இருபத்தொன்னு... பதினொன்னு பத்து...

|


அலுவலகத்திற்கு அவசரமாய் சென்றுகொண்டிருந்தான்.

பத்தரைக்குக் கிளம்புபவன் இன்று இருபது நிமிடம் தாமதமாகக் கிளம்பியதால் கொஞ்சம் படபடப்பும் சேர்ந்திருந்தது.

தினமும் செல்லும் பரபரப்பான  சாலையில் கொஞ்சம் விரைவாகவே விரட்டினான். வழக்கத்தை விடவும் இன்று அதிக போக்குவரத்து இருப்பதாய்ப் பட்டது.

மனதிற்குள் உலகம் அழியப்போகிறது என்பது பற்றிய சிந்தனையில் ஆழ்ந்து மெலிதாய் ஒலிக்கும் பாடலை ரசித்தபடி சென்றுகொண்டிருந்தான்.  

புரளிதான் என்பது உறுதியானாலும் நண்பன் ஒருவன் போனில் கரிசனமாய் அழைத்து பதினொன்னு பத்துக்கு உலகம் அழியத்தான் போகிறது என்பதை அறுதியிட்டுச் சொல்லியிருந்தான்.

வளைந்து திரும்பி வண்டியினை வேகமெடுக்க முறுக்கியவன், செவ்வக வடிவில் உள்ளங்கை அகல கிரானைட் கல் சாலையில் கிடப்பதை கவனித்தான். அதில் ஏற்றாமல் வளைத்து லாவகமாய் சென்ற அடுத்த நொடியில் மனதிற்குள் யாராவது சறுக்கி விழலாம், தெறித்து பக்கத்தில் செல்பவர் மீது படலாம், எனவே அதனை எடுத்துப் போட்டுவிட்டு செல்லலாமே எனத் தோன்ற, செய்யலாமா வேண்டாமா என ஒரு சிறு தடுமாற்றம். 

போடலாமென முடிவில் நிற்க ஓரமாய் நிறுத்தினான். ஐம்பது மீட்டர் தொலைவில் ஒரு லாரிதான் வந்து கொண்டிருந்தது.

ஓடிச்சென்று அந்த கல்லினை எடுத்துக்கொண்டு திரும்பினான்.

ஏதோ குனிந்து எடுத்து திரும்புவதைக் கவனித்த லாரி டிரைவர், எடுத்துத் திருமபுவதை கவனித்து, சென்று விடுவான் என அவதானித்து சிறிதும் வேகத்தை குறைக்காமல் லாரியை செலுத்திக் கொண்டிருந்தான். 

கல்லினை எடுத்து திரும்பியவன் ஷூ லேஸ் மாட்டி தடுமாறி விழுந்தான். 

அப்போது சரியாய் நேரம் பதினொன்னு பத்து. 

இருபத்தொன்னு... ஆ...

|

’ஏங்க, நிஜமாவே இருபத்தொன்னில உலகம் அழிஞ்சிடுமா?’

‘அதிலென்ன சந்தேகம், எங்க பார்த்தாலும் அராஜகம், பூமாதாவுக்கே பொறுக்காது. புட்டுக்கும்’

‘லாஜிக் பார்க்கனுங்க, எல்லாரும் சொல்றாங்கன்னு நாமும் அப்படியே நம்பக் கூடாதுல்ல...’

‘இருக்குற கஷ்டத்துக்கு பொசுக்குன்னு போறதுதான் நல்லதுன்னு தோனுது...’

‘ஒவ்வொரு மதத்திலயும் ஒவ்வொரு மாதிரி சொல்லி மக்கள ஏமாத்துறாங்க’

‘ஆனாலும் எதுக்கும் ஒரு முடிவு இருக்குல்ல, இப்போ இந்த பூமிக்கு வந்துடுச்சின்னு நினைக்கிறேன்...’

‘மொதல்ல ஸ்கைலாப் விழப்போகுதுன்னு இப்படித்தானே புரளிய கிளப்புனாங்க’

‘இப்ப எல்லாம் மாறிடுச்சி... ஓசோன் புட்டுகிச்சி, பொல்யூசன், விவசாய நிலமெல்லாம் அழிஞ்சாச்சு..., இனிம சுடுகாடுதான்’

‘நீங்க சொல்றத பார்த்தா எனக்கும் நம்பனும் போல் இருக்கு’

‘ஆமாங்க, இன்னும் ரெண்டுநாள் தான் இருக்கு, நிறைவேறாத ஆசை ஏதாச்சும் இருந்துச்சின்னா பட்டுனு செஞ்சு முடிச்சிடுங்க, கடைசி ரெண்டு நாள்லயாவது சந்தோசமா இருந்துட்டு நிம்மதியா செத்துடுங்க’

’நீங்க சொல்றதுதான் சரின்னு படுது.  கண்டிப்பா செயல் படுத்தவேண்டியதுதான்’

‘என்னங்க பையில இருந்து எடுக்கிறீங்க, துப்பாக்கி மாதிரி இருக்கு’

‘ஆமாங்க, வாங்கி அப்படியே வெச்சிருக்கேன், யாரையாச்சும் சுட்டுப்பாக்கனும் ஆசை, நிறைவேத்திட வேண்டியதுதான்’

‘அதுக்கு நாந்தான் கிடைச்சேனா...ஆ....’


துப்பாக்கி - விமர்சனம்...

|



நேற்றிரவு துப்பாக்கி படம் பார்த்து வந்த மன நிறைவோடு கசாப்பை காலையில் தூக்கில் போட்ட நல்ல செய்தியும் சேர்ந்துகொள்ள படத்தினைப் பற்றிய என்னுடைய பகிர்வு இங்கே..

நிறைய படங்களைப் பார்த்தாலும் ஒரு சில படங்கள் தான் நம்மை எந்த ஒரு விதத்திலாவது விமர்சிக்க சொல்லுவனவாக  இருக்கும். படம் வெளியாகி, அதுபற்றி ஆயிரக்கணக்கான விமர்சனங்கள் வந்த பிறகும் அதையெல்லாம் படித்த பிறகும், விமர்சித்து பாராட்டத் தோன்றுகிறதே, அதில் தான் துப்பாக்கியின்  வெற்றி ஒளிந்திருக்கிறது.

எந்த ஒரு நடிகரையும் ரொம்பவும் பிடிக்கும் என்று மனதில் வைத்துகொள்வதில்லை, கல்லூரி காலங்களில் கமல் ரசிகன் எனச் சொல்லிக்கொண்டு திரிந்ததைத் தவிர. எல்லோரையும் ரசிப்பேன், நன்றாக செய்திருக்கும் பட்சத்தில்.

துப்பாக்கி என்பது ஆயுதமாக எனக்கு பிடிக்கவே பிடிக்காது என்றாலும் படமாக மிகவும் பிடித்திருந்தது... அரங்கு நிறைந்து அதிக ஆர்ப்பாட்டமில்லாமல் பார்ப்பது என்பது கண்டிப்பாக படம் வெளியாகி சில நாட்கள் கழித்து இதுபோன்ற தருணங்களில் தான் நிகழும், ந்தது.

அறிமுகம், சண்டை, பாடல் என  எல்லாம் தூள்  படத்தினை அப்படியே நினைவுப் படுத்தினாலும் ஒரு  சிறு உற்சாகம் பற்றிக்கொள்ளத்தான் செய்கிறது. விஜய் அப்பாவாக வருபவர் நாளைய இயக்குனர் குறும்படங்கள் பலவற்றில் நடித்தவர், அவரின் குரலும் நடிப்பும் அருமையாக இருந்தது, திரையில் பார்க்கும்போதும் அதே உணர்வுதான்.

நிறைய சம்பவங்களை எடுத்துக் கொண்டு சொதப்புவதை விடவும் ஒன்றிரண்டை ஒழுங்காய் சொன்னால் போதும். அதுவே பெரும் வெற்றிக்கு வித்தாக அமையும். நிறைய டைரக்டர்களுக்கு அவ்வாறு சொல்லும் திறமை அவ்வளவாய் இருப்பதில்லை, இதுவே பெரும்பாலும் தோல்விப்படமாக மாறுவதற்கு முக்கிய காரணமாகிறது. முருகதாசுக்கு இந்த வித்தை நன்றாகவே தெரிந்திருக்கிறது.

ஸ்லீப்பர் செல் எனும் ஒரு கருத்தை வைத்து இரண்டு சீன்களை கோர்த்து அதற்கு மசாலா சேர்த்து சினிமாவாய் கொடுத்திருக்கிறார், சுவைபட. 

விஜயை அழகாய் காட்டிய ஒரே படம் இதுதான் என்பேன். அதிகமான பஞ்ச் டயலாக் இல்லாமல், என்ன வேண்டுமோ அதனை மட்டும் டைரக்டர் முருகதாஸ் கேட்டுப் பெற்று ரசிக்கத்தக்க வண்ணம் படமாக்கியிருக்கிறார்.

லாஜிக் ஓட்டைகள் நிறைய இருந்தாலும் அதையெல்லாம் சீரணித்துக்கொள்ளும் அளவிற்கு காட்சியமைப்புகள் பின்னப்பட்டிருப்பதால் நம்மால் கதையோடு இயைந்து செல்ல முடிகிறது.

வழக்கமான சினிமா கதாநாயகியாய் காஜல், புஷ்டியான உடம்போடு கவர்ச்சியாய். பார்க்க பார்க்க அழகாய் விடும் என்பது காஜல் அகர்வாலுக்கு பொருந்தும். பொம்மலாட்டத்தில் அறிமுகமாகியிருந்ததற்கு இப்போது நூறு வித்தியாசங்கள் சொல்லலாம்...

ஒளிப்பதிவு ஒற்றிக்கொள்ளலாம் போல் இருக்கிறது. சந்தோஷ் சிவன் அனுபவம் பேசுகிறது. இசை இரைச்சலாய், சில நேரங்களில் இனிமையாய்...

வெடிகுண்டினை பன்னிரெண்டு இடங்களில் வைப்பதை கண்டுபிடிப்பதாய் காட்டியிருக்கும் காட்சியினை இன்னும் கொஞ்சம் ஷார்ப்பாக செய்திருக்கலாம். அதேபோல் கிளைமாக்ஸ்... ஆனாலும் காமெடி இல்லாத குறையினை இந்த லாஜிக் ஓட்டைகள் நிவர்த்தி செய்வதாய் எடுத்துக்கொள்ளலாம்.

மொத்தத்தில் இந்த ஆண்டின் மெகா ஹிட் படம், நல்ல எண்டர்டெயினர்...

கீப் இட் அப் முருகதாஸ்...

அம்மாவின் கைபேசி - விமர்சனம்...

|

எல்லோரும் துப்பாக்கியில் முனைப்பாயிருக்க, ஒரு மாறுதலுக்காய் கைபேசினேன்... அதீத பொறுமையும், மன உறுதியும் ஆண்டவன் நமக்கும் கொடுத்திருக்கிறான் என்பதை அறிந்துகொள்ள ஏதுவாய் இருந்தது..

நாம் இன்னமும் அறுபது காலக் கட்டங்களில் இருப்பதாய் இயக்குனர் நினைத்திருப்பார் போலிருக்கிறது, சொல்ல வந்த விஷயத்தை நீ...ட்டி முழக்குகிறார்...

அடிக்கடி கோழியை, மாட்டினைக் காட்டுவது என தனக்கே உரித்தான தனித்தன்மை என நினைத்துக் கொள்ளுவார் போலிருக்கிறது. நிறைய இடங்களில் சம்மந்தம் இல்லாமல் இருக்கிறது...

’அம்மாவின் கைப்பேசி’ எனும் பெயரை வைத்து நீங்கள் என்னவெல்லாமோ கற்பனை செய்து வாருங்கள், அதையெல்லாம் இல்லாமல் எடுத்துக்காட்டுகிறேன் என கங்கணம் கட்டிக்கொண்டு எடுத்திருப்பார் போலிருக்கிறது, கொஞ்சமும் ஒட்டுதல் இல்லை.

அவரது கேரக்டருக்கு மெனக்கெட்டு செய்திருக்கும் எல்லா காட்சிகளிலும் எண்பது சதம் சொதப்பலாய்த்தான் இருக்கிறது. படத்தினைப் பார்த்து நாம் அந்த காட்சியில் இயல்பாய் இணைய வேண்டும். இங்கோ ரொம்பவும் படுத்துகிறார்.

இயல்பாய் காட்டுகிறேன் எனச் சொல்லி நிறைய காட்சிகளால் நம்மை இம்சித்திருக்கிறார். ஆரம்பக்காட்சிகளாய் வரும் ஆட்டம் போடும் காட்சிகள், காதல் காட்சிகள், ஜவ்விழுவையாய் பணத்தை எடுத்துக்கொண்டு அலையும் காட்சிகள் என நிறைய சொல்லலாம்.

சார், ஐயா பற்றிய விளக்கங்கள், அழகம்பெருமாள் நடிப்பு, இனியாவின் இயல்பான நடிப்பு, வில்லன் கதாபாத்திரத்தில் வரும் டிரைவர், கோவில் சம்மந்தமான காட்சிகள் என நிறைவாகவும் விஷயங்கள் இருக்கின்றன, இருந்தாலும் இழுவையான கதையோட்டத்தில் இவையெல்லாம் விழலுக்கு இறைத்த நீராய்...

சாந்தனுவிற்கு நடிப்பு சுத்தமாய் வரவில்லை பாக்கியராஜுக்கு நடனம் போல. பாவம், நிறைய முயற்சி செய்திருக்கிறார். பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.

நிறைய எழுதலாம், வேண்டாம்... அவர் நம்மைப் படுத்தியதைப் போல உங்களை ஏன் நான்?...

அளவிற்கு மிஞ்சினால் என்பதற்கு அம்மாவின் கைபேசி ஒரு நல்ல உதாரணம்...

ஸ்கை ஃபால் - விமர்சனம்...

|



எந்த ஒரு விசயத்தையும் முதன்முறையாய் பரீட்சித்து பார்க்கும்போது மெலிதாய் மனதிற்குள் ஒரு பயம் இருக்கத்தான் செய்யும். தமிழ் படங்களுக்கு அவ்வப்போது விமர்சனம் எழுதுவதில் கொஞ்சமும் தயக்கம் இருந்ததில்லை. ஆங்கிலப் படத்திற்கு எனும்பொழுது கொஞ்சம் உதறலாய்த்தான் இருக்கிறது. பார்த்ததை பகிரவேண்டும் எனும் உந்துதல் அதிகமாய் உறுத்த, இதோ எனது புரிதலில்.

கமலா திரையரங்கில் வேல்முருகன், கஜேந்திரன் சாருடன் பார்த்தேன். இதுதான் அங்கு பார்க்கும் முதல் படம். நன்றாக பராமரிக்கப் பட்டு எல்லாம் சரியாய் இருக்கிறது. டூ வீலர் பார்க்கிங் இருபது ரூபாய் என்பது அதிகமாய் இருக்கிறது.

Daniel Craig - ஐ ஜேம்ஸ் பாண்டாகவே ஒத்துக்கொள்ள மாட்டேன், Sky fall பார்க்கும் முன்பு வரை. அவரிடத்தில் ஏதோ மிஸ்ஸிங், என்ன வென்று அதுபற்றி நிறைய யோசிக்கலாம். ஆனால் அளவான, மிதமான நடிப்பில் கவர்கிறார்.

இதுதான் பாண்ட் படங்களிலேயே கவர்ச்சி மிகவும் குறைவாய், அதிக சென்டிமென்ட், நிறைந்த கதையம்சம் என வந்திருக்கும் படம் என்பது என் கருத்து.

சைனாவில் பணியாற்றிய ஒரு முன்னாள் உளவாளி, தான் எதிரிகளிடம் மாட்டிக்கொண்ட போது எந்த ஒரு உதவியும் கிடைக்காததால் அதற்கு காரணமான தலைவர் எம்-மை எப்படி பழிவாங்குகிறார் என்பதை டெக்னாலஜி, சென்டிமென்ட், பிரம்மாண்டம் என எல்லாம் புகுத்தி வந்திருக்கும் படம் இது.

ஆரம்பக் காட்சியில் இஸ்தான்புல் நகரில் பைக் சேசிங் மிகவும் அருமை, பிரமிப்பாய் இருந்தது. அதனைத் தொடர்ந்து கார் மற்றும் ட்ரெயின் என அடுத்தடுத்த காட்சிகள் அழகாய் படமாக்கப் பட்டு அசத்தலாய் இருக்கிறது.

ஷங்காயை பல படங்களில் பார்த்திருந்தாலும், இதில் காட்டிய விதம் அருமை. நிஜமாய் கேமிராமேன் மிரட்டியிருக்கிறார். மற்ற ஜேம்ஸ் படங்களிலிருந்து இதனை சண்டைக் காட்சிகளை முற்றிலும் வேறுபடுத்திக்காட்டி இருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும்.

சில்வா(Silva) என்ற பாத்திரத்தில் வில்லனாக நடித்திருக்கும் ஜேவியர் பர்டெம் (Javier Bardem) இந்த படத்திற்கு தூண் என்றால் மிகையில்லை, பின்னி பெடலெடுத்திருக்கிறார். அறிமுகக் காட்சியில் வசனம் பேசியபடி வரும் லாங் ஷாட்-டில் தனது ராஜாங்கத்தை ஆரம்பித்தவர், இறுதிவரை தோன்றும் இடங்களிலெல்லாம் மிரட்டுகிறார்.

சைலன்ஸ் ஆப்த லேம்ப்ஸ்-ல் ஆண்டனி ஹாப்கின்ஸ்(Anthony Hopkins), இளம் வயதிலேயே இறந்து போன தி டார்க் நைட் ஹீத் லெட்ஜெருக்கு(Heath Ledger) பிறகு இவரை எனக்கும் மிகவும் பிடித்திருக்கிறது.

அதீத பாதுகாப்பில் அடைத்து வைத்திருந்தாலும் சில்வா(Silva) தப்பித்து, கோர்ட்டில் என்கொயரி சமயத்தில் எம்மை கொல்ல முயற்சிக்க எம்-தான் டார்கெட் எனத் தெரிந்தவுடன், அவரை போலீஸ் பாதுகாப்பில் வைக்காமல், அவரை ஸ்காட்லாண்டில் உள்ள தனது வீட்டுக்கு அழைத்துசென்று சில்வாவை வரவழைக்கும் உத்தி அருமை.

வழக்கமான ஜேம்ஸ்பாண்ட் படத்தினை எதிர்ப் பார்த்து செல்பவர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றம் இருந்தாலும், மொத்தத்தில் இந்த படம் அருமை. அவசியம் பார்க்கலாம்.

வேல்முருகன் - இந்த படம் இந்தியாவில் ஓடாது.

கஜேந்திரன் சார் - சூப்பர்.

சில சந்தேகங்களை நிவர்த்தி செய்த கஜேந்திரன் சாருக்கு நன்றி...

பீட்சா... - விமர்சனம்...

|

ஒரு படத்தினைப் பார்த்துவிட்டு, அதன் இயக்குனரை, கேமிராமேனை, நடிகரை கைகுலுக்கிப் பாராட்ட வேண்டுமெனத் தோன்றும். அவ்வாறு பாராட்டுவதற்கான ஒரு நிகழ்வு எத்தனை பேருக்கு படம் பார்த்த தியேட்டரில் கிட்டும் என்பது கேள்விக்குறி. எனக்கு இன்று வாய்த்தது பிட்சா படத்தினைப் பார்த்துவிட்டு ஏவிஎம் ராஜேஸ்வரி திரையரங்கில்...

ஆருயிர் நண்பன் வேலு மற்றும் மண் படத்தின் தயாரிப்பாளர் கஜேந்திரன் சாருடன் சேர்ந்து ஆறு முப்பதுக் காட்சியினைப் பார்த்தேன். ஒரு படத்தினைப் பற்றிய  எந்த ஒரு விமர்சனத்தையும் படிக்காமல், கதையினைப் பற்றியும் கொஞ்சமும் கேள்விப்படாமல் பார்க்கும்போது, நன்றாக இருக்கும் தருணத்தில் மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாயிருக்கும், நல்ல படத்தினைப் பார்த்த நிறைவாயிருக்கும்; நானும் மகிழ்ச்சியாய், நிறைவாய்...

சஸ்பென்ஸ் த்ரில்லர், அமானுஷ்யங்கள் சம்மந்தமான படங்கள் தமிழில் வருவது மிகக் குறைவு, அப்படியே வந்தாலும் நன்றாக இருப்பது அபூர்வம். இந்த படத்தைப் பார்த்த எவரும் இதன் கதையினை எழுதுதலோ, மற்றவர்களுக்கு சொல்லுதலோ கண்டிப்பாய் பார்க்கபோகும் நபரின் சுவராஸ்யத்தை குறைத்துவிடும். எனவே என்னைக் கவர்ந்த விஷயஙகள் மட்டும்... 

கதையினை சொல்லிய விதம் மிக அருமை. பாத்திரப்படைப்புகள், அவர்களின் பங்களிப்பு...

த்ரில் படத்திற்கு உகத்த அருமையான இசை, தேவையான இடத்தில் தேவையான அளவில்...

மிகவும் அற்புதமாய் கேமிரா. இருட்டுச்  சூழலில், டார்ச்சின் குறைந்த வெளிச்சத்தில், திறமையாய் வேற்று வெளிச்சங்களை பயன்படுத்தியிருந்தாகும் தெரியாதவாறு தெளிவாய்... நான்கைந்து இடங்களில் தான் நிகழ்பவைகள் எல்லாம் என்றாலும் போரடிக்காமல் கையாளப்பட்டிருக்கும் கேமிரா...

பன்ச் டயலாக், குத்துப்பாட்டு, சண்டை,  ஐந்து பாடல்கள் என எதுவும்  இல்லாமல், கதை மட்டும் லீனியராய் சொல்லிய விதம்...

நாளைய இயக்குனரில் பார்த்து வியந்தவர்களில் கார்த்திக் சுப்பாராஜும் ஒருவர். அது ட்ரெயிலர்தான் இதுதான் மெயின் பிக்சர் என அசத்தலாய் மிரட்டியிருப்பது...

இயல்பான வசனங்கள். பெரிதாய் கவரவில்லை என்றாலும் பளிச்சென...

கொஞ்சமும் விரசமில்லாத காட்சிகள், அதிகமான லாஜிக் மிஸ்டேக் இல்லாத காட்சியமைப்புகள்...

’ப்ரில்லியண்ட்’ தயாரிப்பாளர் கஜேந்திரன் சார், ’பெரிய அளவில் கார்த்திக் வருவதற்கான வாய்ப்பு அதிகம். ப்ரசெண்ட்டேசன் அருமை’ வேலு...

கார்த்திக் சுப்பாராஜ், விஜய் சேதுபதி, கேமிராமேன் கோபி அமர்நாத் என எல்லோரையும் கைகுலுக்கி பாரட்ட நெகிழ்வாய் ஏற்றுக்கொண்ட விதம்...

மொத்தத்தில் மிகவும் அருமையான ஒரு த்ரில்லர். அவசியம் பார்க்கவேண்டிய படம்.

கீப் இட் அப் கார்த்திக் சுப்பாராஜ் & டீம்...

கரண்ட்...

|


ப்ளீஸ். என்னைப் புரிஞ்சிக்கோ ரேஷ்மி'

'என்ன புரிஞ்சிக்கிறது, எப்பவாச்சும் சொன்ன டயத்துக்கு வந்திருக்கீங்களா?'

'ஐயோ, எத்தன தடவ சொல்றது, கிளம்பும்போது என்னோட ஃப்ரண்ட் கால் பண்ணிட்டான், வெக்க முடியல'

'உங்களுக்கு எப்பவுமே உங்க ப்ரண்ட் தான் முக்கியம், என்ன விட்டிடுங்க ப்ளீஸ்...'

'நெஜமா என் மேல தப்பு இல்லை, இது மாதிரியெல்லாம் எடுத்தெறிஞ்சி பேசாத'

'ஒரு தடவன்னா நம்பலாம், ஓராயிரம் தடவை இதே கதை'

'இந்த உலகத்தில எனக்கு உன்னைத் தவிர யாரும் முக்கியமில்லை தெரியுமா'

'ஃப்ரண்ட் போன கட் பண்ணிட்டு வரத் தெரியல, வக்கனையா பேச மட்டும் தெரியுது'

'ரேஷ்மி, இந்த மாதிரியெல்லாம் பேசாத, அப்புறம் என்ன பண்ணிக்குவேன்னு தெரியாது'

'சும்மா இந்த பூச்சாண்டிஎல்லாம் காட்டாத, உன் பேச்சுக்கெல்லாம் மசிய மாட்டேன்'

'அவ்ளோ தானே, உனக்காக என் உயிரையும் கொடுப்பேன்னு நிரூபிக்கிறேன்'

சொல்லிவிட்டு அருகிலிருந்த மின் கம்பத்தில் விடுவிடுவென ஏறி கம்பியைப் பிடித்தான் சுபாஷ்.

(பெயர்களை லதா, சுரேஷ் என மாற்றி வருடத்தை தொண்ணூறு என கற்பனை செய்து பார்த்தால் இன்னொமொரு கதையும் உங்களுக்கு கிடைக்கும்)

சுந்தர பாண்டியன் - எனது பார்வை.

|

சினிமாவே வாழ்க்கை என இன்னும் அயராமல் போராடிக்கொண்டிருக்கும் என் ஆருயிர் நண்பன் வேலுவும் நானும் இரவு உணவுக்குப் பின் நிறைய பேசிக்கொண்டிருந்தோம். சுந்தர பாண்டியன் பற்றியும் நிறைய பேச்சில் இருக்க, ’விமர்சனம் எழுதுடா, ஏன் எழுத மாட்டேன் என்கிறாய் என்று அன்பாய் கடிந்தான். சரி, அது விஷயமாய் சில விஷயங்களை பகிர்ந்து கொள்ளலாமென என் மனதில் தோன்றியவைகள் இந்த இடுகையில் உங்களோடு.

ஆத்தூரில் பார்த்தேன். ’மனம் கொத்திப்பறவை’யை ஐந்தாறு பேர்களுடன் பார்த்து மனம் குதறிப்போன அனுபவத்தில் இருந்த நான், அரங்கு நிறையா விட்டாலும், பெருமளவு கூட்டத்தோடு கலகலப்பாய் பார்த்த போது நிறைவாயிருந்தது.

நிறைய விஷயங்கள் அதரப் பழசாயிருந்தாலும், அதையெல்லாம் நமது வாழ்வில் முன்னதாக கடந்துவந்த பாதைகளில் கண்ணுற்றிருந்தால் சிலீரென உள்ளுள் ஓர் உணர்வு தோன்றுமே; நினவுகளை அப்படியே பின்னோக்கி செலுத்த வைத்து சில நேரங்கள் நம்மை நிகழ்காலத்தில் இருந்து பிரித்து வைக்குமே; இதெல்லாம் சுந்தர பாண்டியனைப் பார்க்கும் போது அப்படியே நிகழ்ந்தது.

நிறைய இதைப் பற்றி எழுதிவிட்டார்கள். எல்லாம் படித்தாலும் எனக்குத் தோன்றியவைகள் வரிசையாய் கீழே பிடித்தவைகள், பிடிக்காதவைகள் என.

பிடிக்காதவைகள்

  • சிறு கத்தியினை வயிற்றில் வாங்கி அடுத்த நொடியே உயிரிழக்கும் வில்லன், இருதயத்தில் இருபது குண்டுகளை வாங்கியும் அரை மணி நேரம் வசனம் பேசும் கதாநாயகன் எனவெல்லாம் கண்டிருந்தாலும், இரும்புக் கம்பியால் வலுவாய் அடி, முதுகில் ஆழமாய் கத்தி என எல்லாம் நிகழ்ந்தும் வெகு சாதாரணமாய் எல்லோரையும் அடித்து வீழ்த்தும் கிளைமாக்ஸ் ஒரு திருஷ்டிப் பொட்டு.
  • மனதிற்கு ஒட்டாத பாடல்கள். உண்மையை சொல்லப்போனால் சொதப்பல் எனவே சொல்லலாம்.


  • சில இடங்களில் நிறையவே முதிர்ச்சியாய் தெரியும் சசிக்குமார்.


பிடித்தவைகள்

  • பளிச்சென பளீரென பல இடங்களில் வசனங்கள்.
  • அப்பா வேடங்களில் வரும் இருவரின் பாத்திரப்படைப்பு. 
  • நம்மை திரும்பப் பார்க்க வைத்த பெண்களில் ஒருத்தியை மறுபடியும் பார்ப்பதாய் கதாநாயகி.
  • மாமன் மகளாய் வரும், இன்னமும் நம்மை நிகழ்வில் கலாய்க்கும் அத்தை மகளை நினைவுபடுத்தும் பாத்திரப்படைப்பு. 
  • சூரியின் அடக்கி வாசித்த காமெடிப் பட்டாசு. நண்பர்களின் பாத்திரப் படைப்பு மற்றும் பேருந்து நிகழ்வுகள்.
  • பாஸிடிவான கிளைமாக்ஸ்.


மொத்தத்தில் சுந்தர பாண்டியன் படம் மிகவும் பிடித்திருந்தது, சற்றேறக்குறைய நம்முடைய வாழ்க்கையிலும் நடந்திருப்பதால்; கிளைமாக்ஸ் தவிர்த்து சிலபல பேருந்துக் காதல்களை, காதலர்களை என் வாழ்விலும் சந்தித்திருப்பதால். அதில் ஒன்றை பேருந்தில் காதல் என்னும் இரு வருடங்களுக்கு முன் எழுதிய இந்த இடுகையைப் படித்துப் பாருங்களேன், காரணம் விளங்கும்!....

தப்பு...

|


அலுவலகம் வந்ததிலிருந்து மனதிற்கு உறுத்தலாயிருக்கிறது பல்லிடுக்கில் பாக்கென.
 
சரியாய் பத்துநாள் இருக்கும். வெஸ்ட் மாம்பலம் லேக் வியூ அருகில் ஒரு பெரியவர் விபூதியுடன் சிரித்தமுகமாய் எனது வண்டியை கைகாட்டி நிறுத்தினார்.
 
'தம்பி என்னை டி நகர் பஸ் ஸ்டாண்டில் விட்டுவிடமுடியுமா எனக்கேட்க', சரி எனச் சொல்லி முதுகோடிருந்த பையினை முன்புறம் மாற்றி வழக்கத்தினும் மெதுவாய் ஓட்டிச் சென்றேன்.
 
சப்வேயைக் கடந்து நெரிசலில் செல்லும் வழக்கம் இல்லாததால் வலதுபுறம் ஜெயின் காலேஜ் வழியாய் செல்ல திரும்பி நிறுத்தினேன். அதற்குள் விடுவிடுவென இறங்கி அந்த பெரியவர் நடந்து செல்ல ஆரம்பித்துவிட்டார்.
 
ஒரு சிநேகமான புன்னகையோ, ஒரு நன்றியையோ சொல்லாமல் சட்டென சென்றது மனதுக்குள் ஏதோ செய்தது. அதே சமயம், இதையெல்லாமா எதிர்பார்ப்பது என உள் மனது வாதிட்டாலும், இல்லையில்லை அழைத்துச் செல்லக் கேட்கும் போது இருந்ததில் இறங்கு ம்போது ஒரு சதவீதமாவது இருக்கலாமே என வாதிடத்தான் செய்தது.
 
கிளம்பும் நேரத்தைப் பொறுத்து செல்லும் வழி மாறும் என்பதால், இன்றுதான் மீண்டும் அதே வழியில். அதே பெரியவர், மலர்ந்த சிரிப்புடன் கை காட்டி லிப்ட் கேட்க விருட்டென் வந்துவிட்டேன்.  அதனால்தான் இந்த இடுகையின் முதல் வரி...

சதீஷுக்கு கல்யாணம்...

|

ரெண்டு வருஷத்துக்கு முன்னால ஊருக்கு போயிருந்தப்போ சதீஷ் என்னை பார்க்க வந்தான். எல்லாம் விசாரிச்சிட்டு, 'அண்ணா ஒரு முக்கியமான விஷயம், யாருகிட்டயும் சொல்லிடாதீங்க, எனக்கு நாளைக்கு கல்யாணம்'னு சொன்னான்.

எனக்கு கொஞ்சம் அதிர்ச்சியா இருந்துச்சி. ஏன்னா அவனுக்கு வயசு பதினாறுதான் இருக்கும். கேட்டப்போ 'என்னன்னா அவ்வளோ கம்மியா சொல்றே! தை வந்தா பதினேழு முடியுதுண்ணா'ன்னு சொன்னான், அப்போ சித்திரை மாசம்...

'சரி பொண்ணு யாரு, ரகசியம் மாதிரி சொல்ற' ன்னு கேட்டதுக்கு, 'லவ்வுண்ணா, பொண்ணு புதூர்தான். ராத்திரி ஓடியாறேன்னு சொல்லியிருக்கு, திவா அண்ணன்கிட்டத்தான் வண்டிக்கு சொல்லியிருக்கேன்னு சொன்னான்.

'எப்படிடா லவ்வு' ன்னு கேட்டதுக்கு 'கொத்து வேலைக்கு புதூருக்கு போயிருந்தப்போ, வேலை செஞ்ச வீட்டுக்கு பக்கத்துலதான் அந்த பொண்ணு இருந்துச்சி. தண்ணி கேக்கிற மாதிரி பேச ஆரம்பிச்சேன், நாலாவது நாள் கல்யாணம் பண்ணிக்கிறியான்னு கேட்டேன், சரின்னுடுச்சி'.

என் தம்பி திவா அங்க வர, 'என்னடா கூத்து நடக்குது, பொண்ணு ஓடிவருதாம், காருக்கு உங்கிட்ட தான் ஏற்பாடு பண்ண சொல்லியிருக்கானாம், என்ன விஷயம்' னு கேக்க,

'யாருகிட்டயும் சொல்ல வேணாம்னு சொல்லியிருந்தேன். இவன் ஒவ்வொருத்தருகிட்டயும் கல்யாணம்னு சொல்லி ஒங்கிட்ட மட்டும்தான் சொல்றேன், யாருகிட்டயும் சொல்லாதன்னு சொல்லியிருக்கான். இப்போ தெருவுக்கே தெரியும்ணா'

'சரி அந்த பொண்ணு வருமா' ன்னு கேட்டதுக்கு 'டவுட்டுத்தான்' னு திவா சொல்ல, 'கண்டிப்ப வரும்ணா, திவா அண்ணந்தான் நம்பிக்கை இல்லாமயே பேசிகிட்டிருக்கு' ன்னு சதீஷ் மறுத்து சொன்னான்.

'சதீஷு, காரு வந்துட்டு போகலைன்னாலும் ஐநூறு ரூபாவது கொடுத்தாகனும், தெளிவா சொல்லிட்டேன்'னு சொல்ல, 'அது பத்தி உனக்கென்ன?, வர்றது கன்ஃபார்ம்' னு சொன்னான்.

அப்போ அங்க வந்த பக்கத்து வீட்டு வாண்டு சூர்யா சதீஷோட எங்கள பாத்துட்டு , 'சதீஷ் அண்ணனுக்கு நாளைக்கு கல்யாணம்' ன்னு சொல்லிட்டு போக, திவா தலையில அடிச்சிகிட்டு 'டேய், சின்ன பசங்களையும் விடலையா?' ன்னு கேக்க, அவன் என்னோட கூட்டாளிண்ணா' ன்னு சொன்னான்.

'திவா ரொம்ப சுருக்கமா இவன் லவ்வ பத்தி சொல்லு' ன்னு கேட்டேன். 'இவந்தான்னா ஏதேதோ சொல்லிகிட்டிருக்கான், அந்த பொண்ணு வீட்டுக்கே இவன் செட்டு பசங்க, பிரகாஷ் அண்ணன் தலமையில பொண்ணு கேக்க போயிருக்காங்க.

சதீஷ பாத்து 'இந்த ஆளு எங வீட்டு பக்கமாவே சுத்திகிட்டு இருக்கான். இனிமே பாத்தன்னா வெளக்கமாறு பிஞ்சிடும்னு, வந்துட்டானுங்க பெரிய மனுஷனுங்க பொண்ணு கேட்டுட்டு’ன்னு மூஞ்சில அடிச்ச மாதிரி சொல்லி அனுப்பிச்சிட்டாங்க. பிரகாஷ் அண்ணன் மானமே போச்சுன்னு பொலம்பிகிட்டிருந்துச்சி'.

'அதெல்லாம் ஆரம்பத்துலண்ணா. அவங்க அம்மாவ விட்டுத்த்தள்ளு, பொண்ணுதானே முக்கியம்' னு சதீஷ் சொன்னான்.

'சரி எப்படி பொண்ணு வரப்போகுது' ன்னு கேட்டதுக்கு, 'அந்த பொண்ணோட அக்கா புருஷன் இவன மாதிரியே கொத்து வேலை செய்யறவன். அவனுக்கு தினமும் பீர், சில்லி சிக்கன், பீஃப்னு வாங்கி கொடுத்துகிட்டு இருக்கான். அவன் பொண்ண கண்டிப்பா அனுப்பி வெக்கிறேன்னு சத்தியம் பண்ணி சொன்னதா இவன் சொல்றான், மொதல்லயே சொன்ன மாதிரி எனக்கு ஒரு துளிகூட நம்பிக்கையில்ல!'

'பத்து மணிக்கு ஃபோன் பண்ண சொல்லியிருக்காப்லண்ணா, வண்டிக்கு சொல்லிடு டான்னு பத்து மணிக்கு மூலையில நிக்கனும்' னு சொல்லிட்டு ரெடி பண்ண போயிட்டான்.

அவன் வீட்டுல எல்லாரும் தயாரா காத்துகிட்டிருந்தாங்க. தூங்கிட்டு வழக்கமா விடியகாலம் எழுந்திரிச்சி, சதீஷ் மேட்டர் என்ன ஆச்சுன்னு கேட்டேன்.

அந்த பொண்ணு வரலையாம், அழுதுகிட்டிருக்கானாம், சமாதானப்படுத்தவே முடியலன்னு சொன்னாங்க.

அவனோட ஃபிரண்டுங்க எல்லாம்(மொன்ன கத்தியும் மொத்த பனியனும் கதா நாயகன் கங்கா தலமையில)ராத்திரி அந்த பொண்ணோட வீட்டுக்குள்ளயே செவுரேறி குதிச்சி உள்ள போய் பாத்திருக்கானுங்க, பொண்ணு எஸ்கேப்.

அதோட அக்கா புருஷன் விவரமா அழைச்சிகிட்டு போயி அவங்க வீட்டுல பூட்டி வெச்சுட்டானாம். செல்லுக்கு கூப்பிட்டா எடுக்கவே இல்லயாம். அப்புறம் அக்கா புருஷனோட ஃபிரண்டு ஒருத்தன் வீட்டுக்கு போயி அவனோட செல்ல புடுங்கி அதிலிருந்து கால் பண்ண எடுத்திருக்கான்.

இவனுங்க கோபமா கேட்டதுக்கு, 'உங்களுக்கெல்லாம் நான் வில்லண்டி. அந்த புள்ளய நான் கல்யாணம் பண்ணிக்கலாம்னு கணக்கு பண்ணிகிட்டிருக்கேன், எனக்கே ஆப்பு வெக்க பாக்குறீங்களா' ன்னு கேட்டிருக்கான்.

அப்புறமா சதீஷ திட்டி, கொஞ்சம் மெனக்கிட்டு ஒரே வாரத்துல கல்யாணம் பண்ணி வெச்சிட்டாங்க. ரெண்டு வயசுல பெண் குழந்த, அடுத்த வாரிசுக்கு இப்போ அந்த பொண்ணு மூணு  மாசம். குடும்பஸ்தனா சந்தோஷமா இருக்கான்.

அதுக்கப்புறமா ஞாபகம் வந்து 'அந்த பொண்ணு என்னடா ஆச்சி' ன்னு கேட்டதுக்கு, 'கல்யாணத்துக்கு அப்புறமா கால புடிச்சிகிட்டு கதறுனுச்சி. போடி மயிறான்னு திட்டிவிட்டுட்டேன். அப்புறமா அவங்க அக்கா புருஷனையே கல்யாணம் பண்ணிகிச்சி' ன்னான்.

தெடாவூரில் தேர்த்திருவிழா...

|

திருவிழாக்கள் ஏற்படுத்தப்பட்ட விதத்தினைப் பற்றி விவாதித்தோமானால் யோசித்தோமானால் பலவிதமான கருத்துக்கள் தோன்றும். ஆனால் நோக்கம் என்னவோ, உறுதியாய் சந்தோஷமாய் இருப்பது அல்லது சந்தோசிக்க ஒரு வாய்ப்பினை எல்லோருக்கும் அளிப்பது என்பதுவாகத்தானிருக்கும். குறிப்பாக தேர்த்திருவிழா என்பது, அதிலும் கிராமத்தில் ஒவ்வொருவருக்கும் குதூகலத்தையும் ஏற்படுத்துவதாய் இருக்கும்.

ஏற்ற தாழ்வுகளை மறந்து, எல்லோருக்கும் முக்கியத்துவம் கொடுத்து ஊர்கூடி தேரிழுத்து முடிப்பதற்கு ஆகும் காலம் ஏறக்குறைய மூன்றுமாதம், ஐந்தாறு வருடங்களுக்கு ஒருமுறை.

மூன்று தேர்களாய் பிரித்து நடத்துவார்கள். முதல் தேர் செல்லியம்மன் தேர், காப்பு கட்டி ஒருமாதம் கழித்து மூன்று நாட்கள் விமர்சையாய் நடக்கும், இந்த வருடம் நடந்து முடிந்திருக்கிறது. அடுத்ததாய் நாளை மறுநாள் கூத்தாண்டவர் தேர். ஊரே விழாக்கோலம் பூண்டிருக்கிறது. நாட்டார், மூப்பர், கவுண்டர், கரைக்காரார்கள் எல்லாம் முனைப்பாய் ஏற்பாடுகளை கவனித்து வருகிறார்கள்.

ஐம்பதாயிரம் பேர் வரை அன்றைய தினம் எங்களூரில் குறைந்தது இருப்பார்கள். முதல்நாள் இரவு நடக்கும் வானவேடிக்கை மிகவும் பிரபலமான ஒன்று. போட்டி வைத்து சிறப்பாய் செய்தோருக்கு பரிசளிப்பார்கள், அடுத்த தேர்வரை அவர்கள்தான் ஊர் விஷேசங்களுக்கு வெடிகளை வழங்குவார்கள். இந்த முறை பத்து ஊர்கள் போட்டியில்...

சுவாமி கண் திறப்பதாய் சொல்லப்படும் ஒரு மணியில் இருந்து (வியாழன் இரவு ஒரு மணி) வாணவேடிக்கையில் ஆரம்பிப்பார்கள். காலையில் தேர் இழுத்து பாதி தூரம் சென்றபின், வரிசையாய் அலகு குத்துதல், அக்னி சட்டி எடுத்தல் என விமர்சையாய் இருக்கும். ஒரே நாளில் தேர் ஏழுவீதிகளையும் சுற்றி நிலைக்கு வந்து சேருவதுதான் சிறப்பு. இன்னும் பல விஷயங்களை பிறகு பகிர்கிறேன், இந்த இடுகை உங்களை அழைப்பதற்காத்தான் என்பதால்.

புதன் இரவு, வியாழன் என வார நாட்களில் இருப்பதால் நண்பர்கள் எல்லோரையும் அழைக்க இயலவில்லை, அலுவலப் பணியில் சுனக்கம், விடுமுறை கிடைக்காது என்பதால்.

கதிர் வருகிறார். ஆரூரன் மற்றும் ஈரோடு நண்பர்கள் புதன் இரவு தெடாவூர் வருவது பற்றி இன்று தகவல் தெரிவிக்கிறார்கள். அன்று முக்கியமான பண்டிகை இருப்பதால் ஆசான் வரவில்லை. சேம்பிளட் இன்னும் உறுதி செய்யவில்லை. இன்றைக்குள் அவர் சமயப்பட்டால் தெரிவித்து, நாளை என்னுடன் கிளம்பிவிடுவார்.

உங்களுக்கு பணிச்சுமை இன்றி, விடுமுறை இருந்தால்... வாருங்கள், ஜாமாய்ப்போம் வாழ்வின் ஒருநாளை மிகவும் சந்தோஷமாய்.

எலி கடிச்சிருச்சிருக்கும்...

|

என் அத்தை மகன் பற்றி நிறைய இடுகைகளில் சொல்லியிருக்கிறேன். சமீபத்தில் கேள்விப்பட்ட ஒரு சம்பவம் மிக சுவராஸ்யமாயிருக்க இதோ ஒரு இடுகையாய்...

இப்போதெல்லாம் எங்கள் பக்கத்தில் எல்லோரும் விவசாயத்திற்கு பெரும்பாலும் நீர்மூழ்கி மோட்டார்களைத்தான் உபயோகிக்கிறார்கள். என் அத்தை மகன் மின் மோட்டார்களை சரிசெய்யும் வேலையை செய்துகொண்டிருந்தவன் டெக்னாலஜியை அட்டேட் செய்து இப்போது நீர்முழ்கிகளையும்.

சில நாட்களுக்கு முன் ‘எப்படி மச்சான் பிஸினஸ் போகுது’ எனகேட்டதற்கு, ‘சூப்பர் மாமா!... இதுவரைக்கும் ஒரு அம்பது மோட்டார் வாங்கிக் கொடுத்திருக்கேன்’ என்றான். யார் யார் மச்சான் என கணக்கு கேட்டதற்கு ஏழினைத் தாண்டவில்லை.

அதிசயமாய் உண்மையைப் பேசினாலும் அயராத வேலைக்காரன். எப்போதும் சுறுசுறுப்பாகவே இருப்பான்.

மணியிடம் சென்றவாரம் பேசிக்கொண்டிருந்தபோது மச்சான் டாபிக் வர, 'யோவ், படு இன்ட்ரஸ்டிங்கான மேட்டர் ஒன்னு இருக்கு, மச்சானைப் பத்தி’ என சொல்ல ஆரம்பித்தான்.

‘ பாலமுருகன் காட்டில் மோட்டார் வேலை செய்யல, சரி பண்ற மெக்கானிக் எல்லோரும் பிஸியாயிருக்க, என் கிட்ட வந்து வயல் காயுதுன்னு பொலம்புனான். அட நம்ம மச்சான் இருக்காம்பா, அவன் சரிபண்ணிடுவான்’னு சொன்னேன்.

‘எனக்கும் அவனுக்கும் ஆவாது, என் காட்டுல வேலைன்னாலே வரமாட்டான், ஆனா வேற வழியில்ல நீ சொல்லி வேணா அனுப்பி வை’ன்னான்.

மச்சானுக்கு போன்போட்டேன், அஞ்சாவது நிமிஷத்தில் ஆஜர். ‘என்ன மாமா விஷயம்-னு கேட்க, ‘ஒரு மோட்டார் ரிப்பேர் பாக்கனும் மச்சான்’னு ஆரம்பிக்கும்போதே ‘பாலமுருகன் காட்டுக்கெல்லாம் நான் வரமாட்டேன்னு சொன்னதும் ஆடிப்போயிட்டேன்.

’எப்படி மச்சான்-னு அசந்துபோய் கேட்டேன். ‘எனக்கு தெரியும் மாமா, நீ அதுக்குத்தான் கூப்பிட்டன்னு, எனக்கும் ஆள் இருக்கில்ல’ என்றான்.

ஒரு வழியாய் அவங்களுக்குள்ள இருந்த பிரச்சினையை ஒரு மணிநேரம் பேசித் தீர்த்து மோட்டரை சரி பண்ண காட்டுக்கு கிளம்பினோம். என் வண்டியில் உக்கார வந்த பாலமுருகனை, ‘மச்சி மாமங்கிட்ட வந்து உக்காருடா, முறப்பாடு தீந்துடுச்சில்ல’ என அவன் வண்டியில் ஏற்றிக்கொண்டான்.

மோட்டரை வெளியில் இழுத்து பிரித்து என்னென்னவோ செஞ்சான். ஸ்டார்ட்டர் இருக்கிற பெட்டி, ஃப்யூஸ் இருக்கிற பெட்டி எல்லாத்தையும் கழட்டி ஒரு வழியா பழையபடி மாட்டி மோட்டாரை கிணத்துல இறக்கி, சுட்ச போட்டான், ஒரு சத்தமும் வரலை.

ரெண்டு பீஸ்ல ஓடுறதுக்கு வெச்சிருந்த கண்ட்ன்ஸர நோண்டி என்னவோ பண்ணிட்டு, ‘மச்சி, எல்லாம் சுகுரா இருக்கு. கம்பத்துல இருந்து வர்ற ஒயர்லதான் பிரச்சினை. ஆம்ஸ எல்லாம் ஏத்தி வெச்சிட்டேன். லைன்மேனை அழைச்சிட்டு வந்து ஒயர சீவி போடு, மோட்டார் சூப்பரா ஓடும். சரி மாமா, பிச்சன் வீட்டு மோட்டார பாக்கனும், நான் கிளம்பறேன்’னு சொல்லிட்டு பறந்துட்டான்.

லோ ஓல்ட்டேஜ்-னால ஒயர்மேன் எல்லாரும்  நிறைய இடத்துல சரி பண்ணிட்டு பயங்கர பிஸி. கிடைச்ச ஒருத்தருகிட்ட கால்ல விழாத குறையா கெஞ்சி குவார்ட்டர் வாங்கித் தர்றோம்னு சொல்லி மூணு மணி வாக்குல ஒயர பிரிச்சி அடிச்சோம். சுட்ச போட்டா அப்பவும் மோட்டார் ஓடல.

எதேச்சையாய் இன்னொரு மெக்கானிக், வீரகனூர்காரன் எங்கேயோ வேலையை முடிச்சிட்டு காட்டு வழியா வர, அவனைக் கெஞ்சி கூத்தாடி சரி பண்ண சொன்னோம். மேல இருக்கிற எல்லா ஒயரையும் செக் பண்ணி பார்த்தவன் மோட்டரை மேல இழுக்கச் சொன்னான்’.

டூம பிரிச்சிப் பார்த்தா உள்ள ஒரு ஒயர் கனெக்சன் கட்டாயிருந்துச்சி. நொந்தே போயிட்டோம். அத சரியா சீவி கனெக்ட் பண்ணி மோட்டார கிணத்துல இறக்கி சுட்ச போட்டா சும்மா கிர்ருன்னு ஓடிச்சி. அவனுக்கு காச கொடுத்து அனுப்பிட்டு ஒயர் பிஞ்சத கூட பாக்காம என்ன மெக்கானிக்குன்னு திட்டி பேசிக்கிட்டிருந்தோம். ஒரு மாதிரி சத்தம் வந்துச்சி, தண்ணி வரல. மோட்டார் காயில் போயிடுச்சி.

ஆத்துருக்கு எடுத்த்துட்டு போய் மோட்டர காயில் கட்டி கிணத்துல இறக்கி, பெட்டியில ஆம்ஸ் செக் பண்ணிட்டு அந்த ஆளு, ‘இதுக்கு முன்னால எவன் இந்த பெட்டியில கையை வெச்சான்’னு கோபமா கேட்கவும் எங்க ஊரு மெக்கானிக்தான்னு சொன்னோம்.

‘ஆம்ப்ஸ் மூனுலயும் ஒரே மாதிரியா இருக்கனும். ஒன்னுல எம்பது காட்டுது, இன்னொன்னுல நூத்தி முப்பது இன்னொன்னுல நூத்தி அறுபது. இந்த மாதிரி இருந்தா எந்த மோட்டாருதான் காயில் போகாது’ன்னு சொன்னாரு.

எனக்கு அப்போ மச்சான் ”எல்லத்துலயும் ஆம்ப்ஸ ஏத்தி வெச்சிருக்கேன்”னு சொன்னது ஞாபகத்துக்கு வர சிரிக்க ஆரம்பிச்சிட்டேன்.

’யோவ், இதெல்லாம் மேட்டர் இல்ல, அன்னிக்கி சாயங்காலமே மச்சாங்கிட்ட கேட்டேன், ஒயர் கட்டானதாலதான் மோட்டார் ஓடல, அதப் பாக்காம என்னென்னமோ வேலை பண்ணிட்டியே மச்சான்னு’.

அதுக்கு சொன்னான் பாரு, ‘மாமா, என் வேலையிலயே உனக்கு டவுட்டா, எல்லாம் சுகுரா இருந்துச்சி, இறக்கினவுடனே ஒயர எலி கடிச்சிருக்கும்-னு சொன்னான், எனக்கு மயக்கமே வர்ற மாதிரி ஆயிடுச்சி, அது நீர்மூழ்கி மோட்டருய்யா’ என சிரிக்க ஆரம்பித்தான்.

’இதை மச்சான்கிட்ட சொல்லியிருந்தா அதுக்கும் மாத்தி இல்லையில்ல மீன் கடிச்சிருக்கும்’னு சொல்லியிருப்பான்னு சொன்னேன்.

மசாலா கஃபே...கலகலப்பு...

|

சில நேரங்களில் சாப்பிட எண்ணி மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உயர்தர வகையறாக்களுக்கு செல்வோம், ஏனடா சென்றோம் என பல நாட்களுக்கு வருந்துவோம்.

இன்னும் சில நாட்களில் எதிர்பார்ப்பே இல்லாமல் சுமாரான ஓட்டல் என எண்ணி சென்று அசத்தலான சந்தோஷத்தோடு வருவோம்.

கதையாக சொல்லாமல் ஜஸ்ட் என் கருத்து மட்டும்...

சுந்தர் படம் என்றால் இப்படித்தான் இருக்கும் என தெரிந்து அந்த கண்ணோட்டத்தில் செல்பவர்களுக்கு நிச்சயம் விருந்துதான். அவர்களுக்கு கலகலப்....பூ.

லாஜிக், கதை என இன்ன பிற வகையறாக்களை எண்ணிக்கொண்டு படம் பார்க்க செல்பவர்களுக்கு இது ஒரு கலகல....ப்ப்ப்பூ.

மிகவும் சாதாரண கதை, குழப்பம் இல்லாமல், மூன்று இடங்களில் நிகழ்வதை சொல்லியிருக்கிறார்கள்.

கேமிரா பளீர். இரவு பன்னிரண்டு மணிக்கு நடப்பதாய் சொல்லப்படும் காட்சிகள் எல்லாம் பில்டர் போட்டு பகலில் எடுத்திருக்கிறார்கள் என எண்ணுகிறேன்.

வசனம் குறிப்பிடும்படியாய் இருக்கிறது அண்ணன் கேபிள் அவர்களின் ஒத்துழைப்பில். தனி ஆவர்த்தனம் செய்யும் நாளில் நமக்கெல்லாம் பெரும் விருந்து காத்திருக்கிறது.

சுந்தர் சியின் படத்தில் வரும் எல்லா வழக்கமான பாத்திரங்களும் வருகிறார்கள், தங்கள் கடமையை செய்கிறார்கள்.

மிகக் குறிப்பிடும்படியாய் கலக்கியிருப்பவர்கள் சிவாவும், சந்தானமும்தான்.

அஞ்சலி அழகு. அம்மணி காதலிக்க ஆரம்பித்ததற்குப் பிறகு வேலையை விட்டுவிட்டார்கள் போலிருக்கிறது, மசாலா கஃபேவிலேயே இருக்கிறார்.

ஓவியா வரும் காட்சிகள் அம்மா சீக்கிரம் போவியா என ஈர்ப்பில்லாமல் இருக்கிறது.

இரு பாடல்கள், படமாக்கிய விதம் அருமையாய் இருக்கிறது.

கிளைமாக்ஸ் ரொம்பவும் இழுவை, இன்னும் சுவராஸ்யப்படுத்தியிருக்கலாம்.

அண்ணன் கேபிள் சங்கர் பாணியில் சொல்லவேண்டுமானால் இன்னும் கொஞ்சம் மெனக்கட்டிருக்கலாம். 

பாடமும்... படிப்பினையும்...

|

சில நேரங்களின் நிகழும் சில விஷயங்கள் நடக்கவிருக்கும் சிலவற்றிற்கு முன்னோட்டமாய் அமையும். அந்த வகையில் நிகழ்ந்த இரு விஷயங்கள் இந்த இடுகையில்.

நிகழ்வு ஒன்று:

ஐபிஎல் பார்த்து என்னோடு சந்தோசித்திருந்த ஜூனியரை ஊருக்கு செல்லும் எனது நண்பனின் காரில் அனுப்பிவைக்க வேண்டும் என விரைவாய் டூ வீலரில் சென்று கொண்டிருந்தேன். நண்பன் சுப்புவின் வீட்டில் இருந்த அவரை பல்லவரத்தில் இருந்து கிளம்பும் நண்பனிடம் விடவேண்டும். டைடல் பார்க் சிக்னலில் பச்சை ஒளிர்ந்ததும் பட்டென கிளப்பி காலியாய் இருந்த சாலையில் வண்டியை விரட்டினேன்.

ஓரமாயிருந்த போக்குவரத்து போலீஸ் என்னை மறித்து ஓரம் கட்ட சொல்ல, ஒதுங்கினேன். ‘இப்போ இவர் சொல்வாரு பாரு’ என பக்கத்தில் இருந்தவரிடம் சொல்லி, ‘என்ன சார் ஸ்பீடா வந்தீங்களா?’ என நக்கலாய் கேட்டார்.

‘ஆமாம் சார் ஸ்பீடாகத்தான் வந்தேன்’ என அடக்கமாய் சொல்ல அவருக்கு அதிர்ச்சி. ‘எண்பத்து மூணு கிலோமீட்டர் வேகத்தில் வந்திருக்கிறீர்கள்’ என சொல்லி, ‘எனக்குத் தெரிந்து வேகமாய் வந்ததை ஒப்புக்கொள்ளும் முதல் நபர் நீங்கள்தான்’ என அதிசயித்து சொன்னார்.

‘ஆமாம் சார், என் மகனை அனுப்பி வைக்க வேண்டிய கட்டாயம்’ என்றேன்.

’சார் ஆச்சர்யமா இருக்கு, அங்க பாரு, எத்தனை பேர் நிக்கிறாங்க, யாருமே ஸ்பீடா வந்ததை ஒத்துக்கலை’.

‘வந்ததை ஒத்துகிட்டுதானே சார் ஆகனும்’  என்றேன்.

‘ரொம்பவும் ஆச்சர்யமா இருக்குசார் எனச் சொல்லி, பக்கத்தில் இருந்த அவருடன் பணியாற்றுபவரை விளித்து, ‘சார், ஸ்பீடா வந்தேன்னு ஒத்துகிட்ட முதல் ஆளு இவருதான்’ என மறுபடியும் சொன்னார்.

‘சரி முந்நூறு ரூபாய் ஃபைன் கட்டுங்க’ எனச் சொன்னார்.

உடனே சரி எனச்சொல்லி வாலட்டை எடுக்க, ‘சார், இவ்வளவு நேர்மையா இருக்கீங்க, உங்ககிட்ட ஃபைன் வாங்குறது பாவம் சார், சரி ஒரு இருநூறு கொடுத்துட்டு கிளம்புங்க’ என்றார்.

அப்போது அங்கு அமர்ந்திருந்தவர் பைனாகுலர் மாதிரி ஒன்றில் தொலைவில் வரும் வண்டியினைப் பார்த்து ’சார் 1022, கார் ஸ்பீடா வருது’ என்றார், அடுத்த பலியாடு. மறிக்க மற்றவர் விரைந்தார்.

‘இல்லை சார், என் தப்புக்கு ஃபைன் கட்டியாகனும், ரெசிப்ட் கொடுங்க’ என்றேன்.

’இல்லை சார், மனசாட்சி இடம் தரல. காசு வாங்கினா பாவம். ஆனாலும் சும்மா அனுப்ப முடியாது, நிறைய பேரை பிடிச்சி வெச்சிருக்கோம், உங்கள மட்டும் விட்டுட்டா பைசா தேறாது, ஒரு நூறு ரூபாய் மட்டும் கிளம்புங்க’ என சொல்லி ‘சார், டூ வீலர்ல ஸ்பீடா போகாதீங்க, திடீர்னு குறுக்கே வந்தா கண்ட்ரோல் பண்ண முடியாது, கார் மாதிரி கண்ட்ரோல் இருக்காது, பார்த்து போங்க’ என்றார். தேங்க்யூ சார் என்று கிளம்பினேன்.

நிகழ்வு இரண்டு:

நேற்று காலை ஏழு மணியளவில் திநகர் தாண்டி சிஐடி நகர் அருகே சென்றுகொண்டிருந்தேன். முன்னால் வெள்ளை கலர் ஷேர் ஆட்டோ நடு ரோட்டில் சென்று கொண்டிருந்தது.

அதை ஓவர்டேக் செய்யலாமென விரட்டி முந்த எத்தனித்த தருணத்தில் இண்டிகேட்டரோ, கையால் சைகையோ என எந்த ஒரு அறிவிப்புமில்லாமல் வலதுபுறம் திரும்ப, பிரேக் போடகூட நேரமில்லை. வண்டியை மோதி இடது தோள்பட்டையில் சட்டை கிழியும் அளவிற்கு வலுவாய் இடித்து கீழே விழுந்தேன். இரு கால்களிலும் நல்ல அடி, சிறிய சிராய்ப்பு.

முதலில் வண்டியை இருவரும் ஒரமாய் தள்ளி போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் செய்தோம். ‘கையை காட்டினேன், கவனிக்காமல் மோதிவிட்டாய்’ என ஆரம்பித்தான்.

‘பொய் சொல்லாதே, இண்டிகேட்டர் போடலை, கையையும் காட்டல’ என்றேன்.

‘இண்டிகேட்டர் வேலை செய்யல, ஆனா கை காட்டினேன், நீ கவனிக்கல’ என்று வாதிட்டான்.

‘பொய் சொல்லாதே, கையும் காட்டல ஒரு மண்ணும் காட்டல’ என்றேன்.

அதற்குள் கூட்டம் கூடிவிட, அங்கு பார்த்துக்கொண்டிருந்த எல்லோரும் ஆட்டோக்காரை வைய ஆரம்பித்தார்கள். ‘உன்மேல் தான் தப்பு, கையை காட்டாம திருப்பிட்டே’ என ஒருவர் சொல்ல, ‘ஆமா, சிக்னல் அங்க இருக்க இங்க ஏன் திருப்புன?’ என மற்றவர் கேட்டார்.

‘அண்ணனுக்கு அடிபட்டிருக்கு, தண்ணி மொதல்ல கொடுங்கப்பா’ என ஒரு பாசக்கார தங்கச்சி சொல்ல ஆட்டோ டிரைவர் ஓடிப்போய் டீக்கடையில் கிளாசில் தண்ணீர் கொண்டுவந்தார்.

‘அண்ணா ஊட்டுக்கு போன்னா, வேலைக்கு போக வேணாம், போய் மவராசி முஞ்ச பாரு’ என அக்கறையாய் சொன்னது.

‘சரி சரி, காசு ஏதாச்சும் வாங்கிட்டு ஆட்டோக்காரரை விட்டுடுங்க தம்பி, தினக்கூலிக்காரன், பொழைச்சிப்போறான்’ என்று ஒருவர் சொன்னார்.

தண்ணீரைக் குடித்துவிட்டு, ஆட்டோக்காரரைப் பார்த்து கேட்டேன், ‘தப்பு உன்மேல் தான் என்பதை ஒத்துக்கொள்கிறாயா?’

’ஆமாம் சார்’ எனச் சொல்ல, 'இண்டிகேட்டரை சரி பண்ணு, பார்த்து ஓட்டு, பொய் சொல்லாதே’ எனச் சொல்லி காலை விந்திய வண்ணம் வண்டியை கிளப்பினேன்.

நான் பார்த்த மொக்கைப் படங்கள்...

|

சினிமா நமது வாழ்வின் அங்கமாகிவிட்ட ஒன்று. ஏதேனும் ஒன்று பற்றி உதாரணம் சொல்ல வேண்டுமென்றாலும் இன்றெல்லாம் சினிமாவைத்தான் உதாரணமாய் காட்டுகிறார்கள். சினிமாவில் பேசப்படும் பிரபல வசனங்கள் தாம் சமீபத்திய பேச்சுகளில் இழையோடுகிறது.

வாழ்வில் மறக்கவே முடியாத சில படங்கள் ஒவ்வொருவருக்கும் இருக்கும், அதற்கான காரணங்கள் பலவாக இருந்தாலும் குறிப்பாய் இரண்டுதானிருக்கும். ஒன்று மிகவும் பிடித்தது, மற்றொன்று ஏனடா இந்த படத்திற்கு வந்தோம் என எண்ணவைத்தது.

இன்றெல்லாம் படத்திற்கு செல்வதற்கு முன் விமர்சனங்களைப் படித்து, எல்லாவற்றிற்கும் நம்மை தயார்படுத்திக்கொண்டு செல்கிறோம். ஓரளவிற்காவது அந்த படத்தினைப் பற்றிய விவரத்துடன் செல்கிறோம். ஆனால் அன்று?

இந்த இடுகை பார்த்து நொந்துபோன மூன்று படங்களைப் பற்றி.

சிவப்பு நிறத்தில் ஒரு சின்ன பூ என்றொரு படம். எத்தனை பேருக்கு இப்படி ஒரு படம் வந்திருக்கிறது என தெரியும் என்பது கேள்விக்குறி. எல்லா படங்களையும் விடாது பார்க்கும் கல்லூரி தருணத்தில் பெரம்பலூர் ராம் தியேட்டரில் காலைக் காட்சியாய் பார்த்தது.

சத்தியமாய் உள்ளே இருபது நிமிடங்கள் தான் இருந்தேன். ஏதோ தொழிலாளர் பிரச்சினை, வறுமை, கேவலமான திரை(அப்போது பழுப்பு கலராய் இருக்கும்) என எல்லாம் இருக்கவிடாமல் செய்ய, ஆளை விட்டால் போதும் என, மீ... த எஸ்கேப்...

மாப்பிள்ளை மனது பூப்போல என்றொரு படம் ஆத்தூர் சொர்ணம் தியேட்டரில் ரிலீசாகியிருந்தது. குருவிக்கரம்பை சண்முகம் அவர்களின் சொந்தப் படம் என எண்ணுகிறேன். அப்போது சக்தி சிஸ்டத்தில் இருந்தேன், நாங்கள் மூன்று பேர் நான், சங்கர் அண்ணா, பாலாதான் முழுப் பொறுப்பு.

தியேட்டர் ஓனர் பையன் எங்களிடம் கம்ப்யூட்டர் கற்றுக்கொள்ளும் மாணவன் என்பதால், டிக்கெட் தேடி வந்துவிட்டது, இலவசமாய். படம் பார்க்க கிளம்பியதற்கு முக்கிய காரணம், யுவராணி கதாநாயகி. எனக்கும் ஷங்கர் அண்ணாவுக்கும் யுவராணியை ரொம்பப் பிடிக்கும். பாண்டியராஜன் கதாநாயகன். பாலா வேண்டாமடா என எச்சரித்தும் கேளாமல் உள்ளே சென்றோம்.

பெண்பார்க்கும் படலம், கட்டைக் குதிரையைப் பார்த்து ஒரு பாடல் என படு மொக்கையாய் இருக்க, உட்கார்ந்த பத்தாவது நிமிடத்தில் ஷங்கர் அண்ணா என்னைப் பார்த்து தம்பி போகலாமா எனக்கேட்க, ஆகா எனக் கிளம்பி, பாலா வண்டியை எடுத்து வந்துவிடு என சொல்லிவிட்டு வெளியே எஸ்கேப்...

நடந்தே ரூமிற்கு சென்றுவிட, பாலா பதினோரு மணிபோல்தான் வந்தான், பேயடித்தாற்போல். இடைவேளைக்கு முன்னால் வண்டியை எடுத்து செல்ல அனுமதிக்க மாட்டார்களாம். கெஞ்சிக் கதறியும் வேலைக்காக வில்லையாம். விட்டு வந்த எங்களை அவன் அர்ச்சித்ததை சத்தியமாய் இங்கு எழுத முடியாது.

மூன்றாவதாய் உமைக்குயில். அதே சொர்ணம் தியேட்டர், முன் சொன்ன படத்திற்கு முன்னதாய். பாக்கியராஜைக் காப்பியடித்தார் போல யோகராஜ் என்பவர் நடித்த படம். இரண்டு பாடல்கள் நன்றாக இருந்தது வெளியில் வந்து கேட்கும்போது. (கன்னம் சிவந்தது வெக்கத்தில் உனக்கு.... மற்றும் இது ராத்திரி...சாமத்துல) அவ்வளவாய் விவரம் தெரியாத வயது, அப்போதே முழுதாய் பார்க்க இயலவில்லை. இடைவேளையோடு வந்துவிட்டேன்.

பூ மனசு (பெரம்பலூர் தனம் தியேட்டரில் ஒரே காட்சிதான் இந்த படம், அடுத்து காட்சிக்கு பூந்தோட்டக்  காவல்காரன். அப்படியும் பார்த்தாயிற்று), தாஜ்மகால், நாட்டுக்கு ஒரு நல்லவன் என இன்னும் நிறைய சொல்லிக்கொண்டு போகலாம்.

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB