துணைக்கு வாரியளா?...

|

தலையில் கட்டுடன் பேருந்துக்காக காத்திருக்கும் வேடியப்பனைப் பார்த்து எவருக்கும் அனுதாபமோ, பரிதாபமோ வரவில்லை. ஏனெனில் வேடியப்பன் கொஞ்சமல்ல..., நிறையவே  வித்தியாசமான பேர்வழி.

அவரைப் பற்றி நினைத்தாலோ, கேட்டாலோ அல்லது பார்த்தாலோ உங்களின் உள்ளத்தினுள்ளே ஏதோ ஒன்று பாய்ந்து சுறுசுறுப்பாக்கிவிடும். நம்பவில்லையா? இரு நாட்களுக்கு முன்  நடந்ததக் கேளுங்கள், அப்புறம் கண்டிப்பாய் நம்புவீர்கள். அதற்கு முன் அவரைப்பற்றிய சிறு அறிமுகம்.

ஒடிசலான சிவந்த தேகம், மெலிதாய் இருந்தாலும் வலுவான உடம்பு. சரக்கடித்தே பார்த்து பழக்கப்பட்டுவிட்டதால் சும்மாயிருக்கும்போதும் போதையிருக்கிறார்போல் தோன்றும் தெய்வீகக் களை பொருந்திய முகம். அதில் கொஞ்சமும் பொருந்தாத முரட்டு மீசை. புகைப்பதால் கருத்த காவியேறிய உதடுகள், பற்கள். மனைவி, பதினைந்து, பதினேழில் இரு மகன்கள். ஒருவன் பத்தாவது, மற்றவன் படிப்பு ஏறாததால் காட்டு வேலைக்கு அப்பாவுடன் துணையாய். இருக்கும் நிலத்தில் விவசாயம், மற்றும் கூலி வேலைக்கு செல்லுதல் என அவரது சம்பாத்தியம்.

அன்று காலை காட்டுக்கு சென்று வந்தவர் எந்த மரத்தின் வழியாய் வந்தாரோ தெரியவில்லை, ஞானம் வந்தார்போல் நம்பவே முடியாத ஒரு விஷயத்தை அவரது குடும்பத்தாருக்கு சொன்னார். ஆம், இனிமேல் அவர் குடிக்கவேப் போவதில்லையாம். சொன்ன ஜோரில் வெளியிலிருந்த தொட்டியில் தண்ணீரில் தலைக்கு குளித்தவர், குடும்பத்தையே குளிக்கவைத்து கோவிலுக்கு கூட்டிச் சென்றார்.

இனிமேல் குடிப்பதில்லை என சத்தியம் செய்ததோடு மட்டுமல்லாமல் ஒரு புதிய வேண்டுதலையும் சேர்த்துக்கொண்டார். அது, அவரது கிரமத்தைச் சுற்றியிருக்கும் மற்ற கோவில்களுக்கும் ஐம்பது ரூபாய் வீதம் உண்டியலில் போட்டு வேண்டிக்கொள்வது என்பதுதான்.

'கோவில் செல்லும் வாரம்' என சொல்லலாம்போல் ஒரு வாரம் அவரது குடும்பத்தார் எல்லோரும் பக்தி மயமாய் செல்ல, பார்த்த எல்லோரும் ஆச்சர்யப்பட்டு, சந்தோஷித்து கொஞ்சம் பயப்படும் செய்தார்கள். ஏன் என கடைசியில் பார்க்கத்தானே போகிறோம்.

கடைசியாய் குலதெய்வம் கோவிலுக்கு ஒரு வாளிப்பான சேவலுடன் எல்லோரும் சென்று பலிகொடுத்து, சாமி கும்பிட்டு விட்டு சந்தோஷமாய் வீட்டுக்கு வந்தார்கள். மறுபடியும் இரவு கறி சாப்பிட்டும்போது எப்போதும் சாப்பிடும் சரக்கு நினைவுக்கு வர, ஊர் மக்களுக்கே வழிகாட்டியாயிருக்கும் அந்த டாஸ்மாக்குக்கு சென்று வழக்கம்போல்.

சரக்கடித்துவிட்டு தலையில் லுங்கியைக் கட்டிக் கொண்டு கையில் மீதச் சரக்கொடு, டிராயரோடு வர, 'ஆரம்பிச்சிட்டான்யா, ஆரம்பிச்சிட்டான்' என எல்லோரும் நினைக்கும் வண்ணம் சப்தமாய் பாடி, அர்ச்சித்துக்கொண்டு வீட்டுக்கு வந்தார்.

அவரது மனைவி, 'சீ நீயெல்லாம் ஒரு மனுசன், உனக்கெல்லாம் மீசை' என சொல்லவும் கையிலிருந்த பாட்டிலின் மீதியைக் வாயிற்குள் கவிழ்க்க சுர்ரென சரக்கோடு கோபமும் தலைக்கு விர்ரென ஏறியது.

மனைவியை வழக்கம்போல் அடிக்க ஓடிவர, கருமமே கண்ணாய் குனிந்து முகத்தில் படாமல் அடிவாங்கும் மனைவி அன்று முதன் முறையாய் அவனது கையை தடுத்து செவிளில் பளீரென ஒரு அறை விட்டாள். அந்த அதிர்ச்சி போதாதென,பள்ளி செல்லும் மகன் கையை ஓங்கிக்கொண்டு அடிக்க வந்தான்.

'ஆஹா, குடும்பமே எனக்கு எதிரா ஆயிடுச்சா!.... நான் சிங்கம்ல... என்ன யாரும் ஒண்ணும் பண்ண முடியாது' என சொல்லி மகனைப் பார்த்து உன் கையால் அடிவாங்கினா எனக்கு மரியாதையில்லை எனச் சொல்லி இன்னும் அதிக கோபத்துடன் அருகில் இருந்த குழவிக்கல்லை எடுத்து அவரே தன் தலையில் போட்டுக்கொள்ள, தலையிலிருந்து பீறிட்டுக் கொண்டு ரத்தம்.

அதன் பிறகு யாரையும் பக்கத்தில் வருவதற்கோ அல்லது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கோ அனுமதிக்கவில்லை. கதவைப் பூட்டிக்கொண்டு உள்ளிருப்பு போராட்டம் என்கின்ற பெயரில் இரண்டு நாட்களுக்கு வெளியிலும் வரவில்லை, உள்ளேயும் விடவில்லை.

இப்போது தலையில் கட்டுப் போட்டுக்கொண்டு கோபித்துக்கொண்டு சென்ற மனைவி மகன்களை அழைத்துக் கொண்டு வர கிளம்பிக் கொண்டிருக்கிறார். துணைக்கு ஆள் வேண்டுமாம், அவரை நம்பிப் போகிறீர்களா?

10 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

Unknown said...

நான் போறேன் :-))

sathishsangkavi.blogspot.com said...

நானு...

VELU.G said...

தல நீங்கதானே பக்கத்தில இருக்கறீங்க நீங்களே ஒரு நட போயிட்டு வந்திடுங்க

settaikkaran said...

//சும்மாயிருக்கும்போதும் போதையிருக்கிறார்போல் தோன்றும் தெய்வீகக் களை பொருந்திய முகம்.//

பக்தியோட பார்த்தா அப்படித்தான் தெரியுமோ?

settaikkaran said...

//சொன்ன ஜோரில் வெளியிலிருந்த தொட்டியில் தண்ணீரில் தலைக்கு குளித்தவர், குடும்பத்தையே குளிக்கவைத்து கோவிலுக்கு கூட்டிச் சென்றார்.//

இது பரவாயில்லையே! நிறைய பேரு குடிக்கிறதுனாலே அவங்க குடும்பத்துலே தலைமுழுகுவாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன். இங்கே குடியை நிறுத்த தலைமுழுகினாங்களா? பலே...!

settaikkaran said...

//அது, அவரது கிரமத்தைச் சுற்றியிருக்கும் மற்ற கோவில்களுக்கும் ஐம்பது ரூபாய் வீதம் உண்டியலில் போட்டு வேண்டிக்கொள்வது என்பதுதான்.//

சரிதான், கிராமத்தைச் சுத்தி டாஸ்மாக் டாஸ்மாக்கா அலைஞ்சாரில்லே ஒரு காலத்துலே...!

settaikkaran said...

//அருகில் இருந்த குழவிக்கல்லை எடுத்து அவரே தன் தலையில் போட்டுக்கொள்ள, தலையிலிருந்து பீறிட்டுக் கொண்டு ரத்தம்.//

அடாடா!

settaikkaran said...

//துணைக்கு ஆள் வேண்டுமாம், அவரை நம்பிப் போகிறீர்களா?//

உங்க ஊரு எதுன்னு சொன்னீங்க, தெடாவூரா? சாமி, அந்த வேடியப்பனை நாடுகடத்துற வரைக்கும் எட்டிக்கூட பார்க்க மாட்டோம். சிங்கமில்லே....?

வை.கோபாலகிருஷ்ணன் said...

நல்ல காமெடியாகவே இருக்கு.

பெருங்’குடி’மக்கள் எல்லோருமே இப்படித்தான் இருப்பார்களோ ?

நல்ல பதிவு தான். பாராட்டுக்கள்.

நிலாமதி said...

குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சுங்க.....நான் வரல்லையப்பா ...என்னங்க சரக்கு சுர் என்று ஏற கோபம் விர் என்னு வந்ததா?


நல்லாயிருக்கு.

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB