சகுனம் Vs மணி...

|

காலேஜ் முடிச்சிட்டு அங்க இங்கன்னு வேலை பாத்துட்டு இன்னும் செட்டில் ஆகாம இருந்தேன். ரெண்டு இன்டெர்வியூ முடிச்சிட்டு ஒரு வாரம் பிரேக் எடுத்துட்டு ஊருக்கு போயிருந்தேன்.

மணி என்ன பாக்க வந்திருந்தான். என்னோட க்ளோஸ் பிரண்டு, படிச்சி முடிச்சிட்டு விவசாயம் பாத்துகிட்டிருக்கான்.

'பிரபு புவனாவுக்கு எக்ஸாம் பீஸ் கட்ட போகனும், நாளைக்குத்தான் கடைசி தேதி, பன்னண்டு மணிக்குள்ள கட்டனுமாம். திடீர்னு போன் பண்ணி சொல்லுது. நாளைக்கு பணம் கொடுக்க கரூர் போறேன், நீயும் வர்ரியா' ன்னு கேட்டான்.

வீடு, இல்லன்னா அவன்கூடத்தான் சுத்திகிட்டு இருப்பேன். ஏற்கனவே ரிலீஸ் ஆகியிருந்த புது படத்தை நாளைக்கு பாக்கனும்னு சொல்லியிருந்தான்.

நான் யோசிக்கும் போதே புரிஞ்சிட்டு, 'படத்த பத்தி யோசிக்கிறியா?, ஆத்தூர்ல எவன்யா படம் பாப்பான், சேலத்துல ஏ.ஸி.ல பாப்போம்' னான்.

அம்மாகிட்ட கேட்டுட்டு சரின்னு சொன்னவுடன், 'காலையில லோகநாதன்ல போறோம், நாலே முக்காலுக்கெல்லாம் ரெடியாயிடனும், உன்னை நாலு மணிக்கு எழுப்பறேன்' னுட்டு போயிட்டான். நம்ம ஊர்ல இருந்து ஆத்தூர், சேலம் போயிதான் கரூர் போகனும்..

ரொம்ப நேரம் அப்பா, அம்மா தம்பியோட பேசிட்டிருந்துட்டு ஒரு மணி வாக்கிலதான் படுத்தேன். மூனு மணிக்கே வந்து எழுப்பி விட்டுட்டான்.

பாத்ரூமுக்குள்ள உக்காந்துகிட்டே தூங்கி, நாலு தடவ அவன் கதவை தட்டி... ஒரு வழியா ரெண்டு பேரும் கிளம்பிட்டோம்.

மணி சகுனம், ஜாதகம்னு ரொம்ப நம்பிக்கையா இருப்பான், நான் அவ்வளவா கண்டுக்க மாட்டேன்.

வீட்ட விட்டு கிளம்பி ஒரு பத்தடி தூரம் போயிருப்போம், ஒரு பூனை குறுக்க போக, சட்டுனு டென்ஷன் ஆகி, திரும்பவும் வீட்டுக்கு வந்து அம்மாகிட்ட தண்ணி வாங்கி குடிச்சிட்டு, என்னையும் கொஞ்சம் குடின்னான், வேணாமுன்னுட்டேன்.

தெருவில விளக்கில்லாம இருட்டா இருந்துச்சி. நடந்து போயிட்டிருக்கும்போது, எனக்கு முன்னால வேகமா நடந்து போன மணி, கவனிக்காம படுத்திருந்த பன்னி மேல மெதிச்சுட்டான்.

குரூப்பா கத்திகிட்டு சட சடன்னு ஓட மிரண்டு போய், பேலன்ஸ் பண்ண முடியாம பக்கத்துல இருந்த டிட்ச்ல காலை விட்டுட்டான். லேசா காலை சிராய்ச்சதோட இல்லாம, பேன்ட்டெல்லாம் சகதியாயிடுச்சி.

பஸ்ஸுக்கு வேற டைம் ஆச்சு. நொண்டிகிட்டே வேகமா திட்டிகிட்டே வீட்டுக்கு ஓடி வேற பேன்ட் போட்டுட்டு வந்தான்.

அதுக்குள்ள பஸ் வர்ற சத்தம் கேட்டு தலை தெறிக்க, அவனோட செருப்பு பிஞ்சி போக ஒடியும், பஸ்ஸ விட்டுட்டோம். டென்ஷனாகி கத்த ஆரம்பிச்சுட்டான். எனக்கு சிரிப்பா வந்துச்சி.

சிரிக்கறத பாத்துட்டு இன்னும் சூடாயிட்டான், 'எம்.சி.ஏ. படிச்சிட்டேங்கற திமிர்ல இருக்கிற' ன்னு ஆரம்பிச்சுட்டான். ஏதாவதுன்னா என் படிப்பப்பத்தி பேச ஆரம்பிச்சிடுவான்.

அடுத்த பஸ் அஞ்சரைக்குத்தான். 'வீட்டுல போயி என் செருப்ப வேணா போட்டுட்டு வந்துரலாமா மணி' ன்னு கேட்டேன்.

'ஆமா விளங்கிடும், பாத்துக்கலாம். இன்னிய பொழுது எப்படி ஆகப்போகுதோ' ன்னு புலம்ப ஆரம்பிச்சுட்டான். வர்ற லாரி பைக்குக்கெல்லாம் கை காட்டி லிப்ட் கேக்க ஆரம்பிச்சுட்டான்.

'மணி வேண்டாம், இன்னும் பதினஞ்சி நிமிஷம்தான் இருக்கு, அடுத்த பஸ்ஸிலேயே போயிடலாம்' னேன்.

லாரி ஒன்னு நின்னுச்சி. 'அண்ணா அர்ஜென்ட், ஆத்தூர் வரக்கும் வரலாமா' ன்னு கேட்க, 'சரி' ன்னு ஏத்திகிட்டாங்க.

ஆத்தூர் போறதுக்கு ரெண்டு வழி, லாரில்லாம் ஷார்ட் கட்டுல நடுவலூர் வழியா போகும், நாலஞ்சி பஸ்ஸ தவிர எல்லாம் கெங்கவல்லி வழியா போகும்.

மனசுக்குள்ள லாரி ஏதாச்சும் ஆச்சுன்னா ஆத்தூர் போன மாதிரிதான்னு நினைச்சேன், ஆனா வெளியே சொல்லல.

அதே மாதிரி ரெண்டு ரோடும் சந்திக்கிறதுக்கு ஒரு கிலோ மீட்டர் முன்னால படீர்னு ஒரு சத்தம். பின்னால டயர் வெடிச்சிடுச்சி. டென்ஷனாகி, அவசரம்னு அவங்ககிட்ட சொல்லிட்டு வேக வேகமா ஓடினோம்.

மணி செருப்பில்லாத கால்ல வேக வேகமா ஓடி வர்றத பாக்க பாவமா இருந்துச்சி. கூட்ரோடு வரைக்கும் ஓடியும் நடந்தும் போயி பஸ்ஸ புடிச்சி ஆத்தூர் போறதுக்கே ஏழரை ஆயிடுச்சி.

சேலம் பஸ்ஸில உட்காரும்போது மூனுபேர் உட்கார்ற சீட்ல வழக்கம்போல் ஜன்னல் ஓரமா உட்காந்துட்டேன். மணி நடுவில உட்காந்துட்டான்.

எப்பவும் நாங்க பஸ்ஸில உட்காரும் போது மூனாவது சீட்ல பையை வெச்சிட்டு, யாராவது பொடிசா, வத்தலா வந்தா உட்கார வெச்சுக்குவோம்.

ஆனா அன்னிக்குன்னு பாத்து அவன் நேரமோ என்னானு தெரியல, அந்த மாதிரி பண்ணாததால நாமம் போட்டுட்டு ஒருத்தர் ரொம்ப தடியா வந்து உட்காரப் போக,

'பின்னால நிறைய இருக்கு சார்' னு சொன்னாலும், 'பரவாயில்ல தம்பி இங்கயே உட்காந்துக்கறேன், அவ்வளோ தூரம் போக முடியாது' ன்னு உட்காந்துட்டாரு.

நரக அவஸ்தை. அவனும் ஜாடையாவும் கடைசியா நேரடியாவும் சொன்னாலும் அவரு கண்டுக்கவே இல்ல, சிரிச்சுகிட்டே வந்தாரு.

நான் அசதியில காத்து நல்லா அடிக்க தூங்கிட்டேன். மணி என்ன அவசரமா எழுப்பினான்.

'யோவ் இங்க பாருய்யா கிரகத்த' ன்னான்.

பஸ் மெயின் ரோட்ட விட்டுட்டு ஒரு சிங்கிள் பாதையில போயிட்டு இருந்துச்சி. ஆக்ஸிடென்ட், ரோடு பிளாக்காம்.

'என்னய்யா விதி இப்படி விளையாடுது' ன்னான், கலவரமாய்.

'எல்லாம் அவன் செயல்' நாமம் சொல்ல,

'உன் செயல்' னான் கடுப்பாய்.

எப்படியோ சுத்தி ஒருவழியா சேலம் போயி, பிளாட்பாரத்துல செருப்பு ஒன்னு வாங்கிட்டு, கரூர் போறதுக்குள்ள ஒரு மணியாயிடுச்சி.

புவனா கேட்டுக்கிட்டயே நின்னுகிட்டிருந்துச்சி. பாத்தவுடனே பொசுக்குன்னு அழுதுடுச்சி. 'ஏன்னா, இப்படி பண்றே' ன்னுட்டு, என்ன பாத்து எப்பவும் வராதவன் வந்திருக்கேனேன்னு, டக்குனு மலர்ச்சியா, 'எப்பண்ணா வந்தீங்க' ன்னு கேட்டுச்சி.

பிரண்டுகிட்ட அண்ணன் வந்தவுடன் தர்றேன்னு சொல்லி வாங்கி கட்டிடுச்சாம். சுருக்கமா நடந்தத சொல்லிட்டு, பணத்த தர்றதுக்கு மணி பேன்ட் பாக்கெட்ட்ல கையை விட்டவன் ஆடி போயிட்டான்.

பேன்ட்ட மாத்தும் போது எல்லாம் எடுத்து வெச்சவன், டிக்கெட் பாக்கெட்ல இருந்த தர வேண்டிய பணத்த எடுத்து வெக்க மறந்துட்டான். வழக்கம் போல ஓவர் டென்சன் ஆக, சமாதானப்படுத்தி, வாழ்க்கையில முதன் முறையா அடகு கடையில என் செயின வெச்சு சமாளிச்சோம்.

மணி ஒன்னுமே பேசாம நொந்து போய் வந்தான். படமெல்லாம் பாத்தாலும் சமாதானமாகல.

ஊருக்கு போனதும் நேரா அவன் வீட்டுக்குத்தான் முதல்ல போனோம், பேன்ட்ல பணத்த பாக்கறதுக்காக.

மாட்டியிருந்த பேன்ட்ட காணும். பதறிக்கிட்டு பணம் வெச்சிருந்தத சொல்லி அவங்கம்மாகிட்ட  கேட்டதுக்கு, 'அய்யய்யோ துவைக்க போட்டுட்டேனே' ன்னு அலற

'உன்ன யாரு துவைக்க போட சொன்னாங்க' ன்னு கோவமா கத்த 'ரொம்ப அழுக்கா சேரப்பி இருந்துச்சி' ன்னு சொல்லவும், வேகவேகமா துணி எடுத்துட்டு போனவங்க வீட்டுக்கு ஓடினான்.

நான் வீட்டுக்கு போக, அப்பா வாசல்லயே உட்காந்திருந்தாரு.
'துரை, ஒருநாள் வீடு தங்க மாட்டாரா?, ஒரு போன் கூடவா பண்ண கூடாது' ன்னுட்டு, 'தந்தி வந்திருக்கு நல்ல விஷயம்தான், டேபிள்ல இருக்கு பாரு'ன்னாரு.

ஆர்வமா எடுத்து பாக்க வேலையில பத்து நாள்ல சேரச் சொல்லி டெல்லியிலிருந்து தகவல் வந்திருந்துச்சி.

8 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

vasu balaji said...

எந்த மணி. ஃப்ரெண்டு மணியா டிக்கட் பாக்கட் மணியா:))

பழமைபேசி said...

என்னோட பணம்?

Unknown said...

அருமையான இடுகை.

அதிலும் அந்த மணியை அடித்துக் கொண்டே நீங்கள் சைக்கிள் ஓட்டும் விதத்தை விவரித்திருந்ததை படித்து படித்து சிரித்துக்கொண்டே இருக்கிறேன்..

ஹேமா said...

எப்பிடியோ...நல்ல தகவல்தான்.

Anonymous said...

//பழமைபேசி said...

என்னோட பணம்?
//

மணியண்ணனுக்கு பயம் பாருங்க :)

க.பாலாசி said...

அடடா...இப்பவே யாரோ தெரியாம மைனஸ் ஓட்டு போட்டிட்டாங்க..

இடுகை...கலக்கல்...

மங்குனி அமைச்சர் said...

சார் நல்ல எழுத்து, நானும் இந்த மாதிரி சகுனம் பார்பவர்களிடம் நிறைய அனுபவபட்டு இருக்கேன்

பிரபாகர் said...

//
வானம்பாடிகள் said...
எந்த மணி. ஃப்ரெண்டு மணியா டிக்கட் பாக்கட் மணியா:))
//
நன்றிங்கய்யா...

//
பழமைபேசி said...
என்னோட பணம்?
//
அதான் திரும்ப கிடைச்சிடுச்சில்லங்கண்ணே?

//
முகிலன் said...
அருமையான இடுகை.

அதிலும் அந்த மணியை அடித்துக் கொண்டே நீங்கள் சைக்கிள் ஓட்டும் விதத்தை விவரித்திருந்ததை படித்து படித்து சிரித்துக்கொண்டே இருக்கிறேன்..
//
படிச்சதுக்கு அப்புறமா என்ன ஃபீல் பண்ணுனீங்க?

//
ஹேமா said...
எப்பிடியோ...நல்ல தகவல்தான்.
//
நன்றி சகோதரி...

//
சின்ன அம்மிணி said...
//பழமைபேசி said...

என்னோட பணம்?
//

மணியண்ணனுக்கு பயம் பாருங்க :)
//
நன்றிங்க சின்ன அம்மணி...

//
Sachanaa said...
:-)
//
நன்றிங்க...

//
க.பாலாசி said...
அடடா...இப்பவே யாரோ தெரியாம மைனஸ் ஓட்டு போட்டிட்டாங்க..

இடுகை...கலக்கல்...
//
நன்றி இளவல்...

//
மங்குனி அமைச்சர் said...
சார் நல்ல எழுத்து, நானும் இந்த மாதிரி சகுனம் பார்பவர்களிடம் நிறைய அனுபவபட்டு இருக்கேன்
//
நன்றிங்க...

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB