என் தம்பி திவாகர்...

|

தம்பியும் நானும்...
இந்த இடுகையினை வெளிவரும் கண்ணீர்த் துளிகளை அடக்க இயலாமல் திரையிட்டிருக்கும் விழிகளின் வழியே பார்த்து எழுத ஆரம்பிக்கிறேன். அன்பின் அன்பான என் தம்பி என்னை, எங்களையெல்லாம் தவிக்கவிட்டு செல்ல, எதிலும் வெறுமை; அதீதமான எரிச்சல்; அளவுகடந்த கோபம்; வாழ்வின் மீதே ஒரு பிடிப்பற்ற நிலை; ஏறக்குறைய எல்லாம் இழந்த நிலை.

ஆம், எனக்கு எல்லாமாய் இருந்து எனக்காகவே வாழ்ந்து, இன்று எண்ணற்ற பொறுப்புகளை, சுமையினை என்மேல் சுமத்திச் சென்றிருக்கிறான். அவனைப்பற்றி என் ஆயுளுக்கும் சொல்லலாம். எனக்கு தம்பியாய் மட்டுமன்றி தகப்பனாய், ஆசானாய், ஆருயிர் நண்பனாய் இருந்திருக்கிறான். என்னைப் பற்றி முழுதும் தெரிந்த ஒருவன் அவன்தான். எல்லா விஷயங்களையும் பேசுவோம். வயதுக்கு மீறிய பக்குவம் அவனிடத்தில் இருக்கும். அவன் சொல்லி கேளாமல் செய்த எல்லா விஷயங்களும் எனக்கு நன்றாக அமைந்தது இல்லை.

எனக்குத் தெரிந்த, அறிமுகமான வலையுலக நட்புக்கள் அவனுக்கும் தெரியும். வானம்பாடிகள் அய்யாவிடம் மட்டும் பேசியிருக்கிறான். மனம் சஞ்சலப்படும் நேரத்தில் அய்யாவிடம் பேசுண்ணா என அறிவுறுத்துவான்.

பாசம் என்றால் அவன்தான். ஒரு தலைவலி என்று சொல்லிவிட்டால் அவன் சரியாகும்வரை விசாரிப்பதிலேயே தலைவலி பயந்து பறந்து சென்றுவிடும். எல்லோரிடமும் அவன் காட்டும் அக்கறை அளவுக்கு அதிகமாக போதுமடா என சொல்லுமளவிற்கு இருக்கும்.

கிரிக்கெட்டில் அவனுக்கு நிறைய ஈடுபாடு. அருமையாக விளையாடி எல்லா ஷாட்டுக்களையும் அழகாக விளையாடுவான். கீப்பிங், ஃபீல்டிங் என எல்லாவற்றிலும் கலக்குவான். சச்சின் என்றால் என்னைப்போலவே அவனுக்கும் உயிர். நான் சுமாராக விளையாடுவேன். டர்பன் கிரிக்கெட் கிளப் என்பது அவனது அணியில் பெயர். என்னை விளையாட சேர்த்துக்கொள்ள மாட்டான். 'வேணாம்னா, சரியா விளையாடலைன்னா திட்டுவானுங்க, என்னால தாங்கிக்க முடியாது' என சொல்லுவான்.

இடுகைகளில் வரும் பெரும்பாலான விஷயங்கள் அவனால் சொல்லப்பட்டதாகத்தான் இருக்கும். முதல் ஆளாய் அவனிடம் வெளியானவுடன் படித்துக்காட்டுவேன், நிறைய சந்தோஷப்பட்டு இன்னும் நிறைய எழுத ஊக்குவிப்பான்.

என்னைப்பற்றி எவரேனும் குறை சொன்னால் அவனால் தாங்கிக்கொள்ளவே முடியாது. அவர்களோடு பேசுவதை நிறுத்திவிடுவான். எனது நண்பர்களுக்கெல்லாம் அவனை நன்றாகத் தெரியும், அவர்களிடத்தில் என்னைப்பற்றி ஆர்வமாய் விசாரிப்பான்.

ஊருக்கு வருகிறேன் எனத்தெரிந்தால் எனக்கு என்ன பிடிக்குமோ அதையெல்லாம் வாங்கி வைத்திருப்பான். தினம் ஒரு ஃப்ரஷ் ஜூஸ் செய்து தருவான். சமையலிலும் கலக்குவான். அவனது இரு சக்கர வாகனத்தை சர்வீஸ் செய்து வைத்திருப்பான். ஐம்பதுக்கு மேல் போகாதேன்னா என அறிவுறுத்துவான்.

மாத நாவல்களை மட்டுமே படித்துவந்தவன் கடந்த ஒரு வருடங்களாக நூலகத்தில் இருக்கும் புத்தகங்கள் நிறைய எடுத்துவந்து படித்திக்கொண்டிருந்தான். என்ன இதெல்லாம் படிக்கிறாயா என வியந்து கேட்டதற்கு ஆமென்று சொன்னான். இறுதிக்காலத்தில் நிறைய படித்துக்கொண்டிருந்தான்.

திவா, என்னால் எழுத இயலவில்லையடா தம்பி! என்னுள் முழுமையாய் வியாபித்திருக்கிறாய். நீ விட்டு சென்ற பணிகளைத் தொடருவேன், உனது கனவுகளை நனவாக்குவேன் என்றெல்லாம் சொல்வதற்கு என்னோடு இரு, என்னைப் பார்த்துக்கொள்.

(தகவல் அறிந்து இடுகைகள் மூலம் அஞ்சலி செலுத்தியும், மடல், தொலைபேசி வழியாக ஆறுதல் சொல்லியும், எனக்கு ஆறுதலாய் இருக்கும் ஏனைய வலையுக நண்பர்களுக்கு என் கண்கள் பணிக்கும் நன்றி)

53 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

ஈரோடு கதிர் said...

உங்கள் தம்பி உங்களோடு, உங்களுக்குள் தானே பிரபா இருக்கார்...

பிரபா உங்கள் உறுதி / திடம் மிக அவசியம் இப்போது

இனிவரும் காலத்தில் உங்களுக்கு நிம்மதி பூக்கட்டும் பிரபா

வால்பையன் said...

:)

விசயம் அறிந்து மிகவும் வருத்தபட்டேன் சகோதரா.

க.பாலாசி said...

படிக்கப்படிக்க எங்கள் கண்களிலும் கண்ணீர் வருகிறது.... உங்களுடனே இருப்பார் நம்புங்கள்...

vasu balaji said...

ம்ம். நெஞ்சில் சுமந்து மீண்டு வாருங்கள் பிரபா.

கலகலப்ரியா said...

வாங்க அண்ணா... என்னிடம் வார்த்தைகளில்லை..

சென்ஷி said...

என்ன சொல்வதென்று தெரியவில்லை பிரபா.. :(

Prathap Kumar S. said...

படிக்கும்போதே உங்களின் உங்களின் இழப்பு தெரிகிறது. கடவுள் உங்களுக்கு அமைதி தரட்டும்.

sathishsangkavi.blogspot.com said...

இன்று தான் அறிந்தேன்....

என்னுடன் பேசும் போது எல்லாம் தம்பியைப்பற்றி சொல்லி இருக்கறீர்கள்....

இப்பதிவை படிக்க படிக்க கண்ணீர்....

இதற்கு மேல் என்ன சொல்வது....

கலங்காதே நண்பா தம்பி எப்போதும் உன் மனதில்....

Chitra said...

Our prayers are for you and for your family. May the Lord rest his soul in peace!

Pradeep said...

Very touching...be bold....vaalgai vaalvatharge.........

அகல்விளக்கு said...

உறுதியோடு இருங்கள் அண்ணா...

அவர் இன்னும் உங்களுள்தான் இருக்கிறார்...

மனதிடத்தை விடாதீர்கள். அவர் கனவுகளை நாம் நனவாக்குவோம்...

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

என்ன சொல்வதென்றே தெரியவில்லை பிரபாகர். பொறுப்புகள் அதிகரித்துள்ள வேளையில் உறுதி/அமைதி/ நிதானம் மிகவும் தேவை..

Ramesh said...

வலிகளுக்கு ஆறுதல் மட்டும் உங்களுக்கு மருந்து எங்களிடமிருந்து. ஆனாலும் பாச விதையின் வேர்களின் ஆழம் தெரியும் உங்களில் தம்பியும் தம்பியில் நீங்களுமாய்...
வாழ்க்கையின் சில அத்தியாயங்களை படிக்கவே உலகை நீங்கியிருக்கான் உங்களை அல்ல பிரபா. வாழ்க்கையின் துடிப்புக்களில் தம்பியின் இரத்தம் உங்களுக்குள் எப்போதும் இருக்கும்.
வாழ்க்கை வாழ்வதற்கே மீண்டு வருக வாழ்க்கை வாழ்க எங்கள் உறவுகள் எப்போதும் துணை உங்களுக்கு. என்றும் தொடர்பிலிருங்கள். எப்போதும் உங்களோடு தம்பி றமேஸ்

ஜெயந்தி said...

ஆற்ற முடியா சோகம்தான். காலம்தான் ஆற்ற வேண்டும். எங்களால் ஆறுதல் மட்டுமே சொல்ல முடியும்.

movithan said...

தலைப்பைப் பார்த்தவுடனேயே எனக்கு நெஞ்சு கனக்கத்தொடங்கியது.
காரணம் என் தம்பி என்னைவிட்டுப் பறிக்கப்பட்டது 5/5/2010.அவனது ஓராண்டுக்கு அஞ்சலி கவிதை போடும் போது என் இதயம் அழுத வலி உனக்கும் வலித்திருக்கும் நண்பா.

ஆயிரம் வார்த்தை சொன்னாலும் அது உன் இழப்பிற்கு ஈடாகாது.

அழகான பூக்கள் விரைவில் உதிர்ந்து விடும் போல...

அவனுக்கு நாம் செய்யும் கைம்மாறு அவனது கடமைகளையும் நாம் தாங்குவதே.

மனதை திடமாக வைத்திருங்கள்.
:-(

பனித்துளி சங்கர் said...

////மாத நாவல்களை மட்டுமே படித்துவந்தவன் கடந்த ஒரு வருடங்களாக நூலகத்தில் இருக்கும் புத்தகங்கள் நிறைய எடுத்துவந்து படித்திக்கொண்டிருந்தான். என்ன இதெல்லாம் படிக்கிறாயா என வியந்து கேட்டதற்கு ஆமென்று சொன்னான். இறுதிக்காலத்தில் நிறைய படித்துக்கொண்டிருந்தான்.
//////


இந்த வரிகளை வாசிக்கும்பொழுது என் கண்களில் கண்ணீர் சிந்திகொண்டு இருக்கிறது நண்பரே . என்னால் பதிவை முழுவதும் வாசிக்க இயலவில்லை . என்னை மன்னித்துவிடுங்கள் .

க ரா said...

மீண்டு வாருங்கள் அண்ணா.

ILA (a) இளா said...

திடமாக இருங்கள், தமயன் கூடவே இருப்பார். கண்கள் பனிக்கிறது நண்பரே!

ஹேமா said...

ஆறுதல் சொல்ல முடியா நிலைமையில்தான் நாங்களும் பிரபா.சமாதானப் படுங்கள்.
உங்களுக்கான கடமைகளைத் தந்திருக்க்கிறார்.அதில் அவரும் இருப்பார் உங்களோடு.

நிலாமதி said...

ஆறுதல் சொல்ல வார்த்தைகளை தேடுகிறேன்.வ்ரவில்லை.அவர் விட்டு சென்ற,பணிகளை முடிப்பது உங்களுக்கு அமைதி தரும்.அவரது ஆன்ம சாந்திக்கு என் பிராத்தனைகள்.

Menaga Sathia said...

வருத்தமாக இருக்கு..உங்கள் தம்பி உங்க கூடவே இருப்பார் சகோதரரே!!

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

கடந்தவை கடந்தவையாகவே இருக்கட்டும்...


கடப்பவை நல்லதாக நடக்கட்டும்..

கோவி.கண்ணன் said...

ஆறுதல் சொல்ல சொற்கள் இல்லை.
:(

திருவாரூர் சரவணா said...

சில நாட்கள், மாதங்கள், வேலை நிமித்தமாக பிரிவு என்றாலே என்னால் தாங்கிக்கொள்ள இயலவில்லை. நிரந்தரப் பிரிவு என்பது எவ்வளவு வலி தரும் என்று என்னால் உணர முடிகிறது. இந்த இடுகையைப் படிக்கும்போதே என் கண்கள் கலங்குவதுதான் இதற்கு சாட்சி. தைரியமாக இருங்கள் நண்பரே.

T.V.ராதாகிருஷ்ணன் said...

உங்களுடனே இருப்பார் தம்பி ...

Paleo God said...

:(

Unknown said...

என் ஆழ்ந்த அனுதாபங்கள், பிரிவினை தாங்கி கொள்ளும் சக்தி தர ஆண்டவனிடம் பிரார்த்திபோம்

kishore said...

ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை ... ஆனால் உங்கள் சோகத்தில் பங்கெடுக்கும் சகோதரனாய் என்றும்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை அண்ணா

செ.சரவணக்குமார் said...

என்ன சொல்வதென்றே தெரியவில்லை பிரபா. சிங்கையிலிருந்து என்னிடம் உரையாடியபோது உங்களைப் பற்றி முழுமையாகப் பேசினீர்கள்.. குடும்பம், தம்பி, தாள முடியாத சோகத்திலிருந்து மீண்டு வந்தது என எல்லாம்.

இந்த தீராத துன்பத்திலிருந்தும் நீங்கள் மீண்டு வர வேண்டும் பிரபா. தம்பியின் நினைவுகள் உங்களை வழிநடத்தட்டும்.

இந்த சமயத்தில் உங்கள் அருகில் இருந்து கை பற்ற முடியவில்லையே என்றும் இருக்கிறது.

மீண்டு வா சகோதரனே.

iniyavan said...

மனம் முழுவதும் வேதனையாக உள்ளது. கண்களில் என்னையறியாமல் நீர் வழிகிறது.

எப்படி ஆறுதல் சொல்ல?

தெரியவில்லை நண்பா?

Cable சங்கர் said...

சீக்கிரம் வெளிவாங்கண்ணே.. அதற்கு உங்கள் தம்பியும், கடவுளும் துணையிருப்பார்கள்.

Raju said...

ஆழ்ந்த இரங்கல்கள்.
இதுவும் கடந்து போகும்ண்ணே..வாங்க.

யுவகிருஷ்ணா said...

ஆழ்ந்த இரங்கல்கள் பிரபாகர்.

தம்பியுடையான் படைக்கு அஞ்சான். இனி நீங்கள் அஞ்சிதான் வாழ்ந்தாக வேண்டும் :-(

தெடாவூர் அன்பு said...

பிரியமிக்க அண்ணா..
என் மாணவர்களுக்கு வலையை அறிமுகப்படுத்தி அதில் சில முகவரிகளில் சென்று படியுங்கள் என சொன்ன போது என் மாணவி ஒருத்தி இப்பகுதியை காண்பித்து போனாள்.. அதன் பிறகு என்னால் வகுப்பைத் தொடர இயலவில்லை.. மனதைத் தேற்றிக் கொள்ளுங்கள் அண்ணா.. திவாகர் விட்டு சென்ற பொறுப்புகளை அவன் விரும்பியவாறு முடிக்க நல்ல மனவலிமை முதலில் வேண்டும்.. வலிமையாக்கிக் கொள்ளுங்கள்..

உண்மைத்தமிழன் said...

பிரபாகர்..

தம்பி திவாகருக்கு எனது அஞ்சலிகள்..! இனி என்றென்றும் அவர் உங்களுடன் இருப்பார்..!

இனி நீங்கள் எழுதும் ஒவ்வொரு பதிவையும் அவருக்காகவே எழுதுங்கள்..!

உங்கள் மன வலி குறையும்..!

Ravichandran Somu said...

My heartfelt condolences. I pray The God to give you and your family the strength to recover.

சிநேகிதன் அக்பர் said...

உங்கள் தம்பியின் நம்பிக்கை உங்களுடனே இருக்கிறது. இறைவன் இழந்த நிம்மதியை மீட்டு கொடுப்பானாக.

அருண் பிரசாத் said...

சமாதானம் சொல்ல வார்த்தைகள் இல்லை. மீண்டு வாருங்கள் தோழா.

ராஜ நடராஜன் said...

காலம் மாத்திரமே துயரங்களை தள்ளி வைக்கும்.மீண்டு வரும் வரை பதிவுகளுக்கு காத்திருக்கிறேன்.

ஜோ/Joe said...

பிராத்திக்கிறேன்.

Anonymous said...

இறைவன் தம்பியின் பிரிவை பொறுத்துக்கொள்ளும் மன வலிமையத்த என் ப்ரார்த்தனைகள்

Unknown said...

மரணம் நிச்சயம் எல்லோருக்கும் ஒருநாள் வந்தே தீரும் என்றாலும்.. வாழ வேண்டிய வயதில் ஒருவனை பறிகொடுப்பது உடன் இருந்த நம் ஆயுளுக்கும் வலிக்கும்.. இதற்கு எப்போதும் ஆறுதலே கிடையாது.. மிகுந்த சோகம் சூழும்போது நான் தனிமையில் அழுவேன்... ஏனென்றால் எனக்கும் இப்படி ஒரு இழப்பு உண்டு...

Unknown said...

மரணம் நிச்சயம் எல்லோருக்கும் ஒருநாள் வந்தே தீரும் என்றாலும்.. வாழ வேண்டிய வயதில் ஒருவனை பறிகொடுப்பது உடன் இருந்த நம் ஆயுளுக்கும் வலிக்கும்.. இதற்கு எப்போதும் ஆறுதலே கிடையாது.. மிகுந்த சோகம் சூழும்போது நான் தனிமையில் அழுவேன்... ஏனென்றால் எனக்கும் இப்படி ஒரு இழப்பு உண்டு...

பா.ராஜாராம் said...

ஆழ்ந்த இரங்கல் ப்ரபா.

எப்படி இந்த வலியில் பங்கெடுக்கிறது என தெரியல... :-(

ஆ.ஞானசேகரன் said...

பிரபா.. எப்படி அறுதல் சொல்வதென்று தெரியவில்லை...

மீண்டுவருவாய் என்று எண்ணுகின்றேன்

CS. Mohan Kumar said...

மிகுந்த வருத்தமாக உள்ளது. காலம் தான் உங்கள் துயரை குறைக்கும்.. நல்லவர்களில் பலர் ஏன் தான் அதிக நாள் வாழாமல் இறக்கிறார்களோ?

மங்குனி அமைச்சர் said...

ரொம்ப சாரி சார், இளம் பருவத்தின் இழப்பு மிகவும் வேதனை தரும் , இருந்தாலும் நினைவுகளுடன் meendeluvom

Punnakku Moottai said...

Prabha,

In the short period I know you, I could very well understand how much your brother meant to you.

Sad, but, we have more ahead. Keep going, he will assist you from above.

Muniappan Pakkangal said...

Joining you at this moment Prabahar.

நாகராஜன் said...

திவாகரின் பிரிவு தாங்க முடியாத ஒன்று பிரபாகர். மிகவும் தைரியமாக இருக்க வேண்டிய தருணம் இது... எல்லா வேதனைகளையும் காலம் ஆற்றும். அம்மா, அப்பா மற்றும் திவாகர் மனைவி, குழந்தைகள் அனைவருக்கும் தைரியம் கூறுங்கள்... ஆழ்ந்த இரங்கல்கள் பிரபாகர்.

எறும்பு said...

:((

yen anuthaapangal.

அழகு நிலவன் (Azahgu Nilavan) said...

அண்ணா,

எனது ஆழ்ந்த அனுதாபங்கள், உங்களுடனேயே தான் அவர் இருப்பார், தாங்கள் மனம் கலங்காமல் இருக்க வேண்டிய நேரம்....

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB