செல்லரித்த மடல்கள்...

|

செல்பேசி வந்து மடல்களை செல்லரிக்க வைத்து மனப் பரிமாற்றங்களுக்கு முற்றுப் புள்ளியினையே வைத்துவிட்டது, உறவுகளிடையே இருந்த எதிர்ப்பார்ப்பு, ஏக்கம் என எல்லாம் தொலைந்தும் விட்டது எனலாம்.

ஆம்... கடிதங்கள் வாழ்வின் பிரதான ஒன்றாய் இருந்து இன்று ஆடிக்கொன்று, அமாவாசைக்கொன்றாய் வங்கி மற்றும் சில முக்கிய இடங்களிலிருந்து பணப்பரிமாற்றங்களுக்காக மட்டுமே என்றாகி மனப்பரிமாற்றங்களுக்கில்லை என்றாகிவிட்டது.

இதைப் படிக்கும் எத்தனைப் பேருக்கு அஞ்சல் அட்டை மற்றும் உள்நாட்டுத் தபாலின் விலை தெரியும் எனத் தெரியவில்லை. உள்நாட்டுத் தபாலின் விலை ஒன்று ஐம்பதாக இருக்கலாம், அஞ்சல் அட்டை ஐம்பது பைசாவோ? என என்னும் அளவிற்குத்தான் என் அறிவு.

கடிதம் எழுதுவது எப்படி என எனக்கு பள்ளியில் கற்றுத்தருவதற்குமுன் எல்லாமுமான என் மாமா ஐந்தாம் வகுப்பிலேயே கற்றுத்தந்தார். அப்போது அஞ்சல் அட்டையில் விலை ஐந்து பைசாவாக இருந்தது என நினைக்கிறேன்.

படித்து முடித்து சில மாதங்கள் வேலை கிடைக்கும்வரை அவர் வீட்டில் இருந்தபடி வேலைக்காக முயற்சித்த வண்ணம் இருந்தார். அந்த தருணங்களில்தாம் என்னை வங்கிக்கு அழைத்துச் சென்று எப்படி பணம் எடுப்பது, கடிதம் எழுதுவது, நூலகத்தை அறிமுகப்படுத்தியது என எல்லாம்.

மதுக்கரையில் வேலை கிடைத்து சென்றுவிட எங்களுக்கிடையில் உறவுப்பலமாய் இருந்தவை மடல்கள் தாம். அன்புள்ள மாமாவுக்கு என ஆரம்பித்து பெரும்பாலும் எல்லாக் கடிதங்களும் நல விசாரிப்புக்கள், படிப்பு சம்மந்தமான வழக்கமான தகவல் பரிமாற்றங்கள் என ஒரே மாதிரியாய்த் தானிருக்கும்.

சொல்லித்தந்தவாறு முகவரியை எழுதி, திட்டலுக்கு பயந்து பிழை இல்லாமல் எழுத முயற்சித்து உயரம் கூட எட்டாத அந்த சிவப்புப் பெட்டியில் போட்டு, அது எங்கு சென்றுகொண்டிருக்கும் என்றெல்லாம் கற்பனை செய்து தபால்காரன் மணி அண்ணன் கொண்டு வரும் பதில் கடிதத்திற்காக வழிமேல் விழி வைத்து காத்திருந்து, அவரை தினமும் அயராது கேட்க 'இல்லை கண்ணு' என்று சொல்வதையே பெரும்பாலும் கேட்டு... கடைசியாய் கிடைக்கும் பதில் கடிதம் பார்க்க வந்த மகிழ்ச்சி இருக்கிறதே...! அதை சொல்லிட வார்த்தைகள் கிடையாது.

மாமாவின் அறிவுரைகள், சென்ற மடலில் இருந்த தவறுகளை சுட்டிக்காட்டி சரிசெய்துகொள்ள அறிவுறுத்தல்கள் என எல்லாம் தாங்கி வரும் அந்த மடலைப் படித்ததும் எல்லாம் சாதிக்கலாம் என உற்சாகம் வரும்.

நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுகளையும் கடிதங்களின் முலமாய்த்தான் பகிர்ந்து கொண்டாகவேண்டிய கட்டாயம் அன்று. நல்ல கேட்ட விஷயங்கள் எல்லாம் மடல்கள் தாம் நமக்கு தெரிவிக்கும். 'மழை பெய்திருக்கிறது, மாடு கேடேரி கன்று போட்டிருக்கிறது, மோட்டார் காயில் போய்விட்டது, குட்பால் (ஃபுட் வால்வ்) கிணற்றில் விழுந்துவிட்டது என்றெல்லாம் காதில் விழுந்ததை எழுத்தால் தகவல் சொல்லி, அதற்காக வரும் பதிலில் சரிப்படுத்தலோடு அர்ச்சனைகள் தாங்கி... ஆஹா... நினைக்கும் போதே இனிமையாய் இருக்கிறது.

தேர்வில் எடுக்கும் மதிப்பெண்களைச் சுமந்து சென்று பதிலாய் பாராட்டு மற்றும் திட்டுக்களை சுமந்து வந்து சேர்க்கும். உக்கமூட்டும் வார்த்தைகளுடனும், ஆக்கபூர்வமான அறிவுரைக்களுமாய் முனைப்படுத்திக்கொள்ள எதுவாய் நிறைய இருக்கும்.

அந்த தருணத்தில் மணிமேகலை பிரசுரத்தின் 'பேனா நண்பர்கள் சங்கம், நோக்கங்களும் முகவரிகளும்' எனும் ஒரு புத்தத்தினை விபிபியில் வாங்க, அதன் முலம் நிறைய புதிய நட்புக்கள். இராசிபுரத்திலிருந்து கோபி, கோவையிலிருந்து துரையன் அய்யா என பல்வேறு நண்பர்கள், வயது வித்தியாசம் பாராமல். இதில் கோபி எனது வீட்டிற்கு வந்திருக்கிறார்.

படிக்கும், படித்த விஷயங்களைப் பரிமாறிக்கொள்ளுதல், ஊரில் நடக்கும் திருவிழாக்களைப் பற்றி விமர்சையாக எழுதி சந்தோஷங்களைப் பகிர்ந்து கொள்ளுதல், ஏதேனும் தகவல்கள் தேவையெனில் கேட்டுத் தெரிந்து கொள்ளுதல் என எல்லா வழிகளுக்கும் உற்ற துணையாயிருந்தவை மடல்கள் தான்.

எனக்கும் என் நண்பன் மணிக்கும் பிரச்சினை வந்தபோது தவறு என்மேல் என உணர்ந்து மன்னிப்புக்கேட்க உதவியதும் மடல்தான். என் தவற்றால் கடும் கோபம் கொண்ட என் அப்பாவிடம் சமாதானத் தூதுவனாய் இருந்ததும் மடல் தான்.

திருமணம் நிச்சயம் ஆகி திருமணத்திற்கான ஆறுமாதங்கள் வரை எங்களின் அன்பினைப் பரிமாறிக்கொள்ள தூதுவனாய் இருந்தது மடல்தான். ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு மாதிரியாய் சலிப்புறாமல் இருக்க வேண்டும் என பல விதமாய் எழுதவேண்டும் என்ற கட்டாயத்தை ஏற்படுத்தி எழுதும் ஆற்றலை வளர்த்ததும் மடல்கள் தாம்.

நாகரிக வளர்ச்சியில் மடல் எழுதும் காலம் போய் இன்று எல்லாம் செல்பேசி என்றாகிவிட்டது. இரண்டு வரிகள் சாட்டில் பேசினால் உடனே அழைத்துப் பேசி தொடர ஆரம்பித்துவிடுகிறோம்.

மொத்தத்தில் உறவுகளுக்கிடையே இருக்கும் நெருக்கப் பிணைப்பை, அன்பின் வெளிப்படுத்தலை நிறைய இழக்கிறோம்.

இனிமேலாவது நமது வாரிசுகளை கடிதம் இல்லாவிடினும் மெயில் மூலமாய் கடிதம் எழுதச் சொல்லி அவர்களின் எழுத்தாற்றலை வளர்த்து நமது அன்பினைப் பரிமாரிக்கொள்வோமே...!

5 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

துளசி கோபால் said...

தலைப்பு ரொம்ப பொருத்தம்!

ரசித்தேன்.

எழுதும் பழக்கம் குறைந்து போனதும் எப்பவாவது எதாவது எழுத வேண்டி வந்தால்..... நான் எழுதுனது எனக்கே புரியாம அப்படி ஒரு கோழிக்கிறுக்கல்:(

பேனா பென்ஸில் எல்லாம் ஒருநாள் காணாமப் போயிருமோ?

சத்ரியன் said...

பிரபா,

தலைப்பை பெகுவாய் ரசித்தேன்.
உங்கள் ஆதங்கமும், ஆவலும் நியாயமானவை.

ஆனாலும்,

விரல்கள் எழுத்துக்களை மறந்து விடத்தான் போகின்றன. தமிழ் எழுத்துருக்களுக்கும் ஆங்கில எழுத்துக்களே தமிழனின் மனதில் பிரதானமாய் புகுந்துக் கொள்ளும்.

ஆங்கில எழுத்தைத் தமிழாய் மாற்றி எழுத சோம்பல் கொண்டு , இன்னும் இருவது ஆண்டுகளில் நம்மில் பெரும்பாலானோர் ‘ஆங்கிலேயர்களாய்’ மாறிவிடுவோம் என நினைக்கிறேன்.

thedavuranbu said...

பிரியமிக்க அண்ணா...!

வாய் மொழி காட்டிலும் எழுத்து மொழிக்கு மென்மையும், வன்மையும் அதிகம்.. அத்தகைய எழுத்து மொழி அறிவியல் வளர்ச்சியால் வீழ்ச்சி கண்டதுதான் பெரிய சோகம்.

கடிதம் எழுதுதல் பற்றிய அறிவு கட்டுரை எழுதி மதிப்பெண் வாங்க மட்டுமே என் மாணவர்களுக்கு இன்று பயன்படுகிறது.

இதனை நான் மாற்ற முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். மாதம் ஒரு அஞ்சல் அட்டை வழியாக வகுப்புத் தோழனுக்கு, அம்மாவுக்கு, அப்பாவுக்கு, ஆசிரியர்களுக்கு என கடிதம் எழுதச் சொல்லித் ஊக்கப்படுத்துகிறேன்..

ஒருவேளை இத்தகைய முயற்சி எழுத்து மொழியின் மென்மையையும், வன்மையையும் அவர்களுக்கு உணர்த்தக் கூடும்...

இந்த செல்லரித்த மடல்கள் கூட நயமாக மனதைத் தொடக் காரணம் இது எழுத்து மொழியாக வந்ததுவே...!

இதைப் பேச்சு மொழியில் மற்றவர்களோடு பகிர்ந்து பார்க்கும் எவரும் இதனை உணர முடியும்..!!

Paleo God said...

இடுகையின் ஏக்கம் பின்னூட்டங்களிலேயே தெரிந்துவிடுகிறது. :))

என்றோ அன்பை வெளிப்படுத்திய கடிதங்கள் இன்றும் பத்திரமாய் இருக்கின்றன. ஏதோ ஒரு நேரத்தில் அதை எடுத்துப் படிப்பது கூட வேண்டாம் பார்த்துக்கொண்டிருந்தாலே இனம் புரியாத மகிழ்ச்சி ஆரத்தழுவுகிறது.

தொடர்ந்து 10 வரிகள் எழுதினாலே விரலெல்லாம் வலிக்கும் இந்த இணைய ஆக்கிரமிப்பில் உயிரோட்டமுள்ள கடிதங்கள் நம்மிடமிருந்து மெல்ல விலகுவது ஒரு இழப்புதான்.

அருமை பிரபா.

Anonymous said...

unga blog romba nalla iruku

Life is beautiful, the way it is...
90 ரூபாய் பூஸ்டர் பேக் போடுங்க 30 நாட்களுக்கு நான் ஸ்டாப் ஆ பேசுங்க மேலும் விபரங்களுக்கு இங்கே கிளிக் பண்ணுங்க 365 Days Free Unlimited Calls Click Here

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB