பயணம் 1.1.1

|

எல்லோருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...

பயணம் சம்மந்தமான அனுபவங்களை இந்த வரிசையில் எழுத உத்தேசம். படித்து உங்களின் மேலான கருத்துக்களைச் சொல்லுங்களேன்...

வலைப்பூவின் வழியாய் அறிமுகமாகி இன்று என் ஆருயிர் நண்பராய், உறவாய் இருக்கும் புண்ணாக்கு மூட்டை எனப் பின்னூட்டமிடும் பாலா, எனது வாழ்வின் முக்கிய அங்கமாயிருப்பவர்.

தலைவரே எனத்தான் அழைப்பார், பதிலுக்கு நானும். நைஜீரியா, சிங்கை, இந்தியா என எங்கு இருந்தாலும் வாரம் மூன்று முறையாவது அழைத்துப் பேசாமல் இருக்க மாட்டார். இருவரும் இந்தியாவில் இருப்பதால் கட்டாயம் சந்திக்கலாம் என முடிவு செய்தோம். வரும் தேதி சந்திப்பதற்கான நாள் எல்லாம் இறுதியாக சென்னை வந்து இறங்கியவுடன் அழைத்தார். அவரின் ஊரான புவனகிரிக்கு  விடுமுறையில் இருந்த விஷாக்கை அழைத்துக்கொண்டு அவர் வந்த அடுத்த நாளில் கிளம்பினேன்.

சேலம் அருகே மேட்டுப்பட்டியில் சாலை மறியல் காரணமாய் ஒரு மணி நேரமாய் பேருந்து வரவில்லை என்றாலும் மகனோடு பல விஷயங்களை பகிர்ந்துகொள்ள ஏதுவாயிருந்தது.

தாமதம் சில நேரங்களில் சில அற்புதமான தருணங்களை ஏற்படுத்திக்கொடுக்கும், கொடுத்தது. வரிசையாய் வந்த மூன்று சிதம்பரம் பேருந்துகளில் இரண்டாவதைத் தேர்ந்தெடுத்தேன். என் அம்மாவின் வயதொத்த ஒருவர் அமர்ந்திருக்க விஷாக்கை அமரச்சொல்லி அருகில் அமர ஐபோனை வாங்கி கேம் விளையாடுவதில் மும்மரமானார்.

அம்மாவோடு பேச ஆரம்பிக்க அந்த பயணம் முழுதும் வாழ்வின் மறக்க இயலாத ஒன்றாக அமைந்தது. மெதுவாய் பொதுவான விஷயங்களைப் பேச ஆரம்பித்து பிளாக் பற்றி பேச ஆரம்பிக்க அவர் நிறைய படிப்பதாய் சொல்ல ஆச்சர்யமாய் இருந்தது. அவரின் மகன் பெங்களூரு ஐபிஎம்-ல் வேலை பார்ப்பதாயும் பிளாக், சாட் என சொல்லித் தந்ததாயும் சொன்னார். அவரிடம் பேசியதில் நிறைய தெரிந்துகொண்டேன். அது பற்றியெல்லாம் நிறைய பின்னால் எழுத உத்தேசம். ஒரு அற்புதமான ஒரு உறவினை இந்தப் பயணம் ஏற்படுத்திக் கொடுத்ததற்கு கண்டிப்பாய் கடவுளுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.

சென்று சேர்வதற்குள் எங்கிருக்கிறீர்கள் எனக்கேட்டு பலமுறைக் கேட்டு பதில் சொல்லியவாறு அம்மாவிடம் பேசியவண்ணம் மிகவும் மோசமானதொரு சாலயில் பயணித்த அலுப்போ, நான்கு மணி நேர பிரயாணக் களைப்போ கொஞ்சம் கூட தெரியவில்லை. இறங்கும் இடம் வந்து அவசர அவசரமாய் அம்மாவிடம் விடைபெற்று இறங்க பாலா காரில் வந்து எங்களை அழைத்துச்சென்றார்.

விருந்தோம்பலுக்கு உதாரணமாய் அற்புதமான கவனிப்பு. கோழி மீன் என நல்ல சுவையுடன் கூடிய பதார்த்தங்கள் பசிக்கு இரையாகின. விஷாக் கொஞ்ச நேரத்திலேயே பாலாவின் குழந்தைகளோடு சகஜமாய் பசக ஆரம்பித்தார். பொழுது இனிமையாய் செல்ல ஆரம்பித்தது.

மாலையில் அவரின் கொல்லைக்கு அழைத்து சென்றார். முதன் முறையாய் பாஸ்மதி விளைவித்திருப்பதைக் காட்டினார். எல்லாம் நெல் வயல்கள் விளைந்து அறுவடைக்கு தயாராய். மீன் வளர்க்கும் மீன் குட்டை இரண்டினை வைத்திருக்கிறார். குழந்தைகள் எல்லாம் கொண்டு சென்ற பந்துகளோடு விளையாட நாங்கள் வயல் வெளியினைச் சுற்றி வந்தோம்.

அடுத்த நாள். நிறைய பேசினோம். சிதம்பரம் அழைத்து சென்று அவரின் சொந்த ஊரினை, அண்ணாமலை பல்கலைக் கழகத்தை சுற்றி காண்பித்தார். தில்லைக் காளிக்கோவிலுக்கு அழைத்து சென்று 'தலைவரே இனி எல்லாம் உங்களுக்கு நல்லதாக நடக்கும்' எனச் சொல்லி சிறப்பு தரிசனத்திற்கு ஏற்பாடு செய்தார்.

மதியம்  நண்டு, ஆம்லேட் என சரியான கவனிப்பு, சகோதரியின் கைப்பக்குவத்தில் சமையல் அற்புதமாய் இருந்தது. . 'வாழ்க்கையில் ஃபர்ஸ்ட் டைம் சாப்பிடுகிறேன், பிஷ் மாதிரியே இருக்கு'    என சொல்லி விஷாக் ரசித்து சாப்பிட்டார்.

என் இனிய பாலாவிடம் நிறைய பேசி, நிறைய விஷயங்களைத் தெரிந்துகொண்டு மனம் முழுதும் நிறைவாய்  மாலை மூன்று மணியளவில் கிளம்பினோம். குடும்பத்தோடு எல்லோரும் சிதம்பரம் வந்து எங்களை வழியனுப்பி வைக்க, வரும்போது சந்தித்த ரேணுகா அம்மா சேலம் செல்ல அதே பஸ்ஸில். சந்தோஷமாய் பேசியவாறு ஆத்தூர் வந்து சேர்ந்தோம்.

'அப்பா, அடுத்த முறை பாலா மாமா வீட்டுக்குப் போனால் அட்லீஸ்ட் ஒன் வீக் ஸ்டே பண்ணனும்' விஷாக் என்னிடம் வேண்டுகோளாய்...

விகடம் 1.1.3

|

சங்கமத்திற்கு செல்லும்போது ஓட்டுநரைக் கேட்டு ஒளி & ஒலி கண்டிப்பாய் இருக்காது என தெரிந்துகொண்டு தான் பேருந்தில் அவருக்குப் பின்னே இரு இருக்கை தள்ளி அமர்ந்தேன். ஐ போனில் இருந்த ஒரு ஆங்கிலப் படத்தைப் பார்க்கலாமென உத்தேசித்திருந்தேன்.

பேருந்து கிளம்பிய சிறிது நேரத்தில் என் பக்கத்தில் இருந்தவர் நடத்துனரை அழைத்து ஏன் படம் போடவில்லை எனக் கேட்க கேள்வியின் தொனியிலேயே அதெல்லாம் போட முடியாது எனச்சொன்னார்.

விவாதம் சூடாக ஓட்டுநர் கடுப்பாகி 'என்ன சவுண்டு அதிகமா இருக்கு, ஏறும் போதே ஒரு ஆளு படம் போடலைன்னாதான்  ஏறுவேங்கற மாதிரி கேட்டுட்டு ஏர்றாரு, நீ படம் போட்டுத்தான் ஆகனும்னு சொல்ற, என்ன எல்லாரும் வெளையாடறீங்களா', என சூடாகச் சொல்ல பக்கத்திலிருந்தவர் அமைதியானார். சற்று பொறுத்து மெதுவாய் என்னிடம் 'படம் போடமாட்டாங்களான்னு கேட்டுட்டு ஏற்ன அந்த ஆளு யாராயிருக்கும்' எனக்கேட்டார். அதன்பிறகு பாட்டினைக்கூட நான் கேட்கவில்லை...

*********************

சித்தப்பா வீட்டிற்கு சென்றிருந்தேன்.  சித்தி சூடாக பலகாரம் செய்து தர, பாயில் அமர்ந்தவண்ணம் சாப்பிட்டுக்கொண்டு சேரில் அமர்ந்திருந்த சித்தப்பாவுடன் பேசிக்கொண்டிருந்தேன். மெகா டிவியில் பழைய சிவாஜி படப் பாடல்களை ரசித்துக் கொண்டு நான் சொல்வதையும் கேட்டுக்கொண்டு இருந்தார்.

அவருக்குப் பிடித்தமான விஷயத்தைப் பற்றி (சர்வே விஷயமாய்) ஆரம்பிக்க சுவராஸ்யமாகி தம்பி விவேக்கை டிவி வால்யூமைக் குறைக்கச் சொன்னார். 'அப்பா ரிமோட் உங்ககிட்டதான் இருக்கு' எனச் சொல்ல 'கையில சவுண்ட கம்மி பண்ணு' எனச் சொன்னார்.

*********************

ஊரில் இருந்து வந்த சில நாட்கள் விஷாக்-குடன் இருக்க இயலவில்லை, சங்கமம், நண்பர்கள் என கொஞ்சம் பிஸியாயிருந்தேன். அவருக்கு விடுமுறை இல்லை என்பதால் உடன் அழைத்துச் செல்லவும் இயலவில்லை. விஷாக் என் அம்மாவிடம் சென்று 'ஆயா உங்க மகனை அவரோட மகன் கூடயும் கொஞ்சம் இருக்கச்சொல்லுங்க' என்று சொல்ல, முதலில் அவர்களுக்கு புரியவில்லை. புரிந்து அம்மா என்னிடம் சொல்லி புளகாங்கிதப் பட்டுக்கொண்டார்.

தெடாவூர் - அப்டேட்ஸ்... - 2

|

இந்த இடுகையில் சமுதாய மாற்றங்களைப் பற்றிய விஷயங்களைப் பார்க்கலாம்.

கூரை வீடுகள் நிறைய குறைந்து கான்கிரீட், மெத்தை வீடுகளாய் மாறியிருக்கின்றன.

சராசரி வருமான விகிதம் பெருமளவில் உயர்ந்திருக்கிறது.

சந்து பொந்துகளெல்லாம் சிமெண்ட்டால் மேவப்பட்டு தண்ணீர் தேங்காமல் இருக்கிறது.

இரு சக்கர வாகனம், குறைந்தபட்சம் ஒரு செல்போனாவது இல்லாத இளைஞர்கள் இல்லை.

சேமிக்கும் பழக்கம் அதிகமாயிருக்கிறது, வங்கி கணக்கு எண்ணிக்கை உயர்ந்திருப்பதும் பெருகியிருக்கும் கூட்டமும் இதைப் பறைச்சாற்றுகிறது.

எல்லோரிடமும் சகிப்புத்தன்மை அதிகமாயிருக்கிறது. உதாரணமாய் பேருந்துக் கட்டணம் தனியார் பேருந்துகளில் ஏற்றியிருக்கும் போதும் கேட்காதிருத்தல், கடைகளில் விற்கப்படும் பொருள்களின் விலை அதிகமென்றாலும் கேள்விக்கேட்காமல் வாங்கிச்செல்வது.

படிக்காதவர்களிடத்தே சன் டிவியில் சொல்லப்படும் எல்லா செய்திகளும் சென்றடைகின்றன. செய்தித்தாள் படிப்பவர்கள் ஸ்பெக்ட்ரம், சாதிக் என பேசுகிறார்கள், பெரம்பலூர் பக்கமல்லவா... அதனால்தான் அதிகமாய்.

நான் படித்த பள்ளியியின் கட்டிடங்கள் முழுதும் இடிக்கப்பட்டு தரைமட்டமாய் இருக்கிறது. கற்களை பெயர்த்துக்கொண்து இருக்கிறார்கள். புதிய கட்டிடம் மூன்று அடுக்குகளோடு திறப்பு விழாவுக்கு காத்திருக்கிறது. எண்பத்தாறில் உயர்நிலைப்பள்ளியாய் மாறியபோது பத்தாவது முதல் செட்டில் படித்தேன். வரும் வருடம் மேல்நிலைப்பள்ளியாய் மாறிவிடுமாம், அதற்காக பணம் கட்டிவிட்டதாக தகவல் கிடைத்தபோது மகிழ்வாயிருக்கிறது.

ஆரம்ப சுகாதார நிலையம் முதலிலேயே இருந்தாலும் நிரந்தர மருத்துவரோடு புதிய கட்டிடத்தில் நல்ல பராமரிப்போடு கடந்த இரு மாதங்களாய் இயங்கி வருகிறது. முன்னதாக சுற்றுப்புற கிராமங்களில் உள்ள ஐம்பது கர்ப்பிணிப் பெண்களுக்கு வளைகாப்பு செய்து அசத்தியிருக்கிறார்கள். முதலில் பிறந்த பெண் குழந்தைக்கு அறுநூறு ரூபாய் பணம், பரிசுப்பொருள்கள் என கொடுத்து எல்லோரும் சென்று பார்த்திருக்கிறார்கள், எம்.எல்.ஏ உட்பட...

மிக அழகாய் மாரியம்மன் கோவிலைக் கட்டிமுடித்திருக்கிறார்கள். சமயபுரம் மாரியம்மன் சாயலில் செய்ய முயற்சித்திருக்கிறார்கள்.

முன்பெல்லாம் புதன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வெட்டப்படும் ஆடுகளின் எண்ணிக்கை மூன்று மற்றும் ஆறு. இன்று பத்து மற்றும் முப்பது. கோழி இறைச்சியினை பக்கத்து ஊரில்தான் வாங்கி வருவோம், இன்று இங்கேயே நான்கு கடைகள்.

எல்லா புதுப்படத்தின் டிவிடிக்களும் பகிரங்கமாக கிடைக்கின்றன. அத்தோடில்லாமல் எந்த படமென்றாலும் கிடைக்கிறது. மிகச்சரியான கவனித்தலால் கண்டுகொள்வதில்லை.

இருபத்து நான்கு மணி நேரமும் சரக்கு கிடைக்கிறது, பத்து ரூபாய் அதிகம் வெளியில்.

ஐ போனிலிருந்து இடுகையிடுவதால் புகைப்படங்களை சேர்ப்பதற்கும், நிறைய எழுதுவதற்கும் சிரமமாயிருக்கிறது.

ப்ளக்ஸ் போர்ட் கலாச்சாரம் எப்படியெல்லாம் ஆட்டி வைக்கிறது என்பதை அடுத்த தொகுப்பில் பார்க்கலாம்...

தெடாவூர் - அப்டேட்ஸ்... - 1

|

நெடு நாட்களுக்குப்பின் நிறைய நேரங்களை என் பிறந்த மண்ணில் செலவிட்டுக்கொண்டு, வாழ்வின் புரியாத சில பக்கங்களைப் படித்தும் பதித்தும் கொண்டிருக்கிறேன்.

தற்சமயம் நிறைய மாற்றங்கள்... வாழ்வியல் முறைகளில், நாகரிக வளர்ச்சிகளில், உறவுப் பிணைப்புகளில், சுற்றுப்புற சூழல்களில் என. இந்த இடுகையில் உறவுகள் மற்றும் சுற்றுப்புறங்களைப் பற்றி...

தினமும் கட்டாய மின் தடைக்கான நேரம், நடுநிசி பன்னிரண்டு முதல் அதிகாலை நான்கு ஆகியன தவிர்த்து தொலைக்காட்சிப் பெட்டிகள் படம், சீரியல், பாடல்கள் என அவரவர் ரசனைக்கேற்ப எல்லோரையும் மந்திரித்து விட்டாற்போல் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. அத்தோடு மட்டுமல்லாமல் எல்லா விதமான கடைகள், பேருந்துகள் என வியாபிக்காத இடங்களே இல்லை எனவும் சொல்லலாம். இன்னும் சில விஷயங்கள் அடுத்த இடுகையில்.

உறவுக்காரர் எவர் வீட்டுக்கு சென்றாலும் டிவியை அணைப்பதில்லை. மிகச்சிறிய குக்கிராமத்தில் இருக்கும் என் அத்தை வீட்டில் மட்டும் என்னப் பார்த்தும் அதனை நிறுத்தியவர்கள், கிளம்பிய அடுத்த நாள்வரை அதன் பக்கமே கவனியாமல், என்னோடு நிறைய பேசுவதிலும், கவனிப்பதிலுமே கவனம் செலுத்தியது நெகிழ்வாயிருந்தது.

மிக முக்கிய உறவுகளைத்தவிர்த்து மற்ற எல்லா உறவுகளிலுமே ஒரு மெல்லிய திரை விழுந்தார்போல்தான் இருக்கிறது. எதார்த்தம் தொலைந்திருப்பதால் எற்பட்ட விளைவுகள் என எண்ணுகிறேன்.

நெடு நாட்களுக்குப்பின் பெய்த பெருமழை காரணமாய் பூமித்தாய் குளிர்ந்து ஆனந்தக் கண்ணீராய் வெளிப்படுத்துதலாய் எங்கும் ஊற்று நீர்களால் தண்ணீர் உபயம். எல்லா நீர்நிலைகளும் நிறைந்தோடுகின்றன, கண்ணுக்கெட்டிய வரையிலும் பசுமையாய், குளிர்ச்சியாய், மனதிற்கு இதமாய்....

ஆற்றில் குட்டிக்குட்டியாய் மீன்கள், உற்சாகமாய் பிடிக்க எத்தனிக்கும் சொற்ப சிறுவர்கள், தண்ணீர் செல்லாத ஆற்றின் மறுபாதியில் கிரிக்கெட் ஆடும்  பதின்ம வயது சிறுவர்கள் நினைவுகளைப் பின்னோக்கிச் செல்ல வைக்க, மலர்ந்த நினைவுகளால் அன்றெல்லாம் என்னோடு இருந்த என் தம்பியின் நினைவால் விழியோரக் கண்ணீர்.

ஆற்றின் ஓரங்களில், தண்ணீர் வற்றிய பகுதிகளில் ஒதுங்கியிருக்கும் பிளாஸ்டிக் எமன்கள் மனதுக்குள்  பெரும் கலக்கத்தை ஏற்படுத்தின.

ஆற்றிலிருந்து உள்ளூர் தவிர எவரையும் மணல் எடுக்க அனுமதிப்பதில்லை என்பதால் நிறைய மணல் இருக்கும். பக்கத்து ஊர்களில் கட்டுப்பாடு இல்லாததால் ஆழமாய்ப்போய் பாழ்பட்டுக்கொண்டிருப்பது பதைபதப்பைத் தருகிறது.

கழிப்பறை வசதிகள் இன்னும் பத்து சதவிகித வீடுகளில் கூட இல்லாமல் இருக்கிறது. சுற்றுப்புற தூய்மையிலும் அவ்வளவாய் முன்னேற்றமில்லை, அக்கறையில்லை. இதையெல்லாம் சரிசெய்ய இயலுமா? யோசித்து ஏதுவாய் செய்ய உத்தேசம். பார்க்கலாம், நேரம் சூழல் ஒத்துப்போகவேண்டும்.

புத்தாண்டு வாழ்த்துக்கள்...

|

முழுதாய் ஓராண்டு
முடிந்தின்று புத்தாண்டு...
விழுதாய் எண்ணங்கள்
விளைந்திடுமிப் புத்தாண்டில்

நிலையினை உயர்த்தி
நினைத்தது நடந்தேற
விழைந்து வணங்கி
வாழ்த்துகிறேன் மனமுவந்து...

பிரபாகர்...

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB