மகனுக்காக...

|

என்னுடன் வேலை பார்க்கும் நண்பரின் மனைவி நிறைமாதக் கர்ப்பிணியாய் இருக்கிறார். பிரசவ சமயத்தில் மனைவியின் அருகில் கண்டிப்பாய் இருக்கச்சொல்லி அறிவுறுத்தி முன்னதாகவே அவரை ஊருக்கு செல்லுமாறு வற்புறுத்தினேன். காரணம் எனது மகன் மற்றும் மகள் பிறக்கும்போது அருகில் இருக்க இயலாத சூழலில் இருந்தேன் என்பதால்தான்.

அதிலும் குறிப்பாய் எனது மகன் பிறந்த தருணத்தில் கையில் காசின்றி, நம்பி சென்ற வேலையும் இல்லாமல் வெறுமையாய் சிங்கையில் இருந்த அந்த சூழலில் என் மகன் பிறந்த செய்தி, எப்படி இருக்கிறான் என எல்லாவற்றையும் செவிவழிக் கேட்டுத்தான் தெரிந்துகொண்டேன்.

அந்த தருணத்தில் 'மகனுக்காக' எனும் தலைப்பில் எழுதிய ஒன்றை இங்கு பகிர உத்தேசம்.

இது சிங்கையில் வெளிவரும் தமிழ் முரசில் 07/11/2004 அன்று வெளிவந்தது.

கண்ணே என் கண்மணியே
     காணாத பொக்கிசமே
என்னோடு இயைந்திருக்கும்
     இன்பம் தரும் பூஞ்சுகமே

நினைவெல்லம் உனைப்பற்றி
     நிறைந்திருந்து தவிக்கின்றேன்
கனவிலுனைக் கண்டிட்டு
     காண்பதற்கு துடிக்கின்றேன்.

கையிலுன்னை தொட்டெடுத்து
     கனிவான மொழி பேசி
மெய்சிலிர்த்து வியந்து உன்
     மேனியெழில் தரிசித்து

ஆயிரம் பாடல்களை
     ஆராரோ சேர்த்துப்பாடி
மாயக்கண்ணன் நீயுறங்க
     மகிழ்வினில் நான் கிறங்க

எண்ணும்போது சிலிர்க்கிறது
     எங்கோ மனம் பறக்கிறது
கண்ணில் துளி பார்க்கிறது
     கவலை மேகம் சூழ்கிறது

பணம் எனும் வாழ்வின்
     பிரதான விஷயம்தான்
என்னையுன்னை பிரிக்கிறது
     ஏக்கமதை சேர்க்கிறது.

உயிர் கொடுத்த என் நாசி
     உப்பலான என் கன்னம்
கயல் பொன்ற கண்களினில்
     கிறங்கடிக்கும் துறுதுறுப்பு

தாயவளின் தங்கநிறம்
     தேன் சிந்தும் அதரங்கள்
சேயுனக்கு இருப்பதாய்
     செவிமடுத்து கேட்டிட்டேன்

உனைக் கண்ட யாவருமே
     வியந்து பல கூறக்கேட்டு
தினமும் நான் திளைக்கின்றேன்
     திகட்டாத மகிழ்ச்சியினில்

கனவு காணத் தூங்கின்றேன்
     கலைந்த பின்பு ஏங்குகின்றேன்
மனம் முழுதும் மகனுக்காக
     மனக்கோட்டை கட்டுகின்றேன்

அடிப்படை தொல்லையெல்லாம்
     அகன்றிடும் முதல் நாளில்
துடிப்புடன் கிளம்பிவந்து
     தங்கமகன் உனைப் பார்த்து

வாடும் முகம் மலர்ந்திடுவேன்
     வருத்தமெலாம் தொலைத்திடுவேன்
தேடுகின்றேன் அந்தநாளை
     தொலைவிலில்லை பக்கம்தான்...

செல்லரித்த மடல்கள்...

|

செல்பேசி வந்து மடல்களை செல்லரிக்க வைத்து மனப் பரிமாற்றங்களுக்கு முற்றுப் புள்ளியினையே வைத்துவிட்டது, உறவுகளிடையே இருந்த எதிர்ப்பார்ப்பு, ஏக்கம் என எல்லாம் தொலைந்தும் விட்டது எனலாம்.

ஆம்... கடிதங்கள் வாழ்வின் பிரதான ஒன்றாய் இருந்து இன்று ஆடிக்கொன்று, அமாவாசைக்கொன்றாய் வங்கி மற்றும் சில முக்கிய இடங்களிலிருந்து பணப்பரிமாற்றங்களுக்காக மட்டுமே என்றாகி மனப்பரிமாற்றங்களுக்கில்லை என்றாகிவிட்டது.

இதைப் படிக்கும் எத்தனைப் பேருக்கு அஞ்சல் அட்டை மற்றும் உள்நாட்டுத் தபாலின் விலை தெரியும் எனத் தெரியவில்லை. உள்நாட்டுத் தபாலின் விலை ஒன்று ஐம்பதாக இருக்கலாம், அஞ்சல் அட்டை ஐம்பது பைசாவோ? என என்னும் அளவிற்குத்தான் என் அறிவு.

கடிதம் எழுதுவது எப்படி என எனக்கு பள்ளியில் கற்றுத்தருவதற்குமுன் எல்லாமுமான என் மாமா ஐந்தாம் வகுப்பிலேயே கற்றுத்தந்தார். அப்போது அஞ்சல் அட்டையில் விலை ஐந்து பைசாவாக இருந்தது என நினைக்கிறேன்.

படித்து முடித்து சில மாதங்கள் வேலை கிடைக்கும்வரை அவர் வீட்டில் இருந்தபடி வேலைக்காக முயற்சித்த வண்ணம் இருந்தார். அந்த தருணங்களில்தாம் என்னை வங்கிக்கு அழைத்துச் சென்று எப்படி பணம் எடுப்பது, கடிதம் எழுதுவது, நூலகத்தை அறிமுகப்படுத்தியது என எல்லாம்.

மதுக்கரையில் வேலை கிடைத்து சென்றுவிட எங்களுக்கிடையில் உறவுப்பலமாய் இருந்தவை மடல்கள் தாம். அன்புள்ள மாமாவுக்கு என ஆரம்பித்து பெரும்பாலும் எல்லாக் கடிதங்களும் நல விசாரிப்புக்கள், படிப்பு சம்மந்தமான வழக்கமான தகவல் பரிமாற்றங்கள் என ஒரே மாதிரியாய்த் தானிருக்கும்.

சொல்லித்தந்தவாறு முகவரியை எழுதி, திட்டலுக்கு பயந்து பிழை இல்லாமல் எழுத முயற்சித்து உயரம் கூட எட்டாத அந்த சிவப்புப் பெட்டியில் போட்டு, அது எங்கு சென்றுகொண்டிருக்கும் என்றெல்லாம் கற்பனை செய்து தபால்காரன் மணி அண்ணன் கொண்டு வரும் பதில் கடிதத்திற்காக வழிமேல் விழி வைத்து காத்திருந்து, அவரை தினமும் அயராது கேட்க 'இல்லை கண்ணு' என்று சொல்வதையே பெரும்பாலும் கேட்டு... கடைசியாய் கிடைக்கும் பதில் கடிதம் பார்க்க வந்த மகிழ்ச்சி இருக்கிறதே...! அதை சொல்லிட வார்த்தைகள் கிடையாது.

மாமாவின் அறிவுரைகள், சென்ற மடலில் இருந்த தவறுகளை சுட்டிக்காட்டி சரிசெய்துகொள்ள அறிவுறுத்தல்கள் என எல்லாம் தாங்கி வரும் அந்த மடலைப் படித்ததும் எல்லாம் சாதிக்கலாம் என உற்சாகம் வரும்.

நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுகளையும் கடிதங்களின் முலமாய்த்தான் பகிர்ந்து கொண்டாகவேண்டிய கட்டாயம் அன்று. நல்ல கேட்ட விஷயங்கள் எல்லாம் மடல்கள் தாம் நமக்கு தெரிவிக்கும். 'மழை பெய்திருக்கிறது, மாடு கேடேரி கன்று போட்டிருக்கிறது, மோட்டார் காயில் போய்விட்டது, குட்பால் (ஃபுட் வால்வ்) கிணற்றில் விழுந்துவிட்டது என்றெல்லாம் காதில் விழுந்ததை எழுத்தால் தகவல் சொல்லி, அதற்காக வரும் பதிலில் சரிப்படுத்தலோடு அர்ச்சனைகள் தாங்கி... ஆஹா... நினைக்கும் போதே இனிமையாய் இருக்கிறது.

தேர்வில் எடுக்கும் மதிப்பெண்களைச் சுமந்து சென்று பதிலாய் பாராட்டு மற்றும் திட்டுக்களை சுமந்து வந்து சேர்க்கும். உக்கமூட்டும் வார்த்தைகளுடனும், ஆக்கபூர்வமான அறிவுரைக்களுமாய் முனைப்படுத்திக்கொள்ள எதுவாய் நிறைய இருக்கும்.

அந்த தருணத்தில் மணிமேகலை பிரசுரத்தின் 'பேனா நண்பர்கள் சங்கம், நோக்கங்களும் முகவரிகளும்' எனும் ஒரு புத்தத்தினை விபிபியில் வாங்க, அதன் முலம் நிறைய புதிய நட்புக்கள். இராசிபுரத்திலிருந்து கோபி, கோவையிலிருந்து துரையன் அய்யா என பல்வேறு நண்பர்கள், வயது வித்தியாசம் பாராமல். இதில் கோபி எனது வீட்டிற்கு வந்திருக்கிறார்.

படிக்கும், படித்த விஷயங்களைப் பரிமாறிக்கொள்ளுதல், ஊரில் நடக்கும் திருவிழாக்களைப் பற்றி விமர்சையாக எழுதி சந்தோஷங்களைப் பகிர்ந்து கொள்ளுதல், ஏதேனும் தகவல்கள் தேவையெனில் கேட்டுத் தெரிந்து கொள்ளுதல் என எல்லா வழிகளுக்கும் உற்ற துணையாயிருந்தவை மடல்கள் தான்.

எனக்கும் என் நண்பன் மணிக்கும் பிரச்சினை வந்தபோது தவறு என்மேல் என உணர்ந்து மன்னிப்புக்கேட்க உதவியதும் மடல்தான். என் தவற்றால் கடும் கோபம் கொண்ட என் அப்பாவிடம் சமாதானத் தூதுவனாய் இருந்ததும் மடல் தான்.

திருமணம் நிச்சயம் ஆகி திருமணத்திற்கான ஆறுமாதங்கள் வரை எங்களின் அன்பினைப் பரிமாறிக்கொள்ள தூதுவனாய் இருந்தது மடல்தான். ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு மாதிரியாய் சலிப்புறாமல் இருக்க வேண்டும் என பல விதமாய் எழுதவேண்டும் என்ற கட்டாயத்தை ஏற்படுத்தி எழுதும் ஆற்றலை வளர்த்ததும் மடல்கள் தாம்.

நாகரிக வளர்ச்சியில் மடல் எழுதும் காலம் போய் இன்று எல்லாம் செல்பேசி என்றாகிவிட்டது. இரண்டு வரிகள் சாட்டில் பேசினால் உடனே அழைத்துப் பேசி தொடர ஆரம்பித்துவிடுகிறோம்.

மொத்தத்தில் உறவுகளுக்கிடையே இருக்கும் நெருக்கப் பிணைப்பை, அன்பின் வெளிப்படுத்தலை நிறைய இழக்கிறோம்.

இனிமேலாவது நமது வாரிசுகளை கடிதம் இல்லாவிடினும் மெயில் மூலமாய் கடிதம் எழுதச் சொல்லி அவர்களின் எழுத்தாற்றலை வளர்த்து நமது அன்பினைப் பரிமாரிக்கொள்வோமே...!

போராளி... எனது பார்வையில்...

|

தியேட்டரில் சென்று படம் பார்த்து நாளாகிவிட்டபடியால் ஓஎம்ஆர் ஏஜிஎஸ்-ல் போராளி படம் பார்க்க நண்பரோடு சென்றேன். இரவு பத்தரை மணிக்காட்சி.

பாதிக்கும் மேல் அரங்கம் நிறைந்திருந்தது. சிங்கையின் கோல்டன் வில்லேஜில் படம் பார்க்கும் உணர்வினை ஏற்படுத்தியது.

கதை ஏறக்குறைய பலரின் விமர்சனங்களைப் படித்ததால் ஏற்கனவே தெரிந்த ஒன்றாகவே இருக்க, அதிக எதிர்ப்பார்ப்பு இல்லாமல் பார்க்கும்படியாய் இருந்தது.

பார்க்கும் போது பலரின் விமர்சனங்களோடு ஒத்துப்போவதாய் தான் எனது புரிதலும் இருந்தது.

ஒவ்வொருவருமே ஒரு விதத்தில் போராளிதான், ஏதாவது ஒரு தருணத்தில் மனப் பிசகு ஏற்படுகிறது, உடலுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை மனதுக்கு கொடுக்க மறுக்கிறோம், சொந்தக்காரங்களை மட்டும் நம்பவே முடியாது (இந்த இடத்தில் நிறைய கைத்தட்டல்கள்) என ஏகமாய் தத்துவ மழைகள்.

நகைச்சுவைக் காட்சிகள் பெரிதாய் கவரவில்லையென்றாலும் மென்முறுவலை வரவழைக்கிறது, ஆரோக்கியமாய் இருக்கிறது என்பதில் சந்தோஷமே.

சிலோனே பிடிக்காது, இதில் சிலோன் பரோட்டாவா என தமிழுணர்வை வெளிப்படுத்தும் வசனங்கள். சசிக்குமார் ஏகமாய் வசனம் பேசி சில சமயங்களில் நிறையவே படுத்துகிறார். நடிப்பும் சில இடங்களில் செயற்கையாக இருக்கிறது.

இசை ரொம்பவும் சுமார். இளையராஜா இசையமைத்திருந்தால் இந்த இடத்தில் எவ்வளவு அருமையாய் செய்திருப்பார் என பல இடங்களில் எண்ணி பார்க்கும்படியாய் பிண்ணனி இசை. காட்சிகள் நன்றாக படமாக்கப்பட்டிருக்கின்றன.

சிலபல படங்களின் மொத்தக் கலைவையாய் தெரிந்ததே தவிர எந்த  ஒரு தனித் தன்மையுடனும் இல்லை என்பதே பெரிய குறை.  அடி, வெட்டு, குத்து என வன்முறைகளுக்கு பஞ்சமில்லாமல் இருந்தாலும் ஆபாசம் அறவே இல்லை என்பதில் பெரிய ஆறுதல்...

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB