Showing posts with label மரண மொக்கை.... Show all posts
Showing posts with label மரண மொக்கை.... Show all posts

பஸ்சும் பதிலும்...

|

என் ஆசான் எனக்கு விட்ட பஸ்...

அன்பு நண்பா,
அரசியல் வாதிகளின் வெத்து வாக்குறுதியை இடுகையிலும் கவிதையிலும் நீ கிழித்தபோது படித்து ரசித்த கோடானு கோடி கேடியில் ஒருவன் நான். நாக்கு மாறினாலும் வாக்கு மாறாதவர் நீர் என நம்பினேன். உங்கள் ஊருக்கு வர இரண்டு வாரத்துக்கு முன்பு ‘ஆத்து நிறைய தண்ணி, அது நிறைய மீனு! புடிக்கப்போறேன்னு’ சொன்னப்ப கூட வெள்ளந்தியா மீன்புடிக்க தெரியுமான்னு கேட்டு ஃபோட்டோ புடிக்கப் போறேன்னு சொன்னப்ப பல்பு வாங்கின பக்கிப்பயதான். ஆத்தப்பாத்து நாளாச்சேன்னு ஆசையா வந்தப்ப ஊத்தைக்கூட காட்டாட்டியும் பரவால்ல. குருவிய பார்த்த சந்தோஷத்தோட ஊரு திரும்பலாம்னு இருந்தப்ப அருவியக் காட்டுறேன்னு அள்ளி விட்டீங்க. நம்ம்ம்ம்ம்ம்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பினோம். பாதி வழியில ஆம்னி பஸ் இல்லையாம்யா! அருவிபாட்டுக்கு அங்க இருக்கட்டும் நாம உருவிக்கிட்டு ஓடுறதப் பாக்காலாம்னீங்க. ‘ஏஏஏன்’னு ஒரு வார்த்தை கேட்டிருப்பேன்?
அட இதெல்லாம் உங்கள மீறின விஷயம் ஒத்துக்கிர்ரேன். வந்ததுல இருந்து வாராவாரம் ஃபோன் பண்ணி, இண்ணைக்கு வாரேன், அண்ணைக்கு வாரேன்னு வாக்குறுதி குடுக்குறீங்களே. எப்பங் சார் வரப்போறீங்க. வரப்ப அந்த 1 டி.பி. ஹார்ட் டிஸ்குண்ணாச்சும் வாக்கு தவறாம கொண்டு வருவீங்களா சார்

எனது பதில்...

ஆருயிர் ஆசான்,

உங்களின் ரசனைக்கு என் கேடி வணக்கம். நம்பிக்கையே வாழ்க்கை, வாழ்க்கை வாழ்வதற்கே எனும் கொள்கையில் ஊறித் திளைத்துள்ள எனக்கு உங்களின் பஸ் சிறு வியப்பளித்தது. உங்களின் அதீத சந்தேகங்களுக்கு விளக்கம் தரவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறேன்.

மீன் பிடிக்கப் போகிறேன் எனச் சொன்னது ஏரியில், ஆற்றிலல்ல. ஆறு வற்றியபின் தான் ஏரி வற்றும் என்பது உலக நியதி. எல்லாம் அறிந்த தங்களுக்கு இது விளங்காததன் மர்மம் எனக்கு மர்மமாயிருக்கிறது.

உங்களுக்கு மட்டுமல்ல, குருவிக்கும் ரொம்பவும் சந்தோஷம் போலிருக்கிறது, இன்னமும் கண்ணாடி வழியே எட்டிப்பார்த்து ஆசான் உங்களைத் தேடுகிறது, தலையை ஆட்டி ஏதோ சொல்லுகிறது. ஒருவேளை உங்களைப்பற்றிய விசாரிப்பாயும் இருக்கலாம்.

அருவிக்கு வருவோம், அதான் போகவே இல்லை என்கிறீரா? அருவி விஷயத்துக்கு என சொல்ல வந்தேன். அருவிக்கு கிளம்ப எத்தனிக்கும் தருணத்தில்தன் இந்த சிறிய இதயம் தாங்காத அளவிற்கு ஒரு பெரிய விஷயமாய் வந்தது, இரவு செல்லும் அல்ட்ரா டீலக்ஸ் பஸ் பராமரிப்புக்கு செல்கிறது, டிக்கெட் இல்லையென.

ட்ரெயினே உங்களுக்காகா இருந்தபோதும், பேருந்தில், அதுவும் அல்ட்ராவில் அழைத்துப்போகிறேன் என அல்டாப்பாய் சொல்லிவிட்டேன் அல்லவா? அருவியை விட ஆசான், கொடுத்த வாக்குறுதி (அருவியும் வாக்குறுதிதானே என இடை மறுத்துக் கேட்ப்பீர்கள் எனத் தெரியும். ஆனாலும் ஆசானின் உடல் நலத்தோது சம்மந்தப்பட்ட அல்ட்ராவே பிரதானம்) ஆகியபவற்றைக் கருதி முன்னதாய் கிளம்பினோம்.

உளுந்தூர்  பேட்டை வரை சாதாரணப் பேருந்தில் கடைசி சீட்டில் முதுகெலும்பை சுளுக்கெடுக்க வைக்கும் அளவிற்கு சிரமத்தோடு கூட்டிச் சென்றாலும் அதன் பின் குளிரில் நடுங்கி, தும்மலோடு காய்ச்சல் வருமளவிற்கு ஏசி பஸ்ஸில் கூட்டிச் சென்றதை மறந்துவிட்டேரே?

உங்களைப் பார்க்க வரவேண்டும் என்று ஒவ்வொரு நொடியும் தவிப்பில் இருக்கின்ற காரணத்தால் தோன்றும் தருணங்களிளெல்லாம் ஆர்வக் கோளாரில் வருகிறேன் எனச் சொல்லிவிடுகிறேன். இதில் புதைந்துள்ள என் அன்பை ஆராயாமல் இப்படி அப்பட்டமாய் அரசியல் வாதியாக்கிவிட்டீரே என எண்ணும்போது மனம் பதைக்கிறது, சிந்தை நடுங்குகிறது. இப்போது சொல்கிறேன் ஆசான் கண்டிப்பாய் நாளை வருகிறேன். இதைப் படித்து பார்க்கும்போதெல்லாம் எந்த அளவிற்கு வாக்குத் தவறாத உத்தமன் நான் என உங்களுக்கு விளங்கும். வரும்போது 1  டி.பி யோடு 350 ஜி.பி  யும் கொண்டுவருகிறேன் கூடுதலாய்.

அப்புறம் அடுத்தமுறை எலி பிடிப்பது, ஓனான் அடிப்பது, மணல் வீடு கட்டுவது எவ்வாறு என சொல்லியும் செய்தும் காட்ட ஏற்பாடு செய்கிறேன். இன்னும் பற்பல விஷயங்களை சொல்லாமல் செய்தும்  அசத்திக்காட்டுகிறேன்.

இப்படிக்கு,

என்றும் அன்புடன் உங்களால் சிஷ்யன்,
பிரவு என உங்களால் அன்போடும் அழைக்கப்படும்,

பிரபாகர்.

கல்மாடியோடு ஒரு (கற்பனை) சந்திப்பு

|

ஆசானின்  கதிரோட கலக்கல் கற்பனை(?)ப் பேட்டியைப் படித்துவிட்டு நம் பங்குக்கு ஒரு போட்டிக்காய் ஒரு பேட்டி இடுகை..

காமென்வெல்த் போட்டியில் தொடர்ந்து சொதப்பி வரும் கல்மாடியுடன் ஒரு சிறப்புப் பேட்டி(கற்பனை).

(நேயர்களுக்கு டெல்லியிலிருந்து இந்த பிராடு பீதாம்பரத்தின் அன்பு கலந்த வணக்கங்கள்!... இந்த நேரடி ஒளிபரப்பில், நமது 'நம்பினா நம்புங்க' டிவியின் பிரபலங்களோடு பேசலாம் நிகழ்ச்சியில், காமன்வெல்த் போட்டி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரான சுரேஷ் கல்மாடி அவர்களை சந்தித்து பேச இருக்கிறோம்)

பி.பீ : வணக்கம் கல்மாடி ஜீ, பிரபலங்களோடு பேசலாம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டமைக்கு எங்களது மனமார்ந்த நன்றி. பேட்டியை ஆரம்பிக்கலாமா?

கல்மாடி : தாராளமாய். ஒலிம்பிக் போட்டிகளை வேறு நடத்திக்கொண்டிருக்கிறோம், பரபரப்புக்கு இடையில் இங்கு வந்திருக்கிறேன்.

பி.பீ : என்னது ஒலிம்பிக்கா?

கல்மாடி : மன்னிக்கனும், குழப்பத்தில் சொல்லிவிட்டேன். தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள்.

பி.பீ : (நமக்கு இன்னிக்கு நேரமே சரியில்லை) சரி, காங்கிரஸை நடத்திச் செல்லும் அன்னை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

கல்மாடி : தற்பொழுதைய காங்கிரஸ் தலைவி இந்திரா காந்தி மிகவும் திறமையானவர்.அவரின் அரவணைப்பால்தான் கட்சி இன்று சிறப்பாய் இருக்கிறது.

பி.பீ : அருமை. உங்களின் கட்சியினைப் பற்றிய மேலும் சில விஷயங்களை எங்களின் நேயர்களுக்காக சொல்லுங்களேன்.

கல்மாடி : நான் சார்ந்திருக்கும் திராவிட இயக்கமான பா.ஜா.கா. மத சார்பற்றது. நாட்டு மக்களுக்காக, உழைப்பதற்காகவே உருவாக்கப்பட்டது. உலக சுதந்திரத்துக்காகப் பாடுபட்டது...

பி.பீ : சரி, காமன்வெல்த் சம்மந்தமாய் ஒரு கேள்வி. நீங்கள் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்து கட்டுமானம் சரியில்லாத்தால் கூரை இடிந்து பிழைத்துக்கொண்டாதாய் சரத்பவார் நக்கல் செய்திருக்கிறாரே, அது பற்றி உங்கள் கருத்து?

கல்மாடி : இது ஜனநாயக நாடு. எவர் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் பேசலாம். குறிப்பாய் எதிர் கட்சியினர் பேசுவதை நாம் பொருட்படுத்தக்கூடாது.

பி.பீ : எப்படி சார் இப்படியெல்லாம் தகவல்களை அள்ளி விடுகிறீர்கள்? சரி உங்களின் எதிர்காலத்திட்டங்கள் என்ன?

கல்மாடி : ராஜீவ் காந்தியை பிரதமராக்கனும். வர இருக்கிற எல்லா விளையாட்டுப் போட்டிகளுக்கும் நான் ஒருங்கிணைப்பாளராய் இருந்து, கலக்க வேண்டும்.

பி.பீ : கண்டிப்பாய், நாங்களெல்லாம் கலங்கித்தான் போயிருக்கிறோம் கல்மாடி ஜி... உங்களுக்கு எங்களின் நம்பினா நம்புங்க டிவியின் மனமார்ந்த நன்றி.

கல்மாடி : நானும் இதைப் பார்த்துக்கொண்டிருக்கும் ஸ்டார் ப்ளஸ் நேயர்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்..

(பீதாம்பரம் இதற்கு மேல் தாக்குப்பிடிக்க முடியாமல் ஸ்டுடியோவை விட்டு தலைதெறிக்க ஓடுகிறார்)

எந்திரன் பார்க்கனும்... - தொடர் பதிவு...

|

ஆருயிர் நண்பர் சேட்டை அன்போடு இந்த தொடர்பதிவுக்கு அழைத்ததற்காக அன்பு கலந்த வணக்கத்தோடு நன்றி சொல்லி, ராமருக்கு அனில் போல் (இதையும் ஆராய்ச்சி செய்து ராமர் வாழ்ந்ததாக சொல்லப்படும் காலத்தில் அனில் இல்லை என்று கூட யாராவது இடுகையிடலாம், அதற்கெல்லாம் நாம் பொறுப்பு இல்லைங்கோ!) எந்திரன் படத்துக்கு நாமும் ஒரு இடுகை இடலாமென எண்ணி இதோ களத்தில். (இந்த உதாரணம் சரியில்லையே என நினைத்தால்... சாரிங்க, ஒரு ஃப்ளோவில் எழுதிட்டேன்...)

அவர் ரொம்பவும் வித்தியாசமான ஆள், எதற்கெடுத்தாலும் சந்தேகப் படுவார். உதாரணமாய் வீட்டை பூட்டிவிட்டு போகும்போது நன்றாய் கை வலிக்க இழுத்து தொங்கி பார்த்துவிட்டுத்தான் போவார். தெரு முனைக்கு போனவுடன் பூட்டினோமா என சந்தேகம் வர, திரும்பவும் வந்து பார்த்துவிட்டு போவார்.பஸ்ஸில் ஏறியவுடன் சரியான பஸ்ஸில் தான் ஏறியிருக்கிறோமா என சந்தேகம் டிக்கெட் வாங்கும்வரை. அதன்பின் மறக்காமல் டிக்கெட் வாங்கிவிட்டு ஸ்டேஜ் வரும் வரை பாக்கெட்ல பத்திரமா இருக்கிறதா எனத் தொட்டு பார்த்துக்கொண்டே வருவார்.

அடுத்ததாய் ஒரு சின்ன விசயத்தை ரொம்ப பூதாகாரமாய் கற்பனை செய்வார். ஒரு வாழைப்பழத்தோல் கிடந்தால் அதில் ஒருவர் வழுக்கி விழுந்து அவரை மானசீகமாய் போட்டோவில் மாட்டும்வரை யோசித்து, கடைசியாய் அதை எடுத்து போடாமால் போவார்.

மொத்தத்தில் யாரையும் நம்ப மாட்டார், விதிவிலக்காய் குடும்ப டாக்டரை மட்டும். ஒரு முறை அவருக்கு காலையிலேயே தலைவலியாய் இருக்க, வாழ்க்கையில் அவர் நம்பும் ஒரே நபரான டாக்டரைப் பார்க்க போயிருந்தார். நன்றாக பரிசோதித்து ஒன்றுமில்லை ஓய்வு தான் தேவையென வலியுறுத்த, அவர் நம்புவதாய் இல்லை. கண்டிப்பாய் ஏதாவது மருந்து கொடுத்தே ஆகவேண்டும் என வற்புறுத்த, இல்லாத நோய்க்கு மருந்தா என டாக்டர் ஒரு மருந்து சீசாவில் தண்ணீரைப் பிடித்துக் கொடுத்து 'இது சக்தி வாய்ந்த மருந்து இதைக் குடிக்கும்போது குரங்கினை மட்டும் நினைக்கக் கூடாது' எனச் சொல்லிக் கொடுத்தார்.

சரி, இந்த கதைக்கும், இடுகை தலைப்புக்கும் ஏதாச்சும் சம்மந்தம் இருக்கிறதா? சத்தியமாய் இல்லை. அது மாதிரிதான் எந்திரன் படத்தைப்பற்றியும் சம்மந்த சம்மந்தமில்லாமல் பலரும் பலவாறு பார்க்காதே... அது இது என பயமுறுத்த நமக்குள் பார்த்தே ஆகவேண்டும் எனும் எண்ணம் எழுகிறது. அதனால் கண்டிப்பாய் எந்திரனை நான் பார்ப்பேன்.

அதுபோல், படம் எடுக்கிறார்கள், விளம்பரம் செய்கிறார்கள், நன்றாக இருந்தால் ஓடப்போகிறது, இல்லையென்றால் ஓ....டப்போகிறது. அதை விடுத்து அதற்கு இத்தனை வியாக்கியானங்களா? இது போன்ற குதர்க்கங்களுக்காகவும் கண்டிப்பாய் நான் எந்திரனை நான் பார்ப்பேன்!

கடைசியாய் ரஜினியை ரொம்ப பிடிக்கும் என்பதாலும் நான் எந்திரனைக் கண்டிப்பாய் பார்ப்பேன்.

பிரபலப்பதிவர் பீதாம்பரம் - கலந்துரையாடல் - தொடர்ச்சி...

|

நேற்றையப் பேட்டி இங்கே...

விளம்பர இடைவெளிக்குப்பின் க்ளோஸ்-அப்பில் பீலா பெருமாள்சாமியினைக் காண்பிக்க, 'வெல்கம் பேக்... இன்று ஒரு வித்தியாசமான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பிரபலப்பதிவர் பீதாம்பரத்துடன் உரையாடிக்கொண்டிருக்கிறோம், இதோ அவரிடம் நமது அடுக்கடுக்கான கேள்விகளும் அதற்கான அழகான பதில்களும்...'
பீ.பெ : பால்ய நினைவுகள்னு ஒரு இடுகை எழுதினீர்களே, அதைப்பற்றி சொல்ல முடியுமா?

பி.பீ : ஆஹா, அது ஒரு புதுமையான அனுபவம் ஆச்சே. சிறுவயதில் பிறந்த முதல் நாளிலிருந்து ஒருவருடம் வரைக்கும் ஓடியாடி நான் செய்த எல்லாக் குறும்புகளையும் நினைவுப்படுத்தி அருமையா எழுதியிருந்தேன். உகாண்டாவுல இருந்து ஒருத்தர் படிச்சிட்டு ஒரு மணி நேரம் பேசினாரு.

பீ.பெ : ஒரே முறைதானே உங்களிடம் பேசியிருப்பார்?  சிலபேர் வாழ்க்கையோட கடைசி நாளுக்கு முன்னால இது மாதிரி பேசறதுண்டு. சரி, அரசியல் பற்றியும் அருமையா அதிரடியா எழுதறேங்களே அது எப்படி?

பி.பீ : அதிலதான் நம்ம ட்ரிக் இருக்கு. வெள்ளை மாளிகையில் ஊழல்,புஷ்-சின் வாரிசுப் போராட்டம், கிளின்ண்டனின் கால் சுளுக்குன்னு எழுதறதெல்லாமே பத்திரிக்கையில படிச்ச அமெரிக்க அரசியல் தானே. இதிலே முக்கியமான விஷயம் என்னான்ன, நம்மளோட பார்வை எப்போவுமே உலக அளவில இருக்கும்.

பீ.பெ : அப்புறம் லைவ்  ஆக்சன் என பதினைந்து நாளுக்கு ஒரு முறை இடுகை போட்டு பரபப்பை ஏற்படுத்துக்கிறீர்களே, அதைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்.

பி.பீ : அருமையான கேள்வி. கலக்கிட்டீங்க...  ச்சை.. பின்னூட்டம் ஸ்டைல்-ல பதில் வருது. உதாரணமா ரோட்டுல ஒரு குழி இருக்குதுன்னு வெச்சுக்குங்க, அதுல நிறைய பேரு விழப்போவாங்க, வண்டிய குழிக்குள்ள விட்டுட்டு தடுமாறிப் போவாங்க. கேமிராவோட அங்க போய் உக்காந்திருந்து, வலுவா ஒருத்தர் விழுந்து அடிபடறத போட்டோ எடுத்து இடுகையாப் போடுவேன். இதுக்கு சரியான வரவேற்பு. சில பேர் போன் பண்ணி எங்க ஏரியாவுல லைவ் ஆக்சனுக்கு மேட்டர் இருக்குன்னு சொல்லுவாங்கன்னா பாத்துக்கோங்களேன்...

பீ.பெ : ஆஹா, என்ன இளகிய மனசு. சரி ஒரு இடுகை பிரபலமாக என்ன செய்ய வேண்டும்?
 
பி.பீ : இடுகை பேரை பிரபலம்னு வைக்கலாம்... ஹா, ஹா... ஜோக்குக்காக சொன்னேன். எழுதற விஷயம் மனசுல அப்படியே ஓட்டனும்.... பாருங்க இப்ப ஓட்டனும்னு சொன்னதுல இருந்தே ஒரு இடுகைக்கான தலைப்பு 'பசை'ன்னு கிடைச்சிடுச்சி. என்னோட அடுத்த இடுகை 'பசை' எப்படி ஓட்டுதுன்னு மட்டும் பாருங்க...
 
பீ.பெ : சரி, உங்களோட எதிர்கால லட்சியம் என்னவென்று உங்க வாசகர்களுக்கு சொல்ல முடியுமா?
 
பி.பீ : இந்தியாவில இடுக்கிற எல்லா மொழியிலயும் பிளாக் ஆரம்பிக்கணும். எல்லா மொழியும் சரளமா தெரிஞ்ச ஒரு மொழிபெயர்ப்பாளர தேடிக்கிட்டிருக்கேன். எனது தமிழ்ல வர இடுகைகள் எல்லாத்தையும் ஒரே நாள்ல எல்லா மொழியிலும் ரிலீஸ் பண்ணப்போறேன்.
 
பீ:பெ : கடைசியா மொக்கை, மரண மொக்கை இது பற்றியெல்லாம் விளக்கம் சொல்லமுடியுமா?
 
பி.பீ : இந்த இடுகையோட முன்னாடி இடுகை மொக்கைன்னா இது மரண மொக்கை...
 
பீ:பெ : நன்றி பிரபலப்பதிவர் பீதாம்பரம் அவர்களே! எங்கள் நேயர்களின் பொன்னான நேரத்தை பாழடித்து உங்கள் பிதற்றலான கருத்துக்களை தெரிவித்ததுக்கு மிக்க நன்றி. இன்றோடு இந்த ப்ரோக்ராமே காலி. விதியிருந்தால்  உங்களை மீண்டும் சந்திக்கிறேன் எனச் சொல்லி உங்களிடமிருந்து பிரியா விடை பெறுவது உங்கள் பீலா... பெருமாள்சாமி..

பிரபலப்பதிவர் பீதாம்பரம் - கலந்துரையாடல்

|

தொகுப்பாளினி : வணக்கம், இது உண்மையும் சொல்வோம் (எப்பாவாச்சும்) டிவியோட கலந்துரையாடல் நிகழ்ச்சி. இதில் பிரபலபதிவர் பீதாம்பரத்தோடு பேச வருகிறார் நமது உண்மையும் சொல்வோம் (எப்பாவாச்சும்) டிவியில் எல்லோருக்கும் மிகவும் பரிட்சயமான பீலா பெருமாள்சாமி.

தொகுப்பாளினி மறைய, இருட்டாய் ஒரு அரங்கம்.மெதுவாய் வெளிச்சம் பரவுகிறது. காமிராவின் பார்வையில் இருவர். பளீரென எல்லா விளக்குகளும் ஒளிர நிகழ்ச்சி ஆ...ரம்பமாகிறது.

பீலா பெருமாள்சாமி : வணக்கம் திரு பிரபலப்பதிவர் பீதாம்பரம். எங்கள் உண்மையும் சொல்லுவோம் (எப்பவாச்சும்) டிவி சார்பாக கலந்துரையாடல் நிகழ்ச்சியில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி..

பிரபலப்பதிவர் பீதாம்பரம் : ரொம்ப சந்தோஷம். ஒரு நிமிஷம்...(தயாராய் வைத்திருக்கும் அருகிலிருக்கும் ஒரு பாத்திரத்தை எடுத்து டீப்பாயின் மேல் வைக்கிறார். பொரி, கடலை, மிக்சர் எல்லாவற்றையும் பிரித்து கொட்டி, 'வாங்க ரெண்டு பேரும் சேர்ந்து கலந்துட்டு அப்புறம் உரையாடலாம்'

பீ.பெ : ஆஹா என்ன நகைச்சுவை உணர்வு உங்களுக்கு, இந்த மாதிரி ஓர் கலந்து உரையாடலை உலகத்துக்கே அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள்.

பி.பீ : அதான் இந்த பதிவுலகத்தின் புதுமை. புதுசு புதுசா ஏதாச்சும் செஞ்சிகிட்டே இருப்போம்.

பீ.பெ : சரிங்க அது பற்றி பிறகு பேசலாம். முதல் கேள்வி உங்க சொந்த ஊர் என்ன?

பி.பீ : அதான் என் பேர்லயே இருக்கே, தாம்பரம்ங்க!

பீ.பெ : ஆஹா, பேர்லயே ஊரு... இது பற்றி ஒரு இடுகை கூட எழுதியிருக்கிறீர்கள் இல்லையா?

பி.பீ : சரியான ஞாபகசக்தி உங்களுக்கு. சிதம்பரம், பழனி, மருதன்னு சும்மா பூந்து விளையாடியிருப்பேன். பதினைஞ்சி பின்னூட்டம், தமிலிஷ்-ல பத்து, தமிழ்மணத்துல நாலுன்னு சூப்பர் டூப்பர் ஹிட்டுங்க அந்த இடுகை.

பீ.பெ : கேட்கவே சந்தோஷமா இருக்கு. அதில் பத்து பின்னூட்டத்துக்கு உங்க பதில்... சரி, பிரபலப்பதிவர்னு பட்டம் உங்களுக்கு யார் கொடுத்தது?

பி.பீ : சரக்கில்லாதவங்கதான் அடுத்தவங்க தர்றத வாங்கணும், இதெல்லாம் நமக்கு நாமே திட்டத்துல வந்ததுதான், உங்க பீலா பெருமாள் மாதிரி...

பீ.பெ : சரி, அதெல்லாம் இருக்கட்டும், வலையுலகத்தில் என்னென்ன புதுமை செய்திருக்கிறீர்கள்?

பி.பீ : அது பற்றி விடிய விடிய பேசிக்கொண்டே இருக்கலாம்...

பீ.பெ : வேண்டாங்க, கொஞ்சம் சுருக்கமா நிகழ்ச்சிக்கான அரை மணி நேரத்துல சொல்லுங்களேன், அதிர்ச்சியான தகவல்களை அதிகம் கேக்கக்கூடாது என நம் டிவியில வர டாக்டர் டக்ளஸ் பாண்டி சொல்லியிருக்காரு.

பி:பீ : ஒரு சினிமா வந்துச்சின்னா மத்தவங்கல்லாம் விமர்சனம் போடறவரைக்கும் காத்திருந்து படத்தைப் பார்க்காமலேயே எல்லாத்தையும் படிச்சிட்டு கலந்து கட்டி அழகா விமர்சனம் எழுதிடுவேன்.

பீ.பெ : ஆமாமாம், படம் எடுக்கப்போவதாய் வந்த தகவலை வைத்தே படம் பார்த்து விமர்சனம் எழுதியதாய் சொல்லி பல்பு வாங்கினீர்களே, நன்றாக நினைவில் இருக்கிறது.

பி:பீ : அப்புறம் பிடிச்ச பத்துன்னு சூப்பரா ஒரு விஷயம். எல்லாரும் என்னென்னவோ எழுதினாங்க! நான் என்ன எழுதினேன் தெரியுமா? தலைப்பிரட்டை, ஓணான், பட்டாம் பூச்சி, பொன்வண்டு.... படிச்சிட்டு எல்லாம் அரண்டுட்டாங்க.

பீ.பெ : ஆகா அருமை, அருமை. அப்புறம் நீங்க எழுதிய கேரக்டர் இடுகையைப் பற்றி சொல்லுங்களேன்!

பி.பீ : பத்தே நிமிஷத்துல எழுதி போட்டேன் அந்த இடுகையை. தமிழ், இந்தி, இங்கிலீஷ் -ல இருக்கிற கேரக்டர் எல்லாத்தையும்போட்டு அதுக்கு அழகா விளக்கமும் கொடுத்தேன் பாருங்க, ஒட்டுப்பட்டையே பிச்சிக்கிச்சி.

பீ.பெ : ரொம்ப அருமையா இருக்குங்க, நேயர்களே, ஒரு சின்ன விளம்பர இடைவெளிக்கு அப்புறம் நமது பேட்டியை தொடரலாம்.

(விளம்பரத்திலிருந்து நாளை பார்க்கலாம், பிடித்திருந்தால்)

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB