எங்கள் வீட்டுப் பூனைக்குட்டி...

|

விலங்குகளுக்கும் நமக்குமான நட்பு ரீதியான பரிட்சயம் ரொம்பவும் குறைவு. அதனால்தானோ என்னவோ, கல்லால் ஓணான் அடிப்பது, தும்பியினைப் பிடித்து வாலில் நூல் கட்டிவிடுவது, உண்டிவில்லால் அணில் அடிப்பது, வயல்களில் கடலை பிடுங்கியபின் இருக்கும் எலி வளைகளை வெட்டி, உள்ளே இருக்கும் எலிகளை அடிப்பது(சேமித்து வைத்திருக்கும் கடலைக்காக வளைகளை தோண்டுவது வழக்கம்) , தெரு நாய்களை கல்லால் அடிப்பது என எல்லாப் பாதகச் செயல்களையும் வஞ்சனையில்லாமல் நண்பர்ளோடு சேர்ந்து செய்தோம்.

தெரியாத வயதில் அறியாமல் செய்ததை இப்போது நினைத்தாலும் வலிக்கிறது. தாத்தா, ஆயா, அம்மா, அப்பா என எல்லோரும் வாயில்லாத ஜீவன் பாவம் எனச் சொன்னாலும் அவர்களை விரோதிபோல் பாவித்து செய்யும் செயல்களிலிருந்து திருந்தியதில்லை.

ஆனாலும் விதிவிலக்காய் வீட்டில் வளர்க்கும் பூனைகளின் மேல் மட்டும் அலாதிப் பிரியம். கொஞ்சமும் மாசில்லாத வெள்ளை நிறப் பூனைகளை மட்டும்தான் ஆயா வளர்ப்பார்கள் நன்றாக கவனிப்பார்கள், கவனிக்கச் சொல்லி எனக்கும் அறிவுறுத்துவார்கள். மாசில்லா வெள்ளை நிறமோ, அல்லது நமக்கு முக்கியத்துவம் கொடுத்து அதை கவனிக்கும் பொறுப்பை விட்டதுவோ பிரியமாய் இருந்ததற்கு காரணமாய் இருக்கலாம்.

காலை மாலை இருவேளைகளும் அதற்கு சாதத்தில் பாலினை ஊற்றி வைக்கும் வேளை நம்முடையது. அதிகாலையிலேலேயே குழந்தைபோல் பசியில் கத்த ஆரம்பித்துவிடும். காலை சுற்றிச் சுற்றி கத்தியபடி வருவதைப் பார்க்க பரிதாபமாக இருக்கும். வெறும் சாதத்தை என்ன பசியென்றாலும் சாப்பிடாது.

சாதத்தில் பால் ஊற்றினால் மட்டும் தான் சாப்பிடும். பாலினை கறந்து கொண்டிருக்கும்போதே குவளையில் வாங்கிவந்து சாதத்தை அதன் தட்டினில் இட்டு பாலை ஊற்ற, ஆர்வமாய் பசியாற சாப்பிடும். பசியாறியபின் நன்றி சொல்வதுபோல் வேறொரு குரலில் கத்தி, பாசமாய் பார்த்துவிட்டுப் போகும். மாலையிலும் இதேபோல் என தினமும் இது தொடரும்.

சிலவேளைகளில் எலியினை வேட்டையாடி பசியாறி இருந்தால் அது யாரையும் நம்மை சட்டை செய்யாமல் அங்குமிங்கும் அலைந்தபடி இருக்கும். அசைவ உணவுகளை சாப்பிடும்போது அருகிலேயே அமர்ந்து நாம் தரும்வரை ஆர்வமாய் பார்த்தவண்ணம் இருக்கும். கருவாடு என்றால் அதற்கு ரொம்பப் பிடிக்கும்.

புதிதாய் யாராவது வந்தால் அவர்களிடம் சிநேகமாகும் வரை அருகே செல்லாது. அழைத்தால் தயங்கியபடி வந்து நம்மோடு ஒட்டிக்கொண்டு ஒரு விதமாய் குரல் எழுப்பி அதன் பாசத்தை வெளிப்படுத்தும்.

பசியில்லாத தருணங்களில் கிடைக்கின்ற எலியினை உடனே சாப்பிடாமல் மயங்கிப் போகும்படி அடித்து வீட்டின் அறையின் மூலையில் போட்டுவிட்டு அதையே பார்த்துக்கொண்டிருக்கும். மக்கம் தெளிந்து அது தப்பிக்க ஓடும் தருணங்களில் ஓங்கி தலையில் ஒரு அடி போட எலி மயங்கி விழும். இவ்வாறு தெளியத் தெளிய அடித்துபோட்டு நன்றாக பசிக்கும்போது ஒரே கவ்வாக கவ்விக்கொண்டு மூட்டைகள் அடுக்கி இருக்கும் இடத்துக்கு எடுத்து சென்றுவிடும்.

தப்பித்து ஓடும் எலிகள் அருகில் இருக்கும் பொந்துகளில் ஒளிந்துகொண்டால் வெளியே வரும்வரை ரொம்பவும் பொறுமையாய் காத்திருக்கும். ஒன்றுமே கிடைக்காத தருணங்களில் தவளை ஓணான் ஆகியவைகளையும் பிடித்துத் தின்னும்.

இரவு வேளைகளில் படுத்திருக்கும் நம் அருகில் வந்து போர்வைக்குள் புகுந்துகொண்டு குறுகுறுவென படுத்துக்கொள்ளும். எங்கே அதன் மேல் நாம் உருண்டுவிடுவோமோ என பயந்தவண்ணமே தூங்கவேண்டியிருக்கும்.

நன்றாக சாப்பிட்டு கொழுத்து ஏழெட்டு குட்டிகளை ஈன்று அவற்றை பத்திரமாய் பாதுகாக்கும். வாயால் கவ்விக்கொண்டு இடத்தினை அடிக்கடி மாற்றும். அச் சமயங்களில் கத்துவது குழந்தை கத்துவது போல இருக்கும். வெள்ளைக் கலரில் இருக்கும் குட்டிகளுக்கு நிறைய கிராக்கி இருக்கும், யாராவது சொல்லி வைத்து வாங்கி சென்று விடுவார்கள். செல்லுபடியாகாத குட்டிகளை ஒரு சாக்கில் போட்டு வீட்டு வேலையாட்களிடம் கொடுத்து ஆற்றுப் பக்கம் விட்டுவிட சொல்லிவிடுவார்கள்.

எந்த பூனையும் நீண்ட நாட்களுக்கு இருக்காது, திடீரென ஒருநாள் காணாமல் போய்விட ஆயா ரொம்ப புலம்புவார்கள். அதை சாப்பிட யாரோ பிடித்து சென்றுவிட்டதாக சொல்லுவார்கள். அடுத்து ஒரிரு நாட்களில் வெள்ளைக் கலரில் இன்னுமொரு பூனை வரும், வழக்கமான கவனிப்புகள் தொடரும்.

9 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

Paleo God said...

//காலை மாலை இருவேளைகளும் அதற்கு சாதத்தில் பாலினை ஊற்றி வைக்கும் வேளை நம்முடையது.//

//வாயால் கவ்விக்கொண்டு இடத்தினை அடிக்கடி மாற்றும். அச் சமயங்களில் கத்துவது ஜுழந்தை கத்துவது போல இருக்கும்//

ஏன் ப்ரபா என் ஸ்டைல்ல எழுதறீங்க? :)

sathishsangkavi.blogspot.com said...

பங்காளி...

//இரவு வேளைகளில் படுத்திருக்கும் நம் அருகில் வந்து போர்வைக்குள் புகுந்துகொண்டு குறுகுறுவென படுத்துக்கொள்ளும். /

வீட்டில் பூனை வளர்த்தி அதை கொஞ்சும் அழகும், அதன் சத்தமும் இன்று இல்லை....
பூனையைப்பற்றி ஓர் அழகான பதிவு....

Paleo God said...

நல்லா இருக்கு பிரபா. பூனைகள் எனக்கும் பிரியமே.

:)

தேவன் மாயம் said...

தெரியாத வயதில் அறியாமல் செய்ததை இப்போது நினைத்தாலும் வலிக்கிறது. தாத்தா, ஆயா, அம்மா, அப்பா என எல்லோரும் வாயில்லாத ஜீவன்-டா பாவம் எனச் சொன்னாலும் அவர்களை விரோதிபோல் பாவித்து செய்யும் செயல்களிலிருந்து திருந்துவதாயில்லை.
//
எனக்கும் இதுபோல்தான்!

ஸ்ரீ.கிருஷ்ணா said...

செல்லபிராணிக்காக ஒரு பாச இடுக்கை அருமை ..

vasu balaji said...

நல்லாருக்கு. ஆனா பூனை தண்ணி சோறு, குழம்பு சோறு ஏன் வெறும் சோறு கூட சாப்பிடுமே. சூடா இருக்கக்கூடாது சோறு. ஒரு விஷயம் விட்டுட்டீங்க. மிருகத்துல சுத்தமான மிருகம் பூனை. ஒரு நாளைக்கு பல முறை நாவால் சுத்தம் செய்துக் கொள்ளும். ஆனால் அதற்கு பிடித்த உணவு சுத்தமேயில்லாத எலி:).

T.V.ராதாகிருஷ்ணன் said...

அழகான பதிவு

Unknown said...

எனக்குப் பிடிக்கவே பிடிக்காத பெட்னா அது பூனை தான்..

அலர்ஜி இருக்கிற ஆளுங்களுக்கு வில்லன் பூனை.

நான் ஒரு நாய்ப் பிரியன்...

மரா said...

எனிக்கி மனுசப்பயலுக தவிர ஒரு விலங்கும் வளர்க்க பிடிக்காது.ஆனா பறவைகள் பார்த்தல் எம்பட பொழுதுபோக்கு :) வந்தா ஜுராங்க் ஜூ கூட்டிப் போவிகளா சாமி :)

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB