தெடாவூரில் தேர்த்திருவிழா...

|

திருவிழாக்கள் ஏற்படுத்தப்பட்ட விதத்தினைப் பற்றி விவாதித்தோமானால் யோசித்தோமானால் பலவிதமான கருத்துக்கள் தோன்றும். ஆனால் நோக்கம் என்னவோ, உறுதியாய் சந்தோஷமாய் இருப்பது அல்லது சந்தோசிக்க ஒரு வாய்ப்பினை எல்லோருக்கும் அளிப்பது என்பதுவாகத்தானிருக்கும். குறிப்பாக தேர்த்திருவிழா என்பது, அதிலும் கிராமத்தில் ஒவ்வொருவருக்கும் குதூகலத்தையும் ஏற்படுத்துவதாய் இருக்கும்.

ஏற்ற தாழ்வுகளை மறந்து, எல்லோருக்கும் முக்கியத்துவம் கொடுத்து ஊர்கூடி தேரிழுத்து முடிப்பதற்கு ஆகும் காலம் ஏறக்குறைய மூன்றுமாதம், ஐந்தாறு வருடங்களுக்கு ஒருமுறை.

மூன்று தேர்களாய் பிரித்து நடத்துவார்கள். முதல் தேர் செல்லியம்மன் தேர், காப்பு கட்டி ஒருமாதம் கழித்து மூன்று நாட்கள் விமர்சையாய் நடக்கும், இந்த வருடம் நடந்து முடிந்திருக்கிறது. அடுத்ததாய் நாளை மறுநாள் கூத்தாண்டவர் தேர். ஊரே விழாக்கோலம் பூண்டிருக்கிறது. நாட்டார், மூப்பர், கவுண்டர், கரைக்காரார்கள் எல்லாம் முனைப்பாய் ஏற்பாடுகளை கவனித்து வருகிறார்கள்.

ஐம்பதாயிரம் பேர் வரை அன்றைய தினம் எங்களூரில் குறைந்தது இருப்பார்கள். முதல்நாள் இரவு நடக்கும் வானவேடிக்கை மிகவும் பிரபலமான ஒன்று. போட்டி வைத்து சிறப்பாய் செய்தோருக்கு பரிசளிப்பார்கள், அடுத்த தேர்வரை அவர்கள்தான் ஊர் விஷேசங்களுக்கு வெடிகளை வழங்குவார்கள். இந்த முறை பத்து ஊர்கள் போட்டியில்...

சுவாமி கண் திறப்பதாய் சொல்லப்படும் ஒரு மணியில் இருந்து (வியாழன் இரவு ஒரு மணி) வாணவேடிக்கையில் ஆரம்பிப்பார்கள். காலையில் தேர் இழுத்து பாதி தூரம் சென்றபின், வரிசையாய் அலகு குத்துதல், அக்னி சட்டி எடுத்தல் என விமர்சையாய் இருக்கும். ஒரே நாளில் தேர் ஏழுவீதிகளையும் சுற்றி நிலைக்கு வந்து சேருவதுதான் சிறப்பு. இன்னும் பல விஷயங்களை பிறகு பகிர்கிறேன், இந்த இடுகை உங்களை அழைப்பதற்காத்தான் என்பதால்.

புதன் இரவு, வியாழன் என வார நாட்களில் இருப்பதால் நண்பர்கள் எல்லோரையும் அழைக்க இயலவில்லை, அலுவலப் பணியில் சுனக்கம், விடுமுறை கிடைக்காது என்பதால்.

கதிர் வருகிறார். ஆரூரன் மற்றும் ஈரோடு நண்பர்கள் புதன் இரவு தெடாவூர் வருவது பற்றி இன்று தகவல் தெரிவிக்கிறார்கள். அன்று முக்கியமான பண்டிகை இருப்பதால் ஆசான் வரவில்லை. சேம்பிளட் இன்னும் உறுதி செய்யவில்லை. இன்றைக்குள் அவர் சமயப்பட்டால் தெரிவித்து, நாளை என்னுடன் கிளம்பிவிடுவார்.

உங்களுக்கு பணிச்சுமை இன்றி, விடுமுறை இருந்தால்... வாருங்கள், ஜாமாய்ப்போம் வாழ்வின் ஒருநாளை மிகவும் சந்தோஷமாய்.

1 Comentário:

sathishsangkavi.blogspot.com said...

பங்காளி கலக்குங்க...

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB