என் தம்பி திவாகர்...

|

தம்பியும் நானும்...
இந்த இடுகையினை வெளிவரும் கண்ணீர்த் துளிகளை அடக்க இயலாமல் திரையிட்டிருக்கும் விழிகளின் வழியே பார்த்து எழுத ஆரம்பிக்கிறேன். அன்பின் அன்பான என் தம்பி என்னை, எங்களையெல்லாம் தவிக்கவிட்டு செல்ல, எதிலும் வெறுமை; அதீதமான எரிச்சல்; அளவுகடந்த கோபம்; வாழ்வின் மீதே ஒரு பிடிப்பற்ற நிலை; ஏறக்குறைய எல்லாம் இழந்த நிலை.

ஆம், எனக்கு எல்லாமாய் இருந்து எனக்காகவே வாழ்ந்து, இன்று எண்ணற்ற பொறுப்புகளை, சுமையினை என்மேல் சுமத்திச் சென்றிருக்கிறான். அவனைப்பற்றி என் ஆயுளுக்கும் சொல்லலாம். எனக்கு தம்பியாய் மட்டுமன்றி தகப்பனாய், ஆசானாய், ஆருயிர் நண்பனாய் இருந்திருக்கிறான். என்னைப் பற்றி முழுதும் தெரிந்த ஒருவன் அவன்தான். எல்லா விஷயங்களையும் பேசுவோம். வயதுக்கு மீறிய பக்குவம் அவனிடத்தில் இருக்கும். அவன் சொல்லி கேளாமல் செய்த எல்லா விஷயங்களும் எனக்கு நன்றாக அமைந்தது இல்லை.

எனக்குத் தெரிந்த, அறிமுகமான வலையுலக நட்புக்கள் அவனுக்கும் தெரியும். வானம்பாடிகள் அய்யாவிடம் மட்டும் பேசியிருக்கிறான். மனம் சஞ்சலப்படும் நேரத்தில் அய்யாவிடம் பேசுண்ணா என அறிவுறுத்துவான்.

பாசம் என்றால் அவன்தான். ஒரு தலைவலி என்று சொல்லிவிட்டால் அவன் சரியாகும்வரை விசாரிப்பதிலேயே தலைவலி பயந்து பறந்து சென்றுவிடும். எல்லோரிடமும் அவன் காட்டும் அக்கறை அளவுக்கு அதிகமாக போதுமடா என சொல்லுமளவிற்கு இருக்கும்.

கிரிக்கெட்டில் அவனுக்கு நிறைய ஈடுபாடு. அருமையாக விளையாடி எல்லா ஷாட்டுக்களையும் அழகாக விளையாடுவான். கீப்பிங், ஃபீல்டிங் என எல்லாவற்றிலும் கலக்குவான். சச்சின் என்றால் என்னைப்போலவே அவனுக்கும் உயிர். நான் சுமாராக விளையாடுவேன். டர்பன் கிரிக்கெட் கிளப் என்பது அவனது அணியில் பெயர். என்னை விளையாட சேர்த்துக்கொள்ள மாட்டான். 'வேணாம்னா, சரியா விளையாடலைன்னா திட்டுவானுங்க, என்னால தாங்கிக்க முடியாது' என சொல்லுவான்.

இடுகைகளில் வரும் பெரும்பாலான விஷயங்கள் அவனால் சொல்லப்பட்டதாகத்தான் இருக்கும். முதல் ஆளாய் அவனிடம் வெளியானவுடன் படித்துக்காட்டுவேன், நிறைய சந்தோஷப்பட்டு இன்னும் நிறைய எழுத ஊக்குவிப்பான்.

என்னைப்பற்றி எவரேனும் குறை சொன்னால் அவனால் தாங்கிக்கொள்ளவே முடியாது. அவர்களோடு பேசுவதை நிறுத்திவிடுவான். எனது நண்பர்களுக்கெல்லாம் அவனை நன்றாகத் தெரியும், அவர்களிடத்தில் என்னைப்பற்றி ஆர்வமாய் விசாரிப்பான்.

ஊருக்கு வருகிறேன் எனத்தெரிந்தால் எனக்கு என்ன பிடிக்குமோ அதையெல்லாம் வாங்கி வைத்திருப்பான். தினம் ஒரு ஃப்ரஷ் ஜூஸ் செய்து தருவான். சமையலிலும் கலக்குவான். அவனது இரு சக்கர வாகனத்தை சர்வீஸ் செய்து வைத்திருப்பான். ஐம்பதுக்கு மேல் போகாதேன்னா என அறிவுறுத்துவான்.

மாத நாவல்களை மட்டுமே படித்துவந்தவன் கடந்த ஒரு வருடங்களாக நூலகத்தில் இருக்கும் புத்தகங்கள் நிறைய எடுத்துவந்து படித்திக்கொண்டிருந்தான். என்ன இதெல்லாம் படிக்கிறாயா என வியந்து கேட்டதற்கு ஆமென்று சொன்னான். இறுதிக்காலத்தில் நிறைய படித்துக்கொண்டிருந்தான்.

திவா, என்னால் எழுத இயலவில்லையடா தம்பி! என்னுள் முழுமையாய் வியாபித்திருக்கிறாய். நீ விட்டு சென்ற பணிகளைத் தொடருவேன், உனது கனவுகளை நனவாக்குவேன் என்றெல்லாம் சொல்வதற்கு என்னோடு இரு, என்னைப் பார்த்துக்கொள்.

(தகவல் அறிந்து இடுகைகள் மூலம் அஞ்சலி செலுத்தியும், மடல், தொலைபேசி வழியாக ஆறுதல் சொல்லியும், எனக்கு ஆறுதலாய் இருக்கும் ஏனைய வலையுக நண்பர்களுக்கு என் கண்கள் பணிக்கும் நன்றி)

ஈரோடு பதிவர்களும், ஜூனியரும் நானும்...

|

கதிர் ஊருக்கு வரும்போது கண்டிப்பாய் பார்த்தே ஆகவேண்டும் என தினந்தோறும் மிரட்டல் விட்டுக்கொண்டிருந்ததால் அவரையும், அன்பான மற்றும் சிலரையாவது பார்த்தே ஆகவேண்டும் என முடிவு செய்திருந்தேன். அப்பா நீங்கள் எங்கு சென்றாலும் உங்களோடுதான் வருவேன் என மகன் அன்புக்கட்டளை இட்டிருந்தார். அதன்படி அவரையும் என்னோடு அழைத்துக்கொண்டு டூவீலரில், முன்னே விஷாக், பின்னால் பெட்டி, தலைக்கு ஹெல்மெட், குளிர் கண்ணாடி என கொளுத்தும் அக்கினி நட்சத்திர வெயிலில் கிளம்பினோம். வண்டியை தாத்தா வீட்டில் விட்டுவிட்டு பஸ்ஸில் பயணிப்பதாய் எண்ணம்.


கியர், பிரேக், கிளட்ச் மட்டும்தான் நான். ஆக்ஸிலேட்டர், ஆர்ன், ஒட்டுவது எல்லாம் அவர்தான். வளைவில், எதிரில் வண்டி வரும்போது என சொல்லித்தந்தவாறு அழகாய் ஓட்டுவார், ஓட்டினார். சேலம் ரோட்டில் செல்லும்போது வண்டி இழுத்தாற்போல் செல்ல, பின் டயர் பன்க்சர். நல்லவேளை, சரி செய்யும் கடை வெகு அருகில். அந்த வேகாத வெயிலில் பையனை வைத்துக்கொண்டு... கொஞ்சம் டென்ஷனானேன். ’விடுங்கப்பா, எனக்கு ஒன்னுமில்லை’ என என் முகத்தைப்பார்த்து ஆறுதல் சொல்ல, தணிந்தேன்.

டியூப்பையே மாற்றிவிடலாம் என சொல்ல, கடைக்கு சென்றேன். மூன்று விலையில் இருந்தது. இது ஒரிஜினல், முந்நூறு ரூபாய் என சொல்லி விலை கம்மியாய் இன்னுமிரு ட்யூப்களையும் காட்ட,  போலியை பகிரங்கமாய் விற்பது அதிர்ச்சியாயிருந்தது.

ஒரு வழியாய் வண்டியை விட்டுவிட்டு சேலம். கிளம்பிக்கொண்டிருந்த பஸ்ஸில் அவசரமாய் ஏறிக்கொண்டோம். அப்புறம்தான் தெரிந்தது அது பவானி வழியாக கோவை செல்லும் பேருந்து என. மன்னிப்பு கேட்டு சங்ககிரியில் இறங்கிக்கொண்டு, மற்றுமொரு பஸ் பிடித்து ஈரோடு. அடிக்கடி கதிரின் அழைப்பு. பள்ளிபாளையம் வந்தவுடன் சொல்லுங்கள் என சொன்னார்.

பிருந்தாவன் அருகே வரச்சொல்ல, காரில் காத்திருந்தார். கதிர்... பாராமல் பேசி, எண்ணங்களை பகிர்ந்த என் இனிய நண்பர், கண்முன்னால். சந்தோஷமாய் கைகுலுக்கி வரவேற்க, ஜூனியர் பின்னால் அமர்ந்துகொள்ள, கதிரோடு முன்னால். ஆரூரனும் வந்து வேறொரு பக்கத்தில் காத்திருக்க, பிக்கப் செய்து கொண்டு அலுவலகம் செல்வதாய் சொல்ல அவர் நேரே அங்கே வருவதாய் சொல்லிவிட்டார்.

காரை நிறுத்தி கதிரின் அலுவலகம் சென்றோம். ஆஹா இங்கிருந்துதானா இத்தனை மவுனமும் கசிகிறது என ஆச்சர்யப்பட்டேன். அவரின் அலுவலக நுழைவாயிலேயே இருந்த அச்சடித்து வைக்கப்பட்டிருந்த போஸ்டர்கள் என்னைக் கவர பார்த்தேன். இறுதி அஞ்சலி எனும் போஸ்டரில், கண் தானம் வழங்கியமைக்கு நன்றி என்று நன்றியுடன், இவரின் சொந்த செலவில். தகவல் வந்து கண்ணினை எடுக்கச் செல்லும் அந்த குறுகிய இடைவெளியில் அச்சடித்து எல்லோருக்கும் விழிப்புணர்வினை ஊட்டுவதற்காக வழங்க என அறிந்தபோது கதிரின் மேல் இருந்த மதிப்பு இன்னும், இன்னும் பன்மடங்காகியது.

விஷாக் கிடைத்த கம்ப்யூட்டரில் விளையாட ஆரம்பிக்க, ஆரூரன் வந்து சேர்ந்தார். முதன்முறையாய் பார்ப்பதாய் இல்லை, ஏற்கனவே பழகிய உணர்வு. அதன் பின் இளவல் பாலாசி (அய்யா ஒரு முன்னோட்டம் கொடுத்திருந்ததால் தப்பித்தேன்... பள்ளி செல்லும் சிறுவனாய்...), அகல் விளக்கு ராஜா (சிறு விபத்துக்குப் பின் தேறி வந்ததாய் சொன்னார்), அப்புறமாய் வால்பையன் அருண். காதல் பற்றி அருண் அதிகமாய் பேசியது ஆச்சர்யமாயிருந்தது. ஏற்கனவே பலமுறை போனில் பேசியிருந்தாலும் நேரில் பார்க்கும்போது தோன்றியது வாலு வாலுதான்!

சரி இரவு உணவுக்கு செல்லலாம் என முடிவு செய்தபோது அருணால் வர இயலாத சூழல். இரண்டு காரில் ஒரு பஞ்சாபி தாபாவுக்கு போனோம். நண்பர் சேது, என்னை தொடர்ந்து வாசித்து வரும் பைஜூ என சேர்ந்து கொள்ள கலக்கலாய் இரவு உணவு ஆரம்பித்தது.

அந்த தாபாவின் ஓனர் சேதுவுக்கு மிகவும் வேண்டப்பட்டவராம். நேரிலேயே வந்து என்ன வேண்டும் எனக்கேட்டதோடு மட்டுமல்லாமல் அவரே சில ஸ்பெஷல் ஐயிட்டங்களை அனுப்பிவைத்தார். அதிலும் குறிப்பாய் ஜப்பான் சிக்கன் ரொம்ப அருமையாய் காரம் குறைவாய் இருந்தது விஷாக்கிற்காகவாம். எல்லோருக்கும் பிடித்திருந்தது. உண்மையைச் சொல்லவேண்டுமென்றால் அதுபோல் சாப்பிட்டதே இல்லை. காரம் இல்லையே என்பதை ஈடு செய்ய பள்ளிபாளையம் இன்னும் அருமையாய். கடைசியாய் தயிர் சாதம். விஷாக் சாப்பிட்டுவிட்டு கைகளை உயர்த்தி சூப்பர் என சொல்ல எல்லோரும் சிரித்தோம்.

சேது கதிர், நான் மற்றும் விஷாக்கை கதிரின் வீட்டில் விட்டுவிட்டு சென்றார். வழியில் ஒரு நாய் வீலென கத்திக்கொண்டு ஓட, ‘அப்பா கார் அந்த நாய் மேல மோதிடுச்சா, அதுக்கு குட்டிங்க எல்லாம் இருக்குமா’ என ஜூனியர் கேட்க, அதெல்லாம் இல்லைப்பா ஒன்னுமில்லை என சொன்னேன். ‘இல்லைப்பா, அது கத்தின சவுண்டு வேற மாதிரி இருந்துச்சி’ என மறுத்து சொல்ல ஒன்றும் ஆகவில்லை என திரும்ப சொல்லி சமாளித்தேன்.

இரவு கதிரின் வீட்டில் தங்கியிருந்து காலை கிளம்பி, ஒரு ப்யூர் வெஜிடேரியன் ஓட்டலில் (இங்கு புளி காரம் சேர்ப்பதில்லை, குறைவான எண்ணெய்...) சாப்பிட்டோம். புதினா தோசை நன்றாக இருந்தது. முருங்கைக்கீரை சூப், சட்னி, சாம்பார் எல்லாம் வித்தியாசமான சுவையில். ஜூனியர் ப்ளைன் என்னாப்பா இவ்வளவு சின்னதா மொத்தமா இருக்கு எனக்கேட்க, அய்யா கொஞ்சம் மெலிசா போட்டுத்தாங்க என சொல்லி சாப்பிட்டு முடித்தோம்.

அவரது இரு சக்கர வாகனத்திலேயே எங்களை அழைத்து வந்த போது வழியில் நாங்கள் மறந்து விட்டு வந்ததை எடுக்க கதிர் அலுவலகம் திரும்ப சென்று வர என ஒரு வழியாய் பேருந்து நிலையம் வந்து சேர்ந்தோம். அங்கு பழங்கள் மற்றும் ஜூஸ் கடை வைத்திருக்கும் அவரது நண்பர் தியாகராஜன்(தியாகு) அருமையாய் கவனித்து, லைம் ஜூஸ், வாட்டர் பாக்கெட் என எல்லாம் ஃபிரஷ் ஜூஸோடு பேருந்தில் செல்லும்போது தேவைப்படுமெனத் தந்து கவனித்தார். அவருக்கு ஒரு பலமான நன்றியினைக்கூறி கிளம்பினோம். என் கதிர் எங்களை பேருந்திலேற்றி கடைசிவரை கையாட்டி வழியனுப்பிவைக்க, பிரிய மனமில்லாமல் பிரிந்தோம். ‘அப்பா கதிர் மாமாவை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கப்பா’ என ஜூனியர் சொல்ல, எனக்கும்தான் என மனதில் நினைத்துக்கொண்டேன்.

எங்கோ பிறந்து வளர்ந்து, வாழ்வில் இப்படியெல்லாம் உறவினை, சந்திப்பினை ஏற்படுத்திக்கொடுக்கும் இந்த வலையுலகம் ஒரு பெரிய வரப்பிரசாதம் தான்.

இதற்குதான் எழுதவந்தாயா பிரபாகரா என கேட்டுக்கொண்டேன், அன்பான நண்பர்களோடு அளவளாவிய திகைப்பில்.

எடுத்த புகைப்படங்கள் கீழே... சாப்பிடும்போது கிளிக்கியது ஜுனியர்.

மௌனத்தை கசியவிடும் கதிர்..


ஆளுமைக்குரிய ஆரூரன்..


அன்பின் விஷாக்...


வால்பையன் அருண்...


ஆரூரன், கதிர், நண்பர் சேது...

பைஜு...


சேதுவும் நானும்...

சென்னையும், நானும் அவரும்...

|

அலுவலக வேலையினை முடித்து அவரமாய்க் கிளம்பி சென்றால் ஏர் இந்தியா விமானம் இரண்டு மணிநேரத்தாமதம். ஒரு வழியாய் சென்னை சென்றால், வரவேண்டிய லக்கேஜ் வராமலேயே நெடுநேரம் எல்லோரும் காத்திருக்க, வெகு தாமதாய்த் தான் தெரிந்தது நாளைதான் வருமென. கொதிப்பு, கோபம், பரபரப்பில் உள்ளிருந்தும் தொடர்புகொள்ள இயலாமல், லக்கேஜ் எண்ணை புகார் கொடுத்துவிட்டு ஒரு வழியாய் வெளியே வந்தால், நண்பன் காத்திருந்து வெறுத்துப்போய் சென்றிருந்தான். அருகிலிருந்தவர் செல்பேசியை நாகரீகப் பிச்சையில் வாங்கி தொடர்பு கொள்ள அவன் எடுக்கவே இல்லை. (பிறகு அவனது மெயிலைப் பார்த்துதான் தெரிந்தது, அங்குதான் ஒரு பெஞ்சில் படுத்து உறங்கியிருக்கிறான் என).

’அவர்’ என்னை எந்த நேரம் என்றாலும் அழையுங்கள் எனச் சொல்லியிருந்ததால் மணி நான்கை நெருங்கியிருந்தாலும் அழைக்க, உடன் எடுத்து பாம்பு பட்டத்தோடு சந்தோஷ வரவேற்பு. தாமதமான காரணம் கேட்க, விவரங்களைச் சொல்ல, எங்கு தங்க எண்ணம் எனக்கேட்க, நண்பன் வீட்டுக்கு என சொன்னேன். முதலில் ஓய்வெடுங்கள், லக்கேஜ் காலையில் பார்த்துக்கொள்ளலாம் எனச் சொல்லி, விவரம் கேட்க விமான நிலையத்தொடர்பு எண்ணை வாங்கிகொண்டார்.

அடுத்து மற்றொரு நண்பன் வீட்டுக்கு அழைத்து வந்த தகவல் சொல்லி, கார் ஒன்று பேசி ஒரு வழியாய் இரவு பன்னிரண்டுக்கு பதிலாய் நாலரைக்கு சேர்ந்தேன். நெடுநாட்கள் கழித்து சந்திப்பதால் நிறைய பேசி அளவளாவினோம். தூக்கமில்லாமல் கடமைக்கு படுத்து எழுந்து அணிவதற்கான துணிகளும் வராது போன லக்கேஜில் இருந்ததால் கல்லூரியில் படிக்கும் மருமகனை அழைத்துக் கொண்டு ஆட்டோவில் சரவணா ஸ்டோர்ஸ் சென்றோம். அங்காடித்தெரு பாதிப்பில் அங்கு செல்ல வேண்டும், துணியினை எடுக்கவேண்டும் போல் எண்ணம் இருந்ததால் செயலில்.

’அவர்’ எனக்கு அழைத்து லக்கேஜ் காலை ஏர் இந்தியாவில் வரயிருப்பதாகவும், இன்னும் ஒரு மணிநேரம் கழித்து சென்றால் வாங்கிக்கொள்ளலாம் என சொன்னார். நடேசன் தெருவில் இறக்கிவிட அங்கிருந்து நடந்தது செல்கையில் சரவணா பாத்திரக்கடை பின்புறத்தில் சென்றோம்.சினிமாவில் பார்த்த ஏறக்குறைய தொண்ணூறு சதம் ஒத்துப்போன தங்கும் இடம், மற்றும் அவர்கள் புழங்கும் இடம் மனதிற்கு நெருடலாய் இருந்தது.

காலை வேளை, ரொம்ப பரபரப்பில்லாமல் இருந்தது. வரப்போகும் ஒரு நெரிசலான நாளை எதிர்கொள்ள தங்களை ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தார்கள். ஒரு பேன்ட், டி-ஷர்ட் மற்றும் பெர்ஃயூம் வாங்க விசாரித்து மாடியேற, சரிவர பதில் சொல்லவில்லை என்றாலும் ஏனோ அவர்களின் மேல் ஏனோ கோபம் வரவில்லை.

டி-ஷர்ட் வாங்க விசாரிக்கும்போது, நமது எதிர்ப் பார்ப்பை சொல்ல கடைசியாய் இருந்த இடத்தைக் காட்டினார்கள். அதிகம் எடுத்து காட்டச்சொல்ல மனமில்லாமல் அளவை சொல்லி, கண்களாலேயே பார்த்து இரண்டினை எடுத்து அதில் ஒன்றினை சட்டென எடுத்துக்கொள்ள, எடுத்துக் காண்பித்த பையனுக்கு வியப்பு. அதேபோல்தான் பேண்ட் வாங்குமிடத்திலும்.

பெர்ஃயூம் வாங்குபோதும் அங்கிருந்த ஒரு பெண்ணிடம் நல்லதாய் ஒன்று கொடுங்கள் என சொல்ல அவர் கொடுத்ததை மறுபேச்சில்லாமல் வாங்கிக்கொள்ள(வழக்கமாய் உபயோகிப்பதெல்லாம் லக்கேஜில் இருக்கிறது) அவருக்கு மெலிதாய் வெட்கச்சிரிப்போடு ஆச்சர்யம். உடை மாற்றுவது எங்கே எனக்கேட்க, பேஸ்மெண்டில் என சொல்ல, அங்கு சென்றோம்.

இருந்த ஒரே அறைக்குள் மேக்கப் செய்துகொண்டு பணிக்கு தயாராகும் சிறுவர்கள்(?). தலையை ரொம்ப நேரம் சீவி அழகு பார்த்துக்கொண்டு விதவிதமாய் தயாராக, உள்ளே சென்று தாழிட்டுக்கொண்டு உடை மாற்ற கொஞ்சம் நேரம் எடுத்துக்கொண்டேன். இருக்கும் ஒரே கண்ணாடியைப் பார்க்க அவசரம், பொறுமையின்றி கதவை தட்ட, வெளியே தலை வாரிக்கொள்ள ஆர்வமாய் இன்னும் சிலர். எல்லாம் பசங்கள்தானே என திறந்து வைத்தே உடைகளை மாற்றிக்கொண்டு, ம்....சூப்பர் என தலைவாரிக்கொண்டிருந்த ஒரு பையனிடம் சொல்லி சிநேகிதப்பார்வையோடு வந்தேன். அவர்களிடம் தான் எத்தனைக் கனவுகள்?

’அவர்’ லக்கேஜ் வந்து விட்டதாய் விசாரித்து சொல்ல, அங்கிருந்து நேராய் மின்சார ரயிலில் பயணித்து திரிசூலம். தங்கியிருந்த மவுண்ட் ஸ்டேஷனை கடக்கும்போது மனதிற்குள் பூச்சி பறந்தது. கண்ணில்லா பிச்சைக்காரர் அழகாய் 'புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே' என பாடி ஆழ்மனதுள் தாலாட்ட, மகிழ்ந்து அவரிடம் பணம் கொடுத்தேன்.பக்கத்தில் இருந்தவர் என்னை ஒரு மாதிரியாய் பார்த்தார். இன்னொருவர் ஆர்மோனியப் பெட்டியை அழகாய் கையாண்டு கணீர் குரலில் பாட, வசூலுக்கு ஒரு சிறுமி. முன்பு கொடுத்த அளவிற்கு கொடுக்க மனமில்லை, சிறுமியை வைத்து பிச்சை எடுப்பதாலோ? ஏழு வருடத்துக்குப்பின் மின்சார இரயில் பயணம், கொஞ்சம் வித்தியாசமாய் இருந்தது.

ஏர்போர்ட் வேலை நடந்து கொண்டிருப்பதால் மிகவும் சிரமமாய் இருந்தது. நெரிசல், ஆயினும் இன்னும் இரு வருடத்திற்குப்பின் சரியாகிவிடுமே என சமாதானம் சொல்லி, உள்ளே சென்று வந்திருந்த லக்கேஜினை ஆயிரத்தெட்டு சரிபார்த்தலுக்குப்பின் ஓரு வழியாய் வாங்கி வந்தேன். மருமகனிடம் கொடுத்து அனுப்பிவிட்டு அங்கிருந்து சென்னை அலுவலகம் சென்று எல்லோரையும் சந்தித்து, மதிய உணவுக்கு வெளியே சென்று அன்றைய பொழுதை மிக சந்தோஷமாய் கழித்தேன். மாலை எக்மோர் செல்லும் கம்பனி பஸ்சிலேயே செல்லும்போது சென்னையின் நெரிசலான அந்த மாலையினை ஆறு வருடங்களுக்குப்பின் சந்திக்க, திரும்ப சென்னைக்கு வரலாமென்றிருந்த எண்ணம் நீர்த்துப்போயிற்று.

அதற்குள் அவரின் அழைப்பு, எப்படி வரவேண்டும் என்றெல்லாம் அறிவுறுத்தல். பக்கத்தில் பேசிக்கொண்டு வந்த சென்னை அலுவலகத்தில் வேலைபார்க்கும் தோழியிடம் கொடுத்து பேருந்து வரும் விவரங்களை சொல்லச் சொன்னேன். அவரை சந்திக்கும் நேரம் வந்துவிட்டதால் அவரைப்பற்றிய எண்ணங்கள் என்னை முழுதாய் வியாபிக்க ஆரம்பித்தது.

அவரின், அவரின் எழுத்தின் மேல்தான் எனக்கு எத்தனை மரியாதை, காதல்?... அன்பாய் அறிவுறுத்தியும், ஆதரவாய் தோள்கொடுத்தும், உரிமையாய் தட்டி தவறுகளை சுட்டிக்காட்டியும்... அப்பப்பா, சொல்ல வார்த்தைகள் இல்லை. அப்படிப்பட்ட ஆதர்ஷ நாயகரை நேரில் சந்திக்கப்போகிறோமே எனும் பரபரப்பு, இனம் புரியா தவிப்பு என பல்வேறு எண்ணங்களால் ஆட்பட்டிருந்தேன்.

ஸ்பென்சர் தாண்டி இறங்கி, வந்த ஒரு ஆட்டோவைப் பிடித்து அவரின் சென்ட்ரல் அலுவலகம் அருகே வெளியே தவிப்போடு நின்றிருந்தேன். அதோ தொலைவில் வருவது அவரா? யோசிக்க, ஆஹா, அவரே தான். சராசரி உயரத்தில் நிறைய முடியுடன்... என்ன சொல்ல, கடவுளைக் கண்ட பரவசம், ஆரத்தழுவிக்கொண்டோம். ஆஹா, யூத் மாதிரியில்லை, யூத்தேதான் என நம்மைப் பார்த்து சொல்ல, தும்ம நேர்ந்தது. அருகிலிருந்த கடையில் குளிர்பானம் மற்றும் ஐஸ் மோர் பாக்கெட்டுகள் வாங்கிக்கொண்டு அதே ஆட்டோவில் மெரீனா பீச் சென்றோம்.

இனிமையான ஒரு மணிநேரம். என்ன சொல்ல, சிஷ்யனாய் அவர் சொல்வதை மெய்மறந்து கேட்க, என் வாழ்வின் மிகவும் சிறப்பான சந்தோஷமான தருணம் அது. நிறைய பேசினோம். நேரமானதால் திரும்ப ஆட்டோ பிடித்து எக்மோர் சென்று அங்கிருந்த ஒரு ஓட்டலில் இரவு உணவு முடித்து என்னை ஆட்டோவில் அனுப்பி சென்றார். (ஆட்டோ அனுபவங்கள் அடுத்த இடுகையில்)

அவர் என் ஆசான் வானம்பாடிகள் அய்யா! திருப்பதி சென்று பாலாஜியை தரிசித்த உணர்வு சென்னையில் என் அய்யாவை சந்தித்ததில் கிடைத்தது. அந்த அற்புத மனிதரை ஆசானாய், நண்பராய், வழிகாட்டியாய் தந்த இந்த வலையுலகிற்கு என் நன்றி சொல்லி, இன்று போல் எங்களின் நட்பு இறுதிவரை இருக்க எல்லாம் வல்ல இறையவனை வேண்டுகிறேன்..

முடியில்லை என பின்னூட்டத்தில் கும்முபவர்களுக்காக இதோ அய்யாவின் போட்டோவும் அவர் எடுக்கச் சொன்ன இன்னொரு போட்டோவும் மற்றும் அன்றிருந்த நானும்...

வலையுலகம் - தற்காலிக விடுமுறை...

|

வலையுலகத் தொடர்பு விடுத்து பத்து நாட்கள் அன்பான குடும்பத்தோடு கழித்து சந்தோஷமாய் சிங்கை திரும்பி வந்தேன். அதற்குள்தான் எத்தனை எத்தனை நிகழ்வுகள்? இடுகை எழுத வந்ததன் நோக்கமே எண்ணத்தை வெளிப்படுத்தி, மற்றோரின் மாசில்லா எண்ணங்களை பகிர்ந்துகொள்ளவும்தான். நடப்பு நிகழ்வுகள் நிச்சயம் நல்லதொரு நிலையில் இல்லை என்பதுதான் மிகவும் வருந்தக்கூடிய ஒன்றாயிருக்கிறது.

இருக்கின்ற பிரச்சினைகளை அதிகமாக்கி, தேவையில்லாதவற்றை நம்முள் வலியத் திணித்து நம்மை நாமாக இருக்க விடாத இந்த நிலையில், கொஞ்சம் எல்லாவற்றையும் விட்டு விலகி இருக்க்கலாமா எனத் தோன்றுகிறது.

இவரை ஆதரிப்போம், அவரை ஆதரிப்போம் என்றெல்லாம் வரிந்துகட்டிக்கொண்டு உள்மன உளைச்சல்கள், காழ்ப்புணர்ச்சிகளையெல்லாம் இடுகையிலேற்றி நேற்று இடுகையிட வந்தோரெல்லாம் பிரச்சனையின் சாராம்சம் தெரியாமல் கேள்விகள் கேட்டும் வசைபாடியும் கருத்துக்களை வாந்தியெடுத்தல் பார்த்து மனம் எண்ணிலாத் துயருறுகிறது.

கிடைத்த அன்பு உள்ளங்களை போற்றியும், நடந்த நல்ல விஷயங்களை அசைபோட்டும் சில நாட்களை வலையிலிருந்து விலகி, ஒரு தற்காலிக விடுமுறை எடுத்துக்கொள்வதாய் உத்தேசித்திருக்கிறேன். இந்த ஒய்வினை நிறைய படிக்கவும், எழுதவும் உபயோகப்படுத்தி, எல்லாம் சரியானபின் முந்தைய அதே உத்வேகத்தோடு வருவேன் எனச்சொல்லி அதுவரை உங்களுக்கெல்லாம் என் அன்பினையும் நன்றியினையும் சொல்லி விடைபெறுகிறேன்.

பிரபாகர்...

சுளுக்கு...

|

சற்றே நெடிய சிறுகதை...

அவசரமா ஆத்தூர் கிளம்பிட்டு இருந்தேன். அப்போ ஒரு கோஷ்டியே வீட்டுக்குள்ள வந்துச்சி. 'கிருஷ்ணா, உடனே கிளம்பு, இன்னிக்கி வஞ்சம் தீத்தாகனும்', சகாதேவன்.

என்னடா இது, தெலுங்கு பட வசனம் மாதிரி பேசறான்னு நினைச்சிட்டு, 'ஆமா, எங்க... எதுக்கு?' கேட்டேன். ’இன்னிக்கி நம்மோட பரம எதிரி மல்லியகரை டீமோட மேட்ச் இருக்கு, வின் பண்ணியே ஆகனும், கண்டிப்பா நீ வரனும்', ராஜா.

சுமாரா கிரிக்கெட் விளையாடுவேன், ஆன இந்த அளவிற்கு என்னைக்குமே மரியாதை இருந்ததில்ல. 'நாங்களும் எவ்வளவோ பாத்துட்டோம், யாரும் கிடைக்கல, அந்த நாய் மகேஷ் நம்ப வெச்சி கழுத்தறுத்துட்டு திடீர்னு சேலம் போயிட்டான். உன்னை விட்டா ஆளே இல்ல' ஜனார். அப்போதான் உண்மை தெரிஞ்சது, வழியில்லாம கூப்படறானுங்கன்னு.

'நான் வரலப்பா, மொதல்ல, தாத்தா கரன்ட் பில் கட்ட கடைசி தேதின்னு என் கிட்ட பணம் கொடுத்திருக்காரு. ரெண்டாவது செமெஸ்டருக்கு ஒரு மாசம்தான் இருக்கு, படிக்கனும்' நான்.

'ரொம்ப பிகு பண்ணாதப்பா, காலேஜ்ல படிக்கிற ஆளு, லெக் ஸ்பின் நல்ல போடுவே, பின்ச் ஹிட்டர், சூப்பரா ஃ பீல்டிங் பண்ணுவ' முரளி.

அவன் சொல்றது எந்த அளவுக்கு உண்மைன்னு எனக்கு ஏன் எல்லாத்துக்கும் தெரியும். இருந்தாலும் வாய்ப்ப விட மனசில்ல.

'கரண்ட் பில்லு...', 'என்ன மாம்ஸ், 5 மணி வரைக்கும் டைம் இருக்கு, மேட்ச் 15 ஓவர் தான், 10 மணிக்கு ஆரம்பிச்சாலும் ரெண்டு ரெண்டரைக்கெல்லாம் முடிஞ்சிடும். ஆத்தூர் நானும் உங்க கூட வர்றேன், போதுமா?' மகேந்திரன்.

எல்லோரும் என்னைவிட சின்ன பசங்கதான், ஆனா மகேந்திரனை தவிர எல்லோரும் பேர் சொல்லித்தான் கூப்பிடுவாங்க.

சைக்கிள்ல டபுள்ஸ், ட்ரிப்ள்ஸ்னு போய் சேந்தோம். போனவுடனே ஒரு ஷாக் நியூஸ் கிடைச்சது. யாரோ ராபினாம், அவங்க டீம்ல விளையாட போறானாம். திருச்சி காலேஜ் ஃபாஸ்ட் பவுலராம். சைட்ல அவன் பவுலிங் பிராக்டிஸ் பண்றத பாத்தே எங்களுக்கு டரியல் ஆயிடுச்சி. பவுண்டரி லைன் பக்கத்துல இருந்து பந்து போட ஓடி வந்தான். திடீர்னு மகேந்திரன் என்ன நினைச்சான்னே தெரியல,

'மாம்ஸ் நீதான் இன்னிக்கு கேப்டன்'னான். அதிசயமா எல்லோரும் பேசி வெச்சாப்ல,

'ஆமா கண்டிப்பா நீதான் இருக்கனும், வயசில, அறிவுல, அனுபவத்தில பெரிய ஆளு' முரளி. வழியில்லாம பலிகடா மாதிரி ஒத்துட்டு, டாஸ் வின் பண்ணி எல்லாரும் வழக்கமா எடுக்கிற பேட்டிங் எடுத்தோம்.

கெஞ்சி கேட்டாலும் அஞ்சி டவுன்க்கு முன்னால இறக்காதவனுங்க, அன்னிக்கி ஓப்பனிங் இறங்க சொன்னானுங்க. எல்லாம் ராபின் பயம்னு நல்லா தெரிஞ்சுச்சி.

'இல்லப்பா ஒன் டவுன் ஆடறேன்'னேன். 'என்னப்பா நீ, பயங்கரமான பிளேயர், ராபினும் காலேஜ், நீயும் காலேஜ், காலேஜுக்கு காலேஜ்...' சகா.

நிஜமாவே, நல்ல ஃபாஸ்டா போட்டான். கண்ணை மூடிட்டு சுத்தினேன். நல்லா கனெக்ட் ஆக, மொத பாலே சிக்ஸர், ஸ்கூல் காம்பவுண்ட்க்கு வெளியே போய் விழுந்துச்சி. ஜஸ்ட் தொட்டேன், அவ்வளோதான், அப்போ எவ்வளோ ஸ்பீட்னு பாத்துக்கோங்க.

ரெண்டாவது பால், கனெக்ட் ஆகல பேட்லயும், கீப்பர் கிட்டேயும். பைஸ் ஃபோர். மூனாவது பால் கொஞ்சம் ஸ்லோவா போட, லெக் சைட்ல தட்டிவிட்டேன், நேரா கைக்கு போனத மிஸ் பண்ண லைஃப், நாலு ரன்கள்...

நாலாவது பால் தான் இந்த இடுகைக்கு முக்கியம். ஸ்கொயர் லெக்-ல தட்டிவிட வேண்டாம்னு சொல்லியும் கேட்காமல் வேகமா ஓடி ரன் எடுக்க ட்ரை பண்ணி, தடுமாறி விழுந்தேன். கால் பிசகி கணுக்கால் கிட்ட நல்லா சுளுக்கிடுச்சி.(ரன் அவுட். மொத்தமா அடிச்சது 50 ரன், அவனுங்க 45 ஆல் அவுட், அதப்பத்தி தனியா எழுதலாம், அந்த அளவிற்கு சுவராசியமா இருந்திச்சி)

கால பிடிச்சு நல்லா உறுவி விட்டானுங்க. வலி உயிரே போற மாதிரி இருந்துச்சி. சைக்கிள்ல என்னை ரெண்டு பேர் கைத் தாங்கலா தூக்கி வெச்சி ('என்ன மாம்ஸ் சப்பிடற, இந்த கணம் கணக்குற?') மெதுவா வீட்டுல கொண்டு வந்து விட்டானுங்க.

கணுக்கால் கிட்ட பன்னு மாதிரி உப்ப ஆரம்பிச்சிடுச்சி. கால ஊனவே முடியல. தாங்கலா ரெண்டு பேரை புடிச்சிட்டு ஒத்த கால்ல நொண்டிட்டே உள்ள போனேன்.

'பரதேசி நாயிங்க, சும்மா இருந்த என் பேரனை கூட்டிட்டு போயி கால முறிச்சு கொண்டாந்துட்டானுங்க' அம்மாவொட பாட்டி அது பங்குக்கு மொத ஆளா ஆரம்பிச்சது.

'இது தேவையா, உனக்கு அறிவே கிடையாது' , இது என் சித்தி.

'எத்தனை சொன்னாலும் திருந்த மாட்டே' ஆயா.

'செய்யற வேலை விட்டுட்டு செனை ஆட்டுக்கு... கரன்ட் பில்ல கட்டிட்டு வாடான்னா, கால்ல கட்டிகிட்டு வந்திருக்கான்' தாத்தா.

அதுக்குள்ள பாட்டி, தாசன்ங்ற ஆளை கூட்டிட்டு வந்துச்சி. பாடம் போடறவறாம். வரும்போதே லேசா உந்தி உந்தி வந்தாப்ல. 'ஆயி, ஒரு சீவாங்குச்சி எடுத்துட்டு வாங்க, அப்படியே திரு நீறு'

'எப்படி கண்ணு ஆச்சுன்னு வீங்குன இடத்த புடிச்சி நல்ல அழுத்தி பாக்க, வலியில துடிச்சிட்டேன், கண்ணுல்ல மாலை மாலையா தண்ணி.

'படிச்சவன் இப்படிய அழுவறது?' தாத்தா. 'எனக்குத்தானே வலியெல்லாம்' மனசுக்குள்.

குச்சியால உடம்பெல்லாம் நீவி விட்டாரு, கடைசியா ஒரு பிடி திருநீற வாயில திணிச்சாரு. நெத்தியில கொஞ்சம் வெச்சுட்டு, 'கலையில கப்புனு சரியாயிடும்'னு சொன்னாரு.

'ஆமா ஏன் காலை லேசா நொண்டி வந்தாப்ல தெரிஞ்சது, என்னாச்சுன்னு' கேட்டேன். 'கால் பெசகிடுச்சி, அதான்'னாரு. 'உங்களுக்கேவா' ன்னு கேட்டதுக்கு, ’ஆளானப்பட்ட சிவனையே சனி பிடிச்சிருக்காரு, அதுவும் இல்லாம என் வைத்தியம் எனக்கு பலிக்காதுல்ல' ன்னு ஏதோ சொன்னாரு.

கால் நல்லாவே வீங்கிடுச்சி. பாட்டி புளியந்தழை, ஊணாந்தழையை வேகவெச்சு கட்டிவிட்டுச்சி. விடிய விடிய தூக்கம் வராம காலையே பாத்துட்டு இருந்தேன். காலையில வீக்கம் அவ்வளவா இல்ல, ஆனா கால ஊன முடியல. வீட்டிலேயே இருந்தேன். வழியில்லாம பாட புத்தகத்தை படிச்சேன். 'ஒழுங்கா படிக்கனும்னா இந்த மாதிரி ஏதாச்சும் ஆகனும் போல இருக்கு' தாத்தா.

சாயந்திரமா வள்ளி அக்காவ ஆயா அழச்சுட்டு வந்தாங்க, சுளுக்கு எடுக்கறதுல ஸ்பெசலிஸ்டாம். விளக்கெண்ணையை தொட்டு, கால்ல தடவி மெதுவா அழுத்தி, 'இங்க வலிக்குதா, இங்க வலிக்குதா'ன்னு கேட்டுச்சி.

ஒரு இடத்துல தொடும்போதே உயிர் போற மாதிரி இருந்தது. கத்தவும் அந்த இடத்தயே வசமா புடிச்சுடுச்சி. அழுத்துன அழுத்துல கதறி, நிறைய கூட்டம் கூடி போச்சு. சுத்தி நின்னு வேடிக்கைப்பார்த்த அத்தனை பேரையும் நினைச்சா இப்ப கூட வெட்கமா இருக்கு.

'புளியங்கொட்டை பத்து போடுங்க ரெண்டு நாள்ல சரியாயிடும்'னு சொல்லிட்டு போச்சு. அதையும் செஞ்சோம், எந்த முன்னேற்றமும் இல்ல. காலைல நொண்டி நொண்டி நடந்து வெளியே வந்தேன். பக்கத்துல டீ கடையில பேப்பர் படிக்கலாம்னு போனேன்.

’என்ன கண்ணு நொண்டறே? சுளுக்கா’ சந்திரன் அண்ணன் கேட்டரு. ஆகா அடுத்த வைத்தியம் ஆரம்பிச்சுடுச்சின்னு நினைச்சிட்டு ஆமான்னேன்.

'இது தான் மேட்டரா, உடனே சரி பண்றேன், வண்டியில உட்காரு' ன்னு இழுத்து உட்கார வெச்சி டி.வி.எஸ் - ல சல்லுனு கிளம்பிட்டாரு.

வண்டியை அவர் வளைச்சு வளைச்சு ஓட்டும்போதுதான் அவர் நல்லா போதையில இருக்கார்னு தெரிஞ்சது. திகிலோடு உயிரை பிடிச்சுட்டு போனேன். நேரா பக்கத்துல இருந்த நடவுக்கு ஓட்டி போட்டிருந்த வயல் பக்கத்துல நிப்பாட்டிட்டு,

'சுளுக்கின காலை சேத்தில நல்லா அழுத்தி ஊனு' ன்னாரு.

அப்போதான் எனக்கு அந்த விபரீதமே புரிஞ்சது. தப்பிச்சி ஓடவும், சாரி நடக்க கூடமுடியல. வலுக்கட்டாயமா என் காலை புடிச்சி சேத்துல அழுத்திட்டு, 'ம், பட்டுனு வெளியே இழு' ன்னாரு.

அசைச்சாவே வலிக்குது, எங்க இழுக்கறது? ஆண்டவன் புண்ணியத்துல ஆள உட்டா போதும்னுட்டு எப்படியோ கஷ்டப்பட்டு வெளியே இழுத்தேன். அப்போ நினைச்சது என்னான்னா, 'என் எதிரிக்கும் இந்த நிலம வரக்கூடாது'

'நீ சொல்லறதயே கேட்க மாட்றே, பட்டுனு இழுத்தாத்தான் சரியாகும், சரி சரி, தண்ணியில கால கழுவிட்டு வரலம்னு தூரத்துல ஓடிக்கிட்டிருந்த மோட்டார் கொட்டாய காட்டினாரு. இல்ல இல்ல வீட்டுக்கு போயி கழுவிக்கிறேன் மொதல்ல வண்டிய எடுங்கன்னேன்.

வேகமா கிளப்பினாரு, 'அண்ணா பாத்து மெதுவா'ன்னேன். 'எவ்வளோ போதையில இருந்தாலும் செடியா இருப்பேன்' னாரு..

ஏதேதோ பேசிட்டு வீட்டுக்கு பக்கமா வரும்போது, ரோடு போட வெச்சிருந்த ஜல்லியில வண்டிய விட தடுமாறி கீழ விழுந்தோம். நல்ல வேளை நான் மணல்ல பேலன்ஸ் பண்ணி விழுந்தால அடி ஒன்னும் இல்ல. ஆனா அவரு மேல டி.வி.எஸ் கவுந்து, சைலன்ஸர் கால சுட்டு, காலும் நல்லா பெசகிடுச்சி. போதை தெளிஞ்சி கத்த ஆரம்பிச்சிட்டாரு. அப்புறம் அவரு விவரமா ஆஸ்பத்திரிதான் போனருங்கறது தனி கதை.

பாட்டி வெளிய போயிருந்த சமயத்துல நைசா சகாதேவன் வந்தான். 'கிருஷ்ணா எப்படி இருக்கே'ன்னான். 'டேய் பாட்டி' ன்னேன்.

'அந்த கிழவி இப்போதான் அந்த பக்கம் போகுது, பாத்துட்டுதான் வரேர்ன்' அவன் கோவத்த தீத்துகிட்டான்.

'சரி சரி, ரெடியா இரு. அஞ்சரை வாக்கில சுருட்டை கிழவாடிகிட்ட போகனும், உடனே சரியாயிடும்'னு சொல்லிட்டு, 'பாட்டி வருது' ன்னுட்டு எஸ்கேப் ஆயிட்டான்.

பக்கத்துல இருந்த மலையடிவரத்துக்கு கூட்டிட்டு போனான். தொன்னூறு வயசுக்கு மேல இருக்கும். முறுக்கேறிய உடம்பு. நிறைய சுருக்கம். அதிகம் பேசலை. சகாவ வாழை நார் கொண்டு வரச்சொன்னாரு.

உட்கார்ந்து காலை நீட்ட சொல்லி கால் விரலுக்கு கீழே குச்சியை வெச்சி, வாழை நார்ல விரலுக்கு குறுக்கே விட்டு நல்ல இறுக்கி கட்டினாரு. ரெண்டு பக்கமும் குச்சி கொஞ்சம் நீட்டிட்டு இருந்துச்சி. புதுமையாவும் வலி இல்லாமலும் இருந்துச்சி, ஏன்னா அவர் வலிக்கிற இடத்தை டச் பண்ணவே இல்ல. சைட்ல சகாதேவன் சின்ன கடப்பாரையில எதோ குழி நோண்டிட்டு இருந்தான்.

'தாத்தா போதுமா' ன்னான். கால்ல வெச்சு கட்டின மாதிரியே இன்னொரு குச்சியால ஆழம், பக்கவாடுலன்னு வெச்சி பாத்துட்டு சில கரெக்சன் சொன்னாரு.அப்புறம் ஒரு துண்டை விரிச்சி அதுல குப்புற படுக்க சொல்லி, என் காலை அந்த குழிக்குள்ள திணிச்சி மண் போட்டு மூடி நல்ல தாணிச்சாங்க. இதுவும் ஒரு சேத்து டைப் வைத்தியம்னு புடிஞ்சிட்டேன்.

கடைசியா சின்னதா ஒரு துண்டை என் கால்ல கட்டி வெருக்குன்னு இழுத்தாங்க. வலி பயங்கரமா இருந்தாலும், சேத்தளவுக்கு இல்ல. உப்ப எண்ணையில போட்டு சூடாக்கி கட்ட சொன்னாரு. வெத்தல பாக்குக்கு காசு கொடுத்ததுக்கு கோபமா மறுத்துட்டாரு. நைசா வீட்டுக்கு பின் பக்கமா வந்து விட்டுட்டு போயிட்டான். கொஞ்சம் நடக்க முடிஞ்சது.

கோயமுத்துர்ல இருது மாமா ஃபோன் பண்ணினாரு.எல்லா விஷயத்தையும் முன்னாடியே தெரிஞ்சிட்டுப்பார் போல.

'ஏன்டா, படிச்சவன் பண்றதாடா இது, ஹேர் பிரக்சரா இருக்க போகுது, எக்ஸ்-ரே எடுத்து பாரு, மொத வேலைய நாளைக்கு ஆஸ்பத்திரி போற வேலையை பாரு'ன்னாரு.

சரின்னு தலையட்டிட்டு, இன்னும் ஒரு நாள் எல்லா வைத்தியத்தையும் செஞ்சிட்டிருந்தேன். சாயங்காலம், மாமாவோட கடைக்கு மெதுவா போனேன்.

'என்ன கிருஷ்ணா ஆளையே காணும்'னாரு. எல்லாத்தையும் சொன்னேன். ’அட இதுதானா’ (இன்னொரு வைத்தியம் வரப்போவுது) 'இந்தா, இந்த பிளாஸ்டர போடு' ன்னு அவரே போட்டுவிட்டாரு.

அலைச்சல்ல நல்ல தூக்கம். காலையில எழுந்து பாத்தேன். கால்ல சுத்தமா வலியில்ல, வீக்கமும் இல்ல. ரொம்ப சந்தோஷமா இருந்துச்சி. துள்ளி துள்ளி குதிச்சேன். ஆமா எந்த வைத்தியத்துல எனக்கு சரியாச்சுன்னு யோசிச்சேன்.

'என்னா சரியாயிடுச்சா, இனிமே வீடு தங்க மாட்டான்' தாத்தா

'எல்லாம் அந்த மகமாயிதான் காரணம்' பாட்டி.

காலண்டர பாத்தா, ஞாயிற்று கிழமை, ஒரு வாரம் ஆயிடுச்சி. நாள் போனதே தெரியல. தூரத்துல அதே கோஷ்டி வீட்ட நோக்கி வந்துட்டிருந்தது.

உடனே பதறி, 'சித்தி நான் இல்லன்னு சொல்லிடுங்க' ன்னுட்டு வேகமா வீட்டுக்குள்ள ஓடினேன். கீழ தண்ணி கொட்டி இருந்தத கவனிக்காம சறுக்கி கீழ விழ பலமான அடி, அடுத்த கால்ல அதே மதிரி சுளுக்கிடுச்சி.

மொதல்லயாவது பரவாயில்ல விளையாடி, ஆனா இப்போ....,ஹலோ, ஏதாச்சும் வைத்தியம் தெரிஞ்சா சொல்லுங்களேன், ப்ளீஸ்...

மாற்றங்களுடன் கூடிய மீள் இடுகை...

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB