தேர்தல் பணியில்... - I

|

தேர்தல்... மக்களையெல்லாம் மேலும் ஏமாளிகளாகவும், இலவச கவர்ச்சி நச்சுக்களால் சமூகத்தை பாழ்படுத்தவும், பெரிதாய் மாற்றங்கள் வரப்போகின்றன என (அவ)நம்பிக்கையை ஏற்படுத்தவும், அழகாய் அரசியல்(வியா)வாதிகள் அல்வாக் கொடுக்கவும் ஏற்படுத்தப்பட்ட ஒரு களம். இந்த களத்திலே எல்லோருக்கும் ஒரு விதத்தில் பங்களிக்க வாய்ப்பு இருப்பினும், தேர்தல் நாளன்று வாக்குச் செலுத்தும் இடத்தில் அதிகாரிகளாய், பணிபுரிபவர்களாய் இருப்பதற்கு அரசு அல்லது அதனைச் சார்ந்த பணியில் இருந்தாக வேண்டிய கட்டாயச் சூழல் இருப்பதால் நமக்கும் அந்த ஒரு வாய்ப்புக் கிட்டியது.

பெரம்பலூர் கல்லூரியில் படித்து முடித்தபின் அங்கேயே விரிவுரையாளராய் வேலை பார்த்துக்கொண்டிருந்த சமயம் உள்ளாட்சித் தேர்தலுக்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தன. அதற்காக எங்களது கல்லூரியில் இருந்து நாங்களெல்லாம் வாக்குப் பதிவு நடைபெறும், எண்ணுகின்ற நாளன்றும் பணியில் அமர்த்தப்பட்டோம்.

முதல் நாளே எல்லோருக்க்கும் எங்கெங்கு செல்லவேண்டும் என விவரம் வந்துவிட, எங்களில் நால்வருக்கு மட்டும் வரவில்லை. நாங்கள் 'ரிசர்வ்'-வில் இருக்கிறோமாம்; யாராவது வரவில்லை என்றால் பதிலுக்கு அனுப்புவார்களாம்; ஒன்றிய அலுவலகத்தில் தங்கியிருக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறதாம்; அங்கு சென்று காத்திருக்க வேண்டுமாம்.

பணி இல்லையென்றாலும் ஊதியம் கிடைத்துவிடும் என்று சொன்னாலும், அதீத ஆர்வத்துடன் இருந்த நமக்கு பலூனில் ஊசி குத்தியது போல் ஆகியது. எல்லோருமாய் கிளம்பினோம்.

போகும்போது திருச்சி மாவட்ட எல்லையில் இருக்கும் உடும்பியம் கிராமத்தில் 'ப்ரொசீடிங் ஆபிசராக அனுப்பப் பட்டவர் குடித்து கலாட்டா செய்ய அவருக்கு மாற்று வேண்டுமெனக் கேட்டிருப்பதாக தகவல் வந்தது. மாற்றாய் யார் செல்லுகிறீர்கள் எனக் கேட்ட மறு நொடியே ஒத்துக்கொண்டேன், எங்கள் ஊரான தெடாவூரிலிருந்து எட்டு கி.மீ. என்பதால், வரப்போகும் விளைவுகளை சிந்திக்காமல்.

இரவு எட்டரை மணியளவில் வாக்குச் சாவடியாய் இருந்த அந்த பள்ளிக்கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டேன். அவர்கள் என்னைப் பற்றி விசாரிக்க, ஓ… ராமசாமி மகனா நீ, உங்க அப்பாவுடன் வேலை பார்த்திருக்கிறேன்’ என அவரின் பெயரைச் சொல்லி அப்பாவிடம் கேட்கச் சொன்னார். பள்ளியின் முன்புறம் இருந்த மைதானக் கொடிக்கம்பத்தின் திட்டில் யாகவா முனிவரை மாதிரி ஆனால் சட்டையினைப் போட்டுக்கொண்டு ஒருவர் கைகளை ஆட்டி ஏதோ பேசிக்கொண்டிருந்தார். ஜீப் வந்து நிற்பதைப் பார்த்து எல்லோரும் பரபரப்பாய் வந்தார்கள்.

மெதுவாய் ஜீப்பிலிருந்து இறங்கி இருவரோடு எல்லோருமாய் பக்கத்தில் சென்றோம். வாகனச் சத்தம் கேட்டு ஏற்கனவே வந்திருப்பவர்களும் வந்து சேர அவரை நெருங்கினோம்.

'சார், கிளம்புங்க, உங்களுக்கு வேறு ஊரில் ட்யூட்டி' என சொல்ல,

'டேய் என்னை என்னவென நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள், நான் யார் தெரியுமா?, என்னைப் பார்த்தால் கலக்டரே பயப்படனும்' என்று சொல்லி மரியாதையில்லாமல் கெட்ட வார்த்தைகளால் வைய ஆரம்பித்தார்.

’ஆமாங்க சார், பயந்து போய்தான் உங்களை வேறு ஊருக்கு மாற்றியிருக்கிறார்கள் என வ.வ.அதிகாரி நைச்சியமாய் சொல்லி ஜீப்பில் ஏறச் சொன்னார்.

‘எனக்கு மாற்றாய் வந்த அற்பப் பதர் யார்?’ என வண்டியில் ஏறும்முன் ஒரு கேள்வியைக் கேட்க, என்னை எல்லோரும் பார்க்க, அவர் ஏற இறங்க என்னைப் பார்த்து ’உனக்கு இருக்கிறது’ என சொல்ல, ’சார் உங்களுக்கும் இருக்கிறது’ என கொஞ்சம் கடுமையாய் சொல்லி, தயாராய் வைத்திருந்த அவர் கொண்டு வந்த பையோடு அனுப்பி வைத்தார்கள்.

வயதில் என்னைவிட மூத்த ஆசிரியர் ஒருவர் உறுதுணையாய் இருக்க ஏற்பாடுகளையெல்லாம் கவனித்துவிட்டு, தயாராய் இருந்த இரவு உணவினை முடித்து கண்ணயர்ந்தோம், நாளைக்கு நடக்கப்போகும் விபரீதங்கள் எதுவும் அறியாமல்…

(தொடரும்)

6 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

Chitra said...

வயதில் என்னைவிட மூத்த ஆசிரியர் ஒருவர் உறுதுணையாய் இருக்க ஏற்பாடுகளையெல்லாம் கவனித்துவிட்டு, தயாராய் இருந்த இரவு உணவினை முடித்து கண்ணயர்ந்தோம், நாளைக்கு நடக்கப்போகும் விபரீதங்கள் எதுவும் அறியாமல்…


....முக்கியமான இடத்தில் வந்து தொடருமா? :-)

vasu balaji said...

வணக்கங்க (எலக்சன்) ஆபீஸர்:)

ராஜ நடராஜன் said...

//....முக்கியமான இடத்தில் வந்து தொடருமா? :-)//

அதானே!

செ.சரவணக்குமார் said...

சுவாரஸ்யமான எழுத்து பிரபா. அதென்ன தொடரும்?? முழுசா எழுதுனாத்தான் என்னண்ணே..

settaikkaran said...

//அரசு அல்லது அதனைச் சார்ந்த பணியில் இருந்தாக வேண்டிய கட்டாயச் சூழல் இருப்பதால் நமக்கும் அந்த ஒரு வாய்ப்புக் கிட்டியது.//

வரலாறு ரொம்ப முக்கியம். சொல்லுங்க! :-)

settaikkaran said...

//தயாராய் இருந்த இரவு உணவினை முடித்து கண்ணயர்ந்தோம், நாளைக்கு நடக்கப்போகும் விபரீதங்கள் எதுவும் அறியாமல்…//

இப்படியா சஸ்பென்ஸ் வைச்சு முடிப்பீங்க? :-))
காத்திருக்கோம்! தொடருங்க!

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB