இருநூறாவது இடுகை...

|

இதுவரை எத்தனை இடுகைகள் எழுதியிருக்கிறோம் என எதேச்சையாய் பார்க்க இருநூற்றைத் தாண்டியிருப்பது தெரியவந்தது. கொஞ்சம் வியப்பாயும் ஆச்சர்யமாயும் இருந்தது, இவ்வளவு எழுதியிருக்கிறோமா என. மீள் இடுகைகளை தவிர்த்தால் இது இருநூறாவது இடுகை. ஆம், இத் தருணத்தில் இந்த வலையுலகிற்கு கண்டிப்பாய் எனது மனமார்ந்த நன்றியினை சொல்லியே ஆகவேண்டும், எனது எண்ணங்களை எழுத்துக்களாய் மாற்றியதிற்காக, அதை பகிர்ந்து கொள்ள நல்ல நட்புக்களையும், சொந்தங்களையும் ஏற்படுத்தித் தந்தமைக்காக...!

எழுத வந்தபோதிருந்த சூழல் கண்டிப்பாய் இப்போது இல்லை. நிறைய பேர் எழுதுகிறார்கள், பல புதிய விஷயங்களைத் தெளிவாய்த் தருகிறார்கள். இப்போதெல்லம் தினம் வருகின்ற இடுகைகளின் எண்ணிக்கைகள் அதிகமாய் படிக்க நேரம் ஒதுக்க இயலாத அளவிற்கு இருக்கின்றன. அதே சமயம் சர்ச்சையான விஷயங்களும் இல்லாமல் இல்லை. தடியெடுத்தவன் தண்டல்காரன் எனும் போக்கும், தரக்குறைவான விமர்சனங்கள், தகாத வார்த்தைகள் என சில விஷயங்கள் அயர்ச்சியை ஏற்படுத்துகின்றன.

வலையுலகில் நுழைந்ததிலிருந்து இன்றுவரை நிறைய நட்புக்கள், சொந்தங்கள். இவ்வாறு சொல்லுவதற்குக் காரணம் பார்க்கும், பழகும் எல்லோரிடமும் நட்பு துளிர்த்தாலும் இறுதிவரை தொடரப்போவது வெகு சிலரோடு தானே? அந்த வகையில் இன்று ஏராளமான நிரந்தர நண்பர்கள், என் வாழ்வோடு இயைந்துவிட்ட சொந்தங்கள் என பூரிப்பாக இருக்கிறேன்.

என்னைத் தொடரும் நூற்றுக்கும் மேற்பட்ட அன்பு உள்ளங்களுக்கு என் மனப்பூர்வமான அன்புகலந்த நன்றியினை இதன் வாயிலாய் தெரிவித்துக்கொள்கிறேன்.  சூழல், வேலைப்பளு ஆகியவற்றால் முன்புபோல் அதிக இடங்களில் பின்னூட்டமிட இயலவில்லை. ஆனாலும் கிடைக்கும் ஓய்வு நேரத்தில் படித்துக்கொண்டுதான் இருக்கிறேன்.

இதில் குறிப்பிட்டு எவரையேனும் சொல்லவேண்டுமென்றால் நிச்சயம் பழைய பல்லவியை திரும்ப பாடுவதாய் இருக்கும். பல இடுகைகளின் வாயிலாய் திரும்ப திரும்ப அவர்களைக் குறிப்பிட்டிருக்கிறேன். தொடர்ந்து படிக்கும் எல்லோருக்கும் அவர்களைத் தெரியும் என்பதால் அவர்களுக்கெல்லாம் எனது ஸ்பெஷல் நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த இடத்தில் ஒரு சம்பவத்தைப் பற்றி சொல்லியே ஆகவேண்டும். ராகவன் அண்ணா சிங்கை வந்திருந்த போது சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த உன்னதமான நபரை, அன்பு அண்ணனை சந்தித்த அந்த தருணத்தில், ‘வாடா பெரிய மனுஷா, சௌக்யமா’ என வரவேற்றபோது சில்லென உணர்ந்தேன். முதல் முறை பார்க்கும்போதே பல வருடங்கள் பழகிய உணர்வு அந்த ஒரு நொடியில் தொற்றிக்கொள்ள, அதன் பின் அவரோடு பேசிய தருணங்கள் என் வாழ்வின் மறக்க இயலாதவைகளில் ஒன்றாய் இயைந்துவிட்டது. கனிவின் உருவமாய் அண்ணி, இன்றும் என் கண்ணில் நிற்கும் அன்பு அர்விந்த்... ஆகா, இறைவா உனக்கு நன்றி.

சிங்கை பதிவர்களிடம் ராகவன் அண்ணா விளையாட்டாய், ‘எப்பா, இவருதான் பிரபாகர், வானம்பாடிகளோட ரைட் ஹேண்ட், அவரோட சிஷ்யன்’ என சொல்லியபோது கொஞ்சம் பெருமையாயும் பயமாயும் இருந்தது. என் ஆதர்ஷ நாயகன் என் ஆசானோடு சேர்த்து சொல்லும்போது எனக்கு தகுதி இருக்கிறதா என ஒரு கேள்வியும், அதை வளர்த்துக் கொள்ளவேண்டுமே என ஒரு எண்ணமும் எழுந்தது.

கேபிள் அண்ணா மூலம் அறிமுகமாகி இன்று எனக்கு சொந்தமான என் ஆருயிர் நண்பர் புண்ணாக்கு மூட்டை என சொல்லிக்கொள்ளும் சரக்கு மூட்டை(தலைவரே சரிதானே?) பாலா அவர்கள் எங்கிருந்தாலும் என்னை அழைத்து வாரம் ஒரு முறை பேசிவிடுவார். நைஜீரியாவோ, சென்னையோ... அவரின் அழைப்பு தவறாமல் இருக்கும். அவரின் இந்த உறவும் இந்த வலை தந்ததே. அவர் தந்திருக்கும் தகவல்கள் இன்னும் பல வருடங்களுக்கு வலையேற்ற உதவியாய் இருக்கும். அவரோடு பேசுவதே ஒரு இனிமையான அனுபவம், அதனால்தான் சரக்கு மூட்டை என்றேன்.

எனக்காகவே வாழ்ந்து,  எனது ஒவ்வொரு இடுகையினையும் முதலில் செவிவழிக்கேட்டு, படித்து, ஊக்குத்து,  இடுகைக்கு விஷயங்க்ளைப் பகிர்ந்து, இளமையில் இறைவனைச் சேர்ந்த, இன்றும் என்னுடனே இருக்கும் என் தம்பி திவாகர்.... என்ன சொல்ல சொல்ல வார்த்தைகள் இல்லை.

இறுதியாய் எனக்கு பின்னூட்டமிடும், என்னைப் படிக்கும் அனைத்து உள்ளங்களுக்கும் எனது நன்றியினை மீண்டும் தெரிவித்து, இன்னும் சிறப்பாய் இடுகைகளைத் தர முயற்சிக்கிறேன் எனச் சொல்லி, என்றும் நன்றியுடன்...

பிரபாகர்...

19 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

Unknown said...

டபுள் செஞ்சுரிக்கு வாழ்த்துகள் பிரபா..

மாதேவி said...

வாழ்த்துகள் பிரபா.
தொடரட்டும் சிறப்புக்கள்.

Ramesh said...

வாழ்த்துக்கள் தொடருங்கள்

துளசி கோபால் said...

இந்த ரெண்டு சதம் ரெண்டாயிரம் சதமாக வளரட்டும்.

இனிய பாராட்டுகள்.

நையாண்டி நைனா said...

இரண்டு நூறு கண்ட இரண்டாவது இருபத்து மூணாம் புலிகேசியே... நீ வாழ்க

இரநூறு கண்ட இரும்பொரையே... நீ வாழ்க

vasu balaji said...

அது எப்புடி சொல்றது..ஆஆஆங்.. அடிச்சி ஆடுங்க தொர..வாழ்த்துகள்.

ஸ்ரீ.... said...

200 ஆவது இடுகைக்கும், இன்னும் பல சாதனைகள் செய்யப்போவதற்கும் சேர்த்து எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

ஸ்ரீ....

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

வாழ்த்துகள் பிரபாகர்.

மென்மேலும் சதங்கள் அடுக்க வேண்டும். நிறைய எழுதுங்கள். உங்கள் அனுபவங்கள் எல்லாம் சுவாரஸ்யமானவை. மிகவும் ரசித்த பதிவுகள் ஏராளம் (ஆத்தூர் கதைகள், அனுபவங்கள்.. என்று சொல்லிக்கொண்டே போகலாம்.)

தொடருங்கள்.

எஸ்.கே said...

வாழ்த்துக்கள்! தொடர்ந்து செயல்படுங்கள்!

க.பாலாசி said...

ரொம்ப சந்ததோஷம் அண்ணா.. மென்மேலும் பல இடுகைகளை எழுதுங்கள்... வாழ்த்துக்கள்...

எம்.எம்.அப்துல்லா said...

மகிழ்ச்சி.வாழ்த்துகள்..

sathishsangkavi.blogspot.com said...

வாழ்த்துகள் பங்காளி....

இன்னும் நிறைய எழுதுங்க....

ஆரூரன் விசுவநாதன் said...

வாழ்த்துக்கள் பிரபா

கலகலப்ரியா said...

வாழ்த்துகள் அண்ணா...

கோவி.கண்ணன் said...

நல்வாழ்த்துகள்.

ஜெயந்த் கிருஷ்ணா said...

வாழ்த்துக்கள் தொடருங்கள்

settaikkaran said...

இருநூறு தானா? போதாது, போதாது! விரைவில் ஐந்நூறைத் தாண்ட வாழ்த்துகள். அப்பத்தானே நாங்களும் பின்னாடியே ஓடி ஓடி வர வசதியா இருக்கும்...ஹிஹி!

Punnakku Moottai said...

நண்பரே,

வாழ்த்துக்கள் 100 அடித்தமைக்கு. உங்கள் நட்பு கிடைததிற்கும்.

உங்களிடம் நட்பு கொண்டபிறகு 'சோதனை' என்றால் என்ன. அது ஒருவனை எவ்வாறெல்லாம் போட்டு படுத்தும். அப்படிப்பட்ட சூழலிலிலும் ஒரு மனிதன் எவ்வாறு தன்னிலை தவறாமல் நடக்க வேண்டும் என்பதை உங்களிடமிருந்து அறிந்துகொண்டேன். அதை நடைமுறைபடுத்த உங்களளவு பொறுமை எனக்கு கிடைக்குமாயின் நான் பெரும் நிலையை அடைய தகுதி உடையவனாகிவிடுவேன். உங்கள் நிலையில் நானிருப்பின் இந்நேரம் சரக்கடித்துவிட்டு எங்காவது மட்டையாகியிருப்பேன். ஆனால் நீங்களோ தூரத்தில்தெரியும் விட்டில் பூச்சியின் வெளிச்சத்தைகூட விடிவெளிச்சமாக்கி துயர்களை துவைத்து போட்டு முன்னேறிக் கொண்டு இருகிறீர்கள்.
உங்கள் வாழ்கையில் ஏற்பட்ட துயர்களுக்கிடையில் நீங்கள் 100 பதிவிட்டிருப்பது பெரும் பாராட்டுதலுக்குரியது. மீண்டும் வாழ்த்துக்கள்.
பதிவுலகம் உங்களை காப்பாற்றிவிட்டது. நீங்களும் உங்களுடைய தெளிவான, வன்மம் இல்லாத, விரசமில்லாத பதிவுகளால் எங்களில் பலரை கட்டிப்போட்டுவிட்டீர்கள். பதிவுலகிற்கு பல அருமையான செய்திகளை சொல்லியிருக்கிறீர்கள்.
//எனக்கு சொந்தமான என் ஆருயிர் நண்பர் புண்ணாக்கு மூட்டை என சொல்லிக்கொள்ளும் சரக்கு மூட்டை(தலைவரே சரிதானே?) பாலா அவர்கள் எங்கிருந்தாலும் என்னை அழைத்து வாரம் ஒரு முறை பேசிவிடுவார். நைஜீரியாவோ, சென்னையோ... அவரின் அழைப்பு தவறாமல் இருக்கும். அவரின் இந்த உறவும் இந்த வலை தந்ததே. அவர் தந்திருக்கும் தகவல்கள் இன்னும் பல வருடங்களுக்கு வலையேற்ற உதவியாய் இருக்கும். அவரோடு பேசுவதே ஒரு இனிமையான அனுபவம், அதனால்தான் சரக்கு மூட்டை என்றேன்//
படைக்கப்பட்ட பொழுது அனைவரும் ஒரே அளவு மூளையுடன் தான் படைக்க படுகின்றனர் (சில குறை பிரசவங்களை தவிர). அனால் அனுபவம் ஒருவனை நல்லவனாகவோ கெட்டவனாகவோ மாற்றிவிடுகின்றது. தவறு செய்யாதவன் எப்பொழுதும் எதையும் கற்றுக்கொள்வதில்லை. அனுபவம் தான் ஒருவனை செம்மைபடுத்தும். இரும்பு கூட காயிச்சி அடிமேல் அடி அடித்து செம்மை செய்தால் தான் பயன்படுகிறது.
நான் இந்நிலையை அடைய பலவகையில் கஷ்ட்டபட்டேன். ஓரளவு வெற்றியும் பெற்றேன். இன்னமும் பெற பாடுபடுகிறேன். இந்த பாதையில் எனக்கு ஏற்பட்ட அனுபவங்களில் ஒருசிலவற்றை உங்களிடம் பகிர்ந்து கொண்டேன். அவ்வளவே. எல்லோரும் எல்லாவற்றையும் அனுபவத்து தெரிந்து கொள்வதென்பது முடியாதது. பலர் தங்கள் அனுபவங்களை பற்றி பேசாததினால் அவை பயனற்று போகின்றது. நான் பகிர்ந்து கொண்ட என் அனுபவங்கள் உங்களுக்கு பயன்பட்டது என்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. ஆனால் 'புண்ணாக்கு மூட்டை' யாகிய என்னைப்போய் 'சரக்கு மூட்டை' என்று அழைத்திருப்பது ஒருபடி மேலாக எனக்கு படுகின்றது. எனக்கு அறிவில் சரக்கு ஒன்றுமில்லை. ஆனால் மற்ற 'bottle ' சரக்கு மூட்டை' என்றால் மிகவும் பொருத்தமாக இருக்கும். நம் நேசமித்திரன், மற்றும் கேபிள் சங்கர் கூட இதை ஆமோதிப்பார்கள் என்று நினைக்கிறேன்.

குறிப்பு:
நான் தமிழ் நன்றாக கற்றவன் அல்ல, ஏதோ தமிழில் எழுத முயற்சி செய்துள்ளேன். தவறு இருப்பின் மன்னிக்க வேண்டுகிறேன்.
அதற்கு ஒரு பதிவை போட்டு நாற அடித்து விடபோகிறார்கள்

Punnakku Moottai said...

ராத்திரி போதையிலே நூறா இருநூறான்னு தெரியாம 100 க்கு வாழ்த்துக்கள் ன்னு போட்டுட்டேன். மன்னிக்கவும். காலையில் போதைதெளிந்த பின் தான் பார்த்தேன்.
இருநூறுக்கு வாழ்த்துக்கள்.

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB