இங்கிலீஷ் டீச்சர்...

|

புதிதாய் ஆரம்பித்திருக்கும் எங்களூர் பள்ளியில் குழந்தைகளை சேர்க்கலாமா எனும் உந்துதலில் விசாரிக்க தம்பியுடன் சென்றிருந்தேன்.

எல்லா விவரங்களையும் கேட்டறிந்து, கட்டண விவரங்களை எழுதித் தருவதாய் சொல்ல, இடைப்பட்ட நேரத்தில் பிரின்சிபாலினியோடு பேசிக்கொண்டிருந்த போது ஒரு இளம்பெண்ணை அழைத்துகொண்டு உள்ளே வந்தார், அண்ணனாகவோ மாமன் மகனாகவோ இருக்கலாம்.

அ அல்லது மா பின்னால் இருந்த இருக்கையில் அமர எனதருகே அமர்ந்த அந்தப் பெண் ’பயோ டேட்டா மேடம்’ என பயமாய் பவ்யமாய் ஒரு நீலக் கலர் பைலை நீட்ட, வாங்கியவர் கேட்டார்,

‘வாட் ஈஸ் யுவர் நேம்’

‘மை நேம் ஈஸ் ... ‘ என்று கேட்ட அதே தொணியில் அவசரமாய் அந்தப் பெண் பதில் சொல்ல,

‘வேர் ஈஸ் யுவர் ரெஸிடன்ஸ்’ அடுத்த கேள்வி.

‘எஸ், எஸ்..’ என பதில் சொல்ல தடுமாற, மற்றுமொரு கேள்வி,

‘வேர் டிட் யு ஸ்டடி’.

‘எஸ், எஸ்...’ என இழுக்க, கொஞ்சம் கோபமாகி

‘விச் ஸ்கூல்’

‘கவர்மென்ட் ஸ்கூல்’

‘டெல் மி அபவுட் யுவர் பேமிலி’

‘மை பேமிலி, பேமிலி...’ என இழுக்க ‘ஒகே வி வில் கால் யூ லேட்டர்’ எனச் சொல்லி அனுப்பி வைத்து,

’இந்தாம்மா, இதை ரிஜெக்டட் ஃபைல்-ல போட்டு வை’என்றார்.

விவரங்களை வாங்கி வெளியில் வந்ததும் வாத்தியாராயிருக்கும் தம்பி மெதுவாய் சிரித்தான்.

‘அண்ணா, அந்த பொண்ணு சீக்கிரம் இங்கிலீஷ் டீச்சராயிடும், கவர்மெண்ட் ஸ்கூல்ல’ என்று சொல்ல, அதிர்ந்து எப்படி என்றேன்.

’தகுதித் தேர்வில் பாஸ் பண்ணி இந்த மாதிரி இருக்கிறவங்கதான் டீச்சரா வந்திருக்காங்க’ என்று சொல்லி ’அண்ணா கவனிச்சீங்களா, அந்த பொண்ண அழைச்சிட்டு வந்த ஆளு சிரிப்ப அடக்க முடியாம தவிச்சிட்டிருந்தாரு’ என்றான்.

சரி பள்ளியினை மாற்ற வேண்டாம் படிக்கிற பள்ளியிலேயே தொடரட்டும் என முடிவு செய்து வீட்டிற்கு கிளம்பினோம்.

எங்கள் வண்டிக்கு அருகில் இருந்த பல்ஸரில் அந்த பெண்ணை அழைத்துக்கொண்டு அவர் கிளம்ப, அந்த பெண் சொல்லியதைக் கேட்டு கிர்ரென ஆனது.

‘அந்த பிரின்சிபால் அம்மாவுக்கு இங்கிலீஸ்ல கேள்வி கேக்கவே தெரியல’

வலியால் வந்த உறவு...

|

வார இறுதியில் அன்னை, தந்தை, அன்புக் குழந்தைகள், ஒசூரிலிருந்து வந்திருந்த ஆசைத் தங்கை, என எல்லோரின் அன்பிலும் திளைத்து சித்திரைப் புத்தாண்டின் இந்த முதல் நாள் விஜயமாயிருந்து, வறுத்தெடுக்கும் இந்த கோடையும் கொஞ்சம் குளுமையாய் மாற்றியிருந்தது.

முன்று மாதத்தின் முன்பு பைக்கிலிருந்து விழுந்து சிராய்ப்புக்கள் எல்லாம் வெகு விரைவில் ஆறினாலும், வலது தோள்பட்டையில் மட்டும் இலேசான வலி. கையினை சரிவர தூக்க இயலாது, சுர்ரென வலிக்கும்.

எக்ஸ்ரே எடுத்துப் பார்த்ததில் எதுவும் பிரச்சினை இல்லையென சொல்லிவிட, வேலைப் பளுவின் காரணமாய் மாற்று சிகிச்சை செய்துகொள்ள அன்போடு பலர் அறிவுறுத்தியும் தள்ளிப் போட்டு வந்த நான் ரசகுண்டு மாமாவைப் பார்த்ததும் கையினை வலித்துக்கொள்ளலாமென சட்டென முடிவுக்கு வந்தேன்.

ஆம், அவரை எப்படி மறக்க முடியும், எனக்கு ஏற்பட்ட சுளுக்குகளையெல்லாம் சுளுக்கெடுத்தவராயிற்றே!...

புன்னகைத்தவாறே என்னை நோக்கி வந்தார்.

‘மாமா சௌக்யமா’ என்றேன்.

‘டேய் படவா, தொப்பியை கழட்டு, கண்ணாடியைக் கழட்டு’ என்றார்.

வண்டியில் வெளியில் கிளம்ப, தலையில் தொப்பி, குளிர்க் கண்ணாடி என எல்லாம் அணிந்திருந்தேன்.

 தொப்பியைக் கழட்ட, புன்னகைத்து எனது கன்னத்தை அவரது இரு கைகளாய் மென்மையாய் வருட நினைத்தாலும் புத்திக்கு அழுத்தத்தைக் கொடுக்கும் அதீத போதையில் இருந்ததால், வருடினார்; சொரசொரப்பாய் வலித்தாலும் அதிலிருந்த அன்பு இதமூட்டியது.

 ’மாமா, தோள்பட்டையில் வலியிருக்கிறது, வலித்து விடுங்களேன்’ என்றேன்.

’உனக்கில்லாததா மாப்ளே, சாயந்திரம் வீட்டுக்கு வா’ என்றார்.

 மாலையில் அம்மாவிடம் விசாரிக்க, அவர் இங்கில்லையாம், காட்டில் இருக்கிறாராம் எனச் சொல்லி, நாகேஷ் தம்பியிடம் வலித்துக்கொள் என அறிவுறித்தியதோடு அவரை அழைத்து வரவும் என் அப்பாவை பணிந்தார்.

நல்லெண்ணெய் எடுத்து என் மகன் மாடியிலிருந்த எனது அறைக்கு மணியோசையாய்... பின்னால் அவர். சராசரி உயரம், உழைத்து உரம்பட்ட உடல், களையாய் கருமை கலந்த நிறம், கள்ளமில்லாத கண்கள்.

சட்டென என்ன, எப்படிகளுக்குப் பின் தனது திறமைகளைக் காட்ட ஆரம்பித்தார். உட்காரச் சொல்லி, எண்ணையைத் தடவி மெலிதாய் ஆரம்பித்து தனது திறமைகளைக் காண்பிக்க ஆரம்பித்தவர் வலியினைக் கொடுத்து வலியினைக் குறைக்கும் பணியினைத் தொடர்ந்தார்.

அவரிம் முறைகளையெல்லாம் கூட தனியே எழுதலாம், ஆனால் எழுத வந்ததன் நோக்கம் அதுவல்ல என்பதால் பேசியவைகளைப் பற்றி இங்கே...

’குழந்தைகளெல்லாம் எத்தனை’ என்றுதான் ஆரம்பித்தேன், அந்த நபரைப் பற்றி மேலும் பல பிரமிக்கும் விவரங்களை அறிந்துகொள்ளப்போவதன் அச்சாரமாய்.

’ஒரு பெண் குழந்தை தான், இரண்டு வயதாகிறது’ என சொன்னவரை கொஞ்சம் ஆச்சர்யமாய் பார்த்தேன்.

 ’ஆம், எனக்கு கல்யாணம் ஆகி இருபது வருடங்கள் ஆகிறது, குழந்தையே இல்லை, இப்போது தத்தெடுத்து வளர்க்கிறேன்’ என்றார்.

தத்தெடுத்து வளர்ப்பவர்களைக் கண்ணுற்று, சந்தித்தும் இருக்கிறேன், பெரும்பாலும் ஆண் குழந்தைகள் தான்.

மேலும் அவர் சொன்ன விவரங்கள் எனக்கு பிரம்மிப்பைத் தந்தன.

தன்னை நிறைய ஒருதலையாய் விரும்பிய தனது உறவுக்கார பெண்ணை, கோவிலுக்கு அழைத்துச் சென்று அதிரடியாய் திருமணம் செய்துகொண்டு மணக்கோலத்தில் இரு வீட்டாருக்கும் ஊராருக்கும் மெல்லிய அதிர்ச்சியைக் கொடுத்து, அவர்களின் ஆசிர்வாதங்களைப் பெற்றுத்தான் தனது இல்லற வாழ்வினை ஆரம்பித்திருக்கிறார்.

சொல்லிக்கொள்ளும்படியான சொத்து பத்தெல்லாம் இல்லை. அப்பா கடனேதும் வைக்காமல் கடனே என விட்டுவிட, உழைப்பு, நம்பி வந்த அன்பு மனைவி இரண்டும்தான் உறுதுணை.

கிராமத்து படிக்காத இளைஞர்களுக்கே உரித்தான எந்த ஒரு செயலையும் செய்யாமல், தனியனாய், தன் கருத்தொத்த சிலரோடு மட்டும் நல் உறவோடு வாழ்வினைத் தொடர்ந்திருக்கிறார்.

கடுமையான உழைப்பின் பயனாய் தங்குவதற்கொரு நல்ல வீடு, சிறிது நாளில் மற்றுமொரு வீடு, கையில் கொஞ்சம் பணம். எல்லாம் வந்து சேர்ந்தாலும் பிள்ளைச் செல்வம் இல்லை.

மருத்துவ முறைகள் எல்லாம் பின்பற்றி, சில லட்சங்களை செலவு செய்தாலும் தனது மனைவியின் கருப்பைக்கு ஒரு கருவினைத் தாங்காத சூழ்நிலை.

நண்பர்கள், உறவினர்கள், ஏன் மனைவியே இன்னொரு திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியும் காதில் வாங்கிக் கொள்ளாமல் மாற்று வழிகளை யோசித்து இறுதியாய் தத்தெடுக்கும் முடிவிற்கு வந்து, மனைவியை சமாதானப் படுத்தியிருக்கிறார்.

அது ஒன்றும் அவ்வளவு எளிதான செயலல்ல என்பது செயல்படுத்தலில் விளங்க, நிறைய அலைந்திருக்கிறார், சென்னை, பாண்டி, கோவை என.

இறுதியாய் சேலத்தில் ஒரு குழந்தை இருப்பதாய் அதற்கென உள்ள தரகர் மூலம் அறிந்து செல்ல, மூன்றாவதாய் பிறந்த பெண். கஷ்டத்திலிருந்த அவர்கள் கைமாற்ற தயாராயிருக்க, பத்தாயிரம் கொடுத்து ஐந்து நாள் ஆகியிருந்த அந்த அன்புச் செல்வத்தை உச்சிமோர்ந்து சொந்த மகளாக்கி, நிறைய சிரமப் பட்டு பாசத்தை ஊட்டி வளத்து, இன்று அகிலாவிற்கு இரண்டு வயதாகப்போகிறது.

ஒருவேளை என்றாவது பெற்றவர்கள் தேடி வந்துவிடுவார்கள் என்பதற்காக போலியான முகவரியை கொடுத்திருக்கிறார். பல சிரமங்களுக்குப் பின் நகராட்சியில் மகள் என பதிவு செய்து ஒரு வீட்டினை மகளின் பெயரில் எழுதி வைத்திருக்கிறார்.

‘என் வாழ்வே என் மகள் அகிலாவுக்குத்தான், அவளுக்காக எதையும் செய்வேன், படித்து பெரிய ஆளாக்குவேன்’ என்றெல்லாம் சொல்லச் சொல்ல. அவன்மேல், என்ன மரியாதை குறைகிறதே என நினைக்காதீர்கள், என்னுடன் இரண்டாவது வரை படித்தவன் என்ற முறையில் சொல்கிறேன், பெருமிதமாய் இருந்தது.

ஆம்,  எங்களது ஆசிரியர் குருமூர்த்தி அவர்கள் சம்மந்தமாய் ஒரு சம்பவத்தை பேசும்போதுதான் என்னுடன் இரண்டாவது படித்தது நினைவிற்கு வந்தது. இரண்டின் பின் தொடரவில்லை, இன்று எதையும் படிக்கத் தெரியாது.

அதன்பின் நாராயணனை அடிக்கடி பார்த்திருக்கிறேன், ஆனால் என்றும் பேசியதில்லை. ஆனால் எனது கைவலி ஒரு உன்னதமான நட்பினை, மனிதனை என்னோடு சேர்த்து வைக்க, வலி போய் ஒரு வலுவான நட்பெனக்கு இன்று...

ஹரிதாஸ் விமர்சனம்...

|


’யாசகன்’ முடித்து பிண்ணனி இசை சேர்ப்பில் முசுவாயிருக்கும் எங்களது நண்பர், இயக்குனர் துரைவாணன், பிரசாத்தில் ஹரிதாஸ் எடிட்டர் ப்ரிவியூ இருக்கிறது பார்க்க வருகிறீர்களா என அன்போடு அழைக்க வேலுவுடன் சென்றேன். இன்றைய நாளின் முதல் பாதி, மனத்தினை நிறைவிப்பதாய் இருக்க சிலாகித்து எழுத ஆரம்பிக்கிறேன்.

எப்போதும் படிக்கும் கேபிள், உனா தானா அண்ணாக்கள் விமர்சனங்கள் ஏற்கனவே ஏக எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருக்க ஆர்வமாய் பார்க்க ஆரம்பித்தேன். குளிரும்படியாய் ஏசி, மிகைத்தலுக்கு மின்விசிறி என ஒரு குளிர்ச்சியான சூழல். கட்டிப்போட்டார்போல் படத்தின் தொடக்கத்தின் பத்து நிமிடம் தவிர்த்து இறுதி வரை. பல இடங்களில் விழியோரக்கசிவுகள் ஏற்படக் காரணமாயிருக்கும் காட்சியமைப்புகள்.

ஆட்டிசம் பற்றி படித்திருந்தாலும், அதிகம் தெரிந்துகொள்ள வேண்டும் எனும் உந்துதல் எழுந்ததுவும், அவ்வாறிருப்பவர்களைப் பார்த்தலின் அவர்களிடத்து என்ன திறமை இருக்கும் என தேடலோடு யோசிக்கவேண்டும் எனும் எண்ணம் ஆர்ந்ததுவும் இந்த படத்தினைப் பார்த்ததின் பெரும் வெற்றி எனக் கருதுகிறேன்.

ஆதியினை என்கவுண்ட்டர் செய்ய எத்தனிக்கும் திட்டங்கள் ஒருபுறமாயும், ஆட்டிசக் குறைபாடுடைய கிஷோரின் மகனைச் சார்ந்த விசயங்கள் மறுபுறமாயுமென காட்சிகள் விரிகின்றன.

கிஷோர்... மிகையில்லாத மிடுக்கான மிளிர்கிற நடிப்பால் என்கவுண்ட்டர் போலீஸாய், பொறுப்பான அப்பாவாய் அசத்துகிறார். எப்போதும் பிடிக்கும் இவரை இதனில் அதிகமாய்.

சிறுவனின் நடிப்பு சிறப்பாய் இருக்கிறது.நண்பர்களாய் வருபவர்கள், சினேகாவின் அம்மா, தங்கை, பள்ளி மாணவர்கள் என எல்லோரின் பங்களிப்பும் எதார்த்தமான நடிப்பும் கவர, சூரி ரொம்பவும் இம்சிக்கிறார். நகைச்சுவை என நினைத்து அவரின் வாயிலாய் நமக்கு இயக்குனர் எரிச்சலைதான் தந்திருக்கிறார்.

வசனகர்த்தாவை கண்டிப்பாய் பாராட்ட வேண்டும். படத்தின் இயல்பான ஓட்டத்திற்கு சிறிதும் தொய்வினை ஏற்படுத்தாமல் சிறப்பாய் கொடுத்திருக்கிறார். எல்லோருக்கும் கண்டிப்பாய் ‘டாக்டர் கோச் மாதிரி பேசறார், கோச் டாக்டர் மாதிரி பேசறார்’ ரொம்பவும் பிடிக்கும்.

உறுத்தலில்லாத கண்ணுக்கு குளிர்ச்சியாய், தேவையான அளவில் இருக்கும் ரத்தினவேலுவின் ஒளிப்பதிவு. சொல்லிக்கொள்ளும்படியாய் இல்லாமல் இசை, ஆனாலும் இம்சிக்கவில்லை.

சினேகா, பார்த்து சினேகமானது இந்த படத்தில் தான். அமுதவல்லி டீச்சராய் அசத்தலாய் நடித்திருக்கிறார். கடைசி நாற்பது நிமிடங்களை எனக்கு முன் வரிசையில்தான் ரசித்து பார்த்த வண்ணம் இருந்தார். அவ்வப்போது பார்த்துக்கொண்டிருக்கும் எங்களின் ரசிப்பினையும் கவனித்துக்கொண்டிருந்தார். படம் முடித்து வெளியில் வரும்போது வெளியில் நின்று கொண்டிருந்த சினேகாவைப் பார்த்து கட்டை விரலை உயர்த்தி ‘ப்ரில்லியண்ட்’ என சொன்னபோது ‘தேங்க்யூ, தேங்க்யூ’ என சிரிப்போடு ஏற்றுக்கொண்டவிதம் ஈர்ப்பாயிருந்தது.

தேவையில்லாத ஒரு குத்தாட்டப் பாடல், இழுவையாய் இறுதியில் சண்டை என குறைகள் இல்லாமல் இல்லை. இருந்தாலும்... ஐ லவ் திஸ் மூவி.

இதுபோன்ற படங்களைக் கண்டிப்பாய் கேபிள் அண்ணா சொன்னது போல் கொண்டாட வேண்டும். அப்போத்துதான் இன்னும் சிறப்பாய் பல கோணங்களில் படங்கள் தமிழ் சினிமாவுக்குக் கிடைக்கும். அவசியம் குடும்பத்தோடு பாருங்கள்.

மொத்ததில் ஹரிதாஸ், என்கவுணட்டர் என கரடுமுரடான முட்கள் நிறைந்த ஆட்டிசக் குறைபாடுகளை அலசும் முள்ரோஜா...

என்ன தவம் செய்தனை...

|

ஆசானிடம் செல்பேசுவது என்பது ஒரு சந்தோசத் துள்ளலில் ஆரம்பித்து மன நிறைவில் முடிவதாய் இருக்கும். அதற்காகவே அவ்வப்போது அவரை அழைத்து, அலுத்துக்கொள்ளுமளவிற்கு அவதிப் படுத்துவேன் என்பதுதான் உண்மையாயிருந்தாலும் அசராமல் அழைத்தவண்ணம் தான் இருப்பேன்.

அவரிடம் இருந்து வரும் அழைப்பென்றால் சொல்லவே வேண்டாம், இரட்டை சந்தோசம்தான், கண்டிப்பாய் ஒரு நல்ல விசயம் இருக்குமென்பதால்.

அன்றைய பொழுதின் மதிய உணவுக்குப் பின் தொடுதிரையில் ஆசானின் பெயர் மின்னி அழைக்க, இருக்கையினின்று இடம் பெயர்ந்தேன்.

‘வணக்கம் அய்யா’ வில் ஆரம்பித்து விசாரித்தலின் பின் ‘சுவாமி வருகிறார், நம்மையெல்லாம் சந்திக்க இருக்கிறார், உங்களிடம் தகவல் சொல்லச் சொன்னார்’ என்று சொன்னவுடன் உள்ளம் குதூகலிக்க ஆரம்பித்தது.

மெதுவாய் மனம் பின்னோக்கி அசைபோட, சுவாமி அவர்களுடன் பேசிய அந்த நாட்கள் நிழலாட ஆரம்பித்தன.

இடுகைகளை எழுத ஆரம்பித்த ஆரம்பகால நாட்கள். என் ஆருயிர் தம்பியும் அதீத சந்தோசங்களும் என்னை ஆர்ப்பரித்த துயரங்களும் என்னோடு இயைந்திருந்த நேரம். இடுகையினைப் படித்து அதனை விமர்சித்து ஒரு மடலின் வாயிலாய்த்தான் அறிமுகமாகி, எண் பெற்று எண்ணங்களைப் பேசி ஆரம்பித்த அந்த ஆரம்பகாலக் கட்டத்தில், சுவாமி அவர்களிடம் பேசி எனக்கு கிடைத்த மனநிறைவு நிச்சயம் ஆசான், கதிரிடம் பேசியதற்கு இணையாயிருக்கும். ஆம், இக்கட்டான அத் தருணங்களில் அவர்களின் பங்களிப்பு, துயரகற்றி இதமூட்டியது.

நிறைய பேசியிருக்கிறோம், சந்தித்த நிகழ்வுகள், மனத்துயரங்கள், பிரச்சினைகள் என. அவரது நண்பர்கள் குழுவில் விவாதிக்கும் விசயங்கள், ஈழம் பற்றிய ஒத்த சிந்தனைகள், என்னை உள்ளுந்தி எழுதச் சொன்னவைகள் என நிறைய சொல்லலாம்.

அவர் பேசும் தமிழ் மிகவும் வித்தியாசமாய், ஆங்கிலக் கலப்பின்றி அழகாயிருக்கும். அவர் ஜெர்மனி சென்றுவிட சிறு இடைவெளி, ஆனாலும் அவர் என்னைப் பற்றி, நான் அவரைப் பற்றி ஆசானிடம் எல்லாம் பரிமாறிக்கொள்ள, பேசுதலின்றி எல்லாம் தெரிந்துகொள்வோம்.

அதிகாலை ஐந்து மணியளவில் சுவாமி மதுரையிலிருந்தும், ஆறு முப்பதுக்கு ஆசான் சென்னையிருந்தும் என கதிர் சொல்ல ஏழரைக்கு வருவதாய் சொன்னேன், கண்டிப்பாய் நான் ஏழரையாயிருக்கமாட்டேன் எனும் அதீத நம்பிக்கையில்.

அழைக்கையில் பேருந்து நிலையத்தின் வெளியே ராயல் தியேட்டர் அருகில் நில்லுங்கள் பிரபா என கதிர் சொன்னார்.

கொஞ்சம் காத்திருத்தலில் வெள்ளை மனம் கொண்ட கதிரின் சிவப்பு வண்டியில் ஆசானோடு வந்ததும் வழக்கமான கிண்டல் கேலியோடு வரவேற் பின்’ கதிரின் வீட்டுக்கு கிளம்பினோம். 

அய்யா, சாமி வரலையா? எனக் கேட்டதற்கு, குளித்து முடித்திருந்தார் முடியினை உலர்த்த நேரமாகும் என்பதால் நாங்கள்தான் வந்தோம் என்றார். சுவாமி எப்படி இருப்பார் என்பதனைப் பற்றி இன்னும் பல மாற்றங்களை என்னுள் செய்துகொண்டு கதிரின் வீட்டினை அடைந்தோம்.

நான்கு வருடங்களாய் குராலயிருந்த சுவாமியின் தரிசனம். கைகுலுக்கி அன்பினைப் பரிமாறி பேச ஆரம்பித்தோம் எல்லோரும் குளித்துக் கிளம்ப ஆரூரன் எங்களோடு இணைந்துகொள்ள. அவரோடு பைக்கில் நான் தொற்றிக்கொள்ள சாப்பிடக் கிளம்பினோம்..

உணவுக்காக தேடியலைந்து,  கடைசியாய் ஆரூரானின் பணிக்கூடத்தின் அருகிலிருந்த ஒரு நவீன உணவகத்தில் பசியாறியது தனி அனுபவம். பின் ஆரூரனின் அலுவலத்தில் ஒரு நெடிய ‘இலக்கிய’ உரையாடலின் பின் திண்டல் முருகன் கோவிலுக்கு விரைந்தோம்.

விஞ்ஞான வளர்ச்சி பல விதங்களில் உதவியாயிருந்தாலும், சில புரதாண விசயங்கள் நம்மை விட்டு அகன்றிடவும் காரணமாய் அமைகிறது. கோவிலைப் பார்த்ததும் நிறைய மாறியிருக்கிறது, முன்புபோல் இல்லையென சுவாமி சொன்னார்.

முருகனைக் காணும் வரை காத்திருந்து, மெதுவாய் எல்லாம் பேசியவாறு சுற்றி வந்து நிறைவாய் கீழே இறங்கினோம். கதிரின் வீட்டுக்கு எல்லோரும் காரில் செல்ல நான் பைக்கில் தொடர்ந்தேன்.

கதிரின் காட்டுக்கு சென்று பார்க்கும்போது ‘நகரத்து மண்ணில் பாய்ந்த கிராமத்து வேர்’ என எழுதியிருப்பதன் அர்த்தம் நேரில் விளங்கியது. பாய்ந்த என்பதை விட படர்ந்த என்பது தான் சரியெனப்பட்டது, அவர் அங்கு நிகழ்த்திய பல நிகழ்வுகள். சரசரவென மரத்தில் ஏறி, கொய்யாக்களை கொய்த விதம், விவசாயம் பற்றிய அவரது ஆதங்கங்கள் என நிறைய சொல்லலாம்.

சப்போட்டாக்களை பறித்து பக்குவமாய் கழுவி சாப்பிடக் கொடுக்க வாழ்வின் முதன்முறையாய் அதனை தோலோடு தின்றது அங்குதான்.

கதிரின் குடும்பத்தார் ஒவ்வொருவரும் கவனித்த விதம் வார்த்தைகளில் சொல்ல இயலாது. விருந்தோம்பலின் அர்த்தம் விளங்குவதாய் அற்புதமாய். பக்கோடா போல் பருப்பு வடையில் செய்திருந்தது மிகவும் அருமை, வடை பாயாசத்தோடு விருந்து. அம்மா இன்னும் சாப்பிடுங்கோ என ஒவ்வொன்றையும் மேலும் மேலும் பாசத்தோடு இலையில் வைக்க,  அட ஒரு நாள்தானே என வழக்கத்தையும் மீறி அளவில் அதிகமாய்.

பதிமூன்று நாள் கன்றுக்குட்டி படு சுட்டியாய் பார்க்க அழகாய் இருந்தது. பேசியவாறு கொஞ்சம் ஓய்வெடுத்து தேனீரருந்தினோம்.

நேரமாக, பிரிய மனமின்றி, நகருக்குத் திரும்பி புகைப்படங்களையெல்லாம் கணனிக்கு மாற்றும்போது எனது கேமிராவிலிருந்த ஏற்கனவே இருந்த புகைப்படங்களைக் கண்ணுற்ற கதிர் கருமமே கண்ணாய் கவனித்துவிட, அப்புறம்தான் அதகளம். ஒவ்வொரு போட்டாவையும் பார்த்து விமர்சித்தபடி, கண்ணில் நீர்வர, புரையேறும் அளவிற்கு சிரித்து, அப்பா, முடியல என சொல்லுமளவிற்கு சிரிப்போடு எங்களின் நாள் முடிவுக்கு வந்தது.

இரவு உணவு முடித்து இரயில் நிலையத்தில் கதிர் இறக்கிவிட, நினைவுகளைத் தேக்கி, மீண்டும் இதே போல் இன்னுமொரு நாளினை நமதாக்கவேண்டுமென நினைத்து, ஏற்காட்டில் சென்னை திரும்பினோம். 

இரயிலில், எல்லாம் அசைபோட்டவாறு கண்ணயரும் முன் எனக்குத் தோன்றியதுதான் இந்த இடுகையின் தலைப்பு...

கதிர், நான் மற்றும் ஆசான்

ஆரூரன்...

மரத்தினூடே கொய்யும் கதிர்...

கொய்ததை கீழே தரும் கதிர்..



கன்றீன்றிருக்கும் பசு...






களிப்பில் நண்பர்கள்...




 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB