கிராமத்து நபர்களிடம் பேசும்போது பல விஷயங்கள் தானாய் நமக்குக் கிடைக்கும். அப்படித்தான் உறவினரின் திருமணத்திற்காக சென்றிருந்த போது எனது அத்தையின் மருமகனை சந்தித்தேன். அவரிடம் அதிகம் பேசியது கிடையாது, வயதில் மூத்தவர் என்பதால். மிகவும் ஆர்வமாய் பேச ஆரம்பித்தார்.
மெலிதான பயம் என்னுள் எழ அவரோடு சில பல விஷயங்களை விவாதிக்க ஆரம்பிக்க அவர் ஒரு தகவல் பெட்டகம் என்பதை அறிந்து சுவராஸ்யமானேன். அதைப் புரிந்த அவர் இன்னும் ஆர்வமாய் பேசுவதோடு மட்டுமல்லாமல் என்னை சோதிக்கவும் ஆரம்பித்துவிட்டார். அவர் கேட்ட இரண்டு கேள்விகளும் அதற்கு அவர் கொடுத்த விளக்கங்களும் தான் இந்த இடுகையில்.
’பெரிய பொறுப்பில் இருப்பவரையோ அல்லது பெரிய மனிதர்களையோ பார்க்கச்செல்லும்போது ஏன் எலுமிச்சம்பழத்தை தருகிறோம்’ என்று முதலாவதைக் கேட்க, முழித்ததைப் பார்த்து அவரே விளக்கம் சொல்ல ஆரம்பித்தார்.
‘ஏன் தருகிறோம் என்று நமக்கோ, எதற்கு வாங்கிக்கொள்கிறோம் என வாங்குபவருக்கோ, எல்லாம் சேகரித்து ஊறுகாய் போட எடுத்து செல்லும் காரியதரிசிக்கோ கண்டிப்பாய் தெரியாது. எலுமிச்சை மட்டும்தான் பிஞ்சாக இருந்தாலும் சரி, காயாக இருந்தாலும் சரி அல்லது பழமாக இருந்தாலும் சரி... ஒரே சுவையோடுதான் இருக்கும். அதன் சுவையில் மாற்றம் இல்லாதது போல பெரிய பொறுப்பில் இருந்தாலும், வசதி வாய்ப்புகள் நிறைய வந்தாலும் என்றும் மாறாமல் உங்கள் இயல்பான குணத்தோடு இருப்பீராக என்பதை உணர்த்தத்தான்’ என்றார்.
அதை அவர் சொன்ன பாங்கு மிகவும் அருமையாய் இருந்தது. இங்கு எழுத்தால் அந்த அளவிற்கு என்னால் சொல்ல முடியவில்லை என்பதே உண்மை. அடுத்த கேள்வியினை கொஞ்சம் இடைவெளி விட்டுக் கேட்டார். ‘ஏன் மாங்காய் மடையன் எனச் சொல்லுகிறோம்’ என்பதே அது. தெரியாமல் விழிக்க அவர் சொன்ன விளக்கம்,
‘ஒரு சிலர் காலையில் ஒரு பேச்சு, மதியம் ஒரு பேச்சு, ராத்திரி ஒரு பேச்சு என மாற்றி மாற்றி பேசுவார்கள். அப்படி பேசியவரா இப்படி பேசுகிறார் என கேட்பவர்களுக்கு வியப்பாய் இருக்கும். மாங்காய் பிஞ்சில் துவர்க்கும், காயில் புளிக்கும், பழமானதும் இனிக்கும். மூன்று நிலைகளில் மூன்று சுவைகளில் இருப்பது போல நேரத்துக்கு ஒரு பேச்சு பேசுபவர்களைத்தான் மாங்காய் மடையன் என சொல்லுகிறோம்’ என்று சொல்லி முடித்தார்.
அப்போது கோவில் விஷேடம் சம்மந்தமாய் அவரை ஒருவர் சந்திக்க வர என்னை ஒரு நிமிடம் இருக்கச் சொல்லி ‘என்னன்னா விஷயம்’ எனக்கேட்க,
’நீங்க சொன்ன மாதிரியே அய்யர சனிக்கிழம வரச்சொல்லி தகவல் சொல்லிட்டேன்’ என்று சொல்ல நம்மவருக்கு சுருக்கென கோபம் வந்தது.
‘ஞாயிற்றுக் கிழமை சாயந்திரம்னு தானே சொன்னேன்’ என அவர் மறுத்துச் சொல்ல அவர்களுக்கிடையே விவாதம் ஆரம்பமாக, நான் நைசாக நழுவினேன்.
10 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:
அட அது இல்ல பங்காளி. பந்தியில ஊறுகா போடாம உட்டுட்டிருப்பாங்க. அதுக்கு பொலம்பியிருப்பாரு எலுமிச்சை, மாங்கான்னு.:))
:))
மாங்காமடையன் என்பதற்கு இவ்வளவு உள்குத்து இருக்கா நண்பரே? :-))
நீண்ட இடைவெளியிடாமல், தொடர்ந்து எழுதுவதைப்பார்க்க மகிழ்ச்சியாய் இருக்கிறது.
என்ன நடக்குது இங்கே.
சிங்கை திரும்பியாச்சா?
நல்ல பதிவு... அர்த்தத்தோடு தான் நமது பெரியவர்கள் எல்லா காரியத்தையும் செய்து வந்திருக்கிறார்கள்... நாம் தான் புரிந்து கொள்ளாமலும், புரிந்து கொள்ள முயற்சி செய்யாமலும் இருக்கிறோம்...
‘ஒரு சிலர் காலையில் ஒரு பேச்சு, மதியம் ஒரு பேச்சு, ராத்திரி ஒரு பேச்சு என மாற்றி மாற்றி பேசுவார்கள். அப்படி பேசியவரா இப்படி பேசுகிறார் என கேட்பவர்களுக்கு வியப்பாய் இருக்கும். மாங்காய் பிஞ்சில் துவர்க்கும், காயில் புளிக்கும், பழமானதும் இனிக்கும். மூன்று நிலைகளில் மூன்று சுவைகளில் இருப்பது போல நேரத்துக்கு ஒரு பேச்சு பேசுபவர்களைத்தான் மாங்காய் மடையன் என சொல்லுகிறோம்’ என்று சொல்லி முடித்தார்.
...Oh! thats news to me.
பங்காளி...
எழுமிச்சையிலும், மாங்காயிலும் இவ்வளவு விசயம் இருக்கா?
Nice post.,
||விவாதம் ஆரம்பமாக||
பஞ்சாயத்த முடிச்சுட்டு வந்திருக்கலாம்ல!!!!
Post a Comment