மாரிமுத்துவும் மந்திரப்புன்னகையும்....

|

என் தாத்தாவின் ஊருக்கு சொல்லும்போதெல்லாம் கண்டிப்பாய் மாரியை சந்திப்பேன். தகவல் தெரிந்து, அல்லது வரப்போவதை முன்னதாக அறிந்து சந்திக்க வருவார்.

பார்த்தவுடன் புன்னகைத்து, 'நல்லாருக்கிறீங்களா?’ என்பார் தலையாட்டி 'நீங்கள் எப்படி' என அழுத்திக்கேட்பேன். 'ம்... ஆண்டவன் புண்ணியத்துல நல்லா போயிட்டிருக்கு' என சொல்வார். அவருக்கு காசு கொடுப்பேன். தயக்கத்தோடும், சந்தோஷமாகவும் வாங்கிகொண்டு, ஏதோ கேட்க வர, 'வேண்டாம் அதுக்குத்தான் அந்த காசு' என சொல்வேன்.

'எதுக்கு மாரிய எப்போ பார்த்தாலும் காசு தரே, அவரு வெக்கப்பட்ட மாதிரி சிரிக்கிறாரு' என மாமா கேட்டார். நீங்களும் தானே? கொஞ்சம் கீழே படியுங்களேன்!

கிராமம், நகரத்தில் முடிவெட்டிக் கொள்வது என்பது அப்போதெல்லாம் மலைக்கும் மடுவுக்குமாய் இருக்கும். கிராமங்களில் பெரும்பாலும் வீட்டுக்கே வருவார்கள். கூரையால் வேயப்பட்ட அவர்களின் கடைக்கு சென்றாலும் காசு கொடுக்கத்தேவையில்லை. வருடா வருடம் வெள்ளாமையில் நெல் அறுவடை முடிந்தவுடன் முதலில் நெற்கட்டுக்களைத் தருவார்கள்(கட்டுக் கூலி என சொல்வார்கள்) அத்தோடில்லாமல் எல்லாம் முடித்து நெல்லினை மூட்டைக்கட்டும்போதும் அவர்களது வேலைக்கான கூலியினைத் தருவார்கள்..

மாரிமுத்து ஆத்தூர் சேலம் என நகரக்கடைகளில் வேலை பார்த்து, முதன்முறையாக புதிதாய் உள்ளூரில் கடை ஆரம்பித்தார். சுழலும் சேர், முன்பின் பெரிய கண்ணாடிகள், சீலிங் ஃபேன், குட்டியாய் ஒரு டேபிள் ஃபேன், தலைக்கு ஹீட்டர் என எல்லா வசதிகளும் இருந்தது.

வீட்டிக்கு வந்து இனிமேல் வேறெங்கேயும் போகக்கூடாது, அவரிடம்தான் முடி வெட்டிக்கொள்ள வரவேண்டும் என அன்புக்கட்டளையிட்டு சென்றார். அன்று காலை எழுந்ததுமே ஆயாவிடமிருந்து பாட்டு. 'காலேஜ் படிக்கிற பையன் ஒழுங்கா முடிய வெட்டிக்கிட்டு ஜம்முனு இருக்கவேணாம்? பக்கிரி மாதிரி முடிய வெச்சிகிட்டு' எனச் சொல்ல பக்கிரி என்ற வார்த்தையால் தன்மானம் விழித்துக்கொண்டது.

'ஆத்தூர்ல போயித்தானே துரை வெட்டிக்குவாரு?' என தாத்தா சொல்ல, 'அங்கெல்லாம் எதுக்கு? மாரிமுத்துத்தான் கடை ஆரம்பிச்சிருக்கானே போய் வெட்டிக்க வேண்டியதுதானே?, ரெண்டு மூணு தடவ வந்து சொல்லிட்டு போயிருக்கான்' என ஒரு கட்டாயப்படுத்துதலோடு ஆயா சொன்னார்கள்.

முடி வெட்டும் விஷயத்தில் அவ்வளவாய் கவலைப்படுவதில்லை, ஏனெனில் எவ்வளவுதான் கேவலமாய் வெட்டப்பட்டாலும் பத்தே நாட்களில் வளர்ந்துவிடும் அல்லவா? முதல் முறையாக மாரியிடம் துணிந்து தலைகொடுக்க கிளம்பினேன்.

கடை திறந்து இருந்தது, மாரியைக் காணவில்லை. வெளியில் அமர்ந்து தினத்தந்தியினை படித்துக்கொண்டிருந்தேன். பார்த்த ஒரு அம்மா 'இருங்க தம்பி வர சொல்றேன், அந்த குடிகார நாயி எங்க போச்சின்னே தெரியல, பாத்துட்டு வர்றேன்' என சொல்லிவிட்டு போனார்கள்.

கொஞ்ச நேரத்தில் மாரி வந்தார். முகத்தில் இனம் புரியா கலவரம். செயற்கையாய் ஒரு சிரிப்போடு வரவேற்று சேரில் உட்கார வைத்து துணியால் போர்த்தி தலைக்கு தண்ணிர் போடுவதற்காக தெளிப்பானை எடுக்க, காலியாய் இருந்தது. அருகில் வரும்போது குப்பென்று சாராய வாடை வயிற்றைக் குமட்டியது.

'மாரி, ஆளு டபுளா இருக்கீங்க, அப்புறமா வரட்டுமா?' என எழ, பக்கத்தில் இருந்த ஒரு பாட்டிலை எடுத்துக்கொண்டு 'அதெல்லாம் இல்ல... இருங்க, போய் தண்ணி எடுத்துட்டு வர்றேன்' என சொல்லிச் சென்றார்.

பதினைந்து நிமிடத்துக்கு மேல் காத்திருந்தும் வரவில்ல. லேசாய் கோபம் கிளம்ப, மேலே போட்டிருந்த துணியினை அகற்றிவிட்டு நேரில் பார்த்து இரண்டு வார்த்தை திட்டிவிட்டு செல்லலாமென வெளியே வந்தேன். எதிர் வீட்டில் ஆடுகளை அவிழ்த்துக் காட்டுக்கு கிளம்பிக்கொண்டிருந்த ஒரு அம்மாவை மாரி வீடு எங்கே எனக் கேட்க, பக்கத்து சந்தில் காண்பித்தார்கள்.

அவரின் வீட்டை நெருங்கும்போது ஒரு பெண்ணின் குரல் ' அய்யய்யோ யாராச்சும் காப்பத்துங்களேன், கைப்புள்ளக்காரிய விட்டுட்டு இப்புடி பண்ணிக்கப் போறானே' என. வீட்டின் அருகே ஓடினேன்.

இடது புறம் இருந்த சன்னல் வழியே பார்த்து, 'அய்யய்யோ கயித்த விட்டத்துல போட்டுட்டானே, ஸ்டூலை எடுக்கிறானே' என கதறி ஒரு பெண் தவிப்போடு நேரடி வர்ணனை செய்துகொண்டிருந்தார்

பழங்காலத்துக் கதவு. தள்ளிப்பார்த்தேன், பயங்கர வலுவாக இருந்தது. சினிமாவில் மட்டும்தான் கதாநாயகர்களுக்கு திறக்கும் என்பதை அன்றுதான் அனுபவத்தில் முழுமையாய் உணர்ந்தேன்.

'யாராச்சும் ஆம்பிளைங்க இருந்தா காப்பாத்துங்களேன்' என இன்னும் கதற, நான்கைந்து பெண்கள் தான் வந்தார்கள். எல்லோரும் பதட்டத்தில் அங்குமிங்கும் அலைபாய்ந்து கொண்டிருந்தோம்.

'கழுத்துல மாட்டிகிட்டான், தொங்கப் போறான்' என இன்னும் வேகமாய் அந்த பெண் வீறிட, அப்போது வேகமாய் ஒரு பெண் கையில் கடப்பாரையை எடுத்துக்கொண்டு ஒடி வந்தார்கள். கதவின் அருகில் நின்றிருந்த என்னை பிடித்துத் தள்ள தடுமாறி விழுந்தேன்.

'ஐயோ தொங்கிட்டானே, என்னா பண்ணுவேன்' என உச்ச ஸ்தாயில் வீறிடல்.

கடப்பாரையால் அந்த கதவில் உள் தாழ் போட்டிருக்கும் இடத்தில் ஓங்கி குத்தி மேலே நெம்ப, பட்டென திறந்துகொண்டது. அதற்குள் சப்தம் கேட்டு ஓடி வந்த இளைஞர்கள் இருவரோடு எல்லோரும் அவசரமாய் சென்றோம்.

படபடவென கால்கள் துடிக்க மாரி தொங்கிக்கொண்டிருந்தார். சட்டென ஒரு நபர் ஓடிச்சென்று கால்களைத் தோளில் வைத்துக்கொண்டார். இன்னொருவர் விருட்டென விட்டத்தில் ஏறி, கையிலிருந்த சிறு கத்தியால் அந்த கயிற்றை வெட்டிவிட, (என்ன சமயோதிசம் பாருங்கள், கத்தியோடு அவர் வந்திருந்தது மிகுந்த ஆச்சர்யமாயிருந்தது) மாரியை மெதுவாய் இறக்கினார்கள்.

மயங்கி கிடக்க கழுத்தில் சிறு காயத்தோடு இருக்க, மேலே கயிற்றை வெட்டியவர் இறங்கி வந்து பட்டென மாரியில் கன்னத்தில் ஓங்கி அறை விட்டார். நெஞ்சில் வலுவாய் அழுத்தினார். இருமலோடு மூச்சுவிட, 'பொழச்சிகிட்டான், ஆயுசு கெட்டி, எல்லாரும் வெளிச்சத்த விடுங்க, காத்தோட்டமா இருக்கட்டும்' என சொல்ல மெதுவாய் எல்லோரும் கலைந்தோம்.

கத்திக்கொண்டிருந்த அந்த பெண் யார் எனக்கேட்டேன். அது மாரியின் மனைவி என்று சொன்னார்கள். தடுமாறி விழுந்ததில் முகத்தில் ஒரு சின்ன சிராய்ப்பு, மெலிதாய் ரத்தம் வந்துகொண்டிருந்தது. கவனித்த கதவை கடப்பாரை கொண்டு திறந்த பெண், சட்டென எதிர் வீட்டுக்குள் சென்று பஞ்சினை எடுத்துக்கொண்டு வந்து துடைத்துவிட்டார்கள்.

'அவசரத்துல தெரியாம தள்ளிவுட்டுட்டேங்க, மன்னிச்சுக்குங்க' என சொல்ல, 'அதெல்லாம் இல்ல, எவ்வளோ வீரமா ஒரு உயிரையே காப்பாத்தி இருக்கீங்க' என பாராட்டி, வீட்டுக்கு வந்தேன். ஆயா 'என்ன ஆச்சி முகத்தில என்ன காயம்' என கேட்க நடந்ததை சொன்னேன்.

கொஞ்ச நாள் கழித்து வீட்டிற்கு வந்த மாரி, முடிவெட்டிக்கொள்ளக் கூப்பிட்டார். 'ஐயோ ஆளை விடுங்க, அது மட்டும் வேணாம், அதுக்கான காசமட்டும் கொடுத்துடறேன்' என சொன்னதுதான் இன்னமும் தொடர்கிறது...

30 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

cheena (சீனா) said...

அன்பின் பிரபாகர்

கதை சுவரஸ்யமாகச் செல்கிறது - நல்ல இயல்பான நடையில் எழுதப்பட்ட கதை - பார்க்கும் போதெல்லாம் காசு கொடுக்கலாம். தவறில்லை.

கிராமப்புறங்களில் காப்பாற்றுவார்கள் - நகர்ப்புறங்களில் தைரியம் கிடையாது - பயம் மேலோங்கும் - ஒன்றும் செய்ய மாட்டார்கள்

நல்லாருகு பிரபாகர்
நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா

Unknown said...

மீ த ஃபர்ஸ்ட்ட்...

அதென்ன பிரபா உங்க ஊர்ல எல்லாரும் இப்பிடியே இருக்காங்க..

T.V.ராதாகிருஷ்ணன் said...

Nice

settaikkaran said...

மாரிமுத்துவின் மர்மத்தை சுவாரசியமாக அவிழ்த்திருக்கிறீர்கள். அனுபவங்கள் புனைவுகளைக் காட்டிலும் சுவாரசியமாய் இருப்பதற்கு இன்னுமோர் சான்று!

பனித்துளி சங்கர் said...

மிகவும் நேர்த்தியான எழுத்து நடை . மிகவும் ரசிக்கும் வகையில் எழுதி இருக்கிறீர்கள் .

பகிர்வுக்கு நன்றி . தொடருங்கள் மீண்டும் வருவேன் பணம் வாங்க ஆமா .

ரோஸ்விக் said...

அவரு உங்க தலையைப் பார்த்து தூக்குல தொங்குற அளவுக்கா அண்ணே முடி வளர்த்திருந்தீங்க??

இல்ல... பிரபாகர் முதன்முறையா நம்ம கடிக்கு வந்திருக்காரு-ங்கிற சந்தோசத்துல அந்த முடிவை எடுத்தாரா? :-))))))))))))

ஜஸ்ட் ஜோக்.

இயல்பான நடையில அனுபவம்... நல்லது.

Chitra said...

ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க...... படிக்கும் போது, அப்படியே அந்த கிராமிய மணம் கமழ்ந்தது.

vasu balaji said...

/'யாராச்சும் ஆம்பிளைங்க இருந்தா காப்பாத்துங்களேன்' /

ங்கொய்யால. மீசைய எடுத்துட்டு பொம்பள கூட்டத்துல நின்னா கேக்காம என்ன செய்வாங்க.

/இன்னொருவர் விருட்டென விட்டத்தில் ஏறி/

யோவ். பூனையா அந்தாளு?

/என்ன சமயோதிசம் பாருங்கள்/

மெச்சிக்கணும். ஏணியோ ஸ்டூலோ தேடி விட்டத்துல ஏறாம, கழுத்துகிட்ட அறுக்க கயறு அறுக்க துப்பில்ல. இவரு சர்டிஃபிகேட் குடுக்குறாரு.

செல்ல நாய்க்குட்டி மனசு said...

பதிவு நன்றாக இருந்தது. மாரி ஏன் தூக்கு போட்டான் என்பதையும் சொல்லி இருந்தால் அழகான சிறு கதை ஆகி இருக்கும்.

அழகு நிலவன் (Azahgu Nilavan) said...

அண்ணா அருமை,

ஆனா ஒரு சந்தேகம், ஏன் உங்களுக்கு முடி வெட்ட ஆரம்பிச்சவுடனே தற்கொலை பண்ண போனார்,

மண்ட அவ்வளவு கப்போ?

ஈரோடு கதிர் said...

//கதை சுவரஸ்யமாகச் செல்கிறது//

சீனா அய்யா... வணக்கம்... ஒரே வரியில பிரபாவ போட்டுத்தள்ளீட்டீங்க

ஈரோடு கதிர் said...

இப்போ மாரி நல்லாயிருக்காருங்ளா பிரபா?

சத்ரியன் said...

//எவ்வளவுதான் கேவலமாய் வெட்டப்பட்டாலும் பத்தே நாட்களில் வளர்ந்துவிடும் அல்லவா? முதல் முறையாக மாரியிடம் துணிந்து தலைகொடுக்க கிளம்பினேன்.//

பிரபா,
தைரிய சாலின்னு காட்டிக்கவா இது?

சத்ரியன் said...

//கதவின் அருகில் நின்றிருந்த என்னை பிடித்துத் தள்ள தடுமாறி விழுந்தேன். //

பின்ன,
சாகிறத வேடிக்கை பாத்துக்கிட்டு நின்னுக்கிட்டிருந்தா வேறென்ன செய்வாங்களாம்?

சத்ரியன் said...

அனுபவக்கதை நல்லாயிருக்கு தல!

கலகலப்ரியா said...

அட இந்தக் கதை நல்லாருக்கே... நானும் முடி வெட்டற கடை ஒன்னு தொறந்து... முடி வெட்டாம இருக்கனும்னா காசு கொடுக்கனும்னு மிரட்டிப் பார்க்கறேன்... பொழைக்கறதுக்கு எப்டி எல்லாம் வழி இருக்குதுடா சாமிங்களா..

பிரபாகர் said...

//
cheena (சீனா) said...
அன்பின் பிரபாகர்

கதை சுவரஸ்யமாகச் செல்கிறது - நல்ல இயல்பான நடையில் எழுதப்பட்ட கதை - பார்க்கும் போதெல்லாம் காசு கொடுக்கலாம். தவறில்லை.

கிராமப்புறங்களில் காப்பாற்றுவார்கள் - நகர்ப்புறங்களில் தைரியம் கிடையாது - பயம் மேலோங்கும் - ஒன்றும் செய்ய மாட்டார்கள்

நல்லாருகு பிரபாகர்
நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
//
மிக்க நன்றிங்கய்யா!... உங்களின் அன்பும், பாராட்டும் என்றென்றும் என்னை ஊக்கப்படுத்தி எழுதத் தூண்டுகின்றன.

//
முகிலன் said...
மீ த ஃபர்ஸ்ட்ட்...

அதென்ன பிரபா உங்க ஊர்ல எல்லாரும் இப்பிடியே இருக்காங்க..
//
இல்லைங்க, பாதிச்சவங்களப் பத்தியே எழுதறேன். நல்ல பல விஷயங்களையும் இனிமே எழுத முயற்சிக்கிறேன்...

பிரபாகர் said...

.//
T.V.ராதாகிருஷ்ணன் said...
Nice
//
நன்றிங்கய்யா!

//
சேட்டைக்காரன் said...
மாரிமுத்துவின் மர்மத்தை சுவாரசியமாக அவிழ்த்திருக்கிறீர்கள். அனுபவங்கள் புனைவுகளைக் காட்டிலும் சுவாரசியமாய் இருப்பதற்கு இன்னுமோர் சான்று!
//
நன்றி என் அன்பு நண்பா!

//
♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
மிகவும் நேர்த்தியான எழுத்து நடை . மிகவும் ரசிக்கும் வகையில் எழுதி இருக்கிறீர்கள் .

பகிர்வுக்கு நன்றி . தொடருங்கள் மீண்டும் வருவேன் பணம் வாங்க ஆமா .
//
ஆஹா, வாங்க, வாங்க...

பிரபாகர் said...

!//
ரோஸ்விக் said...
அவரு உங்க தலையைப் பார்த்து தூக்குல தொங்குற அளவுக்கா அண்ணே முடி வளர்த்திருந்தீங்க??

இல்ல... பிரபாகர் முதன்முறையா நம்ம கடிக்கு வந்திருக்காரு-ங்கிற சந்தோசத்துல அந்த முடிவை எடுத்தாரா? :-))))))))))))

ஜஸ்ட் ஜோக்.

இயல்பான நடையில அனுபவம்... நல்லது.
//
அவரு காலையில இருந்து அவரோட மனைவிக்கிட்ட சண்டையாம்... அதான் அப்படி இருந்தாரு.

//
Chitra said...
ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க...... படிக்கும் போது, அப்படியே அந்த கிராமிய மணம் கமழ்ந்தது.
//
சித்ரா... உங்களின் அன்பிற்கும், பாரட்டிற்கும் மிக்க நன்றி...

பிரபாகர் said...

//
வானம்பாடிகள் said...
/'யாராச்சும் ஆம்பிளைங்க இருந்தா காப்பாத்துங்களேன்' /

ங்கொய்யால. மீசைய எடுத்துட்டு பொம்பள கூட்டத்துல நின்னா கேக்காம என்ன செய்வாங்க.

/இன்னொருவர் விருட்டென விட்டத்தில் ஏறி/

யோவ். பூனையா அந்தாளு?

/என்ன சமயோதிசம் பாருங்கள்/

மெச்சிக்கணும். ஏணியோ ஸ்டூலோ தேடி விட்டத்துல ஏறாம, கழுத்துகிட்ட அறுக்க கயறு அறுக்க துப்பில்ல. இவரு சர்டிஃபிகேட் குடுக்குறாரு.
//
சாமி, முடியல... என்னோட தப்புக்களையெல்லாம் கண்டுப்பிடிச்சி என்னை டரியலாக்குறாரே! காப்பாத்த யாருமே இல்லையா?

//
நாய்க்குட்டி மனசு said...
பதிவு நன்றாக இருந்தது. மாரி ஏன் தூக்கு போட்டான் என்பதையும் சொல்லி இருந்தால் அழகான சிறு கதை ஆகி இருக்கும்.
//
மனைவியோட சண்டைங்க, சொல்லாமல் விட்டிருக்கேன்...

பிரபாகர் said...

//
அழகு நிலவன் said...
அண்ணா அருமை,

ஆனா ஒரு சந்தேகம், ஏன் உங்களுக்கு முடி வெட்ட ஆரம்பிச்சவுடனே தற்கொலை பண்ண போனார்,

மண்ட அவ்வளவு கப்போ?
//
பாவி மக்கா, இப்படியெல்லாமா கவுத்து விடுவீங்க? அவரு குடும்பத்துல பிரச்சினை சாமி... நம்ம தலைதானா கிடைச்சது...

சும்மா!...... அருமையான விமர்சனம் தம்பி...

//
ஈரோடு கதிர் said...
//கதை சுவரஸ்யமாகச் செல்கிறது//

சீனா அய்யா... வணக்கம்... ஒரே வரியில பிரபாவ போட்டுத்தள்ளீட்டீங்க
//
ம்க்கும், இப்படித்தான் வெளிச்சம் போட்டு சொல்லுவீங்களா கதிர்?

பிரபாகர் said...

//
ஈரோடு கதிர் said...
இப்போ மாரி நல்லாயிருக்காருங்ளா பிரபா?
//
ரொம்ப நல்லாருக்காரு, தாத்தா ஆகியிருக்காரு.

//
சத்ரியன் said...
//எவ்வளவுதான் கேவலமாய் வெட்டப்பட்டாலும் பத்தே நாட்களில் வளர்ந்துவிடும் அல்லவா? முதல் முறையாக மாரியிடம் துணிந்து தலைகொடுக்க கிளம்பினேன்.//

பிரபா,
தைரிய சாலின்னு காட்டிக்கவா இது?
//
சும்மா பில்டப்புதான்.. ஹி..ஹி....

பிரபாகர் said...

//
சத்ரியன் said...
//கதவின் அருகில் நின்றிருந்த என்னை பிடித்துத் தள்ள தடுமாறி விழுந்தேன். //

பின்ன,
சாகிறத வேடிக்கை பாத்துக்கிட்டு நின்னுக்கிட்டிருந்தா வேறென்ன செய்வாங்களாம்?
//
அதானே, இப்போத்தானே புரியுது!

//
சத்ரியன் said...
அனுபவக்கதை நல்லாயிருக்கு தல!
//
wanRi waNpaa!

//
கலகலப்ரியா said...
அட இந்தக் கதை நல்லாருக்கே... நானும் முடி வெட்டற கடை ஒன்னு தொறந்து... முடி வெட்டாம இருக்கனும்னா காசு கொடுக்கனும்னு மிரட்டிப் பார்க்கறேன்... பொழைக்கறதுக்கு எப்டி எல்லாம் வழி இருக்குதுடா சாமிங்களா..
//
நன்றி என் அன்பு சகோதரி!

Aba said...

கலக்கல் தல.... பின்னிட்டிங்க...

நாடோடி இலக்கியன் said...

நல்ல ஃப்ளோ பிரபா.

ஊரில் உள்ளவர்களை பற்றி சுவராஸ்யமா எழுதிட்டு வறீங்கன்னா உங்க கிராமத்தையும்,ஊரின் மனிதர்களையும் ரசித்து வாழ்ந்திருக்கீங்க.நல்ல நினைவாற்றல்.

ஸ்ரீ.கிருஷ்ணா said...

ஒரு சீரியஸ் விசயத்தை நல்லா சிரிக்கிறமாதிரி சொல்லிடீங்க
எங்கள் ரூமில் உள்ள எல்லோரும் பயங்கர கமெண்ட்
அடிச்சி சிரிக்றாங்க .....

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

நல்லா இருந்தது பிரபாகர்..

இன்னும் எத்தனை கதை தான் வச்சிருக்கீங்க.. ;))

Anonymous said...

anna enaku oru unma thrinjaganum?! unga thalaya parthu avar payanthutara? apidinenna unaga thalala bad smell!??? he he he

பிரபாகர் said...

//
கரிகாலன் said...
கலக்கல் தல.... பின்னிட்டிங்க...
//
நன்றிங்க நண்பா!

//
நாடோடி இலக்கியன் said...
நல்ல ஃப்ளோ பிரபா.

ஊரில் உள்ளவர்களை பற்றி சுவராஸ்யமா எழுதிட்டு வறீங்கன்னா உங்க கிராமத்தையும்,ஊரின் மனிதர்களையும் ரசித்து வாழ்ந்திருக்கீங்க.நல்ல நினைவாற்றல்.
//
நன்றி பாரி....

பிரபாகர் said...

//
ஸ்ரீ.கிருஷ்ணா said...
ஒரு சீரியஸ் விசயத்தை நல்லா சிரிக்கிறமாதிரி சொல்லிடீங்க
எங்கள் ரூமில் உள்ள எல்லோரும் பயங்கர கமெண்ட்
அடிச்சி சிரிக்றாங்க .....
//
என்ன கமேன்ட், சொன்னா நாங்களும் சிரிப்போம்ல!

//
ச.செந்தில்வேலன் said...
நல்லா இருந்தது பிரபாகர்..

இன்னும் எத்தனை கதை தான் வச்சிருக்கீங்க.. ;))
//
நன்றி செந்தில். நண்பர்களாகிய உங்களின் அன்பு, ஆதரவில நிறையா நினைவுக்கு வருதுங்க!

//
Anonymous said...
anna enaku oru unma thrinjaganum?! unga thalaya parthu avar payanthutara? apidinenna unaga thalala bad smell!??? he he he
//
ஆகா, இப்படியெல்லாம் அர்த்தம் எடுத்துக்குவீங்களா? அவருக்கு ஃபேமிலி ப்ராப்ளம்-ங்க...

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB