அடிவாங்கி டரியலான கதை...

|

இப்போல்லாம் நீங்க வடிவேல் உதை வாங்கறத நிறைய காமெடியில பாத்திருப்பீங்க, ரசிச்சுகிட்டிருப்பீங்க. நாமெல்லாம் தொன்னூத்தி ரெண்டுலேயே அனுபவத்துல பாத்தாச்சு.

பி.எஸ்.சி. கம்ப்யூட்டர் சைன்ஸ்ல கடைசி செமெஸ்டர், மெயின் எக்ஸாம் எல்லாம் முடிஞ்சுடுச்சி. நல்லா படிக்கிற ஆல் பாஸ் ஜீனியஸ்லாம் எஸ்கேப் ஆக அரியர் இருந்த நாங்க ஒரு பதினைஞ்சு பேர் மட்டும் ரூமிலே, ஹாஸ்டல்லே தங்கி மேத்ஸ் அரியர முடிச்சோம்.

ஹெச்.ஓ.டி நல்லா ஹெல்ப் பண்ண என் பேப்பர் எல்லாருக்கும் சர்குலேட் ஆக, பாஸ் மார்க்குக்கு மேலேயே எழுதினதால மெயின் பேப்பர் நெட்வொர்க் கண்டத்தையும் மறந்து சந்தோஷமா இருந்தானுங்க. (நெட்வொர்க் பேப்பருக்கு நடந்த கூத்த தனியா எழுதறேன்.)

புல் தண்ணி, சந்தோஷம். வழக்கம்போல நான் ஒதுங்கியிருக்க, ஸ்னாக்ஸாவது சாப்பிடுடான்னு கம்ப்பல் பண்ணி, நிறையா வாங்கி, பெப்சி நாலஞ்சி பாட்டலோட கொடுத்தானுங்க...

சாயங்காலமா எல்லாரும் போதையையும் மீறி பேயடிச்ச மாதிரி இருக்க, என்னடான்னு கேட்டுட்டு நானும் ஆடிப் போயிட்டேன். கூட படிச்ச, அந்த ஊர்லயே பெரிய வி.ஐ.பி.யோட பொண்ணு ஓடிபோயிடுச்சின்னானுங்க.

எல்லோரும் டக்குனு ராசுவைத்தான் சந்தேகப்பட்டோம். ஏன்னா அவன்தான் அந்த பொண்ணுகிட்ட கடலை போட்டுகிட்டே இருப்பான். கொஞ்ச நேரத்துல அவனே ரூமுக்கு வந்ததுமில்லாம ஆளு யாருன்னு சொன்னவுடன் அதிர்ந்துட்டோம்.

வேற குரூப் பையன் ஒருத்தன் தள்ளிகிட்டு போயிட்டாங்கற தகவல நம்பவே முடியல. ஏன்னா, அவங்க ரெண்டு பேரும் சந்திச்சு பேசினத யாரும் கண்ணால கூட பாத்ததில்ல.

காரணம், லன்ச் டைமுல மட்டும் தான் அவங்க கிளாஸ் ரூமிலேயே பாத்து பேசி டெவலப் பண்ணியிருக்காங்க, கூட படிச்ச மத்த ரெண்டு பொண்ணுங்க உதவியோட. வெளிய வேற எங்கேயும் அவங்க பாத்துகிட்டது கிடையாது.

நாங்க யாரும் அங்க இருக்க மாட்டோம், ஹாஸ்டல், ரூமுன்னு போயிட்டு ஒன்னே முக்காலுக்கு மேல தான் வருவோம். லவ்வுனதெல்லாம் ஒன்னுல இருந்து ஒன்றரை வரைக்கும்.

சரி விஷயத்துக்கு வருவோம். ராசு பீதியை கிளப்பினான். 'மாப்ளே எல்லாரும் வெறியோட தேடிகிட்டு இருக்காங்க, நாம மாட்டினா ஒழிஞ்சோம். பிரபா மாதிரி ஆளுங்களுக்கெல்லாம் பயமில்ல, கிளாஸ் மேட்டான்னு கூட தெரியாது. ஆனா நாம தான் எதுக்கெடுத்தாலும் மொத ஆளா போயி பாப்புலரா இருக்கோம், பாத்தா பின்னிடுவானுங்க' ன்னான்.

எல்லாருக்கும் உதற ஆரம்பிச்சிடுச்சி எங்க ரெண்டு மூனு பேரை தவிர. 'சரி எல்லோரும் ஒன்னா போவோம், எது வந்தாலும் பாத்துடுவோம்' னு படையா கிளம்பினோம் ராத்திரி ஏழரைக்கு மேல.

பஸ் ஸ்டான்ட் போற வரைக்கும் பிரச்சினை இல்ல. எல்லாரும் டீ குடிச்சோம். லோக்கல் பசங்க நிறைய பேரு கூட இருந்ததால ரொம்ப தெம்பா இருந்தோம்.

ஆத்தூர் போற பஸ் ஸ்டான்ட விட்டு வெளிய வர, எல்லாரும் வழியனுப்ப ஒவ்வொருத்தரா மூவ் ஆகற பஸ்ஸில ஒவ்வொருத்தரா வரிசையாய் ஏற ஆரம்பிச்சோம்.

அப்போ ஒருத்தன் பஸ்ஸில ஏறிகிட்டிடுந்த ரமேஷோட சட்டையை பிடிச்சி கீழ இழுத்தான். தடுமாறி கீழ இறங்கி முறைச்சி, 'என்ன விஷயம் ஏன் இழுக்கிற' ன்னான்.

அந்த பொண்ணு பேரை சொல்லி அதோட 'கிளாஸ் மேட்டுதானே' ங்கவும் ரமேஷ் தலையாட்ட,

'வாங்க சார், உங்களுக்காகத்தான் காத்திருக்கோம்' னு சொல்லி இழுத்துகிட்டு போகவும், ஏதோ பண்ண போறாங்கன்னுட்டு ஆட்டுகுட்டி மாதிரி நானும் ஏதோ துணிச்சலா கூடவே போனேன்.

பஸ்ஸு சல்லுனு போயிடுச்சி. பஸ் ஸ்டன்ட்ல நின்னுட்டிருந்த பசங்க எல்லாம் எஸ்கேப். அவனுங்க ஆளுங்க ரெண்டு மூனு பேரு சேர்ந்துட்டானுங்க.

'இவன் யாருடா கூடவே வர்ரான்' ன்னு ஒருத்தன் என்ன பாத்து கேட்கவும், எல்லோரும் கூடவே வந்துகிட்டிருந்த என்னை அப்போதான் பாத்தாங்க.

'நான் ரமேஷோட பிரண்டு' ன்னேன். 'அப்படியா, வாங்க சார்' னுட்டு பின்னால இருந்த மூத்திர சந்துக்கு கூட்டிட்டு போனாங்க.

அந்த பொண்ணோட தம்பி கொல வெறியோட இருந்தான். எல்லாரும் சேர்ந்து மாத்த ஆரம்பிச்சுட்டானுங்க. ரமேஷுக்கு நாலுன்னா எனக்கு ஒன்னு விழுந்துச்சி.

என்ன அடிக்கும் போது 'எவன்டா இவன் புதுசா இருக்கான்' னு கேக்க, 'அவரோட ஃபிரண்டாம்' னு சொல்ல, 'அப்பா சரின்னு வாங்கிக்கட்டும்' னு வஞ்சனையில்லாம குடுத்தானுங்க...

அவனோட பூணூல பிச்சிட்டானுங்க. கண்ணமெல்லாம் உப்பிடுச்சி. எனக்கும் அப்பப்போ சட்டு சட்டுனு அடி விழுந்துகிட்டிருந்துச்சி. அப்போ அங்க ஒரு போலீஸ் வர, அப்பாட தப்பிச்சோம்னு நினைக்க,

'டேய் பப்ளிக்ல ஏண்ட ராவுடி பண்றிங்க, தனியா கூட்டிட்டு போயி கவனிக்க வேண்டியதுதானே' ன்னு ஐடியா குடுத்திட்டு கண்டுக்காம போயிட்டாரு.

உயிர் பயம் ஆரம்பிச்சுடுச்சி. போட்டிருந்த செருப்பு, கொண்டு போன பேக் எங்க போச்சுன்னே தெரியல. வாயெல்லாம் உப்பு கரிக்க ஆரம்பிச்சுடுச்சி.

'சரி சரி இங்க போதும், ரூமுக்கு கூட்டிட்டு போலாம்' னு ஒருத்தன் சொல்ல அங்கிருந்து எங்கள தள்ளிகிட்டு நகரும்போது புதுசா ஒரு ஆளு வந்தான், கடவுள் மாதிரி.

அவனுங்களை அடக்கி, கையை தரை வரைக்கும் பின் பக்கமா கொண்டு போயி சப்புனு ரமேஷ் கன்னத்துல ஒன்னு உட்டான். 'திரும்பி பாக்காம ஓடிப்போ' ன்னு சொல்லிட்டு, அடுத்து எனக்கும் அதே மாதிரி ஒன்னு விட்டான்.

காமிக்ஸ்ல மட்டுமே அடிச்சா நட்சத்திரம் பறக்கிறத பாத்த நான், நேர்ல லைவ்-ஆ பாத்தேன். திரும்பி பாக்காம அழுதுகிட்டே கந்தலா போயி, நின்னுகிட்டிருந்த ஆத்தூர் பஸ்ல போயி உட்காந்தோம்.

ரமேஷ் வெலவெலத்துப் போயி என்ன கட்டி புடிச்சி அழ ஆரம்பிச்சுட்டான். நிமிர்ந்து பாத்தா, ஓடிப்போன எல்லாரும் குரூப்பா திரும்பி வந்து கோரஸா 'மாப்ளே ஒன்னும் ஆகலல்ல' ன்னானுங்க, ஒன்னுமே தெரியாத மாதிரி.

அப்புறம் நடந்ததெல்லாம் இங்க முக்கியம் இல்ல. அந்த பொண்ணுகிட்ட இருந்து கல்யாணத்துக்கு அழைப்பு வந்திருந்தது. ஆட்டோகிராப் பாத்து அனுப்பி இருக்கும் போல.

கண்டு பிடிச்சி அவனை உதைச்சு (கண்டிப்பா எங்களவிட அதிகமா இருக்கும்னு நம்பறேன்) சொந்தத்துலேயே ஒரு தியாகியை புடிச்சி கல்யாணம்னு தெரிஞ்சிகிட்டேன்.

கல்யாணத்துக்கு போனேன், ரவி மட்டும் வந்திருந்தான். பசங்க வேற எவனும் வரல, பொண்ணுங்களும் வரல.

அந்த பொண்ணோட தம்பிதான் முன்னாலயே நின்னுகிட்டு எல்லாத்தையும் வரவேற்றுகிட்டு இருந்தான்.

என்ன 'வாங்கண்ணா' ன்னு பலமா வரவேற்பெல்லாம் குடுத்துட்டு, சட்டுனு கட்டிபுடிக்கிற மாதிரி காதுகிட்ட 'மன்னிச்சுடுங்கண்ணா, சாரி' ன்னான்.

அடி வாங்கினாலும், அந்த பொண்ணு மனசு எவ்வளவு கஷ்டப்படும்னு பாக்கலாம்னுதான் போனேன். நல்லா கலகலப்பா சிரிச்சிகிட்டு முன்ன விட சந்தோஷமா இருந்துச்சி.

சிறு மாற்றங்களுடன் கூடிய மீள் இடுகை...

நம்பிக்கையில் வாழ்க்கை....

|


அன்பு சகோதரி  கலகலப்ரியாவின்  பயணங்கள் முடிவதில்லை... இடுகையை படித்தேன். சோகத்தை மறக்கத்தான் அந்த கலகலாவா?

அந்த அன்பு இதயத்துக்கு என் பதிலாய் இந்த இடுகை... 

சோகத்தையும்
சுகமாய் சொல்லும் என்
சகோதரி!

தாய் மண்ணின் பெருமை 
தமிழ்கொண்டு பேசி 
திகைப்பாழ்த்திய பின்
தீப்பிரவேசம் செய்தால்
திரும்பவோர் பயணமென
தெள்ளென நிலையை
திறம்பட சொல்லி

பிறந்த மண்ணை
பிறிதொருநாள் பார்க்க  
பரிதவித்து ஏங்கி 
பட்டமர நிலையை
பக்குவமாய் சொல்லி 
பாசமான தங்கையவள்
பகிர்ந்த இவ்விஷயங்கள்

கல் நெஞ்சை கரைத்து
கவலையதை சேர்க்கும்
காசு பணம் அலையும்
கயவரையும் மாற்றும்
கடமையினை மறந்த
கட்சிவாழ் நாய்களை
கணநேரம் மாற்றும்.

சோகத்தின் பின்னே
சுகம் சிறிதுண்டு
சாவுக்கு பின்னே
சரித்திரம் உண்டு
சஞ்சலத்தின் பின்னே
சாந்தமும் உண்டு
சிந்தையதில் வைத்து...........?????

புகைப்படத் தொகுப்பு -II மற்றும் ஒரு காணொளி...

|

பொங்கல் தருணத்தில் எங்கள் ஊரில் எடுத்த ஒரு காணொளியும், வழக்கம்போல் சில புகைப்படங்களும் இந்த இடுகையில்...

பொங்கல் சமயத்தில்...
சூரியன் மேற்கில்...ஈரமுடன் பாசி....மலராத மொட்டு...மலர்ந்த பின்பு...மழைக்குப்பின் கற்றாழை...

எப்படி உணர்கிறீர்கள் என பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்...

நான் தேடிக்கொண்ட பரிகாரம்...

|

என்னோட சின்ன வயசில நடந்த விஷயம் இது. மூனாவது படிச்சிகிட்டிருந்தேன். ஊர்ல எதாச்சும் நல்லது கெட்டதுன்னா உடனே ரேடியோ கட்டிடுவாங்க.

'போனால் போகட்டும் போடா...', 'சட்டி சுட்டதடா... கை விட்டதடா' ன்னு ஆரம்பிச்சா யாரோ மண்டையை போட்டுட்டாங்கன்னு அர்த்தம்.

'பூ மழை தூவி' இல்லன்னா 'திருமணமாம் திருமணமாம்னு' ஆரம்பிச்சா எதாச்சும் நல்ல விசேஷம்னு முடிவு பண்ணிடுவோம். ரெண்டுல எதுன்னாலும் ரொம்ப குஷியாயிடுவேன். ஏன்னா, ஊர்லருந்து ஆயா தாத்தா வருவாங்க.

நிறையா விததவிதமா செஞ்சு எடுத்துகிட்டு வருவாங்க. காட்ல விளைஞ்ச கடலை, கிழங்கு.... அதுவுமில்லாம கடையிலயும் வாங்கிட்டு வருவாங்க. போகும் போது காசெல்லாம் கொடுப்பாங்க.

ரேடியோ அல்லது பந்தல் கட்டிகிட்டு இருக்கிறத பாத்தா உடனே அம்மா கிட்டயோ அல்லது அப்பா, ஆயாகிட்ட போய் கேட்பேன். 'அவங்க நமக்கு சொந்தமா' ன்னு. ஆமான்னா, அடுத்த கேள்வி, 'ஊருக்கார ஆயா வருவாங்களா?'

வருவாங்கன்னு தெரிஞ்சா ஒரே குஷிதான். பள்ளிகூடம் முடிஞ்ச உடனே பைய வீட்டில போட்டுட்டு மூலை பஸ் ஸ்டாப்புக்கு போயிடுவேன். மாமா கடையில உட்காந்துகிட்டு வர்ற பஸ்ஸெல்லாம் பாக்க ஆரம்பிச்சுடுவேன்.

வந்து இறங்கும்போதே ஓடிப்போய் சந்தோஷமா பையையெல்லாம் வாங்கிட்டு தூக்க முடியாம தூக்கிகிட்டு வீட்டுக்கு போய் அவங்க ஒவ்வொன்னா எடுத்து தர.... சத்தியமா அந்த சந்தோஷம் என்னிக்கும் திரும்ப கிடைக்காது.

அன்னிக்கு ஒருநாள், மதியம் ஸ்கூல் விட்டு வீட்டுக்கு சாப்பிட போகும்போது வழியில ஒரு பெருசு செத்து போச்சுன்னு பந்தல் போட்டு மட்டை கட்டிகிட்டிருந்தாங்க. எங்க தெருவுக்கு முந்துன தெரு, அவ்வளவா சொந்தம் கிடையாது... இருந்தாலும் ஒரு நப்பாசை. சரி ஆயாவை கேக்கலாம்னு ஓடினேன்.

வீட்டுக்கு வெளியே நிறையா செருப்பு கிடந்தது. ஒரே ஆச்சர்யம். மெதுவா உள்ள நுழைஞ்சா ஊர்ல இருந்து ஆயா, தாத்தா, இன்னும் ஏழெட்டு பேரு வந்திருந்தாங்க.

ரொம்ப சந்தோஷமா, கை ரெண்டையும் சேர்த்து 'வாங்க தாத்தா, வாங்க ஆயா ... எல்லாரும் வாங்க' ன்னு பவ்வியமா கேட்டுட்டு அடுத்து கேட்டேன் பாருங்க ஒரு கேள்வி அதுதான் இந்த கதைக்கு ரொம்ப முக்கியம். அந்த கேள்வி, 'எல்லாரும் எழவுக்கு தானே வந்திருக்கீங்க?'

எல்லாருக்கும் மூஞ்சி செத்து போச்சு. ஏன்னா மணிங்கறவருக்கு பொண்ணு பாக்க வந்திருக்காங்க. மொதல்ல எங்க வீட்டுக்கு வந்துட்டு, அப்புறமா பொண்ணு பாக்க போலாம்னு ஐடியா போலிருக்கு. நான் அந்த மாதிரி கேட்டதும், பொண்ணயே பாக்காம போயிட்டாங்க.

இது நடந்தது 1978-ம் வருஷம். அதுக்கப்புறம் அவருக்கு கல்யாணமே செட் ஆகல. பொண்ணு பாக்கறதுல பி.ஹெச்.டி பண்ணியும் ஒன்னும் தேறல. நான் ஸ்கூல், காலேஜெல்லாம் முடிச்சிட்டேன். தொன்னூத்தாறுலதான் அவருக்கு கல்யாணம் செட் ஆச்சு.

கல்யாணத்துக்கு நான் எல்லா வேலையையும் பாத்தேன். பால் வாங்கி வர்றது, அய்யர கூப்பிடறது, வாழ இலை அறுத்து வர்றது, மளிகை சாமான், பந்தின்னு பம்பரமா வேலை செஞ்சேன்.

எல்லாம் நல்லபடியா நடந்துச்சி. மாமாவோட யாஷிகா கேமராவில போட்டோவும் அப்பப்போ எடுத்தேன்னா பாத்துக்கோங்களேன். கடைசியா பொண்ணு அழைப்பெல்லாம் முடிஞ்சு கிடா விருந்தப்போ, எல்லாம் முடிச்சிட்டு இருக்கறப்போ வயசான பாட்டி,

'பரவால்ல, 'பிரவு' (பிரபுங்கறத கொலை பண்ணி அப்படித்தான் கூப்பிடும்) பண்ணுன பாவத்துக்கு பம்பரமா வேலை செஞ்சி பரிகாரம் தேடிகிட்டான்' னு சொல்லவும்,

'ஆஹா, கிழவி இன்னமும் மறக்காமத்தாண்டா இருக்கு நம்மள மாதிரி' ன்னு நினைச்சிட்டேன்.


கொஞ்சம் மாற்றங்களோடு கூடிய மீள் இடுகை...

பீர் சாப்பிட்டதாய் கதை...

|

பசங்களுக்குள்ளே இந்த ஊர்ல யாரு தண்ணி தம்மு அடிக்காத ஆளுன்னு புள்ளிவிவரம் எடுத்திருக்கானுங்க. அப்போ என் பேரு மொதல்ல வந்திருக்கு. உடனே அங்கிருந்த ஒருத்தன்,

'பிரபு கூட நான் பீர் சாப்பிட்டிருக்கேன்' னு அடிச்சி சொல்லவும், என் தம்பி ஒரு மாதிரியா ஆயிட்டான். என்ன பத்தி அவனுக்கு ரொம்ப நல்லாவே தெரியும், எதையும் அவன்கிட்ட மறைச்சதில்லை.

கொஞ்ச நாள் கழிச்சி, என்கிட்ட இந்த விஷயத்தை சம்மந்தப்பட்ட அவன் கிட்ட கேக்க கூடாதுன்னு ப்ராமிஸ் வாங்கிட்டு, 'பீர் சாப்பிட்டிருக்கியா' ன்னு கேட்டான்.

'இல்லடா, சாப்பிட்டா உன்கிட்ட சொல்லியிருப்பேனே, மறைக்கனும்னு அவசியம் இல்லயே' ன்னேன்.

'புரியுதுண்ணா, ஆன அவன் உன்கூட சேர்ந்து பீர் சாப்பிட்டேன்னு எல்லார் முன்னாலேயும் சொன்னான்' னான். சுர்ருனு கோவம் வந்துச்சி. 'இப்பவே அவன்கிட்ட நேர்ல கேக்கலாம்' னேன்.

'அதுக்குத்தான் உங்கிட்ட நான் கேக்கக்கூடாதுன்னு நினைச்சேன்' னான்.

ஆனாலும் எனக்கு பல்லுல மாட்டுன பாக்கு மாதிரி நிரடிட்டே இருந்துச்சி. சமயத்துக்கு காத்திருந்தேன். ரொம்ப வருஷம் கழிச்சு ஒருநாள், பஸ் ஸ்டாப்புக்கு பக்கத்துல அழகுவோட பேசிட்டிருந்தப்ப அவன் வந்தான். இதான் சமயம்னு நினைச்சுட்டேன்.

'எப்போ வந்தே, வேலயெல்லாம் எப்படி இருக்கு' ன்னு கேட்டான். சொல்லிட்டு மெதுவா, 'வாழ்க்கையில எதாச்சும் தப்பு பண்ணுனும்னா அப்பா அம்மாவுக்கு, சொந்தத்துக்கு பயப்படனும். உனக்கே நல்லா தெரியும் அப்பா அம்மா ரெண்டு பேரும் என்னோட பெஸ்ட் ஃபிரண்ட்'.

'எதையுமே அவங்ககிட்ட மறைச்சதில்லை. சப்போஸ் பீர் சாப்பிடனும்னு எனக்கு விருப்பம் இருந்தா அவங்ககிட்ட சொல்லிட்டே சாப்பிடுவேன், ஏன் வீட்டிலயே சாப்பிடுவேன். ஆனா எனக்கு புடிக்காது, உடன்பாடு இல்லை' ன்னு சொன்னேன்.

அவன் முகத்துல லேசா கறுப்பு தட்டுச்சி. 'புரியல, ஆமா இப்ப எதுக்கு சொல்லுறே?' ன்னான்.

'இல்ல, நான் உன்கூட பீர் சாப்பிட்டேன்ன்னு சொன்னியாமே? எப்போ? எங்கே?' ன்னேன்.

'அய்யய்யோ சத்தியமா அப்படி சொல்லவே இல்ல, உன்னை பத்தி எனக்கு தெரியாதா, பாக்குகூட போடமாட்டே (சரியான பொய்), ஊர்ல ஆயிரம் பேர் ஆயிரம் சொல்லுவான், அதெல்லாம் கண்டுக்காதே' ன்னுட்டு ஒரு பெரிய குண்டை தூக்கி போட்டான்.

'பீர்'லாம் உன்கூட குடிச்சதில்ல, ஆனா சாராயம் குடிக்க கத்து கொடுத்தது அழகு மாமாதான்' ன்னு அழகுவ பாத்து சொன்னான்.

அழகு பதறி போய், 'டேய், என்னடா அபாண்டமா பழி போடறே? நானா, உனக்கா' ன்னாரு. அழகு அவர விட சின்ன வயசு பசங்க கிட்ட அதிகமா வெச்சிக்க மாட்டாருங்கறது எல்லாருக்கும் தெரியும்.

'மாமா நீங்க நாலு வருஷத்துக்கு முன்னாடி சாரயக்கடை வெச்சிருந்தீங்களா இல்லையா' ன்னான்.

'ஆமா, வெச்சிருந்தோம்'

'அப்போதான் கத்து குடுத்தீங்க' ன்னுட்டு சட்டுனு போயிட்டான்.

அழகு நொந்து போய்,'பிரபா, உங்க பாரத்தை எறக்கறேன்னு, அந்த கழிசடைகிட்ட பேசி என் தலையில பாரத்த ஏத்திவிட்டுட்டீங்களே' ன்னாரு.

கொஞ்சம் மாற்றங்களுடன் கூடிய மீள் இடுகை.

புகைப்படத் தொகுப்பு - முதல் தொகுப்பு...

|

புகைப்படம் எடுப்பது எனது பொழுதுபோக்கு. அவ்வப்போது தனிமை கிடைக்கும் போது எடுத்தவைகளில் சில. நன்றாக இல்லையெனிலும் சொல்லுங்கள், என்னை சரி செய்துகொள்ள... 

சுவற்றின் பின்னணியில் எடுத்ததுசிங்கையில் எங்கும் இருக்கும் ஒரு பூமற்றுமோர் கோணத்தில்...முள்வேலியில் தனியே நீட்டிக்கொண்டு...கற்று வாங்கியை கொஞ்சம் அருகே...புல் தரையில் ஏதோ ஒன்று...பாசியில் ஒரு தட்டாம்பூச்சி....மாலைவேளை வானில் பறவைகள்...பேபி கேர் நினைவிற்கு...காரில் தொங்கிய மணி...

என்னவளின் சிறப்பு... - பிரபாகர்

|


விகடன் முகப்பு பக்கத்திலும் யூத்புல் விகடனிலும் வெளியாகியிருக்கும் கவிதை.


பூவெடித்து புறப்படும்
புதுமைசூழ் நறுமணமும்
பாவையுன்னை முகர்தலில்
பாதிகூட இல்லையேவீசுகின்ற தென்றலின்
வருடலதன் மென்மையும்
பேசும் சிற்பம் தொடுதலின்
பற்றுமின்பம் இல்லையேகலகல ஓசையுடன்
கைதவறி சில்லறை
எழுப்புமொலி என்னவள்
இதழ் சிரிப்பாய் இல்லையேவில்லினின்று விரைந்திரை
வீழ்த்துமம்பு நுனியது
கொல்லும் விழி கூர்மையில்
கடுகளவும் இல்லையேசேர்த்து வைத்த முத்துக்கள்
கண்பறிக்க இருப்பினும்
சேர்ந்திருக்கும் பல்வரிசை
சிரிப்பாயது இல்லையேஆரஞ்சு சுளையிரெண்டை
அடுக்கி பார்த்திடினும்
சேர்ந்திருக்கும் கொவ்வையிதழ்
சிறப்பாயது இல்லையேமருண்டோடும் மானிடம்
மங்கையவள் கண்கள்போல்
மறக்கடிக்க செய்கின்ற
கிறக்கமது இல்லையேகாட்டுக்குயில் கானமது
காதிற்கினிதாயினும்
பாட்டுப் பாடும் என்னவளின்
குரலினிமை இல்லையேஆடுமயில் அழகெனினும்
ஆடை கட்டும் பெண்மையின்
நாட்டியத்தின் நளினமது

மயிலிடத்தி லில்லையே...

முந்தைய நாள், நேற்று, இன்று...

|


ஒரு சிறிய சம்பவம் நினைவிற்கு வர என் தம்பியை அது பற்றி விசாரித்தேன். அவன் சொன்ன தகவல்களை வைத்து இதோ வரிசையாய் கீழே.

நேற்று.

ஊருக்கு போன சமயம். அண்ணா 'சில்லி சிக்கன் சாப்புடுறியா' ன்னு தம்பி திவா கேட்டான். அசைவ அயிட்டங்கள சூப்பரா செய்வான். ஆனா அவன் அதுக்காக மெனக்கடறது புடிக்காது, நிறைய மசாலாவை யூஸ் பண்ணுவான். அதுவுமில்லாம அம்மா ரொம்ப நல்லா மசாலா கம்மியா வெச்சி செய்வாங்க.

'நீ செய்யற மாதிரி இருந்தா வேணாம்' னு சொல்லவும், 'இல்ல ஜெயபால் அண்ணன் கடைக்கு போகலாம்' னு கூட்டிகிட்டு போனான். ஜெயபால் பத்தி ஒரே விஷயம் தான் தெரியும், செங்கல் சூளை வெச்சிருந்தாப்ல.

ராஜ மரியாதை. 'வாங்க பிரபாகர் அண்ணா, திவா அண்ணன் தான் எப்படி சில்லி சிக்கன் போடறதுன்னு சொல்லிக் கொடுத்தாரு. ஒரு நாளைக்கு எட்டு கிலோ ஓடுது, நல்ல எண்ணைய யூஸ் பண்றேன். கடை வெக்க அண்ணன், நீலமேகம் எல்லாம் காசு கொடுத்து உதவி செஞ்சாங்க. எனக்கு கடவுள் மாதிரி' ன்னு சொல்லிட்டு நான் சாப்பிட்டதுக்கு காசே வாங்கிக்க மாட்டேன்னு சொல்லிட்டாரு. ரொம்ப வற்புறுத்தி கொடுக்க முயற்சி செஞ்சும் முடியல.

நல்ல ஓட்டம், டாஸ்மார்க், கள்ளச்சாராயம் னு தாராளமா புழங்குனதுல கடைக்கு செம வசூல். பதினைஞ்சு கிலோ வரைக்கும் விக்க ஆரம்பிச்சது. அப்படியே ஒரு பெட்டிக்கடையும் வெச்சி,  போலீசுக்கு மாமூல் கொடுத்துட்டு சரக்கும் வெக்க, அவரோட வளர்ச்சி பிரம்மாண்டமா இருந்துச்சி. அடகு வெச்சிருந்த நாலு ஏக்கர் நிலத்த மீட்டாப்ல. மக்காச்சோளம் போடவும் நல்ல மகசூல். இன்சூரன்ஸ் பணமும் வந்து விட ஆளு எங்கயோ போயிட்டாரு. விட்டு போன எல்லாம் வந்துடுச்சி, பொண்டாட்டியையும் சேத்து.

முந்தைய நாள்

என்பீல்டு மினி புல்லட் வண்டியில ரெண்டு பேர உக்கார வெச்சிகிட்டு ஸ்பீடா ஜெயபால் ஓட்டிகிட்டு போயிருக்காரு. அப்போ ஒரு வளைவுல நாய் குறுக்கே வர வண்டியில இருந்து தடுமாறி, பஸ்ஸில மோதி கீழ விழுந்து மூணு பேருக்கும் நல்ல காயம். அவருக்கு காலு உடைஞ்சி கன்னத்துல கிழிஞ்சி.... ரணகளமாயிருச்சி.

சேலத்துக்கு தூக்கிகிட்டு போயி, மூணுபேருக்கும் அவருதான் செலவு பண்ணி கவனிச்சாரு. இருந்த எல்லா பணமும் காலியாக, அவரு பொண்டாட்டி வாழமாட்டேன்னு போயிடுச்சி. அப்போதான் அவரு என் தம்பி, லைப்ரேரியன் அண்ணன் நீலமேகம் கிட்ட கதறி அழ, முதல் போட்டு அந்த கடைய வெச்சு கொடுத்திருக்காங்க.

இன்று.

அவரோட பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி கொடுத்துட்டாரு. கையில நிறைய பணம் வெச்சிருக்காரு. நிலம் இன்னும் கொஞ்சம் வாங்கி போட்டிருக்காரு. உதவி செஞ்சவங்கள எல்லாம் மறந்துட்டாரு. பழைய ஆளுங்க யாருகிட்டயும் பேசறதுல்ல. பைக்குல ரொம்ப ஜாலியா சுத்திகிட்டிருக்காரு. பின்னால அதே ரெண்டு பேரோட.

பிரச்சினைய பேசுவோமா? - சிறுகதை.

|
கடற்கரை. படகின் பின்புறம் சுலக்சாவும் சுதிரும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி அமர்ந்திருக்க, மௌன ஆர்ப்பாட்டத்தில் அலைகள். யார் பேசுவது என அவர்களுக்கும் தயக்கம். தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல்.... குரல் கேட்டு இருவரும் அச் சிறுவனை பார்க்க சுதிர் அப்புறமாய் வரும்படி சைகை செய்தான்.

அவள் மணலை நிரண்டிக்கொண்டிருக்க, அவன் கீ செயினை ஆராய்ந்து கொண்டிருந்தான்.

'இப்படியே இருந்தால் எப்படி? அதுக்குத்தான் வர சொன்னியா?'

'கொஞ்சம், இல்லையில்ல நிறைய குழப்பமா இருக்கு. அதான்...'

'பேசினாத்தானே சரியாகும்... சரி முதல்ல உங்க சைட்ல இருக்கிறத பத்தி பேசுவோமா?'

'ம்.... சரி. ஒரு ரெண்டு நிமிஷம் அமைதியா இருந்துட்டு ஆரம்பிப்போமா?'

இன்னுமொரு சுண்டல் குறுக்கீடு, தலையாட்டி வேண்டாமென சொல்லி,

'ஆரம்பிக்கலாமா? உங்க அம்மா பிரச்சினை இல்ல கல்யாணம் வரைக்கும், அப்பாதான் என்ன பண்றதுன்னே தெரியலன்னு சொன்ன'.

'ஆமாம். என் அத்த பொண்ணத்தான் கல்யாணம் பண்ணிக்கனும்னு தீவிரமா இருக்கார். அத்த பொண்ணு பிரதீப்ப லவ் பண்றா, அவ ஓடிப்போனா லைன் கிளியர். அது எப்பன்னு தெரியல.'

'அதே மாதிரி உன்னோட முன்னாள் காதலி தொந்தரவா இருப்பான்னு...'

'எஸ், இப்ப அவ லவ் பண்ணிட்டு இருக்கிறவன் சரியில்லாத ஆளு. பிரச்சினைன்னா திரும்ப என்கிட்டத்தான் வருவா'

முறுக்கு முறுக்கு என இன்னொரு குறுக்கீடு. சைகையால் வேண்டாமென சொல்ல, மறு பேச்சில்லாமல் அச் சிறுவன் செல்ல, தொடர்ந்தார்கள்.

'உங்க அக்கா ஏதாச்சும் பிரச்சினை பண்ணுவாங்கன்னு சொன்னியே?'

'உன்னை கல்யாணம் பண்ணினா, சொத்துல பங்கு வேணும்னு நிப்பாங்க. அக்காவோட முதல் கணவர் வேற குடிகாரர். அவரும் பிரச்சினை பண்ணுவார்'.

'அப்படியா? நல்லவேளை, உன் தங்கச்சி ஒண்ணும் பிரச்சினை இல்ல!'

'நீ வேற, இன்னும் சொல்லல. அது இன்னும் சீரியஸ். அவ வேற மதத்துல லவ் பண்றா... அதுல வேற என்னென்ன ஆகப்போகுதோ?'

'நினைச்சாலே பயங்கரமா இருக்கு. அப்பா உங்க பாட்டியாலா மட்டும்தான் பிரச்சினை இல்லன்னு சொல்லு.'

'அங்கதான் தப்பு பண்றே, அவங்க கிட்ட இருக்கிற நகைக்கு என் சித்தப்பாவும் அப்பாவும் போட்டி போட்டுகிட்டிருக்காங்க, அத்தையும் களத்துல இறங்க தயாரா இருக்காங்க'

'நீங்க சொல்றமாதிரி பயங்கரமான குழப்பம்தான்... சரி என் பிரச்சினையைப் பத்தி பேசுவோமா?'

'தலை வலிக்கிற மாதிரி இருக்கு, இன்னொரு நாளைக்கு பேசுவோம், கிளம்பலாமா?'

'சரி' என அவள் சொல்ல இருவரும் எழுந்து பொறுமையாய் மணலை தட்டிவிட்டு, தலையினை சரிசெய்து ஒன்றாய் வர,

'கட் கட்'... என குரல். 'எக்ஸலேன்ட். ஒரு மாதத்துக்கான எபிசோட் ரெடியாயிடுச்சி. பேக் அப்' என டைரக்டர் சொன்னார்.

மழலைகள் - குழந்தைகள் தினம்...

|மழலைகள்

மகிழ்ச்சியின் எல்லை
மனமகிழ் தொல்லை...
தேடலின் பொருள்
தெய்வத்தின் வரம்

கண்களின் விருந்து
கவலைகளின் மருந்து
வாழ்வின் ஒளி
வசந்தத்தின் வழி

உண்மையின் பொருள்
உவகையின் திரள்
காதலின் விலை
கண்ணள்ளும் சிலை.

மழலையோடு மகிழ்ந்தோருக்கும், மகிழ்வோருக்கும், மகிழப்போவோருக்கும், அன்பான குழந்தைகளுக்கும் இனிய குழந்தைகள் தின வாழ்த்துக்கள்.

பிரபாகர்.

ஒரு சம்பவம் பல கோணங்கள்...

|

வானம்பாடிகள் அய்யா எழுதிய பரம்பரை.. படிக்கும்போதே, நமக்கு ஒரு சிறு பொறி தட்டுப்பட, இதோ களத்துல இறங்கிட்டோம்ல...

(சிவப்புக்கலரில் இருப்பது அப்படியே அய்யாவிடமிருந்து சுட்டது) 

ஏய் ரமா! இங்க வா என மிரட்டியதில் நடுங்கிப் போய் தந்தையிடம் வந்தாள் ரமா.

கொஞ்ச நாளா உன் போக்கு சரியில்லை. நீ மெதுவா வேலியோரம் போய் நிக்குறதும், பக்கத்து வீட்டு ராஜா திருட்டுத் தனமா வேலியோரம் வந்து நிக்குறதும் முனகி முனகி பேசிக்கறதும் பார்த்துகிட்டுதான் இருக்கேன். என்ன நடக்குது அங்க என்றார்.

மெதுவாக, எனக்கு அவனப் பிடிச்சிருக்கு என்றாள் ரமா.

என்னது? என்று அடித்தொண்டையிலிருந்து கத்தி, அடியே இங்க பாரு உம்பொண்ணு பேசுறத என்றதில் அவள் தாய் ஓடி வந்து, என்னடி என்றாள். தயங்காமல் மீண்டும் சொன்னதையே சொன்னாள் ரமா. பிடித்தது சனி, தாயும் தந்தையும் மாறி மாறி தொண்டை தெறிக்க கத்தினாலும் சலனமின்றி இருந்த ரமா எனக்கு அவந்தான் வேண்டும் என்றாள்.

நம்ம ஜாதி என்ன, அவன் ஜாதி என்ன, ஜாதி விட்டு கண்டிப்பா முடியாது. நம்ம ஜாதியில எந்த நாயயாவாது கொண்டுவா, உடனே கல்யாணம் பண்ணிவெக்கிறேன் என்றார்.

அடுத்த வாரமே அவளது ஒரிஜினல் காதலனை, சினிமாவில் வேலை செய்யும் ரவியை கூட்டிவர, ஒரே ஜாதி என்ற காரணத்திற்காகவும், வாக்கு கொடுத்து மாட்டிக் கொண்டதாலும் ஒத்துக்கொள்ள திருமணம் இனிதே நடந்தேறியது.

இதன் பின் ஒவ்வொருவரும் என்ன நினைக்கிறார்கள் என்பதை கீழே படியுங்கள்.

பக்கத்து வீட்டு ராஜா.
தேங்க்ஸ் ரமா, எதிர் வீட்டு பிகர் ரொம்பத்தான் பிகு பண்ணிட்டு இருந்துச்சி. உன் கூட உன் திட்டத்துக்காக அடிக்கடி பேசறத பாத்துட்டு உன் கல்யாணத்துக்கு அப்புறம் ஓகே சொல்ல இப்ப லைன் கிளியர்... சக்சஸ்.

ரமா.
அப்பாவுக்கு சினிமாவே புடிக்காது, அதில வேல செய்யற ஆளுன்னா சுத்தமா புடிக்காது. அதுக்காக ரவி கொடுத்த பிளான கரெக்டா செய்ய... சக்சஸ்.

அப்பா.
ராஜா எதிர் வீட்டு பொண்ண லுக் விட்டான், இப்ப என் பொண்ண. கட்டி கொடுத்துட்டு அந்த கருமம் புடிச்சவன் கூட எப்படி காலம் தள்றது, பக்கத்துல வேறல்ல காலம் பூரா இருப்பான். அப்புறம்... ஹி, ஹி... அவங்கம்மா என்ன ஒரு மாதிரியா பாத்துகிட்டிருக்கு... சக்சஸ்.

அம்மா.
மாப்ளே சினிமா எடுக்கலைன்னாலும் ஒரு சீரியலாவது எடுக்காமலா போயிடுவாரு? ஒரு சீன்லயாவது நடிச்சிடனும். சின்ன வயசில இருந்தே எனக்கு வெளிய சொல்ல முடியாத ஆசை.... இப்போ சக்சஸ்.

ரவி.
எனக்கு ஒண்ணுமே தெரியலன்னு டைரக்டர் திட்டினால்ல, இப்போ எவ்வளவு பெரிய பிளான சாதாரணமா செஞ்சிருக்கேன்... மாமனார்கிட்ட ஆட்டைய போட்டு எப்படியாவது ஒரு படத்த எடுத்திட வேண்டியதுதான்... சக்சஸ்.

படிச்சிட்டு நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு தெரியல. பின்னூட்டமிட்டா... சக்சஸ்.

காலம் வரும் நமக்கொருநாள்....

|

அன்பு சகோதரி கலகலப்ரியா எழுதி வரும் ஒரு தொடர் இடுகை என்னை பாதிக்க, பின்னூட்டத்துக்கு பதிலாய் தனி இடுகையாய் எழுத எண்ணி இதோ கீழே..  

இருமை யழிந்தபின் எங்கிருப்பாய்.. அற்ப மாயையே...படித்து, பின் இதை படியுங்களேன்...  

கருவறுக்க இனமதனை
கருத்தாய் கொண்டிட்டு
இரக்கமே இல்லாமல்
ஈழத்தில் நாய்கள்சில

அன்பு தங்கை எழுதலினால்
அறிந்திரும் விஷ(ய)ங்கள்
புண்மேலே ஈட்டியினால்
பலமாய் குத்துதற்போல்

கருணையற்ற கல்நெஞ்சில்
புரிந்திட்ட செயல்களெல்லாம்
இரும்புள்ளம் கொண்டோரும்
இளக்கி அழ செய்திடுமே....

உறுதிகொண்ட உள்ளத்துடன்
உரைக்கும் என் தங்கையவள்
அறிவொன்று குறை யெனவே
அனைவருமே சொல்லுகின்ற

மனிதனினும் மேம்பட்ட
மாண்போடு மனிதம் கொண்ட
பூனையோடு நாயார் பற்றி
பாசமாய் சொன்னதுதான்

அண்ணனுக்கு ஆறுதல்
அழுகையிலும் சிறு மகிழ்ச்சி
கண்ணே நீ கலங்காதே
காலம் வரும் நமக்கொருநாள்....

அண்ணன்.

மாணிக்கம் எடிட்டர் ஆன கதை...

|

எஞ்சினீரிங் முடிச்சிட்டு சினிமா எடுத்தே ஆகனும்னு இன்னனும் போராடிக்கிட்டிருக்கிற என் நண்பன் வேல்முருகன் அப்போ சைதாப்பேட்டையில ஃபேன்பேட் செகண்ட் ஸ்ட்ரீட்ல இடிஞ்சி விழுவற மாதிரி ஒரு வீட்டுல தங்கியிருந்தான். பாழடைஞ்ச வீடுங்கறத அப்படி டீசண்டா சொன்னேன். சென்னைக்கு வேலை தேடி வர்றவங்களுக்கு அது ஒரு முகவரியா இருந்துச்சி.

அங்க போனால் எதாச்சும் சுவராஸ்யமான விஷயம் மாட்டும். அன்னிக்கும் அப்படித்தான் பர்ஸ்-ம் பெல்ட்-ம் அவன் கம்பனி-ல எடுத்து தர்றேன்னு சொன்னதால அவனை பாக்க போயிருந்தப்போ, அவன் இல்ல, ஆனா எனக்கு மாணிக்கம் அறிமுகம் கிடைச்சுது.

பார்த்த உடனே பேச ஆரம்பிச்சுட்டான், என்னப் பத்தி வேலு ஏற்கனவே சொல்லியிருப்பான் போல இருக்கு. அரியலூர் பக்கத்துல மாத்தூர் சொந்த ஊராம். அழகுவேல் ரெக்கமண்டேசன்ல வந்து இருக்கானாம். ஒரு எழுத்தாளர் வீட்டில வேலை செய்யுறானாம்.

சினிமா வாய்ப்ப தேடி வர்றவங்க அதிகமா சந்திப்பேன். அதால அவன்கிட்ட கேட்டேன், 'தம்பி, நீங்க என்னவா ஆகனும்னு வந்து இருக்கீங்க'ன்னு.

கொஞ்சமும் எதிர்பார்க்காத மாதிரி அதுக்கு அவன் எடிட்டிராவனும்னு சொன்னான். பதில் எனக்கு சர்ப்ரைஸ்-ஆ இருந்தது. ஏன்னா கிராமத்துல இருந்து சினிமா-வுக்கு வர்றவங்க பெரும்பாலும் டைரக்டர் ஆகனும், நடிகனாகனும், பாடலாசிரியராகனும்னு தான் வருவாங்க. அதுவும் மாத்துர்ல இருந்து எடிட்டர்னு நினைச்சாலே அவன்கிட்ட நிறைய பேசனும்போல இருந்தது.

'எப்போ வந்தே, சார் எழுத்தாளராச்சே, அவருக்கிட்ட வேலை பாக்கறதுக்கும் எடிட்டராவறதுக்கும் என்ன சம்மந்தம்னு கேட்டேன்.

'வந்து ஆறு மாசமாச்சு, அவர் மனசுல இடம் பிடிக்க போறேன்'னான்.

எனக்கு ஒரே குழப்பமா இருந்துச்சி. வேலு இப்படித்தான், ஏதச்சும் வில்லங்கமா பண்ணிட்டே இருப்பான்.

'ஊர்ல என்ன பண்ணிட்டிருந்த?, எடிட்டிங் மேல எப்படி ஆர்வம் வந்தது, எழுத்தாளர் சார் மனசுல இடம் பிடிக்கறதுக்கும், எடிட்டர் ஆவறதுக்கும் என்ன சம்மந்தம்'னேன்

'எழுத்தாளர் சாரும் தங்கார் பச்சன் சாரும் ஃபிரண்ட்ஸ். தங்கார் பச்சன் சாரும் எடிட்டர் லெனின் சாரும் ஃபிரண்ட்ஸ். எழுத்தாளர் சார் மனசுல இடம் பிடிச்சா தங்கார் சார் மூலம எடிட்டர் லெனின் சார் கிட்ட அசிஸ்டன்ட்-ஆ சேர்த்து விடுவார்னு வேலு அண்ணா தான் என்ன சேத்து விட்டாருன்னான்'

தலைய சுத்தற மாதிரி இருந்தது. சரி மனசுல இடம் புடிச்சியான்னு அவன் பாணியிலேயே கேட்டான்.

உடனே புலம்ப ஆரம்பிச்சிட்டான். 'ஏன்னா நீங்க வேற, என்னை அடிமை மாதிரி நடத்துறாங்க. பாத்திரம் தேய்க்கறது, வீடு கழுவறது, பாத்திரம் சுத்தம் செய்யறது எல்லாமே நான் தான். சாரோட,  வைஃபோட எல்லாத் துணிங்களையும் கூட நான் தான் துவைச்சுப் போடறேன்.

ஆனா முந்த நாள் வீட்டு சாவிய தொலைச்சிட்டேன், அதுக்கு போயி கன்னா பின்னான்னு திட்டுறாங்க, மனசு கஷ்டமா இருக்கு, செத்துப்போயிடலாம்னு கூட இருக்கு, வேலு அண்ணாவுக்காகத்தான் பாக்கறேன். அவர்கிட்ட சொன்னா, இந்தமாதிரி கஷ்டப்பட்டாத்தான் வாழ்க்கையில முன்னேற முடியும்னு சொல்லுறாரு'

'ஆமா, ஊர்ல என்ன பண்ணின, எடிட்டிங் மேல எப்படி இவ்வளவு ஆர்வம் உனக்கு' பேச்சை மாற்றினேன்.

'அதுவா, ஊர்ல பைக் சைக்கிளுக்கு பஞ்சர் ஒட்டிட்டு இருந்தேன். அழகுவேல் அண்ணாவை (வேல்முருகன் அண்ணன்) லைப்ரரிக்கு தினமும் சைக்கிள்ல கொண்டு போய் விடுவேன். என் மேல் பாசமா இருப்பார். என் ஆர்வத்தை பாத்துட்டு என்னை இங்கு அனுப்பி வெச்சாரு'ன்னுட்டு ஊர்ல பண்ணின சாகசத்தை சொல்ல ஆரம்பிச்சான்.

'அண்ணா எங்க ஊர் தியேட்டர்ல இந்து படம் போட்டிருந்தாங்க. அதுல சக்கர வள்ளி கிழங்கு பாட்டுல பல இடங்கள்ல கவர்மென்ட்ல(சென்சார்ல) சிலேன்ட்(சைலன்ட்) பண்ணிருப்பாங்க. ஆப்ரேட்டர் நல்லா பழக்கம். அவர் எல்ப்போல டெக்னிக் யூஸ் பண்ணி டேப் கேசட் மூலமா இணைச்சு பாட்டு தொடர்ச்சியா வர்ற மாதிரி பண்ணினேன்.

ஊர்ல எல்லோரும் என்ன பாரட்டினாங்க(?). அப்போதான் முடிவு பண்ணினேன், பெரிய எடிட்டர் ஆவறதுன்னு. சரியானசமயத்துல வேலு அண்ணாகிட்ட கடவுள் மாதிரி அழகு அண்ணா அனுப்பி வெச்சாரு'ன்னான்.

எனக்கு அவன் மேல் கொஞ்சம் பரிதாபமா இருந்தது. கால் வேறு கொஞ்சம் ஊனம்ங்றத எழுந்து அவன் தண்ணி குடிக்கப்போகும் போதுதான் கவனிச்சேன்.

அவனுக்கு ஏதாச்சும் உதவி பண்ணனும்னு நினைச்சேன். 'செலவுக்கு காசெல்லாம் என்ன பண்ணுவ, எவ்வளோ வெச்சுருக்கே'ன்னு கேட்டேன்

'சாப்பாடு, தங்கறது எல்லாம் அங்கேதான். அப்புறம் செலவுக்கு எதுக்குன்னு என்னை கேட்டவன், பஸ் போக கையில அம்பது பைசா இருக்குன்னான். வேலு வந்தா அவன உண்டு இல்லன்னு பண்ணனும் நினைச்சிட்டிருந்தேன்.

அப்போல்லாம் செல் போன் கிடையாது. காத்திருந்தேன், கடைசியா ஒரு மணி வாக்குல வந்தான். வந்த உடனே அவசரப்படுத்தினான்.

'கிளம்பு, கிளம்பு டைமாச்சு, நீ எப்போ வந்தே?' மாணிக்கத்த கேட்டுட்டு அவனையும் கிளம்ப சொன்னான். சைதாப்பேட்டையில் ஏறினோம். டி.வி.எஸ் டிக்கட் வாங்கச் சொன்னான். வாங்கினேன்.

நானும் அவனும் பேசிட்டே வந்தோம். திடீர்னு பாத்தா ஒரு பஸ் ஸ்டாப்புல வேலு இறங்கி நடந்து போயிட்டுக்கான். அவசரமா ரெண்டு பேரு காலை மிதிச்சு திட்டு வாங்கி ஓடுற பஸ்ஸிலிருந்து குதிச்சேன்.

மூச்சிறைக்க ஓடி பக்கத்துல போயி 'ஏன்டா இறங்கும் போது சொல்லக் கூடாதா? கடைசி நேரத்துலதான் கவனிச்சேன், இல்லன்னா என்ன ஆகி இருக்கும்'னேன். 'பாரீஸ்க்கு போயிருப்பே' ன்னான் கூலா.

வேற பஸ் புடிச்சு ராயப்பேட்டை தாண்டி ஜிம்மி பில்டிங் பக்கமா இறங்கி அவன் கம்பனிக்கு போகும்போதுதான் மாணிக்கம் ஞாபகம் வந்தது. 'டாய் மாணிக்கம் எங்கடா' ன்னு கேட்டேன். 'அவன் கூட வரலையா? சரி பரவாயில்ல வா' ன்னான்.

'டேய், அவன்கிட்ட காசு கூட இல்லடா! அம்பது பைசா தான் இருக்குன்னான். டிக்கெட் வேற என் கையில் இருக்கு, என்னாச்சோ தெரியலயே?' பதறினேன்.

'அம்பது பைசா வெச்சிருக்கானா? ஏது அவனுக்கு? என் கிட்ட சொல்லவே இல்ல... சரி சரி, ஏன் தேவையில்லாம டென்சன் ஆகற? நல்லா பாடம் கத்துக்குவான்' னான்.

அப்புறமா அதைப்பத்தி பேசவே இல்லை, மறந்தும் போயாச்சு. மூனு வருஷம் கழிச்சு, பொங்கல் சமயத்துல அழகுவேலுகிட்ட அவங்க வீட்டு திண்ணையில பேசிக்கிட்டிருக்கும்போது மாணிக்கம் ஞாபகம் வந்து கேட்டேன்.

'ஒ, அதுவா, நீங்க ரெண்டு பேரும் பஸ்ல விட்டுட்டு போனதுக்கப்புறம், செக்கிங்-ல மாட்டி நல்லா வாங்கி கட்டிட்டு, தாம்பரம் வரைக்கும் நடந்தே போனானாம். ரெண்டு நாள்-ல ராத்திரி லாரி புடிச்சி ஊருக்கு வந்துட்டான்.

ஒன்றரை வருஷத்துக்கு முன்னாடி, ஒரு பொண்ணை இழுத்துட்டு ஓடி வந்துட்டான், நான் தான் அவனுக்கு கல்யாணம் பண்ணி வெச்சேன், நம்ம வீட்டிலதான் நடந்தது. இன்னைக்கு குடும்பத்தோடு பொங்கலுக்கு வர்ரான். தோ பாரு, அவனே வந்துட்டிருக்கான்'னு சொல்லவும் பாத்தேன்.

தூரமா வந்துகிட்டிருந்தான், காலை லேசா உந்தி உந்தி. பக்கத்திலே அவன் மனைவி, கைக்குழந்தையோடு. பக்கத்திலே வந்தான். பெரிசா மீசைய முறுக்கியிருந்தான்.

என்ன பாத்ததும் சிரிச்சான். 'மாணிக்கம் என்ன தெரியுதா'ன்னேன்.

'மறக்க முடியுமான்னே, டில்லில இருக்கீங்கலாமே?அண்ணாகிட்ட உங்களை பத்தி அப்பப்போ விசாரிப்பேன்' னான்.

'ஆமாம் பெண் குழந்தையா, என்னா பேரு'ன்னேன்?

'இந்து' ன்னான்.

பின்குறிப்பு :  நிறைய மாற்றங்களுடன் கூடிய மீள் இடுகை...

இந்த இடுகை உங்களுக்கு பிடிச்சிருந்தா என்னை மேம்படுத்த உங்க கருத்துக்களையும், உற்சாகப்படுத்த ஓட்டையும் போடுங்களேன்!

படிக்காம பரீட்சை எழுதின கதை...

|

தனியா வீடு எடுத்து எம்.சி.ஏ ரெண்டாவது வருஷம் படிச்சிட்டு இருந்தோம். பி.எஸ்.சி கம்ப்யூட்டரும் அங்கதான் படிச்சோம்ங்கறதால வாத்தியாருங்க யாரையும் கண்டுக்க மாட்டோம்.

சரவணன், தென்னழகன் ரெண்டு பேரும் பி.எஸ்.சி கிளாஸ் மேட், எம்.சி.ஏ வும் எங்க கூடத்தான். பரிட்சைக்கு சரியா ஒரு வாரம் முன்னாலதான் வருவானுங்க.

தென்னழகனோட தாத்தா எம்.எல்.ஏ ங்கறதால அட்டன்டன்ஸ் ஒரு பெரிய மேட்டரே இல்ல, காசு கொடுத்து எப்படியும் சரி பண்ணிடுவான். வந்த உடனே ரெக்கார்ட் எல்லாம் ரெடிபண்ணி,ஹெச்.ஒ.டி, ப்ரின்சிபால்னு பாத்து ஃபைன் கட்டி ஹால் டிக்கெட் வாங்கிடுவானுங்க.

அதுக்கப்புறம் தினமும் த்ரூ நைட்தான். நமக்கு அதெல்லாம் ஒத்து வராது, ஆன முயற்சி பண்ணுவேன். சீட்டாடறதுன்னா மூனு நைட் கூட தூங்காம ஆடுவோம். அந்த கதையை தனியா பின்னால எழுதறேன்.

அந்த செமஸ்டருக்கும் அதே மாதிரி வந்தானுங்க. பரீட்சை எழுதிகிட்டிருந்தோம்.

எனக்கு ரெண்டு அரியர் இருந்துச்சி, அதனால ஒன்டே மேட்ச் ஆடியாக வேண்டிய சூழ்நிலை. அன்னிக்கி ரெண்டு எக்ஸாம், காலையில ஒன்னு மதியம் ஒன்னு. முடிச்சிட்டு டயர்டா வீட்டுக்கு வந்தேன்.

மத்த எல்லாருக்கும் அரியர் இல்லாத்தால காலையில மட்டும்தான் எக்ஸாம். அடுத்த நாள் ஆர்கனைசேசனல் பிகேவியர், மேனேஜ்மென்ட், கடி பேப்பர்.

ரவி ரெண்டு, சரவணன் மூனு, தென்னழகன் ஒரு யூனிட் முடிச்சிட்டேன்னு சொன்னானுங்க. நான் படிக்கல. 'பாபு (சரவணனை நான் அப்படித்தான் கூப்பிடுவேன்) என்னை பத்து மணிக்கு எழுப்புன்னுட்டு படுத்துட்டேன்.

சரியா எழுப்பினான்.தூக்கம் தூக்கமா வந்துச்சி. 'மாப்ளே என்ன பதினோரு மணிக்கு எழுப்பு'ன்னு படுத்துட்டேன். எழுப்ப பன்னண்டுக்கு எழுப்ப சொன்னேன்.

பன்னண்டு மணிக்கு எழுப்பின உடனே, நான் எதோ சொல்லப் போக, 'பிரபு என்ன பன்னண்டேகாலுக்கு எழுப்புன்னு படுத்துட்டான். அதிர்ச்சியாயிட்டேன், பதினைஞ்சி நிமிஷம் போதுமான்னு.

உட்காந்துகிட்டே ஒன்பது நிமிஷம் தூங்கிட்டேன். திரும்ப கண்ண மூட பயந்துட்டு, மாடிமேல போய் அஞ்சு நிமிஷம் ரவுண்ட் அடிச்சேன், தூங்காம இருக்க.

பன்னண்டே காலுக்கு பாபுன்னு கூப்பிட்டதுதான், சட்டுன்னு எழுந்து கண்ண கசக்கிட்டு படிக்க ஆரம்பிச்சிட்டான். என்ன மூனு மணிக்கு எழுப்ப சொல்லிட்டு படுத்துட்டேன்.

ரெண்டு மணிக்கு கண்ண முழிச்சு பாத்தா எல்லாரும் படிச்சிட்டிருந்தாங்க. மூனு மணிக்கு எழுப்பும்போது இனிமே எழுப்ப வேணாம்னு சொல்லிட்டு இழுத்து போத்திட்டு தூங்க ஆரம்பிச்சுட்டேன். அப்பப்போ முழிச்சு பாக்கும்போதெல்லாம் படிச்சுகிட்டே இருந்தானுங்க..

ஏழு மணிக்கு மோகன் ரூமுக்கு வந்தான். பி.எஸ்.சி ஒண்ணா படிச்சோம், அப்போ அவன் எம்.எஸ்.சி ஃபைனல் இயர், வேற ரூம்ல தங்கியிருந்தான்.

'என்னடா எக்ஸாமுக்கு படிச்சுட்டீங்களா? யாருடா தூங்கிகிட்டிருக்கறது?' ன்னான்.

'பிரபுதாண்டா, நைட் பூரா படிக்கவே இல்லை' பாபு அவன் பங்குக்கு போட்டு கொடுத்தான்.

நேரா வந்தவன்,பட்டக்ஸ்ல ஓங்கி ஒரு உதை விட்டு 'டேய் எழுந்திரிடா, பரிட்சைக்கு போகலையாமே' ன்னான்.

'ஆமா மோகன், படிக்கவே இல்ல' ன்னு இழுத்தேன்.

போர்வையை இழுத்து உறுவி கிடாசிட்டு, பக்கத்துல இருந்த புக்கை எடுத்து ஒவ்வொரு யூனிட்லயும் ரெண்டு கேள்வி கேட்டான்.

'லீடர்ஷிப் பத்தி தெரியுமா'? தலையாட்டினேன்.

உடனே பாபு, 'அதெல்லாம் கேக்க மாட்டாங்க, நாலு வருஷ கொஸ்டின் பேப்பர்ல இல்ல' ன்னான்.

'கொஸ்டின் பேப்பர்ல இல்லன்னா கேக்க மாட்டாங்களான்' னுட்டு, 'டேய், நம்ம பசங்கள்லயே உனக்கு நல்லா இங்கிலிஸ் நாலேட்ஜ் இருக்கு (தப்ப நினைச்சுக்காதிங்க, கான்ஃபிடன்டுக்கு சொன்னான்) நல்லா கத விடுவே'

'அதெல்லாம் இல்லடா, ஒன்னுமே படிக்கல...'

'எனக்கு தெரியாது, நீ எக்ஸமுக்கு போயிட்டு கொஸ்டின் பேப்பரையாவது வாங்கிட்டு வா, ஆனா கண்டிப்பா போகனும்' னு சொல்லிட்டு போயிட்டான்.

வேண்டா வெறுப்பா குளிச்சிட்டு மனசுக்கு பட்ட நாலு யூனிட்டுக்கு ஒன்னுன்னு நால பாத்துட்டு கிளாம்பினேன்.

என்ன நினைச்சாங்களோ தெரியல, பாபு, ரவி, தென்னழகன் மூனு பேரும் காலேஜ் போற வரைக்கும் பரிசோதனை எலி மாதிரி என்னை பாத்துட்டு வந்தானுங்க.

கண்ணை மூடி கும்பிட்டுட்டு கொஸ்டின் பேப்பரை திறந்து பாத்துட்டு நல்லா சிரிக்க ஆரம்பிச்சிட்டேன்.

ஏன்னா நான் கடைசியா படிச்சுட்டு போனதுல பார்ட் சி-ல மூனு கேட்டிருந்தாங்க. அதில்லாம ஏற்கனவே ஒன்னு தெரியும்.

திரும்பி அவனுங்கள பாத்தேன், எவன் முகத்துலயும் ஈயாடல. என்ன எப்படின்னு கேட்டானுங்க.

கையை தூக்கி காட்டி 'சூப்பர்' னு சொல்லிட்டு கிடு கிடுன்னு எழுத ஆரம்பிச்சிட்டேன். தென்னழகன் அரை மணி நேரத்துலேயே போயிட்டான்.

என் வாழ்க்கையிலேயே அதிகமான பக்கங்களை அன்னிக்குத்தான் எழுதினேன்.

ரிசல்ட் வந்துச்சி, நான் மட்டும் எழுபத்தெட்டு மார்க் எடுத்து பாஸ், மூனு பேருமே ஃபெயில்.

தென்னழகன் இப்போ சொந்தமா ஒரு காலேஜ் வெச்சிருக்கான், அவன் தான் கரெஸ்பான்டன்ட்.

'என்னடா மாப்ளே, காலேஜ்லாம் எப்படி போகுது' ன்னேன்.

'நல்லா போகுது, பயங்கர ஸ்ட்ரிக்ட். வாத்தியார், ஸ்டூடன்ட் யாராயிருந்தாலும் ஒரு நாள் லீவ் போட்டாலும், என்ன பாக்காம கிளாஸுக்கு போக முடியாது' ன்னான்.

இந்த இடுகை உங்களுக்கு பிடிச்சிருந்தா என்னை மேம்படுத்த உங்க கருத்துக்களையும், உற்சாகப்படுத்த ஓட்டையும் போடுங்களேன்!

பாதி மரத்துல நொங்கும், கைசோட்டு மீனும்......

|

இப்போல்லாம் குழந்தைங்க எங்க விளையாடறாங்க, டிவி முன்னாலயே உக்காந்திருக்காங்க. ஹோம் வொர்க், ஸ்பெஷல் கிளாஸ்னு ரொம்ப பிஸியா இருக்காங்க. ஆனா நாங்க அப்படி இல்ல, கொஞ்சம் படிச்சோம், நிறைய விளையாடினோம்.

அப்போ ரெண்டு கோஷ்டி விளையாடறதுல. சின்னவன் என்கிற வெங்கடேசன் (என் சித்தப்பா, அப்பாவோட சித்தப்பா பையன், என்னை விட 3 வயசுக்கு மூத்தது) தலைமையில, அப்புறம் பாலு(அத்தை மகன்) தலைமையில.

நான் எப்போதும் பாலு கோஷ்டியிலதான் இருப்பேன், கோட்டி, பம்பரம் விளையாடும்போது. காரணம், ஓரளவுக்கு நல்லா விளையாடுவேன், ரெண்டாவது பாலு பக்கம் யாரும் போக தயாரா இருக்க மாட்டாங்க. மத்தபடி சித்தப்பாதான் டீம் லீடர். கரெக்ட்னா கரெக்டா பேசும். பாலு அப்படி இல்ல பயங்கரமா பொய் சொல்லும்.

அதுக்கும் மேல ஒருத்தன் இருந்தான், வைத்தி. வாத்தின்னு கூப்புடுவோம். எங்க தொட்டாலும் அய்யோ அம்மா வலிக்குதே, கொல்றாங்களேன்னு கத்துவான்.

அன்னிக்கு நாங்க தியேட்டர்ல பாத்த எங்க பாட்டன் சொத்து படம் பத்தி பேசிட்டு இருந்தோம். சண்டை படம்னா ரொம்ப புடிக்கும்.

அப்போ வாத்தி, 'சின்னே, நம்பினா நம்பு, நம்பாட்டி போ, என் கைசோட்டு கெண்டை மீனை ஆத்துல பாத்தேன்' னான். எப்போவும் அந்த வார்த்தையை போட்டு தான் பேசுவான். அதிகமா நம்ப முடியாத விஷயமா இருக்கும்.

சித்தப்பா நம்பல, 'டேய் கத உடாத, ஆத்துலே தண்ணி இப்போதான் ஒரு வாரமா போகுது. அதுக்குள்ள எப்படி மீன் வரும்'னு கேட்டுட்டு 'ஆமா எங்க பாத்தே?' ன்னுச்சி.

'எங்காம்மான (அம்மா மேல சத்தியமா) மணி வீட்டு காட்டு ஓரமா ஒரு குட்டைல பாத்தேன், இப்பவே என் கூட வாங்க, காட்டலைன்னா என்ன எப்பவுமே நம்பாதிங்க' ன்னான்.

'வாத்தி, நாங்க எல்லாரும் இப்பவே வர்றோம், காட்டலைன்னா மவனே தொலைச்சுடுவேன்' னு சொல்ல எனக்கு அப்போதான் ராத்திரி பாலு அவங்க காட்டுல பனை மரத்துல நடுவில குலை போட்டிருக்குதுன்னு சொன்னது ஞாபகம் வந்தது. சித்தப்பாகிட்ட ஞாபகப்படுத்தினேன், ரெண்டையும் நேர்ல பாத்துடலாமான்னு.

'பிரபு சொல்றது சரி. மணி, பாலு எங்க இருந்தாலும் கூட்டிட்டு வா' ன்னு சொல்லிச்சு. மணி கூட்டிட்டு வந்தான். 'ஏய் பாலு ராத்திரி நீ சொன்னது உண்மைதானே?' ன்னுச்சு.

'சின்னே, நான் ஒன்னும் ரத்திரி ஒரு பேச்சு காலைல ஒரு பேச்சுன்னு பேசற ஆளு இல்ல. பாதி மரத்துல நொங்கு தொங்கிகிட்டு இருக்கு, இப்பவே வா போலாம்' னான்.

எல்லோரும் கிளம்பினோம். ஏறக்குறைய ஒரு மைல் போகனும். ஆத்துக்கு பக்கமா போகும்போதே வாத்தி, 'அதோ அங்க தான் இருக்குன்னு காட்ட ஆரம்பிச்சுட்டான்.

வேக வேகமா குட்டைகிட்ட போனோம். ஆத்தோரத்தில கொஞ்சம் தண்ணி தேங்கியிருந்துச்சி. மீன் இருக்க வாய்ப்பே இல்லை. குட்டி குட்டியா தலைப்பிறட்டை தான் இருந்துச்சி.

சித்தப்பா 'வைத்தி எங்க காட்டு பாக்கலாம்' னு சொல்ல, 'சின்ன எங்கம்மான நான் பாத்தேன். நான் பொய் சொல்லல' ன்னு ஒரு சின்ன குச்சியை எடுத்து பொந்துல குத்த ஆரம்பிச்சான்.

'தம்பி என்ன குத்தினாலும் வராது, யாருகிட்ட கதைய விடறேன்' னு பொளிச்சுன்னு வெச்சது. 'காக்கா தூக்கிகிட்டு போயிருக்கும் சின்னே' ன்னு அப்பவும் சாதிச்சான்.

'டாய் என்னை கொலைகாரன் ஆக்காத' ன்னு மறுபடியும் ஒன்னு விட்டுச்சி.

'அய்யோ அம்மா கொல்றாங்களே' ன்னு ஓடி போயிட்டான். பாலு சிரிச்சிகிட்டே இருந்தான். சித்தப்பா கேட்டுச்சி,

'பாலு அடுத்ததா உன் வண்டவாளத்தை பாக்க போறோம், ஒரு சான்ஸ் தர்றேன் உண்மையை சொல்லிடு' ன்னுச்சி.

'நான் எதுக்கு பயப்படனும், கூத்தாண்டவர் சத்தியமா உண்மை. நான் ஏன் பயப்படனும்?' திருப்பி கேட்க,

ஒரு வழியா கிட்ட போனோம். பாத்துட்டு எல்லோரும் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பிச்சிட்டோம். பனை மரத்தில் சிரை எடுத்ததால் ஒரு குலை மட்டும் அரை அடி மட்டைங்களுக்கு கீழ தொங்கிகிட்டு இருந்தது.

'பாத்தியா சின்னே, பொய் சொன்னேன்னு சொன்னீங்களே, நொங்கு பாதி மரத்துல தொங்குது' ன்னுச்சி.

'இது உனக்கு பாதியா' ன்னு கேட்க, ஆமாம்னு சாதிக்க, கடுப்பான சித்தப்பா, விரலை காட்டி இதுல எது பாதின்னு கேட்க,

பாலு நுனி விரலை புடிச்சிச்சு.

பின்குறிப்பு : மாற்றங்களுடன் கூடிய மீள் இடுகை...

இந்த இடுகை உங்களுக்கு பிடிச்சிருந்தா என்னை மேம்படுத்த உங்க கருத்துக்களையும், உற்சாகப்படுத்த ஓட்டையும் போடுங்களேன்!

அத்தை பொண்ணு, பக்கத்து ஊரு பையனின் காதல்...

|

எங்க மாமா பொண்ண ராஜேந்திரன் ரூட் விடறான்னு தெரிஞ்சது. பக்கத்து ஊரு, மருந்து கம்பனியில ரெப்பா என் ஃபிரண்டு மணி கூட வேலை பாத்துகிட்டிருந்தான். எப்போ பார்த்தாலும் பவ்வியமா பேசுவான். வணக்கம் பிரதர்னு சொல்லுவான் (சரியாத்தான்யா சொல்றாங்க).

கொஞ்சம் தயக்கமா இருந்தாலும் ஒருநாள் அவன்கிட்ட கேட்டேன், தெரிஞ்சுக்கோனும் என்கிற ஆர்வத்துல, 'ஆமா எப்படி உங்களுக்குள்ள லவ் உண்டாச்சி' ன்னு

'ரொம்ப சிம்பிள் பிரதர் உங்களுக்குத்தான் தேங்க்ஸ் சொல்லனும். உங்க ஹெல்ப்பால தான் என்னோட லவ்-வ கன்ஃபார்ம் பண்ணிக்கிட்டேன்' னான்.

அதிர்ச்சியா இருந்துச்சி. 'அடப்பாவி, என்னாலயா, எப்படி? 'ன்னேன்.

'நான் தினமும், அது ஸ்கூல் போற பஸ்ஸுல போயிட்டிருப்பேன். அப்பப்போ லுக் விடுவேன். அதுவும் பாக்கும். பஸ்ஸில போற எல்லா ஸ்கூல் பசங்க, பொண்ணுங்க பர்த் டேவும் எனக்கு தெரியும் (வலுக்கட்டாயமா கேட்டு தெரிஞ்சிக்குவேன்ங்கறத டீசன்டா சொல்றான்).

'யாருக்காவது பொறந்தா நாளுன்னா அன்னிக்கி எல்லோருக்கும் சாக்லேட் கொடுத்து ஹீரோ ஆயிடுவேன். ரெண்டு நாள் பஸ்ஸில போகாம இருந்துட்டு, பசங்களுக்குள்ள ஏன் இன்னிக்கு அண்ணன் வரலன்னு அது காது பட சொல்ல சொன்னேன்'.

'மூனாவது நாள் என்ன பாத்தா ரொம்ப மலர்ச்சியாகறதை பாத்து கன்ஃபார்ம் பண்ணிட்டேன். அடுத்த நாள் ஸ்கூல் போகும் போது ஒன்னாவது படிக்கிற ஒரு பாப்பாவுக்கு பர்த் டே. வழக்கம் போல் எல்லோருக்கும் சாக்லேட் கொடுத்தேன்'.

குட்டி பாப்பாகிட்ட 'அதுக்கு' கேட்கிற மாதிரி, 'பாப்பா என்ன உனக்கு பிடிச்சிருந்தா நாளைக்கு பச்ச கலர் பொட்டு வச்சிகிட்டு வா, இல்லன்னா சிவப்பு கலர் பொட்டு'ன்னேன். புரியாமா அது தலையை ஆட்டுச்சி'.

எனக்கு ஒரே குழப்பம், இதுல நான் எங்கடா வர்றேன்னு.

புரிஞ்சிகிட்டவன், 'வந்துட்டேன் பிரதர், ரெண்டு மாசத்துக்கு முன்னால எங்க ஊருக்கு உங்க ஃபிரண்ட் சிவா கல்யாணத்துக்கு வந்திருந்தீங்க இல்லையா?'

கொசுவர்த்திய சுத்தி 'ஆமா'ன்னேன்.

அப்போ அவசரமா, 'பிரதர் ஒரு ரெண்டு நிமிஷம் வண்டியை கொடுங்க'ன்னு உங்க பைக்க வாங்கிட்டு போனேன் ஞாபகம் இருக்கா?'

மறக்க முடியுமா அன்னிக்கு நான் பட்ட பாட்ட? தலையாட்ட,

'அதுதான் நான் சொன்னதுக்கு அடுத்த நாள். அப்போ மணி ஒம்போது பத்து. பஸ்ஸுக்கு ரெண்டு நிமிஷம்தான் இருந்துச்சி. வாங்கிட்டு வேகமா போனேன். பஸ் போயிடுச்சி.

ஹண்ட்ரட் கிலோ மீட்டருக்கு மேல விரட்டிட்டு போனேன். (அதுக்கப்புறம் வண்டி பிரச்சனை பண்ணி ஆயிரம் ரூபாய் செலவானதும், திரும்ப திரும்ப வண்டிய வேகமா ஓட்டினீங்களான்னு மெக்கானிக் கேட்டதும் ஞாபகத்துக்கு வந்தது)

பஸ் ஸ்டாப்புல நின்னவுடன் பஸ்ஸுக்கு உள்ள போயி பாத்தேன், நெத்தியில பச்ச கலர்ல பொட்டு வெச்சிருந்தது, வெக்கமா சிரிச்சது. அவ்வளோதான் லவ் ஸ்டார்ட் ஆயிடுச்சி' ன்னான்.

நம்ம ஆயிரம் ரூவாவ பொலி போட்டு லவ் கன்பார்ம் பண்ணி நல்லாத்தான் ஆரம்பிச்சிருக்கான்னு நினைச்சேன்.

அவங்க ரெண்டு பேரோட லவ் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமா வளர்ந்துகிட்டிருந்தது.

மாமா பொண்ண லவ் பண்ற 'தம்பி' வேலை பாக்குற மருந்து கம்பனி பசங்க எல்லாம் சேர்ந்து கூட்டாஞ்சோறு சமைச்சி சாப்பிட்டப்போ என்னையும் கூப்பிட்டானுங்க. மத்தவிஷயத்துக் கெல்லாம் வரல, ஆனா சாப்பிட மட்டும் கடைசியா வர்றேன்னு ஒத்துட்டேன்.

அக்கரையில தோட்டம். மஹிந்திரா வேனை ஆத்துக்கு இந்த பக்கம் நிப்பாட்டிட்டு போயிருந்தானுங்க. பைக்க நிப்பாட்டிட்டு போய் கலந்துகிட்டேன், சிக்கன்,மட்டன்னு எல்லாம் இருந்துச்சி.

எல்லாம் முடிச்சிட்டு வேன்ல உட்கர்ந்து பேசிட்டு இருந்தோம். அப்போ தூரத்துல என் மாமன் பொண்ணு காட்டுல இருந்து வந்துட்டிருந்தது.

'பிரதர், கண்ணாடியை மூடிட்டு உள்ளே இருங்க, இங்க வந்தவுடன் பேசப்போறேன், நீங்க இருக்கறிங்கன்னா பயப்படும்'னான். 'ம் விதின்னு நினைச்சுட்டு காண்ணாடியையும் சேர்த்து மூடிட்டு உட்காந்துட்டோம்.

வெளியே சுவராசியமா வண்டி பக்கத்துலயே நின்னு பேசிட்டிருந்தாங்க, ரொம்ப நேரமா.

அப்போதான் பின்னாடி ஜன்னல் வழியா கவனிச்சேன், அத்தை (பொண்ணோட அம்மா) வந்துகிட்டு இருந்துச்சி, ரொம்ப பக்கமா வந்துடுச்சி.

அய்யோ பிரச்சனை ஆயிடுமேன்னு டக்குனு கண்ணாடியை தள்ளி தலையை நீட்டி பேரை சொல்லி, 'அத்தை பக்கத்துல வந்துட்டாங்க, கிளம்புன்னேன்'.

என்னை பாத்து ஒரு துளி கூட அதிராம, 'அம்மாவுக்கு மொதல்லயே தெரியும், நீங்க ஏன் பயப்படறீங்க?'ன்னுச்சு. உள்ள நான் இருக்கறத முன்னமே சொல்லியிருப்பான் போல இருக்கு.

அப்புறம் சினிமா, அது இதுன்னு கசமுசா நடந்ததுக்கப்புறம், அவன் வேற ஸ்கூல் பொண்ண பிக்கப் பண்ண, இது நீட்டா நல்ல பொண்ணா அப்பா அம்மா சொன்ன பையனை கல்யாணம் பண்ணிட்டு செட்டில் ஆயிடுச்சி.

எனக்கு இன்னமும் கொஞ்சம் மருட்சியோட, சந்தோஷமா பச்ச பொட்டோட எதாச்சும் பொண்ண பாத்தா, பரிதாபத்தோட ஃப்ளாஸ் பேக் போயிடுவேன்.

பிரதர் இன்னமும் கல்யாணம் பண்ணிக்காம, ஸ்கூல் பொண்ணுங்களை பாத்துக்கிட்டிருக்காரு வயசு முப்பத்தைஞ்சி ஆனாலும்...

இந்த இடுகை உங்களுக்கு பிடிச்சிருந்தா என்னை மேம்படுத்த உங்க கருத்துக்களையும், உற்சாகப்படுத்த ஓட்டையும் போடுங்களேன்!

தாய்மை - கவிதை...

|

- பிரபாகர் ராமசாமி

ஒரு துளி உயிரை
உணர்வோடு வாங்கி
கருவறை காத்து
கடினங்கள் தாங்கி

பொறுமையை போற்றி
பசி தூக்கம் மறந்து
உருகொண்டு வெளியில்
உணர்வாகும் வரையில்

கண்ணெனக் காத்து

கருத்தாய் போற்றி
பண்களை பாடி
பாசத்தை ஊட்டி

தென்படும் பொருளை
தெளிவுடன் விளக்கி
மனதினிற் பதித்து
மறவாமல் செய்து

வேளைக்கு ஓன்றாய்
ஆடைகள் பூட்டி
அழகினில் பூரித்து
ஆனந்தம் கொண்டு

நாழியும் அயராமல்
நினைவாய் இருந்து
பாலினைப் புகட்டி

பாதியாய் இளைத்து

தடுப்பு மருந்துகள்
தவறாது கொடுத்து
நடப்பு நிகழ்வினில்
நாட்டத்தை குறைத்து

அடம் பிடித்தழுதால்
ஆறுதல் சொல்லி
கடமையில் மட்டும்
கவனம் செலுத்தி

நல்லமுது சேர்த்து
நற்கதைகள் புகட்டி
கல்வியின் சிறப்பை
கருத்தாய் உணர்த்தி

பள்ளிக்கு அனுப்பி
பாடத்தைப் பயிற்று

நல்லோர் போதித்த
நல்லவை நல்கி

தந்தையவர் கோபமுடன்
தவறுக்காக திட்டிட
சிந்தைமாறி சினந்து
சோர்ந்து கிடக்கையில்

மந்திர வார்த்தையோடு
மருந்திட்டு மனக்காயம்
வந்த தடம் தெரியாமல்
வலி போகச் செய்து

விடலை பருவத்தில்
உண்டான மாற்றங்களை
கூடவே கவனித்து
குட்டி சரிசெய்து

கடமையினை நினைவூட்டி
கல்வியினில் மனம்திருப்பி
மடமையினை நீக்கி
மகத்தான வழிசெலுத்தி

வேலையில்லை என்று
வாட்டமொடு இருந்தன்று
வேளைவரும் உனக்கென்று
வாஞ்ஜையாய் பேசி

ஆலயங்கள் சென்று
ஆண்டவனை தொழுது
வேலையது கைசேர
வேண்டுதல்கள் புரிந்து

திருமண வயதில்
துணையினை தேடி
இருமனம் இணைத்து
இல்லறம் நுழைத்து

பெற்றிட்ட பிள்ளைகளை
பெரிதும் நினைத்து
பெருமையாய் பிள்ளை
புகழ் பிறரிடம் சொல்லி

பிள்ளைக்காக வாழுகின்ற
புனிதமான தாய்மைக்கு
தலை தாழ்ந்து வணங்கி
திருவடிகள் போற்றி

மேலும்பல பிறவியிலும்
மகனாகப் பிறந்திடவே

ஞாலமாளும் இறையவனை
வணங்கி வேண்டுகிறேன்...

பாசமுடன்
மகன்...

ஆட்டுமேல காரு விட்ட கதை

|


நம்ம பிளாக்குக்கு பல விஷயங்கள தந்து உதவறது நம்ம தம்பி திவாகர்தான். எந்த ஒரு விஷயத்தையும் ரொம்ப சுவராஸ்யமா சொல்லுவான்.

"
சேவல் தகராறும் நாம ஹீரோ ஆன கதையும்..." பத்தி அவன்கிட்ட சொன்னதுக்கு, அருமையா இருக்கு, உனக்கு ஆட்டுமேல காரு விட்ட கதை தெரியுமா' ன்னான்.

ஆர்வமா 'சொல்லுடா' ன்னு கேட்டதுக்கு அவன் சொன்னது அப்படியே கீழ...

'உனக்கு பாண்டி தெரியும்ல, நம்ம தறியில வேல செய்யிறானே, அவங்க அப்பன் பண்ணின கூத்துதான் இது.

ஒரு பத்து வருஷத்துக்கு முன்னால விடியகாலம், ஆடுங்கள ஓட்டிட்டு காட்டுக்கு போயிட்டிருந்தாப்ள. அப்போ வேகமா பின்னால வந்த காரு ஓரமா போன ஒரு ஆட்டுல மோதிடுச்சி, ரெண்டு காலும் போயிடுச்சி, வலியால கத்துது. அதவிட பெருசா பாண்டி அப்பன். 'ஐயோ ஏன், பொண்ணு, பொண்ணு' ன்னு.

எல்லாம் பதறி பாத்தப்போதான் ஆடுன்னு தெரிஞ்சுச்சி. 'அட மடையா, ஆட்ட போயி பொண்ணுன்னு... பதறிட்டோம்' னு ஒரு பெருசு சொல்லுச்சி.

அந்த நேரத்துலையே நல்லா கூட்டமா இருக்கிற டீக்கடைக்கு பக்கத்துலையே நடந்ததால சட்டுன்னு கூட்டம் கூடிடுச்சி.

'பொண்ணு மாதிரி வளர்த்தேனே, இப்படி ஆயிடுச்சே, நான் என்ன பண்ணுவேன்!' னு இன்னும் சத்தமா கத்த ஆரம்பிச்சாரு.

'கார்ல யாருய்யா? இறங்கி வெளிய வா' ன்னு ஒரு இளவட்டம் கத்த டிரைவரும், பின்னால இருந்து ஒரு பெரியவரும் இறங்கி வந்தாங்க.

டிரைவர அடிக்க ஒரு இளசு பாய, 'பொறுப்பா, அவரசப்படாத' ன்னு சொல்லி சமாதானப்படுத்தினாங்க.

'ஏன் மேல தப்பு இல்லங்க, ஆடு சட்டுன்னு குறுக்க வந்துருச்சி' டிரைவர் சொல்ல, 'ஆமாங்க ஆடுதான் திடீர்னு வந்துடுச்சி'...ன்னு அந்த பெரியவர் பதட்டமா சொன்னாரு.

'அதெல்லாம் தெரியாது ஊருக்குள்ள வரும்போது பாத்து வர வேணாமா? ' ஒரு பெருசு சொல்ல,

அந்த பெரியவர் 'மன்னிச்சுக்கோங்க, அவசரமா போயிகிட்டிருக்கோம், கல்யாணம். பொண்ணு மாப்பிள்ளை உட்காந்திருக்காங்க. ஆட்டுக்கு எவ்வளோ சொல்லுங்க. கொடுத்துட்டு போறோம்' னு சொன்னாரு.

'சரிப்பா, கல்யாணம் அது இதுன்னு சொல்றாங்க. காசு என்னவோ வாங்கிட்டு விடுங்க, போகட்டும்' னு ஒரு பெருசு சொல்லுச்சி.

'சரி சரி, நூறோ எரநூறோ கேட்டு வாங்கிட்டு உடுங்கப்பா...' இன்னொரு பெருசும் கூட சொல்லுச்சி.

'அதெல்லாம் முடியாது மூவாயிரம் வேணும்' னு பாண்டியோட அப்பா கேக்க, எல்லாருமே ஆடிப்போயிட்டோம்.

என்ன சொன்னாலும் அவரு ஒத்துக்கவே இல்ல, 'என் பொண்ணு மாதிரி வளத்தேன்' னு திரும்ப திரும்ப சொல்லிட்டிருந்தாரு, கடைசியா ரெண்டாயிரத்த வாங்கிட்டுத்தான் கார உட்டாருன்னே பாத்துக்கோவேன்' னு முடிச்சான்.

'சரி அந்த ஆடு?' ன்னு கேட்டேன்.

'வெட்டி கூறு போட்டு வித்துட்டாங்க காரு போன உடனே' ன்னு சொன்னான்.

'என்னடா அநியாயமா இருக்கு, இப்ப கேக்கும்போதே பகீர்னு இருக்கு, இப்படியும் இருப்பாங்களா?'

'அதெல்லாம் இருக்கட்டும், முழுசாக் கேளு, இப்ப பாண்டியோட அக்கா வரதட்சண பிரச்சினையில வாழா வெட்டியா இருக்கு' ன்னான்.


இந்த இடுகை உங்களுக்கு பிடிச்சிருந்தா என்னை மேம்படுத்த உங்க கருத்துக்களையும், உற்சாகப்படுத்த ஓட்டையும் போடுங்களேன்!

பிடிச்ச, பிடிக்காதவங்க யாரு?

|

அழைத்த என் அன்பு கதிருக்கு நன்றிகள்.

இத் தொடர் இடுகையின் விதிகள்: 

1. நம் பிடித்தவர், பிடிக்காதவர் பட்டியலில் வருபவர் தமிழகத்தைச் சார்ந்த, பிரபலமாக (பிராபளமாகக்கூட) இருக்க வேண்டும்

2. இதைத் தொடர இரண்டு முதல் ஐந்து பதிவர்களை அழைக்க வேண்டும்

3. ஏழு முதல் பத்துக் கேள்விகள் கண்டிப்பாக இருக்க வேண்டும்.

அரசியல்வாதி

பிடித்தவர் : கல்விக் கண்திறந்த கடவுள்.

பிடிக்காதவர் : தமிழினத்தின் முகவரி என சொல்லிக்கொள்பவர்.

எழுத்தாளர்

பிடித்தவர் : விஞ்ஞானத்தை எளிமையாய் அளித்த ரங்கநாதர்.

பிடிக்காதவர் : விரசத்தால் வெறுப்பேற்றும் சார்ந்தவர்.

கவிஞர்

பிடித்தவர் : கவிஞர் எனும் சொல்லுக்கு உண்மையில் பொருத்தமானவர், அர்த்தமானவர்.

பிடிக்காதவர் : கவிப்பேரரசு என சொல்லிகொல்லுபவர்.

இயக்குனர்

பிடித்தவர் : பா வரிசையில் படங்களை எடுத்து அசத்தியவர், எடிட்டரின் தந்தை.

பிடிக்காதவர் : பன்ச் டயாலாக்கோடு ஊரைக்கெடுக்கும் அரசர்(ன்).

நடிகர்

பிடித்தவர் : நடிகராயிருந்தும் சிறிதும் நடிக்க தெரியாதவர், வாழ்வில்.

பிடிக்காதவர் : நாகரிகம் தெரியாத பத்ம விருதை சிபாரிசிலும் பணத்தாலும் பெற்ற விவேகமில்லாதவர்.

நடிகை

பிடித்தவர் : போதையால் மரணத்தை தழுவினும், நடிப்பில் திலகமாய் ஜொலித்தவர்.

பிடிக்காதவர் : போதையேற்றுகிறேன் என கண்றாவி கவர்ச்சியை நமக்கு தருபவர்.

இசையமைப்பாளர்

பிடித்தவர் : தேவ ராகங்களை அளித்தவர்.

பிடிக்காதவர் : தேவையில்லாத இடங்களுக்கும், தொடர்ச்சியாய் ஒரே மாதிரியான இசையால் தொல்லையளித்த ராஜகுமாரன்.

மாவட்ட ஆட்சியர்

பிடித்தவர் : சமுதாய நோக்கோடு பல செயல்களை செய்தும், கருத்துக்களை சொன்ன இறையில் அன்பானவர்.

பிடிக்காதவர் : ஆசிட் வாங்கி, அடித்தவரோடு சமரசம் செய்துகொண்டவர்.

பேச்சாளர் 

பிடித்தவர் : தினமும் ஒரு தகவல்களை சொல்லி சமீபத்தில் சாமியானவர்.

பிடிக்காதவர் : தெறித்து ஓடுமளவுக்கு அடுக்கு மொழிகளை பேசி பீதி கிளப்பும் தாடியுடையவர்.

விஞ்ஞானி

பிடித்தவர் : கனவுகானச்சொல்லி இளைஞர்களால் சலாம் போடப்படுபவர்.

பிடிக்காதவர் : கோவிலில் சென்று எடைக்கு எடை காணிக்கை செலுத்தியவர்.

அழைக்க விரும்புவது

1. டக்ளசு என அறியப்பட்ட அன்பு தம்பி ராஜு 

2. ஏதோ ஒரு பதிவில் பில்டப் அதிகமா இருக்கே என நக்கலடித்த நாஞ்சில் பிரதாப்.

இந்த இடுகை உங்களுக்கு பிடிச்சிருந்தா என்னை மேம்படுத்த உங்க கருத்துக்களையும், உற்சாகப்படுத்த ஓட்டையும் போடுங்களேன்!

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB