எங்கள் ஊர் சினிமா...

|

சிறு வயதில் நடந்த விஷயங்களை நினைவு கூர்ந்தால் மனதிற்கு இதமாயும் மயிலிறகால் வருடுவதுபோன்று ஒரு சுகமான அனுபவமாயும் இருக்கும். இன்று திரும்பத்திரும்ப ஒரே நகைச்சுவைக்காட்சிகளை, திரைப்படங்களை, பாடல்களை பல சேனல்களில் பார்க்கும்போது மனதுக்குள் ஒரு வெறுப்பு சேர்ந்துகொள்ள,  சிறுவயதில் சிறிதளவே பார்த்தாலும் சினிமா நம்மை எப்படியெல்லாம் ஏங்க வைத்திருக்கிறது என மனம் ஒப்பீடு செய்ய ஆரம்பித்துவிடுகிறது. கிடைத்திட்ட இந்த ஓய்வு நேரத்தில் அசைபோட்டு சினிமா சம்மந்தமான சில விஷயங்களை உங்களோடு பகிர்ந்துகொள்ள... இதோ எழுத ஆரம்பிக்கிறேன்.

சினிமா பார்க்கப் போகிறோம் என்றாலே மனமெல்லாம் பட்டாம்பூச்சி பறக்க ஆரம்பித்துவிடும். சினிமா அப்போதெல்லாம் மாய வார்த்தை. அதைவிட அதீத சந்தோஷம் அத் தருணத்தில் கிடைத்ததில்லை. பெற்றோரிடம் அதற்கு அனுமதி பெற்று காசு வாங்குவதைப்பற்றி தனி இடுகையாகவே எழுதலாம்.

கிராமங்களில் தெருக்கூத்துக்களும், நாடகங்களும் உயிரோட்டமாய் இருந்தது. சுகாதாரமான சூழலில் குறைவான மக்கள், ஆடம்பரமே இல்லாத வாழ்க்கை வாழ்ந்து நாகரீகத்தின் பிடியில் சிக்கிக் கொள்ளாத மனிதம் அதிகம் இருந்த தருணம். தகவல் தொடர்புக்கு கடிதமும் தந்தியும் கோலோச்சிக்கொண்டு, தபால்காரர்கள் மிகவும் போற்றப்பட்டும், பத்திரிக்கைகள் வானொலிகள் தரும் தகவல்தான் உண்மை என முழுமையாய் நம்பிக்கொண்டிருந்த காலம். பெரியவர்கள் புராண இதிகாசங்களைப் படித்தும் பலருக்கு சொல்லியும், வலுக்கட்டாயமாய் கதைகளைத் திணித்தும், நாங்களும் மிக ஆர்வமாய் கேட்ட சமயம்.

அந்த நாட்களில் நெல்லினை உரலில் குத்தி, தீட்டிப் புடைத்துதான் தினமும் பல குடும்பங்களில் உலை வைப்பார்கள். வசதியானவர்களின் வீட்டில் மட்டுமே மூன்று வேளை அரிசி சோறு,  சைக்கிள், வால்வு ரேடியோ என இருக்கும். குறைந்த பட்சம் பத்து கிலோ மீட்டருக்கு ஒரு தியேட்டர், ஊரில் பொருட்களை வாங்குவதற்கு இரண்டு தெருவுக்கு ஒரு செட்டியார் கடை.

எங்கள் ஊரில் வேல்முருகன் தியேட்டரும், தாத்தா வீட்டிலிருந்து படித்ததால் அருகில் மல்லியகரையில் அண்ணாமலை தியேட்டரும் மிகவும் பரிட்சயம். அவைகளில் படம் போடுவதற்கு முன் கடைசி ரெக்கார்டாக வேல்முருகனில் ‘சந்தனம் மணக்குது... கற்பூரம் ஜொலிக்குது...’, அண்ணாமலையில் ‘திருப்பதி மலை வாழும் வெங்கடேசா...’ எனும் பாடல்களை ஒலிக்க விடுவார்கள். பார்க்காத படம் ஓடும் தருணங்களில் இயல்பாகவே மனம் ஏங்க ஆரம்பித்துவிடும். பார்த்த படமென்றால் என்ன சீன் ஒடும் என மனம் அதன் பின் கணக்குப்பண்ண ஆரம்பித்துவிடும்.

பாதி பாடல் தான் வெளியில் கட்டியிருக்கும் ஆர்னில் ஒலிக்கும். (சில நாட்களில் டேய்... கடைசி பாட்டு போட்டுட்டாண்டா என ஓடி சென்று வேகமாய் இடம் பார்த்து தடுமாறி அமர்வோம். எழுத்துப் பிக்சரில் இருந்து படம் பார்த்தால் தான் படம் பார்த்ததாய் அர்த்தம்) வெளியில் இருந்து பாடலை உள்ளே மாற்றி கொஞ்ச நேரத்தில் ட்யூப் லைட்டுகளை அணித்து அடுத்து குண்டு பல்புகளை(எங்கள் ஊரில் இன்னமும் அப்படித்தான் சொல்லுவோம்) அணைத்து வெண் திரையில் படத்தினைப் பார்க்கும் வரை இருக்கும் பரபரப்பு இருக்கிறதே... சொல்ல வார்த்தைகளில்லை.

தரை டிக்கெட் ஐம்பது பைசா, கொட்டியிருக்கும் மணலில்; பென்ச் எழுபது பைசா, மண்ணாலான சுவற்றின் பின்னால் வரிசையாய் இருக்கும் பென்சுகளில்; சேர் ஒரு ரூபாய், தனித்தனியான மரத்தாலான சேர்களில் அமர்ந்து பார்த்தல் என இருக்கும். எப்போது நாம் தரை டிக்கெட் தான். சண்டை, பாடல் காட்சிகளில் விசில் தூள் பறக்கும். குறிப்பாய் எம்.ஜி.ஆர் படங்கள் என்றால் அடுத்த இரு நாட்களுக்கு காதுகளில் வலியும், ஒலியும் இருந்துகொண்டே இருக்கும். சிவாஜி படங்கள் அழுகாச்சியாய் இருக்கும் என பெரும்பாலும் தவிர்த்துவிடுவோம். ஜெய்சங்கர், எம்.ஜி.ஆர் படங்களைப் பார்த்து அதன்படியே ஆற்றில் சண்டையிடுவோம், கதாநாயகன் வில்லன் என மாற்றி மாற்றி.

எம்.ஜி.ஆர் படங்கள் தான் அதிக நாட்கள் ஒடும், திரும்பத்திரும்ப பார்க்கும் ரசிகர்கள் மிக அதிகம் என்பதால். புதிதாய் வெளியான படங்கள் எங்கள் ஊருக்கு வர பல வருஷங்கள் ஆகும். புது படங்களை ஆத்தூர் போன்ற டவுனில் தான் பார்க்கமுடியும்.

ஞானமொழி அக்கா எங்கள் ஊர் தியேட்டரில் வெளியான முதல் படம் கந்தன் கருணையிலிருந்து நெடுநாட்கள் வரை தவறாது குறித்து வைத்துக்கொண்டு வந்தார். அவர்களின் வீட்டு சுவற்றில் பட போஸ்டர் ஒட்டுவார்கள். போஸ்டர் ஒட்ட அனுமதிக்கும் வீட்டைச் சேர்ந்தவர்களுக்கு ஒரு டிக்கெட் இலவசம், மற்றும் சிறப்பு அனுமதி.

இன்றே கடைசி என பார்த்துவிட்டால் அடுத்த படம் என்ன என்பதைத் தெரிந்து கொள்ள ஆவலாய் இருப்போம். போஸ்டர் ஒட்டும் அண்ணன் வீட்டுக்கு சென்று கேட்டால் அவர் இல்லாத படம் காட்டி கடைசியாய்...சொல்ல மாட்டார். நாளைக்கு காலையில் பார்த்துக்கொள்ளுங்கள் எனச் சொல்லி.

வெட்டிப் போட்ட பிக்சர்களை சேர்த்து வைத்திருப்போம். நிறைய நடிகர்கள், நடிகைகளின் பிக்சர்களை யார் வைத்திருக்கிறார்களோ அவர்கள் தாம் எங்களுக்குள் பெரிய ஆள்.

இந்த இடத்தில் என்னுடன் ஒன்பதாவது வரை படித்த ஜோசப் நினைவிற்கு வருகிறான். அவனுக்கு சிவாஜி என்றால் ரொம்ப பிடிக்கும். அது இது எனத்தான் சொல்வான். அது வந்துச்சா, உடனே வாணிஸ்ரீ வருமா... என பார்த்த சினிமாவைப் பற்றி அப்படியே பார்த்த நேரத்தைவிட அதிக நேரம் எடுத்துக்கொண்டு ரசித்து சொல்லுவான். தென்றலே என்னைத்தொடு படத்தின் ‘புதிய பூவிது பூத்தது...’, ‘கண்மனி நீ வரக் காத்திருந்தேன்’ பாடல்களை பாட்டுப்புத்தகங்களை வைத்துக்கொண்டு ஆண் மற்றும் பெண் குரலில் மாற்றி மாற்றி பாடிக்கொண்டிருப்போம்.

இதுபோல் நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். அப்போது கிடைத்திட்ட அந்த குதூகலம் சத்தியமாய் இன்று இல்லை. அதிக வசதியில்லாமல் ஏங்கி இருந்த தருணமல்லவா அது...

விஞ்ஞான வளர்ச்சிக்குத்தான் விலையாய் நாம் எத்தனை விஷயங்களைப் பலி கொடுத்திருக்கிறோம்? அன்றிருந்த மனித நேயம் இன்றிருக்கிறதா? உறவுகளுக்கிடையேயான நெருக்கம் இருக்கிறதா?...

அன்று குறைவான தகவல் தொடர்பு முறைகள், வசதி வாய்ப்புக்கள் ஆனாலும் நிறைவான வாழ்க்கை. இன்று எல்லாம் இருந்தும் ஏதோ ஒன்றை இழப்பதாய் இல்லை?...

17 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

ஈரோடு கதிர் said...

வணக்கம் பிரபா

ஜோதிஜி said...

ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க. எனக்கும் இது போன்ற ஞாபகம் வந்து விட்டது.

sathishsangkavi.blogspot.com said...

படிக்க படிக்க எனது நினைவுகள் எங்க ஊர் தியேட்டரை சுற்றி சுற்றி வருகிறது...

rajamani said...

When we go back its all pain . Change is changeless.

vasu balaji said...

நல்லாருக்கு பிரபா

Paleo God said...

லென்ஸ் வெச்சி துண்டு பிலிம்ல படம் காட்டினதெல்லாம் நியாபகத்துக்கு வருது! :)

T.V.ராதாகிருஷ்ணன் said...

நல்லாருக்கு பிரபா

சத்ரியன் said...

//விஞ்ஞான வளர்ச்சிக்குத்தான் விலையாய் நாம் எத்தனை விஷயங்களைப் பலி கொடுத்திருக்கிறோம்? அன்றிருந்த மனித நேயம் இன்றிருக்கிறதா? உறவுகளுக்கிடையேயான நெருக்கம் இருக்கிறதா?...//

பிரபா,

இத்தன கேள்விகள மொத்தமா கேட்டா எப்புடி பதில் சொல்றது?

உண்மைதான் ராசா. என்னதான் இருந்தாலும் பழசு பழசு தான்!

சிநேகிதன் அக்பர் said...

//லென்ஸ் வெச்சி துண்டு பிலிம்ல படம் காட்டினதெல்லாம் நியாபகத்துக்கு வருது! :)//

ஒரு காலத்துல நாமளும் தியேட்டர் ஓனர்தான் இல்லே :)

நல்ல எழுதி இருக்கிங்க பிரபாகர்.

ஆ.ஞானசேகரன் said...

ம்ம்ம்... நல்ல மலரும் வசந்தம் பிரபா...

எறும்பு said...

//【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

லென்ஸ் வெச்சி துண்டு பிலிம்ல படம் காட்டினதெல்லாம் நியாபகத்துக்கு வருது! :)//

ஹூம்

ரோஸ்விக் said...

நல்லாருக்கு...

//பெற்றோரிடம் அதற்கு அனுமதி பெற்று காசு வாங்குவதைப்பற்றி தனி இடுகையாகவே எழுதலாம்//

அடுத்ததுக்கு இப்பவே அடி போடுறதை பாரேன்! :-)

Unknown said...

அப்படியே டூரின்க் டாகீசுக்கு கூட்டிட்டு போய்டீங்க..

கலகலப்ரியா said...

நமக்குக் கிடைக்காத அனுபவம்...

Mahi_Granny said...

பெண்பிள்ளைகள் என்ன செய்திருப்பார்கள்.. நடந்து போகமுடியாது. மொத்தக் குடும்பமும் இரட்டை மாட்டு வண்டி ஒழுங்கு பண்ணி போய் , வருஷத்தில் 2 அல்லது 3 சினிமா பார்ப்பதே பெரிய காரியம் .ரேடியோ சிலோன் இருந்ததால் ஓரளவு வெளி உலகம் தெரிந்திருக்கும் . அதுவும் நன்றாகத் தான் இருந்தது.நல்ல பகிர்வு தம்பி.

Mahi_Granny said...

பெண்பிள்ளைகள் என்ன செய்திருப்பார்கள்.. நடந்து போகமுடியாது. மொத்தக் குடும்பமும் இரட்டை மாட்டு வண்டி ஒழுங்கு பண்ணி போய் , வருஷத்தில் 2 அல்லது 3 சினிமா பார்ப்பதே பெரிய காரியம் .ரேடியோ சிலோன் இருந்ததால் ஓரளவு வெளி உலகம் தெரிந்திருக்கும் . அதுவும் நன்றாகத் தான் இருந்தது.நல்ல பகிர்வு தம்பி.

அன்பரசன் said...

//அன்று குறைவான தகவல் தொடர்பு முறைகள், வசதி வாய்ப்புக்கள் ஆனாலும் நிறைவான வாழ்க்கை. இன்று எல்லாம் இருந்தும் ஏதோ ஒன்றை இழப்பதாய் இல்லை?...//

கண்டிப்பா இழப்பு தான்...

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB