ஹலோ..வணக்கம் பிரதர் நல்லாருக்கீங்களா?

|

ஒரு சமயத்துல நாம நல்லா பேசறோம், பயங்கரமா பேச்சு திறமை இருக்கு, வாயிலயே ஜெயிச்சிடலாம்னு நெனச்சிகிட்டிருந்தேன், அந்த புண்ணியவான பாக்கற வரைக்கும்.

ஈரோடு வரைக்கும் போயிட்டு திரும்ப ஆத்தூர் வர்றப்போ திருச்செங்கோட்டுல பஸ் கொஞ்ச நேரம் நின்னது.

முழுசும் படிச்சி இங்கிலீஷ் நாலேட்ஜ வளத்துக்கனும்னு தினமும் வாங்கி ஸ்போர்ட்ஸ் காலத்த அதுவும் கிரிக்கெட்ட மட்டும் படிக்கிற ஹிந்து பேப்பர்ல மூனாவது தடவையா சச்சின் சென்சுரியை பத்தி படிச்சிகிட்டு இருந்தேன்.

'வணக்கம் பிரதர், நல்லாருக்கீங்களா?' குரல் கேட்டு திரும்ப, சிரிச்ச முகத்தோட ஒரு இளைஞர்.

'நீங்க'ன்னு இழுத்தேன், எங்கேயும் பாத்த மாதிரி இல்ல.

'நான் உங்க தம்பியோட ஃபிரண்டு'

'ஓ, திவாவோட ஃபிரண்டா?'

'ஆமா, திவா நல்லாருக்காரா?'

'நல்லாருக்கான், பைண்டிங் வேலையெல்லாம் விட்டுட்டு இப்போ தறியை பாத்துகிட்டு இருக்கான். ஆமா உங்களுக்கு எப்படி தெரியும்?'

'பைண்டிங் விஷயமா பிரஸுக்கு வரும் போது பழக்கம், நீங்க பாக்கறதுக்கு அவரு மாதிரியே இருக்கீங்க'

'ஆமா நிறைய பேர் அப்படித்தான் சொல்லுவாங்க. அவன் கொஞ்சம் என்னவிட கலரா இருப்பான்'

'இருந்தாலும் நீங்கதான் பர்சனாலிடியா இருக்கீங்க' ன்னாரு.

இதுலேயே உஷாராயிருக்க வேனாமா? ஜிவ்வுனு ஏற, பேச்சு தொடர்ந்துச்சி.

அப்போல்லாம் செல் ஃபோன் கிடையாது.

'திவாகர பாக்கனும் போல இருக்கு, ஆமா அவருக்கு கல்யாணம் எல்லாம் எப்போ பண்றீங்க பிரதர்' ங்கவும் லேசா சந்தேகம் வந்துச்சி.

'கல்யாணம் பண்ணி குழந்தயே இருக்கு உங்களுக்கு தெரியாதா?' ன்னு கேட்டேன்.

'சொல்லவே இல்லைங்க பிரதர். என்ன சுத்தமா மறந்துட்டாரு. நம்பர் கொடுங்க கண்டிப்பா அவருகிட்ட பேசனும்'.

'அதே நம்பர் தான், பழசு உங்ககிட்ட இருக்கில்ல?' ன்னு கேட்க,

'இருக்கு பிரதர், ஒரு சின்ன ஹெல்ப், பஸ்ஸு கிளம்ப போகுது. சரக்கு எடுக்க வந்தேன், கொஞ்சம் காசு பத்தல. ஒரு தேர்ட்டி ருபீஸ் கொடுத்தீங்கன்னா, திவாகர்கிட்ட கொடுத்துடுவேன், ப்ளீஸ்...'

அப்போதான் பேர கேட்டேன்.

'சுரேஷ், ஆத்தூர்னு சொல்லுங்க கண்டிப்பா அவருக்கு தெரியும்' னு சொல்லிட்டு கொடுத்த முப்பது ரூபாய வாங்கிட்டு எஸ்கேப் ஆயிட்டாரு.

கொஞ்சம் நடந்ததையெல்லாம் யோசிச்சு பாத்தப்போ எல்லா தகவலையும் நான் தான் மடத்தனமா சொல்லியிருக்கிறேன்னு தெரிஞ்சது.

மனசே கேக்கலை. வந்து தம்பிகிட்ட சொன்னப்போ விழுந்து விழுந்து சிரிச்சான். 'உன்னையே ஒருத்தன் சாதாரணமா ஏமாத்தியிருக்கான்னா, அவன் பெரிய ஆளுதான்' னு சொன்னான்.

அப்புறம் ரெண்டு வாரம் கழிச்சு பஸ்ஸில பெரம்பலூர்ல, 'ஹலோ வணக்கம் பிரதர், நல்லாருக்கீங்களா?' ன்னு ஒரு குரல்.

சிரிப்போட ஒரு இளைஞன்.

'நல்லால்ல' ன்னு சொல்லிட்டு திரும்பவும் ஸ்போர்ட்ஸ் காலத்துல மூழ்கிட்டேன்.

சாயங்காலம் என் தம்பி, 'அண்ணா என் ஃபிரண்டு ரவி உன்னை பாத்து பேசினானாம், சரியா கூட பேசாம மூஞ்சை திருப்பிகிட்டியாம்' னு சொல்ல

அவனை எரிக்கிற மாதிரி பாக்க, அவன் லேசா சிரிக்க, ரெண்டு பேரும் விழுந்து விழுந்து சிரிச்சோம்

எங்கேயோ படிச்சது - 6 (ஜோவியல் ராஜாவும் சவரத்தொழிலாளியும்)

|

லீவ்ல வீட்டுக்கு போனேன்னா எல்லோரும் கலகலப்பா சிரிச்சிகிட்டே இருப்பாங்க. ஏதச்சும் பேசி சிரிக்க வெச்சுகிட்டே இருப்பேன்.


ஒரு ஞாயித்து கிழமை காலைல எல்லாரும் ஹால்ல உக்காந்து இருந்தோம்.என்னன்னே தெரியல ரொம்ப சைலன்ட்டா இருந்துச்சி, யாரும் பேசிக்கல.


மவுனத்தை நான் தான் உடைச்சேன். 'ஆமா என்னாச்சு, ஏன் எல்லாரும் அமைதியா இருக்கிறோம்'னு கேக்க,


என் தம்பி 'எல்லாரும் இல்ல, நீ அமைதியா இருக்கிற அதனால எல்லாரும் அமைதியா இருக்கிறோம்'னு நக்கலா சொன்னான்.


அப்போ டக்குனு என் தங்கச்சி, 'அண்ணா நாம ரெண்டு மாசமா சிக்கன் சாப்பிடலல்ல அதான் சோகமா இருக்கோம்'னா


அப்பா கோயிலுக்கு மாலை போட்டிருந்ததால ஃபுல் வெஜிடேரியன் தான் ரெண்டு மாசமா.


டக்குனு யாரையும் எதுவும் பேசவிடாம,இப்போ ஒரு கதை சொல்ல போறேன், எல்லோரும் கேளுங்கன்னு வழக்கம்போல ஆரம்பிச்சேன்.


ஜோவியல் ராஜவுக்கு முடியெல்லாம் வெட்டி, சவரம் செஞ்சி முடிச்சவுடனே, 'ஏம்பா நாடு நகரமெல்லாம் எப்படி இருக்கு'ன்னு வழக்கமான கேள்வியை கேட்டாரு.


'உங்க ஆட்சில என்ன குறை இருக்க முடியும் ராஜா, பஞ்சம் பட்டினி ஏதுமில்லாம, செழிப்பா, திருட்டு, கொள்ளைன்னு பயம் இல்லாம, எல்லாரும் சந்தோஷமா, குறைஞ்சது ஒரு எலுமிச்சங்கா அளவிற்காவது தங்கம் வெச்சிகிட்டு இருக்காங்க'ன்னாரு.


அவருக்கு வழக்கத்தவிட அதிகமாவே கொடுத்துட்டு, சந்தோஷமா குளிச்சி, பூஜை, சாப்பாடெல்லாம் முடிச்சிட்டு அரசவைக்கு கிளம்ப, மந்திரி வழக்கம்போல தயாரா காத்திருந்து ஒட்டிகிட்டாரு.


ராஜா ரொம்பவும் குஷியா இருக்கறத பாத்துட்டு, 'என்னது வழக்கத்தவிடவும் ரொம்ப சந்தோஷமா இருக்கீங்க'ன்னு கேக்கவும்,


காத்திருந்தாப்ல,'எனக்கே ரொம்ப பெருமையா இருக்குது. நம்ம ஆட்சிய எல்லோரும் ரொம்ப புகழ்றாங்க'ன்னுட்டு,


'இந்த நாட்டுல ஒவ்வொருத்தர்கிட்டேயும் கொறைஞ்சது எலுமிச்சங்கா அளவிற்காவது தங்கம் இருக்கு'ன்னாரு.


'ஆமா யாரு இந்த அருமையான தகவல சொன்னது'ன்னாரு.


நடந்தத சொல்லவும், 'ராஜா சூரியன் கிழக்கே உதிக்குதுன்னு புதுசா சொல்லனுமா'ன்னுட்டு,


'இத நாம அப்படியே விட்டுட முடியாது, அடுத்த வாரமும் நிலவரத்த கேளுங்க'ன்னு சொல்லிட்டு அவரு வேலைய ஆரம்பிச்சாரு.


உளவாளிங்கள கூப்பிட்டு 'அந்த நாவிதர் வீட்டுல எலுமிச்சங்கா அளவு தங்கம் எங்கேயாவது இருக்கும், அத சுட்டுட்டு வந்துருங்க'ன்னு சொன்னாரு.


நம்மாளுங்களுக்கு சொல்லவா வேணும், காரியத்த கச்சிதமா முடிச்சிட்டாங்க.


அடுத்த முறை முகச்சவரம் பண்ண வந்தப்போ, ஆளு ரொம்ப சோகமா இருந்தாப்ல. மழிக்காத முகம், வாரத தல, முகமெல்லாம் கவலை.


எப்பவும் போல இல்லாம சும்மா கடமைக்கு வேலைய முடிச்சாரு.


மந்திரி சொன்ன மாதிரி 'ஏம்பா நாடெல்லாம் எப்படி'ஆரம்பிச்ச உடனே டக்குனு


'மன்னிக்கனும் மகாராஜா, நாடா இது, எங்க பாத்தாலும் திருடு, வழிப்பறி, பஞ்சம், பட்டினின்னு இருக்கு, நீங்கதான் எதாச்சும் செய்யனும்'னு சொல்லிட்டு கொடுத்தத வாங்கிட்டு கிளம்பிட்டாரு.


மந்திரி பாக்கும் போது, போன வாரம் ஜோரா இருந்த ஜோ.ரா, சோர்ந்து போயி மனசெல்லாம் பாரமா ஒரு மாதிரி இருந்தாரு.


'என்னாச்சு மன்னா, வழக்கத்துக்கு மாறா ரொம்பவும் விசனமா இருக்கீங்க'ன்னு விசாரிக்க,


'போன வாரம் ஆகா ஓகோன்னு புகழ்ந்த ஆளு இன்னிக்கு அப்படியே மாத்தி சொல்லறாரு. அந்த அளவுக்கா நாடு மோசமாயிடுச்சி'ன்னு கேக்க,


சிரிச்சிகிட்டே,'ராஜ போன வாரம் அவருகிட்ட எலுமிச்சங்கா அளவுக்கு தங்கம் இருந்துச்சி, தெம்பா சந்தோஷமா இருந்தாரு. பாக்கறதெல்லம் நல்லதாவே தெரிஞ்சது.


'உங்களுக்கு புரிய வெக்கனுங்கறதுக்காக தூக்கிட்டு வர சொல்லிட்டேன். ஆனா இப்போ இருந்தத இழந்துட்டதால பாக்கறதெல்லாம் தப்பா தெரியுது. வர்ற கருத்தெல்லாம் அவங்களோட மனநிலையை பொறுத்துதான்'ன்னு சொன்னாரு.


முடிச்சிட்டு 'பாப்பா அந்த மாதிரி, உனக்கு சிக்கன் சாப்பிடறதுல ஏக்கம்னா கம்பனிக்கு எங்களையெல்லாம் ஏன் இழுக்கிற'ன்னு சொல்லி முடிச்சதும், எல்லோரும் இதுக்கு இவ்வளோ பெரிய கதை தேவையான்னு மொறைச்ச மாதிரி பாத்துட்டு,சிரிக்க ஆரம்பிச்சி ரொம்ப நேரம் சிரிச்சிகிட்டிருந்தோம்.

ஐயா நான் ஏஜுக்கு வந்து விட்டதால்...

|

மல்லியகரையில ஒம்போதாவது வரைக்கும் படிச்சேன்னு சொல்லியிருக்கேன். பத்தாவதுல என் சொந்த ஊர் தெடாவூர்லயே மூனாவதுக்கு அப்புறம் படிக்கிற மாதிரி ஆயிடுச்சி.
நடுநிலைப்பள்ளியா இருந்து உயர் நிலைப்பள்ளியா மாறினதால, ஹெட் மாஸ்டர் கருப்பண்ணன் சார், அப்பாகிட்ட நிறையா உறுதிமொழியெல்லாம் கொடுத்து இங்க கூட்டிட்டு வந்துட்டாரு.
அப்புறம்தான் தெரிஞ்சது, என்ன ரொம்ப தப்பா நினைச்சு கூட்டிட்டு வந்துட்டாருன்னு, அதாங்க, ரொம்ப பிரில்லியன்ட்னு.
மொத வருஷம் நல்ல ரிசல்ட் வரனும்னு ரொம்ப கேர் எடுத்துட்டாரு.
ஏன்னா மூனு, அஞ்சு கிலோ மீட்டர்ல ரெண்டு ஹையர் செகண்டரி ஸ்கூல் இருந்தால தர மாட்டேன்னுட்டாங்களாம்.
பழைய ஸ்கூல்ல ரொம்ப ஜாலியா இருந்துட்டு இங்க வந்து வசமா சிக்கிட்டேன், பொறியில மாட்டின எலி மாதிரி. அதை பத்தி இன்னொரு பதிவுல சொல்லுறேன்.
இங்க பழக்க வழக்கமே வேற மாதிரி இருந்துச்சி. பசங்க பொண்ணுங்கல்லாம் ரொம்ப சகஜமா பழகுனாங்க.
வாடி, போடி, நாயி, பேயி, பிசாசுன்னு பேசிக்கறத பாத்து ஆச்சர்யமா இருந்துச்சி. காரணம் எல்லாருமே ஒரே ஊரு, சொந்தங்கற உரிமைன்னு தெரிஞ்சது.
வசந்தா கருப்பா இருந்தாலும் அழகா இருக்கும். அதுகிட்ட ரொம்ப யோசிச்சு கொஞ்சம் பயத்தோட 'உம் பேனாவ கொஞ்சம் தாடி' ன்னு கேட்டேன்.
'உடைஞ்சிடும்'னு சொல்ல,
'என்ன பேனாவா' ன்னு அப்பாவியா கேட்டேன்.
'இல்ல, உன் மண்டை. இந்த மாதிரியெல்லாம் கூப்புடற வேலை வேணாம்' னு சொல்ல,
'சரிங்க'ன்னு சொல்ல, 'அப்படியும் வேணாம், வசந்தான்னு பேர சொன்னா போதும்' னு சொல்லுச்சி.
கருப்பண்ணன் சார் தான் கிளாஸ் டீச்சர், ஆனா லீவ் விஷயத்தையெல்லாம் சாரங்கபாணி சார் தான் பாத்துப்பாரு.
அவரு எங்க மேல ரொம்ப அக்கறையா இருப்பாரு. நல்லா படிக்கிற பசங்கன்னா அவருக்கு ரொம்ப பிடிக்கும்.
பொண்ணுங்கள்ல வசந்தா, எங்கள்ல வேலு, முருகன், நான், அழகுன்னு யாரச்சும் வரலைன்னா வந்த உடனே பாத்துட்டு கேப்பாரு.
வழக்கத்துக்கு மாறா கனகவள்ளி வரலையான்னு நாலஞ்சு நாளா கேட்டுகிட்டு இருந்தாரு.
எங்களுக்கு ஏன் வரலன்னு தெரியும் ஆனா சொல்ல முடியாதே?
வசந்தா, 'சார் லீவ் லெட்டர் கொடுத்திருக்குது'ன்னு சொல்ல,
'அந்த கருமத்துக்குதான் தினமும் கேக்கறேன்'னாரு.
கனகவள்ளி கொஞ்சம் வெக்கத்தோட கிளாசுக்கு வந்துச்சி. தலையை அதிகமா குனிஞ்சிகிட்டே இருந்துச்சி.
சாரங்கபாணி சார் வந்தவுடனே, 'என்ன கனகவள்ளி வந்தாச்சா' ன்னாரு.
உடனே எழுந்து நின்னுச்சி.
அட்டன்டன்ஸ் நோட்டுக்குள்ள இருந்து அது கொடுத்து அனுப்பின லீவ் லெட்டர எடுத்தாரு.
'இப்படித்தான் லீவ் லெட்டர எழுவாங்களா புள்ள' ன்னுட்டு இழுத்து ராகமா படிச்சு காட்டினாரு.
'ஐயா நான் ஏஜுக்கு வந்து விட்டதால், எனக்கு ஒருவாரம் லீவ் தெவை, பத்தாவது படிக்கிற இன்னும் ஸ்பெல்லிங் மிஸ்டேக், கருமம் இப்படியா எழுதறது, மூக்குல ஒழுகுற சளியை இன்னமும் ஒழுங்கா தொடைச்சுக்க தெரியல இதெல்லாம் ஏஜுக்கு வந்துதுச்சாம்' ன்னாரு.
அவசரம புதுசா போட்டுட்டு வந்த தாவணியில துடைக்க, 'சனியன், வெளியே போயி சிந்திட்டு வா, லீவ் லெட்டர மொதல்ல மாத்தி எழுதி கொடு' ன்னாரு.

ஒரு பிளாக் செலுத்தும் நன்றி...

|

மூன்று மாசக் குழந்த என்ன எல்லாரும் அன்பா அரவணைச்சு கவனிக்கிறத பாக்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு. ஆனா கொஞ்சம் பயமாவும் இருக்கு. இதே மாதிரி என்ன கடைசி வரைக்கும் பாத்துக்கனுமே?
குழந்தைங்கன்னா அன்பாத்தானே பாத்துக்குவாங்கன்னு மனசு சமாதானம் சொன்னாலும், நாட்டி பண்ணாம இருக்கனுமில்ல? கண்டிப்பா இருப்பேன்.
நான் இங்க பேச வந்ததே சில பேருக்கு தேங்க்ஸ் சொல்லத்தான், ப்ளீஸ்... நான் சொல்லட்டுமா?
மொதல்ல என்ன உருவாக்கி, நிறைய வேலை இருந்தாலும் அப்பப்போ எழுதி என்ன பிஸியா வெச்சிருக்க என்ன படைச்சவருக்கு தேங்க்ஸ்.
அவரோட பின்னூட்டத்த பாத்துட்டு, லக்கி அங்கிள் தான் மொதல்ல எழுத சொன்னாராம். அதனால லக்கி அங்கிளுக்கு ஒரு ஸ்பெஷல் தேங்க்ஸ்.
அடுத்து, பட்டர்ஃபிளை அங்கிள், உங்களுக்கு தெரியுமா, அவரு ரொம்ப ஜாலியான அங்கிள்! என்ன படிச்சிட்டு நல்லா இருந்தா கண்டிப்பா பாராட்டாம இருக்க மாட்டாரு. என்னா மட்டுமில்ல புதுசா வர்ற யாருக்கும் நல்ல ஹோப் கொடுப்பாரு. அவருக்கும் தேங்க்ஸ்.
அய்யோ, உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா, ஒரு தடவ 'எனது பள்ளி நினைவுகள்' யூத்ஃபுல் விகடன்ல குட் பிளாக்குல வந்துச்சி. எவ்வளோ சந்தோஷமா இருந்துச்சி தெரியுமா?
அப்புறம், மணி அங்கிள். லக்கி அங்கிள் எழுதற கமென்ட்ச பாத்துட்டு தான் அவரை இவருக்கு ரொம்ப புடிக்கும். இவர எங்கேயோ பாத்த மாதிரி இருக்கு, புதுசா பாக்கிற மாதிரியே இல்லன்னு சொல்லுவாரு. அவரு பிளாக்ல என்ன கவுரவப்படுத்துனாரு. அவரு ஏன் அதிகமா எழுதலன்னு புலம்பிகிட்டே இருப்பாரு.
அடுத்ததா அவருக்கு ரொம்ப புடிச்ச நாகா அங்கிள். ரொம்பவும் பாசிடிவா இருப்பாரு தெரியுமா? அவர ரொம்ப ஊக்குவிச்சி எழுதுவாரு. என்னை கண்டிப்பா தினமும் ஒருதடவயாச்சும் எவ்வளோ பிசியா இருந்தாலும் பாத்துடுவாரு. அவருக்கு என்னோட முத்தத்தோட தேங்க்ஸ்.
அப்புறமா நம்மாளு, எழுதற விஷயத்துல ஒரு இன்ஸ்பிரேசனா நினச்சிகிட்டிருக்கிற பிளாக்ல 'பட்டைய கிளப்பு' ற சங்கர் அங்கிளுக்கு தேங்க்ஸ். உங்களை பாக்கனும் போல இருக்குன்னு சொல்லிட்டிருக்காரு.
ம்...அடுத்ததா அவரோட முக்கியமான ஃபிரண்டு, வேலு அங்கிள பத்தி சொல்லலன்னா கோவிச்சுவாரு. என்ன வாரத்துக்கு ஒரு தடவை படிச்சு சந்தோஷப்படறாரு. ஆனா அவருக்கு வெளிப்படுத்த தெரியாது. ஆன அவரு எத எழுதி காமிச்சாலும் படிக்கலன்னாலும் சூப்பர்னு சொல்லுவாராம்.
இதுக்கெல்லாம் மேல, என் தாத்தா, அதான் என்ன படைச்சவரோட மாமா, சம்பத் கிராண்ட்பா, அவருக்கு தேங்க்ஸ் பண்ணியே ஆகனும். எல்லாத்துக்கும் அவருதான் காரணம்னு சொல்லிட்டிருப்பாரு. அதனால அவருக்கு ஸ்பெசலா முத்தத்தோட தேங்க்ஸ்.
கடைசியா, என்ன படிக்கிற எல்லா அங்கிள், ஆன்ட்டி, தாத்தா, பாட்டி, அண்ணன், அக்கா, தம்பி(அய்யய்யோ தெரியாம சொல்லிட்டேன், நானே பச்ச குழந்த.. ஹி... ஹி...) எல்லருக்கும் ரொம்ப தேங்க்ஸ்.
அய்யய்யோ ஒரு முக்கியமான அங்கிள மறந்துட்டேனே, ஜோ அங்கிள், பயங்கரமா கலாய்க்கிறாரு, எனக்கு ரொம்ப பிடிக்கும், அவருக்கும் தேங்க்ஸ்.
கதிர் அங்கிள், விவசாயி அங்கிள், வாழவந்தான் அங்கிள்,நையாண்டி நைனா அங்கிள்,(பேரே செம தமாஷா இருக்கில்ல?), பாஸ்கி அங்கிள்,பேரு தெரியாத அங்கிள்... ப்ளீஸ் போதும்...,வாய் வலிக்குது. எல்லாருக்கும் என்னோட தேங்க்ஸ்.
இன்னும் நிறைய பேருக்கு தேங்க்ஸ் சொல்லனும், மறந்திருந்தா சாரி, சின்ன குழந்த, கோவிச்சுக்காதீங்க...பிளீஸ்...
கண்டிப்பா உங்களையெல்லாம் அப்புறமா சந்திக்கிறேன்.
பை, பை, டாட்டா...

குழந்தைக்கு நீதான் காரணம்

|

பக்கத்து வீட்டுல தெரிஞ்ச அக்கா முழுகாம இருந்தாங்க. மொத ரெண்டும் பொண்ணு.


அப்போ நான் 'கண்டிப்பா உங்களுக்கு மூனாவது பையன் தான்'னு அடிச்சு சொன்னேன்.


எப்பவும் நாம சொல்லறத ரொம்ப நம்பற அம்மா, 'செல்வி, கண்டிப்பா உனக்கு பையந்தான் பொறக்கும், பிரபு சொன்னா அப்படியே பலிக்கும்' னு பிட்ட போடவும் சொன்ன மாதிரியே நட்ந்துச்சி.


அதுக்கப்புறம் கொஞ்சம் யோசிச்சி, அவங்க தலைமுறை ரெண்டையும் அலசி பாத்து ஏதோ சொல்ல எல்லாமே பலிச்சிகிட்டு இருந்துச்சி.(பெருசா ஒன்னுமில்ல, ஒத்தயா ரெட்டையா தான். கொஞ்சம் யோசிக்கிற மாதிரி காமிக்கனுமில்ல)


சொந்த பந்தத்துல ஓரளவுக்கு பாப்புலர் ஆயிட்டேன்.


ரெண்டாந்தாரமா வாக்கப்பட்ட அத்தை மகளுக்கு காண்டுல ரெண்டு தடவையும் பையன்னு சொன்னேன்.(மொத தாரத்துக்கு நாலு பசங்க), சரியாவே இருந்தது.


ஆனா ஒரு விஷயத்துல தெளிவா இருந்தேன், எப்போ தப்பா போகுதோ அப்பவே சொல்றதில்லன்னு.


சொந்தக்கார மாமா பொண்ணு எனக்கு நல்ல ஃபிரண்டு. ஒரே வயசு. நாலு வயசிலேயே ரெண்டு பேரும் ஒன்னா கட்டி புடிச்சு நிக்கிற ஃபோட்டோ ரெண்டு பேரோட வீட்டுலயும் இருக்கும்.


அது ரொம்ப ஜாலி டைப். கொஞ்சம் கூட வெக்கப்படாம பேசும். சில நேரங்கள்ல நான் தான் நெளிய வேண்டியிருக்கும்.


நான் வீட்டுல இருக்கிறேன்னா உடனே வந்துடும் பாட்டி இல்லாம இருந்தா.


பாட்டி, ஆளு இருந்தானா வந்துடறா பாருன்ன்னு முனகிட்டு கூலா 'இங்க என்ன வேல, போடி உங்க வீட்டுக்கு' ன்னு முடுக்கி விட்டுடும்.


அது வேல பாத்துகிட்டிருந்த ஸ்கூலோட வாத்தியார லவ் பண்ணி, ஸ்கூல் ஓனர் ஆயிடுச்சி.


முழுகாம இருக்கும்போது 'பிரபு எல்லாருக்கும் சொல்றியே, எனக்கு என்ன குழந்தன்னு சொல்லு பாக்கலாம்' னு கேட்டுச்சி.


பளிச்சுன்னு 'பொண்ணு' ன்னு சொன்னேன், அது தான் அவங்க வீட்டுல முதல் பொண்ணுங்கற தைரியத்துல.


'நீ பொறாமையில சொல்றே, எனக்கு கண்டிப்பா பையந்தான்' னுட்டு போயிடுச்சு.


அப்புறம் காலேஜ் போயிட்டு எக்ஸாம் முடிச்சு லீவ்ல வந்தப்போ ஆயா 'நீ சொன்ன மாதிரியே பொண் குழந்த பொறந்துருக்கு, ஆஸ்பத்திரியில போயி பாத்துட்டு வா' ன்னாங்க.


ஹார்லிக்ஸ், பழமெல்லாம் வாங்கிட்டு பாக்க போனேன்.


பெட்டுல உட்காந்து இருந்துச்சி. கொஞ்சம் தள்ளி அத்தை அவஙக சம்மந்தி சொந்தக்காரங்களோட நான் வந்தத கவனிக்காம சுவரசியமா பேசிட்டிருந்துச்சி.


மாமா பொண்ணு என்ன பாத்துட்டு 'வா பிரபு' ன்னு சொல்லிட்டு, டக்குனு முகத்த கோவமா வெச்சிகிட்டு


'எனக்கு பொண்ணு பொறக்கறதுக்கு நீதான் காரணம்' னு சொல்லிச்சி.


பகீர்னு ஆயிடுச்சி. 'நான் எப்படி' ன்னேன்.


'ஆமா பொண்ணு பொறக்கும்னு நீதானே உறுதியா சொன்னே' ன்னுச்சு.


'நல்ல வேளை பக்கத்துல யாரும் கேக்கலை, சொல்லும்போது தெளிவா சொல்லு' ன்னேன்.


அத்த என்ன பாத்துட்டு அவங்களை இருக்க சொல்லிட்டு,


'வா பிரபு, நல்லருக்கியா' ன்னுச்சி.


கையில வாங்கிட்டு வந்தத கொடுத்துட்டு, குழந்தய துக்கி கையில வெச்சுகிட்டேன்.


'அம்மா பிரபுதான் பொண்ணு பிறக்க காரணம்' னு திரும்பவும் சொல்ல,


'லூசு மாதிரி பேசாத புள்ள' ன்னு அத்த அதட்டுச்சி.


சரி, ஜோசியம் சொல்ற மேட்டர் என்ன ஆச்சுங்கறீங்களா?


கஸின் சிஸ்டர் ஒண்ணு 'அண்ணா எனக்கு என்ன குழந்த சொல்லுங்க பாக்கலாம்' னு கேக்க,


'பையந்தான்' னு சொன்னேன், ரொம்ப யோசிச்சு.


'சிக்கிகிட்டீங்களா, ஸ்கேன் பண்ணி பாத்துடோம் பொண்ணு' ன்னு சொல்லவும், அன்னியோட நிப்பாட்டிட்டேன்.எங்கேயோ படிச்சது - 5 (ஜோவியல் ராஜாவும் தோட்டக்காரனும்)

|முதல்லேயே சொல்லிடறேன், இந்த தலைப்புல வர்ற கதைங்களை கண்டிப்பா நீங்க எங்கேயோ படிச்ச மாதிரி இருக்கும், ஏன்னா படிச்சி புதைஞ்சிருக்கறத தோண்டித் தான் எழுதறேன்.
அறிமுகம் ஜோவியல் ராஜா...
ராஜா சம்மந்தமான நிறைய கதைகளை படிச்சிருக்கேன், ஆனா அதுல ராஜாவா இல்லாம ரொம்ப எதார்த்தமா நடந்துகிட்டவங்களை பத்துன விஷயங்களை பகிர்ந்துக்க போறேன். அந்த கதைங்கள்ல வரப்போற ராஜாவ செல்லமா நாம ஜோவியல் ராஜான்னு வெச்சுக்கலாம்.
அவரு ரொம்பவும் கிராக்கி பண்ணிக்காம எல்லாத்துகிட்டேயும் சகஜமா பழகினாரு. ரொம்ப அறிவு ஜாஸ்தி, மதியூகமான ஒரு மந்திரி வேற கூடவே இருந்தாரு.
மக்களுக்கு தேவையான எல்லா வசதிகளையும் செஞ்சி கொடுத்து சந்தோஷமா வெச்சிருந்தாரு.
அறிமுகம் போதும், இதோ ஜோவியல் ராஜா பராக், பராக்...
ஒருநாள் மந்திரி இயற்கை உந்துதலால பிரிஞ்சி போனப்போ, நம்ம ஜோவியல் ராஜா தோட்டத்த சுத்தி பாக்கலாம்னு போனாரு.
தோட்டக்கார பெரியவர பாத்து, 'பெரியவரே எப்படியிருக்கீங்க, வாழ்க்கை நல்லா போகுதா' ன்னாரு..
'உங்க ஆட்சியில எந்த குறையுமில்ல ராசா, ஆனா' ன்னு இழுத்தாரு.
'ம், தயங்காம சொல்லுங்க...' ன்னு அவரை கேக்கவும்,
'இல்லைங்க ராஜா, காலையில ஆறு மணிக்கே வந்துடறேன், தோட்டத்துக்கெல்லாம் தண்ணி பாய்ச்சிட்டு, ஒழுங்கா பராமக்கிறேன். களை எடுக்கறது, எரு வெக்கறதுன்னு சாயாங்காலம் ஏழு வரைக்கும் ஓய்வில்லாம இருக்கேன்' ன்னு இழுத்தாரு.
ஜோவியல் ராஜாவுக்கு புரிஞ்சிடுச்சி. 'ஆகா வந்துடாருய்யா விஷயத்துக்கு' ன்னு நினைச்சிட்டு, 'ம், மேல கேளுங்க'ன்னாரு.
'ஆனா மந்திரி, காலையில ஒம்போது மணிக்கு வர்றாரு, உங்க கூடவே இருக்காரு, சொல்றதுக்கெல்லாம் ஆமாம் போடறாரு, சாயங்காலம் ஆறு மணிக்கு டாண்னு போயிடறாரு. அவருக்கு மாசம் நூறுன்னா எனக்கு ஒன்னுதான் தர்றீங்க, இது எந்த விதத்துல நியாயம்' னு கேட்டாரு.
ஜோ.ரா(சுருக்கமா இதுவும் நல்லா இருக்கில்ல) பதில் சொல்லாம, முப்பதடி தூரத்துல இருந்த சாலைய பாத்துட்டு,
'மாட்டு வண்டிங்க நின்னுட்டிருக்கு போலிருக்கு, என்ன விஷயம்னு பாத்துட்டு வாங்க'ன்னாரு.
என்னடா சம்மந்தமில்லாம வெலை வெக்கிறாருன்னு நினைச்சாலும், ராஜாவாச்சேன்னு ஓடிபோய் கேட்டுட்டு வந்து, 'நிறுத்தி இளைப்பாறிகிட்டு இருகாங்களாம்' னு சொல்லவும்,
'வண்டியில என்ன போகுதுன்னு கேட்டுட்டு வாங்க' ன்னு சொல்லவும் திரும்பவும் கேட்டுட்டு வந்து 'நெல்லு மூட்டைங்க' ன்னாரு.
இதே மாதிரி பத்து கேள்விங்கள கேட்டு அனுப்ப தளர்ந்து போயி ஏதோ சொல்ல வாயெடுக்க மந்திரி வர்றத பாத்து மூடிட்டாரு.
'மன்னிக்கனும் ராஜா, ராத்திரி வேண்டாம்னு சொல்லியும் மனைவியோட அன்ப மீற முடியாம கொஞ்சம் அதிகம் சாப்பிட்டுட்டேன், வயித்துல சிறு உபாதை' ன்னு தாமதத்துக்கு விளக்கம் சொல்ல,
'சரி இருக்கட்டும், அதோ என்ன அங்க வண்டிங்க நிக்குது' ன்னாரு.
இதோ வர்றேன்னு சொல்லிட்டு போயி விசாரிச்சுட்டு பொறுமையா வந்தாரு.
பெரியவரு 'வாங்கற சம்பளத்துக்கு எங்கிட்ட இருக்கிற சுறுசுறுப்பு கூட இல்ல' ன்னு நினைச்சிகிட்டாரு.
மந்திரி சொன்னரு, 'மன்னா, தேவக்குடின்ற ஊர்ல இருந்து பகத்துல பூவாக்குடிக்கு போறதுக்காக வந்திருக்கு. மொத்தம் பத்து வண்டிங்க எல்லாம் நெல்லு மூட்டை. வாங்கின கடன சுப்பையாங்கறவரு ரங்கதுரைங்கறவருக்கு திருப்பி தர்றாரு'.
ஒரு வண்டி வழியிலயே அச்சு முறிஞ்சு நின்னு சரி பண்ணிட்டிருக்காங்க. ராத்திரி பத்து மணிக்கு போய் சேர்ந்திடுமாம். இளைப்பாறிட்டு இன்னும் கொஞ்ச நேரத்துல கிளம்பிடுவாங்க. திருட்டு பயமே இல்லன்னாலும் துணைக்கு ரெண்டு வீரர்களை அனுப்பி வெச்சிருக்கேன்'ன்னு சொன்னாரு.
பெரியவரு ஒன்னுமே பேசல. தெளிவாயிட்டு 'நீங்க இங்க வந்ததில் ரொம்ப சந்தோஷம் மன்னா, வந்தனம் மந்திரி' ன்னாரு.
அப்புறமா நம்ம ஜோ.ரா அவரோட சம்பளத்த அதிகப்படுத்துனது மில்லாம, அதுக்கப்புறம் வந்த திருவிழா சமயத்துல வழக்கத்த விடவும் நல்லா கவனிச்சாரு.

எனது பள்ளி நினைவுகள்... II (தொடர்ச்சி)

|

நிறைய காதல் விஷயங்கள் இருந்தாலும், ஜோசப் சிவகாமிமேல வெச்சிருந்த லவ்வு ரொம்ப பிரசித்தம்.

அது அவன கண்டுக்கவே கண்டுக்காது. ஆனாலும் கவர்றதுக்கு என்னன்னவோ பண்ணுவான்.

ரொம்ப டீசன்டா ஜாமின்ட்ரி பாக்ஸ் பின்னால உண்டா? இல்லையா?ன்னு எழுது வண்டி ஓட்டுற மாதிரி காமிப்பான். திரும்பி கூட பாக்காது. வாத்தியார் பையன்ங்கறதால ஒன்னும் புகார் பண்ணலன்னு நினைக்குறேன்.

பொண்ணுங்க பசங்க எல்லாம் வாங்க போங்கன்னுதான் கூப்பிட்டுக்குவோம்.

உதாரணமா கிரிஜா, 'பிரபாகரன் பாய்ஸ ஸ்ரீனிவாசன் சார் கூப்பிட்டார்'னு சொல்லும், நாங்க பதிலுக்கு கேள்ஸ் போட்டு சொல்லுவோம்.

மேல சொன்ன கிரிஜா, கண்ண சிமிட்டி சிமிட்டி சிரிக்கும். இப்பவும் லைலாவ பாத்தா அது ஞாபகம் வர்றத தடுக்க முடியாது.

சார் எதாச்சும் ஜோக் சொன்னா கிரிஜாவும் நானும் குனிஞ்சி பாத்து சிரிச்சுக்குவோம்.

என் வாழ்க்கையில அம்மாவுக்கு அப்புறம் புடிச்ச மொத பொண்ணு கிரிஜாதான்.

ஸ்ரீனிவாசன் சார் என்மேல பாசமா இருப்பாரு. ஸ்டைலா முடிய வெச்சுட்டு ஹீரோ மாதிரி இருப்பாரு.

மாலினி டீச்சருக்கும் அவருக்கும் லவ்வுன்னு சொல்லுவாங்க. ஆனா அப்படியெல்லாம் கிடையாது.

வாத்தியாரு காதல்னா, அது நம்ம ஸ்ரீனிவாசன் சார் படிச்சிட்டிருந்த ஒரு பொண்ண லவ் பண்ணினது தான்.

வெளிய கிரவுன்ட்ல பி.இ.டி. பீரியட்ல அந்த பொண்ணு விளையாண்டுகிட்டிருந்தா எப்பவும் சூப்பரா கிளாஸ் எடுக்கிற ஆளு நல்லா சொதப்புவாரு.

அவரு கிளாச ரொம்ப ஆர்வமா கவனிக்கிறதால அவரு பண்ற தப்பு தெரியும், லேசா அவர பாக்க ரெண்டு பேரும் சிரிச்சுக்குவோம். கடைசியா அதையே கல்யாணமும் பண்ணிகிட்டாரு.

இன்ஸ்பெக்சன்னா நாங்க ரொம்ப குஷியாயிடுவோம், வாத்தியாருங்க டென்ஷன் ஆயிடுவாங்க, என்ன நடந்தாலும் பாதிக்கப்பட போறது அவங்கதாங்கறதால.

தலைக்கு அஞ்சு ரூவான்னு வசூல் பண்ணி வேலையை ஜரூரா ஆரம்பிச்சிடுவோம்.

கிளாஸ் ரூமை எல்லாம் போட்டி போட்டுகிட்டு அலங்காரம் பண்ணுவோம். சணல் கயிரு வாங்கிகிட்டு வந்து, அதுல பேப்பர்லாம் ஒட்டி கலர் கலரா கிளாசுக்கு குறுக்கே கட்டிவிடுவோம்.

புது பொண்ணு மாதிரி அலங்காரம் பண்ணுவோம். கண்டிப்பா அதுக்கு உணர்ச்சி இருந்திருந்தா ரொம்ப வெக்கப்பட்டிருக்கும்.


அவசரமா அணிகள் பிரிச்சி அதுக்கு தற்காலிக தலைவர் போட்டு, எங்க அணி பெருசு, உங்க அணி பெருசுன்னு பேசிட்டு இருப்போம்.

சார்ட்ல பேரெல்லம் எழுதி செவுத்துல ஒட்டுவோம். கையெழுத்து அழகா இருக்கிற ஜோசப் மாதிரி ஆளுங்களுக்கு ரொம்ப கிராக்கி.


கிளாசுக்கு வெளியே VIII B ன்னு பிக்காஸ்ல அழுத்தி இழுத்து கடுகை உள்ள பொட்டு மண்ண மூடிட்டு தண்ணி ஊத்திகிட்டிருப்போம். ஒரு வாரத்துல நல்லா வளர்ந்து பச்சையா அழகா இருக்கும்.

அப்போதான் பொண்ணுங்ககிட்ட பேசவும் வாய்ப்பு கிடைச்சுது. சாக்பீஸ தண்ணியில நெனச்சி கோலம் போட புள்ளி வெச்சிட்டிருக்கும் போது நான் டக்குனு,


'தப்பா புள்ளி வெச்சிருக்கீங்க, சந்து புள்ளில்ல இந்த கோலத்துக்கு வெக்கனும்'னு சொல்ல,

'ஆமா உங்களுக்கு எப்படி தெரியும்னு' கிரிஜா, சிவகாமி வெக்கப்பட்டு கேக்க

ரொம்ப குஷியா, 'சித்திங்க கோலம் போடும்போது பாத்திருக்கேன், எனக்கும் தெரியும்' னுட்டு,

'நல்லா சூப்பரா கலர் அடிப்பேன்' ங்கற கூடுதல் தகவலையும் சொல்லி கோலம் போடறதுல ஐக்கியமாயிட்டேன். இருந்தாலும் அடுத்த நாள்ல இருந்து வழக்கமாதான் பேசினோம்.

ஆனா பசங்க மத்தியில நான் கொஞ்ச நாளைக்கு ஹீரோவா இருக்க கோலம் ரொம்ப உதவியா இருந்துச்சி.

தரையில தான் ஒம்பதாவது வரைக்கும் உட்காந்திருந்தோம். ஒவ்வொரு கட்டத்துக்குள்ள ஒவ்வொருத்தர்னு உட்காந்திருப்போம். சண்டை வந்து 'பரம' ஆயிட்டா கோட்ட தாண்டி எதுவும் போகாம வராம பாத்துக்குவோம்.

பதிவு ரொம்ப பெருசா போயிட்டிருக்கு. எழுத எழுத நிறையா நினைவுக்கு வருது. பிடிச்சிருந்தா வர்ற பதிவுகள்ல எழுதலாம்னு இருக்கேன்.

கடவுள் எங்கிட்ட வந்து (இருந்தா) என்ன வேணும்னு கேட்டா, 'எனக்கு அந்த பள்ளி வாழ்க்கையை மீண்டும் கொடு' ன்னு கேட்டுடலாம்னு தோனும்.

ஒவ்வொருமுறை என் பள்ளியை எந்த ஒரு வாகனத்துல கடந்தாலும், இதோ இதுதான் நான் படிச்ச பள்ளி' னு பக்கத்துல யாரு இருந்தாலும் ஆர்வம் பொங்க சொல்லுவேன்.

மனச ஏதோ அழுத்த கண்ணு கலங்க, துடைச்சிட்டு திரும்ப எப்போ இந்த வழியா வருவேன்னு ஏங்குவேன்...

எனது பள்ளி நினைவுகள்...

|


என்னொட ரெண்டு நண்பர்களுக்குள்ள அறிமுகப்படுத்தி வைக்கும் போது கண்டிப்பா மூனு பேருமே லேசா சிரிச்சுக்குவோம்.


காரணம், 'ஆமா எப்படி தெரியும்னு கேக்கும் போது, ரெண்டுபேரும் ஸ்கூல் ஃபிரண்ட்ஸ், நாலு அஞ்சு இல்லன்னா ஆறிலிருந்து ஒம்போது வரை ஒன்னா படிச்சோம்' னு சொல்லுவேன்.

ரெண்டு பேருக்கு மேல சந்திக்கும்போது ஒன்னு கண்டிப்பா என்னோட ஸ்கூல் ஃபிரண்டா இருக்கும்.

எண்பத்திரெண்டு வாக்குல நடந்தத இப்போ நினைச்சாலும் ரொம்ப பசுமையா மனச அப்படியே லேசாக்குது...

ஆத்தூர் தாலுக்கா மல்லியகரையில இருக்கிற அரசினர் மேல்நிலைப்பள்ளி தான் நான் படிச்ச ஸ்கூல்.

தாத்தா வீட்டுல இருந்துதான் படிச்சேன். ஈச்சம்பட்டியிலருந்து சரியா ஒரு மைல். தினமும் நடந்து தான் போவேன்.

துணிக்கடை மஞ்சள் பை, சாப்பாடு தூக்கு போவுனி (அப்படிதான் சொல்லுவங்க, தூக்கு வாளின்னு வெச்சுக்கோங்களேன். சாயங்காலம் வீட்டுக்கு போகும்போது நிறைய ரோட்டொரத்துல புளிய மரத்துல அடிச்சு ஃபுல்லா எடுத்துட்டு போவோம்).

ஒரு முழு ஏரிக்குள்ள இருந்த பள்ளிகூடம் தமிழ் நட்டுலேயே அதுதான்னு நினைக்குறேன்.

ஊருக்குள்ள போறதுக்கு ஏரிக்கரை மேலதான் பாதை இருக்கும்.

கொஞ்சம் மழை பேஞ்சாலும் தண்ணி வந்து தேங்கி நின்னுடும்.

சுமாரா மழை பேஞ்சாலும் கண்டிப்பா லீவ்தான். கொஞ்சம் கருக்கலா இருந்தாலே சீக்கிரமா ஸ்கூல் விட்டிருவாங்க.

கடவுள் மாதிரி நினச்சுகிட்டிருந்த வாத்தியாருங்க.

தினமும் குடிச்சிட்டு வந்து கிளாசுக்கே வராம, எப்போதாவது வந்து ஒரே நாள்ல புரியுதோ இல்லையோ பாதி சேப்டர அடுத்த பீரியடையும் சேத்து வாங்கி முடிக்கும் குடிகார குழந்தவேலு சார்

அன்பு நண்பர் நாகாவின் வேண்டுகோளுக்கிணங்க, இதோ எனது பள்ளி நினைவுகள்...(ஒரு தடவை அடுத்த பீரியட் என்னன்னு மாலினி டீச்சர் கேக்க, 'மேத்ஸ், குடிகார குழந்தைவேலு சாருது' ன்னு சொல்லி தண்டபாணி நல்லா வாங்கி கட்டிகிட்டான்)

பீரியடு ஆரம்பிக்கறதுக்கு அஞ்சு நிமிஷத்துக்கு முன்னாலேயே கிளம்பி மெதுவா அசைஞ்சு அசைஞ்சு சரியா வரும் அங்கமுத்து சார்.

தமிழ்ல மட்டுமே பேசி ஆங்கில வார்த்தைய அண்டவிடாம செஞ்ச கேனத்தமிழய்யா( கொஞ்சம் மனநிலை சரியில்லைன்னு பேசிக்குவாங்க, அவரு பேரு என்னான்னு எங்க யாருக்கும் தெரியாது).

தினமும் சிலப்பதிகரத்தை திறந்து வெச்சு முதல் பாராவை மட்டும் நடத்திகிட்டிருந்தாரு. பத்து நாள் போச்சு.


வழக்கம்போல் ஒருநாள் பொறுக்கமுடியாம நம்ம தண்டபாணி 'ஐயா இதை நீங்கள் பன்னிரண்டாவது முறையாக நடத்துகிறீர்கள்' என நக்கலாக சொல்ல,

'எங்கே இந்த வரிக்கு பொருள் சொல்லு பாக்கலாம்' னு இடையில ஒரு வரியை கேட்க, அவன் திரு திரு என முழிக்க, முண்டெழவே, தண்டெழெவெ என சொல்லி பொடனையில நல்ல கும்மினாரு.

இங்கிலீசுக்கு மாலினி டீச்சர், அழகா இருப்பாங்க. தினமும் ஒரு புடவை கட்டிட்டு வருவாங்க. அவங்க கட்டின புடவையை மறுபடியும் பாத்ததா யாரும் சொன்னதில்லை. ரொம்ப ஸ்ட்ரிக்ட்.

கிராமர் நடத்தும்போது, 'ஹி ஓபென்ஸ் தெ டிராயர் அன்ட் புட் தெ ரிவால்வர்'னு பிரசன்ட் டென்சுக்கு உதாரணம் சொல்ல, சிரிச்ச நானும் ஜோசப்பும் நல்ல மாட்டிகிட்டோம்.

ஜோசப் ஓவிய வத்தியார் பையன். நோயல் இம்மானுவேல் கிருஸ்துமஸ் மணி அவர் பேரு.


ஏன் சிரிச்சிங்கன்னு கேட்டதுக்கும் சிரிச்சிகிட்டேதான் இருந்தோம்.


அடி பின்னி எதுத்துட்டு பீரியட் முடிஞ்சதும் போயிட்டாங்க. 'இரு இரு உங்க அப்பாகிட்ட சொல்றேன்' னுட்டு வேற போனாங்க.

பசங்க 'என்னடா நடந்து' ன்னு கேட்க, இன்னும் நல்லா சிரிச்சோம்.

காதல்ங்றதே அப்போ ஒரு பெரிய கெட்ட வார்த்தை. யாரவது காதல்ன்னு சொன்னாலே, வாத்தியார்கிட்ட சொல்லி அடி வாங்கி வெச்சுடுவோம். ரெண்டு பேருக்கும் 'இது' ன்னுதான் சொல்லுவோம்.


இன்னிக்கி பசங்க பேசறத நினைச்சாவே தலையை சுத்துது.

ஓவிய வாத்தியார் கிட்ட தான் எங்க அம்மாவும் படிச்சாங்களாம். என்ன பேராண்டின்னு தான் எல்லார் முன்னாடியும் கூப்பிடுவாரு.

பசங்களுக்கு நோட்டு புத்தகமெல்லாம் அவருதான் கொடுத்துகிட்டிருப்பாரு. ஓவிய நோட்ட வாங்கற வரைக்கும் கிளாஸ் கிளாஸா போயி மிரட்டுவாரு. வாங்கலைன்னா, பென்சில கை விரலுக்குள்ள விட்டு திருகுவாரு. வலியால கதிறிகிட்டே வாங்கிடுவாங்க.

ஒருதடவ நானும் எழுந்து நிக்க, 'நீயுமாடா பேரண்டி' ன்னுட்டு செல்லமா கை விரல்ல பென்சில் வெச்சு வலிக்காம மெதுவா முறுக்க, சிரிச்சிகிட்டே இருந்தத பாத்து பசங்கள்லாம் ஆச்சர்யப்பட்டாங்க.

இன்னும் சில விஷயங்களை பகிர்ந்துகிட்டு அடுத்த பதிவில முடிக்கிறேன்சாமியாட்டம்...

|

பக்கத்து வீட்டுல இருக்கிற என்னோட அத்தை, புருஷன் கூட சேந்து வாழாததனால எப்பவும் மன விரக்தியோட இருப்பாங்க.


அப்போதான் அவங்களுக்கு சாமி வர ஆரம்பிச்சுது.


வந்தா அவங்க பயங்கரமா முடிய விரிச்சி போட்டுட்டு ஆடுவாங்களாம், எல்லாத்தயும் பேரை சொல்லி மிரட்டுவாங்களாம், எல்லாரும் நடுங்கிகிட்டு இருப்பாங்களாம். பாத்தவங்க சொன்னது.


அவங்களோட கடைசி தம்பி என் மேல பாசமா இருப்பான், அன்புன்னு பேரு.


'அன்பு, நான் சாமியாடறத பாக்கனும், வந்தா உடனே சொல்லியனுப்பு, இல்லன்னா நீயே வந்து கூட்டிட்டு போ' ன்னேன்.

'அதெல்லாம் சும்மாண்ணே, பாக்கனும் அவ்வளோ தானே, வர்ற வெள்ளிக்கிழம கண்டிப்பா வரும்' னான்.நான் 'எப்படி அவ்வளொ கரெக்டா சொல்றே' ன்னேன்.

'சரியா நீங்க வெள்ளி சயங்காலம் எட்டு மணிக்கு வந்துடுங்க நேர்ல பாக்கலாம்' னான்.


ரெண்டு நாள் கழிச்சி காலேஜ் விட்டு எட்டு பத்து வாக்குல வீட்டுக்குள்ள நுழைஞ்சேன்.


வழக்கத்தவிட ஒரு மணி நேரம் லேட், டிபார்ட்மென்ட் ஃபங்ஷன் பத்
தி பேசிட்டிருந்ததில நேரமாயிடுச்சி.


அன்பு என்ன ரெண்டு மூனு தடவ பாத்துட்டு போனதா சொன்னாங்க.


அப்போதான் ஞாபகம் வந்துச்சி வெள்ளிக்கிழமைன்னு.


வேகமா டிரஸ்ஸ கூட மாத்தாம ஓடினேன்.


நல்ல கூட்டம், அத்தை சாமி வந்து ஆடிகிட்டு இருந்துச்சி, பாதி முடிஞ்சுடுச்சி போலிருக்கு.


ஒருத்தர் எழுந்திரிச்சி பவ்வியமா, 'சாமி எனக்கு குழந்தையே இல்ல, என்ன பரிகாரம்'னு கேக்க,

'ஒழுங்கா ஒன் பொண்டாட்டிகிட்ட படுடா' னு நச்சுனு சாமி சொல்லுச்சி.


'இன்னொருத்தர் காட்டுல வெள்ளாமையே இல்ல' ன்னாரு.


'ஒனக்கு மட்டுமா ஊருக்கே இல்ல, ஆத்தா என்ன கோவப்படுயிருக்கீங்களே? எப்படிடா விளையும்' னுச்சி. கேட்டவரு வயசு அறுவதுக்கு மேல இருக்கும்.


'அத்த' ன்னு ஏதோ கேக்க ஆரம்பிச்சேன்.


'டேய் சாமின்னு சொல்லுடா' ன்னுச்சி, எப்பவும் கண்ணுன்னு மரியாதையா கூப்புடுற அத்தை இல்லயில்ல சாமி...

'சாமி பரிட்சை எழுதியிருக்கேன், ரிசல்ட் எப்படியிருக்கும்' னேன்.


'எல்லாத்துலயும் தொன்னூறுக்கு மேல வாங்குவே, ஆ
ல் பாஸ்' னு சொன்னது.

சான்ஸே இல்ல, நான் கேட்டது எழுதுன அஞ்சில மூனாவது பாஸ் பண்ணுவேனான்னு தான்.ஒரு வயசான அம்மா 'சாமி, எங்க வீட்டுல ஒரு சொம்பு காணாப்போயிடுச்சி எடுத்தது யாருன்னு சொல்லு' ங்கவும்,

'இந்த வீட்டுல ஒரு பொண்ணுக்கு வாழ்க்கையே காணும், மூடிட்டு ஒக்காரு' ன்னுச்சி.


'சாமி மழையே இல்லையே' ன்னு ஒரு இளவட்டம் கேக்க,


'இன்னும் அரை மணி நேரத்துல மழை ஊத்தப்போவுது' னுச்சி.


அன்பு சட்டுனு, 'கேட்டது போதும் சாமி இப்போ மலையேறப்போகுது' ன்னான்.


டக்குனு ஆட்டத்த நிறுத்திட்டு, திரு நீர எடுத்துச்சி.


வீட்டுக்கு வேளியேதான் எல்லாரும் இருந்தோம், அண்ணந்து பாத்தேன், வானம் பளிச்சுன்னு இருந்துச்சி, பவுர்ணமி நிலா வெளிச்சம்.


அன்பு நைசா எங்கிட்ட வந்தான். 'அண்ணா இப்போ பாரேன், மொதல்ல எங்க வீட்டு ஆளுங்களுக்கு நீறு கொடுக்கும், மத்தவங்களுக்கு அப்புறம்தான்' னான்.


அதே மாதிரி நடந்துச்சி. தேடி தேடி அவங்க வீட்டு ஆளுங்களுக்கே மொதல்ல கொடுத்துச்சி.


மத்தவங்களுக்கு அப்புறமா கொடுத்துட்டு, கற்பூரத்தை முழுங்கி மலை ஏறிடுச்சி.'எப்படி தம்பி அசத்துற, எல்லாத்தையும் கரெக்டா சொல்றே' ன்னேன்.


'ரொம்ப சிம்பிள், நீங்க சொன்ன துல இருந்து தினமும் அக்கா காதுல விழற மாதிரி அக்காவுக்கு வெள்ளிக்கிழம சாமி வரும்னு சொல்லிட்டு இருந்தேன்' னான்.


இருபது நிமிஷம் பேசிட்டு இருந்துட்டு வேளிய வந்தா வானம் இருட்டி இருந்துச்சி.

சட சடன்னு மழை பேஞ்சி பக்கத்து வீடுன்னாலும் போறதுக்குள்ள தெப்பலா நனைஞ்சிட்டேன்.

அப்புறமும் பொறந்தா....

|

நான் ஆறாவது படிக்கும்போது நடந்தது இது. அம்மாவோட மாமா ஒருத்தர் குடும்ப கட்டுப்பாட்டு அதிகாரியா இருந்தாரு.
பேருக்குத்தான் அந்த வேலை, வரிசையா எட்டு குழந்தைங்க. (அது அப்போ, கடைசியில பன்னண்டுல தான் நிறுத்தினாரு)
வீட்டுக்கு வந்திருந்தப்போ அம்மா அவருகிட்ட
'ஏன் மாமா இப்படி இருக்கீங்க? படிச்ச நீங்களே இப்படி பண்ணலாமா? இத்தனை குழந்தைங்க தேவையா' ன்னாங்க.
'இல்லப்பா, குடும்பக்கட்டுப்பாடு பண்ணிக்க சொல்றேன், ஆனா கேட்கவே மாட்டுக்கிறா. மீறி பண்ணுனா நாண்டுகிட்டு செத்துடுவேன்னு பயமுறுத்துறா' ன்னுட்டு,
'சரி கடவுள் விட்ட வழின்னு அவ போக்குலயே விட்டுட்டேன்' ன்னாரு.
'சரி மாமா அவதான் கேக்க மாட்டுக்கிறா, நீங்களாவது பண்ணிக்கக் கூடாதா?' ன்னு கேட்டாங்க.
அவரு எதோ சொல்லப்போக, ரெண்டு நாளைக்கு முன்னால அம்மா சித்திகிட்ட பேசிட்டு இருந்தாங்க, யாருக்கோ ஆப்ரேசன் செஞ்சும் குழந்த உண்டாயிடுச்சின்னு.
அத மனசுல வெச்சிகிட்டு முந்திரி கொட்டை மாதிரி சொன்னேன்,
'அதுக்கப்புறமும் குழந்த பிறந்தா பிரச்சனை ஆயிடுமில்ல' ன்னு.
அம்மா என்ன ஏன் சப்புன்னு முதுகில வெச்சாங்கன்னு ரொம்ப வருஷத்துக்கு அப்புறம்தான் புரிஞ்சது.

எங்கேயோ படிச்சது - 4 (திருடனும் அவன் மகனும்)

|

அந்த ஊர்ல அவன் பயங்கரமான திருடன். இதுநாள் வரைக்கும் அவன் திருடித்தான் வாழ்க்கையை நடத்திகிட்டிருக்கான், ஆனா ஒருத்தருக்கும் எள்ளளவும் தெரியாது, தொழில்ல அவ்வளோ சுத்தம்.


அவனுக்கேத்த பொண்டாட்டி, அழகான ஒரு பையன். சந்தோஷமாத்தான் இருந்தான் திருட்டு தொழில செஞ்சாலும்.

வன்முறையில இறங்கமாட்டான், வசதி கம்மியானவங்க வீட்டில கை வெக்க மாட்டான். எடுக்கிற பணத்துல வீட்டு செலவுக்கு வெச்சிகிட்டு, கொஞ்சம் கோயில் உண்டியல்ல போட்டுட்டு மத்தத உதவின்ற பேர்ல கொடுத்துடுவான்.

அவனுக்கு ரொம்ப நாளாவே ஒரு குறை, தான் மகன் அவனை மாதிரி இல்லையேன்னு.

அவன் ஆத்திச்சூடி, திருக்குறள், நல்வழின்னு பள்ளிக்கூடத்துல சொல்லி தர்றத படிச்சுட்டு அப்பாகிட்டயே அத பத்தியே பேச ஆரம்பிச்சுட்டான்.

ஒருநாள் குறள்ல இருந்து களவாமையை பத்தி அவ்வளோ ஆர்வமா அப்பாகிட்ட சொன்னான்னா பாத்துக்கோங்களேன்.

அவன் படிக்கலைங்கறதனால மகன் படிச்சு சொல்றத எல்லாம் பெருமிதமா கேப்பான்.

ஆனாலும் களவாமையை பத்தி பேசுனது கொஞ்சம் நெஞ்ச குத்தற மாதிரி இருக்கவும் கொஞ்சம் வருத்தப்பட்டான்.

கடைசியா ஒரு முடிவுக்கு வந்து பையைன கூட்டிட்டு ஊருக்கு ஒதுக்குப் புறமா இருக்குற ஒரு வேப்ப மரத்துக்கு கூட்டிட்டு போனான்.

'மகனே நான் ஒனக்கு தொழில் ரகசியத்த சொல்லித்தர்றேன்' னு சொல்லி அவனை முதுகில சுமந்துகிட்டு கிடு கிடுன்னு மரத்து மேல ஏறினான்.

உச்சில ஒரு கூடு, அதுல ஒரு காக்கா உட்காந்து முட்டைகளை அடை காத்துகிட்டு இருந்துச்சி.

அந்த காக்காவுக்கே தெரியாம அஞ்சு முட்டைங்களை எடுத்து கையில வெச்சி இறுக மூடிட்டு விடுவிடுன்னு கீழ வந்தான்.

பையன கீழ இறக்கிவிட்டுட்டு, 'மகனே காக்க கூடு கட்டியிருந்த அந்த மரத்துல ஏறவே முடியாது. ஏற விடாம துரத்தும். ஆனா உன்ன முதுகில வெச்சிகிட்டு அதுக்கே தெரியா மரத்துல ஏறி, அடை காத்துகிட்டே இருக்கும்போதே அஞ்சு முட்டையை அள்ளிகிட்டு வந்திருக்கேன் பாருன்னு கையை திறந்து காட்டினவன் ஆடிப்போயிட்டான்.

ஏன்னா மூனு தான் இருந்துச்சி. ரெண்டை காணோம். திகைச்சி போயி நிக்க, பையன் இந்தப்பான்னு அவன் கையை திறந்து காமிக்க அங்க ரெண்டும் இருந்துச்சி.

இதுதான் நாம எப்பவோ படிச்சது. முடிவு நமக்கு உடன்படாததால, வேற மாதிரியா யோசிச்சதுல இதோ கீழ நம்ம சொந்த முடிவு. எது நல்லாருக்குன்னு பின்னூட்டத்துல சொல்லுங்க.

அப்பாவ இருக்க சொல்லிட்டு அந்த மூனு முட்டையையும் வாங்கிகிட்டு பையன் அவன விட படு வேகமா மேல ஏறி அந்த காக்காவுக்கே தெரியாம திரும்ப கூட்டுலயே வெச்சுட்டு வந்தான்.

திருடன் அவனை கட்டி தழுவி, இவனை நல்லா படிக்க வெச்சு ஒரு அரசாங்க வேலையில சேக்கனும்னு முடிவு செஞ்சான்...

விடாக்கொண்டான்...

|

நான் தாத்தா வீட்டுல படிச்சிகிட்டிருந்தேன்.
அம்மாவோட அம்மாவை ஆயான்னு கூப்பிடுவோம், பாட்டியை பாட்டின்னு கூப்பிடுவோம்.
பாட்டிதான் சிம்ம சொப்பனம். அதோட ரூம பூட்டியேதான் வெச்சிருக்கும். வீட்டு சாமான், கடலை, வெல்லம், தேங்கான்னு எல்லாம் அது கன்ட்ரோல்ல தான் இருக்கும்.
ஸ்கூல் விட்டு வந்தா கடலையை வறுத்து வெல்லத்தோட, அப்புறம் அவல்ல வெல்லம், தேங்காவ துருவி போட்டு, பயித்தங்காய வேகவெச்சின்னு விதவிதமா தரும், ஆனா அளவாதான்.
சமைக்கிறதுக்கு தேவையான எல்லாத்தையும் அதுதான் எடுத்து கொடுக்கும்.
ஒருநாள் வெளியூர்ல இருந்து வீட்டுக்கு ஒரு விருந்தாளி வந்திருந்தாரு. பாட்டிக்கு பேரன், பேத்தி அவங்க சம்மந்தப்பட்டவங்களை தவிர யாரையும் பிடிக்காது.
ஆயா அதுக்கு நேர்மாறு. யாரு வந்தாலும் சப்பாடு அல்லது டீயாவது கொடுக்காம அனுப்பாது.
அவரு பேசிட்டு இருந்துட்டு, 'சரி அண்ணியா நான் கெளம்பறேன்'னாரு.
ஆயா, 'அட இருங்க சாப்புட்டு போகாலாம்' னு சொன்னுச்சி.
காத்திருந்தாப்ல, ஆர்வமா சட்டுனு உட்கார,
பாட்டி டக்குனு, 'ஆத்தூர்ல இருந்து வர்றவங்க, சாப்பிடாமலா வருவாங்க' ன்னுச்சி.
'அம்மா வீட்டுக்கெல்லாம் வரும்போது சாப்பிட்டு வருவோமா' ன்னாரு பதிலுக்கு.
'சங்க கெட்டவன், என்ன சொன்னாலும் புரியுதான்னு பாரு' ன்னு காதுபட திட்டவும்,
'அது கிடக்குது கிழவி, நீ சப்பாடு போடு அண்ணியா, சாப்புட்டுட்டு தான் போவேன்' னாரு அந்த ஆளு.
அப்போ நான் சின்ன பையன் விவரம் புரியல, ஆனா இப்ப நினைக்கும்போது விடாக்கொண்டன் அப்படின்னா என்னாங்கறதுக்கு நல்ல உதாரணம்னு புரியுது.

செல் ஃபோன்

|

செல் ஃபோன் வந்த புதுசு. டவுன்ல மட்டும்தான் டவர் கிடைக்கும். கிராமத்துல கிடைக்காது.

மணி என்ன பாக்க வந்தப்போ ஒரு புது தகவல சொன்னான், என்னால நம்ப முடியல.

அவனோட சித்தி பையன் வந்திருக்கானாம், செல் ஃபோன்லாம் வெச்சிருக்கானாம்,ஓனர் அடிக்கடி ஃபோன் பண்ணி என்ன பன்றேன்னு கேக்கராறாம்.

எனக்கு ஒரே குழப்பமா இருந்துச்சி. நம்ம ஊர்ல சுட்டு போட்டாலும் சிக்னல் வராதே, எப்படி அவன் பேசறான்னு.

மணிகிட்ட சந்தேகத்தை சொன்னேன். 'போன வாரம் கூட துபாயிலிருந்து மாமா வந்தப்போ, நாமதானே செக் பண்ணினோம், ஸ்கூலுக்கு அந்தாண்ட போனாதானே சிக்னல் கிடைச்சது' ன்னேன்.

'இல்ல பிரபு, கண்ணால பாத்தேன், வீட்டுக்குள்ள இருக்கும்போதே கால் வந்துச்சி, பேசினான்'னான்.

'சரி சரி, நேர்ல பாத்துடுவோம்னு சொல்லிட்டு ஒரு மணிநேரம் கழிச்சி மணி வீட்டுக்கு போனேன்.

சித்தி பையன் செல்வமணி செல் ஃபோனை வெச்சு நல்லா படம் காட்டிட்டு இருந்தான்.

பாத்தவுடனே சிரிச்சான். எப்படின்னா இருக்கீங்கன்னான்.

அத்தோட விட்டிருக்கலாம், 'எம்.சி.ஏ படிச்சிருக்கீங்க..., உங்ககிட்ட செல் இல்லயா' ன்னான்.

தலையாட்டிட்டு 'எங்க உன் போன கொஞ்சம் கொடு பாத்துட்டு தர்றேன்'னு கேட்டதுக்கு,

'ரெண்டு நிமிஷம், ஓனர் போன் பன்ற நேரம், பேசிட்டு தர்ரேன்'னான்.

அதே மாதிரி ரிங் அடிச்சது, நாங்கல்லாம் வேடிக்கை பாக்கறோமான்னு பாத்துட்டு, பேசிட்டு கொடுத்தான்.

சிக்னல் ஒரு பாயின்ட் கூட இல்ல, எப்படிடான்னு யோசிச்சேன்.

டக்குனு எனக்கு புரிஞ்சிடுச்சி. இன்கமிங் கால் லிஸ்ட்ல ஏதும் வந்த மாதிரியே நம்பர் இல்ல.

'திரும்ப எப்போ உனக்கு கால் வரும், ஒரு மணி நேரம் கழிச்சா'ன்னேன்.

அவனுக்கும் புரிஞ்சிடுச்சி. அண்ணா ஒரு டவுட் கேக்கனும்னு தனியா கூட்டிட்டு வந்து,

'மாட்டி உட்டுடாத, அலாரம் செட் பண்ணி அடிக்கும்போதுதான் பேசிட்டு இருந்தேன்'னான்.

'இந்த விளம்பரமெல்லாம் நமக்கு தேவையா'ன்னு கவுண்டமணி பாணியில நினைச்சேன்.

இப்பவும் அவனை பாத்தா 'தம்பி, நல்லாயிருக்கியா? இப்போ என்னா போன் வெச்சிருக்க' ம்பேன். வெட்கப்பட்டு சிரிப்பான்.

டி.ஆரும், கேப்டனும்...

|

எலக்சன் டயத்துல நாம ஊர்ல இல்லன்னாலும், நமது நட்பு, சொந்தத்துகிட்ட விசாரிச்சி கிடைச்ச சில சுவராசியத்துளிகள் இந்த பதிவில்...
புதுசா கள்ளக்குறிச்சி தொகுதி வந்தது, விஜய டி.ஆர் எலக்சன்ல நின்னது, கேப்டன் மச்சான் நின்னது, மாம்பழம் அசைக்கமுடியாத கோட்டைன்னு அசால்டா இருந்தது, புதுசா உருவான பார்க்கவகுல சங்கம், கொங்கு...ன்னு பரபரப்புக்கு கொஞ்சமும் குறைவில்லாமல் இருந்துச்சி.
டி.ஆர். ரொம்ப பரபரப்பா வேலை செஞ்சாராம். கொஞ்சம் கூட்டம் இருந்தாலும் எல்லாத்தையும் மிரட்டி சொல்லறத கேட்டுத்தான் ஆகனும்னு கதறினாராம்.
'நான் போட்டிருக்கும் சட்டை வெண்மை, கண்களில் வைப்பது கண்மை, அதோ வெட்கத்தில் நெளியுது ஒரு பெண்மை, எனக்குத்தான் ஓட்டுப்போடப்போகிறீர்கள் என்பது உண்மை...
'என் மகன் பேரு சிம்பு, தண்ணிகுடிக்கிறதுக்கு சொம்பு, என் கிட்ட வெச்சுக்காதீங்க வம்பு, நெஞ்சில இருக்கு தெம்பு'...
'பட்டம் பறக்க வேணும் வாலு, ரெண்டும் ரெண்டும் நாலு, நான் தான் இந்த தொகுதியில சூப்பர் ஆளு'
'நம்மோட சின்னம் பட்டம், மக்கள் முகத்துல தெரியுது வாட்டம், அத போக்கறதுதான் என்னோட திட்டம்'...
என் தம்பி 'அண்ணா இன்னும் உயிருள்ளவரை உஷா ரேஞ்சிலேயே பேசிட்டிருக்காரு' ன்னான்னான்.
அதுவுமில்லாம அவரே தாளம் போட்டு பல இடங்கள்ல பாட்டு பாடினதா சொன்னாங்க.
சினிமாவுல வந்த அவரோட பழைய டயலாக் எல்லாத்தையும் பேசிக்காட்ட, ஒரு குழந்த 'என்னம்மா அந்த அங்கிள் அடிக்கிற மாதிரி எதோதோ புரியாம பேசறாரு'ன்னு மிரண்டுட்டு கேட்டுச்சாம்.
பஸ்ஸெல்லாம் வெளியே வர்ற இடத்துல சிக்னல்ல வண்டியை நிறுத்தி, 'அடங்கொப்பன் மவனே'ன்னு பாட ஆரம்பிச்சுட்டாராம்.
ட்ராபிக் 'கொஞ்சம் தள்ளி போயி பேசுங்க' ன்னு சொல்லவும்,
'போகச்சொல்றீங்க என்னை தள்ளி, பெண்களின் தலையில மல்லி, ஓட்டுக்களை குவிக்கப்போகிறேன் அள்ளி' ன்னு சொல்லவும் எல்லாரும் சிரிச்சிட்டாங்களாம்.
சில இடங்கள்ல கண்ணீர் விட்டு அழுதாருன்னும் கேள்விப்பட்டேன்.
அடுத்தா கேப்டன். வாழப்பாடியில பிரச்சாரம் செஞ்சிட்டிருக்கும்போது, என் தம்பி பையன் கனிஷ்க்கை வெச்சிகிட்டு பாட்டி வேடிக்கை பாத்துகிட்டு இருந்துச்சாம்.
குழந்தையை கொடுங்கன்னு கேட்டு வாங்கி, 'வல்லரசு'ன்னு பேரு வெச்சாரம் (நல்ல வேளை பேரரசுன்னு வெச்சு பாவத்த சேத்துக்கல).
அப்புறம் அடுத்த நாள் லீவுன்றதால எல்லோரும் கிராமத்துக்கு வந்துருக்காங்க. கேப்டன் பிரச்சாரத்துக்கு தெருவில வந்துகிட்டிருக்கும்போது, என் அம்மா கனிஷ்க்க வெச்சுட்டு இருந்தாங்களாம்.
வழக்கம்போல் கேட்டு வாங்கி, 'பிரபாகரன்'னு பேரு வெச்சாராம், பெரியப்பா பேரும் அதாங்கறது தெரியாம.
உலகத்துலயே ரெண்டு நாள்ல ரெண்டு தடவ ஒரே தலைவரால பேரு வைக்கப்பட்டவன் கனிஷ்க்காத்தான் இருப்பான்னு நினைக்கிறேன்.

தோழி...

|


என்
தூக்கமது விழித்திட
தூக்கமில்லை இனி தோழி...

என்
துக்கமது தொலைந்திட
துயரமில்லை இனி தோழி...

என்
காதலில் நீ சேர்ந்திட
களிப்புதான் இனி தோழி...

என்
மருந்தாய் நீ மாறிட
நோயில்லை இனி தோழி...

என்
உறவாய் நீ மாறிட
உயிர் நீதான் இனி தோழி...

என்
ஒளியாய் நீ மாறிட
வாழ்விருளில்லை என் தோழி...

என்
காதலாய் நீ மாறிட
கவலையே இல்லை என் தோழி ....

என்
வாழ்வாய் நீ மாறிட
வசந்தம் தான் இனி தோழி...

நினைவாடும்...
உன்னுள் நான்.

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB