ஹலோ, நான் ராஜா பேசறேன்... அனுபவம்

|

தொண்ணூறாவது வருஷம், பி.எஸ்.சி ரெண்டாவது வருஷம் ஸ்டடி லீவ். ரூம்ல படிக்க முடியாதுன்னு வீட்டுக்கு வந்துட்டேன்.

ஆற்காடு வீராசாமி அப்போ மின் அமைச்சரால்லாம் இல்லை, இருந்தாலும் கடுமையான மின்வெட்டு. கடுப்பில வீட்டுல உக்காந்திருந்தேன்.

தம்பி, தங்கச்சி ஸ்கூலுக்கு அம்மா அப்பா வேலைக்கு போயாச்சி. போகும்போது அம்மா, 'பிரபு வீட்டில இருக்காத, போர் அடிக்கும், புக்க எடுத்துகிட்டு காட்டு பக்கம் போயிட்டு ரிலாக்ஸா படிச்சிட்டு வா' ன்னு சொல்லிட்டு போனாங்க.

ஏன் சொன்னாங்கன்னு கொஞ்ச நேரத்துல புரிய ஆரம்பிச்சிடுச்சி. அப்போ அதிகமா, ஏன் தெருவிலேயே எங்க வீட்டுல தான் போன் இருந்துச்சி. தகவல் சொல்றதுக்கும், ஆள கூப்பிட்டு வர்றதுக்கும் ரெண்டுபேர் எப்பவும் தேவைப்படும்னு அம்மா சொல்லிடிருப்பாங்க.

மணியடிக்க, ஓடிப்போய் எடுத்தேன். ஹலோ சொன்னவுடன், 'கொஞ்சம் ராஜாவா கூப்பிடறீங்களா?' ன்னு கேக்கவும், 'அப்படி யாரும் இல்லைங்களே?' ன்னு பதில் சொன்னேன். 'அப்படியே கட் பண்ணாம வெச்சிட்டு வெளிய போயி பாருங்களேன், ப்ளீஸ்...' னு பணிவா கேக்கவும்,

வெச்சிட்டு வெளிய தலைய நீட்டி பாக்கவும், தெரு முனையில டிராக்டற கழட்டிப்போட்டு ரிப்பேர் பாத்துகிட்டிருந்தாங்க.

என் தலைய பாத்தவுடனே ஒரு பொடியன், 'அண்ணா எனக்கு போனா? இதோ வர்றேன்னு வேகமா ஒடி வந்தான். 'உன் பேர் ராஜாவா' ன்னு கேக்க, தலையாட்டிட்டு செருப்ப கழட்டிட்டு நேரா உள்ள போனான்.

ஹால்ல இருந்தே போனை எடுத்து, 'சொல்லுங்க ஓனர், ம்... ஆயிட்டிருக்கு. மதியத்துக்குள்ள ஆயிடும். ஒரு டீ கூட வாங்கி தரல... கஞ்சனா இருப்பான் போலிருக்கு. ம்... சேரி. டேபிள் மேலேயே வெச்சிருக்கேன். ஆத்துருக்கு ரவிய அனுப்பிடுங்க. ம்...ம்.... கதிரேசு போன் பண்ணினாரு. ரெண்டு நாலாவும்னு சொல்லிட்டேன். அப்புறம் என் மேட்டர மறந்துடாதீங்க.... ' 

பத்து நிமிஷம் பேசிட்டு 'சரிங்க ஓனர் சொல்லிடறேன்' னு சொல்லிட்டு,  'அண்ணா ரொம்ப டேங்க்ஸ்... ஓனரும் சொல்ல சொன்னார்' னு சொல்லிட்டு கிளம்ப,

'தம்பி நீ யாரு, என் வீட்டு போன் நம்பர் எப்படி தெரியும், வெளிய பாத்தவுடன் உனக்குத்தான் போன் னு எப்படி கண்டுபிடிச்ச?'  

'தினேஷ் வீட்டு டிராக்டர் ரிப்பேர் பாக்க வந்திருக்கேன், அவருகிட்ட கேட்டப்போ உங்க வீட்டு நம்பர கொடுத்தாரு. கடையில கிளிகிட்ட (இந்த பொடியனோட அசிஸ்டன்ட்) நம்பர கொடுத்து ஓனர் வந்த பேச சொல்லிட்டு வந்தேன். வர்ற நேரம், உங்க வீட்டு வாசலையே பாத்துகிட்டிடுந்தேன், வெளிய வந்தீங்க... அதான்'  

'தினேஷ் வீட்டிலேயே போன் இருக்கே, நீ வேலை பாக்கற இடத்துக்கு அவன் வீடுதானே பக்கம், எங்க நம்பர ஏன் கொடுத்தான்?' னு கேக்க,

'அப்படியா, அவங்க வீட்டுல போனே இல்லன்னு சொல்லித்தானே உங்க நம்பர கொடுத்தாப்ல?, ம்ஹூம்... அப்படியா மேட்டரு, தாளிச்சிட வேண்டியதுதான்' னு சொல்லிட்டு, திரும்பவும் தேங்க்ஸ் சொல்லிட்டு பையன் போயிட்டான்.

தலையில சுர்ருன்னு ஏறுச்சி. அப்போ தினேஷ் பைக்ல வர நிப்பாட்டி, 'எப்பன்னா வந்தீங்க, நல்லாருக்கீங்களா' ன்னு கேக்க பதில் சொல்லிட்டு, பையன் வந்து போன் பண்ணிட்டு போன மேட்டர சொல்லி, 

'உங்க வீட்டுல போன் ரிப்பேரா? இல்லன்னு சொன்னியாமே?' ன்னு கேக்க,  

'வேலை செஞ்சிட்டுத்தான் இருக்கு. யாருக்கும் நம்பர் தர்றதில்ல, எதுக்கு தொந்தரவுன்னு' ன்னு சொல்லிட்டு வண்டிய கிளப்பிட்டு போயிட்டான்.

இந்த இடுகை உங்களுக்கு பிடிச்சிருந்தா என்னை மேம்படுத்த உங்க கருத்துக்களையும், உற்சாகப்படுத்த ஓட்டையும் போடுங்களேன்!

இளமைக்கால நினைவுகள்... - கவிதை

|


விகடன் முகப்பிலும் யூத்புல் விகடனிலும் வெளியான கவிதை...

பிறந்திட்ட நாள் முதல்
பெற்றோரின் அரவணைப்பில்
இருந்திட்ட நாள் தவிர்த்து
பறந்திட்ட நாட்கள் முதல்

மறந்திட்ட விஷயம் நீங்கி
மனதினில் பசுமையாய்
இருந்தினிக்கும் நினைவுகள்
இறுதிவரை பல உண்டு.

வேலியோர ஓணானை
வேகமாய்க் கல்வீசி
பாலூற்றிப் புதைத்துப் பின்
பணம் தேடிப் பார்த்ததுண்டு.

காலிப் பயல்களோடு
கண்டபடி சுற்றியதால்
கோலெடுத்து தந்தையவர்
கோலங்கள் போட்டதுண்டு.

நுனாப்பழம் புசித்துவிட்டு
நாவெல்லாம் கருப்பாக்கி
வீணாய் பயந்ததுண்டு
வெளியாகும் மறு நாளில்.

ஓர் கிணறு விடாமல்
ஓயாமல் நண்பரொடு
இருவிழியும் சிவந்திட
இருளும்வரை நீராடி

நேரமிக வானதினால்
நெஞ்சமது பட படக்க
விரைந்து வீடுநோக்கி 
விசனமாய் செல்கையில்

தெருவிலெனை தாயவளும்
தவிப்புடனே தேடியதை
பொறுப்புடனே சொல்லிட்டு
புளிகரைப்பர் அடிவயிற்றில்.

பொறுமை தனை இழந்து
பொங்கிவரும் கோபமுடன்
வருகையை எதிர்பார்த்து
வாசலிலே இருந்தாலும்

புறவழியே திருடன்போல்
புகுந்தே தெரியாமல்
சோறெடுத்து பசியாற
சீக்கிரமாய் உள்தள்ள

கூரிய செவியதனில்
கேட்டிட்ட சிற்றொலியில்
காரியம் உணர்ந்திட்டு
கையில் தடி மறைத்திட்டு

சிரிப்போடு சளிக்காமல்
சாப்பிட காத்திருந்து
வரிந்திடுவாள் வைதிடுவாள்
விழி நீரை வெளியேற்றி.

வீட்டிலுள்ள பொருள் சிறிது
வீதமாய் சேர்த்தெடுத்து
கூட்டாஞ் சோறாக்கி
கூட்டாளி பசங்களோடு

சுட்டெடுத்த மீனோடு
சூட்டோடு ரசித்து 
கூட்டமாய் களிப்புடன்
கூடி தின்றதுண்டு.

எருமை மாட்டின் மேலேறி
எமதர்ம ராசன்போல்
விரட்டி மணலாற்றில்
விழுந்து புறண்டிட்டு

ஆற்றோர கரையினிலே
அடர்ந்திருக்கும் நாணலதில்
காற்று புக துளை செய்து
கானம் பாட முயன்றதுண்டு.

காவலது மிகுந்திருந்தும்
காய்த்திருக்கும் மாமரத்தில்
கவண்கொண்டு கல்லெறிந்து
கிடப்பவற்றை பொறுக்கி

சவாரி குதிரை போல
சட்டென பறந்து சென்று
லாவகமாய் உடைத்ததனை
பொடி தூவி சென்றதுண்டு.

பொன்வண்டு பிடித்து தீப்
பெட்டியினில் போட்டு
நண்பர்கள் மத்தியினில்
வித்தைகள் காட்டி

தின்பதற்கு தழைபோட்டு
தினம்தோறும் கவனிக்க
கண்டெடுத்த தாயவளும்
காணாமல் செய்ததுண்டு.

பாட புத்தகத்தில்
பக்கத்துக்கு ஒன்றாய்
ஒடித்து மயிலிறகை
ஒப்புறவாய் வைத்திட்டு

குட்டி போடும் என்றெண்ணி
காலை மாலை இருமுறையும்
தொட்டெடுத்து மெதுவாய்
திறந்து பார்த்ததுண்டு.

அதிகாலை குளிரினில்
அனல் மூட்டி அமர்ந்திருக்கும்
தாத்தாவின் அருகில் போய் 
தனல் நோகா தொலைவினில்

ஆதரவாய் அரவணைப்பில்
அமர்ந்தவண்ணம் கதையோடு
போதித்த அறிவுறைகள்
பொறுமையாய் கேட்டதுண்டு.

கவலையே இல்லாமல்
கள்ளமில்லா நெஞ்சமுடன்
பவனி வந்த நாட்கள் மீண்டும்
பூவுலகில் கிடைத்திடுமா

சுவடுகளை திரும்பப் பார்த்து
சிந்தை பின்னே சென்றாலும்
நவீன காலம் தான் 
நடப்பதற்கு வழியில்லை...

ஞாபகங்களுடன்,
பிரபாகர்.

இந்த இடுகை உங்களுக்கு பிடிச்சிருந்தா என்னை மேம்படுத்த உங்க கருத்துக்களையும், உற்சாகப்படுத்த ஓட்டையும் போடுங்களேன்!

எங்க அப்பனுக்கு அறிவே இல்ல - கிராமத்து (அ) நியாயங்கள் - 3..

|


ஊருக்கு போயிருந்தப்போ அப்பாகிட்ட பேசிட்டு இருந்தேன். வீட்டு வேலை நடந்துகிட்டு இருந்துச்சி. நிறைய பசங்க வேலை செஞ்சிகிட்டு இருந்தாங்க.

அப்பா ஒரு பையனை பாத்து 'தம்பி உன் பேரு என்ன? யாரோட மவன்' னாரு.

'குமாரு, வீரமுத்து மவன்'னான்.

'யாரு, கடுக்காப்புளி வீரமுத்துவா' ன்னாரு.

தலையாட்டினான். அவன் அப்பாவோட பட்டப்பேரு போலிருக்கு.

'அதான் ஜாடை தெரியுது. உங்க அப்பங்கிட்ட என் பேர சொல்லு, நீ இங்க நிக்கறதுக்கே நான் தான் காரணம்'னு சொல்லிட்டு, 'இருபது வருஷத்துக்கு முன்னால'ன்னு ஆரம்பிச்சாரு.

'இவனோட அப்பா ஒரு பொண்ணோட பழகிட்டு இருந்தான், அந்த பொண்ணு கர்ப்பமாயிடுச்சி ஆனா கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னுட்டான், கேட்டதுக்கு புடிக்கலையாம். என்கூட படுத்தமாதிரி தானே இன்னொருத்தன் கூடவும்னு சொன்னான்'.

'அந்த பொண்ணு அவனை கல்யாணம் பண்ணலைன்னா அப்பவே சாவறதுக்கு தயாரா இருந்துச்சி, அந்த பொண்ணுக்கு அவ்வளோ உசிரு. மிரட்டியும் பாத்தோம், 'சாட்சி இருக்கா, என்ன ஆதாரம் அந்த பொண்ணை நான் கெடுத்தேங்கறதுக்கு' ன்னான்.

'சரிப்பா ஆதாரமில்லாம யாரும் அவன் மேல பழி போடாதிங்க' ன்னு பஞ்சாயத்தை கலைச்சிட்டு, அந்த பொண்ண தனியா கூப்பிட்டு ஒரு விஷயத்த சொன்னோம்.

ஒரு வாரம் ஏதும் நடக்காதமாதிரி எல்லோரும் கம்முனு இருந்தோம். ஒருநாள் சாயங்காலம பெருசுங்க ரெண்டு பேர விட்டு அவனுக்கு பலான பலான கதையெல்லாம் சொல்லி ஆள ஒரு மாதிரியா ஆக்க சொன்னோம்.

நினைச்ச மாதிரியே ஆளு மந்திரிச்சிவிட்ட கோழி மாதிரி அந்த பொண்ணு வீட்டு பக்கம் சுத்த ஆரம்பிச்சுட்டான். நல்லா குளிச்சி மல்லிகைப்பூவெல்லாம் வெச்சுட்டு ஏற்கனவே சொல்லி வெச்ச மாதிரி கும்முனு இருந்துச்சி.

வழக்கமான சிக்னல், அவன் அந்த பொண்ண அவிரித்தொட்டி கிட்ட வரச் சொன்னதா பொண்ணு மூலமா தகவல் வந்துச்சி. நாங்க ஒரு பத்துபேர் மறைவா போய் உக்கந்துட்டோம்.

சரியா எட்டு மணி வாக்குல அந்த பொண்ணு அங்க வர, பின்னாடியே மோப்பம் புடிச்சிகிட்டு வந்தான். கிட்ட போயி கட்டிபுடிக்கும்போது நாங்க எல்லாம் அங்க போயி என்னப்பா சாட்சி தானே கேட்ட, எத்தனை சாட்சி பாருன்னு சொல்லி ரெண்டு பேரையும் ஒன்னா சேத்து விளக்கு கம்பத்துல கட்டி போட்டுட்டோம்.

தலைய தொங்கபோட்டுகிட்டே விடியற வரைக்கும் இருந்தான். அந்த பொண்ணு ரொம்ப சந்தோஷமா வெளிய காட்டிக்காம இருந்துச்சி. நேரா உள்ளுர் கடையிலேயே செட்டியாரை நடு ராத்திரியில எழுப்பி வேட்டி, சட்டை, புடவை எல்லம் எதுத்து விடியறதுக்குள்ள தெச்சி ரெடி பண்ணிட்டு ஒன்பது மணி வாக்குல நேரா ரெஜிஸ்டர் ஆபிஸுக்கு கூட்டிட்டு போனோம்.

கல்யாணத்துக்கு கொஞ்ச நேரத்துக்கு முன்னால இந்தா ஒன்னுக்கு வுட்டுட்டு வர்ரேன்னு உட்டான் சவாரி, ஆளு எஸ்கேப். சைக்கிள்ல அவன் வழக்கமா போற இடத்துக்கெல்லாம் ஆளுங்கள அனுப்பி தயரா இருக்க ரெண்டே மணி நேரத்துல சிக்கிட்டான்.

அப்புறம் கல்யாணம் முடிஞ்சி இதோ கல்யாணம் பண்ணிக்கிற மாதிரி பையனே இப்ப இருக்கான்' னு முடிச்சிட்டு, 'இந்த கதை உனக்கு தெரியுமா' ன்னு குமார கேட்டாரு.

தெரியாதுன்னு தலையாட்டிட்டு, 'எங்க அப்பனுக்கு அறிவே இல்ல. நாலு மாசத்துக்கு முன்னால வெளியூர்ல கொத்து வேலைக்கு பொயிருந்தப்போ இதே மாதிரி எனக்கும் ஆயிடுச்சி'.

'அந்த பொண்ணு என்னை தனியா வர சொல்லிச்சு. ஏதோ பிளான்னு நினைச்சிட்டு அத ஒருதலையா பாத்துகிட்டிருந்த ஒரு தறுதலைய உன்னை தனியா பாக்க கூப்பிடுதுன்னு சொல்லிட்டு நான் எஸ்கேப் ஆயிட்டேன், அவன் கல்யாணம் பண்ணிட்டான் நான் தப்பிச்சுட்டேன்' னான்.

பின்குறிப்பு.

மாற்றங்களுடன் கூடிய மீள் இடுகை.

இந்த இடுகை உங்களுக்கு பிடிச்சிருந்தா என்னை மேம்படுத்த உங்க கருத்துக்களையும், உற்சாகப்படுத்த ஓட்டையும் போடுங்களேன்!

ரமேஷ் மற்றும் வித்யாவின் காதல்...

|

ரமேஷுக்கு தலை கால் புரியாமல் இருந்தான். சும்மாவா, நான்கு மாதமாய் உருகி உருகி காதலித்த வித்யா காதலுக்கு ஓகே சொன்னது மட்டுமல்லாமல் மனம் விட்டு பேசுவதற்கு மாலை கடற்கரைக்கும் வரச் சொல்லியிருக்கிறாள்.

அடிக்கடி கிள்ளிப் பார்த்துக்கொண்டான். நல்லவேளை பெரிதாய் ஏதும் வேலை இல்லை. புது ப்ராஜெக்ட் விஷயமாய் படிக்க மட்டும் சொல்லியிருந்தார்கள். கம்ப்யூட்டர், கையில், மொபைலில், சுவற்றில் என பலவாறு நேரத்தை தவிப்போடு பார்த்துக்கொண்டிருந்தான்.

கடற்கரை, கூட்டம் வர ஆரம்பித்த மாலை நேரம். மிக அழகாய் வித்யா, அவளைப்பார்த்தவண்ணம் ரமேஷ்.

'தேங்க்ஸ் வித்யா, பேச்சே வரலை, தேங்க்ஸ்.... தேங்க் யூ சோ மச்'... என நிறைய 'தேன்க்'க ஆகா பரவாயில்லை அருமையான காதல் ஜோடி என நீங்கள் நினைப்பது தெரிகிறது. நானும்தான் நினைத்தேன்,  அடுத்து நடந்த உரையாடல்களை கேட்கும் வரை. 

'உங்களுக்கு பிடித்த நடிகை யார்?', முதலில் அவள் ஆரம்பிக்க பதிலுக்கு அவன் 'லேடிஸ் ஃபர்ஸ்ட், உனக்கு பிடித்த நடிகரை நீ முதல்ல சொல்லு' என்று கேட்டான்.

'எனக்கு சூர்யான்ன உயிரு. ஹி இஸ் ஹேண்ட்சம், ஃபர்ஸ்ட் சிக்ஸ் பேக் ஆக்டர் சவுத் இந்தியாவில இருந்து... அவரோட ஸ்டைலு, ஆக்டிங், ஃபைட், வாவ் ஆவ்சம். அவரு கல்யாணம் பண்ணிகிட்ட அன்னிக்கு நான் எப்படி அழுதேன் தெரியுமா? ரெண்டு நாள் சாப்பிடவே இல்ல. அவரைப் பத்தின எல்லா விவரமும் துல்லியமா தெரியும். ஜோதிகாவ எனக்கு ரொம்ப பிடிக்கும், சூர்யாவ கல்யாணம் பண்ற வரைக்கும். நவ் ஐ ஹேட் ஹெர்'

'வெயிட், வெயிட்... நடிகர பிடிக்கலாம் ஆனா இந்த அளவுக்கா'

'ஆமாங்க, தப்பா நினைச்சிக்காதீங்க... சூர்யாவுக்காக நான் எதையும் விட்டுக்கொடுக்க மாட்டேன். உங்கள கூட எனக்கு பிடிச்சதுக்கு காரணம், சூர்யாவோட சாயல் லேசா இருக்கு'

'ஓ..., என்ன பிடிச்சதுக்கு அதான் காரணமா? சரி அதுக்கு ஏன் நாலு மாசம் எடுத்துகிட்ட?'

'உங்களோட வேலை பத்துன விவரங்கள், வசதி வாய்ப்புன்னு எல்லா விவரமும் எனக்கு தெளிவா தெரியிற வரைக்கும் காத்திருந்தேன், தெரிஞ்சது, ஓகே சொல்லிட்டேன்... சரி உங்களுக்கு பிடிச்ச நடிகை'

'நீதான், தேங்க்ஸ்... பை' எனச் சொல்லி எழுந்து மணலை வெறுப்பாய் தட்டிவிட்டுக்கொண்டு ஊசி குத்திய பலூன் போல உற்சாகமின்றி நடந்தான்.

இந்த முடிவு பிடிக்கவில்லை என்றால் இன்னொன்று கீழே. படித்து உங்களின் கருத்தை பின்னூட்டுங்களேன்...

அவன் சென்றதும் கொஞ்சம் தொலைவிலிருந்த அவளின் தோழிகள் அவளருகே வர, 'இல்லப்பா ஒத்து வராது. ஆளு ரொம்ப பொசசிவ், முன் கோபம் ஜாஸ்தின்னு சொன்னாங்க. டெஸ்ட் பண்ண ஒரு சின்ன பொய், ஆளு கழண்டுகிட்டாச்சு'இந்த இடுகை உங்களுக்கு பிடிச்சிருந்தா என்னை மேம்படுத்த உங்க கருத்துக்களையும், உற்சாகப்படுத்த ஓட்டையும் போடுங்களேன்! 

எனக்கு பிடித்த இடுகையாளர்கள்...

|


எனது பார்வையில் இடுகையாளர்களைப் பற்றி எழுதியிருக்கிறேன். ஏதேனும் தவறென்றால் மன்னித்து, சுட்டுங்கள், என்னை மேம்படுத்துங்கள்.


சமுதாய சிந்தனைகளோடு எழுதுபவர்கள்:

கதிர் - இவரின் எழுத்துக்களின் வீரியம், நடை, சமுதாய சாடல்கள், கவிதையில் கையாளும் உத்திகள்... என சொல்லிக்கொண்டே போகலாம். ஒன்றிரண்டு மொக்கை பதிவுகள் தவிர எல்லாம் பொக்கிஷம் என்பேன்.

வானம்பாடிகள் அய்யா - பாமரன் பக்கங்களில் வீறுநடை போட்டு வருபவர். இவரின் கவிதைகளுக்கும் கருத்துச் சாடல்களுக்கும் நான் அடிமை. இவரின் எழுத்துக்களில் தான் எத்தனை இளமை... காதலின் கவிதைகளில் இவரின் வர்ணித்தலை பார்த்தால் இருபது வயதோரும் இவரை போட்டியாய் எண்ணுவார்கள். எழுத்துக்களிலோ அனுபவ முதிர்ச்சி. சொல்லிக்கொண்டே போகலாம்.

பழமைபேசி - சராசரியாய் நாளுக்கொன்றென ஐந்நூறுக்கும் மேல் இடுகையிட்டு அசத்தி வருபவர். இவரின் இடுகைகள் தகவல் களஞ்சியம் எனும் அளவிற்கு இருக்கும். தமிழை இவர் அவருக்கே உரிய பாணியில் கையாளும் விதம்... அருமையிலும் அருமை. அன்றாடம் உபயோகப்படுத்தும் பல சொற்களின் பொருள் இவரின் மூலமாய்த்தான் தெரியும்.

ஜோதிஜி - ஜோதி கணேசன் என்னைவிட கொஞ்சம்தான் மூத்தவர் என்றாலும், அய்யா என அழைப்பதையே பெருமையாய் எண்ணி அழைத்தும் வருகிறேன். காந்தியைப் பற்றி எழுதி கலங்கவைத்தவர்,  ஈழப்பிரச்சினையை எடுத்தாள ஆரம்பித்திருக்கிறார். இவர் சொல்லும் சில வரலாற்று நிகழ்வுகள் உங்களுக்கு அதிர்ச்சியையும், ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தும்.

மாதவ்ராஜ் -  தீராத பக்கங்கள் மூலம் தனது மனக்குமுறல்களையும், கருத்துக்களையும் சொல்லிவருகிறார். தெரிந்துகொள்ள, கருத்துப்பரிமாற்றம் செய்துகொள்ள ஒரு அற்புத நபர்.

காமராஜ் - மாதவ்ராஜுக்கும் இவருக்கும் தொடர்பு இருக்குமோ எனத் தோன்றும் எழுத்துகள், கருத்துக்கள் யாவற்றிலும். அழகிய தமிழ் நடை இவரின் சிறப்புக்களின் ஒன்று.

பீர் - புதிய பல விஷயங்களையும், இஸ்லாத்தைப்பற்றியும் நிறைய இவரிடம் தெரிந்துகொள்ளலாம். தனது கருத்துக்களின் ஆணித்தரமாய் இருப்பவர்.

இளமை துள்ளலோடு எழுதுபவர்கள்:

கார்க்கி - இனம்புரியா கவர்ச்சி இவரிடம் இருக்கும். மொக்கை, காக்டைல், எழு, புட்டி என பல பரிமாணங்களில் அசத்தும் இளைஞர். சகா என்றால் சட்டென நினைவிற்கு வருபவர்.

ஜெட்லி - பார்த்ததும் படிக்கத்தோன்றும் இடுகைகளுக்கு சொந்தக்காரர். சினிமா விமர்சனம், அன்றாட நிகழ்வுகள் என அலசுபவர்கள்.

கிரி - இளமைக்கு உத்திரவாதமான பதிவுகள் நிச்சயம். எல்லாம் கலந்து எழுதுபவர். படித்தால் திருப்திக்கு நிச்சயம்.

கிருஷ்ணா - பக்கத்து ஊர். எனது தம்பிகளின் வரிசையில் இணைந்திருக்கிறவர். இவரின் ஊரில் விரிவுரையாளனாய் வேலை பார்த்தலினால் என்னை சார் எனத்தான் அழைப்பார். ஆர்வமுள்ள இளைஞர். புதிய விஷயங்களை கற்றுக்கொள்வதிலும், எல்லோர்க்கும் சொல்லுதலிலும் வல்லவர்.

கலகலப்பாய் எழுதுபவர்கள்:

கலகலப்ரியா - இவர் நமக்கு இடும் பின்னூட்டம் கலகல என இருக்கும், இடுகைகளும் கூட. கவிதைகளில் எல்லா விஷயங்களையும் சுவைபட சொல்லுவார். வித்தியாசமான நடை.

அர்விந்த் - இரும்புத்திரை பதிவுக்கு மட்டும்தான், பழகுதற்கல்ல. இளைமையான எழுத்துக்கள், அதற்கே உரித்தான துணிச்சல்... என் அன்பு தம்பிகளில் ஒருவர்.

ராஜு - டக்ளசு என அறியப்பட்டு வந்த என் மற்றுமோர் தம்பி. ஒரு இடுகையை எந்த கோணத்தில் எழுதியிருக்கிறோம், அதில் உள்ள முத்தாய்ப்பான விஷயம் எது எனக் கேட்டால் நீங்களே எதிர்ப்பாராத பதில் ஆச்சர்யமாய் கிடைக்கும். சாதிக்க துடிக்கும் என் அன்பு தம்பி.

நையாண்டி நைனா - எதைப்பற்றியும் கவலைப்படாமல், எந்த ஒரு பிரச்சினையிலும் சம்மந்தமில்லாமல் கலாய்க்கும் அன்பு சகோதரர். கவிதைகளை மொக்கை போடுதலிலும், தனியான பாணியில் நையாண்டி செய்வதிலும்.... சொல்ல முடியவில்லை... நையாண்டியின் அரசன்.


வாழ்வியலோடு எழுதுபவர்கள்:

செந்தில்வேலன் - இவரின் பதிவுகள் வெளியான மறுநொடியில் விகடனில் வந்திருக்கிறதா என பார்த்துவிட்டுத்தான் படிக்கத்தொடருவேன். அமீரகத்திலிருந்து அசத்துபவர். அருமையான நடை. இடுகைகள் யாவும் நமக்கு தேவையான, வாழ்வை மேம்படுத்தக்கூடிய பயனுள்ள விஷயங்களாயிருக்கும். எழுத்துக்களில் எளிமை, தெளிவு மற்றும் நேர்மை இவரது பதிவின் பிரதான விஷயங்கள்.

நாகா - என்னை பல உள்ளங்களுக்கு அறிமுகப்படுத்திய எனது ஸ்டார். பதிவுகள் குறைவாய் எழுதியிருந்தாலும் அதில் உள்ள விஷயங்கள் பொருள் பொதிந்தவை. நட்புக்கு இலக்கணமாய் திகழ்பவர்.

நரசிம் - ஆரம்பம் முதலே என்னை கவர்ந்து அசத்தி வருபவர். இவரின் எழுத்துக்கள் தனித்தன்மையானவை. நல்ல விஷயங்களை, இடுகைகளை எல்லோருக்கும் கொண்டு செல்லுபவர். உதவும் மனப்பான்மையினால் உரைந்திருப்பவர். சங்கத்தமிழ் பாடல்களை அவருக்கே உரிய பாணியில் எளிமையாய் சொல்லுபவர்.

சினிமா மற்றும் இதர விஷயங்கள்:

வண்ணத்துபூச்சியார் - விஷயமுள்ளவர், எவர் மனதையும் நோகடிக்காத விமர்சனம் இவரது சிறப்பம்சம். இவரால் பரிந்துரைக்கப்படும் எந்த ஒரு படமும் பேரு பெற்றதாய் இருக்கும்.

கேபிள் அண்ணா - என்ன சொல்ல?, வலையுலகின் சூப்பர் ஸ்டார். வசீகரமான எழுத்துகளால் கட்டிப்போடுபவர். விமர்சனம் வெகு நியாயமாய் பாரபட்சம் இல்லாமல் நடுநிலையாய் இருக்கும். சாப்பாட்டு விஷயங்களை சரியாய் சொல்லுவார்.

உண்மைத்தமிழன் - சினிமா மற்றும் நடப்பு நிகழ்வுகளை உண்மையாய் சொல்லுபவர். தனித்தன்மையும், துல்லியமும் இவரின் சிறப்பு.

முரளிக்கண்ணன் - இவரின் மெனக்கடல்களும், தகவல் கோர்வையும், நடையும் மிகவும் ரசனையுடன் இருக்கும். சினிமா பற்றி மிக வித்தியாசமான தகவல்களை தருபவர்.

ஹாலிவுட் பாலா - ஆங்கிலப் படக்களுக்கு அசத்தலாய் விமர்சனம் எழுதுபவர். இவர் சொன்னால் நம்பி பார்க்கலாம். நடையும் விமர்சனமும் வித்தியாசமாய் இருக்கும்.

சிறுகதை, தொடர், பயண அனுபவங்கள்:

துபாய் ராஜா - இடுகைகளில் தொடர், அசத்தலான சிறுகதைகள், அவ்வப்போது கவிதைகள், மிக வித்தியாசமாய் பயண அனுபவங்கள் என  அசத்திக் கொண்டிருப்பவர். நமக்கு இடும் பின்னூட்டங்கள் நம்மை மேம்படுத்திக் கொள்ள உறுதுணையாய் இருக்கும்.

கவிதையோடு கதைகள்:

தண்டோரா - இவரது எழுத்துக்களுக்குத்தான் எத்தனை வீரியம்? என் அன்பு அண்ணன்களுள் ஒருவர். இவரின் கவிதைகள் அத்தனை அழகாய் இருக்கும், கதைகளும் கூட. நறுக்கென கவரும்படி சொல்லுபவர்

நாடோடி இலக்கியன் - இவரின் கவிதைகளின் ரசிகன். இவரின் தமிழ் மிக அருமை. இவரின் அறிவுத்தாகம் எனக்கு நிறைய பிடிக்கும்.

பாலா சி - நண்பரின் கவிதை மற்றும் வர்ணனைகள் நேர்த்தியாயும், எளிமையாயும் இருக்கும். வித்தியாசம், புதுமை இவரின் இரு முக்கிய விஷயங்கள்.

பா.ராஜாராம் - இவரின் கவிதைகளில் இருக்கும் எளிமை, நிதர்சனம் மிகவும் அருமையாய் இருக்கும்.


மொத்தத்தில் கீழே உள்ள பத்தியை மூச்சுவிடாமல் படியுங்களேன், எல்லோரைப்பற்றியும் இருவார்த்தைகளில்...

கதிரிடம் கசியும் கவிதையும் வெடிக்கும் மௌனமும், பழமை பேசியிடம் முதிர்ச்சியும் தமிழறிவும், பாமரன் அய்யாவின் அனுபவமும்  இளமைத்துள்ளலும், கலகலப்ரியாவிடம் கலகலப்பும் கவித்திறமையும், வசந்தின் வசீகரமும் வார்த்தையாடலும், ஜோதிஜியின் ஜாலங்களும் சிலிர்ப்புகளும், லக்கியின் லாவகவும் துணிச்சலும்,  நையாண்டியிடம் நையாண்டியும் நக்கலும், ராஜுவின் இளமையும் எதிராடலும், வால்பையனின் வால்தனமும் வாதங்களும், கேபிள் அண்ணாவின் கனிவும் கதைகளும், தண்டோராவின் அதிரும் கவியும் அழகிய கோபமும், உண்மைத்தமிழனின் உண்மையும் உயிரோட்டமும், வண்ணத்துப்பூச்சியாரின் நந்தவனமும் மலரும் பூக்களும், நர்சிம்மின் நயமான நடையும் நேர்மையான கோபமும், கார்க்கியின் கலக்கலும் கதைத்தலும், ஆதியிம் புலம்பலும் புரிதலும், துபாய் ராஜாவின் தேடலும் திரட்டலும், செந்தழல் ரவியின் சீற்றமும் செம்மையும், ஜெட்லியின் சினிமாவும் செய்திகளும், அரவிந்தின் அலம்பல்களும் அனுபவங்களும், காமராஜின் கருத்துக்களும் கட்டுரைகளும், மாதவராஜின் சொல்லும் சீற்றமும், மணியின் பின்னூட்டமும் கிச்சடியும், செந்திலின் செய்திகளும் சீர்நடையும், நாகாவின் நட்பும் நளினமும், பீரின் புதுமைகளும் வாதங்களும்,  பாலாசியின்  வர்ணனையும் வார்த்தைகளும், ரவிபிரகாஷின் ரசனைகளும் டைரியும், முரளிக்கண்ணனின் முத்தாய்ப்பான தகவல்களும் அலசல்களும் என எல்லாம் எனைக் கவர்ந்து கட்டிப்போடுபவை.

அப்பாடா, ஒருவழியாய் முடித்திருக்கிறேன். இன்னும் நிறைய பேரை சொல்லிக்கொண்டு போகலாம். மறந்ததாய் நினைக்க வேண்டாம் குறிப்பிடாமலிருந்தால். விடுபட்டிருப்பின் மன்னிக்க, என் இதயத்தில் நீங்கள் இருக்கிறீர்கள்.

பின்குறிப்பு:

இன்னும் என்னை கவர்ந்த இடுகையாளர்கள் நிறைய... வரும் ஒவ்வொரு இடுகையிலும் அவர்களை எழுதுகிறேன் ஒவ்வொருவராய்...

இந்த பதிவு உங்களுக்கு பிடிச்சிருந்தா என்னை மேம்படுத்த உங்க கருத்துக்களையும், உற்சாகப்படுத்த ஓட்டையும் போடுங்களேன்!

இடுகையெழுத வந்த கதையும் எனக்கு பிடித்த இடுகையாளர்களும்...

|

அன்புத் தம்பி அர்விந்த் என்னை இடுகை எழுத வந்ததன் கதையினை கூறுமாறு அழைப்பு விடுக்க, என்னுள் ஒரு எண்ணம் 'எழுதவந்து முழுதாய் ஆறு மாதங்கள் கூட முடியவில்லை, அதற்குள்ளா?' என. எண்ணத்தை மறுத்து, இதோ எழுத வந்ததன் காரணத்தையும் எனக்கு கிடைத்த அன்பு உள்ளங்களைப் பற்றியும் இந்த இடுகை.

பிளாக் என ஒன்று இருப்பதாய் இரண்டாயிரத்து ஐந்தில் சிங்கப்பூர் வந்த புதிதில் நான் வேலை பார்த்த இடத்தில் வேறு ஒரு பிரிவை சேர்ந்த அன்பு என்பவரின் மூலமாக தெரிய வந்தது. தமிழ் முரசு பத்திரிகையில் வெளியான எனது கவிதைகளைப்பார்த்து நீங்களும் பிளாக் எழுதலாமே என அறிவுறுத்தி அவரது பிளாக் முகவரியையும் கொடுக்க, அதை அப்போது பார்த்ததோடு சரி.

அதன்பின் தட்ஸ் தமிழ் செய்திகளை படித்து அதில் வரும் மகா விரசமான பின்னூட்டங்களுக்கு (குறிப்பிட்ட சில நட்சத்திரங்களுக்கு) காட்டமாய் ஆசிரியருக்கு பின்னூட்டம் போட்டதோடு, அவ்வப்போது ஆனந்த விகடன் படித்து பின்னூட்டம் இட்டு வந்தேன்.

அப்போதுதான் டாப் 10 வலைப்பதிவுகள் என குமுதத்தில் வந்ததாய் செய்தியில் படித்து கூகிள் ல் தேட எனது வலைப்பயண வாழ்க்கை ஆரம்பித்தது.

முதலில் என்னை கவர்ந்தது, லக்கி. தொடர்ந்து படித்து தவறாது பின்னூட்டம் இட்டு, தொடக்கத்தில் ஆங்கிலத்தில் தான், பிறகு தான் எடிட்டர் மூலம் தமிழில் எழுதி, தொடர்ந்தேன். பின் நரசிம், பட்டர்ஃபிளை சூர்யா, ஆதி, கார்க்கி, செல்வேந்திரன், பரிசல், கேபிள் அண்ணா என எல்லோரையும் படிக்க ஆரம்பிக்க, பிரம்மிப்பாய் இருந்தது.

லக்கி எனது விமர்சனத்தை பாராட்டி, என்னையும் ஏன் ஒரு வலைப்பூ ஆரம்பிக்கக்கூடாது என கேட்க, விளையாட்டாய் ஆரம்பித்தேன். படிப்பில் நிறைய ஆர்வம் இருந்ததும், ஏற்கனவே படித்திருந்ததும் பெரிதும் உதவ எழுதி வைத்திருந்த கவிதைகளை முதலில் வெளியிட வரவேற்பு எதிர்பார்த்ததையும் விட பயங்கரமாய் இருந்தது.

ஆம், பத்து பேர் படிக்க, என் மாமா மட்டும் வாழ்த்தி பின்னூட்டமிட்டார். எனக்கு எழுதுவதைவிடவும் படித்து பின்னூட்டமிடலில் அதிக ஆர்வம் இருந்ததால் ஏதும் கவலை இன்றி எழுத ஆரம்பித்தேன்.

தமிழ் வலையுலகம் மணி எனது பின்னூட்டங்களினால் என்னையும் படித்து சிறந்த வலைப்பதிவர்களுள் என்னையும் சுட்டிக்காட்ட, நாகாவும் அவ்வாறே செய்யதொடு அல்லாமல் உடன் கதிர் மற்றும் ஜோதிஜி அவர்களையும் அறிமுகப்படுத்த ஒன்றிரண்டு விகடன் குட் ப்ளாக் ல் வர நண்பர்கள் நிறைய சேர ஆரம்பித்தார்கள்.

நண்பர் பீர் பின்னூட்டங்களை பற்றி எழுதிய ஒரு இடுகையில் நன்கு பின்னூட்டம் இடுபவர்களில் நானும் ஒருவன் என குறிப்பிட்டு எழுதியிருந்தார். ஒய்வு நேரங்களிலெல்லாம் நிறைய எழுத ஆரம்பிக்க, விரைவாய் ஐம்பதை தொட்டேன்.

படிப்பதில் நிறைய நேரம் செலவிட்டதால் எழுதுதல் குறைந்தாலும் நிறைய நட்புகள் கிடைத்தவண்ணம் இருந்தது. எழுதியவற்றில் எனக்கு மிகவும் பிடித்த பதிவு என பார்த்தால் மூன்றை சொல்லுவேன். எனது பள்ளி அனுபவங்கள், குருவணக்கம் மற்றும் அப்பாவுக்கு பிறந்த நாள்...

நேரில் சந்தித்த முதல் பதிவர் வண்ணத்துப்பூச்சியார். அடுத்தமுறை அவருடன் கேபிள் அண்ணா, தண்டோரா, என் பிரியமான லக்கி ஆகியோர். இரண்டும் என் வாழ்வின் மிக முக்கியமான நாட்கள்.

இன்னும் நேரில் பார்க்காமல் சந்திக்க விழையும் சென்னை பதிவர்களின் முதல் இரு இடங்கள் எல்லோரையும் சகா என அழைக்கும் கார்க்கிக்கும், எழுத்துக்களின் ஒரு தனியான கவர்ச்சியை வைத்திருக்கும் நர்சிம்முக்கும்.

தவிர என்னோடு இயைந்து இருக்கும் அன்பு நண்பர் கதிர், வானம்பாடிகள் அய்யா, ஜோதிஜி... என இன்னும் நிறைய பேரை நேரில் சந்திக்க ஆசை.

பின்னூட்டத்தால் என்னை செம்மைபடுத்துபவர்கள் எனப்பார்த்தால் எல்லோரையும் சொல்லலாம், ஆனாலும் ஆரம்பம் முதலே என்னை தொடரும் ராசுக்குட்டிக்கு ஒரு தனி இடம் உண்டு.

எழுதுபவர்களில் என்னை கவர்ந்தவர்களைப் பற்றியும் இந்த இடுகையில் எழுதலாம் என்றிருந்தேன், நீண்டு கொண்டே செல்வதால் அடுத்த இடுகையில் என் பார்வையில் எல்லோரைப் பற்றியும் கீழ்க்கண்ட வரிசையில் எழுத இருக்கிறேன்.

சமுதாய சிந்தனைகளோடு எழுதுபவர்கள்:
இளமை துள்ளலோடு எழுதுபவர்கள்:
வாழ்வியலோடு எழுதுபவர்கள்:
சினிமா மற்றும் இதர விஷயங்கள்:
சிறுகதைகள் தொடர், பயண அனுபவங்கள்:
கவிதையோடு கதைகள்: 

அடுத்த இடுகையில் சந்திப்போம்

இந்த பதிவு உங்களுக்கு பிடிச்சிருந்தா என்னை மேம்படுத்த உங்க கருத்துக்களையும், உற்சாகப்படுத்த ஓட்டையும் போடுங்களேன்!

கொண்டாடுவோம் தீபா 'வலி'...

|

அன்பு நண்பர் கதிர் அவர்களின் கவிதையை படித்த தாக்கத்தில் மனம் கசிந்து எழுதியது.

அசுரவதம் செய்ததினால்
ஆண்டுதோறும் தீபாவளி
அசுரன் வதம் செய்தலினால்
அனைவருக்கும் மரணவலி.

வீசும் காற்றில் ரத்த வாடை
வாழ்வதுவோ என்றும் கோடை
பேசுதற்கு நாவிருந்தும்
பேச்சறுந்த அவலநிலை.

மாண்ட பின்பு நரகமது
மறுபடியும் தேவையில்லை
ஆண்டழிக்கும் அசுரனிடம்
அல்லல்படும் என்னவர்க்கு.

பணம் பதவி சுகம் காணும்
பகட்டான ஆள்வோர்க்கு
இனம் சாக இன்புற்று
இனிமையாய் தீபாவளி

மனம் இருப்பின் மறுத்திடுவோம்
மகிழ்ச்சியதை துரத்திடுவோம்
இனம் வாழும் அந்நாளை
பொன்னாளாய் உணர்ந்திடுவோம்.

மனம் கசிந்து மறுவாழ்வு
மீண்டும் வந்து சேர்ந்திடவே
இனம் வாழ இறைவேண்ட
அன்புடனே அழைக்கின்றேன்...

நாயோட பேரு பரி...

|

தலைப்ப பாத்துட்டு, எனக்கு நல்லா தமிழ் தெரியும், நாய் பேரு குதிரன்னு தப்பா நினைச்சிடாதீங்க, உண்மையிலேயே எங்க வீட்டில இருந்த நாய் பேரு பரிதான். அப்படி வெச்ச புண்ணியவான் நான் தான். எப்படின்னா கொஞ்சம் கொசுவர்த்திய சுத்தனும், அதாங்க ஃப்ளாஷ்பேக்...

தம்பி படிச்சு முடிச்சுட்டு வீட்டில கோழி வளத்துகிட்டு இருந்தான். அப்பா அவனுக்கு ஃபுல் சப்போர்ட். எனக்கு சுத்தமா புடிக்கல, திண்ணையில தனியா இருந்தாலும் கண்ட இடத்துல அசிங்கம் பண்ணி வெச்சிருக்கும். பக்கத்துல நெல்லுல மேயுதுன்னு வேற திட்டிட்டு இருந்தாங்க.

வளக்காதடான்னு சொன்னா கேக்கறதே இல்ல. அப்போதான் ஆண்டவன் புண்ணியத்துல ஒரு நல்ல காரியம் நடந்தது. தினமும் ஒன்னு ரெண்டுன்னு கோழி, குஞ்சுன்னு காணாம போயிட்டு இருந்துச்சி.

ஒரு கட்டத்துல என்னையே சந்தேகப்பட்டான்னா பாத்துக்கோங்களேன். ரொம்ப சி.பி.ஐ. வேலை பாத்ததுக்கு அப்புறம் தெரிஞ்சது, திருடறது ஒரு நாயின்னு. ஆனாலும் அத கையும் களவுமா பிடிக்க முடியல.

ஒருநாள் வசமா மாட்டியும் எஸ்கேப் ஆயிடுச்சி. தம்பி அரசருங்க அந்த காலத்துல பொற்காசு தர்ற மாதிரி 'அந்த நாய உயிரோடவோ அல்லது அடிச்சு கொண்டு வந்தாலோ ஒரு குவார்ட்டர்' னு அறிவிச்சான்.

அதுக்கு நல்ல எஃபக்ட் இருந்துச்சி. ரெண்டே நாள்ல வேலு அத துரத்திட்டு போய் சும்மா ஒரு கல்ல உடவும் மண்டையில பட்டு பொசுக்குனு போயிடுச்சி.

உடனே தகவல் சொல்லி குவாட்டருக்கு மேட்டர் போட்டுட்டு அவன் அப்பீட் ஆனதும் ஒரு திருப்பமே நடந்துச்சி.

தம்பி அந்த பக்கமா வைக்கோல் போரு இருக்கிற வழியா போயிருக்கான், அப்போ கல்லு சந்துல நாலு நாய் குட்டிங்க கத்திட்டு இருக்கவும், பக்கத்துல கேக்க,

'யாரோ படுபாவி அந்த நாய அடிச்சி கொன்னு புட்டானான், பால் இல்லாம குட்டிங்கல்லாம் தவிக்குது' ன்னு சொல்லவும் தம்பி அப்படியே மெல்ட் ஆயிட்டான்.

உடனே அந்த நாலு குட்டியையும் எடுத்து வந்து மூனு ஆம்பள குட்டியயும் கேக்கறவங்களுக்கு கொடுத்துட்டு கடைசியா இருந்த பெண் குட்டியை மட்டும் வெச்சுகிட்டான்.

காலேஜ் விட்டு வந்து கதைய கேட்டுட்டு பேரு இன்னும் வெக்கலன்னு தெரிஞ்சிகிட்டு அந்த நாய்குட்டிக்கு 'பரி' ன்னு பேரு வெச்சேன்.

'என்னது பரின்னு பேரு?' ன்னு எல்லாரும் எளக்காரமா சிரிச்சாங்க. 'அவன் செஞ்ச தப்புக்கு பரிகாரமா இந்த நாய வளக்கறதால இதுக்கு பேரு பரிகாரத்துலருந்து சுருக்கமா பரி' ன்னு சொன்னேன். எல்லாரும் ஒத்துகிட்டாங்க. பரின்னே எல்லோரும் கூப்பிட ஆரம்பிச்சோம்.

அம்மா 'பிரபுக்கு நாயின்னா புடிக்கவே புடிக்காது, ஆனா பரி மேல ரொம்ப பாசமா இருக்கான்' னு அடிக்கடி சொல்லிட்டிருப்பாங்க...

ஆனா இத படிக்கற வரைக்கும் யாருக்கும் தெரியாது அதுக்கு இன்னொரு காரணமும் இருக்குன்னு. அது எனக்கு புடிச்ச பக்கத்து வீட்டு பொண்ணு பேரு பரிமளா, அத சுருக்கி வெச்சி செல்லமா வெச்சேன்னு.

பின்குறிப்பு:-

சில மாற்றங்களுடன் கூடிய மீள் பதிவு...

இந்த பதிவு உங்களுக்கு பிடிச்சிருந்தா என்னை மேம்படுத்த உங்க கருத்துக்களையும், உற்சாகப்படுத்த ஓட்டையும் போடுங்களேன்!

அத்தை மகனும் சினிமாவும்....

|

என் அத்தை மகன் பாலு சினிமா பாக்கிறதுல பெரிய ஆளு. எல்லா படத்தையும் பாத்துடும். எம்.ஜி.ஆர் படம்னா எத்தன நாள் ஓடுதோ அத்தன நாள் பாக்கும்.

காசுக்கு வீட்டுல இருக்கிற நெல்லு, காட்டுல இருக்கிற தேங்காய், சொந்தம், பந்தம்னு எப்படியாச்சும் தேத்திட்டு சுத்து பட்டி(வேணாம், சினிமாவோட போகட்டும்) பக்கத்து ஊர்ல, டவுன்லன்னு எங்கெல்லாம் போக முடியுதோ, போய் பாத்துடும்.

சைக்கிள்ல 30 கி.மீ தூரம் கூட போயி பாத்துடும். மொத்தத்துல ஒரு படத்தையும் தவற விடாது. லோக்கல்னா தரை டிக்கெட் அம்பது பைசா, டவுன்னா ஒரு ரூபா அவ்வளவுதான். சினிமான்னா உயிரு. ஆனா எந்த படத்தோட கதையையும் சொல்ல தெரியாது.

டவுன்ல பாத்துட்டு வந்ததுன்னா, ஹீரோ கணக்கா உட்கார வெச்சு கதை சொல்லுன்னு சொல்லி, உளர்றத பாத்துட்டு, சரி சரி வேணாம் போதும்னுடுவோம்.

எந்த பட போஸ்டர பாத்தாலும், சினிமா பத்தி பேசினாலும் நான் மொதல்லயே பாத்துட்டேன்னு சொல்லும்.

கொஞ்சம் பெரிய ஆளாயிட்டு ரிக்(போர் போடற) வண்டி, காட்டு வேலை அது இதுன்னு கதம்பமா பண்ணிட்டிருந்துச்சி.

அப்போல்லாம் தூர்தர்ஷன் மட்டும்தான். கலர் டி.வி எங்கயாச்சும் தான் இருக்கும். வாரத்துக்கு ஒரு படம், ஓளியும் ஒலியும். எப்பவாவது மாநில மொழி திரைப்படத்துல அவார்ட் வாங்கின மொக்க படம்னு (இப்போ சொல்லலாம், அப்போ அதான் தேவாமிர்தம்) தான் இருக்கும்.

ஒரு நாள், மாநில மொழி வரிசையில ஏதோ ஒரு தேஞ்சு போன ஒரியா மொழி படம் ஓடிட்டிருந்தது. படம் சரியான ஆமை வேகம், கார் போறதையே கால் மணி நேரம் காட்டிட்டு இருந்தாங்க.

அத்தை மகன் வீட்டுக்குள்ள வந்தாப்ல, வழக்கம் போல 'இந்த படத்தை மொதல்லயே பாத்துட்டேன்' ங்கவும், சரி வசமா இன்னைக்கு சிக்கிட்டான்னு, என் சித்தப்பா, 'சரி அடுத்த என்னா சீன் சொல்லு' ன்னு கேட்டாரு.

'இப்போ காரு எஞ்சின் சூடாயி நின்னுடும்' னது, நின்னுடுச்சி. 'பக்கத்துல குளம் இருக்கும்', இருந்துச்சி. 'கேனை தூக்கிட்டு போவான்', போனான். 'பொண்ணுங்க குளிச்சிட்டு இருப்பாங்க', இருந்தாங்க.

கடைசி வரைக்கும் அடுத்து வர்றத சொல்லிட்டிருக்கவும் எங்களுக் கெல்லாம் மயக்கம் வர்ற மாதிரி ஆயிடுச்சி.

'ஆமா இந்த படத்தை எங்க பாத்தே' ன்னு கேட்டதுக்கு, 'வடக்க ரிக் வண்டியில இருக்கும்போது ஒரு டென்ட் கொட்டாயில பாத்தேன்' னுச்சி. அதுல இருந்து சினிமாவ பத்தி கேக்கறத நிறுத்திட்டோம்.

ரொம்ப வருஷத்துக்கப்புறம், படிச்சி முடிச்சிட்டு வெளி நாட்டுக்கு போயிட்டு ஊருக்கு வந்தப்போ அவங்க வீட்டுக்கு போனேன்.

கல்யாணம் பண்ணி ரெண்டு பசங்க, நல்ல பெரிய வீடு, வசதின்னு நல்லா இருந்தாப்ல. எல்லா வசதியும் இருந்துச்சி. ஆனா ஏதோ ஒன்னுமட்டும் குறையா இருந்துச்சி. வாயை விட்டு கேட்டுட்டேன்.

'ஆமா எல்லாரும் அதத்தான் கேக்கிறாங்க. டி.வி. மட்டும் இருக்கக்கூடாதுன்னு வெக்கல, பசங்க படிப்பு கெட்டிடும்ல' ன்னாரு.

மனசுக்கு நிறைவா இருந்துச்சி. வெளியில வர்றப்போ, சிஸ்டர்கிட்ட கேட்டேன்.

காத்திருந்தாப்ல, 'ஆமா இன்னும் தியேட்டர் தியேட்டராத்தான் அலையிது, எங்களுக்கு தெரியாதுன்னு நெனைச்சிட்டு, நாங்க மட்டும்தான் டி.வி. பாக்கக்கூடாதாம்' னு சொல்லுச்சி.

பின்குறிப்பு

சில மாற்றங்களுடன் கூடிய மீள் பதிவு...

இந்த பதிவு உங்களுக்கு பிடிச்சிருந்தா என்னை மேம்படுத்த உங்க கருத்துக்களையும், உற்சாகப்படுத்த ஓட்டையும் போடுங்களேன்!

அப்பாவுக்கு பிறந்த நாள்...

|


இன்று என் அப்பாவுக்கு பிறந்த நாள்... அவர் தந்தையாய் எனக்கு என்ன செய்தார், செய்கிறார் என்பதை நினைத்து பார்க்கிறேன்...

இன்றும் என்னை எவராவது 'உன்னுடைய சிறந்த நண்பன் யார்' எனக் கேட்டால் உடனே ராமசாமி என சொல்லுவேன். அது யாரென கேட்கும் போதுதான் அவர்களுக்கு தெரியும் அது என் அப்பா என்று. என்னை ஒரு மாதிரி பார்ப்பார்கள். உண்மைதான், என் வயதுக்கேற்றவாறு  தனது அணுகுமுறைகளை மாற்றிக்கொண்டு அனுசரணையாய் அக்கறையாய்... அப்பப்பா, சொல்ல வார்த்தைகளில்லை.

சிறு வயதில் விவரம் தெரிந்த வயதில் என்னை சைக்கிளில் ஏற்றி, அவர் வேலை பார்க்கும் தலைவாசல் யூனியன் ஆபிஸ் அழைத்துச் செல்வார். கொஞ்சமல்ல, பதினொரு கிலோமீட்டர் வீட்டிலிருந்து.

”பாலும் தெளி தேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன் - கோலம் செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்கு
சங்கத் தமிழ் மூன்றும் தா“

எனும், சொல்லித்தந்த விநாயகர் துதியை அலுவலக மீட்டிங்கில் பாடச்சொல்ல, எப்போதும் துணிச்சலாய் எந்த இடத்திலும் பாடும் நான் அன்று பாடாது மௌனிக்க, நிறைய அவமானப்பட்டார். ஆனாலும் கோபப்படவில்லை.

அம்மா கேட்டதற்கு 'இல்ல சரோ, பிரபு பயந்துட்டான், அதான் பாடல' என்று சமாளித்து அதற்கு அம்மா திட்ட எத்தனிக்க, 'விடு சின்ன பையன்' என சமாதானமும் செய்தார்.

பள்ளி செல்லும் முன்னரே அ முதல் ஃ வரையிலும், ABCD முழுதும், மேலே சொன்ன பாடலோடு இன்னமும் நிறைய கற்றுத் தந்தார். மூன்றாவது வரை அவருடன் தான் இருந்தேன். படிக்கவில்லை என்றால் ஆப்பைக்கொம்பால் விளாசியும் இருக்கிறார். கண்டிப்புடன் கூடிய அப்பாவை அந்த தருணத்தில் தான் பார்த்தேன்.

நான்கு முதல் ஒன்பது வரை தாத்தா வீட்டிலிருந்து படிக்க, வாரம் இருமுறை பார்க்க வந்து விடுவார். வரும் பொது எனக்கு பிடித்தமான தின்பண்டங்களை வாங்கி வருவார். செலவுக்கு தேவையான பணம் கொடுத்துவிட்டு, படிக்க தேவையானவற்றையும் வாங்கித் தருவார்.

என் மீது கோபப்பட்டு கடைசியாய் அடித்தது, நான் MCA முதல் செமஸ்டர்-ஐ முடித்து மார்க் சீட் வீட்டுக்கு கொண்டு வந்தன்று. அவர் எதேச்சையாய் எடுத்துப்பார்க்க, ஒரு பேப்பர் மற்றும் பிராக்டிகலில் மட்டும் பாஸ்.

'என்ன கண்ணு இப்படி' ன்னு கேட்டதற்கு 'ஒன்னும் பெரிய விஷயம் இல்லப்பா, அடுத்த செம்ஸ்டர்ல பாத்துக்கலாம்' என்று அலட்சியமா சொல்லியதற்கு பளிரென என்னை அறைந்துவிட, அதிர்ந்து அவரை ஒரு பார்வை பார்த்தேன். ஒன்றும் பேசவில்லை, கொஞ்ச நேரத்தில் என்னை கலங்கி, கட்டிப் பிடித்தார்.

'சட்டையை போடு, வெளியே போகலாம்' எனச் சொல்லி, தோளில் கைபோட்ட வண்ணம், மாலை வேளை என்பதால், ஊருக்கு வெளியே இருக்கிற எங்கள் ஊர் தியேட்டரில் பரோட்டா வாங்கி தந்து, 'சாரி கண்ணு உன்ன அடிச்சிருக்கக்கூடாது' என்று சொன்னார்.

'இல்லப்பா என்னோட தப்பு, நிறையா மார்க் எடுக்கலாம்னு அடிச்சிட்டு வந்துட்டேன், சாரி' என சொல்ல,  'இல்ல கண்ணு உன்மேல் இருக்கிற நம்பிக்கையில நிறைய எதிர்பாத்துட்டேன்' என்று சொன்னார். பதிலுக்கு 'கண்டிப்பா நிறைவேத்துவேன் அப்பா' என்று சொல்ல, 'எனக்கு தெரியும் நீ செய்வ' என்று நம்பிக்கையோடு சொன்னார்.

அதன்பின் வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும் என்னோடு இயைந்து என்னை நெறிப்படுத்திக் கொண்டிருக்கிறார். அவரது கவிதையின் முதல் ரசிகன் நான். அதன் பாதிப்புத்தான் என்னுடய அத்தனை கிறுக்கல்களும்...

சிறு வயது தவிர்த்து என்னை நேரில் வாடா போடா என அழைத்ததில்லை. வா கண்ணு, போ கண்ணு எனத்தான் சொல்லுவார். தொலைபேசியில் அழைத்தாலும், 'சொல்லு கண்ணு, நல்லாருக்கியா?' இதுதான் அவர் பேசும் முதல் வாக்கியம்.

மனைவியை இழந்து மீளாத்துயரில் இருக்கும்போது எனது மகனுடன் இங்கு வந்து என்னுடன் இரு மாதம் இருந்தார். அப்பா, நான், எனது மகன் என மூவரும் தனியே இருந்த வாழ்வின் மறக்க முடியாத நாட்கள் அவை.

வேலைப்பளு அதிகமாய் இருந்த சமயம் அது. எல்லாவிதத்திலும் உதவியாய் இருந்து, என்னை சரியான முறையில் அறிவுறுத்தி, மறுமணத்திற்கு சம்மதிக்கச்செய்து, இறுதியில் ஒரு குழந்தையோடு இருப்பவரைத்தான் மணந்துகொள்வேன் என சொன்னவுடன் உடனே எனது தாயாருடன் பேசி, மீண்டும் என் வாழ்வில் வசந்தத்தை கொண்டு வந்தது வரை... நினைத்தாலே பிரமிப்பாய் இருக்கிறது...

இன்னும் அவரைப்பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்.... பக்கங்கள் போதாது.

அப்பா, நீங்கள் நீடூடி வாழ வேண்டும், எனக்கு ஆதரவாய், ஆசானாய்...

ஆசி வேண்டும் அன்பு மகன்...

ராமசாமி பிரபாகர்.

இந்த பதிவு உங்களுக்கு பிடிச்சிருந்தா என்னை மேம்படுத்த உங்க கருத்துக்களையும், உற்சாகப்படுத்த ஓட்டையும் போடுங்களேன்!  

பி.டி.பி.எஸ் படிக்கப்போறேன்...

|

பி.எஸ்.சி பைனல் இயர், கடைசி செமெஸ்டர். ரொம்பவும் ஜாலியா இருந்துட்டு வாழ்க்கையோட சீரியஸ்னஸ் கொஞ்சம் தெரிய ஆரம்பிச்சது.

எல்லா பேப்பரையும் கிளியர் பண்ணனும்னுங்கற கவலை நம்ம போட்டு கழட்டிட்டு இருந்த நேரம்.

கூட படிச்ச, பக்கத்து ஊர்க்காரன் மோகன் எப்பவுமே கொஞ்சம் அட்வான்சா யோசிப்பான். அதவிட அரியர் இல்லாம யோசிக்கிற நிலமையில இருந்தான்.


'வாழ்க்கைன்னா என்னா தெரியுமான்' னு தலை தெறிக்க ஓடுற அளவுக்கு பேசுவான். போடா பித்தான்னு கிண்டல் பண்ணுவோம், (ஆனா, யு.எஸ். போயிட்டு மொதல்ல செட்டில் ஆனவன் எங்க குரூப்ல அவன்தான்) 

ரஜினியோட தீவிர ரசிகன். ஹேர் ஸ்டைல் ரஜினி மாதிரி தான் வெச்சிருப்பான். தளபதி வந்த சமயத்துல சூர்யானு அவன நானும், தேவான்னு என்னையும் கூப்பிடுக்குவோம்னா பாத்துக்கோங்களேன்... ( இன்னும் ரஜினின்னா உசுரு.)

எக்ஸாம் ஸ்டடிஹாலிடேஸ்ல அவங்க வீட்டுல குரூப் ஸ்டடி பண்ணும்போது கேட்டான், 'பி.எஸ்.சி முடிச்சிட்டு லீவ்ல என்னடா பண்ணப்போறே?'

'மேல படிக்கனும், வேலைக்கு போற ஐடியா எல்லாம் இல்ல...' நான்.

'சரிடா, ஆனா நாலேட்ஜ் இல்லாம என்னா பண்ணுவே?, இங்க படிக்கறதெல்லாம் வேஸ்ட், எதாச்சும் அடிஷனலா பண்ணனும்' னுட்டு, 'நான் பி.டி.பி.எஸ் சேலத்துல ஜாய்ன் பண்றேன், நீயும் வர்ரியா' ன்னான்.

மோகன் நல்லதத்தான் சொல்லுவான் ங்கற அசைக்க முடியாத நம்பிக்கை இருந்ததால உடனே 'சர்டா போலாம்' னு சொல்லிட்டாலும், மனசுக்குள்ள ஒரு நெருடலாவே இருந்துச்சி.

யாருகிட்டயாவது கேட்டு கிளியர் செஞ்சுக்கலாம்னு நினைக்கும்போது, சத்யா சார் வந்தார். அவர் பசங்க கிட்ட நல்லா பேசுவார், நாங்க கவனிக்கலன்னாலும் ரொம்ப மெனக்கட்டு நடத்துவாரு. அவர் கூட திருச்சில சினிமால்லாம் பாத்திருக்கிரோம்னா பாத்துக்குங்களேன். எதாச்சும் உதவின்னாலும் பண்ணுவார்.

என் பார்வையில அவர் பயங்கர விவரமான ஆளு. மோகனுக்கு அவர் அப்படி பசங்ககிட்ட க்ளோசா இருக்கிறதால அவர பிடிக்காது.

'சார், படிச்சு முடிச்ச்சிட்டு மேல சேர்றதுக்குள்ள லீவ்ல உருப்படியா எதாச்சும் படிக்கலாம்னு இருக்கேன். மோகன் பி.டி.பி.எஸ். பண்ணலாம்னு சொல்றான், நீங்க என்ன சார் சொல்றீங்க' ன்னேன்.

'பிரபா, பி.டி.பி.எஸ். லாம் வேல்யூ இல்ல, பாக்ஸ் ப்ரோ, ஆரக்கிள்னு படிஅதுதான் வேலை தேடும்போது ரொம்ப ஹெல்பஃபுல்லா இருக்கும்' னாரு.

அவரு சொன்னத அப்படியே மோகன்கிட்ட வந்து சொன்னேன். விழுந்து விழுந்து சிரிச்சான். அந்த மாதிரி அவன் சிரிச்சி இன்னிய வரைக்கும் பாத்ததில்ல.

'பி.டி.பி.எஸ்' ங்கறது கம்ப்யூட்டர் சென்டர் நேம்-டா, அதைப்போயி... நல்ல வாத்தியார், நல்ல ஸ்டூடண்ட்...' னு கண்ணுல தண்ணி வர சிரிச்சான். அதோட இல்லாம எல்லாத்துகிட்டேயும் சொல்லி மானத்தை வாங்கினான்.

அதுக்கப்புறம் அவர் கிளாஸ் எடுக்குபோது அர்ஜென்ட்டா ஒன்னாச்சி வந்தாகூட கேக்கறதில்ல...

பின்குறிப்பு

சில மாற்றங்களுடன் கூடிய மீள் பதிவு...


இந்த பதிவு உங்களுக்கு பிடிச்சிருந்தா என்னை மேம்படுத்த உங்க கருத்துக்களையும், உற்சாகப்படுத்த ஓட்டையும் போடுங்களேன்!

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB