Sunday, December 6, 2009

எங்கேயோ படிச்சது - 8 ஜோராவும் உழைப்பின் அருமையும்...

அந்த சின்ன நகரத்துல தினமும் எல்லா வீட்டுக்கும் தண்ணிய சுமந்துகிட்டு போயி கொடுத்து அதுல கிடைக்கிறத வெச்சி கிட்டு சந்தோஷமா ஒருத்தர் வாழ்க்கைய நடத்திக்கிட்டு இருந்தாரு. ஆதரவுக்குன்னு யாருமில்லாம ஒண்டியா இருந்தாரு.

ஒரு நாள் பக்கத்து கிராமத்துல வேலை பார்த்ததுல அவருக்கு வழக்கத்த விட அதிகமா ஒரு பைசா கிடைக்க, அத என்ன பண்ணலாம்னு யோசிக்கிறப்போ பக்கத்துல இருந்த மதில் சுவற்றில ஒரு கல்லு லேசா வெளிய வந்த மாதிரி இருந்தது. அத இழுத்து காச உள்ள போட்டுட்டு எந்த இடங்கறத சரியா மேல கீழ எண்ணி, மனசுல பதிய வெச்சிகிட்டாரு.

ரொம்ப வருஷம் கழிச்சி கல்யாண வயாசாச்சுன்னு ஊர்ல எல்லாரும் சேர்ந்து அவருக்கு சொந்தத்துலயே ஒரு பொண்ண பாத்து கல்யாணமும் பண்ணி வெச்சாங்க. அம்மணியும் கூட ஒத்தாசையா தண்ணி சுமக்குற வேலை செய்ய அவங்க வாழ்க்கை ரொம்ப சந்தோஷமா போயிட்டிருந்துச்சி.

பக்கத்து ஊர்ல திருவிழா, ரொம்ப கோலாகலமா நடந்துகிட்டிருந்துச்சி. அம்மணி ஆசையா போகலாமானு கேக்க, சந்தோஷமா, 'எங்கிட்ட ஒரு பைசா இருக்கு அத பத்திரமா வெச்சிருக்கேன், எடுத்துட்டு வந்துடறேன், கிளம்பி தயாரா இரு' ன்னு சொன்னாரு. அம்மணி,  'எங்கிட்டயும் ஒரு பைசா இருக்கு' ன்னு சொல்லவும், ரொம்பவும் உற்சாகமா அந்த காச எடுத்து வர கிளம்பி அந்த மதில் சுவர் இருந்த இடத்த நோக்கி வேகமா ஓட்டமும் நடையா போக ஆரம்பிச்சிட்டாரு.

அது சித்திரை மாசம் கத்திரி வெயில், மத்தியான நேரம்.  நம்ம ஜோரா (ஜோவியல் ராஜா... இவரின் அறிமுகம் எங்கேயோ படிச்சது - 5 ஜோவியல் ராஜாவும் தோட்டக்காரனும்) ரெண்டுபேர் அதிகப்படியா சாமரம் வீசியும், புழுக்கம் தாளாம உப்பரிகையில உக்கார்ந்து வெளிய பாத்துகிட்டிருந்தாரு.

அப்போ தூரத்துல கால்ல செருப்பு இல்லாம இடுப்பில துண்ட மட்டும் கட்டிட்டு சுடற வெயில்ல வேகமா நடந்து போறத பாத்துட்டு ரொம்பவும் ஆச்சர்யப்பட்டு சேவகர்களை அனுப்பி அழைச்சிட்டு வரச் சொன்னாரு.

சேவகர்கள் தலை தெறிக்க ஒடி கத்தி கூப்பிட, கண்டுக்காம வேகமா பாட்டு பாடிகிட்டு அவரு பாட்டுக்கும் போயிட்டிருந்தாரு. விரட்டி பிடிச்சி ஜோரா கூப்பிட்டதா சொல்ல 'முக்கியமான வேலையா போயிட்டிருக்கேன் அப்புறம் வரேன்' னு சொன்னாரு.  பொளிச்சுன்னு பொடனியில ஒன்னு உட்டு ஜோராகிட்ட இழுத்துகிட்டு வந்தாங்க.

'நான் பொக்கிஷத்த எடுத்துகிட்டு என் பொண்டாட்டிய திருவிழாவுக்கு கூட்டிட்டு போகணும்னு வேக வேகமா போயிட்டிருந்தேன்,  என்ன மறிச்சி கூட்டிகிட்டு வந்துட்டீங்களே' ன்னு கோவிச்சுக்க,

'சரி சரி, அதுக்கு நான் மன்னிப்பு கேட்டுக்கறேன். உன் பொக்கிஷம் எவ்வளவு இருக்கும் ஒரு ஆயிரம் பவுன்?'

இல்லன்னு தலையாட்ட, கொஞ்சம் கொஞ்சமா ஒரு பவுன்?, ஒரு ரூபா?, அம்பது காசு?...ன்னு குறைச்சிகிட்டே வந்தாரு. எல்லாத்துக்கும் இல்லன்னு சொல்லிகிட்டே வர, கடைசியா எவ்வளவுதான் இருக்குன்னு கேட்டதுக்கு ஒரு பைசான்னு சொல்ல,  சிரிச்சிகிட்டு வந்த எல்லாரும் பரிதாபப்பட ஆரம்பிச்சிட்டாங்க.

ஜோராவும் ரொம்ப பரிதாபப்பட்டு 'ஆமாம் எங்க இருக்கு' ன்னு கேட்டதுக்கு, அவரு இடத்த சொல்ல அதிர்ச்சியாயிட்டாரு. ஏன்னா இன்னும் ஏழு கல் தூரம் போகணும். உடனே ஜோரா, 'சரி, நான் அந்த ஒரு பைசாவ தர்றேன், இப்படியே திரும்பி போயிடு' ன்னாரு.

'சரி வாங்கிக்கிறேன், ஆனா அதையும் எடுத்துக்கிட்டுத்தான் போவேன், சேர்த்தா ரெண்டு பைசாவா ஆகும்ல' ன்னு சொல்ல,

ஜோரா ரெண்டு, பாத்து, நூறு, ஆயிரம், பொற்காசுன்னு ஏத்திகிட்டே போனாரு. ஆனா அவரு அந்த ஒரு பைசாவா விடவே இல்ல. அதையும் சேர்த்து எடுத்துக்கிட்டுத்தான் போவேன்னு பிடிவாதமா சொல்லிட்டிருந்தாரு. ஜோராவும் இவ்வளவு, அவ்வளவுன்னு கை ரெண்டையும் அதுக்கு மேல காமிக்க முடியாத அளவுக்கு சொல்லியும் கடைசி வரைக்கும் மசியல.

கடைசியா நாட்டுலே பாதி தரேன்னு சொல்ல ஒருவழியா அந்த ஒரு பைசாவா எடுக்காம அப்படியே திரும்பி போக ஒத்துகிட்டாரு. சரி நாட்ட ரெண்டா பிரிச்சிடறேன் உனக்கு எந்த பக்கம் வேணும்னு கேக்க, காச வெச்சிருக்கிற இடது பக்கம்னு சொன்னாரு.

ஜோரா அவர அப்படியே தழுவி, 'இப்பவும் நீ ஜெயிச்சிட்ட, கடைசியில் எத்தனை காசு உழைக்காம வந்தாலும் உழைச்ச காசுதான் பெருசுங்கற பெரிய உண்மையை இங்க எல்லாருக்கும் புரிய வச்சுட்டன்னு' னு பாராட்டி, நிறைய பரிசு, பொன்முடிப்புன்னு கொடுத்து கௌரவிச்சி அனுப்பினாரு.


இதுவரை நினைந்தது...

இதுவரை இந்த இடுகையை படிச்சவங்க...