துப்பாக்கி - விமர்சனம்...

|நேற்றிரவு துப்பாக்கி படம் பார்த்து வந்த மன நிறைவோடு கசாப்பை காலையில் தூக்கில் போட்ட நல்ல செய்தியும் சேர்ந்துகொள்ள படத்தினைப் பற்றிய என்னுடைய பகிர்வு இங்கே..

நிறைய படங்களைப் பார்த்தாலும் ஒரு சில படங்கள் தான் நம்மை எந்த ஒரு விதத்திலாவது விமர்சிக்க சொல்லுவனவாக  இருக்கும். படம் வெளியாகி, அதுபற்றி ஆயிரக்கணக்கான விமர்சனங்கள் வந்த பிறகும் அதையெல்லாம் படித்த பிறகும், விமர்சித்து பாராட்டத் தோன்றுகிறதே, அதில் தான் துப்பாக்கியின்  வெற்றி ஒளிந்திருக்கிறது.

எந்த ஒரு நடிகரையும் ரொம்பவும் பிடிக்கும் என்று மனதில் வைத்துகொள்வதில்லை, கல்லூரி காலங்களில் கமல் ரசிகன் எனச் சொல்லிக்கொண்டு திரிந்ததைத் தவிர. எல்லோரையும் ரசிப்பேன், நன்றாக செய்திருக்கும் பட்சத்தில்.

துப்பாக்கி என்பது ஆயுதமாக எனக்கு பிடிக்கவே பிடிக்காது என்றாலும் படமாக மிகவும் பிடித்திருந்தது... அரங்கு நிறைந்து அதிக ஆர்ப்பாட்டமில்லாமல் பார்ப்பது என்பது கண்டிப்பாக படம் வெளியாகி சில நாட்கள் கழித்து இதுபோன்ற தருணங்களில் தான் நிகழும், ந்தது.

அறிமுகம், சண்டை, பாடல் என  எல்லாம் தூள்  படத்தினை அப்படியே நினைவுப் படுத்தினாலும் ஒரு  சிறு உற்சாகம் பற்றிக்கொள்ளத்தான் செய்கிறது. விஜய் அப்பாவாக வருபவர் நாளைய இயக்குனர் குறும்படங்கள் பலவற்றில் நடித்தவர், அவரின் குரலும் நடிப்பும் அருமையாக இருந்தது, திரையில் பார்க்கும்போதும் அதே உணர்வுதான்.

நிறைய சம்பவங்களை எடுத்துக் கொண்டு சொதப்புவதை விடவும் ஒன்றிரண்டை ஒழுங்காய் சொன்னால் போதும். அதுவே பெரும் வெற்றிக்கு வித்தாக அமையும். நிறைய டைரக்டர்களுக்கு அவ்வாறு சொல்லும் திறமை அவ்வளவாய் இருப்பதில்லை, இதுவே பெரும்பாலும் தோல்விப்படமாக மாறுவதற்கு முக்கிய காரணமாகிறது. முருகதாசுக்கு இந்த வித்தை நன்றாகவே தெரிந்திருக்கிறது.

ஸ்லீப்பர் செல் எனும் ஒரு கருத்தை வைத்து இரண்டு சீன்களை கோர்த்து அதற்கு மசாலா சேர்த்து சினிமாவாய் கொடுத்திருக்கிறார், சுவைபட. 

விஜயை அழகாய் காட்டிய ஒரே படம் இதுதான் என்பேன். அதிகமான பஞ்ச் டயலாக் இல்லாமல், என்ன வேண்டுமோ அதனை மட்டும் டைரக்டர் முருகதாஸ் கேட்டுப் பெற்று ரசிக்கத்தக்க வண்ணம் படமாக்கியிருக்கிறார்.

லாஜிக் ஓட்டைகள் நிறைய இருந்தாலும் அதையெல்லாம் சீரணித்துக்கொள்ளும் அளவிற்கு காட்சியமைப்புகள் பின்னப்பட்டிருப்பதால் நம்மால் கதையோடு இயைந்து செல்ல முடிகிறது.

வழக்கமான சினிமா கதாநாயகியாய் காஜல், புஷ்டியான உடம்போடு கவர்ச்சியாய். பார்க்க பார்க்க அழகாய் விடும் என்பது காஜல் அகர்வாலுக்கு பொருந்தும். பொம்மலாட்டத்தில் அறிமுகமாகியிருந்ததற்கு இப்போது நூறு வித்தியாசங்கள் சொல்லலாம்...

ஒளிப்பதிவு ஒற்றிக்கொள்ளலாம் போல் இருக்கிறது. சந்தோஷ் சிவன் அனுபவம் பேசுகிறது. இசை இரைச்சலாய், சில நேரங்களில் இனிமையாய்...

வெடிகுண்டினை பன்னிரெண்டு இடங்களில் வைப்பதை கண்டுபிடிப்பதாய் காட்டியிருக்கும் காட்சியினை இன்னும் கொஞ்சம் ஷார்ப்பாக செய்திருக்கலாம். அதேபோல் கிளைமாக்ஸ்... ஆனாலும் காமெடி இல்லாத குறையினை இந்த லாஜிக் ஓட்டைகள் நிவர்த்தி செய்வதாய் எடுத்துக்கொள்ளலாம்.

மொத்தத்தில் இந்த ஆண்டின் மெகா ஹிட் படம், நல்ல எண்டர்டெயினர்...

கீப் இட் அப் முருகதாஸ்...

1 Comentário:

திண்டுக்கல் தனபாலன் said...

செம ஹிட்... விமர்சனத்திற்கு நன்றி...

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB