நண்பேன்டா...

|

இப்போல்லாம் நீங்க வடிவேல் உதை வாங்கறத நிறைய காமெடியில பாத்திருப்பீங்க, ரசிச்சுகிட்டிருப்பீங்க. நாமெல்லாம் தொன்னூத்தி ரெண்டுலேயே அனுபவத்துல பாத்தாச்சு.

பி.எஸ்.சி. கம்ப்யூட்டர் சைன்ஸ்ல கடைசி செமெஸ்டர், மெயின் எக்ஸாம் எல்லாம் முடிஞ்சுடுச்சி. நல்லா படிக்கிற ஆல் பாஸ் ஜீனியஸ்லாம் எஸ்கேப் ஆக அரியர் இருந்த நாங்க ஒரு பதினைஞ்சு பேர் மட்டும் ரூமிலே, ஹாஸ்டல்லே தங்கி மேத்ஸ் அரியர முடிச்சோம்.

ஹெச்.ஓ.டி நல்லா ஹெல்ப் பண்ண என் பேப்பர் எல்லாருக்கும் சர்குலேட் ஆக, பாஸ் மார்க்குக்கு மேலேயே எழுதினதால மெயின் பேப்பர் நெட்வொர்க் கண்டத்தையும் மறந்து சந்தோஷமா இருந்தானுங்க. (நெட்வொர்க் பேப்பருக்கு நடந்த கூத்த தனியா எழுதறேன்.)

புல் தண்ணி, சந்தோஷம். வழக்கம்போல நான் ஒதுங்கியிருக்க, ஸ்னாக்ஸாவது சாப்பிடுடான்னு கம்ப்பல் பண்ணி, நிறையா வாங்கி, பெப்சி நாலஞ்சி பாட்டலோட கொடுத்தானுங்க...

சாயங்காலமா எல்லாரும் போதையையும் மீறி பேயடிச்ச மாதிரி இருக்க, என்னடான்னு கேட்டுட்டு நானும் ஆடிப் போயிட்டேன். கூட படிச்ச, அந்த ஊர்லயே பெரிய வி.ஐ.பி.யோட பொண்ணு ஓடிபோயிடுச்சின்னானுங்க.

எல்லோரும் டக்குனு ராசுவைத்தான் சந்தேகப்பட்டோம். ஏன்னா அவன்தான் அந்த பொண்ணுகிட்ட கடலை போட்டுகிட்டே இருப்பான். கொஞ்ச நேரத்துல அவனே ரூமுக்கு வந்ததுமில்லாம ஆளு யாருன்னு சொன்னவுடன் அதிர்ந்துட்டோம்.

வேற குரூப் பையன் ஒருத்தன் தள்ளிகிட்டு போயிட்டாங்கற தகவல நம்பவே முடியல. ஏன்னா, அவங்க ரெண்டு பேரும் சந்திச்சு பேசினத யாரும் கண்ணால கூட பாத்ததில்ல.

காரணம், லன்ச் டைமுல மட்டும் தான் அவங்க கிளாஸ் ரூமிலேயே பாத்து பேசி டெவலப் பண்ணியிருக்காங்க, கூட படிச்ச மத்த ரெண்டு பொண்ணுங்க உதவியோட. வெளிய வேற எங்கேயும் அவங்க பாத்துகிட்டது கிடையாது.

நாங்க யாரும் அங்க இருக்க மாட்டோம், ஹாஸ்டல், ரூமுன்னு போயிட்டு ஒன்னே முக்காலுக்கு மேல தான் வருவோம். லவ்வுனதெல்லாம் ஒன்னுல இருந்து ஒன்றரை வரைக்கும்.

சரி விஷயத்துக்கு வருவோம். ராசு பீதியை கிளப்பினான். 'மாப்ளே எல்லாரும் வெறியோட தேடிகிட்டு இருக்காங்க, நாம மாட்டினா ஒழிஞ்சோம். பிரபா மாதிரி ஆளுங்களுக்கெல்லாம் பயமில்ல, கிளாஸ் மேட்டான்னு கூட தெரியாது. ஆனா நாம தான் எதுக்கெடுத்தாலும் மொத ஆளா போயி பாப்புலரா இருக்கோம், பாத்தா பின்னிடுவானுங்க' ன்னான்.

எல்லாருக்கும் உதற ஆரம்பிச்சிடுச்சி எங்க ரெண்டு மூனு பேரை தவிர. 'சரி எல்லோரும் ஒன்னா போவோம், எது வந்தாலும் பாத்துடுவோம்' னு படையா கிளம்பினோம் ராத்திரி ஏழரைக்கு மேல.

பஸ் ஸ்டான்ட் போற வரைக்கும் பிரச்சினை இல்ல. எல்லாரும் டீ குடிச்சோம். லோக்கல் பசங்க நிறைய பேரு கூட இருந்ததால ரொம்ப தெம்பா இருந்தோம்.

ஆத்தூர் போற பஸ் ஸ்டான்ட விட்டு வெளிய வர, எல்லாரும் வழியனுப்ப ஒவ்வொருத்தரா மூவ் ஆகற பஸ்ஸில ஒவ்வொருத்தரா வரிசையாய் ஏற ஆரம்பிச்சோம்.

அப்போ ஒருத்தன் பஸ்ஸில ஏறிகிட்டிடுந்த ரமேஷோட சட்டையை பிடிச்சி கீழ இழுத்தான். தடுமாறி கீழ இறங்கி முறைச்சி, 'என்ன விஷயம் ஏன் இழுக்கிற' ன்னான்.

அந்த பொண்ணு பேரை சொல்லி அதோட 'கிளாஸ் மேட்டுதானே' ங்கவும் ரமேஷ் தலையாட்ட,

'வாங்க சார், உங்களுக்காகத்தான் காத்திருக்கோம்' னு சொல்லி இழுத்துகிட்டு போகவும், ஏதோ பண்ண போறாங்கன்னுட்டு ஆட்டுகுட்டி மாதிரி நானும் ஏதோ துணிச்சலா கூடவே போனேன்.

பஸ்ஸு சல்லுனு போயிடுச்சி. பஸ் ஸ்டன்ட்ல நின்னுட்டிருந்த பசங்க எல்லாம் எஸ்கேப். அவனுங்க ஆளுங்க ரெண்டு மூனு பேரு சேர்ந்துட்டானுங்க.

'இவன் யாருடா கூடவே வர்ரான்' ன்னு ஒருத்தன் என்ன பாத்து கேட்கவும், எல்லோரும் கூடவே வந்துகிட்டிருந்த என்னை அப்போதான் பாத்தாங்க.

'நான் ரமேஷோட பிரண்டு' ன்னேன். 'அப்படியா, வாங்க சார்' னுட்டு பின்னால இருந்த மூத்திர சந்துக்கு கூட்டிட்டு போனாங்க.

அந்த பொண்ணோட தம்பி கொல வெறியோட இருந்தான். எல்லாரும் சேர்ந்து மாத்த ஆரம்பிச்சுட்டானுங்க. ரமேஷுக்கு நாலுன்னா எனக்கு ஒன்னு விழுந்துச்சி.

என்ன அடிக்கும் போது 'எவன்டா இவன் புதுசா இருக்கான்' னு கேக்க, 'அவரோட ஃபிரண்டாம்' னு சொல்ல, 'அப்பா சரின்னு வாங்கிக்கட்டும்' னு வஞ்சனையில்லாம குடுத்தானுங்க...

அவனோட பூணூல பிச்சிட்டானுங்க. கண்ணமெல்லாம் உப்பிடுச்சி. எனக்கும் அப்பப்போ சட்டு சட்டுனு அடி விழுந்துகிட்டிருந்துச்சி. அப்போ அங்க ஒரு போலீஸ் வர, அப்பாட தப்பிச்சோம்னு நினைக்க,

'டேய் பப்ளிக்ல ஏண்ட ராவுடி பண்றிங்க, தனியா கூட்டிட்டு போயி கவனிக்க வேண்டியதுதானே' ன்னு ஐடியா குடுத்திட்டு கண்டுக்காம போயிட்டாரு.

உயிர் பயம் ஆரம்பிச்சுடுச்சி. போட்டிருந்த செருப்பு, கொண்டு போன பேக் எங்க போச்சுன்னே தெரியல. வாயெல்லாம் உப்பு கரிக்க ஆரம்பிச்சுடுச்சி.

'சரி சரி இங்க போதும், ரூமுக்கு கூட்டிட்டு போலாம்' னு ஒருத்தன் சொல்ல அங்கிருந்து எங்கள தள்ளிகிட்டு நகரும்போது புதுசா ஒரு ஆளு வந்தான், கடவுள் மாதிரி.

அவனுங்களை அடக்கி, கையை தரை வரைக்கும் பின் பக்கமா கொண்டு போயி சப்புனு ரமேஷ் கன்னத்துல ஒன்னு உட்டான். 'திரும்பி பாக்காம ஓடிப்போ' ன்னு சொல்லிட்டு, அடுத்து எனக்கும் அதே மாதிரி ஒன்னு விட்டான்.

காமிக்ஸ்ல மட்டுமே அடிச்சா நட்சத்திரம் பறக்கிறத பாத்த நான், நேர்ல லைவ்-ஆ பாத்தேன். திரும்பி பாக்காம அழுதுகிட்டே கந்தலா போயி, நின்னுகிட்டிருந்த ஆத்தூர் பஸ்ல போயி உட்காந்தோம்.

ரமேஷ் வெலவெலத்துப் போயி என்ன கட்டி புடிச்சி அழ ஆரம்பிச்சுட்டான். நிமிர்ந்து பாத்தா, ஓடிப்போன எல்லாரும் குரூப்பா திரும்பி வந்து கோரஸா 'மாப்ளே ஒன்னும் ஆகலல்ல' ன்னானுங்க, ஒன்னுமே தெரியாத மாதிரி.

அப்புறம் நடந்ததெல்லாம் இங்க முக்கியம் இல்ல. அந்த பொண்ணுகிட்ட இருந்து கல்யாணத்துக்கு அழைப்பு வந்திருந்தது. ஆட்டோகிராப் பாத்து அனுப்பி இருக்கும் போல.

கண்டு பிடிச்சி அவனை உதைச்சு (கண்டிப்பா எங்களவிட அதிகமா இருக்கும்னு நம்பறேன்) சொந்தத்துலேயே ஒரு தியாகியை புடிச்சி கல்யாணம்னு தெரிஞ்சிகிட்டேன்.

கல்யாணத்துக்கு போனேன், ரவி மட்டும் வந்திருந்தான். பசங்க வேற எவனும் வரல, பொண்ணுங்களும் வரல.

அந்த பொண்ணோட தம்பிதான் முன்னாலயே நின்னுகிட்டு எல்லாத்தையும் வரவேற்றுகிட்டு இருந்தான்.

என்ன 'வாங்கண்ணா' ன்னு பலமா வரவேற்பெல்லாம் குடுத்துட்டு, சட்டுனு கட்டிபுடிக்கிற மாதிரி காதுகிட்ட 'மன்னிச்சுடுங்கண்ணா, சாரி' ன்னான்.

அடி வாங்கினாலும், அந்த பொண்ணு மனசு எவ்வளவு கஷ்டப்படும்னு பாக்கலாம்னுதான் போனேன். நல்லா கலகலப்பா சிரிச்சிகிட்டு முன்ன விட சந்தோஷமா இருந்துச்சி.

சிறு மாற்றங்களுடன் கூடிய மீள் இடுகை...

4 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

sathishsangkavi.blogspot.com said...

எனக்கும் இது போல் நிறைய அனுபவம் இருக்கு பங்காளி...

நண்பனுக்காக அடிவாங்குவதே ஒரு சந்தோசமான விசயம்தான் நண்பன்டா....

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் பங்காளி...

Unknown said...

ஏற்கனவே பின்னூட்டுன மீல்சுக்கெல்லாம் பின்னூட்டம் போடுறது இல்லை 

மங்குனி அமைச்சர் said...

எல்லாரு வாழ்க்கையிலும் நடந்திருக்கும் போல ?

vasu balaji said...

தீபாவளி வாழ்த்துகள்.

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB