எலி கடிச்சிருச்சிருக்கும்...

|

என் அத்தை மகன் பற்றி நிறைய இடுகைகளில் சொல்லியிருக்கிறேன். சமீபத்தில் கேள்விப்பட்ட ஒரு சம்பவம் மிக சுவராஸ்யமாயிருக்க இதோ ஒரு இடுகையாய்...

இப்போதெல்லாம் எங்கள் பக்கத்தில் எல்லோரும் விவசாயத்திற்கு பெரும்பாலும் நீர்மூழ்கி மோட்டார்களைத்தான் உபயோகிக்கிறார்கள். என் அத்தை மகன் மின் மோட்டார்களை சரிசெய்யும் வேலையை செய்துகொண்டிருந்தவன் டெக்னாலஜியை அட்டேட் செய்து இப்போது நீர்முழ்கிகளையும்.

சில நாட்களுக்கு முன் ‘எப்படி மச்சான் பிஸினஸ் போகுது’ எனகேட்டதற்கு, ‘சூப்பர் மாமா!... இதுவரைக்கும் ஒரு அம்பது மோட்டார் வாங்கிக் கொடுத்திருக்கேன்’ என்றான். யார் யார் மச்சான் என கணக்கு கேட்டதற்கு ஏழினைத் தாண்டவில்லை.

அதிசயமாய் உண்மையைப் பேசினாலும் அயராத வேலைக்காரன். எப்போதும் சுறுசுறுப்பாகவே இருப்பான்.

மணியிடம் சென்றவாரம் பேசிக்கொண்டிருந்தபோது மச்சான் டாபிக் வர, 'யோவ், படு இன்ட்ரஸ்டிங்கான மேட்டர் ஒன்னு இருக்கு, மச்சானைப் பத்தி’ என சொல்ல ஆரம்பித்தான்.

‘ பாலமுருகன் காட்டில் மோட்டார் வேலை செய்யல, சரி பண்ற மெக்கானிக் எல்லோரும் பிஸியாயிருக்க, என் கிட்ட வந்து வயல் காயுதுன்னு பொலம்புனான். அட நம்ம மச்சான் இருக்காம்பா, அவன் சரிபண்ணிடுவான்’னு சொன்னேன்.

‘எனக்கும் அவனுக்கும் ஆவாது, என் காட்டுல வேலைன்னாலே வரமாட்டான், ஆனா வேற வழியில்ல நீ சொல்லி வேணா அனுப்பி வை’ன்னான்.

மச்சானுக்கு போன்போட்டேன், அஞ்சாவது நிமிஷத்தில் ஆஜர். ‘என்ன மாமா விஷயம்-னு கேட்க, ‘ஒரு மோட்டார் ரிப்பேர் பாக்கனும் மச்சான்’னு ஆரம்பிக்கும்போதே ‘பாலமுருகன் காட்டுக்கெல்லாம் நான் வரமாட்டேன்னு சொன்னதும் ஆடிப்போயிட்டேன்.

’எப்படி மச்சான்-னு அசந்துபோய் கேட்டேன். ‘எனக்கு தெரியும் மாமா, நீ அதுக்குத்தான் கூப்பிட்டன்னு, எனக்கும் ஆள் இருக்கில்ல’ என்றான்.

ஒரு வழியாய் அவங்களுக்குள்ள இருந்த பிரச்சினையை ஒரு மணிநேரம் பேசித் தீர்த்து மோட்டரை சரி பண்ண காட்டுக்கு கிளம்பினோம். என் வண்டியில் உக்கார வந்த பாலமுருகனை, ‘மச்சி மாமங்கிட்ட வந்து உக்காருடா, முறப்பாடு தீந்துடுச்சில்ல’ என அவன் வண்டியில் ஏற்றிக்கொண்டான்.

மோட்டரை வெளியில் இழுத்து பிரித்து என்னென்னவோ செஞ்சான். ஸ்டார்ட்டர் இருக்கிற பெட்டி, ஃப்யூஸ் இருக்கிற பெட்டி எல்லாத்தையும் கழட்டி ஒரு வழியா பழையபடி மாட்டி மோட்டாரை கிணத்துல இறக்கி, சுட்ச போட்டான், ஒரு சத்தமும் வரலை.

ரெண்டு பீஸ்ல ஓடுறதுக்கு வெச்சிருந்த கண்ட்ன்ஸர நோண்டி என்னவோ பண்ணிட்டு, ‘மச்சி, எல்லாம் சுகுரா இருக்கு. கம்பத்துல இருந்து வர்ற ஒயர்லதான் பிரச்சினை. ஆம்ஸ எல்லாம் ஏத்தி வெச்சிட்டேன். லைன்மேனை அழைச்சிட்டு வந்து ஒயர சீவி போடு, மோட்டார் சூப்பரா ஓடும். சரி மாமா, பிச்சன் வீட்டு மோட்டார பாக்கனும், நான் கிளம்பறேன்’னு சொல்லிட்டு பறந்துட்டான்.

லோ ஓல்ட்டேஜ்-னால ஒயர்மேன் எல்லாரும்  நிறைய இடத்துல சரி பண்ணிட்டு பயங்கர பிஸி. கிடைச்ச ஒருத்தருகிட்ட கால்ல விழாத குறையா கெஞ்சி குவார்ட்டர் வாங்கித் தர்றோம்னு சொல்லி மூணு மணி வாக்குல ஒயர பிரிச்சி அடிச்சோம். சுட்ச போட்டா அப்பவும் மோட்டார் ஓடல.

எதேச்சையாய் இன்னொரு மெக்கானிக், வீரகனூர்காரன் எங்கேயோ வேலையை முடிச்சிட்டு காட்டு வழியா வர, அவனைக் கெஞ்சி கூத்தாடி சரி பண்ண சொன்னோம். மேல இருக்கிற எல்லா ஒயரையும் செக் பண்ணி பார்த்தவன் மோட்டரை மேல இழுக்கச் சொன்னான்’.

டூம பிரிச்சிப் பார்த்தா உள்ள ஒரு ஒயர் கனெக்சன் கட்டாயிருந்துச்சி. நொந்தே போயிட்டோம். அத சரியா சீவி கனெக்ட் பண்ணி மோட்டார கிணத்துல இறக்கி சுட்ச போட்டா சும்மா கிர்ருன்னு ஓடிச்சி. அவனுக்கு காச கொடுத்து அனுப்பிட்டு ஒயர் பிஞ்சத கூட பாக்காம என்ன மெக்கானிக்குன்னு திட்டி பேசிக்கிட்டிருந்தோம். ஒரு மாதிரி சத்தம் வந்துச்சி, தண்ணி வரல. மோட்டார் காயில் போயிடுச்சி.

ஆத்துருக்கு எடுத்த்துட்டு போய் மோட்டர காயில் கட்டி கிணத்துல இறக்கி, பெட்டியில ஆம்ஸ் செக் பண்ணிட்டு அந்த ஆளு, ‘இதுக்கு முன்னால எவன் இந்த பெட்டியில கையை வெச்சான்’னு கோபமா கேட்கவும் எங்க ஊரு மெக்கானிக்தான்னு சொன்னோம்.

‘ஆம்ப்ஸ் மூனுலயும் ஒரே மாதிரியா இருக்கனும். ஒன்னுல எம்பது காட்டுது, இன்னொன்னுல நூத்தி முப்பது இன்னொன்னுல நூத்தி அறுபது. இந்த மாதிரி இருந்தா எந்த மோட்டாருதான் காயில் போகாது’ன்னு சொன்னாரு.

எனக்கு அப்போ மச்சான் ”எல்லத்துலயும் ஆம்ப்ஸ ஏத்தி வெச்சிருக்கேன்”னு சொன்னது ஞாபகத்துக்கு வர சிரிக்க ஆரம்பிச்சிட்டேன்.

’யோவ், இதெல்லாம் மேட்டர் இல்ல, அன்னிக்கி சாயங்காலமே மச்சாங்கிட்ட கேட்டேன், ஒயர் கட்டானதாலதான் மோட்டார் ஓடல, அதப் பாக்காம என்னென்னமோ வேலை பண்ணிட்டியே மச்சான்னு’.

அதுக்கு சொன்னான் பாரு, ‘மாமா, என் வேலையிலயே உனக்கு டவுட்டா, எல்லாம் சுகுரா இருந்துச்சி, இறக்கினவுடனே ஒயர எலி கடிச்சிருக்கும்-னு சொன்னான், எனக்கு மயக்கமே வர்ற மாதிரி ஆயிடுச்சி, அது நீர்மூழ்கி மோட்டருய்யா’ என சிரிக்க ஆரம்பித்தான்.

’இதை மச்சான்கிட்ட சொல்லியிருந்தா அதுக்கும் மாத்தி இல்லையில்ல மீன் கடிச்சிருக்கும்’னு சொல்லியிருப்பான்னு சொன்னேன்.

3 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

திண்டுக்கல் தனபாலன் said...

மிகவும் சுவராஸ்யமாக இருந்தது..

பகிர்வுக்கு நன்றி...
தொடருங்கள்... வாழ்த்துக்கள்...

sathishsangkavi.blogspot.com said...

ரொம்ப நாள் ஆச்சு பங்காளி... இந்த பக்கம் வந்து...

வழக்கம் போல் ஊரின் எதார்த்தமான பதிவு...

priyamudanprabu said...

:)

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB