பிட் படமும் உடற்பயிற்சி வாத்தியாரும்...

|

ப்ளஸ் ஒன் படிச்சிட்டிருந்த சமயம். பறங்கிமலை ஜோதி மாதிரி, ஆத்தூர் ராமச்சந்திரா தியேட்டர்ல மேட்டர் படம் போடுவாங்க.

அங்க படம் பாக்கறதுன்னா பெரிய பிராயத்தனம் பண்ண வேண்டியிருக்கும்.

மொதல்ல அந்த பஸ் ஸ்டாப்புல இறங்குறதை நம்ம ஊர்க்காரங்க பாக்கக்கூடாது.

ஆர்வத்துல வர்ற சொந்த பந்த கிழங்கள் பாக்கக்கூடாது.
பாத்துட்டாங்கன்னா,

'பையன் ரொம்ப பெரிய ஆளாயிட்டான் போலிருக்கு, எங்கெங்கேயோ சுத்தறா' ன்னு பூடகமா கோத்து விடுவாங்க.

அப்புறம் குறிப்பா ஃபிரண்ட்டோட அப்பாவ அந்த ஏரியாவுல, தியேட்டருக்குள்ள பாக்கக்கூடாது.

அப்புறம் நம்மள பாத்தாலே கொலை குத்தம் பண்ணினமாதிரி,

'இவங்கூட சேராத, உருப்பட மாட்டேன்னு' சொல்லுவாரு, அவரு மகன் தான் நமக்கெல்லாம் குருங்கற விஷயம் தெரியாம.

நாங்க ஒரு நாலு பேரு போயிருந்தோம். நாலைஞ்சி படத்த கலந்து ஓட்டினாங்க.

'என்னடா, கதம்பமா ஓடுதுன்னு கேட்டதுக்கு,

'டேய், கோழி குருடா இருந்தா என்னடா, குழம்பு ருசியா இருந்தா போதாதான்னான்' ஒரு ஃபிரண்டு.

இடைவேளை வரையிலும் ஒன்னுமே இல்ல. பிரேக்ல பாத்தா கீழ செகண்ட் கிளாஸ்ல நம்ம உடற்பயிற்சி ஆசிரியர் உட்கார்ந்திருந்தார்.

நம்ம ஆளுங்கள்ல ஒருத்தன் கவனிச்சு சொன்னதும், சட்டென பென்ச்சையெல்லாம் தாண்டி குதிச்சி (கிளாஸ் விட்டு கிளாஸ் மாறும்போது) அவருக்கு முன்னாடி போய் நின்னேன்.

'சார் குட் ஆஃப்டர் நூன்'னு சொன்னேன். மனுஷன் அப்படியே வேர்த்து விறுவிறுத்து போயிட்டாரு. சுத்தி முத்தியும் பாத்துட்டு வணக்கம் சொல்லிட்டு தலையை குனிஞ்சிகிட்டாரு.

திரும்ப பசஙகிட்ட வந்து திரும்பி பாத்தா அவர காணோம்.

'ஆனாலும் உனக்கு ரொம்ப திமிருடா... அவரு நீ வணக்கம் சொன்ன உடனே எழுந்து போயிட்டாரு' ன்னானுங்க.

அதுக்கப்புறம் அவரு ஸ்கூல்ல எங்க பாத்தாலும் தலையை குனிஞ்சிக்குவாரு.

கொஞ்ச நாள் கழிச்சு ப்ளஸ் டூ பசங்களுக்கும் எங்க கிளாஸ் பசஙகளுக்கும் ஹாக்கி மட்டை விஷயமா தகறாறு.

ஓடிவந்து சொன்னானுங்க.

அவசரமா பி.இ.டி சார் ரூமுக்கு ஓடினேன்.

நிலம ரொம்ப மோசமா இருந்தது. அவரு ப்ளஸ் டூ பசங்களுக்கு ஆதரவாய் பேசிட்டிருந்தாரு. எங்க பசங்க நொந்து போய் வாதாடிட்டு இருந்தானுங்க...

நேரா அவருகிட்ட போய், 'சார், என்ன நடக்குது இங்க' ன்னேன்.

என்ன பாத்ததும் டக்குனு அப்படியே கதைய மாத்தி, ப்ளஸ் டூ பசங்கள பாத்து,

'தம்பிங்களா, அவங்க சின்ன பசங்க, பெரியவங்க நீங்கதான் அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு போகனும், உங்களுக்கு பப்ளிக், ஒழுங்கா பரிட்சைக்கு போய் படிங்க' ன்னுட்டு எங்களை பாத்து,

'நீங்க பேட்டை எடுத்துட்டு போய் விளையாடுங்க' ன்னாரு.

அதுக்கப்புறம் ஒன்றரை வருஷம் அந்த சம்பவத்தால பசங்க மத்தியில ஹீரோவா இருந்தேன்.

அவரும் அதுக்கப்புறம் சினேகமாயிட்டு ஸ்போர்ட்ஸ் சம்மந்தமா எல்லா உதவியையும் செஞ்சாரு.

சப்ஸ்டிடூட்டாவாவது போட்டு எல்லா சர்டிஃபிகேட்டும் கொடுத்தாரு.

எனக்கே தெரியாது

|

பத்தாவது படிச்சிட்டிருந்தேன். மூனாவது ரேங்க் தான் எப்பவும். வேலு ஃபர்ஸ்ட், முருகன் செகண்ட்.

அறிவியல் பாடத்தை எடுக்கிற சாரை, 'சைன்ஸ் அய்யா' ன்னு தான் கூப்பிடுவோம்.

நல்லா கிளாஸ் எடுப்பாரு. கேள்வி நிறைய கேப்பாரு. பதில் சொல்லலைன்னா குச்சில பின்னுவாரு.

நல்லா படிக்கிற பசங்க மேல ரொம்ப பாசமா இருப்பாரு.

வெளியூர்ல இருந்து வேலை பாத்ததினால தனியா வாடகை வீடு எடுத்து தங்கியிருந்தாரு. குடும்பம் பத்தின விவரங்கள் எங்களுக்கு தெரியாது.

குளிக்க போகும்போது அவரோட கூட்டிட்டு போவாரு. சுத்தமா துவைச்சி நீலம் போட்டு கிளீனா வெச்சுக்குவாரு.

எண்ணை போட்டு மீசையை நல்ல தடவி கொடுப்பாரு.

அன்னிக்கும் வழக்கம்போல் நேத்தி நடத்துன பாடத்துல இருந்து கேள்வி கேக்க ஆரம்பிச்சாரு.

அவரு கிளாஸ்னா ரொம்ப ஆர்வமா கவனிப்பேன். எல்லா கேள்விகளுக்கும் பெரும்பாலும் பதில் சொல்லிவிடுவேன்.

வேலுவும் முருகனும் நன்றாக படித்து முதல் இரு இடங்களை பிடித்தாலும், நடத்தும் போது கவனிப்பது, பதில் சொல்லுவதில் நான் தான் ஃபர்ஸ்ட்.

வழக்கம்போல் கேள்வி கேட்க ஆரம்பிச்சார். பாப்பாத்தி, செந்தாமரை, கனகவள்ளின்னு பொண்ணுங்க பக்கத்துல இருந்து ஆரம்பிச்சது.

யாரும் சொல்லல. அப்புறம் சுப்பு, அழகு, வெங்கி... வேலு, முருகன்னு வந்துச்சி, யாருக்கும் ஆன்ஸர் தெரியல.

கடைசியா என்ன கேட்டார்.

கெத்தா, 'ஐயா எனக்கே தெரியாது'ன்னேன்.

பொசுக்குனு அவருக்கு கோவம் வந்துடுச்சி.

'நீ என்ன பெரிய புடுங்கியா, எனக்கே தெரியாதுன்னு சொல்றே'ன்னாரு.

ஊசி குத்துன பலூன் மாதிரி ஆயிட்டேன், அவமானமா போயிடுச்சி.

அப்புறம் அதிகமா பேச மாட்டேன்.

பப்ளிக் எக்ஸாம் பக்கத்து ஊர்ல ஹையர் செகண்டரி ஸ்கூல போய் தான் எழுதனும்.

கடைசிக்கு மொதலா சைன்ஸ் எக்ஸாம். நல்ல பண்ணினோம். முடிச்சிட்டு பஸ்ஸில வந்து இறங்கினோம்.

பஸ் ஸ்டாப்பிலேயே சைன்ஸ் ஐயா உட்காந்திருந்தாரு.

'பசங்களா எபபடி எழுதினீங்க'ன்னாரு.

எல்லாரும் சூப்பர்னு சொன்னாங்க.

என்ன பாத்தாரு. 'எப்படிடா பண்ணிருக்கே'ன்னாரு.

'சுமாரா பண்ணிருக்கேன் ஐயா' ன்னேன்.

கொஞ்சம் அதிர்ச்சியாகி,

'டேய் உன்னத்தான்டா மலை மாதிரி நம்பிருந்தேன், என் பேப்பர்ல ஃபஸ்ட் எடுப்பன்னு, சரி ஒரு மார்க்ல எத்தனை ரைட்?' ன்னாரு.

'நாப்பதுக்கு முப்பத்தொம்போது ரைட்' ன்னேன்.

'சரி, ரெண்டு மார்க்ல?'

'பதிமூனு சரி, ரெண்டு கதை விட்டிருக்கேன்'.

பதிமூனு ரெண்டு இருவத்தாறு, சரி அஞ்சி மார்க்?

நாலு சரி, ஒன்னு முடிக்கல, டைம் பத்தல'ன்னேன்.

கணக்கு பண்ணி 'தொண்ணுறு வரும் போல இருக்கேன்' னாரு.

நமட்டு சிரிப்பா அவர குறு குறுன்னு பாத்தேன்.

வேலு, 'சூப்பரா எழுதியிருக்காய்யா, அவந்தான் ஃபஸ்ட் வருவான்'ன்னான்.

'டேய் பையா, எனக்கு இப்பதான் புரியுது, அன்னிக்கி கிளாஸ்ல சொன்னத ஞாபகம் வெச்சிருக்கியா? வாழ்க்கையில எனக்கேன்னுனு எப்பவுமே ஏகாரத்தோட பேசக்கூடாது, உன் நல்லதுக்குதான் சொன்னேன்' னாரு.

இன்னிக்கும் நான் எனக்கேன்னு சொல்லமாட்டேன்.

யாராவது நெருக்கமானவங்க அப்படி சொன்னா கமென்ட் பண்ணியும், தெரியாதாவங்க சொன்னா மனசுக்குள்ளயே விமர்சிச்சிட்டு சைன்ஸ் ஐயாவை நினைச்சுக்குவேன்.

சுரேந்திரன் அடிச்ச பிட்...

|

அஞ்சாவது படிக்கும் போது ஹெட் மாஸ்டர் பாலசுப்ரமணியம் சார் தான் கிளாஸ் டீச்சர் (டி.வி.எஸ் வெச்சுருந்தாரே அவர் தான். இன்னும் தெரியலன்னா டி.வி.எஸ் படிங்க).

அவரை நினைச்சாலே இன்னமும் பயமா இருக்கு. ரொம்ப ஸ்டிரிக்ட். எதாவது தப்பு பண்ணினா அடி பின்னிடுவாரு.

படிக்கல, வீட்டுப்பாடம் எழுதலைன்னா தொலைஞ்சோம்.

நல்லா படிக்கிற பசங்க கூட அவர் கிட்ட பயந்துகிட்டு தான் இருப்பாங்க.

நாலாவது வரை கவலை இல்ல, வெவ்வேற வாத்தியார்கிட்ட படிச்சோம்.

சுரேந்திரன் என் கிளாஸ்மேட். படிக்கவே மாட்டான். எழுத்து கூட்டி தப்பு தப்பா படிப்பான், அதுவும் எஙகிட்ட மட்டும்.

படம் வரைந்தேன்னு எதுத சொன்னா, பாடாம் வறைந்தெண்னு எழுதுவான்.

வாத்தியாரு கேட்டா பேசவே மட்டான்.

நாலாவது வரைக்கும் எப்படியோ தப்பிச்சுட்டு வந்தவன் வசமா அஞ்சாவதுல சிக்கிட்டான்.

சுரேந்திரான்னு கேள்வி கேட்டாலே கையை நீட்டி அடி வாங்க தயாராகிடுவான்.

'வலிக்குது சார் மெதுவா அடிங்க சார், போதும் சார்'... இதுதான் அவன் அதிகமா பேசற வார்த்தைகள்.

பாடம் நடத்தும்போது அடிக்கடி ஒன்னாச்சி போறேன்னு கேட்பான்.

விளையாட்டுக்கு சார் ஒருநாள், 'எத்தனை தடவை போவே, பேசாம ஒரு டப்பா கட்டிட்டு வந்துடு' ன்னாரு.

அடுத்த நாள் கிளாஸ் முடியற வரைக்கும் அவன் ஒன்னாச்சிக்கு கேட்கவே இல்ல.

சார் ஆச்சர்யப்பட்டு, 'டேய் என்னது அதிசயமா இருக்கு, மொத தடவையா வெளிய போறதுக்கு கேக்காம இருக்க, பரவயில்லயேன்' னாரு.

அவன் ஒன்னுமே பேசலை. வழக்கம்போல அவன் வீட்டு பாடம் எழுதிட்டு வரலை.

பென்ச் ஐ விட்டு வேளியே வர சொன்னாரு, அடி போடறதுக்கு. ஒரு மாதிரிய காலை கிளப்பிட்டு வெளியே வந்தான்.

டிராயர்ல ஏதோ புடைச்சிட்டு இருக்கவும் தட்டி பாத்தாரு. டங்குனு சத்தம் கேட்டுச்சி.

என்னடான்னு டிராயர அவுக்க சொல்லி பாத்தா நேத்து சார் சொன்ன மாதிரி உள்ள சின்னதா ஒரு காலி எக்காலக்ஸ் டப்பாவை கயிறு போட்டு அரைஞான் கயித்துல கட்டிட்டு வந்திருந்தான். பாதி நிரம்பியிருந்துச்சி.

சார் விழுந்து விழுந்து சிரிச்சு அன்னைக்குதான் நாங்க எல்லொரும் பாத்தோம்.

ஆனா பரிட்சையில மட்டும் பதில் எழுதி பாஸ் மார்க் வாங்கிடுவான்.

சாருக்கு ரொம்ப நாளா சந்தேகம் எப்படி பரீட்சையில மட்டும் எழுதறான்னு.

எங்ககிட்ட விசாரிச்சாரு, தெரியாதுன்னு சொல்லிட்டோம்.

அன்னிக்கு மாதந்திர தேர்வு. மரத்தடியிலதான் வரிசையா உட்காந்து எழுதுவோம்.

அட்டை பேப்பர் எல்லாம் எடுத்துட்டு, வரிசையா கிளம்பிட்டு இருக்கறப்போ அவன் ஹேர் ஸ்டைல பாத்துட்டு ஹெட்மாஸ்டர் சுரேந்திரன் கிட்ட வந்தாரு.

தலையை தூக்கி சீவி, சிவாஜி ஸ்டைல்ல முன்னாடி குருவிக்கூண்டு மாதிரி சீவியிருந்தான்.

ஒழுங்கா படிய, எண்ணை வெச்சு தான் சீவிகிட்டு வரனும்.

திட்டி அவன் தலை மயிரை புடிச்சி அப்படியே ஆட்டி அடி விடும்போதுதான் கவனிச்சாரு, தலை முடிக்குள்ளருந்து ஒரு பிட் பேப்பர் விழுந்துச்சி.

எடுத்து பாத்துட்டு ரொம்ப டென்ஷன் ஆயிட்டாரு. அஞ்சாவதிலேயே உனக்கு பிட்டு கேக்குதான்னு கன்னத்திலே பொளேர்னு அறை விட்டுட்டு பிரம்பெடுத்து விளாச ஆரம்பிச்சிட்டாரு.

வேற எங்கெல்லாம் வெச்சுருக்கன்னு கேட்டு செக் பண்ண, சட்டை மடிப்புல, டிராயர் மடிப்புல, பென்சில் பாக்ஸ்லன்னு நிறையா வெச்சுருந்தான்.

பிரம்பு உடைஞ்சு போச்சு. அடிச்சி களைச்சி போய், உன் அப்பாவ கூட்டிட்டு தான் கிளாசுக்கு வரனும்னு சொல்லவும், கதறிக்கிட்டே,

'சார் நாளைக்கு கூட்டிட்டு வர்றேன், இன்னைக்கு பரிட்சை எழுதிட்டு போறேன் சார்'னான்.

'சரி எழுதித் தொலை' ன்னுட்டு உள்ள போயிட்டாரு.

அதுக்குள்ளா நாங்க எல்லாம் மரத்தடியில உக்காந்து எழுத ஆரம்பிச்சுட்டோம்.

சார் அந்த பக்கம் போன உடனே, கண்ணை தொடைச்சிட்டு, எங்களை ரகசியமா பாத்து சிரிச்சான்.

என் பக்கத்தில இருந்த மரத்தடியில உட்காந்து சுத்தியும் பாத்துட்டு, மண்ணை தோண்டி பிட் பேப்பரை எடுத்து பாத்து எழுத ஆரம்பிச்சுட்டான்.





கொய்யான்

|


ரெண்டு வருஷத்துக்கு முன்னால ஊருக்கு போயிருந்தப்போ என் தம்பியோட தறியில புதுசா ஒருத்தன் வேலைக்கு சேர்ந்திருந்தான்.
பாக்க ரொம்ப அப்பாவியா தெரிஞ்சான். பேரு என்னான்னு கேட்டதுக்கு, 'கொய்யான்'னு சொன்னங்க.
துருவி கேட்டப்போ உண்மையான பேரை அவன இவன கேட்டு சொன்னாங்க. நம்மை பாத்தானா வேற எங்கேயோ பாக்கற மாதிரி இருக்கும்.
பேருக்கேத்த மாதிரியே, வருவான், வேலை செய்வான். எதைக் கேட்டாலும் சிரிச்சிட்டே பதில் சொல்லுவான். கிறுக்குத்தனமா எதாச்சும் பண்ணிட்டிருப்பான். அவனை எல்லாரும் ஓட்டிகிட்டே இருப்பாங்க.
டேய் பாவம்டா, அவனை ஏன்டா வதைக்கிறிஙன்னதுக்கு,
'அண்ணா இப்போ பாரு அவன்கிட்ட ஒரு கேள்வி கேக்கறேன் என்ன பதில் சொல்றான்னு பாரு' சதீஷ்
'டேய் கொய்யான், கல்யாணம் முடிஞ்ச உடன் என்னா பண்ணுவாங்க'
'ம், பாலும் பழமும் சாப்பிடுவாங்க'
'அதை கேக்கலை, ராத்திரி'
'மாப்பிள்ளை கட்டில்ல உட்காந்திருப்பாரு, பொண்ணு பட்டு பொடவ கட்டி, தலை நிறைய பூ வெச்சி, வளையலெல்லாம் போட்டுகிட்டு சொம்புல பால எடுத்துகிட்டு வரும். கால்ல விழுந்து கும்பிடும்'
'அப்புறம்' சதிஷ் உற்சாகமாய் சிரிப்புடன்.
'கிட்ட போவாங்க, லைட் ஆஃப் ஆயிடும், சினிமாவுல அவ்வளவுதான் பாத்திருக்கேன்' னான்.
எனக்கு அவன் மேல பரிதாபமா இருந்துச்சி.
ஒரு வருஷம் கழிச்சி ஊருக்கு போயிருந்தேன். கொய்யான் வீட்டுக்கு வந்தான். நிறைய மாற்றம். சந்தோஷமா இருந்தான். கல்யாணமாம், பத்திரிகை வைக்க வந்திருந்தான்.
சந்தோஷமா இருந்துச்சி. 'அண்ணா நீங்கதான் ஃபோட்டோ புடிக்கனும், கேமராவோட வந்துடுங்க' ன்னான்.
பொண்ணு குள்ளமா இருந்தாலும் குறை சொல்ல முடியாது. அவனுக்கு பதினேழு, அந்த பொண்ணுக்கு பதினைஞ்சு வயசு. கிராமத்துல இதெல்லம் இன்னமும் ரொம்ப சாதாரணம்.
திரும்ப நான் சிங்கப்பூர் வந்துட்டு ஊருக்கு போனேன். கொய்யான் ரொம்ப சந்தோஷமா வீட்டுக்கு வந்து எல்லாருக்கும் முட்டாய் கொடுத்தான், அவனுக்கு பையன் பொறந்திருக்கிறானாம்.
எனக்கு குழப்பமாயிடுச்சி, போனதடவ வந்தப்போதான் கல்யாணம், சரியா ஏழு மாசம்தான் ஆகுது.
தனியா கூப்பிட்டேன், 'தம்பி, கல்யாணம் ஆகி ஏழு மாசம்தான் ஆகுது, குறை பிரசவமா'ன்னேன்.
'இல்லன்னா, நிறை பிரசவம்தான், கல்யணம் நிச்சயம் பண்ணியதிலிருந்தே தொடர்பு இருந்தது, கணக்கு சரிதான்'னான்.
'ஆஹா, நாமத்தாண்டா அவனை தப்பா நினைச்சுட்டோம்னு' சொல்லிகிட்டோம்.
அதுக்கு பின்னாலா யாரும் அவனை 'கொய்யான்' னு கூப்பிடறதில்லை.

செருப்படி

|

காலேஜ் முடிச்சிட்டு ஒரு கம்ப்யூட்டர் சென்டர்ல வேல பாத்துட்டிருந்தேன்.
சுரேஷ் என்ன பாக்க வந்தான்.
கிளாச பாதியில நிப்பாட்டிட்டு வெளியே வந்து 'என்னடா விஷயம்' னேன்.
ஒரு பெரிய குண்ட தூக்கி போட்டான்.

அப்பா இல்லை, அம்மா மட்டும்தான். +2 முடிச்சிட்டு பஸ்ல கிளீனரா ஓடிட்டு இருந்தான். என்மேல பாசமா இருப்பான்.
எந்த விஷயம்னாலும் என்கிட்டதான் சொல்லுவான்.(நல்லதுன்னா உடனே, கெட்டதுன்னா கொஞ்சம் லேட்டா)

தயங்கி, தயங்கி 'அண்ணா நான் லவ் பண்றேன், நீங்கதான் அத கன்பார்ம் பண்ணனும்'னான்.

லவ் பண்றாங்கறதே அதிர்ச்சி, அவன் குடும்பம் இருக்கிற சூழ் நிலையில. நான் வேற அதுல சம்மந்தப்படனும்ங்கறது பேரதிர்ச்சியா இருந்துச்சி.

உள்ள போயி, ஒரு ப்ரொக்ராம் பண்ண சொல்லிட்டு,

'ம், சொல்லுன்னேன்'.

'இத்தன நாளா உங்கிட்ட சொல்லாததுக்கு சாரிண்ணா. ஸ்கூல்ல +2 படிக்குது, தினமும் எங்க பஸ்ஸில தான் வரும். ஒரு மாசமா பாத்துகிட்டிருக்கேன்.
குடும்பம் அது இதுன்னு சொல்லி பயமுறுத்தாத. அடுத்த மாசம் பை குடுத்துடுவாங்க(கண்டக்டர்). 5.10 க்கு ஸ்கூல் விட்டு வரும். நீங்க சேலம் பஸ் நிக்கிற இடத்துல நில்லுங்க, நான் காமிக்கிறேன், நீங்க பாத்துட்டு ஓ.கே சொல்லறதுலதான் என் வாழ்க்கையே இருக்கு'ன்னான்.

'சரியில்ல, வேணாம்னு சொல்லிட்டா' நான்.

'சத்தியமா நேர்ல பாத்தா அப்படியெல்லாம் சொல்ல மாட்டீங்க'.

அரை மனசா ஒத்துட்டேன். அஞ்சு மணிக்கு வந்து கூட்டிட்டு போறேன்னான்.

கடைகிட்ட நின்னுட்டிருந்தேன், பக்கத்துல சுரேஷ்.

ஸ்கூல் விட்டு வரிசை வரிசையாய் பொண்ணுங்க வந்துட்டிருந்தாங்க.

'அண்ணா ரெண்டாவதா அந்த குரூப்ல வருது பாருங்க அதான்' ன்னான்.

பொண்ணு உண்மையிலெ ரொம்ப அழகா இருந்துச்சி.

எங்களை தாண்டி போகும்போது அவனை ஓரக் கண்ணால பாத்துட்டு போச்சு.

'எப்படிண்ணா இருக்கு, என்ன லுக் உடுது பாத்தியா'

'நல்லாருக்கு சுரேஷ், ஆனா' ன்னு இழுத்தேன்.

'அது போதும்' னுட்டு,

நேரா தூரமா போயிட்டிருந்த அந்த பொண்ணுகிட்ட போனான். பாக்கெட்டில இருந்து லெட்டரை எடுத்து கையில கொடுத்தான்.

அப்போதான் அந்த விபரீதம் நடந்தது.

டக்குனு செருப்பை கழட்டி சப்பு சப்புன்னு அவன் தலையில, கன்னத்துல அடிக்க, பேயறைஞ்ச மாதிரி சிலையா அதிர்ச்சியில நின்னான்.
பெரிய களேபரமாயிடுச்சி. சனங்க சுரேஷ விடவும் அந்த பொண்ண அதிகமா திட்டினாங்க, ஒரு பொண்ணுக்கு அவ்வளவு திமிறான்னு.
வனோட மத்த ஃபிரண்ட்ஸ் எல்லம் ஒன்னு சேர்ந்து அவனை அந்த பக்கமா இழுத்துட்டு போயிட்டாங்க. நான் வேகமா கிட்ட ஓடினேன்.
ரவி 'அண்ணா நீங்க இங்க வரவேண்டாம், நாங்க பாத்துக்கறோம், நீங்க சென்டருக்கு போங்க' ன்னான்.

மனசு சரியில்லை. சொல்லிட்டு வீட்டுக்கு கிளம்பிட்டேன்.
சுரேஷோட அம்மா வந்து எங்க வீட்டுல புலம்பிக்கிடிருந்தது. அத சமாதானப்படுத்தறதுக்குள்ள போதும், போதும்னு ஆயிடுச்சி.
சுரேஷ ஆளயே காணும். நானும் கேட்கலை.

ரெண்டு நாள் கழிச்சி கிளாஸ் எடுத்துக்கிட்டிருக்க்கும்போது யாரொ ஒரு பொண்ணு என்னை பாக்க வந்திருக்கிறதா சொல்லி கூப்பிட குழப்பத்தோடு வெளியே போனேன்.
அங்க அந்த போண்ணு ரெண்டு மூனு ஃபிரண்ட்ஸோட இருந்தது.

சல்லுனு கோபம் வந்துச்சி.

'எதுக்கு வந்தே? அவன் உயிரோட இருக்கிறானான்னு கேட்டுட்டு போக வந்தியா'?

'அய்யோ அண்ணா நீங்களும் என்னை திட்டாதீங்கண்ணா, இந்த பாவி தெரியாம பண்ணிபுட்டேன், அவரு ரொம்ப நல்லவருன்னு தெரியாம போச்சு. அடிச்சதுக்கு பரிகாரமா, அவரைத்தான் நான் கல்யாணம் பண்ணிக்குவேன், நீங்கதான் நல்லபடியா முடிச்சு வெக்கனும்னுச்சி.

கண்ணுல மாலை மாலையா தண்ணி.

எனக்கு ஒண்ணும் புரியல. 'சரிம்மா, அவன் எங்க போனான்னே தெரியல, ரெண்டு நாளா தகவல் இல்ல, உசுரோட இருக்கானான்னே தெரியல' ங்கவும், மீண்டும் அழ ஆரம்பிச்சது.
'சரி சரி, அவன் வந்தவுடன் பேசறேன்' னு சொல்லி சமாதானம் பண்ணி அனுப்பி வெச்சேன்.
கொஞ்ச நேரத்துல ஃபோன் வந்தது.

'அண்ணா வந்து உங்கள பாத்துச்சான்னா' சுரேஷ்.

'டேய், எங்கடா இருக்கே? என்ன ஒரு தகவலும் இல்ல?'

'என்ன சொல்லிச்சின்னு மொதல்ல சொல்லு' ன்னான்.

சொன்னதும், 'அதுக்காகத்தான் ரெண்டு நாளா தலைமறைவா இருக்கேன் உடனே வர்ரேன்' னான்.

அப்புறம் அந்த பொண்ணு வீட்ட விட்டு ஓடிவந்து கல்யாணம் ஆகி இப்போ ரெண்டு குழந்தைங்க, சந்தோஷமா இருக்காங்க.
இன்னிக்கும் நான் அந்த பொண்ணை பாத்தா டக்குனு அது காலை பாப்பேன்.
சிரிக்கும் வெக்கத்தோட 'போங்கண்ணா' ன்னு சிணுங்கிகிட்டு...

டி.வி.எஸ் 50

|


அப்போ நான் நாலாவது படிச்சிட்டிருந்தேன், அந்த சமயம்தான் டி.வி.எஸ். 50 மார்கெட்ல அறிமுகம் ஆச்சு.


எங்க ஸ்கூல் ஹெட்மாஸ்டர் புதுசா வாங்கி, ஒரு வாரம் ஓட்டறதுக்கு பழகிட்டு ஸ்கூலுக்கு கொண்டு வந்திருந்தாரு.


எங்களுக்கெல்லாம் ரொம்ப சந்தோஷம். பிரமிப்பு. சைக்கிளே அப்போ பெரிய விஷயம்.


சாயந்திரமா எல்லா வத்தியாருங்களுக்கும் ஸ்டார்ட் பண்ணி எப்படி ஓட்டறதுன்னு சொல்லிட்டு இருந்தாரு.


அதுல ஒரு சாரு, நல்லா நாமம் போட்டிருப்பாரு. வேஷ்டியை வித்தியாசமா கட்டியிருப்பாரு. அவரும் அவர் பங்குக்கு கேட்க, அப்போதான் அந்த விபரீதம் நடந்தது.


இந்தமாதிரி பெடலை மிதிச்சி கிளட்சை அழுத்தி பிடிச்சி விடணும், ஆக்ஸிலேட்டரை விடணும்னு சொல்லிட்டிருந்தாரு.


'ஐயா நானும் முயற்சி பண்ணி பாக்கட்டுமா' ன்னாரு


'தாராளமா' ன்னு அவர்கிட்ட விட்டுட்டு அவரு என்ன பண்றாருன்னு பாத்துட்டிருந்தப்போ, தூரத்தில் ரெண்டு பசங்க ஏதோ சண்டை போடறதை பாத்துட்டு குச்செடுத்து விளாச கிளம்பிட்டாரு.


அவரு நகர்ந்தவுடன், இன்னும் குஷியாகி பெடலை அழுத்தி கிளட்சை ரிலீஸ் பண்ணி ஸ்டார்ட் பண்ணிட்டாரு.


ஆக்ஸிலேட்டர நல்லா முறுக்கிட்டு அவருக்கு விடறது எப்படின்னு தெரியல, பிரேக் பிடிக்கவும் தெரியல.


அப்போ பதட்டத்துல வண்டிய பின்பக்கம் அழுத்தவும் டயர் மோதி வண்டி ஸ்டேண்ட் ரிலீஸ் ஆகி வேகமா கிளம்பிடுச்சி.



சார் மிரண்டு போயி வண்டிகூடயே ஓட ஆரம்பிச்சிட்டாரு.


ஓடும்போது அவர் காலில் வேஷ்டி மாட்டி உறுவிட்டு வந்துவிட,கோவணம் கட்டுவாருங்கற ரகசியம் எல்லோருக்கும் அப்போதான் தெரிஞ்சது.


கோவணத்தோட வண்டிவேகத்துக்கு கூடவே ஓடினாரு.


வேஷ்டி கண்ணாடியெல்லாம் பொறுக்கி எடுத்திட்டு பின்னாலேயெ கத்திட்டு ஓடினோம்.


இருபது இருபத்தஞ்சு மீட்டர் தூரம் ஓடி அடுத்த பில்டிங் சுவர்ல மோதி கீழே விழ, அவரு மேல வண்டி கிடந்தது.


ஆக்ஸிலேட்டரை விடாம முறுக்கிட்டே இருந்தாரு.


அப்புறம் எல்லோரும் ஓடிப்போய் அவர வண்டியில இருந்து பிரிச்சோம்.


அன்னியிலிருந்து அவரை பார்க்கும் போதெல்லாம் அவரோட கோவண ரேஸ்தான் ஞாபகம் வரும்.


ஆனா ஒரு விஷயத்தை மட்டும் இன்னிக்கு வரைக்கும் ஃபாலோ பண்றாரு.


அது 'சைக்கிள் மட்டும்தான் ஓட்டறது' ங்கறதை.

சுளுக்கு - இறுதி பகுதி

|


நேரா ராமு காட்டுக்கு வண்டியை விட்டாரு.

நடவுக்கு ஓட்டி போட்டிருந்த வயல் பக்கத்துல நிப்பாட்டிட்டு,

'பிரபு, சுளுக்கின காலை சேத்தில நல்லா அழுத்தி ஊனு' ன்னாரு.

அப்போதான் எனக்கு அந்த விபரீதமே புரிஞ்சது.

தப்பிச்சி ஓடவும் சாரி நடக்க கூடமுடியல.

வலுக்கட்டாயமா என் காலை புடிச்சி சேத்துல அழுத்திட்டு,

'ம், பட்டுனு வெளியே இழு' ன்னாரு.

அசைச்சாவே வலிக்குது, எங்க இழுக்கறது?

ஆண்டவன் புண்ணியத்துல ஆள உட்டா போதும்னுட்டு எப்படியோ கஷ்டப்பட்டு வெளியே இழுத்தேன். அப்போ நினைச்ச்து என்னான்னா, 'என் எதிரிக்கும் இந்த நிலம வரக்கூடாது'

'நீ சொல்லறதயே கேட்க மாட்றே, பட்டுனு இழுத்தாத்தான் சரியாகும், சரி சரி, தண்ணியில கால கழுவிட்டு வரலம்னு தூரத்துல ஓடிக்கிட்டிருந்த மோட்டார் கொட்டாய காட்டினாரு.

இல்ல இல்ல வீட்டுக்கு போயி கழுவிக்கிறேன் மொதல்ல வண்டிய எடுங்கன்னேன்.

வேகமா கிளப்பினாரு, 'அண்ணா பாத்து மெதுவா'ன்னேன்.

'எவ்வளோ போதையில இருந்தாலும் செடியா இருப்பேன்' னாரு..

எதேதோ பேசிட்டு வீட்டுக்கு பக்கமா வரும்போது, ரொட்டோரமா ரோடு போட வெச்சிருந்த ஜல்லியில வண்டிய விட தடுமாறி கீழ விழுந்தோம்.

நல்ல வேலை நான் மணல்ல பேலன்ஸ் பண்ணி விழுந்தால அடி ஒன்னும் இல்ல. ஆனா அவரு மேல டி.வி.எஸ் கவுந்து, சைலன்ஸர்ல கால சுட்டு, காலும் நல்ல பெசகிடுச்சி. போத தெளிஞ்சி கத்த ஆரம்பிச்சிட்டாரு.

அப்புறம் விவரமா ஆஸ்பத்திரிதான் போனருங்கறது தனி கதை.

பாட்டி வெளிய போயிருந்த சமயத்துல நைசா சகாதேவன் வந்தான்.

'பிரபு எப்படி இருக்கே'ன்னான்.

'டேய் பாட்டி'ன்னேன்.

'அந்த கிழவி இப்போதான் அந்த பக்கம் போகுது, பாத்துட்டுதான் வரேர்ன்' அவன் கோவத்த தீத்துகிட்டான்.

'சரி சரி, ரெடியா இரு. அஞ்சரை வாக்கில சுருட்டை கிழவாடிகிட்ட போகனும், உடனே சரியாயிடும்'னு சொல்லிட்டு,

'பிரபு பாட்டி வருது'ன்னுட்டு எஸ்கேப் ஆயிட்டான்.

பக்கத்துல இருந்த மலையடிவரத்துக்கு கூட்டிட்டு போனான்.

95 வயசுக்கு மேல இருக்கும். முறுக்கேறிய உடம்பு. நிறைய சுருக்கம். அதிகம் பேசலை.

வாழை நார் கொண்டு வரச்சொன்னாரு.

உட்கார்ந்து காலை நீட்ட சொல்லி கால் விரலுக்கு கீழே குச்சியை வெச்சி, வாழை நார்ல விரலுக்கு குறுக்கே விட்டு நல்ல இறுக்கி கட்டினாரு. ரெண்டு பக்கமும் குச்சி கொஞ்சம் நீட்டிட்டு இருந்துச்சி.

புதுமையாவும் வலி இல்லாமலும் இருந்துச்சி, ஏன்னா அவர் வலிக்கிற இடத்தை டச் பண்ணவே இல்ல.

சைட்ல சகாதேவன் சின்ன கடப்பாரையில எதோ குழி நோண்டிட்டு இருந்தான்.

'தாத்தா போதுமா'ன்னான்.

கால்ல வெச்சு கட்டின மாதிரியே இன்னொரு குச்சியால ஆழம், பக்கவாடுலன்னு வெச்சி பாத்துட்டு சில கரெக்சன் சொன்னாரு.

அப்புறம் ஒரு துண்டை விரிச்சி அதுல குப்புற படுக்க சொல்லி, என் காலை அந்த குழிக்குள்ள திணிச்சி மண் போட்டு மூடி நல்ல தாணிச்சாங்க. இதுவும் ஒரு சேத்து டைப் வைத்தியம்னு புடிஞ்சிட்டேன்.

கடைசியா சின்னதா ஒரு துண்டை என் கால்ல கட்டி வெருக்குன்னு இழுத்தாங்க. வலி பயங்கரமா  இருந்தாலும், சேத்தளவுக்கு இல்ல.

உப்ப எண்ணையில போட்டு சூடாக்கி கட்ட சொன்னாரு. வெத்தல பாக்குக்கு காசு கொடுத்ததுக்கு கோபமா மறுத்துட்டாரு.

நைசா வீட்டுக்கு பின் பக்கமா வந்து விட்டுட்டு போயிட்டான். கொஞ்சம் நடக்க முடிஞ்சது.

கோயமுத்துர்ல இருது மாமா ஃபோன் பண்ணினாரு.எல்லா விஷயத்தையும் முன்னாடியே தெரிஞ்சிட்டுப்பார் போல.

'ஏன்டா, படிச்சவன் பண்றதாடா இது, ஹேர் பிரக்சரா இருக்க போகுது, எக்ஸ்-ரே எடுத்து பாரு, மொத வேலைய நாளைக்கு ஆஸ்பத்திரி போற வேலையை பாரு'ன்னாரு.

சரின்னு தலையட்டிட்டு, இன்னும் ஒரு நாள் எல்லா வைத்தியத்தையும் செஞ்சிட்டிருந்தேன்.

சாயங்காலம், மாமாவோட கடைக்கு மெதுவா போனேன்.

'என்ன பிரபு ஆளையே காணும்'னாரு.

எல்லாத்தையும் சொன்னேன். அட இதுதானா (இன்னொரு வைத்தியம் வரப்போவுது)

'இந்தா இந்த பிளாஸ்டர போடு'ன்னு அவரே போட்டுவிட்டாரு.

அலைச்சல்ல நல்ல தூக்கம். காலையில எழுந்து பாத்தேன். கால்ல சுத்தமா வலியில்ல, வீக்கமும் இல்ல. ரொம்ப சந்தோஷமா இருந்துச்சி. துள்ளி துள்ளி குதிச்சேன். ஆமா எந்த வைத்தியத்துல எனக்கு சரியாச்சுன்னு யோசிச்சேன்.

'என்னா சரியாயிடுச்சா, இனிமே வீடு தங்க மாட்டான்' தாத்தா

'எல்லாம் அந்த மகமாயிதான் காரணம்' பாட்டி.

காலண்டர பாத்தா, ஞாயிற்று கிழமை, ஒரு வாரம் ஆயிடுச்சி. நாள் போனதே தெரியல.

தூரத்துல அதே கோஷ்டி வீட்ட நோக்கி வந்துட்டிருந்தது.

உடனே பதறி, 'சித்தி நான் இல்லன்னு சொல்லிடுங்க'ன்னுட்டு வேகமா வீட்டுக்குள்ள ஓடினேன். கீழ தண்ணி கொட்டி இருந்தத கவனிக்காம சறுக்கி கீழ விழுந்துட்டேன். பலமான அடி, அடுத்த கால்ல அதே மதிரி சுளுக்கிடுச்சி.

மொதல்லயாவது பரவாயில்ல விளையடி, ஆனா இப்போ....,

ஹலோ, எதாச்சும் வைத்தியம் தெரிஞ்சா சொல்லுங்களேன், ப்ளீஸ்...

சுளுக்கு - 2 ஆம் பகுதி

|


சைக்கிள்ல என்னை ரெண்டு பேர் கைத் தாங்கலா தூக்கி வெச்சி
('என்ன மாம்ஸ் சப்பிடற, இந்த கணம் கணக்குற?') மெதுவா வீட்டுல கொண்டு வந்து விட்டானுங்க.



கணுக்கால் கிட்ட பன்னு மாதிரி உப்ப ஆரம்பிச்சிடுச்சி. சுத்தமா கால ஊனவே முடியல. தாஙலா ரெண்டு பேரை புடிச்சிட்டு ஒத்த கால்ல நோண்டிட்டே உள்ள போனேன்.


'பரதேசி நாயிங்க, சும்மா இருந்த என் பேரனை கூட்டிட்டு போயி கால முறிச்சு கொண்டாந்துட்டானுங்க' அம்மாவொட பாட்டி அது பங்குக்கு மொத ஆளா ஆரம்பிச்சது.


'இது தேவையா, உனக்கு அறிவே கிடையாது பிரபு', இது என் சித்தி.


'எத்தனை சொன்னாலும் திருந்த மாட்டே' ஆயா.


'செய்யற வேலை விட்டுட்டு செனை ஆட்டுக்கு... கரன்ட் பில்ல கட்டிட்டு வாடான்னா, கால்ல கட்டிகிட்டு வந்திருக்கான்' தாத்தா.


அதுக்குள்ள பாட்டி போயி, தாசன்ங்ற ஆளை கூட்டிட்டு வந்துச்சி. பாடம் போடறவறாம். வரும்போதே லேசா உந்தி உந்தி வந்தாப்ல.


'ஆயி, ஒரு சீவாங்குச்சி எடுத்துட்டு வாங்க, அப்படியே திரு நீறு'


'எப்படி கண்ணு ஆச்சுன்னு வீங்குன இடத்த புடிச்சி நல்ல அழுத்தி பாக்க, வலியில துடிச்சிட்டேன், கண்ணுல்ல மாலை மாலையா தண்ணி.


'படிச்சவன் இப்படிய அழுவறது?' தாத்தா.


'எனக்குத்தானே வலியெல்லாம்' மனசுக்குள்.


குச்சியால உடம்பெல்லாம் நீவி விட்டாரு, கடைசியா ஒரு பிடி திருநீற வாயில திணிச்சாரு. நெத்திய கொஞ்சம் வெச்சுட்டு, 'கலையில கப்புனு சரியாயிடும்'னு சொன்னாரு.


'ஆமா ஏன் காலை லேசா நொண்டி வந்தாப்ல தெரிஞ்சது,என்னாச்சுன்னு' கேட்டேன்.


'கால் பெசகிடுச்சி, அதான்'னாரு.


'உங்களுக்கேவா' ன்னு கேட்டதுக்கு,


ஆளானப்பட்ட சிவனையே சனி பிடிச்சிருக்காரு, அதுவும் இல்லாம என் வைத்தியம் எனக்கு பலிக்காதுல்ல' ன்னு ஏதோ சொன்னாரு...'


கால் நல்லாவே வீங்கிடுச்சி. பாட்டி புளியந்தழை, ஊணாந்தழையை வேகவெச்சு கட்டிவிட்டுச்சி.


விடிய விடிய தூக்கம் வராம காலையே பாத்துட்டு இருந்தேன்.


காலையில வீக்கம் அவ்வளவா இல்ல, அனா கால ஊன முடியல. வீட்டிலேயே இருந்தேன். வழியில்லாம பாட புத்தகத்தை படிச்சேன்.


'ஒழுங்கா படிக்கனும்னா இந்த மாதிரி ஏதாச்சும் ஆகனும் போல இருக்கு' தத்தா.


சாயந்திரமா வள்ளி அக்காவ ஆயா அழச்சுட்டு வந்தாங்க, சுளுக்கு எடுக்கறதுல ஸ்பெசலிஸ்டாம்.


விளக்கெண்ணையை தொட்டு, கால்ல தடவி மெதுவா அழுத்தி, 'இங்க வலிக்குதா, இங்க வலிக்குதா'ன்னு கேட்டுச்சி.


ஒரு இடத்துல தொடும்போதே உயிர் போற மாதிரி இருந்தது. கத்தவும் அந்த இடத்தயே வசமா புடிச்சுடுச்சி.


அழுத்துன அழுத்துல கதறி, நிறைய கூட்டம் கூடி போச்சு. கடைசியாய் சுத்தி நின்ன அத்தனை பேரையும் நினைச்சா இப்ப கூட வெட்கமா இருக்கு.


'புளியங்கொட்டை பத்து போடுங்க ரெண்டு நாள்ல சரியாயிடும்'னு சொல்லிட்டு போச்சு.


அதையும் செஞ்சோம், எந்த முன்னேற்றமும் இல்ல.


காலைல நொண்டி நொண்டி நடந்து வெளியே வந்தேன். பக்கத்துல டீ கடையில பேப்பர் படிக்கலாம்னு போனேன்.


என்ன கண்ணு நொண்டறே? சுளுக்கான்னு சந்திரன் அண்ணன் கேட்டரு.


ஆகா அடுத்த வைத்தியம் ஆரம்பிச்சுடுச்சின்னு நினைச்சிட்டு ஆமான்னேன்.


'இது தான் மேட்டரா, உடனே சரி பண்றேன், வண்டியில உட்காரு'ன்னு இழுத்து உட்கார வெச்சி சல்லுனு கிளம்பிட்டாரு.


வண்டியை அவர் வளைச்சு வளைச்சு ஓட்டும்போதுதான் அவர் நல்லா போதையில இருக்கார்னு தெரிஞ்சது.


திகிலோடு உயிரை பிடிச்சுட்டு போனேன்.


(வைத்தியம் தொடரும்)








புதுமை செய்வோம்...

|


அரசியலில் நடக்கின்ற
அவலங்கள் பார்த்து
புரட்சியொன்று வெடித்து
புரட்டர்கள் போயொழிய

மறுமலர்ச்சி வந்திங்கு
மக்களெல்லாம் மகிழுமாறு
திருப்பமது நிகழ்ந்து
தொலைந்திடுமா துயரங்கள்

விரும்பும் மனம் நனவாக
வழியேதும் உளதாவென
பெரியோரை கேட்டிட்டேன்
பதில் கேட்டு சோர்ந்திட்டேன்

மாற்றமது வருதற்கு
மக்களால் தான் முடியும்
அரசியலார் அது முடக்க
ஆக்கமாய் செய்தலினால்

குறும்பாட்டு கூட்டம்போல்
கட்சி வழி பின்பற்றி
குறை தெரிந்தும் பின்பற்றி
கூட்டமாய் சென்றிட்டு

மறை வழியை மறந்து
மத வழியை பின்பற்றி
சார்ந்திருக்கும் சாதிகட்சி
சகதியினில் இறங்கி

திரையறிவு மறைத்து
தொலை நோக்கு மறந்து
மறை கழன்ற மதியுடன்
மதி நிறைந்த சான்றோரும்

அரசியலார் தடம் பற்றி
அவல வழி செல்லுதலால்
மாறுதலின் வாய்ப்பதனை
மங்கச் செய்தலினால்

வீரமிகு இளைஞரெல்லாம்
உறுதிமொழி ஆர்த்து
அரசியலை சாராமல்
அரசியலார் நாடாமல்

சீரழிக்கும் சினிமாவின்
கதை மாந்தர் மன்றம்தனை
வேரறுத்து ஒழித்து
உறுதியினை சேர்த்து

மாற்றமது நம்முள்
மனதிலிதை நிறுத்தி
வீறு கோண்டு செல்வோம்
வெற்றியினை சேர்ப்போம்

சோர்வு நேரும் தருணம்
சான்றோர் உரை படித்து
சுறுசுறுப்பை அடைவோம்
சீரிய பாரதத்தை படைப்போம்.

பிரபாகர்.

சுளுக்கு - 1 ஆம் பகுதி

|


அவசரமா ஆத்தூர் கிளம்பிட்டு இருந்தேன். அப்போ ஒரு கோஷ்டியே வீட்டுக்குள்ள வந்துச்சி.

'பிரபு உடனே கிளம்பு, இன்னிக்கி வஞ்சம் தீத்தாகனும்', சகாதேவன்.

என்னடா இது, தெலுங்கு பட வசனம் மாதிரி பேசறான்னு நினைச்சிட்டு,

'ஆமா, எங்க... எதுக்கு?' நான்.

'இன்னிக்கி நம்மோட பரம எதிரி மல்லியகரை டீமோட மேட்ச் இருக்கு, வின் பண்ணியே ஆகனும், கண்டிப்பா நீ வரனும்', ராஜா.

சுமாரா கிரிக்கெட் விளையாடுவேன், ஆன இந்த அளவிற்கு என்னைக்குமே மரியாதை இருந்ததில்ல.

'நாங்களும் எவ்வளவோ பாத்துட்டோம், யாரும் கிடைக்கல, அந்த நாய் மகேஷ் நம்ப வெச்சி கழுத்தறுத்துட்டு திடீர்னு சேலம் போயிட்டான். உன்னை விட்டா ஆளே இல்ல' ஜனார்.

அப்போதான் உண்மை தெரிஞ்சது, வழியில்லாம கூப்படறானுங்கன்னு.

'நான் வரலப்பா, மொதல்ல, தாத்தா கரன்ட் பில் கட்ட கடைசி தேதின்னு என் கிட்ட பணம் கொடுத்திருக்காரு. ரெண்டாவது செமெஸ்டருக்கு ஒரு மாசம்தான் இருக்கு, படிக்கனும்' நான்.

'ரொம்ப பிகு பண்ணாதப்பா, காலேஜ்ல படிக்கிற ஆளு, லெக் ஸ்பின் நல்ல போடுவே, பின்ச் ஹிட்டர், சூப்பரா ஃ பீல்டிங் பண்ணுவ' முரளி.

அவன் சொல்றது எந்த அளவுக்கு உண்மைன்னு எனக்கு ஏன் எல்லாத்துக்கும் தெரியும். இருந்தாலும் வாய்ப்ப விட மனசில்ல.

'கரண்ட் பில்லு...'

'என்ன மாம்ஸ், 5 மணி வரைக்கும் டைம் இருக்கு, மேட்ச் 15 ஓவர் தான், 10 மணிக்கு ஆரம்பிச்சாலும் ரெண்டு ரெண்டரைக்கெல்லாம் முடிஞ்சிடும். ஆத்தூர் நானும் உங்க கூட வர்றேன், போதுமா?' மகேந்திரன்.

எல்லோரும் என்னைவிட சின்ன பசங்கதான், ஆனா மகேந்திரனை தவிர எல்லோரும் பேர் சொல்லித்தான் கூப்பிடுவாங்க.

ஆளுக்கொரு சைக்கிள்னு, டபுள்ச், ட்ரிப்ள்ஸ்னு போய் சேந்தோம்.

போனவுடனே ஒரு ஷாக் நியூஸ் கிடைச்சது. யாரோ ராபினாம், அவங்க டீம்ல விளையாட போறானாம். டிருச்சி காலேஜ் பிளேயராம் ஃபாஸ்ட் பவுலராம்.

சைட்ல அவன் பவுலிங் பிராக்டிஸ் பன்றத பாத்தே எங்களுக்கு டர் ஆயிடுச்சி.
பவுண்டரி லைன் பக்கத்துல இருந்து பந்து போட வோடி வந்தான்.

திடீர்னு மகேந்திரன் என்ன நினைச்சான்னே தெரியல,

'மாம்ஸ் நீதான் இன்னிக்கு கேப்டன்'னான்.

அதிசயமா எல்லோரும் பேசி வெச்சாப்ல,

'ஆமா கண்டிப்பா நீதான் இருக்கனும், வயசில, அறிவுல, அனுபவத்தில பெரிய ஆளு' முரளி.

பலிகடா மாதிரி ஒத்துட்டு, டாஸ் வின் பண்ணி பேட்டிங் எடுத்தோம்.

கெஞ்சி கேட்டாலும் 5 டவுன்க்கு முன்னால இறக்காதவனுங்க, அன்னிக்கி ஓப்பனிங் இறங்க சொன்னானுங்க. எல்லாம் ராபின் பயம்னு நல்லா தெரிஞ்சுச்சி.

'இல்லப்பா ஒன் டவுன் ஆடறேன்'னேன்.

'என்னப்பா நீ, பயங்கரமான பிளேயர், ராபினும் காலேஜ், நீயும் காலேஜ்,
காலெஜுக்கு காலேஜ்...' சகா.

நிஜமாவே, நல்ல ஃபாஸ்டா போட்டான். கண்ணை மூடிட்டு சுத்தினேன். நல்லா கனெக்ட் ஆக, மொத பாலே சிக்ஸர், ஸ்கூல் காம்பவுண்ட்க்கு வெளியே போய் விழுந்துச்சி. ஜஸ்ட் தொட்டேன், அவ்வளோதான், அப்போ எவ்வளோ ஸ்பீட்னு பாத்துக்கோங்க.

ரெண்டாவது பால், கனெக்ட் ஆகல பேட்லயும், கீப்பர் கிட்டேயும். பைஸ் ஃபோர். மூனாவது பால் கொஞ்சம் ஸ்லோவா போட, லெக் சைட்ல தட்டிவிட்டேன், மிஸ் ஃபில்டிங்ல ஃபோர்.

நாலாவது பால் தான் இந்த கதைக்கு முக்கியம். ஸ்கொயர் லெக்-ல தட்டிவிட வேண்டாம்னு சொல்லியும் கேட்காமல் வேகமா ஓடி ரன் எடுக்க ட்ரை பண்ணி, தடுமாறி விழுந்தேன் பாருங்க அதுதான் இந்த கதைக்கு முக்கியம்.
கால் பிசகி கணுக்கால் கிட்ட நல்லா சுளுக்கிடுச்சி.(ரன் அவுட். மொத்தமா அடிச்சது 50 ரன், அவனுங்க 45 ஆல் அவுட், அதப்பத்தி தனியா எழுதலாம், அந்த அளவிற்கு சுவராசியமா இருந்திச்சி)

கால பிடிச்சு நல்லா உறுவி விட்டானுங்க. வலி உயிரே போற மாதிரு இருந்துச்சி.

தொடர்ச்சி அடுத்த பதிவில்...







கேள்வி? பதில்...

|

நண்பர் அனுப்பிய கேள்விகளை பின்னூட்டமாக பதிலலித்திருந்தேன். இதோ தனி பதிவாய்....

நண்பா,உங்களின் பின்னூட்டத்திற்கு பதிலாக எனது சுய சரிதையையே எழுத வேண்டும் போல் இருக்கிறது


1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

என் அன்பு மனைவி அபியுடன் சேர்ந்த எனது பெயர்.

2. கடைசியாக அழுதது எப்பொழுது?

மனைவி இறந்த டிசம்பர் 17 2008 லிருந்து இன்று வரை.

3. உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

சத்தியமாய் இல்லை. கணிப்பொறியிலேலே எழுதுவதால் பேனாவும் பேப்பரும், அதை பார்ப்பரும் தப்பித்தார்கள்.

4. பிடித்த மதிய உணவு என்ன?

சாதம் கொஞ்சம், காய்கறிகள் அதிகமாய் இங்கு சிங்கப்பூரில் கிடைக்கும் உணவு.

5. நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

உடன் வைத்தாலும் தொடர்வது வெகு சிலரோடுதான்.

6. கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?.

ஆற்றில் கிணற்றில்... கடலென்றால் ரொம்ப பயம்.

7. முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

சத்தியமாய் கண்களை

8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?

பிடித்தது, பிடிக்காதது இரண்டும் - நிறைய பேசுவது

9. உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

ஆறு வருட வசந்ததையும் இரு செல்வங்களையும், வாழ்வில் உயர்வையும் தந்தது என்னை தவிக்கவிட்டு போனது

10. யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?

எனது அருமை மனைவி

11. இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?

கறுப்பு கலரில் அரைக்கால் சட்டை மட்டும்

12. என்ன பார்த்து//கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

எனது மகன் செய்யும் குறும்புகள், மெலிதாய் இளையராஜா

13. வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

வெளிர் நீலம்

14. பிடித்த மணம்?

நறுமணம்

15. நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?

கிருஷ்ணா. அவரின் அசாத்திய துணிச்சல், தவறுகளை கூட சரியென சாதிக்கும் மனத்துணிவு

16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?

அவரின் பதிவு

17. பிடித்த விளையாட்டு?

கிரிக்கெட்

18.கண்ணாடி அணிபவரா?

வெயிலுக்காகவும், கணணியில் நெடு நேரம் வேலை செய்யும் போதும், கண்களை பாதுகாக்க.

19. எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?

எனது திரையுலக நண்பன் பரிந்துரைக்கும் எந்த படமும்.

20. கடைசியாகப் பார்த்த படம்?

பட்டாளம்(டி.வி.டி.யில்)

21. பிடித்த பருவ காலம் எது?

வாழ்க்கையில் வாலிபம், நிகழ்வில் குளிர்

22) என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?

பொன்னியின் செல்வன், எத்தனையாவது தடவை என ஞாபகம் இல்லை.

23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

அடிக்கடி. ஆனல் கடந்த 6 மாதங்களாய் எனது மனைவி மற்றும் மகன்.

24. பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

சிரிப்பு, அழுகை

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?.

சிங்கப்பூர்

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

சொல்லும்படியாக இல்லை, வளர்த்துக்கொள்ள முயற்சிக்கிறேன்.

27. உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

மனைவி என்னை விட்டு பிரிந்தது.

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

கோபம்

29. உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

எல்லா இடமும், மனதிற்கு பிடித்த நண்பர்களுடன்

30. எப்படி இருக்கணும்னு ஆசை?

சந்தோசப்படுத்தி, சந்தோஷமாய்

31.கணவர்(மனைவி) இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?

காதலியை(காதலனை) பார்க்க நினைப்பது(இருந்தால்)

32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

வார்த்தையில், 'வாழ்வதற்கே'

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB