பொய்மையும்...

|


என் தம்பி என்னை விட்டு சென்று ஒரு வருடத்துக்கும் மேல் ஆகிறது. அவனது இடத்தினை நிரப்புவதற்கு எவராலும் இயலாத காரியம் என்றாலும் ஓரளவிற்கு அந்த குறையினைப் போக்குபவன் அன்பு, என் தம்பியின் உயிர் நண்பன், சகலை. இன்று எனக்கு இன்னுமோர் தம்பி.

இழப்பு என்னை எந்த அளவிற்கு வருத்துகிறதோ, நண்பனை இழந்த அவனுக்கும் அதே அளவில். என் தம்பிக்குப் பின் அன்பு மனம் விட்டு பேசும் ஒரே நபர் நான்தான். அவர்கள் இருவரும் சேர்ந்து செய்த ஒரு விஷயத்தை சென்றவாரம் பேசுகையில் கேட்டு ஆச்சர்யம், அதிர்ச்சி, சோகம் என எல்லாம் கலந்து கிடைக்க அன்பு சொன்னது அப்படியே அவன் சொல்வதாய் இந்த இடுகையில்.

'அண்ணா நான் எம்.எஸ்.சி முதாலாம் ஆண்டு படிக்கும்போது இது நடந்தது. என் வகுப்பில் படிக்கும் எல்லோருக்கும் திவாகரை நன்கு தெரியும், சேலம் வரும்போதெல்லாம் சந்தித்துவிட்டுதான் செல்லுவான். நானும் திவாவும் சேர்ந்து எல்லோரையும் ஏப்ரல் ஃபூல் பண்ணவேண்டும் என முடிவு செய்தோம். ஏப்ரல் ஒன்று அன்று செய்தால் எல்லோரும் புரிந்து கொள்வார்கள் என்பதால் முதல் நாளிலேயே எங்கள் வேலையினை ஆரம்பித்தோம்.

பதினோரு மணியளவில் வேண்டுமென்றே கார்த்தியிடம் சண்டை இழுக்க ஆரம்பித்தேன். என்ன செய்தாலும் சண்டை பெரிதாகாமல் போகவே வலிய கோபித்துக்கொள்வதாய் காட்டிக்கொண்டு வகுப்பினை விட்டு வெளியே வந்து நேராய் வீட்டிற்கு கிளம்பி வந்துவிட்டேன்.

கல்லூரியிலிருந்து வந்தவுடன் நேரே வீட்டுக்கு செல்லாமல் உங்கள் வீட்டிற்கு வந்து திவாவோடு பேசிக்கொண்டிருந்தேன். அப்போதெல்லாம் செல்போன் கிடையாது, உங்கள் வீட்டில் இருக்கும் போன் தான் எனக்கு பி.பி.

விளையாட்டாய் வெளியே சென்றிருக்கிறேன், வந்துவிடுவேன் என நம்பிக்கொண்டிருந்தவர்கள் ரொம்ப நேரம் வராமல் போகவே, சந்தேகப்பட்டு திவாகருக்கு போன் செய்து என்னைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தார்கள்.

திவாகர் மெதுவாய் நடந்ததை விசாரித்து அவனது பங்கிற்கு ஆரம்பித்தான். போன் செய்த கார்த்தியிடம், 'கார்த்தி உங்ககிட்டஒரு விஷயம் சொல்லுவேன், கண்டிப்பாய் நீங்கள் யாரிடமும் சொல்லக்கூடாது, ப்ராமிஸ்' என ஆரம்பித்து, 'அன்புவிற்கு ப்ரைன் ட்யூமர், இந்த விஷயம் எனக்கும் அவனுக்கு மட்டும்தான் தெரியும். இருக்கும் வரை அவர்களாவது சந்தோஷமாய் இருக்கட்டுமே என அவனது குடும்பத்தாருக்குக்கூட சொல்லவில்லை. இன்னும் ஓரிரு வருடங்கள் தான் உயிருடன் இருப்பான். தயவு செய்து அவனை எந்த விதத்திலும் கஷ்டப்படுத்தாதீர்கள், அவன் இருக்கும் வரை சந்தோஷமாய் பார்த்துக்கொள்ளவேண்டியது உங்களது, நண்பர்களாகிய நமது பொறுப்பு' என சொல்லியவுடன் கார்த்தி நிறையவே அதிர்ந்து போனான்.

பதட்டத்துடன் 'இல்லையே அப்படியெல்லாம் இருக்க வாய்ப்பில்லையே, அன்பு எதுவும் எங்ககிட்ட சொன்னதில்லையே?' எனக் கேட்க , 'அதான் முதலிலேயே சொன்னேனே, அவன் யாரையும் கஷ்டப்படுத்த விரும்ப மாட்டான். தயவு செய்து நான் உங்களிடம் சொன்னதாய் அவனிடம் சொல்லிவிடாதீர்கள். அவன் மனம் விட்டு பேசும், ஆறுதலாய் நினைக்கும் ஒரே ஆள் நான்தான்' என சோகமாய் சொல்லி போனை வைத்தான்.

சிரிப்பினை அடக்கி பக்கத்து ரூமிற்குள் ஒடி சிரித்து சொல்வதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்தேன். அடக்க முடியாத சிரிப்பினை வெளிக்கொணர்ந்து 'என்ன அன்பு என்னை மாட்டி விட்டுவிடுவாய் போலிருக்கிறது' என செல்லமாய் கடிந்து, 'சரி இனிமேல் இதை மெயின்டைன் பண்ணுவது உன் பொறுப்பு' என சொன்னான்.

அடுத்த நாள் கிளம்பி கல்லூரிக்கு சென்றேன். வழக்கமாய் இறங்கும் பேருந்து நிறுத்தத்தில் எனது வகுப்பினை சேர்ந்த பதினேழு பேரில் பத்துக்கும் மேற்பட்டோர் கும்பலாக எனக்காக காத்திருந்தார்கள்.

இறங்கியதும் விஷயம் தெரியாதவனாய் அப்பாவித்தனமாய் முகத்தை வைத்துக் கொண்டு, 'ஆமாம், ஏன் எல்லோரும் இங்கு வந்து நிற்கிறீர்கள்?' எனக்கேட்டேன்.

'ஒன்னுமில்லை அன்பு, ஐ ஏம் வெரி சாரி, தெரியாம உங்கிட்ட சண்டை போட்டுட்டேன், என்னை மன்னித்துக்கொள்' என கார்த்தி தழுதழுக்கும் குரலில் சொன்னான்.

'நான் ஒன்றும் தப்பாக நினைக்கவில்லையே! இப்பொழுதெல்லாம் தலைவலி அடிக்கடி வருகிறது. நேற்று கொஞ்சம் அதிகம், அதனால்தான் கிளம்பிவிட்டேன். சரி, டீ சாப்பிட வந்தீங்களா?' எனக் கேட்டேன். பதிலையும் நானே சொல்லிவிட்டதால் ஆமென்று தலையாட்டினார்கள்.

என்னை எல்லோரும் பார்த்த பார்வையில் இருந்து அவர்களால் கட்டுப்படுத்தியும் முடியாமல் வெளிப்பட்ட பரிதாப உணர்ச்சி எனக்குத் தெளிவாய் தெரிந்தது. ஒருவன் எனது தோளில் கைபோட்டபடி... ஆறுதாலாய் வருகிறானாம். இன்னொருவன் எனது பையினை வாங்கிகொண்டு... பாரம் சுமக்க அனுமதிக்க மாட்டானாம். சீனி மட்டும் அந்த கும்பலில் இல்லை. எங்கே எனக் கேட்டதற்கு இன்றும் வரவில்லை எனச் சொன்னார்கள்.

எனது நண்பர்களிலேயே சீனி ரொம்பவும் வித்தியாசமானவன். நினைத்த நேரம் வருவான், பேசுவான். அவனைப் பற்றி எங்களுக்கெல்லாம் சரிவர புரியாத தருணம். பல சமயங்களில் அவன் பேசுவது மொக்கையாய் இருக்கும் என்பதால் அவனைப் பொருட்படுத்த மாட்டோம்.

தீபா அவளின் அம்மா எனக்கு பிடித்த பால்கோவா செய்து கொடுத்தார்கள் எனக் கொடுத்தாள். ரவி பிடித்த இன்னொமொரு அயிட்டமான ஃபைவ் ஸ்டார் சாக்லேட் வாங்கி வைத்திருந்தான். ஒரு பை நிறைய பழங்களோடு இன்னும் ஒருவன். சரி சாயந்திரம் இந்த விஷயத்தைப் போட்டு உடைக்கும் வரை நான் தான் ராஜா என எண்ணிக்கொண்டு நடிப்பினை தொடர்ந்தேன்.

பதினொரு மணிக்கு வெளியில் அழைத்துச் சென்று ஐஸ்கிரீம் வாங்கித் தந்தார்கள். நான் பேசுவதை அக்கறையாய் கவனித்தார்கள். கொஞ்சம் இருமினாலும் பதறி என்ன என்ன எனக் கேட்டார்கள். ததுபித்தாய் எதைப் பேசினாலும் பதில் சொல்லாமல் கேட்டார்கள்.

எல்லாம் நன்றாகப் போய்க்கொண்டிருக்க மதியம் இரண்டு மணிக்கு சீனி வேர்த்து விறுவிறுத்து வந்தான். நான் ஹோ எனக் கத்தி வரவேற்க, எல்லோரும் சப்தம் எழுப்பினார்கள். எவரையும் கவனியாமல், தவிர்த்து, இறுக்கமான முகத்துடன் வழக்கத்திற்கு மாறாய் கடையில் சென்று அமர்ந்தான். என்னடா ஆச்சு என கார்த்திக் கேட்க, அவனை போடா என விரட்டியவன் என்னை அருகே அழைத்தான்.

'கடவுள் எந்த தப்பும் பண்ணாத நம்ம ரெண்டு பேரையும் தண்டிச்சிட்டாருடா. இன்னிக்கு காலையில மயக்கம் வந்து விழுந்துட்டேன்... ஹாஸ்பிடல் போய் செக்பண்ணி பார்த்த போது சுகர் இருக்குன்னு சொல்லிட்டாங்கடா... இருவத்தொரு வயசிலேயே சுகர் டா' என அழ ஆரம்பித்தான்.

’உன் பிரச்சனைப் பத்திக்கூட கார்த்திக்,நேத்து போன்ல சொன்னான்... மனசு கஷ்டமா இருந்துச்சுடா... உன் நிலமை எனக்கு தெரியுது... ஒரு நோயாளிக்குத்தான் இன்னொரு நோயாளியோட கஷ்டம் என்னன்னு புரிஞ்சுக்க முடியும்... இனி நான் எப்பவும் உன்கூட இருப்பேன்.. நீயும் எனக்கு ஆறுதலா இருடா... இவங்க யாரும் வேணாம்.. நீ மட்டும் கூட இருந்தா போதும்' என சொல்லவும் திருடனுக்கு தேள் கொட்டினார்போல் ஆனேன்.

ஏற்கனவே சீனி மன தைரியம் குறைவானவன். அதிகமாய் எவருடனும் வைத்துக்கொள்ளமாட்டான். இப்போது கூட என்னை நோயாளியாய் நினைத்துத்தான் ஒருவருக்கொருவர் ஆறுதலாய் இருக்கலாம் என சொல்லுகிறான். சீனியை சமாதானப்படுத்தி, 'நான் இருக்கிறேன், கவலைப்படாதே என பலவிதமாய் ஆறுதல் சொன்னேன்.

இதை எப்படி சமாளிப்பது என யோசித்து யோசித்து உண்மையில் ப்ரைன் ட்யூமர் வந்துவிடும் போலிருந்தது. சரி ஆபத்பாந்தவன் திவா இருக்கிறான் அவனிடம் கேட்போம் என முடிவு செய்து கிடைத்த இடைவெளியில் வெளியே வந்து எஸ்.டி.டி பூத்திலிருந்து அழைத்தேன்.

எல்லாம் கேட்டு 'உன் மேட்டரை இன்னிக்கு ஒப்பன் பண்ணாதே, நேரில் வா பேசி முடிவு செய்துகொள்ளலாம் என சொன்னான்.

(நீண்டுகொண்டே செல்கிறது. மற்றவை அடுத்த இடுகையில்)

5 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

சத்ரியன் said...

பிரபா,

உங்கள் நினைவில் வாழும் திவா பற்றி அவரது நினைவு நாளில் “ நினைவு பரிசாக” ஒரு பதிவு.

நினைவுகள் வரமா? சாபமா? எனத் தெரியவில்லை.

ஆனாலும் மனதுக்கு ஒரு ஆறுதல் கிடைப்பதை மறுப்பதற்கில்லை.

( நாளையே தொடர்ச்சியை வெளியிட்டு விடலாம் என்பது எனது கருத்து.)

sathishsangkavi.blogspot.com said...

அன்பின் பங்காளி,

நினைவுகள் தான் ஆறுதல்...

அடுத்த பதிவை எதிர்பார்த்திருக்கிறேன்..

kathir said...

//( நாளையே தொடர்ச்சியை வெளியிட்டு விடலாம் என்பது எனது கருத்து.)//

ஆமாம்...

நிலாமதி said...

நீண்ட நாட்களுக்கு பின் ..நலமா ?


நினைவுகள் மீண்டும் மீண்டும்.. கடல் அலை போல...

thedavuranbu said...

பிரியமிக்க அண்ணா,

எனது வாழ்வின் முக்கிய நிகழ்வை பகிர்ந்தமைக்கு நன்றி..!

எத்தனையோ விஷயங்கள் திவாகரிடம் நான் கற்றுக்கொண்டவை... பல அவனால் கற்று கொடுக்கப்பட்டவை.. 32 ஆண்டுகள் மட்டுமே அவனோடு நான் சேர்ந்திருக்கும் வாய்ப்பு கிடைத்தாலும் எனது வாழ்க்கை முழுமைக்குமான அனுபவங்களை அவன் போதித்திருக்கிறான்..

அவன் வழிகாட்டுதல் படி நடைபெற்ற ஒரு நிகழ்வு இது.. இது நண்பனின் நண்பன் மீது கூட அவன் காட்டிய அன்பையும், அக்கறையும் வெளிப்படுத்தும் முக்கிய நிகழ்வு..!!

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB