காமிக்ஸ் பிரபாகர்...

|

இருவேறு நபர்கள் சந்தித்துக்கொண்டபோது ஒருவர் மற்றொருவரை என்ன ஊர் எனக்கேட்டிருக்கிறார். சேலம் என சொல்ல, பக்கத்தில் என்ன ஊர் எனக்கேட்க, ஆத்தூர்... அட... பக்கத்தில என திரும்பவும் கேட்க தெடாவூர் என சொல்லவும், ஆஹா..., உங்களுக்கு காமிக்ஸ் பிரபாகரைத் தெரியுமா?

கேட்டது என்னோடு ஆறு முதல் ஒன்பது வரை மல்லியகரையில் படித்த, சினிமாவில் சிறு வேடங்களில் நடித்து வரும் முரளி(ஈ படத்தில் வரும் போலீஸ், இப்போது வரப்போகும் படங்கள் பத்தில்... அம்பானியில் இருப்பதாய் சொன்னான், பார்க்கவேண்டும்). பதில் சொன்னவன் சினிமாவில் இயக்குனராய் இருக்கும் என் பால்ய, அன்பு நண்பன் வேலு (தற்சமயம் தெக்கத்தி பொண்ணு சீரியலின் எபிசோட் டைரக்டர் + வில்லன்).

ஆம், சிறு வயதில் அந்த அளவிற்கு காமிக்ஸ் எனது நிகழ்வினில் இரண்டற கலந்திருந்தது! முத்துகாமிக்ஸ் தான் மிகவும் பிரியமான ஒன்று. இரும்புக்கை மாயாவி, லாரன்ஸ் டேவிட் என சொல்லிக்கொண்டே போகலாம்.பின் லயன் காமிக்ஸ் கலக்க ஆரம்பித்தது. செலவுக்கு தரும் காசினையெல்லாம் சேமித்துவைத்து காமிக்ஸ் வாங்கி படிப்பேன்(போம்).

நண்பர்களுக்குள் காமிக்ஸ் பண்ட மாற்ற முறையில் தான் கிடைக்கும். ஐந்து ரூபாய் மதிப்புள்ள காமிக்ஸ் படிக்கக் கொடுத்தால் பதிலுக்கும் அதே விலையுள்ள வேறு கிடைக்கும். காமிக்ஸ் நிறைய யார் வைத்திருக்கிறார்களோ அவர்கள் தாம் மிகவும் பெரிய ஆள் என்பது எங்களின் எண்ணமாயிருந்தது.

சாமியிடம் இதுவரையிலும் வந்த வரப்போகிற காமிக்ஸ் எல்லாம் எனக்கு அப்படியே கிடைக்கவேண்டும் என வேண்டுவது வழக்கமான ஒன்றாக இருந்தது. நாவல்களைப் படிக்க ஆரம்பிக்கும் வரை காமிக்ஸ்தான் முழுதாய் ஆக்கிரமித்திருந்தது.

காமிக்ஸ் படிப்பதில் ஆரம்பித்த படிக்கும் வேட்கை இன்றும் தணியாமல் இருக்கிறது. இன்று எழுதுவதற்கும் அதுதான் தூண்டுகோலாய் இருக்கிறது என்றால் மிகையில்லை. கற்பனைத்திறன் பெருகுவதற்கும், ஒரு துடிப்பு, வேகம் தொடர்ந்து இருக்கவும், நினைவாற்றல் வளர்வதற்கும் காமிக்ஸ் பெரும்பங்கு வகித்தது. இந்த இடுகை கூட நான் ஒரு காமிக்ஸ் வாங்க பட்ட பாட்டினை சொல்வதற்காகவே.

நான்காம் வகுப்பு முழு ஆண்டு விடுமுறையினை சொந்த ஊரில் கழித்து தாத்தா வீட்டிற்கு செல்வதற்காக ஆத்தூர் வந்திருந்தேன். ஐந்து ரூபாய் செலவுக்கு கொடுத்திருந்தார்கள். ஆத்தூர் வரை ஒரு ரூபாய் எழுபத்தைந்து, தாத்தா வீட்டிற்கு செல்ல முப்பத்தைந்து காசுகள். கையில் இருப்பது இரண்டு தொன்னூறு. என்ன செய்யலாம் என எண்ணி புத்தகக் கடையினை பார்க்க பார்க்க பரவசமடைந்தேன்.

அப்போதுதான் வந்திருந்த ‘காற்றில் கரைந்த கப்பல்கள்’ எனும் லாரன்ஸ் டேவிட்டின் முத்து காமிக்ஸை வெளியில் மாட்டிக்கொண்டிருந்தார்கள். ஆர்வமாய் விலையைப் பார்க்க பகீரென இருந்தது, மூன்று ரூபாய். பத்து பைசா குறைவாய் இருக்க என்ன செய்ய என் யோசித்த வண்ணம் இருந்தேன்.

வந்த உடனேயே பரபரப்பாய் விற்பனை ஆக ஆரம்பித்தது. பதினைந்து, பத்து என கடைசியாய் நான்கில் வந்து நின்றபோது கடைக்காரரிடம் விஷயத்தைச் சொல்லி பத்து காசினை அடுத்தமுறை தருகிறேன் எனச் சொல்ல கிடைக்கிற லாபமே அவ்வளவுதான் என விரட்டிவிட்டார். அவரிம் கெஞ்சி ஒரு புத்தகத்தை மட்டும் எடுத்து வைக்கச்சொன்னேன். அதன் பின் பலமான யோசனையுடன் தெரிந்தவர் யாரேனும் மாட்டுகிறார்களா என பார்த்துக்கொண்டிருந்தேன்.

அப்போது சேலம் செல்லும் பேருந்துகள் நிற்கும் இடத்திலிருந்து ஒரு குரல் எனக்கு பழக்கப்பட்டதாய் இருக்க மெதுவாய் அங்கு சென்றேன். எங்கள் பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் எல்லோரும் அவரை ’ஏய் கேனயா’ எனத்தான் கூப்பிடுவார்கள். லொட லொட என ஏதாவது பேசிக்கொண்டே இருப்பார். அவரை கேனையா எனக்கூப்பிட்டால் அடிக்க வருவார், மாமா என கூப்பிடச் சொல்வார். அதற்கும் கேனையா என சொல்லி ஓடி வந்துவிடுவேன்.

கூவி அழைத்து பேருந்தில் ஏற்றிக்கொண்டிருந்தார். மெதுவாய் அவரிடம் சென்றேன். முதன் முறையாய் அவரை ‘மாமா’ என்றழைக்க அவருக்கு பயங்கரமான சந்தோஷம். ’பிரபு என்ன இங்கே’ எனக்கேட்க ஊருக்குத்தான் செல்கிறேன் என சொன்னேன்.

’மாமா ஒரு பத்து காசு வேணும், பஸ்ஸுக்கு கம்மியா இருக்கு’ என சொல்ல உடனே ‘யோவ் ஸ்ரீதரன் கண்டக்டர் ஒரு இருவது பைசா கொடு’ என சட்டென வாங்கி என்னிடம் கொடுத்தார். ஓடிச்சென்று காமிக்ஸையும் பத்து பைசாவுக்கு மிட்டாயும் வாங்கிக்கொண்டு சந்தோஷமாய் சென்றேன்.

விளையாடிவிட்டு வந்தவுடம் ஆயாவிடமிருந்து சப்பென முதுகில் ஒரு அடி. வீட்டிற்கு வந்த அவர் என் ஆயாவிடம் இருபது பைசா கொடுத்ததை பெருமையாய் சொல்லியிருப்பார் போலிருக்கிறது. காரணம் கேட்க, சொல்லவும் ‘இந்த மாதிரி வாங்கி கதை புத்தகம் வாங்கவேண்டுமா’ என இன்னொன்று வைத்தார்கள்.

இங்கு சிங்கையில் மனைவி மற்றும் மகனோடு புத்தகக் கடைக்கு சென்றபோது என் மகன் மொத்தமாய் இருந்த ஒரு புத்தகத்தை எடுத்து உள்ளேயெல்லாம் பிரித்துப்பார்த்து இது வேண்டுமென சொல்ல, உடன் வாங்கினேன் விலை அதிகமென்றாலும்.அவன் படம் பார்க்க, நான் படிக்க. அது ஒரு காமிக்ஸ்.

13 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

Prathap Kumar S. said...

காமிக்ஸ் எல்லாலின் பால்ய வயதிலும் தவிர்க்க முடியாத ஒன்று. நான் அதிகம் படித்தது ராணிகாமிக்ஸ...

ஏய் இந்தா வாங்கிக் கும்மாங்குத்து, டமார், டுமீல், பொறி கலங்கியது.... இந்தமாதிரி டயலாக்குகள் தான் சட்டுன்னு ஞாபகம் வருது... :))

Anonymous said...

சின்ன வயதில இரும்புக்கை மாயாவியும், வேதாளமும் என்னோட விருப்பங்கள்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மாயாவி, ஜேம்ஸ் பாண்டு மறக்க முடியுமா

vasu balaji said...

மாண்ட்ரேக், மாயாவி, வேதாளம் நம்மாளுங்க:)

T.V.ராதாகிருஷ்ணன் said...

Present Praba

செ.சரவணக்குமார் said...

நல்ல பகிர்வு பிரபா.

சிநேகிதன் அக்பர் said...

காமிக்ஸ் இதன் தமிழ் சொல் என்ன?

காமிக்ஸ் என்பதே ஒரு பெயர்ச்சொல்லாக ஆகிவிட்டது என நினைக்கிறேன்.

பைதிவே நானும் அதிதீவிர காமிக்ஸ் ரசிகர் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.

நல்ல பதிவு.

மதுரை சரவணன் said...

நல்ல பகிர்வு. படிப்பு ஆர்வம் உங்கள் எழுத்தில் தெரிகிறது. பிச்சைப் புகினும் கற்கை நன்றே ...வாழ்த்துக்கள்

Anonymous said...

இரத்தப்படலம்.. மறந்திடீங்களே... 4-5 முறை வாசித்திருப்பேன். மற்றது லக்கிலுக்... கொமிக்ஸ்சில் முதல் இரண்டு இடங்களும் இவைதான். சரிதானே?

Anonymous said...

//கூவி அழைத்து பேருந்தில் ஏற்றிக்கொண்டிருந்தார். மெதுவாய் அவரிடம் சென்றேன். முதன் முறையாய் அவரை ‘மாமா’ என்றழைக்க அவருக்கு பயங்கரமான சந்தோஷம். ’பிரபு என்ன இங்கே’ எனக்கேட்க ஊருக்குத்தான் செல்கிறேன் என சொன்னேன்.//

நீங்க அந்த மாமவ கூப்பிட்ட முறை எனக்கும் இன்னும் நியாபகம் இருக்கு ...

//இங்கு சிங்கையில் மனைவி மற்றும் மகனோடு புத்தகக் கடைக்கு சென்றபோது என் மகன் மொத்தமாய் இருந்த ஒரு புத்தகத்தை எடுத்து உள்ளேயெல்லாம் பிரித்துப்பார்த்து இது வேண்டுமென சொல்ல, உடன் வாங்கினேன் விலை அதிகமென்றாலும்.அவன் படம் பார்க்க, நான் படிக்க. அது ஒரு காமிக்ஸ்.//

தந்தை எட்டு அடி பாஞ்சா புள்ளை பதினாறு அடி பாயும்....

பிரபாகர் said...

//
நாஞ்சில் பிரதாப் said...
காமிக்ஸ் எல்லாலின் பால்ய வயதிலும் தவிர்க்க முடியாத ஒன்று. நான் அதிகம் படித்தது ராணிகாமிக்ஸ...

ஏய் இந்தா வாங்கிக் கும்மாங்குத்து, டமார், டுமீல், பொறி கலங்கியது.... இந்தமாதிரி டயலாக்குகள் தான் சட்டுன்னு ஞாபகம் வருது... :))
//
நன்றி தம்பி.... இன்றைய சிறுசுகள் நிறைய இழக்கிறார்கள்...

//
சின்ன அம்மிணி said...
சின்ன வயதில இரும்புக்கை மாயாவியும், வேதாளமும் என்னோட விருப்பங்கள்
//
எனக்கும்தாங்க... நிறைய சொல்லல...

//
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
மாயாவி, ஜேம்ஸ் பாண்டு மறக்க முடியுமா
//
இது பற்றியெல்லாம் தனியாக ஒரு இடுகை எழுதலாமேன்னு விட்டுட்டேன்... எல்லாத்தையும் எழுதனும்...

பிரபாகர் said...

//
வானம்பாடிகள் said...
மாண்ட்ரேக், மாயாவி, வேதாளம் நம்மாளுங்க:)
//
நமக்கும்தாங்கயா...

//
T.V.ராதாகிருஷ்ணன் said...
Present Praba
//
நன்றிங்கய்யா...

//
செ.சரவணக்குமார் said...
நல்ல பகிர்வு பிரபா.
//
நன்றி நண்பா...

//
அக்பர் said...
காமிக்ஸ் இதன் தமிழ் சொல் என்ன?

காமிக்ஸ் என்பதே ஒரு பெயர்ச்சொல்லாக ஆகிவிட்டது என நினைக்கிறேன்.

பைதிவே நானும் அதிதீவிர காமிக்ஸ் ரசிகர் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.

நல்ல பதிவு.
//
படக்கதை நண்பா...(நன்றி அய்யா...)

//
மதுரை சரவணன் said...
நல்ல பகிர்வு. படிப்பு ஆர்வம் உங்கள் எழுத்தில் தெரிகிறது. பிச்சைப் புகினும் கற்கை நன்றே ...வாழ்த்துக்கள்
//
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க...

பிரபாகர் said...

//
Anonymous said...
இரத்தப்படலம்.. மறந்திடீங்களே... 4-5 முறை வாசித்திருப்பேன். மற்றது லக்கிலுக்... கொமிக்ஸ்சில் முதல் இரண்டு இடங்களும் இவைதான். சரிதானே?
//
ஆமாங்க, இதுபற்றியெல்லாம் பிறகு எழுதலாமென இருக்கிறேன்...

//
நல்லவன் கருப்பு... said...
//கூவி அழைத்து பேருந்தில் ஏற்றிக்கொண்டிருந்தார். மெதுவாய் அவரிடம் சென்றேன். முதன் முறையாய் அவரை ‘மாமா’ என்றழைக்க அவருக்கு பயங்கரமான சந்தோஷம். ’பிரபு என்ன இங்கே’ எனக்கேட்க ஊருக்குத்தான் செல்கிறேன் என சொன்னேன்.//

நீங்க அந்த மாமவ கூப்பிட்ட முறை எனக்கும் இன்னும் நியாபகம் இருக்கு ...

//இங்கு சிங்கையில் மனைவி மற்றும் மகனோடு புத்தகக் கடைக்கு சென்றபோது என் மகன் மொத்தமாய் இருந்த ஒரு புத்தகத்தை எடுத்து உள்ளேயெல்லாம் பிரித்துப்பார்த்து இது வேண்டுமென சொல்ல, உடன் வாங்கினேன் விலை அதிகமென்றாலும்.அவன் படம் பார்க்க, நான் படிக்க. அது ஒரு காமிக்ஸ்.//

தந்தை எட்டு அடி பாஞ்சா புள்ளை பதினாறு அடி பாயும்....
..
நன்றி கருப்பு...

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB