ஸ்கை ஃபால் - விமர்சனம்...

|



எந்த ஒரு விசயத்தையும் முதன்முறையாய் பரீட்சித்து பார்க்கும்போது மெலிதாய் மனதிற்குள் ஒரு பயம் இருக்கத்தான் செய்யும். தமிழ் படங்களுக்கு அவ்வப்போது விமர்சனம் எழுதுவதில் கொஞ்சமும் தயக்கம் இருந்ததில்லை. ஆங்கிலப் படத்திற்கு எனும்பொழுது கொஞ்சம் உதறலாய்த்தான் இருக்கிறது. பார்த்ததை பகிரவேண்டும் எனும் உந்துதல் அதிகமாய் உறுத்த, இதோ எனது புரிதலில்.

கமலா திரையரங்கில் வேல்முருகன், கஜேந்திரன் சாருடன் பார்த்தேன். இதுதான் அங்கு பார்க்கும் முதல் படம். நன்றாக பராமரிக்கப் பட்டு எல்லாம் சரியாய் இருக்கிறது. டூ வீலர் பார்க்கிங் இருபது ரூபாய் என்பது அதிகமாய் இருக்கிறது.

Daniel Craig - ஐ ஜேம்ஸ் பாண்டாகவே ஒத்துக்கொள்ள மாட்டேன், Sky fall பார்க்கும் முன்பு வரை. அவரிடத்தில் ஏதோ மிஸ்ஸிங், என்ன வென்று அதுபற்றி நிறைய யோசிக்கலாம். ஆனால் அளவான, மிதமான நடிப்பில் கவர்கிறார்.

இதுதான் பாண்ட் படங்களிலேயே கவர்ச்சி மிகவும் குறைவாய், அதிக சென்டிமென்ட், நிறைந்த கதையம்சம் என வந்திருக்கும் படம் என்பது என் கருத்து.

சைனாவில் பணியாற்றிய ஒரு முன்னாள் உளவாளி, தான் எதிரிகளிடம் மாட்டிக்கொண்ட போது எந்த ஒரு உதவியும் கிடைக்காததால் அதற்கு காரணமான தலைவர் எம்-மை எப்படி பழிவாங்குகிறார் என்பதை டெக்னாலஜி, சென்டிமென்ட், பிரம்மாண்டம் என எல்லாம் புகுத்தி வந்திருக்கும் படம் இது.

ஆரம்பக் காட்சியில் இஸ்தான்புல் நகரில் பைக் சேசிங் மிகவும் அருமை, பிரமிப்பாய் இருந்தது. அதனைத் தொடர்ந்து கார் மற்றும் ட்ரெயின் என அடுத்தடுத்த காட்சிகள் அழகாய் படமாக்கப் பட்டு அசத்தலாய் இருக்கிறது.

ஷங்காயை பல படங்களில் பார்த்திருந்தாலும், இதில் காட்டிய விதம் அருமை. நிஜமாய் கேமிராமேன் மிரட்டியிருக்கிறார். மற்ற ஜேம்ஸ் படங்களிலிருந்து இதனை சண்டைக் காட்சிகளை முற்றிலும் வேறுபடுத்திக்காட்டி இருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும்.

சில்வா(Silva) என்ற பாத்திரத்தில் வில்லனாக நடித்திருக்கும் ஜேவியர் பர்டெம் (Javier Bardem) இந்த படத்திற்கு தூண் என்றால் மிகையில்லை, பின்னி பெடலெடுத்திருக்கிறார். அறிமுகக் காட்சியில் வசனம் பேசியபடி வரும் லாங் ஷாட்-டில் தனது ராஜாங்கத்தை ஆரம்பித்தவர், இறுதிவரை தோன்றும் இடங்களிலெல்லாம் மிரட்டுகிறார்.

சைலன்ஸ் ஆப்த லேம்ப்ஸ்-ல் ஆண்டனி ஹாப்கின்ஸ்(Anthony Hopkins), இளம் வயதிலேயே இறந்து போன தி டார்க் நைட் ஹீத் லெட்ஜெருக்கு(Heath Ledger) பிறகு இவரை எனக்கும் மிகவும் பிடித்திருக்கிறது.

அதீத பாதுகாப்பில் அடைத்து வைத்திருந்தாலும் சில்வா(Silva) தப்பித்து, கோர்ட்டில் என்கொயரி சமயத்தில் எம்மை கொல்ல முயற்சிக்க எம்-தான் டார்கெட் எனத் தெரிந்தவுடன், அவரை போலீஸ் பாதுகாப்பில் வைக்காமல், அவரை ஸ்காட்லாண்டில் உள்ள தனது வீட்டுக்கு அழைத்துசென்று சில்வாவை வரவழைக்கும் உத்தி அருமை.

வழக்கமான ஜேம்ஸ்பாண்ட் படத்தினை எதிர்ப் பார்த்து செல்பவர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றம் இருந்தாலும், மொத்தத்தில் இந்த படம் அருமை. அவசியம் பார்க்கலாம்.

வேல்முருகன் - இந்த படம் இந்தியாவில் ஓடாது.

கஜேந்திரன் சார் - சூப்பர்.

சில சந்தேகங்களை நிவர்த்தி செய்த கஜேந்திரன் சாருக்கு நன்றி...

0 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB