ஏப்ரல் ஃபூல்...

|

இங்க என்னோட ஃபிரண்டு மணியப்பத்தி சொல்லியே ஆகனும். பயங்கரமா நம்பறமாதிரி நிறையா சொல்லுவான். எத்தன முறை ஏமாந்தாலும் அவன் சொல்ற ஒவ்வொரு விஷயமும் நம்பற மாதிரித்தான் இருக்கும். வருஷம் முழுசும் ஏமாத்தினாலும் ஏப்ரல் ஒன்னு அன்னிக்கு கொஞ்சம் விஷேசமா பண்ணுவான்.

முன்னாடி அவன் பண்ணின சில விஷயங்கள பாருங்களேன்...

ஆத்தூர்ல அயர்ன் ஃபிளவர்ஸ்னு ஒரு படம் போட்டிருக்கான், சூப்பரா இருக்காம்னு சொல்லி கூட்டிட்டு போனான். போனதுக்கப்புறம்தான் தெரிஞ்சது இரும்புப் பூக்கள்னு கார்த்திக் படம்...

இன்னொரு வருஷம் கிரிக்கெட் விளையாண்டுக்கிட்டிருந்தப்போ பதட்டமா வந்தான். 'என்னய்யா பண்ணின, அண்ணன் (என் அப்பாவை அப்படித்தான் கூப்பிடுவான்) ரொம்ப கோபமா இருக்காரு' ன்னான்.

'ஒன்னும் பண்ணலையே மணி' ன்னு சொன்னதுக்கு ’வாழ்க்கையில இவ்ளோ கோபமா பாத்ததே இல்ல, எங்க இருந்தாலும் கூட்டிகிட்டு வரச் சொன்னாரு’ ன்னான்.

ஆட்டத்த பாதியிலயே விட்டுட்டு அவசரம் அவசரமா தவிப்பா வீட்டுக்கு போனதுக்கு அப்புறம்தான் அவரு ஆபீஸ் விஷயமா வெளியூருக்கு போயிருக்கிறதும், ரெண்டு நாள் கழிச்சித்தான் வருவாருங்கறதும் ஞாபகத்துக்கு வந்துச்சி.

இன்னுமொரு வருஷம்... முறைக்காதீங்க, சொல்லல. இந்த மாதிரி நம்மல படுத்திகிட்டிருக்கிற மணிக்கிட்ட இந்த வருஷம் ரொம்ப ஜாக்கிரதையா இருக்கனும்னு முடிவு செஞ்சேன். இதுக்கு முன்னால தெரியாம ஏமாந்துட்டோம், இந்த தடவ உஷாரா இருக்கனும்னு தயாரா இருந்தேன், ஏப்ரல் ஒன்னுங்கறது ரொம்ப நல்லாவே ஞாபகம் இருந்துச்சி.

காலையிலேயே வீட்டுக்கு வந்தான். 'காட்டுல ஒரு பெரிய பாம்பு கரண்டுல மாட்டுச்சிய்யா, வந்து பாக்குறியா’ ன்னான். நெல்லு வயல்ல எலித்தொல்லைக்காக கரண்ட் போடுவாங்க. அதுல எலி, பாம்புன்னு நிறைய மாட்டும்.

எனக்கு ஒரு பெரிய செத்த பாம்ப பாக்கனும்னு ஆசை, அவங்கிட்ட மொதல்லயே கேட்டிருந்தேன். ஏப்ரல் ஒன்ன நினைச்சிட்டு ’இல்ல மணி இன்னொரு நாள் பாத்துக்கலாம்’ னு சொன்னேன்.

'பொய்யில்லய்யா நிஜமாத்தா சொல்றேன்’ னுட்டு அங்க வந்த பக்கத்து வீட்டு மாமாகிட்ட, 'மாமா ஆத்துல ஒரு பெரிய பாம்ப உங்ககிட்ட காமிச்சந்தானே' ன்னு கேட்க ஆமான்னு அவரு தலையாட்டினாரு.

'நம்புய்யா வாழ்க்கையில' ன்னு சொன்னதுக்கு அப்புறம், போயி பாத்தோம், அப்புறமா அங்க இங்கன்னு போனோம். ஆத்தூர், விரகனூர்னு டி.வி.எஸ்.ல போயிகிட்டே இருந்தோம். நிறையா வேலை வெச்சிருந்தான். சாயந்திரம் வரைக்கும் வீட்டுக்கே வரல.

கடைசியா வீட்டுக்கு வரும்போது மனசு விட்டு கேட்டுட்டேன், 'மணி இன்னிக்கு ஏப்ரல் ஒன்னு தெரியுமா? ஞாபகம் இருக்கான்' னு கேட்டேன்.

'ஞாபகம் இல்லாமய காலையில இருந்து உங்கூட இருக்கேன்' ன்னு சொல்லிட்டு ’ஏப்ரல் ஒன்னுக்கு உன்னை எதுவுமே பண்ணலன்னு தானே கேக்கறே' ன்னு கேட்டான்.

'ஆமா மணி, காலையில இருந்தே எதிர்பாக்கறேன் ஒன்னுமே நீ பண்ணல...' ன்னு சொல்லவும்,

'பண்ணுவேன் பண்ணுவேன்னு எதிர்ப் பார்த்துகிட்டிருந்து, இப்போ நடக்காம ஏமாந்து போயிட்டல்ல' ன்னு சொல்லி சிரிச்சிட்டு, 'அதெல்லாம் இல்லை வீட்டுக்கு போ தெரியும்' னு சொல்லிட்டு வண்டியில இருந்து இறங்கி அவங்க வீட்டுக்கு போயிட்டான்.

வாசல்யே பாபு டென்ஷனா கொதிப்பா உக்காந்திருந்தான், பாத்துட்டு ஷாக் ஆயிட்டேன். அவன மதியமா வரச் சொல்லியிருந்தத சுத்தமா மறந்துட்டேன், பவானியில இருந்து வந்திருக்கிறான்.

ரெண்டுபேரும் சேர்ந்து ஒரு கோவிலுக்கு போலாம்னு பேசி வெச்சிருந்தோம். காலையில பாம்புல ஆரம்பிச்சி சாயந்திரம் வரைக்கும் அங்க இங்கன்னு மணிகூடயே சுத்திகிட்டிருந்ததில சுத்தமா மறந்துட்டேன். மணிகிட்ட மொதல்லயே சொல்லியிருந்தேன், அதான் வீட்டுக்கு வராம இழுத்துகிட்டு அலைஞ்சிருக்கான்!

அவன் டென்ஷனாயி கத்த, சமாதானப்படுத்த பட்ட பாடு இடுக்கே, சொல்லி மாளாது... இப்ப நினைச்சாலும் டரியலா இருக்கு...

சிலேட்டு பென்சில், சீருடை, புத்தகப்பை...

|

விவரம் தெரிந்த சிறிய வயதிலிருந்து இன்றுவரை ஒவ்வொரு விஷயத்திலும் பல்வேறு மாற்றங்களைப் பார்த்து வந்திருக்கிறோம். இன்றைய காலகட்டத்தில் எப்படி இருக்கிறது என நமக்கெல்லாம் தெள்ளென தெரிந்தாலும் பழையனவற்றை திரும்பிப் பார்க்கும் வரிசையில் முதலாவதாய் ஆரம்பப்பள்ளியின் சிலேட்டு பென்சில், சீருடை, புத்தகப்பை...

சிறு வயதில் இரு இடங்களில் நுழையும்போது மனம் கொஞ்சம் பயப்படும், ஆர்ப்பரிக்கும் எண்ணங்கள் அடங்கி சாந்தமாகும், அவை கோவில் மற்றும் பள்ளி. தப்பு செய்தால் சாமி கண்ணை குத்திவிடும், ஆசிரியர் அடித்து விடுவார் எனும் பயத்தின் காரணமாயும் அல்லது பெற்றோர் மற்றும் சுற்றத்தார் நம்மை வழிநடத்தியதாலும் இருக்கலாம்.

ஆசிரியர்கள் கடவுளுக்கு நிகராக மதிக்கப்பட்டு வந்தார்கள். அவர் சொல்வதுதான் மிகச் சரி என்பது பெரும்பாலானவர்களின் கருத்தாக இருக்கும். வீட்டில் அடங்காத பிள்ளைகள் கூட ஆசிரியரிடம் சொல்கிறேன் என சொன்னால் மறுபேச்சில்லாமல் மறுக்காமல் கேட்க ஆரம்பித்து விடுவார்கள்.

மஞ்சள் கலரில் ஒரு ஜவுளி கடை துணிப்பை (நம்மள மாதிரி ஆளுங்க), வயர்களால் பின்னப்பட்ட பை(பெரும்பாலும் மாணவிகள் கொண்டு வருவார்கள்), பூ வேலைப்பாடுகளுடன் கூடிய துணிப்பை (வசதிக்கார பசங்க), வெள்ளை நிற உர சாக்குகளில் செய்யப்பட்ட சாக்குப்பை (நம்ம விட கொஞ்சம் வசதியானவங்க) போன்றவைகள் தான் பெரும்பாலும் புத்தகம் சிலேட்டு நோட்டுகளை சுமக்க உதவின.

அப்போது சீருடை என்பது ஆரம்ப வகுப்புகளுக்கு கிடையாது. போட்டு வரும் துணிகளே அவர்களின் வசதியினை பறைச்சாற்றும். துவைத்து மாற்றி மாற்றி போட்டு வருவதற்கும், சலவை செய்து தினமும் ஒன்றாய் போடுவதற்கும் வித்தியாசம் இருக்கிறதல்லவா? ஆசிரியரே பார்த்து திட்டி துவைத்து போட்டுவரச் சொல்லுமளவிற்கு ஒரே டிராயர் சட்டையை போட்டும் வசதி குறைவான மாணவர்களும், கிழிந்த டிரயருடன் போஸ்ட் ஆபிஸ் என கிண்டல் செய்யுமாறு போட்டு வருபவர்களும் என எல்லா விதத்திலும் கலந்து இருப்பார்கள்.

ஆசிரியர்கள் மாணவர்களை ரொம்பவும் அழுக்காக போட்டு வராதபடியும், பொத்தான்கள் இல்லை என்றால் ஊக்கு குத்தியாவது வரவேண்டும் எனவும், கிழிந்திருந்தால் தைத்து போட்டு வரவேண்டும் என்று அன்பாய் சொல்லியும், அடுத்து திட்டியும், அதன்பின் அடித்தும் பார்த்துக்கொள்வார்கள். கந்தையானாலும் கசக்கிக்கட்டு, கூழானாலும் குளித்துக்குடி என்பவை சுத்தமாய் இருப்பதற்கு அவர்களால் அதிகம் உபயோகப்படுத்தப்பட்டவை.

சிலேட்டு பென்சில்தான் (பல்பம் என கேள்விப்பட்டதோடு சரி, எங்கள் பக்கத்தில் பென்சில்தான்) ஆரம்ப நிலையில். குச்சி பென்சில், கட்டை பென்சில் என இரண்டு இருக்கும், குச்சி உருண்டையாயும், கட்டை தட்டையாயும் இருக்கும்.

குச்சி பென்சில் கல் சிலேட்டில் மட்டும் நன்றாக எழுதும், நிறைய எழுதுவதற்கு வரும். கட்டை பென்சில் நன்றாக எழுதும் அதே சமயம் சீக்கிரம் தீர்ந்துவிடும். பென்சில் திருட்டுக்கள் சாதாரணமாய் நடக்கும். பண்ட மாற்றுக்கு பென்சில்கள் பெரிதும் உதவியாயிருக்கும். வீட்டில் இருந்து கொஞ்சம் தின்பண்டம் கொண்டுவந்தால் போதும், நிறைய பென்சில்கள் பதிலுக்கு கிடைக்கும். (தாத்தா வீட்டிலிருந்து படிச்சப்போ கரும்பு வெட்டி வெல்லம காய்ச்சி வித்ததால அச்சுவெள்ளம் பண்ட மற்றுக்கு ரொம்ப உதவியா இருந்துச்சி)

சிலேட்டுகளில் இரண்டு வகை இருக்கும். கல் சிலேட் மற்றும் தகர சிலேட். கல் சிலேட்டில் எல்லா பென்சில்களும் நன்றாக எழுதும், ஆனால் தகர சிலேட்டில் கட்டை பென்சில் மட்டும்தான் நன்றாக எழுதும். கல் சிலேட் கீழே விழுந்தால் உடைந்துவிடும், நிறைய கவனமெடுத்து பார்த்துக்கொள்ள வேண்டும்.

பெரும்பாலும் எச்சில் போட்டுத்தான் சிலேட்டுக்களை அழிப்பது வழக்கம். வாத்தியார், வீட்டில் யாராவது திட்டினால் மட்டும் தண்ணீர் தொட்டு. தினமும் தவறாது வீட்டுப்பாடம் எழுதிவர வேண்டும். ஆசிரியர் அதை பார்த்து அவரது முத்திரையை சிலேட்டிலும், இல்லையென்றால் முதுகிலும் பதிப்பார்.

கொண்டு வரும்போது புத்தகங்களுக்கிடையே வைத்து எழுதியிருக்கும் வீட்டுப்பாடம் அழியாமல் எடுத்து வருவது, பையை தூக்கிப் போட்டாலும் உடையாத அளவிற்கு பக்குவமாய் வைப்பது என சிலேட்டுக்களை பராமரிக்க நிறைய மெனக்கிட வேண்டும்.

எழுதுவது பளிச்சென்று தெரிய சிலேட்டுக்கு கரி போடவேண்டும். கரி, ஊமத்தந்தழை இரண்டையும் சேகரித்து யாரும் பார்க்கவில்லையென்றால் நெல் குத்தும் உரலிலிலும், இல்லையென்றால் கல்லை வைத்து மசிய இடிக்க வேண்டும்(உரல வீணாக்கி புட்டானுங்க பாவின்னு திட்டு வாங்கறது தனி கதை).

பின் அந்த விழுதை சிலேட்டுக்களில் அப்பி நன்றாக காய வைத்து, காய்ந்தவுடன் எழுதும்போது பளீரென எழுத்துக்கள் தெரியும்போது முகத்தில் மலர்ச்சியும், சந்தோஷமும் பூரித்து அப்படி ஒரு நிறைவை கொடுக்கும்.

சார் என்னை அடித்துவிட்டன், கிள்ளிவிட்டான், எச்சில் துப்புகிறான், எனது புத்தகத்தை கிழித்துவிட்டான் என முறையீடுகளும் அதற்கு குச்சால் ஏற்றார்போல் பரிகாரங்களும் நடக்கும்.

டிக்டேஷன், சிறு கணக்குகள் போடுதல், சொல்லித்தரும் பாடல்களை ஒப்பித்தல், மாலையானல் மணலில் புறண்டு விளையாடல் என பொழுது இனிமையாய் கழியும்.

பரீட்சைக்கு வசதியிருந்தால் கிளிப் வைத்த அட்டை, இல்லையென்றால் தினசரி காலண்டரின் அட்டை என எடுத்துக்கொண்டு செல்லவேண்டும் மூன்று வகுப்புகளுக்கு மேல். அதற்குக் கீழ் சிலேட்டுத்தான் எல்லாம்.

சுருங்கச்சொன்னால், குறைவாய் படித்து, நிறைய விளையாடி மிக சந்தோஷமாயிருந்த தருணம் அது...

வலச்சரத்தில் இன்று நான்காம் நாள். சென்று பாருங்களேன்...

சிகரெட், பி.டி.ஓ மற்றும் பிரபாகர்...

|

ஆத்தூரிலிருந்து எங்க ஊருக்கு போறதுக்காக பஸ்சில லாஸ்ட் சீட்டுல உக்காந்திருந்தேன். பக்கத்துல பி.டி. வாத்தியார் உக்காந்திருந்தாரு. படிப்ப பத்தியெல்லாம் கேட்டுகிட்டிருந்தார். நல்ல மத்தியான நேரம், ஒரே புழுக்கமா இருந்துச்சி. வண்டி எப்போ கிளம்பும்னு காத்துகிட்டிருந்தோம்.

முன்னாடி, படிக்கு பக்கத்துல வெள்ளை சட்டை, வெள்ளை வேஷ்டியோட ஒருத்தர் உக்காந்திருந்தாரு. சிகரெட்ட பத்தவெச்சி ஜன்னல் கேப்பில வெளிய ஊதிக்கிட்டிருந்தாரு.

அப்பப்போ காத்தடிச்சா புகை உள்ளே வர ஏற்கனவே இருந்த புழுக்கத்துல, புகை வேற மனுஷன் உசிர எடுத்துகிட்டிடுந்துச்சி. ஒரு சிகரெட்டுக்கு பொறுத்திட்டிருந்த எனக்கு, அடுத்தத பத்தவெக்கும் போது அப்படியே கோவம் பொத்துகிட்டு வந்துச்சி.

அவரோட தோள தட்டி, 'அலோ கொஞ்சம் கூட மேனர்ஸ் இல்ல, பஸ்ஸில உக்காந்து விடாம குடிச்சிகிட்டிருக்கீங்க, நாங்கல்லாம் இருக்கிறத வேணாமா’ ன்னு சத்தமா சொல்ல அவர் அப்படியே ஆடிப் போயிட்டாரு. பத்தவெச்ச சிகரெட்ட அதிர்ச்சியில கீழ போட்டுட்டு அப்புறமா எடுத்து அணைச்சி வெளியில போட்டுட்டு தலையை குனிஞ்சிகிட்டாரு.

பக்கத்துல சார் கேட்டாரு, 'பிரபு அவர் யாரு தெரியுமா? நம்ம யூனியன் ஆபிஸ்ல வட்டார வளர்ச்சி அதிகாரியா இருக்காரு' ன்னாரு, சுருக்குன்னுச்சி, சமாளிச்சி 'சார் உங்களுக்கு இன்னொரு விஷயம் தெரியுமா? எங்க அப்ப அவருக்கு கீழ சமூகக் கல்வி அலுவலரா வேலை பாக்கறாரு’ ன்னு சொன்னேன்.

சயங்காலம் அப்பா வந்தவுடனே, 'உங்க பி.டி.ஓ எப்படிப்பான்னு கேட்டேன்'. 'அந்தாளு ஒரு செயின் ஸ்மோக்கர், ஏன் கேக்கற' ன்னு கேட்டாரு. நடந்தத சொல்ல, 'ஒனக்கு இது தேவையா'ன்னாரு.

ரெண்டு வாரம் கழிச்சி மாசந்தர செலவுக்கு காசு வாங்க ஊருக்கு வந்தப்போ அப்பா சம்பளம் வாங்கி தர்றேன்னு சொன்னதால ஆபிசுக்கு வரட்டுமான்னு கேக்கறதுக்கு போன் அடிச்சேன், வாங்கிட்டு அப்படியே காலேஜ் போயிடலாம்னு.

'ஹலோ நான் பி.டி.ஓ. பேசறேன்'னு சொல்லவும் 'சார் நான் ராமசாமியோட சன் பேசறேன், அப்பாவ கொஞ்சம் கூப்பிடறீங்களா' ன்னு கேட்டேன். ஆபீஸ்ல ரெண்டு ராமசாமி இருப்பாங்க போல.

அவரு 'எந்த ராமசாமி' ன்னு கேக்க, 'பட்டை ராமசாமி'ன்னு சொல்ல சிரிச்சிகிட்டே 'என்னது'ன்னு கேக்க, 'ஆமா சார், நெத்தியில பட்ட போட்டிருப்பாரே அத சொன்னேன்' னு சொன்னேன். 'ஓ, எம்.சி.ஏ படிச்ச்சிகிட்டிருக்கிறதா சொன்னாரே, அந்த பையனா, சரி வந்தா என்ன பாத்துட்டு போ' ன்னு சொன்னாரு.

'இல்ல சார் வேணம், என்ன மொதல்லயே பாத்திருக்கீங்க' ன்னு இழுத்தேன். 'எப்போ' ன்னு கேட்க, 'அன்னிக்கு பஸ்ஸில சிகரெட் புடிச்சத கேட்டது நாந்தான்' னு சொல்லவும், 'ஓ அந்த பெரிய மனுஷன் நீங்க தானா, அவசியம் என்ன பாத்துட்டுத்தான் போற' ன்னு சொல்லிட்டு அப்பாவ பியூன விட்டு வர சொல்லி, 'ராமசாமி, உன் பையன கூட்டிகிட்டு சாயந்திரம வீட்டுக்கு வா, என்ன பாத்துட்டுத்தான் போகனும், நான் இப்ப விசிட்டுக்கு போறேன்'னு சொல்லிட்டு போயிட்டாரு.

சாயந்திரம் அப்பாவ பாத்து பணத்த வாங்கிகிட்டு ரெண்டு பேரும் குவாட்ரஸ்ல இருந்த அவரோட வீட்டுக்கு போனோம். கைவெச்ச பனியன், லுங்கி கட்டிட்டு வாசல காத்தோட்டமா வாயில எதையோ மென்னுகிட்டு உக்காந்திருந்தாரு. எங்கள பாத்தவுடனே எழுந்திரிச்சி கையை குலுக்கி பக்கத்துல இருந்த சேர்ல உக்கார சொன்னாரு.

'என்ன சார், சௌக்யமா?' ன்னு நக்கலா என்ன பாத்து கேட்டுட்டு, சிரிச்சிகிட்டே, 'ராமசாமி உன் பையனுக்கு என்னா துணிச்சல் தெரியுமா? பஸ்சில தோள தட்டி...'

சட்டுனு குறுக்க 'இல்லைங்க, எதோ விளையாட்டு பையன்...' னு அப்பா இழுத்தாரு.

'அதெல்லாம் இருக்கட்டும், ஒரு நிமிஷம், லச்சுமி, நீ பாக்கனும்னு சொன்னியே அந்த பையன் வந்திருக்காப்ல, அவங்க அப்பாவோட' ன்னு குரல் கொடுக்க, 'வந்த உடனே கவனிச்சிட்டேன், இதோ வர்றேன்’ னு சொல்லிட்டு ரெண்டு கிளாஸ்ல தண்ணி எடுத்துகிட்டு வந்தாங்க, கூட அவங்க பொண்ணு தட்ட எடுத்துகிட்டு வந்துச்சி. ரெண்டுபேரும் வாங்கன்னு கேட்டுட்டு தண்ணிய ரெண்டு பேருக்கும் கொடுத்தாங்க.

ஒரு தட்டுல இருந்தத அப்பாவுக்கு கொடுக்க சொல்லிட்டு மத்தத கையில வாங்கி எனக்கு கொடுத்துட்டு, 'தம்பி எடுத்துக்கோங்க, இந்த ஸ்வீட் எதுக்கு தெரியும? இருவது வருஷமா எத்தனையோ தடவ யார் யாரோ சொல்லியும் விடாத சிகரெட்ட இப்ப சுத்தமா விட்டுட்டாரு, பதனஞ்சி நாளாச்சி. எவ்வளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா?'ன்னு பூரிப்பா சொன்னாங்க.

'ஆமா ராமசாமி, அன்னிக்கு பஸ்ஸில தம்பி கேட்டது செருப்பால அடிச்ச மாதிரி இருந்துச்சி. சிகரெட்ட ஸ்டைலா புடிக்கிற வயசில இருக்கிற ஒரு பையன் அந்த மாதிரி கேட்டது ஒரு மாதிரியா இருந்துச்சி. இறங்கின உடனே அந்த பாக்கெட்ட தூக்கி எறிஞ்சிட்டேன்'.

'இனிமே குடிக்க மாட்டேன்னு சொன்னப்போ என் வைஃப் நம்பல. ரெண்டு நாள் ரொம்ப கஸ்டமா இருந்துச்சி. அப்பப்போ தோணறப்போ தம்பி முகம் ஞாபகம் வந்துடும், ஒரு பபிள்கம் போட்டுக்குவேன், இன்னிய வரைக்கும் தொடல, இனிமே தொடவும் மாட்டேன்'.

'லச்சுமி அடிக்கடி அந்த தம்பி எங்கயிருந்தாலும் நல்லாருக்கனும்னு சொல்லிட்டிருப்பா. மதியம் ஃபோன் பண்ணி விவரத்த சொன்னேன், ரொம்ப சந்தோஷப்பட்டு அதான் இப்போ ஸ்வீட்ல ஆரம்பிச்சிருக்கு, விருந்து ரெடியாயிகிட்டிருக்கு' ன்னாரு.

அப்பாவுக்கு ரொம்ப சந்தோஷம், எனக்குந்தான். ரொம்ப நேரம் பேசிகிட்டிருந்துட்டு சாப்பிட்டு வீட்டுக்கு போனோம்.

வலைச்சரத்தில் இன்று இரண்டாவது நாள்... சென்று பாருங்களேன்...

வலைச்சரத்தில் இன்று மூன்றாவது நாள்... சென்று பாருங்களேன்...

வறுமையின் காதல்... கவிதை...

|

வறுமையின் காதல்...

பார்த்ததும் பற்றிக்கொள்ள
பளிச்சென கேட்டேன்
பாதையில் என்னோடு
பயணிப்பாயா என.

வீரனாய் காத்து
விளக்காய் ஒளிர்ந்து
வசந்தமாய் போற்றி
வாழ்வை இனிதாக்கி

வீசு தென்றலும்
வீழா மோகமும்
வாடா மல்லியாய்
வசதியெல்லாம் செய்து

வாழ்வினை தந்தால்
வருவேன் உந்தனது
வாழ்வின் பாதையில்
வரவா சொல்வீர்

வறுமையின் காதல்
வசந்தத்தின் தேடல்
விளம்பலுக்கு நன்றி
விதியிருந்தால் மீண்டும்...

விலகியவன் சென்று
வாழ்வின் நிலையை
வருத்தமாய் பார்த்து
வழியேதும் இன்றி...

****

என்ன சொல்ல?...

கண்விழி பார்த்து
கவி சொன்னேன்
கைவிரல் சொடுக்கி
கதை சொன்னேன்
கன்னத்தை உரசி
காதல் சொன்னேன்
நானே உன்னுள் இனி
என்ன சொல்லுவேன்....

வலைச்சரத்தில் இன்று எனது முதல் நாள். சென்று பாருங்களேன்எங்கே செல்லும்...பாகம் - 3

|

எங்கே செல்லும்....

முன் குறிப்பு: கலைஞரின் ஓய்வு அறிக்கையைப் போல இழுத்துக் கொண்டே இருக்காமல், விசா அவர்கள் கொடுத்த யோசனையின் படி ஒரே கதையை ஆளுக்கொரு பகுதியாக எழுத ஒரு முயற்சி. நான் துவங்குகிறேன் அடுத்து தொடர நினைப்பவர்கள் கையைத் தூக்கிவிட்டு தொடரலாம். இப்படித்தான் முகிலன் ஆரம்பித்தார் முதல் பாகம்..

முதலில் முகிலனின் முதல் பாகத்தை படித்துவிட்டு இதை தொடரவும்..

இப்படித்தான் தொடர்ந்தார் பலா பட்டறை.

”நிஜமா என்ன பிடிச்சிருக்கா ஸ்வா,”

2 நாள்ல பத்தாவது முறையா கேட்டேன். தாமரை மொட்டு மாதிரி என் வலது கை விரல்களை ஒன்றாக தன் இடது உள்ளங்கையால் பிடித்து தனது நெஞ்சினில் வைத்துக்கொண்டே, உள்பக்கம் உதடு குவித்தவாறு ஒரு மோனப்புன்னகையோடு அவள் சொன்னது எதுவும் என் காதில் விழவில்லை

இந்த இரண்டாம் பாகத்தை படித்துவிட்டு தொடருங்க கீழே...

எங்கே செல்லும்...பாகம் - 3

’ஹலோ, இப்படியா ஒடற பஸ்ஸில ஏற்ரது?, எதாச்சும் ஆனா என்னாகறது?’ கேட்டது ஒரு அழகிய பெண்.

என் குழப்பம் இன்னும் அதிகமாகியது.... என்ன ஆச்சு எனக்கு, ஏன் என்னை எல்லாம் துரத்துகிறார்கள்?

பக்கத்து சீட்டில் இருந்த பெண் விழி விரிய, ‘என்னண்ணா ஆச்சு இங்க உக்காருங்க’ என கூப்பிட்டு பக்கத்தில் உட்கார சொல்ல தயக்கமாய் உட்கார்ந்தேன்.

’ஏன் இப்படி பண்றீங்க? ஏன் இப்படி அலங்கோலமா இருக்கீங்க? என்ன ஆச்சு? இப்ப எங்க இருக்கீங்க? எங்கெல்லாம் தேடறாங்க தெரியுமா?’ன்னு விடாம கேட்க, பைத்தியமே பிடித்துவிடும் போலிருந்தது.

‘போலிஸ் எல்லாம் உங்கள தேடிகிட்டு வந்தாங்க, எல்லாரும் கதிகலங்கி போயிருக்காங்க’ன்னு இன்னும் சொல்லிக்கொண்டே போக,

’ஆமாம், நீங்க யாரு? சத்தியமா யாருன்னே தெரியல’ என சொன்னேன்.

’நான் கோமதின்னா!, அய்யயய்யோ, ஏன் இப்படி கேக்குறீங்க, பக்கத்து வீட்டுப்பொண்ணு, உங்க செல்போன் என்னாச்சு, எல்லாரும் பைத்தியம் பிடிச்ச மாதிரி தேடிகிட்டிருக்காங்க ஒரு நிமிஷம்’னு சொல்லிட்டு அதோட செல்போன்ல நம்பர அழுத்தி,

‘அம்மா நான் கோமதி பேசறேன், அண்ணன் கூடத்தான் இருக்கு, ஓரற பஸ்ஸில வந்து ஏறுச்சி, ம்... இந்தா பேசுங்க’ன்னு கொடுக்க எனக்கு மண்டையே வெடிச்சிடும் போல இருந்தது.

‘எப்படிப்பா இருக்க, எங்கெல்லாம் தேடறது?ன்னு அழ ஆரம்பிக்க குழப்பம் இன்னும் அதிகமாச்சு. ‘அய்யோ, சத்தியமா எதுவுமே புரியல, அம்மான்னு சொல்றீங்கன்னு புரியுது, எல்லாம் ஒரே குழப்பமா இருக்கு’ன்னு சொல்லிக்கொண்டிருக்கும்போது, பஸ்ஸைத்தாண்டி அந்த கார் குறுக்கே நிற்க, டிரைவர் சட்டென பிரேக் அடித்தார்.

எல்லோரும் தடுமாற, நின்றிருந்த சிலர் முன் பக்கமாய் விழ, உட்காந்திருந்தோர் முன் கம்பிகளில் இடித்துக்கொள்ள, ஒரு குழந்தை வீலென கத்த, முன் வழியே காரிலிருந்து இறங்கிய இரண்டு பேர் என்னை நோக்கி அவசரமாக வந்தார்கள்.

சட்டென படியின் வழியே செல்போனை கையில் எடுத்துக்கொண்டு இறங்கி அவர்கள் இருவரும் என்னை துரத்த பேய்த்தனமாய் ஓட ஆரம்பித்தேன்.

மூச்சிறைக்க, இதயமே நின்றுவிடும் போலிருந்தது. உயிர் பயம் மற்றும் ஏதோ ஒன்று செலுத்த அருகேயிருந்த ஒரு சிறிய சந்தில் நுழைந்து பலவிதமாய் மாறி மாறி ஓடினேன்.

கடைசியாய் முடியாமல் அங்கிருந்த ஒரு திறந்திருந்த கேட்டின் வழியே உள்ளே நுழைந்து சுவற்றில் பல்லி போல் ஒட்டி பதுங்கி கொண்டேன். தபதவென என்னை தாண்டி செல்லும் சத்தம்.

அப்படியே கொஞ்ச நேரம் கிடக்க சப்தம் எதுமில்லாமல் இருந்தது. அயர்ச்சியில் மயங்கிய நிலைக்குப் போக ஆரம்பித்த நிலையில்,

‘அய்யோ அப்பா, இங்க பாருங்க ஒருத்தன் மயங்கி கிடக்கிறான்’ என ஒரு பெண்ணின் குரல். மெல்ல மயக்கமாகிக்கொண்டிருந்தேன்...

(தொடரும்)

விதிகள் :

1. தொடர விரும்புபவர்கள் கடைசியாக யார் எழுதியிருக்கிறார்களோ அந்தப் பதிவில் சென்று பின்னூட்டம் இடுங்கள்.
2. கடைசியாகப் பதிவை எழுதியவர் யார் தொடரலாம் என்பதை தேர்ந்தெடுப்பார்.
3. முந்தைய பாகங்களுக்கான சுட்டியையும், அடுத்த பாகத்தின் சுட்டியையும் (யாரவது தொடர்ந்த பின்னர்) பதிவில் கட்டாயமாக இட வேண்டும்.
4. ஒரு எச்.டி.எம்.எல் கேட்ஜட் உருவாக்கத்தில் இருக்கிறது. உருவான பின் அதையும் உங்கள் வலைப்பூவில் கட்டாயம் சேர்க்க வேண்டும்
5. மேலே உள்ள விதிகள் அனைத்தும் தொடர் பாகத்தை ஒருவருக்கு மேற்பட்டவர்
எழுதிவிடக்கூடாது என்பதற்காகவே.

அத்தையவ பெத்தெடுத்த...

|

இவங்களோட அத்த மவன் புலம்புனத வாழறதும் சாவறதும் உன் வார்த்தையில... இடுகையில படிச்சிட்டு வந்துடுங்களேன்...

கருப்புன்னு சொல்லுறியே
கரி போல இருக்கும் நீயும்
வெறுப்பெல்லாம் உன் மேல
ஒரு துளியும் கிடையாது

எரிகின்ற நெருப்பு போல
என்மேல ஆசையின்னு
தெரிஞ்சித்தான் உனைவிட்டு
ஒதுங்கியும் போறேன் நானு.

அத்தையவ பெத்தெடுத்த
அன்பு நிறை மச்சானே
சொத்தையின்னு ஒதுக்கவில்ல
சொல்லுறத கேட்டுத்தொல

பெத்துக்கிற புள்ளங்களும்
முத்தாட்டம் இருந்தாத்தான்
செத்து போற காலம் மட்டும்
சந்தோஷம் சேர்ந்திருக்கும்

சொந்தத்தில பண்ணிகிட்டச்
சந்ததிங்க விளங்காது
சிந்தனைய மாத்திகிட்டு
சீக்கிரமா வேறொருத்தி

எந்த ஊரில் இருந்தாலும்
சீக்கிரமா கண்டுபிடி
வந்தவளும் உன்னுடைய
வாட்டமெல்லாம் போக்கிடுவா

சோசியனு சொல்லுறான்னு
சொக்கிப்போயி நிக்காத
வேசம் போடும் அந்தாளு
வேரிடத்தில் அமையுமுன்னு

கூசாம சொல்லுறான்னு
கண்டுவந்த அம்மாவும்
விசும்பலோட சொன்னாங்க
விளங்களயா ஆசமச்சான்

தன்கு தடயில்லாம
தாங்கி வரும் செல்வத்தோட
தங்கக்கிளி கிடைச்சிடுவா
தங்கமான ஒன் மனசுக்கு

சிங்கம் போல மயில் போல
சிறப்பான புள்ளங்களும்
உங்களுக்கு பொறந்துவிடும்
உற்சாகம் கொடுத்துவிடும்.

வேண்டாத தெய்வமெலாம்
வேண்டுறேன் நா உனக்கு
மீண்டுமொரு சென்மத்துல
மாறி பொறந்து நானும்

மனைவியா இருந்துட்டு
மனசெல்லாம் நிறையும்படி
உனக்காக வாழ்ந்திடனும்
உயிறதுவும் போறமட்டும்...

வாழறதும் சாவறதும் உன் வார்த்தையில...

|

கருத்த உடம்புக்காரி
கனிவான பேச்சுக்காரி
பொருத்தமா நானிருக்க
புடிக்காம போனதென்ன

தெருவிலென்ன பாத்துபுட்டா
வாடிப்போன பூவாட்டம்
சிரிச்சிட்டே வந்தாலும்
சிடுமூஞ்சா மாத்திக்கிற

பொருத்தமெலாம் பாத்துபுட்டு
புகளூரு சோசியனும்
சிறப்பா இருக்குதுன்னு
சிலிர்த்திடவே சொல்லிபுட்டான்.

வருகிற தைமாசம்
ஊரையெல்லாம் சேர்த்தழச்சி
திருமணத்த செஞ்சிடத்தான்
தினமும் நான் ஏங்கையில

வருத்தியென்னை நோவுசேரும்
வழியெனக்கு காட்டி நீயும்
வருத்தம் மட்டும் தந்துயென்ன
வாட்டத்தில விடுறியே

இரும்பான உடம்பிருந்தும்
இளகுன மனசெனக்கு
கரும்புனக்கு புரியலையா
காள மனம் தெரியலையா?

கண்ணுக்குள்ள உன்ன வெச்சி
காதலையும் பேசி பேசி
ஆணிமுத்தே உன்ன நானும்
அணுவணுவா நேசிக்கிறேன்

திண்ணையில தூங்கயில
தெருவோரம் போகையில
மண்ண விண்ண பாக்கையில
மாலையில காலையில

எல்லாமா நீயிருக்க
இது உனக்கு தெரியலையா
பொல்லாத உயிரதயும்
பொத்திவெச்சி காத்திருக்கேன்

நல்ல பதில் சொல்லிபுட்டா
நா வணங்கும் சாமிக்கு
எல்லா சிறப்பு செஞ்சி
ஊரெல்லாம் மெச்சும்படி

கலகலன்னு செஞ்சிடுவேன்
கவலையெல்லாம் விட்டிடுவேன்
நிலை குலஞ்ச எம்மனசும்
நெறைஞ்சி தெளிஞ்சிடுவேன்

வாழறதும் சாவறதும் உன்
வார்த்தையில தாயிருக்கு நல்
சொல்லதயும் சொல்லிநீயும்
சொர்க்கமத காட்டு புள்ள...

இதோட தொடர்ச்சியையும் அத்தையவ பெத்தெடுத்த... எனும் இடுகையில படிச்சிடுங்களேன்....

ஆயிரத்தில் ஒருவன் - சிறுகதை...

|

ஆயிரத்தில் ஒருவன், ஆயிரத்தில் ஒருவன்னு எல்லாரும் எழுதிகிட்டிருக்காங்களே நாமளும் எழுதிப்பார்த்திடலாம்னு அவன் முடிவு செஞ்சான். 'அவன்' பிரபல எழுத்தாளரா ஆகனும்னு துடிச்சிகிட்டிருக்கிற ஒரு வளரும் எழுத்தாளன்.

சரி நாம எழுதற ஆயிரத்தின் ஒருவன்ல பொங்கலுக்கு ரிலீசான படங்களோட பேர் எல்லாம் வர்ற மாதிரியும் இருக்கனும்னு யோசிச்சி ஒரு வழியா எழுதி முடிச்சான். நைசா எட்டிப்பாத்து படிச்சி சிரிச்சிட்டேன். நீங்களும் பாருங்களேன்...

அந்த ஒரு சிறிய தீவில் ஒரு பெரிய செல்வந்தரால் மாபெரும் கொண்டாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சரியாய் அந்த தீவில் இருந்தது அங்கு கலந்து கொண்ட முன்னூற்று ஒரு நபர்களோடு தீவில் இருப்பவர்களையும் சேர்த்து ஆயிரத்த்து ஒரு பேர்.

திடீரென ஒரே இருட்டு, வீல் என ஒரு அலறல். எல்லோரும் அங்குமிங்கும் ஓட அந்த இடமே ’போர்க்களம்’ மாதிரி ஆனது. திரும்ப வெளிச்சம் வர அந்த செல்வந்தர் கழுத்தில் ‘குட்டி’யாய் ஒரு கத்தி அழுத்த பதிந்து கிழித்து விட்டிருந்தது, வாயைத் திறந்து உயிரை விட்டிருந்தார். நெற்றியில் ஒரு ரூபாய் ’நாணயம்’ ஒட்டப்பட்டிருந்தது. கண்டிப்பாய் அவரை கொலை செய்தது ‘ஆயிரத்தில் ஒருவன்’ தான்.

உன்னையும் குளோஸ் பண்ணிடுவேன்....

|

செல்போன் வந்த எல்லோரும் உபயோகப்படுத்த ஆரம்பிக்காத ஒரு சிலரே வைத்திருந்த தருணம், பேசுவதற்கும், எவராவது அழைத்தால் பதில் சொன்னாலும் காசு தான் என்ற சமயம்.

சேலம் தங்கை வீட்டுக்கு போய்விட்டு வீடு திரும்பும்போது, ராசிபுரம் செல்லும் பஸ்ஸில் கிருஷ்ணன் வந்து கொண்டிருந்தான். அளவான கூட்டம், நான்கைந்து பேர் மட்டும் படியில் இரு பக்கங்களிலும் நின்றிருக்க, நன்கு படியினை விட்டு தள்ளி உள்ளே நின்றிருந்தான்.

அப்போதுதான் நல்ல மப்பில் இருந்த ஒரு சக பயணிக்கு ஒரு அழைப்பு வர கலாட்டா ஆரம்பமானது.

'ம்... சொல்லுடா மாப்ளே, அந்த தே...பையன் அப்படி சொல்லிட்டான்டா, அவன உண்டு இல்லன்னு பண்றேன். குளோஸ் தான், வேற வழியே இல்ல'... தொடர்பு துண்டித்துப்போக, திரும்ப இவர் அழைத்தார்.

'டேய் தே... மவனே, ஏன்டா கட் பண்ணினே? அவ்வளவு பெரிய ஆளா, உன்னையும் குளோஸ் பண்ணிடுவேன்.... இந்த கதைல்லாம் விடாதே, எனக்கு தெரியும். என்னது கோவப்படாதவா... அத சொல்ல நீ யாரு... வெக்காத, அந்த நாயி என்ன சொன்னான் தெரியுமா?'... மறு முனையில் வைத்துவிட சற்றும் தளறாமல் திரும்பவும் அழைத்தார்.

'டேய், இந்த டகால்டியெல்லாம் எங்கிட்ட வெச்சிக்காத. என்னுதுல காசு இல்ல... அலோ..அலோ.....'

சப்தம் அதிகமாயும், அச்சேற்ற முடியாத அருவருப்பான வார்த்தைகளாலேயே அவர் பேச எல்லோருக்கும் அருவறுப்பு. சொல்வதற்கோ கண்டிக்கவோ அவரது நிலையைப் பார்த்து எல்லோருக்கும் தயக்கம். பேசும்போதெல்லாம் வெட்டு கொலை என்றுதான் அதிகமாய் வந்துகொண்டிருந்தது.

திரும்பவும் அவர் அழைக்க ஆரம்பிக்க, எல்லோருக்கும் தெரிந்தது அவர் ஒரு வெத்து வேட்டு என. அவரது வாயாலேயே பேலன்ஸ் இல்லை என சொல்லி விட்டபடியால், சந்தர்ப்பத்துக்காக காத்திருந்தோம். பத்துநிமிடப் பேச்சின் பிறகு எதிர்புறம் இல்லாமல் இவர் துண்டித்தார்.

மீண்டும் யாருக்கோ அழைத்த அவரின் வார்த்தைப் பிரவாகம் அதிகமாய் போக, கிருஷ்ணன் ரொம்பவும் கோபத்துடன் அருகே வந்த கண்டக்டரிடம் 'என்ன சார் இப்படி பேசிகிட்டு வர்றார் கண்டிக்க மாட்டீங்களா' எனக் கேட்க அவருக்கு வந்தது ஒரு வேகம்.

அந்த நபரின் சட்டையினை பிடித்து உலுக்கி செவட்டில் ஓங்கி ஒரு அறை விட, அவரின் போதையெல்லாம் சட்டென இறங்கி போனை பாக்கெட்டில் பாக்கெட்டில் போட்டு வாயை மூடிக்கொண்டார். டிரைவர் நிறுத்தி என்ன விஷயம் எனக்கேட்க 'ஒன்னுமில்ல வண்டிய எடு போலாம்' என கண்டக்டர் சொன்னவுடன்,

கிருஷ்ணன், 'சார் இந்த ஆளை இங்கேயே இறக்கிவிட்டுட்டு போனாத்தான் புத்தி வரும்' என மறுத்து சொன்னான்.

'அட விடுப்பா, அதான் அடிச்சவுடனே அடங்கிட்டான்ல' ஒரு பெரியவர் சொல்ல வண்டி கிளம்பியது.

கிருஷ்ணனை மாட்டிவிட்டுட்டியே என்ற ஒரு பார்வையை பார்த்துக்கொண்டே வர, அவனுக்கு கிலி கிளம்பியது.

ராசிபுரம் வந்ததும், டெப்போ பஸ் ஸ்டாப்பில் அந்த ஆள் இறங்குவாரா என பார்க்க.. இறங்கவில்லை. மாறாக, காலியான சீட்டில் சட்டென கிருஷ்ணன் உட்கார, அவரும் அவனுக்கு அருகிலேயே முறைத்தபடி உட்கார இன்னும் டரியலானது.

உன்னை கவனித்துக்கொள்கிறேன் என்பதுமாதிரியான பார்வை. சரி இன்று சங்குதான் என எண்ணியபடி பயந்து பழைய பஸ்ஸ்டாண்ட்ல இறங்கி நடந்து போயி ஆத்தூர் பஸ்ஸை பிடித்துக்கொள்ளலாம் என எண்ணி, உயிரை கையில் பிடித்தபடி இருக்க, அப்போதுதான் அந்த எதிர்ப்பாராத சம்பவம் நடந்தது.

திடீரென அந்த நபர் கிருஷ்ணனை கட்டிக்கொண்டு அழ ஆரம்பித்தார்.

'அந்த தே.. பையன் நம்ப வெச்சி கழுத்த அறுத்திட்டான், அவளை எப்படி லவ் பண்ணினேன் தெரியுமா?' என தேம்பி தேம்பி அழ

அப்புறம்தான் எல்லாம் தெரிந்தது. அவர் திட்டியதெல்லாம் அவரது தாய்மாமனை. பெண்ணை தர முடியாதுன்னு சொல்லிவிட்டாராம்.

ஐந்து நிமிடம் தோளில் சாய்ந்து அழுதவண்ணம் வர, அவரை ஒருவாறு சமதானப்படுத்த முயல அவரின் அழுகை அதிகமானவண்ணம்தான் இருந்ததேயொழிய குறையவே இல்லை.

'விடுங்க பிரதர், உங்க பெர்சனாலிட்டிக்கு சூப்பர் பொண்ணு கிடைக்கும்' என கிருஷ்ணன் சமாதானப்படுத்தினான்.

பஸ் ஸ்டான்ட் வந்தவுடன் ரொம்பவும் தெளிவானவர் போல் மலர்ச்சியுடன், 'ரொம்ப தேங்க்ஸ் பிரதர், வாழ்க்கையில மறக்கவே மாட்டேன்' என சொல்லி விட்டு செல்ல அவன் மனதை ஏதோ செய்தது.

பொய்யும் பொய்யாகும் - கவிதை...

|சாத்தியமே...


கண்கள் பேச
காதுகள் முகர
வாய்கள் பார்க்க
மூக்குகள் கேட்க
சாத்தியமே.... எல்லாம் காதலின் போது.

****

தவிப்பு...

ஓய்வறைக்குள் சென்று
வருவதற்குள்
ஒப்பாரி காதலன்
கண்காண எத்தனை நொடிகள்?

****

பொய்...

பொய்யும் பொய்யாகும்
பூவை நீ சொன்னால்
கவலையில்லை நீ
காதலிக்கவில்லை என்றாலும்.

****

பயம்...

எப்போது சாவுயென
எல்லோரும் ஏங்கிடவே
எங்களூர் எம்.எல்.ஏ
ஏக்கமது பலித்திடுமோ
ஏகமாய் பீதியில்...

****

கண்ணிருந்தும்...


காசு வாங்கி ஓட்டு போட்டு
கண்ணியத்தை கடைபிடித்து
கடமை செய்வாரென நினைக்கும்
கண்ணிருந்தும் குருடர் நாம்..

சின்ன வயசுல எங்க ஊர் பொங்கல்...

|

சின்ன வயசுல ரொம்ப விஷேசமா கொண்டாடற ரெண்டு பண்டிகை தீபாவளி, அப்புறம் பொங்கல். பொங்கல்னா ரொம்ப விஷேசம், ஏன்னா மொத்தம் நாலு நாள் கொண்டாடுவோம்.

ஊர்ல சுண்ணாம்பு சூலை இருக்கும், ஆயா(அப்பாவோட அம்மா) நெல்லு கொடுத்துட்டு சுண்ணாம்பு வாங்கிட்டு வந்து பெரிய பானையில போட்டு வெச்சிருந்து மெதுவா ஆரம்பிச்சி ரெண்டு வாரம் எடுத்துக்குவாங்க.

வீட்டையெல்லாம் நல்லா சுண்ணாம்பு அடிச்சி பளிச்சின்னு வெச்சிருவாங்க. நாம கூட மாட சின்ன சின்ன வேலையெல்லாம் செய்யுவோம்.

மொத நாளு போகி, ஒன்னும் அவ்வளவா விஷேசம் இல்லை எங்க பக்கத்து கிராமங்கள்ல. பழைய பாயி, ஆவாத போவாத அது இதுன்னு எதாச்சும் போட்டு எரிப்பாங்க. அடுத்த நாள் சூரியன் பொங்கல், வாச பொங்கல்னும் சொல்லுவோம். காலையிலேயே பொங்கல் வெச்சி சூரியன பாத்து கும்பிட்டுட்டு அதுக்கும் அடுத்த நாளானா மாட்டுப்பொங்கலுக்கு ரொம்ப ஆர்வமா தயாராக ஆரம்பிச்சிடுவோம். ஆக ரெண்டாவது நாளும் அவ்வளவா சுறுசுறுப்பா இருக்காது.

களை கட்டறது மாட்டுப்பொங்கல் தான், ரொம்ப அருமையா இருக்கும். ஆத்துல தண்ணி வந்துகிட்டு இருக்கும். மாட்டையெல்லாம் அங்க ஓட்டிகிட்டு போயி கழுவி கொம்புக்கு வர்ணம் அடிச்சி கலர் கலரா குங்கும முத்திரை வெச்சி வித விதமா அலங்காரம் பண்ணுவாங்க.

சாயந்திரம் மாட்டுப்பொங்கலுக்கு தேவையானதை தயார்ப்படுத்த தாத்தா கூட காட்டுக்கு போயி மஞ்சள் கொத்து, கரும்பு சவாளம், பூலாப்பூ எல்லாம் கொண்டு வருவோம்.

மாட்டுப் பட்டியோட வாசல்ல வாழை மரத்த தாரோட கட்டி வளைச்சி கரும்பையும் சேர்த்துக்கட்டி பூலாப்பூவ சொருகி, மஞ்சள் கொத்து, வேப்ப இலையை கட்டி மாலை மாதிரி செஞ்சு எல்லாம் தோரணமா தொங்கவிடுவோம். அப்புறமா மாடுங்க எல்லாத்துக்கும் மாலை செஞ்சி வெப்போம்.

மஞ்சள்ல புள்ளையார் பிடிச்சி, சாணியில பாத்திகட்டி அதுல அருகம்புல் சொருகி, குழியில எல்லாம் சாதத்துக் கஞ்சிய ஊத்தி நிரப்புவாங்க.

சக்கரை பொங்கல், வெண்பொங்கல்னு எல்லாம் வெப்பாங்க. நாங்க சின்ன பசங்கல்லாம் ஆளுக்கொடு தட்டும் குச்சும் வெச்சிகிட்டு தயரா தட்டறதுக்கு காத்திருப்போம்....

தாத்த கடவுள் பக்தி இல்லாதவருன்னாலும் பொங்கலன்னிக்கு மட்டும் எல்லா வேலையையும் ஆர்வமா செய்வாரு. சின்னப்பையங்கறதால பக்கத்துல விடமாட்டாங்க.

எல்லாம் தயாரானதுக்கு அப்புறம் இலையில பொங்கல் பழம் எல்லாம் பிசைஞ்சி எடுத்துகிட்டு கலயத்துல தண்ணியோட ‘பொங்கலோ பொங்கல் போலியோ போலி’ன்னு உற்சாகமா கத்திகிட்டு ஒவ்வொரு மாடா போயி வாயை கழுவி சாதத்த ஊட்டிவிடுவாங்க.

நாங்க சின்ன பசங்க எல்லாம் கத்திகிட்டு தட்ட தட்டிகிட்டு பின்னாலயே போவோம். அப்புறமா எல்லா சொந்தக்காரங்களையும் (குறிப்பா மாடு இல்லாதவங்க) பொங்கல் வடை பாயசம்னு நல்லா கவனிப்பாங்க.

மாட்டுங்களுக்கு புது கயிறு, மூக்கணாங்கயிறுன்னு எல்லாம் மாத்துவாங்க. முறைக்காரங்ககிட்ட (அத்தை, மாமா) எல்லாருகிட்டயும் ‘பால் பொங்குச்சா’ ன்னு கேட்போம். ‘வேண்டிய அளவுக்கு பொங்குச்சி’ ன்னு சொல்லி காசு கொடுப்பாங்க. பயங்கரமா காசு வேட்டை நடக்கும். கேட்ட யாரும் மறுக்காம அவங்களால முடிஞ்சத கொடுப்பாங்க.

அடுத்த நாள் கரிநாள்னு சொல்லுவோம். முழு நாளும் பரபரப்பா இருக்கும். காலையிலேயே மாரியம்மன் கோவிலுக்கு போயி உருளத்தண்டம் போடறதுக்கு கூட்டிட்டு போவாங்க.கையில வேப்பிலை எடுத்துகிட்டு இடுப்பில் துண்ட கட்டிகிட்டு கோயில சுத்து உருண்டு வந்து கும்பிட்டுட்டு கொண்டு போன சுடு தண்ணியில குளிச்சிட்டு சாமி கும்பிடுவோம்.

புது துணிய போட்டுகிட்டு தயார வீட்டுல சூடா இருக்கிற இட்லி, கறிக்குழம்புன்னு ஒரு புடி புடிச்சிட்டு பசங்ககூட சேந்து வேடிக்கை பாக்க கிளம்பிடுவோம். அக்கினி சட்டி தூக்கிட்டு வருவாங்க, அலகு குத்தி வருவாங்க, வாயில ஒருத்தர் ஆட்டு குடல வெச்சிகிட்டு ஆட்டம் போட்டுகிட்டு வருவாரு, பாக்க பயமா இருக்கும்.

மதியத்துக்கு சாமிக்கு கொழுக்கட்ட பொங்கல்னு திரும்பவும் வெச்சு மாரியம்மன் கோவிலுக்கு எடுத்துகிட்டு போயி படைப்பாங்க. அதுக்கப்புறம்தான் எருதாட்டம் ஆரம்பிக்கும். மந்தைவெளின்னு சொல்ற இடத்துல எல்லா காளை மாட்டையும் கொண்டு வந்து வேடிக்கைக் காட்டுவாங்க. மாடுங்கள சீண்டறது, ஆளுங்கள முட்டறது, பயந்து ஓடறதுன்னு, பொழுது போறதே தெரியாது.

எல்லாம் முடிஞ்சதுக்கு அப்புறம், ’ஆயா, கருநாள் முடிஞ்சாச்சு, நாளைக்கு என்ன’ ன்னு கேட்டா, ’ம்.... கருநாளுக்கு அடுத்தநாளு வெறு நாளு’ ம்பாங்க. மறுபடியும் எப்போ பொங்கல் வரும்னு ஏங்க ஆரம்பிச்சிடுவோம்.

எல்லோருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...

புரட்சி செய்வோம், புறப்படுவீர்...

|ரசியலில் நடக்கின்ற
வலங்கள் பார்த்து
புரட்சியொன்று வெடித்து
புரட்டர்கள் போயொழிய

றுமலர்ச்சி வந்திங்கு
க்களெல்லாம் மகிழுமாறு
திருப்பமது நிகழ்ந்து
துயரமெலாம் தொலைந்து

விரும்பும் மனம் நனவாக
ழியேதும் உளதாவென
பெரியோரை கேட்டு
திலதுவால் சோர்ந்திட்டேன்

மாற்றமது வருதற்கு
க்களால் தான் முடியும்
ரசியலார் அது முடக்க
க்கமாய் செய்தலினால்

குறும்பாட்டு கூட்டம்போல்
டமையினை மறந்து
குறை தெரிந்தும் பின்னே
கூட்டமாய் சென்றிட்டு

றை வழியை மறந்து
த வழியை பின்பற்றி
சார்ந்திருக்கும் சாதிக்கட்சி
கதியினில் இறங்கி

திரையறிவு மறைத்து
தொலை நோக்கு மறந்து
றை கழன்ற மதியுடன்
தி நிறைந்த சான்றோரும்

ரசியலார் தடம் பற்றி
வல வழி சென்று
மாறுதலின் வாய்ப்பதனை
ங்கச் செய்தலினால்

வீரமிகு இளைஞரெல்லாம்
றுதிமொழி ஆர்த்து
ரசியலை சாராமல்
ரசியலார் நாடாமல்

சீரழிக்கும் சினிமாவின்
நாயகரின் மன்றம்தனை
வேரறுத்து ஒழித்து
றுதியினை சேர்ப்போம்.

மாற்றமது நம்மால்தான்
னதிலிதை நிறுத்தி
சோர்வு நேரும் தருணம்
சான்றோர் உரை படித்து

சுறுசுறுப்பை சேர்த்து
சாதனைகள் செய்து
வீறு கொண்டு செல்வோம்
வெற்றியினை சேர்ப்போம்

அனைவருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்....


சுரேந்திரன் அடிச்ச பிட்...

|

அஞ்சாவது படிக்கும் போது ஹெட் மாஸ்டர் பாலசுப்ரமணியம் சார் கிளாஸ் டீச்சர் (டி.வி.எஸ் வெச்சுருந்தாரே அவர் தான். இன்னும் தெரியலன்னா வாத்தியார் Vs டி.வி.எஸ் 50   படிங்க). அவரை நினைச்சாலே இன்னமும் பயமா இருக்கு. ரொம்ப ஸ்டிரிக்ட். எதாவது தப்பு பண்ணினா அடி பின்னிடுவாரு.

படிக்கல, வீட்டுப்பாடம் எழுதலன்னா தொலைஞ்சோம். நல்லா படிக்கிற பசங்க கூட அவர் கிட்ட பயந்துகிட்டு தான் இருப்பாங்க. சுரேந்திரன் என் கிளாஸ்மேட். படிக்கவே மாட்டான். எழுத்து கூட்டி தப்பு தப்பா படிப்பான், அதுவும் எங்ககிட்ட மட்டும். படம் வரைந்தேன்னு எழுதச் சொன்னா, 'பாடாம் வறைந்தெண்' னு எழுதுவான். தப்பில்லாம ஒரு வார்த்தைய கூட எழுதத் தெரியாது. வாத்தியாரு கேட்டா பேசவே மட்டான்.

நாலாவது வரைக்கும் எப்படியோ தப்பிச்சுட்டு வந்தவன் வசமா அஞ்சாவதுல சிக்கிட்டான். சுரேந்திரான்னு கேள்வி கேட்டாலே கையை நீட்டி அடி வாங்க தயாராகிடுவான்.

'வலிக்குது சார் மெதுவா அடிங்க சார், போதும் சார்'... இதுதான் அவன் அதிகமா பேசற வார்த்தைகள். பாடம் நடத்தும்போது அடிக்கடி ஒன்னாச்சி போறேன்னு கேட்பான்.

விளையாட்டுக்கு சார் ஒருநாள், 'எத்தனை தடவை போவே, பேசாம ஒரு டப்பாவ கட்டிட்டு வந்துடு' ன்னாரு. அடுத்த நாள் கிளாஸ் முடியற வரைக்கும் அவன் ஒன்னாச்சிக்கு கேட்கவே இல்ல.

சார் ஆச்சர்யப்பட்டு, 'டேய் என்னது அதிசயமா இருக்கு, மொத தடவையா வெளிய போறதுக்கு கேக்காம இருக்க, பரவயில்லயே' ன்னாரு.

அவன் ஒன்னுமே பேசலை. வழக்கம்போல அவன் வீட்டு பாடம் எழுதிட்டு வரலை. பென்ச்-ஐ விட்டு வெளியே வர சொன்னாரு, அடி போடறதுக்கு. ஒரு மாதிரிய காலை கிளப்பிட்டு வெளியே வந்தான்.

டிராயர்ல ஏதோ புடைச்சிட்டு இருக்கவும் தட்டி பாத்தாரு. டங்குனு சத்தம் கேட்டுச்சி.

என்னடான்னு டிராயர அவுக்க சொல்லி பாத்தா நேத்து சார் சொன்ன மாதிரி உள்ள சின்னதா ஒரு காலி எக்காலக்ஸ் டப்பாவை கயிறு போட்டு அரைஞான் கயித்துல கட்டிட்டு வந்திருந்தான். பாதி நிரம்பியிருந்துச்சி.

சார் விழுந்து விழுந்து சிரிச்சு அன்னைக்குதான் நாங்க எல்லாரும் பாத்தோம். (இதை படிக்கும்போது இது எப்படி சாத்தியம்னு கேட்கத்தோன்றும். உண்மையில் நடந்தது) ஆனா பரிட்சையில மட்டும் பதில் எழுதி பாஸ் மார்க் வாங்கிடுவான்.

சாருக்கு ரொம்ப நாளா சந்தேகம் எப்படி பரீட்சையில மட்டும் எழுதறான்னு. எங்ககிட்ட விசாரிச்சாரு, தெரியாதுன்னு சொல்லிட்டோம்.

அன்னிக்கு மாதந்திர பரீட்சை. மரத்தடியிலதான் வரிசையா உட்காந்து எழுதுவோம். அட்டை பேப்பர் எல்லாம் எடுத்துட்டு, வரிசையா கிளம்பிட்டு இருக்கறப்போ அவன் ஹேர் ஸ்டைல பாத்துட்டு ஹெட்மாஸ்டர் சுரேந்திரன் கிட்ட வந்தாரு.

தலையை தூக்கி சீவி, சிவாஜி ஸ்டைல்ல முன்னாடி குருவிக்கூண்டு மாதிரி சீவியிருந்தான். அந்த மாதிரியெல்லாம் சீவக்கூடாது, ஒழுங்கா படிய, எண்ணை வெச்சு தான் சீவிகிட்டு வரனும்.

திட்டி அவன் தலை மயிரை புடிச்சி அப்படியே ஆட்டி அடி விடும்போதுதான் தலை முடிக்குள்ளருந்து ஒரு பிட் பேப்பர் விழுந்துச்சி.

எடுத்து பாத்துட்டு ரொம்ப டென்ஷன் ஆயிட்டாரு. 'அஞ்சாவதிலேயே உனக்கு பிட்டு கேக்குதா' ன்னு கன்னத்திலே பொளேர்னு அறை விட்டுட்டு பிரம்பெடுத்து விளாச ஆரம்பிச்சிட்டாரு.

வேற எங்கெல்லாம் வெச்சுருக்கன்னு கேட்டு செக் பண்ண, சட்டை மடிப்புல, டிராயர் மடிப்புல, பென்சில் பாக்ஸ்லன்னு நிறையா வெச்சுருந்தான். ரொம்ப ஆவேசமாயிட்டாரு. சும்மா பின்னியெடுத்துட்டாரு. பிரம்பு உடைஞ்சு போச்சு. அடிச்சி களைச்சி போய், உன் அப்பாவ கூட்டிட்டு தான் கிளாசுக்கு வரனும்னு சொன்னாரு.

சுரேந்திரன் கதறிக்கிட்டே,'சார் நாளைக்கு கூட்டிட்டு வர்றேன், இன்னைக்கு பரிட்சை எழுதிட்டு போறேன் சார்'னான். 'சரி எழுதித் தொலை' ன்னுட்டு உள்ள போயிட்டாரு.

அதுக்குள்ளா நாங்க எல்லாம் மரத்தடியில உக்காந்து எழுத ஆரம்பிச்சுட்டோம். சார் அந்த பக்கம் போன உடனே, கண்ணை தொடைச்சிட்டு, எங்களை ரகசியமா பாத்து சிரிச்சான்.

என் பக்கத்தில இருந்த மரத்தடியில உட்காந்து சுத்தியும் பாத்துட்டு, மண்ணை தோண்டி பிட் பேப்பரை எடுத்து பாத்து எழுத ஆரம்பிச்சுட்டான்.

நிறைய மாற்றங்களுடன் கூடிய மீள் இடுகை...

சிவப்பு, ஆரஞ்சு, பச்சை - கவிதை...

|

காதலியை பிரிந்த காதலன்...

காதலுமே என்னை
கைவிட்டு போச்சு
வேதனையும் நானும்
வாக்கப்பட்டு ஆச்சு.

மோதுகின்ற எண்ணம்
முரண்பட்டு போச்சு
சாதலிலே நெஞ்சம்
சிந்திக்கவும் ஆச்சு

கண்விட்டு தூக்கம்
காத தூரம் போச்சு
புண்பட்டு நெஞ்சம்
புகைச்சலாய் ஆச்சு

உனையெண்ணி உயிரும்
உருக்குலைந்து போச்சு
எனைப்பார்த்து எனக்கே
ஏளனமாய் போச்சு.

காதலை இறைஞ்சும் காதலன்...

முன்னாடி வந்து உன்
முகத்தை பார்ப்பதற்கு
கண்ணாடி முகம் பார்த்து
காலம் கழிக்கிறேன்

எண்ணத்தில் உனையன்றி
ஏதும் இல்லாமல்
மண் நிலையில்
மயங்கியே கிடக்கையில்

பொன் பட்டுக்கை தொட்டு
புன்னகை நீறூற்றி
மண்னென்னை பிசைந்திட்டு
மயக்கும் சிற்பமாய்

உண்டாக்கி உயிர்கொடுத்து
உள்மனதில் உறைந்திடுவாய்
என்னருமை காதலியே
என்வாழ்வின் நல் ஒளியே...

காதலின் வென்ற காதலன்...

தென்றல் தழுவியதை
தேகமது உணருது
மென்மையான மெல்லிசையை
மனதும் கேட்குது...

பண்ணிசைக்கும் வண்டு பார்க்க
பேசும் கண்ணாய் தோனுது
விண்மேவும் கார்மேகம்
உன் கூந்தல்போல் தெரியுது

பேருந்தில் நடத்துனரும்
பொறுக்கித் தர சில்லறையை
சிறு குலுக்கல் செய்வதுவுன்
சிரிப்பொலியாய் கேட்குது....

சிறையான நீர்த்துளியை
செடியிலையில் காணும்போது
நெற்றியோடி புருவம் சேர்ந்த
வியர்வையென தோனுது...

சாவியாடிய மனசு...

|

அப்போது படித்து முடித்து வேலையில்லாமல் சென்னையில் வேலை தேடிக் கொண்டிருந்த சமயம்.

ஊருக்கு வந்த போது என் சித்தியின் நாத்தனார், எனக்கு அத்தை முறை, உடல்நலம் குன்றி இறந்த தகவலைச் சொல்லி போய் பார்த்து விசாரித்து வர சொன்ன அன்னையின் ஆணைக்காக, எனது நெருங்கிய நண்பர், வயதில் மூத்த மாமாவிடம் பைக்கை கேட்டு வாங்கி கிளம்பும் சமயத்தில் எனது உயிர் நண்பன் மணி வந்தான்.

அவன் 'ஆத்தூர் செல்கிறாயா' எனக் கேட்க இல்லையில்லை என விவரத்தை சொல்ல, 'என்னை தலைவாசலில் இறக்கி விட்டுவிடு அங்கிருந்த ஆத்தூர் போய்க்கிறேன்' எனச் சொன்னான்.

துணைக்காச்சு என அவனையும் ஏற்றிக்கொண்டு கிளம்பினேன். ஊர் தாண்டியவுடன் மணி வண்டியை ஓட்டுகிறேன் என சொல்ல, 'ஓட்ட தெரியும்ல மணி' என சந்தேகமாய் கேட்க, 'என்னய்யா இப்படி கேட்டுட்ட, அருமையா ஓட்டுவேன்' என சொல்லி ஓட்ட ஆரம்பித்தான்.

கொஞ்சம் தூரம் பேசிக்கொண்டே வண்டியை ஓட்டி வர, வழியில் ஒரு கிராமத்தின் வழியே செல்லும் போது திடீரென ஒரு பன்றிக்கூட்டம் சாலையில் வருவதை கவனிக்காமல், வண்டியை அவற்றின் மேல் விடாமல் எவ்வளவோ முயன்றும் கடைசியில் ஒரு பன்றிக்குட்டியின் மேல் விட்டுவிட்டான். முன்னால் வீல் மேலே ஏறி அடிபட்டாலும் பலமாய் கத்திக்கொண்டு ஓடி விட்டது.

மணி, சப்தம் கேட்டு யாரும் பார்ப்பதற்குள், வண்டியை விரட்டி ஊரைத்தாண்டினான். வெலவெலத்துப்போய், 'என்ன மணி இப்படி பண்ணிட்டே' என கேட்டதற்கு,

'திடீர்னு வந்தா நான் என்ன பண்றது, என்னால ஓட்ட முடியாது நீயே ஒட்டு என என்னிடம் கொடுத்துவிட்டான்.

'மணி பன்னி மேல விட்டா ஆகாதுன்னு சொல்லுவாங்க, எனக்கு பயமா இருக்கு, இன்னிக்கு என்ன ஆகுமோ' என சொல்ல, கோபமான அவன்,

'என்னய்யா, இவ்வளவு படிச்சிருக்க, கொஞ்சம் கூட அறிவே இல்ல?, சொல்றவன் ஆயிரம் சொல்லுவான், நமக்கு புத்தி வேணும்' என லெக்சர் அடிக்க ஆரம்பித்தான்.

'சரிப்பா போதும் ஆள விடு' என சொல்லி அவனை தலைவாசல் பஸ் ஸ்டாண்டில் விட்டுவிட்டு கொஞ்ச தூரம்தான் சென்றிருப்பேன், வண்டி கிறுக்க ஆரம்பித்தது.

பின் டயர் பங்க்சர். நல்ல வேளையாய் அருகிலேயே பஞ்சர் கடை இருக்க, தள்ளிச்சென்று இருந்த முப்பது ரூபாயில் பத்தை அழுது, சரிசெய்து கிளம்பினேன்.

கிராமச்சாலையென்றாலும் நன்றாக இருக்க வண்டியை சரியான வேகத்தில் வண்டியினை விரட்ட காற்றாய் பறந்தது. சிறு சிறு மேடுகளில் வண்டி தூக்கிப்போட அது குதிரையில் செல்கிறார்போல் இருந்தது (குதிரையில் சென்ற அனுபவம் இருக்கிறதா என கேட்காதீர்கள், படித்ததுதான்).

வண்டியை சித்தியின் வீட்டில் நிறுத்தி ஆஃப் செய்வற்கு கையை வைத்தால் பக்கென்றிருந்தது. சாவி இல்லை, வந்த வேகத்தில் எங்கோ விழுந்திருந்தது.

வண்டியின் முதல் சாவியை முதலிலேயே தொலைத்த புண்ணியவான் நான் தான். அப்போது ஒன்றும் சொல்லாமல், 'விடு பரவாயில்லை' என சொல்லி இருந்த மாற்று சாவியை தந்து உபயோகப்படுத்த சொன்னார்.

இப்போது மீண்டும் தொலைத்து மாமாவின் நம்பிக்கைக்கே உலை வைத்த மாதிரி ஆயிற்றே என நினைக்கும்போதே பதைத்தது. சித்தி வீட்டில் எல்லோரும் என்னை வாவென வரவேற்க, தலையை கடமைக்கு ஆட்டி இதோ வருகிறேன் என தம்பியை அழைத்துக்கொண்டு இருவரும் வண்டியில் ஆளுக்கொரு பக்கமாய் பார்வையை செலுத்தி தலைவாசல் வரை சென்று பார்த்தும் கிடைக்கவில்லை.

இருந்த ஓர் கடையில் விசாரித்ததற்கு வண்டியின் எல்லா பூட்டுக்களையும் மாற்ற வேண்டும் என சொல்லி அதற்கு ஆகும் செலவினை தோராயமாய் சொல்லி புளியை கரைத்தார்கள். செலவுக்கே வீட்டில் காசு வாங்கி சமாளிக்கும் அந்த சமயத்தில் நிஜமாய் அழுகை அழுகையாய் வந்தது.

திரும்ப சென்று அத்தை இறந்த துக்கத்தை விசாரிக்க செல்லும்போது சாவி தொலைந்த துக்கம் மேலோங்கி நிற்க, என்னை பார்த்து அத்தை வீட்டில் எல்லோரும் அழ நானும் வெடித்து அழ ஆரம்பித்தேன்.

'பிரபுவுக்கு அத்தை மேல் எவ்வளவு பாசம், தான் ஆடுலன்னாலும் சதை ஆடுது பாரு' என்று ஒரு பாட்டி சொன்னது சாவியாடிய என் மனசுக்குள் கேட்டது...

ஒரு நாள் கூத்து...

|

அவனுக்கு மிகவும் ஆச்சர்யமாயிருந்தது, இன்னமும் இதுபோல் இருக்கிறதா என. அவன், கிருஷ்ணன், வெளி மாநிலத்தில் வேலை செய்பவன் விடுமுறைக்கு தனது ஊருக்கு வந்திருக்கிறான்.

மெதுவாய் அவனது நண்பன் வெங்கடேஷை கேட்டான். 'இன்னமும் இது மாதிரி இருக்கிறதா' என.

'இல்ல கிஷ்ணா, ரொம்ப வருஷத்துக்கு முன்னால இது மாதிரி பாத்திருக்கோம், இப்போ ஆச்சர்யமாத்தான் இருக்கு'

ஆச்சரியப்பட்ட அந்த விஷயம் இதுதான். ஒரு இளைஞன், ஒரு இளைஞி மற்றும் ஒரு சிறு குழந்தை நன்றாய் வேடமிட்டு தெரு முனையில் ஆடுவதற்கு தயாராக இருந்தார்கள். ஒரு சைக்கிளில் அவர்களது எல்லா உடமைகளும் இருந்தது, தயாராய் வெளியே பாடுவதற்கு எடுத்து வைத்திருந்த இரு ஸ்பீக்கர், ஒரு டேப் ரெக்கார்டர் உட்பட.

பக்கத்தில் இருந்த வீட்டில் கெஞ்சி கரண்ட் எடுத்து சினிமா பாட்டினைப் போட்டு ஆட ஆரம்பித்தார்கள்.

அது மாலை வேளையென்றாலும் அவ்வளவாய் கூட்டமில்லை, வரவேற்பும் இல்லை. இப்போதெல்லாம் டி.வியை விட்டு யார் வெளியே வருகிறார்கள்?

எவ்வளவோ பாட்டுக்களுக்கு ஆடியும் கூட்டமும் இல்லை, காசும் சேரவில்லை. அவர்களைப் பார்க்க ரொம்ப பாவமாய் இருந்தது.

கிருஷ்ணன் அந்த நபரை அழைத்து 'ஏப்பா, காலம் மாறிப்போச்சில்ல, வேற வேலை பாக்கலாம்ல, சரியான வரவேற்பு இல்லல்ல?' என கேட்க,

'வேற எதுவும் தெரியாதுங்க, ஆட்டமாடறதுதான் எனக்குத்தெரியும், அப்படி ஆடித்தான் இவளை கல்யாணம் கட்டிகிட்டேன், புள்ளையும் பெத்துகிட்டேன், சாவர வறைக்கும் இதுதான், நம்மள மாத்திக்க முடியாது' என சொல்ல அவனுக்கு மனசுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.

சரி இன்னிக்கு எவ்வளவு வசூல் ஆச்சு என கேட்க அவன் உதட்டை பிதுக்க, சட்டென பையில் கையைவிட்டு இரு ஐம்பது ரூபாய்த் தாள்களைக் கொடுக்க, கண்கலங்க பெற்றுக்கொண்டு, 'தப்பா நினைச்சிக்காதீங்க, எனக்கு இன்னிய செலவுக்கு ஐம்பது ரூவா போதும், நாளைக்கு ஆண்டவன் பாத்துக்குவான்' எனச் சொல்லி ஒரு ஐம்பதை திருப்பிக்கொடுக்க கிருஷ்ணன் விக்கித்து நின்றான்.

பட்ட காலில்...

|

என்னோட ஃபிரண்டு ரவியோட அப்பா பயங்கரமான குடிகாராரு. போதையில்லாம அவரே அவர பாத்திருக்கமாட்டாருன்னா பாத்துக்குங்களேன்.

ஒருநா அவன பாக்க அவன் வீட்டுக்கு போனா வாசல்லயே டிராயர் போட்டுகிட்டு உக்காந்திருந்தாரு. 'யாரு அந்த வெட்டியோட ஃபிரண்டா' ன்னு கேக்க தலையாட்ட 'அந்த சனியன் அப்படித்தான் கேக்கும் உள்ள வாடா' ன்னு உள்ள இருந்து குரல் கொடுத்தான். ’பெத்த அப்பன பேசறத பாரு, ஒரு சம்மந்தமில்லாத நாயி முன்னாடி’ ன்னாரு. 'யேய் என்ன அங்க சத்தம்’னு உள்ளருந்து நம்மாளோட குரல் வர, ’ஒன்னுமில்லங்க சார்’ னு பதில் சொல்லிட்டு ’உள்ள போங்க சார் துரை மொறைக்கிறாரு’ ன்னு சொன்னாரு.

பசங்ககிட்ட சொன்னப்போ நம்ம செட்டுலயே ரொம்ப டீசன்ட்டா உங்கிட்டத் தான் பேசியிருக்காருன்னு சொல்லி பீதிய கிளப்புனாங்க. இது நடந்தது நான் ப்ளஸ் டூ படிக்கிறப்போ.

அதுக்கப்புறமா, பசங்க கூட அவ்வளவா தொடர்பில்ல. எப்பவாச்சும் பாத்துக்குவோம்.

காலேஜ்ல படிக்கிறப்போ லீவ்ல வந்தப்போ பசங்கள பாக்க வழக்கமா போக நான் வர்றேன்னு தெரிஞ்சி நம்ம கூட படிச்ச அஷோக், பாலு, மணி எல்லாம் காத்துட்டு இருந்தானுங்க.

அஷோக்க பாத்துட்டு ஆடி போயிட்டேன். பஞ்சத்துல அடிப்பட்டமாதிரி இருந்தான். கையில மாவுக்கட்டு. கன்னத்துல சிறாய்ச்சி ஆறிக்கிட்டிருந்த பெரிய அடையாளம்.

என்னடா ஆச்சுன்னு கேட்டதுக்கு, அது ஒரு பெரிய கதை. ரவியோட அப்பா செத்து போயிட்டாரு தெரியுமா?ன்னு அஷோக் கேட்டான்.

'அச்சச்சோ, தெரியாதுடா, குடியால தானே?' ன்னு கேக்க, தலையாட்டிட்டு,

'ஆமாம். மனுஷன் படாத பாடு படுத்திட்டு போயிட்டாரு' ன்னு நடந்த சம்பவத்த சுத்த ஆரம்பிச்சான்.

'ரவி, அவங்க அப்பாவுக்கு ரொம்ப சீரியஸ்னு போன் பண்ணினான். நானும் இவனுங்க ரெண்டு பேரும் வீட்டுக்கு போனோம். மொத தடவையா அவரோட திட்டு வாங்காம நுழைஞ்சோம், சுய நினைவே இல்லாம கேவி கேவி மூச்சுவிடுகிட்டிருந்ததால.

ஆத்தூருக்கு ஆட்டோவில போயிட்டு அங்கருந்து ஆம்னி புடிச்சி சேலம் கொண்டுட்டு போலாம்னு முடிவு பண்ணினோம்.

ஆட்டோவ அலஞ்சி திரிஞ்சி புடிச்சிட்டு பின்னால அவர, அம்மாவ, ரவிய உக்கார வெச்சிட்டு நான் முன்னால டிரைவரோட அட்ஜஸ் பண்ணி உக்காந்துட்டேன். இவனுங்க ரெண்டு பேரும் பைக்குல முன்னாடி போயி கார ரெடி பண்றதுக்கு போயிட்டானுங்க.

ஸ்டார்ட் பண்றப்போ கிக்கர் (ஆட்டோவில ஸ்டார்ட் பண்றதுங்க) வேகமா கையோட வந்தாலும் வண்டி ஸ்டார்ட் ஆயிடுச்சி. திட்டிகிட்டே வண்டிய எடுத்த டிரைவர் ஊரத் தாண்டி இருக்கிற பாலத்துகிட்ட வரும்போது ரெண்டு ஆடுங்க சண்ட போட்டுகிட்டு திடீர்னு குறுக்க வர மெரண்டு போயி சட்டுனு பிரேக் அடிச்சி வண்டிய திருப்பிவிட நான் அப்படியே தவறி விழுந்து பாலத்துக்கு கீழ கிடக்கிறேன். கை முறிஞ்சி கன்னத்துல காயம். ரத்தம் ஊத்துது. வலிய பொறுத்துகிட்டு தலையில ரத்தம் வராம கர்சீப்பால கட்டிகிட்டேன். ரவிய அப்பத்தான் பாக்கிறேன் வாயெல்லாம் ரத்தம். அவன் புடிச்சிகிட்டு வந்த கம்பில பட்டு முன்னால இருந்த ரெண்டு பல்லு புட்டுகிச்சி. ஆட்டோவ தள்ளி ஸ்டார்ட் பண்ணி,மெதுவா கிளம்பினோம்.

சரியான வலி, உயிர் போற மாதிரி இருந்துச்சி. ஒடஞ்ச கையோட அப்படியே என்ன ஆஸ்பத்திரியில விட்டுட்டு இவனுங்க ரெண்டு பேரும் ஒரு ஆம்னிய புடிச்சி சேலம் கூட்டிகிட்டு போனானுங்க'.

அடுத்து பாலு ஆரம்பிச்சான். 'வண்டி பத்து கிலோ மீட்டர்தான் போயிருக்கும், திடீர்னு முன்னாடி டயர் வெடிச்சி கிறுக்கிகிட்டு போயி ஒரு மரத்துல மோதி நின்னுடிச்சி. நல்லவேளை முன்னால எந்த ஒரு வண்டியும் வரல. டிரைவர் பக்கத்துல முன்னாடி இருந்த எனக்கும், பின்னால இருந்த ரவி அம்மாவுக்கும் சரியான அடி. வண்டி நசுங்கினதுல என் காலு சிக்கி நல்லா பிசகிகிச்சு.

அம்மா மயக்கமாயிட்டாங்க. அவருக்கு இளைப்பு நின்னு நார்மலுக்கு வந்துட்டாரு. நான் அப்படியே வந்த ஒரு பைக்குல ஆத்தூர் வந்து அஷோக் கூட சேந்துட்டேன். ஹேர் ஃபிராக்சர். இன்னும் ஒழுங்கா நடக்க முடியல. அதுக்கப்புறம் மணிதான் கூட்டிட்டு போனான்'.

மிச்சத்த மணி தொடர்ந்தான். ’அப்புறம் வந்த ஒரு சுமோவில மயக்கமா இருந்த அம்மா, அவன், அப்பா எல்லாத்தையும் கூட்டிகிட்டு போனோம். ஒரு வழியா ஆஸ்பத்திரிக்குள்ள நுழையிறோம், அவர ஸ்ட்ரெச்சர்ல வெச்சி கொண்டுபோறதுக்குள்ள இறந்து போயிட்டாரு. அப்புறம் அம்மா ஒரு வாரம் நினைவில்லாம இருந்தாங்க. இப்போ பரவாயில்ல. ஒருவழியா எல்லாம் முடிஞ்சது' ன்னு முடிச்சான்.

ரொம்ப கஷ்டமா இருந்துச்சி. 'நல்ல வேலை மணி உனக்குத்தான் ஒன்னும் ஆகலன்னு சொல்ல',

'யாரு சொன்னா, திரும்பி வீட்டுக்கு வர்றப்போ அவங்கள மார்ச்சுவரி வண்டில அனுப்பிட்டு பஸ்ஸில வந்தேன். படியில வந்தேன், சரியான கூட்டம். தொங்கிட்டு வர்றப்போ செருப்பு வழுக்கி தடுமாறி கீழ விழுந்து கம்பிய புடிச்சிகிட்டாலும் காலு கீழ உரசி ரெண்டு விரலு போயிடுச்சி' ன்னு கால காமிச்சான்.

குழந்தையின் பிரார்த்தனை...

|


எல்லோருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்...

பிரபாகர்.


'அங்கிள் என்ன டிஸ்தப் பண்ணாதீங்க. புது வருஷத்துக்கு நிறையா சாமிகிட்ட வேண்டிக்க சொல்லி அப்பா சொல்லியிருக்காரு, வேண்டிக்கிறேன்....?

சாமி, சாமி... மொதல்லாம் எங்கப்பா ரொம்ப சந்தோஷமா இருப்பாரு, என்கூடத்தான் அதிகமா விளையாண்டுட்டிருப்பாரு. ஆனா இப்போ எப்போ பாத்தாலும் யாருகிட்டயாவது பேசிகிட்டே இருக்காரு. கம்ப்யூட்டர்ல எதாச்சும் பண்ணிகிட்டே இருக்காரு.

வெளிய தினமும் கூட்டிகிட்டு போவாரு, நிறைய கதை சொல்லுவாரு, இப்பல்லாம் போன்ல மத்தவங்ககிட்ட நிறையா கதை சொல்லிகிட்டு, என்கிட்ட பேசவே மாட்டுக்கிறாரு.

கம்ப்யூட்டர்ல கேம்ஸ் விளையாடவே விட மாட்டுக்கிறாரு. படிப்பு கெட்டுடுமாம். ஆனா அவரு மட்டும் அதுலேயே தான் இருக்காரு.

எங்கள ஃபாலோ பண்ணாம யார் யாரையோ ஃபாலோ பண்றாரு. கொஞ்சம் ஏன்னு கேளு சாமி.

தினமும் எத்தனை ஹிட் வருதுன்னு பெருமையா சொல்லிகிட்டிருக்காரு, என்னை சரியா கவனிக்காம ஸ்கூல்ல கொட்டு வாங்கறேன்னு தெரியாம.

எங்களையெல்லாம் விட்டுட்டு சினிமாவுக்கு மொத ஷோவுக்கு போயிட்டு வந்து மொத ஆளா விமர்சனம் பண்ணனும்னு துடிக்கிறாரு.

அம்மாவும் எவ்வளவோ சொல்லி பாத்துட்டு மாத்த முடியாம, சீரியல் பாத்துகிட்டிருக்காங்க.

ப்ளீஸ், எனக்கு பழைய அப்பாவ திருப்பி கொடு சாமி'.


பின்குறிப்பு:

ஹி...ஹி... சும்மா கற்பனை.

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB