சுந்தர பாண்டியன் - எனது பார்வை.

|

சினிமாவே வாழ்க்கை என இன்னும் அயராமல் போராடிக்கொண்டிருக்கும் என் ஆருயிர் நண்பன் வேலுவும் நானும் இரவு உணவுக்குப் பின் நிறைய பேசிக்கொண்டிருந்தோம். சுந்தர பாண்டியன் பற்றியும் நிறைய பேச்சில் இருக்க, ’விமர்சனம் எழுதுடா, ஏன் எழுத மாட்டேன் என்கிறாய் என்று அன்பாய் கடிந்தான். சரி, அது விஷயமாய் சில விஷயங்களை பகிர்ந்து கொள்ளலாமென என் மனதில் தோன்றியவைகள் இந்த இடுகையில் உங்களோடு.

ஆத்தூரில் பார்த்தேன். ’மனம் கொத்திப்பறவை’யை ஐந்தாறு பேர்களுடன் பார்த்து மனம் குதறிப்போன அனுபவத்தில் இருந்த நான், அரங்கு நிறையா விட்டாலும், பெருமளவு கூட்டத்தோடு கலகலப்பாய் பார்த்த போது நிறைவாயிருந்தது.

நிறைய விஷயங்கள் அதரப் பழசாயிருந்தாலும், அதையெல்லாம் நமது வாழ்வில் முன்னதாக கடந்துவந்த பாதைகளில் கண்ணுற்றிருந்தால் சிலீரென உள்ளுள் ஓர் உணர்வு தோன்றுமே; நினவுகளை அப்படியே பின்னோக்கி செலுத்த வைத்து சில நேரங்கள் நம்மை நிகழ்காலத்தில் இருந்து பிரித்து வைக்குமே; இதெல்லாம் சுந்தர பாண்டியனைப் பார்க்கும் போது அப்படியே நிகழ்ந்தது.

நிறைய இதைப் பற்றி எழுதிவிட்டார்கள். எல்லாம் படித்தாலும் எனக்குத் தோன்றியவைகள் வரிசையாய் கீழே பிடித்தவைகள், பிடிக்காதவைகள் என.

பிடிக்காதவைகள்

  • சிறு கத்தியினை வயிற்றில் வாங்கி அடுத்த நொடியே உயிரிழக்கும் வில்லன், இருதயத்தில் இருபது குண்டுகளை வாங்கியும் அரை மணி நேரம் வசனம் பேசும் கதாநாயகன் எனவெல்லாம் கண்டிருந்தாலும், இரும்புக் கம்பியால் வலுவாய் அடி, முதுகில் ஆழமாய் கத்தி என எல்லாம் நிகழ்ந்தும் வெகு சாதாரணமாய் எல்லோரையும் அடித்து வீழ்த்தும் கிளைமாக்ஸ் ஒரு திருஷ்டிப் பொட்டு.
  • மனதிற்கு ஒட்டாத பாடல்கள். உண்மையை சொல்லப்போனால் சொதப்பல் எனவே சொல்லலாம்.


  • சில இடங்களில் நிறையவே முதிர்ச்சியாய் தெரியும் சசிக்குமார்.


பிடித்தவைகள்

  • பளிச்சென பளீரென பல இடங்களில் வசனங்கள்.
  • அப்பா வேடங்களில் வரும் இருவரின் பாத்திரப்படைப்பு. 
  • நம்மை திரும்பப் பார்க்க வைத்த பெண்களில் ஒருத்தியை மறுபடியும் பார்ப்பதாய் கதாநாயகி.
  • மாமன் மகளாய் வரும், இன்னமும் நம்மை நிகழ்வில் கலாய்க்கும் அத்தை மகளை நினைவுபடுத்தும் பாத்திரப்படைப்பு. 
  • சூரியின் அடக்கி வாசித்த காமெடிப் பட்டாசு. நண்பர்களின் பாத்திரப் படைப்பு மற்றும் பேருந்து நிகழ்வுகள்.
  • பாஸிடிவான கிளைமாக்ஸ்.


மொத்தத்தில் சுந்தர பாண்டியன் படம் மிகவும் பிடித்திருந்தது, சற்றேறக்குறைய நம்முடைய வாழ்க்கையிலும் நடந்திருப்பதால்; கிளைமாக்ஸ் தவிர்த்து சிலபல பேருந்துக் காதல்களை, காதலர்களை என் வாழ்விலும் சந்தித்திருப்பதால். அதில் ஒன்றை பேருந்தில் காதல் என்னும் இரு வருடங்களுக்கு முன் எழுதிய இந்த இடுகையைப் படித்துப் பாருங்களேன், காரணம் விளங்கும்!....

1 Comentário:

திண்டுக்கல் தனபாலன் said...

படம் இன்னும் பார்க்கவில்லை நண்பரே... இனிமேல் தான்...

விரிவான விமர்சனத்திற்கு நன்றி...

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB