ஆசானும் டபுள் எஞ்ஜினும்...

|

பொள்ளாச்சியில் பரபரப்பு

‘ஸ்னேக் சிவக்குமார்’

உடுமலையில் வனச்சரகராக சிவகுமார் இருந்தபோது, மண்ணுளி பாம்பை வைத்து பலரை சிக்க வைத்து நடவடிக்கை எடுக்காதது போல் நாடகமாடி பணம் கறப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இதன் மூலம் இவர் லட்சக்கணக்கில் சம்பாதித்துள்ளது வனத்துறையினர் அறிந்த விஷயமாம். இவருக்கு ‘ஸ்னேக் சிவக்குமார்’ என்கிற அடைமொழியும் உண்டாம். இவரது மோசடியில் பாதிக்கப்பட்ட பலர் எழுத்துப்பூர்வமாக புகார் கொடுக்காததால் தப்பி வந்துள்ளார். இம்முறை சிக்கியுள்ளார்.

கொஞ்சம் பத்திரிக்கைச் செய்திகளை மேய்ந்தபோது இந்த விஷயம் கண்ணில் பட நகைப்பாய் இருந்தது, இரு விஷயங்களால். ஒன்று என் அன்பு ஆசானால் எனக்கு வழங்கப்பட்ட பட்டப்பெயர் ஸ்நேக் பிரபா. அதன் காரணத்திற்கான அவரின் அவரின் கலாய்க்கப்போவது யாரு - 2 இடுகையில் எழுதியிருப்பதைப் பாருங்களேன்.

பிரபா: அப்ப நான் மாமா பொண்ண ஒரு தலையா லவ் பண்ணிட்டிருந்த நேரம். சங்க காலத்துல காளைய அடக்குறது, இளவட்டக்கல்லு தூக்குறது மாதிரி மாமா பொண்ணு ஒரு பாம்ப புடிச்சி கொண்டா. அப்பதான் லவ் பண்ணுவேன்னு சொல்லிட்டாப்ல. என்னடா இப்படி சொல்லிபுட்டான்னு கலவரமாயிடிச்சி. வேல்முருகன் சொன்னாப்ல, பாம்புன்னுதான  சொன்னா. அனகொண்டான்னு சொல்லலையே. ஆத்துக்கு போய் தண்ணி பாம்ப புடிச்சிடலாம்னு சொன்னாப்ல.

சரின்னு நான், வேல்முருகன்,ராஜு, எல்லாம் ஆத்துக்கு போனோம். அங்க ஒரு பொண்ணு லவ் ஃபெய்லூய்ர்ல தண்ணில முழுகிடிச்சி. நான் காப்பாத்துங்கன்னு கத்தி, அக்கம்பக்கதுல எல்லாருமா சேர்ந்து கரைல போட்டாங்க. நான் சினிமால பார்த்தத கவனம் வெச்சி, வயத்த அமுக்கி தண்ணிய வெளிய எடுங்கன்னேன். 

இதாண்டா சாக்குன்னு வயசு பசங்க அத்தன பேரும் பாஞ்சி அமுக்குனதுல அதுக்கு மூச்சு நின்னு போச்சு. வாயோட வாய் வெச்சி ஊதுனா மூச்சு வரும்னேன். நீ செய் பிரபான்னாங்க. இல்ல! மாமா பொண்ண லவ் பண்ணாதவங்கதான் பண்ணனும்னேன். நாந்தான் நாந்தான்னு ஒருத்தனுக்கு ஒருத்தன் அடிச்சிகிட்டதுல அந்த பொண்ணு செத்து போச்சு.

ஃப்ரெண்ட்ஸ்ங்கெல்லாம் ஓட்டிடாங்க. ஊர்க்காரங்கள்ளாம் சேர்ந்து என்னாலதான்னு என்ன மரத்துல கட்டி போட்டுடாப்ல , சாவு எடுக்கற வரைக்கும். அப்புறம் ஆத்துக்குள்ள அளைஞ்சி ஒரு பாம்ப புடிச்சிட்டு மாமா பொண்ணு எனக்குதான்னு தெம்பா போனேன். எனக்கு முன்னாடி சித்தப்பா பையன் ஒரு ரப்பர் பாம்ப காட்டி மடிச்சிட்டாப்ல. அதாவது பரவாயில்ல நான் கொண்டு வந்தது மண்புழுன்னு போட்டு குடுத்துட்டாப்ல. அந்த கதைய அடுத்த எபிசோட்ல சொல்றேன்.



(ஆசான் இடுகை போட்டுடுங்க, இல்லன்னா இது மாதிரி நான் உங்க இடுகையைக் காப்பியடிச்சி போட ஆரம்பிச்சிடுவேன்)

இதைவிடவா ஸ்நேக் சிவக்குமார் மேட்டர் சுவராஸ்யமாக இருக்கிறது? இரண்டாவது காரணம் இந்த ம. பாம்பு விஷயமாய் எனக்கும் என் தம்பிக்கும் இடையே நடந்த ஒரு சம்பவம்.

சரியாய் ஒரு வருடம் முன்பு ஊருக்கு சென்றிருந்தபோது திவாகர் நிறைய டென்ஷனாய் இருந்தான். துருவித் துருவி விசாரித்தும் காரணம் சொல்லவில்லை. அடிக்கடி போனில் பேசுவது, மெலிதாய் சிரிப்பது, யாருக்கோ அறிவுரை சொல்வது என அவனது போக்கு மர்மமாய் இருந்தது. கொஞ்சம் கோபித்துக்கொள்வது போல் அவனைத் திட்ட, விஷயம் வெளியே வந்தது. எங்கள் சித்தி மகன் 'டபுள் டெக்கர்' டீலில் மாட்டியிருப்பதாயும் அது சம்மந்தமாய் அவன் சொல்வதைக் கேட்காமல் இருப்பதாயும், அவனுக்கு ஏதாவது ஆகிவிடுமோ எனும் பதபதைப்பில் பேசிக்கொண்டிருப்பதாயும் சொன்னான்.

டபுள் டக்கரா என்றதற்கு இரண்டு பக்கமும் தலை உள்ள மண்ணுளிப்பாம்பு எனவும் அதன் எடைக்கேற்றவாறு ஃபோர் சி, பைவ் சின்னு சொல்லிக்கொண்டிருக்கிறான் எனவும் சொன்னான். சி என்றால் க்ரோர்..., கோடியாம். ஒரு டபுள் டெக்கர் கிடைத்ததாகவும் வெயிட் பார்த்து அதை இரண்டு சி-க்கு முடித்திருப்பதாகவும் தகவல். மேலும் அதை மொபைல் போனில் எடுக்க அதில் படமே விழவில்லை அது பற்றி பல தகவல்கள் மூர்ச்சையாக்கும்படி இருந்தன. அந்த ம.பாம்புக்கு சரியான கவனிப்பாம், முட்டை, பால் என. இடையிடையே அந்த ம.பாம்பு சரியாக ஆக்டிவ் இல்லை, அது இது என புரளி, அதை வாங்குவதற்கு கேரளாவிலிருந்து ஆட்கள் சுமோவில் எங்கு வந்து கொண்டிருக்கிறார்கள் என லைவ் ரிலே வேறு.

அடுத்தமுறை பேசும்போது என்னிடம் போனைக் கொடு எனச் சொல்ல 'அண்ணா அவனைத் திட்டக்கூடாது, நைசாக் கேளு' என்ற உத்திரவாதத்துடன் திவா கொடுத்தான். எப்படி இருக்கிறாய் என ஆரம்பித்து அண்ணன் வந்து இரண்டு நாள் ஆச்சு ஒரு போனும் இல்ல எனக் கேட்டதுக்கு பிசியாய் இருப்பதாய் சொல்லி அவனாகவே விஷயத்தைச் சொல்லி இன்னும் த்ரீ அவர்ல டெலிவெரி, ரெண்டு குரூப் வேலை பாத்துகிட்டிருக்கோம், எனக்கு டொன்டி பைவ் எல் கிடைக்கும்' என உளறிக்கொட்டினான்.

பார்த்து ஜாக்கிரதை என அறிவுறுத்தினேன். இரண்டு நாள் இழுக்கடித்து அப்புறம் ஒரு வாரம் கழித்துத்தான் ஏமாற்றப்பட்டதாய் உணர்ந்தான். இப்போது அவனது வேலையினைப்பார்த்துக்கொண்டு அமைதியாய் இருக்கிறான்.

இந்தமுறை தம்பியின் காரியமெல்லாம் முடித்து சிங்கை வருமுன் வீட்டிற்கு வந்த அவனிடம் என்னடா ஆச்சு டபுள் டெக்கர் எனக்கேட்க, ‘ஏன்னா அதப்பத்திக் கேக்கற, அதெல்லாம் விட்டாச்சு. ஆனா இப்போ வெள்ளிமலை தகடு இருக்கு... எனக்கு அதில இண்ட்ரஸ்ட் இல்ல’ என ஆரம்பிக்க மூர்ச்சையானேன்.

எங்கள் ஊர் சினிமா...

|

சிறு வயதில் நடந்த விஷயங்களை நினைவு கூர்ந்தால் மனதிற்கு இதமாயும் மயிலிறகால் வருடுவதுபோன்று ஒரு சுகமான அனுபவமாயும் இருக்கும். இன்று திரும்பத்திரும்ப ஒரே நகைச்சுவைக்காட்சிகளை, திரைப்படங்களை, பாடல்களை பல சேனல்களில் பார்க்கும்போது மனதுக்குள் ஒரு வெறுப்பு சேர்ந்துகொள்ள,  சிறுவயதில் சிறிதளவே பார்த்தாலும் சினிமா நம்மை எப்படியெல்லாம் ஏங்க வைத்திருக்கிறது என மனம் ஒப்பீடு செய்ய ஆரம்பித்துவிடுகிறது. கிடைத்திட்ட இந்த ஓய்வு நேரத்தில் அசைபோட்டு சினிமா சம்மந்தமான சில விஷயங்களை உங்களோடு பகிர்ந்துகொள்ள... இதோ எழுத ஆரம்பிக்கிறேன்.

சினிமா பார்க்கப் போகிறோம் என்றாலே மனமெல்லாம் பட்டாம்பூச்சி பறக்க ஆரம்பித்துவிடும். சினிமா அப்போதெல்லாம் மாய வார்த்தை. அதைவிட அதீத சந்தோஷம் அத் தருணத்தில் கிடைத்ததில்லை. பெற்றோரிடம் அதற்கு அனுமதி பெற்று காசு வாங்குவதைப்பற்றி தனி இடுகையாகவே எழுதலாம்.

கிராமங்களில் தெருக்கூத்துக்களும், நாடகங்களும் உயிரோட்டமாய் இருந்தது. சுகாதாரமான சூழலில் குறைவான மக்கள், ஆடம்பரமே இல்லாத வாழ்க்கை வாழ்ந்து நாகரீகத்தின் பிடியில் சிக்கிக் கொள்ளாத மனிதம் அதிகம் இருந்த தருணம். தகவல் தொடர்புக்கு கடிதமும் தந்தியும் கோலோச்சிக்கொண்டு, தபால்காரர்கள் மிகவும் போற்றப்பட்டும், பத்திரிக்கைகள் வானொலிகள் தரும் தகவல்தான் உண்மை என முழுமையாய் நம்பிக்கொண்டிருந்த காலம். பெரியவர்கள் புராண இதிகாசங்களைப் படித்தும் பலருக்கு சொல்லியும், வலுக்கட்டாயமாய் கதைகளைத் திணித்தும், நாங்களும் மிக ஆர்வமாய் கேட்ட சமயம்.

அந்த நாட்களில் நெல்லினை உரலில் குத்தி, தீட்டிப் புடைத்துதான் தினமும் பல குடும்பங்களில் உலை வைப்பார்கள். வசதியானவர்களின் வீட்டில் மட்டுமே மூன்று வேளை அரிசி சோறு,  சைக்கிள், வால்வு ரேடியோ என இருக்கும். குறைந்த பட்சம் பத்து கிலோ மீட்டருக்கு ஒரு தியேட்டர், ஊரில் பொருட்களை வாங்குவதற்கு இரண்டு தெருவுக்கு ஒரு செட்டியார் கடை.

எங்கள் ஊரில் வேல்முருகன் தியேட்டரும், தாத்தா வீட்டிலிருந்து படித்ததால் அருகில் மல்லியகரையில் அண்ணாமலை தியேட்டரும் மிகவும் பரிட்சயம். அவைகளில் படம் போடுவதற்கு முன் கடைசி ரெக்கார்டாக வேல்முருகனில் ‘சந்தனம் மணக்குது... கற்பூரம் ஜொலிக்குது...’, அண்ணாமலையில் ‘திருப்பதி மலை வாழும் வெங்கடேசா...’ எனும் பாடல்களை ஒலிக்க விடுவார்கள். பார்க்காத படம் ஓடும் தருணங்களில் இயல்பாகவே மனம் ஏங்க ஆரம்பித்துவிடும். பார்த்த படமென்றால் என்ன சீன் ஒடும் என மனம் அதன் பின் கணக்குப்பண்ண ஆரம்பித்துவிடும்.

பாதி பாடல் தான் வெளியில் கட்டியிருக்கும் ஆர்னில் ஒலிக்கும். (சில நாட்களில் டேய்... கடைசி பாட்டு போட்டுட்டாண்டா என ஓடி சென்று வேகமாய் இடம் பார்த்து தடுமாறி அமர்வோம். எழுத்துப் பிக்சரில் இருந்து படம் பார்த்தால் தான் படம் பார்த்ததாய் அர்த்தம்) வெளியில் இருந்து பாடலை உள்ளே மாற்றி கொஞ்ச நேரத்தில் ட்யூப் லைட்டுகளை அணித்து அடுத்து குண்டு பல்புகளை(எங்கள் ஊரில் இன்னமும் அப்படித்தான் சொல்லுவோம்) அணைத்து வெண் திரையில் படத்தினைப் பார்க்கும் வரை இருக்கும் பரபரப்பு இருக்கிறதே... சொல்ல வார்த்தைகளில்லை.

தரை டிக்கெட் ஐம்பது பைசா, கொட்டியிருக்கும் மணலில்; பென்ச் எழுபது பைசா, மண்ணாலான சுவற்றின் பின்னால் வரிசையாய் இருக்கும் பென்சுகளில்; சேர் ஒரு ரூபாய், தனித்தனியான மரத்தாலான சேர்களில் அமர்ந்து பார்த்தல் என இருக்கும். எப்போது நாம் தரை டிக்கெட் தான். சண்டை, பாடல் காட்சிகளில் விசில் தூள் பறக்கும். குறிப்பாய் எம்.ஜி.ஆர் படங்கள் என்றால் அடுத்த இரு நாட்களுக்கு காதுகளில் வலியும், ஒலியும் இருந்துகொண்டே இருக்கும். சிவாஜி படங்கள் அழுகாச்சியாய் இருக்கும் என பெரும்பாலும் தவிர்த்துவிடுவோம். ஜெய்சங்கர், எம்.ஜி.ஆர் படங்களைப் பார்த்து அதன்படியே ஆற்றில் சண்டையிடுவோம், கதாநாயகன் வில்லன் என மாற்றி மாற்றி.

எம்.ஜி.ஆர் படங்கள் தான் அதிக நாட்கள் ஒடும், திரும்பத்திரும்ப பார்க்கும் ரசிகர்கள் மிக அதிகம் என்பதால். புதிதாய் வெளியான படங்கள் எங்கள் ஊருக்கு வர பல வருஷங்கள் ஆகும். புது படங்களை ஆத்தூர் போன்ற டவுனில் தான் பார்க்கமுடியும்.

ஞானமொழி அக்கா எங்கள் ஊர் தியேட்டரில் வெளியான முதல் படம் கந்தன் கருணையிலிருந்து நெடுநாட்கள் வரை தவறாது குறித்து வைத்துக்கொண்டு வந்தார். அவர்களின் வீட்டு சுவற்றில் பட போஸ்டர் ஒட்டுவார்கள். போஸ்டர் ஒட்ட அனுமதிக்கும் வீட்டைச் சேர்ந்தவர்களுக்கு ஒரு டிக்கெட் இலவசம், மற்றும் சிறப்பு அனுமதி.

இன்றே கடைசி என பார்த்துவிட்டால் அடுத்த படம் என்ன என்பதைத் தெரிந்து கொள்ள ஆவலாய் இருப்போம். போஸ்டர் ஒட்டும் அண்ணன் வீட்டுக்கு சென்று கேட்டால் அவர் இல்லாத படம் காட்டி கடைசியாய்...சொல்ல மாட்டார். நாளைக்கு காலையில் பார்த்துக்கொள்ளுங்கள் எனச் சொல்லி.

வெட்டிப் போட்ட பிக்சர்களை சேர்த்து வைத்திருப்போம். நிறைய நடிகர்கள், நடிகைகளின் பிக்சர்களை யார் வைத்திருக்கிறார்களோ அவர்கள் தாம் எங்களுக்குள் பெரிய ஆள்.

இந்த இடத்தில் என்னுடன் ஒன்பதாவது வரை படித்த ஜோசப் நினைவிற்கு வருகிறான். அவனுக்கு சிவாஜி என்றால் ரொம்ப பிடிக்கும். அது இது எனத்தான் சொல்வான். அது வந்துச்சா, உடனே வாணிஸ்ரீ வருமா... என பார்த்த சினிமாவைப் பற்றி அப்படியே பார்த்த நேரத்தைவிட அதிக நேரம் எடுத்துக்கொண்டு ரசித்து சொல்லுவான். தென்றலே என்னைத்தொடு படத்தின் ‘புதிய பூவிது பூத்தது...’, ‘கண்மனி நீ வரக் காத்திருந்தேன்’ பாடல்களை பாட்டுப்புத்தகங்களை வைத்துக்கொண்டு ஆண் மற்றும் பெண் குரலில் மாற்றி மாற்றி பாடிக்கொண்டிருப்போம்.

இதுபோல் நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். அப்போது கிடைத்திட்ட அந்த குதூகலம் சத்தியமாய் இன்று இல்லை. அதிக வசதியில்லாமல் ஏங்கி இருந்த தருணமல்லவா அது...

விஞ்ஞான வளர்ச்சிக்குத்தான் விலையாய் நாம் எத்தனை விஷயங்களைப் பலி கொடுத்திருக்கிறோம்? அன்றிருந்த மனித நேயம் இன்றிருக்கிறதா? உறவுகளுக்கிடையேயான நெருக்கம் இருக்கிறதா?...

அன்று குறைவான தகவல் தொடர்பு முறைகள், வசதி வாய்ப்புக்கள் ஆனாலும் நிறைவான வாழ்க்கை. இன்று எல்லாம் இருந்தும் ஏதோ ஒன்றை இழப்பதாய் இல்லை?...

நாடு உறுப்படுமா?...

|

முதலிலேயே இரு விஷயங்களை சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன். இது சத்தியமாய் கதிரின் இடுகைக்கு எதிர் இடுகை கிடையாது. அடுத்து நமக்கு சுத்தமாய் அந்த பழக்கம் கிடையாது (வேலிக்கு ஓனான் சாட்சி என்பதுபோல் இது கதிருக்கும் தெரியும்).

ஆனாலும் பாதிக்கப்படுற ஒரு இனத்துக்காக குரல் கொடுக்காமல் இருந்துட்டால் இந்த உலகம் நம்மை பழித்து ஒதுக்கிவிடுமோ என அஞ்சி இதோ என் பங்குக்கு ஒரு இடுகை.

வீட்டில் என்றுமே சம்பாதிக்கும் நபருக்குத்தான் அதீத மரியாதை என்பது எல்லோருக்கும் தெள்ளெனத் தெரியும். அவர்களுக்கென வெந்நீர் வைத்து தருவதிலிருந்து, யாருக்கும் இல்லாமல் கெட்டிச் சட்டினியுடன் இட்டிலி தோசை, மாலை வேளைகளில் தின்பதற்கு நொறுக்குத்தீனி, இரவு படுக்கப்போவதற்கு முன் பால்... என சொல்லிக்கொண்டே போகலாம்.

வீட்டில் இருக்கும் கவனிப்பு நாட்டில் ஏன் இல்லை. இது ஓர வஞ்சனை அல்லவா? தமிழக அரசு இத்தனை இலவசங்களை அள்ளித் தெளித்து மக்களை இவ்வளவு சொகுசாய் வைத்திருக்க மூல காரணம் என்ன என்பது எல்லோருக்கும் தெரியும். நெற்றி வேர்வை சிந்தி உழைக்கும் இவர்கள் தரும் பணத்தில்தான் எல்லாமே நடக்கிறது என்றால் மிகையில்லை.

அப்படிப்பட்ட வருமானத்தைப் பெருக்கக் கூடிய, வாரி வழங்கும் வள்ளல்கள் இருக்கும் அந்த நேர்மையான கூட்டத்திற்கு, மன்னிக்கவும் குழுமத்துக்கு நாமெல்லாம் மனப்பூர்வமான ஆதரவினை அளிக்க வேண்டும். அதை விடுத்து அவர்களை கண்டிப்பதுபோல் நினைப்பதே சரியில்லை எனும் கருத்தை வலியுறுத்தி.... அய்யய்யோ அடிக்க வராதீங்க... சும்மா ஏதாச்சும் எழுதனுமேன்னு....

டிஸ்கி: இது எங்கள் ஊரிலெல்லாம் இது மாதிரி போஸ்டர் ஒட்டறதில்லையே என்ற பொறாமையில் எழுதியது அல்ல... என சொல்லலாம் என்று சொல்ல நினைக்கும் போது அரிச்சந்திரன் குறுக்கீடு செய்வதால் ஆம்...

நினைச்சதும்...நடந்ததும்.

|

விரை ஒன்னு போட்டா சுரை ஒன்னா முளைக்கும்னு பழமொழி சொல்லுவாங்க. சில பேரை சின்ன வயசுல அவங்க பழக்க வழக்கத்த வெச்சே பின்னால என்னாவா வருவாங்கன்னு சொல்ல முடியும். அதுக்காக எல்லாம் அப்படியே நடக்கும்னு சொல்ல முடியாது, தப்பவும் செய்யும், மொளைக்காம போயிடுமில்ல அந்த மாதிரி.

என்னோட பால்ய நண்பன், என்னோட படிச்ச வேலு ரொம்ப நல்லா படிப்பான். கிளாஸ் ஃபர்ஸ்ட் அவன் தான். கணக்குப்பாடத்துல நூறுக்கு கம்மியா எடுத்ததே இல்ல. எழுத்து முத்து முத்தா அழகா இருக்கும். ஏன் இதை சொல்றேன்னு கடைசியில சொல்லுறேன்.

ஒரு நாள் ஆறாவது படிக்கிறப்போ சைன்ஸ் அய்யா எல்லாத்தயும் என்னவா எதிர்காலத்துல வரனும்னு ஆசைப்படறீங்கன்னு ஒவ்வொருத்தரா கேட்டுட்டு வந்தாரு.

’கண் கண்ணாடி போட்டுக்கனும்னு’ பாப்பாத்தி சொல்ல, ‘எழவ, அது கண்ணு தெரியாம போட்டுக்கிறது. இதுதான் உன் லட்சியமா? பாடத்துலதான் ஒழுங்கா பதில் சொல்ல மாட்டே, இதிலேயுமா?’

‘படிச்சி, அக்கா மாதிரி டவுன்ல இருக்கிற மாப்பிளைய கல்யாணம் பண்ணிக்கனும் சார்....’ கனகா. ‘உருப்பட்ட மாதிரிதான், உக்காரு’.

டாக்டர், வக்கீல், டிரைவர், விமானம் ஓட்டனும்-னு ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி சொன்னாங்க. ‘இந்த வருஷம் மொதல்ல பாஸ் பண்ணனும் சார்’ சுப்ரமணி. ’ஆஹா, இதுதான்யா நிசம்’

அடுத்த எழுந்த வெங்கடேசன் அதே பதில சொல்ல, ’கழுத, இங்கயும் காப்பியடிச்சித்தான் சொல்லனுமா? சொந்தமா யோசிக்கவே மாட்டியா?’

முத்துசாமி ’சார் நான் பிரதம மந்திரியாகனும்’ சொன்னவுடன் எல்லாரும் கொல்லுனு சிரிச்சோம். ‘நடக்கற மாதிரி கனவு காணுப்பா!, இருந்தாலும் இவ்வளவு தைரியமா சொல்றியே, அதுக்கே உன்னை பாராட்டனும்’

என்னோட முறை வந்ததும், ‘நிறைய படிக்கனும், நிறையா கதை எழுதனும் சார்’னு சொன்னேன். ‘சரி, மொதல்ல படிச்சி நல்ல மார்க் எடுக்க முயற்சி பண்ணு, அதெல்லாம் தானா நடக்கும்’

நம்ம வேலு எழுந்தரிச்சான். ‘டைரக்டர் ஆகனும், சினிமாவுல சேரனும்’. ‘ஆஹா, உங்க அப்பா எஞ்சினீயர், டாக்டர்னு நினைச்சிக்கிட்டிருக்காரு, சினிமாவா? வெரி குட்’

இதோட எஃபக்ட் ராத்திரி அவனோட அப்பா விளாசின விளாசல்ல தெரிஞ்சது. ஆனாலும் அவன் அசந்ததா இல்ல. சினிமா மேல ஒருமோகம் இருந்துகிட்ட இருந்துச்சி. அவனோட சினிமா சம்மந்தமான விஷயங்கள இன்னொரு இடுகையில பார்க்கலாம்.

இப்போ யோசிச்சிப் பார்த்தா சொன்னதில பெரும்பாலும் நடந்திருக்கு. நடக்காதத விட்டுட்டு நடந்தத மட்டும் பார்த்தா, பாப்பாத்தி கண்ணாடி போட்டிருக்கு, கனகா லோக்கல்ல கல்யாணம் பண்ணினாலும் இப்போ டவுன்ல இருக்கு. சுப்பிரமணி தப்பித்தவறி பாஸ் ஆயிட்டாரு(அப்பவே பெரிய ஆளு மாதிரி மீசையோட இருப்பாரு. ஒவ்வொரு க்ளாஸ்லயும் கோட்டு அடிச்சி வந்ததால), பிரதம மந்திரின்னு சொன்ன முத்துசாமி இப்போ வார்டு மெம்பர், நான் ஏதோ எழுதிட்டிருக்கேன், வேலு சினிமாவில இருக்கான்.

மொதல்ல வேலுவப் பத்தி சொன்னதுக்கு பதில். சென்னையில இருந்தப்போ அவன் வீட்டுல தான் தங்கியிருந்தேன். அவன் பையன் ஹரீஷ் கையெழுத்து வேலுவைப்போலவே அழகா இருந்துச்சி. என்னவா வரனும்னு ஆசைன்னு கேட்டதுக்கு, அப்பா மாதிரி இல்லாம பெரிய கம்ப்யூட்டர் எஞ்சினியரா வரனும்னு சொன்னான்!

நீதி : சின்ன வயசில நினைக்கிறது நடந்தாலும் நடந்துடும்... ரொம்ப உயர்வாவே நினைக்கச் சொல்லுவோமே, நம்ம வாரிசுங்கள!

சென்னை...மூன்று நட்புக்கள்...

|

தம்பியின் இழப்பின் பின் வீட்டில் இருக்கவே முடியாத இறுக்கமான சூழல். இருந்த விடுமுறைகளையெல்லாம் ஏற்கனவே எடுத்திருந்த சூழ்நிலையில் சென்னையிருந்து வேலை பார்க்க அனுமதி கேட்க, உடன் கிடைத்தது.

மூன்று வாரம் வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். அத் தருணத்தில் பதிவுலகை விட்டு விலகியிருந்தாலும் பதிவுலகை சார்ந்தோரிடன் கொஞ்சம் தொடர்போடுதான் இருந்தேன். அய்யா அவர்களை தினமும் பார்க்கவேண்டும் என எண்ணம் தோன்றும், ஆனால் சூழ்நிலை என்னை கட்டிப்போட இயலாது போனது. 

அமெரிக்கா செல்ல தாமதமான காரணத்தால் தினேஷ், என் ஆசான், சேம்பிளட் என என் மேல், என் நலனின் மேல் அதீத அக்கரை கொண்ட மூன்று நல் இதயங்களை சந்தித்து எனது சோகத்தின் தாக்கத்தை குறைத்துக்கொண்டேன். 

பார்க்கவேண்டியவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். ஏற்கனவே பார்த்திருக்கும் மணிஜீ, கேபிள் அண்ணா, பட்டர்பிளை சூர்யா, லக்கி, பார்க்கத்துடிக்கும் ராதாகிருஷ்ணன் அய்யா, நர்சிம், சகா, முரளி, வாசு, புலிகேசி, ஜெய், அப்துல்லா அண்ணா, ஆதி, எறும்பு ராஜகோபால், உண்மைத்தமிழன் அண்ணன், அதிஷா, .... இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். கண்டிப்பாய் அடுத்த முறை நல்லதோர் மனநிலையில் சந்திக்க ஆர்வமாயிருக்கிறேன, சந்திப்போம்.

களவானி படத்தை தினேஷ் மற்றும் அவரது நண்பர்களுடன் பார்த்தது மிக வித்தியாசமான அனுபவமாயிருந்தது. உண்மையில் என் மனநிலை மாறுவதற்கு அவருடன் இருந்த அந்த கொஞ்ச நேரமும் பெரிதும் உதவியாயிருந்தது.

அய்யாவின் அறிவுரைகள், அவர் அலுவலத்தில் நடந்த நெடும் சந்திப்பு, பின் ஷங்கரும் சேர்ந்து கொள்ள பேசிய விஷயங்கள் என நிறைய மனதிற்கு இதமான விஷயங்கள் நடந்தன.

சேம் பிளட்டோடு அதிக நேரம் பேச இயலவில்லையே எனும் ஆதங்கம் இன்னும் இருக்கிறது. அடுத்த முறை நிவர்த்தி செய்துவிடுவோம்.

சந்திப்பின்போது அவர்களை எனது ஐ போனில் எடுத்த படங்கள் கீழே. கிளிக் செய்து பார்க்காதீர்கள், உள்ளவாறே பாருங்கள். 

 

என் ஆசான்...


என் ஆசானோடு நான்...


தினேஷோடு நான்...


தினேஷும் நிடினும்...


அய்யாவும் ஷங்கரும்...


ஷங்கர்...


நானும் தினேஷும் மாயாஜாலில்...


ஆசானும் பலா ஷங்கரும்...


ஆசானும் நானும்

காமிக்ஸ் பிரபாகர்...

|

இருவேறு நபர்கள் சந்தித்துக்கொண்டபோது ஒருவர் மற்றொருவரை என்ன ஊர் எனக்கேட்டிருக்கிறார். சேலம் என சொல்ல, பக்கத்தில் என்ன ஊர் எனக்கேட்க, ஆத்தூர்... அட... பக்கத்தில என திரும்பவும் கேட்க தெடாவூர் என சொல்லவும், ஆஹா..., உங்களுக்கு காமிக்ஸ் பிரபாகரைத் தெரியுமா?

கேட்டது என்னோடு ஆறு முதல் ஒன்பது வரை மல்லியகரையில் படித்த, சினிமாவில் சிறு வேடங்களில் நடித்து வரும் முரளி(ஈ படத்தில் வரும் போலீஸ், இப்போது வரப்போகும் படங்கள் பத்தில்... அம்பானியில் இருப்பதாய் சொன்னான், பார்க்கவேண்டும்). பதில் சொன்னவன் சினிமாவில் இயக்குனராய் இருக்கும் என் பால்ய, அன்பு நண்பன் வேலு (தற்சமயம் தெக்கத்தி பொண்ணு சீரியலின் எபிசோட் டைரக்டர் + வில்லன்).

ஆம், சிறு வயதில் அந்த அளவிற்கு காமிக்ஸ் எனது நிகழ்வினில் இரண்டற கலந்திருந்தது! முத்துகாமிக்ஸ் தான் மிகவும் பிரியமான ஒன்று. இரும்புக்கை மாயாவி, லாரன்ஸ் டேவிட் என சொல்லிக்கொண்டே போகலாம்.பின் லயன் காமிக்ஸ் கலக்க ஆரம்பித்தது. செலவுக்கு தரும் காசினையெல்லாம் சேமித்துவைத்து காமிக்ஸ் வாங்கி படிப்பேன்(போம்).

நண்பர்களுக்குள் காமிக்ஸ் பண்ட மாற்ற முறையில் தான் கிடைக்கும். ஐந்து ரூபாய் மதிப்புள்ள காமிக்ஸ் படிக்கக் கொடுத்தால் பதிலுக்கும் அதே விலையுள்ள வேறு கிடைக்கும். காமிக்ஸ் நிறைய யார் வைத்திருக்கிறார்களோ அவர்கள் தாம் மிகவும் பெரிய ஆள் என்பது எங்களின் எண்ணமாயிருந்தது.

சாமியிடம் இதுவரையிலும் வந்த வரப்போகிற காமிக்ஸ் எல்லாம் எனக்கு அப்படியே கிடைக்கவேண்டும் என வேண்டுவது வழக்கமான ஒன்றாக இருந்தது. நாவல்களைப் படிக்க ஆரம்பிக்கும் வரை காமிக்ஸ்தான் முழுதாய் ஆக்கிரமித்திருந்தது.

காமிக்ஸ் படிப்பதில் ஆரம்பித்த படிக்கும் வேட்கை இன்றும் தணியாமல் இருக்கிறது. இன்று எழுதுவதற்கும் அதுதான் தூண்டுகோலாய் இருக்கிறது என்றால் மிகையில்லை. கற்பனைத்திறன் பெருகுவதற்கும், ஒரு துடிப்பு, வேகம் தொடர்ந்து இருக்கவும், நினைவாற்றல் வளர்வதற்கும் காமிக்ஸ் பெரும்பங்கு வகித்தது. இந்த இடுகை கூட நான் ஒரு காமிக்ஸ் வாங்க பட்ட பாட்டினை சொல்வதற்காகவே.

நான்காம் வகுப்பு முழு ஆண்டு விடுமுறையினை சொந்த ஊரில் கழித்து தாத்தா வீட்டிற்கு செல்வதற்காக ஆத்தூர் வந்திருந்தேன். ஐந்து ரூபாய் செலவுக்கு கொடுத்திருந்தார்கள். ஆத்தூர் வரை ஒரு ரூபாய் எழுபத்தைந்து, தாத்தா வீட்டிற்கு செல்ல முப்பத்தைந்து காசுகள். கையில் இருப்பது இரண்டு தொன்னூறு. என்ன செய்யலாம் என எண்ணி புத்தகக் கடையினை பார்க்க பார்க்க பரவசமடைந்தேன்.

அப்போதுதான் வந்திருந்த ‘காற்றில் கரைந்த கப்பல்கள்’ எனும் லாரன்ஸ் டேவிட்டின் முத்து காமிக்ஸை வெளியில் மாட்டிக்கொண்டிருந்தார்கள். ஆர்வமாய் விலையைப் பார்க்க பகீரென இருந்தது, மூன்று ரூபாய். பத்து பைசா குறைவாய் இருக்க என்ன செய்ய என் யோசித்த வண்ணம் இருந்தேன்.

வந்த உடனேயே பரபரப்பாய் விற்பனை ஆக ஆரம்பித்தது. பதினைந்து, பத்து என கடைசியாய் நான்கில் வந்து நின்றபோது கடைக்காரரிடம் விஷயத்தைச் சொல்லி பத்து காசினை அடுத்தமுறை தருகிறேன் எனச் சொல்ல கிடைக்கிற லாபமே அவ்வளவுதான் என விரட்டிவிட்டார். அவரிம் கெஞ்சி ஒரு புத்தகத்தை மட்டும் எடுத்து வைக்கச்சொன்னேன். அதன் பின் பலமான யோசனையுடன் தெரிந்தவர் யாரேனும் மாட்டுகிறார்களா என பார்த்துக்கொண்டிருந்தேன்.

அப்போது சேலம் செல்லும் பேருந்துகள் நிற்கும் இடத்திலிருந்து ஒரு குரல் எனக்கு பழக்கப்பட்டதாய் இருக்க மெதுவாய் அங்கு சென்றேன். எங்கள் பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் எல்லோரும் அவரை ’ஏய் கேனயா’ எனத்தான் கூப்பிடுவார்கள். லொட லொட என ஏதாவது பேசிக்கொண்டே இருப்பார். அவரை கேனையா எனக்கூப்பிட்டால் அடிக்க வருவார், மாமா என கூப்பிடச் சொல்வார். அதற்கும் கேனையா என சொல்லி ஓடி வந்துவிடுவேன்.

கூவி அழைத்து பேருந்தில் ஏற்றிக்கொண்டிருந்தார். மெதுவாய் அவரிடம் சென்றேன். முதன் முறையாய் அவரை ‘மாமா’ என்றழைக்க அவருக்கு பயங்கரமான சந்தோஷம். ’பிரபு என்ன இங்கே’ எனக்கேட்க ஊருக்குத்தான் செல்கிறேன் என சொன்னேன்.

’மாமா ஒரு பத்து காசு வேணும், பஸ்ஸுக்கு கம்மியா இருக்கு’ என சொல்ல உடனே ‘யோவ் ஸ்ரீதரன் கண்டக்டர் ஒரு இருவது பைசா கொடு’ என சட்டென வாங்கி என்னிடம் கொடுத்தார். ஓடிச்சென்று காமிக்ஸையும் பத்து பைசாவுக்கு மிட்டாயும் வாங்கிக்கொண்டு சந்தோஷமாய் சென்றேன்.

விளையாடிவிட்டு வந்தவுடம் ஆயாவிடமிருந்து சப்பென முதுகில் ஒரு அடி. வீட்டிற்கு வந்த அவர் என் ஆயாவிடம் இருபது பைசா கொடுத்ததை பெருமையாய் சொல்லியிருப்பார் போலிருக்கிறது. காரணம் கேட்க, சொல்லவும் ‘இந்த மாதிரி வாங்கி கதை புத்தகம் வாங்கவேண்டுமா’ என இன்னொன்று வைத்தார்கள்.

இங்கு சிங்கையில் மனைவி மற்றும் மகனோடு புத்தகக் கடைக்கு சென்றபோது என் மகன் மொத்தமாய் இருந்த ஒரு புத்தகத்தை எடுத்து உள்ளேயெல்லாம் பிரித்துப்பார்த்து இது வேண்டுமென சொல்ல, உடன் வாங்கினேன் விலை அதிகமென்றாலும்.அவன் படம் பார்க்க, நான் படிக்க. அது ஒரு காமிக்ஸ்.

கனவாகவே..நனவாகவே...

|

கதிர் எழுதின கனவாகவே... 

ஆசான் எழுதின நனவாகவே...

நான் எழுதின கனவாகவே....நனவாகவே ....கீழே..

காட்ட வித்து கஷ்டப்பட்டு, கடன்வாங்கி கடனேன்னு
காஞ்சி தேஞ்சி காசனுப்ப
கட்டிங், சினிமா, பஸ்ஸுல பொண்ணு
காரியமா இருக்க, கழண்டுகிச்சி எல்லாம்.

படிச்சாலும் பாழும் மண்டையில ஏறல
பாஸ் பண்ணவும் முடியல... 
மொத வருஷம் முழுதா மூனு அரியர்.
பாஸ்பண்ணினவன் டிரீட் வெக்க
புண்பட்ட மனசை புகையோட தண்ணி.

அடுத்த வருஷம் ஆரம்பத்துலயே படிப்போம்
அழகா முடிவு செஞ்சி
ஆஞ்சனேயர் கோவில் அர்ச்சனை
ஆரம்ப நாளே அழகான பொண்ணு.
அடுத்தவருஷம் படிச்சிக்கலாம்னு அத ஓட்ட,
அஞ்சி சேந்து எட்டு.

கடைசி வருஷம் கருத்தா இருப்போம்
கச்சிதமா படிக்க, கடவுளுக்கே பொறுக்காம
காசு அனுப்பின அப்பன் காடு போய் சேர
காலேஜும் காலி, என் கால் ஏஜும் காலி.
சுத்தாதீங்கடா பயலுவலா, சொகமா இருக்க படிங்க...
சொல்லுறேன் எல்லாத்துக்கும், கனவு நனவாக...

பதிவுலகில் நான் எப்படிப் பட்டவன்?...

|

வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி கேள்விப்பட்ட நான் உணர்ந்தேன், என் ஆசான் தொடர்இடுகை எழுதச்சொன்னபோது. எனக்கு உதாரண நபராகவும், சரியான வழியில் செலுத்தி, என் மேல் அலாதியான பிரியம் கொண்டவருமான என் ஆசானுக்கு நன்றி சொல்லி இதோ... கேள்விகளுக்கு பதில்.


1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

   பிரபாகர். 

2) அந்தப்பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

  ஆம். என்ன அடுத்து வரும் கேள்விக்கு பதில் சொல்ல முடியாது போலிருக்கே, சரி வலைப்பூவின் பெயர் காரணம் சொல்லிவிடவேண்டியதுதான்... ஒரு இறுக்கமான சூழலில் எனக்குள்ளே ஒரு தன்னம்பிக்கையை ஏற்படுத்திக்கொள்ள ‘வாழ்க்கை வாழ்வதற்கே’ என ஒரு உத்வேகத்தில் வைத்த பெயர்.

3) நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.

  எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள. சிறு வயதில் நிறைய படித்தது, நிறைய அனுபவங்கள் தேடிக்கொண்டது, தேடி வந்தது என நிறைய அசைபோட விஷயங்கள் இருந்தது, ஏதாவது எழுதவேண்டும் எனும் எண்ணம் உள்ளுக்குள் புகைந்துகொண்டே இருந்தது, பின்னூட்டங்களின் மூலமாய் லக்கி ‘பிரபா உங்கள் தமிழ் நன்றாக இருக்கிறது, வலைப்பூ ஆரம்பிக்கலாமே என என்னை உசுப்பேற்றியது, கதிர், நாகா, அய்யா, சகோதரி, சேம் பிளட் சங்கர், தினேஷ் என இன்னும் ஏனைய அன்பு உள்ளங்கள் என்னை ஊக்குவித்தது என சொல்லிக்கொண்டே போகலாம்.

4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?


    கதிர், நாகா சொன்னபின் திரட்டிகளில் இணைத்தது, ஆரம்ப நாட்களில் நிறைய படித்து பின்னூட்டமிட்டது, அனுபவங்கள் சார்ந்தே இன்றும் எழுதி வருவது, அய்யாவின் அறிவுரைகளை பின்பற்ற முயற்சிப்பது என நிறைய சொல்லலாம். பிரபலமடைந்ததா எனத் தெரியாது, என்னோடு இருக்கும் வலையுலக நண்பர்கள் எனக்கு துயர் வந்த போதெல்லாம் நாங்கள் இருக்கிறோம் என ஆறுதலாய் இருக்கும்போது 'ப்ராப்ளம்' (பிரபலத்துக்கு பிராப்ளத்தை ஒரு வழியா இணைச்சாச்சு)  என்னை அணுகி முழுதும் ஆட்கொள்ளாமல் இருக்க உதவிற்று.

5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்துகொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?
    
   எழுதியிருப்பதில் பெரும்பாலானவை என் சொந்த விஷயங்கள் சார்ந்தது தான். எனது வாழ்வில் நிகழ்ந்த, மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ள ஏதுவான விஷயங்களை பல்பு வாங்கியிருந்தாலும் துணிந்து சொல்லி ‘ஸ்னேக் பிரபா’ என அய்யாவால் அழைக்கப்படுகிறேன். எனது அனுபவங்களை கொண்டு எழுதியவற்றை வைத்தே என்னை கிண்டல், கலாய்க்கும் போது மனதிற்கு நிறைவாய் இருக்கிறது("குப்புற விழுந்தேன், மீசையில் மண் ஒட்டவில்லை" நினைவிற்கு வந்தால் நான் பொறுப்பல்ல!)

6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

  கண்டிப்பாக சம்பாதிக்கவும், பொழுது போக்கிற்காகவும்தான். ஆம், நல்ல இதயங்களை சம்பாதித்து நல்ல பொழுதாகப் போக்க.

7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

  மூன்று. "வாழ்க்கை வாழ்வதற்கே" முழுக்க அனுபவப் பகிர்வுக்காக; "எண்ணத்தை எழுதுகிறேன்" நடப்பு நிகழ்வுகளை சொல்வதற்காக; "வில்லங்கம் வீராசாமி" அரசியல் பற்றி எழுதலாமென ஆரம்பித்து மட்டும் வைத்திருக்கிறேன்.

8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

  கோபம் உண்டு, விளம்பரத்திற்காக தெரியாத விஷயங்களை எழுதும்போது... பெயர் வேண்டாமே! பொறாமை நிறைய பேரின் மேல் உண்டு. எந்த விஷயத்தையும் மிக நேர்த்தியாய் எழுதும் என் அய்யாமேல், தமிழோடு விளையாடுமென் சகோதரியின் மேல், மௌனத்தை கசியவிடும் கதிரின் மேல், கிரிக்கெட் மேல் அதீத ஆர்வம் கொண்ட தினேஷின் மேல், எழுதுவதை தற்சமயம் நிறுத்தியிருக்கும் சேட்டையின் மேல் என நிறைய பேரை சொல்லிக்கொண்டே போகலாம்.

9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..

  ராசுக்குட்டி எனும் பெயரில் பின்னூட்டமிடும் என் அன்பு நண்பர் நாகராஜ். ’அனுபவங்களை அழகாய் சொல்கிறீர்கள், தொடருங்கள்’. அடுத்து என் மாமா, என்னை வளர்த்து மெருகேற்றியவர், எனது எழுத்துக்களின் முதல் ரசிகர்.

10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...

  அனுபவங்களைப் பகிர்ந்து உண்மையான நட்பினை, தோழமையினை பெறவே ஆசை. பாராட்டுக்களை விட உங்களின் கொட்டுக்களே எனக்கு அதிக ஊக்கத்தையும் என்னை மேம்படுத்திக்கொள்ளவும் உதவும் என்பதால் எதிர்ப்பார்ப்பது உண்மையான விமர்சனங்களையே. என்னைப்பற்றி தெரிந்துகொள்வது மிகவும் எளிது. எனது இடுகைகளே எனது அனுபவங்கள், மற்றும் என்னைச் சார்ந்ததுதானே?

மீசைக்கார டிரைவர்...

|

ஏறி உட்கார்ந்தபின் ஏனடா இந்த பேருந்தில் உட்காந்தோம் என எண்ணியதுண்டா? எண்ணியிருந்தால் அதற்குக் காரணமாய் நெரிசல், பராமரிப்பில்லாமல் எப்போது நம்முடைய இருக்கை கழன்று கீழே விழுமோ எனும் பயம், காலுக்கு கீழ் தெரியும் ஓட்டை வழியே பார்த்து வருதலில் வரும் பகீர் பயம், சிடுசிடுப்பான கண்டக்டர், மேலே உரசும் பயணி, கொஞ்சம் இடம் கொடுத்தால் நிற்கிற சாக்கில் நம் மீது உக்கார்ந்து வரும் சக பயணி, காற்று ஒலிப்பானால் காதை செவிடாக்கும் ஓட்டுநர் என பல விஷயஙகள் இருக்கலாம். எனக்கு கிடைத்த அனுபவம் ஒரு பேருந்தின் ஓட்டுனராலும் அவருக்கு உறுதுணையாய் வந்த நடத்துனராலும்.

நாமக்கல்லுக்கு வேலையாய்ச் சென்றுவிட்டு, வழக்கமாய் வரும் ராசிபுரம் வழியாய் வராமல் மாறுதலாய் துறையூர் வழியாக போகலாமென, கிளம்பத்தயாராக இருந்த ஒரு அரசுப்பேருந்தில் ஏறி உட்கார்ந்தேன். நிறைய சீட்டுகள் காலியாக, பாட்டுச் சத்தம் எனும் தொல்லையில்லாமல் இருந்தது. இந்த வண்டி கிளம்பியதும் ஏறுவதற்கு தயாராய் அடுத்ததாய் கிளம்பும் பேருந்தின் கீழ் நிறைய பேர் நின்று கொண்டிருந்தார்கள்.

ஓட்டுனர், முறுக்கிவிடப்பட்ட வெள்ளை மீசையுடன் ஐம்பது வயதொத்த ஒரு பெரியவர்(?), ஒவ்வொரு பத்து வினாடிக்கும் மீசையை முறுக்கிகொண்டிருந்தார். நடத்துனரும் அவருக்கு இளைத்தவரோ இளையவரோ இல்லை, ஆஹா நல்ல ஜோடிதான் என எண்ணும்படி இருந்தது. எங்கள் பேருந்து வெளியே கிளம்பிய அடுத்த நொடியில் எல்லோரும் பக்கத்து பஸ்ஸில் எல்லோரும் பரபரப்பாய் ஏற, தவறாய் மாறி ஏறிவிட்டோமோ என எண்ணி, மனதைத் தேற்றிக்கொண்டேன்.

வாக்மேனில் பாட்டுக்கேட்க ஆரம்பித்தேன். பக்கத்தில் ஒரு பெரியவர் வந்து அமர்ந்தார். காதில் இருந்த இயர் போனை பார்த்து என்னை ஒரு மாதிரியாய் உற்றுப்பார்த்துக் கொண்டிருக்க குறுகுறுப்பாய் இருந்தது. பாடலைக் கேட்டவண்ணம் கண்களை முடிக்கொள்ள, அந்த பெரியவர் அவருக்கு பக்கத்தில் அமர்ந்திருந்தவரிடம் பேச ஆரம்பித்தார்.

சப்தமாய் பேசியதால் பாடலை மீறியும் அவர் பேசுவது லேசாய் கேட்க, அதுவும் என்னைப்பற்றித்தான் இருப்பதுபோல் தெரிய ஒலியை குறைத்து வைத்தேன். 'பாவம் சின்ன வயசு இந்த பையனுக்கு இப்படியா ஆகணும்' அதற்கு மற்றவர் 'அதெல்லாம் விதின்னா, என்ன செய்ய முடியும்' என பதில் சொன்னார்.

அணைத்துவிட்டு என்ன விஷயம் என பெரியவரைக் கேட்டதற்கு, 'காது எப்பவுமே கேக்காதா' எனக்கேட்டார். இயர் போனை எடுத்துவிட்டு இல்லை கேட்குமே, என்ன விஷயம் எனக்கேட்க, ’இல்ல ஒரு பத்து தடவ கூப்பிட்டிருப்பேன், இத காதுல வேச்சிருக்கறதால கேக்கலையா? இது என்ன காது கேக்காம இருக்கிறதுக்கு மெஷினா’ என நக்கலாய் கேட்டார். பெரிய நகைச்சுவையைக்கேட்டார்போல் இன்னொரு பெரிசு வெடிச்சிரிப்பாய் சிரிக்க,

கையில் இருந்த எம்.ஜி.ஆர் பாடல்கள் இருந்த கேசட்டை மாற்றி அவரின் காதில் இயர்போனை வைக்க, கத்தி, 'அட பாட்டு பாடுது, எவ்வளவு சத்தமா கேக்குது' என மகிழ்ச்சியில் கத்தி, பக்கத்திலிருந்த இன்னொரு பெரியவரிடமும் அவரின் காதில் வைக்க, 'அடி ஆத்தி மனுஷன் என்னன்னவோ கண்டுபுடிக்கிறான், சீக்கிரம் சாவே இல்லாம பண்ணிடுவானுங்க போலிருக்கு’ என சந்தோஷித்து சொன்னார்.

பேருந்து நிலையத்தைவிட்டு வெளியே வந்த ஐந்தாவது நிமிடத்தில் பின்னால் கிளம்பிய பேருந்து எங்களை நக்கலாய் சப்தம் செய்து கடந்து போக, ஓட்டுனர் 'இப்படி அவசரமா போய் என்ன பண்ண போறாங்க' என அங்காலாய்த்தார். வழி சீட்டுக்களையெல்லாம் முன்னால் வண்டி பார்த்துக்கொள்வதால் அதிகம் யாரும் ஏறவில்லை, இறங்க மட்டுமே செய்தார்கள். வண்டி முப்பது கிலோமீட்டர் வேகத்துக்கு மேல் செல்லவில்லை. எதிரில் வரும் வண்டிக்கு இறங்கி வழி விட்டு வண்டியின் வேகம் குறைந்தாலும் கியரை மாற்றாமல், எந்த நிலையிலும் நான்காவது கியரில் அனத்தி அனத்தியாவது ஒட்டினார்.

வழியில் ஒரு டி.வி.எஸ்ஸில் ஒரு சிறுவன் ஓவர் டேக் செய்து போக கடுப்பான பக்கத்துல இருந்த பெரியவர், 'யொவ், வண்டிய கொஞ்சம் அதட்டி ஓட்டுய்யா, மாட்டு வண்டி கூட வேகமா போகும் போலிருக்கு' என சொல்ல, டிரைவர், 'வாய்யா, நீ வந்து ஓட்டு, பெருசா பேச வந்துட்ட' என பதில் சொன்னார்.

உள்ளிருந்த எல்லோருக்கும் சரியான எரிச்சல். சைக்கிளைத் தவிர எல்லா வாகனங்களுக்கும் வழிவிட்டுக்கொண்டு, மீசையை முறுக்கிக்கொண்டு ஓட்டினார். நம்ம பக்கத்து பெரிசு, ‘டிரைவர், வண்டியையும் கொஞ்சம் முறுக்கப்பா’ என சொல்ல எல்லோரும் கொல்லென வேதனையிலும் சிரித்தோம்.

பஸ்ஸிலிருந்தோர் மனம் நொந்து ஆளாளுக்கு சொல்ல ஆரம்பித்தார்கள். ஒரு நடுத்தர வயது பெண்மணி 'டிரைவர் வாழ்க்கையில் ஆக்ஸிடென்ட்டே பண்ணியிருக்கமாட்டார், அப்படி மோதியிருந்தாலும் ஆளு செத்திருக்க மாட்டார்'. ஒரு இளவட்டம், 'ரோடு ரோலர் ஓட்டியிருப்பாரோ?'. 'ஏம்மா எல்லா வண்டியும் நம்ம வண்டிய முந்திட்டு போவுது' ஒரு குழந்தை.

ஒரு வழியாய் பேருந்து துறையூரை நெருங்கியது. ஒரு நிறுத்தத்தில் நிறையபேர் இறங்கியதால் கொஞ்சம் தாமதிக்க டிரைவர் பொங்கியெழுந்து 'சீக்கிரம் இறங்குங்க, இப்படி இறங்குனா எப்படி நான் டைம் எடுக்கிறது' என கோபமாய் சொல்ல எல்லோரும் சிரித்தோம், அந்த குழந்தையும்கூட புரிந்தோ புரியாமலோ...

ஆட்டோ அனுபவங்கள்...

|

வானம்பாடிகள் அய்யாவும் நானும் எக்மோரில் சாப்பிட்டுவிட்டு வெளியே வந்தோம். என்னை அனுப்பி செல்வதாய் சொல்லி, ஆட்டோவை பேச அவர்கள் கேட்டதைப் பார்த்து வியப்பாயிருந்தது, எப்படி மனசாட்சியே இல்லாமல் கேட்கிறார்கள் என. கடைசியாய் ஒருவர் எவ்வளவு சார் தருவீர்கள் எனக் கேட்க, அய்யா ஒரு தொகையை சொல்ல, அவர் கொஞ்சம் சேர்த்து கேட்டார். ’சரி பிரபா, பார்த்துப்போங்க, சேர்ந்ததும் அழையுங்க’ எனச் சொல்லி விடைபெற்று சென்றார்.

கிளம்பிய சிறிது நேரத்தில் ’சார் எங்க சார் போகனும்’ எனக் கேட்க பகீரென்றிருந்தது, சொல்லித்தானே ஏறினோமென. ராகவன் காலனி என சொன்னவுடன், 'சார் ரெண்டு இருக்கு. தெளிவா சொல்லனும், அப்படித்தான்' என ஐந்து நிமிடம் நிறுத்தாமல் ஒரு கதையை சொன்னார். ஸ்ரீனிவாசா தியேட்டர், கோவிந்தன் ரோடு அருகில் என திரும்பச் சொல்ல, ’ஆமாம் சரியா சொன்னீங்க, இல்லன்னா கோடம்பாக்கத்தில இருக்கிற ராகவன் காலனிக்கு போயிருப்பேன்’ என சொன்னார்.

கொஞ்சம் உற்று அவரைப்பார்க்க அப்போதுதான் சரியான போதையில் இருக்கிறார் என. ஆஹா, சிக்கினோமடா என நினைத்தபோது சட்டென வண்டியை நிறுத்தினார். ’சார், உங்க நண்பர கூப்பிட்டு ஃபோன எங்கிட்ட கொடுங்களேன், வழி கேட்டுக்கறேன்’ நியாயமாய்ப் படவே, அழைத்தேன்.

‘டேய் டிரைவர் பேசனுமாம்’ என கொடுத்தவுடன், ‘வணக்கம் சார், சரிங்க சார், தெரியும் சார், ஆமாங்க சார், கண்டிப்பா சார், நிறைய வாட்டி வந்திருக்கேன் சார், தேங்க்யூ சார், நண்பர்கிட்ட பேசுங்க சார்’ பவ்வியாமாய் கொடுத்தார், பேசி வைத்தேன்.

’சார் இந்த இடத்துல ரோடு பிரியுது பாருங்க, எப்படி போகனுங்கறதுக்காகத்தான் உங்க நண்பர்கிட்ட பேச சொன்னேன். இப்போ கிளியர்’ என வலது பக்க ரோட்டில் வளைத்தார். இதில் அவர் குடும்பத்தைப்பற்றிய விவரங்கள் வேறு. இரு மகள்கள். முதல் மகள் லவ் மேரேஜ் வீட்டிற்கு தெரியாமல். ரொம்ப கஷ்டப்படுகிறாராம். இரண்டாவது மகள் அக்காளின் நிலையைப்பார்த்து இவர் சொன்னவரைக் கல்யாணம் செய்துகொண்டு சந்தோஷமாய். இரவில் மட்டும் ஆட்டோ ஓட்டுவாராம். சராசரியாம் நானூறு ரூபாய் கிடைக்குமாம். சொந்த ஆட்டோ வாங்குவதில் உள்ள சிக்கல்கள் மற்றும் இடுகையெழுதும் அளவிற்கு பல விஷயங்களை சொல்லிவந்தார்.

ஒரு இடத்தை நெருங்கினோம். வண்டியை நிறுத்தி ‘சார், ராகவன் காலனி எப்படி போகனும்’ எனக்கேட்டார். ‘நேரா போய் லெஃப்ட், கொஞ்ச தூரம் போனா ஒரு...’ என சொல்ல, மறக்காமல் ’தேங்க்யூ சார்’ சொன்னார். இடதுபுறம் திரும்பியவுடன் வண்டியை நிப்பாட்டி அங்கு நின்றிருந்த பெரியவரிடம் கேட்க, நான்கைந்து கேள்விகளைக் கேட்டுவிட்டு, ‘நானும் புதுசுதான்’ எனச் சொல்ல, இதை ஆரம்பத்துலேயே சொல்லியிருக்கலாமே சார்!’ என அடுத்துவந்தவரிடம் கேட்க ஆரம்பித்தார்.

ஒரு கடைக்கு வெளியே படுக்க எத்தனித்த ஒருவரிடம் கேட்க அவர் கையைக்காட்டி எதோ சொல்ல முயல ‘வேண்டாம் சார், சொல்றதுக்குள்ள விடிஞ்சிடும், நன்றி’ என சொல்லி கிளப்பினார்.

என் நண்பன் என்ன இன்னும் வரவில்லையே என டென்ஷனாகி அழைத்து, ’நேத்துதானடா வீட்டுக்கு வந்த, இதுக்கு முன்னால் எத்தனை தடவை வந்திருப்பாய் சரி டிரைவர் கிட்ட கொடு’ எனச் சொல்ல, அவர் வாங்க மறுத்து, ’சாரி சார், ஒரு தடவைதான் அட்ரஸ் கேட்பேன், சுகுரா கொண்டுபோய் விட்டுவிடுவேன்’ என சொன்னார். அவர் கொஞ்சமும் சளைக்காமல் சகட்டு மேனிக்கு விசாரித்தபடியே விரட்டினார்.

அந்த ராகவன் காலனி ஏரியாவில் ஏறக்குறைய எல்லா இடங்களையும் ஆள் அரவமில்லாத இருட்டான இடங்களையும் சேர்த்து பார்க்க நேர்ந்தது. ஒரு வழியாய் எனக்கு அறிமுகமான வழியில் செல்ல ஆரம்பிக்க நான் வழி சொல்ல ஆரம்பித்தேன். வீட்டு வாசலில் நிறுத்தும்போது, ’சார் உங்க நண்பர் மாதா கோவில் அது இதுன்னு குழப்பிட்டாரு. இல்லையின்னா’ என சொல்லப்போக, ’வேண்டாம் சார்’ என நிப்பாட்டி பேசியதை விட அவரே எதிர்ப்பார்க்காத ஒரு தொகையைக் கொடுத்த்து ஆளை விட்டால் போதும் என வீட்டிற்குள் சென்றேன்.

அடுத்த நாள், மாமா கஜகஸ்தான் செல்ல சென்னை வர, அவரைப் பார்த்தபின் அப்படியே ஊருக்கு செல்ல உத்தேசம். நண்பனின் வீட்டிலிருந்து ஆட்டோவில் மாம்பலம் ஸ்டேஷன் சென்று ட்ரெயினில் செல்லலாம் என உத்தேசித்து ஒரு ஆட்டோவை நிறுத்தி மாம்பலம் ரயில் நிலையம் எனச் சொல்லி கவனித்தேன், முன் கண்ணாடியில் பெரிதாய் எம்.ஜி.ஆர். படம்.

’தலைவர்னா ரொம்ப பிடிக்குமா’ எனக்கேட்டேன். ’அய்யோ, அவருன்னா உயிருங்க’ எனச் சொன்னார். ’சரி வண்டியை ஏர்போர்ட் விடுங்க’ என சொல்ல அவருக்கு ஆச்சர்யம். ’மாம்பலம்னு சொன்னீங்க?’ எனக்கேட்க, ‘ட்ரெயின்ல போறதா இருந்தேன், ஆட்டோவிலயே தலைவருக்காக போறதா முடிவு பண்ணிட்டேன்’ என சொல்ல அவர் வண்டியை திருப்பினார்.

விளையாட்டுக்கு ‘எவ்வளவு வேணும், தலைவர நினைச்சிக்கிட்டு கேளுங்க’ எனச் சொல்ல, பதிலுக்கு ‘தலைவர நினைச்சிட்டு கொடுங்க’ என விவரமாக சொன்னார்.

‘அய்யய்யோ, அப்புறம் வெறும் பாக்கெட்டோடத்தான் நான் போகனும்’ எனச் சொல்ல இருவரும் சிரித்தோம். பேசியபடி சந்தோஷமான பயணம். கட்டணத்தை தரும்போது கண்கள் பணிக்க, நீங்களும் தலைவர்தான் என சொல்லிச் சென்றார்.

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB