணம். படிக்கும்போதே புத்தகங்களை எழுதி அசத்தியவர். 'பட்டைய கிளப்பு' மூலம் பவனி வந்தாலும் அதிக பதிவுகளை நேரமின்மையால் தர இயலாமல் இருக்கிறார்.
டக்ளசு ராஜூ தம்பி. சிறு வயதிலேயே இந்த பாய்ச்சலா என வியந்து கொண்டிருக்கிறேன். காதலை பற்றிய சமீபத்திய ஒரு பதிவை படித்து பிரம்மித்திருக்கிறேன்.
ராசுக்குட்டி. நண்பரை பற்றி அதிகம் தெரியாது. தெரிந்து கொள்ள விரும்பும் நபர். படித்து இவர் எழுதும் பின்னூட்டங்கள் நாம் எழுதியதைவிட சுவராஸ்யமாக இருக்கும்.
நையாண்டி நைனா, 'ரவுசு பார்ட்டி'. இதுவரை நல்ல தமிழில் எழுதிவந்த நான், இவரைப்பற்றி எழுதும்போதே தடுமாறுகிறேன் பாருங்கள், அதுதான் இவரின் வெற்றி. இவருக்கு இடும் பின்னூட்டங்களை கவிதையாகவே செய்வது என முடிவெடுத்து செய்து வருகிறேன், யாரும் என்னை உதைக்காத வரை.
நிறைய படிக்கிறேன், பின்னூட்டமிடுகிறேன், மனதிற்கு நிறைவாய் இருக்கிறது.
இன்னும் நிறைய பேரை அடுக்கிக்கொண்டே போகலாம். எழுதாததால் மறந்ததாய் இல்லை. என்னை வாசிக்கும் எல்லோருக்கும் எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்...

எங்கேயோ படிச்சது 7 (மாலைக்கண் நோய் மாப்பிள்ளை)

|

நம்ம ஆளுக்கு புதுசா கல்யாணம் ஆச்சு. தலைவரு மாலைக்கண் நோய் இருந்தாதால, சாயங்காலம் ஆனா சரியா கண்ணு தெரியாது. ஆனா மறைச்சிதான் மாட்டியிருக்காப்ல.

மாமனார் வீட்டில விருந்து(ஏன், எல்லோரும் மாமியார் வீடுன்னு அதிகமா சொல்றாங்க?).

மனசுக்கு புடிச்ச பொண்டாட்டி, வித விதமா கவனிப்பு... சொக்கி போயி கிடந்தாரு.

சரியா சாயங்காலம் ஆனா வீட்ட விட்டு வெளியே போகாத மாதிரி பாத்துகிட்டாரு.

விதி சும்மா விடுமா? ஒருநாள் தோட்டத்து பக்கம் போனாரு. திடீர் மழை, நகர கூட முடியாம மோட்டார் கொட்டாயில உக்காந்துட்டாரு. ஏழுக்கு மேல ஆயிடுச்சி, நல்லா இருட்டிட்டதால போறதுக்கு வழி தெரியல.

தட்டு தடுமாறி அங்கேயும் இங்கேயும் தடவி சரி வெளிய போயி நிக்கலாம்னு எழுந்திரிக்கிறப்போ கையில எதோ புசு புசுன்னு மாட்ட அது ஒரு முயல்.

மழைக்கு ஒதுங்கியிருக்கும் போக இருக்கு. நல்லா கொழு கொழுன்னு இருந்துச்சி.

காதை புடிச்சி தூக்கிட்டு நின்னுகிட்டிருக்கறப்போ, அப்போ அந்த வழியா வந்த பக்கத்து காட்டுக்காரர்,

'என்னங்க புது மாப்ள, அங்க நின்னிட்ட்ருக்கீங்க. மழதான் விட்டுடுச்சே, வீட்டுக்கு கிளம்பலையா' ன்னு கேக்க,

'எங்க கிளம்பறதுன்னு நினைச்சிட்டு', 'இல்லயில்ல கிளம்பலாம்னு வெளிய வரும்போது தூரத்துல நீங்க வர்றத பாத்துட்டு சேந்து போலாமேன்னு நின்ன்னுகிட்டிருக்கேன்'னாரு.

'ஆக, இருட்டுல கூட நாம தூரத்துல வர்ரது தெரியுதா' ன்னு ஆச்சர்யப்பட்டுகிட்டே, 'சரி வாங்க கிளம்பலாம்' னாரு.

மாப்பிள்ளை அவரு எப்பவுமே ஒரு பெரிய தடிய கூடவே வெச்சிருக்கறத முன்னாலயே கவனிச்சிருக்காரு.

'ஆமா நீங்க என்ன ஏதோ பாரம் வெச்சிருக்கிங்க போலிருக்குது'ன்னு கேக்க, 'ஆமா, தேங்கா புடுங்கிகிட்டு வந்திருக்கே' ங்கவும்,

'சரி சரி அதை கழியில நடுவில கட்டுங்க, ரெண்டு பேரும் சேந்து தூக்கிகிட்டு போகலாம்'னு சொல்லவும்,

அவரு எவ்வளவோ மறுத்தும் கேக்காம அதே மாதிரி செஞ்சி, அவர முன்னாடி நடக்க விட்டு பத்திரமா போயி சேந்துட்டாரு.

மாப்பிள்ளை வெறும் கையாலயே முயல் புடிச்ச கதை பக்கத்து வீட்டுக்காரர் சம்சாரம் புண்ணியத்துல ஊரெல்லாம் பரவ, ரொம்ப பேரு வீட்டுக்கு வந்து பாத்துட்டு போனாங்க.

மப்பிள்ளை நேரமோ என்னவோ தெரியல, அடுத்த நாளும் அதே மாதிரி மழையில மாட்டி இருட்டிடுச்சி.

இன்னிக்கு ஆபத்பாந்தவனா வந்தது கன்னுக்குட்டி. அவுத்துகிட்டு காட்டு பக்கம் ஓடி வந்துடுச்சி போலிருக்கு.

அவரு சரியா மா மான்னு கூப்பிட பக்கத்துல வரவும் கயிற கெட்டியா புடிச்சிகிட்டு முடுக்க, சரியா வீட்டுல கொண்டுவந்து விட்டுடுச்சி.

வாசல்லயே மாப்பிள்ளய காணும்னு தவிப்போட எல்லாரும் காத்திருக்க, மாமனார், 'மாப்பிள்ளை சிங்கம்டி, இந்த ஊர்லயே கையால எவென் முயல் புடிச்சிருக்கான் சொல்லு'ன்னு பீத்திக்கிட்டிருந்தாரு.

கன்னுகுட்டி மாப்பிள்ளையை இழுத்துகிட்டு ஓடி வந்ததுல மூச்சிறைக்க மூச்சிறைக்க, 'இந்த வீட்டிட யாருக்குமே என்னை தவிர பொறுப்பு கிடையாது. கன்னுகுட்டிய இப்படியா பொறுப்பில்லாம விட்டுடறது, விட்டிருந்தா காடெல்லாம் மேஞ்சிருக்கும்'னு சொல்லவும்,

'ஆஹா பொறுப்புன்னா இது தானே பொறுப்பு' ன்னு எல்லோரும் மெச்சிகிட்டாங்க, சின்ன கன்னுகிட்டி விட்டாலும் பயிர் மேயாதுன்னு தெரிஞ்சும்.

அடுத்த நாள் மாப்பிள்ளை ரொம்ப விவரமா வீட்டுலயே இருந்தாரு.

ராத்திரி சாப்பிடற வரைக்கும் ஏதும் ஆகல. வெத்தல போட்டு திண்ணையில காத்தாட உக்காந்து இருந்தப்போ திடீர்னு கரண்ட் போயிட மாப்பிள்ள சத்தம் போடாம இருந்தாரு.

அப்பொ திம் திம்னு நடந்து வர்ற சத்தம் கேக்க, எருமை மாடுதான்னு நினைச்சிகிட்டு பக்கத்துல வந்தப்போ தடவும்போது கிடைச்ச கழியால நச்சுனு ஒரு போடு போட்டாரு.

அய்யோ அம்மான்னு கத்திகிட்டு விழும்போதுதான் தெரிஞ்சது, வந்தது மாமியாருன்னு.

கரன்ட் சொல்லி வெச்ச மாதிரி வந்துடவும், மாமியார் கிழ விழுந்து கிடக்க, மப்பிள்ள கையில தடியோட நிக்க, ஆனாலும் சமாளிச்சாரு பாருங்க தெறமையா,

'பொம்பளைங்கன்னா ஒரு அடக்கம் வேணும், நடக்கும் போது ஒரு பதுவுசா நடக்கனும், இப்படி திம் திம்மு நடந்தா குடும்பம் விளங்குமா' ன்னாரு.

'ஆஹா, மாப்பிள்ளை சாஸ்திரம் சம்பிரதாயமெல்லாம் கரைச்சு குடிச்சிருக்காரு' ன்னு எல்லாரும் பாராட்ட, தலையில இட்டிலி மாதிரி வீங்கியிருந்த மாமியார கைத்தாங்கலா உள்ளே கூட்டிட்டு போனாங்க...

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB