வாஷ்போர்ட்...

|

முதல் ரயில் பயணத்தில் WL என்பதை விண்டோ லெஃப்ட் என பல்பு வாங்கியது பசுமையாய் நினைவில் இருந்ததால் விமானத்தில் செல்வதற்கு முன் அது பற்றி சிறிதாய் ஒரு ஆராய்ச்சியே செய்து பத்திரமாய் போய் சேர்ந்தாலும், சென்றபின் பாஸ்போர்ட்டில் பிரச்சினை என்றால்? ஆ... நினக்கவே கொஞ்சமல்ல நிறைய மிரட்சியாய்த்தான் இருக்கிறது...

விசா வாங்கி வைத்திருந்தும் அமெரிக்கா செல்வதற்கு கொஞ்சம் தாமதமாக, சிறிது காலம் டெல்லி கல்லூரியில் விரிவுரையாளராக வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். பின்லேடன் (செப்டம்பர் 11) புண்ணியத்தால் போகவே முடியாமல் கனவாகிப் போக, மாமா இருக்கும் துபாய்க்காவது போய் பார்த்துவிடலாம் என மாமாவை ஆலோசித்து சம்மதம் தர வெற்றிகரமாக கிளம்பினேன்.

முதல் விமானப்பயணம், எதிர்பார்த்ததைவிட சப்பென்றும், நெடுநேரம் உட்கார்ந்தே செல்லுவதற்கு அலுப்பாயியுமிருந்தது. ராஸ் அல் கைமா வில் மாமா இருந்தார். திருச்சியிலிருந்து செல்லும் நேரடி விமானம். மாமா, சகோதரி, மாமாவின் வாரிசுகள் என எல்லாம் வரவேற்க விமான நிலையத்துக்கே வந்திருந்தார்கள்.

புது இடம், புது சூழல், ம்... பிரபா, கலக்குற.... என யாரோ பொறாமையில் கண்வைத்து  விட்டார்கள் என எண்ணுகிறேன், வந்தது ஒரு மாபெரும் பிரச்சினை.

மாமா மிகவும் கண்டிப்பானவர், இன்றும் அவரைப் பார்த்து பயப்படாதவர்கள் எங்கள் குடும்பத்தில் இல்லை. சிறு வயது முதலே கர்ணன் படம் பார்த்து கதறிய காலம் முதல் அவரின் மேல அலாதியான அன்பும், மரியாதையும் உண்டு. தோளுக்கு உயர்ந்தால் தோழன் என்பதற்கேற்றார்போல் அவரும் ஒரு நல்ல நண்பனாய் மாறி என்னை அசத்தியவர். என் மனைவு கூட மாவிடம் பேசுகிறேன் எனத் தெரிந்தால் அருகே வரமாட்டாள். ’லவர்ஸ் பேசும்போது நான் ஏன் தொந்தரவு செய்யவேண்டும்’ என நக்கலடித்து செல்வாள்.

வேலை விஷயமாக மாமா அவரது தெரிந்தவர்கள் மூலமாக முயற்சி செய்ய, நானும் ஒவ்வொரு இடமாய் அலைந்துகொண்டிருந்தேன். துபாயில் மாமாவின் நண்பர் டாக்ஸி டிரைவர் ஒருவருடன் தங்கி

'பிரபு, இது வெளி நாடு, மிகவும் கவனமாக இருக்க்கவேண்டும், எப்போதும் உனது பாஸ்போர்ட்டையும் விசாவையும் பாக்கெட்டிலேயே வைத்திரு' என பலமுறை அறிவுறுத்திய வண்ணம் இருந்தார். மாமா எப்போதெல்லாம் இதுபோல் வலியுறுத்தி சொல்லுகிறாரோ, அப்போதெல்லாம் தவறாது தவறு செய்வதையே வழக்கமாய் கொண்டிருந்த நான், அங்கும் தவறவில்லை.

’அண்ணா, வாஷிங் மெஷின் ஃப்ரீயா இருக்கு துணிங்கள அதுல போட்டுடுங்க’ என சகோதரி சொல்ல, எல்லாவற்றையும் இட்டு, சோப் ஆயில் சேர்த்து துவைக்க ஆணையிட்ட அரை மணி நேரம் கழித்து வெளியே கடைக்குச் செல்லும் போதுதான் கவனித்தேன், போட்டிருந்த பேண்ட்டையும் வாஷிங் மெஷினில் போட்டிருக்கிறேன் என்று.

அய்யய்யோ அதில் தானே பாஸ்போர்ட், விசா எல்லாம் இருக்கிறது என நிறுத்தி அவசர அவசரமாய் தேட, இருந்தது...நன்றாக ஊறிப்போய். நல்லவேலை அதை ஒரு ப்ளாஸ்டிக் பேப்பரினுள் வைத்திருந்ததால் முழுதும் வீணாகாமல் பாதி உயிரோடு இருந்தது.

மாமாவின் மகன் அருணும் நானும் ரகசியமாய் அதை சரிப்படுத்தும் வேலையில் இறங்கினோம். அப்போதுதான் தெரிந்தது, அருண் பெரிய ஐடியா மணியென.

முதலில் மைக்ரோவேவ் அவனில் வைத்து சூடு பண்ணலாமென ஐடியா தர உள்ளே வைத்து வேலையினை ஆரம்பித்தோம். புகை வரவே சட்டென நிறுத்திப் பார்க்க, நல்லவேளை கொஞ்சம் தான் கருக ஆரம்பித்திருந்தது, உள்ளேயெல்லாம் இன்னும் ஈரம்.

சரி அடுத்த கட்டமாக, மாடியில் சூரிய வெளிச்சத்தில் காய வைக்கலாம் என எடுத்துச் சென்று விரித்து வைத்து ஒவ்வொரு பக்கமாய் நான்கு மணி நேரம் போராடி காயவைத்தோம்.

என்னதான் செய்தாலும் உள்ளே இருந்த கிளம்பிய விவரங்கள், சில முத்திரைகள் எல்லாம் காணாமல் போயிருந்தன. முதல் பக்கத்தில் எனது புகைப்படம் மற்றும் விவரங்கள், கடைசி இரு பக்கங்களும் நல்ல நிலையில் இருந்தன. என்ன விஷயம் அருணும் நீங்களும் அடிக்கடி மாடிக்கு சென்று வருகிறீர்கள் என சகோதரி கேட்டதற்கு நைசாக விஷயத்தை சொல்லி, மாமாவிடம் சொல்லவேண்டாம் என உறுதிமொழியை வாங்கிக்கொண்டோம்.

அடிக்கடி மேலே சென்று வந்ததாலோ என்னவோ அங்கிருந்த ஒரு பைப் உடைந்துகொள்ள (கண்டிப்பாய் நான் இல்லை, இதையேத்தான் அருணும்), பக்கத்து ப்ளாட்டில் தங்கியிருந்த பாகிஸ்தானைச் சேர்ந்தவரின் வீட்டிற்கு செல்லும் குழாய் அது என்பதால் கத்த ஆரம்பித்தார்.

வேலைவிட்டு வந்த மாமா அவரை சமாதானப்படுத்தி , எங்களை மேலே ஏன் சென்றீர்கள் என வைது, அவர் செலவில் உடைப்பினை சரி செய்து கொடுத்தார். அன்று முதல் என் முகத்தில் என்ன ஆகுமோ என ஒரு பயம் வந்து சேர, மமா ‘பிரபு வேலையில்லை என கவலைப்படுகிறான், அதனால்தான் இவ்வளவு வாட்டம்’ என சகோதரியிடம் சொல்லி எனக்கும் ஆறுதல் சொன்னார்.

அடிக்கடி அருண்வேறு மாமா சீக்ரெட் 25 என வேறு அந்த மேட்டருக்கு பெயர் வைத்து நம்மை ஓட்ட ஆரம்பிக்க, கவனித்த மாமா ‘என்ன சீக்ரெட் 25’ எனக் கேட்க ஒருவழியாய் சமாளித்தேன். வேலை கிடைத்தபாடில்லை. ரம்ஜான் வேறு வந்துவிட்டதால் வேலை வாய்ப்புக்கள் மிகவும் மங்கியிருந்தன.

கர்ப்பத்தையும் உண்மையையும் மறைக்க முடியாதல்லாவா? ஒருநாள் பிரபு பாஸ்போர்ட்ட எடுத்துவா என சொல்ல, எல்லாம் சொல்லி கதறி அழுது தேம்பி அழுதுக்கொண்டுபோய் கொடுத்தேன். அதன் கதியை பார்த்து மாமா கொதிப்பானார். வழக்கமான வசவுகள் ஆனாலும் என் கண்ணீரை விடவும் குறைவாகத்தான்.

உடனடியாக ஊருக்கு கிளம்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய ஆரம்பித்தார். டிராவல்ஸில் பாஸ்போர்ட், விசாவின் கதியைப்பார்த்து அதிர்ஷ்டம் இருந்தால் கண்டுகொள்ள மாட்டார்கள் என சொல்ல, விசா முடிவதற்கு முன்பாகவே ஷார்ஜாவிலிருந்து டிக்கெட் எடுத்தார். திரும்ப அனுப்பினாலும் இந்தியத் தூதரகத்துக்கு செல்ல, சரி செய்ய நாட்கள் வேண்டுமல்லவா!

கிளம்புவதற்கான நாளும் வந்தது. கடவுளை வேண்டி மாமாவின் ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டு நெற்றியில் திருநீறு எல்லாம் வைத்து ஷார்ஜா ஏர்போட்டிற்கு கிளம்பினோம்.

மாமா மற்றும் அவரது நண்பர்கள் இருவர் வழியனுப்ப, ஒரு குருட்டு தைரியத்தில் நுழைந்தேன். கவுன்டரில் இருந்த ஒரு பெண் எனது பாஸ்போர்ட்டைப் பார்த்து, என்னை உற்றுப்பார்த்து சற்று தொலைவில் இருந்த இரு போலீஸை சென்று பார்க்க சொல்ல நடுக்கம் அதிகமாகி அவர்களின் அருகில் போய் நின்றேன்.

என்னை பார்த்த அவர்கள், அந்த பெண்மணியை நோக்க அவர் சொல்வதக்கேட்டு எனது பாஸ்போர்ட்டை வாங்கிப்பார்த்து காரணம் கேட்க, ‘வாஷிங் மெஷினில் போட்டுவிட்டேன்’ என சொல்ல, ‘யூ கே நாட் கோ...’ என சொல்லி சற்று தள்ளி நிற்க சொன்னார்கள். என் நெற்றியைப் பார்த்து ஏதோ பேசுவதுபோல் இருக்க, வைத்திருந்த திருநீறை சட்டென அழித்து நல்ல பையனாய் பரிதாபமாய் பவ்யமாய் அவர்களையே பார்த்துக்கொண்டு, எல்லா தெய்வங்களையும் வேண்டிக்கொண்டு இருந்தேன்.

ஒரு அரை மணிநேர மரண அவஸ்தை. என்ன நினைத்தார்களோ தெரியவில்லை. அந்த பெண்ணிடம் ஏதோ இங்கிருந்து சொல்ல, அவர் என்னை அழைத்து பாஸ்போர்ட்டை வாங்கி சீல் வைத்துத்தர பெருமூச்சோடு உள்ளே சென்றேன்.

திருச்சியில் இறங்கும்போது அப்படியே பரவசமாய் உணர்ந்தேன். வெளியே வரும்போது ‘எப்படி சார் உங்களை வெளியே விட்டாங்க, அதிர்ஷ்டசாலி நீங்க, மொதல்ல வேற பாஸ்போர்ட் மாத்துங்க’ என அறிவுறுத்தினார்.

ஆனாலும் எனக்கு துபாய் சென்றுவந்ததில் கிடைத்திட்ட சில நல்ல விஷயங்கள்...

  • முதல் விமானப்பயணம் 
  • பாஸ்போர்ட்டின் முக்கியத்துவம் 
  • அருணுக்கும் எனக்கும் இடையே ஏற்பட்ட அன்பான பிணைப்பு
  • நானும் துபாய் சென்று வந்திருக்கிறேன் என பெருமையாய் சொல்லிக்கொள்ள ஒரு வாய்ப்பு
  • பிரச்சினைகள் எல்லாவற்றிற்கும் முடிவு உண்டு, முடிவு இருந்தால்தான் அது பிரச்சினை என அனுபவத்தில் உணர முடிந்தது...

தாத்தாவுக்கு கடிதம்...

|

என் அன்பான தாத்தாவுக்கு...

மடல் எழுதும் காலம் மடிந்து போய் கிடக்கும் இந்த மெயில் காலத்தில், மடலாய் உங்கள் பேரனின் எண்ணங்களை பகிர்ந்துகொள்ள எண்ணுகிறேன்.

ரத்தாஷி வருஷம், தை மாசம் பதினாலாம் தேதி பிறந்தேன் என கணீரென சொல்லுவீர்கள். எண்பத்தேழு வருடங்களை கடந்து வந்திருக்கிறீர்கள்... உங்களுக்கும் எனக்கும் தான் எப்பேர்ப்பட்ட பந்தம், ஒட்டுதல்... கொஞ்சம் நினைவுகளை பின்னோக்கிச் சென்று நினைத்துப்பார்க்கிறேன்.

எட்டாவது வயதில் உங்களுடன் ஐக்கியமாகி, இன்றும் இயைந்து இருக்கிறேன் எள்ளளவும் குறையாத அலாதியான அன்புடனும், அபிரிதமான பாசத்துடனும்.

சிறு வயதில் அப்பா தவிர்த்து இருவேறுபட்ட நபர்களின் கண்காணிப்பில் வளர்ந்தேன். மிகக்கண்டிப்பாய் நீங்கள், மிக மிக கண்டிப்பாய், அதே சமயம் அதீத பாசத்துடன் மாமா. மாமாவோடு இருந்தது ஒரு வருட காலம் மட்டுமே, படித்து முடித்து வேலைக்கு செல்லும் வரையில். முழுதாய் ஆறு வருடங்கள் உங்களோடு இருந்து குருகுலத்தில் பயின்றது எல்லாம் அந்த இறைவனின் செயல், ஓ... உங்களுக்கு கடவுள் என்றாலே பிடிக்காதல்லவா?

வாசிக்கும் பழக்கத்தை கற்றுத் தந்தவர் மாமா என்றால் அதனை வளர்த்து விட்டவர் நீங்கள். அந்த காலக்கட்டத்திலேயே எட்டாம் வகுப்புவரை படித்ததையும், பாட சாலைக்கு வேஷ்டி கட்டிக்கொண்டு படிக்க சென்றதையும், படித்து முடித்தபின் வேலைக்கு சேரச் சொல்லி கட்டாயப்படுத்தியதையும், வீட்டில் அனுப்ப மறுத்துவிட உங்களுக்கும் ஆர்வமில்லாததால் மலைப்பகுதியில் தலைமறைவாய் இருந்ததையும் சுவைபட சொல்லியது இன்றும் நினைவில் இருக்கிறது.

உங்களின் இளம் பிராயத்தை என்னமாய் உற்சாகத் துள்ளலோடு பகிர்ந்துகொள்வீர்கள்! உங்கள் நண்பர் புதூர் அழகப்பனுடன் ராஜாஜி முன்னிலையில் 'காந்தித் தாத்தா, காந்தித் தாத்தா சுயராச்சியம் எங்களுக்கு வாங்கித் தா, தா...' என மேடையில் பாடியதை சொன்னதோடு அல்லாமல் எனக்கும் சொல்லித்தந்தீர்கள்.

நீங்கள் கற்ற அனைத்து பாடல்களையும் எனக்கு சொல்லித்தந்து மனனம் செய்ய வைத்தீர்கள். 'அயோத்தி என்றொரு ராச்சியமாம், அதனை தசரதர் ஆண்டனராம்' என்ற சிறுவர்களுக்கான ராமாயணப் பாட்டினையும், 'கும்பல் கும்பலாய் பெரும் கூட்டம் கூட்டமாய்...', 'உற்றவரே என்னை பெற்றவரே', 'என்ன செய்வேன் மைத்துனா இந்தவிதிக்கேது செய்வேன் மைத்துனா' என ராவணன் புலம்புவதையும், 'ஒரு நாள் சிறு நரி ஒன்று' எனும் ஏமாந்த நரிக்கதையினையும், மற்றும் பல கொலை சிந்துக்களையும் என சொல்லிக்கொண்டே போகலாம்.

இன்றும் வரிகள் மறக்காமல் நினைவில் இருக்கின்றன என்பதற்கு காரணம் நீங்கள் சொல்லித்தந்த விதம். யாரேனும் வீட்டுக்கு விருந்தினராய் வந்தால் அவரின் முன் எல்லாவற்றையும் பாடச் சொல்லி, மேடைப் பயத்தை பயந்தோடச் செய்தீர்; பேசுவதற்கும் தயார்படுத்தினீர்;

எப்படி நிறுத்தி, வெட்டி படிப்பது என்பதை தினமும் ஒரு பாடத்தினை படிக்கச் சொல்லி தமிழைப் பிழையின்றி படிக்க கற்றுத் தந்தீர், (இன்று என் வலையுக வாழ்வியல் ஆசானிடம் பிழைக்காக கொட்டுப்படுகிறேன் என்பது தனிக் கதை). படிக்கும் போது ஒரு வார்த்தையினை திரும்பப் படித்தாலும் ’நங்’ என கொட்டுவீர்களே, நினைத்தால் இப்போதும் வலிப்பதுபோல் இருக்கிறது.

நீங்கள் கடவுள் மறுப்புக்கொள்கையை இன்று வரை பின்பற்றி வந்தாலும் யாரையும் வற்புறுத்தியது கிடையாது. வீட்டில் நடக்கும் பூஜைகளில் கலந்து கொண்டு தரும் திருநீறினை எடுத்து, உங்களையே கவனிக்கும் என்னைப் பார்த்து நமட்டு சிரிப்பு சிரித்து, கீழே போட்டுவிடுவீர்கள். இருந்தாலும் மிக முக்கிய தருணங்களில் வைக்கப்படும் நீரினையோ சந்தனத்தையோ மரியாதையாக அந்த சடங்கு முடியும் வரை வைத்திருப்பீர்கள். மாட்டுப் பொங்கலின் போது மட்டும் எல்லா வேலைகளையும் முன்னின்று செய்வீர்கள், படைப்பது உட்பட.

பெண்களுக்கும் கல்வி வேண்டும் என்பதை உறுதியாகக் கொண்ட நீங்கள் என் அம்மாவினை, உங்களின் முதல் மகளை திருமணம் முடிந்த பின்னும் படித்து முடித்த பின் தான் புகுந்தகத்துக்கு அனுப்பி வைத்ததை இன்றும் ஒரு நல்ல வேலையில் இருக்கும் அவர் நினைவு கூறாத நாளில்லை.

சிலகாலம் கறுப்புச் சட்டை அணிந்து கூட்டங்களில் கலந்து கொண்டீர்கள். உங்களைப்பார்க்க வந்தபோது அதனை என்னிடம் போட்டு காண்பித்து எப்படி இருக்கிறது என கேட்டபோது 'சூப்பர்' என்றவுடன் உங்கள் முகத்தில்தான் எத்தனை சிரிப்பு? 'என்னை புரிந்துகொண்டவன் உலகத்திலேயே நீ ஒருத்தன்தான்' என சொல்லி என்னையும் அந்த சட்டையினை அணியச் சொல்லி அழகு பார்த்தீர்களே!.

'கல்லெல்லாம் சாமியா, மண்ணெல்லாம் பூமியா....ஆடு வெட்ட சொல்லுதா, கோழி வெட்ட சொல்லுதா நட்டு வெச்ச கல்லு சாமி' எனும் பாடலை சொல்லித்தந்து சிறு வயதில் நட்டுவைத்து விளையாட்டாய் கும்பிட்ட ஒன்றுதான் இன்று இருக்கும் பிரபலமான ஒரு கோவில் என மூடப்பழக்கங்களைஎல்லாம் சொல்லி என்னையும் கடவுள்  இல்லை எனும் அளவிற்கு ஆரம்பத்தில் மாற்றினீர்களே!

எழுபது வயது வரை உங்களின் தலை முடி கருப்பாகத்தான் இருந்தது. இப்போதும் சில கருப்பு முடிகளோடுதான் இருக்கிறீர், கொஞ்சம் கூட இன்றும்  வழுக்கை கிடையாது. இன்றும் எல்லா பற்களும் இருக்கிறது, கடித்து உண்ண முடியவில்லை எனச் சொல்லுகிறீர். ஆலும் வேலும் பல்லுக்குறுதி என எனக்கு சொல்லியதோடு மட்டுமல்ல, பின்பற்றியவர் ஆயிற்றே.

கல்கண்டு புத்தகத்தை ஒரு அனா விற்ற காலத்திலிருந்தே தொடர்ந்து வாங்கி வாசித்து வருவதோடு அல்லாமல் இன்றும் வார இதழ்கள், செய்தித்தாள் என இன்னும் வாசித்துத்தானே வருகிறீர்கள்! மூன்று வருடங்களுக்கு முன்பு வரை சைக்கிள் ஒட்டினீர்களே! வயோதிகம், முடியவில்லை, ஆனாலும் மீண்டும் ஓட்டுவேன் என சென்ற முறை ஊருக்கு வந்தபோது சொன்னீர்களே!

வரவுக்கு மேலே செலவு செய்யாதே, சிக்கனமாயிரு என இதுவரை கடைபிடிக்காத ஒன்றை வலியுறுத்தி, கடன் பட்டான் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன் என உதாரணத்தோடு சொன்னீர்கள், இன்னமும் பேசும்போதெல்லாம் சொல்கிறீர்கள்.

வருடா வருடம் உங்களுக்கு ஒரு கவிதையினை பிறந்த நாளில் போது எழுதித்தருவேன். இந்த வருடம் உங்களுக்காக இந்த இடுகை. ஜூனில் ஊருக்கு வரும்போது ஒரு முழு நாளை உங்களோடு கழிக்க வேண்டும். இந்த இடுகையினை முழுதும் படித்துக்காட்ட வேண்டும். சொல்லித்தந்த பாடல்களையெல்லாம் உங்களுக்குச் சொல்லி நீங்கள் அடையும் பூரிப்பை கண்ணால் காணவேண்டும்!

தாத்தா, நீங்கள் இன்னும் பல ஆண்டுகள் எங்களுக்கெல்லாம் வழிகாட்டியாய் இருந்து, ஆசிர்வதித்து நலமுடன் இருக்க நீங்கள் வேண்டாத, நம்பாத நான் நம்பும் இறைவனை பிரார்த்திக்கிறேன்...

ஆசி கோரும்,
பேரன்.

ஏனோ...மனம்... - கவிதை...

|

மனம்...

பக்கத்து வீட்டுப் பையனின்
பரிட்சைத் தோல்வியை
பரிகசிக்கும் மனம்
மாத்திரையுண் டவன்
மரணவாயிலில் நிற்கையில்
மாறித்தான் போகிறது


பிச்சை...

அய்யா, அம்மா... பிச்சை
அழும் முகத்துடன்
அழுக்கான சிறுமி
அடித்து விரட்டும்
அனுதாபமில்லாத அவர்.

சொன்னத செய்யாம
சோறு திங்க மட்டும்
சரியா... சனியன்
சொல்லும் மருமகள்
செவிமடுக்கும் அவர்...

அக்கோண்டு தாத்தா...

|

அவரை எல்லோரும் கூப்பிடுவது அக்கோண்டு எனத்தான். அவர் வயசுக்காரர்கள் அக்கோண்டு, நடுத்தர வயதுடையவர்கள் அக்கோண்டு அய்யா, அக்கோண்டு மாமா, வாண்டுகளாகிய நாங்கள் அக்கோண்டு தாத்தா. அவருக்கு ஏன் அந்த பெயர் என எவருக்குமே தெரியாது, ஒருமுறை கேட்கும்போது அவருக்குகூட. ஆயாவிடம் கேட்டதற்கு அவரின் உண்மையான பெயரை சொன்னார்கள், பழனிமுத்து என.

குள்ளமாக, கருப்பும், மாநிறமும் இல்லாமல் ஒரு புது கலரில் இருப்பார். எண்ணை வைத்து முடியை தூக்கி வாரி சீவி, குடித்திருக்காத சமயங்களில் காலருக்குக் கீழே கர்சீப் வைத்து சட்டை போட்டு வேஷ்டியினை மடித்துக் கட்டியிருப்பார். குடித்திருந்தால் சட்டை இன்றி டிராயரோடும் வேஷ்டி அவருடைய தலையிலும் இருக்கும். பெரும்பாலும் சாராய வாசத்தோடும், கணேஷ் பீடியை குடித்த வண்ணம்தான் இருப்பார். (யாரு கணேஷா? மங்களூர் கணேஷ் பீடிங்க... ரொம்ப பேமஸ் இன்னமும் நம்ம ஏரியாவுல).

அவர் கல்யாணம் செய்துகொள்ளவே இல்லை. அவரின் வீடு எங்கள் வீட்டின் எதிர் சந்தில் இருக்கும். முன்புறத்தின் அவரின் அண்ணன் வீடு. பின்புறம் அவருக்கான பாதி பாகத்தில் ஒரு சிறிய கூரை வீடு.

அந்த வீட்டில் தான் பெரும்பாலும் தங்குவார். இருக்கும்போது மட்டும்தான் விளக்கெரியும். இல்லாத தருணங்களில் எங்களுக்கு ஒளிந்து விளையாட, திரை கட்டி பொம்மலாட்டம் நடத்த என மிகவும் உதவியாயிருக்கும். மேலே பரண் இருக்கும். ஒளிந்து விளையாட அற்புதமான இடம்.

வெளியூர் சென்று கஷ்டப்பட்டு சம்பாதித்து கையில் பணத்தோடு வந்து அண்ணாவின் குடும்பத்துக்கு கொஞ்சம் கொடுத்துட்டு மீதியை என் அம்மாவிடம் கொடுத்து வைத்துவிடுவார்.

தினமும் சாராயம் சாப்பிட்டுவிட்டு இரவில் சரியான அழிச்சாட்டியம் செய்ய ஆரம்பித்துவிடுவார். கணீரென பாட்டுப் பாட ஆரம்பிக்க கச்சேரி களைக்கட்ட ஆரம்பித்துவிடும். தெருக்கூத்தில் என் தாத்தா துரியோதனனாகவும், அவர் பாஞ்சாலியாகவும் வேடமிட்டு நடித்ததை சொல்லி, வேட்டியினை சீலையாய் கட்டிக்கொண்டு தாத்தாவைப் பார்த்து பாஞ்சாலி துகிலுரியும் காட்சியைப் பற்றி பாட்டோடு நடித்துக்காட்ட ஆரம்பித்துவிடுவார். பதிலுக்கு தாத்தாவையும் பாட வற்புறுத்துவார். தாத்தா 'போடா அக்கோண்டு' என மறுத்துவிடுவார், அல்லது அவரும் பாட ஆரம்பித்துவிடுவார். தாத்தாவிடம் ஒருநாள் , 'பாஞ்சாலி அவ்ளோ குள்ளமாவா தாத்தா இருக்கும்' எனக் கேட்டேன்.

உள்ளூரில் எங்கேயும் வேலைக்குப் போகமாட்டார்.. காசெல்லாம் தீரும் வரை சாராயம், தாயம், பீடி என சந்தோஷமாய் இருப்பார். ஓட்டல், அண்ணன் வீடு, எங்கள் வீடு என சாப்பிட்டுவார். அவர் காசு கொடுத்த சில நாட்களுக்கு அவரின் அண்ணன் வீட்டில் நல்ல கவனிப்பு இருக்கும், பிறகு பாட்டுப்பாட ஆரம்பித்துவிடுவார்கள்.

அம்மாவிடம் கொடுத்து வைத்திருக்கும் காசினை வாங்கி சில நாட்களை ஓட்டுவார். எல்லாம் காலியான பிறகு, 'அய்யா, நீங்க கொடுத்த காசையெல்லாம் கொடுத்துட்டேன், இதுக்கப்புறம் தர்றதுக்கு காசில்ல' என அம்மா ஒரு எச்சரிக்கை செய்வார்.

'சரிம்மா, இதுக்கப்புறம் இங்க இருந்தா மரியாத இல்ல, அடுத்த வாரமே கெளம்பிடறேன், செலவுக்கு மட்டும் நூறு ரூவா கொடு' எனச் சொல்லி அதேபோல் ஓரிரு வாரத்தில் கிளம்பிவிடுவார்.

எனக்கு அந்த தாத்தாவை பிடிக்கவே பிடிக்காது, எப்பொழுதும் பீடி, சாராய நாற்றத்துடன் இருந்ததால். அம்மாவிடம் திட்டிக்கொண்டே இருப்பேன். பீடி வாங்கி வருவதற்கு எல்லா பையன்களையும் அனுப்புவார், என்னைத் தவிர. நான் போகிறேன் தாத்தா என சொன்னாலும், 'அய்யோ, நீயெல்லாம் போகக்கூடாது என் மவளோட மவன்' என மறுத்துவிடுவார். (பத்து பைசாவுக்கு எது வேண்டுமானாலும் வாங்கிகொள்ளலாம் என்பது எழுதப்படாத விதி) அதுவம் வெறுப்புக்கு ஒரு காரணமாய் இருக்கலாம். அவர் போதையில் இருக்கும்போது அவரை கண்டபடி திட்டுவோம், குச்சியால் அடிப்போம், கண்டுக்கொள்ளவே மாட்டார்.

அன்று என்ன காரணம் என தெரியவில்லை, அரை நேரத்தோடு பள்ளிக்கு விடுமுறை. வீட்டில் யாரும் இல்லாததால் எல்லோருமாய் சேர்ந்து சந்தோஷமாய் விளையாடிக் கொண்டிருந்தோம். ஒளிந்து விளையாடும் போது மட்டிக்கொள்ளப் போகிறான் என என் தம்பியை நெல் கொட்டி வைக்கும் சேரில் (தனியாய் நெல் சேமித்து வைக்க கட்டி வைத்திருப்பார்கள்) பிடித்து தள்ளிவிட்டு விட்டேன்.

உள்ள இருந்து வீல், வீல் என என் தம்பி கதற, நான் என்ன செய்ய என பதறித் தவிக்க, சத்தம் கேட்டு அக்கோண்டு தாத்தா வேகமா ஓடி வந்து சேரில் ஏறி அவனை உள்ளே இருந்து தூக்கினார். தம்பியின் கை முறிந்து வலியில் இன்னமும் கதறி, மறக்காமல் 'அண்ணன்தான் என்னை தள்ளிவிட்டுச்சி' என மாட்டிவிடவும் முயற்சி செய்தான்.

வெளியில் நின்ற பூட்டுப்போட்டிருந்த மாமாவின் சைக்கிளை உடைத்து, என்னை பின்னால் உக்காரச் சொல்லி தம்பியை மடியில் வைத்து பிடித்துக்கொள்ள சொன்னார். வேக வேகமாய் மிதித்து ஏழு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் தென்குமரை என்னும் ஊருக்கு அழைத்துக்கொண்டு போனார்.

மாவுக்கட்டுப்போட்டு எங்களுக்கு டீ, வடை என எல்லாம் வாங்கித்தது, திரும்ப வீட்டில் கொண்டு வந்து விட்டார். தம்பியிடம், 'திவா, நீயே விழுந்துட்டேன்னு சொல்லு, அண்ணன் பாவம், தெரியாம பண்ணிட்டான், உனக்கு வேணுங்கறத வாங்கித்தர்றேன்' என சமாதானப் படுத்தினார்.

தம்பி சொல்வதையெல்லாம் இரண்டு நாளைக்கு கேட்டுக்கொண்டிருப்பதைப் பார்த்து ஆச்சரியமாய் 'என்னடா உங்களுக்குள்ள இவ்வளவு ஒற்றுமை' என அப்பா கேட்க, குட்டு வெளிப்பட்டது. ஆனாலும் விஷயம் பழசானதால் அடி வாங்காமல் திட்டோடு தப்பித்தேன்.

இதற்குப்பின் அக்கோண்டு தாத்தா மேல எனக்கு ஒரு தனி மரியாதை. சொல்வதை அப்படியே கேட்பேன், பாசமாய் இருப்பேன். அதன் பிறகு அவரிடமிருந்து வரும் சாராய 'வாசம்' என்னை பாதித்தது இல்லை.

அதன் பிறகு அவர் ரிக் வண்டியில சமைல்காரராக போனதாக தகவல் வந்தது. நெடு நாட்கள் வரவேயில்லை. கடைசியாய் கண்காணாத ஏதோ ஒரு இடத்தில் இறந்து, அங்கேயே புதைத்துவிட்டதாய் தகவல் மட்டும் வந்தது.

இன்றும் சைக்கிளைப் பார்க்கும்போது, குள்ளமான அவர் சைக்கிளில் சரியாக கால் கூட எட்டாமல், எங்கள் இரண்டு பேரையும் வைத்து வேக வேகமாய் மிதித்துக்கொண்டு போனது நினைவிற்கு வந்து மனதை கொஞ்சம் இடறச்செய்யும்.

மாரிமுத்துவும் மந்திரப்புன்னகையும்....

|

என் தாத்தாவின் ஊருக்கு சொல்லும்போதெல்லாம் கண்டிப்பாய் மாரியை சந்திப்பேன். தகவல் தெரிந்து, அல்லது வரப்போவதை முன்னதாக அறிந்து சந்திக்க வருவார்.

பார்த்தவுடன் புன்னகைத்து, 'நல்லாருக்கிறீங்களா?’ என்பார் தலையாட்டி 'நீங்கள் எப்படி' என அழுத்திக்கேட்பேன். 'ம்... ஆண்டவன் புண்ணியத்துல நல்லா போயிட்டிருக்கு' என சொல்வார். அவருக்கு காசு கொடுப்பேன். தயக்கத்தோடும், சந்தோஷமாகவும் வாங்கிகொண்டு, ஏதோ கேட்க வர, 'வேண்டாம் அதுக்குத்தான் அந்த காசு' என சொல்வேன்.

'எதுக்கு மாரிய எப்போ பார்த்தாலும் காசு தரே, அவரு வெக்கப்பட்ட மாதிரி சிரிக்கிறாரு' என மாமா கேட்டார். நீங்களும் தானே? கொஞ்சம் கீழே படியுங்களேன்!

கிராமம், நகரத்தில் முடிவெட்டிக் கொள்வது என்பது அப்போதெல்லாம் மலைக்கும் மடுவுக்குமாய் இருக்கும். கிராமங்களில் பெரும்பாலும் வீட்டுக்கே வருவார்கள். கூரையால் வேயப்பட்ட அவர்களின் கடைக்கு சென்றாலும் காசு கொடுக்கத்தேவையில்லை. வருடா வருடம் வெள்ளாமையில் நெல் அறுவடை முடிந்தவுடன் முதலில் நெற்கட்டுக்களைத் தருவார்கள்(கட்டுக் கூலி என சொல்வார்கள்) அத்தோடில்லாமல் எல்லாம் முடித்து நெல்லினை மூட்டைக்கட்டும்போதும் அவர்களது வேலைக்கான கூலியினைத் தருவார்கள்..

மாரிமுத்து ஆத்தூர் சேலம் என நகரக்கடைகளில் வேலை பார்த்து, முதன்முறையாக புதிதாய் உள்ளூரில் கடை ஆரம்பித்தார். சுழலும் சேர், முன்பின் பெரிய கண்ணாடிகள், சீலிங் ஃபேன், குட்டியாய் ஒரு டேபிள் ஃபேன், தலைக்கு ஹீட்டர் என எல்லா வசதிகளும் இருந்தது.

வீட்டிக்கு வந்து இனிமேல் வேறெங்கேயும் போகக்கூடாது, அவரிடம்தான் முடி வெட்டிக்கொள்ள வரவேண்டும் என அன்புக்கட்டளையிட்டு சென்றார். அன்று காலை எழுந்ததுமே ஆயாவிடமிருந்து பாட்டு. 'காலேஜ் படிக்கிற பையன் ஒழுங்கா முடிய வெட்டிக்கிட்டு ஜம்முனு இருக்கவேணாம்? பக்கிரி மாதிரி முடிய வெச்சிகிட்டு' எனச் சொல்ல பக்கிரி என்ற வார்த்தையால் தன்மானம் விழித்துக்கொண்டது.

'ஆத்தூர்ல போயித்தானே துரை வெட்டிக்குவாரு?' என தாத்தா சொல்ல, 'அங்கெல்லாம் எதுக்கு? மாரிமுத்துத்தான் கடை ஆரம்பிச்சிருக்கானே போய் வெட்டிக்க வேண்டியதுதானே?, ரெண்டு மூணு தடவ வந்து சொல்லிட்டு போயிருக்கான்' என ஒரு கட்டாயப்படுத்துதலோடு ஆயா சொன்னார்கள்.

முடி வெட்டும் விஷயத்தில் அவ்வளவாய் கவலைப்படுவதில்லை, ஏனெனில் எவ்வளவுதான் கேவலமாய் வெட்டப்பட்டாலும் பத்தே நாட்களில் வளர்ந்துவிடும் அல்லவா? முதல் முறையாக மாரியிடம் துணிந்து தலைகொடுக்க கிளம்பினேன்.

கடை திறந்து இருந்தது, மாரியைக் காணவில்லை. வெளியில் அமர்ந்து தினத்தந்தியினை படித்துக்கொண்டிருந்தேன். பார்த்த ஒரு அம்மா 'இருங்க தம்பி வர சொல்றேன், அந்த குடிகார நாயி எங்க போச்சின்னே தெரியல, பாத்துட்டு வர்றேன்' என சொல்லிவிட்டு போனார்கள்.

கொஞ்ச நேரத்தில் மாரி வந்தார். முகத்தில் இனம் புரியா கலவரம். செயற்கையாய் ஒரு சிரிப்போடு வரவேற்று சேரில் உட்கார வைத்து துணியால் போர்த்தி தலைக்கு தண்ணிர் போடுவதற்காக தெளிப்பானை எடுக்க, காலியாய் இருந்தது. அருகில் வரும்போது குப்பென்று சாராய வாடை வயிற்றைக் குமட்டியது.

'மாரி, ஆளு டபுளா இருக்கீங்க, அப்புறமா வரட்டுமா?' என எழ, பக்கத்தில் இருந்த ஒரு பாட்டிலை எடுத்துக்கொண்டு 'அதெல்லாம் இல்ல... இருங்க, போய் தண்ணி எடுத்துட்டு வர்றேன்' என சொல்லிச் சென்றார்.

பதினைந்து நிமிடத்துக்கு மேல் காத்திருந்தும் வரவில்ல. லேசாய் கோபம் கிளம்ப, மேலே போட்டிருந்த துணியினை அகற்றிவிட்டு நேரில் பார்த்து இரண்டு வார்த்தை திட்டிவிட்டு செல்லலாமென வெளியே வந்தேன். எதிர் வீட்டில் ஆடுகளை அவிழ்த்துக் காட்டுக்கு கிளம்பிக்கொண்டிருந்த ஒரு அம்மாவை மாரி வீடு எங்கே எனக் கேட்க, பக்கத்து சந்தில் காண்பித்தார்கள்.

அவரின் வீட்டை நெருங்கும்போது ஒரு பெண்ணின் குரல் ' அய்யய்யோ யாராச்சும் காப்பத்துங்களேன், கைப்புள்ளக்காரிய விட்டுட்டு இப்புடி பண்ணிக்கப் போறானே' என. வீட்டின் அருகே ஓடினேன்.

இடது புறம் இருந்த சன்னல் வழியே பார்த்து, 'அய்யய்யோ கயித்த விட்டத்துல போட்டுட்டானே, ஸ்டூலை எடுக்கிறானே' என கதறி ஒரு பெண் தவிப்போடு நேரடி வர்ணனை செய்துகொண்டிருந்தார்

பழங்காலத்துக் கதவு. தள்ளிப்பார்த்தேன், பயங்கர வலுவாக இருந்தது. சினிமாவில் மட்டும்தான் கதாநாயகர்களுக்கு திறக்கும் என்பதை அன்றுதான் அனுபவத்தில் முழுமையாய் உணர்ந்தேன்.

'யாராச்சும் ஆம்பிளைங்க இருந்தா காப்பாத்துங்களேன்' என இன்னும் கதற, நான்கைந்து பெண்கள் தான் வந்தார்கள். எல்லோரும் பதட்டத்தில் அங்குமிங்கும் அலைபாய்ந்து கொண்டிருந்தோம்.

'கழுத்துல மாட்டிகிட்டான், தொங்கப் போறான்' என இன்னும் வேகமாய் அந்த பெண் வீறிட, அப்போது வேகமாய் ஒரு பெண் கையில் கடப்பாரையை எடுத்துக்கொண்டு ஒடி வந்தார்கள். கதவின் அருகில் நின்றிருந்த என்னை பிடித்துத் தள்ள தடுமாறி விழுந்தேன்.

'ஐயோ தொங்கிட்டானே, என்னா பண்ணுவேன்' என உச்ச ஸ்தாயில் வீறிடல்.

கடப்பாரையால் அந்த கதவில் உள் தாழ் போட்டிருக்கும் இடத்தில் ஓங்கி குத்தி மேலே நெம்ப, பட்டென திறந்துகொண்டது. அதற்குள் சப்தம் கேட்டு ஓடி வந்த இளைஞர்கள் இருவரோடு எல்லோரும் அவசரமாய் சென்றோம்.

படபடவென கால்கள் துடிக்க மாரி தொங்கிக்கொண்டிருந்தார். சட்டென ஒரு நபர் ஓடிச்சென்று கால்களைத் தோளில் வைத்துக்கொண்டார். இன்னொருவர் விருட்டென விட்டத்தில் ஏறி, கையிலிருந்த சிறு கத்தியால் அந்த கயிற்றை வெட்டிவிட, (என்ன சமயோதிசம் பாருங்கள், கத்தியோடு அவர் வந்திருந்தது மிகுந்த ஆச்சர்யமாயிருந்தது) மாரியை மெதுவாய் இறக்கினார்கள்.

மயங்கி கிடக்க கழுத்தில் சிறு காயத்தோடு இருக்க, மேலே கயிற்றை வெட்டியவர் இறங்கி வந்து பட்டென மாரியில் கன்னத்தில் ஓங்கி அறை விட்டார். நெஞ்சில் வலுவாய் அழுத்தினார். இருமலோடு மூச்சுவிட, 'பொழச்சிகிட்டான், ஆயுசு கெட்டி, எல்லாரும் வெளிச்சத்த விடுங்க, காத்தோட்டமா இருக்கட்டும்' என சொல்ல மெதுவாய் எல்லோரும் கலைந்தோம்.

கத்திக்கொண்டிருந்த அந்த பெண் யார் எனக்கேட்டேன். அது மாரியின் மனைவி என்று சொன்னார்கள். தடுமாறி விழுந்ததில் முகத்தில் ஒரு சின்ன சிராய்ப்பு, மெலிதாய் ரத்தம் வந்துகொண்டிருந்தது. கவனித்த கதவை கடப்பாரை கொண்டு திறந்த பெண், சட்டென எதிர் வீட்டுக்குள் சென்று பஞ்சினை எடுத்துக்கொண்டு வந்து துடைத்துவிட்டார்கள்.

'அவசரத்துல தெரியாம தள்ளிவுட்டுட்டேங்க, மன்னிச்சுக்குங்க' என சொல்ல, 'அதெல்லாம் இல்ல, எவ்வளோ வீரமா ஒரு உயிரையே காப்பாத்தி இருக்கீங்க' என பாராட்டி, வீட்டுக்கு வந்தேன். ஆயா 'என்ன ஆச்சி முகத்தில என்ன காயம்' என கேட்க நடந்ததை சொன்னேன்.

கொஞ்ச நாள் கழித்து வீட்டிற்கு வந்த மாரி, முடிவெட்டிக்கொள்ளக் கூப்பிட்டார். 'ஐயோ ஆளை விடுங்க, அது மட்டும் வேணாம், அதுக்கான காசமட்டும் கொடுத்துடறேன்' என சொன்னதுதான் இன்னமும் தொடர்கிறது...

மன்னரும் அமைச்சரும்...

|

மன்னர் : வாருங்கள் அமைச்சரே, நாடு நகரம் எப்படி இருக்கிறது?

மந்திரி : உங்கள் ஆட்சியில் குறும்பாட்டு மந்தைகள் போல் இலவசத்திற்கு ஏங்கும் மக்களும், உங்களின் புகழ் பாடுவதற்காகவே பிறந்ததாய் எண்ணி பிதற்றலான செய்தி பரப்புவோரும், உங்களின் களைப்பைப் போக்குவதையே கர்ண சிரத்தையாய் கொண்டிருக்கும் நாடக, நடனக் கலைஞர்களும், உங்களை உற்சாகப்படுத்த நமது மைதானத்தில் நடைபெரும் பலதேச வீரர்கள் பங்கேற்கும் கில்லி விளையாட்டும் என எல்லாம் இருக்கும்போது என்ன கவலை?

மன்னர் : ஆஹா! கேட்பதற்கு எவ்வளவு மகிழ்ச்சியாய் இருக்கிறது... ஆமாம் ஏதோ பிரச்சனை நடந்துகொண்டிருப்பதாய் மகாரணியாரின் மூலமாக மஞ்சத்தில் இருக்கும்போது லேசாக ஒரு தகவல் கசிந்ததே ...

மந்திரி : மன்னிக்கவேண்டும் மன்னா, உங்களை பலமுறை தொடர்புகொள்ள முயற்சித்தோம்.ஒரே கூச்சலும் ஆர்ப்பட்டமாயிருந்தது. அடுத்து நீங்கள் சந்தோஷமாயிருக்கும்போது தடுப்பது நியாயமாகுமா?

மன்னர் : என் மனதை புரிந்த மந்திரி... அப்போது கில்லி விளையாட்டையல்லவா உற்சாகமாய் ரசித்துக்கொண்டிருந்தேன்... கில்லியை தூக்கிப்போட அதை குச்சியால் அடிக்க, அதைப்பிடித்து அடித்தவரை ஆட்டமிழக்கச் செய்ய... ஆஹா, என்னமாய் குயுக்திகளை கையாளுகிறார்கள்! இந்த தந்திரங்கள் எல்லாம் ராஜ தந்திரங்களுக்கும் மேலாக இருக்கிறது அமைச்சரே... ம்... தொடருங்கள்...

மந்திரி : எல்லையில் உரிய அனுமதிச்சீட்டுடன் வைத்தியத்துக்காக பக்கத்து நாட்டிலிருந்து வந்த பாட்டியை அனுமதி அளிப்பது சம்மந்தமாய் உங்களிடம் கேட்டு, உங்களின் ஆணைக்கேற்ப உள்ளே நுழையவிடாமல் துரத்திவிட்டோம் அல்லவா, அதற்காக ஒரு சில புல்லுருவிகள் பிதற்றலாய் புலம்புகிறார்கள்.

மன்னர் : ஆ... அப்படியா? அதற்கு என்ன காரணத்தை அவர்கள் சொல்கிறார்கள்?

மந்திரி : 'அந்த வயதான பெண்மணிக்கு ஆதரவில்லையாம், கணவர் இறந்து விட்டாராம். பல்லக்கில் தூக்கி வந்தார்களாம், பத்து நாட்கள் பயணத்தில். களைத்து வந்தவர்களை கருணையின்றி விரட்டியடித்து விட்டோமாம்.

மன்னர் : நல்ல காரியத்தைத்தானே செய்திருக்கிறோம், இல்லையென்றால் பெரும் ஆபத்தையல்லவா சந்தித்திக்க வேண்டியிருக்கும்? மகாராணியின் மன்னிப்பில்லா கோபத்துக்கு அல்லவா ஆளாகியிருப்போம்?. அந்த மூதாட்டி யார், நமது நாட்டில் மக்களுக்கு மாபாதகங்களை செய்து, நமக்கு பெரிதும் உதவியாய் இருந்த அந்த புண்ணியமூர்த்தியை கொல்ல சதித்திட்டம் தீட்டிய சதிகாரனின் சொந்தமல்லவா! அதுவும் இல்லாமல் இங்கு வந்தால் அதை வைத்து இங்கே எத்தனை ஆர்ப்பாட்டங்கள் நடக்கும்? எதிரணியினரை ஒன்று சேரவிடுதல் என்றும் நமக்கு ஆபத்து அமைச்சரே!

சரி, அவரை உள்ளே விடக்கூடாது என்று முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பே ஓலைச் சுவடியில் நமக்கு முன்னே ஆண்டவர்கள் குறிப்பு எழுதி வைத்து சென்றிருக்கிறார்கள் என அறிக்கைவிட்டேனே! நான் சொல்வதையெல்லாம் சொக்குப்பொடி போட்டார்போல் கேட்கும் மக்கள் கூட்டம் நம்பவில்லையா என்ன?

மந்திரி : இது ஒரு சிலரின் பிதற்றல்கள்தாம் மன்னா!  மேலும் அவர் நம் ரத்தம்தானே என சொல்லுகிறார்களே,  அதற்கென்ன சொல்வது?

மன்னர் : அறிவற்றவர்கள்... ரத்த பந்தம் என்றால் என்ன என்பதை விளக்கி சொல்லவேண்டும், புரியாத அந்த மூடர்களுக்கு. உதாரணமாக உமது ரத்த பந்தம் என்றால் நீர், உமது பெற்றோர், நேரடி, மறைமுக மனைவிகள், உமது குழந்தைகள், பேரப்பிள்ளைகள் தாம்... இனம் வேறு, ரத்தபந்தம் வேறு. உடனடியாக கவர்ச்சிப்புயல் கன்னிகாவின் நடன நிகழ்ச்சியினை எற்பாடு செய்து அவர்களை மகிழ்வித்து இதுபோன்ற எண்ணத்தை மாற்றுவதற்கு வழி செய்யுங்கள்...

மன்னர் : ஆமாம் அறிவித்த இலவசத் திட்டங்கள் மக்களை திருப்திப் படுத்தவில்லையா என்ன? அவ்வப்போது புரட்சி, போராட்டம் என தேவையில்லாமல் பேசிக்கொண்டு, புதிதாய் சிந்திக்க வேறு ஆரம்பித்திருக்கிறார்களாமே?, இதெல்லாம் நல்லதற்கில்லை அமைச்சரே?

மந்திரி : ஆம் மன்னா! அதற்குத்தான் சூரியனைக்கானா திட்டம் என ஒரு புதிய திட்டம் வைத்திருக்கிறோம், உங்களின் ஒப்புதல் கிடைத்தால் உடன் அமுல் படுத்துவோம்.

மன்னர் : என்ன சூரியனை மறைத்து வைக்கப்போகிறோமா என்ன?

மந்திரி : இல்லை மன்னா, பிரகாசமாய் எரிய வைக்கப்போகிறோம். ஒவ்வொருவருக்கும் தேவையான உணவு, உடை, என எல்ல தேவைகளையும் பூர்த்தி செய்து, வீட்டை விட்டே வரத் தேவையில்லாதவாறு செய்துவிடுவோம்.

மன்னர் : இதெல்லாம் சாத்தியமா? உணவு உற்பத்திக்கு வழி எப்படி?

மந்திரி : அதைப்பற்றி நமக்கென்ன கவலை? களஞ்சியத்தில் ஓராண்டுக்கு தேவையான உணவுப்பொருட்கள் இருக்கின்றன. அதை வைத்து செய்வோம். பக்கத்து நாட்டு மன்னன் அடுத்த வருடம் நம் நாட்டை கைப்பற்றும்போது பக்குவமாய் நாம் தொலைவில் உள்ள அந்த தீவினை இருக்கும் அளவற்ற செல்வங்களைக் கொண்டு வாங்கி அங்கே உமது அரசாட்சியை தொடங்கிவிடலாம்...

மன்னர் : ஆஹா அருமை, உடனே செய்யுங்கள். அப்படியே மறக்காமல் காமக்களியாட்டங்களில் கரைபுரண்டோடி, புரையோடிப்போயிருக்கும் நமது மூத்த அமைச்சர் தாண்டவராயனின் மகனுக்கு ராஜவைத்தியத்தை பக்கத்து தேசத்திலிருக்கும் பிரபல வைத்தியரிடம் செய்ய எல்லா ஏற்பாடுகளையும் துரிதமாய் செய்யுங்கள்... எனக்கு இப்போ அயல் தேசத்தை சேர்ந்தவராயிருப்பினும் நம்மயெல்லாம் ஆளும் மாட்சிமை பொருந்திய மகாராணியிடம் ஒரு சந்திப்பு இருக்கிறது, பிறகு சந்திக்கலாம்!

காஞ்சக்கடலை...

|

சில நிகழ்வுகள் நம்மை கடைசிவரை பல்லில் மாட்டிய பாக்கென நிரடிக்கொண்டே இருக்கும். அந்த விதத்தில் என்னை மிகவும் பாதித்த ஒன்று இந்த இடுகையில்.

இரண்டு வருடத்திற்கு முன் ஊருக்கு சென்றபோது தம்பி 'அண்ணா வரும்போது ஒரு நல்ல வாட்ச் வாங்கி வா' என்றான். ’யாருக்கு’ என கேட்டதற்கு ’காஞ்சக்கடலைக்கு’ என்றான். சட்டென சிரிப்பாய்தான் வந்தது.

'அதென்ன காஞ்சக்கடலை?' எனக் கேட்டதற்கு அவரின் பட்டப்பெயர் எனவும், அவர் அவனுக்காக செய்த உதவிகளையும் சொல்ல ஆரம்பிக்க, ஏற்கனவே சொன்னது நினைவிற்கு வர, சரி ஏற்கனவே சொல்லியிருக்கிறாய் என மட்டறுத்து, மறக்காமல் வாங்கிச் சென்று கொடுத்தேன். ஆனால் குறுகிய பயணமாதலால் அவரை சந்திக்க முடியவில்லை.

அடுத்தமுறை ஊருக்கு சென்றவுடன் குழந்தைகள், அப்பா, அம்மா என எல்லோரையும் பார்த்து அளவலாவிய பின் வீட்டிற்குள் என்னையே பார்த்துக்கொண்டு ஒருவர், நான் பார்ப்பேனா என. என் தம்பியினைக் கேட்டபோது அவர்தான் காஞ்சக்கடலை என சொன்னான். அருகில் சென்று கையை கொடுத்தேன்.

'நல்லாருக்கியா கண்ணு, விடியற்காலத்துல இருந்தே உனக்காகத்தான் காத்துகிட்டிருக்கேன்' என சொன்னார். 'நல்லாயிருக்கேன், ரொம்ப சந்தோசம், குளிச்சிட்டு வந்து உங்களைப் பார்க்கிறேன்' என சொல்லி அதற்கு ஆயத்தமாக, அவர் சரியென வெளியே சென்றார்.

அத்தை மெதுவாய் என்னிடம் வந்து, 'பிரபு, காஞ்சக்கடல கூப்பிடுறாப்ல' என சொல்ல, வாசலுக்கு சென்றேன். 'ம்... சொல்லுங்கண்ணா' என கேட்க, 'கள்ளு குடிக்க காசு கொடு' எனக் கேட்டார். (டாஸ்மார்க் இருந்தாலும் கிராமங்களில் கள் இருக்கத்தான் செய்கிறது, தரவேண்டிய மாமூலினைத் தந்து).

'அண்ணா, பணம் ஏதும் மாற்றாமல் வந்துட்டேன், குளித்துவிட்டு  வந்து தம்பிகிட்ட வாங்கித் தருகிறேன்' என சொல்லி, சென்று பல் துலக்கி, மறந்துவிட்டுப்போன ஷாம்புவை எடுக்க வருபோது, வீட்டினுள் ஒரே பரபரப்பாக இருந்தது.

காஞ்சக்கடலை தூக்கு போட்டு இறந்துவிட்டாராம்... சரியாய் பத்து நிமிடங்களுக்கு முன்னால் பேசிக்கொண்டிருந்தவர் இப்போது முன்னாள். சட்டென தலையில் கைவைத்து உட்கார்ந்தேன். என்னிடம் காசுகேட்டுவிட்டு நேரே அவரது வீட்டுக்கு சென்றிருக்கிறார். கூரை வீடு, தாழ்வான விட்டத்தில் தனது வேஷ்டியை விட்டத்தில் போட்டு கழுத்தில் சுருக்கிட்டு நின்றவாக்கிலே கழுத்தை பட்டென சொடுக்கி இறந்திருக்கிறார். (சென்று இறக்கிய அப்பா சொன்ன தகவல்)

இங்கு ஒரு தகவலை சொல்லியே ஆகவேண்டும், கிராமங்களில் இதுபோல் குடித்து தற்கொலை செய்துகொள்பவர்கள் மிகவும் அதிகம். ஏமாற்றங்கள், கோபம், குடும்பப்பிரச்சினை என பல காரணங்கள்.

அப்போது என் தம்பியிடம், 'திவா பணத்தை கொடுத்திருக்கலாமடா, கையில் இருந்தால் கொடுத்திருப்பேன், மனசுக்கு ஒரே உறுத்தலாய் இருக்கு' என சொன்னேன்.

'இல்லன்னா, பணம் திரும்ப வாங்கனும்னாவது உயிரோட இருந்திருக்கலாமே? அவர்  ஒரு வாரமாவே சாகிறதா மிரட்டிகிட்டிருந்தாரு. எல்லாம் விளையாட்டுக்குன்னு நினைச்சிட்டோம்... எனக்கு இந்த வீடு கட்ட அவருதான் எல்லா உதவியும் செஞ்சாரு...' எனச் சொல்லி அவரைப்பற்றி இன்னுமொரு தகவலை சொன்னான்.

உங்களுக்கெல்லாம் தெரியும், கிராமங்களில் ஆண் குழந்தைகளுக்குத்தான் சரியான கவனிப்பு இருக்கும். அவர்களுக்குத்தான் காலை மாலை இரு வேளையும் தம்ளர் நிறைய பால் கொடுப்பார்கள், செய்யும் பதார்த்தங்களிலும் அவர்களுக்குத்தான் அதிகம் கிடைக்கும். இதனை பல வீடுகளில் கண்கூடாக கண்டிருக்கிறேன், அப்படி வளர்த்த பையன்கள் போட்டு பெற்றவரை உதைப்பதைப் பார்த்தும் துணுக்குற்றிருக்கிறேன்.

அவருக்கு ஒரு மகன், மகள். சரியாய் பத்து வருடங்களுக்கு முன் அவரது மகன் ஏதோ திருடிவிட்டதாய் அந்த தெருவிலுள்ளோர் எல்லோருமாய் சேர்ந்து குற்றம் சாட்ட, நேரே அவனை உள்ளே அழைத்துச் சென்றிருக்கிறார். பருத்திக்கு அடிப்பதற்காக வைத்திருந்த பூச்சி மருந்தினை நான்கு கிளாஸ்களில் உற்றிவைத்து மகனிடம் 'நீ குடித்துவிட்டு சாவு, இல்லை நாங்க மூணு பெரும் குடிச்சிட்டு சாகிறோம்' என சொல்லியிருக்கிறார்.

அந்த பையன் எவ்வளவோ போராடியும், மனைவி, மகள் என எல்லோரும் கதறியும் கேட்காமல்... கடைசியாய் அந்த பையன் எடுத்து குடித்துவிட்டானாம். உயிருக்கு போராடும் அந்த தருணத்தில் அக்கம் பக்கத்தார் காப்பாற்ற முயல, 'திருடன்னு சொல்லி அவனை அவமானப்படுத்துனீங்கல்ல, இப்ப என்னா மயித்துக்கு காப்பாத்த வர்றீங்க? அவனை காப்பாத்தினா நான் உசிரோட இருக்க மாட்டேன்' என ஆணித்தரமாக சொல்லிவிட கடைசியாய் அந்த பையன் துடித்து உயிரிழந்தானாம்.

அவர் இறந்த ஓரிரு நாளில் அவரின் மனைவியை வீட்டிற்கு சென்று பார்த்தேன். தலையில் நிறைய மல்லிகைப்பூ, நெற்றியில் பெரிய பொட்டு, மஞ்சள் தாலி... காரியம் வரை இருக்கும். அந்த அக்காள் என்னை பார்த்தவுடன் கதறி அழுதார்கள். 'உன்னைப் பத்தியும், தம்பி திவாவப் பத்தியும் தான் அதிகமா பேசிக்கிட்டு இருக்கும் கண்ணு, பொசுக்குன்னு இப்படி பண்ணிக்கிச்சி... என்ன பண்றது.... விதி'. பேச முடியாமல் கலங்கி அமர்ந்திருந்தேன்...

மறுபடியும் ஒரு நாள் பார்க்கும்போது அந்த அக்காவிடம் கேட்டேன், 'அக்கா உங்க பையனை மருந்து கொடுத்து சாவடிக்கும்போது, நீங்க கூட காப்பாத்த முயற்சிக்கலையா?' எனக்கேட்டேன்.

'அந்தாளு குணம் எனக்குத் தெரியும். சொன்னா கேக்காது, ரெண்டாவது அவன் பண்ணினது ரொம்ப தப்பு, எனக்கும் அவன் மேல அப்போ வெறுப்பாத்தான் இருந்துச்சி' என சொன்னார்கள்.

எதிர் வீட்டுப் பாட்டி...

|

எதிர் வீட்டு திண்ணையிலிருக்கும் பாட்டியை எவருக்குமே பிடிக்காது, குறிப்பாய் என் வயது குழந்தைகளுக்கு. காரணம் எப்போதும் திட்டிகொண்டே இருக்கும், சிரித்து பார்த்ததே கிடையாது.

சிறுவர்கள் நாங்களெல்லாம் 'ஆத்தூர் கிழவி' என சப்தமாக சொல்லிவிட்டு அது முனகிக்கொண்டு குச்சியியால் அடிக்க வருவதற்குள் ஓடிவிடுவோம். சொல்வதற்கு நாங்களோ, திட்டுவதற்கு பாட்டியோ தயங்கியது கிடையாது. பாட்டிக்கு ஆத்தூர்தான் சொந்த ஊர் என்பதால் அந்தப்பெயர்..

நீளமான வீடு, வாசலில் பாட்டி இருக்கும் திண்ணை, நுழைந்ததும் ஏற்கனவே வீடாக இருந்து இடிந்து சிதிலமானதால் தாழ்வாரம், அதைத்தாண்டி சென்றால் திரும்பவும் ஒரு திண்ணை, பின்னாளில் கட்டிய அந்த புது வீட்டில் நுழைந்தால் வரவேற்பரை, ஹால், படுக்கையறை என இருக்கும்.

பாட்டியின் வாழ்க்கை அந்தத் திண்ணையிலேயே தான். படுத்தபடியோ, உட்கார்ந்தபடியோ எதையாவது பேசிக்கொண்டே இருக்கும். அவர்கள் வீட்டு வாசலிலும் விளையாட அனுமதிக்காது, விளையாடும்போது ஒளிவதற்கும் விடாது.

அந்த வீட்டைச் சேர்ந்த மணி என் உயிர் நண்பன். ஒரு வயது சிறியவன், ஒன்றாகவே விளையாடுவோம். பாட்டி, மணியையோ அவர்கள் வீட்டைச் சார்ந்தவர்களையோ திட்டவே திட்டாது.

மணியை அழைப்பதற்கு திண்ணை வழியாக வீட்டுக்குள் போகும் போதெல்லாம், 'வந்துட்டான் பாரு கடங்காரன், எங்க ஊட்டு புள்ளங்கள கெடுக்கறதுக்கு' என திட்டும். பாட்டிக்கும் எனக்கும் எப்போதும் ஏழாம்பொறுத்தம். 'போ கிழவி' என சொல்லி ஓட இன்னும் அதிகமாய் திட்டும்.

மணியோடு திரும்ப வரும்போது மெதுவாய் முனகும், 'ம்...என்னது' என மணி அதட்டினால் 'ஒன்னுமில்லடா சாமி, இந்த வீட்டுல குஞ்சி குளவான்லாம் என்ன மெரட்டுது' என்று சொல்லும்.

அம்மாவிடம் சொன்னதற்கு, 'டேய் பாவம்டா அந்த பாட்டி, ராணி மாதிரி இருந்துச்சி, இப்போ கவனிக்க நாதியில்லாம இங்க வந்து இருக்குது. எல்லாம் விதி' என்று சொன்னார்கள். சின்ன வயது, ஒன்றும் புரியவில்லை.

அன்றொருநாள் பள்ளி விட்டு வந்தவுடன், பக்கத்து ஊரில் நெருங்கிய சொந்தத்தில் யாரோ இறந்துவிட வீட்டில் யாருமே இல்லை. மணியின் வீட்டிற்கு குஷியாய் ஓடினேன், இன்று நிறைய நேரம் விளையாடலாம் என.

வழக்கமாய் 'கடங்காரா' என திட்டும் பாட்டி அன்று 'எலேய் பிரவு' என்றழைக்க ஆச்சர்யமாயும் கொஞ்சம் பயமாயும் இருந்தது, என் பெயர் கூட பாட்டிக்கு தெரியுமா என வியப்பாயிருந்தது. மெதுவாய் தடியால் அடிக்கும் தொலைவிலேயே நின்று 'என்னா பாட்டி' என்றேன், கிழவியை விடுத்து முதன் முதலாய்.

'எல்லா முண்டைங்களும் என்ன கண்டுக்காம பச்ச தண்ணிகூட கொடுக்காம போயிட்டாளுங்க, தூங்கறப்போ சாவிய மட்டும் தலைமாட்டுல வெச்சிட்டு. சாவிய தர்றேன், உள்ள போயி எனக்கு கொஞ்சம் தண்ணியும், சோறு போட்டு ஏதாச்சும் ஊத்தி எடுத்துகிட்டு வர்றியா?' எனக் கேட்க பரிதாபமாக இருந்தது.

'சரி பாட்டி' என சொல்லி உற்சாகமாய் உள்ளே போய் தட்டினை எடுத்து சாதத்தைப் போட்டு,  சட்டிகளை அலசி, சாம்பார், ரசம் பொரியல் என எல்லாவற்றையும் சிறு சிறு கிண்ணங்களில் போட்டு திண்ணைக்கு எடுத்து வந்தேன்.

தனக்கென வைத்திருக்கும் தட்டில் சாப்பாட்டைப் போடச்சொல்லி, 'எனக்கு வெறும் ரசத்த மட்டும்தாம் ஊத்துவாளுங்க' என சொல்லி அவசர அவசரமாய் சாப்பிட்டது. சாப்பிடும்வரை அருகிலேயே இருந்து ஒவ்வொன்றாய் பரிமாறினேன். 'கண்ணு, எல்லாத்தையும் கழுவி அவளுவளுக்கு தெரியாம வெச்சிடு' என்று சொல்லியது.

அதன் பிறகு எங்களுக்குள் இருந்த உறவு இன்னும் அந்யோன்னியமானது. பாசமாய் எப்போது பார்த்தாலும் 'பிரவு' என கூப்பிடும். மணி வீட்டில் இல்லை எனும் தகவலைத் தந்து உள்ளே செல்லும் வேலையை தவிர்த்துவிடும். வீட்டில் ஏதாவது செய்தால் அம்மாவிடம் கேட்டு வாங்கிச் சென்று பாட்டிக்கு தருவேன். எனக்காகவும் அதற்கு தரும் பலகாரம், தின்பண்டங்களை வைத்திருந்து தரும்.

'ரொம்ப நேரம் விளையாத, கண்ட பசங்களோட சேராத, நல்லா படி' என அறிவுரைகள்  சொல்லும். அதையெல்லாம் விட என் அம்மாவிடம், 'உன் பையன் ரொம்ப பெரிய ஆளா வருவான்' என சொல்ல அம்மா என்னிடம் சொல்லி சிலாகித்து போனார்கள்.

அந்த பாட்டி இறந்த அந்த நாள் இன்றும் நினைவிலிருக்கிறது. உயிர் இப்பவோ அப்பவோ என உசலாடிக்கொண்டிருக்க, 'பிரபு, மணி ரெண்டு பெரும் போயி துளசி தழை பறிச்சிகிட்டு வாங்க' எனச் சொல்ல இருவரும் வேகமாய் ஆற்றோரம் இருக்கும் பிள்ளயார் கோயிலுக்கு ஓடிச் சென்று பறித்து வந்தோம். எல்லோரும் துளசி தண்ணீர் ஊற்ற மெதுவாய் இறங்கியது. கண்கள் திறந்தே இருந்தது, வெறித்த பார்வையுடன்.

'பிரபு, உன் மேலயும் பாசமா இருக்குமே, உன் கையாலையும் ஒரு வாய் ஊத்தேன்' என ஒரு ஆயா சொல்ல சிறு ஸ்பூனில் எடுத்து ஊற்றினேன், பாதிதான் இறங்கியது.

சந்தோஷமும் சோகமும்

|

சந்தோஷமும் சோகமும்

ந்தோஷமும் சோகமும் சந்தையில்
சோகத்தின் பின் சந்தோஷம்
சீந்துவாரில்லை சொல்லி விற்றாலும்.
ந்தோஷத்தின் பின் சோகம்
சொன்னாலும் கேளாமல்
சுறுசுறுப்பாய் விற்பனை.
ன்றைய சந்தோஷம்
து நாளைய சோகமானாலும்
ல்லோரும் ஆர்வமாய்....


ஏழை...

கையில் ரோலக்ஸ்
காதுகளில் இயர்போன்
ண்களில் ரேபான்
ழுத்தினில் மின்னல்
கால்களில் ரீபோக்
ண்ணியமாய் ஆடை
டந்து செல்லும் அவன்
ண்ணில்லா குருடனை
ண்டதும் அறுவருப்பு
ட்டாயம் ஏழை...

மீன் பிடிக்கப் போறோம்...

|

எண்பதுகளின் தொடக்கம், நல்ல மனம் படைத்த வெள்ளந்தியான மனிதர்கள் அதிகமாக, சுகாதாரமான காற்று மட்டுமே இருக்கும் அழகிய கிராமம்.

மொத்தத்தில் அறுபது வீடுகள், அதில் ஓரிரண்டு ஓட்டு வீடுகள் பெரும்பாலும் திண்ணையுடன். ஊரின் மத்தியில் ஒரு அழகிய முருகன் கோவில், சுற்றிலும் கற்களாலான சுற்றுச்சுவருடன். குடிநீருக்காக கோவிலுக்கு முன் ஒரு போரிங் பைப்பு, ஊரில் மொத்தம் மூன்று இடங்களில்.

'கிருஷ்ணா, பத்திரம் கண்ணு, ஆத்துல ஜாக்கிரத, ஆழமான இடத்துக்கு போவக்கூடாது. டவுன்ல இருக்கிற புள்ள நீ அதிக பழக்கம் இருக்காது' பட்டினத்தில் இருந்து வந்திருக்கும் தனது அண்ணன் மகனை அன்புடன் சொல்லி அனுப்பும் அத்தை ஆனந்தி.

'டேய், கந்தன் மவனே, என் மருமகனுக்கு மீன் புடிக்கிறது எப்படின்னு சொல்லிக் கொடுத்துட்டு சீக்கிரமா கூட்டிக்கிட்டு வந்துடு... ஒரு மணி நேரம்தான் ஒனக்கு டைம், இல்லன்னா பிச்சிப்புடுவேன்...' மாமா ரங்கசாமி.

'சும்மா ஓவரா பேசாத மாமா, கங்கான்னு பேரு இருக்குல்ல, அதென்ன கந்தன் மவனேன்னுகிட்டு? அதெல்லாம் நாங்க பாத்துக்குவோம்'

ஆனந்தமாய் புதிதாய் வந்திருக்கும் அந்த பட்டினத்து சிறுவன் கிருஷ்ணா, கங்கா, சுப்பு மற்றும் வைத்தி ஆற்றை நோக்கி கிளம்பினார்கள். கற்களை எடுத்து வழியில் தென்பட்ட நாய்களைத் துரத்தியும், அடிபடாதவாறு மெதுவாய் கோழிகளை விரட்டியும் சென்று ஆற்றை அடைந்தார்கள்.

ஒரு பெரிய அரசமரம், அதில் கன்று போட்ட மாடுகளின் செத்தையை கட்டி தொங்கவிட்டிருக்க (பால் மரத்தில் கட்டினால் நன்றாக பால் கறக்கும் என நம்பிக்கை), மரத்தில் பலரின் தலைமுடிகளோடு அறையப்பட்ட ஆணிகள், முடியினை இழந்து மனநோய் சிகிச்சை பெற்றதை பறைச்சாற்றிக் கொண்டிருந்தது.

எல்லோரும் சட்டை, டிராயர்களை அவிழ்த்துவிட்டு அம்மணமாய் ஆற்றில் மீன் பிடிக்க இறங்க,

'என்னது ஜட்டி போட மாட்டீங்களா?' என வெக்கப்பட்டு கிருஷ்ணன் கேட்க,

'டிராயரையே போஸ்ட் பாக்ஸோடத்தான் போடுவோம்' என சுப்பு சிரித்தான்.

குதூகலமான அரை மணி நேரம், கெளுத்தி, கெண்டை, குறவை மீன்கள் என ஒரு சிறிய டப்பா நிரம்பும் அளவிற்கு கிடைக்க, அடுத்த கட்டத்துக்கு தயாரானார்கள்.

கெளுத்தி மீன்களை லாவகமாக முள்ளொடித்து, சாம்பல் கலந்து கற்களில் தேய்த்து நன்றாக அலசி, கரையை விட்டு கொஞ்சம் உள்ளே சென்று அருகிலிருந்த புளியந்தோப்பில் விறகுகளை மூட்டி மீன்களைச் சுட ஆரம்பித்தார்கள்.

'ஏய் அந்த ரத்தக்கண்ணன் வந்தா திட்டுவாண்டி, இது அவனோட இடம்' சுப்பு சொல்ல,

'ஆமாண்டா அந்த ஆளு அவன் காட்டுக்குள்ள நடந்தாவே கத்துவான்' கங்கா சொன்னான்.

'அதெல்லாம் பாத்துக்கலாம், மீனை மொதல்ல சுடுங்க' வைத்தி சொல்லிவிட்டு எரிந்துகொண்டிருந்த ஒரு கொள்ளியை எடுத்துச் சென்று அருகில் ஒரு சிறு மரத்தில் இருந்த கம்பளி பூச்சிகளை நெருப்பால் சுட்டு, சுருண்டு விழுவதைப் பார்த்து குதூகலித்துக்கொண்டிருந்தான்.

கொஞ்சம் உயரத்தில் கொத்தாய் இருந்த புழுக்களை நோக்கி நெருப்பைக்காட்ட, அவை சட சடவென அவனது தலை மற்றும் சட்டையில் விழ, பதட்டத்தில் கையிலிருந்த சுள்ளியை தூக்கி எறிந்து கத்த, எல்லோரும் ஓடி வந்தார்கள்.

அவன் ஒன்றுமில்லை என சொல்லி தட்டிவிட, கொஞ்சம் தாமதமாய்த்தான் கவனித்தார்கள், அருகிலிருந்த வைக்கோல் போர் நன்றாக கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்ததை.

அதை அணைக்க மண்ணை அள்ளிப்போட்டு முயற்சிக்க, அதற்குள் காற்றில் கொழுந்து விட்டெறிய, புகை நெருப்பைப் பார்த்து அருகிலிருந்த நிறைய பேர் ஓடி வந்து எல்லோருமாய் சேர்ந்து பாதிக்கு மேல் வைக்கோலை பிடுங்கியும்,  கிடைத்த பாத்திரங்களில் தண்ணீரைக் கொண்டுவந்து ஊற்றியும் ஒரு வழியாய் அணைத்தார்கள்.

காட்டுக்காரர் லட்சுமணன் கத்திக்கொண்டு அருகிலிருந்த குச்சியினை எடுத்துக்கொண்டு நால்வரையும் அடிக்க வர கிருஷ்ணன்,

'அவங்கள அடிக்காதீங்க, நாந்தான் கம்பளி பூச்சிய சுடும்போது தவறி அங்க போட்டுட்டேன்' என முன்னால் வந்தான்.

இது யார் புதுசா இருக்கானே என, அவனை அடிக்காமல், 'யாருடா நீ, யாரு மவன்' என கேட்க,

'அவன் ரங்கசாமி மாமா வீட்டுக்கு வந்திருக்கான், கொள்ளிய போட்டது நான் தான்' வைத்தி.

'இல்லையில்லை நான்தான்' என கிருஷ்ணன் உறுதியாய் சொல்ல, கடைசியாய் விஷயம் ரங்கசாமி மாமாவுக்கு போனது.

அவர் ஒன்றும் பேசாமல் உள்ளே போனார். 'தெரியாம செஞ்சுட்டாங்க, இந்தா, அதுக்கு ஆன காச வாங்கிட்டு போ' என சொல்லி இருமடங்கு பணத்தினை தர அந்த லட்சுமணன் சந்தோஷமாய் வங்கிக்கொண்டு போனார்.

'கிருஷ்ணா, நீ தான் நெருப்பு பத்தறதுக்கு காரணமா?', மாமா மெதுவாய் கேட்டார்.

'ஆமாம் மாமா' கிருஷ்ணன் சொல்ல, 'உன் கண்ணு பொய் சொல்லுதே, உண்மைய சொல்லு, யாரு செஞ்சது?'

'நான் பண்ணல, இருந்தாலும் எனக்காகத்தானே வந்தாங்க,  நான் வெளியூர்க்காரன், இன்னும் ஒரு வாரத்துல போயிடுவேன், அப்புறம் எப்போ வரப்போறேனோ?, ஆனா அவங்கல்லாம் இங்கேயே இருப்பாங்கல்ல, ரொம்ப நாளைக்கு பாக்குறப்போ எல்லாம் சொல்லிட்டு இருப்பாங்க, அதான்' என அனுபவஸ்தன் போல பேச,

மாமா கிருஷ்ணனை கட்டிக் கொண்டு, உச்சி மோர்ந்து முதுகில் தட்டிக்கொடுத்தார்.

சித்திரை வாழ்த்துக்கள்...

|

புத்தாண்டு வாழ்த்துக்கள்...

தூங்கிய கனவெல்லாம்
துளிர்த்து நனவாகி
தேங்கிய செயல்களெல்லாம்
தடையின்றி நடந்தேறி


வேகத்தோடு விவேகம்
வாழ்வினில் போற்றிட்டு
மகிழ்ச்சியது யாவருக்கும்
மனதில் வந்து நிறைந்திட


தகிக்கும் வெயில் கூட
தண்மையாய் மாறி
அகமும் குளிர்ந்திடவும்
இறையவனை வேண்டி

விக்ருதி ஆண்டாக
வந்திருக்கும் சித்திரையை
மக்களெல்லாம் மகிழ்ச்சியோடு
முகம்மலர வரவேற்போம்...

எனக்கு பிடித்த சினிமாக்கள் - கல்லூரிக்குப் பின்

|

இடுகை எழுத அழைத்த நண்பர் முகிலனுக்கு நன்றி...

முதல் பகுதியில் கல்லூரிக்கு முன் என எழுதியதைத் தொடர்ந்து கல்லூரிக்குப்பின் பார்த்த படங்களில் கவர்ந்த சில இந்த இடுகையில்...

முந்தய இடுகையை படிக்கவில்லையெனில், படித்து இதை படியுங்களேன்!

விதிகள்:

1. தமிழ்ப் படங்கள் மட்டுமே

2. குறைந்த பட்சம் எடுத்த வரைக்கும் திருட்டி டிவிடியாவது வந்திருக்க வேண்டும்.

3. அடல்ட்ஸ் ஒன்லி படங்கள் அனுமதி இல்லை (நியூ உட்பட)

கல்லூரியில் சேர்ந்தபின் நமது வாழ்க்கை முறையே மாறிவிடும் அல்லவா, முதன் முதலாய் கிடைக்கும் முழுச் சுதந்திரம், நம்பி பெற்றோர் தரும் பணம், கிடைக்கும் புதுப்புது உறவுகள், புதுச் சூழல் ஆகியவைகளால்?...

நாங்கள் நண்பர்கள் ஐவர் ஆளுக்கு நூறு என சேர்த்து திருச்சி சென்றோம். மாரிஸில் இந்திரன் சந்திரன் டிக்கெட் இல்லாததால் கிடைத்த அடுத்த நாள் பதினோரு மணிக்காட்சிக்கு முன்பதிவு செய்துவிட்டு, கலையரங்கத்தில் மாலை ஆறு மணிக்காட்சியாக ரஜினியின் பணக்காரன் பார்த்தோம். ரோட்டோரக் கடையில் சாப்பிட்டுவிட்டு ஒன்பது மணிக்காட்சியாக கார்த்திக்கின் இதய தாமரை படத்தை முன் வரிசையில் அமர்ந்து கழுத்து சுளுக்க (கடைசி வகுப்பு டிக்கெட்) பார்த்து இரவு முழுவதும் பஸ் ஸ்டாண்டிலேயே சுற்றிவிட்டு விடிந்தவுடன் நேஷனல் காலேஜில் படிக்கும் எனது நண்பனின் விடுதிக்கு சென்று குளித்து, அருகே இருந்த ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு கமலின் இந்திரன் சந்திரன். பின் கிளம்பும்போது, 'மாப்ளே அமலா நடிச்ச உதயம் படம் காவேரியில போட்டிருக்கான்டா அதையும் பாத்துடலாண்டா' என ஒருவன் சொல்ல அதையும் பார்த்துவிட்டு கண்கள் பொங்க சென்றோம்.

மொத்தத்தில் எண்பத்து மூன்று ரூபாய்தான் ஆனது, பஸ் செலவு உட்பட... எதற்காக என்றால் காஞ்சமாடு கம்மங் கொல்லை என்று சொல்லுவார்களே அதுபோல் சினிமா பார்ப்பதையே தொழிலாக இருந்தோம்,வேறு பொழுது போக்குகள் இல்லாததால். சரி முன்னோட்டம் போதும், படங்களைப் பார்ப்போம்...

கரகாட்டக்காரன்

கல்லூரியில் சேர்ந்த சமயத்தில் வந்த படம். ராமராஜனை கிண்டல் செய்தாலும் என்னுடன் படித்த எல்லோருமே பார்த்த படம். பெரம்பலூர் ராஜா தியேட்டரில் வேலைக்கென புதிதாய் இரண்டு பேர் அந்த படத்திற்காக மட்டும், அவர்கள் சாமியாட்டும் பூசாரிகள். தியேட்டரே பக்தி மயமாக இருந்தது, வேப்பிலைக் கொத்து, மாவிலைத் தோரணங்கள், ஒரு சாமி சிலை என. பக்கத்து கிராமங்களில் இருந்தெல்லாம் கூட்டம் பிய்த்துக்கொண்டு வந்தது. எல்லோரும் 'நேத்து பத்து பேருக்கு சாமி வந்ததாம், இன்னிக்கு?' என்பதுதான் பேச்சாயிருந்தது.

ஜனரஞ்சகமாய் எல்லா தரப்பினரையும் கவர்ந்த படங்களில் இதுவும் ஒன்று. வாழைப்பழம் காமெடி இன்றும் பிரபலமாயிருக்கிறது. (படம் பார்த்தவுடன் 'மாப்ளே, ரெண்டும் எங்கன்னு கேக்கவேண்டியதுதானடா' என அறிவுப்பூர்வமான கேள்வியை கேட்க, நீ ஒரு படம் எடுத்து அதுல கேளுன்னு நக்கலாய் பதில் வந்தது). இளைய ராஜா புகுந்து விளையாடிய படங்களில் இதுவும் ஒன்று. அன்றைய கட்டத்தில் பெரும்பாலோனோர் இந்த படத்தை பார்த்திருப்பார்கள். எல்லா பாடல்களுமே அருமையாய் இருக்கும்.

மாரியம்மா, மாரியம்மா என பாடல் ஆரம்பித்தவுடன் ஒரே களேபரம். அங்கும் இங்கும் என சாமியாடித் தீர்த்தார்கள். பூசாரிகள் பயங்கர பிஸி. அப்போது எங்கள் அருகே அமர்ந்திருந்த ஒரு அம்மா சாமியாட ஆரம்பிக்க, ஒருவர் பொளிச்சென ஒரு அறை விட்டார். பொறுக்க முடியாமல் 'யோவ் பொம்பளைய அடிக்கிறியே அறிவிருக்கா' என நான் கேட்க, 'அதெல்லாம் நிறையாவே இருக்கு, சும்மா மூடிக்கிட்டு படம் பாரு, அது என் அம்மாதான், சாமியாடுனா என்னா பண்ணனும்னு தெரியும்' னு சொல்ல, பல்ப் வாங்கி வழிந்தேன். அதன் பிறகு அந்த அம்மா ரொம்ப அமைதியாக படம் முடியும் வரை இருந்தார்கள்.

அந்த வாரம் வந்த ஜூவியில் அடித்தது, நான் கேட்டு பல்ப் வாங்கியது என டயலாக்கில் வந்திருந்தது. இன்றும் அந்த படத்தின் பாடலையோ, ஏதச்சும் ஒரு காட்சியையோ பார்த்தால் மெலிதாக ஒரு புன்முறுவலுடன் இந்த நிகழ்வுகள் மெலிதாய் தோன்றும்.

அஞ்சலி

அப்போது பெரம்பலூரில் இருக்கும் தியேட்டர்களில் ராஜா தியேட்டரில் மட்டும்தான் திரை வெள்ளையாக இருக்கும். ராம் மற்றும் கிருஷ்ணா தியேட்டர் திரைகள் பழுப்புக்கலரில், படம் தெளிவாக தெரியாத நிலையில் இருக்கும். கிருஷ்ணா தியேட்டரில் தான் அஞ்சலி படத்தைப்பார்த்தேன் எனது சீனியர் சுரேஷ் அண்ணாவுடன். எனது பக்கத்து ஊர்க்காரர். அவர் எனக்கு எல்லா விதத்திலும் குருவாக இருந்தார், படிக்க அறிவுறை சொல்லுதல், பாட சந்தேகங்களை நிவர்த்தி செய்தல்... என.

இரவில் வெளியில்தான் படுத்துக்கொள்வோம், அறையில் புழுக்கமாய் இருக்கும் என்பதால். ஹாஸ்டலில் இருந்து பின்பக்க சுவர் வழியாக இறங்கி, இறக்கி இரவு பத்து மணிக்காட்சிக்கு சென்றோம். மணிரத்தினத்தால் உருவாக்கப்பட்ட ஒரு அருமையான குழந்தைச் சித்திரம். இருட்டில் எடுக்கப்பட்ட காட்சிகள் பல இருந்ததனால் (இந்த படத்தில் ரொம்ப அதிகம்ங்க...) திரை காரணத்தால் சரிவரத் தெரியாமல் குருட்டுப்பூனை இருட்டில் பாய்ந்தார்போல் பார்த்தோம். பிறந்த குழந்தை குறையோடு இருப்பினும் குறைவின்றி அன்பு செலுத்தவேண்டும் என போதித்த படம். குழந்தைகளுக்கிடையே உள்ள மன நிலைகளை பிரதிபலிக்கும் பல காட்சிகள் இதில் அசத்தலாய் இருக்கும்.

இடைவேளையின் போது வெளியில் செல்லக்கூடாது, யாராவது பார்த்து விடுவார்கள் என சீட்டிலேயே   உட்கார்ந்திருக்கச் சொன்னார். படம் முடியும் தருவாயில் முன்னால் ஒருவர் எழுந்து எழுந்து உட்கார, இங்கிருந்து ஒரு பலமாக 'ஒழுங்கா உக்காருய்யா' என சப்தம் செய்தோம். படம் முடிந்து விளக்குகளைப் போடும்போதுதான் தெரிந்தது அது எங்கள் வார்டன் முத்தையன் சார் என. அப்புறமென்ன, முதல் முறையாக படம் பார்த்தபின் கேட் வழியே உள்ளே சென்றோம்

காதலுக்கு மரியாதை

சென்னையில் இருந்த சமயத்தில் ஆழ்வார்பேட்டையில் இருந்த சரத் மியூசிக்கில் தான் கேசட்டுகளை பதிவு செய்வது வழக்கம். கடையின் முதலாளி இந்த படம் வெளியான சமயத்தில் சொன்ன ஒரு விஷயம், வாழ்வில் அதிகமாய் ரெக்கார்ட் செய்து கொடுத்தது 'என்னை தாலாட்ட வருவாளா' எனும் இப்படத்தின் பாடலைத்தானாம். என் வாழ்வின் சில முடிவுகளை எடுக்கவும் உதவிய படம். இன்றைய சூழலில் திரும்ப பார்க்கும்போது கொஞ்சம் தொய்வு இருக்கலாம். அப்போது மிக மிக கவர்ந்த படம். அதில் வரும் சிவக்குமார், ஸ்ரீவித்யா பாத்திரங்கள் எனது பெற்றோரை பெரிதும் நினைவுறுத்தும்படி இருந்ததாலும் என்னை மிகவும் கவர்ந்து இருக்கலாம். நல்லதொரு எதிர்ப்பாராத முடிவுடன் கலக்கிய படம்.

ஈரம்

வார இறுதியில் என் நண்பர் முரளி டிக்கெட் எடுத்து வைத்து அழைக்க அவசர அவசரமாய் வாசிங் மெஷினில் துணியினைப்போட்டு வேக வேகமாக சென்று சிங்கையில் பார்த்த ஒரு அருமையான சஸ்பென்ஸ் திரில்லர். படத்தின் ஆரம்பம் முதல் கடைசிவரை எங்கேனும் ஈரமாயிருக்கும்படி காட்சிகள் இருக்கும். ஒளிப்பதிவு ஆங்கிலப்படத்துக்கு இணையாய் இருக்கும். ரசித்து பார்த்துவிட்டு வீட்டுக்கு வந்து கிச்சனுக்குள் போனால் ஒரே வெள்ளக்காடு. வாஷிங் மெஷினிலிருந்து வெளியே செல்லும் பைப்பை சுருட்டி உள்ளே வைத்துவிட்டு பாத்ரூமை சுத்தம் செய்தபின் உள்ளே வைக்காமல் விட்டுவிட, அதன் பின் எல்லாம் சரி செய்ய படம் பார்த்ததை விட அதிக நேரம் ஆயிற்று. அப்போது வீட்டிற்கு வந்த என் நண்பன் கேட்டான் 'என்னடா வீடெல்லாம் ஈரமாயிருக்கு' என்று. 'ஈரம் படம் பார்த்தேன் அதான்' என சொன்னேன்.

அங்காடித்தெரு

கடைசியாய் பார்த்து மனதுள் உறைந்திருக்கும் படம். ஏற்கனவே இடுகை நீளமாகிக்கொண்டு போகிறது, இதன் விமர்சனத்தை என்னுடைய இன்னொரு வலைப்பூவில் படித்துவிடுங்களேன்...

இதனை தொடர அழைப்பது

அருமைத் தம்பி ரோஸ்விக்
அன்புத் தம்பி பட்டாப்பட்டி
ஆருயிர் அண்ணன் ஆரூரன்

எனக்கு பிடித்த சினிமாக்கள் - கல்லூரிக்கு முன்.

|

இடுகை எழுத அழைத்த நண்பர் முகிலன் எனக்கு பிடித்த படங்கள் பத்தினையும் சொல்லிவிட்டதால், கொஞ்சம் நினைவுகளை பின்னே செலுத்தி யோசித்ததில் சிறு வயதுமுதல் கவர்ந்த படங்களை ஒரு தொகுப்பாய்...

விதிகள்:

1. தமிழ்ப் படங்கள் மட்டுமே

2. குறைந்த பட்சம் எடுத்த வரைக்கும் திருட்டி டிவிடியாவது வந்திருக்க வேண்டும்.

3. அடல்ட்ஸ் ஒன்லி படங்கள் அனுமதி இல்லை (நியூ உட்பட)

பாசமலர்

நான்காம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த போது சிவாஜியும் படங்களுக்கு மட்டுமே தாத்தாவின் அனுமதி கிடைக்கும். கிடைத்ததும்,  வீட்டில் எல்லோரும் அருகிலிருக்கும் மல்லியகரை அண்ணாமலை தியேட்டரில் மாட்டு வண்டி கட்டிக்கொண்டு சென்று பார்த்த படம் பாசமலர். அண்ணன் தங்கை உறவுக்கான ஒரு அழகிய கவிதையாய் பிம்சிங்கால் எடுக்கப்பட்ட படம். சிவாஜியின் பார்வை போனபின் தேம்பி அழ ஆரம்பித்தவன், துண்டு நனைய அழுதுகொண்டிருந்தேன். திரையையும் என்னையும் மாறி மாறி பார்த்தவண்ணம் இருந்தார்கள். இன்றும் அய்யா என்னை ஸ்நேக் பிரபா அழைப்பது போல் என் தம்பிகள், மாமாவின் பிள்ளைகள் எல்லாம் மலர்களைப்போல் அண்ணன் என பாடி நக்கலாய் கலாய்ப்பார்கள். இன்று பார்த்தாலும் அழுகையாய் வருகிறது, காலமெல்லாம் என்னை ஓட்டுவதற்கு காரணமாயிருக்கிறதே என...

கர்ணன்

சிறு வயதில் வரலாற்று படங்கள் என்றால் என் மாமா தவறாமல் அழைத்துத் சென்றுவிடுவார். அப்போது பார்த்த மயில்ராவணன், தசாவதாரம் என பல படங்களில் என்னை கவர்ந்த படம் சிவாஜியின் கர்ணன். மகாபாரதத்தில் கர்ணனின் பாத்திரப்படைப்பு எல்லோரையும் சென்றடைய காரணமாயிருந்த ஒரு படம். அந்த சிறு வயதில் அதன் பிரம்மாண்டம் மிகவும் கவர அதிசயித்துப் பார்த்தேன். குதிரைகள், யானைகள், போர் என எல்லாம் சிலிர்ப்பாய் இருந்தது. அதில் கடைசியில் கர்ணன் (சிவாஜி) போரில் தேர்க்காலில் அம்பு பட்டு கிடந்ததில் இருந்து கிருஷ்ணர் (ராமராவ் என்பது பிறகுதான் தெரியும்) உள்ளத்தில் நல்ல உள்ளம்... எனப் பாடிவந்து தர்மத்தை யாசகமாகப் பெற்று சாகும் வரை தேம்பி தேம்பி, மாமா அது நடிப்புடா என அன்பாய், அதட்டி சொன்னாலும், புத்திக்கு புரிந்தும் மனசுக்கு புரியாமல் அழுததும், படம் பார்ப்பவர்களில் பலர் என்னையே பார்த்ததும் (ஹி..ஹி... ரெண்டாவது தடவ) இன்றும் நினைவுக்கு வருவதால் இதுவும் பிடித்த படங்களில் ஒரு இடம்.

அச்சமில்லை அச்சமில்லை.

சிறு வயதில் தனியே சென்று பார்த்த முதல் படம். இந்த படத்திற்கு சென்றதன் காரணம் இது வெளியாகி ஓடிக்கொண்டிருந்த தியேட்டர். ஆத்தூர் வேல்முருகன் தியேட்டர்தான் அப்போது நிறைய பிரபலம். படம் போடுவதற்கு முன் அந்த மெருன் கலர் ஸ்கிரீன் சுருங்கிக்கொண்டு விளக்குகள் அணைந்து ஏறி மேலே செல்லுவதைப் பார்க்கவேண்டும் என்பதற்காகவே சென்று பார்த்த படம். டிக்கெட்டுக்காக வரிசையில் காத்திருந்தபோது தம்பி இந்த படம் உனக்கெல்லாம் புரியாது என ஒரு பெரியவர் சொல்ல, பைக்குள் இருந்த விக்கிரமாதித்தன் கதைகள் பெரிய எழுத்து புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பித்து அவரைப் பொருட்படுத்தாமல் பார்த்தேன். ஒரு நேர்மையான மனிதனை (ராஜேஷ்) அரசியல் எப்படி பாழ்ப்படுத்துகிறது எனபதைப் பற்றி சொன்னது சிறுவனானாலும் அப்போதே பிடித்திருந்தது. இந்தப் படத்தின் ஓடுகிற தண்ணியில, ஆவாரம்பூ இன்னும் அடிக்கடி கேட்கும் எனது அனைத்து இசைப்பான்களிலும் கட்டாயம் இடம்பெற்றிருக்கும்.

வாழ்வே மாயம்

ஒரு அழகான காதல் கதை... கமல் விரட்டி விரட்டி ஸ்ரீதேவியை காதலிப்பார். பின் தனக்கு கேன்சர் எனத் தெரிந்தவுடன் காதலிக்க உதவிய அதே விலைமாது ஸ்ரீப்ரியாவின் உதவியால் வெறுக்கவும் பயன்படுத்தி... வசனங்கள் பளிச்சென இருக்கும். பாலாஜியின் தயாரிப்பில் வந்த படம். இவரின் பெரும்பாலான படங்களில் கதாநாயகன் கதாநாயகியின் பெயர் ராஜா, ராதா எனத்தான் இருக்கும். இதில் கமல் ராஜா, ஸ்ரீப்ரியா ராதா. இந்த படத்தை இன்று பார்த்தாலும் கண்கள் கலங்கிவிடும். ஆர்வக்கோளாறில் சன் டிவியில் தனியே ஹாலில் வாழ்வே மாயம் என கமல் பாடும் கிளைமாக்சை கண்களில் நீர் வழிய பார்த்துக்கொண்டிருந்தேன், மனைவியும் மகனும் உள்ளே படித்துக்கொண்டிருந்தார்கள் என்ற நம்பிக்கையில். திடீரென ஹா, ஹா என சிரிப்புடன் எனது மகன், மனைவி முன்னால் வர, அன்று வழிந்தது இன்றும் பசுமையாய் நினைவில். நம்ம வாண்டு அழுவதைப்பார்த்துவிட்டு நைசாக அம்மாவிடம் சொல்லி அழைத்து வந்தது அப்புறம்தான் தெரிந்தது. நீலவான ஓடையில்... எனும் கங்கைஅமரனால் இசையமைக்கப்பட்டு இளையராஜாதான் என நிறைய பேர் நம்பும் பாடல் இடம் பெற்றது இந்த படத்தில் தான்.

குரு சிஷ்யன்

என் தம்பியோடு பார்த்த இரண்டாவது படம். (காக்கிச்சட்டை முதல் படம்). அவன் எட்டாவது படிக்கின்ற சமயம். இந்த படத்தை வீட்டிற்கு தெரியாமல் பார்க்கவேண்டும் என முடிவு செய்து பலவிதமான திட்டங்கள் வகுத்து தம்பியை மீன் பிடிக்கப்போகிறோம் என சொல்லச் சொல்லி, டியூசன் சென்ற என்னோடு வந்து இணைய ஆத்தூர் சென்று பார்த்தோம். ரொம்ப ரசித்து சிரித்துப் பார்த்து பரோட்டா சாப்பிட்டுவிட்டு அவனை முதலில் அனுப்பி அடுத்த பஸ்ஸில் வீட்டிற்கு போனேன். என் தம்பி கண்கள் கலங்கி வாசலில் உட்கார்ந்திருந்தான். என்னை பார்த்ததும் உள்ளே ஓடி அப்பா அண்ணன் வந்தாச்சி என சொல்ல, அப்பாவின் கேள்விக்கு பளிச்சென சினிமாவுக்கு தம்பியோடுதான் சென்றேன் என சொல்லி தப்பித்தேன். அப்பா அடிக்காததால் தம்பிக்கு ஏமாற்றம். தம்பி மாமாவின் கடையில் தூண்டிலை வைத்துவிட்டு வர, பஸ் ஏறுவதையும் பார்த்து அப்பாவிடம் தகவல் சொல்ல... ஆனால் இன்று வரை குரு சிஷ்யர்களாக இருவரும் மாறி இருக்க ஒரு ஆரம்பக்காரணம் இந்த படம். கண்டுபிடிச்சேன், கண்டுபிடிச்சேன் பாடல், சோவின் அரசியல் காமெடி என எல்லாம் அருமையாய் இருக்கும். ரஜினி முழுக்க காமடியாய் நடித்தது தில்லுமுல்லுவிற்கு பிறகு இதுதான் என எண்ணுகிறேன்.

இடுகை நீளமாக செல்வதால் இரு பிரிவுகளாக்கி க.மு க.பி என (அதாங்க, கல்லூரிக்கு முன், கல்லூரிக்குப்பின்) எழுதத் தோன்ற அடுத்த பகுதியில் இன்னும் ஐந்து கல்லூரிக்குப் பின்.

இதைத் தொடர அழைப்பது ஐவரை.

சங்கமித்ரன் (சங்கவி) (அருவா மேட்டர் நிறைய எதிர்பார்க்கிறேன்)

கதிர் (நோ எஸ்கேப்... ஒரு மாறுதலுக்காவது எழுதித்தான் ஆகவேண்டும்)

செந்தில் வேலன் (இதையும் உங்களின் அழகான பார்வையில்)

சேட்டைக்காரன் (சொல்லவே வேணாம், எப்படி பண்ணுவீங்கன்னு எல்லாருக்கும் தெரியும்)

மயில் (சகோதரி உங்களின் பார்வையை பகிர்ந்துகொள்ளுங்கள்)

நண்பர் சரவணக்குமார், மின் தடை...

|

முதலிலேயே சொல்லிவிடுகிறேன், இந்த இடுகையை எழுத ஆரம்பிக்கும்போது மின் தடை. சிங்கப்பூரிலுமா என வியக்காதீர்கள், ஏன் என பின்னால் பார்க்கலாம்..

நண்பர் சரவணக்குமார், நான் தொடர்ந்து வாசிக்கும் அன்பு நண்பர். சில மாதங்களுக்கு முன் அவர் ஊருக்கு வரும்போது அவரின் இடுகையில் தொடர்பு விவரங்களை தந்திருக்க, அவரை திரும்ப செல்வதற்குள் அழைக்கவேண்டும் என எண்ணியிருந்தேன்.

அவரின் இன்றைய ரயில் பயண அனுபவப் பகிர்வினை படித்தபின், நேற்று சந்தித்த நணபர் மனவிழி சத்ரியன் சொன்ன தகவல்கள் எல்லாம் அவரை அழைக்கத்தோன்ற, முன்னதாக அலுவலக பரபரப்பில் படிக்காமல் விட்டுப்போன ஒரே இடுகையான நண்பா நண்பாவை படித்தபின் அழைத்தேன்.

அழைத்ததன் முக்கிய காரணங்களுல் ஒன்றான தலையில் அடிப்பட்டு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரது நண்பரின் உடல் நிலையைப்பற்றி விசாரிக்க, அவர் நன்கு தேறி வருவதாய் சொன்னார். எப்போதும் பிஸியாக இருக்கும் அண்ணன் அப்துல்லா அவர்கள் அடிக்கடி அழைத்து மருத்துவ ஆலோசனைகள் கொடுத்ததை நெகிழ்வுடன் நினைகூர்ந்தார்.

புதிதாய் பேசுவதுபோல் இல்லை, ஏற்கனவே அறிமுகமானவர்கள் போல் நிறைய பேசினோம். பல விஷயங்களில் இருவருக்கும் ஒத்த கருத்துக்கள் இருப்பதை எண்ணி மகிழ்ந்து, சினேகிதன் அக்பர், ப.ரா பற்றி அவர் சொல்ல அய்யா, கதிர், சகோதரி, சேட்டைக்காரன் என நான் சொல்ல, படு சுவராஸ்யமாய் எங்கள் உரையாடல் நீண்டது.

அவர் சத்ரியன் செய்த உதவியினை எண்ணி நிறைய பெருமைப்பட்டுக் கொண்டார். அறிமுகமே இல்லாமல் தானே கிடைத்த அந்த உதவி வலையினால் மட்டுமே சாத்தியம் என்று சொல்லி, வலையுலகில் எழுதுவதால்தான் எத்தனை நட்புக்கள் என சிலாகித்துக்கொண்டார்.

அழைத்தது வீட்டுத் தொலைபேசி மூலம் காலிங் கார்ட்-ல். திடீரென தொடர்பு துண்டித்ததுப்போக, மின்சாரம் தடைபட்டிருந்தது. வழக்கமான ஒரு வசவினைச் சொல்லி, நேரத்தினைப் பார்க்க, மூன்று முப்பது, எட்டாம் தேதி என்பது தெரிய வர, அப்போதுதான் ஒரு விஷயம் நினைவிற்கு வந்தது.

ஆம், ஏதோ பராமரிப்புக்கென ஒரு மணி நேரம் மின்சாரம் இருக்காது எனவும், ஆயத்தமாய் இருக்கும்படியும் மிகத்தெளிவாக அறிவுறுத்தியிருந்தார்கள், தனியான மடல், அறிவிப்பு பலகையில், வீட்டிற்குள்ளும் ஒரு சீட்டு என கடந்த பதினைந்து நாட்களாக. சொன்னது ஒரு மணி நேரம், ஆனால் சரியாய் முப்பத்திரண்டு நிமிடத்தில் இடுகையினை முடிக்கும் முன் மின்சாரம் வந்துவிட்டது. இந்த மின் தடை நான் இங்கு வந்த கடந்த ஆறு வருடங்களில் முதல் நிகழ்வு!

சத்தியமாய் என் மனம் நம் ஊரின் மின் தடையைப்பற்றி எண்ணி புழுங்க ஆரம்பித்தது. எல்லா வசதிகளும், வாய்ப்புக்களும் இருந்தும், சரியான திட்டமிடல் இல்லாததால் என்ன ஒரு அவஸ்தை எல்லோருக்கும்!

வருடா வருடம் அதுவும் குறிப்பாய் கொளுத்தும் கோடையில் இப்பிரச்சினை வந்தாலும் அதற்கான சரிப்படுத்தலைச் செய்யாமல், சாக்குபோக்கு சொல்லும் அரசியல் வாதிகள் என்றுதான் திருந்துவார்கள்? தடையில்லா மின்சாரம் நம் வருங்கால சந்ததியினருக்காவது கிடைக்குமா? பலவாறு எண்ணி, வழக்கம்போல் கனவு காண்போம் என்ற ஒரு முடிவுக்குத்தான் வர முடிந்தது.

ஆனாலும் மற்றொரு விஷயம் சாத்தியமா என வீட்டின் அருகில் இருக்கும் மலையில் பார்த்த ஒரு நிகழ்வோடு சம்மந்தப்படுத்தி தோன்றியது. சிறு குன்று போலிருக்கும் அங்கு, நடந்து செல்ல தனியான பாதை, குழந்தைகள் விளையாட பூங்கா, உடற்பயிற்சி செய்ய தனி இடம் இடம், கழிப்பறை என எல்லாம் இருக்கிறது. வழியெல்லாம் விளக்குகள் அத்தோடு அங்கு ஒரு தகவல் பலகையில் இங்கு உபயோகிக்கப்படும் மின்சாரம் யாவும் சூரிய ஒளியின்மூலம் என அது சம்மந்தமான தகவல்கள்.

நாமும் அவ்வாறு சூரிய ஒளியில் மின்சாரத்தை பயன்படுத்தலாமே? வீட்டிற்கு அவ்வாறு செய்தால் என்ன செலவாகும், சாத்தியமா? கண்டிப்பாய் இந்த முறை ஊருக்கு வரும்போது விசாரிக்கவேண்டும். படிக்கும் நண்பர்கள் இது பற்றி பகிர்ந்தால் அறிந்து கொள்ள ஏதுவாய் இருக்கும்.

சூரிய ஒளியின் மூலம் விளக்குகள் யாவும் பயன்படுத்தும், தினமும் எனது நடை, ஓட்டத்திற்கான அந்த இடம் கூகிள் மேப்பில் கீழே...

எங்கள் பள்ளி... பாட்டு, பேச்சுப்போட்டி

|

எனது பள்ளிப்பருவத்தில் ஆறு முதல் ஒன்பது வரை படித்தது மல்லியகரை அரசினர் மேல்நிலைப்பள்ளியில். அந்த சமயத்தில் கிடைத்திட்ட பல நட்புக்கள் இன்றுவரை தொடர்வதும் நிகழ்வுகள் இன்னும் நெஞ்சினில் பசுமையாய் இருந்தினிப்பதுவும் அதனை பகிர்தலில் ஏற்படும் எல்லையில்லா ஆனந்தமும்... ஆஹா சொல்ல வார்த்தைகளிலில்லை..

தமிழ்நாட்டிலேயே முழுக்க ஏரியில் அமைந்த பள்ளிக்கூடங்களில் இதுவும் ஒன்றாக அல்லது இதுதான் ஒன்றாக இருக்கக் கூடும். வண்டித்தடம் செல்லும் ஏரிக்கரை, அதன் முடிவில் ஊர், இதுதான் அடுத்த பகுதியிலிருந்து வரும் எங்கள் பார்வையில், அவ்வூரார்க்கு ஊரின் முடிவில் ஏரியில் பள்ளி.

கொஞ்சம் மழை பெய்தாலும் குட்டையாய் தண்ணீர் நிற்கும், சத்துணவு வாங்க எடுத்து செல்லும் எங்களது தட்டுகளையும், கற்செதில்களால் எத்தி விளையாடுவதற்கு ஏதுவாக.

கரையில் இரு மிகப்பழைமையான உரமான ஓடுகளால் வேயப்பட்டக் கட்டிடங்கள்,இடது புறம் ஒடுகலாளான புதிதாய் கட்டப்பட்ட நான்கு வகுப்பறைகளுடன் தாவிக்குதிக்கும் அளவிற்கு சிறிய சுவர்களுடன் ஒரு கட்டிடம் பத்து முதல் பன்னிரண்டு வகுப்புக்களுக்காக.பின்புறத்தில் புதியாய் ஒரு ஆய்வுக்கூடம். கொஞ்சம் உள்ளே சென்றால் வலது புறத்தில் கூரை வேய்ந்த ஆறு ஏழு வகுப்புக்களுக்காக ஒரு கட்டிடம் (கூரைக்கொட்டாய் என சொல்வோம்).

சிறு பள்ளம் தாண்டி (ஏரிக்கு தண்ணீர் வரும் வாய்க்காலின் முகத்துவாரம்) , சாரியாய் ஓடுகளை வேய்ந்த நீளமான ஓட்டுக்கட்டிடம் ஒன்பதாவதுக்காகாகவும், அடுத்து எட்டாம் வகுப்புக்கென ஒரு மெத்தை கட்டிடம், எதிரில் அந்த பள்ளமான மழைக்காலமல்லாத பொது விளையாடும் மைதானமாம், தண்ணீர் நிற்கும் ஏரியின் மையப்பகுதி, திறந்துவிடும் மதகுடன். இதுதான் எங்கள் பள்ளி. இவ்வளவு சொல்லக்காரணம் இதுதான் தொன்னூறில் கிரிக்கெட் விளையாட சென்றபோது நான் பார்த்த பள்ளி, இன்று எப்படி இருக்கிறது என பேருந்தில் பார்த்து ஏங்குவதொடு சரி. ஊருக்கு செல்லும்போது எனது மகனையும் அழைத்துச்சென்று உள்ளே சென்று பார்த்து எழுத உத்தேசம்.

அன்று எங்கள் பள்ளியில் பேச்சு மற்றும் பாட்டுப்போட்டி கோலாகலமாய் நடந்துகொண்டிருந்தது. பாடம் நடத்தாமல் நிகழும் எந்தொரு விசயமும் பெரும் மகிழ்ச்சியாய் குதூகலமாய்த்தானே இருக்கும்... இருந்தது, இருந்தோம். முன்னதாக எல்லா வகுப்பிலும் ஆர்வமுள்ளவர்களின் பெயர்களைக் கேட்டு வரிசைப் படுத்தியிருந்தார்கள்.

பேச்சுப்போட்டியின் தலைப்பு பாரதியார். எல்லோரும் படித்து வந்து ஒப்பிக்க, பெயர் கொடுத்திருந்த என்னை அழைக்க, கை கால்கள் மட்டும் உதற எனச் சொன்னால் மாபெரும் பொய். எல்லாம் உதற மேடைக்கு சென்றேன்.

'அவைத் தலைவர் அவர்களுக்கும்,பெரியோர்களுக்கும்,தாய்மார்களுக்கும், சகோதர சகோதரியர்களுக்கும், மற்றுமுள்ள மாணவ மாணவியருக்கும் என் முதற்கண் வணக்கத்தை தெரிவித்துக்கொண்டு, முன்னொரு காலத்தில் ஒரு அன்னப்பறவை இருந்ததாம், அதனிடம் தண்ணீரையும் பாலையும் கலந்து வைத்தால் தண்ணீரை விட்டுவிட்டு பாலை மட்டும் அருந்தி விடுமாம்.

அதுபோல நான் சொல்லும் சொற்களில் குற்றங்கள் இருப்பின் குற்றத்தை நீக்கி குணத்தை மட்டும் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.நான் இப்போது பேச இருக்கும் தலைப்பு' என ஆரம்பிக்க, ஒரே இரைச்சல். அதற்கு மேல் பேசவிடவில்லை, பேசவும் இல்லை. பயம் வெக்கத்தோடு ஓடி வந்துவிட்டேன். எனது தாத்தா அவ்வாறுதான் என்னை தயார்ப் படுத்தியிருந்தார். (ஓடுவதற்கல்ல, பேச ஆரம்பிப்பதற்கு...)

அடுத்து ரவி சென்று, பாரதி யார்? பாரதி யார்? என களைத்துப்போகும் அளவிற்கு திரும்ப திரும்பகேட்டு எல்லோரும் கத்த, என் வழியில் இறங்கி ஓடிவந்தான். அடுத்ததாய் அன்றைய விழாவின் நாயகன் இன்றும் என் இனிய நண்பன் வேலுமணி மைக்கை பிடித்து, 'எட்டயபுரம் தந்த எங்கள் பாரதி, அவர்தான் தமிழ்தேரின் சாரதி' என ஆரம்பித்து ஐந்து நிமிடம் மழை பெய்தாற்போல் மளமளவென ஆவேசமாய் பேசித்தள்ள அவனுக்குத்தான் முதல் பரிசு.

அடுத்து நடந்த பாட்டுப்போட்டிதான் மிகவும் சுவராஸ்யமாக இருந்தது. பெயர் கொடுத்தவர்கள் நான்கைந்து பேர்தான். வழக்கம்போல் நமது வேலுவும் அதில். சிவகாமி, சூராங்கனி... சூராங்கனி என பாட எல்லோரும் நகைக்க, தலைமை ஆசிரியர் 'மொதல்ல இறங்கிப்போ புள்ள, பாட்டப்பாரு ஆளைப்பாரு' என விரட்டிவிட்டார்.

அடுத்து வந்த இருவரும் வேறுவிதங்களில் சொதப்பினார்கள். வேலு மேடையேறி, மைக்கைப் பிடித்து, ஒரு பாரதியின் பாட்டை அப்படியே ஆவேசமாக படித்தான். அதை எப்படி சொன்னான் என்பதை விவரமாக சொன்னால் தான் சிறப்பாயிருக்கும்.

நெஞ்சு பொறுக்குதிலையே - இந்த
நிலை கெட்ட மாந்தரை நினைந்துவிட்டால்
(எல்லோரையும் பார்த்து கைகளைக் காட்டி)
அஞ்சி அஞ்சிச் சாவார் - இவர்
அஞ்சாத பொருளில்லை அவனியிலே
(பயப்படுவதாய் முக பாவனைகளோடு)
வஞ்சனைப் பேய்கள் என்பார் -இந்த
மரத்தில் என்பார்; அந்தக் குளத்தில் என்பார்,
(அருகே இருந்த மரத்தையும், தூரத்தே இருந்த தண்ணீர் தேங்கிய குட்டையையும் காட்டி)
துஞ்சுது முகட்டில் என்பார் -மிகத்
துயர்ப் படுவார் எண்ணி பயப்படுவார்...
(அருகே இருந்த மலைக்குன்றைக்காட்டி, பயப்படுவதுபோல் நடிப்புடன்)

பாட்டுப்போட்டியில் இவ்வாறு வேலு வீரவேசமாய் பேசவும் எல்லோரும் விழுந்து சிரித்தோம், மேடையில் இருந்த ஆசிரியர்கள் உட்பட. கடைசியில் முதல் பரிசு வேலுவிற்குத்தான் மற்ற எவரும் சரியாய்ப் பாடாததால்.

பரிசு வழங்கும்போது தலைமையாசிரியர் 'என் வாழ்வில் முதல்முறையாக பாட்டுப்போட்டியில் வீராவேசமாய் பேசியதற்கு முதற்பரிசு வழங்குகிறேன்' என சொல்லி அளிக்க மரத்தடியே குழுமியிருந்த நாங்களெல்லாம் ஆராவரித்து கைத்தட்ட, குழுமியிருந்த மேகம் நாங்கள் எழுப்பிய சப்தத்தால் கலைந்தோடி இடிச்சப்தத்தை எழுப்ப, அவசர அவரமாய் கலைந்தோம் வீடு நோக்கி...

நாங்களும் தலைவர் தாண்டி...- முடிவு...

|

இதன் முதல் பாகத்தை படிக்கவில்லையெனில் படித்து படியுங்களேன்...

வந்த முதல் பிரச்சினை எங்கள் அணித்தேர்வு. நான்கு விதமான அணிகள் தயாரித்து நாற்பது கருத்துக்கள் வர ஆரம்பிக்க நிறையவே குழம்பினோம். ஒரு சிலரை திருப்திப்படுத்தவே அணியில் சேர்க்கவேண்டியிருந்தது. நாம் சுமாராக விளையாடுவோம் என்றாலும் எந்த ஒரு அணியிலும் இல்லை என்பது கொஞ்சம் அதிர்ச்சியாய்த்தான் இருந்தது. மனம் விட்டு கேட்டதற்கு, ’உனக்கு தலைவர் பதவியும் வேணும், டீம்லயும் விளையாடனுமா’ என அழகாய் ஒரு கேள்வி.

சரியென நொந்து எப்படியும் சரிசெய்யவேண்டுமென இரு அணிகளை முழு பலத்துடன், ஒப்புக்கு என தயார் செய்தோம். நடத்தும் ஊரைச்சேர்ந்த அணி நேரடியாக காலிறுதிக்குள் செல்லுமாறு அட்டவணை இருக்கவேண்டும் என எல்லோரும் சொல்ல, ஒத்துக்கொள்ளாமல் நிறைய போராடியும் இயலவில்லை, அதுதான் வழக்கமாம்.

குலுக்கல் முறையில் எந்தெந்த அணிகள் விளையாட வேண்டும் என போட்டி அட்டவணையை தயாரித்தோம், அதிலும் குழப்பம். குலுக்கலின் போது ஆரம்பத்திலேயே இரு மிக நல்ல அணிகளும் முதல் சுற்றில் மோதிக்கொள்ளுமாறு அமைய எல்லோருக்கும் பெருத்த ஏமாற்றம்.

சரி மீண்டும் குலுக்கலாம் என எல்லோரும் சொன்னாலும் நாம் ஏற்றுக்கொள்ளவில்லை. சம்மந்தப்பட்ட அந்த இரு அணியினருமே மாற்றும்படி கேட்க அசைந்து கொடுப்பதாயில்லை. அச்சமயம் ஒரு அணியை சேர்ந்த ஒருவர் நம்மைப்பார்த்து மிக மோசமான வார்த்தையோடு திட்ட, அவ்வளவுதான், நம்மவர்கள் அவரை அடித்து துவம்சம் செய்ய ஆரம்பிக்க ஒரே ரணகளமானது.

நாமும் தடுக்கிறோமென அடிகளை வாங்கி அவரை காத்து ஒரு வழியாய் எல்லோரையும் சமாதானப் படுத்த, விளையாட்டு ஆரம்பமானது. விளையாட்டில் ஆர்வமாயிருந்த தமிழய்யா அழகிய தமிழில் வர்ணனை செய்ய, அருமையான அந்த இரு அணிகளையே முதலில் விளையாடச்செய்ய, நல்ல ஆரம்பம் பாதி முடிந்தாற்போல் என சொல்வதற்கு உதாரணமாய் அமைந்தது, மகிழ்ச்சி ஆரவாரத்துடன்.

நம்மை திட்டிப்பேசிய அந்த நபரின் அணி தோற்றுவிட, அவரை அழைத்து ஆட்டம் முடியும் வரை உடனிருந்து உதவுங்கள் என சொல்ல ஆர்வமாய் எங்களோடு இணைந்து உற்சாகமாய் சேர்ந்துகொண்டார். முதல் நாள் மிக அருமையாக இருந்தது.

நம்மோடு ஒட்டியிருந்த உறவுக்கார மாப்பிள்ளைகள் இருவரை மாமாவின் கடைக்கு அழைத்து சென்று கேட்கும்போது தர சொல்லிவிட, யாரேனும் நம்மூர் பெரிய மனிதர்கள் வந்தால் கண்காட்டினால், உடனே டொரினோ, லவ் ஓ என ஒரு நிமிடத்தில் வர மாமா தர சொன்னார் என சொல்லி அவர்களுக்கு பலத்த உபசரிப்பு!

அவர்களின் அயராத உழைப்பையும் ஆர்வத்தையும் பார்த்து அவர்களையும் அடிக்கடி குளிர்பானம், பரோட்டா என சாப்பிட சொன்னோம். அதன் பின் எல்லோரும் குளிர்பானங்களாகவே குடித்துக்கொண்டிருக்க, ஆட்ட மும்மரத்தில் கவனிக்கவில்லை. அடிக்கடி நிறைய சிறுவர்களை அவர்கள் இருவரும் அழைத்து வந்து எங்க மாமாதான் தலைவர் என அறிமுகப்படுத்தும் படலம் வேறு.

அணி பிரச்சினையை அடுத்து எதிர்ப்பாராமல் வந்த புயல் மழை. மைதானம் முழுவதும் சகதி, வெள்ளக்காடு. அடுத்த சுற்றுக்கு முன்னேறிய அணிகளை தங்கவைத்து கவனிக்கவேண்டிய கட்டாயம். பள்ளி, நண்பர்கள் வீடு என எல்லாம் தங்கவைத்து உணவு உபசரித்து ஒரு வழியாய் சமாளித்தோம்.

ஆற்றிலிருந்து டிராக்டரில் மண் அடித்துக்கொட்டி மழை நின்றவுடன் மைதானத்தை சமன் செய்து ஒருவழியாய் எல்லா ஆட்டங்களையும் பலத்த ஆதரவுடன் சிறு சிறு சலசலப்புக்களையும் சாதாரணமாக்கி, வெற்றிகரமாய் நடத்தி அரையிறுதிக்கு வந்தாயிற்று.

எங்கள் ஊர் பலம் வாய்ந்த அணி இரண்டாவது சுற்றிலேயே வெளியேற, ஒப்புக்கு இருந்த அணி காலிறுதியில் வென்று அரையிறுதியில். பலம் வாய்ந்த அணியோடு மோதுவதால் நமக்கும் விளையாட வாய்ப்பு கிடைக்க, கவுரவத்தோல்விக்கு பெரிதும் உதவினோம்.

இடையிடையே சரக்கினால் இரட்டையான நபர்களால் ஏற்பட்ட இடையூறுகள், நம் கண்ணசைவில் களத்தைவிட்டு கண நேரத்தில் அகற்றப்பட, எதிர்ப்புக்களும் எதிர்ப்பார்ப்புக்களோடு ஆதரவாய் மாற ஆரம்பித்தன.

முதல் நாளுக்கு வரும் கூட்டம் அதிகமாக ஒரே திருவிழாபோல் ஆனது. ஊரைச்சுற்றி விற்றுவரும் பழ, திண்பண்ட வண்டிகள் என எல்லாம் வந்து சேர்ந்தன. தயங்கி வராமல் இருந்த பெண்கள் கூட்டம் வர ஆரம்பிக்க இன்னும் கூட்டம் அதிகமானது என சொல்லவா வேண்டும்?

இறுதிப்போட்டி மற்றும் பரிசளிப்புவிழாவுக்கான கடைசி நாள். நடுவர்களாக பணியாற்றிய எல்லோருக்கும் ஒரு கடிகார நினைவுப்பரிசு, எங்கள் குழுவினர் எல்லோருக்கும் ஒரு அழகிய பேனா பரிசு, முதல் பரிசுக்கோப்பை என எல்லாம் வாங்கி வைத்திருந்து தயாராயிருந்தோம்.

எல்லாம் முடிந்து வெற்றிபெற்றது படையாச்சியூர் அணி. எங்கள் அணிக்கு நான்காவது ஆறுதல் பரிசு தருகிறேன் என ஒருவர் முன்வர கிடைத்தது, ஐநூற்று ஒன்று. நிழலுக்காக அமைத்த அந்த கீற்று பந்தலை விழாமேடையாய் மாற்றி பரிசுகளை வழங்கியவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவித்து, அவர்கள் கையாலேயே பரிசுகளையும் பணத்தினையும் வழங்கி அசத்தினோம். முடிந்த பின் பாட்டிற்கு சேர்ந்து ஆட்டம் போட்டு சந்தோஷித்தோம்.

எல்லா செலவுகளும் போக கையில் தொள்ளாயிரம் மிஞ்ச, அதை பிரித்து ஏலம் விட்டு அடுத்த வருடத்திற்குள் பெருக்கலாம் என முடிவு செய்ய, நூற்றுக்கு இருபத்திரெண்டு ரூபாய் வட்டிக்கெல்லாம் தள்ளி எடுக்க, திரும்ப கட்டுவார்களா என்ன? எடுத்ததோடு சரி.

நல்லபடியாய் நடத்தியதற்கு பாராட்டுக்கள் கிடைத்தாலும் அதற்கு நாம் கொடுத்த விலை கொஞ்சம் அதிகம். மாமாவின் கடையில் நமது மாப்பிள்ளைகள் எல்லோருக்கும் வெகு தாராளமாய் வாங்கிக்கொடுத்த குளிர்பானங்கள் மற்றும் சாப்பாடுக்காக ஐநூற்று முப்பது சொச்சம்.

அடுத்து வந்த தேர்வில் செய்முறைத்தேர்வுகளைத் தவிர்த்து ஐந்தில் ஒன்றில் மட்டும் தேறியிருந்த மதிப்பெண் அட்டையினைப் பார்த்து என்றும் தோழனாய் இருந்த என் அப்பா மிகக் கோபப்பட்டு என்ன இது எனக்கேட்க, ’இதெல்லாம் சகஜமப்பா, அடுத்த செமஸ்டரில் பாஸ் செய்துவிடுவேன்’ என சொன்னதற்கு, பொளேரென கன்னத்தில் ஒரு அறை.

அதன் பிறகு என்னை ஊருக்கு வெளியே சினிமா தியேட்டருக்கு தோளில் கைபோட்டு ஆதரவாய் அழைத்து சென்று பரோட்டா வாங்கித்தந்து, ’உன்னை அடிச்சிருக்கக்கூடாது கண்ணு’ என சொல்ல, ’இல்லப்பா நான் ஒழுங்கா படிச்சிருக்கனும்’ என சொல்ல, அவர் கலங்க, அவர் சிரிப்பதற்காக நான் சிரிக்க... உணர்வுகளை வெளிக்கொண்டுவந்து எங்களை நெகிழ்த்திய அந்த தருணம் இன்னும் பசுமையாய் நினைவில்.

சமீபத்தில் புதிதாக ஒரு ப்ரொஜெக்டில் என்னை இணைத்து அந்த டீமை லீட் செய்யச் சொல்ல, அன்றிலிருந்து இன்று வரை நான் வேலையில் தொண்டனாகவே(டெவலப்பர்) இருந்த நான் திரும்பவும்... எனது மேனேஜர் சொல்லும் போது மெலிதாய் சிரித்தேன். ‘சந்தோஷம்தானே’ எனக் கேட்க நிறைய என சொன்னேன், ஒருகை பார்த்துவிடலாம் இதில் வரும் இன்னல்களை என எண்ணியவாறு. அலோவ்... நாங்களும் தலைவர் தாண்டி..

நாங்களும் தலைவர் தாண்டி...- ஏற்பாடுகள்.

|

எல்லோருக்கும் உள்ளுக்குள் இருக்கும் இயல்பான ஒரு வி்ஷயம் ஒரு நிகழ்வினை முன்னின்று நடத்துவது. அதற்கான தருணம் தானாகவும் வரும் அல்லது ஏற்படுத்திக் கொள்ளுமாறு அமையும். நமக்கும் அது சம்மந்தமாய் நிகழ அது இடுகையாக இங்கே.

இளங்கலை முடித்து முதுகலை படிப்பினையும் படித்த அதே கல்லூரியில் சேர்ந்த புதிது. கணனி சம்மந்தப்பட்ட படிப்பாதலால் படித்த பாடங்களே திரும்பவும் படிக்கவேண்டிய சூழல்.

தெரிந்த அதே பாடம் தானே என மிகவும் அசிரத்தையோடு படிப்பில் கவனமின்றி இருந்த அந்த தருணத்தில் ஆத்தூர் சென்றிருந்த போது ஒரு பேருந்தில் ஒட்டப்பட்டிருந்த ஒரு தகவல் நம்மை வெகுவாய்க் கவர்ந்தது.

'படையாச்சியூரில் மாபெரும் கைப்பந்துப்போட்டி... முதல் பரிசு இரண்டாயிரம்’ என இன்னும் பிற தகவல்களுடன். முதலில் பெரும் ஆச்சர்யம் இப்படி ஒரு ஊர் அருகில் இருக்கிறதாவென, அடுத்து அந்த போட்டியில் கலந்துகொள்ளும் அணியின் விவரங்கள்.

சிறு கிராமம், பேருந்து வசதிகூட இல்லை, ஆனால் பாக்கு மரங்கள் நிறைய இருக்க அது சம்மந்தமான வேலைகளையே பெரும்பாலோனோர் செய்ய ஒரு செழிப்பான கிராமம். நாங்களும் கலந்துகொண்டு முதல் சுற்றிலேயே வெளியேறினாலும் நம் ஊரிலும் போட்டியினை நடத்தவேண்டும் என ஒரு முடிவினை செய்ய ஒரு தூண்டுகோலாய் இருந்தது.

சரியென எல்லோரும் இது பற்றி கூடிப்பேச முடிவு செய்தோம். இறுதியில் ‘பாரதி கைப்பந்துக்குழு’ என பெயருடன் ஒரு அமைப்பினை உருவாக்கி நம்மை ஒரு மனதாக தலைவராக்க, போட்டிக்கான திட்டங்களை வகுக்க ஆரம்பித்தோம்.

நன்கொடைச் சீட்டுக்களை அடித்து பணத்தினை வசூல் செய்து சிறப்பாக செய்வது என முடிவு செய்தோம். பரிசுகளை மூவாயிரம், இரண்டாயிரம், ஆயிரம் என நிர்ணயித்தோம்.

உள்ளூரில் நூற்பாலை வைத்திருப்பவர் முதல் பரிசு, உரக்கடை வைத்திருப்பவர் இரண்டாம் பரிசு, மருந்துக்கடை வைத்திருப்பவர் மூன்றாம் பரிசு என தருவதற்கு சம்மதிக்க, ‘பாரதி கைப்பந்துக்குழுவின் முதலாமாண்டு மாபெரும் போட்டி’ என அழகாய் சுவரொட்டிகள் தயார் செய்து, பேருந்துகளில் ஒட்டி போட்டிக்கான வேலைகளை ஆரம்பித்தோம்.

நம்முடன் பயிலும் மாணவர்கள் தலைக்கு இருபது ஐம்பது என தர, நல்ல ஒரு தொகை சேர்ந்தது. ஊருக்குள்ளும் நல்ல வசூல்.  உடற்பயிற்சி ஆசிரியர் பந்துகள், வலை என கொடுத்து எல்லா உதவிகளையும் செய்ய, நாங்களும் ஆற்றில் மணல் அடித்துக்கொண்டுவந்து கொட்டி பள்ளி மைதானத்தில் இருந்ததை சரிசெய்தும் புதிதாய் ஒன்று எனவும் இரண்டு மைதானங்களை உருவாக்கினோம்.

பக்கத்து ஊரிலுள்ள பள்ளிகளில் பணிபுரியும் நமக்கு அறிமுகமான உடற்பயிற்சி ஆசிரியர்களையும் நடுவர்களாக பணிபுரிய அழைக்க அவர்களும் சந்தோசமாய் வர ஒப்புக்கொண்டார்கள். தேர்வு முடிந்து பள்ளிக்கான விடுமுறை நாளாக இருந்ததால் எல்லா ஏற்பாடுகளும் செய்வதற்கு ஏதுவாய் இருந்தது.

நடுவர்கள், விளையாட்டு வீரர்கள் என ஓய்வெடுக்க கீற்றுகளால் மேயப்பட்ட ஒரு சிறு இடத்தினை தயார்ப்படுத்தி உட்கார்வதற்கு பென்ச், சேர்களை போட்டு வைத்தோம்.

பள்ளியிலேயே தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்ய, இரு நாட்கள் அம்மாவிடம் சொல்லி சாப்பாடு சமைக்கவும், தாக சாந்திக்காக விளையாடும் சமயத்தில் எலுமிச்சை சாறு தருவதற்கும் ஏற்பாடு செய்தோம்.

மாமா இலவசமாய் ஒலி பெருக்கி மைக் என வழங்க போட்டிக்காக எல்லாம் தயார்ப் படுத்தினோம். வருவதாக வாக்குறுதி கொடுத்திருந்த அணிகள் பதினாறு. ஆனால் வந்ததுவோ எதிர்ப்பாராமல் முப்பது.

அணிகள் மட்டுமல்ல, அழையா விருந்தாளிகளாய் மழை, எங்கள் அணிக்குள் ஏற்பட்ட குழப்பம் மற்றும் சிலரால் ஏற்பட்ட இடையூறுகள் எல்லாம் அடுத்த இடுகையில்...

கல்லூரி நினைவுகள் - செல்வராஜ்...

|

வாழ்வில் எத்தருணத்திலாவது நாம் ஒரு பொய்யை சொல்லியிருப்போம். அது எந்த ஒரு பாதிப்பினையும் ஏற்படுத்தவில்லையெனில் ஒன்றும் பிரச்சினையில்லை. ஆனால், அது பல குழப்பங்களை விளைவித்தால்..., படியுங்களேன் இந்த அனுபவப் பகிர்வை...

கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த சமயத்தில் தனியே ஒரு வீட்டினை வாடகைக்கு எடுத்து என் உறவுக்கார ஆயாவினை சமைத்துப்போடச் சொல்லி படித்துக்கொண்டிருந்தோம்.

நிறைய நட்புக்களோடு பழக வாய்ப்பு கிடைத்தாலும் என்னுடன் வீட்டில் தங்கியிருந்த எனது சூப்பர் சீனியர் செல்வராஜ் அவர்களை மறக்க முடியாது. நான் பி.எஸ்.ஸி இரண்டாமாண்டு படிக்கும்போது அவர் எம்.எஸ்.சி முதல் ஆண்டு.

அவரைப் போன்ற ஒரு கேரக்டரை இன்னும் சந்திக்கவில்லை, சந்திக்கப் போவதுமில்லை. அவரின் கையெழுத்துப் போல் மிக மோசமான ஒன்றை இதுவரை பார்த்ததில்லை, கோழி கிறுக்குவதுகூட கொஞ்சம் புடியும்படி இருக்கும். எழுத்தைப்பார்த்து, 'எப்படிண்ணா இது திருத்தறவங்களுக்கு புரியுமா' என கேட்டதற்கு, ’எனக்கே புரியாது, அவனுக்கு எங்க புரியப்போகுது, குழப்பத்துலயே மார்க் போட்டு பாஸ் பண்ண வெச்சிடுவான்' என சொல்வார், அதே போல் எல்லா செமெஸ்டரிலும் சராசரியான மார்க்கோடு பாஸாகி விடுவார்.

'சாப்பிடும்போது ஒருநாள், சாம்பார், ரசம், எல்லாம் வயித்துக்குத்தானே போகுது' என இரண்டையும் கலந்து சாப்பிட ஆரம்பிக்க, உடன் நாங்கள், ரசம், தயிர், அப்பளம், ஊறுகாய், உப்பு என சொல்ல 'ம்... அதுவும் சரிதான்' என எல்லாவற்றையும் ஒன்றாய் கலந்துகட்டி அடித்தார்.

பிச்சைக்காரனை பார்த்தால் 'கால் கை இருக்கில்ல உழைச்சி சாப்பிடு' என் சொல்லி ஒன்றும் போட மாட்டர். சில நேரங்களில் உண்மையில் முடியாத சிலருக்கு பத்து ரூபாயை சாதாரணமாக தூக்கிக் கொடுப்பார். அவரது செயல்கள் ஒவ்வொன்றும் புரியாத புதிராக இருக்கும். எல்லோரும் படிக்கும்போது கதை புத்தகம் படிப்பார், நன்றாக தூங்குவார்.

திடீரென ரூமில் இருக்கும் எல்லோருக்கும் அவர் செலவில் டிபன் வாங்கி வருவார். ஒருமுறை கடனாக பத்து ரூபாய் கேட்டதற்கு, அதெல்லாம் முடியாது ஐம்பது ரூபாய்தான் தருவேன் என தருவார், சில சமயங்களில் சட்டென 'இருக்கு தரமுடியாது போ' எனவும் சொல்லுவார்.

ஒருமுறை வெளியே போகலாம் வா என அழைத்து சென்றார். வழியில் அவரது நண்பர்கள் வர பேச ஆரம்பித்தார். பேச்சு ரொம்ப நேரம் நீளுமென எண்ணியபோது, 'சரி வெட்டியா ஏன் பேசனும் என சொல்லி' சட்டென முறித்துக்கொண்டு என்னை அழைத்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தார் 'லூசுப்பயலுவ, அவனுங்ககிட்ட பேசி ஏன் நேரத்தை வீணாக்கனும்' என சொன்னார்.

அப்போது தேர்வு சமயம், அவர் ஸ்டடி ஹாலிடேசில் அவரது ஊரான வேதாரண்யம் சென்றுவிட்டார். காலை நேரம், கடுமையான மழை, புயல், வெள்ளம். எல்லோரும் தேர்வுக்காக படித்திக்கொண்டிருந்தோம். தங்கியிருந்த வீட்டின் மற்றொரு போர்ஷனில் இருந்த எனது பெயரையே கொண்ட சிறுவன் பிரபு, 'செல்வராஜ் அண்ணாவ எங்கண்ணா காணோம்' எனக் கேட்க, கவனிக்காததுபோல் இருந்தேன்.

திரும்பத் திரும்பக் கேட்க, கடுப்பில் அவர் வரமாட்டர் என சொன்னேன். திரும்பவும் அவன் ஏன் என கேட்க, அவரு போயிட்டாரு' என சொல்லி படிப்பில் ஆழ்ந்தேன்.

தேர்வினை முடித்து வெளியே வர எனக்காக ஆபீஸ் அட்டன்டர் காத்திருந்தார். 'பிரபா, உனக்காக கீழே செல்வராஜ் ஃபிரண்ட் குணா காத்திருக்கிறாரு' என சொன்னார்.

அவசரமாக கீழே இறங்கி செல்ல, காரின் அருகில் குணா நன்கைந்து நண்பர்களோடு, கலங்கிய கண்களோடும், பதட்டத்தோடும் நின்றுகொண்டிருந்தார்.

என்னைப் பார்த்ததும், 'பிரபா, செல்வராஜுக்கு என்ன ஆச்சு?' என கேட்க, 'அவருக்கு என்ன ஆச்சு?' என திருப்பிக்கேட்டேன்.

'அவரு போயிட்டதா பக்கத்து வீட்டு பிரபுகிட்ட சொன்னீங்களாம், அவங்க பதறிப்போய் எங்கிட்ட சொல்ல, நாங்கல்லம் மாலை வாங்கிகிட்டு கிளம்பிட்டிருக்கோம், எதுக்கும் உங்ககிட்ட கேட்டுட்டு போலாம்னு வந்தோம்' என சொல்ல,

'அய்யாய்யோ, அவன் சும்மா தொந்தரவு பண்ணிகிட்டிருந்தான், அதான் அவரு போயிட்டாரு இனிமே வரமாட்டார்னு சொன்னேன்' என் சொல்ல,

அவர் கொலை வெறியோடு, என்னை பார்த்து அடிக்க வந்த மற்றவர்களையும் தடுத்து, 'செல்வராஜ் ரூம் மெட்டுங்கறதாலயும், அவனுக்கு ஒண்ணும் ஆகலங்கறதுக்காகவும் உன்னை விட்டுட்டு போறேன்' என சொல்லி என்னை ஒரு நாயெனப் பார்த்து செல்ல எனக்கு போன உயிர் திரும்ப வந்தது.

ஊரிலிருந்து வந்த பிறகு இதை கேட்டு செல்வராஜ் விழுந்து விழுந்து சிரித்தார். 'இன்னும் கொஞ்ச நாள் வரலைன்னா கரியமே முடிஞ்சதுன்னு சொல்லியிருப்ப போலிருக்கு' என்றார். திரும்பவும் எனக்கும் குணாவுக்கும் இடையே சுமூகமாய் உறவு ஏற்படவும் செய்தார்.

படித்து முடித்த ஓரிரு வருடத்துக்குப் பிறகு அவரிடமிருந்து ஒரு பதினைந்து பைசா போஸ்ட் கார்ட் வந்தது, அவரின் அதே புரியாத கிறுக்கல்களோடு. அதில் 'உடனே பம்பாய் கிளம்பி வா, வேலை நான் வாங்கித் தருகிறேன்' என முகவரியோடு இருக்க நம்பிக்கையில்லாததால் செல்லவில்லை.

எங்களுக்கு சமைத்து போட்ட ஆயாவினை பின்னொருநாள் எங்கள் ஊருக்கு வந்து பார்த்து, ஒரு சேலை,  நிறைய பணம் எல்லாம் கொடுத்து பார்த்துவிட்டு சென்றதாக என்னை பார்க்கும் போது ஆயா சொன்னார்கள்.

இன்று நன்கு செட்டில் ஆகி குடும்பத்தோடு அமெரிக்காவில் இருக்கிறார். எனது நண்பனின் நண்பனின் சகோதரியைத்தான் திருமணம் செய்திருக்கிறார். கண்டிப்பாய் அவரோடு பேசவேண்டும், நினைவுகளைக் கிளறவேண்டும்.

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB