துப்பாக்கி - விமர்சனம்...

|நேற்றிரவு துப்பாக்கி படம் பார்த்து வந்த மன நிறைவோடு கசாப்பை காலையில் தூக்கில் போட்ட நல்ல செய்தியும் சேர்ந்துகொள்ள படத்தினைப் பற்றிய என்னுடைய பகிர்வு இங்கே..

நிறைய படங்களைப் பார்த்தாலும் ஒரு சில படங்கள் தான் நம்மை எந்த ஒரு விதத்திலாவது விமர்சிக்க சொல்லுவனவாக  இருக்கும். படம் வெளியாகி, அதுபற்றி ஆயிரக்கணக்கான விமர்சனங்கள் வந்த பிறகும் அதையெல்லாம் படித்த பிறகும், விமர்சித்து பாராட்டத் தோன்றுகிறதே, அதில் தான் துப்பாக்கியின்  வெற்றி ஒளிந்திருக்கிறது.

எந்த ஒரு நடிகரையும் ரொம்பவும் பிடிக்கும் என்று மனதில் வைத்துகொள்வதில்லை, கல்லூரி காலங்களில் கமல் ரசிகன் எனச் சொல்லிக்கொண்டு திரிந்ததைத் தவிர. எல்லோரையும் ரசிப்பேன், நன்றாக செய்திருக்கும் பட்சத்தில்.

துப்பாக்கி என்பது ஆயுதமாக எனக்கு பிடிக்கவே பிடிக்காது என்றாலும் படமாக மிகவும் பிடித்திருந்தது... அரங்கு நிறைந்து அதிக ஆர்ப்பாட்டமில்லாமல் பார்ப்பது என்பது கண்டிப்பாக படம் வெளியாகி சில நாட்கள் கழித்து இதுபோன்ற தருணங்களில் தான் நிகழும், ந்தது.

அறிமுகம், சண்டை, பாடல் என  எல்லாம் தூள்  படத்தினை அப்படியே நினைவுப் படுத்தினாலும் ஒரு  சிறு உற்சாகம் பற்றிக்கொள்ளத்தான் செய்கிறது. விஜய் அப்பாவாக வருபவர் நாளைய இயக்குனர் குறும்படங்கள் பலவற்றில் நடித்தவர், அவரின் குரலும் நடிப்பும் அருமையாக இருந்தது, திரையில் பார்க்கும்போதும் அதே உணர்வுதான்.

நிறைய சம்பவங்களை எடுத்துக் கொண்டு சொதப்புவதை விடவும் ஒன்றிரண்டை ஒழுங்காய் சொன்னால் போதும். அதுவே பெரும் வெற்றிக்கு வித்தாக அமையும். நிறைய டைரக்டர்களுக்கு அவ்வாறு சொல்லும் திறமை அவ்வளவாய் இருப்பதில்லை, இதுவே பெரும்பாலும் தோல்விப்படமாக மாறுவதற்கு முக்கிய காரணமாகிறது. முருகதாசுக்கு இந்த வித்தை நன்றாகவே தெரிந்திருக்கிறது.

ஸ்லீப்பர் செல் எனும் ஒரு கருத்தை வைத்து இரண்டு சீன்களை கோர்த்து அதற்கு மசாலா சேர்த்து சினிமாவாய் கொடுத்திருக்கிறார், சுவைபட. 

விஜயை அழகாய் காட்டிய ஒரே படம் இதுதான் என்பேன். அதிகமான பஞ்ச் டயலாக் இல்லாமல், என்ன வேண்டுமோ அதனை மட்டும் டைரக்டர் முருகதாஸ் கேட்டுப் பெற்று ரசிக்கத்தக்க வண்ணம் படமாக்கியிருக்கிறார்.

லாஜிக் ஓட்டைகள் நிறைய இருந்தாலும் அதையெல்லாம் சீரணித்துக்கொள்ளும் அளவிற்கு காட்சியமைப்புகள் பின்னப்பட்டிருப்பதால் நம்மால் கதையோடு இயைந்து செல்ல முடிகிறது.

வழக்கமான சினிமா கதாநாயகியாய் காஜல், புஷ்டியான உடம்போடு கவர்ச்சியாய். பார்க்க பார்க்க அழகாய் விடும் என்பது காஜல் அகர்வாலுக்கு பொருந்தும். பொம்மலாட்டத்தில் அறிமுகமாகியிருந்ததற்கு இப்போது நூறு வித்தியாசங்கள் சொல்லலாம்...

ஒளிப்பதிவு ஒற்றிக்கொள்ளலாம் போல் இருக்கிறது. சந்தோஷ் சிவன் அனுபவம் பேசுகிறது. இசை இரைச்சலாய், சில நேரங்களில் இனிமையாய்...

வெடிகுண்டினை பன்னிரெண்டு இடங்களில் வைப்பதை கண்டுபிடிப்பதாய் காட்டியிருக்கும் காட்சியினை இன்னும் கொஞ்சம் ஷார்ப்பாக செய்திருக்கலாம். அதேபோல் கிளைமாக்ஸ்... ஆனாலும் காமெடி இல்லாத குறையினை இந்த லாஜிக் ஓட்டைகள் நிவர்த்தி செய்வதாய் எடுத்துக்கொள்ளலாம்.

மொத்தத்தில் இந்த ஆண்டின் மெகா ஹிட் படம், நல்ல எண்டர்டெயினர்...

கீப் இட் அப் முருகதாஸ்...

அம்மாவின் கைபேசி - விமர்சனம்...

|

எல்லோரும் துப்பாக்கியில் முனைப்பாயிருக்க, ஒரு மாறுதலுக்காய் கைபேசினேன்... அதீத பொறுமையும், மன உறுதியும் ஆண்டவன் நமக்கும் கொடுத்திருக்கிறான் என்பதை அறிந்துகொள்ள ஏதுவாய் இருந்தது..

நாம் இன்னமும் அறுபது காலக் கட்டங்களில் இருப்பதாய் இயக்குனர் நினைத்திருப்பார் போலிருக்கிறது, சொல்ல வந்த விஷயத்தை நீ...ட்டி முழக்குகிறார்...

அடிக்கடி கோழியை, மாட்டினைக் காட்டுவது என தனக்கே உரித்தான தனித்தன்மை என நினைத்துக் கொள்ளுவார் போலிருக்கிறது. நிறைய இடங்களில் சம்மந்தம் இல்லாமல் இருக்கிறது...

’அம்மாவின் கைப்பேசி’ எனும் பெயரை வைத்து நீங்கள் என்னவெல்லாமோ கற்பனை செய்து வாருங்கள், அதையெல்லாம் இல்லாமல் எடுத்துக்காட்டுகிறேன் என கங்கணம் கட்டிக்கொண்டு எடுத்திருப்பார் போலிருக்கிறது, கொஞ்சமும் ஒட்டுதல் இல்லை.

அவரது கேரக்டருக்கு மெனக்கெட்டு செய்திருக்கும் எல்லா காட்சிகளிலும் எண்பது சதம் சொதப்பலாய்த்தான் இருக்கிறது. படத்தினைப் பார்த்து நாம் அந்த காட்சியில் இயல்பாய் இணைய வேண்டும். இங்கோ ரொம்பவும் படுத்துகிறார்.

இயல்பாய் காட்டுகிறேன் எனச் சொல்லி நிறைய காட்சிகளால் நம்மை இம்சித்திருக்கிறார். ஆரம்பக்காட்சிகளாய் வரும் ஆட்டம் போடும் காட்சிகள், காதல் காட்சிகள், ஜவ்விழுவையாய் பணத்தை எடுத்துக்கொண்டு அலையும் காட்சிகள் என நிறைய சொல்லலாம்.

சார், ஐயா பற்றிய விளக்கங்கள், அழகம்பெருமாள் நடிப்பு, இனியாவின் இயல்பான நடிப்பு, வில்லன் கதாபாத்திரத்தில் வரும் டிரைவர், கோவில் சம்மந்தமான காட்சிகள் என நிறைவாகவும் விஷயங்கள் இருக்கின்றன, இருந்தாலும் இழுவையான கதையோட்டத்தில் இவையெல்லாம் விழலுக்கு இறைத்த நீராய்...

சாந்தனுவிற்கு நடிப்பு சுத்தமாய் வரவில்லை பாக்கியராஜுக்கு நடனம் போல. பாவம், நிறைய முயற்சி செய்திருக்கிறார். பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.

நிறைய எழுதலாம், வேண்டாம்... அவர் நம்மைப் படுத்தியதைப் போல உங்களை ஏன் நான்?...

அளவிற்கு மிஞ்சினால் என்பதற்கு அம்மாவின் கைபேசி ஒரு நல்ல உதாரணம்...

ஸ்கை ஃபால் - விமர்சனம்...

|எந்த ஒரு விசயத்தையும் முதன்முறையாய் பரீட்சித்து பார்க்கும்போது மெலிதாய் மனதிற்குள் ஒரு பயம் இருக்கத்தான் செய்யும். தமிழ் படங்களுக்கு அவ்வப்போது விமர்சனம் எழுதுவதில் கொஞ்சமும் தயக்கம் இருந்ததில்லை. ஆங்கிலப் படத்திற்கு எனும்பொழுது கொஞ்சம் உதறலாய்த்தான் இருக்கிறது. பார்த்ததை பகிரவேண்டும் எனும் உந்துதல் அதிகமாய் உறுத்த, இதோ எனது புரிதலில்.

கமலா திரையரங்கில் வேல்முருகன், கஜேந்திரன் சாருடன் பார்த்தேன். இதுதான் அங்கு பார்க்கும் முதல் படம். நன்றாக பராமரிக்கப் பட்டு எல்லாம் சரியாய் இருக்கிறது. டூ வீலர் பார்க்கிங் இருபது ரூபாய் என்பது அதிகமாய் இருக்கிறது.

Daniel Craig - ஐ ஜேம்ஸ் பாண்டாகவே ஒத்துக்கொள்ள மாட்டேன், Sky fall பார்க்கும் முன்பு வரை. அவரிடத்தில் ஏதோ மிஸ்ஸிங், என்ன வென்று அதுபற்றி நிறைய யோசிக்கலாம். ஆனால் அளவான, மிதமான நடிப்பில் கவர்கிறார்.

இதுதான் பாண்ட் படங்களிலேயே கவர்ச்சி மிகவும் குறைவாய், அதிக சென்டிமென்ட், நிறைந்த கதையம்சம் என வந்திருக்கும் படம் என்பது என் கருத்து.

சைனாவில் பணியாற்றிய ஒரு முன்னாள் உளவாளி, தான் எதிரிகளிடம் மாட்டிக்கொண்ட போது எந்த ஒரு உதவியும் கிடைக்காததால் அதற்கு காரணமான தலைவர் எம்-மை எப்படி பழிவாங்குகிறார் என்பதை டெக்னாலஜி, சென்டிமென்ட், பிரம்மாண்டம் என எல்லாம் புகுத்தி வந்திருக்கும் படம் இது.

ஆரம்பக் காட்சியில் இஸ்தான்புல் நகரில் பைக் சேசிங் மிகவும் அருமை, பிரமிப்பாய் இருந்தது. அதனைத் தொடர்ந்து கார் மற்றும் ட்ரெயின் என அடுத்தடுத்த காட்சிகள் அழகாய் படமாக்கப் பட்டு அசத்தலாய் இருக்கிறது.

ஷங்காயை பல படங்களில் பார்த்திருந்தாலும், இதில் காட்டிய விதம் அருமை. நிஜமாய் கேமிராமேன் மிரட்டியிருக்கிறார். மற்ற ஜேம்ஸ் படங்களிலிருந்து இதனை சண்டைக் காட்சிகளை முற்றிலும் வேறுபடுத்திக்காட்டி இருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும்.

சில்வா(Silva) என்ற பாத்திரத்தில் வில்லனாக நடித்திருக்கும் ஜேவியர் பர்டெம் (Javier Bardem) இந்த படத்திற்கு தூண் என்றால் மிகையில்லை, பின்னி பெடலெடுத்திருக்கிறார். அறிமுகக் காட்சியில் வசனம் பேசியபடி வரும் லாங் ஷாட்-டில் தனது ராஜாங்கத்தை ஆரம்பித்தவர், இறுதிவரை தோன்றும் இடங்களிலெல்லாம் மிரட்டுகிறார்.

சைலன்ஸ் ஆப்த லேம்ப்ஸ்-ல் ஆண்டனி ஹாப்கின்ஸ்(Anthony Hopkins), இளம் வயதிலேயே இறந்து போன தி டார்க் நைட் ஹீத் லெட்ஜெருக்கு(Heath Ledger) பிறகு இவரை எனக்கும் மிகவும் பிடித்திருக்கிறது.

அதீத பாதுகாப்பில் அடைத்து வைத்திருந்தாலும் சில்வா(Silva) தப்பித்து, கோர்ட்டில் என்கொயரி சமயத்தில் எம்மை கொல்ல முயற்சிக்க எம்-தான் டார்கெட் எனத் தெரிந்தவுடன், அவரை போலீஸ் பாதுகாப்பில் வைக்காமல், அவரை ஸ்காட்லாண்டில் உள்ள தனது வீட்டுக்கு அழைத்துசென்று சில்வாவை வரவழைக்கும் உத்தி அருமை.

வழக்கமான ஜேம்ஸ்பாண்ட் படத்தினை எதிர்ப் பார்த்து செல்பவர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றம் இருந்தாலும், மொத்தத்தில் இந்த படம் அருமை. அவசியம் பார்க்கலாம்.

வேல்முருகன் - இந்த படம் இந்தியாவில் ஓடாது.

கஜேந்திரன் சார் - சூப்பர்.

சில சந்தேகங்களை நிவர்த்தி செய்த கஜேந்திரன் சாருக்கு நன்றி...

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB