தெடாவூர் - அப்டேட்ஸ்... - 1

|

நெடு நாட்களுக்குப்பின் நிறைய நேரங்களை என் பிறந்த மண்ணில் செலவிட்டுக்கொண்டு, வாழ்வின் புரியாத சில பக்கங்களைப் படித்தும் பதித்தும் கொண்டிருக்கிறேன்.

தற்சமயம் நிறைய மாற்றங்கள்... வாழ்வியல் முறைகளில், நாகரிக வளர்ச்சிகளில், உறவுப் பிணைப்புகளில், சுற்றுப்புற சூழல்களில் என. இந்த இடுகையில் உறவுகள் மற்றும் சுற்றுப்புறங்களைப் பற்றி...

தினமும் கட்டாய மின் தடைக்கான நேரம், நடுநிசி பன்னிரண்டு முதல் அதிகாலை நான்கு ஆகியன தவிர்த்து தொலைக்காட்சிப் பெட்டிகள் படம், சீரியல், பாடல்கள் என அவரவர் ரசனைக்கேற்ப எல்லோரையும் மந்திரித்து விட்டாற்போல் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. அத்தோடு மட்டுமல்லாமல் எல்லா விதமான கடைகள், பேருந்துகள் என வியாபிக்காத இடங்களே இல்லை எனவும் சொல்லலாம். இன்னும் சில விஷயங்கள் அடுத்த இடுகையில்.

உறவுக்காரர் எவர் வீட்டுக்கு சென்றாலும் டிவியை அணைப்பதில்லை. மிகச்சிறிய குக்கிராமத்தில் இருக்கும் என் அத்தை வீட்டில் மட்டும் என்னப் பார்த்தும் அதனை நிறுத்தியவர்கள், கிளம்பிய அடுத்த நாள்வரை அதன் பக்கமே கவனியாமல், என்னோடு நிறைய பேசுவதிலும், கவனிப்பதிலுமே கவனம் செலுத்தியது நெகிழ்வாயிருந்தது.

மிக முக்கிய உறவுகளைத்தவிர்த்து மற்ற எல்லா உறவுகளிலுமே ஒரு மெல்லிய திரை விழுந்தார்போல்தான் இருக்கிறது. எதார்த்தம் தொலைந்திருப்பதால் எற்பட்ட விளைவுகள் என எண்ணுகிறேன்.

நெடு நாட்களுக்குப்பின் பெய்த பெருமழை காரணமாய் பூமித்தாய் குளிர்ந்து ஆனந்தக் கண்ணீராய் வெளிப்படுத்துதலாய் எங்கும் ஊற்று நீர்களால் தண்ணீர் உபயம். எல்லா நீர்நிலைகளும் நிறைந்தோடுகின்றன, கண்ணுக்கெட்டிய வரையிலும் பசுமையாய், குளிர்ச்சியாய், மனதிற்கு இதமாய்....

ஆற்றில் குட்டிக்குட்டியாய் மீன்கள், உற்சாகமாய் பிடிக்க எத்தனிக்கும் சொற்ப சிறுவர்கள், தண்ணீர் செல்லாத ஆற்றின் மறுபாதியில் கிரிக்கெட் ஆடும்  பதின்ம வயது சிறுவர்கள் நினைவுகளைப் பின்னோக்கிச் செல்ல வைக்க, மலர்ந்த நினைவுகளால் அன்றெல்லாம் என்னோடு இருந்த என் தம்பியின் நினைவால் விழியோரக் கண்ணீர்.

ஆற்றின் ஓரங்களில், தண்ணீர் வற்றிய பகுதிகளில் ஒதுங்கியிருக்கும் பிளாஸ்டிக் எமன்கள் மனதுக்குள்  பெரும் கலக்கத்தை ஏற்படுத்தின.

ஆற்றிலிருந்து உள்ளூர் தவிர எவரையும் மணல் எடுக்க அனுமதிப்பதில்லை என்பதால் நிறைய மணல் இருக்கும். பக்கத்து ஊர்களில் கட்டுப்பாடு இல்லாததால் ஆழமாய்ப்போய் பாழ்பட்டுக்கொண்டிருப்பது பதைபதப்பைத் தருகிறது.

கழிப்பறை வசதிகள் இன்னும் பத்து சதவிகித வீடுகளில் கூட இல்லாமல் இருக்கிறது. சுற்றுப்புற தூய்மையிலும் அவ்வளவாய் முன்னேற்றமில்லை, அக்கறையில்லை. இதையெல்லாம் சரிசெய்ய இயலுமா? யோசித்து ஏதுவாய் செய்ய உத்தேசம். பார்க்கலாம், நேரம் சூழல் ஒத்துப்போகவேண்டும்.

5 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

vasu balaji said...

சிறப்பான தொகுப்பு. புத்தாண்டு வாழ்த்துகள் பிரவு.

sathishsangkavi.blogspot.com said...

//எதார்த்தம் தொலைந்திருப்பதால் எற்பட்ட விளைவுகள் என எண்ணுகிறேன்.//

இது தான் பங்காளி உண்மை...

settaikkaran said...

சொந்த ஊருக்குச் செல்வது என்பது ஒரு சுகானுபவம். கணங்களுக்கு கால்முளைத்து வேகவேகமாக ஓடுவது போல ஒரு இன்பமயமான பரபரப்பு நம்மைப் பற்றிக்கொள்ளும். அந்த அனுபவத்தின் அலாதி இன்பத்தை அருமையாய்ப் பகிர்ந்து கொண்டிருக்கிறீர்கள் நண்பரே!

ஈரோடு கதிர் said...

தொலைக்காட்சியை அணைத்து விட்டுப் பேசும் உறவு அற்புதப் பரிசு பிரபா!

T.V.ராதாகிருஷ்ணன் said...

//என்னோடு இருந்த என் தம்பியின் நினைவால் விழியோரக் கண்ணீர்.//

விழியோரக் கண்ணீர்:((

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB