ஈரோடு சங்கமம் 2010 - எனது பார்வையில்...

|

சென்றவருடம் ஒவ்வொரு நிகழ்வையும் செல்பேசியில் கதிர், ஆரூரன், பழமைபேசி அண்ணா என எல்லோரிடமும் பேசி சந்தோசித்த நாம் இந்த வருடம் கலந்துகொள்ளப் போகிறோம் என எண்ணும்போதே மனதிற்குள் மெல்லிய சந்தோச உணர்வுகள் தலைத்தூக்க, எதிர்ப்பார்ப்புகள் என்னுள் எழ ஆரம்பித்தன.

ஈரோடு ஒன்றும் நமக்கு புதிதல்ல, ஆறு மாதங்கள் பார்த்த வேலை, ஜூனியரோடு பதிவர்களை சந்தித்த அனுபவம் என இருக்க கிளம்பினேன். மாலை ஐந்து மணிக்கு ‘பங்காளி’ என பாசத்தோடு பேருந்து நிலையத்திலேயே சங்கவியை சந்தித்தேன்.

அப்பாவை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துவந்திருந்தார். அவரோடு மருத்துவமனைக்கு சென்று சந்தித்து வணக்கம் சொல்லி சிற்றுண்டி முடித்து ஆட்டோவில் விழா நடக்கும் சாயம் & கெமிக்கல்ஸ் மண்டபத்திற்க்கு கிளம்பினேன். ஆட்டோ நெருங்கவதற்குள் எதிரிலேயே வரவேற்க கதிர் வந்தார். ஆட்டோவை பாதியிலேயே அனுப்பி அவருடன் மண்டபம் செல்ல, தாமோதர் அண்ணா, ஆரூரன், ஜாஃபர், பாலாசி, ராஜா என எல்லோரையும் சந்தித்தேன்.

முட்டை தோசை, கறிக்குழம்பு என அற்புதமான இரவு உணவு. உணவின் சுவையோடு பரிமாறிய அன்பும் கலந்து இருந்ததால் தேவாமிர்தம். முடித்து, ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஷண்முகா லாட்ஜிற்கு சங்கவி, கா.பா, ஸ்ரீராமோடு சென்றோம். அங்கு ஏற்கனவே தங்கியிருந்த குடந்தையூர் வலைப்பூவை வைத்திருக்கும் சரவணன் தங்கியிருந்த அறையில் சங்கவியும் நானும் இணைந்து கொண்டோம்.

சரவணன் புதிதாய் வலைப்பூவுக்கு வந்த அதீத ஆர்வத்துடன் இருந்தார். நிறைய பேசினோம், நெடு நாட்கள் பழகிய உணர்வு. காலையில் கிளம்பி அம்மா மகி கிரானி அவர்களை சந்திக்க, இன்ப அதிர்ச்சி. எல்லா வலைப்பூக்களையும் படிக்கும் அவர் எனது எழுத்துக்களைப் படித்து எல்லா விவரங்களையும் தெரிந்து வைத்திருந்து வாஞ்சையாய் பேச ஆரம்பித்தார்.

மீண்டும் மண்டபம், காலை உணவு. இட்லி, தோசை தக்காளி குருமாவோடு இதுவரை கேள்விப்படாத முட்டை பூரி. ரசித்து ருசித்து சாப்பிட்டோம். விழா இனிதே ஆரம்பிக்க புகைப்படம் எடுக்க ஆயத்தமானேன். ஆரூரன் ‘பிரபா இதைப் படியுங்களேன்’ என ஒரு துண்டுச்சீட்டை நீட்ட படித்தேன். ‘சரி, இந்த தமிழ் வணக்கத்தை படித்துவிடுங்கள்’ என அன்புக்கட்டளையிட அதை படித்தலோடு நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின.

நிகழ்ச்சிகள் பற்றிய தெளிவான விவரங்கள் கதிரின் இடுகையில். இன்னும் சில விவரங்கள் பங்காளி சங்கவியிடமிருந்து.

அய்யா முருகன் அவர்கள் பேசும்போது குறிப்பெடுத்துக்கொண்டிருந்த பரிசல் அண்ணாவைக் கவனித்தேன். என்ன அழகாய் தொகுத்த்திருக்கிறார் என்பதை இங்கு பாருங்கள்.

நிறைய எழுதலாம். நீளம் கருதி விழாத்துளிகளாய் கீழே…

சுறுசுறுப்பான ஜாஃபர், பாலாசி, ராஜா, கணபதி ஆகியோரைப் பார்க்கும்போது நமக்கும் உற்சாகம் பற்றிக்கொள்ளும்போல் இருந்தது. தேனிக்களைக்கூட இவர்களுக்கு உதாரணம் சொல்ல இயலாது, அதற்கும் மேல்.

கண்டிப்பு, மெலிதான கடுமை, அவ்வப்போது சிரிப்பு என இருந்த கதிர். விழா நாயகர் அல்லவா, சரிவர முடிக்கவேண்டுமே என கவனத்தில் இருந்தார்.

கலகலக்க வைத்த கந்ததாமி அய்யா, எல்லா நிகழ்வுகளையும் கேமிராவால் சுட்டுக்கொண்டிருதார். இவரின் பகிர்வினை இங்கே பாருங்களேன்...

ஸ்டார் ஆஃப் த ஷோ என் இனிய ஜாக்கி அண்ணா, ’டேய் மச்சி’ என ஆரம்பித்து சொந்த உறவாய். என்ன ஒரு கைத்தட்டல் அவர் பேசும்போது… அவர் பேசினால் எல்லோரும் கவனிக்கிறார்கள் என்பதே அவரின் வெற்றி.

கனிவாய் சீனா அய்யா, அம்மா, கார்த்திகை பாண்டியன், ஸ்ரீராம். கலக்கலாய் பரிசல் அண்ணா, வெயிலான்.

புகைப்படம் எடுப்பது எப்படி என எனக்கு சொல்லித்தந்த கார்த்தி, சுரேஷ். நிறைய கற்றுக்கொண்டேன் பாஸ். விரைவில் உங்கள் ஜோதியில் ஐக்கியமாகிறேன்.

இயல்பாய், ஆளுமையோடு ஆரூரன், பாசத்தோடு தாமோதர் அண்ணா.

ஒரு ருபாய் சாப்பாடு வெங்கடேசன் அண்ணா கடையில் பரோட்டா இரவு உணவு, இரவு கதிரின் வீட்டில் தங்கி காலையில் டிஃபன் முடித்து இந்த இடுகையினை இட்டு மனம் நிறைய சந்தோஷங்களை மட்டும் நிரப்பிகொண்டு கிளம்பும் நான் உண்மையில் பாக்கியசாலி.

இறுதியாய் எல்லோருக்கும் எனது நன்றியைச் சொல்லி, இதையெல்லாம் ஏதுவாய் செய்த வலையுலகத்திற்கு தலைவணங்கி, இது போன்ற நிகழ்வுகளில் எப்போதும் கலந்துகொள்ள இறைவன் அருள் புரியவேண்டும் என இறைஞ்சி பயணிக்கிறேன்...

(எனது மற்றும் கதிரின் கேமிராவினால் எடுக்கப்பட்ட புகைப்படங்களை இங்கு பாருங்களேன்...)

கதையின் கதை...

|

இளங்கலை கணிப்பான் பொறியியல் முடித்த சமயத்தில் எழுதவேண்டுமென ஆர்வம் மிக அதிகமாய் இருந்தது. சட்டைப் பையில் பேனாவும் மடித்து வைக்கப்பட்ட ஒரு தாளும் எப்போதும் இருக்கும். ஏதேனும் தோன்றினால் உடன் குறிப்பெடுத்து வைக்கவேண்டுமல்லவா?

நிறைய யோசித்து ‘பிளாக்மெயில்’ (முந்தைய இடுகை) என்று பல தாள்களை வீணாக்கி, மாற்றங்கள் செய்து ஒரு வழியாய் எனது முதல் சிறுகதையை எழுதி முடித்தேன். கையெழுத்துப் பிரதியான அதை பலரிடம் கொடுத்து படித்து கருத்து சொல்லச் சொல்ல வந்த விமர்சனங்களைப் பாருங்களேன்...

‘இதெல்லாம் ஒரு கதையா?’ ஒரு சீனியர்.

‘படிக்க எல்லாம் பொறுமை இல்ல, அப்படியே படிச்சி காட்டு மச்சி’. ஆர்வமாய் படித்துக்காட்ட, ’நீ பிறவிக் கலைஞன் - டா, இனிமே வாழ்க்கையிலயே கதை அது இதுன்னு படிச்சி காட்டாத’ அறைத்தோழன்.

பக்கத்தில் இருந்த இன்னொருவன் ஆரம்பித்தவுடன் தூங்கி, முடிக்கும்போது முழித்து வாயோர எச்சிலைத் துடைத்து ‘கதை சூப்பர்-டா’

‘இது சமூக நாவல் மாதிரி இருக்கு, க்ரைம், ப்ளாக்மெயில்-னு ட்ரை பண்ணுடா’ பால்ய நண்பன் மணி.

‘கவிதை சூப்பரா இருக்கு’(பாவி மக்கா படிச்சிப் பாக்காமயே வழக்கமா தர்ற கவிதைன்னு டெம்ப்ளேட் விமர்சனமா?)-வெங்கடேசன்.

படித்து பாருங்கள் எனச் சொல்லி கொடுத்து, அடுத்த நாள் எப்படி இருக்கிறது எனக் கேட்டதற்கு, ’அற்புதமா இருக்கு. எழுத்தாளரா வரவேண்டியன் நீ... அப்படியே மறக்காம கரெண்ட் பில் கட்டிடு’ கடைக்கார மாமா...

‘இந்த ஆர்வத்த படிப்பில காட்டியிருக்கனும்’ மாமா.

’நல்லாருக்கு, எங்கிட்ட இருக்கட்டும், நீ தொலைச்சிடுவே’ வருங்கால டைரக்டாக ஆவதற்கு ஆயத்தமாயிருந்த இப்போது எனக்கு அந்த காப்பியை அனுப்பி வைத்து எழுத உதவிய என் நண்பன் வேல்முருகன்.

படிச்சிட்டீங்கல்ல!... நீங்க என்ன சொல்றீங்க?

ப்ளாக் மெயில்... நிறைவுப் பகுதி

|

முதல் பகுதியான இதை படித்துப் பின் படியுங்களேன்...

மாலினிக்கும் எனக்கும் என்ன உறவு என்பதை மாபுத்திசாலியான நீங்கள் யூகித்திருப்பீர்கள் என்று எனக்கு நன்றாகவே தெரியும். இருந்தாலும் ஒருமுறை மெதுவாய் என் காதில் சொல்லுங்களேன்... எஸ்... கரெக்ட். என் முன்னால் காதலி.

கல்லூரியில் எம்.சி.ஏ கடைசி வருடம் படித்த சமயம் பி.எஸ்.சி கம்ப்யூட்டரில் சேர்ந்தாள். சூப்பர் சீனியர் என்ற முறையில் அவர்களின் வகுப்பினை பார்வையிட(ரேகிங் செய்ய என்றுதானே என உள்ளுள் நினைக்கிறீர்கள், சரிதான். ஒரு விஷயத்தைக்கூட உங்களிடம் மாற்றிச்சொல்ல முடியாது போலிருக்கிறது) சென்ற போதுதான் அவளை முதன் முதலில் பார்த்தேன்.

அழகென்றால் அப்படி ஒரு அழகு. வர்ணித்தால் நீங்கள் பொறாமைப் படுவீர்கள். இன்று நீங்கள் பார்க்கும் பெண்கள் எல்லோரையும் அவளுடன் ஒப்பிட்டு ஏமாந்து போவீர்கள் என்பதால் அழகு என்பதோடு விட்டுவிடுகிறேன். பார்த்தவுடன் எங்களுக்குள் ஏற்பட்ட ஹார்மோன்கள் மாற்றததினால் காதல் பொசுக்கென பற்றிக்கொள்ள, அடுத்து வந்த ஆறு மாதங்கள் என் வாழ்வின் மறக்க இயாலாத சொர்க்கமாயிருந்தன.

படித்தது திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரி என்பதால் திருச்சி சென்று சினிமா, முக்கொம்பு, உச்சிப்பிள்ளையார் கோவில், ஸ்ரீரங்கம் என எல்லா இடங்களையும் சுற்றினோம். நிறைய கடிதங்கள், புகைப்படங்கள், அப்புறம் .... சொல்ல வெட்கமாக இருக்கிறது... அய்யய்யோ ரொம்ப தப்பா நினைக்காதீர்கள் நிறைய முத்தங்கள் எனத்தான் சொல்ல வந்தேன்.

கடைசி செமெஸ்டரில் ப்ராஜெக்ட் விஷயமாய் மெட்ராஸ் சென்றுவிட பிரிவு தாளாமல் பசலை நோயால்...அடிக்க வராதீர்கள் அதிகமாய் சொல்லவில்லை, கடிதத் தொடர்பிலிருந்தோம். பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை பார்த்துவிட்டு சென்றேன்.

திடீரென பத்து நாட்களாய் எந்த தகவலும் இல்லாததால் கல்லூரிக்கு வந்து பார்க்க, அவள் கல்லூரிக்கு வருவதில்லை எனவும், குடும்பமே ஊரை காலி செய்துவிட்டு சென்று விட்டதாகவும் கிடைத்த தகவல்கள் என்னை நிலை குலையச்செய்தது.

எவ்வளவோ முயன்றும் எந்த ஒரு தகவலும் கிடைக்காது போக, ஏற்பட்ட சோகத்தில் வெறித்தனமாய் படித்து, வங்கித் தேர்வில் தேறி, வேலையிலும் சேர்ந்து... மீதிக் கதைதான் உங்களுக்குத் தெரியுமே... சரி, நிகழ்வுக்கு வருவோம்.

மாலினி என்னை எப்படி இருக்கிறாய் எனக்கூட கேட்கவில்லை. ’எப்படி என்னைக் கண்டுபிடித்தாய், உடனே போய்விடு, ஏன் இப்போது வந்தாய், அவர் வருகின்ற நேரம்’ என படபடவென பேசி என்னை அனுப்புவதிலேயே குறியாய் இருக்க, கதவைத் தள்ளிக்கொண்டு உள்ளே சென்றேன்.

என்னை பார்த்த பார்வையில் சத்தியமாய் பழைய மாலினி இல்லை. ‘ரொம்ப வசதியாய்தான் இருக்கிறாய் போலிருக்கு, பழசெல்லாம் மறந்து விட்டாயா’ எனக் கேட்டேன்.

‘அய்யோ, என்னை புரிந்துகொள்ளுங்கள், ப்ளீஸ், இப்போ உடனே கிளம்புங்கள்’ என அவள் மன்றாட ஆரம்பிக்க சட்டென சில விஷயங்களை முடிவு செய்தேன்.

’மாலினி, நீயும் நானும் ஒன்றாய் எடுத்துக்கொண்ட போட்டோக்கள், கடிதங்கள் எல்லாம் என்னிடம் பத்திரமாய் இருக்கின்றன. அதையெல்லாம் உன் கணவரிடம் காண்பித்தால் உன் கதி என்ன தெரியுமா?’ என சினிமா வில்லன் போல் பேச, அவளும் சி.க போல (அதாங்க, சினிமா கதாநாயகி) அப்படியெல்லாம் செய்துவிடாதீர்களென கெஞ்ச ஆரம்பித்தாள்.

‘சரி, எனக்கு அவசரமாய் பணம் தேவைப்படுகிறது, ஒரு லட்சம் ரூபாயைக் கொடுத்துவிடு, கடிதங்களையும் போட்டோக்களையும் கொடுத்துவிடுகிறேன்’ என சொல்ல சட்டென ஒத்துக்கொண்டாள். எனது முகவரியினைக் கேட்டு அவசர அவசரமாய் தொலைபேசி அருகே இருந்த தாளில் குறித்துக்கொண்டாள். (விவரமாய் எனது பேங்க் முகவரியைத்தான் கொடுத்தேன் என உங்களுக்கு சொல்ல வேண்டுமா என்ன?) கண்டிப்பாய் இன்னும் இரு வாரத்துக்குள் செக்காக அனுப்பி வைப்பதாய் சொன்னாள்.

உடன் அங்கிருந்து விலக, சட்டென கதவை சாத்திக்கொண்டாள். நீங்கள் நினைக்கலாம், என்னடா ஒரு வங்கியில் வேலை பார்ப்பவன் இவ்வளவு அற்பனாய் நடந்து கொள்கிறானே என. எல்லாம் என் பண முடை பாஸ்.... அத்தோடு என்னை தவிக்க விட்டு சென்ற அவளுக்கு கொடுக்கும் தண்டனையாக மனதிற்கு ஒரு சமாதானம். அதுவுமில்லாமல் என்னைப் பார்த்து எப்படி இருக்கிறாய் எனக் கூட கேட்காமல் விரட்டியடிக்க எத்தனித்ததற்கு தண்டனை, கடைசியாய் கடனையெல்லாம் அடைத்து சீட்டாடும் பழக்கத்தில் இருந்து நிரந்தரமாய் விடுதலை.

வழக்கத்துக்கு மாறான அதீத சந்தோசத்துடன், சீட்டி அடித்தபடி பணப்பிரச்சினை எல்லாம் தீர்ந்துவிட்டது என உற்சாகமாய் ஆட்டோ பிடிப்பதற்காக சாலையை நோக்கி நடந்தேன்.

வழக்கமான ஒரு வாரத்துக்குப் பின் வங்கியில் மதிய உணவெல்லாம் முடித்து கொஞ்சம் ஓய்வாய் இருக்கையில் ப்யூன் வந்து என்னைப் பார்க்க ஒரு பெண் வந்திருப்பதாய் கூற, கொஞ்சம் ஆச்சர்யப்பட்டு ஆர்வமாய் வெளியே வர, அங்கு மாலினியைப் பார்த்து கொஞ்சம் அதிர்ச்சியோடு சந்தோசித்தேன்.

அருகே சென்று மெலிதாய் புன்னகை செய்து அருகே அமர்ந்து, ’என்ன மாலினி நேரிலேயே வந்துவிட்டாய், பணமாய் கொடுத்துவிடலாமென முடிவு செய்துவிட்டாயா?’ எனக்கேட்டேன்,

தலையாட்டி, ‘வா எனக்கூட கேட்கமாட்டீர்களா?, எல்லாம் தயாராக இருக்கிறது, சரி கடிதம் புகைப்படங்களைல்லாம் எங்கிருக்கின்றன?’ எனக் கேட்டாள்.

’வீட்டிலா வைக்க முடியும்? இங்குதான் இருக்கிறது. இதோ எடுத்து வருகிறேன், அருகிலிருக்கும் ஓட்டலுக்கு சென்று காபி சாப்பிட்டுக்கொண்டே பேசலாம்’ என சொல்லி உள்ளே சென்றேன்.

ஒரு காபியில் சக்கரை கம்மி என சொல்லிவிட்டு கவரை கொடுக்க, புகைப்படங்களையெல்லாம் மேலோட்டமாய் பார்த்துவிட்டு தனது கைப்பையில் வைத்துக்கொண்டு, ‘சரி, திரும்ப உன் சீட்டுக்கு சென்று நீங்கள் லோனாக எடுத்து வைத்திருக்கும் ஐம்பதாயிரத்தை எடுத்து வந்து கொடுத்துவிட்டு இந்த கவரை வாங்கிக்கொள்’ எனச் ஒருமையில் சொல்ல ஏகமாய் வேர்த்தேன்.

என்ன விளையாடுகிறாயா எனக்கோபமாய் கேட்க, ‘பொறுமை மிஸ்டர் ராஜா, இந்த கடிதங்களையும், புகைப்படங்களையும் உன் மனைவியிடம் காட்டாமல் இருக்கத்தான் அந்த ஐம்பதாயிரம். மெட்ராஸில் என்னைப் பார்த்தாயே, அது என் தற்காலிக வீடு. என்ன பார்க்கிறாய், நான் ஒரு காஸ்ட்லி கால் கேர்ள். இப்போது ஆளை மாற்றிவிட்டேன், நாளை மும்பைக்கு பறக்கப் போகிறேன்’.

‘அவர் வரும் நேரத்தில் நீ வந்ததால்தான் உன்னை அவசரமாக போகச் சொல்ல நேரிட்டது, ஆனால் வசமாய் நீ என் வலையில் சிக்கிக் கொண்டாய். அப்புறம் இன்னுமொரு தகவல் நீ ப்ராஜெக்ட்டுக்கு சென்றவுடம் என் அப்பா ஒரு சீட்டுக்கம்பனியில் பணத்தையெல்லாம் இழக்க இரவோடிரவாய் வேறு ஊருக்கு சென்று, கொஞ்ச நாளிலேயே அப்பா தற்கொலை செய்துகொள்ள, அம்மாவும் அவரைத் தொடர்ந்து சென்றுவிட, எல்லாம் தலைகீழாய் மாறி.... சரி, இதெல்லாம் உனக்கெதற்கு, பணத்தை எடுத்துவா’

’எப்படி உன்னைப்பற்றி எல்லாம் தெரிகிறது எனப் பார்க்கிறாய? நேற்றே இங்கு வந்து உன்னைப்பற்றி எல்லா விவரங்களையும் தெரிந்து கொண்டேன், மனைவி சொல்லே மந்திரம் என வாழ்பவன், புதிதாய் ஒரு வீடு வாங்குவதற்க்காக உன் மனைவி கேட்ட ஐம்பதாயிரம் லோன் இன்றுதான் கிடைத்தது என்பது வரை. உன் மனைவி கேட்டால் பணத்தை வழியில் தொலைத்ததாய் சொல்லி சமாளி’

சொல்லி முடிக்க தலையெல்லாம் எனக்கு கிர்ரென சுற்ற, சனியனை எடுத்து பனியனுக்குள் விட்ட கதையாய்... சொல்லுங்க பாஸ்... எனக்கு இது தேவையா?

வெற்றுரை பேசாதீர்... இனியாவது.

|

இன்றைய பொழுது எனக்கு கொஞ்சம் துயரமாகவே விடிந்திருக்கிறது. ஆம், வெற்றுரை பேசாதே! என என் சகோதரி கடைசியாய் ஒரு இடுகையிட்டு மனத்தினை கனக்கச் செய்திருக்கிறார். எல்லோரும் இதுபோல் முடிவெடுக்க இருக்கும் சூழலில் தான் வலையுலகம் இருக்கிறது. ஆனாலும் இன்று அவர் எடுத்திருக்கும் முடிவு அதிர்ச்சியையும், ஒரு வெறுப்பையும், ஒரு வார்த்தையில் சொல்லவேண்டுமானால் ‘ச்சை’ என நொந்து கொள்வதாயும் இருக்கிறது.

கண்டிப்பாய் அவர்களை திரும்ப வரவேண்டும் எனவோ முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும் எனவோ கேட்கப்போவதில்லை. ஏனென்றால் வயதில் மட்டும் தான் நான் மூத்தவன். அவர்களுக்குத் தெரியாததல்ல, யோசிக்காமல் முடிவெடுப்பவர் அல்ல என் அன்பு சகோதரி. அதே நேரம் சில நேரங்களில் அவருக்கு இங்கிருக்க தோதுவாய் எதுவும் இல்லையே எனக்கூட எண்ணியிருக்கிறேன்.

ஆயிரம் சோகங்கள் உள்ளுள் இருந்தாலும் ‘கலகல’ வென இருக்கும் என் ப்ரிய சகோதரி பாரதி கண்ட புதுமைப் பெண். ஆயிரம் வியாக்கியானம் பேசினாலும் பேதமை காட்டும் இந்த உலகில் அவர் தனித்திருத்தலே பலருக்கு காதில் புகை வருவதாயிருக்கும்.

தனித்திருத்தல் என்ற வார்த்தையினை எந்த பொருளில் வேண்டுமாலும் எடுத்துக்கொள்ளலாம். நான் சொல்ல வருவது இப்படித்தான் இருக்கவேண்டும், இதுதான் நியதி, இப்படித்தான் செய்யவேண்டும் என போலியாய் ஒரு கட்டமைப்பை ஏற்படுத்தி, நம்மை சிறைப்படுத்திக் கொண்டு ஏன் செய்கிறோம், எதற்கு செய்கிறோம் என வாழ்வின் பொருள் விளங்காமல் வாழும் சூழலில் இப்படித்தான் என பட்டென உள்ளவற்றை சொல்லும் குணமுடையவர் என்ற பொருளில்.

நிறைய எதிர்ப்புக்களை, கருத்து மோதல்களை சந்தித்த நீங்கள், இவ்வாறெல்லாம் ரௌத்ரம் பழகி, உள்ளக் கிடக்கையை வெளிப்படுத்தி, உண்மையைச் சொல்லி உங்களை ரணப்படுத்திக்கொண்டு நேர விரயத்தோடு வாழ்வதைவிட அதை நிகழ்வினில் பயன்படுத்தி இன்னும் உபயோகமாய் வாழ்வினை நீங்கள் அர்த்தமாக்கிக் கொள்ளலாம், கொள்வீர்கள் என்பதும் எனக்குத் தெரியும்.

என்னை அண்ணா என விளிக்கும்போதெல்லாம் சகோதர வாஞ்சையில் என் அடிமனதில் சந்தோஷம் பொங்கும். என் வாழ்வில் மற்றவரின் அறிவு, திறமை, வாழும் முறை என பிரம்மித்த இருவர்களில் இவரும் ஒருவர். ஒரு முறை கூட பேசியதில்லை, மடல், பஸ், சாட் என மட்டும்தான் அவரோடு எனக்கு பழக்கம். நிறைய என் ஆசான் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

துயரத்தில் இருக்கும் தருணங்களில் அவர் சொல்லும் ஆறுதல்கள் மயிலறகால் வருடுவதுபோல் இருக்கும். சில நாசூக்காக நச்சென்று இருக்கும். கொஞ்ச நேரம் சாட் செய்தாலே கவலைகள் மறந்து எல்லாம் இலகுவாய் ஆனதுபோல் இருக்கும்.

வலையுலகை விட்டு சென்றாலும் எங்கள் வாழ்வுலகில் சகோதரியாய், ஒரு அன்னையாய், தோழியாய் இருக்கிறீர்கள், இருப்பீர்கள் என்பதால் உங்களால் அண்ணாவென விளிக்கப்பட்ட நான் மனம் கனத்து பிரியா உங்களுக்கு பிரியா விடை தருகிறேன், ஒரு சின்ன வேண்டுகோளோடு.

ஆம் சகோ, இன்னும் நிறைய எழுதுங்கள், உங்களின் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள், அறிவுறுத்துங்கள். நண்பராய், தகப்பனாய் ஆசானாய் அய்யா, சகோதரனாய் நான், நண்பர்களாய் பலர் என எல்லோரும் உங்களோடு என்றும் இருக்கிறோம். எல்லாம் உங்களுக்கு கிடைத்து அமைதியான, அழகான வாழ்வு கிடைத்திட எல்லாம் வல்ல இறையவனை வேண்டுகிறேன்.

அண்ணன்,
பிரபாகர்.

ப்ளாக் மெயில்...

|

அத்தியாயம் ஒன்று :

(இது தொன்னூற்று இரண்டில் எழுதிய எனது முதல் கதை. இந்த கதைக்கே ஒரு கதை இருக்கிறது, அது இதனைத் தொடர்ந்து...)

இது தேவையா என எப்போதாவது நினைத்திருக்கிறீர்களா? என்போல் தலையில் கைவைத்து உட்கார்ந்திருக்கிறீர்களா? இல்லையா? குட். நீங்களெல்லாம் பாக்கியசாலி. சரி, அப்படியே இந்த துரதிஷ்டசாலியின் கதையினைக் கொஞ்சம் கேளுங்களேன் பாஸ்...

முதலில் என்னைப் பற்றிய விவரங்களிலிருந்து ஆரம்பிக்கிறேன். ராஜாராமன், வயது முப்பத்தைந்து, மாநிறம். அழகாய் சுப்ரஜா, நான்கு வயது மகள் நல்லவேளையாய் அம்மாவின் சாயலாய் இல்லாமல் முழுக்க என்னைப்போல் இன்னும் கொஞ்சம் கலராய். நிறைய சொத்துக்களோடு வாக்கப்படப் போகிறவள். ஆனால் என்னைப்போல் அவன் இருக்கமாட்டான், கண்டிப்பாய் பெரும் அதிர்ஷ்டசாலி.

ஏன் சொல்கிறேன் என்றால் என் மனைவி நல்ல கருப்பாய் பூசிய உடம்புடன் கழுத்து நிறைய நகைகளுடன்... உங்களுக்குப் புரிவது எனக்குத் தெரிகிறது. கரெக்ட், எல்லாம் சில ஆதாயங்களுக்காக செய்த தியாகம் பாஸ். திருமணத்தின் போது சுமராய் இருந்தவள், சுப்ரஜா பிறந்ததுக்குப்பின் எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லாத உணவுப்பழக்கம், எல்லா வேலைகளுக்கும் ஆள் என இருந்ததால் மேற்சொன்னவாறு ஆனதால். ரொம்ப போரடிக்கிறேனா? விஷயத்துக்கு வருகிறேன்...

பேங்க்-ல் வேலை, ஆனாலும் வீட்டில் மதுரை. அவளின் ஏராளமான சொத்துக்களுக்கிடையில் என் வழியாய் வரும் வருமானங்கள் கொசு. சம்பளம் வந்தவுடன் அப்படியே கவரை அவளிடம் கொடுக்க, என் செலவுக்கென ஒரு சொற்பத் தொகையினை பரிதாபப்பட்டு தருவாள். மேற்படி தேவைப்பட்டால் அவளிடம் கெஞ்சித்தான் வாங்க வேண்டும்.

பாஸ், என்னிடம் இருக்கும் ஒரு பெரிய கெட்ட பழக்கம்... மொதல்ல ப்ராமிஸ் பண்ணுங்க, என் வைஃப்கிட்ட சொல்ல மாட்டேன் என, அப்போதுதான் சொல்லுவேன். ஓகே.... உங்களை நம்பறேன். சீட்டு பைத்தியம் நான். திருச்சியில் இருந்தாலும் மாதம் ஒருமுறை ஏதாவது சொல்லி மெட்ராஸுக்கு சென்றுவிடுவேன். சேர்த்து, கடன் வாங்கிய பணத்தோடு இரண்டு நாட்கள் மவுண்ட்ரோடில் உள்ள ஒரு லாட்ஜில். முன்பதிவு செய்த ரயிலில் ஞாயிறு இரவு கிளம்பி வழக்கத்துக்கு சென்று விடுவேன்.

எனக்கு நேரமே சரியில்லை, கொண்டு வந்த பணம் எல்லாம் காலி. கடந்த நான்கு மாத தொடர் தோல்விகளால் மொத்தக்கடன் ஐம்பதாயிரத்தை தாண்டியிருந்தது. மதியம் தான் ஆகிறது, இரவு வரை என்ன செய்வது? கண்டிப்பாய் காசில்லாமல் ஆட்டத்தில் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள்.

அறைக்கு வந்து கிளம்பி, தம்மோடு ஒரு டீ சாப்பிட வெளியே வந்த போதுதான் சிக்னலில் வெகு அருகில் நின்றிருந்த அந்த மாருதியைப் பார்த்து அதிர்ந்தேன், காரில் டிரைவர் இருக்கையில் இருந்தது மாலினி, என் மாலினி. வேறு யாராவது இருக்குமா என கூர்ந்து கவனிக்க கன்னத்தில் சிறிய மச்சத்துடன்...அவளேதான்!... மெருகு கூடி இன்னும் அழகாய் இருந்தாள். பச்சையில் வண்டி கிளம்ப உடனடியாய் எண்ணைக் குறித்துக்கொண்டேன்.

ஆர்.டி.ஓ-வில் இருக்கும் நண்பனை தொடர்புகொள்ள அவன் ஏன் பார்க்க வரவில்லை, மறந்துவிட்டாய் என்றெல்லாம் பேசி கழுத்தறுக்க, கடைசியாய் அந்த கார் பற்றிய விவரங்களை வாங்கிக்கொண்டேன். அடையாறில் இருந்தது அந்த முகவரி...

பணக்காரர்கள் மட்டுமே வசிக்கும் பகுதி என்பது ஆட்டோவில் அந்த இடத்தை நெருங்கும்போதே தெரிந்தது. பெரிய பங்களா டைப் வீடு, கேட்டிலிருந்து நிறைய உள்தள்ளி இருந்தது. கார் நிறுத்த, தோட்டம் என நிறைய இடங்களோடு விசாலமாயிருந்தது.

கேட்டில் ஆள் யாரும் இல்லை, மெதுவாய் திறந்து உள்ளே சென்று அழைப்பு மணியை அடித்தேன். சற்று கழித்து ‘கோன்’ என கேட்டவாறு திறந்த மாலினி என்னை பார்த்ததும் உடன் அடையாளம் தெரிந்து கொண்டு அதிர்ந்தாள்.

இரண்டாம் பகுதியைப் படிக்க இங்கு அழுத்துங்கள்...

(தொடரும்)

சங்கமத்துக்கு வாரீயளா?...

|

துண்டு போட்டு வருவதாய் சொல்லி பயணச்சீட்டு எல்லாம் எடுத்து தயாராகி வருகிறேன், உங்களையெல்லாம் சந்திப்பதற்காக மிக மிக ஆவலுடன்...


சங்கமம் தலைப்பே நம்மை சங்கமிக்கக் கவர்கிறதல்லவா? ஆரூரன், கதிர், பாலாசி, அகல்விளக்கு ராஜா, வால் பையன், இனிய நண்பர் பைஜூ என ஏற்கனவே பார்த்த அன்பு உள்ளங்களோடு, இன்னும் கலந்து கொள்ளும் எல்லோரையும் பார்த்து அறிமுகம் செய்துகொள்ள ஆவலாய் நாட்களை எண்ண ஆரம்பித்திருக்கிறேன். வாருங்கள் நண்பர்களே, சந்திப்போம்.

இது சம்மந்தமாய் கதிரின் அழைப்பினை கீழே தந்திருக்கிறேன். ஏற்று எல்லோரும் வாருங்கள்...

இனிய நண்பர்களுக்கு,

வருகின்ற 26.12.2010 அன்று ஈரோட்டில் ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம் சார்பாக நடைபெறவுள்ள பதிவர்கள் சங்கமம் நிகழ்ச்சிக்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

நிகழ்ச்சி குறித்த விபரங்கள் அனைத்துப் பதிவர்களுக்கும் சென்றடைய, 
*சங்கமம் 2010 குறித்து தங்கள் வலைப்பக்கத்தில் இடுகையாக வெளியிடவும்
*சங்கமம்-2010 இலச்சினையை தங்கள் வலைப்பக்கத்தில் வெளியிடவும்  அன்போடு வேண்டுகிறேன்.

சங்கமம் குறித்த விபரங்களுக்கு... (http://erodetamizh.blogspot.com/2010/12/2010_07.html) 

சங்கமம் 2010 – அன்போடு அழைக்கின்றோம்


நன்றி

அன்புடன்
- ஈரோடு கதிர்சந்திக்க விழையும்...
இரா. பிரபாகர்...

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB