வலியால் வந்த உறவு...

|

வார இறுதியில் அன்னை, தந்தை, அன்புக் குழந்தைகள், ஒசூரிலிருந்து வந்திருந்த ஆசைத் தங்கை, என எல்லோரின் அன்பிலும் திளைத்து சித்திரைப் புத்தாண்டின் இந்த முதல் நாள் விஜயமாயிருந்து, வறுத்தெடுக்கும் இந்த கோடையும் கொஞ்சம் குளுமையாய் மாற்றியிருந்தது.

முன்று மாதத்தின் முன்பு பைக்கிலிருந்து விழுந்து சிராய்ப்புக்கள் எல்லாம் வெகு விரைவில் ஆறினாலும், வலது தோள்பட்டையில் மட்டும் இலேசான வலி. கையினை சரிவர தூக்க இயலாது, சுர்ரென வலிக்கும்.

எக்ஸ்ரே எடுத்துப் பார்த்ததில் எதுவும் பிரச்சினை இல்லையென சொல்லிவிட, வேலைப் பளுவின் காரணமாய் மாற்று சிகிச்சை செய்துகொள்ள அன்போடு பலர் அறிவுறுத்தியும் தள்ளிப் போட்டு வந்த நான் ரசகுண்டு மாமாவைப் பார்த்ததும் கையினை வலித்துக்கொள்ளலாமென சட்டென முடிவுக்கு வந்தேன்.

ஆம், அவரை எப்படி மறக்க முடியும், எனக்கு ஏற்பட்ட சுளுக்குகளையெல்லாம் சுளுக்கெடுத்தவராயிற்றே!...

புன்னகைத்தவாறே என்னை நோக்கி வந்தார்.

‘மாமா சௌக்யமா’ என்றேன்.

‘டேய் படவா, தொப்பியை கழட்டு, கண்ணாடியைக் கழட்டு’ என்றார்.

வண்டியில் வெளியில் கிளம்ப, தலையில் தொப்பி, குளிர்க் கண்ணாடி என எல்லாம் அணிந்திருந்தேன்.

 தொப்பியைக் கழட்ட, புன்னகைத்து எனது கன்னத்தை அவரது இரு கைகளாய் மென்மையாய் வருட நினைத்தாலும் புத்திக்கு அழுத்தத்தைக் கொடுக்கும் அதீத போதையில் இருந்ததால், வருடினார்; சொரசொரப்பாய் வலித்தாலும் அதிலிருந்த அன்பு இதமூட்டியது.

 ’மாமா, தோள்பட்டையில் வலியிருக்கிறது, வலித்து விடுங்களேன்’ என்றேன்.

’உனக்கில்லாததா மாப்ளே, சாயந்திரம் வீட்டுக்கு வா’ என்றார்.

 மாலையில் அம்மாவிடம் விசாரிக்க, அவர் இங்கில்லையாம், காட்டில் இருக்கிறாராம் எனச் சொல்லி, நாகேஷ் தம்பியிடம் வலித்துக்கொள் என அறிவுறித்தியதோடு அவரை அழைத்து வரவும் என் அப்பாவை பணிந்தார்.

நல்லெண்ணெய் எடுத்து என் மகன் மாடியிலிருந்த எனது அறைக்கு மணியோசையாய்... பின்னால் அவர். சராசரி உயரம், உழைத்து உரம்பட்ட உடல், களையாய் கருமை கலந்த நிறம், கள்ளமில்லாத கண்கள்.

சட்டென என்ன, எப்படிகளுக்குப் பின் தனது திறமைகளைக் காட்ட ஆரம்பித்தார். உட்காரச் சொல்லி, எண்ணையைத் தடவி மெலிதாய் ஆரம்பித்து தனது திறமைகளைக் காண்பிக்க ஆரம்பித்தவர் வலியினைக் கொடுத்து வலியினைக் குறைக்கும் பணியினைத் தொடர்ந்தார்.

அவரிம் முறைகளையெல்லாம் கூட தனியே எழுதலாம், ஆனால் எழுத வந்ததன் நோக்கம் அதுவல்ல என்பதால் பேசியவைகளைப் பற்றி இங்கே...

’குழந்தைகளெல்லாம் எத்தனை’ என்றுதான் ஆரம்பித்தேன், அந்த நபரைப் பற்றி மேலும் பல பிரமிக்கும் விவரங்களை அறிந்துகொள்ளப்போவதன் அச்சாரமாய்.

’ஒரு பெண் குழந்தை தான், இரண்டு வயதாகிறது’ என சொன்னவரை கொஞ்சம் ஆச்சர்யமாய் பார்த்தேன்.

 ’ஆம், எனக்கு கல்யாணம் ஆகி இருபது வருடங்கள் ஆகிறது, குழந்தையே இல்லை, இப்போது தத்தெடுத்து வளர்க்கிறேன்’ என்றார்.

தத்தெடுத்து வளர்ப்பவர்களைக் கண்ணுற்று, சந்தித்தும் இருக்கிறேன், பெரும்பாலும் ஆண் குழந்தைகள் தான்.

மேலும் அவர் சொன்ன விவரங்கள் எனக்கு பிரம்மிப்பைத் தந்தன.

தன்னை நிறைய ஒருதலையாய் விரும்பிய தனது உறவுக்கார பெண்ணை, கோவிலுக்கு அழைத்துச் சென்று அதிரடியாய் திருமணம் செய்துகொண்டு மணக்கோலத்தில் இரு வீட்டாருக்கும் ஊராருக்கும் மெல்லிய அதிர்ச்சியைக் கொடுத்து, அவர்களின் ஆசிர்வாதங்களைப் பெற்றுத்தான் தனது இல்லற வாழ்வினை ஆரம்பித்திருக்கிறார்.

சொல்லிக்கொள்ளும்படியான சொத்து பத்தெல்லாம் இல்லை. அப்பா கடனேதும் வைக்காமல் கடனே என விட்டுவிட, உழைப்பு, நம்பி வந்த அன்பு மனைவி இரண்டும்தான் உறுதுணை.

கிராமத்து படிக்காத இளைஞர்களுக்கே உரித்தான எந்த ஒரு செயலையும் செய்யாமல், தனியனாய், தன் கருத்தொத்த சிலரோடு மட்டும் நல் உறவோடு வாழ்வினைத் தொடர்ந்திருக்கிறார்.

கடுமையான உழைப்பின் பயனாய் தங்குவதற்கொரு நல்ல வீடு, சிறிது நாளில் மற்றுமொரு வீடு, கையில் கொஞ்சம் பணம். எல்லாம் வந்து சேர்ந்தாலும் பிள்ளைச் செல்வம் இல்லை.

மருத்துவ முறைகள் எல்லாம் பின்பற்றி, சில லட்சங்களை செலவு செய்தாலும் தனது மனைவியின் கருப்பைக்கு ஒரு கருவினைத் தாங்காத சூழ்நிலை.

நண்பர்கள், உறவினர்கள், ஏன் மனைவியே இன்னொரு திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியும் காதில் வாங்கிக் கொள்ளாமல் மாற்று வழிகளை யோசித்து இறுதியாய் தத்தெடுக்கும் முடிவிற்கு வந்து, மனைவியை சமாதானப் படுத்தியிருக்கிறார்.

அது ஒன்றும் அவ்வளவு எளிதான செயலல்ல என்பது செயல்படுத்தலில் விளங்க, நிறைய அலைந்திருக்கிறார், சென்னை, பாண்டி, கோவை என.

இறுதியாய் சேலத்தில் ஒரு குழந்தை இருப்பதாய் அதற்கென உள்ள தரகர் மூலம் அறிந்து செல்ல, மூன்றாவதாய் பிறந்த பெண். கஷ்டத்திலிருந்த அவர்கள் கைமாற்ற தயாராயிருக்க, பத்தாயிரம் கொடுத்து ஐந்து நாள் ஆகியிருந்த அந்த அன்புச் செல்வத்தை உச்சிமோர்ந்து சொந்த மகளாக்கி, நிறைய சிரமப் பட்டு பாசத்தை ஊட்டி வளத்து, இன்று அகிலாவிற்கு இரண்டு வயதாகப்போகிறது.

ஒருவேளை என்றாவது பெற்றவர்கள் தேடி வந்துவிடுவார்கள் என்பதற்காக போலியான முகவரியை கொடுத்திருக்கிறார். பல சிரமங்களுக்குப் பின் நகராட்சியில் மகள் என பதிவு செய்து ஒரு வீட்டினை மகளின் பெயரில் எழுதி வைத்திருக்கிறார்.

‘என் வாழ்வே என் மகள் அகிலாவுக்குத்தான், அவளுக்காக எதையும் செய்வேன், படித்து பெரிய ஆளாக்குவேன்’ என்றெல்லாம் சொல்லச் சொல்ல. அவன்மேல், என்ன மரியாதை குறைகிறதே என நினைக்காதீர்கள், என்னுடன் இரண்டாவது வரை படித்தவன் என்ற முறையில் சொல்கிறேன், பெருமிதமாய் இருந்தது.

ஆம்,  எங்களது ஆசிரியர் குருமூர்த்தி அவர்கள் சம்மந்தமாய் ஒரு சம்பவத்தை பேசும்போதுதான் என்னுடன் இரண்டாவது படித்தது நினைவிற்கு வந்தது. இரண்டின் பின் தொடரவில்லை, இன்று எதையும் படிக்கத் தெரியாது.

அதன்பின் நாராயணனை அடிக்கடி பார்த்திருக்கிறேன், ஆனால் என்றும் பேசியதில்லை. ஆனால் எனது கைவலி ஒரு உன்னதமான நட்பினை, மனிதனை என்னோடு சேர்த்து வைக்க, வலி போய் ஒரு வலுவான நட்பெனக்கு இன்று...

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB