நவீன கர்ணன்...

|

மெயின் ஃப்ரேம் படித்து அமெரிக்கா செல்லும் கனவோடு வேலைத் தேட சென்னை செல்லலாமென முடிவு செய்தேன்.  அத்தை மகன் முருகவண்ணன் (அழகு நிறத்தான் என அடிக்கடி சொல்லிக் 'கொல்லுவான்', கொஞ்சம் கலர் கம்மி என்பதால்) தனது ரூமிற்கு வரச்சொல்லி அழைத்தான்.

சிங்காரச் சென்னை நோக்கி விடை பெற்று கிளம்ப, அதிகாலை நான்கு மணிக்கே திருவள்ளுவர் சைதாப்பேட்டையில் விட்டுவிட்டார்கள்.  வரவேற்க (முதல் தடவையா வர்றேன்ல...) முருகன் போர்வையை போர்த்தி (ரொம்ப கற்பனை வேண்டாங்க, குளிருக்கு அவன் போர்த்தியிருந்தான்னு சொல்ல வந்தேன்) இருந்தான்.

சைதை தாடண்டர் நகரைத்தாண்டியவுடன் இடது புறம் சென்றால் திநகர். அதற்கு முன்பாகவே வலதுபுறத்தில் இருந்தது பேன்பேட் ஸ்ட்ரீட் 45 ல் அவனது முதலாளியின், கோர்ட்டில் நிலுவையில் இருக்கும் அவன் தங்கியிருந்த இடம்.

சினிமாக்கனவுகளோடும், சாஃப்ட்வேரில் வேலை வாங்கும் எண்ணத்தில் வருவோருக்கும், சென்னைக்கு ஏதேனும் வேலையாய் வரும் எங்கள் ஊரைச் சேர்ந்த பலருக்கும் மிக உதவியாய் இருந்த எழுபது சதம் சிதிலமடைந்த வீடு அது. நுழையும் இடத்தில் மட்டும் இடியாமல் இருக்க, இரு அறைகள். எதிரில் குளிக்க மற்றும் கழிப்பறை. மாடிக்கும் சுவரேறிச் செல்லலாம், அங்கு ஒரு அறை. ஆனால் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் தருவாயில் இருக்கும். காலையில் இரண்டு மணிநேரம் மெட்ரோ வாட்டர் வரும். அதற்குள் குளித்து துவைத்தும் எல்லாம், எல்லோரும் முடித்துக் கொள்ளவேண்டும்.

ஒரே ஒரு விளக்கு,மெழுகுவர்த்தி வெளிச்சம் இதைவிட  கொஞ்சம் பிரகாசமாக இருக்கும். மழை பெய்தால் பாத்திரங்களை வைத்து தண்ணீர் மற்ற இடங்களுக்கு பரவாமல் பிடித்து நிரம்ப நிரம்ப வெளியே ஊற்றி விளையாடலாம்.

அறைக்கு வந்து சூட்கேசை வைத்துவிட்டு பேருந்தில் சரிவர தூங்காததால் உடன் கண்ணயர்ந்தேன். கொஞ்ச நேரம்தான் தூங்கியிருப்பேன்.

’டேய் பிரபு தண்ணி வரும்போதே குளிச்சிக்கோ’ என முருகன்  சொல்ல எழுந்தேன். அப்போது அவனும் அங்கு தங்கியிருந்த தினம்தோறும் படத்தில் உதவி இயக்குனராக வேலை செய்துகொண்டிருந்த குமாரவேல் என்பவரும் குளித்து பல் விளக்கி சாப்பிடச் செல்லத் தயாராயிருந்தார்கள்.

'பிரபா என்ன பேஸ்ட் அது, அப்படி சூப்பரா நுரை வருது... பாருங்களேன்' எனச் சொல்லி வழிந்துகொண்டிருந்த நீரைப் பிடித்து கொப்பளிக்க நுரை நுரையாய் வந்தது. ’ஆமாம் எந்த பேஸ்ட்டில் விளக்கினீங்க’ எனக்கேட்டேன். என் பையில் இருந்ததை எடுத்து முருகன் கொடுத்ததாக சொன்னார். உடனே பலமாக சிரிக்க ஆரம்பித்துவிட்டேன். பையில் இருந்தது பாமோலிவ் ஷேவிங் கிரீம்.

‘அய்யய்யோ வாய் ஒன்னும் ஆகலையா’ எனக் கேட்டதற்கு ’கொஞ்சம் எரிச்சலா இருந்துச்சி, கேட்டதுக்கு பிரபு ஏதாச்சும் மெடிகேட்டட் பேஸ்ட் வைத்திருப்பான்’ என முருகன் சொன்னதா சொன்னார்.

குளித்து கிளம்பி, காலையில் அருகே இருக்கும் ஒரு பாட்டியின் வீட்டில் தோசை குட்டி குட்டியாய் சூடாக சாப்பிட்டோம். காரமாய் சட்டினி, இரண்டு ஒரு ரூபாய். பலமாய் சாப்பிட்டுவிட்டு வேறிடத்தில் இருந்த ஒரு நண்பனைப் பார்த்துவிட்டு திரும்ப ரூமிற்கு வந்தேன்.

இஞ்சினீயரிங் முடித்து சினிமாக்கனவில் இருக்கும் எனது பால்ய நண்பன் வேலு வந்திருந்தான். (இன்று தெக்கத்தி பொண்ணு சீரியலின் எபிசோட் டைரக்டர், மற்றும் வில்லனாக நடிக்கிறான்). ’என்னடா வந்துட்டியா? ஒழுங்கா படிச்சிட்டு வேலையைத் தேடு’ என சொன்னான்.

கொண்டு வந்திருந்த சூட்கேஸ் திறந்திருந்தது. அவசரமாய் உள்ளேப் பார்க்க பகீரென்றிருந்தது, கால்பாகம் காலியாக இருந்ததால்! புதிதாய் வைத்திருந்த நான்கு பனியன்கள், இரண்டு சட்டைகள், டூத் பிரஷ்கள், பேனாக்கள் என நிறைய காணவில்லை. ’எங்கேடா வேலு காணும்’ எனக் கேட்டதற்கு, எல்லோருக்கும் கொடுத்துவிட்டதாகச் சொன்னான்.

'என்னுடையதை எடுத்து ஏண்டா கொடுத்த, உன்னுடையதக் கொடுக்க வேண்டியதுதானே?'  என கோபமாய் கேட்டதற்கு, 'இருந்தாதானே கொடுக்கறதுக்கு... இங்கே வந்தால் எல்லாம் நம்முடையது. அவனவன் ஒரு பனியன் கூட இல்லாம இருக்கான், குச்சில பல்லு விளக்கிட்டிருக்கான், எழுத பேனாவே இல்லாம இருக்கான்! உனக்கு மட்டும் எதுக்கு இத்தனை’ எனக் கேட்டான்.

கொலை வெறி வந்தாலும் அவன் கேட்ட விதம், அப்போது மனதில் தோன்றிய ஒரு பழமொழி ஆகியவற்றால் வலியோடு சிரித்தேன். பின்னூட்டத்தில் அந்த பழமொழியைச் சொல்லுங்களேன்!

கறுப்பு நாள்...

|

மருதமுத்து...

|

மருதமுத்து, சென்னையில் வேலை தேடிக்கொண்டிருந்த சமயத்தில் அறிமுகமானான். எங்கள் ஊரைச் சேர்ந்தவன், ஆனாலும் அங்குதான் முதன் முதலாய் பார்த்தேன். கால் ஊனத்துடன் நிறைய மன தைரியத்துடன்.

லேர்னிங் சிஸ்டத்தில் ஸ்போகன் க்ளாஸ் போகும்போது அவன் வேலை செய்துகொண்டிருந்த அசோக் பில்லர் அருகே உள்ள ஒரு ஓட்டலில் சென்றும் பார்த்தேன். நன்றாக கவனித்தான், எல்லோரிடமும் அறிமுகம் செய்து வைத்து சந்தோஷப்பட்டான், சமையலறையில் வேலை.

'ஓட்டல்-ல சாப்பிடக்கூடாதுன்னா, செய்யறத பார்த்தீங்கன்னா அவ்வளவுதான்' அனுபவத்தில் சொன்னான். அதன்பின் வாரா வாரம் ரூமிற்கு வந்துவிடுவான், நிறைய பேசிக்கொண்டிருப்போம். சினிமாவில் டைரடராகவேண்டும் என்பது அவனது கனவு. கதை சொல்லு மருதமுத்து என சொல்லிவிட்டால் போதும், உடனே ஆரம்பித்துவிடுவான்.

'அண்ணா ஹீரோயின் பணக்கார வீட்டுப்பொண்ணு, ரோட்டுல நடந்து போய்கிட்டிருக்குது'

'அப்போ ஹீரோ ஏழைதானே'

'சும்மா கேளுங்கண்ணா, அப்போ அங்க ஒரு ஐஸ்கிரீம் கடை இருக்கு. ஒரு ஐஸ்கிரீமை காசு கொடுத்து வாங்கி கீழப்போட்டு மிதிக்குது'

'ஏன் மருதமுத்து'

'அதோட பணத்திமிற காட்டுறோம்னா'

அதன் பிறகு சினிமா சினிமா என்றே இருந்தான். கடைசியில் எங்கள் ஊரிலேயே ஒரு அரிசிக்கடை வைத்ததாய் கேள்விப்பட்டேன், அப்படியே எல்.ஐ.சி. ஏஜன்டாகவும் இருப்பதாய் பார்த்தபோது சொன்னான்.

சரியாய் இரண்டு வருடங்களுக்கு முன்னால் தெருவில் சென்று கொண்டிருந்தவன் என்னைப் பார்த்ததும் வீட்டிற்கு வந்தான். நலம் விசாரிப்புக்குப்பின் 'சினிமா கனவு என்ன ஆச்சு' எனக் கேட்டதற்கு

'அதெல்லாம் கானல் நீர்னா. நமக்கு தேவையில்லை, சரிப்படாது' என சொல்லி முன்பை விட இன்னும் மன உறுதியாய் சென்றான். ஆனாலும் அதற்காக அவன் இழந்தது எத்தனையோ பொன்னான வருடங்களை.

என் தம்பியிடம் பேசும்பொழுது நடந்த உரையாடல் அப்படியே கீழே...

'அண்ணா உனக்கு மருதமுத்துவை தெரியுமா?'

‘யாரு, கொய்யானா?’

‘இல்லன்னா, சினிமா மருதமுத்து’

‘ஆமா, தெரியும். என்ன விஷயம்?’

‘நேத்து சாயங்காலம் சூசைட் பண்ணிக்கிட்டான்’

‘அய்யோ, என்ன ஆச்சு?’

‘காமாலை, சுகர். நாட்டு வைத்தியத்த மட்டும் செஞ்சிக்கிட்டிருந்தான். கால்ல தண்ணி சேர ஆரம்பிச்சிடுச்சி. ரெண்டு நாளுக்கு முன்னால தறிக்கு வந்து இங்க வேலை பாக்குற எல்லா பசங்ககிட்டயும் பேசிக்கிட்டிருந்தான். எல்லாத்துகிட்டேயும், கண்டிப்பா நாம பாப்போம்னு ஒரு மாதிரியா அழுத்தி சொல்லிட்டு அவன் ஃபிரண்ட் கூட சைக்கிள்ல போயிட்டான்’

‘ஊரையெல்லாம் சுத்தி பார்த்துட்டு, படிச்ச ஸ்கூல், கோவில் ஒவ்வொரு ஃப்ரண்ட் வீட்டுக்கும், அதிகமா அவர் இருக்கிற லைப்ரரின்னு எல்லா இடத்துக்கும் போயிருக்கான். அவனோட அம்மா பேர்ல எல்லா பேங்க் அக்கவுண்ட்டயும் மாத்தி, பணம் தர வேண்டியது, கொடுக்கவேண்டியது எல்லாத்தையும் செட்டில் பண்ணியிருக்கான்.’

‘அவங்க தெருவில இருக்கிற பசங்களுக்கெல்லாம் நல்லா படிக்க சொல்லி அட்வைஸ் பண்ணியிருக்கான். எல்லாருக்கும் சாக்லேட் வாங்கிக் கொடுத்திருக்கான். கடைசியா மதியம் ஒரு மணி வாக்குல பக்கத்து வீட்டுல இருக்கிற அவன் ஃபிரண்ட கூப்பிட்டு முக்கியமான வேலையா வெளியே போகனும், இப்ப தூங்கப் போறேன், நாலு மணிக்கு எழுப்பிவிடுன்னு சொல்லிட்டு காதுக்குள்ள மருந்த ஊத்திக் கிட்டு படுத்துட்டான். நாலு மணிக்கு பார்த்தா கட்டில்ல செத்துக்கிடக்கிறான்’

கேட்டு என் மனது என்னவோ போல் ஆகிவிட்டது! இதுதான் வாழ்க்கையா என. தற்கொலை கோழைத்தனமான முடிவு, சட்டென உணர்ச்சி வேகத்தில் எடுக்கக்கூடியது என எண்ணியிருந்த எனக்கு எனக்கு அதன் இன்னொரு பரிமாணமும் புரிந்தது.

மருதமுத்து, அடுத்த பிறவியிலாவது குறைவின்றி பிறந்து உனது எண்ணங்களையெல்லாம் நிறைவேற்றி எல்லாம் சாதிக்கவும், உனது ஆன்மா சாந்தியடையவும் வேண்டுகிறேன்!

தீராத விளையாட்டுப் பிள்ளை...

|

கிருஷ்ணனுக்கு அந்த தாத்தாவைப் பிடிக்கவே பிடிக்காது, அவனோடு சேர்ந்து அவனது பாட்டிக்கும். கண்ணாடிக்கார தாத்தா எனத்தான் எல்லோரும் அவரை சொல்லுவார்கள். வீட்டில் ஏதேனும் விசேஷமென்றால் ஒரு மாதம் முன்பாகவே வந்துவிடுவார். எல்லாம் முடித்தபின் தான் கிளம்பி செல்லுவார். உறவு எப்படி என அவனுடைய தாத்தாவிடம் கேட்டதற்கு அவர் சொன்னது புரிந்து கொள்ளும் அளவிற்கு இல்லை. தூரத்து சொந்தம் என்பது மட்டும் புரிந்தது.

நீளமான முகம், சிவந்த தேகம், அடர்த்தி குறைவாய் எண்ணையிடப்பட்டு அழுந்த வாரப்பட்டிருக்கும் தும்பைப் பூவாய் வெளுத்த தலைமுடி. மீசை மழிக்கப் பட்டு சிரித்த வண்ணமே இருக்கும் முகத்தில், பாதி வெள்ளை, பாதி காவி என எப்போதும் வெளியே தெரியும் மொச்சைப் பற்கள், காவியேறிய வேஷ்டி, சட்டை. அவரை ‘டேய் பல்லா’ எனத்தான் தாத்தா கூப்பிடுவார். சிரித்தபடியே சொல்லுங்கண்ணா என பின்னாடியே செல்லுவார். கண்பார்வைக் குறைவைப் போக்க மொத்தமான ஒரு கண்ணாடியை அணிந்திருப்பார். கிருஷ்ணனுக்கு அவரைப் பிடிக்காததற்கு அவனது தாத்தா அவர் வந்ததிலிருந்து கொஞ்சம் அவனைவிட்டு விலகியிருப்பதாய் உணர்ந்ததாலும் இருக்கலாம்.

அவருடன் வரும் அந்த ஒரு உர மூட்டையில் செய்த அழுக்கேறிய பைதான் அவரின் சொத்து. இரண்டு வேஷ்டி சட்டை பட்டாபட்டி ட்ரவுசர் என இருக்கும். இடுப்பில் ஒரு துணிப்பையை சுருட்டி வைத்திருப்பார். அதில் வெற்றிலைப் பாக்கு, புகையிலை, ஒரு சிறிய சுண்ணாம்பு வைத்துக்கொள்ளும் டப்பா, வெள்ளை பாலிதீன் பையில் மடித்து மடித்து வைக்கப்பட்ட பணம், ஒன்றிரண்டு சீட்டுகள் என இருக்கும்.

காலையில் எழுந்ததும் வேப்பங்குச்சியில் பல்துலக்கி ஆயா தரும் நீராகாரத்தை குடித்துவிட்டு தாத்தாவோடு பேசிக்கொண்டே காட்டுக்கு கிளம்பிவிடுவார். மதியமோ அல்லது மாலையோ வீட்டிற்கு திரும்ப வருவார். விடுமுறை நாட்களில் அவர் வீட்டில் இருக்கும்போது கிருஷ்ணன் அவனது நண்பர்களோடு சேர்ந்து கோபத்தை பல வழிகளில் தீர்த்துக்கொள்வான்.

தூங்கிக்கொண்டிருக்கும்போது அவரின் வேட்டியை சட்டென உருவிட விலுக்கென எழுந்து நிற்பார், சிரித்த படியே இது மாதிரியெல்லாம் விளையாடக்கூடாது எனச் சொல்லுவார். கல்யாணமுருங்கை மரத்தில் கிடைக்கும் சூட்டுக்கொட்டையை கல்லில் தேய்த்து அவரின் காலில் சூடு வைப்பான், பதறாமல் படிக்கிற பையன் இதுபோல் செய்யக்கூடாது என அன்பாய் சொல்லுவார்.

தூங்கும்போது கோழிக்குஞ்சுகளைப் பிடித்து அவரின் மேல் போடுவான், தூக்கம் கலைந்துவிட அதற்கும் கோபித்துக்கொள்ள மாட்டார். தட்டுக்களை எடுத்துச் சென்று அருகில் போய் படபடவென சேர்ந்து தட்ட பதறி எழுந்தாலும் கடிந்து கொள்ளாமல் அறிவுறுத்துவார்.

இது கிருஷ்ணனுக்கு இன்னமும் ஏதாவது செய்யவேண்டும் எனும் எண்ணத்தை அதிகப்படுத்தவே செய்தது. ஒருமுறை கொல்லைப்புறத்தில் துவைத்து அவர் காயவைத்திருந்த வேஷ்டியில் சேற்றினை வீசி ஓட அதை அவர் பார்த்துவிட்டதை கவனித்த கிருஷ்ணன் ஆஹா இன்று வசமாய் மாட்டினோம் என பயந்த வண்ணம் வீட்டிற்கே வராமல் பயந்திருந்தான். சாப்பாட்டு வேளையில் ஆயா அழைப்பதாய் அவனை வந்து கூட்டிச்சென்றார் எதுவும் சொல்லாமல்.

மதிய நேரம், கட்டிலில் அமர்ந்து வெற்றிலைக் காம்பினைக்கிள்ளி, அந்த சிறிய சுண்ணாம்பு டப்பாயிலிருந்து சிறு விள்ளல் எடுத்து மெதுவாய் தடவி, பாக்கினைப் பிட்டு உள்ளே வைத்து நன்கு மடித்து வாய்க்குள் வைத்து மெல்ல ஆரம்பித்தார். தாத்தா அந்த சுண்ணாம்பு டப்பாவைத் தாருங்கள் பார்த்துவிட்டுத் தருகிறேன் என கிருஷ்ணன் கேட்க உடனே கொடுத்தார்.

அவன் எடுத்துக்கொண்டு ஓட, அவர் பின்னாலேயே துரத்தி ஓட ஆரம்பித்தார். ‘கிஷ்ணா, அத கொடுத்திடு’ என. என்ன நினைத்தானோ தெரியவில்லை, சட்டென அந்த சுண்ணாம்பு டப்பாவை பக்கத்தில் இருந்த கிணற்றில் தூக்கிப் போட்டுவிட்டான்.

அவர் ஆவேசமாய் அவனை பிடித்து முதுகிலும் கன்னத்திலும் சப்பு சப்பென்று அடித்துவிட அவருக்கும் அவ்வளவு கோபமா என பார்த்துக் கொண்டிருந்த எல்லோருக்கும் அதிர்ச்சி. ‘விளையாடறதுக்கு ஒரு அளவில்ல, இதெல்லாம் விளையாட்டா?’ எனக் கத்தி பின் அடித்துவிட்டோமே என கலங்க ஆரம்பித்தார்.

பாட்டி, ‘பெரிய மனுஷன்னா அறிவு வேணும், இப்படியா பச்ச புள்ளைய போட்டு அடிக்கிறது, கடங்காரன், சனியன்’ என திட்ட ஆரம்பித்தார்கள். அழுதுக்கொண்டே கிருஷ்ணன் பாட்டி மடியில் படுத்து உறங்கிவிட்டான்.

கண்விழித்து பார்க்கும்போது, அவன் படுத்திருந்த கட்டிலில் அமர்ந்தவாறு கண்ணாடித்தாத்தா விசிறியால் வீசிக்கொண்டிருந்தார். அவரைப்பார்த்ததும் மிரட்சியில் எழ ஆரம்பிக்க, ‘கிஷ்ணா, தெரியாம பண்ணிட்டம்பா! அந்த சுண்ணாம்பு டப்பா உன் பாட்டியோடது, அவ ஞாபகமா வெச்சிருந்தேன், அத தூக்கிப்போட்டுட்டியே... அதனாலதாம்பா கோவப்பட்டு அடிச்சிட்டேன், என்ன மன்னிச்சிடுப்பா’ என்று சொல்ல அவனுக்கு புரிந்ததோ இல்லையோ மன்னிப்பு கேட்டுவிட்டதாய் எண்ணி சமாதானமானான். ஆனாலும் அந்த சுண்ணாம்பு டப்பா அவருக்கு நிறைய முக்கியத்துவம் வாய்ந்தது எனப் புரிந்தது.

அடுத்தநாள் பள்ளி சென்று வீடு திரும்பிய கிருஷ்ணன் பக்கத்தில் இருந்த கிணற்றில் வேலை நடந்துகொண்டிருப்பதைப் பார்த்தான். கயிற்றினை கட்டி இறங்கி மோட்டாரினை இறக்கி வைக்க அவனது மாமா இன்னும் இரண்டு பேரோடு வேலை செய்துகொண்டிருந்தார். கிணற்றில் இறங்கும்போது அவரிடம் கெஞ்சி கூத்தாடி தூக்கி எறிந்த திசையில் இருந்த திட்டில் தேடச்சொல்ல அந்த சுண்ணாம்பு டப்பாய் கிடைத்துவிட்டது.

அதை வாங்கிக்கொண்டு போய் சந்தோஷமாய் கண்ணாடித்தாத்தாவிடம் போய் தருவதற்கு தேட அவரைக் காணாமல் பாட்டியைக் கேட்க, ‘அந்த கடங்காரன் எங்க போனான்னு தெரியல, டீ குடிக்கிறதுக்கு சரியா வந்துடுவான்’ என சொன்னார்கள்.

வந்தவுடன் அவரிடம் தர, அதைப்பார்த்து அவரின் கண்களில்தான் எத்தனை சந்தோஷம்! ஆனந்தக்கண்ணீரோடு அவனை அப்படியே ஆர்த்துக்கொண்டார். அங்கே புரிந்த இரு உள்ளங்கள் சங்கமித்தன.

நான்/கடவுள்...

|

என் அன்பான தினேஷ் கடவுள் பற்றிய தொடர் இடுகையை எழுதச் சொல்ல, கொஞ்சம் தாமதமாய் இதோ களத்தில். எல்லா மதங்களும் போதிக்கும் விஷயங்கள் அன்பு, அகிம்சை, நல்லொழுக்கம் என்பதுதான் என்பதை வலியுறுத்திச் சொல்லி, எல்லா மதத்திலும் எனது உயிர்க்கினிய நண்பர்கள் இருக்கிறார்கள் என்பதை நினைவு கூர்ந்து நான் சார்ந்திருக்கும் மதத்தில் எனக்குண்டான கடவுள் நம்பிக்கை, அது பற்றிய எனது எண்ணங்களை உங்களோடு பகிர எண்ணம்!

எந்தக் குழந்தைக்கும் அதன் பெற்றவர்களைச் சார்ந்தே கடவுளைக் கும்பிடும் பழக்கம் வருகிறது என்றாலும் பின்னாளில் வளரும் சூழல் எல்லாவற்றையும் மாற்றி புரட்டி போட்டுவிடும் என்பதுதான் நிதர்சன உண்மை.

சிறு வயதிலேயே அப்பாவின் அன்பான கண்டிப்பால் வளர்ந்தேன் என்பதால் அப்பா வணங்கும் முருகரை ரொம்ப பிடிக்கும். திருமுருக பக்தர்கள் தெய்வீகப்பேரவை என்று ஆரம்பித்து அதன் குருசாமியாக இன்றும் இருக்கிறார். என்னைப் பார்க்கும் பலர் குருசாமி பையனா எனக் கேட்பார்கள். அப்பாவின் பெயர் ராமசாமி என்ற பெயரில் பலர் இருப்பதால் குருசாமியே இன்றும் அவரை தனித்து அடையாளம் காட்டப் பயன்படுகிறது.

இன்று வரை வருடம் ஒருமுறை மாலை அணிந்து முருகன் கோவிலுக்கு செல்லுவதை வழக்கமாய் கொண்டிருக்கும் அவர் வாழ்நாளில் ஒரு முறை கூட செல்லாமல் இருந்ததில்லை, என் சம்மந்தமாய் ஏற்பட்ட மாபெரும் இழப்பைத் தவிர்த்து. திருநீறு அணிந்த நெற்றிதான் அவரின் அடையாளம். பட்டை ராமசாமி என அவரை விளையாட்டுக்குச் செல்லமாய் அழைப்பேன்.

சிறுவயதிலேயே அவர் எனக்கு விநாயகர் துதியினை சொல்லித்தந்து அதை சொல்லாமல் சொதப்பியதை அப்பாவுக்கு பிறந்த நாள் என்னும் இடுகையில் குறிப்பிட்டிருப்பேன்.

அப்பாவிடமிருந்து தாத்தாவிற்கு மாறியபோதுதான் அவரின்பால் ஈர்க்கப்பட்டு பகுத்தறிவுவாதியாய் மாறி வெளியில் அறிவிக்கவும் செய்தேன். பெரியாரின் சில புத்தகங்களைப் படித்ததுவும் அப்போதுதான்! சரியாய் நான்கு வருடங்கள் அந்த வழியில் இருந்தேன். மீண்டும் சொந்த ஊருக்கு பத்தாவது படிக்க வந்தபோது பக்தி மார்க்கத்தில் மனம் மாறத் துவங்கியது.

அப்பா பழனி மலையின் கீழிருந்து உருண்டே கடந்த இரு வருடங்களாய் ஏறுகிறார் என கேள்வியுற்று பார்த்துவிடவேண்டும் என முடிவு செய்தேன். அவருடன் அறுபடை வீட்டிற்கு மாலை அணிந்து ஒரு மாத காலம் விரதம் இருந்து, காலில் செருப்பணியாமல், பச்சை வேஷ்டி கட்டி கல்லூரிக்கு சென்றேன். அச்சமயத்தில் நான் எம்.சி.ஏ முதலாம் ஆண்டு. எனது வகுப்பில் மூன்று பிரபாகர். ஒருவன் நெட்டை பிரபாகர், இன்னொருவன் ஸ்டாட் பிரபாகர்(ஸ்டாடிடிக்ஸ் படித்துவிட்டு வந்ததால்) என மாற இந்த சம்பவத்தால் சாமி பிரபாகர் ஆனேன். சாமி என்றுதான் பலர் கூப்பிடுவார்கள், நக்கலாய் கிண்டலாய்!

எல்லாம் எனக்கு வேடிக்கையாய் இருந்தது, போலியான மரியாதை, பூஜை, பஜனை என. ஒவ்வொரு கோவிலுக்கும் செல்லும்போது அங்கு எவ்வாறெல்லாம் கடவுள் பெயரில் ஏமாற்றுகிறார்கள் என்று எண்ணிய நான் கடைசியில் அப்பா படி உருண்டு ஏறும்போது ஆவேசமாய் கத்திக்கொண்டு அவரின் பின்னாலேயே சென்றேன். வழியில் நிறையபேர் சேர்ந்துகொள்ள மேலும் நிறைய கூட்டம்.

அரை மணி நேரத்தில் மேலே சென்றுவிட, பிரகாரத்தை சுற்றத்தான் இன்னும் அதிக நேரம் ஆனது. அப்பாவைத் தொடர்ந்து வெங்கடேசன் எனும் மாமாவும் அதே போல் தொடர்ந்து வர, எனது வற்புறுத்துதலாலும், அத்தோடு இன்னொருவர் அவரைத்தொடர்ந்து செய்ததாலும் அந்த வருடத்தோடு விட்டுவிட்டார். அப்பாவின் சிவந்த தேகத்தில் காயங்கள் இல்லையெனினும் நிறைய சிராய்ப்புக்கள். கடவுள் பக்திதான் ஒருவரை எந்த அளவிற்கு உடலை வருத்தச் செய்கிறது என்பதை கண்ணால் கண்டுணர்ந்தேன்.

நிறைய சந்தோஷங்கள் வரும்போது கடவுளை மறக்கிறோம் அல்லது நினைப்பதை குறைத்துக் கொள்கிறோம், கஷ்டத்தின் போது நிறைய நினைக்கிறோம். கடவுள் நம்பிக்கை என்பது ஒரு கூடுதல் பலத்தினையும் நல்ல எண்ணத்தினையும் அளிக்க ஏதுவாய் இருக்கிறது என்பதை நம்புகிறேன். கடவுளை ஒரு நல்ல தோழனாய் நமது சுக துக்கங்களைப் பகிந்துகொள்ள ஏற்படுத்திக் கொள்வோமானால் நிச்சயம் நிம்மதியான ஒரு சூழல் நம்மை சூழும் என்பதே என் எண்ணம்!

இறுதியாய் விவேகானந்தர் சொன்னதைச் சார்ந்து, குழந்தைகளுக்கு நல்ல  தகப்பனாய், மனைவிக்கு நல்ல கணவனாய், பெற்றோருக்கு நல்ல மகனாய், நட்புக்களுக்கு நல்ல நண்பனாய், நாட்டுக்கு ஒரு நல்ல குடிமகனாய் இருப்பதுவே கடவுளை வேண்டுவதற்கு இணையான ஒன்றென எண்ணுகிறேன்.

இது பற்றிய எண்ணங்களைப் பகிர என் பிரியமான நண்பர் செந்தில் வேலனையும், வலைதந்த நகைச்சுவைப்புயல் என் சேட்டைக்காரனையும்  (சேட்டை, இது மறு அழைப்பு ஏற்கனவே முகிலன் அழைத்திருக்கிறார், என்னை அழைத்தபோது) அழைக்கிறேன்.

வருவாய்...தருவாய்...

|

அன்புமகன் உனை நானும்
ஒவ்வொரு நொடிப்பொழுதும்
எண்ணி இங்கு வாடுகின்றேன்
ஏக்கம் சூழ ஏங்குகிறேன்

கண்விரிந்த சிரிப்போடு
கன்னத்தில் முத்தமிட்டு
எண்ணத்தை புதுமையாக்கி
ஏக்கமெலாம் தீர்க்குமுன்னை

காண்கின்ற யாவினிலும்
கனவினிலும் நனவினிலும்
எண்ணுகின்ற யாவினிலும்
உன்னையே எண்ணியிங்கு

மனம் கனத்து மறுபடியும்
மகன் வரும் நாளதனை
தினம் தேதி மணி பார்த்து
தவிக்கின்றேன் நொடி கழிய.

வசந்தம் வரும் நாளெண்ணி
வாட்டமுடம் அப்பாவும்
கசந்து நிற்கும் நாள் கழித்து
கண்மணியின் வரவுபார்த்து

வீடும் தென்றல் தொடுதலினால்
வாசமலர் மொட்டவிழ்க்கும்
பாசமகன் பார்த்தலினால்
பரவசமும் தானே சேரும்...

எதிர்நோக்கும்,
அப்பா!

வை ராஜா வை....

|

வாழ்க்கையில மூனுச் சீட்டு விளையாடி பணத்தை விட்டிருக்கிறீர்களா? என்ன... இல்லையா? அப்போ நீங்கள் சுத்த வேஸ்ட்....என்றெல்லாம் சொல்ல மாட்டேன், நீங்கள் ரொம்ப ரொம்ப நல்லவர்...!

அன்றொருநாள் தம்பியும் நானும் ஆத்தூரில் இருந்தோம். அண்ணா படத்துக்கு போகலாமா? என அவன் கேட்க, இருந்த பணமெல்லாம் செலவாக பஸ்ஸுக்குத்தானே இருக்கு நாளை பார்க்கலாம் என சொன்னேன். பார்க்கவேண்டுமா சொல் பணத்தோடு வருகிறேன் எனச் சொல்லி என்னை தொலைவிலேயே இருக்கச்சொல்லி அங்கிருந்த கும்பலான ஒரு இடத்துக்கு சென்றான்.

தம்பியைப் பார்த்தவுடன் பலமாய் சலாம் போட்டு ஒரு ஐம்பது ரூபாயைத் தர, சிரித்து வாங்கி வந்து சரி படத்துக்கு போகலாம் எனச் சொல்ல, என்ன விஷயம் எப்படி உனக்கு பணம் கிடைத்தது எனக் கேட்டதற்கு காரணத்தை சொன்னான். என் தம்பி ஒரு முறை மூன்று சீட்டு விளையாடுவதை வேடிக்கைப் பார்த்து , மிகச் சரியாய் எது ஜோக்கர் என கணித்துச் சொல்லி பணத்தை ஒவ்வொரு முறையும் வைக்க, நடத்தும் அந்த ஆளுக்கு கணிசமான நட்டம். அதன்பின் உனக்கு ஆட்டம் தெரிகிறது இனிமேல் விளையாடக்கூடாது என சொல்லி இவனைப் பார்க்கும்போதெல்லாம் ஐம்பதை கொடுப்பதை வழக்கமாய் கொண்டிருக்கிறார்.

நமக்கு சும்மா இருக்குமா? இது சம்மந்தமாய் நடந்த ஒரு சம்பவம் நினைவிற்கு வர கொசுவர்த்தியை சுற்ற ஆரம்பித்தேன்.

பதினொன்றில் படிக்கும்போது என் அத்தை மகளுக்கு திருமணம். தைக்கக் கொடுத்திருந்த துணிகளை வாங்கவும் பேருந்து செலவுக்கும் என நூறு ரூபாய் கொடுத்துவிட்டு, முதல் நாளே அப்பா, அம்மா என எல்லோரும் கிளம்பி சென்றுவிட்டார்கள்.

அச்சமயம் ஆத்தூரில் மாடர்ன் டைலர்ஸ் எனும் கடை மிகவும் பிரபலம். அங்குதான் அப்பா பேன்ட் சட்டைகளை தைப்பதை வழக்கமாய் கொண்டிருந்தார், முதன் முதலாய் எனக்கும்.

வாங்குவதற்கு சென்றபோது தயாராகிக் கொண்டிருப்பதாகச் சொல்லி, இன்னும் இரண்டு மணி நேரம் ஆகும் எனச் சொன்னார்கள். சரி பத்து ரூபாய் செலவுக்கு இருக்கிறதே அதை வைத்து, காத்திருக்கும் நேரத்தில் சினிமா பார்க்கலாம் என முடிவு செய்தேன்.

அப்போது புதிதாய் ஆரம்பித்து பிரபலமாயிருந்த என்.எஸ். தியேட்டருக்கு சென்று காட்சிக்கான நேரத்தைப் பார்த்துவிட்டு மெதுவாய் நோட்டம் விட்டபோது அங்கு கும்பலாய் நான்கைந்துபேர். ஒரு மேசையில் துணியால் மூடி மையமாய் ஒருவர் கையில் உள்ள மூன்று சீட்டுக்களை சதிராடி மேசையில் தனித்தனியே போட்டு,

‘வாங்க சார் வாங்க, சரியா ஜோக்கர்ல வெச்சா, அஞ்ச வெச்சா பத்து, பத்த வெச்சா இருபது, ஐம்பத வெச்சா நூறு’ என சொல்லிக் கொண்டிருக்க, பணத்தை வைத்து விளையாடிய வண்ணம் சுற்றிலும் சிலர்.

மெதுவாய் எட்டிப்பார்க்க, ஒன்றில் அங்கிருந்த ஒருவர் பத்து ரூபாய் வைத்தார். அந்தச் சீட்டைத் திருப்பிக்காட்ட அது ஜோக்கராய் இல்லாததால் நடத்துபவர் பணத்தினை எடுத்துக்கொண்டு மீதமிருந்த இரண்டில் எதில் ஜோக்கர் என சொல்லுங்கள் இந்த பத்து ரூபாயைத் தருகிறேன்’ என எல்லோரையும் பார்த்துக் கேட்டார்.

நான் சொல்ல எத்தனித்து தயங்கி நிற்பதைப்பார்த்து சரியாய் சொல்லு தம்பி இந்த பத்து உனக்குத்தான் என்றார். கையை காண்பிக்க சரியாய் இருந்தது. பத்து ரூபாயை உடன் கொடுத்துவிட என்னுள் ஏகமாய் சந்தோஷம்.

அப்புறம் பக்கத்தில் இருப்பவர் என்னை உற்சாகப்படுத்தி இதில் வை அதில் வை என வைக்க சொல்ல, கொஞ்ச நேரத்தில் கையில் இருந்த எண்பது ரூபாயையும் இழந்து ராச்சியத்தை இழந்து நின்ற தருமனாய் நின்றேன், சொல்லித்தந்த அந்த சகுனியும் அவரது ஆள்தான் எனத் தெரியாமல். கடைசியாய் அவர் சரி தம்பிக்காக சொல்கிறேன், தம்பி பேர்ல நூறு ரூபாய், இதுதான் ஜோக்கர் என வாய் வார்த்தையில் ஒரு சீட்டினைக் காட்டி சொன்னார். திருப்ப அது ஜோக்கர்! ஆஹா விட்டதைப் பிடித்தாயிற்று என சந்தோசப்பட அடுத்த அதிர்ச்சி வந்தது.

‘நூறு ரூபாயக்காட்டு, நூறைத் தர்றேன்’ என சொன்னார். உடனே பக்கத்தில் இருந்த, வருவோர் போவோரை எல்லாம் கேட்க ஆரம்பித்தேன். ‘அண்ணா ஒரு நூறு ரூபாயைக் கொடுங்க, காட்டிவிட்டு கொடுத்துவிடுகிறேன்’ என. எல்லோரும் என்னை கன்னா பின்னா என திட்டி செல்ல அவர்கள் மேல் அப்படி ஒரு கோபம் வந்தது, என்ன மனிதாபிமானமே இல்லாதவர்கள் என. (பிறகு எவ்வளவு கேவலமாய் நடந்துகொண்டேன் என நெடு நாட்களுக்கு வருந்தினேன்). கடைசியில் எங்காவது போய் வாங்கி வா என சொல்லி அனுப்பிவிட்டார்கள். அழவில்லை, அதைத்தவிர எல்லாம்.

ஆட்டோ மொபைல்ஸ் வைத்திருந்த மாமாவின் கடைக்கு சென்றேன். ‘வா மருமகனே சௌக்யமா? வீட்டுக்கு போ அத்தை, புள்ளைங்க எல்லாம் இருக்காங்க! சாப்பிட்டுட்டுத் தான் போகனும்’ என சொன்னார். தயங்கி காசினை தொலைத்துவிட்டேன் என சொல்ல ஆரம்பிக்க பட்டென காசெல்லாம் தரமுடியாது என சொல்லிவிட்டார்.

வீட்டிற்கு திரும்ப செல்லுவதற்கும் மூன்று ரூபாய் வேண்டும். சென்றாலும் பணத்தினை திரட்ட முடியாது. என்ன செய்ய என குழம்பி கடைசியாய் ஒரு முடிவோடு வழக்கமாய் நகை செய்யும் பானு ஜுவல்லரிஸ் கடையை நோக்கி சென்றேன். கடையில் இருந்த என் உறவுக்கார அண்ணன் என்னை வரவேற்று உபசரித்து என்ன விஷயம் எனக் கேட்க, பணத்தினை தொலைத்துவிட்டதாய் சொன்னேன்.

உடன் எவ்வளவு வேண்டுமெனக் கேட்க, எண்பத்தைந்து ரூபாய் என சொன்னேன். பத்து ரூபாய் நோட்டுக்களாய் எண்ணி நூறு ரூபாயாகக் கொடுத்து கவலைப்படாமல் இருக்கச் சொல்லி அப்பாவிடம் சொல்லிக்கொள்கிறேன் எனச் சொன்னார். கடவுளாய் அவரை நினைந்து நன்றி கூறி கவலையை மறந்து துணிகளை வாங்கி திருமணத்துக்கு சென்றேன்.

இந்த உண்மையை சம்பாதிக்க ஆரம்பித்தபின் தான் தைரியமாக வீட்டில் சொல்ல முடிந்தது!

நனவோடை...

|

ற்றினைக் கடந்து ஏரிக்கு
ன்பு மகனை அரவணைத்து...
கோடியினின்று வழிந்து வரும் நீர் பார்த்து
ப்பா... இந்த தண்ணீர் எங்கு போகும்?
ழகாய் ஒரு கேள்வி...
ற்றுக்கு என பதில் சொல்ல,
ரிக்கு எங்கிருந்து வரும்?
ற்றிலிருந்துதான் பதிலால்
திகம் குழம்ப, சொன்னேன்...
லையில் பெய்த மழையால்
ற்றில் வெள்ளம், அணைகட்டி
ரியில் நிரம்பி வழிந்தோடி
ற்றில் மீண்டும்.
றிலிருந்து எங்கு செல்லும்?
டுத்த கேள்வி, கடல் சொல்ல
டலின் பின் கருத்தாய் கேட்க
வியாதல், மேகம், மழை, ஆறு...
...சுத்தி சுத்தி... புரிந்து மகிழ்வில்.
டுத்துமொரு கேள்வி அவசரமாய்...
ப்பா பூச்சி எப்படி கண்டுபிடிக்கும்
தன் குட்டிகளை, எல்லாம் ஒரே மாதிரியாய்...
விழிக்க, உடன் அடுத்த கேள்வி
பூச்சி எப்படி தூங்கும்?
தூக்கம் போயிற்று எனக்கு.

மாமாவுக்கு ஐம்பது...

|

கடவுள் எல்லோரோடும் இருக்க முடியாது என்பதால் தாயைப் படைத்தான் என்று சொல்லுவார்கள். ஆசானாக வாழ்க்கை முழுதும் வழிநடத்தும் ஒரு உறவாக தாய்மாமனைப் படைத்திருக்கக் கூடும் என நினைக்கிறேன்.

ஆம்! என் தாய்மாமாவோடு தாத்தா வீட்டில் தங்கியிருந்த அந்த ஒரு வருடம் என் வாழ்க்கை ஒரு களர் நிலத்தை விளை நிலமாக்கியதற்கு ஒப்பானது. நினைவு தெரிந்த நாள் முதல் நல்லதோர் நண்பனாகவும் அவருடனான என் நெருக்கம் என் வாழ்வின் மிகப் பெரிய வரம்.

நான்காவது படிக்கும் சமயம். காலையில் ஐந்தரை மணிக்கெல்லாம் படுக்கையை விட்டு எழுந்து, பாயினை சுருட்டி வைத்துவிட்டு சோப்பு, துண்டு என எல்லாம் எடுத்துக்கொண்டு அவரின் பின்னால் ஆட்டுக்குட்டி போல் தொடர்வேன், சொல்வதைக்கேட்டும், சந்தேகங்களை நிவர்த்தி செய்தும்.

காட்டுக்கு சென்று, ஏரிக்கரையில் காலைக்கடன்களை முடித்துவிட்டு அவர் ஒடித்துத்தரும் வேப்பங்குச்சியில் பல் துலக்கி, மோட்டார் கொட்டாய்க்கு வந்து இறைத்துக் கொண்டிருக்கும் தண்ணீரில் குளிக்க ஆரம்பிப்போம்.

எனக்கு உடல் முழுதும் சோப்பு போட்டு குறிப்பாய் முகத்தில் நன்றாய் தேய்த்து கண்களை திறக்காதவாறு செய்து அருகில் இருக்கும் கரும்புக்காட்டில் சுற்றி விட்டுவிடுவார். தண்ணீர் தொட்டிக்கு தேடி வர ஓரிரு நிமிடங்கள் ஆகும். தொட்டியில் என்னை முக்கி, நன்றாக குளிக்க வைத்து தலை துவட்டி சூரியன் மெதுவாய் தலைகாட்டும்போது வீட்டினை நோக்கி செல்வோம்.

தலைக்கு எண்ணெய் வைத்து, சீவி பள்ளிக்கு அனுப்பி வைப்பார். இதற்குள் பளிச் பளிச்சென்று நான்கு அறைகளாவது வாங்கியிருப்பேன் ஏதேனும் தவறு செய்து. இதற்கு அவரிடம் நிறைய கேள்விகளைக் கேட்டு, அதற்கு பொறுமையாய் புரியும்படி விளக்கியும் மறுநாள் திரும்பக் கேட்கும்போது சொல்லாததுவே காரணமாயிருக்கும்.

பள்ளியில் வைக்கும் தேர்வினைத் தவிர்த்து தனிப்பட்ட முறையில் வாராந்திரத் தேர்வு, மாதாந்திரத் தேர்வு என வைத்து என்னை தயார்ப் படுத்துவார். நூலகத்தில் புத்தகங்களை எடுத்துவந்து கொடுத்து என்னை படிக்கச்சொல்லி, அது பற்றி விவாதிக்கவும் செய்து படிக்கும் வேட்கையை அதிகப்படுத்தினார். நல்ல படங்களுக்கு என்னை அழைத்துச்சென்றும், பல வரலாற்றுக் கதைகளையும் சொல்லுவார்.

மாலையில் அவர் எனக்கு பாடம் நடத்தும்போது தான் ஒரே களேபரமாக இருக்கும். சரியான அடி விழும். வெளியில் ஆயா தாத்தா ‘ஊராமூட்டு புள்ளைய ஏன் இப்படி அடிக்கனும், எதுக்கு வம்பு’ என புலம்பிக் கொண்டிருப்பார்கள். மாமா சொல்லும் ஒரே பதில், ’அவன் நல்லதுக்காகத் தான் செய்கிறேன், இது அவனுக்கும் தெரியும்’. ஆம் எவ்வளவு அடித்தாலும் அடுத்த நிமிடமே மாமா என அவரிடம் ஒட்டிக்கொண்டு விடுவேன்.

என்னை விட்டு ஒரு நாளும் சாப்பிட்ட மாட்டார். முதலில் பிரபுவுக்கு கொடுங்கள் என சொல்லுவார். நிறைய அடி வாங்கினால் ஆத்தூருக்கு அழைத்து சென்று ஆரியபவன் ஸ்வீட்சில் நல்ல கவனிப்பு இருக்கும்.

’நான் பகலெல்லாம் அடிப்பதை இரவு புரண்டு புரண்டு படுத்து உதைத்து பழி வாங்கி விடுகிறான்’ என சொல்லுவார். ஆம், படுக்கும்போது அவர் அருகில் தான் படுத்துக்கொள்வேன்.  பள்ளி விட்டு வந்ததும் பையினை வைத்துவிட்டு ‘ஆயா, மாமா எங்கே?’ என்பது தான் என் முதல் கேள்வியாயிருக்கும். ’ம்..., ஊருக்கு போயாச்சு, கல்யாணம் கட்டிகிட்டாச்சு’ என விளையாட்டாய் சொல்லும்போது அழ ஆரம்பிக்க, ‘ம்... என்ன அடிச்சாலும் அவன்கிட்டயேதான் நீ ஒட்டிகிட்டிருக்கிற’ என சொல்லி காட்டில் தண்ணீர் கட்டிக்கொண்டிருப்பதாய் சொல்லுவார், சந்தோஷித்து அவரை நோக்கி ஓட ஆரம்பித்துவிடுவேன்.

கடிதம் எழுதக் கற்றுத்தந்து அவருக்கு நடக்கும் எல்லா விஷயங்களையும் கடிதம் மூலம் பகிரச் சொல்லி எனது எழுதும் ஆற்றலை வளர்த்தார். ஒருமுறை கிணற்றில் ‘குட்பால்’ விழுந்து விட்டது என கடிதத்தில் எழுத, எழாவது படிக்கிறவன் இது கூட தெரியாதா ‘ஃபுட் வால்வ்’ என திட்டி பதில் அனுப்பினார்.

ஆங்கிலத்தில் கடிதம் எழுதச் சொல்லி ஒவ்வொரு மடலுக்கும் தவறுகளை திருத்தி பதில் அனுப்புவார். தமிழில் வெண்பா, சிறுகதைகள், கவிதை என எழுதுவார். ஆங்கிலத்திலும் அருமையாய் கவிதைகள் எழுதுவார். பல விஷயங்கள் அவரைப்பார்த்துத் தான் இன்றும் செய்கிறேன். தமிழ் தவிர்த்து அழகாய் ஆங்கிலம், இந்து, உருது, மலையாளம் என பல பாஷைகளை பேசுவார்.

ஆங்கிலம் படிப்பது, அடிப்படை என சொல்லித்தந்தது அவர்தான். இந்தி படிக்க, எழுத தூண்டுகோலாய் இருந்தது அவர்தான். இன்று வலைப்பூவில் எழுதுவதற்கு மூல காரணமாயும், முதல் வாசகராயும் இருந்தும் ஊக்குவிப்பதும் அவர்தான்.

சிறு வயதில் கடவுளிடம் வேண்டும்போது ‘என்னை மாமாபோல் அறிவாளியாய் ஆக்கும்படி வேண்டுவேன்!’ கடவுள் என் வேண்டுகோளில் கொஞ்சம் ஏற்றிருப்பதால் தானோ என்னவோ என்னால் இன்றளவும் கொஞ்சம் எழுத முடிகிறது. அவரைப்பற்றி இன்னமும் நிறைய எழுதலாம். இடுகையின் நீளம் கருதி சுருக்க முடித்துக்கொண்டு அவர் சம்மந்தப்பட்ட பல விஷயங்களை அவ்வப்போது வரும் நாட்களில் பகிர்ந்துகொள்கிறேன்.

வாழையடி வாழை என்பது, இன்று மாமாவின் மகன் அருண் என்னோடு ஒட்டுதலாயும், என் மகன் விஷாக் அருணோடு ஒட்டுதலாய் இருப்பதைப் பார்க்கும்போது தான் தெரிகிறது.

என் நட்பாய், ஆசானாய், என்னை வழிநடத்தும் அன்பு மாமா சம்பத்குமார் அவர்களின் ஐம்பதாவது பிறந்தநாளான இன்று இந்த இடுகை மூலம் வாழ்த்துவதில் மிகப் பெருமையடைகிறேன்.

இன்னும் அவரிடம் படிக்க வேண்டியது ஏராளம். கற்றுத் தருவதிலோ அவர் தாராளம். எல்லாம் வல்ல இறைவனின் அருளோடு பல்லாண்டு வாழ்ந்து எம்மைச் செம்மைப் படுத்த உங்களோடு இறைவனை வேண்டுகிறேன்.

பிறந்த நாள் வாழ்த்துகளும், நெஞ்சம் நிறைந்த நன்றிகளோடு வணக்கமும் மாமா.

Many more happy returns of the day. Happy birth day.

கிறுக்கல்கள் என ஒரு வலைப்பூவை ஆரம்பித்து இன்னும் தொடராமல் இருக்கிறார், வேலைப்பளுவின் காரணமாய். அவரைக் காண இதை சொடுக்குங்கள், இதிலிருக்கும் விவரங்கள் அவரைப்பற்றி சொல்லும்...

டீலா நோ டீலா...

|

ஸ்காண்டல் டிவி யின் மக்கள் என் பக்கம் நிகழ்ச்சிக்காக காத்திருக்கும் நேயர்களே, இன்றைய சிறப்பு மக்கள் என் பக்கம் நிகழ்ச்சியில் கலந்துரையாடுவதற்காக சுவாமி நித்தியானந்தா, கேதன் தேசாய், மோடி ஆகியோர் வந்திருக்கிறார்கள். நேயர்களே ஒரு சிறிய இடைவேளைக்கு பின்பு உங்கள் மக்கள் என் பக்கம்....

(கோக்கு மாக்கு ஜ்வெல்லர்ஸின் அதிரடி விற்பனை. உங்கள் கேனைத்தனத்துக்கேற்ப அனைத்து டிசைன்களிலும் கம்மல் கடுக்கன் தள்ளுபடி விற்பனையில். முன் பதிவு செய்வோருக்கு ஓசியில் காது குத்தப்படும். குலுக்கல் முறையில் வாடிக்கையாளர் தேர்ந்தெடுக்கப்பட்டு தினமும் பத்து சூப்பர் கேனைகளுக்கு இலவச மொட்டையடிக்கப்படும்)

வணக்கம் நேயர்களே! உங்களுக்காக இன்றைய மக்கள் என் பக்கம் நிகழ்ச்சியை உங்களுக்கு அளிப்பதில் ஸ்காண்டல் டிவி என்றுமே முதலில் இருப்பது நீங்கள் அறிந்ததே. இன்றைய நிகழ்ச்சியில் ஆன்மீகத்தை உச்சகட்டத்துக்கு அழைத்துச் சென்ற நித்தி என பதிவர்களால் கேவலமாக அழைக்கப்படும் நித்தியானந்தா, கேவல தேசாயாக மாறிப்போன கேதன் தேசாய், கேடிப்பய மோடி ஆகியோரை சந்திக்க இருக்கிறோம்.. முதலில் நித்தி

நித்தி: ஆச்சாரியன் அய்யோ பாவம்
அயோக்கியன் நானும் பாவம்
அப்பாவிங்க நீங்கள் பாவம்
அதைவிட சாரு பாவம்.. நமஸ்காரம். அயோக்கியன்னு ஒத்துக்கிட்டதா புரளி எழுத வேண்டாம். அபாரம், அசாத்தியம்னு உயர்வா சொல்லுறது மாதிரிதான் நான் யோக்கியனை விட சிறந்தவன் என்ற அர்த்தத்தில் சொன்னது. இது எங்கயும் இதுவரையில் வெளிவராத கலிவேதத்தில இருக்கிற சுலோகம்.

ஃபிராட் பீதாம்பரம்: (அல்லோ! இது துட்டும்மா துட்டு. ஓசில அடுத்த ஆசிரமத்துக்கு விளம்பரம் குடுக்குறியோ) இப்போ நிகழ்ச்சிக்கு போகலாம் நித்தி அவர்களே. உங்களுக்கு சாமியாரா போகவேண்டுமென்று எப்படி ஐடியா வந்தது? ஏன் முடிவெடுத்தீர்கள்?

நித்தி: இது நானா எடுத்த முடிவில்லை. எல்லாரைப் போலவும் நான் பிறக்கவில்லை. நான் அவதாரம்னு எல்லாம் போட்டி டுபாக்கூர் சாமியார் மாதிரி சொல்லமாட்டேன். இட் ஜஸ்ட் ஹேப்பண்ட். திரேதாயுகத்தில் அபிமன்யுவாய் பிறந்தேன். கலியுகத்தில் நித்தி.

பி.பீ:(யப்பா சாமி! அடங்கமாட்டியா) ஆச்சர்யமா இருக்கே, எப்படி அந்த இரண்டுக்கும் தொடர்பு?

நித்தி: ஆம் குழந்தாய். அபிமன்யு கருவிலிருக்கும்போதே சக்கரவியூகத்துக்கு உள்ளே போகும் வித்தை அறிந்தது போல்தான் ஆகிவிட்டது என் பிழைப்பு. நான் கருவிலிருக்கும்போது என் அம்மா டூரிங் டாக்கீஸில் குரு சிஷ்யன் படம் பார்க்கப் போனதாக ஞானதிருஷ்டி மூலம் அறிந்தேன். படம் முடிய கொஞ்ச நேரம் வரை ரஜனி, பிரபுவின் டுபாக்கூர் சீன்களில் பலவற்றையும் அறிந்தேன். என் போறாத காலம் க்ளைமாக்சுக்கு முன்னாடியே வலி எடுத்து ஆஸ்பத்திரிக்கு கொண்டு போனதால், டுபாக்கூரிலிருந்து வெளியே வரத் தெரியாமல் மாட்டிக் கொண்டேன். அபிமன்யுவும் அப்படித்தான் என்பது உங்களுக்கு தெரியும். இதை நான் ஆராய்ந்து என் 2ம் வயதிலேயே கண்டு கொண்டேன்.

பி.பீ: (யோவ். விட்டா ரஜினியும் கர்நாடகா, ஆஸ்ரமமும் அங்கதான்னு ஒரு வில்லங்கத்த இழுத்து விடுவ. நீ கெட.) சரி சரி, அடுத்த ஃப்ராடை அறிமுகம் பண்ணுவோம், நமஸ்தே தேசாய் ஜி! நீங்க சொல்லுங்க உங்களைப் பற்றி.

தேசாய்: ரண்ட் ரூபா குடுக்கறியா? இல்லைன்னா உனக்கு நோ இண்டர்வியூ

பி.பீ: (ங்கொய்யால! லைவா ஓடுது பன்னாட. இப்பகூட புத்தி விடுதாய்யா) மன்னிக்கவும், நேரடி நிகழ்ச்சி என்பதை உங்களுக்கு நினைவுறுத்துகிறோம்..

தேசாய்: ஓ. சாடி சாடி. ஹம் ஏக் டாக்டர் ஹூன். மெடீக்கல் காவுன்ஸில் மே தலைவர் ஹூம். நாம லோகல் பார்ட்டி மட்டுமில்ல சேட்ஜி. அக்ல ஒல்க டாக்டர் கவுன்ஸில்கு சீஃப். நம்ம கெட்ட நேரம் இப்போ சீப்.

பி.பீ: (இது வேறயா?) சரி! இவ்ளோ பணத்தினை எப்படி அடித்தீர்கள்? அதையும் ரொக்கமா வீட்லேயே வைத்திருந்து எல்லோரையும் வியப்பிலல்லவா ஆழ்த்தியிருக்கிறீர்கள்?

தேசாய்: அங்கதான் நாமள் நிக்கிறான். உங்கள்கி தெர்யூம். சேட் உன் கைலே இருந்து சேட்கைலே துட்டு வர் வரைக்கும் வட்டீ போடுவான்! நான் இவ்ளோ துட்டு எதுக்கு கை மேலே வச்சிருப்பேன்? ஒன்னும் செய்வானாம். ஆயா நாம் மே, வேல்காரி நாம் மே பாங்க் மேலே போட்டிருந்தா எவ்ளோ வ்வட்டி வந்திர்க்கும்? சேட் முட்டாள் ஹை? பேவ்கூஃப் ஹை? நை! சிலர் ஸ்டாம்ப் சேர்ப்பாங்கோ, சிலர் காயின் சேர்ப்பாங்கோ. நான் கரன்ஸி சேர்த்து வச்சேன். இட் ஈஸ் ஜஸ்ட் அ ஹாபி அண்ட் ஏ தோ சோசியல் சர்வீஸ் பி ஹை.

பி.பீ: (டேங்கப்பா நிறுத்து சேட்டு). சரி சரி, அப்புறம் அந்த நகை, வைரம்லாம் என்ன கதை இது?

தேசாய்: சுனோ! எங்கனா சேட் தங்கம்கி ஆசை பட்ருக்கான்? நீ பய்ந்து பய்ந்து எட்துகினு வந்து சேட்கிட்டே துட்டுக்கு வர்து. சேட் நம்பல் என்ன பண்றான்? கைமேலே தூக்கி தூக்கி போட்டு விளாட்றான். அப்புறம் உன்னே மாதிரி மருவாதி குடுக்குறான். இல்லே. கல்லு மேலே வெச்சி சொறண்டுறான்.

பி.பீ: (யோவ். அப்டின்னா...) அப்படியென்றால்?

தேசாய்: வேட் வேட். நீ என்னா கேக்க போது? எத்கு லாக்கர் மே வச்சேதானே? அரே சைத்தான்! திரும்ப நீ கேட்டா குட்கணுமில்லே. சேட்ஜிக்கு பேர் ரொம்ப முக்கியம். அதுக்காகதான்.

பி.பீ: (ஒரே ஸ்ட்ரோக்ல மூணுக்கு ஒன்னு ஊழல மறைக்க பார்க்கறியே. உன்ன.. இரு அடுத்த டுபாக்கூர என்னான்னு கேட்டுட்டு வரேன்) அப்போ எல்லாம் அடமானம் வாங்கின நகை என்கிறீர்களா? சரி இது பற்றி பிறகு பேசுவோம். அடுத்த டுபாக்கூரை பார்த்துவிட்டு வருகிறேன். நமஸ்தே மோடிஜி.

மோடி: ஏய் என்னா சொன்னே? கேடிஜியா?

பி.பீ: (என்னதான் டுபாக்கூருன்னாலும் மனசாட்சி இருக்கும்ல) அய்யோ இல்லையில்லை, மோடிஜி என சொன்னேன். நீங்கள் சொல்லுங்கள்

மோடி: யோவ் எனக்கு வேல இல்ல. இங்க இருக்கற நேரம் 2 மேட்ச் ஃபிக்ஸிங்

பி.பீ: என்னது?

மோடி: யோவ் நீ நினைக்கிற ஃபிக்ஸிங் இல்லைய்யா. மேட்ச் ஏற்பாடுன்னு சொல்லவந்தேன். எவ்ளோ கோடி வந்திருக்கும் தெரியுமா?

பி.பீ: (அதாம்பா பிர்ல? இப்பிடி ஒரு வழி இருக்குன்னு தெரியாம கிரிக்கட் கண்டு பிடிச்ச வெள்ளக்காரனே அசந்து போய் நிக்கிறானாமே. ராணியம்மா கத்துதாம். இண்டியா விட்டு வந்தது பெரும்தப்புன்னு. அப்பா ஃபோட்டோ முன்னாடி நின்னு கவுண்டர் மாதிரி பொலம்புதாம்ல.) சரி நித்தி ஏதோ சொல்லத் துடிக்கிறார். (நித்தி நெளியறான். அவன் மேல ஒரு கண்ணு வச்சிட்டே இருக்கணும்) அவரைக் கேட்போம்.

பி.பீ: சொல்லுங்க நித்தி. எதற்காக இந்த மாதிரி வேலையெல்லாம். என்னவோ ஆராய்ச்சி என சொல்கிறீர்களாம். இப்படி ஆராய்ந்து ஆராய்ந்து தானே மக்கள் தொகை பிய்த்துக்க்கொண்டு போகிறது.... சைனாக்காரர்கள் இதிலேயும் முன்னோடியாயிற்றே?. அங்க போய் கற்றுக்கொள்ளலாமல்லவா?

நித்தி: இதெல்லாம் உனக்க்கு புரியாது குழந்தாய். உலகத்துல இதுக்கு அக்ரீமெண்ட் போட்டவன் எவனாவது இருக்கிறானா சொல்? அத வச்சி சூப் காச்சவா? இல்ல அக்ரீமெண்ட் போட்டு விவேக் காமெடில வராமாதிரி அட்வான்ஸ் கட்டி ரேப் பண்ண முடியுமா?

பி.பீ: (சூப்பர் சாமியார்யா நீ. ஆதித்யா சேனல் ஃபேவரிட்டா?) ஆமாம். இப்போது நீங்கள் என்னவோ நான் ஆம்பிளையில்லைன்னு என சொல்கிறீர்களே என்ன விஷயம்? அப்படியென்றால் நித்தியானந்தின்னு என்றல்லவா வைத்திருக்கவேண்டும்?

நித்தி: யோவ்! யான்னா ஆம்பிளைன்னு அர்த்தமா? சாப்டியா, போனியா, வந்தியான்னு கேக்கறதில்ல? அப்புடி நித்தியானந்தான்னு ஒரு கேள்வி! எப்புடீ

பி.பீ: (அய்யோ! கொல்றானே) சேட்டுஜி நீங்க சொல்லுங்க! அப்புறம் அவ்வளவு வைரம் வச்சிருந்தீர்களாமே! அது என்ன கதை?

கேதன்: ஸீ! கரண்ட் போனா நிம்பல் என்னா பண்றான். துட்டு இல்லாதவன் காடா வெள்கு கொள்துறான். சில பேரு எமர்ஜென்ஸி லைட். சில பேரு இன்வெர்டர். நம்பள் சேட்கி பெரீ வீடில்லே. நெர்யா வெள்ச்சம் வேணுமில்லே. அதுக்காக வைரம் சேர்த்து வச்சான். ஒரு கை வைரம் டேபிள் மே வெச்சி ஒரு டார்ச் வச்சா எவ்ளோ லைட் வரும் தெர்மா?

நித்தி: சேட்டு! ங்கொய்யால சிக்காம வெளிய வந்தேன், நான் உனக்கு சிஷ்யண்டா சாமீ. என்னா போடு போடுறாண்டா யப்பா?

பி.பீ: (யோவ்! கேடி சை மோடி. இங்க ப்ரோக்ராம் நடக்குதில்ல. அங்க என்னா எஸ்.எம்.எஸ்.?) சொல்லுங்கஜி! இவ்ளோ சீக்கிரம் இவ்ளோ கோடி அடிக்கிற ஐடியா எப்படி கிடைத்தது?

மோடி: ம்கும். இதுக்கு கோர்ஸ் படிச்சிட்டா வரணும்? மூட்டையடிக்க எவ்வளவோ வழியிருக்கு. சும்மா படிச்சிட்டு பரீட்சை எழுதிட்டு, வேலை கிடைக்கல, வெங்காயம் கிடைக்கலன்னு இருக்கானுவ. இப்போ பாரு எவ்ளோ அன்னிய செலாவணி நம்மளால வருமானம், என்னா தெரியாத்தனமா அந்த கேட்டிலுக்கு ஆப்பு புடுங்க போய் என் வாலும் சிக்கிரிச்சி. எல்லாம் என் நேரம்!

பி.பீ: நீங்க சொல்லுங்க நித்தி. ஆம்பிளையில்லை சரி, அப்போ பொம்பளையா?

நித்தி: மொதல்ல மனுஷனே இல்ல கடவுள்னு சொல்லித்தான் எல்லாரையும் கவுத்தேன். என்னை எல்லாரும் கவுக்கப்பாக்குறப்போ ஆம்பிளையே இல்லைன்னு சொல்றேன். நாளை என்னவாக மாறப்போகிறேன் என்பது எனக்கே தெரியாது. இதிலிருந்தே தெரியவில்லை நான் ஒரு அவதாரம் என்று

பி.பீ: (ங்கொய்யால, இப்படியெல்லாம் பேசித்தானே எல்லாரையும் கவுத்தே!) ம்... அப்புறம்?

நித்தி: காமத்தைப் பற்றி பெரும் ஆராய்ச்சியில் இருந்தோம், ஆணாய் மாறி பெண்களுடனும், பெண்ணாய் மாறி ஆண்களுடனும், இரண்டும்...

பி.பீ: (போதும் போதும் கப்பு தாங்கல...) சரி...சரி... மத்த இருவரையும் பார்க்கும்போது உங்களுக்கு என்ன தோன்றுகிறது?

நித்தி: தேசாயின் பெயரிலேயே தேசம் இருக்கிறது. ஆம், இவர் தனிமனிதராய் இவ்வளவு சம்பாதிக்கும்போது, அரசாங்கம் இதை முறைப்படுத்தினால் எவ்வளவு வருமானம் வரும்? ஒரு வருங்கால இந்திய பில்கேட்ஸை முடக்கி வைத்திருக்கிறார்கள். இன்னும் பல துறைகளிலும் இவரை தலைவராக்கி, வருமானத்தைப் பெருக்கி இந்தியாவை கடனில்லாத நாடாக மாற்றலாம். மோடி மஸ்தான் வித்தையினை கேள்விப்பட்ட பலரை, பார்க்கவைத்த இந்த புண்ணியவான் விளையாட்டை விளையாட்டாய் எண்ணாமல் அதை எப்படியெல்லாம் பணம் கொழிக்கும் வியாபாரமாக்கியிருக்கிறார்? இன்னும் பத்து அணிகளை உருவாக்கி அதில் வரும் வருமானத்தை பொதுவுடைமையாக்கி அத்தோடு என்னையும் ஆராய்ச்சி செய்ய ஒரு ஆய்வுச்சாலை அமைத்து கொடுத்தால் இந்த நாடு சுபிட்சம்....

பி.பீ: போதும் போதும். தேசாய் மற்ற இருவரைப்பற்றி உங்க கருத்து என்ன?

கேதன்: சீ, ப்ரைப சாமி சொன்னாப்ல நம்பள் கவர்மெண்ட் ரெகுலரஸ் பண்ணனனும்.

பி.பீ: மத்த ரெண்டு பேரையும் பற்றி கேட்டேன்.

கேதன்: மத்தவங்களப் பத்தி டிங்க் பண்ணியிருந்தா இவ்ளோ அடிச்சிருக்க முடியாது. அடிச்சதெல்லாம் எப்படி மாட்டிக்காம சேஃப் பண்ண நிம்பள் ஊர்ல இருக்கிற பொலிட்டிசியன்கிட்ட டியூசன் எடுத்திருந்திருக்கனும்.

பி.பீ: சரி கிணற்றுத்தவளையா இருந்தேன்னு ஒத்துக்கறீங்க... மோடி சார், உங்க கருத்து மத்த ரெண்டு பேத்த பத்தியும்?

மோடி: நாமளும் சாமி பண்ணின வேலையெல்லாம் சைலண்ட்டா பண்ணினோம், ஆனா மாட்டிக்கல. பத்தாயிரம் கோடி பண்ணினாலும் பதிவிசா பதுக்கத்தெரியனும். கேதன் ரொம்ப அப்பாவியா விவரமே தெரியாம இருந்திருக்காரு. சாமி லைவ் டெலிகாஸ்ட் செஞ்சி இன்னும் பாப்புலர் ஆக்கியிருக்கனும்.

நித்தி: (ங்கொன்னியா... கொளுத்தி பால் தெளிக்காம விட மாட்டாங்க போலிருக்கு)

பி.பீ: இப்போ நிகழ்ச்சியோட இறுதிப்பகுதிக்கு வந்திருக்கோம். அதுக்கு போறதுக்கு முன்னாடி ஒரு குட்டி (நித்தி: எங்க? எங்க? கேதன்: அதெல்லாம் இல்ல புல் செட்டில்மெண்ட் தான்... மோடி: இங்கயும் வந்திருக்கான்னே?) பிரேக்.

(கடன் தொல்லையா? வியாபாரத்தில் நட்டமா? மகள் படிக்கவில்லையா? மகன் ஊர் சுற்றுகிறானா? மனைவி சொல்பேச்சு கேட்கவில்லையா? உடனே நீங்கள் நாடவேண்டிய இடம் சுவாமி பைத்தியானந்தா ஆஸ்ரமம், கீழ்ப்பாக்கம் சென்னை 10. இருபத்திநாலு மணிநேர சேவை உண்டு.அறிமுகப்படுத்தும் ஒவ்வொருவருக்கும் கமிஷன் உண்டு)

பி.பீ: கடைசியா ஒரு கேள்வி உங்க மூனு பேர்கிட்டயும். இந்த மாதிரி மாட்டிக்காம இருந்திருந்தா எதிர்காலத்துல என்ன செஞ்சிருப்பீங்க. முதல்ல நித்தி.

நித்தி: கிருஷ்ணபகவானே மோகினி வேடம் பூண்டு சிவனை மயக்கியதுபோல் எல்லாவற்றையும் கற்று தெளிந்து எல்லோருக்கும் கற்றுக்கொடுத்த்து இந்த பூவுலகையே பல அவதாரங்களால் அசத்தியிருப்பேன். வாழ்வின் அர்த்தத்தை எல்லோரும் விளங்கும்படி செய்திருப்பேன்.

கேதன்: ரிசர்வ் பேங்கே நம்பள்கிட்ட வட்டிக்கு வாங்கறாப்ல செஞ்சிருப்பேன். கிராமத்துக்கு ஒரு மெடிக்கல் காலேஜ் ஆரம்பிச்சி இண்டிய பாபுலேசன்ல பாதிய டாக்டரா ஆக்கியிருப்பேன்.

மோடி: இப்பவே எஸ்.எம்.எஸ் ல கோடிக்கணக்கா சம்பாதிச்சிகிட்டுத்தான் இருக்கேன். சொன்னா நம்பமாட்டீங்க, சந்திர மண்டலத்துல கிரிக்கெட் நடத்தியிருப்பேன். அங்க சிக்ஸர் அடிக்கிற பந்தெல்லாம் இந்தியா முழுசும் விழற மாதிரி செஞ்சிருப்பேன்.

பி.பீ: கேக்கிறவன் கேனையின்னா கேப்பையில் நெய் வடியுதுன்னு சொல்லுவாங்கன்னு கேள்விப்பட்டிருக்கோம், இன்னிக்கு நேர்லயே பார்த்தோம். உங்க மூனு பேருக்கும் எங்க ஸ்காண்டல் டிவி சார்பாவும் ஊழல் செஞ்சி முன்னேறத் துடிக்கிற எங்க டிவி நேயர்கள் சார்பாவும் நன்றியை தெரிவித்துக்கொண்டு மீண்டும் இன்னுமொரு சுவராஸ்யமான நிகழ்ச்சியில் சந்திக்கலாம் என சொல்லி வணக்கம் கூறி விடை பெறுவது உங்கள் ஃபிராட் பீதாம்பரம்...

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB