பாடமும்... படிப்பினையும்...

|

சில நேரங்களின் நிகழும் சில விஷயங்கள் நடக்கவிருக்கும் சிலவற்றிற்கு முன்னோட்டமாய் அமையும். அந்த வகையில் நிகழ்ந்த இரு விஷயங்கள் இந்த இடுகையில்.

நிகழ்வு ஒன்று:

ஐபிஎல் பார்த்து என்னோடு சந்தோசித்திருந்த ஜூனியரை ஊருக்கு செல்லும் எனது நண்பனின் காரில் அனுப்பிவைக்க வேண்டும் என விரைவாய் டூ வீலரில் சென்று கொண்டிருந்தேன். நண்பன் சுப்புவின் வீட்டில் இருந்த அவரை பல்லவரத்தில் இருந்து கிளம்பும் நண்பனிடம் விடவேண்டும். டைடல் பார்க் சிக்னலில் பச்சை ஒளிர்ந்ததும் பட்டென கிளப்பி காலியாய் இருந்த சாலையில் வண்டியை விரட்டினேன்.

ஓரமாயிருந்த போக்குவரத்து போலீஸ் என்னை மறித்து ஓரம் கட்ட சொல்ல, ஒதுங்கினேன். ‘இப்போ இவர் சொல்வாரு பாரு’ என பக்கத்தில் இருந்தவரிடம் சொல்லி, ‘என்ன சார் ஸ்பீடா வந்தீங்களா?’ என நக்கலாய் கேட்டார்.

‘ஆமாம் சார் ஸ்பீடாகத்தான் வந்தேன்’ என அடக்கமாய் சொல்ல அவருக்கு அதிர்ச்சி. ‘எண்பத்து மூணு கிலோமீட்டர் வேகத்தில் வந்திருக்கிறீர்கள்’ என சொல்லி, ‘எனக்குத் தெரிந்து வேகமாய் வந்ததை ஒப்புக்கொள்ளும் முதல் நபர் நீங்கள்தான்’ என அதிசயித்து சொன்னார்.

‘ஆமாம் சார், என் மகனை அனுப்பி வைக்க வேண்டிய கட்டாயம்’ என்றேன்.

’சார் ஆச்சர்யமா இருக்கு, அங்க பாரு, எத்தனை பேர் நிக்கிறாங்க, யாருமே ஸ்பீடா வந்ததை ஒத்துக்கலை’.

‘வந்ததை ஒத்துகிட்டுதானே சார் ஆகனும்’  என்றேன்.

‘ரொம்பவும் ஆச்சர்யமா இருக்குசார் எனச் சொல்லி, பக்கத்தில் இருந்த அவருடன் பணியாற்றுபவரை விளித்து, ‘சார், ஸ்பீடா வந்தேன்னு ஒத்துகிட்ட முதல் ஆளு இவருதான்’ என மறுபடியும் சொன்னார்.

‘சரி முந்நூறு ரூபாய் ஃபைன் கட்டுங்க’ எனச் சொன்னார்.

உடனே சரி எனச்சொல்லி வாலட்டை எடுக்க, ‘சார், இவ்வளவு நேர்மையா இருக்கீங்க, உங்ககிட்ட ஃபைன் வாங்குறது பாவம் சார், சரி ஒரு இருநூறு கொடுத்துட்டு கிளம்புங்க’ என்றார்.

அப்போது அங்கு அமர்ந்திருந்தவர் பைனாகுலர் மாதிரி ஒன்றில் தொலைவில் வரும் வண்டியினைப் பார்த்து ’சார் 1022, கார் ஸ்பீடா வருது’ என்றார், அடுத்த பலியாடு. மறிக்க மற்றவர் விரைந்தார்.

‘இல்லை சார், என் தப்புக்கு ஃபைன் கட்டியாகனும், ரெசிப்ட் கொடுங்க’ என்றேன்.

’இல்லை சார், மனசாட்சி இடம் தரல. காசு வாங்கினா பாவம். ஆனாலும் சும்மா அனுப்ப முடியாது, நிறைய பேரை பிடிச்சி வெச்சிருக்கோம், உங்கள மட்டும் விட்டுட்டா பைசா தேறாது, ஒரு நூறு ரூபாய் மட்டும் கிளம்புங்க’ என சொல்லி ‘சார், டூ வீலர்ல ஸ்பீடா போகாதீங்க, திடீர்னு குறுக்கே வந்தா கண்ட்ரோல் பண்ண முடியாது, கார் மாதிரி கண்ட்ரோல் இருக்காது, பார்த்து போங்க’ என்றார். தேங்க்யூ சார் என்று கிளம்பினேன்.

நிகழ்வு இரண்டு:

நேற்று காலை ஏழு மணியளவில் திநகர் தாண்டி சிஐடி நகர் அருகே சென்றுகொண்டிருந்தேன். முன்னால் வெள்ளை கலர் ஷேர் ஆட்டோ நடு ரோட்டில் சென்று கொண்டிருந்தது.

அதை ஓவர்டேக் செய்யலாமென விரட்டி முந்த எத்தனித்த தருணத்தில் இண்டிகேட்டரோ, கையால் சைகையோ என எந்த ஒரு அறிவிப்புமில்லாமல் வலதுபுறம் திரும்ப, பிரேக் போடகூட நேரமில்லை. வண்டியை மோதி இடது தோள்பட்டையில் சட்டை கிழியும் அளவிற்கு வலுவாய் இடித்து கீழே விழுந்தேன். இரு கால்களிலும் நல்ல அடி, சிறிய சிராய்ப்பு.

முதலில் வண்டியை இருவரும் ஒரமாய் தள்ளி போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் செய்தோம். ‘கையை காட்டினேன், கவனிக்காமல் மோதிவிட்டாய்’ என ஆரம்பித்தான்.

‘பொய் சொல்லாதே, இண்டிகேட்டர் போடலை, கையையும் காட்டல’ என்றேன்.

‘இண்டிகேட்டர் வேலை செய்யல, ஆனா கை காட்டினேன், நீ கவனிக்கல’ என்று வாதிட்டான்.

‘பொய் சொல்லாதே, கையும் காட்டல ஒரு மண்ணும் காட்டல’ என்றேன்.

அதற்குள் கூட்டம் கூடிவிட, அங்கு பார்த்துக்கொண்டிருந்த எல்லோரும் ஆட்டோக்காரை வைய ஆரம்பித்தார்கள். ‘உன்மேல் தான் தப்பு, கையை காட்டாம திருப்பிட்டே’ என ஒருவர் சொல்ல, ‘ஆமா, சிக்னல் அங்க இருக்க இங்க ஏன் திருப்புன?’ என மற்றவர் கேட்டார்.

‘அண்ணனுக்கு அடிபட்டிருக்கு, தண்ணி மொதல்ல கொடுங்கப்பா’ என ஒரு பாசக்கார தங்கச்சி சொல்ல ஆட்டோ டிரைவர் ஓடிப்போய் டீக்கடையில் கிளாசில் தண்ணீர் கொண்டுவந்தார்.

‘அண்ணா ஊட்டுக்கு போன்னா, வேலைக்கு போக வேணாம், போய் மவராசி முஞ்ச பாரு’ என அக்கறையாய் சொன்னது.

‘சரி சரி, காசு ஏதாச்சும் வாங்கிட்டு ஆட்டோக்காரரை விட்டுடுங்க தம்பி, தினக்கூலிக்காரன், பொழைச்சிப்போறான்’ என்று ஒருவர் சொன்னார்.

தண்ணீரைக் குடித்துவிட்டு, ஆட்டோக்காரரைப் பார்த்து கேட்டேன், ‘தப்பு உன்மேல் தான் என்பதை ஒத்துக்கொள்கிறாயா?’

’ஆமாம் சார்’ எனச் சொல்ல, 'இண்டிகேட்டரை சரி பண்ணு, பார்த்து ஓட்டு, பொய் சொல்லாதே’ எனச் சொல்லி காலை விந்திய வண்ணம் வண்டியை கிளப்பினேன்.

6 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

Cable சங்கர் said...

வாழ்க்கை ஒவ்வொரு நாளும் எதையாவது நமக்கு சொல்லித்தந்து கொண்டுதானிருக்கிறதுபிரபா.. டேக் கேர்.

Unknown said...

அவ்வளவு ஸ்பீடா

Joe said...

Take care, get well soon, Prabhakar.

சத்ரியன் said...

பிரபா,

கவனம் வேணும்.

ஸ்ரீ.கிருஷ்ணா said...

Take care sir....

sathishsangkavi.blogspot.com said...

நேர்மையாக வாழ நினைக்கும் பங்காளிக்கு வாழ்த்துக்கள்...

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB