நவீன கர்ணன்...

|

மெயின் ஃப்ரேம் படித்து அமெரிக்கா செல்லும் கனவோடு வேலைத் தேட சென்னை செல்லலாமென முடிவு செய்தேன்.  அத்தை மகன் முருகவண்ணன் (அழகு நிறத்தான் என அடிக்கடி சொல்லிக் 'கொல்லுவான்', கொஞ்சம் கலர் கம்மி என்பதால்) தனது ரூமிற்கு வரச்சொல்லி அழைத்தான்.

சிங்காரச் சென்னை நோக்கி விடை பெற்று கிளம்ப, அதிகாலை நான்கு மணிக்கே திருவள்ளுவர் சைதாப்பேட்டையில் விட்டுவிட்டார்கள்.  வரவேற்க (முதல் தடவையா வர்றேன்ல...) முருகன் போர்வையை போர்த்தி (ரொம்ப கற்பனை வேண்டாங்க, குளிருக்கு அவன் போர்த்தியிருந்தான்னு சொல்ல வந்தேன்) இருந்தான்.

சைதை தாடண்டர் நகரைத்தாண்டியவுடன் இடது புறம் சென்றால் திநகர். அதற்கு முன்பாகவே வலதுபுறத்தில் இருந்தது பேன்பேட் ஸ்ட்ரீட் 45 ல் அவனது முதலாளியின், கோர்ட்டில் நிலுவையில் இருக்கும் அவன் தங்கியிருந்த இடம்.

சினிமாக்கனவுகளோடும், சாஃப்ட்வேரில் வேலை வாங்கும் எண்ணத்தில் வருவோருக்கும், சென்னைக்கு ஏதேனும் வேலையாய் வரும் எங்கள் ஊரைச் சேர்ந்த பலருக்கும் மிக உதவியாய் இருந்த எழுபது சதம் சிதிலமடைந்த வீடு அது. நுழையும் இடத்தில் மட்டும் இடியாமல் இருக்க, இரு அறைகள். எதிரில் குளிக்க மற்றும் கழிப்பறை. மாடிக்கும் சுவரேறிச் செல்லலாம், அங்கு ஒரு அறை. ஆனால் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் தருவாயில் இருக்கும். காலையில் இரண்டு மணிநேரம் மெட்ரோ வாட்டர் வரும். அதற்குள் குளித்து துவைத்தும் எல்லாம், எல்லோரும் முடித்துக் கொள்ளவேண்டும்.

ஒரே ஒரு விளக்கு,மெழுகுவர்த்தி வெளிச்சம் இதைவிட  கொஞ்சம் பிரகாசமாக இருக்கும். மழை பெய்தால் பாத்திரங்களை வைத்து தண்ணீர் மற்ற இடங்களுக்கு பரவாமல் பிடித்து நிரம்ப நிரம்ப வெளியே ஊற்றி விளையாடலாம்.

அறைக்கு வந்து சூட்கேசை வைத்துவிட்டு பேருந்தில் சரிவர தூங்காததால் உடன் கண்ணயர்ந்தேன். கொஞ்ச நேரம்தான் தூங்கியிருப்பேன்.

’டேய் பிரபு தண்ணி வரும்போதே குளிச்சிக்கோ’ என முருகன்  சொல்ல எழுந்தேன். அப்போது அவனும் அங்கு தங்கியிருந்த தினம்தோறும் படத்தில் உதவி இயக்குனராக வேலை செய்துகொண்டிருந்த குமாரவேல் என்பவரும் குளித்து பல் விளக்கி சாப்பிடச் செல்லத் தயாராயிருந்தார்கள்.

'பிரபா என்ன பேஸ்ட் அது, அப்படி சூப்பரா நுரை வருது... பாருங்களேன்' எனச் சொல்லி வழிந்துகொண்டிருந்த நீரைப் பிடித்து கொப்பளிக்க நுரை நுரையாய் வந்தது. ’ஆமாம் எந்த பேஸ்ட்டில் விளக்கினீங்க’ எனக்கேட்டேன். என் பையில் இருந்ததை எடுத்து முருகன் கொடுத்ததாக சொன்னார். உடனே பலமாக சிரிக்க ஆரம்பித்துவிட்டேன். பையில் இருந்தது பாமோலிவ் ஷேவிங் கிரீம்.

‘அய்யய்யோ வாய் ஒன்னும் ஆகலையா’ எனக் கேட்டதற்கு ’கொஞ்சம் எரிச்சலா இருந்துச்சி, கேட்டதுக்கு பிரபு ஏதாச்சும் மெடிகேட்டட் பேஸ்ட் வைத்திருப்பான்’ என முருகன் சொன்னதா சொன்னார்.

குளித்து கிளம்பி, காலையில் அருகே இருக்கும் ஒரு பாட்டியின் வீட்டில் தோசை குட்டி குட்டியாய் சூடாக சாப்பிட்டோம். காரமாய் சட்டினி, இரண்டு ஒரு ரூபாய். பலமாய் சாப்பிட்டுவிட்டு வேறிடத்தில் இருந்த ஒரு நண்பனைப் பார்த்துவிட்டு திரும்ப ரூமிற்கு வந்தேன்.

இஞ்சினீயரிங் முடித்து சினிமாக்கனவில் இருக்கும் எனது பால்ய நண்பன் வேலு வந்திருந்தான். (இன்று தெக்கத்தி பொண்ணு சீரியலின் எபிசோட் டைரக்டர், மற்றும் வில்லனாக நடிக்கிறான்). ’என்னடா வந்துட்டியா? ஒழுங்கா படிச்சிட்டு வேலையைத் தேடு’ என சொன்னான்.

கொண்டு வந்திருந்த சூட்கேஸ் திறந்திருந்தது. அவசரமாய் உள்ளேப் பார்க்க பகீரென்றிருந்தது, கால்பாகம் காலியாக இருந்ததால்! புதிதாய் வைத்திருந்த நான்கு பனியன்கள், இரண்டு சட்டைகள், டூத் பிரஷ்கள், பேனாக்கள் என நிறைய காணவில்லை. ’எங்கேடா வேலு காணும்’ எனக் கேட்டதற்கு, எல்லோருக்கும் கொடுத்துவிட்டதாகச் சொன்னான்.

'என்னுடையதை எடுத்து ஏண்டா கொடுத்த, உன்னுடையதக் கொடுக்க வேண்டியதுதானே?'  என கோபமாய் கேட்டதற்கு, 'இருந்தாதானே கொடுக்கறதுக்கு... இங்கே வந்தால் எல்லாம் நம்முடையது. அவனவன் ஒரு பனியன் கூட இல்லாம இருக்கான், குச்சில பல்லு விளக்கிட்டிருக்கான், எழுத பேனாவே இல்லாம இருக்கான்! உனக்கு மட்டும் எதுக்கு இத்தனை’ எனக் கேட்டான்.

கொலை வெறி வந்தாலும் அவன் கேட்ட விதம், அப்போது மனதில் தோன்றிய ஒரு பழமொழி ஆகியவற்றால் வலியோடு சிரித்தேன். பின்னூட்டத்தில் அந்த பழமொழியைச் சொல்லுங்களேன்!

7 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

அமுதா கிருஷ்ணா said...

தொண்டை வரைக்கும் வருது அந்த பழமொழி...ஓகே அதுவா முக்கியம்..நல்லாயிருக்கு பதிவு அந்த சூடான குட்டி தோசை போல...

vasu balaji said...

ஊராமூட்டு நெய்யேவா? நீ வாடி! வேலுகிட்ட போட்டு குடுக்கறேன்:))

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

கடை தேங்காய எடுத்து வழி பிள்ளையாருக்கு உடைச்ச கதையாய்

ஈரோடு கதிர் said...

கர்ண மகா பிரவு..

வாடி வா...

ஈரோட்டல ஒரு சேவிங்கிரீம் வாங்கி வைக்கிறேன்...

ரோஸ்விக் said...

அடடா வேலு மாதிரி நான் விவரம் இல்லாமப்போயிட்டேனே! உங்க சூட்கேசு திரும்ப கையில சிக்காமையா போயிடும்... :-))

Punnakku Moottai said...

தம்பி ரோசு,

நான் அந்த பெட்டிய தொறந்து பார்த்துட்டேன். பெரிய shock . இப்பெல்லாம் அது காலியாத்தான் இருக்கு. கேட்டாக்கா, "ஒன்கிட்ட ஏதாவது இருந்தா பெட்டிக்குள்ள வச்சிட்டுபோ" ன்னு சொல்லறாரு பிரபா.

அதனால கனவெல்லாம் காணாதே.

Paleo God said...

// நீ வாடி! வேலுகிட்ட போட்டு குடுக்கறேன்:))//

//கர்ண மகா பிரவு..

வாடி வா...

ஈரோட்டல ஒரு சேவிங்கிரீம் வாங்கி வைக்கிறேன்..//

ஆயிரம் அம்புகள் தைத்தாலும் அசராமல் படுத்துக்கொண்டே ஜெயிக்கும் நவீன பீஷ்மர் ’பிரவு’ வாழ்க!!

//நான் அந்த பெட்டிய தொறந்து பார்த்துட்டேன். பெரிய shock . இப்பெல்லாம் அது காலியாத்தான் இருக்கு. கேட்டாக்கா, "ஒன்கிட்ட ஏதாவது இருந்தா பெட்டிக்குள்ள வச்சிட்டுபோ" ன்னு சொல்லறாரு பிரபா. //

ஓஹோ அதான் அனானி கமெண்ட்கூட ஓபன்ல இருக்கா?? விவரந்தான் :)

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB