காரணமின்றி
கவலையாய்
கால்போக்கில்
கடனேயென
கடைத்தெருவில்
பகலில் என்ன
பளீர் நிலா
பிரமிப்பாய்
பாவையவள்
பெரிய வீட்டில்
அவனை அவளும்
அவளை அவனும்
அசையாமல் பார்க்க
அசைந்தது
அனைத்தும்.
தெய்வீக கானம்
தேவ ராகம்
தெளிவாய் கேட்க
துவண்டிருந்த மனம்
துளிர்த்தது அங்கே.
கடையினில் அமர்ந்து
கவனத்தை செலுத்தி
காதலை கசிந்து
கன்னியும் சேர்த்து
காப்பியை பருக
பேருந்து நின்று
பாலகர் இறங்கி
பெரிதாய் கத்தி
புகுதலின் போது
பூரிப்பு அவளுள்.
கைகளை ஆட்டி
கிடைத்தவர் பற்றி
கவனமாய் செல்ல
கண்ணில்லா அந்த
காட்சியும் அங்கே.
உருவான அன்பது
உடைந்து ஓட
உருவமில்லா அந்த
இறைவனை சாட
உள்ளமெலாம் கோபம்.
இயலாமை தாக்க
எரிச்சலும் சேர
இனம்புரியா சோகம்
ஏமாற்றம் என
எல்லாமும் சேர
காரணமாய்
கவலையாய்
கால்போக்கில்
கடனேயென
கடைத்தெருவில்...
Dec31,2009
கடனேயென கடைத்தெருவில்...
வகை : கவிதை... | author: பிரபாகர்
Dec30,2009
வரவேற்போம் புத்தாண்டை....
வகை : கவிதை... | author: பிரபாகர்புத்தாண்டே வருக
புது வாழ்வை தருக
மதமென்னும் செருக்கு
மடமையினை போக்கி
இதமான இதயம்
எல்லோருக்கும் தரவே
(புத்தாண்டே)
பாழ்படும் இயற்கை
பஞ்சத்தை பற்றும்
சூழலை மாற்றி
சுகந்தத்தை தரவே
(புத்தாண்டே)
தொகுதி உறுப்பினர்
தவறிட வேண்டி
மிகுதியானோர் நினைக்கும்
மூட நிலை போக்க
(புத்தாண்டே)
வலையுலக நட்பில்
வசந்தத்தை கூட்டி
நிலையான அன்பை
நிலைத்திடச் செய்ய
(புத்தாண்டே)
கவலைக்கு வாக்கப்பட்டு
கழிக்கும் எம்மினம்
அவலங்கள் போக்கி
அதிசயங்கள் நிகழ்த்திட
(புத்தாண்டே)
மொத்தமாய் சோகம்
முழுதுமாய் அகற்றி
அத்தனை இன்பமும்
அள்ளித் தந்திட
(புத்தாண்டே)
Dec29,2009
புழுவும் பூச்சியும் - பழமொழி விளக்கம்
வகை : அனுபவம்...பழமொழி விளக்கம்... | author: பிரபாகர்பழமொழி பற்றிய விளக்கங்களை எனக்கு தெரிந்த வகையில் ஒரு தொடர் இடுகையாய் எழுதலாம் என ஒரு எண்ணம். பழமொழிகளுக்கு கண்டிப்பாய் பல்வேறு கோணங்களில் அர்த்தம் இருக்கும். உங்களுடைய மாற்று கருத்துக்களை, விளக்கங்களை பின்னூட்டத்தில் பகிர்ந்தால் நிறைய தெரிந்து, தெளியலாம்...
இந்த இடுகையில் ’அரசன் அன்றே கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்...’ என வழக்கமாய் கேட்ட ஒன்றையும் 'இன்னும் இவளுக்கு ஒரு புழு பூச்சிக்கூட இல்லை' என பரவலாய் சொல்லும் மற்றொன்றையும் எழுத எண்ணம்.
அரசன் அன்றே கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்... என்பதற்கு நாம் மேற்கோள் காட்டுவது, புரிந்திருப்பது எல்லாம், அரசன் அவசரப்பட்டு உடனடியாக தண்டனை கொடுத்துவிடுவான், தெய்வம் பொறுமையாய் காத்திருந்து தண்டிக்கும் என்பதுதான்.
இது சரியான ஒன்றல்ல. அரசனன்றே கொல்வான், தெய்வம் நின்று கொல்லும் என்பதுதான் சரியான ஒன்று. அரசனன்றே - தவறு செய்த ஒவ்வொருவரையும் தண்டிப்பவன், கொல்பவன் அரசன் அல்ல. தெய்வம், பொறுத்து அவர்களுக்கு சரியான தண்டனை கொடுக்கும் என்பதே சரியான பொருளாக இருக்க முடியும்.
அடுத்து குழந்தை இல்லாமல் இருக்கும் பெண்ணைப்பார்த்து ‘இன்னும் இவளுக்கு ஒரு புழு பூச்சி கூட இல்லை’ என சொல்வதில் புழு என்றால் ஆண் குழந்தையையும் , பூச்சி என்றால் பெண் குழந்தையையும் குறிக்கும்.
வேறு எங்கும் செல்லாமல் புழு ஒரே இடத்தில் இருக்கும். அதே போல் ஆண்கள் பிறந்த வீட்டிலேயே கடைசி வரை இருப்பார்கள். பூச்சி இறக்கை முளைத்தவுடன் பறந்துவிடுதல் போல, பெண்கள் திருமணம் செய்தவுடன் பிறிதோர் இடத்துக்கு வாழ்வதற்கு சென்றுவிடுவார்கள்.
விளக்கங்கள் சரியா என்பதை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்...
Dec27,2009
படியில் பயணம், குடியின் மரணம்...
வகை : அனுபவம்... | author: பிரபாகர்சொந்தத்தில் உள்ள சிலர் நம் மீது வைத்திருக்கும் அதீதமான பாசம், அக்கறை அவர்கள் செய்யும் சில தவறுகளைக் கூட நம்மை எளிதில் ஜீரனிக்கச்செய்து, அவர்களின் மேல் அலாதியான அபிமானத்தையும் பிரியத்தையும் ஏற்படுத்தும்.
கிருஷ்ணனுக்கும் அப்படித்தான் அவனது மாமாவின் மேல். அவனது அத்தையின் கணவர். எப்போதாவது போதையில்லாமல் இருப்பார். அப்போது மட்டும்தான் அவனோடு பேசுவார். அவனாய் சில நேரங்களில் பேசினாலும் கூட 'வேணாம் கிருஷ்ணா, அப்புறம் பேசறேன், இப்போ நான் டபுள் ஆளு’ என சொல்லிவிடுவார்.
அன்றொருநாள் பக்கத்து நகருக்கு சென்று இரவு எட்டு மணியளவில் வீடு திரும்பும்போது பேருந்தில் இருக்கைகள் நிறைய இருந்தாலும் வழக்கம்போல் படியில் நின்று பயணம் வந்தான் கிருஷ்ணன். உட்கார்ந்து செல்லும் பழக்கம் இல்லாத கல்லூரி படிக்கும் வயது அவனுக்கு. (இப்போது இருக்கை இல்லையென்றால் காத்திருந்து அடுத்த பேருந்தில் தான் செல்கிறான்....வயது அப்படி...)
பேருந்தில் இருந்த கிளி (உதவி கண்டக்டர்) முன்னால இருந்து வந்து, 'அறிவில்ல படியில நிக்கிற, சீட்டுல உக்கார மாட்டியா, எனக்கு இதே பொழப்பாப் போச்சு, எல்லாத்துகிட்டேயும் சொல்லி எழவெடுக்க முடியல...’ என கிருஷ்ணனைப் பார்த்து கடிந்து சொல்ல, பேருந்தில் இருந்த சிலர் வேடிக்கைப் பார்க்க, மிகவும் நொந்து போனான்.
படியினை விட்டு மேலே ஏறச் சொல்லியிருக்கலாம். அவ்வாறின்றி, முகத்திலடித்தார்போல், சட்டென சொல்ல ரொம்ப அவமானமாய் வெட்கித்து அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்தான்.
அதன் பின் அந்த உதவி, இன்னுமொரு நண்பனுடன் படியினில் சிரித்து சிரித்து பேசி அவ்வப்போது கிருஷ்ணனனையும் நக்கலாய் பார்த்து வர மனம் பாரமாய் உணர்ந்தான்.
ஊர் வந்தவுடன் இறங்கி வீட்டிற்கு சென்றவுடன் அம்மாவிடம் புலம்ப, 'விடு கிருஷ்ணா, தெரியாம சொல்லிட்டான்னு நினைச்சிக்கோ' என ஆறுதல் சொன்னாலும் அவனது மனசு அடங்குவதாயில்லை.
சாப்பிட்டு அசதியில் தூங்கிக்கொண்டிருந்த சமயம் ஏதோ சப்தம் கேட்க விழித்தான். அவனைக் கேட்டு ஒரு நாலைந்து பேர் வந்திருந்தார்கள். எல்லாம் பக்கத்து வீடு, தெரு என சொந்தங்கள்தான்.
'கிருஷ்ணன மூலைக்கு கூட்டிகிட்டு போறோம், வந்தாத்தான் பிரச்சினை தீரும்'னு சொல்லி தூக்க கலக்கத்தில் அழைத்து, இல்லையில்லை இழுத்துச் சென்றார்கள் எனத்தான் சொல்ல வேண்டும்.
’என்னண்ணா விஷயம்’ என ஒருவரை கேட்டதற்கு, ’எல்லாம் உன் மாமன் பண்ற கூத்துதான் வந்து பாரு' என சொன்னார்கள்.
இரவு அவன் வந்த பஸ் திரும்பவும் கடைசி பஸ்ஸாக செல்லும்போது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது, கிருஷ்ணனது மாமாவால். நிறைய குடித்திருந்தார். மரியாதைக் குறைவாக சொன்ன அந்த உதவி நடத்துனர் சினிமா போஸ்டர் இருக்கும் அந்த குச்சி கம்பத்தில் ஒரு துண்டால் கட்டிபோடப்பட்டிருந்தார். கையில் ஒரு அருவாள். கிருஷ்ணனுக்கு பகீரென்றிருந்தது.
'எப்படி என் மருமகனை அப்படி சொல்லலாம், உனக்கு அவ்வளவு இளக்காரமா போயிடுச்சா?, என் மருமகன் யாரு தெரியுமா?' அது இது என சப்தமாய் கத்திக்கொண்டிருந்தார்.
கோபமாய் 'என்ன மாமா இது' என கிருஷ்ணன் கேட்க, 'மாப்ளே கம்முனு இரு. எப்படி இவன் உன்னை அறிவில்லைன்னு கேக்கலாம், பஸ்ஸில வந்த சுப்ரமணி சொன்னத கேட்டு எப்படி துடிச்சி போயிட்டேன் தெரியுமா? உன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டாத்தான் பஸ் கிளம்பி போக முடியும்' என சொன்னார்.
கிருஷ்ணன் அவ்வளவு அதிகமாய் கோபப்பட்டது அன்றுதான். சட்டென ஆவேசமாய் அவரை ஒரு தள்ளு தள்ளிவிட்டு வேகமாய் அந்த உதவி நடத்துனரை அவிழ்த்துவிட்டு வண்டியை எடுக்கச் சொல்லி டிரைவர், கண்டக்டரிடம் அவரின் சார்பாய் மன்னிப்பு கேட்டுக் கொண்டான்.
கண்டக்டர் அந்த கிளியை ஓங்கி ஒரு அறை விட்டு, ’எப்படி பேசனும்னு தெரியல, வாயி ரொம்பத்தான் உனக்கு. உங்கள எனக்கு தெரியும் தம்பி, இந்த நா.. இப்பத்தா புதுசா வேலைக்கு சேந்துச்சி, எங்க பாத்தாலும் வம்புக்கு போறதே வேலயா போச்சு’ என சொல்ல,
கிருஷ்ணன் ’பாவம் விடுங்க, தப்பு என் மேல தான், அவரு சொன்ன விதம் சரியில்ல, பஸ்ஸுல வந்த யாரோ மாமாகிட்ட சொல்லியிருக்காங்க’ என சொல்ல 'தெரியும் தம்பி, அதைத்தானே உங்க மாமா நிமிஷத்துக்கு ஒரு தடவ சொல்லிகிட்டிருக்காரு, வர்றோம்’ என்று கிளம்பி சென்றார்கள்.
ஏதோ பேச வந்த மாமாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு பேசாமல் விடுவிடு என வீட்டுக்கு வந்த அவன், திரும்ப தூங்க நெடு நேரம் ஆனது.
அடுத்த நாள் காலை அதிகாலையே வந்து கிருஷ்ணனின் அப்பாவோடு மாமா பேசிக்கொண்டிருந்தார். அதிசயமாய் நெற்றியில் திருநீறெல்லாம் வைத்திருந்தார். நடந்த சம்பவத்துக்கு அவனிடம் மன்னிப்பு கேட்டவர், அவனது கோபம் அவரை நிறைய பாதித்துவிட்டது என்றும், இனிமேல் குடிப்பதில்லை என சத்தியம் செய்தார்.
அன்று முதல் ஒரு ரிக் வண்டியில் மேனேஜராக வடக்கே சென்று விபத்தில் மாண்டு பிணமாய் திரும்பிய நாள்வரை அவர் குடித்ததே கிடையாது. அதே போல் கிருஷ்ணனும் படியில் நின்று பயணம் செய்தது கிடையாது.
Dec26,2009
மிஸ்டர் 'எக்ஸ் கொய்யான்'...
வகை : அனுபவம்... | author: பிரபாகர்ரெண்டு வருஷத்துக்கு முன்னால ஊருக்கு போயிருந்தப்போ என் தம்பியோட தறியில புதுசா ஒருத்தன் வேலைக்கு சேர்ந்திருந்தான். பாக்க ரொம்ப அப்பாவியா தெரிஞ்சான். பேரு என்னான்னு கேட்டதுக்கு, 'கொய்யான்'னு சொன்னங்க.
துருவி துருவி கேட்டப்போ தான், உண்மையான பேரை அவன இவன கேட்டு சொன்னாங்க. நம்மை பாத்தானா வேற எங்கேயோ பாக்கற மாதிரி இருக்கும்.
பேருக்கேத்த மாதிரியே, வருவான், வேலை செய்வான். எதைக் கேட்டாலும் சிரிச்சிட்டே பதில் சொல்லுவான். கிறுக்குத்தனமா எதாச்சும் பண்ணிட்டிருப்பான். அவனை எல்லாரும் ஓட்டிகிட்டே இருப்பாங்க.
'டேய் பாவம்டா, அவனை ஏன்டா வதைக்கிறீங்க' ன்னதுக்கு, 'அண்ணா இப்போ பாரு அவன்கிட்ட கேள்வி கேக்கறேன் என்ன பதில் சொல்றான்னு மட்டும் பாரு' ன்னு சொல்லிட்டு சதீஷ் அவன்கிட்ட,
'டேய் கொய்யான், கல்யாணம் முடிஞ்ச உடன் என்னா பண்ணுவாங்க'
'ம், பாலும் பழமும் சாப்பிடுவாங்க'
'அதை கேக்கலை, ராத்திரி'
'மாப்ள கட்டில்ல உட்காந்திருப்பாரு, பொண்ணு பட்டு பொடவ கட்டி, தலை நிறைய பூ வெச்சி, வளையல்லாம் போட்டுகிட்டு சொம்புல பால எடுத்துகிட்டு வரும். கால்ல விழுந்து கும்பிடும்'
'அப்புறம்' சதீஷ் உற்சாகமாய் சிரிப்புடன். 'கிட்ட போவாங்க, லைட் ஆஃப் ஆயிடும், சினிமாவுல அவ்வளவுதான் பாத்திருக்கேன்' னான். எனக்கு அவன் மேல பரிதாபமா இருந்துச்சி. ஒரு படத்துல செந்தில் சொல்றத பாத்திருப்பான் போலிருக்கு.
ஒரு வருஷம் கழிச்சி ஊருக்கு போயிருந்தேன். கொய்யான் வீட்டுக்கு வந்தான். ஆளு நிறையா மாறியிருந்தான், ரொம்ப சந்தோஷமா இருந்தான். கல்யாணமாம், பத்திரிக்கை வெக்க வந்திருந்தான். சந்தோஷமா இருந்துச்சி. 'அண்ணா நீங்கதான் ஃபோட்டோ புடிக்கனும், கேமராவோட வந்துடுங்க' ன்னான்.
பொண்ணு குள்ளமா இருந்தாலும் குறை சொல்ல முடியாது. அவனுக்கு பதினேழு, அந்த பொண்ணுக்கு பதினைஞ்சு வயசு. கிராமத்துல இதெல்லாம் இன்னமும் ரொம்ப சாதாரணம்.
திரும்ப நான் சிங்கப்பூர் வந்துட்டு ஊருக்கு போனேன். கொய்யான் ரொம்ப சந்தோஷமா வீட்டுக்கு வந்து எல்லாருக்கும் முட்டாய் கொடுத்தான், அவனுக்கு பையன் பொறந்திருக்கிறானாம். எனக்கு குழப்பமாயிடுச்சி, போனதடவ வந்தப்போதான் கல்யாணம், கான்ட்ராக்ட் முடிஞ்சி சரியா ஏழுமாசம் கழிச்சித்தான் வந்திருக்கோம்...
தனியா கூப்பிட்டேன், 'தம்பி, கல்யாணம் ஆகி ஏழு மாசம்தான் ஆகுது, குறை பிரசவமா' ன்னேன். 'இல்லன்னா, நிறை பிரசவம்தான், கல்யாணம் நிச்சயம் பண்ணியதிலிருந்தே தொடர்பு இருந்தது, கணக்கு சரிதான்' னான்.
நாங்கல்லாம் 'ஆஹா, நாமத்தாண்டா அவனை தப்பா நினைச்சுட்டோம்னு' சொல்லிகிட்டோம். அதுக்கு பின்னால யாரும் அவனை 'கொய்யான்' னு கூப்பிடறதில்லை.
பதிவெழுத வந்த புதுசில எழுதினது. கொஞ்சம் மாற்றங்களோட திரும்பவும் இப்போ...
Dec25,2009
நூறாவது இடுகை - புத்தாண்டு வாழ்த்து...
வகை : நன்றி... | author: பிரபாகர்
Dec24,2009
தண்ணீர் தண்ணீர்... சிறுகதை...
வகை : சிறுகதை... | author: பிரபாகர்'என்ன விஷயம், சட்டுனு சொல்லிட்டு கிளம்பு, நிறைய வேலை இருக்கு'.
'அதே விஷயம் தான்னா, கொஞ்சம் பெரிய மனசு பண்ணி விட்டுத் தரனும். உங்கிட்ட வசதி வாய்ப்பு எல்லாம் இருக்கு, நீ நினைச்சா...'
'பாண்டியா, எத்தன தடவ சொல்றது, ஒனக்கு ஏறவே ஏறாதா? உன் சொத்த வெச்சிகிட்டு உன் வழிய பாரு. என் வழியில குறுக்க வராத. என்ன பாக்கவும் வராத. உங்கிட்ட பேசறத பாத்தா, தெரிஞ்சா, அண்ணி அஞ்சு நாளைக்கு அண்ட விட மாட்டா'.
'கூட பொறந்த பொறப்புன்னா, நான் பக்கத்துல இருக்கும்போதே நம்ம குடும்பத்த கெடுத்தவனுக்கு குத்தகைக்கு விட்டிருக்க. நான் பாத்துக்கறேன் அதே குத்தகை தர்றேன்னு சொன்னா, என் மேல நம்பிக்கை இல்லைன்னு சொல்றே. சரி உபயோகப்படுத்தாத அந்த தண்ணி இருக்கிற கிணத்துல இருந்து தண்ணி பாய்ச்சிக்கவாவது விடுவன்னு பாத்தா அதுக்கும் ஒத்துக்க மாட்டேங்கறே. நானும் நீ பொறந்த அதே வயித்துலதான் பொறந்தேன்...'
'சும்மா தொணதொணக்காத. நேரமாச்சு, என்ன பேசினாலும் வேலைக்காவாது. தனியா கிணற வெட்டிக்கோ. இது விஷயமா இதுக்கு மேல பேசாத. வந்து என் மூஞ்சில முழிக்காத. பத்திரிக்கைக்காரங்கள வர சொல்லியிருக்கேன், காத்துகிட்டிருப்பாங்க.கிளம்பு'
'கொஞ்சம் தாமதமாகிவிட்டது, மன்னியுங்கள். ஒரு முக்கியமான அறிக்கை விஷயமா வரச் சொன்னேன். காவிரியில இன்னும் ஒரு வாரத்துக்குள் வழக்கமாய் தரும் தண்ணீரை திறந்து விடவில்லையென்றால் மத்திய அரசுக்கு நாங்கள் அளித்துவரும் ஆதரவை மறு பரிசீலனை செய்ய வேண்டிவரும் என்பதை முதல்வரின் சார்பாக, நீர்ப்பாசனத்துறை அமைச்சர் என்ற முறையில் தெரிவித்துக்கொள்கிறேன்'.
Dec23,2009
மஞ்சள் பையும் ஹை ஹீல்ஸ் செருப்பும் - படுத்தியது...
வகை : அனுபவம்... | author: பிரபாகர்இதோட முதல் பாகம் (கல்லூரி ரேகிங் அனுபவங்கள் - பட்டது...) படிக்கலன்னா படிச்சிட்டு வந்துடுங்களேன், பிளீஸ்...
ஃபர்ஸ்ட் இயர்ல வசமா சிக்கினதால நான் யாரையும் ரேகிங் பண்ணமாட்டேன்னு பசங்க கிட்ட ரொம்ப தெளிவா சொல்லியிருந்தேன். இருந்தும் விதி விட்டுடுமான்னேன், வாய்ப்பு தானா அமைஞ்சது.
பசங்கள்லாம் தீவிரமா போன வருஷம் கிடைச்ச அனுபவத்தை வெச்சும், புதுசு புதுசாவும் பண்ணிட்டிருந்தானுங்க.
டே ஸ்காலர ரேகிங் பண்ணிட்டிருக்கும்போது ஒருத்தன் ரொம்ப அப்பாவியா தெரிஞ்சான். அவன் ரொம்ப நடிக்கிறதா தெரிய, நமக்கு அண்ணனா இருப்பான் போலிருக்குன்னு நினைச்சிகிட்டு அவன கூப்பிட்டேன். அதுக்கு இன்னொரு காரணமும் இருந்துச்சி, அது அவன் போட்டிருந்த செருப்பு, வெச்சிருந்த பை.
ஹை ஹீல்ஸ் செருப்பு போட்டுகிட்டு, ஒரு மஞ்சப்பையும் வெச்சிருக்க, மொதல்ல வசதி பத்தி கேக்கலாம்னு ’அப்பா என்ன பண்றாரு' ன்னு கேட்டேன். சொன்ன பதில் கொஞ்சம் பிரமிப்பா இருந்துச்சி. விவசாயம் பண்றாரு ரெண்டு டிராக்டர் இருக்கு ஐம்பது ஏக்கருக்கு மேல நிலம், பண்ணையத்துல பத்து பேரு நிரந்திரமா வேலை பாக்குறாங்க... வீட்டுல அஞ்சி நாயி இருக்கு’ (உன்னையும் சேர்த்தாண்ணு கேட்டேன், ஹி, ஹி... அப்பன்னா ஆறுன்னுட்டு, நீங்க வந்தா ஏழுன்னான். இது தேவையான்னு நினைச்சிட்டேன்).
சோ, நம்மாளு நல்ல வசதின்னு தெரிஞ்சிகிட்டு, கால்ல என்ன ஹை ஹீல்ஸ் செருப்பு போட்டிருக்கன்னு கேட்டதுக்கு, 'என் அக்காவோடது' ன்னு சொல்ல ஆடிப் போயிட்டேன். அத்தோட இல்லாம ’எடுக்க நேரமில்லண்ணே, இந்த காலேஜுக்கு இது போதாதா’ ன்னு கேட்டான்.
’அதென்ன மஞ்சப் பை, புரோக்கர் மாதிரி’ ன்னு கேட்டதுக்கு எதோ சொல்ல வர, ’எதுவும் சொல்ல வேணாம், நாளைக்கு பேட்டா செருப்பு குறைஞ்சது நூறு ரூபாயில, அப்புறம் டீசன்டா ஒரு பை மகேஷ்ல கிடைக்கும். எங்கிட்ட காமிச்சிட்டுத்தான் கிளாசுக்கு போகனும்’ னு சொல்ல, 'திருச்சிக்கு போயி வாங்கிட்டு வந்துடறேன், இந்த ஊர்ல மனுஷன் வாங்குவானா?' ன்னு சொல்லி நோகடிச்சிட்டு உற்சாகமா தலையாட்டிட்டு போயிட்டான்.
அடுத்த நாள் ஒம்பதரைக்கெல்லாம் கிளாஸுக்கு வந்து ஒரு அசைன்மென்ட்ட எழுதிகிட்டிருந்தேன். வாசல்ல அவன் வந்து நிக்கிறத ஓரக்கண்ணால பாத்துட்டு, கண்டுக்காத மாதிரி தீவிரமா எழுதிட்டிருந்தேன்.
நான் அவன பார்ப்பேனான்னு பாத்துகிட்டே இருந்தான். நான் திரும்பறதாயில்ல. வர்ற பசங்கல்லாம், ’டேய் ஃபர்ஸ்ட் இயரா? இங்கென்ன வேலை’ ன்னு கேக்க, ’பிரபாகர் அண்ணன பாக்கனும்’ னு சொல்ல, ’டேய் பிரபாகர்லாம் ரேக்கிங் பண்றான்டா’ ன்னு ஆச்சர்யமா சொல்லிட்டு போயிட்டிருந்தானுங்க.
ஃபர்ஸ்ட் பெல் அடிக்கிற நேரமாச்சு. ரமேஷ் (அடி வாங்கி டரியலானோமே அந்த ரமேஷ்தான்) 'மாப்ளே பிகு பண்ணியது போதும் அவனை பாத்துடு' ன்னு சொல்ல, அவன அப்போதான் பாக்கிற மாதிரி, 'ஹே, என்னப்பா, ரொம்ப நேரமா வெயிட் பண்றியா, பாக்கல' ன்னு சொல்ல,
'மொதல்லயே பாத்துட்டீங்க, கண்டுக்காத மாதிரி இருக்கீங்க, சரிண்ணே, செருப்பு புதுசு, பையும் புதுசு' ன்னு காமிச்சான். குவாடிஸ் செருப்பு, விலை அதிகமான பேக்.
’நாலு செருப்பு, ரெண்டு பேக் வாங்கிட்டேன்னே, அதையும் எடுத்துகிட்டு போட்டுகிட்டு வர்றப்போ வந்து காமிக்கிறேன்’ னு சொல்லிட்டு, என் கால்ல போட்டிருக்கிற செருப்ப ஏளனமா பாத்துட்டு, அண்ணே ஷூ வாங்கனும் என்ன பிராண்ட் நல்லாருக்கும்னு கேட்டான்.
இது தான் நாம ரேகிங் செஞ்ச வரலாறு. பின்னூட்டத்துல நீங்க கேக்கக்கூடாதுங்கறதுக்காக நானே ஒரு கேள்விய கேட்டுக்கறேன், 'ஆமா இதுல ரேகிங் பண்ணினது யாரு?'
Dec22,2009
கல்லூரி ரேகிங் அனுபவங்கள் - பட்டது...
வகை : அனுபவம்... | author: பிரபாகர்இந்த இடுகை காலேஜ்ல சேர்ந்த புதுசில சீனியருங்ககிட்ட ரேகிங்ல நாம பட்டது. நாம ரேக்கினது அடுத்த இடுகையில படுத்தியதுங்கற தலைப்புல...
டாக்டர் எஞ்சினீயர்னு அப்பா அம்மா கனவு கண்டுகிட்டிருக்க, நாம வாங்குன மார்க்குக்கு என்ட்ரன்ஸ் எழுதவே தகுதியில்லாம போக, நாடு ஒரு மருத்துவர, பொறியியல் வல்லுனர இழக்குதுன்னு நினைச்சிகிட்டு ரொம்பவும் பிடிச்ச ஃபிசிக்ஸ் சேர்றதுக்கு பதிலா, ஃபேமலி டாக்டர் சொன்னாருன்னு கம்ப்யூட்டர்ல சேர்ந்தேன்.
அப்போ ரேக்கிங் ரொம்ப அதிகமா இருந்துச்சி. டே ஸ்காலர் பிரச்சினை இல்ல, காலேஜ் சமயத்துல மட்டும்தான். ஹாஸ்டல்ல தங்கியிருந்த நாங்கல்லாம் வசமா சிக்கிகிட்டோம், பகல்ல காலேஜ், ராத்திரியில ஹாஸ்டல்னு.
காலேஜ்ல லன்ச் டயத்துல கூப்பிட்டு உனக்கு என்ன தெரியும்னு கேக்க, பெருமையா படம் வரைய தெரியும்னு சொன்னேன். ஒரு சீனியர், 'சரி போர்ட்-ல ஒரு பொண்ணோட முகத்த வரை’ ன்னு சொல்ல அதே மாதிரி செஞ்சேன்.
இன்னொடு சீனியர், ’அந்த பொண்ணு உதட்டுல ஒரு முத்தம் கொடு இல்லன்னா இவன் உதட்டுல ஒரு முத்தம் கொடு’ ன்னாங்க. போர்டே பரவாயில்லன்னு கொடுத்துட்டு வாயத் துடைக்கப்போக, அழிக்காத சாயங்காலம் வரைக்கும் இருக்கனும்னு சொன்னாங்க.(வெளிய வரும்போது அழிச்சிட்டேன்)
லுங்கிய மடிச்சி கட்டக் கூடாது, ஃபுல் ஹேண்ட் போடக்கூடாது, தலைய தூக்கி வாரி சீவக்கூடாது, எப்போ எங்கே பார்த்தாலும் வணக்கம் சொல்லனும், பாட்டு பாட சொல்றது, டேன்ஸ் ஆட சொல்றது, மேடையில மாதிரி பேச சொல்றதுன்னு அவங்க பண்ணுனத நிறைய சொல்லிக்கிட்டே போலாம்.
ஆரம்பத்துல யாரப் பார்த்தாலும் வணக்கம் வெப்போம், பதிலுக்கு சிரிச்சா, வழிஞ்சிகிட்டு ‘ஃபர்ஸ்ட் இயரா’ ன்னு கேட்டுக்குவோம்.
சில நேரங்கள்ல ரொம்ப அக்கறையாவும் நடந்துக்குறோம்ங்கற பேர்ல ரொம்ப படுத்துவாங்க. தலையில எண்ணை வெக்காம இருந்ததுக்காக எங்கள்ல ஒரு மூனு பேரை ஒரு லிட்டர் தேங்காய் எண்ணைய தடவி விட்டுட்டு டிராயரோடு எட்டு மணி வாக்குல கிரவுண்டுக்கு கூட்டிட்டு போனாங்க.
வார்டன் எதிர்ல வர ஆக தப்பிச்சோம்னு நினைச்சா, ’என்னப்பா கோலம்’ னு கேக்க, ஒரு சீனியர் ஜாகிங் சொல்லித்தர்றோம் சார்’ னு சொன்னதுக்கு, ’பாத்துப்பா... பசங்க மிரண்டுறப்போறாங்க’ ன்னு சொல்லிட்டு போயிட்டாரு.
கிரவுண்ட ரவுண்டு அடிக்க சொன்னவுடனே ஃபிரண்டு ரெண்டுபேரும் (மோகனும் சரவணனும்னு சொல்லத்தான் ஆசையா இருக்கு, ஆனா, தங்கச்சி, கதிர நினைச்சி பயமா இருக்கு, இத்தன கேரக்டரா இடுகையில?) ஓட ஆரம்பிச்சிட்டானுங்க. நான் ஓடாம அழுக ஆரம்பிச்சிட்டேன். என்ன சமாதானப்படுத்தறதுக்குள்ள அவங்களுக்கு போதும் போதும்னு ஆயிடுச்சி. ரிசல்ட் நான் ஓடல, அவனுங்க நாலு ரவுண்டு ஓடினானுங்க. நம்ம நடிப்புக்கு நல்ல மரியாதைன்னு தெரிஞ்சிகிட்டது அன்னிக்குத்தான் (அழுகையோட...).
சீனியருங்க விடிய விடிய நம்மல தூங்க விட மாட்டாங்க. ஒரே நேரத்துல பல ரேக்கிங் ஒரு ரூம்ல நடக்கும். இருந்த பதினொரு ரூம்ல ஃபர்ஸ்ட் இயர் செகண்ட் இயர் பசங்க போர்வை எல்லாம் எடுத்துகிட்டு வந்து படுக்க வெச்சி போத்திவிட்டுட்டு மூச்சு திணறி கத்தற வரைக்கும் விட்டுருப்பாங்க. என்ன அந்த மாதிரி செய்யும்போது கைய குறுக்க வெச்சி கேப்புல காத்து வர்ற மாதிரி செஞ்சிகிட்டேன்.
உள்ளாற புழுக்குமாவும் வேர்த்தும் வழிஞ்சாலும், மூச்சு திணறல் எதுவும் இல்ல. வெளியில ஒருத்தன பரத நாட்டியம் ஆடச் சொல்ல, தா தைன்னு ஆடவும் போர்வைக்குள்ள இருந்து சிரிச்சுட்டேன்.
யாரு சிரிச்சான்னு எல்லோரும் குழம்ப, நாந்தான்னு குத்துமதிப்பா கண்டுபிடிச்சி போர்வைய எடுத்துட்டு கேக்க, நானா, சிரிச்சேனா?ன்னு அப்பாவி மாதிரி நடிச்சி தப்பிச்சிட்டென்.
நான் எல்லாரையும் வார்த்தைக்கு வார்த்தை அண்ணாண்னு கூப்பிடறத பாத்துட்டு ஒருத்தர், 'டேய் ஓவரா நடிக்காதடா? கடைசி வரைக்கும் இதே மாதிரி கூப்பிடுவே?’ ன்னு கேட்டதுக்கு, 'அய்யோ அண்ணா, சாகிற வரைக்கும் உங்களை எல்லாத்தையும் அண்ணான்னுதான் கூப்பிடுவேன்' னு சொன்னேன்.
என்ன அந்த கேள்விய கேட்ட தனசேகர சிங்கப்பூர் வந்த புதுசில பார்த்தப்போ மொதல்ல 'என்ன தனா சௌக்கியமா'ன்னு கேட்டுத்தான் பேச ஆரம்பிச்சேன்.
Dec21,2009
ஈரோடு பதிவர் சந்திப்பு ஏற்படுத்திய தாக்கம் - நேரில் காணாமலும்!...
வகை : பதிவுலகம், பிரமிப்பு... | author: பிரபாகர்பதிவர் சந்திப்பினை நடத்த உத்தேசித்துள்ள ஆரம்பப் புள்ளியிலிருந்து முடிவு வரை காதால் கேட்டு நேரில் இல்லாமல் மானசீகமாக பார்த்து வந்ததில் எனது மனம் எல்லையில்லா களிப்புறுகிறது.
முடிந்தபின் நடந்தது என்ன என ஆர்வமாய் அறிந்த போது அடைந்த சந்தோஷம் இருக்கிறதே, அது என் வாழ்வில் முதல் நிகழ்வுகள் ஒவ்வொன்றிலும் கிடைத்தாற்போல் இருந்தது. சங்கமத்தின் படங்கள் மனதிற்கு பெரிதும் மகிழ்வைத்தர, நேரில் பார்க்காத குறையை தீர்த்து வைத்தன.
இளவல் பாலாசி, கதிர் குறிப்பிட்டிருக்கும் இளவல் பாலாசி, அகல்விளக்கு, கோடீசுவரன் மற்றும் வாசகர்கள் ஜாபர், பைஜு ஆகியோரின் சீரிய பணிகளை வியந்து, நிச்சயம் உங்களை வரும்போது அவசியம் சந்திக்கவேண்டும் எனும் வைராக்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
ஒரு விழாவினை எப்படி நடத்தவேண்டும், எப்படி அதற்கு ஆணிவேராய் இருந்து அசத்தவேண்டும், எப்படி வழிநடத்தவேண்டும் என்றெல்லாம் கதிர், ஆரூரன், பழமைபேசி, பாலாசி... ஆகியோர் இந்த பதிவுலகத்திற்கு ஓர் முன்னுதாரணத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்கள். குறிப்பாய் பதிவர் சந்திப்பு எவ்வாறு நிகழவேண்டும் என எல்லோருக்கும் முன்னிறுத்தி சொல்லியிருக்கிறார்கள்.
ஒரு வரியில் சொல்ல வேண்டுமானால், பதிவுலகில் நானும் இருக்கிறேன் என்பதில் பெருமையாய் இருக்கிறது.
நாகா, உங்களின் புகைப்படம் இல்லை. தாமதமாய் அறிந்தேன். இருவர் அல்ல, மூவர் என்பதே மிகச்சரி... உங்களையும் சேர்த்து!
Dec19,2009
பஸ்டாண்டில் செருப்படி...
வகை : அனுபவம்... | author: பிரபாகர்காலேஜ் முடிச்சிட்டு ஒரு கம்ப்யூட்டர் சென்டர்ல வேல பாத்துட்டிருந்தேன். பக்கத்து வீட்டு சுரேஷ் என்ன பாக்க வர, கிளாச பாதியில நிப்பாட்டிட்டு வெளியே வந்து 'என்னடா விஷயம்' னேன்.
அப்பா இல்லை, அம்மா மட்டும்தான். ப்ளஸ் டூ முடிச்சிட்டு பஸ்ல உதவி கண்டக்டரா ஓடிட்டு இருந்தான். என்மேல பாசமா இருப்பான். எந்த விஷயம்னாலும் என்கிட்டதான் சொல்லுவான். (நல்லதுன்னா உடனே, கெட்டதுன்னா கொஞ்சம் லேட்டா)
தயங்கி, தயங்கி 'அண்ணா நான் லவ் பண்றேன், நீதான் அத கன்பார்ம் பண்ணனும்’ னு ஒரு பெரிய குண்ட தூக்கி போட்டான்.
அவன் குடும்பம் இருக்கிற சூழ் நிலையில லவ் பண்றாங்கறதே அதிர்ச்சி, அதுவுமில்லாம நான் வேற அதுல சம்மந்தப்படனும்ங்கறதால பேரதிர்ச்சியா இருந்துச்சி. ‘இரு’ன்னுட்டு உள்ள போயி, ஒரு ப்ரொக்ராம் பண்ண சொல்லிட்டு, 'ம், இப்போ சொல்லு' ன்னேன்.
'இத்தன நாளா உங்கிட்ட சொல்லாததுக்கு சாரிண்ணா. ஸ்கூல்ல பன்னண்டாவது படிக்குது, தினமும் எங்க பஸ்ஸில தான் வரும். ஒரு மாசமா பாத்துகிட்டிருக்கேன். குடும்பம் அது இதுன்னு சொல்லி பயமுறுத்தாத, அடுத்த மாசம் பை குடுத்துடுவாங்க(கண்டக்டர்). சரியா அஞ்சி பத்துக்கு ஸ்கூல் விட்டு வரும். நீ எங்கூட வா, காமிக்கிறேன். பாத்துட்டு ஓ.கே சொல்லறதுலதான் என் வாழ்க்கையே இருக்கு' ன்னான்.
'சரிடா, நான் பாத்து ஒன்னும் ஆகப்போறதில்லை, எல்லாம் நீ முடிவு பண்ணிட்ட, அதுவுமில்லாம இந்த விஷயத்துல என்னை கேக்கிறது சரியில்ல... சரி ஒருவேளை பாத்துட்டு வேணாம்னு சொல்லிட்டா?'
'சத்தியமா நேர்ல பாத்தா அப்படியெல்லாம் சொல்ல மாட்ட, பிளீஸ்னா' ன்னு கெஞ்ச, அரை மனசா ஒத்துட்டேன். ’அஞ்சு மணிக்கு வந்து கூட்டிட்டு போறேன்’னான்.
அஞ்சி பத்துக்கு கடைகிட்ட நின்னுட்டிருந்தேன், பக்கத்துல சுரேஷ். ஸ்கூல் விட்டு வரிசை வரிசையாய் பொண்ணுங்க வந்துட்டிருந்தாங்க.
'அண்ணா ரெண்டாவதா அந்த குரூப்ல வருது பாருங்க அதான்' ன்னான்.
பொண்ணு உண்மையிலெ ரொம்ப அழகா இருந்துச்சி, கொஞ்சம் பூசுன மாதிரி, சிவப்பா. எங்களை தாண்டி போகும்போது அவனை ஓரக் கண்ணால பாத்துட்டு போச்சு.
'எப்படிண்ணா இருக்கு, என்ன எப்படி லுக் உடுது பாத்தியா'ன்னு பூரிப்பா கேட்டான்.
'நல்லாருக்கு சுரேஷ், ஆனா' ன்னு இழுத்தேன்.
'அது போதும்' னுட்டு, நேரா தூரமா போயிட்டிருந்த அந்த பொண்ணுகிட்ட போனான். பாக்கெட்டில இருந்து லெட்டரை எடுத்து கையில கொடுத்தான். அப்போதான் அந்த விபரீதம் நடந்தது.
டக்குனு செருப்பை கழட்டி சப்பு சப்புன்னு அவன் தலையில, கன்னத்துல அடிக்க, பேயறைஞ்ச மாதிரி சிலையா அதிர்ச்சியில நின்னான்.
பெரிய களேபரமாயிடுச்சி. சனங்க சுரேஷ விடவும் அந்த பொண்ண அதிகமா திட்டினாங்க, ஒரு பொண்ணுக்கு அவ்வளவு திமிறான்னு.
அவனோட மத்த ஃபிரண்ட்ஸ் எல்லாம் ஒன்னு சேர்ந்து அவனை அந்த பக்கமா இழுத்துட்டு போயிட்டாங்க. நான் வேகமா கிட்ட ஓடினேன்.
'அண்ணா நீங்க இங்க வரவேண்டாம், நாங்க பாத்துக்கறோம், நீங்க சென்டருக்கு போங்க' ன்னு ஒருத்தன் சொன்ன்னான்.
வேற வழியில்லாம நான் திரும்பி சென்டருக்கு வந்து சொல்லிட்டு வீட்டுக்கு கிளம்பிட்டேன்.
ராத்திரி சுரேஷோட அம்மா வந்து எங்க வீட்டுல புலம்பிக்கிடிருந்தது. அத சமாதானப்படுத்தறதுக்குள்ள போதும், போதும்னு ஆயிடுச்சி.
சுரேஷ ஆளயே காணும். நானும் கேட்கலை. ரெண்டு நாள் கழிச்சி கிளாஸ் எடுத்துக்கிட்டிருக்க்கும்போது யாரொ ஒரு பொண்ணு என்னை பாக்க வந்திருக்கிறதா சொல்லி கூப்பிட குழப்பத்தோடு வெளியே போனேன்.
சதீஷ அடிச்ச அந்த பொண்ணு ரெண்டு மூனு ஃபிரண்ட்ஸோட என்ன பாக்கிறதுக்காக உக்கார்ந்து இருந்துச்சி.
சல்லுனு கோபம் வந்துச்சி.'எதுக்கு வந்தே? அவன் உயிரோட இருக்கிறானான்னு கேட்டுட்டு போக வந்தியா'?
உடனே, தலையில அடிச்சிகிட்டு 'அய்யோ அண்ணா நீங்களும் என்னை திட்டாதீங்கண்ணா, இந்த பாவி தெரியாம பண்ணிபுட்டேன், அவரு ரொம்ப நல்லவருன்னு தெரியாம போச்சு. அடிச்சதுக்கு பரிகாரமா, அவரைத்தான் நான் கல்யாணம் பண்ணிக்குவேன், நீங்கதான் நல்லபடியா முடிச்சு வெக்கனும்' னுச்சி.
கண்ணுல மாலை மாலையா தண்ணி. 'சரி மொதல்ல வெளிய வா' ன்னு கூட்டிட்டு வந்தேன்.
எனக்கு ஒண்ணும் புரியல. 'சரிம்மா, அவன் எங்க போனான்னே தெரியல, ரெண்டு நாளா தகவல் இல்ல, உசுரோட இருக்கானான்னே தெரியல' ங்கவும், திரும்பவும் அழ ஆரம்பிச்சது.
'சரி சரி, அவன் வந்தவுடன் பேசறேன்' னு சொல்லி சமாதானம் பண்ணி அனுப்பி வெச்சேன். கொஞ்ச நேரத்துல ஃபோன் வந்தது. சுரேஷ்தான் பேசினான்.
எடுத்த உடனே, அண்ணா அது வந்து உங்கள பாத்துச்சான்னா'ன்னு கேட்டான்.
'டேய் எங்கடா போன? எல்லாம் பயந்து போயிருக்கிறோம், எங்க இருக்க, ஏன் வீட்டுக்கு வரல' ன்னு கேட்க,
'அதெல்லாம் இருக்கட்டும், வந்துச்சின்னு தகவல் வந்துச்சி, என்ன சொல்லிச்சின்னு மொதல்ல சொல்லு' ன்னான்.
அப்போல்லாம் மொபைல்லாம் இல்ல. அதுக்குள்ள எப்படி தகவல் போச்சின்னு ஆச்சர்யப்பட்டுகிட்டு நடந்தத சொன்னதும், 'அதுக்காகத்தான் ரெண்டு நாளா தலைமறைவா இருக்கேன் உடனே வர்ரேன்' னான்.
அப்புறம் அந்த பொண்ணு வீட்ட விட்டு ஓடிவந்து கல்யாணம் ஆகி இப்போ ரெண்டு குழந்தைங்க, சந்தோஷமா இருக்காங்க.
இன்னிக்கும் நான் அந்த பொண்ணை பாத்தா டக்குனு அது காலை பாப்பேன். சிரிக்கும் வெக்கத்தோட 'போங்கண்ணா' ன்னு சிணுங்கிகிட்டு...
கொஞ்சம் மாற்றங்களோடு ஒரு மீள் இடுகை...
Dec17,2009
ஒரு சம்பவம் பல கோணங்கள் - ஷிவாவும் ரேஷ்மியும்...
வகை : சிறுகதை... | author: பிரபாகர்ரேஷ்மியும் ஷிவாவும் நல்ல நண்பர்கள். இருவரின் வீட்டாருக்கும், அனைத்து நண்பர்களுக்கும் கூட அவர்களின் நட்பு பற்றி தெரியும்.
அன்று ஏப்ரல் முதல் தேதி. ராக்கி ரேஷ்மி வீட்டிற்கு வந்திருந்தாள், ஷிவாவும் வழக்கம்போல் அங்கிருந்தான். ஏப்ரல் ஃபூல் கதைகளை பேசிக்கோண்டு குடும்பத்தாரோடு எல்லோரும் சித்துக்கொண்டிருந்த சமயம், ஷிவா சட்டென இரண்டு கைகளை ரேஷ்மியை நோக்கி நீட்டி 'ஐ.லவ்.யூ' என சப்தமாக சொல்லிவிட்டு உடனே 'ஏமாந்துட்டியா, ஏப்ரல் ஃபூல்...' என சொல்கிறான். எல்லோரும் இடி விழுந்தாற்போல் சிரித்தாலும், மனதிற்குள் என்ன நினைக்கிறார்கள் என்பது இதோ கீழே...
ரேஷ்மி - டேய் நிஜமா உன்னை நான் லவ் பண்றேன், இன்னிக்கு போய் சொல்லி சொதப்பிட்டியேடா!
ஷிவா - சாரி ரேஷ்மி. நான் ராக்கிய லவ் பண்ண போறேன். நீ என்ன தீவிரமா லவ் பண்றேன்னு தெரியும், ஏப்ரல் ஃபூல் சொல்லி உன்னை ஒதுக்கறத தவிற எனக்கு வேற வழியில்ல.
ராக்கி - என்ன கணக்கு பண்ற்துக்காகாத்தான் அவள கழட்டி விடறன்னு தெரியும், சாயந்திரம் வரைக்கும் ஏப்ரல் ஒன்னு தானே?
ரேஷ்மியின் அம்மா - அப்பாடி நம்மள ஆக்காம அவங்களே ஆக்கிகிட்டாங்க.
ரேஷ்மியின் அப்பா - ரெண்டும் கொஞ்சம் ஓவராத்தான் பண்ணிகிட்டிருந்துச்சி.ஒரே வயசுல பண்ணினா ஒத்து வராதுன்னு நினைச்சிகிட்டிருந்தத்துக்கு ஒரு முடிவு வந்தாச்சு.
படித்து முடித்த நீங்கள் - பின்னூட்டமிடுங்கள், தெரிந்துகொள்வோம்.
Dec16,2009
மகன் தந்தைக்கு....
வகை : கவிதை... | author: பிரபாகர்உயிர் தந்து
உணர்வும் தந்து நல்
உறவு தந்தீர்...
செய்கையிலே மிக
சிறப்பு சேர நல்
சிந்தை தந்தீர்...
அன்பு தந்தீர்
அடித்தும் நல்
அறிவும் தந்தீர்...
பண்புடனே வாழுதற்கு
பாசம் தந்து உடன்
பணிவும் தந்தீர்...
கவிதை தந்தீர்
கவியெழுத நன்கு
கற்றும் தந்தீர்...
புவியுலக புரட்டுக்களை
புரிதல் தந்தீர் மனம்
பொறுத்தல் தந்தீர்...
வீரம் சொன்னீர்
வடுகாட்டி விளக்கி நல்
வீரம் தந்தீர்...
தீரத்தோடு வீரமென
தீர்வாய் சொல்லி நல்
தெளிவை தந்தீர்...
நல்லோரின் கதைகளோடு
நட்பு சொல்லி உண்மை
நட்பும் தந்தீர்...
அல்லலுறும் நேரமதில்
அடுத்தென்ன யோசிக்கும் நல்
ஆற்றல் தந்தீர்...
வன்வேலால் வினையறுக்கும்
வேலவனை வணங்கி நாளும்
வாழ்வுயர்வாய் என சொல்லி
என்னுயர்வில் என்னுயிரில்
எந்நாளும் உறைந்திருக்கும்
என் தந்தை நீர் நீடுவாழ்வீர்.
(உரையாடல் கவிதை போட்டிக்கான இடுகை)
Dec15,2009
முற்பகல் செய்யின், முற்பகலே விளையும்...
வகை : அனுபவம்... | author: பிரபாகர்பொது விஷயங்களை எடுத்துக்கொண்டால் கண்ட இடங்களில் சிறுநீர் கழித்தல், அரசியல் பேசுதல், பொது இடங்களில் சப்தமாய் மற்றவர் துன்புறும் வகையில் தரக்குறைவாய் பேசுதல், கடைகளில் மரியாதை குறைவாய் பேசுதல், சில்லறை சம்மந்தமாய் வரும் வாக்குவாதங்கள்... என சொல்லிக்கொண்டே போகலாம்.
Dec13,2009
மின்னல் வேக பதிவர்கள் சந்திப்பு...
வகை : அனுபவம்... | author: பிரபாகர்மின்னல் வேகத்தில் அடித்தான், மின்னல் வேகத்தில் பறந்து ட்ரெயினை பிடித்தான் (சத்தியமா குருவிய சொல்லலைங்க) என படித்து மட்டும் இருந்த நான் இன்றுதான் அனுபவத்தில் பார்த்தேன்.
சந்தித்த நாங்கள்...
இடது புறம் இவ்வாறுதான்...
முன்புறத்தில் பார்த்தது...
Dec13,2009
பாரதி இன்றிருந்தால்....
வகை : கவிதை... | author: பிரபாகர்விகடன் டிசம்பர் மின்னிதழில் வெளியான கவிதை... பார்க்க இங்கே சுட்டுங்கள்...
HTML வடிவில்...


கண்ணென தமிழ் காத்து
கவிதைகள் பல புனைந்து
எண்ணத்தை எழுத்தாக்கி
ஏற்றம் பெற வழிசமைத்து
பெண்ணியத்தின் மாண்புகளை
புவியோர்க்கு எடுத்துரைத்து
திண்ணமதை உடனிறுத்தி
தெளிவான கருத்துரைத்து
மதங்களை பாராமல்
மக்களை ஒன்று சேர்த்து
சுதந்திர வேட்கையினை
சுடர்விட்டெறியச் செய்து
வேதவழி முரண்களை
வாதம் செய்து மீறி
சாதனைகள் புரிந்து
சத்திய வழி சென்ற
பாட்டுக் கவி பாரதியும்
பாரினில் இன்றிருந்தால்
நாட்டவலம் கண்டிட்டு
நாணி தலை குனிந்து
பாட்டெழுதி புரட்டுகளை
பலரறியச் செய்து
ஓட்டிடுவான் அவலங்கள்
ஓங்கு தமிழ் துணைகொண்டு
அருந்தவத்தில் பிறந்த சிசு
ஆணில்லை என்பதனால்
பெருமை சேர்க்கும் பெண்மையினை
பெண்மையே வெறுத்தொதிக்கி
பிறந்திட்ட பெண் மகவை
பால் மறுத்து பால் புகட்டி
இறக்கடிக்க செய்வோரை
இகழ்ந்துமிழ்வான் தன் பாட்டில்
திறமையற்றோர் மிகுந்திருந்து
தொலை நோக்கு பார்வையின்றி
வரும் தேர்தல் வோட்டெண்ணி
வாழ்க்கை தரம் உயர்த்தாத
அரசியல் சந்தனத்தில்
அமிழ்ந்துள்ள சாக்கடையை
வாரி இறைத்திடுவான்
வாசமது கூட்டிடுவான்
எண்ணத்தில் தெளிவின்றி
உள்ளத்தில் துணிவின்றி
வீணான எண்ணத்துடன்
வீண்பேசி நெறி மீறி
கண் மூடி கனவுலகில்
காலம் கழிக்கின்ற
தூண்களாம் இளைஞரை
தூண்டிடுவான் தன் பாட்டில்.
Dec11,2009
வாத்தியார் Vs டி.வி.எஸ் 50
வகை : அனுபவம்... | author: பிரபாகர்எங்க ஸ்கூல் ஹெட்மாஸ்டர் புதுசா வாங்கி, (ரொம்ப வசதியோன்னு கேக்காதீங்க, அவங்க மனைவியும் டீச்சரா இருந்தாங்க) ஒரு வாரம் ஓட்டறதுக்கு பழகிட்டு ஸ்கூலுக்கு கொண்டு வந்திருந்தாரு.
சில்வர் பிளஸ் வண்டிய ஒரு கம்பவுண்டர் அங்கிள் தினமும் எங்க வீட்டில விட்டுட்டு போவாரு, அது மேல ஏறி உக்காந்து கற்பனையா வண்டி ஒட்டுனதோட சரி.
பளபளன்னு பச்ச கலர்ல பார்த்ததும், எங்களுக்கெல்லாம் ரொம்ப சந்தோஷமாவும் பிரம்மிப்பாவும் இருந்துச்சி, சைக்கிளே அப்போ பெரிய விஷயம்.
சாயந்திரமா ரெண்டு வத்தியாருங்களுக்கு ஸ்டார்ட் பண்ணி எப்படி ஓட்டறதுன்னு படம் காமிச்சிகிட்டு இருந்தாரு. அதுல ஒரு சாரு, நல்லா நாமம் போட்டுகிட்டு வேஷ்டியை வித்தியாசமா கட்டியிருப்பாரு.
இந்தமாதிரி பெடலை மிதிச்சி கிளட்சை அழுத்தி பிடிச்சி விடணும், ஆக்ஸிலேட்டரை விடணும்னு அவருக்கு சிரத்தையா சொல்லிட்டிருந்தாரு.ஆர்வமா அவரும் அவர் பங்குக்கு கேட்க, அப்போதான் அந்த விபரீதம் நடந்தது.
'ஐயா நானும் முயற்சி பண்ணி பாக்கட்டுமா' ன்னு கேட்க, ’ஒ தாராளமா' ன்னு அவர்கிட்ட விட்டுட்டு அவரு எப்படி ஸ்டார்ட் பண்றாருன்னு பாத்துட்டிருந்தப்போ, தூரத்தில் ரெண்டு பசங்களுக்குள்ள ஏதோ சண்டை, கட்டி புடிச்சி உருண்டு கிட்டிருந்தாங்க. அத கவனிச்சிட்டு அய்யா இருங்க, வர்றேன்னு சொல்லிட்டு குச்செடுத்து விளாச கிளம்பிட்டாரு.
அவரு நகர்ந்தவுடன், அய்யா இன்னும் குஷியாகி பெடலை அழுத்தி கிளட்சை ரிலீஸ் பண்ணி ஸ்டார்ட் பண்ணிட்டாரு. ஆக்ஸிலேட்டர நல்லா முறுக்கிட்டு அவருக்கு விடறது எப்படின்னு தெரியல, பிரேக் பிடிக்கவும் தெரியல.
அப்போ பதட்டத்துல வண்டிய பின்பக்கம் அழுத்தவும் டயர் மோதி வண்டி ஸ்டேண்ட் ரிலீஸ் ஆகி வேகமா கிளம்பிடுச்சி. சார் மிரண்டு போயி வண்டிகூடயே வேகமா ஓட ஆரம்பிச்சிட்டாரு.
ஓடும்போது அவர் காலில் வேஷ்டி மாட்டி உறுவிட்டு வந்துவிட,கோவணம் கட்டுவாருங்கற ரகசியம் எல்லோருக்கும் அப்போதான் தெரிஞ்சது. கோவணத்தோட உயிரை கையில புடிச்சிகிட்டு வண்டிவேகத்துக்கு கூடவே ஓடினாரு.வேஷ்டி கண்ணாடியெல்லாம் பொறுக்கி எடுத்திட்டு பின்னாலேயே கத்திட்டு ஓடினோம்.
இருபது இருபத்தஞ்சு மீட்டர் தூரம் ஓடி அடுத்த பில்டிங் சுவர்ல மோதி கீழே விழ, அவரு மேல வண்டி கிடந்தது. ஆக்ஸிலேட்டரை விடாம முறுக்கிட்டே இருந்தாரு.\
ரொம்ப கஷ்டப்பட்டு அவர வண்டியில இருந்து பிரிச்சோம். கிலி அடிச்ச மாதிரி இருந்தாரு. தண்ணியெல்லாம் தெளிச்சி தெளிய வெச்சோம். ஒருவாரம் எங்கள பாத்தா தலைய குனிஞ்சிகிட்டு போனாரு.
அன்னியிலிருந்து அவரை பார்க்கும் போதெல்லாம் அவரோட கோவண ரேஸ்தான் ஞாபகம் வரும். ஆனா ஒரு விஷயத்தை மட்டும் இன்னிக்கு வரைக்கும் ஃபாலோ பண்றாரு. அது 'சைக்கிள் மட்டும்தான் ஓட்டறது' ங்கறதை.
பின்குறிப்பு.
நிறைய மாற்றங்களுடன் கூடிய மீள் இடுகை....
Dec6,2009
எங்கேயோ படிச்சது - 8 ஜோராவும் உழைப்பின் அருமையும்...
| author: பிரபாகர்
Dec5,2009
புகைப்படத் தொகுப்பு - III
வகை : புகைப்படம்... | author: பிரபாகர்
Nov30,2009
அடிவாங்கி டரியலான கதை...
வகை : அனுபவம்... | author: பிரபாகர்இப்போல்லாம் நீங்க வடிவேல் உதை வாங்கறத நிறைய காமெடியில பாத்திருப்பீங்க, ரசிச்சுகிட்டிருப்பீங்க. நாமெல்லாம் தொன்னூத்தி ரெண்டுலேயே அனுபவத்துல பாத்தாச்சு.
பி.எஸ்.சி. கம்ப்யூட்டர் சைன்ஸ்ல கடைசி செமெஸ்டர், மெயின் எக்ஸாம் எல்லாம் முடிஞ்சுடுச்சி. நல்லா படிக்கிற ஆல் பாஸ் ஜீனியஸ்லாம் எஸ்கேப் ஆக அரியர் இருந்த நாங்க ஒரு பதினைஞ்சு பேர் மட்டும் ரூமிலே, ஹாஸ்டல்லே தங்கி மேத்ஸ் அரியர முடிச்சோம்.
ஹெச்.ஓ.டி நல்லா ஹெல்ப் பண்ண என் பேப்பர் எல்லாருக்கும் சர்குலேட் ஆக, பாஸ் மார்க்குக்கு மேலேயே எழுதினதால மெயின் பேப்பர் நெட்வொர்க் கண்டத்தையும் மறந்து சந்தோஷமா இருந்தானுங்க. (நெட்வொர்க் பேப்பருக்கு நடந்த கூத்த தனியா எழுதறேன்.)
புல் தண்ணி, சந்தோஷம். வழக்கம்போல நான் ஒதுங்கியிருக்க, ஸ்னாக்ஸாவது சாப்பிடுடான்னு கம்ப்பல் பண்ணி, நிறையா வாங்கி, பெப்சி நாலஞ்சி பாட்டலோட கொடுத்தானுங்க...
சாயங்காலமா எல்லாரும் போதையையும் மீறி பேயடிச்ச மாதிரி இருக்க, என்னடான்னு கேட்டுட்டு நானும் ஆடிப் போயிட்டேன். கூட படிச்ச, அந்த ஊர்லயே பெரிய வி.ஐ.பி.யோட பொண்ணு ஓடிபோயிடுச்சின்னானுங்க.
எல்லோரும் டக்குனு ராசுவைத்தான் சந்தேகப்பட்டோம். ஏன்னா அவன்தான் அந்த பொண்ணுகிட்ட கடலை போட்டுகிட்டே இருப்பான். கொஞ்ச நேரத்துல அவனே ரூமுக்கு வந்ததுமில்லாம ஆளு யாருன்னு சொன்னவுடன் அதிர்ந்துட்டோம்.
வேற குரூப் பையன் ஒருத்தன் தள்ளிகிட்டு போயிட்டாங்கற தகவல நம்பவே முடியல. ஏன்னா, அவங்க ரெண்டு பேரும் சந்திச்சு பேசினத யாரும் கண்ணால கூட பாத்ததில்ல.
காரணம், லன்ச் டைமுல மட்டும் தான் அவங்க கிளாஸ் ரூமிலேயே பாத்து பேசி டெவலப் பண்ணியிருக்காங்க, கூட படிச்ச மத்த ரெண்டு பொண்ணுங்க உதவியோட. வெளிய வேற எங்கேயும் அவங்க பாத்துகிட்டது கிடையாது.
நாங்க யாரும் அங்க இருக்க மாட்டோம், ஹாஸ்டல், ரூமுன்னு போயிட்டு ஒன்னே முக்காலுக்கு மேல தான் வருவோம். லவ்வுனதெல்லாம் ஒன்னுல இருந்து ஒன்றரை வரைக்கும்.
சரி விஷயத்துக்கு வருவோம். ராசு பீதியை கிளப்பினான். 'மாப்ளே எல்லாரும் வெறியோட தேடிகிட்டு இருக்காங்க, நாம மாட்டினா ஒழிஞ்சோம். பிரபா மாதிரி ஆளுங்களுக்கெல்லாம் பயமில்ல, கிளாஸ் மேட்டான்னு கூட தெரியாது. ஆனா நாம தான் எதுக்கெடுத்தாலும் மொத ஆளா போயி பாப்புலரா இருக்கோம், பாத்தா பின்னிடுவானுங்க' ன்னான்.
எல்லாருக்கும் உதற ஆரம்பிச்சிடுச்சி எங்க ரெண்டு மூனு பேரை தவிர. 'சரி எல்லோரும் ஒன்னா போவோம், எது வந்தாலும் பாத்துடுவோம்' னு படையா கிளம்பினோம் ராத்திரி ஏழரைக்கு மேல.
பஸ் ஸ்டான்ட் போற வரைக்கும் பிரச்சினை இல்ல. எல்லாரும் டீ குடிச்சோம். லோக்கல் பசங்க நிறைய பேரு கூட இருந்ததால ரொம்ப தெம்பா இருந்தோம்.
ஆத்தூர் போற பஸ் ஸ்டான்ட விட்டு வெளிய வர, எல்லாரும் வழியனுப்ப ஒவ்வொருத்தரா மூவ் ஆகற பஸ்ஸில ஒவ்வொருத்தரா வரிசையாய் ஏற ஆரம்பிச்சோம்.
அப்போ ஒருத்தன் பஸ்ஸில ஏறிகிட்டிடுந்த ரமேஷோட சட்டையை பிடிச்சி கீழ இழுத்தான். தடுமாறி கீழ இறங்கி முறைச்சி, 'என்ன விஷயம் ஏன் இழுக்கிற' ன்னான்.
அந்த பொண்ணு பேரை சொல்லி அதோட 'கிளாஸ் மேட்டுதானே' ங்கவும் ரமேஷ் தலையாட்ட,
'வாங்க சார், உங்களுக்காகத்தான் காத்திருக்கோம்' னு சொல்லி இழுத்துகிட்டு போகவும், ஏதோ பண்ண போறாங்கன்னுட்டு ஆட்டுகுட்டி மாதிரி நானும் ஏதோ துணிச்சலா கூடவே போனேன்.
பஸ்ஸு சல்லுனு போயிடுச்சி. பஸ் ஸ்டன்ட்ல நின்னுட்டிருந்த பசங்க எல்லாம் எஸ்கேப். அவனுங்க ஆளுங்க ரெண்டு மூனு பேரு சேர்ந்துட்டானுங்க.
'இவன் யாருடா கூடவே வர்ரான்' ன்னு ஒருத்தன் என்ன பாத்து கேட்கவும், எல்லோரும் கூடவே வந்துகிட்டிருந்த என்னை அப்போதான் பாத்தாங்க.
'நான் ரமேஷோட பிரண்டு' ன்னேன். 'அப்படியா, வாங்க சார்' னுட்டு பின்னால இருந்த மூத்திர சந்துக்கு கூட்டிட்டு போனாங்க.
அந்த பொண்ணோட தம்பி கொல வெறியோட இருந்தான். எல்லாரும் சேர்ந்து மாத்த ஆரம்பிச்சுட்டானுங்க. ரமேஷுக்கு நாலுன்னா எனக்கு ஒன்னு விழுந்துச்சி.
என்ன அடிக்கும் போது 'எவன்டா இவன் புதுசா இருக்கான்' னு கேக்க, 'அவரோட ஃபிரண்டாம்' னு சொல்ல, 'அப்பா சரின்னு வாங்கிக்கட்டும்' னு வஞ்சனையில்லாம குடுத்தானுங்க...
அவனோட பூணூல பிச்சிட்டானுங்க. கண்ணமெல்லாம் உப்பிடுச்சி. எனக்கும் அப்பப்போ சட்டு சட்டுனு அடி விழுந்துகிட்டிருந்துச்சி. அப்போ அங்க ஒரு போலீஸ் வர, அப்பாட தப்பிச்சோம்னு நினைக்க,
'டேய் பப்ளிக்ல ஏண்ட ராவுடி பண்றிங்க, தனியா கூட்டிட்டு போயி கவனிக்க வேண்டியதுதானே' ன்னு ஐடியா குடுத்திட்டு கண்டுக்காம போயிட்டாரு.
உயிர் பயம் ஆரம்பிச்சுடுச்சி. போட்டிருந்த செருப்பு, கொண்டு போன பேக் எங்க போச்சுன்னே தெரியல. வாயெல்லாம் உப்பு கரிக்க ஆரம்பிச்சுடுச்சி.
'சரி சரி இங்க போதும், ரூமுக்கு கூட்டிட்டு போலாம்' னு ஒருத்தன் சொல்ல அங்கிருந்து எங்கள தள்ளிகிட்டு நகரும்போது புதுசா ஒரு ஆளு வந்தான், கடவுள் மாதிரி.
அவனுங்களை அடக்கி, கையை தரை வரைக்கும் பின் பக்கமா கொண்டு போயி சப்புனு ரமேஷ் கன்னத்துல ஒன்னு உட்டான். 'திரும்பி பாக்காம ஓடிப்போ' ன்னு சொல்லிட்டு, அடுத்து எனக்கும் அதே மாதிரி ஒன்னு விட்டான்.
காமிக்ஸ்ல மட்டுமே அடிச்சா நட்சத்திரம் பறக்கிறத பாத்த நான், நேர்ல லைவ்-ஆ பாத்தேன். திரும்பி பாக்காம அழுதுகிட்டே கந்தலா போயி, நின்னுகிட்டிருந்த ஆத்தூர் பஸ்ல போயி உட்காந்தோம்.
ரமேஷ் வெலவெலத்துப் போயி என்ன கட்டி புடிச்சி அழ ஆரம்பிச்சுட்டான். நிமிர்ந்து பாத்தா, ஓடிப்போன எல்லாரும் குரூப்பா திரும்பி வந்து கோரஸா 'மாப்ளே ஒன்னும் ஆகலல்ல' ன்னானுங்க, ஒன்னுமே தெரியாத மாதிரி.
அப்புறம் நடந்ததெல்லாம் இங்க முக்கியம் இல்ல. அந்த பொண்ணுகிட்ட இருந்து கல்யாணத்துக்கு அழைப்பு வந்திருந்தது. ஆட்டோகிராப் பாத்து அனுப்பி இருக்கும் போல.
கண்டு பிடிச்சி அவனை உதைச்சு (கண்டிப்பா எங்களவிட அதிகமா இருக்கும்னு நம்பறேன்) சொந்தத்துலேயே ஒரு தியாகியை புடிச்சி கல்யாணம்னு தெரிஞ்சிகிட்டேன்.
கல்யாணத்துக்கு போனேன், ரவி மட்டும் வந்திருந்தான். பசங்க வேற எவனும் வரல, பொண்ணுங்களும் வரல.
அந்த பொண்ணோட தம்பிதான் முன்னாலயே நின்னுகிட்டு எல்லாத்தையும் வரவேற்றுகிட்டு இருந்தான்.
என்ன 'வாங்கண்ணா' ன்னு பலமா வரவேற்பெல்லாம் குடுத்துட்டு, சட்டுனு கட்டிபுடிக்கிற மாதிரி காதுகிட்ட 'மன்னிச்சுடுங்கண்ணா, சாரி' ன்னான்.
அடி வாங்கினாலும், அந்த பொண்ணு மனசு எவ்வளவு கஷ்டப்படும்னு பாக்கலாம்னுதான் போனேன். நல்லா கலகலப்பா சிரிச்சிகிட்டு முன்ன விட சந்தோஷமா இருந்துச்சி.
சிறு மாற்றங்களுடன் கூடிய மீள் இடுகை...
Nov29,2009
நம்பிக்கையில் வாழ்க்கை....
வகை : கவிதை... | author: பிரபாகர்